சூடாமணி நிகண்டு/18-19

விக்கிமூலம் இலிருந்து
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.


275 (1)
இறைவையே புட்டி லேணியென்ப கூர் மிகுதி கூர்மை
குறடென்ப பலகை திண்ணை கொண்மூவென்பது விண் மேகம்
புறவ மோர்புள்ளுங் காடும் முல்லை நன்னிலனும் போற்றும்
புறணியெ குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமுந் தோலும்.

276 (2)
மறஞ் சினம் பிணக்குக் கூற்றாம் மலைந்த சேவகமு மாகும்
குறிஞ்சி யோரிசை யோர்பண்ணே குறிஞ்சி செம்முள்ளிக்கும் பேர்
பிறங்கலே மிகுதி வெற்பு நிறை வொலி பெருமை யைம்பேர்
குறம்பொறை குன்று காடு குறிஞ்சிநன்னிலத்தூர் முப்பெர்.

277 (3)
தாறு விற்குதையே யெல்லை தாழ் மரக்குலை முட்கோலாம்
சேறென்ப கும்பி சாரந் தித்திப்பு விழவு கள்ளே
ஊறென்ப தீமை தீண்டல் உயிர்கொலை யிடையூரென்ப
ஏறிடி முதல்நாளாகு மிடபமொடெருதுமப்பேர்.

278 (4)
சிறையே வேறிடமாம் புள்ளின்சிறகொடு காவலும் பேர்
கறை யிறுத்திட லிரத்தங் கறுப் புரல் விடம் பேரைந்தே
முறையென்ப கோசமே யூழ் முறைமையு முப்பேரென்ப
பிறழ்தலே நடுக்கம் வேறுபெயர்தலோ டொளி விடற்பேர்.

279 (5)
ஏற்றலே கோடலென்ப வெதிர்ந்து போர் செய்தலும் பேர்
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
தோற்றலே வலி பிறப்புத் தோன்றுதல் புகழே நாற்பேர்
போற்றலே புகழ்த லோம்பல் புறமென்ப முதுகு வீரம்.

280 (6)
அற்றமே மறைவுஞ் சோர்வும் அவகாசந் தானுமாகும்
குற்றல் குற்றுதல் பறித்தல் குரை யென்பதிடைச் சொலோசை
எற்றென்ப திரக்க மொத்தல் எறித லெத்தன்மைத்தென்றல்
கொற்றியே துர்க்கைநாமங் கோவிளங்கன்றுங் கூறும்

281 (7)
உறழ்வென்ப புணர்வு காலஞ் செறி விடை யீ டொப் பைம்பேர்
உறவியே யெறும்பு நீரூற் றுலைக்கள முற வுயிர்ப் பேர்
உறுக ணென்பதுவே துன்ப முறுபய மிடி நோய் நாற்பேர்
உறுவனே முனி புத்தன் பேர் உலக்கையே யுரோங்க லோணம்.

282 (8)
விறைப்பென்ப செறிவு வெற்றி வெருவுதல் பொருதல் நாற்பேர்
பொறுத்தலே பொறை தாங்கற்பேர் புந்திதான் புதனே புத்தி
இறுத்தலே ஒடித்தல் தங்க லியம்புதல் முப்பேரென்ப
கறுப் பிருள் சினக்குறிப்பாங் கன்று கைவளை கன்றாமே.

283 (9)
பொறி மரக்கலமே செல்வம் பூமக ளெந்திரங்கள்
அறி விலாஞ்சனை யெழுத்தே டைம்பொறி வரி யொன்பான்பேர்
வெறி வெருவுதல் கலக்கம் வெறியாட்டு வட்ட நாற்றம்
குறியபேய் துருவை கள்ளுக் கூறு நோயொன்பதாமே.

284 (10)
உறை பொருண் மருந்து வாழ்நாள் உணவு வெண்கலமே காரம்
எறிபடைக்கலத்தின்கூடே யெண்குறித்திறுதிபெய்தல்
நறிய பாற்பிரை யிடைச்சொல் நகர நீர்த்துளி யீராறாம்
அறை முழை மோதல் பாறை திரை சிற்றின் மொழியாமே.

285 (11)
இறை சிவன் கடன் வேந்தன் கையிறை யிறுப்பிறை சிறந்தோன்
சிறுமை புள்ளிறகு தங்கல் சென்னி கூ னிறப் பீராறே
உறையு ளென்பது நா டூராம் உறுதியே நன்மை கல்வி
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி.

286 (12)
இறும்பு தாமரையின்பூவே மலை குறுங்காடு மேற்கும்
இறும்பூது தகைமை வெற்போ டதிசயங் குழை தூ றென்றாம்
கறங்கலே சுழல லோசை கதிரென்ப திரவி சோதி
பறம் புயர்மலை முலைப் பேர் பாய்மாவே குதிரை வேங்கை.

287 (13)
கூற்றென்பதி யமன் சொல்லாங் கோமானே மூத்தோன் பன்றி
நாற்ற நாறுதல் தோன்றற்பேர் நனவென்ப தகலந் தேற்றம்
ஊற்றென்ப தூன்று கோலும் உறவியு மிருபேரோதும்
நோற்றலே பொறை தவப்பேர் நுணங்கென்ப நுண்மை தேமல்.

288 (14)
கற்பமே பிரமன் வாழ்நாள் கற்பக தரு சுவர்க்கம்
பொற்பென்ப தழகினோடு பொலிவு யொப்பனையு மாகும்
பற்பமே பதூமந் தூளாம் பழங்கணே துன்பம் ஓசை
உற்கை தாரகை தீக்கொள்ளி யுண்டிதான் புசித்தல் சோறே.

289 (15)
முற்றல் காழ்கோடன் மூப்பு முடிவுடன் வளைத்தல் நாற்பேர்
நெற்றியே நுதலின்பேரும் நெடும் படை யுறுப்பு மாகும்
கொற்றமே வன்மை வெற்றி கோவரசியன் முப்பேரே
ஏற்றுதல் புடைத்தலோடேயெறிதலு மிருபேராமே.

290 (16)
அறுகென்ப சிங்க மோர்புல் யாளியாகு முப்பேர்
வறிதென்ப தருக லேசற் றறியாமை பயனில் வார்த்தை
மறலியே மயக்கங் கூற்றா மறவி கண் மறதி யீனம்
குறளென்ப குறளும் பேயுங் குறுமையும் கூறுமுப்பேர்.

291 (170)
விறலென்ப வலி வென்றிப் பேர் விழைந்தோனே நண்பன் வேட்டோன்
நொறிலென்ப விரைவினோடு நுடக்கமு மிருபேராமே
நெறி வழி நீதி யென்ப நிருமித்தல் படைப் பாராய்தல்
பறை பறை வசனத்தோடு பறக்கும்புள்ளிறகு முப்பேர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சூடாமணி_நிகண்டு/18-19&oldid=29080" இலிருந்து மீள்விக்கப்பட்டது