சோழர் வரலாறு/கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்
இவன் காலத்திற்றான் தமிழகத்தில் மோரியர் படையெடுப்பு நடந்ததைப் பல பாடல்கள் குறிக்கின்றன. பழந்தமிழர், மோரியர்க்கு முற்பட்டுப் பாடலியைத் தலைநகரமாகக் கொண்டு மகத நாட்டை ஆண்ட நந்தர் என்பவரையும் நன்கறிந்திருந்தனர் என்பது பல பாக்களால் அறியக் கிடக்கும் உண்மை ஆகும்.[1]
சந்திரகுப்த மோரியன் காலத்துப் பேரமைச்சனான சாணக்கியன் தனது பொருள் நூலில், தமிழகத்திலிருந்து இரத்தினங்கள், சேரநாட்டு வைடுரியங்கள், கருநிறமுள்ள பாண்டிய நாட்டுச் சால்வைகள், மதுரை மெல்லிய ஆடைகள் முதலியன சந்திரகுப்தன் பண்டாரத்திற்கு அனுப்பப்பட்டன’ என்று வரைந்துள்ளமை,[2] தமிழகத்திற்கும் மகதப் பேரரசிற்கும் இருந்த தொடர்பை வலியுறுத்துவதாகும்.இதனால் பழந்தமிழர் நந்தர் பாடலியை மட்டுமே அன்றி, மோரியர் பாடலியையும் நன்கு அறிந்திருந்தனர் என்பது அங்கைக் கனியாகும். எனவே, தமிழ்ப் புலவர் தெளிவாக ‘மோரியர்’ எனக் குறித்தல் சந்திர குப்த மோரியர் மரபினரையே ஆகும் என்பதில் ஐயம் இல்லை.மேலும், நம் முன்னையோர் வடநாட்டவரை வேறு வேறாகவே பிரித்து வழங்கினர்: ‘வேங்கடத் தும்பர் மொழிபெயர் தேயம்’ என்பதை அவர்களே கூறி, ஆண்டுறைந்தவரை வடுகர் என்றும், அதற்கு (விந்தமலைக்கு) அப்பாற்பட்டவரை வடவடுகர்[3] (அக்கால மகத நாட்டினர்) என்றும் குறித்துள்ளனர். மாமூலனார் என்னும் நல்லிசைப் புலவர் சிறந்த வரலாற்று உணர்ச்சி உடையவராகக் காணப்படுகிறார். அவர் ஒரே செய்யுளில் நந்தரைக் குறித்துப் பின் மோரியர் படையெடுப்பையும் கூறியுள்ளார். புலவர் பலர் இச் செய்தியைக் குறித்துள்ளனர்:
“கனைகுரல் இசைக்கும் விரைசெலற் கடுங்கனை
முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிகை மாதிரம் முன்னிய வரவிற்கு”[4]
“மோகூர்
பணியா மையின் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்”[5]
“விண்பொரு நெடுவரை இயல்சேர் மோரியர்
பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த”[6]
“வெள்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த”[7]
இச்செய்யுள் அடிகளையும் பின் வரும் அடிகளையும் நன்கு ஆராயின், மோரியர்க்கு உதவியாக வடுகர் என்பாரும் கோசர் என்பாரும் ஆக இருவகைப் படைவீரர் இருந்தனர் என்பது பெறப்படும். இவ்விரு திறத்தாரைக் கொண்ட இரு வேறு படைகளை மோரியர் முன் அனுப்பித் தாம் பின் சென்றதாகப் பாடல் அடிகள் பகர்கின்றன. அடிமைப்பட்ட நாட்டு வீரரை, அவரை ஆட்கொண்ட பிறநாட்டார் தாம் படையெடுக்கும் முன்னர்ப் புகவிடல் இன்றும் நடைபெறுகின்ற வழக்கமே அன்றோ? மகதப் பேரரசை நடத்திய மோரியர், தாம் வென்றடக்கிய வடுக வீரரையும் கோசரையும் இம்முறையில் தம் தமிழகப் படையெடுப்புக்குப் பயன்படுத்தினர்.
வடுகராவார்
“பனிபடு வேங்கடத் தும்பர்
மொழிபெயர் தேஎத்தர்”[8]
“கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்”[9]
“கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்”[10]
எனப் புலவர் குறித்துள்ளமையின், தெலுங்கரும் கன்னடருமே ஆவர் என்பது பெறப்படுகிறது. கோசர் ஆவார், வடவடுகர்[11] எனப்படுவர். இவர் கிழக்கு வங்காளத்தைச் சேர்ந்தவராகலாம் என டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்கள் கருதுதல் பொருத்தமுடையதே ஆகும்.[12] இக்கோசர், ‘சொற்படி நடப்பவர்; அவர் இடம் நெய்தலஞ் செறு’[13] எனச் சில அடிகள் குறிக்கின்றன. இம்மோரியர் படையெடுப்பில் இக்கோசர்தம் ஆற்றல் கண்ட தமிழ் மன்னர் அவரைத் தம் சேவகத்தில் வைத்துக் கொண்டனர் போலும்! இக்கோசரே அசோகன் கல்வெட்டுகளிற் கண்ட ‘சத்தி புத்திரர்’ ஆகலாம் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் கருதுகின்றனர்.[14] கோசர் எவரே ஆயினும், தமிழகத்துக்குப் புதியவர் என்பதில் ஐயமில்லை.
மோரியர் படையெடுப்பு
வடுகர், கோசர் என்னும் படைவீரர் தவிர, மோரியர் படை ஒன்று தனியே இருந்தது. அப்படையில் தேர்கள் இருந்தன. எனவே, இத்தமிழகப் படையெடுப்பில் மோரியர் படை, கோசர் படை, வடுகர் படை என மூவகைப்படைகள் இருந்தன. (1) இம்மூவருள் முன்னுற வந்த கோசர் தமிழகத்தின் வடமேற்கு எல்லை வழியாக நுழைந்து துளுவ நாட்டை அடைந்தனர்; அந்நாட்டரசனான நன்னன் என்பானைக் காட்டிற்கு விரட்டினர்; அவனது பட்டத்து யானையைக் கொன்றனர், துளுவ நாட்டைக் கைப்பற்றினர்;[15] அவனது காவல் மிகுந்த பாழி என்னும் இடத்தே வடுகர் தங்கிவிட்டனர்.[16] வென்ற நாட்டில் வென்றவர் படை இருந்து பாதுகாத்தல் இயல்பே யன்றோ?
(2) நன்னனை வென்ற கோசர், சேரன் தானைத் தலைவனும் முதிரமலைத் தலைவனுமான பிட்டங் கொற்றன் என்பானைத் தாக்கினர்; போர் நடந்தது. முடிவு தெரியவில்லை.[17] (3) பின்னர் ‘வாட்டாறு’ என்ற ஊரையும் ‘செல்லூர்’ என்பதனையும் ஆண்ட எழினி ஆதன் என்பவனைக் கோசர் எதிர்த்தனர். அவன் செல்லுர்க்குக் கிழக்கே கோசரோடு, போரிட்டு, வேல் மார்பில் தைக்கப் பெற்று இறந்தான்.[18] (4) கோசர் சோழ நாட்டை அடைந்து அழுந்துரர் வேளான திதியனைத் தாக்கினர்; திதியன் கடுங்கோபம் கொண்டு, புலிக் கூட்டத்துள் சிங்கம் பாய்வதைப் போலப் பாய்ந்து கடும்போர் புரிந்து பகைவரைப் புறங்காட்டச் செய்தான்.[19] (5) பின்னர் அக்கோசர் மோகூரைத் தாக்கினர். மோகூர் பணிந்திலது, அப்பொழுது ‘வடுகர்’ படையை முன் விட்டுப் பின் புதிதாக வந்த (வம்ப) மோரியர் - பெரிய தேர்களையுடைய மோரிய வீரர் மோகூரைத் தாக்கினர்; முடிபு தெரிந்திலது.[20] இப்படையெடுப்பில் மோரியர், தம் வரவிற்குத் தடைசெய்த மலையை அல்லது பள்ளத்தாக்கை ஒழுங்கு செய்து வந்தனர் என்பது தெரிகிறது.[21] இம்மோகூர் தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில் ஆத்தூர்க் கணவாய்க்கு அண்மையில் உள்ள மோகூராக இருக்கலாம் என்று அறிஞர்[22] கருதுகின்றனர். (6) இங்ஙனம் தென் ஆர்க்காட்டுக் கோட்டம் வரை வந்த வடவடுகரான கோசரை இளஞ் சேட்சென்னி என்னும் சோழன் எதிர்த்து வாகை புனைந்தான்;[23] மேலும் இவன், குறைவினையை முடிப்பதற்காகப் (அரை குறையாகப் பகைவரை முறியடித்து அத்துடன் விடாமல் அவர்களை முற்றிலும் முறியடிக்க) பாழி நகர் வரை பகைவரைத் தொடர்ந்து சென்று, வடுகர் தங்கி இருந்த பாழியை எறிந்து, வம்பவடுகர் தலைகளை அறுத்து அழித்தான். இங்ங்னம் காவல் மிகுந்த ‘பாழி’யை வென்ற காரணம் பற்றி இச்சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி எனப்பட்டான்.[24]
மோரியர் தோல்விக்குக் காரணம்
இங்ஙனம் வலி மிக்க சோழன் போர் தொடுத்து வென்றமையாற்றான், மோரியர் படை நிலைகுலைந்து தமது கருத்துநிறைவேறப் பெறாமல், தமிழகம் விட்டு மீண்டிருத்தல் வேண்டும். இச்சென்னி பகைவரை எதிர்த்திராவிடின், தமிழகம் மோரியர்க்கு அடிமைப் பட்டிருக்கும். தமிழகத்தின் படை வலிமையையும் இயற்கை அமைப்பையும் பிறவற்றையும் அறியாத வடநாட்டினர் ஆதலின், மோரியர், துளுவநாட்டை முதலில் வென்று, சேரநாடு சென்று, பிறகு வாட்டாறு சென்று, பின்னர்ச் சோணாடு அடைந்து திதியனிடம் தோல்வியுற்றுப் பல இடங்களில் வழி தெரியாது திரிந்து மீண்டும் சோணாடு புக்கு முறியடிக்கப்பட்டனர்.
இப்படையெடுப்பு மோரியர்க்கு வெற்றியைத் தராமையாலும், தமிழகம் தன்னாட்சி பெற்றே அசோகன் காலத்தும் விளங்கினமையாலும், இளஞ்சேட்சென்னி யால் மோரியர் தோற்கடிக்கப்பட்டனர் என்னும் புலவர் கூற்றுகள் உண்மை என்றே புலப்படுகின்றன. இப்படையெடுப்புச் செய்தியில் சேரர், பாண்டியர் பெயர்கள் காணப்படவில்லை. ஆனால் கி.மு. 2ஆம் நூற்றாண்டினனான காரவேலன் தனக்கு முன் 113 ஆண்டுகளாக இருந்து வந்த தமிழரசர் கூட்டமைப்பை அழித்ததாகக் கூறிக் கொள்கிறான். இதனை நோக்க, மோரியர் படையெடுப்புக்குப் பின் தமிழரசர் ஒன்றுபட்டு வடவரை எதிர்த்தனர் என்பது தெரிகிறது.
பிற்கால ஆரியர், கோசர், வடுகர்
கோசர், வடுகர், மோரியர் சம்பந்தப்பட்ட செய்யுட்களை ஒருங்கு கூட்டி நல்லுணர்ச்சியோடு நுணுகி ஆராய்பவர் ஒருவாறு மேற்கூறப் பெற்ற முடிவுக்கே வருதல் கூடும். இப்படையெடுப்பில் தொடர்பற்ற பிற்கால ஆரியர், கோசர், வடுகர் என்று தமிழ்ப்பாக்களில் குறிக்கப் பெற்றவர் வேறு. கி.மு.232-இல் அசோகன் இறப்ப, அவனுக்குப் பின் வந்த சாதவாகனர் (வடுகர்) தம்மாட்சி பெற்று வடவேங்கடம் முதல் கங்கையாறு வரை பேரரசை நிறுத்தி ஆளத் தொடங்கினர். அப்பொழுது தமிழகத்தின் வட எல்லையில் வடுகர் பாதுகாவற்படை இருந்தது. மோரியர் காலத்துக் கோசர் மரபினர் எல்லைப்புறத்தில் நிலைத்தனராதல் வேண்டும். அங்ஙனம் நிலைபெற்ற அக்கோசர், வடுகர், கங்கைச் சமவெளியினின்றும் வடுக நாட்டில் தங்கிய ஆரியர் ஆகிய இவர்கள், பிற்காலத்தே மலையமான், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் முதலியோரால் தாக்கப்பட்டிருக்க வேண்டும். என்னை? இச்செழியன் காலம் சிலப்பதிகார காலம். கி.பி. 150 -200[25] மோரியர் படையெடுப்பின் காலம் கி.மு. 298 - கி.மு. 272; அஃதாவது அசோகன் தந்தையான பிந்துசாரன் காலம் ஆகும்.[26] எனவே ஏறத்தாழ 400 ஆண்டுகட்கு முற்பட்டவரும் பிற்பட்டவரும் ஆகிய கோசர், வடுகர் என்பவர் வேறு வேறானவர். இக்கருத்தினை டாக்டர் கிருஷ்ணசாமி ஐயங்கார் அவர்களும் ஆதரித்தல் காண்க.[27]
- ↑ குறுந்தொகை 75; அகம் 251-265
- ↑ P.T.S. Iyengar’s ‘History of the Tamils’ pp. 141-141.
- ↑ புறம், 378.
- ↑ அகம், 281.
- ↑ அகம், 251.
- ↑ அகம், 69.
- ↑ புறம், 175.
- ↑ அகம், 211.
- ↑ அகம், 107.
- ↑ நற்றிணை 212.
- ↑ புறம், 378.
- ↑ Vide his ‘Beginnings of S.I. History,’ pp, 59,94.
- ↑ அகம், 196,15,113.
- ↑ Vide his ‘Cholas’, vol. I p.28.
- ↑ குறுந்தொகை 73.
- ↑ அகம், 375.
- ↑ புறம், 169.
- ↑ அகம், 90, 216.
- ↑ புறம் 261, 281
- ↑ அகம் 196, 262.
- ↑ அகம் 69, 251, 281, புறம், 175.
- ↑ K.A.N. Sastry’s ‘Cholas’, Vol. 1.p. 28.
- ↑ அகம் 205, 378.
- ↑ அகம் 375, புறம் 378.
- ↑ K.G. ‘Sesha Iyers’ ‘Cheras of the Sangam Period’, pp. 121, 122.
- ↑ Vide the author's article in ‘Sentamil Selvi’, vol. 16 pp. 117-199.
- ↑ Vide his ‘Beginnings of S.I. History’, pp.98,99.