நாலடியார் 10-ஆம் அதிகாரம்-ஈகை
சமணமுனிவர்கள் இயற்றிய நாலடியார்
[தொகு]உரை: களத்தூர் வேதகிரி முதலியார்
[தொகு]அறத்துப்பால்: இல்லறவியல்
[தொகு]பத்தாம் அதிகாரம் ஈகை
- [அஃதாவது, கொடுக்குந்திறங் கூறுதலாம்]
பாடல்: 91 (இல்லாவிடத்து)
[தொகு]இல்லா விடத்து மியைந்த வளவினா இல்லா இடத்தும் இயைந்த அளவினால்
லுள்ள விடம்போற் பெரிதுவந்து-மெல்லக் உள்ள இடம் போல் பெரிது உவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க் கொடையொடு பட்ட குணன் உடை மாந்தர்க்கு
கடையாவா மாண்டைக் கதவு. (01) அடையாவாம் ஆண்டைக் கதவு.
- பதவுரை
இல்லா= தமக்கில்லாத,
இடத்தும்= காலத்தும்,
இயைந்த= பொருந்திய,
அளவினால்= அளவால்,
உள்ள இடம் போல்= இருக்கிற காலம் போல,
பெரிது= மிகவும்,
உவந்து= மகிழ்ந்து,
மெல்ல= நேராக,
கொடையொடு= கொடுத்தலோடு,
பட்ட= பொருந்திய,
குணன்= நற்குணங்கள்,
உடை= உடைத்தாகிய,
மாந்தர்க்கு= மனிதர்க்கு,
ஆண்டை= சுவர்க்கவாசலின்,
கதவு= கதவுகள்,
அடையாவாம்= அடைக்காவாம்.
- கருத்துரை
- கொடுத்தவர்கட்குச் சுவர்க்கவாசற் கதவுகளடைக்காவாம்.
- விசேடவுரை
- கதவு- எழுவாய், அடையாவாம்- பயனிலை.
பாடல்: 92 (முன்னரே)
[தொகு]- முன்னரே சாநாண் முனிதக்க மூப்புள () முன்னரே சாம் நாள் முனிதக்க மூப்பு உள
- பின்னரும் பீடழிக்கு நோயுள-கொன்னே ()பின்னரும் பீடு அழிக்கும் நோய் உள - கொன்னே
- பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதுங் () பரவன்மின் பற்றன்மின் பாத்துண்மின் யாதும்
- கரவன்மின் கைத்துண்டாம் போழ்து. (02) கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து.
- பதவுரை
சாம் நாள்= சாகின்ற நாள்,
முன்னர்= முன்னது,
முனிதக்க= வெறுக்கத்தக்க,
மூப்பு உள= விருத்தாப்பியமுண்டு;
பின்னரும்= பின்னாலும்,
பீடு= பெருமையை,
அழிக்கும்= கெடுக்கும்,
நோய் உள= வியாதியுண்டு;
கொன்னே= பயனில்லாமல்,
பரவன்மின்= அலையாதிருங்கள்,
கைத்து உண்டாம் போழ்து= திரவியம் உண்டான காலத்து,
பற்றன்மின்= பற்றாதிருங்கள்,
பாத்து= பகுத்து,
உண்மின்= உண்ணுங்கள்,
யாதும்= யாதொன்றையும்,
கரவன்மின்= ஒளியாது கொடுங்கள்.
- கருத்துரை
- பொருள் உண்டாங்காலத்து ஒளியாது கொடுத்து உண்ணுங்கள்.
- விசேடவுரை
- நீவிர்- தோன்றா எழுவாய், பரவன்மின் முதலிய பயனிலை. ஏகாரம்- அசை.
பாடல்: 93 (நடுக்குற்று)
[தொகு]நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பந் துடையார் () நடுக்கு உற்று தன் சேர்ந்தார் துன்பம் துடையார்
கொடுத்துத்தான் றுய்ப்பினு மீண்டுங்கா-லீண்டு ()கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால்- ஈண்டும்
மிடுக்குற்றுப் பற்றினு நில்லாது செல்வம் () இடுக்கு உற்று பற்றினும் நில்லாது செல்வம்
விடுக்கும் வினையுலந்தக் கால். (03) விடுக்கும் வினை உலந்தக்கால்.
- பதவுரை
நடுக்கு= வறுமையால் நடுக்கம்,
உற்று= பொருந்தி,
தன்= தன்னை,
சேர்ந்தார்= சேர்ந்தவரது,
துன்பம்= துன்பங்களை.
துடையார்= நீக்குகின்றிலார்;
கொடுத்து= (பிறருக்குக்) கொடுத்து,
தான்= தான்,
துய்ப்பினும்= உண்டாலும்,
ஈண்டுங்கால்= வளருங்காலமாயின்,
ஈண்டும்= வளரும்;
இடுக்கு= வலிமை,
உற்று= பொருந்தி,
பற்றினும்= பற்றினாராயினும்,
வினை= (தான் முன்புசெய்த) நல்வினை,
உலந்தக்கால்= நீங்கினால்,
செல்வம்= செல்வமானது,
நில்லாது= நிலையாமல்,
விடுக்கும்= விட்டுப்போம்.
- கருத்துரை
- கொடாதவர்கள் பிறர்க்குக் கொடுத்துத் தாங்கள் உண்டாலும் பொருள் வளருங்காலத்தில் வளரும்; நல்வினை நீங்கிற் செல்வம் கெடும்.
- விசேடவுரை
- செல்வம்- எழுவாய், விடுக்கும்- பயனிலை.
நன்னூல்: பொதுவியல்,69.
“ஏற்புழி யெடுத்துடன் கூட்டு மடியவும்
யாப்பீ றிடைமுத லாக்கினும் பொருளிசை
மாட்சி மாறா வடியவு மடிமறி.”
- இவ்விதியால் இஃது அடிமறி மாற்றுப் பொருள்கோள்.
பாடல்: 94 (இம்மியரிசி)
[தொகு]இம்மி யரிசித் துணையானும் வைகலு () இம்மி அரிசி துணை ஆனும் வைகலும்
நும்மி லியைவ கொடுத்துண்மின்-உம்மைக் ()நும் இல் இயைவ கொடுத்து உண்மின் - உம்மை
கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத் () கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து
தடாஅ வடுப்பி னவர். (04) அடாஅ அடுப்பினவர்.
- பதவுரை
இம்மி அரிசி= மத்தங்காய்ப் புல்லரிசி,
துணை ஆனும்= அளவாயினும்,
வைகலும்= நாடோறும்,
நும்= உம்முடைய,
இல்= மனையிடத்து,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்து= பிறருக்குக் கொடுத்து,
உண்மின்= உண்ணுங்கள்,
குண்டு= ஆழ்ந்த,
நீர்= கடல் சூழ்ந்த,
வையத்து= பூமியில்,
அடா= சமைக்காத,
அடுப்பினவர்= அடுப்பினை உடையவராயிருந்து திரியுமவரை,
உம்மை= முற்பிறப்பில்,
கொடாதவர்= வழங்காதவர்,
என்பர்= என்று சொல்லுவர் அறிவுடையார்.
- கருத்துரை
- நாடோறும் அணுவளவாவது கொடுத்து உண்ணுங்கள். யாசகரை முற்பிறப்பில் கொடாதவர்களென்று சொல்லுவார்கள்.
- விசேடவுரை
- நீவிர்- எழுவாய், உண்மின்- பயனிலை.
பாடல்: 95 (மறுமை)
[தொகு]மறுமையு மிம்மையு நோக்கி யொருவர்க் () மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவர்க்கு
குறுமா றியைவ கொடுத்தல்-வறுமையா ()உறும் ஆறு இயைவ கொடுத்தல் - வறுமையால்
லீத லிசையா தெனினு மிரவாமை () ஈதல் இசையாது எனினும் இரவாமை
யீத லிரட்டி யுறும். (05) ஈதல் இரட்டி உறும்.
- பதவுரை
மறுமையும்= மறு பிறப்பையும்,
இம்மையும்= இப்பிறப்பையும்,
நோக்கி= ஆராய்ந்து,
ஒருவர்க்கு= ஒருவருக்கு,
இயைவ= பொருந்தியவைகளை,
கொடுத்தல்= வழங்கல்,
உறும் ஆறு= பொருந்தும் வழி
வறுமையால்= தரித்திரத்தினால்,
ஈதல்= கொடுத்தல்,
இசையாது எனினும்= கூடாதாயினும்,
இரவாமை= யாசியாதிருத்தல்,
ஈதல்= கொடுத்தலினும்,
இரட்டி= இருமடங்காக,
உறும்= அடையும்.
- கருத்துரை
- கொடுத்தல் கூடாதிருந்தாலும் தான்போய் இரவாதிருத்தல் கொடுத்தலினும் இரண்டுபங்கு அதிகம்.
- விசேடவுரை
- இரவாமை- எழுவாய், இரட்டியுறும்- பயனிலை.
பாடல் 96 (நடுவூருள்)
[தொகு]நடுவூருள் வேதிகை சுற்றுக்கோட் புக்க () நடு ஊருள் வேதிகை சுற்றுக் கோள் புக்க
படுபனை யன்னர் பலர்நச்ச வாழ்வார் ()படு பனை அன்னர் பலர் நச்ச வாழ்வார்
குடிகொழுத்தக் கண்ணுங் கொடுத்துண்ணா மாக்க () குடி கொழுத்தக் கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள்
ளிடுகாட்டு ளேற்றைப் பனை. (06) இடு காட்டுள் ஏற்றைப் பனை.
- பதவுரை
நடு ஊருள்= ஊர் நடுவில்,
வேதிகை= திண்ணை,
சுற்றுக்கோள் புக்க= சூழ்ந்திருக்க,
படு= பொருந்திய,
பனை அன்னர்= காய்த்த பெண் பனை மரத்துக்கு ஒப்பானவர்,
பலர் நச்ச= பலபேர் விரும்ப,
வாழ்வார்= வாழ்பவர்கள்,
குடி= தங்குடி,
கொழுத்தக்கண்ணும்= வள மிகுந்தாலும்,
கொடுத்து= வழங்கி,
உண்ணா= உண்ணாத,
மாக்கள்= மனிதர்கள்,
இடுகாட்டுள்= சுடுகாட்டிலிருக்கும்,
ஏற்றைப்பனை= ஆண்பனையை ஒப்பாவர்.
- கருத்துரை
- பலரும் இச்சிக்க வாழ்பவர்கள் நடுவூரில் காய்த்த பெண்பனைமரத்திற்கு ஒப்பாவர்; கொடுத்து உண்ணாதவர்கள் சுடுகாட்டிலிருக்கும், ஆண்பனைக்கு ஒப்பாவார்கள்.
- விசேடவுரை
- படுபனை அன்னர்- எழுவாய், வாழ்வார்- பயனிலை. மாக்கள்- எழுவாய், ஏற்றைப் பனை அன்னர்- பயனிலை.
பாடல் 97 (பெயற்பான்)
[தொகு]பெயற்பான் மழைபெய்யாக் கண்ணு முலகஞ் () பெயல் பால் மழை பெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினுங்- கயற்புலாற் ()செயல் பால செய்யாவிடினும் - கயல் புலால்
புன்னை கடியும் பொருகடற் றண்சேர்ப்ப () புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப
யென்னை யுலகுய்யு மாறு. (07) என்னை உலகு உய்யும் ஆறு.
- பதவுரை
கயல்= கயல் மீனையும்,
புலால்= புலால் நாற்றத்தையும்,
புன்னை= புன்னைப் பூவின் மணமானது,
கடியும்= நீக்கும்;
பொரு= அலை மோதப்பட்ட,
தண்= குளிர்ந்த,
கடல்= கடலையும்,
சேர்ப்ப=கரையையுமுடைய பாண்டியனே!
பெயல்= பெய்தல்,
பால்= பகுப்பாகிய,
மழை= மழையானது,
பெய்யாக்கண்ணும்= பெய்யாதவிடத்தும்,
உலகம்= உயர்ந்தோர்,
செயற்பால= செய்யத்தக்கவைகளை,
செய்யாவிடினும்= செய்யாதவிடத்தும்,
உலகு= உலகமானது,
உய்யுமாறு= பிழைக்கும்வழி,
என்னை= என்ன?
- கருத்துரை
- பாண்டியனே! மழை பெய்யாமலும், பெரியோர்கள் செய்யத்தக்கவைகளைச் செய்யாமலும் விட்டால் உலகம் பிழைக்கும் வழியில்லை.
- விசேடவுரை
- உய்யுமாறு- எழுவாய், என்னை- பயனிலை.
பாடல் 98 (ஏற்றகை)
[தொகு]ஏற்றகை மாற்றாமை யென்னானுந் தாம்வரையா () ஏற்ற கை மாற்றாமை என்னானும் தாம் வரையான்
னாற்றாதார்க் கீவதா மாண்கட- னாற்றின் ()ஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண் கடன் - ஆற்றின்
மலிகடற் றண்சேர்ப்ப மாறீவார்க் கீதற் () மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல்
பொலிகட னென்னும் பெயர்த்து. (08) பொலி கடன் என்னும் பெயர்த்து.
- பதவுரை
ஆற்றின்= யாற்றினால்,
மலி= நிறைந்த,
தண்= குளிர்ச்சி பொருந்திய,
கடல்= கடலையும்,
சேர்ப்ப= கரையையுமுடைய பாண்டியனே!
ஏற்ப= யாசிக்கின்ற,
கை= கைக்கு,
மாற்றாமை= இல்லையென்னாது,
என் ஆனும்= யாதாகிலும்,
தாம்= தமக்குள்ள,
வரையான்= அளவால்,
ஆற்றாதார்க்கு= தரித்திரருக்கு,
ஈவதாம்= கொடுப்பதாம்,
ஆண்கடன்= ஆண் தகைமையாவது,
மாறு ஈவார்க்கு= கைம்மாறு செய்வார்க்கு,
ஈதல்= கொடுத்தல்,
பொலி= பிரகாசம்பொருந்திய,
கடன் என்னும் பெயர்த்து= கடன்என்று சொல்லும் பெயரினை உடையது.
- கருத்துரை
- பாண்டியனே! வறியார்க்குக் கொடுத்தலே கொடையாகும்; செல்வர்க்குக் கொடுத்தலே கடனாகும்.
- விசேடவுரை
- ஆண்கடன்- எழுவாய், ஈவது- பயனிலை. கடன்- எழுவாய், பெயர்த்து- பயனிலை.
பாடல் 99 (இறப்பச்)
[தொகு]இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்று () இறப்பச் சிறிது என்னாது இல் என்னாது என்றும்
மறப்பயன் யார்மாட்டுஞ் செய்க-முறைப்புதவி ()அறம் பயன் யார் மாட்டும் செய்க- முறை புதவின்
னையம் புகூஉந் தவசி கடிஞைபோற் () ஐயம் புகூஉம் தவசி கடிஞை போல்
பைய நிறைத்து விடும். (09) பைய நிறைத்து விடும்.
- பதவுரை
இறப்ப= மிகவும்,
சிறிது என்னாது= சிறியதென்று சொல்லாது,
இல் என்னாது= இல்லையென்று சொல்லாது,
என்றும்= எப்பொழுதும்,
அறம் பயன்= தருமப் பலனை,
யார் மாட்டும்= யாவரிடத்தும்,
செய்க= செய்யக்கடவாய், (அச்சொல்),
முறை= முறையாக,
புதவின்= வாயில்கடோறும்,
புகூஉம்= புகுந்து,
ஐயம்= பிச்சையேற்கும்,
தவசி= தவசி கையிலிருக்கும்,
கடிஞைபோல= பாத்திரம் போல,
பைய= மெல்ல,
நிறைத்துவிடும்= பூரணமாக்கும்.
- கருத்துரை
- யாவரிடத்துந் தருமத்தைச் செய்யக்கடவீர், அத்தருமப் பலன் யாசித்தோர் பாத்திரம்போல நிறைவு பெறும்.
- விசேடவுரை
- (நீவிர்)- தோன்றா எழுவாய், செய்க- பயனிலை, அறப்பயன்- செயப்படுபொருள்.
பாடல் 100 (கடிப்பிடு)
[தொகு]கடிப்பிடு கண்முரசங் காதத்தோர் கேட்ப () கடிப்பு இடு கண் முரசம் காதத்தோர் கேட்பர்
ரிடித்து முழங்கியதோர் யோசனையார்-கேட்பர் ()இடித்து முழங்கியது ஓர் யோசனையார் - கேட்பர்
ரடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர் () அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரெனப்படுஞ் சொல். (60) கொடுத்தார் எனப்படும் சொல்.
- பதவுரை
கடிப்பு= குறுந்தடியினால்,
இடு= அடிக்கப்பட்ட,
கண்= இடமகன்ற வாயினையுடைய,
முரசம்= பேரிகைச்சத்தம்,
காதத்தோர்= காதவழியிலுள்ளோர்,
கேட்பர்= கேட்பார்கள்,
இடித்து= இடியிடித்து,
முழங்கியது= சத்திப்பது,
ஓர்= ஒரு,
யோசனையோர்= யோசனை வழியிலுள்ளோர்,
கேட்பர்= கேட்பார்கள்;
சான்றோர்= பெரியோர்களுக்கு,
கொடுத்தார் எனப்படும் சொல்= கொடுத்தாரென்று சொல்லப்படுஞ் சொல்லானது,
அடுக்கிய= ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய,
மூ உலகும்= சுவர்க்க மத்திய பாதாளம் என்று மூவுலகிற்கும்,
கேட்கும்= கேட்கும்.
- கருத்துரை
- பெரியோர்களுக்குக் கொடுத்தார் என்று சொல்லப்படும் சொல்லானது திரிலோகங்களிலும் கேட்கும்.
- விசேடவுரை
- சொல்- எழுவாய், கேட்கும்- பயனிலை. ஏகாரம்- அசை.