உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை - முதற்பகுதி/பாடப்பெற்ற தலைவர்கள்

விக்கிமூலம் இலிருந்து

நற்றிணை 1—200 செய்யுட்களில்

பாடப்பெற்ற தலைவர்கள்


[எண் — செய்யுள் எண்]

அழிசி 87, 190

இவன் சோழர்க்கு உட்பட்டோனாகிய ஒரு குறுநிலத் தலைவன். ஆர்க்காடெனும் ஊரில் இருந்தவன். இவன் மகன் சேந்தன் என்பவன். இம் மகன் போராற்றல் மிகுந்தவன்; சோணாட்டு உறந்தையென்னும் தித்தனுக்குரிய ஊரைக் கைப்பற்றிச் சிறிதுகாலம் ஆட்சி செய்தவன்.

அன்னி 180

இவன் சோணாட்டு அன்னி குடியினனான ஒரு குறுநிலத் தலைவன். திருவழுந்தூரிலிருந்த திதியனோடு பகைகொண்டு எவ்வி அடக்கவும் அடங்கானாய்க், குறுக்கையென்னும் ஊரிடத்தேயிருந்த காவன்மரத்தை வெட்டி வீழ்த்தினான். குறுக்கைப் பறந்தலைப் போரிலே திதியன் அன்னியைக் கொன்று பழிதீர்த்துக் கொண்டான்.

ஆ ஆய் 167

இவன் பொதியிற் றலைவன்; ஆய் அண்டிரன் என்னும் பெயரினன். ஏணிச்சேரி முடமோசியாரால் பாடப்பெற்ற சிறப்பினன். இச் செய்யுளுள் இரவலர் பலரும் இவனிடத்தே வந்து தேர்களைப் பரிசிலாகப் பெற்றுச் சென்ற ஆரவாரம் உரைக்கப் பெற்றுள்ளது.

உதியன் 113

சேரர் மரபினன்; பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனவும் கூறப்படுபவன்; பாரதப் போருள் இருதிறத்துப் படையினர்க்கும் பெருஞ்சோறளித்த சிறப்பினன். முரஞ்சியூர் முடிநாகராயராற் பாடப்பெற்றவன். இவன் புதல்வர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்கெழு குட்டுவனும் ஆவர். இச் செய்யுளுள் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்பார் இவனைப் பற்றிப் பாடியுள்ளனர். இவனுடைய போர்மறம் இச்செய்யுளாற் பாராட்டப் பெறுகின்றது.

ஓரி 6, 52

கொல்லிக்கு இறைவன்; கடையெழு வள்ளல்களுள் ஒருவன். சேரமானின் பொருட்டாக மலையமான் திருமுடிக் காரியால் கொல்லப்பட்டவன் நற்றிணை ஆறாஞ் செய்யுளுள் பரணரும், 52ஆம் செய்யுளுள் பாலத்தனாரும் இவனது சிறப்பைப் பாடியுள்ளனர்.

கிள்ளி 141

சல்லியங் குமரனாராற் போற்றப்படும் இவன் சோழர் குடியிற்பிறந்து அம்பர்ப் பகுதிக்கண் தலைவனாக விளங்கியவனாவான். இவனுடைய போராற்றல் இச் செய்யுளுள் எடுத்துப் பாராட்டப் பெறுகின்றது.

குட்டுவன் 14, 105

இவன் சேரர் மரபினன்; குட்ட நாட்டைச் சார்ந்தவனாதலின் இப்பெயர் பெற்றனன். 14ஆம் செய்யுளுள் இவனது அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினை மாமூலனார் கூறுகின்றனர். முடத்திருமாறன் இவனது குடவரையை 150ஆம் செய்யுளுள் பாராட்டுகின்றனர்.

கொங்கர் 10

கொங்கு நாட்டுப் பகுதியினர். இவரைப் பழையன் பணிவித்தமை இச்செய்யுளுட் கூறப்பெற்றிருக்கின்றது. கொங்கு அந்நாளில் தனியாட்சி பெற்றிருந்தது என்பதனையும் இதனால் அறியலாம்.

கொல்லிப்பாவை 185, 192

கொல்லி மலையிடத்தே தெய்வத்தச்சனால் நிறுமிக்கப் பெற்றதாக உரைக்கப்படும் தெய்வப்பாவை. கண்டாரைத் தன்பால் ஈர்த்துக் கொள்ளும் ஆற்றலுடையது இதுவென்பர். 'பூதம் புணர்த்த புதிதியல் பாவை' என, இதனை நற்றிணையின் 192ஆம் செய்யுள் கூறுகின்றது.

செம்பியன் 14

சோழன்; இவன் குட்டுவனது அகப்பாவை அழித்த செய்தியை மாமுகனார் இச்செய்யுளுட் கூறுகின்றனர்.

செழியன் 39

பாண்டியன்; இவனைப் பாடியவர் மருதன் இளநாகனார் ஆவர். இவன் பகையரண்களை அழித்து வெற்றிகொண்ட செய்தி கூறப்பெறுகின்றது. பாண்டியருள் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனையும், கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் இவர் பாடியுள்ளமையால், இச் செழியனை அவ்விருவருள் ஒருவராகக் கருதலாம். நாஞ்சில் வள்ளுவனின் காலத்திருந்த செழியனும் இவன் என்பர்.

சேந்தன் 190

முன்னர்க் கூறப்பெற்ற அழிசி என்பானின் மகன்; வீரத்திருவுடையவன். தித்தனது உறந்தையை வென்று கைப்பற்றிக் கொண்டவன். அழிசியைப் பற்றிய குறிப்பினை நற்றிணை 87ஆம் செய்யுளுள் தருபவர் நக்கண்ணையார் ஆவர். இவர் சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியின் காலத்தவராதலால் இவனையும் அக்காலத்தவனாகக் கருதலாம். 'மேலார் ஆரரண் கடந்த மாரி வண்மகிழ்த் திதலை எஃகின் சேந்தன்' என, இவனை இச் செய்யுள் கூறுகின்றது (190).

சோழர் 10, 87

சோணாட்டாரைக் குறிக்கும் சொல். இவர் கொங்கரைப் பணியச் செய்தற் பொருட்டுப் போவூர் கிழவோனான பழையனை ஏவிய செய்தியைப் பத்தாவது செய்யுள் கூறுகின்றது. 87ஆவது செய்யுள் ஆர்க்காட்டு அழிசி சோணாட்டின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவன் என்று உரைக்கின்றது.

தித்தன் 58

வீரை வேண்மான் வெளியன் தித்தன் என்னும் குறுநிலத்தலைவன் இவன். உறந்தை என்னும் பெயரினையுடைய ஊரிடத்திருந்து அரசியற்றிய சோழர்குடிச் சிற்றரசன். இவனைப் பாடியிருப்பவர் முதுகூற்றனார் என்னும் புலவர் ஆவார்.

பழையன் 10

'போஓர்' என்னும் ஊருக்குத் தலைவன்; சோழர் தளபதிகளுள் ஒருவன். சோழர் பொருட்டுக் கொங்கரை வெற்றிகொண்டவன். இவனை மாங்குடி மருதனார் இச் செய்யுளுட் பாடுகின்றனர்.

புல்லி 14

கள்வர் கோமானாகிய இவன் வேங்கடமலைப் பகுதிக்குத் தலைவனாக விளங்கியவன். கல்லாடனாரும் மாமூலனாரும் பாராட்டிய சிறப்பினன். இச் செய்யுள் இவனது கடத்தற்கரிய வேங்கடமலைக் காட்டைப் பற்றிக் கூறுகின்றது.

பூழியர் 192

பூழிநாட்டைச் சார்ந்தவர் இவர். இவர்கள் ஆடு மாடுகளை மேய்த்து வாழ்ந்துவந்த இனத்தவராகப் பெரும்பாலும் விளங்கி வந்தார்கள். இவர்களுடைய ஆட்டு மந்தை பற்றிய செய்தியை இச் செய்யுளுள் காண்கிறோம்.

பெரியன் 131

பொறையாற்றுப் பெரியன் என்பவன் இவன். இவன் சோழநாட்டுப் பொறையாறு என்னும் கடற்கரை ஊர்க்குத் தலைவனாக விளங்கினான். இவனுடைய வள்ளன்மை பற்றியும் இவனூரின் வளத்தைப் பற்றியும் உலோச்சனார் இச் செய்யுளுட் கூறுகின்றனர்.

மலையன் 77, 100, 170

மலையமாநாடு என்னும் திருக்கோவலூர்ப் பகுதியை ஆண்டுவந்த வள்ளல் இவன். மலையமான் திருமுடிக்காரி எனவும் இவனைக் கூறுவர். இவனது பேராண்மை அந்நாளிற் பெரிதும் போற்றப் பெற்றதாக விளங்கியது. இவன் எவர் பக்கம் துணைநிற்கின்றனனோ அவரே வெற்றிபெறுவர் என்று சான்றோர் கூறுகின்றனர். 77 ஆவது செய்யுளுள் இவனது போராண்மையைக் கபிலரும், 100 ஆவது செய்யுளுள் பரணரும் பாடுகின்றனர். 170 ஆவது செய்யுள் ஆரியப்படையை இவன் வெற்றிகொண்ட சிறப்பை உரைக்கின்றது. இவன் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாக விளங்கியவனும் ஆவான்.

மழவர் 52

சேலத்துப் பகுதியில் வாழ்ந்துவந்த மறவர்குடியினர் இவர். தகடூர் அதியமான் இவர்களது தலைவனாகக் கொள்ளப்படுகின்றனன். வல்வில் ஓரியென்னும் கொல்லிக் கோமானும் இம் மழவர் குடியினைச் சார்ந்த பெருமகனே என்பதனை இச் செய்யுளால் பாலத்தனார் உரைக்கின்றனர். இவனது கொடையாண்மை பற்றி இவனையும் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகக் கொள்வார்கள்.

மாயோன் 32

திருமால்; மலையது கருநிறத்தைக் குறிக்கும் கபிலர் பெருமான், 'மாயோன் அன்ன மால்வரை' என இச்செய்யுளிற் கூறுகின்றனர்.

மூவன் 18

பெருந்தலைச் சாத்தனாராலும் பொய்கையாராலும் பாடப்பெற்றவன்; ஒரு குறுநிலத் தலைவன். இவனைச் சேரமான் கணைக்கால் இரும்பொறையாகிய தொண்டிப் பொருநன் வெற்றிகொண்ட செய்தியை இச்செய்யுளுட் பொய்கையார் உரைக்கின்றனர்.

வழுதி 150

பாண்டியர் குடியினருக்குரிய பொதுப் பெயர். கடுவன் இளமள்ளனார் என்பவர் இச்செய்யுளுள் வழுதி ஒருவனது யானைப்படையின் மிகுந்த படையாண்மைச் சிறப்பினைப் பற்றி உரைக்கின்றனர். பாண்டியன் கானப் பேர் தந்த உக்கிரப் பெருவழுதியை இச் செய்தி குறிப்பதாகவும் கொள்வர்.

வாலியோன் 32

வெண்ணிறத்தோனாகிய பலராமனைக் குறிப்பதாகும். மலையினின்றும் வீழ்கின்ற அருவியின் தோற்றத்தை வியக்கும் கபிலர், 'வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி' என வியந்து போற்றுகின்றனர்.