மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 02

விக்கிமூலம் இலிருந்து

மனோன்மணீயம்- நாடகம்[தொகு]

மனோன்மணீயம்/அங்கம் 03/களம் 02[தொகு]

மூன்றாம் அங்கம்- இரண்டாங் களம்: கதைச்சுருக்கம்[தொகு]

திருநெல்வேலிக் கோட்டைக்கு அப்பால், ஊரின் புறமாகக் காலைவேளையில், நடராசன், தனியே செல்கிறான். அரண்மனையிலிருந்து, சுந்தரமுனிவருடைய ஆசிரமத்துக்குச் சுரங்கம் அமைக்கும் வேலையை முடித்து விட்டான். இன்னும் சிறுபகுதிவேலை, ஆசிரமத்தில் செய்யவேண்டியிருக்கிறது. நடராசன், தனக்குத்தானே பேசிக்கொள்கிறான்: “வேலை இன்று இரவு முடிந்துவிடும். வாணியின் முகக்காட்சி, என் மனத்தில் இருந்து, இந்த வேலையைச் செய்து முடிக்க, என்னை ஊக்கப் படுத்துகிறது. அதனால் அல்லவா, இந்த வேலை, இவ்வளவு விரைவாக, இப்போது முடிந்தது! யாரையும் இயக்குவதற்கு, இன்பமுள்ள இலட்சியம் வேண்டும். எல்லோருக்கும் ஒவ்வொரு குறிக்கோள் வேண்டும். உலகத்திலே குறிக்கோள் இல்லாதவை எவை? இதோ முளைத்துள்ள இச்சிறு புல்லுக்கும், குறிக்கோள் உண்டு. இது, தன் சிறுபூவை உயரத்தூக்கி அலரச்செய்து, அதில் உள்ள தேன்துளியை வந்து உண்ணுமாறு தேனீக்களை அழைத்து, அவற்றின் மூலமாக, மகரந்தப்பொடிகளைக் கருப்பையில் சேர்ப்பித்துக் காய் காய்க்கிறது. காய்த்த காய்கள் ஒரே இடத்தில் விழுந்து முளைத்தால், அவை, நன்றாகத் தழைத்து வளரா. ஆகையால், அக்காய்களைத் தூரத்தில், வெவ்வேறிடங்களுக்கு அனுப்புவதற்காக, அவற்றின்மேல் சுணைகளையும், முட்களையும் உண்டாக்கி, அருகில் வருகிற ஆடுமாடு பறவை மனிதர் முதலியவர்களின் மேல் ஒட்டிக்கொள்ளச் செய்து, அவற்றின் மூலமாக, வெவ்வேறு இடங்களுக்கு அனுப்பி, வளரச்செய்கிறது. இதன் இயற்கை இயல்பையும், குறிக்கோளையும் காண்போர், எதையும் அற்பம் என்று கருதாமல், அவற்றில் உள்ள அன்பையும் அழகையும், குறிக்கோளுக்கேற்ற முயற்சியையும் கண்டு, அவற்றுடன் அன்பினால் கலந்து இன்பம் அடைகிறார்கள்.
“இதோ ஓடுகிற வாய்க்காலில்தான், எத்தனை விசித்திரம் உண்டு! கடலை மலையாகவும், மலையைக் கடலாகவும் மாற்றுதற்கல்லவா, இவ்வாய்க்கால் ஓடுகிறது! பரற்கற்களை உருட்டி உராய்ந்து மணலாக்கி, வெள்ளத்தில் சேரும் புல், மண், கல் முதலியவைகளையும் அடித்துக்கொண்டு ஓடுகிற ஆறானது, கடல் என்னும் மடுவை அமைக்கிற காலம் என்னும் தச்சனுக்கு உதவியாக அவற்றைக்கொடுத்து, ‘ஐயா, சூரியனின் ஆணையினால், நீராகிய நான் ஆவியாகி மேகமாகச் சென்று, மலைகள்-குன்றுகளின்மேல் மழையாகப்பெய்து அருவியாக ஓடி, ஊற்றாகப்பாய்ந்து, ஆறாக ஓடி, மடுவாய்க்கிடந்து, மதகில் குதித்து, வாய்க்காலில் ஓடிப் பலவாறு பாடுபட்டுச் சேர்த்துக் கொண்டுவந்த கல்லும் மண்ணும் சிறிதேயாயினும், அவற்றையும் ஏற்றுக்கொள்க. இன்னும்போய்க் கொண்டு வருவேன்’ என்று கூறி, மீண்டும் மேகமாகி மழையாகப்பெய்து, இரவும் பகலும் ஓயாமல் உழைக்கும் உழைப்பாளிகள் யார் உளர்?” இவ்வாறு கூறிக்கொண்டே, நடராசன் வாய்க்காலின் நீரைக் கையினால் தடுக்கிறான். அது, வழிந்து ஓடுகிறது. “ஐயோ! உனக்கு நோகிறதோ! அழாதே, போ” என்று சொல்லி,விடுகிறான். “தண்ணீரே, உன்னைப்போல், உலகத்தில் உழைப்பவர் யாவர்? நீங்காத அன்பும் ஊக்கமும் உறுதியும், உன்னைப்போலவே எல்லோருக்கும் இருந்தால், எவ்வளவு நன்மை கிடைக்கும்!” என்று கூறுகிறான்.
பிறகு மண்ணில் காணப்பட்ட நாங்கூழ்ப் புழுவை (நாகப்பூச்சியை) கண்டு, அதற்கும் குறிக்கோள் உண்டு என்பதைக் கூறுகிறான். “நாங்கூழ்ப் புழுவே, உன்னுடைய உழைப்பு ஓயாத உழைப்பு. எல்லா உழைப்பினும, உழவர் உழைப்பே மேலானது. உழவருக்குப் பேருதவி செய்கிறவன், நீ. மண்ணைப் பக்குவப்படுத்துவதற்காகவே, நீ பிறந்தாய். மண்ணைத்தின்று, அதை மெழுகுபோலாக்கிப் பதப்படுத்தி, உருட்டி உருட்டி உமிழ்கிறாய். புகழை விரும்பாமல் உழைப்பவரைப் போல, நீ, மண்ணில் மறைந்து வாழ்கிறாய். நீ, மண்ணைப் பக்குவப்படுத்தாவிட்டால், இந்தப் பயிர்கள் எப்படி விளையும்? நீசெய்யும் இந்தப் பேருதவியை எண்ணாமல், எறும்பு முதலிய பூச்சிகள், உன்னைக் கடித்துக் குறும்பு செய்கின்றன. உனக்கு உள்ள பொறுமையும் உழைப்பும், வேறு யாருக்கு உண்டு?” என்று கூறுகிறான். அது மண்ணுள் மறைவதைக் கண்டு, “நீ, புகழை விரும்பவில்லை. நல்லது போ. உன்வேலையைச் செய். இப்படி, இன்பத்தையும், அன்பையும் காணாமலும், இவைகளைப் போற்றாமலும் இருக்கிற மனிதரின் வாழ்நாள் என்னே! உடம்பையும் மனத்தையும் பெற்றுள்ள மனிதர்கள், சூரியனின் கதிர்களை இழுத்து ஒருமுகப்படுத்தித் தீயை உண்டாக்குகின்ற சிற்றாடியை (லென்சு என்னும் கண்ணாடியைப் போல) அறிவை ஒருமுகப்படுத்திக் காணாத மக்கள், கள்ளர்... அவனை (பலதேவனை) நினைக்காதே; சீனத்தீ எழும்புகிறது! கருமி; அற்பன்! விடுவிடு!” என்று இவ்வாறு அவன், தனக்குள் சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, தூசிப்படலம் புகைபோல வானத்தில் காணப்பட்டதைக் கண்டான்.
கண்டு வியப்படைந்து கூறுகிறான்: “அது என்ன? புகையா? மேகமா? மேகத்தின் நிறம் இப்படி இராது. பொதிகை மலைமேல் எழும்பி வருகிற சூரிய ஒளியையும் மறைத்துவிடுகிற இந்தப் புழுதிப் புகை என்ன? அதோ தோன்றுவன, கொடிச் சீலைகள். இடியோசை கேட்பது போலக் கேட்பது, தேர்களின் ஓசை. ஓ! படை வருகிறது! வருகிறவன் யார்? வருகிற திசையைப் பார்த்தால் சேரன் போலத் தெரிகிறது. சீச்சீ! போருக்கல்ல அவன் வருவது! திருமணம் செய்துகொள்ள வருகிறான் போலும். ஓகோ! இது என்ன பாட்டு- போர்ப்பாட்டாக இருக்கிறதே!” இவ்வாறு இவன் சிந்திக்கும்போது, சேரனின் படைகள் அணிவகுத்துச் செல்வதைக் கண்டான். சேனைகளுடன் செல்லும் பாணர்கள், வீரச்சுவையுள்ள போர்ப்பாடல்களைப் பாடுகிறார்கள். இடையிடையே, “ஜே!ஜே!” என்னும் கூச்சல் வானத்தைப் பிளந்து செல்கின்றது.
இவற்றையெல்லாம் கண்டும் கேட்டும் வியப்படைந்த நடராசன், தனக்குள் கூறுகிறான்: சேனைகளின் ஆரவாரமும், மிடுக்கும், போர்க்களப்பாட்டும், தலையில் சூடியுள்ள வஞ்சிப்பூ மாலையும் போர்க்குறிப்பைக் காட்டுகின்றனவே யல்லாமல், திருமணக்குறிப்பைக் காட்டவில்லையே. என்ன நேரிடுமோ! குதிரைப்படைகளும், யானைப்படைகளும் தேர்ப்படைகளும், திருநெல்வேலியை நோக்கி வருகின்றன. ஐயோ! மனோன்மணியின் திருமணக்கோலமா இது! இவ்வாறு நடராசன் எண்ணிக் கொண்டிருக்கும் போது, இரண்டு உழவர்கள், அங்கு வந்தார்கள். வந்தவர்கள், நடராசனைப் பார்த்து, “என்ன சாமி! ஆச்சரியப்பட்டுக்கொண்டு நிற்கிறீர்கள்!” என்று கேட்டனர்.

[தொகு]

“படை வந்ததைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான், நடராசன்.
“பார்த்தோம்! போருக்கு அழைத்தால், யார் வரமாட்டார்கள்?” என்றான், ஓர் உழவன்.
“திருமணத்துக்காக அல்லவோ, தூது போயிற்று?” என்று கேட்டான், நடராசன்.
“மணப்பேச்சு பிணப்பேச்சாயிற்று. குடிலன் தொட்டால், பொன்னும் கரியாகுமே” என்றான், மற்றோர் உழவன்.
“என்ன செய்தி?” என்று கேட்டான் நடராசன்.
அதற்கு முதல் உழவன், “அது, எங்களுக்குத் தெரியாது. குடிலன், கொடியவன். பாண்டியனுடைய நாட்டைப் பிடுங்கிக் கொள்ளவும், மனோன்மணியைத் தன்மகனுக்கு மணம் செய்விக்கவும் சூழ்ச்சி செய்கிறான். இப்படிச் சூழ்ச்சி செய்து, சேர மன்னனைப் படையெடுத்து வரச்செய்தான்” என்று கூறினான்.
“சீச்சீ! சேரன் வஞ்சனைக்கு இசைய மாட்டான். நீ சொல்வது பொய்” என்றான், நடராசன்.
அது கேட்ட உழவன் கூறுகிறான்: “பொய் அல்ல சாமி! என் மைத்துனன், தன் தாய் செத்ததற்குத் திதி கேட்கப் புரோகிதர் சேசையரிடம் போனான்” என்று உரைத்து, இரண்டாவது உழவனைப் பார்த்து, “அன்று ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான், சாத்தன், உன்னிடம் சண்டையிட்டான்” என்று சொல்லி, மீண்டும் நடராசனிடம் கூறுகிறான்: “புரோகிதருடைய மாமனார், ஆமைப்பலகையில் உட்கார்ந்து கொண்டு, மருமகன், சேசையரிடம் பேசிக் கொண்டிருந்தாராம்.” குரலைத் தாழ்த்தி மெல்ல, “அவர்கள், பலப்பல இரகசியங்கள் பேசிக்கொண்டார்கள்” என்றான்.
“இங்கு யார்இருக்கிறார்கள், பயப்படாமல் சொல்” என்றான், நடராசன்.
இரண்டாவது உழவன், “புரோகிதரின் மாமனார், மந்திரி வீட்டுச் சோசியர்” என்று ஆரம்பித்தான். முதல் உழவன், அவனைத்தடுத்துப், “பொறு பொறு, நான் சொல்கிறேன். என் மைத்துனன், சாஸ்திரி வீட்டுக்குப் போனான். அப்போ, புரோகிதரின் மாமனார் சொன்னாராம்: “மாப்பிள்ளை! நேற்று, மந்திரியின் ஆத்துக்காரி கேட்டாள்: ‘பலதேவனின் ஜாதகத்தில், ராஜயோகம் இருக்கிறது என்று சொன்னீர்களே! அந்த யோகம், எப்போது வரும்’ என்று கேட்டாள். ‘சீக்கிரம் வரும்’ என்றேன். பிறகு, மனோன்மணியின் திருமணத்தைப்பற்றிக் கேட்டாள். அது நடக்காது என்று சொன்னேன். அவள், மேலுக்கு வருத்தம் அடைந்தது போலக் காணப்பட்டாலும், மனத்தில் மகிழ்ச்சியடைந்தாள் என்று தெரிந்தது. பெரிய மனுஷாளின் எண்ணங்கள் அவர்கள் முகத்திலிருந்தே வெளியாகின்றன” என்று சொல்லிச் சிரித்தாராம். பிறகு, என் மைத்துனன், திவசத்துக்கு நாள் தெரிந்துகொண்டு வந்தான். இவைகளை என்னிடம் சொன்னான். சாட்சி வேண்டுமானால், காக்கைச் சுப்பனைக் கேட்கலாம்” என்று கூறினான்.
பிறகு, இரண்டாவது உழவன் கூறினான்: “தூதுக்குழுவுடன் போன இரும்படி இராமன், போகிற வழியில், என் தங்கை வீட்டுக்கு வந்தான். அப்போது நான் அங்கு இருந்தேன். அரண்மனைச்செய்தி என்ன என்று கேட்டேன். அரசர் தத்தெடுக்கப் போகிறார் என்றான். யாரை, எப்போது என்று கேட்டேன். அவன், பதில் சொல்லாமல், சிரித்துக்கொண்டே போய்விட்டான்.
முதல் உழவன், “இந்த இரும்படி இராமன், பலதேவனுக்கு நண்பன்” என்றான்.
இரண்டாவது உழவன், “குடிலன் ஆள்வதைவிடச் சேரன் ஆள்வது மேலானது” என்றான்.
“அது நமக்கு இழிவு. மேலும், மனோன்மணி அம்மைக்குத் துன்பம் உண்டானால், அதை, யாரும் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள்” என்றான், முதல் உழவன்.
இரண்டாம் உழவன், “தந்தை செய்தவினை, அவன் மக்களைச் சேரும் என்பார்கள். வாணியின் வயிற்றெரிச்சல், பாண்டியனை விடுமா?” என்றான்.
முதல் உழவன், “விதி என்றுசொல்லிக் கடமை செய்யாமல் விடுவது மடமை! போர்வந்தால், நாட்டுக்காகப் போர்செய்வதே கடமை,” என்றான்.
“அரசன் சரியாக இருந்தால், நீ சொல்வது சரி. சாமி! நீங்களே சொல்லுங்கள். வாணியைத் தங்களுக்குத் தெரியாது போல் இருக்கிறது...” என்று நடராசனைக் கேட்டான். நடராசன் “தெரியும், தெரியும். நீங்கள் போங்கள்” என்றுசொல்லி, அவர்களை அனுப்பிவிட்டான்.
பிறகு தனக்குள் கூறிக்கொண்டான்: “பாமர மக்கள், தங்கள் மனம்போனபடி பேசுகிறார்கள். சூழ்ச்சியாக ஊகிப்பதும், அனுமானிக்கும் அளவும், முன்பின் காட்டிக் காரண காரியங்களைப் பொருத்திக் கூறுவதும், கேட்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் சொல்வது முழுவதும் தவறு அல்ல. ‘அரசியல் இரகசியம், அங்காடி அம்பலம்’ என்னும் பழமொழி, சரியாகத்தான் இருக்கிறது. மண்குடத்தில் இருக்கிற நீர் கசிந்துகசிந்து வெளிப்படுவது போல, அரசர், அமைச்சர் முதலியவர்களின் மனத்தில் உள்ள இரகசியங்கள், அவர்களின் கண், முகம், நடை, மொழி முதலியவற்றின் மூலமாக வெளிப்படுகின்றன. பக்கத்தில் உள்ளவர்கள், அவற்றை அறிந்து, அவைகளுடன் தமது கருத்தையும் கலந்து, வெளியே தூற்றுகிறார்கள். ஆனால், இவர்கள் கூறியவையெல்லாம், குடிலனுடைய குணங்களுடன் பொருத்தமாக இருக்கின்றன. இந்தச் செய்தியையும் படைவந்த செய்தியையும் முனிவருக்குக் கூறுவோம்” என்று எண்ணிக்கொண்டு போகிறான்.

மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் கதைச்சுருக்கம் முற்றிற்று.[தொகு]

மூன்றாம் அங்கம்[தொகு]

இரண்டாம் களம்[தொகு]

இடம்: ஊர்ப்புறம் ஒருசார்.
காலம்: எற்பாடு.
நடன்: நடராசன்.

(நேரிசை ஆசிரியப்பா)

நடராசன்

(தனிமொழி)

காலையிற் கடிநகர் கடந்து நமது
வேலை முடிக்குதும். வேண்டின் விரைவாய்
இன்றிரா முடிக்கினும் முடியும். துன்றராக்
கவ்விய முழுமதிக் காட்சியிற் செவ்விதாம்
பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம்
என்னுளத் திருந்திங் கியற்றுவ திப்பணி.
அதனால் அன்றோ இதுபோல் விரைவில்
இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது!
எவ்வினை யோர்க்கும் இம்மையிற் றம்மை
இயக்குதற் கின்பம் பயக்குமோர் இலக்கு (10)
வேண்டும். உயிர்க்கது தூண்டுகோல் போலாம்.
ஈண்டெப் பொருள்தான் இலக்கற் றிருப்பது?
இதோஒ! இக்கரை முளைத்தவிச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி.
அதன்சிறு பூக்குலை யடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்றுளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
பலமுறத் தனதுபூம் பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகா யாக்கி, இதோ!என்று
தூசிடைச் சிக்கும் தோட்டியும் கொடுத்தே,
“இவ்வயின் யாமெலாம் செவ்விதில் துன்னில்
தழைப்பதற் கிடமிலை. சிறார்நீர் பிழைப்பதற்கு
ஏகுமின். புள்ஆ எருதுஅயத் தொருசார்
சிக்கிநீர் சென்மின்!” எனத்தன் சிறுவரைப்
புக்கவிட் டிருக்குமிப் புல்லின் பரிவும்
பொறுமையும் புலனுங் காண்போர், ஒன்றையும்
சிறுமையாச் சிந்தனை செயாதுஆங் காங்கு
தோற்றுபே ரழகும் ஆற்றல்சால் அன்பும்
போற்றுதங் குறிப்பிற் கேற்றதோர் முயற்சியும்
பார்த்துப் பார்த்துத் தம்கண் பனிப்ப, (30)
ஆர்த்தெழு மன்பினால் அனைத்தையும் கலந்துதம்
என்பெலாம் கரைக்குநல் இன்பம் திளைப்பர்
தமக்கூண் நல்கும் வயற்குப யோகம்
எனப்பலர் கருதும் இச்சிறு வாய்க்கால்
செய்தொழில் எத்தனை விசித்திரம்! ஐயோ!
அலைகடல் மலையா, மலையலை கடலாப்
புரட்டிட வன்றோ நடப்பதிச் சிறுகால்!
பாரிதோ! பரற்களை நெறுநெறென் றுரைத்துச்
சீரிய தூளியாத் தெள்ளிப் பொடித்துத்
தன்வலிக் கடங்கிய மண்கல் புல்புழு (40)
இன்னதென் றில்லை; யாவையும் ஈர்த்துத்
தன்னுட் படுத்தி முந்நீர் மடுவுள்
காலத் தச்சன் கட்டிடும் மலைக்குச்
சாலத் தகும்இவை எனவோர்ந் துருட்டிக்
கொண்டு செற்று இட்டுமற் “றையா!
அண்ட யோனியின் ஆணையின் மழையாய்ச்
சென்றபின் பெருமலைச் சிகர முதலாக்
குன்றுவீ ழருவியாய்த் தூங்கியும், குகைமுகம்
இழிந்தும், பூமியின் குடர்பல நுழைந்தும்
கதித்தெழு சுனையாய்க் குதித்தெழுந் தோடியும், (50)
ஊறிடுஞ் சிறிய ஊற்றாய்ப் பரந்தும்,
ஆறாய் நடந்தும், மடுவாய்க் கிடந்தும்
மதகிடைச் சாடியும், வாய்க்கால் ஓடியும்
பற்பல பாடியான் பட்டங் கீட்டியது
அற்பமே யாயினும் ஆதர வாய்க்கொள்;
இன்னமு மீதோ ஏகுவன்,” எனவிடை
பின்னரும் பெற்றுப் பெயர்த்தும் எழிலியாய்
வந்திவண் அடைந்து,மற் றிராப்பகல் மறந்து,
நிரந்தரம் உழைக்குமிந் நிலைமையர் யாவர்?

(நீரைக் கையாற் றடுத்து)

நிரந்தரம்! ஐயோ! நொந்தனை! நில்நில்! (60)
இரைந்ததென்? அழுவையோ? ஆயின் ஏகுதி.
நீரே! நீரே! என்னையுன் நிலைமை
நீக்கமில் உனைப்போல் அனுதினம் உழைப்போர்?
உனைப்போல் உளவேல் பினைப்பே(று) என்னை?...

[தொகு]

(நாங்கூழ்ப் புழுவை நோக்கி)

ஓகோ! நாங்கூழ்ப் புழுவே! உன்பாடு
ஓவாப் பாடே. உணர்வேன்! உணர்வேன்!
உழைப்போர் உழைப்பில் உழுவோர் தொழில்மிகும்
உழுவோர்க் கெல்லாம் விழுமிய வேந்துநீ.
எம்மண் ணாயினும் நன்மண் ணாக்குவை. (70)
விடுத்தனை யிதற்கா, எடுத்தவுன் யாக்கை.
உழுதுழுது உண்டுமண் மெழுகினும் நேரிய
விழுமிய சேறாய் வேதித் துருட்டி
வெளிக்கொணர்ந் தும்புகழ் வேண்டார் போல,
ஒளிக்குவை உன்குழி வாயுமோர் உருண்டையால்!
இப்புற் பயிர்,நீ இங்ஙனம் உழாயேல்,
எப்படி யுண்டாம்? எண்ணா துனக்கும்
குறும்புசெய் எறும்புங் கோடி கோடியாப்
புழுக்களும் பூச்சியும் பிழைக்குமா றென்னை?
ஒழுக்கமும் பொறையும் உனைப்போ லியார்க்குள (80)

(நாங்கூழ்ப்புழு குழிக்குள் மறைதலை நோக்கி)

விழுப்புகழ் வேண்டலை. அறிவோம். ஏனிது?
துதிக்கலம். உன்தொழில் நடத்துதி. ஆ!ஆ!
எங்கு மிங்ஙனே இணையிலா இன்பும்
பங்கமில் அன்புந் தங்குதல் திருந்தக்
காணார் பேணும் வாணாள் என்னே!
அலகிலாத் தோற்றமோ டிலகிய உலகிற்
சிதறிய குணக்கதிர் செறிந்து திரள
வைத்தசிற் றாடியின் மையமே யொத்த
உள்ளமும் உடலும் பெற்றுங், கள்வர்...
நினைக்கலை, தீயனை நினைப்பதுந் தீதே! (90)
சினக்கனல் எழும்பும், நமக்கேன் இச்சினம்?
கிருபணன். தீனன். விடுவிடு. அஃதென்?
என்கொல் அத்தோற்றம்? புகையோ?- மங்குலுக்கு
இந்நிற மில்லை. செந்நிறப் படாமென,
பொதியில்நன் முகடாம் பொற்புறு கருவிற்
கதிமிகு தினமெனும் பொன்வினைக் கம்மியன்,
உருக்கி விடுதற் குயர்த்திய ஆடகப்
பெருக்கென விளங்கிய அருக்கன தொளியைப்
பொருக்கெனப் புதைத்தவிப் புழுதி யென்னே?
இதோ! துவண்டங் கிடையிடைத் தோற்றுவ
பதாகையின் தொகுதி யன்றோ பார்க்கின்?
இடியுருண் டதுபோல் எழுமொலி தேரொலி!
அடுபடை கொண்டிங் கடைந்தவன் யாவன்?
வருதிசை நோக்கில் வஞ்சிய னேயாம்...
பொருதற் கன்றவன் வருவது. சரிசரி
வதுவைக் கமைந்து வந்தான் போலும்.
இதுவென்? ஓகோ? மணப்பாட் டன்றிது.

(வஞ்சிநாட்டுச் சேனை அணிவகுத்து வழியில்
ஒருபுறம் போக, படைப்பாணர் பாட)

(வஞ்சித்தாழிசை)

படைப்பாணர்
அஞ்ச லரிகாள் நும்
சஞ்சிதப் பெருவாழ் வெம்
வஞ்சியன் சினத்தாற் கண்
துஞ்சிய கனவே காண். (தாழிசை-1)
படைகள்
ஜே! ஜே! ஜே!
பாணர்
எஞ்சலில் பகைகாள்! நும்
மஞ்சுள மணிமகு டம்
வஞ்சியன் சினத்தா னீர்
கஞ்சியுண் கடிஞையே காண்! (தாழிசை-2)
படைகள்
ஜே! ஜே! ஜே!
பாணர்
மிஞ்சிய பகைகாள்! நும்
துஞ்சிய பிதிர்க்கூட் டம்
வஞ்சியன் சினத்தா லெள்,
நெஞ்சிலும் நினையார் காண். (தாழிசை-3)
படைகள்
ஜே!ஜே! புருடோத் தமர்க்கு ஜேஜே!

[தொகு]

(நேரிசையாசிரியப்பா...தொடர்ச்சி)

நடராசன்
பார்புதைத் தெழுந்த வீரர்தம் ஆர்ப்பும்
வார்கழல் ஒலியும், வயப்படை யொலியும்,
பாடிய பாட்டின் பண்ணும், தலைமிசைச் (110)
சூடிய வஞ்சித் தொடையும், தண்ணுமை
பொருவுதம் புயத்தில் வெண்கலப் பொருப்பில்
உருமுவீழ்ந் தென்னத் தட்டிய ஓதையும்,
இருகனல் நடமிடும் ஒருகரு முகிலில்
மின்னுதித்து அடங்கல்போல் துன்னிய சினநகை
காட்டிய முகக்குறி யாவும் நன்றல.
வேட்டலோ இதுவும்! விளையுமா றெவனோ!
நினைவிலும் விரைவாய் நனிசெலுங் குரத்த
கொய்யுளைத் திரைக்கடற் கூட்டமும், பெய்மத
மைம்முகில் ஈட்டமும், வான்தொடு விலோதனப் (120)
பெருஞ்சிறை விரித்து நெடுந்திசை புதைத்துச்
செல்லும் அசலத் திரளும் செறிந்து,
நெல்லையை வெல்லவே செல்வது திண்ணம்.
அந்தோ! அந்தோ! மனோன்மணி வதுவை
வந்தவா றிதுவோ! வந்தவா றிதுவோ!

(இரண்டு உழவர்கள் வர)

முதல் உழவன்
வியப்பென்? சுவாமி!
நடராசன்
.... ....வயப்படை வந்தது?
அறிவையோ நீயும்?
முதல் உழவன்
... ... அறிவேன், போருக்கு
அழைத்திடில் யாவர் அணுகார்? ....
நடராசன்
.... .... .... வழுதி
மணமொழி வழங்க அன்றோ விடுத்தான்?
இரண்டாவது உழவன்
மணமொழி பிணமொழி யானது. குடிலன் (130)
கைதொடின் மஞ்சளும் கரியா கும்மே!
நடராசன்
செய்ததென்?
முதல் உழவன்
.... ஐய! அதுநாம் அறியோம்.
குடிலன் படிறன்; கொற்றவன் நாடும்
முடியும் கவர்ந்து, மொய்குழல் மனோன்மணி
தன்னையும் தன்மகற்கு ஆக்கச் சமைந்தான்!
மன்னனைக் கொல்ல மலையனைத் தனக்குச்
சூதாய்த் துணைவரக் கூறினான்.
நடராசன்
.... .... .... சீச்சீ!
ஏதிது? வஞ்சியான் வஞ்சனைக் கிசையான்.
பொய்பொய்; புகன்றதார்?
முதல் உழவன்
.... .... பொய்யல, பொய்யல.
ஐய!நான் அறைவது கேட்டி, எனது (140)
மைத்துனன் அவன்தாய் மரித்த மாசம்
உற்றதால் அந்தத் திதியினை யுணரச்
சென்றனன், புரோகித சேசைய னிடத்தில
அன்றுநாள் ஆதித்த வாரம்; அன்றுதான்

(இரண்டாவது உழவனை நோக்கி)

சாத்தன் உன்னுடன் சண்டை யிட்டது.

(நடராசனை நோக்கி)

சாத்திரி தரையி லிருக்கிறார், அவரது
மாமனார் கிட்டவே ஆமைப் பலகையில்

நாற்புறமும் நோக்கி, செவியில்)

இருந்து பலபல இரகசியம் இயம்புவர்...
நடராசன்
திருந்தச் செப்பாய், யாருளர் இவ்வயின்?
இரண்டாவது உழவன்
இந்த மாமனார், மந்திரி மனைவிக்கு (150)
உற்ற சோசியர்.
முதல் உழவன்
... .... பொறு!யான் உரைப்பன்.
மற்றவ் வெல்லையென் மைத்துனன் ஒதுங்கி
அருகே நின்றனன். அப்போ தறைவர்:
“மருகா! நேற்று மந்திரி மனைவி
பலபல பேச்சுப் பகருங் காலை
பலதே வன்றன் சாதக பலத்தில்
அரச யோகம் உண்டென் றறைந்தது
விரைவில் வருமோ என்று வினவினள்.
வரும்வரும் விரைவில் என்றேன் யானும்.
மறுமொழி கூறாது இருந்துபின் மனோன்மணி (160)
வதுவைக் காரியம் பேசினள். மற்றது
நடக்குமோ? என்றவள் கேட்டு நகைத்தாள்.
நடப்ப தரிதென நான்மொழிந் ததற்கு
வருத்தமுற் றவள்போல் தோற்றினும், கருத்திற்
சிரித்தனள் என்பது முகத்தில் தெரிந்தேன்.”
எனப்பல இரகசியம் இயம்பி, “வலியோர்
மனக்குறி, முகக்குறி வறிதாம் சொற்கள்
இவைபோல் வருபவை யெவைதாம் காட்டும்?”
எனவுரைத் திருவரு மெழுந்துபின் நகைத்தார்.
பினையென் மைத்துனன் பேசிமீண் டுடனே (170)
எனக்கிங் கிவையெலாம் இயம்பினன். உனக்குச்
சாக்கி வேண்டுமேற் காக்கைச் சுப்பனும்
உண்டு,மற் றவனைக் கண்டுநீ வினவே.
இரண்டாவது உழவன்
வேண்டாம்! வேண்டாம் ஐயமற் றதற்கு.
மீண்டும் ஒருமொழி கேள்,இவ் வழியாய்த்
தூதுவர் போகும் காலைத் தாக
ஏதுவால். இரும்படி இராமன், என்றன்
தங்கை மனைக்கு வந்தவத் தருணம்
அங்கியான் இருந்தேன். “அரண்மனைச் செய்தி
என்ன?”என் றேற்கவன் இயம்பும், “மன்னன் (180)
தெத்தெடுத் திடும்படி யத்தனம் உண்(டு)”என,
“எப்போது யாரை?” என்றேற்கு ஒன்றுஞ்
செப்பா தெழுந்து சிரித்தவன் அகன்றான்.
முதல் உழவன்
பலதே வற்கிவன் நலமிகு சேவகன்.
இரண்டாவது உழவன்
குடிலனாள் வதைவிடக் குடகனாள் வதுநலம்.
முதல் உழவன்
ஆயினும் நமக்கஃ திழிவே. மேலும்
தாயினுஞ் சிறந்த தயாநிதி மனோன்மணிக்
குறுதுயர் ஒருவரும் ஆற்றார்.
இரண்டாவது உழவன்
.... .... .... அறிவிலாத்
தந்தையார் தம்வினை மக்களைச் சாரும்.
சுந்தர வாணியின் சிந்தைநோய் வழுதியை
விடுமோ? சொல்லாய்.
முதல் உழவன்
... ... விதியெனப் பலவும்
படியோர் பாவனை பண்ணித் தமது
கடமையின் விலகுதல் மடமை, அதனால்
நாட்டில் போர்வரின் நன்குபா ராட்டி
எஞ்சா வெஞ்சமர் இயற்றலே தகுதி.
இரண்டாவது உழவன்
அரசன், அரசனேற் சரியே, சுவாமீ!
உரையீர் நீரே! திருவார் வாணியை
அறியீர் போலும்.
நடராசன்
... ... அறிவோம், அறிவோம்!
நல்ல தப்புறம் செல்லுமின் நீவிர்..

(உழவர் போக)

(தனதுள்)

ஏழைகள்! தங்கள் ஆழமில் கருத்தில் (200)
தோற்றுவ தனைத்தும் சாற்றுவர். அவர்தம்
தேற்றமில் மாற்றம், சிறுமியர் மழலைபோல்
சுகம்தரு மொழிபோல், சுகந்தரும். சூழ்ச்சியும்
அனுமா னிக்கும் அளவையும் முனும்பினும்
கூட்டிக் காரண காரியக் கொள்கைகள்
காட்டலும், காணக் களிப்பே! ஆயினும்
பழுதல பகர்ந்தவை முழுதும். முன்னோர்
சனமொழி தெய்வ மொழியெனச் செப்புவர்.
’அரசியல் இரகசியம் அங்காடி அம்பலம்’
வரும்வித மிதுவே! மட்குடத் துளநீர் (210)
புரைவழி கசிந்து புறம்வருந் தன்மைபோல்
அரசர் அமைச்சர் ஆதியர் தங்கள்
சிந்தையிற் புதைத்த அந்தரங் கப்பொருள்
விழிமுகம் நகைமொழி தொழில்நடை இவைவழி
ஒழுகிடும். அவைகளை உழையுளார் தமக்குத்
தோற்றிய பலவொடும் தொடுத்துக் காற்றில்
தூற்றுவர். எனினும் சொன்னவை முற்றும்
குடிலன் குணமுடன் கூடலால் அவையும்,
படையிவண் வரநாம் பார்த்ததும்,
அடையவும் முனிவற் கறைகுவம் சென்றே.

(நடராசன் போக)

மூன்றாம் அங்கம்: இரண்டாம் களம் முற்றிற்று.[தொகு]

பார்க்க:[தொகு]

III. மூன்றாம் அங்கம்[தொகு]

அங்கம்03/களம்01

அங்கம்03/களம்03

அங்கம்03/களம்04

I[தொகு]

II[தொகு]

II:1 * II:2 * II:3

IV[தொகு]

IV:1 * IV:2 * IV:3 * IV:4

V[தொகு]

V:1 * V:2 * V:3