விடுதலைப்போரில் சேதுபதி மன்னர்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.


இந்திய விடுதலைப் பொன்விழா ஆண்டு வெளியீடு

விடுதலைப் போரில்

சேதுபதி மன்னர்




டாக்டர் எஸ். எம். கமால்




வெளியீடு :

ஷர்மிளா பதிப்பகம்

21, ஈசா பள்ளிவாசல் தெரு

இராமநாதபுரம் - 623 501

முதற் பதிப்பு : மார்ச், 1987

இரண்டாவது பதிப்பு : 1997

© டாக்டர் S. M. கமால்





விலை : ரூ. 50-00




அட்டைப்படம்

இராமேசுவரம் திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத் திருப்பணியை முற்றுவித்ததன் காரணமாக, அந்தக்கோயிலின் மேற்கு கோபுர வாசல் தூணில் பொறிக்கப்பட்டு இருக்கும். மன்னர் முத்துராமலிங்க சேதுபதியின் திருவுருவம்.


அச்சிட்டோர் : உதயபிரியா அச்சகம், மதுரை - 10.



Bibliographical Data

1, Title  : VIDUDHALAI PORIL
                        SETHUРАТHY МАNNAR
2, Author  : Dr. S. M. Kamal
                        21, Esa Pallivasal Street
                        Ramanathapuram-623 501
3, Language  : Tamil

4, Edition  : Second

5, Publication  : November, 1997

6, Сорyright  : Author

7, Paper used for Text: Cream Wove 13.7 kg.

8, Size of the Book  : 21.5 >< 14 Cms

9, Type used for Text : 10pt. Tamil Roman

10, Pages  : 14+206

11, No. of copies  : 1000

12, Printers  : Udhayapriya Achchaham
                        28-A, Janaki Narayanan Street
                        S.S. Colony, Madurai-625 O1 O.

13, Publishers  : Sharmila Pathippagam
                        21. Esa Pallivas a Street.
                        Ramanathapuram-623 501

14, Binding  : Раper pack



இந்திய விடுதலை இயக்க முன்னோடியும் மறவர் சீமையின் மகத்தான தியாகியுமான முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதியின் வழி வழியினரும், இந்த நூலின் பதிப்புக்குரியவருமான

திரு. நாகேந்திர குமரன் சேதுபதி அவர்கள்


தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை
டாக்டர் இரா. நாகசாமி எம். ஏ., பிஎச். டி., அவர்களின்
அணிந்துரை

விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' என்ற டாக்டர் எஸ். எம். கமால் எழுதிய இந்த நூல் ஒரு அருமையான வரலாற்று நூல். ஆழ்ந்த ஆராய்ச்சியும், தெளிவான சிந்தனையும், இனிய வீறுகொண்டு எழச் செய்யும் நடையும், தக்க சான்றுகளின் ஆதார அடிப்படைக் குறிப்பும், தொகுத்துரையும் உள்ள இந்நூல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது எனில் அது மிகையல்ல. ஆங்கில கும்பினியாரின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த தமிழகத்தின் வரலாற்றில் வீர உணர்வோடு, நியாய அடிப்படையில் எதிர்க்குரல் கொடுத்த இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் வரலாறு, இறுதியில் சென்னை சிறையில் ஆங்கிலேயரால் அடைக்கப்பட்டு, உடல் நலம் குன்றி 23, 24-1-1809 அன்று இரவு வரலாற்றில் வாழும் பொன்றாத புகழ் உடம்பு எய்திய' இம்மன்னரைப் பற்றி இதைக் காட்டிலும் சிறப்பாக வேறு ஒரு நூல் எழுத இயலாது என்னும் அளவிற்கு ஒப்பொரும் நூலாக கமால் அவர்கள் இதனைப் படைத்துள்ளார்கள்.

பல்வேறு ஆவணங்களை, மாவட்ட மான்யுவல்களை மிலிட்டரி குறிப்புகளை ஆய்ந்து படித்து அற்புத தமிழில் வடிக்கப்பட்ட இந்நூலில் ஆங்காங்கே அன்றிருந்த வாணிகம், வாணிகப் பொருட்கள், அதற்குக் கிடைத்த லாபமும், கூலியும், அன்றிருந்த நாணய மதிப்புகள் முதலியன சிறப்புற வடிக்கப்பட்டுள்ளன. சேதுபதி மன்னரை கும்பினியார் வஞ்சகமாய் கைதாக்கி திருச்சிக்கு அனுப்பியபோது அன்றிருந்த மறவர்களின் மனக்குமுறல்களை ஆசிரியர் இந்நூலில் கொட்டியிருக்கிறார் (பக்கம் 88). அதைப் படிக்கும்போது நாம் வீறு கொண்டு எழுகிறோம், உள்ளம் துடிக்கிறது. சேதுபதி மன்னரின் உடைமையை கும்பினிப் பரங்கியர் எப்படி எல்லாம் சூறையாடினார்கள் என வடித்துள்ள பகுதி குறிக்கத்தக்கது.

தமிழில் ஆராய்ச்சி மிகுந்த நல்ல வரலாற்று நூல்களை எழுத முடியும் என்பதை இவ்வாசிரியர் வெளிப்படுத்தியுள்ளார் இவரது ஆராய்ச்சித் திறனைப் பாராட்டுகிறேன். அண்மையில் ஆராய்ச்சித் தமிழில் வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் இதைத்தலைச் சிறந்த நூல் எனக் கருதுகிறேன்.

ஆசிரியர் இதுபோன்று பல நூல்களைப் படைப்பின் தமிழ் வரலாறு சிறப்புறும் என்பதில் ஐயமில்லை. இந்நூலை வெளிக் கொணரும் நியூ செஞ்சுரி புத்தக நிலையத்தாருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

இரா. நாகசாமி


பதிப்புரை

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடந்த சிப்பாய்க் கிளர்ச்சிக்கு முன்பே தமிழகத்தில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. பாஞ்சாலங் குறிச்சியில் கட்டபொம்மு, சிவகெங்கைச் சீமையில் மருதிருவர், மற்றும் பல எண்ணற்ற வீரர்கள் விடுதலைப் போரில் தம் இன்னுயிரை ஈந்த வரலாற்றை நாம் அறிவோம். ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டில், வெள்ளையனை எதிர்த்து, தன்னாட்சிக்கு வீர சபதம் ஏற்று, போர்க்கொடி உயர்த்திய ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியைப் பற்றிய வரலாறு இதுவரை முழுமையாக அறிய முடியாமலே இருந்து வந்துள்ளது. இப்பொழுது அந்தக் குறையினை டாக்டர் எஸ். எம். கமால் விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்' எனும் இந்நூலைப் படைத்ததன் மூலம் நிறைவு செய்துள்ளார். அரசு ஆவணக் காப்பகத்திலிருந்து சேதுபதி மன்னரைப் பற்றிய பல அரிய உண்மைகளைச் சேகரித்து இந்நூலில் தந்துள்ளார்.


1760-ல் பிறந்த இம்மன்னர் இளம் வயதிலிருந்தே ஆங்கிலேயரால் சுமார் 22 ஆண்டுக் காலம் திருச்சி, சென்னை ஆகிய கோட்டைச் சிறைகளில் அடைக்கப்பட்டு, 1809-ல் சென்னை கோட்டைக்கு அருகிலுள்ள பிளாக் டவுனில் உயிர் நீத்தார்.


சேதுபதி மன்னர் காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி இராமநாதபுர மக்களின் வாழ்க்கையை எவ்வாறு சூறையாடியது என்பதனையும் அங்கு குறிப்பாக கைநெசவாளர் தயாரித்த மஸ்லின்வகை போன்ற துணிகள் எவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதனையும் ஆதாரங்களுடன் இந்நூல் விளக்கிக் கூறுகிறது.


இந்நூலுக்கு தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத் துறை இயக்குநர் டாக்டர் இரா. நாகசாமி, எம். ஏ., பிஎச்.டி., அவர்கள் அணிந்துரை வழங்கியுள்ளார்கள். அன்னாருக்கு எமது நன்றி உரியது.


தமிழக வரலாற்று ஆய்வாளர்களும், மாணவர்களும், பொதுமக்களும் இதனை வரவேற்பார்கள் என்னும் நம்பிக்கையுடன் இந்நூலை வெளியிட்டுள்ளோம்.

சர்மிளா பதிப்பகம்

இரண்டாவது பதிப்புரை


இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், தமிழகத்தில் வணிகம் செய்து பொருளிட்ட வந்தவர்கள் "கும்பெனியார்" என்று அழைக்கப்பட்ட ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார். அரசியல் தலைமையை இழந்து, குழப்பம் மிகுந்து இருந்த அன்றைய அரசியலைத் தங்களது சூழ்ச்சிகளினாலும் சித்து விளையாட்டுகளினாலும் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டனர். தங்களது வெடிமருந்துத் திறனால் தஞ்சாவூர், புதுக்கோட்டை மன்னர்களை அடக்கி ஒடுக்கி தங்களது எடுபிடிகளாக்கி, ஆற்காட்டு நவாப்பின் அதிகாரம் பெற்ற முகவர்களாக அன்று அவர்கள் பவனி வந்தனர்.


இந்த ஏகாதிபத்திய வெறிநாய்களை விரட்டியடிக்க முன்வந்தவர்கள் மறவர் சீமை மன்னர்கள் மட்டுமே. இந்தப் பரங்கிகளின் ஏகாதிபத்திய பேராசையினைப் பகற்கனவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் இராமநாதபுரம் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1760-1809). இந்த மன்னர் பன்னிரண்டு வயதாக இருக்கும் பொழுது, இராமநாதபுரம் கோட்டையைப் பீரங்கிகளால் துளைத்து ஆற்காட்டு நவாப்பிற்கு வெற்றியைப் பெற்றுத்தந்த கும்பெனியார், இந்த இளம் மன்னரையும் இவரது தாயாரையும் கைதிகளாக்கி திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தனர்.


சேதுபதி சீமையில் எழுந்த கலகத்தை சமாளிக்க இயலாத ஆற்காட்டு நவாப், இளம் மன்னரை சிறையில் இருந்து விடுவித்து சமாதானம் செய்து கொண்டார்.

பத்தாண்டுச் சிறைவாசம் முடித்து ஆட்சிக்கு வந்த சேதுபதி மன்னர், ஆற்காட்டு நவாப்பையும் அவரது அடிவருடியான கும்பெனியாரையும் அஞ்சாது எதிரித்தார். அவர்களது ஆணைகளைப் புறக்கணித்தார். அவர்களது வெடிமருந்து ஆயுதங் களை முறியடிக்க ஆயுதச்சாலை நிறுவி, இறுதி மோதுதலுக்கு ஆயத்தமானார். ஆனால் சூழ்ச்சியால் அரண்மனையைச் சூழ்ந்து மன்னரை மீண்டும் சிறைப்படுத்தினர். மறவர் சீமையில் மக்கள் கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம். மன்னருக்கு ஆதரவாக எழுந்த இந்தக் கிளர்ச்சிகளும் துரோகத்தினால் முறியடிக்கப்பட்டன. மன்னர் திருச்சிக் கோட்டையிலிருந்து குண்டு துளைக்காத சென்னைக் கோட்டை அறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சிறைவாசத்தையும் சேர்த்து மொத்தம் இருபத்துநான்கு ஆண்டுகள் சிறைவாழ்க்கையில் அவரது வாழ்க்கை முடிந்தது.


இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், பதந்திருவிரண்டும் மாறி, பழிமிகுத்திட்டாலும், விதம்தரு கோடி இன்னல் விழைந்தெம்மை அழித்திட்டாலும், சுதந்திரதேவி நின்னைத் தொழுதிடல் மறக்கிலேன் என பின்னர் சுதந்திரப் பிரகடனம் செய்த மகாகவி பாரதியின் கவிதைக்கு முன்னோடி வடிவாக அமைந்துள்ளது இந்த மன்னரது வாழ்க்கை.


ஏறத்தாழ இருநூறு ஆண்டுகாலமாகத் தமிழக வரலாறும் தமிழக மக்களும் அறிந்து கொள்ளாத இந்த வீரமறவனது தியாக வாழ்க்கையை, கும்பெனியாரது துசுபடிந்த ஆவணங்களில் இருந்து திரட்டி, எழுத்து வடிவில் தமிழக மக்களுக்கு முதன் முறையாக அறிமுகப்படுத்தி அறியச் செய்த பெருமை சேது நாட்டு வரலாற்றுச் செம்மல் டாக்டர். எஸ். எம். கமால் அவர்களையே சாரும்.

இந்த இளம் சேதுபதி மன்னர் பற்றிய அனைத்துச் செய்திகளையும் மிக்க ஆர்வத்துடன் பலவித இடர்ப்பாடுகளுக்கிடையில் தமிழக அரசின் தமிழ்நாடு ஆவணக்காப்பகத்து ஆவணங்கள், மடல்கள், அறிக்கைகள், தொகுப்புப் பதிவேடுகள் ஆகியவைகளில் இருந்து சேகரித்து, அழகு தமிழில் சிறந்த வரலாற்று நூலக ஆசிரியர் அமைத்து வழங்கி இருப்பது அருமையிலும் அருமை.

இந்த நூலுக்கு 1989ஆம் ஆண்டு திருவள்ளுவர் திருநாள் விழாவில் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சிறந்த நூலா கத் தேர்வு செய்து முதற்பரிசும் பாராட்டிதழும் வழங்கியது. பொது நூலகத் துறையைச் சார்ந்த பொது நூலகங்களுக்கு, இந்த நூலின் ஐநூறு படிகளை வாங்கி வழங்கியது.

பத்தாண்டுகளுக்குப் பிறகு, இப்பொழுது குறிப்பாக, இந்திய விடுதலை பொன்விழா ஆண்டில், இந்த நூலின் இரண்டாவது பதிப்பு வெளிவருவதை நாட்டுப்பற்று மிக்க தமிழ் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என நம்புகிறோம். மேலும் இந்த பதிப்பு, சேதுபதி மன்னரது சீரிய தியாகத்திற்கு நாம் செலுத்தும் அன்புக் காணிக்கையாக என்றும் விளங்கும் என எண்ணுகிறோம்.

- சர்மிளா பதிப்பகம்

இராமநாதபுரம்

1997ம் ஆண்டு
நவம்பர் - 16


அறிமுகம்

அந்நிய ஆதிக்கத்திற்கு எதிரான நமது விடுதலைப் போராட்டம், நாடு தழுவிய தேசிய இயக்கமாக முதன் முதலில் வட இந்தியாவில் கி.பி. 1857-ல் இந்திய சிப்பாய்களது கிளர்ச்சியுடன் தொடங்கியதாக வரலாற்று ஆசிரியர்கள் அண்மைக் காலம் வரை எண்ணி வந்தார்கள். எழுதி வந்தார்கள்.

ஆனால், அந்தக் கிளர்ச்சிக்கும் எழுபது ஆண்டுகளுக்கு முன்னர், தெற்கே தமிழ்நாட்டில் விடுதலை இயக்கம் துவங்கிவிட்டது என்பதுதான் மறுக்க முடியாத வரலாற்று உண்மை. அந்த இயக்கத்தின் பல பகுப்புகளை, மோதல்களை, போராட்டங்களை விவரமாக அறியத்தக்க வாய்ப்பு இல்லை. அவைகளைத் தொடர்ந்து தலைமை தாங்கிய தீரர்களை வீரர்களை . தியாகிகளைப் பற்றிய விவரங்களை வரலாற்று ஆவணங்களின் அடிப்படையில், முறையாகத் தொகுத்து வழங்கும் பணி மேற்கொள்ளப்படாததுதான் அதற்குக் காரணமாகும்.

அதனைத் தொடரும் முகமாக, இந்த நூலில், மறவர் சீமையின் தன்னாட்சிக்கு வீரமுழக்கமிட்டு, நமது நாட்டு விடுதலை வேள்வியைத் துவக்கிய, வேந்தர் திலகம் முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி மன்னர் (1760-1809) தமிழக மக்களுக்கு அறிமுகம் பெறுகிறார்.

ஆயுத பலத்தை ஆதாரமாகக் கொண்ட ஆற்காட்டு நவாப் முகம்மது அலி-ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியார்-ஆகியோரது ஆதிக்க வெறியை அழித்து ஒழிக்க துடிதுடித்து செயல்பட்ட அந்த இளம் மன்னரைப் பற்றிய செய்திகளை வரலாற்று ஆவணங்களில் இருந்து தொகுத்து இங்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வீர மறவரைப் பற்றிய செய்தியை முதன் முதலில் கி.பி. 1891-ல் வெளியிடப்பட்ட ஆங்கில நூலான இராம்நாட் மானுவலில் (Rammad Manual-1898) "முத்துராமலிங்க சேதுபதி மன்னர் கி.பி. 1792-ல் ஆங்கில அரசுக்கு எதிராகப் புரட்சி செய்யும் போக்கினைக் கொண்டு இருந்தார்" (பக்கம் 248). "அதனால் அவரது சீமையை நிர்வகிக்க கும்பெனிக்கு கலெக்டர்  நியமிக்கப்பட்டதுடன், சேதுபதி மன்னரும் சென்னைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கேயே கி.பி. 1801-ல் காலமானார் (பக்கம் 251-52)' என்று கும்பெனியாரது சேவையில் இருந்த திரு. ராஜாராம்ராவ் என்பவர் வெள்ளை அரசுக்குப் பயந்த முறையில் வரைந்துள்ளார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் மறவர்களைப் பற்றி விரிவான ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் டாக்டர் எஸ். கதிர்வேல் அவர்கள், தமது ஆய்வுரையில், மறவர் சீமையின் மன்னரான இவர், ஆற்காட்டு நவாப், பிரிட்டிஷார் ஆகிய இருவரது ஆதிக்கத்தையும் புறக்கணித்தார். தன்னரசு நிலையை எய்துவதற்கு முயன்றார் (பக்கம் 185). பிப்ரவரி 1795-ல் கும்பெனிப் படைகள் மேஜர் ஸ்டீவென்ஸன் தலைமையில் இராமநாதபுரத்திற்குள் நுழைந்தன. சேதுபதி மன்னர் இதனை எதிர்பார்க்கவில்லை. அவரைப் பதவியில் இருந்து நீக்கி, திருச்சிக்கு அனுப்பிவிட்டு, கும்பெனியாரது ஆட்சியை அங்கு நிறுவினர் . (History of Marawas, Page 191, 1974) எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையே பேராசிரியர் டாக்டர் கே. ராஜையனும் தமது “Rise and fall of the Polegars of Tamilnadu (1962) என்ற நூலில் எழுதியுள்ளார். இந்தக் குறிப்புகளைத் தவிர இந்த மன்னரது புரட்சிப் போக்கைத் தெரிவிக்கும் நூல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசின் சென்னைப் பட்டின ஆவணக்காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் கிழக்கிந்திய கும்பெனியாரது பலவகையான ஆவணத் தொகுப்புகளைப் படித்துப் பார்த்தபொழுதுதான், இந்த மன்னரைப் பற்றிய பல தகவல்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது. குறிப்பாக அவரது எண்ணத்தில் இழையோடிய சுதந்திரப் போராட்ட சிந்தனைகள் அந்நிய ஆதிக்க எதிர்ப்புணர்வுகள், அவைகளைப் பிரதிபலிக்கும் நடவடிக்கைகள். மறவர் சீமை ஆதிக்கத்தைக் கைப்பற்ற பரங்கிகள் செய்த சதி, பகற்கொள்ளை-இவைகளைக் கண்டு கொதித்து எழுந்த விர மறவர்களது கிளர்ச்சி-ஆயுதப் போராட்டங்கள் போன்ற பல அரிய செய்திகளை அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

அவைகளை ஒரளவு முறையாகத் தொகுத்து இந்த நூலில் அளித்துள்ளதின் மூலம், அந்த வீர மன்னரது வரலாற்று வடிவத்தை விடுதலை இயக்கத் தொடக்கத்திற்கு அவரது பங்களிப்பை, தியாகத்தை சித்தரிக்க முயன்று இருக்கிறேன்.


இந்த நூல் முழுவதையும் ஆர்வத்துடன் படித்து முடிக்கும் வாசகர் இதயத்தில், இந்தச் சிறந்த தியாகிகளைப் பற்றிய அனுதாபத்தை எனது எழுத்துக்கள் ஏற்படுத்துமானால், எனது இந்த முயற்சி உரிய இலக்கினை எய்தியுள்ளதாக மகிழ்ச்சியுறுவேன். மேலும், நமது நாட்டு விடுதலை இயக்க முன்னோடிகளில் முதன்மையானவரை, முழுதுமாக மறந்துவிட்ட தமிழக மக்களுக்கு இனங்காட்டிய பெருமையையும், மன நிறைவையும் பெறுவேன்.


இந்தப் பணிக்கு முதலும் முடிவுமாக அமைந்துள்ள தமிழக அரசு ஆவணக் காப்பக வரலாற்று ஆவணங்களை, கடந்த மூன்று ஆண்டுகளில் படித்துப் பார்த்து, குறிப்புகள் எடுத்துக் கொள்ள மேலான அனுமதி வழங்கிய தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையாளர்கள் திரு. சு. ரங்கமணி, ஐ.ஏ.எஸ் அவர்களுக்கும் உதவி ஆணையாளர் திரு வின்சென்ட், எம்.ஏ., திருமதி சரோஜா, எம்.ஏ., ஆகியோருக்கும், விரும்பிக் கோரிய கோப்புகள், தொகுப்புகள், பதிவேடுகள், நூல்கள் ஆகியவைகளைத் தேடி எடுத்து வழங்கி உதவிய, ஆவணக் காப்பகப் பணியாளர் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், எனது இந்த எளிய முயற்சி, எழிலும், பொலிவும் பெற்று, அழகிய இந்த நூல் வடிவில் எழுத்துலகில் பவனி வருவதற்கு பேரார்வம் காட்டிய சென்னை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினருக்கும் அதன் தலைவர் தோழர் எம்.வி. சுந்தரம் அவர்கட்கும் எனது நன்றிப் பெருக்கினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இராமநாதபுரம்,

எஸ். எம். கமால்

ஆகஸ்ட், 1986.