உள்ளடக்கத்துக்குச் செல்

சூடாமணி நிகண்டு/13-19

விக்கிமூலம் இலிருந்து
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


164 (1)
சிரகமே கரகமாகுஞ் சென்னியிற் சோடு மப்பேர்
கரகமே யாலங்கட்டி கமண்டலந் துளி நீர் கங்கை
மரபுதான் முறைமை தொன்மை மறலென்ப பிணக்குங் கூற்றும்
சரபம் எண்காற்புள்ளென்ப வரையாடு தானுமாமே.

165 (2)
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை யரைஞாண் பொற்றேர்
அரணமே கவசங் காடே அணிமதில் வேலி நாற்பேர்
கரணம் எண் ம னாதிக் கூத்துக் கலவிக் காரண மைம்பேரே
சரணந் தாள் மறைபுகற்பேர் தன்னம் ஆன்கன்றே யற்பம்.

166 (3)
உரமென்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர்
சரமென்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதேயாம்
புரமென்ப புரி முன் மெய்ப் பேர் புரவலன் வள்ளல் வேந்தன்
கரமென்ப கிரணங் செங்கை கழுதை நஞ் சிறுத்தலும் பேர்.

167 (4)
அரவ நூபுர பாம் போசை ஆய்வென்ப வருத்தம் ஆய்தல்
பரவை வாரிதிப் பரப்புப் பங்கயமாதின்கூத்தே
இரலையே கலை யூதுங்கொம் பிரண்டுடன் முதனா ளென்ப
அரசு மன் னராச்சியப் பேர் அம்பி நாவாயே தெப்பம்.

168 (5)
அரம்பை தெய்வப்பெண் வாழை ஆணுவெ யிரத நன்மை
சரந்தனி மணிவடம் போர் சாயக நாணற்புற்பேர்
நரந்தமென்பது நாரத்தை நாறுங்கத்தூரிக்கும்பேர்
சுருங்கையே கரந்துபண்ணும் கற்படை நுழைவியிற்பேர்.

169 (6)
ஆரமே பதக்கம் முத்தம் ஆத்தி சந்தனமே மாலை
வார நீக்கரையே யன்பு மலைச்சாரல் கிழமை பங்காம்
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யோரிசை கண்ணென்ப
கோரஞ் சோழன்மா வட்டில் கொடுமை பூமொட்டு வாசி.

170 (7)
இராசிய மறைவே யோனி யிறப்பென்ப மிகுதி போக்காம்
பராகமே யிரேணுவாகும் பரிமள மலர்த்தூளும் பேர்
துரேணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்காம்
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமு மேற்கும்.

171 (8)
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல்வருத்தம்
புரி வளை விரும்பல் செய்தல் புரத்தொடு கயிறு கட்டாம்
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கலும்பேர்
வரி சுணங் கெழுத்துப் பாட்டு வாரிதி இறையே நெல்லு.

172 (9)
சரி கரவளை வழிப்பேர் சராவமே யகல் சலாகை
கரியவன் சனியின்பேராங் கண்ண னிந்திரனு மாமே
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணைய நாற்பேர்
கரில் குற்றங் காழ்தலும்பேர் காதை சொற் கதையுமாமே.

173 (10)
மூறி யேறெருமை ஆற்றல் முறை பீடு நெறிவு மாமே
வாரி நீர் கதவு வெள்ள மதில் கடல் வருவாய் வட்டை
நாரி பன்னாடை பெண்ணே நறவு வின்னாணி நாற்பேர்
பாரி யேர் வள்ளல் கட்டில் பாரி கள் தூசு முந்நீர்.

174 (11)
அருகலே சுருங்கல் சார்தல் அமுதமே சுதை நீர் மோக்கம்
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொன் பண்பு பிள்ளை வாய்மை
குரு நிற மோர் நோய் தேயங் குரவன் பாரம் வியாழன்
அருணமென்பது மான் செம்மை ஆ டெலுமிச்சை நாற்பேர்.

175 (12)
முருகு கள் ளிளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பாம்
மருமானே மருமகன் பேர் வழித்தோன்றல் பேருமாமே
இருசு பண்டியுளிரும்பு செவ்வை யென்றிருபேரென்ப
கருமையே பெருமையாகுங் கருப்பொடு வலியுமாமே.

176 (13)
கிருத்திமந் தோலே பண்ணல் கெட்டபொய் விட்டபூதம்
விருத்தியே தொழில் இலாபம் விரிபொருள் வளர்ச்சிக்கும் பேர்
துருத்தி யாற்றிடைக்குறைப்பேர் தோலுமாந் துட்டைக்கும் பேர்
அரத்தமே யரத்தம் செம்மை அரக்கொ டுற்பலங் கடம்பு.

177 (14)
சீர் செல்வந் தாளவொத்துச் சிர்த்தி காத் தண்டே பாரம்
தார் கொடிப் படை பூத்தண்டு தாமங் கிங்கிணியின்கோவை
சூரென்ப நோயே யச்சம் அஞ்சாமை யணங்குஞ் சொல்லும்
கார் நீர் வெள்ளாடு மேகங் கறுப் பிருண் மாரிக்காலம்.

178 (15)
ஆர் கூர்மை ஆத்தி தேரினகத்துறு கதிருமாகும்
பீரென்ப முலையிற் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர்
வாரென்ப நெடுமை கச்சு மன்னு நீர் நேர்மை நாற்பேர்
நேர் சம மீதல் பாதி நெடி லுடன்பாடு நுட்பம்.

179 (16)
அருணன் சூரியன் தேர்பாகன் ஆதித்தன் புதன் முப்பேரே.
வருணமே குல நீராகும் மகனென்ப சிறந்தோன் மைந்தன்
தரணி பா ரிரவி வெற்பாந் தையல் பெண் ணழகுமாகு
கரிணியே முழையும் வெற்புங் களிற்றொடு பிடியுங் காட்டும்.

180 (17)
மாரியே விளிவு கள்ளு வடுகி நோய் மேக மைம்பேர்
ஓரி யாண்மயி ரோர்வள்ளல் முது நரி முசுவென் றோதும்
காரி யோர்வள்ள லையன் கடுச் சனி வடுகன் காக்கை
தூரிய மிடப மாடை துந்துபி யெழுதுங்கோலே.

181 (18)
பிரமமே வேதம் வேள்வி மந்திரம் பிரமன் மாலோ
டிரவி தீ முனிவர் முத்தி ஈசன் அம்புலி பன்னொன்றே
அரசனே வியாழன் மன்னாம் அம்பணந் தோணி யாமை
குரல் கதிர் சிறுகு மாதர்கூந்தல் யாழ்நரம்பு நாற்பேர்.

182 (19)
தோரை நெல் விகற்பம் முங்கிலரிசி கைவரை சொன் முப்பேர்
ஆரையே மதில் புற்பாயாம் அகலுளே பரப் பூர் நாடே
ஓரையே மாதர் கூடி விளையாடலுட னிராசி
தாரை கண்மழை நேரோடல் தாரகை வழியே கூர்மை.

183 (20)
ஊர்தி தேர் விமானம் பாண்டில் உம்பலே சிவிகை பாய்மா
ஆர்வமமோர் நரகம் அன்பாம் அகலம் மார்பொடு விசாலம்
ஆர்வலர் கொண்கர் அன்பர் அணுவென்பது உயிர் நுண்மைப் பேர்
ஆர்தலே நிரைதல் உண்டல் அகளந்தான் மிடா நற்றாழி.

184 (21)
பாரமே கவசந் தோணி பல்லணம் பொறை யினோடு
நீருறுகரை வன்பார நிறை தரை நிகழ்த்தும் எண்பேர்
சுரனே யிரவி தீ நாய் துகளென்ப குற்றம் தூளாம்
சாரங்க மானும் வண்டுஞ் சாதகப்புள்ளு மாமே.

185 (22)
ஆரல் கார்த்திகை நாள் செவ்வாய் அரணுருப் பொருமீன் நாற்பேர்
சாரலே மருதயாழி னிசையொடு சைல பக்கம்
மூரலே நகை பல் சோறாம் முரம்பென்ப மேடு பாறை
கூரல் புட்சிறகு மாதர் ஓதியு மிரு பேர் கூறும்.

186 (23)
சாரிகை பூவை சுங்கஞ் சுழல்காற்று தானுமாகும்
காரிகை யழகு பெண்ணே கலித்துறை யோர்நூற்கும் பேர்
வாரணங் கவசங் கோழி தடை சங்கு வாரி கைம்மா
பூருவம் முதுமை முன்பு கிழக்கென்றும் புகலலாமே.

187 (24)
ஏ ரழகு உழுபெற்றப்பேர் இராசிதா னோரை கூட்டம்
பா ருலகந் தேர்ப் பாராம் பயல் பள்ளம் பாதி சிற்றாள்
போ ரமர் சதயத்தோடு புகலு நென் முதலாஞ் சும்மை
பீருவே யச்சமுள்ளோன் பெயரொடு புருவமாமே.

188 (25)
அருப்ப மாரிட நோய் காடாம் அரணுட னூரு மப்பேர்
மரக்கால் ஆயிலியஞ் சோதி மாயவனாடல் முப்பேர்
நிரப்பென்ப மிடிநிரைப்பேர் நிறையழியாமை நீர்ச்சால்
துருக்கமே யரண் கத்தூரி குங்கும மரமுஞ் சொல்லும்.

189 (26)
குருதியே சிவப்பி ரத்தங் குசனெனக் கூறு முப்பேர்
பரிதியே யூர் கோள் வட்டம் பாற்கரண் நேமி நாற்பேர்
சுருதியே யொலி வேதப்பேர் சுரம் அருநெறி கான் மார்க்கம்
இரதி பித்தளை பெண்யானை மதன்தேவி யிச்சை நாற்பேர்

190 (27)
புரை குற்றம் உவமை யில்லம் புழை யுயர்சியு மைம்பேரே
விரை மணஞ் சாந்து தூபம் வீரைதான் துயரம் வாரி
நரை வெள்ளையிவுளி வெண்மை நந்தி நற்சவரி நாரை
சுரை கள் ஆன்முலை துளைப்பேர் துளும்பலே திமிறல் துள்ளல்.

191 (28)
மருளென்ப குறிஞ்சி யாழின்றிறத்தொடு மயக்க மும்பேர்
இருளொரு நரகம் மையல் இருளொடு கருமை யென்ப
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் பாணர் வீரர்
இருபிறப் பெயிறும் பார்ப்பும் இந்துவும் புள்ளுமாமே.

192 (29)
மருதமே யொருமரஞ்செய் மருத மந்நிலப் பாடற்பேர்
எருவையே கொறுக்கை கோரை கழுகு செம் பிரத்தமென்ப
தருமராசன்றான் புத்தன் சண்டனே டருகன் றானாம்
கரியென்ப திருந்தை சான்று கறையடி சேகு நாற்பேர்.

193 (30)
கருவி பல்லியந் துணைக்காரணங்கள் யாழ் கவச மீட்டம்
பொருபடைக்கலஞ் தொடர்ச்சி புயல் பலவினைப்பேர் கூட்டம்
பரியின் பல்லணமே யாடை கசை பதின்முப்பேர் பன்னும்
சுரிகையே கவசம் வாளாந் துவை பிண்ணாக் கிறைச்சி யோசை.

194 (31)
குருகு புள் ளிளமை நாரை கொல்லுலைமூக்குங் கோழி
சரி வெள்ளை மூலநாள் வாசந்தி யொன்பான் பேர்சாற்றும்
முரசே யுட்டரத்தாதி பேரியமென்று மொழிய லாமே
தரளமே உருட்சி முத்தாஞ் சார்வென்ப திடமும் பற்றும்.

195 ( 32)
முரண் வலி பகை யாமென்ப மொய்ம்பு தோள் வலியுமாகும்
உரை யென்ப கிளவி தேய்வாம் உவாத் தந்தி யிளையோன் பௌவம்
ஞெரே லொலி விரைவுமாகும் நிதி யிருநிதி பொன்னென்ப
உரு நிறம் வரிவட்டைப்பேர் ஓதனஞ் சோறே யுண்டி.

196 (33)
அரி கிளி புணரி மால் தேர் ஐம்மை யிந்திரன் கால் காந்தி
பரி புகர் பன்றி சிங்கம் பகை புகை பாயல் சோலை
வரி மதி சேகு தேரை வானரம் இயமன் மூங்கில்
எரி புரை நிறம் பொன் பாந்தள் இரவி கண்வரி தார் பச்சை.

197(34)
அரிசி நெற்கதிர் கள் கூர்மை அளி படைக்கலமே யீர்வாள்
அரிதலே சயன நேமி அடல் விசி பறை யரித்தல்
பரிபுரமதனுட்பெய்த பரலோ டிவ்வா றேழைந்தாம்
அரிதமேபசுமை திக்காம் ஆற்பொறி சிரித்தற் பேரே

198 (35)
அருவியே மலைசார் வாறும் அரிதினைத்தாளு மாகும்
அரலையே கனி வித் தாழி மரல் கழலையுமாமென்ப
கரடமே மதம் பாய்கின்ற சுவட்டொடு காகமு மாகும்
சுரியல்தான் பெண்மயிர்க்கே சொல்லும் மாண்மயிர்க்கும் பேராம்.

199 (36)
திருவென்ப கமலை செல்வஞ் சிறப்பொடு முப்பேர் செப்பும்
பரிவென்பதுன்ப மின்பம் பகரும் அன்பிற்கும் பேர்
கரையே நீர்க்கரை சேர்வாகுங் கைத்து நீள்நிதி வெறுப்பாம்
சுரகுரு மகவான் றேவமந்திரி யிருபேர் சொல்லும்.

200 (37)
அரற்றலே அழுகை யோசை யைதென்ப விரைவு நொய்தாம்
இரத்தஞ் சென்னீர் சிவப்பாம் இலாங்கலி யலந்தென் காந்தள்
அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமுஞ் சிவப்புமாகும்
அருச்சுன மருது வெண்மை யறிக்கைதா னறிவு பற்றாம்.

201 (38)
அரந்தை யென்பது குறிஞ்சியாழிசை துன்பமாகும்
அருந்தலே யருமை யுண்டல் அளித்தல்தான் கொடுத்தல் காத்தல்
அரங்க மாற்றிடைக்குறைப்பேர் ஆடிடஞ் சபையுமுப்பேர்
அரங்கு பேரிடம் வட்டாடும் இடஞ் சபை மனைவி கற்பாம்.

202 (39)
முருந்தென்ப மயிலின்றோகைமுதன்முள்ளுத் தவளமாகும்
விருந்தமே கிளையின் கூட்டம் விலங்கின்கூட்டமு மென்றாகும்
குரங்கு வானரம் விலங்கின்பொது மிகுகோணலாகும்
எருந் துரல் கிளிஞ்சிெ லன்பர்இடஞ் செல்வம் விசாலம் வாமம்.

203 (40)
ஆரியர் மிலோச்சர் நல்லோர் ஆனென்ப யடைச்சொலாவாம்
ஆரியே கதவு சோழன் அழொடு மேன்மைக்கும் பேர்
காருகர் தந்து வாயர் கடுங்கொலையாளர் வண்ணார்
தாரகாரியென்ப காளி சண்முகந் தானுமாமே

204 (41)
சார் கூட லொரு தாருப்பேர் சான்றோன் மான்றலைநாள் பானு
வேரென்ப மரவேர் வேர்வாம் விழைச்சு நல்லிளமை போகம்
பாரா வாரந்தான் வாரி கடற்கரை யிருபேர் பன்னும்
சாரண ரொற்றரென்ப சமண்முனிவர்க்கும் பேராம்.

205 (42)
அராகஞ் சென்னிறமே பாலையாழ் முடுகியற்பாட் டாசை
கரேணுவே பிடி யானைக்குங் கடுங்கொலை யானைக்கும் பேர்
கிராணமே கிராண மூக்காங் கிளர்சிறு வட்டிலும்பேர்
கரீரமே மிடா வகத்தி கரியின்பல்லடி முளைப்பேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/13-19&oldid=29075" இலிருந்து மீள்விக்கப்பட்டது