சூடாமணி நிகண்டு/2-19
சூடாமணி நிகண்டு ஆசிரியர்: மண்டல புருடர் (மூலபக்கம்= மதுரை மின்நூல் திட்டம்)
|
சூடாமணி நிகண்டு என்னும் நூல், கி.பி. 16 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மண்டல புருடர் என்னும் சமணரால் இயற்றப்பட்டது. இந் நிகண்டு ஆசிரியர் மண்டல புருடர் அவர்கள், வீரமண்டல புருடர் என்றும் அழைக்கப்பட்டார். இந்நூல் விருத்தப்பாவால் ஆன நூல் ஆகும். இதில் 1197 சூத்திரங்களில் 11,000 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில், இந்நூல் பதிக்கப்பட்டு, பதிப்பாசிரியர்களால் நேர்ந்த பிழைகளுடன் உள்ளன கருதப்படுகிறது.
|
காப்பு
முடிவி லின்பத்து முவா முதல்வனைப் போற்றி செய்தே
அடிதொறு மிரண்டு மொன்று மாதியிற் பொருளடக்கி
நடைபெறு ககரமாதி னகரவீ றெதுகை யாகப்
படியிலோர் சொற்பொருட் பல்விதத் தொகை பகரலுற்றாம்
1
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
பகலே நாளொரு முகூர்த்தம் பகலவ னடுவே தேசு
மகரமே சுறாப் பூந்தாதாம் வசி கூர்மை வசியம் வாளே
அக மன மனையே பாவம் அகலிடம் உள்ளுமாமே.
2
சிகரி கோபுரமே வெற்புச் சீறெலி கருநாரைப்பேர்
சிகழிகை மயிர்முடிப்பேர் சிறந்த வாசிகை தேமாலை
சிகரமே மலையினுச்சி திரை சென்னி திவலை வெற்பாம்
மகம் யாகம் ஓர்நாளென்ப மாய்வென்ப மறைவுஞ் சாவும்.
3
இகல் பகை வலி போர் முப்பேர் இகுளையே தோழி நட்பாம்
புகரென்ப மழைக்கோள் குற்றம் புற்கெனு நிறமு முப்பேர்
நகம் மலை யுகிர் மரப்பேர் நகை மகிழ் ஒளி சிரிப்பாம்
ககனம் விண் படை காடென்ப கடவுள் தேமுனி நன்மைப்பேர்.
4
சாகஞ் சாகினி வெள்ளாடு தேக்கெனுந் தருவுமாமே
பாகலே காரவல்லி பலா வென்றும் பகரலாமே
யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம்
நாகம் விண் குரங்கு புன்னை நற்றூசு மலை பாம்பி யானை.
5
திகிரியே மூங்கில் வட்டந் தேருருள் ஆழி வெற்பாம்
சிகியென்ப மஞ்ஞை தீயாந் தீதுறு கேதுவும் பேர்
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புரு கொள்ளிக்கும் பேர்
எகினமே புளி மா ஞாளி கவரிமாநீர்நா யன்னம்.
6
ஆகுவே யெலியி னாமம் ஆம்பெருச்சாளிக்கும் பேர்
யோகமே தியானங் கூட்டம் உபாயமாம் உயர்ச்சிக்கும் பேர்
போகி யிந்திரன் பாம்பென்ப போகில் புட்பொது பூமொட்டாம்
கோகிலங் குயில் பல்லிப் பேர் குடங்கரே குடிசை கும்பம்.
7
பொகுட்டுத் தாமரைப் பூங்கெட்டை பொருப்புச் சேற்றெழுந்த கொப்புள்
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இரித்தலோ டழைத்தல் ஈதல்
புகைக்கிடு நாமந் தூமம் பேற்றும் யோசனைக்கும் பேரே
அகைத்தல் வேதனை யொடித்தல் அறுத்திட லுயர்த்தலாமே.
8
சிக்கமே குடுமி நாமஞ் சீப்புட னுறியு மேற்கும்
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம்
வக்கிரங் கொடுமை மீளல் மடங்குத லுடனே வட்டம்
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு.
9
தூக்கென்ப பாட்டுங் கூத்தும்ந் துலாமும் ஆராய்தலும் பேர்
பாக்கென்ப தெதிர்காலத்தை பகரிடைச்சொற் றுவர்க்காய்
மேக்கு மேற்றிசை மேலும் பேர் மெய் யுண்மை யுடலுமாமே
ஊக்கமே வலி யுற்சாகம் உள்ளத்தின் மிகுதிக்கும்பேர்.
10
பக டிபம் பெருமை யேறு பஃறி யாண்மேதி யைம்பேர்
தகடிலை யைம்மை யென்ப தபனனே யிரவி தீயாம்
அகடெண்ப நடுவே குக்கி யருளென்ப கருணை சத்தி
மகரந்தங் கள்ளுந் தேனு மலர்த்தாதும் வழங்குமுப்பேர்.
11
சகுந்தம் புட்பொதுவே கங்கஞ் சடை யென்ப வேணிவேராம்
சிகண்டியே பாலையாழின் றிறத்திசை மயில் அலிப்பேர்
சகுனி புள் நிமித்தம் பார்ப்போன் சமமென்ப தம ரொப்பாகும்
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தமும் பேர்.
12
சக்கரம் பெருமை யோர்புள் தரணியே பிறப்பு வட்டம்
மிக்க தேருருளே யாழி வரையென விளம்பு மெண்பேர்
பக்கம் புட்சிறகு நட்புப் பகர் திதி யருகு மாகும்
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டுமுப்பேர்.
13
பூகமே திரளை பூகம் புன்கணென்பது நோய் துன்பம்
வாகுவே யழகு தோளாம் மாசியே மக மோர்மாதம்
பாகமே பிச்சை பங்காம் பயோதரம் புயலே கொங்கை
வாகை பண் பொழுக்கம் வெற்றி தவந் தொழில் வழங்கண் மிக்காம்.
14
நோக்கேன்பத யழகு பார்வை நுதலென்ப புருவ நெற்றி
சேக்கையே மிருகந்துஞ்சுமிடம் முலை சிறந்த பாயல்
பூக்கமே கமு கூரென்ப புலிங்கந் தீப்பொறி யூர் புள்ளாம்
ஆக்கம் பூமகள் செல்வப்பேர் அறல் கருமணல் நீராமே.
15
சீகரங் கரகம் வீசுங்கவரி யுந்தி வலையும் பேர்
சாகரந் துயிலொழித்தல் சமுத்திர மிருபேர் சாற்றும்
காகுளி தவிசு கண்டெத்தெழு மொலி இசையுங் காட்டும்
ஈகை பொன் ஈங்கைப் பேரி ரவியே மலை யாதித்தன்.
16
தகை யென்பதழகு பண்பு தயையொடு பெருமை நாற்பேர்
அகியென்ப தரவி ரும்பாம் அரிட்டமே கள்ளுக் காக்கை
ககமென்ப தம்பு புள்ளாங் கடுத்த லொப் பையம் வேகம்
அகவல் பா மயிற்குரல் கூத் தந்தமே யழ கீறென்ப.
17
அக் கென்பு விடை முரிப்பு மணி சங்கு மணியுமாகும்
நக்கலே நகை யுண்டற்பேர் ஞாட் பமர் பாரங் கூட்டம்
இக்கென்ப கரும்பு கள்ளாம் ஈரமே குளிர்ச்சி அன்பு
மக்கள் மானுடர் சிறார்பேர் வரைதலே கொள்ளல் நீக்கல்.
18
கேகயம் மஞ்ஞை யோர் பண் அசுணமாக் கிளத்து முப்பேர்
தோகையே மயிற்வால் மஞ்ஞை விலங்கின் வால் சொல்லு முப்பேர்
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்ப மாகும்
போகுதல் நெடுமை நேர்மை போகுதலெனு முப்பேரே.
19
கைக்கிளை இசை விகற்ப மொருதலைக் காம முப்பேர்
சுக்கை தாரகை மாலைப் பேர் சூத்திரம் பொறி நூ னூற்பா
எக்கரே சொரிதலோடு குவிதலும் இருபே ரென்ப
மொக்குளே குமிழி பூவின்முகிழேன மொழியலாமே.