உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்தியா

விக்கிமூலம் இலிருந்து

இந்தியா: ஆசியாக் கண்டத்தின் தெற்கேயுள்ள மூன்று தீபகற்பங்களுள் நடுவிலுள்ளது. கண்டத்தின் மற்றப் பகுதிகளிலிருந்து வடக்கேயுள்ள மலைத் தொடர்கள் இதைப் பிரிக்கின்றன, இந் நிலப்பரப்பு இந்திய சமுத்திரத்தினுள் நீண்டிருப்பதால் இச்சமுத்திரத்தின் வழியே செல்லும் முக்கியமான கடல் மார்க்கங்களுக்குக் கேந்திரமாக உள்ளது. செழுமையும் நீர் வசதியும் மிக்க இதன் கடற்கரைச் சமவெளிகளும் ஆற்றுப் பள்ளத்தாக்குக்களும் ஆதியிலிருந்தே மக்கள் தொகையும் பண்பாடும் வளர உதவியுள்ளன. ஆகையால் சீனாவையும் மத்தியக் கிழக்கையும்போல் இந்தியாவும் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றன் இருப்பிடமாக இருந்துள்ளது.

நாட்டின் பெயர் : முதன் முதல் இந்நாட்டை அடைந்து தம் நூல்களில் இதைப்பற்றிக் குறிப்பிட்ட அயல்நாட்டினரான பாரசீகர்களும் கிரேக்கர்களும் சிந்துநதிப் பகுதியையே நன்கு அறிந்திருந்தார்கள். ஆகையால் இப்பிரதேசத்தைப் பாரசீக மொழியில் 'ஹிந்து' என்றும், கிரேக்க மொழியில் 'இந்தஸ்' என்றும் குறிப்பிட்டார்கள். இச்சொற்களே பின்னர் இந்தியா என மருவி இந்நாட்டின் பெயராயின. ஆனால் இந்நாட்டினர் இதைப் பாரதமென்றும் பரதகண்டமென்றும் குறித்தார்கள். சுதந்திர நாட்டின் அரசியலமைப்பில் பாரதம் என்ற பெயர் அதிகார பூர்வமானதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அரசியல் பிரிவினை : ஒரே இயற்கை அமைப்பான இந்த உபகண்டம் முழுதும் 1947க்குமுன் அரசியல் முறையிலும் ஒரே அமைப்பாக இருந்தது. இதன் பரப்பு 15 இலட்சம் ச. மைலுக்குச் சற்று அதிகம். மக்கள் தொகை சு. 40 கோடி. ஆனால் பிரிவினையின் விளைவாக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிழக்கு வங்காளம், அஸ்ஸாமில் ஒரு பிரிவு, பலூச்சிஸ்தானம், சிந்து, மேற்குப் பஞ்சாப், வடமேற்கு எல்லை மாகாணம் ஆகிய பகுதிகளும் இதையடுத்துள்ள சமஸ்தானங்களும் பாகிஸ்தான் என்ற தனி நாடாக்கப்பட்டன. பாகிஸ்தான் வடமேற்கிலும் வடகிழக்கிலும் இருபகுதிகளாக உள்ளது.

பரப்பு மக். (1951)
இந்திய யூனியன் 12,20,099 ச. மைல். 36.18 கோடி
மேற்குப் பாகிஸ்தான் 3,06,860 ச.மைல். 3.36 கோடி
கிழக்குப் பாகிஸ்தான் 52,920 ச.மைல். 4.21 கோடி

அரசியல் எல்லைகள் : பிரிவினையின் விளைவாகப் பஞ்சாபின் கிழக்குப் பகுதிகளான ஜல்லந்தர், அம்பாலா பிரிவுகளும், லாகூர் பிரிவில் அமிர்தசரஸ் மாவட்டமும் இந்தியன் யூனியனில் உள்ள பஞ்சாபைச் சேர்ந்தன. லாகூர், குருதாஸ்பூர் மாவட்டங்கள் இரு நாடுகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. மேற்கு வங்காளத்தில் பர்த்துவான் பிரிவும், கல்கத்தா, 24 பர்கனாக்கள், முர்ஷிதாபாத், டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களும் சேர்க்கப்பட்டன. நதியா, ஜெஸ்ஸோர், தினாஜ்பூர், ஜல்பாய்குரி, மால்ட்டா ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அஸ்ஸாமில் ஏறக்குறைய சில்ஹெட் மாவட்டம் முழுதும் கி. பாகிஸ்தானைச் சேர்ந்தது.

இயற்கை அமைப்பு: இந்தியாவில் தெளிவான மூன்று இயற்கைப் பிரிவுகள் உள்ளன. அவை வடக்கே உள்ள மலைத்தொடர்கள், தெற்கே உள்ள தீபகற்பம், இடையிலுள்ள ஆற்றுச் சமவெளிகள் ஆகியவை. மேற்பரப்பின் அமைப்பைத் தவிரப் புவியியல் வரலாற்றிலும், தரையடியிலுள்ள பாறைகளின் தன்மைகளிலும் இம்மூன்று பிரிவுகளிலும் தெளிவான வேறுபாடுகள் உள்ளன.

இம்மூன்று பிரிவுகளுள் தீபகற்பமே மிகப் பழமையானதும் நிலையானதுமாகும். புவியின் மேற்பொருக்கில் காணப்படும் மிகப் பழமையான படிகப்பாறைகளும், மடிப்புறாப்படிவுப் பாறைகளும் இங்குக் காணப்படுகின்றன. தீபகற்பத்தின் பெரும் பகுதியில் பரந்துள்ள தக்காண பீடபூமி மிகத் தொன்மையான புவியியல் யுகத்திலேயே நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும். அதன் மேற்பரப்பில் ஆழமற்ற அகலமான ஆற்றுப் பள்ளத்தாக்குக்கள் உள்ளன. இப்பீடபூமியின் செங்குத்தான விளிம்புகள் இதன் சிறப்பான அமிசமாகும். இந்த விளிம்புகளே மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளும், விந்திய சாத்பூரா மலைத்தொடர்களுமாம். இதன் வடமேற்கிலுள்ள ஆரவல்லி மலைத்தொடர்கள் இப்போது அறவே தேய்ந்துபோன பழைய மலைத்தொடரின் எச்சமாகும்.

வடக்கிலுள்ள பெருமலைத் தொடர்கள் மூன்றாம் யுகத்தில் மேலெழுந்தவை. பெரிதும் நெருக்கப்பட்ட இம் மடிப்புக்கள் ஒன்றன்பின் ஒன்றாக இணையாக உள்ள பெருவளைவுகளாக உள்ளன. வடமேற்கில் கிர்தார், சுலைமான், இந்துகுஷ் மலைகள் சிந்து நதிப் பள்ளத்தாக்கைப் பலூச்சிஸ்தானத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் உள்ள பாலைகளிலிருந்தும், மலைப் பிரதேசங்களிலிருந்தும் பிரிக்கின்றன. இமயமலைத் தொடர்கள் வடக்கே காச்மீரத்தில் 16,000 அடி உயரமுள்ள வளைவாகத் தொடங்கி, முதலில் தென்கிழக்காகவும், பின்னர்க் கிழக்கு நோக்கியும் அஸ்ஸாம்வரை சுமார் 1,500 மைல் நீளமுள்ளன. காரகோரம் தொடர் இமயத்திற்கு வடக்கே காச்மீரத்திலும் கிழக்குத் திபெத்திலும் உள்ளது. தெற்கே உள்ள சிவாலிக் தொடர்கள் இமயத்தின் அடிமலைகளைப்போல் பஞ்சாபிலும், உத்தரப் பிரதேசத்திலும் உள்ளன. அஸ்ஸாமிலுள்ள இந்தியாவின் வடகிழக்கு எல்லையிலும் இதையொத்த பாட்காய், நாகா, லூஷாய் ஆகிய மலைத்தொடர்கள் உள்ளன. காசி, காரோ, ஜயந்தியா மலைகளாலான ஷில்லாங் பீடபூமி தக்கணத்தைப்போல் படிகப் பாறைகளாலானது. தக்கணத்தின் தொகுதி என்றே இதைக் கருதலாம்.

சிந்து கங்கைத் தாழ்நிலங்களே நாட்டின் மிகப் பெரிய சமவெளிகளாகும். நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை சுமார் 1,500 மைல் இவை பரவியுள்ளன. இவற்றின் அகலம் 200 மைலுக்குக் குறையாமல் உள்ளது. ஆறுகளின் வண்டல் படிந்து, வற்றாதநீர் வசதியும் கொண்ட இப்பிரதேசம் இந்தியாவிலேயே மக்கள் தொகையும் செழுமையும் மிக்க இடமாகும். இதைத் தவிரக் கடற்கரையோரத்திலுள்ள சமவெளிகள் தீபகற்பப் பகுதியில் உள்ளன. இவற்றுள் மேற்குச் சமவெளி குறுகலாகவும், நடுப்பாகத்தில் பிரிந்தும் உள்ளது. ஆனால் இது மழை மிக்க பிரதேசம். கிழக்குச் சமவெளி அகலமானது. பெரிய ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி ஆகியவற்றின் டெல்ட்டாக்கள் இங்கு உள்ளன. பீ. எம். தி.

புவியடுக்கியல் (Stratigraphy) : இந்தியப் புவியடுக்கு வரலாற்றை உரைப்பதற்கு இந்தியாவைத் தீபகற்பப் பகுதி என்றும், தீபகற்பப் புறப்பகுதி என்றும் இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். கங்கை சிந்து (வண்டல்) சமவெளிக்குத் தெற்கேயுள்ளது தீபகற்பப் பகுதி. அச் சமவெளிக்கு வடக்கே உள்ளது தீபகற்பப் புறப்பகுதி. இதில் இமயமலையும், பலூச்சிஸ்தான் மலைகளும், பர்மா எல்லையிலுள்ள மலைகளும் அடங்கும். இந்த இரண்டு பகுதிகளின் வரலாறுகளும் பல முக்கிய விஷயங்களில் வேறுபட்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அவை ஒரு காலத்தில் ஒன்றற்கொன்று வெகுதூரம் விலகியிருந்து, பிறகு மூன்றாம் புவியியல் யுகத்தில் மலைகள் உண்டானபோது ஒன்று சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பதே.

இந்தியத் தீபகற்பப் பகுதியானது புவியியலார் கோண்டுவானாலாந்து என்று கூறுவதும், தென் திசையிலே மிகப் பரந்திருந்ததுமான கண்டத்தின் ஒரு பாகமே என்று கருதப்படுகிறது. அது பெரும்பான்மையாக மிகப் பண்டைய உருமாறிய பாறைகளாலும் (Metamorphics), வண்டல்களாலும், சிறுபான்மை மேற்கு இந்தியாவில் மிகுதியாகக் காணப்படும் கனமாக ஒழுகியோடிய எரிமலைப் பாறைகளாலும், கடற்கரை ஓரங்களிலே சிறிதளவிற்கு வண்டல்களாலும் ஆனதாகும்.

இந்தியாவிலுள்ள பெரிய புவியடுக்குப் பகுதிகள் அடுத்த பக்கத்திலுள்ள அட்டவணையில் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கு ஒத்த ஐரோப்பியத் திட்ட அளவுகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன.

ஆர்க்கியன்: ஆக்கியன் பாறைகள் என்பவைதாம் பூமியில் முதன்முதல் உண்டான பாறைகள். ஆதியில் பூமி குளிர்ந்தபோது உண்டான புறணியைச் சேர்ந்த துண்டு எதுவும் அவற்றில் இருப்பதில்லை. ஏனெனில் புவியியல் ஆதிகாலமாகிய ஆர்க்கியன் யுகத்தில் அக்கினிப்பாறை உள்புகுதலும் இளகுதலும் மடிதலும் பல தடவைகளில் நிகழ்ந்துள்ளன என்று தெரிகிறது. இப்பொழுது நாம் காண்பது பழைய உருமாறிய பாறைகளின் எச்சங்கள் மட்டுமே. அவற்றுடன் பிற்காலத்திய இடைபுகுபாறைகள் நெருங்கிய தொடர்புடையன. இரண்டும் ஆர்க்காடு, சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்கள் போன்ற பல தென் இந்தியப் பகுதிகளில் காணப்படும் கலப்பு வகைகளாகவும், பட்டை (Banded) வகைகளாகவும் ஆகியிருக்கின்றன.

ஆர்க்கியன் யுகத்தின் பிற்பகுதியில் பூமியின் புறணி நீர்தேங்கிக் கடல் உண்டாகும் அளவு குளிர்ந்தது. அந்த நீரில் வண்டல் படியத் தொடங்கிற்று. அதில் பெரும்பாகம் மடிந்து பாளம்பிரி (Schistose) பாறைகளாக ஆகியிருக்கிறது. உருமாறுதல் நடைபெறாத சில இடங்களில் இந்த வண்டல்களில் சிலவற்றை இப்பொழுதும் பார்க்கலாம். அவற்றில் நீர்பாய்ந்த (Current bedding) அடையாளங்களும் சிற்றலை அடையாளங்களும் காணப்படும். இந்தப் பாறைகள் பம்பாய் இராச்சியத்திலுள்ள தார்வார் மாவட்டத்தில் நன்கு உருவாகி யுள்ளதால் இவற்றைத் தார்வார் பாறைகள் என்பர். இவை மைசூர் இராச்சியத்தில் பட்டை வரிசைகளாகக் காணப்படுகின்றன. அவை மூன்று பிரிவுடையன. அடியிலுள்ளவை மிகப் பழையன ; பெரும்பாலும் அக்கினிப் பாறைகளாம். நடுவிலும் மேற்புறத்திலும் உள்ளவை பாளம்பிரி பாறைகளும், சுண்ணாம்புக் கற்களும், பட்டை இரும்புக் கற்களுமாகும். ஆர்க்கியன் பாறை களும் தார்வார்ப் பாறைகளும் சென்னை, ஐதராபாத், ஒரிஸ்ஸா, பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானம், பர்மாப்பகுதிகள், இமயமலைப்பகுதிகள் ஆகியவற்றில்

இந்தியப் புவியியல் அமைப்புக்கள்

யுகம்

ஐரோப்பியத்
திட்ட வரிசை

புறத்தீபகற்பம்

தீபகற்பம்

புதுப் பிராணி யுகம்
(கைனோசோயிக்)



இடைப் பிராணி யுகம்
(மெசோசோயிக்)



பழம் பிராணியுகம்
(பாலியோசோயிக்)

சமீப கால
பிளீஸ்ட்டொசீன்
பிளையசீன்
மயொசீன்
ஆலிகெர்சீன்
இயோசீன்


கிரிட்டேஷஸ்

ஜுராசிக்

திரையாசிக்


பெர்மியன்
கார்பனிபெரஸ்
டெவோனியன்

பிரி-கேம்பிரியன்

ஆர்க்கியன்

வண்டலும் பனிப்படிவுகளும்
(பழைய) முதுவண்டல்
சிவாலிக் மண்டலம்

மரீ மண்டலம்
இயோசீன் (இராணி

கோட்டை, லாக்கி, கிர
தார், சாரத்து வரிசைகள்)
கிரிட்டோஷஸ் (கியூமல், சிக்
கிம் வரிசைகள்)

ஸ்பிதி களிமண் பலகைப்
பாறை (Shales) மேலைக்
கியோட்டோ
கீழைக் கியோட்டோ (?)
லிலாங்கு மண்டலம்
கியூலிங்கு மண்டலம்
லிபாக்கு, போ வரிசைகள்
டெவோனியன்
மத்துகுவார்ட்சைட்
சைலூரியன்
ஆர்டலிஷன்
கேம்பிரியன்
ஹைமந்த மண்டலம்
பிரிகேம்பிரியன் சல்கா

ஆர்க்கியன்

(புது) இள வண்டல்
முதுவண்டல் (சில செம்பாறாங்கல்)
கூடலூர் மணற்கல்

தக்கணப்படிக்கட்டும் படிக்கட்

கிர டிடையனவும், புதுச்சேரி இயோ
சீன்.
திருச்சிராப்பள்ளியிலும் அஸ்ஸா
மிலுமுள்ள மேலைக் கிரிட்
டேஷஸ்.
கோண்டுவானா மண்டலம்,
யூமியா, ஜபல்பூர், ராஜமகால்

கோட்டா, பஞ்சேத்,
தமுதா தலச்சீர்

விந்திய மண்டலம் (பகுதி)
கடப்பை, தார்வார், ஆரவல்லி
முதலியன.
ஆர்க்கியன் நைசுகள் முதலியன.

அதிகமாக உருவாகியுள்ளன. பல இடங்களில் இந்தப் பாறைகளில் மாங்கனீசும் இரும்புக்கனிய மண்களும் காணப்படுகின்றன.

தார்வார்ப் பாறைகளும் அவற்றுடன் சேர்ந்த நைசுப் பாறைகளும் (Gneiss) உண்டான பின்னர் உருவானவை கிழக்குத் தொடர்ச்சி மலைகளாகவும், சென்னை, இலங்கை ஆகியவற்றில் பல குன்றுகளாகவும் அமைந்துள்ள சார்னோக்கைட்ஸ் (Charnockites) என்னும் இடைபுகு பாறைகளாம். அவைகளைச் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரம், பறங்கிமலை, நீலகிரி, பழனிமலை,ஆனைமலை, சேர்வராயன் மலை ஆகியவிடங்களில் 'நீலக்கருங்கல்' என்ற வடிவில் காணலாம். சேலத்திலும் மைசூரிலும் குரோமைட்டுடனும் மாக்னெசைட்டுடனும் தொடர்புடையனவாகவுள்ள சில பாறைகள் தார்வார்ப் பாறைகளுக்கும் பின்னர் அமைந்தனவாகும்.

இமயமலையில் காணப்படும் ஆர்க்கியன் பாறைகள் நன்கு ஆராயப் பெறவில்லை. அவை காச்மீரம், சிம்லா, நேபாளம், கிழக்கு இமயமலைப்பகுதிகள் ஆகியவற்றில் கிடைப்பனவாக அறியப்பட்டுள்ளன. ஆனால் இமயமலை வளர்ந்த காலத்தில் மேற்பாகத்திலிருந்த ஆர்க்கியன் பாறைகள் இளகிப் பின்னால் ஏற்பட்ட பாறைகளின் மீது வந்து படிந்து காணப்படுகின்றன.

ரெயலோத்தொடர்: ராஜஸ்தானத்தில் ஆரவல்லி மலைக்கு வடக்கே சலவைக்கல், மணற்கல், கலப்புப் பாறைகள் (Conglomerates) ஆகியவை சேர்ந்த அமைப்புக்கள் உள்ளன. அவை ஜோதிபுரியிலும் உதயபுரியிலும் உருவாகியுள்ளன. பீகாரிலும் இத்தகைய அமைப்புக்கள் இருக்கின்றன. அவை கொல்ஹான் தொடர் எனப்படும். அவற்றில் பழைய எரிமலைக் குழம்புடன் தொடர்புடைய மணற்கற்களும்சுண்ணாம்புக்கற்களும் காணப்படுகின்றன.

ஆர்க்கியன் பாறையிலுள்ள தாதுக்கள்: இந்தியாவில் உண்டான புவியியல் அமைப்புக்களுள் பாறைகளே அதிகமான தாதுக்கள் உடையன. அவற்றிலே தங்கம், இரும்பு, மாங்கனீஸ், செம்பு, குரோமியம், டைட்டேனியம், வுல்பிராம், வெள்ளீயம், வனேடியம், யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் உலோக மண்களும், அப்பிரகம், மாக்னசைட்டு, கல்நார், சிலிமனைட்டு, கைனைட்டுப் போன்ற பொருள்களும் கிடைக்கின்றன.

மைசூரிலுள்ள கோலாரிலும் ஐதராபாத்திலுள்ள ஹட்டியிலும் தங்கமும்; பீகார், சிக்கிம், ராஜஸ்தானம், சென்னை இராச்சியங்களில் செம்பும் ; மத்தியப்பிரதேசம், பம்பாய் ஒரீஸ்ஸா, சென்னை, மைசூர் இராச்சியங்களில் மாங்கனீசஸும்; பீகார், ஒரீஸ்ஸா, மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை இராச்சியங்களில் இரும்பும்; மைசூர், சென்னை பீகார், பம்பாய், இராச்சியங்களில் குரோமைட்டும்; மேற்குக் கிழக்குக் கடற்கரைகளில் டைட்டேனியமும்; ஒரீஸ்ஸாவில் வனேடியமும்; பீகார் ராஜஸ்தானம், சென்னை இராச்சியங்களில்: அப்பிரகமும்; மைசூரிலும் சென்னையிலும் மாக்னசைட்டும் ; அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், தென் இந்தியப் பிரதேசங்ளில் கைனைட்டு– சில்லி மனைட்டு–குருந்தம் ஆகியவைகளும், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, திருவிதாங்கூரில் பென்சில்கரியும் கிடைக்கின்றன. மேலும் ஆர்க்கியன் பாறைகளில் சுண்ணக்கல், டோலமைட்டு, எளிதில் உருகாதபடியாப் பொருள்கள் (Refractory}, உயவுப்பொருள்கள், பிங்கான் செய்வதற்கேற்ற பொருள்கள். மிகவும் அழகானவையும் நெடுமாளைக்கு நிற்பவையுமான கட்டடக் கற்கள் ஆகியவையும் கிடைக்கின்றன.

கடப்பை, விந்திய அமைப்புக்கள்: தார்வார்ப் பாறைகள் மடிந்து உயர்ந்து போது பின்னர், இந்தியாவில் பெரும்பகுதி மீண்டும் கடல்நீர் மட்டத்துக்கும் தாழ்வாக இறங்கி வண்டல்களைப் பெற்றது. அதைக் கடப்பை டெல்ஸி அமைப்புக்களில் காணலாம்.

கடப்பை வடிநிலத்திலும், சட்டிஸ்கார்– ஒரிஸ்ஸாப் பரப்பிலும், மத்திய இந்தியாலிலும், ராஜஸ்தானத்திலும் காணப்படும் இந்த யுகப்பாறைகள். மணற்கற்கள், களிமண் பாறைகள் சுண்ணம்புக் சுற்கள் ஆகியவை ஓரளவு மடிந்து உண்டானவையாகும். ராஜஸ்தானத்தில் ஆள்வார், ஐயப்பூர், மேவாரி ஆகிய இடங்களில் பெரிய மடிப்புக் காணப்படுகிறது. சிய இடங்களில் சுருங்கள் உட்புகுந்துள்ளது. ஆனால் அது கடப்பை வடிநிலத்தில் நேரவில்லை. கடப்பைப் பாறைகளிலிஞந்து நல்ல கட்டடக்கல்களும், சென்னை இராச்சியத்தில் கம்பம், மரகாப்பூர் ஆகிய இடங்களில் கற்பலகைகளும், டெல்லிக்கு அருகிலுள்ள குந்து என்னுமிடத்தில் கற்பலகைகளும், பலவிடங்களில் மணற்கற்களும் சுண்ணாம்புக்கற்களும் கிடைக்கின்றன. சென்னையிலும் ராஜஸ்தானதிலுமுள்ள இத்தகைய பாறைகளில் ஸ்டீயடைட்டு, பாரைட்டீஸ், கல்கார் ஆகியவும் உள.

விந்திய அமைப்பு : ஆர்க்கியன், கடப்பை அமைப்புக்களின்மீது பொருத்தமற்றவாறு மற்றொரு வண்டல் அமைப்பு உளது. அது பெரும்பாலும் பாசில்களில்லாதது. சீர்குலையாமலும் இருக்கிறது. இது கடப்பைப் பகுதியிலும் மத்திய இந்தியாவில் விந்தியப் பகுதியிலும் நன்கு உருப்பெற்றதாக இருக்கிறது.

விந்தியப்பாறைகளுக்குச் சமமாகச் சென்னைப் பகுதியிலுள்ள பாறைகள் கர்நூல் அமைப்பு என்று கூறப்பெறுகின்றன. பீகாரிலும் மத்திய இந்தியாவிலும் உள்ள விந்தியப் பகுதியில் தாழ்ந்த அல்லது செம்ரீத் தொடர் கானப்படுகிறது. அது உருமாறிவது என்று தெளிவாகத் தெரிகிறது. மேலுள்ள விந்தியப் பாறைகள் கெய்மூர் தொடர், ரீவாத்தொடர், பந்தர் தொடர் என்று பிரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வைரங்கள் உள்ள மணலும் கல்லும் சேர்ந்த அடுக்கினால் பிரிக்கப்படுகிறது.

விந்தியப் பாறைகளில் சிறந்த மணற்பாறைகள் கிடைக்கின்றன. அவற்றை மீர்சாப்பூர், பரத்பூர், ஆக்ரா முதலிய இடங்களில் வெட்டி எடுத்து வடஇந்தியாவில் முன்னாளில் போலவே இந்நாளிலும் கட்டட வேலைக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். சுண்ணாம்புக் கற்கள் கட்டட வேலைக்கும் சிமென்டு செய்வதற்கும் பயன்படுகின்றன. சிறந்த சலவைக் கற்களும், கடப்பைக் கற்கள் என்னும் தளவரிசைக் கற்களும் கிடைக்கின்றன. ஆனால் இந்த அமைப்பிலிருந்து கிடைப்பனவற்றுள் எற்றமுடைய பொருள் வைரம். பன்னா இராச்சியத்திலுள்ள வைரப் பாறைகள் தென் கிழக்கு ஆப்பிரிக்காவிதிள்ள ‘கிம்பர்லைட்’டைப்போல் ஓர் எரிமலை விளைவாகும் என்று அண்மையில் அறியப்பட்டிருக்கிறது.

பழம் பிராணி யுகத்தொகுதி : மேல் நிலக்கரி யுகத்துக் கோண்டுவானாப் பாறைகளுக்கு வந்து சேரும் வரை இந்தியத் தீபகற்பத்தில் விந்தியப் பாறைகளுக்குப் பிறரு உண்டான பாறைகளைக் காணமுடியாது. ஆனால் கேம்பிரியன் கால முதல் உண்டான சிறந்த கடல் விளைவுகளை இமயமலைப் பகுதியில் காணலாம். அவை பஞ்சாப் உப்பு மலைத்தொடர், காச்மீரம் ஸ்பிதி பள்ளத்தாக்கு, நேபாளம், சிக்கிம் ஆகிய இடங்களில் ஆராயப்பட்டுள்ளன. பஞ்சாப் உப்புமலைத் தொடரில் உப்புச் சுண்ணாம்பு மண்ணும் (Marl), கருஞ்சிவப்பான மணற்பாறையும், போலி உப்புவடிவக் களிமண் பாறையும் உள்ளன. பர்மாவில் பாசில்களுள்ள கேம்பிரியன் பாறைகள் இல்லை. ஆனால் ஷான் பகுதியிலுள்ள சாங்மாகித் தொடரும் இந்த யுகத்தைச் சேர்ந்ததாக இருக்கவாம். சாங்மாகிகளின்மீது தாங்பெங் எரிமலைத் தொடரும் கருங்கல்லும் படிந்துள்ளன. ஈய-நாக-வெள்ளித் தாதுகளுள்ள பாட்வின் பரப்பு இவற்றோடு இயையுடையது. தாங்பெங் தொடர் ஓரளவு கேம்பிரியன் யுகத்தினதாவுமிருக்கலாம்.

ஆர்டவிஷன் சைலூரியன் அமைப்புக்கள் காச்மீரத்திலுள்ள விடால் பள்ளத்தாக்கிலும் உத்தாப் பிரதேசத்திலுள்ள கூமாவுனிலும், பர்மாவிலும், ஷான் பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஆயினும் இமயப் பகுதியிலிருந்த கடலுக்கும், பர்மாவிலிருந்த கடலுக்கும் இடையில் ஒரு தடை இருந்தது என்று தெரிகிறது. ஏனெனில் இமயக் கடலில் பவளங்கள் நிறைந்தும், கிராப்டோ லைட்டுக்கள் காணப்படாமலும் இருக்கும்போது, பர்மாக் கடலில் கிராப்டோ லைட்டுக்கள் நிறைந்தும், பவளங்கள் காணப்படாமலும் இருக்கின்றன. பர்மாக் கடல்கள், வட, லடமேற்கு ஐரோப்பாவுடன் இணைந்திருந்தன.

டெவோனியான் அமைப்புக்கு இமயமலையின் பல பகுதிகளில் காணப்படும் முத் (Muth) படிகக் கற்பாறைகள் அடையாளங்களாகும். இந்த அமைப்பைச் சார்ந்த மற்றொரு வண்டல் படிவானது சித்திரால்மேலை ஸ்பிதி, கானூர், பயான்ஸ் என்னுமிடங்களில் அகப்படுகின்ற சுண்ணக் கல் ஆகும். இக்கல்லில் பாசில்கள் கிடைக்கின்றன. பர்மாவிலுள்ள பீடபூமியில் அகப்படும் சுண்ணக் சுல்லின் அடிப்பாகமும் இக்காலத்ததே. டெவோனியன் அடுக்கின் மேல் பாகத்தில் இமயச் கடலுக்கும் பர்மாக் கடலுக்கும் சற்றுச் சேர்க்கை ஏற்பட்டிருந்தது எனத் தெரிகிறது. சுார்பனிபெரஸ் அல்லது நீலக்கரி யுக அமைப்பு ஸ்பிதி, காச்மீரம், சித்திரால் ஆகிய பாகங்களில் நன்கு உருவாகியுள்ளது. ஸ்பிதியிலுள்ள இந்த அமைப்பில் ராக்காப்டெரீஸ் (Rhacopteris) என்னும் சில பாசில் செடிகள் அகப்படுகின்றன. இவை உவகமெக்கும் நிலக்கரி யுகத்தின் கீழ் எல்லையின் மேல் பகுதியில் காணப்படுகின்றன. இவை இங்குக் காணப்படுவதால் இந்த அமைப்பும் அக் காலத்ததே என்று தெரிகிறது. இந்த அடுக்கின் மேலே வண்டல் படிவதில் ஒரு தடையம காணப்படுகிறது. அந்நிகழ்ச்சி இமயமலைப் பகுதியில் பல இடங்களில் அதிகமாகக் காணப்படுவதாகும். பர்மாவிலுள்ள மேல்பீடபூமிச் சுண்ணாம்புக் கல்லானது நிலக்கரி யுகம் முதல் பெர்மின் யுகம் வரையுள்ள காலத்தியது. இதில் சில இடங்களில் மட்டுமே பாசில்கள் காணப்படுகின்றன. தெனாஸ்ஸெரிமிலுள்ள இக்காலப் பாறைகள் மோல்மீன் சுண்ணாம்புக்கல் என்று வழங்கும்.

கோண்டுவானா: விந்திய அமைப்பு மேலே எழும்பிய காலத்தின்பின் நீண்டகாலம் கழிந்த பிறகு மலைகள் தோன்றும் நிகழ்ச்சிகள் நடந்து பூமியில் பெரிய மாறுதல்களை உண்டாக்கின. இந்தக் காலத்தில் அதாவது நிலக்கரி யுக மேல் எல்லைப் பகுதியில் இந்தியா முழுவதையும் பெரிய பனிக்கட்டிப் படலம் போர்த்திருந்தது. அது இப்போது கிழக்குத் தொடர்ச்சி மலையாயிருப்பதிலிருந்தும், ஆரவல்லிப் பகுதியிலிருந்தும் தொடங்கி, வடக்கிலும் வடமேற்கிலும் சென்றதாகத் தெரிகிறது. இந்தக் காலத்தில் பனிக்கட்டி ஆறுகளும் பனிக்கட்டிப் படலங்களும் உண்டாக்கிய படிவுகள், தாமோதர், சோன் பள்ளத்தாக்குகள், உப்பு மலைத்தொடர், இமய மலையில் சில இடங்கள் ஆகியவை உட்படப் பல பகுதிகளில் காணப்படுகின்றன. இதன்பின் மிதமான குளிர்ச்சி நிலைமையில் செடி கொடிகள் நிறையச் செழித்து வளர்வதற்கு ஏற்ற காலமும், அதன்பின் வறண்ட காலமும், அதன்பின் மீண்டும் ஈரமான தட்பவெப்பக் காலமும் ஏற்பட்டன. ஈரமிகுந்த காலங்களில் ஏற்பட்ட பெரிய காடுகள் இப்போது நிலக்கரிப் படிவுகளாகக் காணப்படுகின்றன. வறண்ட காலங்களில் சிவப்பு, மஞ்சள், பழுப்பு நிறங்களுடைய படிவுகள் ஏற்பட்டன. அவற்றில் சில சமயங்களில் நிலம் - நீர்வாழ்வனவும், ஊர்வனவும் ஆகியவற்றைச் சேர்ந்த முதுகெலும்புள்ள பிராணி எச்சங்கள் காணப்படுகின்றன. இதன் படிவுகள் மொத்தமும் சேர்ந்து மத்தியப் பிரதேசத்தில் வாழும் கோண்டு மக்கள் பெயரால் கோண்டுவானா அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

கோண்டுவானாப் பாறைகள் பெரும்பாலும் தாமோதர்-சோன் பள்ளத்தாக்கு, மகாநதிப் பள்ளத்தாக்கு, கோதாவரிப் பள்ளத்தாக்கு ஆகிய மூன்றிலும் காணப்படுகின்றன. இமயமலையின் அடிப்பகுதிகளிலும் சில மேல் கோண்டுவானாக்கள் கிழக்குக் கடற்கரையோரமாகவும் கட்சு, கத்தியவார் பகுதிகளிலும் அங்கங்கே காணப்படுகின்றன.

கோண்டுவானா அமைப்பு மேல், கீழ் என்று இரண்டு முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. மேல் கோண்டுவானா (1) ஜபல்பூர், (2) ராஜமகால், (3) மகாதேவ் என்று மூன்று உட்பிரிவுகளாகவும், கீழ்க்கோண்டுவானா (1) பாஞ்சேத்,(2)தமுதா(தாமோதர்), (3) தல்ச்சிர் என்று மூன்று உட்பிரிவுகளாகவும் பிரிக்கப்படுகின்றன.

தல்ச்சிர் தொடரைச் சார்ந்த படிவுகளின் அடிப்பாகம் ஒரு பனிக்கட்டி ஆற்றுப்பாறைப் படுகையாகவும் பச்சை நிறமான களிமண் பாறையாகவும் மணற்பாறையாகவும் இருக்கிறது. அதன்பின் உண்டான தாமுதா தொடர் பல இடங்களில் பரவியுள்ளது. அதில்தான் இந்தியாவிலுள்ள மிக முக்கியமான நிலக்கரி அமைப்புக் காணப்படுகிறது. இப்போது நிறைய நிலக்கரி கொடுப்பது ஜாரியா நிலக்கரிச் சுரங்கமாகும். அதில் பாரகர் கட்டத்திலுள்ள 24 நிலக்கரிக்கொடிகள் நிக்கரியாக 200 அடிப் பருமனுள்ளனவாக இருக்கின்றன. இந்த யுகத்திய நிலக்கரிப் பாறைகள் அதே செடிப் பாசில்களுடன் தென்கிழக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா,ஆர்ஜென்டீனா, பிரேசில் ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.

தாமுதா தொடர் உண்டானதற்குப் பிறகு, தட்ப வெப்பநிலை படிப்படியாக வறண்டு வந்தது. அதனால் அத்தொடருக்குப் பின்னால் உண்டான பஞ்சேத்துத் தொடர் மகாதேவ தொடர்களில் நிலக்கரியோ, வேறு தாவரப் பாசில்களோ கிடைப்பதில்லை. எங்கோ சிலவிடங்களில் தவளை வகுப்பு, ஊர்வன, ஓட்டுமீன் ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. இந்த இரண்டு தொடர்களும் சாம்பல், பழுப்பு, சிவப்பு நிறமான மணற்கற்களால் ஆனவை. இவற்றிற்குப் பின்னர் இவற்றில் நிலக்கரியோ, வேறு தாவரப் பாசிலோ இல்லை. சிலபோது மட்டும் நிலம் - நீர்வாழ்வன, ஊர்வன, ஒட்டு மீன் (Crustacea) ஆகியவற்றின் எச்சங்கள் காணப்படுகின்றன. பின்னர் உண்டான ராஜ மகால், ஜபல்பூர் தொடர்களில் தட்பவெப்பநிலை மீண்டும் அதிக ஈரமுடையதாக ஆயிற்று. ஆனால் இக்காலத்தில் நிலக்கரிப்படிவுகள் சில உண்டான போதிலும் அவை மிகச் சிறிய அளவேயாம்.

கிழக்குக் கடற்கரையில் ஒரிஸ்ஸாவிலிருந்து இராமநாதபுரம் வரையிலும், ராஜமகால் தொடரைப்போன்ற அடுக்குக்கள் காணப்படுகின்றன. தென் இந்தியாவில் மேற்குக் கோதாவரி, குண்டூர், செங்கற்பட்டு ஆகிய பகுதிகளிலும், இலங்கையில் புட்டலம் என்னும் பகுதியிலும் இவை ஆராயப் பெற்றுள்ளன. குண்டூரில் இவற்றுடன் சேர்ந்த சில கடற்படுகைகளில் கிளிஞ்சல்களும் அம்மொனைட்டுக்களும் காணப்படுகின்றன. அம்மொனைட்டுக்கள் காணப்படுவதால் இவை கீழ்க்கிரிட்டேஷஸ் யுகத்தின என்று தெளிவாகிறது. மேல் நிலக்கரிச் சீர்குலைவு அஸ்ஸாம் பகுதியிலிருந்து இமயமலை வழியாகப் பைரசின் மலைவரை ஒரு பெரிய மத்தியதரைக்கடலை உண்டாக்கிற்று. இந்த மத்தியதரைக்கடலுக்குப் புவியியலார் டெதிஸ் என்று பெயர் கொடுத்துளர். அது இரண்டாவது யுகம் முழுவதும் நிலைத்திருந்தது. மூன்றாவது யுகத்தில் அங்கு மலைகள் உண்டாயின.

பெர்மியன் காலத்துக் கடற்பாறைகள் இமயமலைப் பகுதியிலும் உப்புமலைத் தொடரிலும் நன்கு உருவாகி இருக்கின்றன. பெரிமியன் காலத்துக் கடல் மேற்கு ராஜஸ்தானம், கத்தியவார் வழியாக நருமதைப் பள்ளத்தாக்கில் உமேரியா வரையிலும் பரவியிருந்தது. இமயமலையில் ஸ்பிதி பள்ளத்தாக்கில் திரைசிக் அமைப்பு நன்கு உருவாகி இருக்கிறது. அங்குப் பாசில்கள் மிகுதியாக உள்ளன. அதே பாறைகள் கிழக்கே நேபாளம் வரையிலும், மேற்கே காச்மீரம், உப்புமலைத் தொடர்வரையிலும் காணப்படுகின்றன.

அதுபோலவே ஜுராசிக் அடுக்குக்களும் இமயமலை ஓரமாகவும், பலூச்சிஸ்தானத்து மலைகளிலும், கட்சுவிலும் காணப்படுகின்றன. மடகாஸ்கர் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து பிரிந்ததும், இந்தப் பிளவு வடக்கே டெதிஸ் கடலின் பலூச்சிஸ்தானப் பரப்பு வரையும் பரவியதும், பெர்மியன் காலத்தில்தான் என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் உள.. இந்தப்பிளவு பிற்காலத்தில் விரிந்து இப்பொழுதுள்ள அரபிக்கடல் உண்டாயிற்று. இந்தியாவில் கிழக்குக் கடற்கரையில் சிறப்பாகச் சென்னைக்கு வடக்கே சில இடங்களில் ஜூராசிக் காலத்தின் மேற்பகுதியைச்சார்ந்த கடற்பாறைகள் காணப்படுவதால் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை உருவானது ஜுராசிக் காலத்தில்தான் என்று தோன்றுகிறது. அதன்பின் வந்த கிரிட்டேஷஸ் காலத்தில் கடலானது தஞ்சாவூர், தென் ஆர்க்காடு, திருச்சி, அஸ்ஸாம் ஆகிய இடங்களின் மீது பரவிற்று. ஆனால் கிழக்குக் கடற்கரைப்பகுதியில் காணப்படும் பிராணிகளுக்கும், பலூச்சிஸ்தானம், கிழக்கு அரேபியா ஆகியவற்றில் காணப்படும் பிராணிகளுக்கும் இடையில் குறிப்பிடக்கூடிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

மேல் கிரிட்டேஷஸ் காலத்தில் மற்றொரு பெரிய புவி இயக்கம் தோன்றிற்று. தென் பாரசீகக் கடலின் ஒரு கிளையாயிருந்த ஓமான் பகுதி, கடல் நெருங்கி மலைத் தொடராக எழும்பிற்று. மலையைத் தோற்றுவித்த இந்த இயக்கம் பலூச்சிஸ்தானத்தையும் கட்சையும் பாதித்தது. அங்கே வண்டல் படிவதில் தடை ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். இமயமலைப் பகுதியில் கடல் ஆழம் குறைந்தது. மணல் நிறைந்த வண்டல்கள் மிகுதியாகத் தோன்றத் தொடங்கின. ஆயினும் அஸ்ஸாம் பர்மாப் பகுதியில் மலைதோற்றுவிக்கும் இயக்கம் சிறிது பிற்பட்டே கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் தோன்றத் தொடங்கியதாகத் தெரிகிறது.

கோண்டுவானாலாந்து பெர்மியன் காலத்துக்குப் பின் பிளவுறத்தொடங்கியது. ஆனால் கிரிட்டேஷஸ் காலத்தின் தொடக்கம்வரை செடிகளும் விலங்குகளும் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாறியவண்ணமிருந்தன. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆர்ஜென்டீனா ஆகிய பகுதிகளில் இடைப்பிராணி யுகத்தின் மேல்பகுதியிலிருந்த ஊர்வனவற்றில் மிகுந்த ஒற்றுமை இருந்ததாகத் தெரிகிறது. கிரிட்டேஷஸ் நடுப்பகுதியில் இந்தியா மடகாகரிலிருந்து பிரிந்துகொண்டது என்றும், அன்டார்ட்டிக்காவும் ஆஸ்திரேலியாவும் அதற்கு முன்பே இப்போதுள்ள இடங்கட்குப் போய்விட்டன என்றும் கருதப்படுகின்றன.

தக்காணப் படிக்கட்டுக்கள் (Deccan Traps) : கிரிட்டேஷஸ் காலத்தின் இறுதியில் மத்திய இந்தியாவிலும் மேற்கு இந்தியாவிலும் எரிமலைக்குழம்பு வழிந்தோடியது. அது கிழக்கே ராஞ்சிபீடபூமிமுதல் மேற்கே கட்சு வரையிலும், வடக்கே சித்தோர்கார் முதல் தெற்கே பெல்காம், ராஜமகேந்திரபுரம் வரையிலும் காணப்படுகிறது. கறுப்பு நிறமுள்ள எரிமலைக் குழம்பு அடுக்குக்கள் பல காணப்படுகின்றன. அவற்றுடன் சாம்பல் அடுக்குக்களும் சேர்ந்துள. எரிமலை எரிவது அடங்கிய சமயங்களில் ஏரிகளில் வண்டல் படுகைகள் உண்டாயின. எரிமலைக் குழம்பு பூமியின் புறணியிலிருந்து பல வெடிப்புக்கள் வழியாக மேலே கிளம்பிப் பரவியிருக்கவேண்டும். பம்பாய்க் கடற்கரை அடுக்கில் அது 6,000 அடி பருமனுடையதாக இருக்கிறது. அதன் பிறகு மடிப்புக்களும் பிளவுகளும் உண்டாயின. பம்பாய்க் கடற்கரையில் அத்தகைய பிளவு ஒன்று காணப்படுவதால், எரிமலைக்குழம்பு இப்போது அரபிக் கடலாக இருக்கும் இடம்வரை பரவியிருக்கவேண்டும்.

மூன்றாம் யுகம்: இந்த யுகத்தின் தொடக்கத்தில் முக்கியமான மாறுதல்கள் உண்டாயின. அநேக விலங்குத்தொகுதிகளும் தாவரப்பிரிவுகளும் மறைந்து போய்ப் புதிய வகைகள் தோன்றின. பிரமாண்டமான ஊர்வனவும், மிகுதியாகப் பல்கும் அம்மனைட்டு வகைகளும் அழிந்து, பாலூட்டிகளும், பூக்கும் தாவரங்களும் முதன்மை பெற்றன. கோண்டுவானாலாந்து சிதறிவிட்டது. இந்தியா வடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து சென்று, வடக்கே ஆசியாக் கண்டத்தால் தடுக்கப்படவே, அதன் காரணமாக இரண்டுக்குமிடையே வண்டல் படுகை இமயமலைத் தொடராகமேலே எழும்பியதாகத் தெரிகிறது. இந்த இயக்கங்கள் பல கட்டங்களாக நிகழ்ந்துள. முக்கியமான இயக்கங்கள் இயோசீன் கால இறுதியிலும் மெயொசீன் கால நடுப்பகுதியிலும், மேல் பிளையசீன் காலத்திலும், பிளீஸ்ட்டொசீன் காலத்திலும் உண்டாயின. இயோசீன் கால இறுதியில் கடல் ஆழம் குறைந்தது; மெயொசீன் கால நடுவில் கடல் சிறிய ஏரிகளாகப் பிரிந்தது. இப்போது சிந்து - கங்கைப் பள்ளத்தாக்கு இருக்குமிடத்தில் பெரும்பள்ளம் ஏற்பட்டது. வடமேற்குப் பஞ்சாபிலும் காச்மீரத்திலும் பிளீஸ்ட்டொசீன் அடுக்குக்கள் பீர்பஞ்சாப் என்ற இடத்தில் பல ஆயிர அடி உயரம் கிளம்பியதாகக் கூறுவதற்குச் சான்றுகள் உள.

மூன்றாம் யுக அமைப்புக்கள் இந்தியாவின் வடக்கு எல்லை ஓரமாகவும், தீபகற்பத்தில் கடற்கரையோரமாகவும் நன்கு உருவாகி இருக்கின்றன. இயோசீன் அடுக்குக்கள் பலூச்சிஸ்தானம், இமயமலை, திபெத்து, பர்மா ஆகிய இடங்களில் அதிகமாகப் பரவியுள்ளன. அஸ்ஸாமிலும் ராஜஸ்தானத்திலும் பஞ்சாபிலும் நிலக்கரியும் பழுப்பு நிலக்கரியும் (லிக்னைட்டு) கிடைக்கின்றன. ஆலிகொசீன், மயொசீன் அடுக்குக்கள் பஞ்சாபில் மர்ரி அமைப்பு எனப்படும் படிவுகளாக இருக்கின்றன. மேல் மெயொசீன் காலத்திலிருந்து பிளையசீன் காலம்வரை உண்டான அடுக்குக்கள் தாம் சிவாலிக் அமைப்பு எனப்படுபவை. அவற்றில் இறந்துபட்ட பல பிராணிப் பிரிவுகள், இனங்களின் முதுகெலும்பு எச்சங்கள் நன்கு பாதுகாக்கப்பட்டுக் காணப்படுகின்றன. இது போன்ற அமைப்புத்தான் பர்மாவிலுள்ள ஐராவதி அமைப்பு என்பது. ராஜமகேந்திரம், கடலூர், வர்க்கலை மணற்பாறைகள் மயொசீன் அடுக்குக்களாம். இவற்றில் சில இடங்களில் பழுப்பு நிலக்கரி காணப்படும். இலங்கை மூன்றாம் யுகத்தின் நடுப்பகுதிவரை இந்தியாவுடன் சேர்ந்த நிலப்பகுதியாகவே இருந்தது. மூன்றாம் யுகப்படுகைகளில் பர்மா, அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய இடங்களில் பெட்ரோலியப் படிவுகள் உள. ஆனால் அந்த அடுக்குக்கள் இமயமலையின் தெற்கு விளிம்பு முழுவதும் அதிகமாகச் சீர்குலைந்திருப்பதால் அங்கே பெட்ரோலியம் கிடைக்கும் என்று துணிவதற்கில்லை. எம். எஸ். கி.

தட்ப வெப்ப நிலை: இந்தியா பெரும்பாலும் அயன மண்டலங்களுக்குள் அடங்கி யிருத்தலாலும், வடக்கில் ஆசியாக் கண்டத்தின் பெருநிலப் பகுதி இருத்தலாலும், தெற்கில் இந்து சமுத்திரம் இருத்தலாலும் ஒரு பெரிய பருவக்காற்றுப் பிரதேசமாக அமைந்துள்ளது. இந்தியாவில் டிசம்பர் முதல் மார்ச்சு வரையும் குளிர் காலத்தில் பொதுவாகக் காற்று வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வீசுகிறது. இது இந்துஸ்தான் சமவெளிகளில் வடமேற்குக் காற்றாகவும், நடுப்பகுதிகளில் வடக்குக் காற்றாகவும், தீபகற்பத்தின் தெற்கிலும் சுற்றிலுள்ள கடல்களிலும் வடகிழக்குக் காற்றாகவும் வீசுகிறது. வடகிழக்கு அல்லது குளிர்காலப் பருவக் காற்றுப் பெரும்பாலும் ஆசியாக் கண்டத்திலிருந்து உண்டாகிறது. ஆகவே குறைந்த ஈரத்தோடு கூடியுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரையுள்ள கோடை மாதங்களில் கடலிலிருந்து நிலத்தை நோக்கிக் காற்று வீசும். அப்போது ஈரம் மிகுதியாக உள்ளது. அதனால் மேகமும் மழையும் மிகுதி. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் வீசும் காற்றுப் பெரும்பாலும் தென்மேற்குத் திசையிலிருந்து வருவதால் இந்தப் பருவத்துக்குத் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் என்று பெயர். இவ்விரண்டு பிரதானமான பருவங்களுக்கிடையே ஏப்ரல், மே மாதங்களாகிய வெப்பமுள்ள காலமும், அக்டோபர், நவம்பர் மாதங்களாகிய பின்னடையும் பருவக்காற்றுக் காலமுமாகும்.

பருவக் காற்றோட்டங்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. ஆயினும் இந்திய சமுத்திரம், சீனக் கடல்களைக் காட்டிலும் இவைகளை அடுத்துள்ள ஆசிய நிலப்பகுதி கோடையில் அதிகமாக வெப்பமடைதலும், குளிர் காலத்தில் அதிகமாகக் குளிர்ச்சி அடைதலுந்தான் முக்கிய காரணமென்று உறுதியாகச் சொல்லலாம். ஜனவரி மாதத்தில் ஆசியாக் கண்டத்தில் குளிர் மிகுந்துள்ளபோது வடகிழக்குப் பருவக் காற்று இந்தியா முழுவதும் அடிக்கிறது. மாசு மறுவற்ற ஆகாயம், நல்ல காலநிலை, ஈரக் குறைவு, தினசரி வீச்சு மாற்றம் அதிகரித்தல், மெதுவாய் வீசும் வடகாற்று ஆகியவை இப் பருவத்தின் காலநிலை இயல்புகளாம். இடையிடையே பேரழுத்தம் மாறிப் பாரசீகம், வட இந்தியா வழியாகச் சீனாவை நோக்கிக் குறைந்த அழுத்தத்தால் ஏற்படும் சுழல்கள் செல்லும். இவை ஐரோப்பியப் பகுதிகளில் உண்டாகும் சுழல்களைவிடக் கடுமையாக இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அவ்வகையைச் சேர்ந்தவைகளே. இச் சுழல்களோடு வரும் மழை மிகக் குறைவே யெனினும், வட இந்தியாவின் குளிர் காலப் பயிர்களுக்கு மிகவும் முக்கியமானது. கிழக்கு நோக்கிச் செல்லும் இச் சீரழுத்தச் சுழல்களிற் சில வட இந்தியா முழுவதற்கும் சிறு மழை தரும். வடக்கு வடகிழக்காய்ச் செல்பவை பஞ்சாப் சமவெளிகளிலும் காச்மீரத்திலும் பெரு மழையையும், இமயச்சரிவுகளில் பெரும்பனிப் பொழிவையும் தருகின்றன. இவை கடந்து செல்லும்போது இராப்பகல் வெப்பநிலை மாற்றம் அதிகரித்துச் சில வேளைகளில் கடுங்குளிர் வீசும். அவற்றால் தெற்கே நாசிக் வரையும் கரும்புக்கும் பழவகைப் பயிர்கட்கும் பெருஞ்சேதம் விளைகின்றது. ஏப்ரல் முதல் மே வரையுள்ள வெப்பக் காலத்தில் வெப்ப நிலை நாளுக்குநாள் உயர்கிறது. அதற்குத் தக்கபடி வட இந்தியாவில் வாயு அழுத்தம் குறைகிறது. ஆனால் இந்திய சமுத்திரத்தின் தென்பாகத்திலும், அதனை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நிலப்பகுதிகளிலும் வெப்பநிலை ஒழுங்காகக் குறைந்துகொண்டே வருவதோடு பேரழுத்தங்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் வெப்ப மிகுதி கிரமமாக வடக்கே செல்லுகிறது. தக்கிணத்தில் மார்ச்சு மாதத்தில் 100° பா. வெப்பநிலை ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பகல் வெப்பநிலை 100° பா. முதல் 110° பா. வரை மத்தியப்பிரதேசத் தின் தெற்கிலும் குஜராத்திலும் உயர்கிறது. மே மாதத்தில் வட இந்தியாவின் வெப்பநிலை மிக அதிகமாயுள்ளது. வட மேற்குப் பாலைவனத்தில் அப்போது வெப்பநிலை 120° பா.க்கும் அதற்கு மேலும் உயர்கிறது. ராஜஸ்தானம், சிந்து, தார் பாலைவனம் குறைந்த அழுத்தமுள்ள பகுதிகள். இக் குறைந்த அழுத்தமுள்ள பகுதி ராஜஸ்தானத்திலிருந்து சோட்டாநாகபுரிவரை பரவியுள்ளது. இக் காலத்தில் தூசிப்புயல்களும், தூசியைக் கிளப்பும் காற்றும் வட இந்தியாவில் அநேகமாக உண்டாகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று : மே மாதக் கடைசியில் வடமேற்கிந்தியாவில் அழுத்தக்குறைவு நன்றாக ஏற்படுகிறது. அதனால் இந்தியா முழுதும் காற்றோட்டம் அதிக வேகத்தோடு செல்கிறது. பல ஆண்டுகளில் பூமத்திய ரேகைக்குத் தெற்கிலிருந்து வீசும் தென்கிழக்குத் தடக்காற்றுக்கள் வடக்கு நோக்கி அரபிக் கடலிலும் வங்காளவிரிகுடாவிலும் இழுக்கப்படுகின்றன. இந்தக் குளிர்ந்த ஈரமான ஓட்டந்தான் தென்மேற்குப் பருவக்காற்று எனப்பட்டு, ஜூன் மாதத் தொடக்கத்தில் மலையாளக் கடற்கரையில் கொந்தளித்து வீசத்தொடங்குகிறது. பின் சிறிது சிறிதாக வடக்கு நோக்கிச் சென்று, ஜூன் மாதத்திற்குள் இந்தியாவிற் பெரும் பகுதியிலும் பரவுகிறது. இந்தியாவை அடைவதற்கு முன் இவ்வோட்டம் கடல் வழியாக 2,000 மைல்களுக்கு மேல் வருவதால் நீர் நிறைந்திருக்கும். இந்தியாவின் பெரும்பகுதிக்கு இதிலிருந்துதான் மழை கிடைக்கிறது. இந்தியாவில் பெய்யும் மழையில் 85 சதவீதம் இதிலிருந்துதான் கிடைக்கிறது.

இந்தியாவின் இயற்கையமைப்பை ஒட்டியே பருவக் காற்றோட்டத்தின் போக்கும் மழையின் அளவும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இந்தியாவின் வடகிழக்கிலும் வடமேற்கிலுமுள்ள மலைத்தொடர்கள் ஒரு பெட்டியின் இரு பக்கங்கள்போல உள்ளன. ஆகையால் பருவக்காற்றோட்டம் தீபகற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஓட்டங்களாகப் பிரிந்து செல்கின்றது. வங்காள விரிகுடாவின் ஓட்டம் முதலில் வடக்கு நோக்கிச் சென்று, இமயமலைத் தொடரால் தடுக்கப்பட்டுப் பின் மேற்கு நோக்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகத் திரும்புகிறது. அரபிக் கடலோட்டம் மேற்குக் கடற்கரை மலைத்தொடர்களுக்குக் குறுக்காக வீசி எழும்போது அம் மலைகள்மீது மிகுந்த மழையைப் பெய்வித்துப் பின் தக்கிணம், மத்தியப்பிரதேசம்வரை முன்னோக்கிச் செல்கிறது. பருவக்காற்று முழுதும் பரவி நிலைத்தவுடன் ஒரிஸ்ஸாவிலும் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள குறைந்த அழுத்தமுள்ள இடத்திலும் இரண்டு ஓட்டங்களும் ஒன்று கூடுகின்றன.

பருவக்காற்று மழை இந்தியாவில் ஓரிடத்திலும் தொடர்ந்து பெய்வதில்லை ; ஒரே அடியாகப் பல நாள் பொழிவதும் உண்டு; விட்டுவிட்டுப் பெய்வதும் உண்டு. காற்றின் சலனமும், மழைப் பொழிவின் சலனமும் நாடியின் துடிப்பை ஒத்திருத்தல் தென்மேற்குப் பருவக்காற்றின் ஒரு சிறந்த அமிசமாகும். சராசரியில் ஓட்டத்தின் வேகமும், அதனைத்தொடர்ந்து பெய்யும் மழையின் அளவும் ஜூன் முதல் ஜூலை வரை அதிகமாகிக்கொண்டே வந்து, ஆகஸ்டு முடிவுவரை ஒரே அளவில் இருக்கும். செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் பருவக்காற்று வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்குகிறது. மேற்கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவக்காற்று மழை 100 அங்குலத்திற்கு மேல் பெய்கிறது. ஆனால் மலைத் தொடர்களுக்குக் கிழக்கே தீபகற்பத்தின் நடுவிலும் கீழ்ப்பகுதியிலும் 20 முதல் 30 அங்குல அளவு வரை மழை பெய்கிறது. அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் 100 அங்குலத்திற்கு மேலும், பிறகு சிறிது சிறிதாக மேற்குப் பக்கத்தில் குறைந்துகொண்டே போய் ராஜஸ்தானத்தின் பகுதிகளில் 5 அங்குலத்திற்குக் கீழும் மழை பெய்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் மழை மிகுதியாகப் பெய்யும் காலம் ஜூன் முதல் செப்டம்பர்வரை யென்று கொள்ளலாம். ஆனால், தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான தமிழ் மாவட்டங்களில் இப் பருவக் காற்றினால் கிடைக்கும் மழை மிகமிகக் குறைவு. இப்பகுதிகளிற் பெரும்பாலும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் சீரழுத்தச் சுழல்கள் அல்லது சூறாவளிகளினால் அக்டோபர் முதல் டிசம்பர்வரை மழை பெய்கிறது.

சூறாவளிகள்: இவை வங்காள விரிகுடாவில் தொடங்கி வடமேற்கு அல்லது மேற்குப் பக்கமாகச் செல்கின்றன. இவை வீசும் இடங்களில் ஏராளமான மழை பெய்கிறது. நாட்டின் பக்கமாகச் செல்லச் செல்ல இவற்றின் வலிமை குறைகிறது. இரண்டு பருவக் காற்றுக்களுக்கிடையே யுள்ள காலத்தில் ஏற்படும் சூறாவளிகள் வேகமும் வலிமையும் மிகுந்தவை. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் இச் சுழல்கள் முக்கியமாக மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்படுகின்றன. ஏப்ரல், செப்டம்பர், டிசம்பர் மாதங்களிலும் சிற்சில சமயங்களில் உண்டாகின்றன. பருவக்காற்றுத் தொடங்கும் ஜூன் மாதத்தில் அரபிக்கடலில் இது ஏற்படுவதுண்டு. பருவக்காற்று வீசும் மாதங்களிலெல்லாம் வங்காளவிரிகுடாவின் வடகோடியில் சீரழுத்தச் சுழல்கள் உண்டாகி வடக்கே உள் நிலத்தை நோக்கிப் பரவுகின்றன. நாசமுண்டாக்கும் காற்றுக்கள் அக் காலங்களில் வீசுவதில்லை. ஆனால் இச் சுழல்கள் பரவுமிடமெங்கும் ராஜபுதனம், பஞ்சாப் போன்ற உட்பிரதேசங்கள்வரை மழையைப் பெய்விக்கின்றன. தென்மேற்குப் பருவக்காற்றுக் காலம் பின்னும் முன்னும் காற்றுக்களின் வேகம் குறைந்தும் மாறியும் இருக்கும்போது, கடுஞ் சூறாவளிகள் உண்டாகின்றன. சராசரியில் பருவக்காற்றுக் காலத்துக்குமுன் ஒன்று அல்லது இரண்டு சூறாவளிகளும், பருவக் காற்றுக் காலத்துக்குப்பின் இரண்டு அல்லது மூன்று சூறாவளிகளும் உண்டாகின்றன. இச் சுழல்கள் தொடங்கும் இடமும் பரவும் இடங்களும் பருவக் காற்றோட்டத்தின் முகப்பை (Front) ஒட்டி மாறிவரும். எனவே, ஜூலை மாதத்தில் குடாவின் முனையில் இப் புயல்கள் தொடங்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகச் செல்கின்றன. சுமார் அக்டோபர் மாதத்தில் இவை பெரும்பாலும் அந்தமான் தீவுகளினருகே தொடங்கி, மசூலிப்பட்டினத்துக்கருகே கடற்கரையைத் தாண்டுகின்றன. நவம்பரில் இவற்றுள் பெரும்பாலானவை சென்னைக்கருகே செல்கின்றன. டிசம்பர் மாதத்தில் தீபகற்பத்தின் தென்கோடியில் மாத்திரம் காணப்படுகின்றன. இவற்றுள் சில தீபகற்பத்துக்கப்பாலும் சென்று, அரபிக்கடலை அடைந்து, மறுபடியும் வலியுற்று மிகக் கடும்புயல்களாக மாறுகின்றன. இக் கடுஞ்சூறாவளிகளால் சில சமயங்களில் தீபகற்பத்தின் கடற்கரைப் பகுதிகளிலும் வங்காளத்திலும் மிகுந்த உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகின்றன. கடற்கரைப் பகுதியில் விளையும் சேதங்களுக்குச் சூறாவளிகள் தோன்றும்போது உண்டாகும் பலத்த காற்றுக்களும் புயலலைகளுமே காரணமாம். பேரலைகள் தோன்றும்போது இப் புயல்கள் உண்டானால் அப்போது உண்டாகும் சேதத்துக்கு ஓர் எல்லை இல்லை. சில சமயங்களில் அலைகள் 25-30 அடி வரை உயர்கின்றன. ஆனால் இத்தகைய பெருஞ்சேதம் விளைக்கும் சூறாவளிகள் இந்தியாவில் சராசரியில் ஐந்தாண்டுகட்கு ஒரு முறையேதான் தோன்றுகின்றன.

பெய்யும் மழையளவில் வேறுபாடுகள் :இந்தியாவில் ஆண்டுதோறும் மழையின் சராசரி அளவு சுமார் 42 அங்குலம். இந்தியாவை மொத்தமாக எடுத்துக்கொண்டால் இவை மேயில் 3 அங்., ஜூனில் 8 அங்., ஜூலையில் 11 அங்., ஆகஸ்டில் 10. அங். செப்டம்பரில் 7 அங்., அக்டோபரில் 3 அங். வீதம் பெய்கின்றன. இந்த அளவு மிகுதலும் குறைதலும் உண்டு. 1917-ல் 12 அங். அதிகமாகவும், 1899-ல் 8 அங். குறைவாகவும் இருந்தன. தென்மேற்குப் பருவக்காற்று மழையில் நான்கு முக்கிய மாறுதல்களைக் காணலாம். முதலாவது இந்தியா முழுவதுமோ அல்லது ஒரு பகுதியிலோ மழை பெய்வதில் பெருந்தாமதம் ஏற்படலாம். இரண்டாவது ஜூலை ஆகஸ்டு மாதங்களில் பெரும்பகுதியில் மழையே பெய்யாமலிருக்கலாம். மூன்றாவது அதற்குரிய காலத்துக்கு முன்னரே மழைக்காலம் முடிந்துவிடலாம். கடைசியாக ஒரு பிரதேசத்தில் வழக்கமாகப் பெய்யும் மழையின் அளவைக் காட்டிலும் குறைந்தும் மற்றொரு பிரதேசத்தில் அதிகமாகவும் மழை பெய்யலாம். பருபருவக்காற்று வெகு காலம் இல்லாமலிருந்து விடுவதாலும், சிறிது காலமே இருந்து திடீரென்று நின்று விடுவதாலும் பயிர்களுக்குப் பெருஞ்சேதம் உண்டாவதோடு வறட்சியும் பஞ்சமும் உண்டாகின்றன. அதிக மழை பெய்து வெள்ளத்தாலும் பெருங்கஷ்டங்கள் ஏற்படுவதுண்டு. மழை அதிகமாகப் பெய்யும் இடங்களில் மாறுதல் குறைவு. நாட்டில் மிகவும் வறண்ட பாகங்களில் இவ்வேறுபாடு மிகவும் அதிகமாகவும், ஈரமான பாகங்களில் மிகவும் குறைவாகவும் இருக்கும். மழையின் குறைவினால் புன்செய்ப் பயிர்களும் இல்லாத வறண்ட பகுதிகளுக்கு இம் மழையின் அளவு வேறுபாட்டால் தீமை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் சராசரி ஆண்டுதோறும் 25-50 அங்குல மழையுள்ள பிரதேசங்களுக்கு மழை அளவு வேறுபடுவதால் ஏற்படும் தீமைகள் மிகவும் அதிகம். வேண்டிய அளவுக்கு மிகக் குறைவாக மழை பெய்யுமிடங்களில் விளைவுக் குறைவும் பஞ்சமும் ஏற்படுதின்றன. அடியில் கண்ட இடங்களில் பயிர்த் தொழிலுக்கு ஏற்படும் கஷ்டம் மிகவும் அதிகம்.

1. பம்பாய், சென்னை மாகாணங்களின் சில பகுதிகளும் ஐதராபாத்தும் அடங்கிய தக்கிணம். 2. இந்தியாவின் வடமேற்கு மத்தியப் பகுதிகள் : முக்கியமாகப் பஞ்சாப், கிழக்கு ராஜபு தனம், ஐக்கிய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள். முற்காலங்களில் நாடு முழுதும் கொடிய பஞ்சங்கள் அடிக்கடி ஏற்பட்டு வந்தன. 1896-97-ல் சுமார் 2,25,000 சதுர மைல் வரை பஞ்சத்தால் பாதிக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவில் மட்டும் 620 இலட்சம் மக்கள் இப்பஞ்சத்துக் குள்ளாயினர். அரசாங்கத்தார் பஞ்ச நிவாரணத்துக்காக 7 கோடி ரூபாய் செலவு செய்தனர். 19ஆம் நூற்றாண்டில் முப்பது ஆண்டுகளுக்குள் நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டு மக்களை வாட்டின. ஓராண்டு முதல் நான்காண்டுகள் தொடர்ந்து, சிற்சில காலங்களில் பஞ்சநிவாரண வேலைகள் நடைபெற்றன. இப்போது பஞ்சத்தால் அவ்வளவு கஷ்டம் ஏற்படுவதில்லை. ஏனென்றால் இந்திய அரசாங்கம் நாடெங்கும் நீர்ப்பாசனம் நடைபெறுதற்குரிய சாதனங்களும் இருப்புப் பாதை வசதிகளும் ஏற்படுத்தியிருக்கின்றது.

மழைப்பிரதேசங்களும் உழவுத்தொழிலும்: இந்திய நாட்டை அ. ஈரப் பகுதி (ஆண்டிற்கு 50 அங்குலத்திற்குமேல் மழையுள்ளது), ஆ. வறண்ட பகுதி (ஆண்டிற்கு 25 அங்குலத்திற்குக்கீழ் மழையுள்ளது), இ. நடுத்தரமான பகுதி (25-50 அங்குல மழையுள்ளது) எனமூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இப் பாகுபாட்டினை ஒட்டியே பயிரிடப்படும் பகுதிகளும் அமைந்துள்ளன.

அ. ஈரப்பிரதேசத்தில் அடங்கியுள்ளவை பின் வருனவாம்: 1. பம்பாய்க்குச் சற்று வடக்கிலிருந்து தொடங்கும் மேற்குக் கடற்கரைப் பகுதி முதல் மேற்கு மலைத்தொடர்களின் தாழ்வரைகளுட்பட்ட தென் திருவிதாங்கூர் வரையிலுமுள்ள நாடு. 2. பீகார், வங்காளம், அஸ்ஸாம், ஒரிஸ்ஸா அடங்கிய வடகிழக்கிந்தியா, மத்தியப் பிரதேசத்தை அடுத்துள்ள பகுதிகள், வடசர்க்கார்கள். சுமார் 50 அங்குலம் மழை உள்ள தமிழ்நாட்டின் கடற்கரைப் பிரதேசத்தை இந்தக் கிழக்கு ஈரப்பகுதியின் தென்பகுதியாகக் கொள்ளலாம். இவ் ஈரப் பிரதேசங்களில் நெல், கரும்பு, தென்னை, வாசனைப்பொருள்கள், மலைத்தோட்டப் பயிர்கள், சணல் ஆகியவை மிகுதியாக விளைகின்றன. கால்நடை அதிகமாக விருத்தியாவதில்லை. எருமைகள் இங்கு ஏராளமாக உன்ளன.

ஆ. வறண்ட பகுதி வடமேற்கில் உள்ளது. பஞ்சாப், சிந்து, பலூச்சிஸ்தானம், எல்லைப்புறப் பிரதேசம், காச்மீரம், ராஜபுதனத்தின் மேற்குப் பகுதிகள், சட்லெஜ்-யமுனை உயர்நிலங்கள் இவை இப்பகுதியில் அடங்கும். வடமேற்கு வறட்சிப்பகுதிகளில் குளிர் நாடுகளில் பயிராகும் கோதுமை, பார்லிபோன்ற தானியங்களும் பழங்களும் குளிர்காலப் பயிர்களாக விளைகின்றன. இங்குப் பயிர்த்தொழில் பெரும் பகுதியும் நீர்ப்பாசனத்திலேயே நடைபெறவேண்டும்.

இ. நாட்டின் பிறபகுதிகள் நடுத்தரத்தனவாம். இப்பகுதிகளில் சோளம், கம்பு, தினை போன்ற புன்செய்த் தானியங்களும், பருத்தியும் பயிராகின்றன. கால்நடைகள் மிகுதியாக உண்டு.

மலையூர்கள்: உடல்நலம் பேணி உறைவதற்குரிய மலையூர்களில் இருவகை உண்டு: 1. 7,000 அடிகட்கு மேலுள்ள இமயமலைத் தாழ்வரைப்பகுதிகள். 2. மேற்கு மலைத்தொடர்களில் தெற்குப்பகுதியிலுள்ள மலையுச்சிகள். இவற்றுட் சில ஐரோப்பியப் படைகள் தங்குவதற்காக ஏற்பட்டவை. சில ஐரோப்பியர் கோடை மாதங்களைக் கழிப்பதற்காக ஏற்பட்டவை. மற்றும் சில தேயிலை, காப்பித் தோட்டங்கள் பயிரிடும் ஐரோப்பியர் நிரந்தரமாக வசிப்பதற்காக ஏற்பட்டவை. இவையாவும் கடல் மட்டத்துக்குமேலே சுமார் 5,000-7,000 அடி உயரமான இடங்களில் உள்ளன. ஆகவே இவைகள் கோடைகாலங்களிலும் சமவெளிகளைக் காட்டிலும் குளிர்ச்சியாகவும் தூசின்றியும் இருக்கும். எனினும் மழைகாலங்களில் பலநாட்கள் அல்லது வாரங்கள் ஆகாயத்தில் மேகங்கள் மூடியிருக்கும்; சிலுசிலுப்பான காற்றும் வீசும்; பருவமழைகாலத்தில் பெருமழை பெய்து எங்கும் ஈரம் நிறைந்திருக்கும். ஆதலால் பருவக் காற்று முடிந்தவுடன் செப்டம்பர், அக்டோபர் மாதங்களே வாசத்துக்கேற்ற மாதங்கள். பீ. எம். தி.

தாவரங்கள்

உலகத்திலே மரஞ்செடிகொடிகளில் எண்ணிறந்த இனங்கள் உண்டு. அவை ஆயிரக்கணக்கான சாதிகளாகவும் நூற்றுக்கணக்கான குடும்பங்களாகவும் வகுக்கப்பெற்றுள்ளன. இக்குடும்பங்களில் சற்றேறக்குறைய ஒவ்வொன்றையும் சேர்ந்த இனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. உலகத்தின் பிற பகுதிகளுக்குரிய சாதிகள் இந்தியாவில் காணப்படுவனபோல, இந்தியாவுக்கு ஒத்த பரப்புடையனவாகவோ அல்லது மிகுந்த பரப்புடையனவாகவோ உள்ள வேறெந்த நாட்டிலும் காணப்படுவதில்லை. இந்திய எல்லைக்குள்ளிருக்கும் மரவடையில் 12-15 ஆயிரம் இனங்கள் இருக்கலாம். எனினும் இந்தியாவில் பெருங்காடுகள் இல்லை; புல்வெளிகள் எனச் சொல்லத்தக்கபகுதிகளும் பிற கண்டங்களில் இருப்பவைபோல இல்லை. இந்தியச் சமவெளிகளிலுள்ள இனங்களின் தொகை உண்மையில் மிகமிகக் குறைவே. இருக்கும் இனங்களிலும், நிரம்பப் பெருகி யிருப்பவை பெரும்பாலும் களைகளாகிய இனங்களே. கடலைச் சார்ந்த தாவரங்களும் இந்தியாவில் அருமையாகவே இருக்கின்றன. கடலிலிருந்து சில மைல் வரையிலும், உள்ளே சென்றுள்ள நெய்தல் நிலத்திலே சிறப்பியல்புடையதும், அப்பகுதியிலே எங்கும் பொதுவாகப் பரவியிருப்பதுமான ஒரு தாவரத் தொகுதி காணப்படுவது உண்மையே. ஆயினும் கடலுக்கு முற்றிலும் அண்மையிலுள்ள கடலோரத்திலே அப்படிப் பொதுவாகப் பரவியுள்ளதும், தெளிவாகப் பிரித்துணரத்தக்கதுமான கடலோர மரவடை இந்தியாவிலே இல்லை.

இந்தியத் தாவரங்களைக் கீழ்க்கண்ட தலைப்புக்களில் ஆராயலாம்: 1. இமயத் தாவரங்கள் (பொதுவாக உயர்ந்த இடங்களில் வளர்பவை இதில் சேரும்). 2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள். 3. கிழக்குக் கடற்கரையில் காணப்படும் புதர்க்காடுகள். 4. சிந்து கங்கைத் தாவரங்கள்.5.விந்தியத் தாவரங்கள்.

1. இமயத் தாவரங்கள்: இமயம் என்பது வடமேற்கு எல்லை நாட்டிலுள்ள சிந்து நதியின் பகுதிக்கும் கிழக்கே பிரமபுத்திரா நதியின் பெரிய வளைவுக்கும் இடையேயுள்ள முழுப்பரப்பாகும். இமயத்தொடர் சிந்துவிலிருந்து பிரமபுத்திரா வரை நீளம் சுமார் 1,400 மைல். அகலம் 100-200 மைல்.

சிந்துவின் மேற்குப் பகுதிகளும், பிரமபுத்திராவின் கிழக்கிலுள்ள பகுதிகளும் இப்பிரதேசத்தைச் சேரா.

இமயத்தைக் கிழக்கு, மேற்கு என இரு பகுதிகளாகக் கருதலாம். மேற்கு இமயம், கிழக்கு இமயத்தைக் காட்டிலும் குறுகியது. மேற்குப் பகுதி பெரும்பாலும் இந்தியாவைச் சார்ந்தது; கிழக்குப் பகுதி பெரும்பாலும் திபெத்தைச் சார்ந்தது. இரு கோடிகளைத்தவிர, மற்றப் பாகங்களில் 16,500 அடிக்குக் குறைந்த உயரம் உள்ள இடம் இல்லை. ஆனால், குலுவிற்கும் லாஹுலிற்கும் நடுவே 13,000 அடியும், காச்மீரத்திற்கும் திராஸிற்கும் நடுவே 11,300 அடியும் உள்ள இரண்டு பள்ளமான பகுதிகள் இருக்கின்றன.

இப் பெரிய மலைத்தொடரானது கடல்மட்டம் முதல், என்றும் பனி மூடியிருக்கும் பகுதிவரை உயர்ந்திருக்கிறது. பலதரப்பட்ட தட்பவெப்ப நிலைகள் காணப்படுகின்றன. வெப்ப மண்டல அல்லது உப வெப்ப மண்டல வெப்பநிலை முதல் உச்சக் குளிர்நிலைவரை உடையது. எப்போதும் ஈரப்பதமாக உள்ள பாகங்கள் இருண்ட காடுகளால் நிரம்பியிருக்கின்றன. 12-13 ஆயிரம் அடி உயரம்வரை இந்தக் காடுகள் இருக்கின்றன. அதற்குமேல் பசும்புல்தரைகள் பனி மூடியபகுதியின் அடியாகிய பனிக்கோடு வரை பரவியிருக்கின்றன. எங்கு மழையில்லாத கோடைகாலமும் மிக்க மழையும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் காடுகள் காணப்படுகின்றன. எப்போதும் வறண்டுள்ள மேற்குக் கோடியில் பாழ்நிலமும் பாறையுமே உண்டு. எந்த உயரமான பகுதியிலும் மரங்களே இல்லை.

கிழக்கு இமயம் : சிக்கிம், பூட்டான் நாடுகளும், பிரமபுத்திரா வரையுள்ள பகுதிகளும் கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்தவை. 6,000 அடிக்குமேல் உயரமான இடங்களில் ஊசியிலை மரக் காடுகள் உள்ளன. இவைகளில் முக்கியமான மரங்கள் பைனஸ் லான்ஜிபோலியா, எபியஸ் புரனோமினா, பைசியா வெபியானே, பைனஸ் எக்செல்ஸா, யூ மரம் என்பவை. யூ சாதியில் குப்பிரீசெஸ் பனாப்பிர்ஸ் மரம் 2,000 அடி உயரத்திலும் பயிரிடப்படுகிறது.

இம்மலைத் தொடர்களின் வெப்ப மண்டலங்களில் பெரிய அத்திச்சாதி மரங்களும், டெர்மினேலியா, வாட்டிக்கா, மிர்ட்டேசீ குடும்பத்தைச் சேர்ந்த மரங்களும், லாரெல்ஸ், யூபோர்பியேசி குடும்ப மரங்களும், மந்தாரைச்சாதியாகிய பாஹீனியா, முள்ளிலவுச்சாதியாகிய பாம்பாக்ஸ், அர்ட்டிகேசீ குடும்பத்தைச் சேர்ந்த மோரஸ் சாதியும், பலாமரச் சாதியாகிய ஆர்ட்டோகார் பஸும், பாமே லெகூமினோசீ, அக்கான்தேசீ, சைட்டாமினீ, ஆரேசீ குடும்பங்களைச் சேர்ந்த மரங்களும் செடிகளும் நிறைய வளர்கின்றன. இங்குள்ள மற்ற உறையிலாவிதைத் தாவரங்கள் சைக்கஸ் பெக்டினேட்டாவும், நீட்டம் ஸ்கான்டென்ஸும் ஆகும்.

கிழக்கு இமயப் பிரதேசத்தின் ஈரப்பதம் மேற்கு இமயத்தைவிடக் குறைவானது. இங்கு முக்கியமாக, நேபாளத்தைச் சார்ந்த பகுதிகளில் மழை மிகுதி. தீவிர வறட்சியும் அதிகம். இங்குள்ள காடுகளில் கீழ்க்கண்ட மரங்கள் காணப்படுகின்றன. முருங்கை, புத்ரஞ்சீவா, முள்ளிலவு, வாட்டிக்கா ரொபஸ்ட்டா, காட்டுமா (புக்கன்னானியா), மரிமாங்காய் (ஸ்பான்டியாஸ்), புரசு (பூட்டியா ப்ராண்டோசா, பூட்டியா பார்விபுளோரா), கல்யாண முருங்கை (எரித்ரைனா),வாகை (அல்பிசியா லெபக்), சிவப்பு மந்தாரை (பாஹீனியா பர்பூரியா), இலையாகப்பயன்படும் மந்தாரை (பாஹீனியா வாலியை), வேம்பாடம் (வென்டிலாகோ), கோனோகார்ப்பஸ், கடுக்காய், மருதுசாதி (டெர்மினேலியா), அல்மஸ் இன்டெக்கபோலியா, இன்னும் குறைந்த தட்பவெப்பமுடைய பகுதிகளில் பெரணிகள், ரோடோடெண்டிரான்கள், ரூபியேசீ குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் முதலியன வளர்கின்றன.

மேற்கு இமயம் கிழக்கு இமயத்தைக் காட்டிலும் சராசரி உயரம் குறைவாக இல்லை. ஏனென்றால் 20,000 அடிக்கு மேற்பட்ட பல சிகரங்கள் இங்கு இருக்கின்றன. முக்கியமான தொடரானது கைலாசச் சிகரத்தில் புறப்பட்டு, மேற்கே ஆப்கானிஸ்தானம் வரையிலும், கிழக்கே திபெத்து வரையிலும் பரவியுள்ளது. மேற்கு இமயப் பிரதேசத்தில் மிகப் பெரிய ஏரிகளும், காச்மீரம், ஜம்மு போன்ற அழகிய பள்ளத்தாக்குக்களும் இருக்கின்றன. இப்பிரதேசத்திலே அயன மண்டலத் தாவரங்கள் நிறைந்துள்ளன. பாம்பாக்ஸ், நாக்லியா, லாஜெர்ஸ்ட்ரோமியா, கோனோகார்ப்பஸ், டெர்மினேலியா, ஸ்டெர்க்கூலியா முதலிய மிகுந்த உயரமுள்ள மரங்களும், இலந்தை (சிசிபஸ் ஜுஜுபா), புரசு சரக்கொன்றை (காசியா விஸ்ட்டூலா), கருவேல், காசுக்கட்டி (அக்கேசியா காட்டச்சூ) முதலிய கூரிய முட்களுடைய கரீடான மரங்களும் மிகுதியாகவுள்ளன. நடுநடுவே வக்கணை (டையோஸ்பைராஸ் கார்டிபோலியா), ஆடாதோடை (ஆடாதோடா வாசிக்கா), ஐசோரா காரிலி போலியா போன்றவை காணப்படும். மேற்குக் கோடியில் அக்கேசியா மாடெஸ்ட்டா மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

மேற்கு இமயத்தின் சம தட்பவெப்பப் பகுதிகளில், ஈரம் குறைந்த பாகங்களுக்குரிய ரோடோடெண்டிரான் ஆர்போரியம், ஆண்டுரோமெடா ஓவாலிபோலியா, குவர்க்கஸ் இன்கனா, குவர்க்கஸ் டைலேட்டா முதலிய மரங்களும், பெர்பெரிஸ், ரோஜா, ஸ்பைரீயா, ரூபஸ் போன்ற குற்றுச் செடிகளும் இருக்கின்றன. தாழ்ந்த சரிவுகளிலுள்ள சம தட்பவெப்பப் பள்ளத்தாக்குக்களில் செல்ட்டிஸ், ஆல்னஸ், பாப்யுலஸ் சிலியேட்டா, ப்ரூனஸ் பாடஸ், ஈஸ்க்யுலஸ், ஏசெர் முதலிய மரங்கள் காணப்படும்.

சம தட்பவெப்பப் பாகங்களிலே தட்பவெப்ப நிலையினால் ஏற்படும் விளைவுகள் மழைக்காலத்தில் முளைப்பவையும், சூழ்நிலை மாறுபாடுகளைத் தாங்கும் வலிமையுள்ளவையுமான ஒருபருவச் சிறுசெடிகளில் மிக நன்றாகத் தெரிகின்றன. சைட்டாயினீ குடும்பத்தைச் சேர்ந்த செடிகளும், தொற்றுச்செடிகளாயும் தரையில் வாழ்பவையுமான ஆர்க்கிடுகளும், ஆரேசீ, சிர்ட்டாண்டிரேசீ, மெலாஸ்டொமேசீ, பெகோனியேசீ முதலிய குடும்பங்களைச் சேர்ந்த வகைகளும் மிகுதியாக இருக்கின்றன.

8,000 அடிக்கும் 12,000 அடிக்கும் இடையே, இமயத்தின் கிழக்கு மேற்குப் பகுதிகளில் ஊசியிலை மரச்சாதிகளே முக்கியமாக வளர்பவை.

2. மேற்குக் கடற்கரைத் தாவரங்கள்: தென் கன்னடம், மலையாளம், நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி முதலிய மாவட்டங்களிலும், திருவிதாங்கூர்-கொச்சி இராச்சியத்திலும் உள்ள கடற்கரைப் பிரதேசம்,சு.6,000 அடிவரை உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பாகமும் இப்பகுதியைச் சேர்ந்தவை. இப்பகுதியில் காணப்படும் தாவரங்கள் பல வேறுபாடுகள் உள்ளவை; பல இனங்களானவை. இந்தப் பகுதியிலே உயரத்துக்கும், நோக்கும் திக்குக்கும், அட்சரேகைக்கும் ஏற்பவும், இவற்றின் பயனாக உண்டாகும் மழையின் அளவுக்கும், வெப்ப நிலைக்கும் ஏற்பவும், பல உட்பகுதிகள் இயற்கையிலேயே அமைந்திருக்கின்றன.

இங்குக் கடற்கரை அருகில் ஹோப்பியா பார்விபுளோரா, பயினி அல்லது குங்கிலியம் (வாட்டீரியா இண்டிக்கா), இருள் (க்சைலியா க்சைலோக்கார்ப்பா) காணப்படுகின்றன. கடற்கரையைவிட்டுத் தூரத்தில் ஈரமாக உள்ள இலையுதிர் காடுகளில், தேக்கு (டெக்ட் டோனா கிராண்டிஸ்), நூக்கு அல்லது ஈட்டி (டால் பெர்ஜியா லாட்டி போலியா), வேங்கை (டெரொக் கார்ப்பஸ் மார்சூப்பியம்), கருமருதம் (டெர்மினேலியா கிரெனுலேட்டா), நந்தி அல்லது வெண்தேக்கு (லாஜெர்ஸ் டிரோமியா லான்சியோலேட்டா) முதலிய மரங்கள் மிகுதியாக வளர்கின்றன. மலைகளின் மேலே உயரத்திலே இலையுதிரா இனங்களைச் சேர்ந்த புன்னைக் குடும்பம் (கட்டிபெரீ,) நாவல் குடும்பம் (மிர்ட்டேசீ), நுணாக் குடும்பம் (ரூபியேசீ), ஆடாதோடைக் குடும்பம் (அக்காந்தேசி), ஆமணக்குக் குடும்பம் (யூபோர்பியேசீ ஆர்க்கிடேசீ), இஞ்சி, வாழைக் குடும்பம் (சைட்டா மினீ) முதலிய குடும்பங்களில் தாவரங்கள் காணப்படுகின்றன. இப் பகுதியில் ஓடைகளின் ஓரங்களில் நாணல் போன்ற மூங்கில் காடுகளும், ஆக்லாண்டிரா திருவாங்கோரிக்கா மரங்களும், பெரணிச் செடிகளும், பாசிகளும், பெரணி மரங்களும் அதிகமாக வளர்ந்து காணப்படுகின்றன.

இந்த உட்பகுதியில்தான் இந்தியாவிற்கு உரியவையான ஒரே ஊசியிலை மரமும் (போடோகார்ப்பஸ் லாட்டிபோலியா), கம்பாசிட்டீ குடும்பத்தைச் சேர்ந்த மரமாக வளரும் இரண்டு இனங்களாகிய வெர்னோனியா மொனாசிஸ், வெர்னோனியா திருவாங்கோரிக்கா என்பவைகளும் வளர்கின்றன.

நீலகிரி, பழநி, ஆனைமலை, திருவிதாங்கூர், திருநெல்வேலியிலுள்ள தொடரிலும், 6,000 அடிக்கு மேற்பட்ட உயரமான பாகங்களிலே ஆல்ப்பைன் பிரதேசம் காணப்படுகிறது. இந்தப் பகுதிகளில் சிறிய ஆல்ப்பைன் செடிகளும் புதர்களும் இருக்கின்றன. அவற்றுள் பரோகீட்டஸ் கம்யூனிஸ், ஹைப்பெரிக்கம் மைசோரென்ஸி, காசித்தும்பை சாதியைச் சேர்ந்த பல இனங்களும், ஓல்டென்லாண்டியா, அனபாலிஸ், எக்சாக்கம், சோனரிலா. தரையில்வாழும் ஆர்க்கிடுகள்,அரிசீமா இனங்கள், எரியோக்காலான் இனங்கள் முதலியவைகளும் காணப்படுகின்றன. மலை இடுக்குக்களிலுள்ள சோலைகளில் ரோடோடெண்ட்ரான் நீலகிரிக்கம், சிசீஜியம் ஆர்னோட்டியானம், மைக்ரோட்டிராப்பிஸ், ரப்பேனே வைட்டியானா, உருத்திராட்ச மரம் (எலியோகார்ப்பஸ் பெரூஜீனெஸ்), டாப்னோபில்லம் கிளாசியஸ் முதலிய இலையுதிரா மர இனங்கள் வளர்கின்றன. மேலே கூறப்பட்டுள்ள சோலைகளின் ஓரங்களில் குறிஞ்சி (ஸ்ட்ரோபிலான் தஸ் குன்தியானஸ்), கால்தீரியா பிராக்ரன்டிஸ்ஸிமா, ரூபஸ் இனங்கள் முதலியன காணப்படுகின்றன.

கடற்கரை ஓரங்களிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களில் கண்டல் (ஆவிசென்னியா அபிஷினாலிஸ்), லூம்னிட்சேரா ராசிமோசா, புருகுயீரா இனங்கள், ரைசோ போரா இனங்கள், உப்புத் தாவர வகையைச் சேர்ந்த கீனோப்போடியேசீ இனங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

வறண்ட கடற்கரை மணற் பகுதிகளில் சவுக்கு (சுயரீனா எக்விசெட்டிபோலியா) அதிகமாகப் பயிரிடப்படுகின்றது. ஆனால் இயற்கையாக ஹைட்ரோ பில்லாக்ஸ் மாரிட்டைமா, அடப்பங்கொடி (ஐப்பொ மீயா பைலோபா), சீசாமம் ப்ராஸ்ட்ரேட்டம், இராவணன் மீசைப் புல் (ஸ்பைனி பெக்ஸ் ஸ்குவாரோசஸ்), ஆர்னோட்டியானம் டாப்னோபில்லம் முதலிய பூண்டுகளும் குற்று மரங்களும் நிறைய உள்ளன.

3. கிழக்குக் கடற்கரைப் புதர்க் காடுகள்: கிழக்குக் கடற்கரை உலர்ந்த பகுதி. இதற்கு வடகிழக்குப் பருவக் காற்றுத்தான் மழை தருகிறது. கிழக்கு மலைத்தொடர் கோதாவரியிலிருந்து கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. இந்தத் தொடர் தாழ்வாகவும், நடுநடுவே நிரம்பத் தொடர்பற்றும் உள்ளது. ஆகையினால், 3,000 அடிக்கு மேற்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் அடர்த்தியான இலையுதிர் காடுகள் உள்ளன. மற்ற இடங்களிலெல்லாம் அடர்த்தியில்லாத புதர்க்காடுகள் காணப்படுகின்றன.

மொத்தமாகத் தாவர வளத்தைப் பற்றி ஆராய்கையில் கருநாடகப் பகுதியிலுள்ள மரவடையில் இனவளமுமில்லை; வேறுபாடுகளுமில்லை. ஏனென்றால், இங்கு வடகிழக்குப் பருவக்காற்றுக் காலங்களைத் தவிர மற்றக் காலங்கள் எல்லாம் உலர்ந்து வறண்டனவாகவே உள்ளன. ஆகையினால் ஈரப்பதம் மிகுந்த இடங்களில் வளரும் தாவரங்கள் இங்குக் கொஞ்சமும் கிடையா. உயரமான மலைச் சரிவுகளில் தவிர மற்றெங்கும் காடுகள் இல்லை. சமவெளிகளில் தொரட்டி, ஆதொண்டை, வீழி முதலிய கப்பாரிடேசீ, இலந்தை, சூரை முதலிய ராம்னேசீ, காரை போன்ற முட்களுள்ள ரூபியேசீ முதலிய குடும்பங்களின் இனங்களும், அழிஞ்சில் (அலான்ஜியம்), அசீமா, களா (காரிஸ்ஸா), எருக்கு, எரிஷியா பக்சிபுளோரா, குமிழ் (மிலைனா), சால்வடோரா, ஆன்டி டெஸ்மா, பைசோனியா முதலிய குற்றுத் தாவரங்களும் நிறைய உள்ளன. பனை வகைகளுள் பிரம்பு (கலாமஸ்), ஈச்சமரம் (பீனிக்ஸ்) ஆகியவை தாமே வளர்கின்றன. தென்னை (கோக்கோஸ்), பனை (பொராசஸ்), பாக்கு (அரீக்கா) பயிரிடப்படுகின்றன.

கருநாடகப் பகுதியிலுள்ள மலைகளில் காணப்படும் தாவரங்களில் சிறப்பாகக் குறிக்கத்தக்க பண்புடையது யாதும் இல்லை. இவை மிகத் தாழ்ந்த குன்றுகளேயாதலால் இங்குத் தட்பவெப்ப நிலை சமவெளிகளைவிட அதிகமாக மாறுதல் இல்லாமல் இருக்கின்றது. ஆதலால் தாவர வளர்ச்சியும் அதிகமாக மாறுதலடையவில்லை. இவை பெரும்பாலும் புல்லும் மூங்கிற் புதரும் போர்த்துள்ளன. மலை இடுக்குக்களிலே மட்டும் இலையுதிர் மரக் காட்டைப் போன்ற சிறு காடுகள் உண்டு.

மேற்குக் கடற்கரைப் பகுதியைப் போலவே, கிழக்குக் கடற்கரையிலுள்ள ஆறுகளின் கழிமுகங்களிலும், கன்னியாகுமரியின் அருகிலுள்ள பவளத் தீவுகளிலும் மாங்குரோவ் சதுப்புத் தாவரங்களைக் காணலாம்.

4. சிந்து -கங்கைத் தாவரங்கள்: இவை இந்த இரண்டுபெரு நதிகளின் வடிநிலங்களிலுள்ள மரவடையாகும். சிந்துப் பள்ளத்தாக்கு, சிந்துவிலிருந்து இமயம் வரைக்கும், ஆப்கானிஸ்தானத்திலிருந்து கங்கைச் சமவெளியின் எல்லை வரைக்கும் உள்ள பகுதி. இதில் பெரும்பாலும் பஞ்சாப் அடங்கும். சிலசில இடங்களில் சிந்துவின் உபாதிகளுக்கு இடையிலுள்ள 1,000 அடி உயரத்திற்கு மேற்படாத மலைத்தொடர்களைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் தட்பவெப்ப நிலை வறண்டதாகவே உள்ளது.

பஞ்சாபில் தாவர வளம் தட்பவெப்ப நிலைக்கேற்றவாறு மாறுகிறது. இந்த மாகாணத்தின் தெற்கே, மழையின்மையால் அங்குச் சிந்துவில் காணப்படும் தாவரங்களே உள்ளன. வடக்கே போகப்போக வெப்ப நிலை குறைவதனால், அங்கே உள்ள தாவரங்கள் மத்தியதரைக் கடற் பிரதேசத்திற்குரிய தாவரங்களைப் போல் காணப்படுகின்றன. ஆப்கானிஸ்தானத்தில் இதை நன்றாகக் காணலாம். இவைகளில் முக்கியமானவை குளிர்காலத்தில் பூக்கும் ஒருபருவத் தாவரங்கள். உதாரணம் : கோல்டுபக்கியா லீவிகேட்டா, பிரான்கீனியா ஹீலியோஸ்கோப்பியா, கார்த்தமஸ் ஆக்சியக்காந்தா என்னும் குசும்பாச் சாதி, வெரோனிக்கா அக்ரெஸ்டிஸ், போவா அன்னுவா. நதிகளின் ஓரங்களில் கப்பாரிஸ் அபில்லா, கருவேல், வெள்வேல் (அக்கேசியா லூக்கோபிளியா), வன்னி (பிராசாப்பிஸ் ஸ்பைசிஜெரா), சிசிபஸ் லோட்டஸ், சால்வடோரா இண்டிகா,காக்குலஸ் இனங்கள், கோடைச் சவுக்கு (தாமாரிக்ஸ் காலிக்கா) முதலிய குறுமரக் காடுகள் உள்ளன.

இமயமலையின் அருகே தட்பவெப்ப நிலை ஈரமாக இருக்கிறது. ஆகையினால் தாவரங்களும் மாறுபடுகின்றன. பாலைத் தாவரங்கள் மறைந்து கங்கைச் சமவெளியின் தாவரங்கள் காண்கின்றன. அப்படியிருந்தபோதிலும், ஜீலம் நதிக்கு மேற்கில் தாவரங்கள் மிகவும் வேறுபட்டுள்ளன. அக்கேசியா மாடெஸ்ட்டா, முள்ளுள்ள ஒருவகை செலாஸ்டிரஸ் மரங்கள் உள்ள காடுகள் நிரம்பியிருக்கின்றன. குன்றுகளின் தாழ்ந்த பகுதிகளில் ரஜியா ஸ்டிரிக்டா தோதோனியா, ரெப்டோனியா, டெல்பீனியம் மரங்களும், காரியோபில் லேசீ, கிராமினீ, சிக்கோர், லேபியேட்டீ, போராஜினி முதலியகுடும்ப இனங்களும்நிறையக்காணப்படுகின்றன.

கங்கைச் சமவெளியின் தாவரம் பூமியின் ஈரத்திற்கும், மழையின் அளவிற்கும் தகுந்தாற்போல் மாறுபாடடைகிறது. மழை ஆண்டுக்கு 20-50 அங்குலம் வரை வேறுபடும். மலையின் அடிவாரத்தைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் புதர்க் காடுகள் இருக்கின்றன. அப்புதர்க்காடுகளில் புரசு பிளாகோர்ஷியா செப்பியேரியா, கப்பாரிஸ் செப்பியேரியா, இலந்தை சூரை (சிசிபஸ் ஈனோபிலியா, ஆடாதோடை, பெருங்களா (காரிஸ்ஸா எடூலிஸ்) முதலிய குற்று மரங்கள் நிறைய உள்ளன. போகப் போகத் தட்பவெப்ப நிலை வறட்சியாக இருப்பதால், தாவர வளமும் பஞ்சாபிலுள்ளது போல் ஆகிறது. இங்குச் சாதாரணமாக டெக்கோமா அண்டுலேட்டா. பெர்த்கிளாட்டியா லான்சியோலேட்டா மரங்கள் வளர்கின்றன.

இமயமலை அடிவாரத்தில் எப்பொழுதும் நிரம்ப அகலமான காடு இருக்கின்றது. இதைப்பற்றி மேலேசொல்லியிருக்கிறது.

5. விந்தியத் தாவரங்கள்: விந்திய மலைகளில் இணையான இரண்டு மவைத்தொடர்கள் மத்தியில் 4,500 அடி உயரம் உள்ள உமர்க்கந்து என்ற மேட்டுச் சமவெளியில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மற்ற இடங்களில் மேற்கே பாயும் நருமதை, கிழக்கே செல்லும் சோணை ஆறுகளால் இந்த மலைத்தொடர்கள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தென்பகுதி உயரமாக இருந்த போதிலும் 3,000 அடிக்கு மேல் உயரம் இல்லை.

மலைச்சரிவுகளில் உள்ள காடுகள் மிக அடர்ந்தவை. ஆயினும் மேற்குக் கடற்கரைக் காடுகளைப் போலச் செழிப்பாகவோ, நிறைய வேறுபாடுகள் உடையனவாகவோ இல்லை. இங்கு இஞ்சிக் குடும்ப இனங்கள், அரெங்கா சக்கரிபெரா, கூந்தற்பனை (காரியோட்டா யூரென்ஸ்,) டில்லீனியா இந்திக்கா, லீயா, மகிழ் சாதி (மிமுசாப்ஸ்), இலுப்பைச் சாதி (பாசியா), ராக்ஸ் பர்ஜியா முதலிய வகைகள் காணப்படுகின்றன. உள் நாட்டிலுள்ள மலைக் காடுகள் வறண்டவை. அவற்றின் இடையிடையே அடர்த்தியில்லாத பள்ளத்தாக்குக்கள் உண்டு. இந்தப் பள்ளத்தாக்குக்களில் பயிர் விளைவிக்கப்படுகிறது. இந்த மலைகளின் வடக்கு, கிழக்குச் சரிவுகளில் உள்ள காடுகள் கிழக்கு மலைத்தொடரில் உள்ளவற்றைப்போல இருக்கின்றன. சந்தனவேம்பு அல்லது தேவதாரம் (செட்ரெலா டூனா), வெள்ளைப்பயின் (வாட்டிக்கா ரொபஸ்ட்டா), காட்டுமா அல்லது சாரை (புக்கனானியா), சேங்கொட்டை (செமகார்ப்பஸ் அனக்கார்டியம்), புரசு (பூட்டியா பார்விபுளோரா) முதலிய வகைகள் மிகுதியாகவும் வடக்குப் பாகங்களில் தணக்கு அல்லது கொங்கிலவு (காக்லோஸ்பெர்மம்), பஞ்சு (காசிப்பியம்), சிக்ரேசியா டாபுளாரிஸ், ஸ்வீடீட்னியா பெப்ரிபூஜா, பாஸ்வெல்லியா தூரிபெரா, ஹார்ட் விக்கியாபைனேட்டா, பாசியாலாட்டி போலியாமுதலிய வகைகள் ஓரளவிலும் காணப்படுகின்றன. பீனிக்ஸ் அக்காலிஸ் என்ற ஈச்சமரம் தவிர வேறு பனைவகைகள் இந்தப் பகுதிக்கு இயற்கையாக உரியவையல்ல. பொ. து. வ.

விலங்குகள்

இந்தியாவில் பிராணிகளுக்குக் குறைவில்லை. அதிகமாகவும் நானாவிதமாகவும், நாட்டுக்கு நாடு வேறுபட்டும் இருக்கின்றன. மலையாளக் கரையில் பெருங் காடுகள் அடர்ந்து, உயர்ந்த மலைத்தொடர் இருப்பதனாலும், தட்ப நிலையாக இருப்பதனாலும் பிராணி வருக்கங்கள் மிகுந்திருக்கின்றன. அதிகமான வகைகள் இருப்பதேயன்றி. அம்மலைத் தொடருக்குக் கிழக்கேயுள்ள நாட்டில் காணாத வகைகள் பலவும் அங்கு உண்டு. இது போலவே அஸ்ஸாம், பர்மா முதலிய நாடுகளிலும் அடர்ந்த காடுகளும் மழைப் பெருக்கமும் இருப்பதால் அங்கும் பிராணி வகைகள் மிகுந்திருக்கின்றன. ராஜபுதனம் முதலிய பாலைவன நாடுகளில் இவை குறைந்து காணப்படுகின்றன. இந்தியாவில் நாட்டுக்கு நாடு தட்பவெப்பநிலை மாறுபட்டிருப்பதால், பிராணி வகைகளும் அந்நிலைக்கு ஏற்றவாறு மாறுபட்டிருக்கின்றன.

உயிரியலறிஞர் இந்தியாவுடன் பர்மாவையும் இலங்கைத் தீவையும் ஒன்றாகச் சேர்த்து, அம் முழுப் பரப்பையும் இந்தியப் பிராந்தியம் என்று கூறுவது வழக்கம். இந் நாடுகள் மூன்றும் அடங்கிய இந்தியப் பிராந்தியத்திலே கீழ்க்கண்டவாறு பிராணிகளின் பட்டி குறிக்கப்பட்டிருக்கின்றது.

சாதிகள் இனங்கள்
பாலூட்டிகள் சுமார் 120 சுமார் 420
பறவைகள் ,, 600 ,, 1,700
ஊர்வன ,, 150 ,, 550
தவளை வகுப்பு ,, 30 ,, 140
மீன்கள் ,, 380 ,, 1,500

பாலூட்டிகள் (Mammals) : உடல் அமைப்பில் மனிதனுக்கும் குரங்கு ஜாதிகளுக்கும் சில ஒற்றுமைகளைக் காண்கிறோம். வாலில்லன, வாலுள்ளன என்னும் இருவகைக் குரங்குகளில், ஊராங் ஊட்டான், சிம்பன்சீ என்னும் வாலில்லாக் குரங்குகள் இந்திய நாட்டில் தற்காலத்தில் இல்லை. ஆனால் மிகப் பழைய காலங்களில் இமயமலை அடிவாரத்திலே அவை வாழ்ந்திருந்தன என்பதற்கு அறிகுறியாக அப்பிராணிகளின் எலும்புக் கூட்டை ஒத்துள்ள பாசில்கள் வடமேற்கு இந்தியாவில் கிடைத்துள்ளன. அதுவுமன்றி இன்னொரு வகையான கிப்பன் என்னும் வாலில்லாக் குரங்கு இன்றும் அஸ்ஸாம், பர்மா காடுகளில் வசிக்கின்றது. இது ஊலூகு, ஊகம் எனப்படும். வாலுள்ள குரங்குகளில் பலவிதங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றிற்குக் கன்னத்தில் தீனியை அடக்கிவைத்துக் கொள்வதற்குப் பைகள் இருக்கின்றன. மற்றவற்றிற்கு இந்தப் பை இல்லை. முதல் வகுப்புக் குரங்குகளில் பலவகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் மூன்று இனங்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுக்குத் தலைமயிர் தொப்பி போன்று உச்சியிலிருந்து சுற்றிலும் ஆரையொழுங்கில் அமைந்திருக்கும். இவ்வினக் குரங்கைத்தான் சாதாரணமாக ஆட்டக்காரர்கள் தங்களுடன் இழுத்துச்சென்று, குழந்தைகளுக்கு ஆட்டங்காட்டிப் பிழைக்கிறார்கள். இந்த இனக் குரங்கைப் பழக்கிப் பல வேலைகளைச் செய்யக் கற்பிக்கலாம். இது மக்கள் நடமாடுகின்ற இடங்களிலே கும்பலாக மரங்களின்மேல் வசிக்கின்றது. மலையாளப் பிரதேசத்தில் கருங்குரங்கு என்பதைப் பார்க்கலாம். இதற்கு உடலில் கருமயிரும், தாடியில் சாம்பல் நிற மயிரும் உண்டு. வால் நுனியில் மயிர்க்குச்சுத் தொங்கும். மயிர்க்குச்சுத் தொங்குவதால் இதைச் சிங்கவால் குரங்கு என்றும் சொல்வார்கள். மூன்றாவது இனம் இந்தியா முழுவதிலும் காணப்படுகிறது. இது பழுப்பு நிறமாக இருக்கும். இதற்குத் தாடி கிடையாது.

கன்னப்பை இல்லாத குரங்குகளில் நான்கு இனங்கள் காணப்படுகின்றன. இவைகளுக்கு வால் நீண்டிருக்கும். ஒன்று அனுமான் குரங்கு. இதுவே முசு எனப்படுவது. இதை வட இந்தியாவில் சாதாரணமாகக் காணலாம்; தென்னிந்தியாவில் குடகிலும், மைசூரிலும், ராயலசீமை ஜில்லாக்கள் சிலவற்றிலும் வசிக்கின்றது. கைகளும், பாதங்களும் கறுத்திருக்கும். முகத்தைச் சுற்றி நீண்ட மயிர்களும் தாடியும் இருக்கும். மைசூர், வயநாடு பிரதேசங்களிலும், வடக்கே நெல்லூர் வரையிலும், இந்தக் குரங்கைப்போன்ற மற்றோரினம் காணப்படுகிறது. ஆனால் இதற்குக் காலும் கையும் கறுத்திரா. மயிர்ச் செண்டு தலையைச் சுற்றி இருக்காது. அனுமான் குரங்கைப்போன்ற மற்றோரினத்தை மலையாளப் பிரதேசத்தில் காணலாம் ; கைகளும் பாதங்களும் கறுத்திருக்கும்; உடம்பு நிறமும் கொஞ்சம் கறுத்துத் தோன்றும். மற்றோரினமும் மலையாள நாட்டில் காணலாம். அது மலையுச்சிகளில் வசிக்கிறது. இதனைப் பழநி, நீலகிரிகளிலும் காணலாம்.

இவற்றிற்கு அடுத்தபடியாகத் தேவாங்குகளைக் காண்கிறோம். இவைகள் சிறியவாய் மரக்கிளைகளுக்கிடையே வாசம் செய்யும். தமிழ்ப் பிரதேசங்களில் இவற்றுள் ஓரினத்தைக் காணலாம். இவை சில சமயங்களில் விற்பனைக்கு வரும். தமிழ் மருத்துவத்தில் சில கண் மருந்துகள் செய்வதற்குத் தேவாங்கின்கண் உபயோகப்படுவதாகக் கூறப்படுகிறது. மிகவும் மெதுவாய்க் கிளைகளைப் பிடித்துக்கொண்டு நடக்கும். மற்றோரினம் குடகுநாடு, மலையாளப் பிரதேசங்களில் காணப்படும்.

வௌவால் பறக்கும் பிராணியாயினும் பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தது. இதுவும் குட்டி போட்டுப் பால் ஊட்டுகிறது. இதில் பல இனங்கள் இருக்கின்றன. பெரிய இனங்களில் ஒன்று பழந்தின்னி வௌவால் என்பது. இதனை ஆல், அரசு முதலிய மரங்களில் கூட்டமாகத் தலை கீழாகத் தொங்கிக்கொண்டிருக்கக் காணலாம். இது இரவில்தான் இரை தேடும். ஓர் இனம் பழைய கட்டடங்களிலும் மனிதப் புழக்கமற்ற கோயில்களிலும் காணலாம். மற்றோரினம் வாழை மரத்துக் குருத்திலைகளில் வசிக்கிறது. இதன் நிறமும் அழகாக இருக்கும்; குருத்திலையை ஒத்திருக்கும். சில இனங்களுக்கு முகத்தின் தோல் இலைகள்போல் மடிப்பாக (மூக்கு இலைகள் - Nose leaves) மூக்குக்கு இரு பக்கத்திலும் இருக்கும். சில இனங்கள் மாமிசத்தை உட்கொள்ளும்; தவளை, குருவி முதலியவற்றைப் பிடித்துத் தின்னும். ஒரு சிறிய இனம் வீடுகளில் சந்து பொந்துகளில் வசிக்கும்.

பூச்சிதின்னி (Insectivora) என்னும் ஒரு வரிசை பாலூட்டி வகுப்பில் உண்டு. அது சிறிய வரிசை. அதைச் சேர்ந்தவை இந்தியாவில் ஏழெட்டு இனங்கள் தான் இருக்கின்றன. மூஞ்சுறு, முள்ளெலி (Hedge - hog), மரமூஞ்சுறு (Tree-shrew) என்பவை இவ்வரிசையைச் சேர்ந்தவை. இவை சிறிய விலங்குகள்.

கொறிப்பன (Rodent)வற்றுள் அநேக இனங்கள் இருக்கின்றன. பல் இன அணில்கள், எலிகள், சுண்டெலிகள், பெருச்சாளிகள், முள்ளம்பன்றிகள், முயல்கள் இருக்கின்றன. மலையாளப் பிரதேசத்தில் பறக்கும் அணில்களில் இரண்டு இனங்கள் இருக்கின்றன. இவை தங்கள் இருபக்கத்திலும் முன் பின் கால்களுக்கு இடையிலுள்ள தோல் மடிப்புக்களாகிய இறக்கைகளால் ஒரு மரத்தினின்று எட்டவுள்ள மற்றொரு மரத்திற்குத் தாவிப் பறந்து செல்கின்றன. இவ்வகையான அணில்கள் இலங்கையிலும் வசிக்கின்றன. முதுகில் மூன்று வரிகள் அமைந்த அணில்களை வீட்டிலும் தோட்டங்களிலும் சாதாரணமாகக் காண்கிறோம். மலைப்பிரதேசங்களில் பெரிய அணில் இனங்கள் காணப்படுகின்றன. எலிகளில் இருபது இனங்கள் இருக்கின்றன. எலிவகைகளில் சிறியவற்றைச் சுண்டெலிகள் என்றும் பெரியவற்றைச் பெருச்சாளிகள் என்றும் கூறுகிறோம். எலிகளும் முள்ளம்பன்றிகளும் முயல்களும்கூட இரவில் இரை தேடுகின்றன.

புலாலுண்ணி (Carnivora) களில் பல வகைகள் இருக்கின்றன. சிங்கம் தென் இந்தியாவில் வசிப்பதில்லை. தற்காலத்தில் கத்தியவார் பிரதேசத்தில் காணப்படுகின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் பஞ்சாப், ராஜபுதனம் முதலிய நாடுகளில் வசித்திருந்ததாகக் கூறப்படுகிறது. சிங்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து வருகின்றன. பாதுகாவா விட்டால் கம்பீரமான இந்த விலங்கினம் இந்தியாவில் இல்லாமலே போய்விடும்.

புலி இந்தியக் காடுகளில் சாதாரணமாக வாழ்கின்றது. உடலின் பக்கங்களில் அழகான வரிப்பட்டையுள்ளது. பார்வைக்கு அழகுடையது. இதன் நகங்கள் கூர்மையானவை. இது மரஞ் செடிகள் அடர்ந்த காடுகளில் மான், ஆடு, பன்றி இவைகளை அடித்துத் தின்று வாழ்கின்றது. செடிகளிடையே இருக்கும்பொழுது இதைக் கண்டுபிடிப்பது எளிதன்று. உடம்பின்மேல் இருக்கும் பட்டைகள் சூரிய வெளிச்சமும் மஞ்சளும் கறுப்புமான இலைக் கிளைகளின் நிழலும்போல் காணும். காடுகளில் மற்றப் பிராணிகளைத் தேடியோடிப் பிடித்துத் தின்ன முடியாத புலிகள், மக்கள் நடமாட்டமுள்ள கிராமங்களை அடைந்து, ஆடு மாடுகளையும் மனிதர்களையும் அடித்துக்கொண்டு போகும். இவை மனிதனுக்கு ஆபத்தானவை.

சிறுத்தைப்புலி புலியைவிட மிகவும் சாதாரணமாகக் காணப்படும். தோலில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சில சமயங்களில் முழுவதுங் கருநிறமான சிறுத்தையையுங் காணலாம். சிலர் சிறுத்தையை மான் பிடிக்க வளர்ப்பதுண்டு. இரண்டு வகைப் புனுகுப் பூனைகள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவற்றின் பின்பாகத்தில் சில சுரப்பிகள் இருக்கின்றன. இச் சுரப்பிகளிலிருந்து புனுகு கொழுப்புப் போன்ற மஞ்சள் பொருளாக வெளிப்படும். இதைப் பூனை அடைக்கப்பட்டிருக்கும் கூண்டின் கம்பி முதலியவற்றில் தேய்க்கும். இதைச் சேர்த்து வியாபாரிகள் விற்பார்கள். மரநாய் தென்னிந்தியாவில் அகப்படுகிறது. இது நாய் வகையைச் சேர்ந்ததன்று; புனுகுப் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தது.

கீரிப்பிள்ளைகளில் நான்கினங்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. இவைகளுக்கும் பாம்புக்கும் பகைமை என்பது யாவருக்கும் தெரிந்ததே. கழுதைப்புலிகளை ஓநாய்கள் இல்லாத இடங்களில் காணலாம். ஓநாயைப் போல இது ஆடுமாடுகளுக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்தானது. புலிப்பட்டைகள்போல் உடம்பில் இருப்பதால் இதற்குக் கழுதைப்புலி என்ற பெயர் வந்தது போலும். ஆனால் இது கழுதை வகையைச் சேர்ந்ததன்று. கழுதையும் குதிரையும் பயிருண்ணிக் கூட்டத்தைச் சேர்ந்தவை. புலிப்பட்டைகளுக்குப் பதிலாகப் புள்ளி போட்ட கழுதைப்புலி கர்நூல் ஜில்லாவில் சில குகைகளில் காணப்பட்ட கற்புதையல்களால் தென்னிந்தியாவில் முற்காலத்தில் இருந்திருக்கின்றது எனத்தெரியவருகிறது. புள்ளிக் கழுதைப் புலி (Spotted hyaena) இக்காலத்தில் ஆப்பிரிக்காக் கண்டத்தில் காணப்படுகின்றது. இதுபோன்ற பல குறிகளால் முன்னாளில் ஆப்பிரிக்காவும் இலங்கையும் தென்னிந்தியாவோடு நிலத்தொடர்புற்று இருந்திருக்கவேண்டும். எனவும் பின்னால் இத் தொடர்புப் பகுதிகள் கடலில் மூழ்கி ஆப்பிரிக்கா தனிக் கண்டமாகவும் இலங்கைதனி தீவாகவும் ஆயின எனவும் ஊகிக்கப்படுகிறது.

நாய் வகைகளில் ஓநாய், நரி, குள்ளநரி, செந்நாய் இவைகள் தென்னிந்தியாவில் உண்டு. புலாலுண்ணிகளில், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலைகளில் மரங்களில் வசிக்கும் மார்ட்டென் (Marten)களும், பூமியில் பொந்துகளில் வசிக்கும் ராட்டெல் (Ratel)களும், ஆறுகளில் மீன்பிடித்துத் தின்னும் நீர்நாய் (Otter) களும் மற்றவைகளும் சேரும். தடித்த உடம்பும், நீண்ட வலிமை பொருந்திய வாலும், நீந்துவதற்கேற்ற சவ்வு பொதிந்த விரல்களும் உள்ள நீர்நாயைச் சென்னை மாகாணத்தில் பலவிடங்களில் காணலாம். ராட்டெலின் முதுகு, வெள்ளை மயிர்களால் மூடப்பட்டு இருக்கும். கரடிகளில் இரண்டு வகைகள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் காணும் கறுப்புக்கரடி இந்தியா முழுவதும் பாறை மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றது. இக்கரடியைப் பழக்கலாம். இது மனிதனுடன் வாழும். வடநாட்டிலே, பஞ்சாபிலிருந்து அஸ்ஸாம் வரையில் வேறொரு கரடி இனம் காணப்படுகிறது.

குளம்புள்ள பிராணிகளில் இரண்டுவித காட்டெருமைகள் இருக்கின்றன. ஒன்றுக்குக் கொம்பு குறுக்கு வெட்டில் முக்கோணமாக இருக்கும். அதை எருமை என்பார்கள். தெலுங்கு நாடுகளில் காணலாம். மற்றொன்றில் கொம்பு குறுக்குவெட்டில் வட்டமா யிருக்கும். இதைக் காட்டெருமை (Bison, Gaur) என்பார்கள். இது மேற்குத் தொடர்ச்சி சாதாரணமாக உண்டு. ஆடுகளில் வரையாட்டின் (Nilgiri Wild Goat, Hemitragus) கொம்புகள் முதுகு பக்கம் வளைந்திருக்கும். இந்தியாவில் காணும் ஐந்துவகைக் காட்டாடுகளில் இவ்வொன்றுதான் தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கங்களில் இருக்கிறது. மற்றவை இமயமலையில் காணப்படுகின்றன.

இரலைகளை (Antelope) நாம் சாதாரணமாக மான்கள் எனக் கூறுகின்றோம். ஆனால் இவை உண்மையில் மான்களுக்கும் ஆடுகளுக்கும் நடுத்தரமான உடல் அமைப்பு உள்ளவை. இந்த இரலைகள் இந்தியாவிலேதான் காணப்படுகின்றன. இவற்றில் நான்கு வகைகளுண்டு. மூன்று வகைகள் தென்னிந்தியாவிலும் காணப்படுகின்றன. வடநாட்டு மொழிகளில் நீல்கை (Nilgai) என்றும், தமிழில் மான் போத்து என்றும் வழங்குவது ஒன்று. மற்றொன்றிற்கு நான்கு கொம்புகள், முன் இரண்டு சிறியவும், பின் இரண்டு பெரியவுமாக இருக்கின்றன. இதற்குத் தெலுங்கில் கொண்ட- கொர்ரி என்று பெயர். மூன்றாவதை வேலி மான் (Black Buck) என்று சொல்லுவார்கள். வேலி மானின் கொம்பு முறுக்கியும், எடுப்பாயும், பள்ளமாயும் இருக்கும். திரி மருப்பு இரலை என்பது இதுவே. இம்மூன்றுவகை இரலைகளில் பெண்ணுக்குக் கொம்புகள் வளருவதில்லை. நவ்வி (Gazelle) என்று சொல்லப்படுகிற வகையில் இந்தியாவில் மூன்று இனங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான் தென்னிந்தியாவில் இருக்கிறது. மைசூர், அனந்தப்பூர், கர்நூல் ஜில்லாக்களில் அகப்படுகின்றது. இதில் பெண்ணுக்கும் சிறிய கொம்புண்டு. இதற்குத் தெலுங்கில் புருட-ஜிங்க (Buruda Jinka) என்று பெயர்.

மேற்கூறியவைகளுக்கெல்லாம் கொம்புகள் உள்ளே குடைவாக இருக்கும். இவைகளைப் பழைய காலங்களில் மருந்து முதலியவற்றை வைப்பதற்குப் புட்டிபோல் உபயோகித்து வந்தார்கள். இப்போதும் சில இடங்களில் ஈயம் பூசுவோரைப் போன்றவர் இதை வைத்திருப்பதைக் காணலாம்.

மான் : கலைமான், கடமை, புள்ளிமான் என மூன்று வகை மான்கள் தென்னிந்தியாவில் இருக்கின்றன. கலைமானுக்கு முகத்தில் மூன்று சிறு பள்ளங்கள் இருக்கும். மான்களில் பெரியது கடமை. இந்த இரண்டு வகைகளை மலைப்பிரதேசங்களில் காணலாம். புள்ளி மான் கடமையைவிடச் சிறியது. இது சமவெளிகளிலும் வசிக்கிறது-

மேற்குத்தொடர்ச்சிமலையின் கீழ்ப்பாகங்களில் நான்கு குளம்புகளுடைய மான்வகை ஒன்று வாழ்கிறது. இதைப் பார்ப்பது அரிது. பாறைகளின் பொந்துகளில் பகலில் தங்கி வெப்பப்பொழுதைக் கழிக்கும். இதை ஆங்கிலத்தில் ஷெவ்ரடேன் (Chevrotain) என்றும், சிறிதானதனால் சுண்டெலிமான் (Mouse Deer) என்றும் சொல்வார்கள். தமிழில் குறும் பன்றி என்பார்கள். இதைப் பிடித்து வீட்டில் வளர்க்கலாம். சாதாரண நாய் அளவு உயரம் இருக்கும். இதற்குக் கொம்புகள் இல்லை.

காட்டுப்பன்றியில் ஒருவகைதான் தென்னிந்தியாவில் இருக்கின்றது. இது இரவில் வெளிவந்து பயிரைப் பாழ்செய்யும். அந்தமான் தீவில் ஒரு சிறிய வகையும், இமயமலைப் பிரதேசங்களில் இன்னும் சிறிய குள்ளப்பன்றி (Pigmy Hog) வகையும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரல்களிலும் அவற்றைச் சார்ந்த மைசூரில் உள்ள அடர்ந்த காடுகளிலும் யானைக் கூட்டங்களைப் பார்க்கிறோம். யானை தென்னிந்தியாவிற்கும், அஸ்ஸாம், பர்மா முதலிய இடங்களுக்கும் உரியது. வடஇந்தியாவில் ராஜபுதனத்தில் ஒட்டகங்கள் மிகுதியாய்க் காணப்படுகின்றன. இவை வெளி நாட்டிலிருந்து இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டவை. ஒட்டகங்களை மாடுகள்போல் வண்டியில் பூட்டியும், மற்றும் உடம்பின்மேல் சுமை ஏற்றியும் வடநாடுகளில் உபயோகப்படுத்துகிறார்கள்.

பாலூட்டிகளில் பல்லில்லாதவை என்பது ஒருவகை (Edentata). இந்த வகையில் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் அழுங்கு என்று ஒன்று உண்டு. இதன் மேல்தோலில் பருத்த செதில்கள் முதுகிலும் பக்கங்களிலும் ஓடு அடுக்கினாற்போல் அடுக்கியிருக்கும். விரல்களின் நுனியில் கூரிய நகங்கள் இருக்கின்றன. அவை பூமியில் பொந்துகள் செய்து வசிக்கவும், புற்றுக்களை உடைக்கவும் உபயோகப்படுகின்றன. இது புற்றுக்களில் உள்ள கறையான், எறும்பு முதலியவைகளைத் தின்னும். வெகு நீளமான நாக்கு உடையது. இதன் எச்சில் பிசின் போல் இருக்கும். நீண்ட நாக்கைப் புற்றின் துவாரங்களில் செலுத்தி, எச்சிலில் எறும்புகளை ஒட்டச்செய்து, நாக்கை இழுத்து அவ்வெறும்புகளை உட்கொள்ளுகிறது. இதன் தலை நீண்டிருக்கும். கண் சிறுத்திருக்கும். இது இரவில் இரைதேடும். ஆபத்துக் காலத்தில் உடம்பை மரவட்டைபோல் சுருட்டிக்கொள்ளும். இது சென்னைக்கருகே நகரி முதலியமலைகளில் இருக்கின்றது.

பறவைகள்: பறவைகளில் பல இனங்கள் இருக்கின்றன. இனங்கள் பெருந்தொகையா யிருப்பதால் இவ்விடத்தில் விரிவாகச் சொல்ல இயலாது. கிளிகள் பார்வைக்கு மிக அழகானவை. சிறு பறவைகளையும் உயிர்களையும் பிடித்துத் தின்னும் இனங்களில், கழுகுகள், பருந்துகள். பைரி, இராசாளி அல்லது வல்லூறுகள், ஆந்தைகள் முதலியன இருக்கின்றன. மூன்றுவகை மீன் கொத்திகள் மீனைக்கொத்தி யுண்டு வாழ்கின்றன. மைனாக்கள் சில மனிதர்களால் பழக்கப்பட்டுப் பேசவும் கற்கின்றன.

நீர்ப்பறவைகளில் வாத்துக்கள், நீர்க்கோழிகள் முதலிய பலவகையுண்டு, அல்லிக்கோழி என்பது நீண்ட கால்களும் விரல்களும் பொருந்தியது. தாமரை இலைகளின்மேல் நிற்கவும் நடக்கவும் கூடியது. இந்த இனத்தில் பெண்பறவை முட்டையிடுங் காலங்களில் ஆண் பறவையின் நிறம் மாறி மிக அழகாகத் தோன்றிப் பெண்ணின் மனத்தைக் கவரும்.

புறாக்கள், காட்டுக்கோழிகள் முதலியன புதர்களில் காடுகளில் வாழும். மயில் இனமும் காட்டில் காணலாம். சில சமயங்களில் வெள்ளை மயில்களும் காணப்படுன்றன. காட்டுக்கோழி, கினிக்கோழி (Guinea fowl) எனக் கோழிகளில் சில சாதிகள் இருக்கின்றன. காடை, கௌதாரி முதலிய பறவைகளை வலை வீசிப் பிடித்து விற்பதைக் காணலாம்.

ஊர்வன (Reptiles): இந்தக் கூட்டத்தில் ஓணான் முதலிய வகைகள், பாம்புகள், ஆமைகள், முதலைகள் அடங்குகின்றன.

பல்லிகளில் மூன்று இனங்களை வீடுகளில் காணலாம். அவற்றுள் பெரியது மரங்களினின்று வீட்டுக்குள் வருகிறது. பல்லிகளின் விரல்களின் கீழே பலகைகள் அடுக்கியதுபோல் தோல்மடிப்புக்கள் இருக்கின்றன. இவை மழமழப்பான செங்குத்தான சுவரின்மேல் ஏறவும், கூரைத்தளத்தின் அடியில் மல்லாந்து செல்லவும் உதவுகின்றன. திருப்பதி மலையில் சில சமயங்களில் காணப்படுகின்ற காலோடாக்ட்டிலஸ் (Calodactylus) என்னும் பல்லிக்கு விரலின்கீழ் இரண்டே தோல்மடிப்புக்கள் இருக்கின்றன.பல்லிகள் ஓடுள்ள இரண்டு முட்டைகளை இடுகின்றன. ஓணானும் முதுகில் நான்கு மூலையுள்ள வைர வடிவ அடையாளங்களையுடைய மற்றொரு சிறு வகையான கரட்டோணானும் மரங்களில் (சைத்தானா-Sitana) காணப்படும். கற்பாறைகளில் சாதாரணமாகக் மற்றொரு சாதி உண்டு. அதன் ஆணின் தலையின் மேற்பாகமும், கழுத்தும், முதுகும் நாமம் போட்டது போல் இனம் பெருக்கும் பருவத்தில் சிவந்திருக்கும். உடும்பைச் சிலர் தின்பதுண்டு. அரணைகளில் பெரிய அரணை (மபூயா), சிறிய அரணை (லைகோ சோமா) என்பவையுண்டு. இவற்றின் குட்டிகளுக்கு வால் சிவந்திருக்கும். தென்னிந்திய மலையில் காண்கின்ற இன்னொருவகை ரிஸ்ட்டெல்லா வேறெங்கும் அகப் படுவதில்லை. அரணைகளில் சில இனங்களுக்குக் கால்கள் இல்லை. அவை பாம்புபோல் காணும். பூமியின் பொந்துகளில் வாழும். பச்சோந்தி நிறம் மாறுவது யாவருக்கும் தெரியும். சாதாரணமாக விலங்குகளின் இரண்டு கண்களும் ஒரேவிதமாக இணைந்து அசையும். ஆனால் பச்சோந்தி தன் கண்களைத் தனித்தனியே சுழற்றக்கூடிய சக்தி பொருந்தியிருக்கிறது. கையும் அடியும் இரண்டாகப் பிரிந்து, கிளைகளைப் பிடித்துக் கொண்டு ஏற இறங்க உதவுகின்றன. வாலும் கிளைகளில் சுருட்டிக்கொள்ளும். அவ்வாறு கிளைகளினின்றும் சில சமயங்களில் தொங்கலாம். பிசுபிசுப்பான நீண்ட நாக்கைப் பூச்சிகளின்மேல் திடீரென நீட்டி, ஒட்டிக்கொண்ட பூச்சியைத் தின்றுவிடும்.

பாம்புகள்: பாம்புகளில் பல வகைகள் இருக்கின்றன. அவற்றில் நான்கு வகையே கொடிய நஞ்சுள்ளவை. அவைகளால் ஆயிரக்கணக்கில் உயிர்கள் மாள்கின்றன.

1. நாகங்கள் : நாகம் என்று சொல்லுகிற நல்லபாம்பு படம் எடுத்து ஆடும். மூக்குக்கண்ணாடி போன்ற குறி படத்தில் தோன்றும். கருநாகம் (King Cobra) மிகப் பெரியது; கொடூரமானது. இதன் நஞ்சு நல்லபாம்பின் நஞ்சைவிட மிகக் கொடியது.

2. கட்டுவிரியன்கள் (Kraits): இவற்றில் சில வகைகள் உண்டு, கட்டுவிரியனின் கருநிறமான உடலில் வெண்ணிறமான குறுக்கு வரிகள் கட்டுக் கட்டாக ஓடும். இதன் உடல் எண்ணெய் வடிந்ததுபோல் மினுமினுப்பாகக் காண்பதால் எண்ணெய் விரியன் என்றும் இதைச் சொல்வதுண்டு. வடநாட்டிலுள்ள விரியனில் மஞ்சள் நிறமான கட்டுக்கள் இருக்கின்றன. கட்டுவிரியன்களிலே முதுகின் நடுவரிசையிலுள்ள செதில்கள் பருத்தும், அறுகோண வடிவமுள்ளவையாகவும் இருக்கும். கட்டுவிரியன்களைத் தெரிந்து கொள்வதற்கு இது ஓர் அறிகுறியாகும்.

3. விரியன்கள் (Vipers) : விரியன்களின் தலை முக்கோணமாயும், தலை மேல் உள்ள செதில்கள் உடம்பின் மேல் உள்ள செதில்கள் போல் சிறியனவாயும் இருக்கும். மற்றப் பாம்பினங்களில் தலைச் செதில்கள் பருத்து, ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும். அவற்றைக் கேடகங்கள் (Shields) என்பர். விரியன்கள் குட்டி போடும். கண்ணாடி விரியன் (Russell's Viper) சாதாரணமாகக் காணப்படுவது. உடம்பில் மூக்குக்கண்ணாடி போன்ற நீள் வட்டப் புள்ளிகள் இருக்கும். சுருட்டை விரியன் (Saw-scaled Viper) என்று மற்றொரு விரியன் உண்டு. இது தன் செதில்களை உராய்வித்து ஒருவிதமான பலத்த பெருமூச்சு விடுவதுபோன்ற சலசலப்பை உண்டாக்கும். இதனால் இதற்குக் குறட்டைப்பாம்பு, ஊது சுருட்டை என்று பெயர். இது புல்தரையில் வாழ்வதால் புல்விரியன் எனவும்படும். இது வறண்ட மணற்பாங்கிலும் சாதாரணமாக அகப்படும். குழி விரியன்கள்: இவற்றின் தலையீன் பக்கத்தில் கண்ணுக்கும் மூக்குத் தொளைக்கும் இடையில் ஒரு குழியிருக்கும். இவை மலைப்பகுதிகளில் வாழும். இவைகள் மற்ற விரியன்கள் போல் அவ்வளவு நஞ்சுள்ளவையல்ல.

4. கடற் பாம்புகள்: இவற்றின் வால் துடுப்புப் போல் இருக்கும். தலையும் கண்களும் சிறுத்திருக்கும். மிகவும் நஞ்சுடையவை. ஆனால் சாதாரணமாகக் கடிப்பதில்லை.

நஞ்சில்லாத பாம்புகள் பல உள மண்ணுளிப் பாம்பு, குருடிப்பாம்பு, செவிப்பாம்புகளை (Typhlops) நம் வீடுகளில் சில சமயங்களில் காணலாம். செவிப்பாம்பு கம்பிபோன்று நீண்டு இருக்கும். பொந்துகளில் வசிக்கும். இதை வீடுகளில் கண்டால் நெருப்பைப்போட்டுக் கொளுத்துவார்கள். நசுக்கினால் இது எளிதில் நசுங்குவதில்லை.

கேடகவால் பாம்புகள் (Uropeltidae): இவைகள் காப்பி, தேயிலைத் தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழும். மரங்கள், பாறைகளின் கீழும் வசிக்கும். இவை தென்னிந்தியாவிலேயே காணப்படுகின்றன. மிக அழகான நிறங்களுடையவை. சில வகைகளில் வாலின் நுனியில் சிறிய செதில்கள் கூடி யுண்டான தட்டையான கேடகம்போன்ற பாகம் இருக்கும். பெருமழையில் இவை வாழும் வளைகளை விட்டு வெளியே ஊர்ந்துபோகும்.

மலைப்பாம்புகள் மலைகளில் மரங்களின் கிளைகளில் வாழும். தாசரிப்பாம்பு (பைத்தான்) அதிகப் பருமனும் நீளமுமுள்ளது. இரைகளைத் தன் உடலால் சுற்றி நொறுக்கிப் பின்பு விழுங்கும். இதன் உடல் முழுதும் பொட்டுக்கள் காணப்படும். கட்டளைவிரியன் (டிரை யோகலாமஸ்), பவளப்பாம்பு (கல்லோபிஸ்) முதலிய பாம்புகளும் இருக்கின்றன.

மரங்களின் கிளைகளில் மூன்றுவகைப் பாம்புகளைக் காணலாம். 1. பச்சைப்பாம்பு அல்லது பச்சோலைப் பாம்பு அல்லது கண்குத்திப்பாம்பு இலையைப் போல் பச்சை நிறமுள்ளது. 2. கொம்பேறிமூக்கனை உலர்ந்த கிளைகளில் காணலாம்; மங்கிய பழுப்பு நிறம் பொருந்தியது. இது ஒருவனைக் கடித்தபின் மரத்தின் உச்சியில் ஏறி, இறந்தவன் பிணத்தைச் சுடும் புகை வருகிறதா எனப் பார்க்கும் என்பது பொதுமக்கள் கற்பனை. 3. பெருஞ் சுருட்டைப்பாம்பு பழுப்பு நிறமுடையது. முதுகிலே கறுப்புக் குறிகள் உண்டு.

மணல்நாடுகளில் கூழைப்பாம்பு, இருதலைப்பாம்பு, புடையன் என்னும் பெயர்களைப் பெற்ற எரிக்ஸ் என்னும் பாம்பைக் காணலாம். இதன் மேல்தோல் வெண் குட்டம் பிடித்த தோலின் நிறம் போல் இருக்கும். சாரைப்பாம்பு சாதாரணமாகப் பாம்பாட்டிகளிடம் காணப்படும். 5-6 அடி நீளம் இருக்கும்.

வழலை (லைக்கொடான்) பார்வைக்கு எண்ணெய் விரியனைப்போல் இருக்கும். ஆனால் சிறிது சிவந்து இருக்கும். இதைக் கட்டுவிரியன் என்று சிலர் தவறுதலாகக் கூறுவர். கட்டுவிரியனுக்கு முதுகின் நடுவிலுள்ள நீள் வரிசைச் செதில்கள் பருத்து, ஆறு கோண முடையவையாக இருப்பது போல, வழலைக்கு இருப்பதில்லை.

நீரில் நான்குவிதப் பாம்புகள் வாழ்கின்றன. (1) செர்பிரஸ்,(2) நீர்ச்சாரை (ஹெலிக்காப்ஸ்), (3) நீர்ச் சுருட்டை (டிராப்பிடொனோட்டஸ் பிஸ்கேட்டர்), (4) உப்பங்கழிகளில் உள்ள செர்ஸைட்ரஸ் என்பவை; டிராப்பிடோனோட்டஸ் ஸ்டோலேட்டஸ் என்ற வகை ஈரமுள்ள கழனிகளிலும் புல்தரைகளிலும் ஓடும். இதற்குக் கல்யாணிக்குட்டி அல்லது காளியன்குட்டி எனப் பெயர் உண்டு. வெள்ளங்களில் நீர்ப்பாம்புகளும் அடித்துக்கொண்டு போகப்பட்டுக் கழனிகளிலும் தோட்டங்களிலும் வருவதைக் காணலாம்.

முதலைகளில் மூன்று இனங்கள் உண்டு. இரண்டு இனங்கள் தென்னிந்தியாவில் ஆறுகளில் இருக்கின்றன. மூன்றாவது இனம் வங்காளத்தில் கங்கையாற்றில் மீன்களைப் பிடித்து வாழ்கின்றது. இதற்கு வாய் நுனி நீண்டு பக்கங்களில் பற்கள் பொருந்தியிருக்கும்.

ஆமைகளில் பலவிதங்கள் இருக்கின்றன. கடலில் சில வாழ்கின்றன. குளங்குட்டைகளிலும் ஆறுகளிலும் சில வாழ்கின்றன. காடுகளிலும் நிலங்களிலும் சில வாழ்கின்றன. கடலில் பேராமை, அழுங்காமை, பெருந்தலை ஆமை, எழுவரி ஆமை என்னும் நான்கு விதம் உண்டு.

தவளை வகுப்பு : இந்தக் கூட்டத்தில் மூன்று பிரிவுகள் இருக்கின்றன. 1. வாலுள்ளவை - யூரோடீலா, 2. தவளைபோல் வாலில்லாதவை-அன்யூரா, 3. கால்கள் இல்லாதவை - அபோடா அல்லது ஜிம்னோபியோனா (Gymnophiona). இம்மூன்று பிரிவுகளுக்கும் உதாரணங்கள் இந்தியாவில் காணலாம். வாலுள்ள பிரிவுக்கு இமயமலை அடிவாரத்தில் டார்ஜிலிங் முதலிய இடங்களில் தலைப்பிரட்டை போன்ற டைலொட்டோ டிரைட்டான் என்னும் ஓரினம் இருக்கின்றது. இது ஒன்றுதான் இந்தியாவில் காணப்படுவது. வாலில்லாதனவான தவளைகளில் அநேக வகைகள் உண்டு. கால்களில்லா பிரிவைச் சேர்ந்தவை தென்னாட்டிலும் மலையாளப் பிரதேசத்திலும் மலையடிவாரங்களில் உள்ள வாழை, காப்பி முதலிய தோட்டங்களில் மண்ணில் புதைந்து வாழ்கின்றன. இவை தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தென் ஆப்பிரிக்காவிலும், தென் அமெரிக்காவிலும் அகப்படுகின்றன. இவ்வாறு தூரத்திலுள்ள நாடுகளில் காண்பது ஓர் உண்மையைத் தெரிவிக்கின்றது. அதாவது இந்நாடுகள் ஒருகாலத்தில் ஒன்றுபட்டிருந்திருக்கவேண்டும்;பின்னால் இடையிலுள்ள நாடுகள் கடலில் மூழ்கிப்போனதால் இவை பிரிந்து போயின என்பதாம். இந்த உயிர்கள் சிறு பாம்பு அல்லது பெரிய மண்புழுப்போல் தோன்றினாலும், பாம்புகளைப்போல் இவற்றிற்கு உடம்பில் செதில்கள் இல்லை. வாலும் கிடையாது; குதம் உடம்பின் கடைசியில் உள்ளது; திறந்து மூடக்கூடிய தாடையுடன் கூடிய வாய் இருப்பதாலும், முதுகு எலும்பும் மண்டையும் இருப்பதனாலும் இவை மண்புழுக்களாகா. இவை ஈரமுள்ள பொந்தில் முட்டைகளைச் சுற்றிக்கொண்டு அவைகளைக் காப்பாற்றுகின்றன. முட்டையிலிருந்து பொரித்த குஞ்சுகள் மீன் தலையைப்போன்ற தலையையும், வாயைச் சுற்றி உதடுகளையும், நீந்துவதற்கு உபயோகப்படக்கூடிய தட்டையான வாலையும் உடையன.

தவளைகளில் நீரிலே வாழ்பவை, நிலத்தில் பொந்துகளில் வாழ்பவை, குளிர்ச்சியான மரங்களில் வாழ்பவை (தேரை) எனப் பலவகைகள் உண்டு. தேரை முட்டையிடுங் காலத்தில் நீரை அடைந்து, வெள்ளைப் பிசின் போன்ற நீரை வெளிப்படுத்தி, அதைக் காலால் அடித்து நுரையான பொருளாக்கி அதில் முட்டைகளையிடுகின்றது. இந்த நுரையை நீருக்குமேல் தொங்கிக்கொண்டிருக்கும் இலைகளில் காணலாம். முட்டைகள் பொரித்ததும் குஞ்சுகள் நீரில் விழுந்து வாழும். சொறித்தவளை (Toads) போன்றவை முட்டைகளைச் சரம் சரமாகப் பிசின் போன்ற பொருளில் வைத்திடும். சாதாரணத் தவளைகள் (Frogs) ஜவ்வரிசிப் பாயசம்போல் பரப்புள்ள பிசினில் முட்டைகளைப் பொதிந்து இடுகின்றன.

மீன்கள்: இந்தியாவில் மீன்களுக்குக் குறைவில்லை. மூன்று பக்கங்களில் கடல் சூழ்ந்திருக்கிறது. நாட்டில் ஆறுகளும் ஏரிகளும் குளங்களும் ஏராளமாய் இருக்கின்றன. ஆதலால் கடல் மீன்களும் ஆற்று மீன்களும் நிறையக் கிடைக்கின்றன. கடல் ஓரத்தில் வசிப்பவர்களுக்குத்தான் கடல்மீன் அதிகமாகக் கிடைக்கிறது. ஆனால் தற்காலத்தில் பனிக்கட்டியிலும், பனிக்கட்டிப் பெட்டிகளிலும் மீனை வைத்து உள்நாடுகளுக்கும் அனுப்புகிறார்கள்.

கடல் மீன்களில் சுவையில் மேலானவை வஞ்சிரம், மாலவாசி முதலிய மீன்கள். கடல் மீன்களுக்குள் சுவையில் இவற்றிற்கு மேலான மீன்கள் இல்லை என்று சொல்லுவார்கள். முதிர்ந்த மீன்கள் அவ்வளவு சுவையாக இரா. அடுத்தபடியாகச் சுவையில் வௌவால் மீனைக் கூறலாம். இதில் மூன்று விதங்கள் இருக்கின்றன. வெள்ளை, கறுப்பு, சாம்பல் நிறம் உள்ளவை. சில காலங்களில் வௌவால் மீன்கள் கூட்டங்கூட்டமாகக் கடலில் செல்லும். அப்போது 1,000-2,000 மீன்கள் ஒரே வலையில் மலையாள தேசத்தில் பிடிபடும். இம்மீன்களின் இறைச்சி எளிதில் செரிக்கக்கூடியதாகையால் நோயாளிகளும், சீரணசக்தி குறைந்தவர்களும் தின்னலாம். அடுத்தபடியாகக் காலாமீன், நாக்குமீன், கிழங்கான் முதலியவைகளைக் கூறலாம். சிலவகைக் காலாமீன்கள் 6 அடி நீட்டு வளரக்கூடுமானாலும், தென்னிந்தியாவில் அகப்படுகின்றவை 1-11 அடி நீளத்துக்கு மேல் போவதில்லை. இம்மீன் வங்காளத்தில் கடலிலிருந்து காசிவரையில் கங்கை நதியிலே போவதாகச் சொல்லப்படுகிறது. அதனால் இதற்குத் தபசி என்றும் பெயர். முன் ஜதைத் துடுப்பில் நீண்டிருக்கும் கதிர்கள் (Fin rays) தாடிபோலிருக்கும். நாக்குமீன்களில் பலவிதங்கள் இருக்கின்றன. இவை கடலில் தரையிலே மணலின் மேலும், புதைந்தும் கிடக்கும். இது உடல் அமைப்பில் மற்ற மீன்களை ஒத்திராது; நாக்குப் போன்று தட்டையாயிருக்கும். இதன் உடலில் வலம், இடம் என்று கூறாமல் மேற்புறம், கீழ்ப்புறம் எனக் கூறவேண்டும். மேற்புறத்தில் இரண்டு கண்களும் அமைந்துள்ளன. குட்டியாக இருக்கும்போது சாதாரண மீன்களைப்போலவே இடம் வலமாகக் கண்கள் இருக்கும். குட்டி நாளடைவில் நீருக்கு அடியிலுள்ள தரையில் வசிக்கத் தொடங்கும்போது இப்பக்கங்கள் மேல், கீழ்ப் பக்கங்களாக மாறி, இரண்டு கண்களும் ஒரே பக்கத்திற் சேர்கின்றன. சிலவகைகளில் இடப்பக்கமும், மற்றவற்றில் வலப்பக்கமும் கீழ்ப்பக்கமாகின்றன. கீழ்ப்பக்கத்துக்கண் மேற்புறத்துக்கு மாறுகிறது. இவைகள் சிற்சில சமயங்களில் நீந்தும். பாறை (காராங்க்ஸ்) மீன்களில் பலவகைகள் இருக்கின்றன. அவ்வளவு சுவையில்லாமற்போனாலும் ஏழை மக்களுக்கு இவை விருப்பமான மீன்கள். இம்மீன்களின் வால்புறம் இருபக்கத்திலும் நடுவில் உயர்ந்த செதில்கள் ஒரு கோடுபோல் ஓடுகின்றன. வாலும் மஞ்சள் நிறமா யிருக்கும், அதனால் இவற்றை மஞ்சள்வால் என்றும் கூறுவார்கள். ஆனி, ஆடி மாதங்களில் ஓலைவாளை கூட்டங்கூட்டமாக வலைகளில் கிழக்குக் கடலில் அகப்படுகின்றது. நெய்த்தோலி (எங்க்ராலிஸ்) என்னும் சிறிய மீனையும் அதிகமாக இம்மாதங்களிற் காணலாம். சென்னக்கூனி என்பது மீன்வகையல்ல ; இறால் இனத்தைச் சேர்ந்தது, மடவை, நகரை, மட்டவாயன், கொடுவாய், உல்லம், கெளிறு முதலிய மீன்கள் விலை மலிவாக இருப்பதால் ஏழை மக்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவற்றில் மடவை. கெளிறு போன்ற மீன்களைக் கடலிலும் கடலை அடுத்த உப்பங்கழிகளிலும் பிடிக்கலாம். சிலவகைக் கெளிறுகள் நன்னீரில் வாழ்கின்றன. கெளிறு செரிப்பது கடினம்.

ஆற்று மீன்களில் வாளை, ஆரல், குறவை, அயிரை, கெளிறு வகைகள், கெண்டை மீன்கள் முதலியவற்றைக் கூறலாம். சேற்றுக்கெண்டை (எட்ட்ரோப்ளஸ்) என்ற மீன் மிகவும் அழகாக இருக்கும். பச்சைப் புள்ளிகள் இதன் உடம்பில் காணப்படுகின்றன. அதனால் இதைச் செல்லாக்காக என்றும் சொல்லுவார்கள். இம்மீன் தென்னிந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மாத்திரம் அகப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சாதாரணமாக மீன்கள் நீர்வாழ்வனவென்றும், நீரிலிருந்து வெளியே வந்தால் இறந்து போகும் என்றும் நினைப்பது வழக்கம். ஆனால் வெப்ப நாடுகளில் ஆறுகளும், ஏரிகளும், குளங்களும் வற்றிப்போவதால், சிலமீன்கள் காற்றை உட்கொள்ள வசதி யேற்படுத்திக் கொண்டுள்ளன. வெளியிலுள்ள காற்றையும் நீரில் கரைந்திருக்கும் காற்றையும் தனித்தனியே சுவாசிக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. செந்நெல் அல்லது பனையேறிக்கெண்டை என்பது ஓர் ஏரியைவிட்டு மற்றோர் ஏரிக்குப் போவதை அநேகர் பார்த்திருக்கிறார்கள். அதன் செவுளுக்குள்ளே சிலபாகம் காற்றைச் சுவாசிக்க ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. அதுபோலவே வரால், குறவை, ஆற்று வாளை முதலிய மீன்களும் வெகுநேரம் வரையில் நீருக்கு வெளியே உயிருடன் இருப்பதையும், கடைகளில் உயிருடன் விற்பதையும் காண்கிறோம். மற்றும் கெளிற்றினத்தைச் சேர்ந்த தேளி மீன் (சாக்கோப் ராங்க்கஸ்) போன்றவைகளும் காற்றைச் சுவாசிக்கும். இவைகளிலெல்லாம் காற்றைச் சுவாசிப்பதற்கென்றே செவுளுக்குள் ஒரு பாகம் இருக்கின்றது. அதை நுரையீரலுக்கு ஒப்பிடலாம். ஆதலால் இம்மீன்களை நீருக்கு மேலே வாராமல் தடுப்போமானால்-ஒரு பெரிய கண்ணாடி ஜாடியில் நீரைவிட்டு, அதனுள் இரண்டொரு மீன்களை நீருக்குள்ளேயே தங்கும்படியாக ஒரு மரப்பலகையையோ, தகரத்தையோ வைத்தால்-இம்மீன்கள் நீர்மட்டத்துக்குமேலே வர முயல்வதையும், முடியாமல் மூச்சுவிடக் கஷ்டப்பட்டுக் கீழே சாய்ந்து விழுவதையும், இறந்து போவதையும் காணலாம். இதனால் வாழ்விற்கு இவைகளுக்கு நீரைப்போல் காற்றும் அவசியம் என்பது புலப்படும். வங்காளத்தில் கழனிகளில் ஆம்பிப்னோஸ் (Amphipnous) என்னும் ஒருவகை மீன் வளைகளில் வசிக்கின்றது. இதுவும் காற்றையே சுவாசிக்கும். பார்வைக்கு மலங்கு போல் இருக்கும். காற்றைச் சுவாசிக்கும் மீன்கள் நீரில் வாழும்போது அடிக்கடி நீர் மட்டத்துக்கு மேலே வந்து, காற்றை வாய்வழியாக உட்கொண்டு, உபயோகப்படுத்திய காற்றைச் செவுள் வழியாக வெளியேற்றும்.

இந்தியாவில் இருக்கின்ற மீன்களில் சில தாய்மையை மிக அழகாகக் காண்பிக்கின்றன. குறவை மீன்கள் குளத்தின் தரையில் பள்ளம் செய்து, அதில் முட்டைகளையிட்டு, ஆணும்பெண்ணுமாக அவற்றைக் காக்கும். நீர்க் கொடிகளைக் கொண்டு அப்பள்ளத்தை மூடுவதுமுண்டு. குரமி என்னும் மீன் நீர்க்கொடிகளைக் கொண்டு பறவைக் கூட்டைப் போலவே கூடுசெய்து, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து அவற்றை வளர்க்கின்றது. சிலவகைகளில் ஆண்மீன் முட்டைகளைப் பொரிப்பதில் சிரத்தை யெடுத்துக் கொள்கின்றது. உப்பங்கழிக் கெளிறு (ஏரியஸ்) என்னும் மீனில் பெண் இடுகின்ற 100-200 முட்டைகளை 3 அல்லது 4 ஆண்கள் தங்கள் வாயில் எடுத்துக்கொண்டு, வாயை மேற்புற மாக வைத்துக் கொண்டு பல நாள் உணவில்லாமல் இருக்கின்றன. கடலில் வாழும் குதிரைமீனில் ஆணின் வயிற்றைச் சார்ந்து ஒரு பை இருக்கிறது. அப்பையில் பெண்மீன் 200-300 சிறு முட்டைகளை இட்டு, அதை மூடிவிடுகிறது. சில நாட்கள் கழித்து, அப்பையினின்றும் 100-200 குஞ்சுகள் கேள்விக் குறிகள்போல வெளிவருகின்றன. சில வகைகளில் பெண்மீன்கள் சிலவற்றைப்போல ஆண் மீன்களும் தம் அடிவயிற்றில் முட்டைகளை ஒட்டி வைத்துக்கொள்கின்றன.

மலங்குகளில் ஒருவகை (ஆங்க்வில்லா) கடலிலிருந்து ஆறுகளுக்குள் சென்று, அங்கே வளர்ந்து, முட்டையிடும் சமயத்தில் மறுபடியும் கடலில் சென்று முட்டைகளையிடுகின்றன. இவ்வகை மலங்குகளை நாம் கழனிகளிலும் காணலாம். கடலில் இடுகின்ற முட்டைகள் மலங்குகளாக உடனே பொரிப்பதில்லை. மிகச் சிறிய தலையும், நாடா போன்ற உடலும் உள்ள லெப்ட்டோ செபாலஸ் (Leptocephalus) என்னும் உருவாகப் பொரிக்கிறது. இது வளர்ந்து,உருளை வடிவான உடல் அமைப்புள்ள தாகிப் பிறகு குட்டி மலங்காக மாறி, ஆறுகளுக்குள் ஏறி. அங்கே முதிர்ச்சியுற்று வயதை அடைகின்றது. இது வெள்ளங்களில் கழனிகளில் அடித்துக் கொண்டு போகப்பட்டு, அங்கே தங்கிச் சேற்றில் வளைகளில் புதைந்து வசிக்கின்றது. சில சமயங்களில் வேர்களை அறுத்துப் பயிர்களை நாசம் செய்கின்றது.

சில கெளிற்று மீன் களில் துடுப்புக்களிலுள்ள முட்கள் நஞ்சுள்ளவை. அவை குத்தினால் மனிதனுக்கு மிகுந்த தொந்தரவு உண்டாகும். ஒருவகைக் கெளிற்று மீனின் நஞ்சு, தேள் கொட்டுவதுபோல இருப்பதனால் அந்த மீனுக்குத் தேளி என்று பெயர், அதே காரணத்தைக் கொண்டு கடலில் பாறைகளின் நடுவே வாழும் மிக அழகான மற்றொரு வகை மீனுக்கும் தேளி என்ற பெயர் உண்டு.

பறவை மீன்கள்: மீன்கள் சாதாரணமாய் நீரில் நீந்துகின்றன. கோலா அல்லது பறவைமீன் (எக்சொ சீட்டஸ்) பறந்து செல்லக்கூடிய தன்மை பொருந்தியிருக்கிறது. கூட்டம் கூட்டமாக இவை செல்லும் போது நீருக்குமேல் குதித்துத் தாண்டிப் போவதைக் காணலாம். இவற்றை எண்ணூர் முதலிய உப்பங்கழிகளிலும் காணலாம். எண்ணூரில் செம்படவர் பல படகுகளில் ஏறிக்கொண்டு ஒன்றாகக் கூச்சலும் சத்தமும் செய்தால் இவை கும்பல் கும்பலாகத் துள்ளிப் படகுகளில் விழுவதைக் காணலாம்.

மலையருவிகளில் வாழும் சிறு மீன்களை அடித்துக் கொண்டு போகாதபடி அவற்றின் மோவாய்க்கு அடியில் உறிஞ்சு தட்டுக்கள் (சக்கர்) இருக்கின்றன. அவற்றின் மூலமாகப் பாறைகளை உறுதியாகப் பிடித்துக் கொள்கின்றன.

முதுகெலும்பு இல்லாதவை: இப்பிரிவில் பலவிதமான உயிர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலில் மைக்ராஸ்கோப்பினால் பார்க்கக்கூடிய ஓரணுவுயிர்கள் 'புரோட்டோசோவா' தண்ணீரிலும், தண்ணீரின் கீழிருக்கும் தரையிலும் ஈரமான மண்ணிலும் இருக்கின்றன. இவற்றி மேற்படியாகக் கடற்பஞ்சு அல்லது 'புரையுடலி" (போரிபெரா Porifera) என்னும் கூட்டம் இருக்கிறது. இது பெரும்பாலும் கடல் நீரில் வாழும். நல்ல தண்ணீரில் வாழும் சில இனங்களைக் கழனிகளிலும் குளங்களிலும் காணலாம். அவை புற்று மண்போல் கழனிகளில் வெயிற்காலங்களில் தெரியும். அவற்றிலுள்ள வெண்கடுகு போன்ற குருத்துமணிகள் (ஜெம்யூல்) மழை வருங் காலத்தில் உடைந்து, புதிய கடற் பஞ்சுகளாக வளர்கின்றன.

சொறித் தொகுதி : கடற்கரையோரங்களில் நுங்கு போன்ற தன்மையுடைய உயிர்களைச் செம்படவர்கள் வலையிலிருந்து எடுத்து எறிந்து விடுவர். இவையே சொறிவகைகள். இவை பெரும்பாலும் கடல் நீரில் வாழ்கின்றன. சிற்சில நல்ல தண்ணீரில் வசிக்கின்றன. இந் நன்னீர்ச் சொறிகள் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் இந்தியாவிலும், சூரத்துக்கு அருகேயும், தென் இந்தியாவில் பெரியாற்றுத்தேக்கத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. பவளம் இச்சொறியினத்தைச்சேர்ந்தது. சொறியினங்களில் பல வெண்மை அல்லது கருமைப் பொருள்களை உண்டாக்குகின்றன. இராமேசுவரம், பாம்பன் முதலிய இடங்களில் இவைகளினால் உண்டான வெண்ணிறப் பாறைகளை வெகு சாதாரணமாகக் காணலாம். இப்பாறைக் கற்கள் வீடுகட்டவும் பயன்படுகின்றன. இன்னொருவகை விசிறி போன்று விரிந்து, தம்முள்ளே ஒருவித நிறக் குச்சிகளை உண்டாக்கி, அவற்றின் உதவியினால் நிமிர்ந்துவளர்கின்றன. மற்றொரு வகை, சிவந்த குச்சிகளை உண்டாக்குகின்றன. இவைகளே நற்பவளம் என வழங்குகின்றன.

புழுக்கள்: புழுக்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று உடம்பு வளையம் வளையமாகக் கட்டங்கட்டமாக (Segmented) உடையது. மற்றொன்று இக்கட்டங்கள் இல்லாதது. பின்கூறப்பட்ட வகைகளில் பல ஒட்டுண்ணிகளாக இருக்கின்றன. மனிதனது குடலிலுள்ள நாகப்பூச்சி, கீரிப்பூச்சி, நாடாப்பூச்சி, கொக்கிப்புழு, இரத்தத்திலுள்ள யானைக்கால் முதலிய நோய் உண்டாக்குகின்ற பூச்சிகள், தசையில் வளர்கிற நரம்புச் சிலந்தி (Guinea-worm) முதலியவை இவ்வகையில் அடங்கும். சில நீரில் சுதந்திரமாகத் த்னித்து வாழ்கின்றன. வளையங்கள் கட்டங்கட்டமாக அமைந்துள்ள புழுக்களிலும் பல வகைகள் இருக்கின்றன. பெரும்பான்மையானவை கடலில் மணலிலும், கற்பாறைகளின் இடுக்கிலும், இவைபோன்ற இடங்களிலும் வாழ்கின்றன. கடற்கரை யோரங்களில் நீர் தங்கியிருக்கும் குட்டைகளில் பலூன் போன்ற வெண்ணிறமான பொருள்கள் மிதந்து இருப்பதைக் காணலாம். ஒவ்வொரு பலூனும் கீழே வேர்போலச் சென்று மணலில் புதைந்திருக்கும். இவை ஒருவகைக் கடல் புழுவின் முட்டைக் கூண்டுகள். முட்டைகளைச் சிறு அணுக்களாக அப் பலூனின் உள்ளே காணலாம். அட்டைகளும் வளையப்புழுத்தொகுதியைச்சேர்ந்தவை.

சங்குத்தொகுதி : நத்தை, மட்டி, பலகறை, சங்கு முதலியவை இவ்வினத்தைச் சேர்ந்தவை. இவைகள் கூட்டுக்குள்ளே வாழ்கின்றன. இக்கூடுகள், மட்டி முதலிய சாதிகளில் இரண்டு சிறு முறங்கள் சேர்ந்தவை போன்றிருக்கும். மற்றச் சாதிகளில் சங்கு, பலகறை போன்றிருக்கும். 'கடல்நுரை' சங்குத் தொகுதியைச் சேர்ந்த கணவாய் என்னும் ஒரு பிராணியின் உள்கூடு ஆகும். முத்து ஒருவித மட்டியினத்தினின்றும் உண்டாகிறது. மட்டிகளின் கூடுகளைச் சுட்டால் சுண்ணாம்பு உண்டாகும்.

கணுக்காலிகள் (Arthropoda) : இத் தொகுதியில் பலவகை உயிர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 1. ஓட்டு மீன்கள், கிரஸ்டேஷியா (Crustacea), நண்டு, இறால், சென்னக்கூனி முதலிய வகைகள். இன்னும் பல இனங்கள் இதில் அடங்கியிருக்கின்றன. 2. தென் ஆப்பிரிக்காவிலும் வடஇந்தியாவிலும் காணப்படுகின்ற பெரிபதஸ் என்னும் உயிர். 3. மரவட்டை, பூரான் முதலியன அடங்கிய வகுப்பு. ஒவ்வொன்றிலும் அநேக விதங்கள் இருக்கின்றன. ஜல மண்டலம் என்று சொல்லும் பூரான் வகை இவ்வினத்தைச் சேர்ந்தது. 4.பூச்சிகள், வண்டுகள், பட்டுப்பூச்சி, எறும்பு, கரப்பான்பூச்சி, தும்பி, குளவி, வெட்டுக்கிளி, பிள்ளைப்பூச்சி முதலியன இவ் வகுப்பில் அடங்கும். இவைகளின் உடலில், தலை, மார்பு, வயிறு என மூன்று பாகங்களைக் காணலாம்; ஆறு கால்கள் உள்ளன. 5. தேள், எட்டுக் கால் பூச்சிகள், உண்ணி முதலியன அடங்கிய வகுப்பு. இவைகளுக்கெல்லாம் எட்டுக்கால்கள் உள்ளன. இவற்றில் தலையும் மார்பும் ஒன்று சேர்ந்து தலை- மார்பு (செபலதோராக்ஸ்) என்னும் ஒருபாகம் வயிற்றுக்கு முன்பாகமாக இருக்கிறது.

முள்தோலிகள் (Echinodermata) : இவை கடலிலே வாழ்கின்றன. நட்சத்திர மீன் (Star fish), ஒடி நட்சத்திர மீன் (Brittle star), கடல் முள்ளெலி (Sea urchin), கடல் வெள்ளரி (Sea-cucumber), கடல் லில்லி (Sea-lily) முதலியன இவ்வினத்தில் அடங்குகின்றன. ஐந்து கைகளையுடைய நட்சத்திர மீனும், அதைப்போன்று நடுத் தட்டுடன் ஐந்து பலவிதமாக வளையக்கூடிய கைகளையுடையதுமான ஒடி நட்சத்திர மீனும் சாதாரணமாகச் செம்படவர்களால் ஒதுக்கப்பட்ட மீன்களினிடையே கடற்கரையோரங்களில் காணலாம். அலைகளாலும் சில சமயங்களில் இவை ஒதுக்கப்பட்டிருக்கும். கடல் முள்ளெலி பந்துபோல் உருண்டு, உடல் முழுவதும் முட்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்களைச் சிறுவர் பலகையில் எழுதும் பலப்பம்போல் உபயோகப்படுத்தலாம். கடல் வெள்ளரி கடலின் தரையில் படுத்து வாழ்வதினால் அதைக் கரைகளில் காண்பதரிது. கடல் லில்லியும் வேர்களால் மணலில் ஊன்றி வாழ்கின்றது. இதில் ஒரு சிறிய இனம் கடற் பாறைகளினிடையே வாழும். எஸ். ஜீ. ம.

மானிடவியல்: பண்டைத் தமிழ் நூல்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலப் பாகுபாடு செய்து, அவற்றில் வாழ்ந்த மக்களையும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும் பற்றிக் கூறுகின்றன. வேதகால நூல்கள், நிஷாதர், கிராதர் போன்ற ஆரியரல்லாத மக்களைப்பற்றிக் கூறுகின்றன. இமயமலையிலிருந்த மக்கள் கற்களைக்கொண்டு செய்து பயன்படுத்திய அம்பு முனைகளைப்பற்றிய வருணனை காளிதாசருடைய நூல்களில் காணப்படுகின்றது.

ஆயினும் பிரிட்டிஷ் அரசாங்கம் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மக்கள் தொகைக் கணக்கு முறை வகுத்த பின்னரே இந்திய மானிடவியல் ஆராய்ச்சி தொடங்கியது. சர் டெனிஜில் இபெட்சன் 1881ஆம் ஆண்டு மக்கள் தொகை கணித அறிக்கையில் பஞ்சாபில் காணப்படும் பழக்க வழக்கங்களைப்பற்றி எழுதினார். ஆனால் 1891ஆம் ஆண்டு சர் ஹெர்பர்ட் ரிஸ்லி எழுதிய மக்கள் தொகைக் கணித அறிக்கையே இந்திய மானிடவியல் ஆராய்ச்சியின் தொடக்கமாகும். இதன் பின்னர் வந்த அறிக்கைகள் சாதி, இனம் பற்றிய விவரங்கள் தந்தன.

தர்ஸ்டனும் ரங்காச்சாரியும் 1909-ல் எழுதிய தென் இந்திய சாதிகளும் இனங்களும் என்னும் நூலும், அனந்தகிருஷ்ண அய்யர் எழுதிய கொச்சி, மைசூர் சாதிகளும் இனங்களும் என்ற நூலும் தமிழ்நாட்டு மானிடவியல் ஆராய்ச்சிக்குப் பெரிதும் துணை செய்வன. இதன்பின் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அலுவலாளர்கள் அஸ்ஸாமிலிருக்கும் மலைச் சாதிகள் ஒவ்வொன்றையும் பற்றி விரிவான குறிப்புக்கள் அடங்கிய நூல்கள் வெளியிட்டனர். அதன்பின் ஆராய்ந்தவர்களுள் சிறந்தவர்கள் வங்காளத்திலிருந்த சரத்சந்திர ராயும், மத்திய இந்தியாவிலிருந்த டாக்டர் வெரியர் எல்வினுமாவர். உடல் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியைப் பலவாறு நடத்தியவர் இந்திய அரசாங்கத்தின் மானிடவியல் இலாகாவின் முதல் டைரக்டராயிருந்த டாக்டர் பீ. எஸ். குஹா ஆவர்.

சிந்துப் பள்ளத்தாக்கில் கண்டுபிடித்த ஹாரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகச் சிதைவுகள் இந்திய மானிடவியல் ஆராய்ச்சியில் மிகச் சிறப்பான ஒரு கட்டமாகும். பார்க்க: ஆசியா-மானிடவியல். யூ. ஆர். ஏ.

மக்களினங்கள்

இந்திய மக்களிடம் ஆதிக் குடி இனங்களின் அமிசங்கள் பல காணப்படுகின்றன. இவ்வினங்கள் ஆறு பெரிய இனத்தொகுதிகளினின்றும், அவற்றின் உட்பிரிவுகளினின்றும் பெறப்பட்டவை. அவையாவன :
1. நெக்ரிட்டோ.
2. ஆதி ஆஸ்திரலாயிடு.
3. மங்கொலாயிடு இனமும், அதன் உட்பிரிவுகளான ஆதி மங்கொலாயிடு இனமும், திபெத்திய மங்கொலாயிடு இனமும்.
4. மத்தியதரைக்கடல் பிரதேச இனமும், அதன் உட்பிரிவுகளான ஆதி மத்தியதரைக்கடல் பிரதேச இனமும், மத்தியதரைக்கடல் பிரதேச இனமும், கீழ் நாட்டினமும்.
5. மேலைநாட்டு அகன்ற மண்டையினமும், அதன் உட்பிரிவுகளான ஆல்பினாயிடு, தினாரிக், ஆர்மினாயிடு பிரிவுகளும்.
6. நார்டிக் இனம்.

நெக்ரிட்டோ, ஆதி ஆஸ்திரலாயீடு, மங்கொலாயிடு இனங்களும், அவற்றின் உட்பிரிவுகளுமே இந்நாட்டின் ஆதிக் குடிமக்களையாக்கிய இன வகைகள். இவற்றுள் நெக்ரிட்டோ இனத்தவருக்குக் குறள் வடிவம், சிறிய தலை, வெளிப்புறம் தள்ளிய நெற்றி, வளர்ச்சியுறாத முகவாய், பம்மென்ற தலைமயிர் முதலியவை சிறப்பிலக் கணங்களாகும். இவ்வினவகை காடர், இருளரிடைக் காணப்படுகிறது. ஆதி ஆஸ்திரலாயீடு இனவகை மேற்கூறிய நெக்ரிட்டோக்களைப் பெரும்பான்மை ஒத்திருந்தாலும், இவர்களுடைய உறுப்புக்கள் நன்கு வளர்ச்சி யுற்றிருக்கும்; தலைமயிரும் பம்மெனச் சுருண்டிராமல் அறல் போன்றோ அல்லது வளைந்தோ இருக்கும். தென்னிந்தியா, மத்திய இந்தியாவின் ஆதிக்குடி மக்கள் பெரும்பான்மையோர் இவ்வகையினரே. மேலும் வட இந்தியாவிலும், மற்றைய இடங்களில் இந்து நாகரிகத்தைப் பேரளவிற்குத் தழுவியவரும், ஒதுக்கப்பட்டவரென வழங்கப்படுபவருமான சாதியினரிடையே இவ்வினக் கூறுகள் மலிந்துள்ளன. மங்கொலாயிடு வகையினரின் உடம்பில் குறைவான மயிரும், சப்பையான முகத்தோற்றமும், உயர்ந்த கன்ன எலும்புகளும், கீற்றுப் போன்ற கண்களும் காணப்படுகின்றன. புருவத்திற்கும் மேலிமைக்கும் இடையே ஒரு சதைமடிப்புத் தெளிவாகக் காணப்படுகிறது. இச்சதைமடிப்பே கண்களுக்குக் கீற்றுப்போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இவ்வகையினரின் பலவேறு பிரிவுகளை அஸ்ஸாம், இந்தோ பர்மிய எல்லை, சிட்டகாங் ஜில்லா, நேபாளம், சிக்கிம், பூட்டான் முதலிய இடங்களில் காணலாம்.

இந்தியாவின் பொதுவான மக்கள் தொகுதியுள் மற்றைய மூன்று இனத்தொகுகளினின்றும் பெறப்பட்ட கூறுகளையும் காணலாம். இவற்றுள் மத்திய தரைக்கடல் பிரதேச இனவகையின் கூறே பெருவாரியாகும். ஆதி மத்தியதரைக்கடல் பிரதேச இனத்தை வான் எயிக்ஸ்டெட் என்பவர் மெலனாயீடு எனப் பெயரிட்டு (மெலனீசியா நீக்ரோக்களுடன் பிறப்பு வழியாக ஒற்றுமை பெற்ற இனம்), இருநூறு இலட்சம் தமிழர்களை இதனுள் வகைப்படுத்தினர். இத்தகைய வகைப்பாட்டிற்கு ஏற்ற சான் றில்லை. தமிழர்களுக்கும் மெலனாயிடு வகையினருக்கும் உடல் நிறத்திலன்றி, வேறு எவ்வகையிலும் ஒற்றுமை இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேச இனத்தவரான தமிழர்களுக்குத் தலைமயிர் ஆப்பிரிக்கா நீக்ரோக்களைப்போல் சிறு வளையங் களாகவோ, அல்லது மெலனீசியரைப்போல் பம்மென்றோ இல்லை. ஒருகால் தென்னிந்தியாவின் மிகுந்த வெப்பத்தினால், கரு நிறத்தையளிக்கும் ஜீன்கள் அதிகரித்து ஏற்கெனவே இவர்கள் பெற்றிருந்த கரிய நிறத்தைப் பெருக்கியிருக்கலாம். இவ்வளவில் நீக்ரோக்களை ஒத்திருப்பதன்றி, வேறு பிறப்பளவில் யாதோர் ஒற்றுமையும் இல்லை. மத்தியதரைக்கடல் பிரதேச இனம் ஐரோப்பிய வகைகளைச் சார்ந்தது. இவ்வினத்தவரே சிந்து சமவெளி நாகரிகத்திற்குக் காரணம் எனவும் ஊகிக்கலாம். வட இந்தியாவிலும் மற்றைப் பிரதேசங்களில் உயர்சாதியினருள்ளும் இவ்வினக் கூறுகள் பேரளவிற்குத் தோன்றுகின்றன. கீழ்நாட்டினரினம் பாஞ்சாலம், சிந்து, ராஜபுதனம், மேற்கு ஐக்கிய மாகாணம் முதலிய இடங்களில் காணப்படுகிறது.

ஆல்ப்பைன் அகன்ற மண்டையினத்தவரை சித்ராலில் உள்ளகோ, புருஷோ ஆகிய இடங்களிலும், கில்ஜித் முதலிய இடங்களிலும், நேபாளத்தில் பலவகையின்ரிடையும் காணலாம். தினாரிக் அகன்ற மண்டையினமோ வங்காளத்தில் தெளிவாகவும், ஒரிஸ்ஸா, கத்தியவார், கன்னடம், தமிழ் நாடு ஆகிய இடங்களிலும் தோன்றுகிறது. இவ்வினம் யாதொரு கலப்புமில்லாமல் சுய வடிவில் குடகு நாட்டவரிடைக் காணப்படுகிறது.

நார்டிக் இனமே ஆரியரெனப்படும் வேத கர்த்தாக்களுடன் சம்பந்தமுடைய இனமாகும். இவ்வினத்தைச் சிந்து நதியும் அதன் கிளைநதிகளும் பாயும் சமவெளிகளிலும், இந்துகுஷ் மலைவாசிகளான காப்பிரிகளிடையும், பாஞ்சாலத்திலும் ராஜபுதனத்திலும் உயர்சாதியினருள்ளும் காணலாம். மேற்கிந்தியாவிலும், கிழக்கில் வங்காளம் வரையிலும் ஆங்காங்கே இவ்வினக் கூறுகள் தோன்றுகின்றன. மகாராஷ்டிரத்தில் சித்பாவன் பிராமணர்களுள் அகன்ற மண்டையினத்தவரோடு கலப்புற்ற வகையில் இவ்வினக் கூறுகளைக் காணலாம்.

வேறு வேறு பிரதேசங்களில் வேறு வேறு அளவில் இவ்வினக் கூறுகள், வேறு இனங்களுடன் கலந்துள்ளன. அவ்வப் பிரதேசங்களில் பேசப்படும் மொழி வகைகளுக்கும் இன வகைகளுக்கும் யாதொரு இயைபுமில்லை. இதைப் போன்றே நாகரிகமும் சரித்திர சம்பந்த காரணங்களால் பரவியதாகும். எனவே. மொழி, நாகரிகம் என்பனவற்றை உடலுறுப்பு வேற்றுமைகளால் ஆகிய இன வகைகளோடு சேர்த்துக் குறிப்பது பிழையாகும். பீ. எஸ். கு.

மக்கள் தொகை

இந்திய யூனியனின் மொத்த மக்கள் தொகையும், அதன் தனித்தனி இராச்சியங்களின் மக்கள் தொகையும் அடுத்த பக்கத்தில் காட்டப்பட்டுள்ளன.

இந்திய யூனியனில் சதுர மைலுக்குச் சுமார் 296 மக்கள் வசிக்கின்றனர். வட இந்தியாவில் செழிப்புமிக்க வண்டல் நிலப் பகுதிகளிலும், கடற்கரைப் பிரதேசங்களிலும் மக்கள் இதைப்போல் இரு மடங்கு வசிக்கின்றனர். தென்னிந்தியாவில் மக்கள் நெருக்கமும், நாட்டின் மொத்த மக்கள் நெருக்கமும் சுமார் ஒன்றே எனலாம். 1951-ல் மொத்த மக்கள் தொகையில் 618 இலட்சம் பேர், அதாவது 17·6% நகரங்களில் வசிப்பவர். ஓர் இலட்சத்துக்குக் குறையாத மக்கள் தொகை உள்ளவை பெரிய நகரங்கள். அத்தகைய பெரிய நகரங்களில் வசிப்பவர் தொகை 241 இலட்சம்; அதாவது மொத்த நகர மக்கள் தொகையில் 39% ஆகும். பம்பாய் (28 இலட்சம்), கல்கத்தா (25 இலட்சம்), சென்னை (14 இலட்சம்), டெல்லி (புது டெல்லி உட்பட 12 இலட்சம்), ஐதராபாத் (11 இலட்சம்), இவ் வைந்து நகரங்களிலும் பத்து இலட்சத்துக்குமேல் மக்கள் இருக்கின்றனர். இந்தியாவில்

இந்திய யூனியன் மக்கள் தொகை அட்டவணை

இராச்சியங்கள் பரப்பு ச.மை. மக்கள் தொகை
1941 1951
ஏ.இராச்சியங்கள்
அஸ்ஸாம் * 85.012 75,93,037 90,43,707
ஆந்திரம் 63,000 2,05,07,801
உத்தரப்பிரதேசம் 1,13,409 5,65,31,845 6,32,15,742
ஒரிஸ்ஸா 60,132 1,37,67,988 1,46,45,946
சென்னை** 64,790 4,98,30,749** 3,65,08,201
பஞ்சாப் 37,378 1,26,98,903 1,26,41,205
பம்பாய் 1,11,436 2,29,81,146 3,59,56,150
பீகார் 70,330 3,6528,119 4,02,25,947
மத்தியப்பிரதேசம் 1,30,272 1,96,31,615 2,12,47,533
மே. வங்காளம் 30,775 2,18,37,295 2,48,10,308
பீ.இராச்சியங்கள்
அஸ்ஸாம் பழங்குடிப் பகுதிகள் † 5,60,000
ஐதராபாத் 82,168 1,63,27,119 1,86,55,108
சௌராஷ்டிரம் 21,451 35,60,700 41,37,359
திருவிதாங்கூர்- கொச்சி 9,144 75,00,057 92,80,425
பெப்சு 10,078 34,02,586 34,93,685
மத்திய பாரதம் 46,478 71,69,880 79,54,154
மைசூர் 29,489 73,37,818 90,74,972
ராஜஸ்தான் 1,30,207 1,33,06,232 1,52,90,797
விந்தியப்பிரதேசம் 23,603 33,66,649 35,74,690
ஜம்மு-காச்மீரம் 92,780 40,21,616 44,10,000
சீ.இராச்சியங்கள்
அஜ்மீர் 2417 5,83,693 6,93,372
இமாசலப் பிரதேசம் 10,451 9,47,375 9,83,367
கட்சு 16,724 5,07,880 5,67,606
குடகு 1,586 1,68,726 2,29,405
டெல்லி 578 9,17,939 17,44,072
திரிபுரா 4,032 5,13,010 6,39,029
பிலாஸ்பூர் 453 1,10,336 1,26,099
போபால் 6,878 7,78,623 8,36,474
மணிப்பூர் 8,628 5,12,069 5,77,635
டீ.இராச்சியங்கள்
அந்தமான், நிக்கோபார் தீவுகள் 3,215 33,768 30,971
சிக்கிம் 2,744 1,21,520 1,37,725
* பீ-பிரிவு பழங்குடிப் பகுதிகள் நீங்கலாக. ** ஆந்திரமும் சேர்ந்த மக்கள் தொகை.
† சரிபார்க்கப்படாத மதிப்பு. †† 1-3-1951-ல் தோராய மதிப்பு.

13 இலட்சம் ச. மைல் பரப்பில் 35·68 கோடி மக்கள் 1951-ல் வசித்தனர். 1941-ல் 31·48 கோடி மக்கள் வசித்தனர். இந்தப் பத்தாண்டுகளில் மக்கள் தொகை 12.5% மிகுந்திருக்கிறது. பாகிஸ்தானிலிருந்து இந்திய யூனியனுக்கு 75 இலட்சம் பேர் வந்து சேர்ந்திருக்கின்றனர் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. பிரிவினைக்கு முன், சென்ற 70 ஆண்டுகளில் மக்கள் தொகையின் பெருக்கம் வருமாறு:

இந்திய மக்கள் தொகைப் பெருக்கம்

ஆண்டு மக்கள் தொகை
1881 25,38,96,330
1891 28,73,14,671
1901 29,43,61.056
1911 31,51,56,396
1921 31,89,42,480
1931 35,28,37, 778
1941 38,89,97,955



1951

இந்திய யூனியன்
36,18,20,000
பாகிஸ்தான்
7,56,87.000

43,75,07.000

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

(Upload an image to replace this placeholder.)

அஸ்ஸாமில் சதுப்பான இடங்களில் வடிகால்களை அமைத்தும், காடுகளை அழித்தும், பஞ்சாபில் நீர்ப் பாசன வசதியை மிகுவித்தும், பயிர் செய்யக்கூடிய நிலத்தின் பரப்பைப் பெருக்கியிருக்கின்றனர். இந்தக் காரணத்தால் இந்த இரண்டு இராச்சியங்களிலும் மக்கள் தொகை சிறப்பாகப் பெருக்கம் அடைந்திருக்கிறது. அஸ்ஸாமில் மொத்தப் பெருக்கத்தில் காற்பாகம் பிரமபுத்திரா பள்ளத்தாக்கிலும், அதையடுத்த மலைச் சரிவுகளிலும் ஏற்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அதிகமாகி, அவற்றில் வேலை செய்வதற்குப் பல வெளியிடங்களிலிருந்து மக்கள் ஏராளமாக வந்து குடியேறி யிருக்கின்றனர். தென்னிந்தியாவின் பல பாகங்களில் மக்கள் தொகை அதிகரித்ததற்குக் காரணம் நீர்ப்பாசனம் மட்டுமன்று.

நெல் விளைவிப்பதற்கு ஏற்றவையல்லாத செழுமை குறைந்த நிலத்திலும் வேர்க்கடலை போன்ற பயிர்களை உற்பத்தி செய்யத் தொடங்கியதும் ஒரு முக்கிய காரணமாகும். மரண விகிதம் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாக உள்ளது. ஆயினும் மக்கள் தொகை கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் அதிகமாகப் பெருகியிருக்கிறது. இதற்குக் காரணம் கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறி நகரங்களிற் குடியேறியதேயாம். போக்குவரத்து மார்க்கங்கள் ஒழுங்காக ஏற்படுத்தப்பட்டு அபிவிருத்தி அடைந்ததால்தான், பல பெரிய பட்டணங்கள் வளர்ந்து வந்தன. சென்ற முப்பதாண்டுகளாக வளர்ந்துவரும் மோட்டார் போக்குவரத்தும் பட்டண வளர்ச்சிக்குக் காரணமாகும்.

ஆண்களின் தொகையும் பெண்களின் தொகையும் ஏறக்குறைய சமமாகவே உள்ளன. 1951-ல் ஆயிரம் ஆண்களுக்கு 947 பெண்கள் விகிதம் இருந்தனர். ஆயினும் ஒரிஸ்ஸா, சென்னை, திருவிதாங்கூர், கொச்சி, கட்சு முதலான இடங்களில் ஆண்களின் தொகையைவிடப் பெண்களின் தொகை அதிகம். இதற்குக் காரணம் ஆண்களிற் பலர் வேலை நிமித்தமாகத் தம் குடும்பங்களை விட்டுவிட்டு வெளி யிடங்களுக்குச் சென்றதேயாகும். அஸ்ஸாம், குடகு, பம்பாய் டெல்லி, மேற்கு வங்காளம் போன்ற மற்ற இடங்களில் ஆண்களின் தொகை அதிகம். வெளியூர்களிலிருந்து வேலைக்காகப் பலர் இங்கு வந்து சேர்ந்தமையே இதற்குக் காரணம்.

தொழிலை யொட்டி நாட்டின் மக்கள் தொகை அடியிற் காட்டியுள்ளபடி வகுக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களில் 69·8% உழவுத் தொழில் செய்து பிழைப்பவர்; 30% வேறு தொழில் செய்பவர். பீகார், அஸ்ஸாம், இமாசலப் பிரதேசம், விந்தியப் பிரதேசம் போன்ற சில இடங்களில் உழவுத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி. மேற்கு வங்காளம், பம்பாய் போன்ற அபிவிருத்தி யடைந்துள்ள பகுதிகளில் மற்றைத் தொழில் செய்வோரின் தொகை மிகுதி.

உழவுத் தொழில் செய்வோரின் செய்வோரின் தொகை மிக அதிகம்; ஆனால் பயிரிடுவதற்குத் தகுதியாயுள்ள நிலப் பரப்புக்குறைவு. நபருக்கு 0.7 ஏக்கர் வீதந்தான் தேறும். காடுகளின் பரப்பும் மிகக் குறைவு. தலைக்கு 0·24 ஏக்கர் தான் வரும். நிலத்தின் உற்பத்தி வன்மையும் குறைவு. பயிர் செய்யும் முறையே அதற்குக் காரணம். விரைவாய்ப் பெருகும் மக்களின் தொகையை ஆதரிப்பதற்குத் தொழில் வளம் பெருகவேண்டும். உழவனைவிடத் தொழிலாளி மும்மடங்கு சம்பாதிக்க முடியுமாதலின்


உழவுத்தொழில் செய்வோர்


வகைமக்கள் தொகை
பிற தொழிலினர்


தொழில்மக்கள் தொகை  

சொந்தத்தில் பயிரிடுவோரும்
அவரைச் சார்ந்தோரும்.

16,73,46,501

உற்பத்தித் தொழில்

37.6,60,197

சொந்தமில்லாத நிலங்களை
வைத்துப் பயிரிடுவோரும்
அவர்களைச் சார்ந்தோரும்

3,16,39,719

வாணிகம்

21,3,

பயிரிடும் உழைப்பாளிகளும்
அவரைச் சார்ந்தோரும்.

4,48,11,928

போக்குவரத்து

5,6,20,128

நிலம் பயிரிடாமல் நில வரு
மானம் வாங்குவோரும்
அவரைச் சார்ந்தோரும்.

53,24,301

பிறதொழில்களும் பணி
களும்

42,9,82,744

மொத்தம்



24,91,22,449

மொத்தம்



10,75,71,940

தொழில் வளப் பெருக்கத்தால் வாழ்க்கைத்தரம் உயரும். பீ. எம். தி.

ஆதிக்குடிகள்

1941ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள ஆதிக்குடி மக்களுடைய தொகை சுமார் 250 இலட்சமாகும். அந்த ஆண்டுக்குப் பிறகு இந்திய மக்களுடைய தொகை 13 சதவிகிதம் கூடியிருக்கிறது. இப்படிக் கூடியதில் எவ்வளவு ஆதிக்குடிகளின் பெருக்கம் என்று தெரிவதற்கில்லை. 1941-1951 ஆகிய பத்து ஆண்டுகளில் அநேக ஆதிக்குடிமக்கள் இந்துக்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் ஆயிருக்கிறார்கள். இப்போது (1951) இவர்கள் தொகை 17 இலட்சம்.

பீகார், ஒரிஸ்ஸா இரண்டிலும் சேர்த்து 9 இலட்சம்; மேற்கு வங்காளத்தில் 1 இலட்சம் ; மணிப்பூரில் 1 இலட்சம் ; அஸ்ஸாமில் 51 இலட்சம் ஆதிக்குடிகள் இருக்கின்றனர்.

சில ஆதிக்குடிகளிடையே மக்கள்தொகை குறைந்து வந்திருக்கிறது; சில குடிகளிடையே பெருகியிருக்கிறது. அதனால் சிலர் இந்துக்களாக ஆகியிருந்த போதிலும், மொத்தத்தில் இந்திய மக்களுடைய தொகை பெருகியிருக்கும் விகிதத்திற்கேற்ற அளவு ஆதிக்குடி மக்களுடைய தொகை மாறுதலடையவில்லை என்று கூறலாம்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள தாருக்கள் (Tharus) 'சிங்' என்று அடைமொழி சேர்த்துக்கொண்டு தங்களை இராஜபுத்திரர் என்று கூறிக் கொள்கிறார்கள். அரசியலாரும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் இப்போது தாக்கூர்கள் என்றும், ரானா தாக்கூர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆதிக்குடிகள் அனைவரும் ஆதிக்குடி மதங்களைத் தழுவுவதாகக் கணக்கெடுப்போரிடம் கூறுவதில்லை. அதனால் அவர்களுடைய எண்ணிக்கை இது என்று நிச்சயிக்க முடிவதில்லை. பல ஆதிக்குடிகள் இரண்டு மொழிகள் பேசுகிறார்கள். பலர் தங்கள் தாய்மொழியை விட்டுவிட்டு, இப்போது தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மொழியைப் பேசுகிறார்கள்.

ஆதலால் ஆதிக்குடிகள் என்று நிச்சயிப்பதற்குப் பயன்படும் அமிசங்கள் அவர்கள் தங்கும் நிலப்பரப்பும், அவர்களுடைய சமூக அமைப்புமாகும்.. இந்தச் சமூக அமைப்பு, சாதியமைப்பில் உள்ளதுபோன்ற ஒன்றையொன்று சார்ந்துள்ள பல பொருளாதாரப் படிகள் இல்லாமல், தம்தம் தேவையைத் தாமே பூர்த்தி செய்து கொள்ளும் திறமையுடையது. சாதி என்பது ஒரு சமூகக் குழு. ஆதிக்குடி என்பது ஒரு பிரதேசக் குழு. ஒரு சாதியினர் பல பகுதிகளில் வசிப்பர். ஆனால் ஒரே ஆதிக்குடியைச் சேர்ந்தவர் ஒரே பகுதியில்தான் காணப்படுவர். அதனுடன் ஆதிக்குடிகள் அரசியல் அமைப்பு உடையவர்களாயுமிருப்பர். நாகர்கள் போன்ற அஸ்ஸாம் குடிகளிடையே தலைவர்கள் ஆட்சியும், பெரும்பாலான மற்றக் குடிகளிடையே ஜனநாயகமும் காணப்படும்.

பிரதேசவாரியாக ஆதிக்குடிகளை 1. வடமேற்கு எல்லைப்புற ஆதிக்குடிகள், 2. வடகிழக்கு எல்லைப்புற ஆதிக்குடிகள், 3. உள்நாட்டு ஆதிக்குடிகள் என முதல்வகைக் குடிகள் மூன்றுவகையாகப் பிரிக்கலாம். பாகிஸ்தானில் உளர். மற்ற இருவகையாரையும் அவர்கள் பண்பாட்டையும் பயிலும் மொழியையும் வைத்துப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். வடகிழக்கு எல்லைப் புறத்துக்குடிகள் தாய்வழி உரிமை, தந்தைவழி உரிமை இரண்டையும் தழுவுகின்றனர். காசிகளும், காரோக்களும் தாய்வழி உரிமையைப் பின்பற்றினும் பிரதானமாயிருப்பது தந்தைவழி உரிமையே. உள்நாட்டுக் குடிகள் ஆஸ்திரிக் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் எனவும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் எனவும் இரண்டு பகுதியினர் ஆவர். பில்லர் குடிகளுடைய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளையும், இமாலயக் குடிகளின் மொழிகள் ஆஸ்திரலாயிடு அல்லது திபெத்- சீன மொழிகளையும் சேர்ந்தவையாகும்.

வடமேற்கு எல்லைப்புறக் குடிகள் ஆப்கன், பலோச்சு வகுப்பினரையும், வடகிழக்கு எல்லைப்புறக் குடிகள் மங்கலாயிடு வகுப்பினரையும் ஒத்திருக்கிறார்கள். உள்நாட்டுக்குடிகள் 1. பில்-கோலி குழுவினர், 2. கோண்ட்-கோயா குழுவினர், 3. முண்டா குழுவினர் என மூவகைப்படுவர். உள்நாட்டுக் குடிகளில் பெரும்பாலோர் ஆதி (Proto) ஆஸ்திரலாயிடு வமிசத்தைச் சேர்ந்தவர்கள். சில பகுதிகளில் ஆதி-மத்தியத் தரைக் கடல் வமிசமும் கலந்திருக்கலாம்.

ஆதிக்குடிகள் நிலப்பகுதிகளை வைத்துப் பிரிக்கப்படினும், அவர்கள் பரந்த நிலப்பகுதியில் காணப்படுகின்றனர். ஒரே ஆதிக்குடி பல பிரிவுகளாகப் பிரிந்திருக்கும். ஒரு பிரிவு ஒரு மாகாணத்தில் 'ஆதிக்குடி' என்றும், மற்றொரு மாகாணத்தில் 'சாதியினர்' என்றும் மக்கள் தொகைக்கணக்கில் சேர்க்கப்படுகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் வேலைசெய்யும் ஆதிக்குடி மக்கள் 'கூலி சாதியினர்' என்று அழைக்கப்படுகின்றனர். பஞ்சாரர் என்னும் குற்றப் பரம்பரைக் குடிகள் சென்னை ராச்சியத்தில் சுகலிகள் என்றும் மற்ற இராச்சியத்தில் கஞ்சார்கள் என்றும் அழைக்கப்பெறுகிறார்கள். சவரர்கள் ஒரிஸ்ஸாவில் ஆதிக்குடி மக்கள் ; ஆனால் அவர்கள் கிழக்கு இராச்சியங்களில் சகாலியர் என்னும் வேளாளர் ஆவர். கத்தியவாரிலுள்ள வாகர்களும் வட இந்தியாவிலுள்ள குற்றப்பரம்பரைக் குடிகள் பலரும் இந்துக்களாகவும் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.

சென்ற 50 ஆண்டுகளில் ஆதிக்குடிகள் அடைந்துள்ள வளர்ச்சி வருமாறு :

1. சில ஆதிக்குடிகளின் தொகை குறைந்துகொண்டு வருகிறது. உதாரணம் : உத்தரப் பிரதேசத்திலுள்ள கோர்வாக்கள், பீகாரிலுள்ள பிரோர்கள்.

2. சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் சேர்ந்ததால் ஏற்பட்டுள்ள பண்பாட்டுச் சீர்குலைவால் அவர்களுடைய தொகை பெருகும் விகிதம் குறைந்துவருகிறது. உதாரணம்: நாகர்கள், ஒரிஸ்ஸாவிலுள்ள கோண்டுகள்.

3. பீகாரிலுள்ள ஹோக்கள், சந்தால்கள், முண்டாக்கள் போன்ற சில ஆதிக்குடிகள் நாகரிக மக்களுடன் இணைந்து போகக் கூடியவர்களாயிருப்பதால் அழிந்துபோகாமல் நிலைத்துநிற்கக் கூடிய வன்மை யுடையவர்களாயிருக்கிறார்கள்.

ஆதிக்குடிகள் மூன்றுதரமான பண்பாடு உடையவர்களாயிருக்கிறார்கள்: 1. இந்துமதத் தொடர்பு சிறிதும் இல்லாத ஆதிக்குடிகள். இவர்களே உண்மையான ஆதிக்குடிகள் எனப்படுகிறார்கள். இந்து மதமோ, நாகரிகமோ போய் எட்டாத இடங்களில் வசிப்பதே இவர்கள் இப்படி இருப்பதற்குக் காரணம். ஆதிக்குடிகள் இந்துக்களுடைய பழக்கவழக்கங்களைத் தழுவியும், தாழ்ந்த சாதி மக்களுடன் ஒன்றுசேர்ந்தும், ஓரளவு பண்பாடு அடைந்தும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் இந்துக்களுடைய சாதி முறையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. 3. சில ஆதிக்குடிகள் இந்துக்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ பண்பாடு அடைந்து, தாழ்ந்த சாதி மக்களுடன் சேர்த்து எண்ணப்படுகிறார்கள். இவர்கள்தாம் இப்போது அரசியல் உணர்ச்சியுடைய ஆதிக்குடிகளாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

நாகரிக மக்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆதிக் குடிகள் நலிவு அடைவதுபோலவே பிழைப்புக்காக விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள். இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச் சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில் செம்புவேலை, கல்கத்தாவில் சணல் வேலை. இத் தொழில்களில் ஈடுபடும் ஆதிக்குடி மக்கள், தங்கள் கிராமங்களைவிட்டு வேறிடம் சென்று, வேறுவிதப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும்.

பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில் உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல் உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால் அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத் தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகியிருப்பதால், இனிமேல் அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசியமாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதைவிட அவசியமாகும்.

ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்:

1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில் ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது.

2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும்.

அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும் கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனுதாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம். முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில் அவர்களைக் கைதூக்கி விடுவதாகும். அதனுடன் சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடிகளைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து, நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். டீ. என். ம.

மொழிகள்

இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951). ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள் அடங்குவனவாம்.

திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்துவந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள். இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமியைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை, மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளிலும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 1·3% ஆவர்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர். தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும் இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின்றனர். சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும் முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழிகளில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வடமேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது. வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரையிலும், தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்படுகிறது. வட கிழக்கே சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே. மலையாளக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும் எரவர் மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும். மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும், பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர். சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு. இம் மொழிகளைப் பேசுவோர் தொகை:

இலட்சம்
தமிழ் 200
தெலுங்கு 260
கன்னடம் 110
மலையாளம் 90
துளு 1

மொத்தம் 661

இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ-ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக் கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள் வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி, ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத் தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில் முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள் மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம் என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிரதேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்படி முறையே இங்குப் பேசப்பட்டு வந்துள்ளன. இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாகவும் கலாசார மொழியாகவும் விளங்கின. இந்தி மொழி இலக்கியத் துறையில் இந்தி என்றும் உருது என்றும் இரு மொழிகளாகப் பிரிந்துவிட்டது. மொகலாயச் சிப்பாய்களுக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே எழுந்த வியாபாரத் தொடர்பால் பிறந்த மொழி உருது. இந்தியில் வடமொழிச் சொற்கள் மிகுந்தன ; வடமொழி யறியாத முஸ்லிம்கள் பாரசீக மொழியினின்றும் பல சொற்களைப் புகுத்தினர். இந்து-முஸ்லிம் பிளவு மிகவே, உருது பாரசீக மொழிப் பண்புகளைப் பெரிதும் ஏற்றுப் பாரசீக-அரபு லிபியிலும், இந்தி வடமொழிப் பண்புகளை ஏற்று நாகரி லிபியிலும் எழுதப்படலாயின. இந்துஸ்தானி என்பது இந்தியின் எளிய வடிவமுடையதும், நாட்டில் பெரும் பகுதியில் வழங்கி வருவதுமான மொழி. இதை நாட்டு மொழியாக்குவதே காந்திஜியின் விருப்பம். இந்திய ஐக்கியத்தின் தேசிய மொழி இந்தி. 1950 லிருந்து, 15 ஆண்டுகளுக்கு இராச்சிய நிருவாகத்திற்கும் மேற்படிப்பிற்கும் ஆங்கில மொழியே பயன்படும்.

இந்தோ ஆரியமொழிகளுள் முக்கியமானவற்றைப் பேசுவோர் மொத்தத் தொகை 2,570 இலட்சமாகும். இவற்றுள்

இலட்சம்
1. இந்தி பேசுவோர் தொகை 635
2. மராத்தி ,, 210
3. ஒரியா ,, 110
4. வங்காளி ,, 535
5. அஸ்ஸாம் ,, 20
6. பீகாரி ,, 370
7. பஞ்சாபி ,, 250
8. குஜராத்தி ,, 110
9. சிந்தி ,, 40
10. ராஜஸ்தானி ,, 140

அஸ்ஸாம். நேபாள மலையின் அடிவாரத்தில் வசிக்கும் லெப்சாஸ் போன்ற இமாலய ஆதிக்குடிகள் பேசும் திபெத்தோ-சீனமொழிக் கூட்டத்தில் முக்கியமானவை நேபாளத்திலுள்ள வோரியும் மணிப்பூரிலுள்ள மணிப்புரியுமாகும். இவற்றைப் பேசுவோர் தொகை சு. 40 இலட்சம். ஏ. சீ.

மதங்கள்

இந்தியாவில் பல மதங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் இந்து, இஸ்லாம், பார்சி, கிறிஸ்தவம் என்பன தனித்தனி மதங்கள். இந்து மதத்திலிருந்து பிரிந்து தனியாக நிற்கும் மதங்கள் பௌத்தம், ஜைனம், சீக்கியம் என்பன வாகும். இவை தவிர ஆதிக் குடிகளுடைய மதம் என்று ஒன்றுண்டு. அந்த மதமும் ஓரளவு இந்து மதத்தில் ஒன்றாகக் கலந்துவிட்டதென்று கூறலாம்.

1951ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்குப்படி இந்தியாவிலுள்ள மதத்தினர் தொகையும் விகிதமும் வருமாறு:

மதத்தினர் இலட்சம் சதவிகிதம்
இந்துக்கள் 3,032 84.99
முஸ்லிம்கள் 354 9.93
கிறிஸ்தவர் 82 2.30
சீக்கியர் 62 1.74
ஆதிக்குடிகள் 17 0.47
ஜைனர் 16 0.45
பௌத்தர் 2 0.06
பார்சிகள் 1 0.03
பிறர் 1 0.03


மொத்தம் 3,567 100.00


கங்கை ஆற்றின் கழிமுகம், சிந்து நதியும் அதன் உபநதிகளும் பாயும் இடம் ஆகிய பகுதிகளில் தவிர, இந்தியாவில் மக்கள் நெருக்கமாக இருக்கும் பகுதிகளிலெல்லாம் இந்துக்களே மிகுதியாக வாழ்கின்றனர். இந்துக்கள் மிகுதியாக வாழும் கங்கையாற்றின் பிரதேசமும் தென்கிழக்குக் கடற்கரையும் தொன்று தொட்டு இந்திய நாகரிகத்தின் நடுக்களங்களாக இருந்து வருகின்றன. டெல்லிக்கும் காசிக்கும் இடையிலுள்ள பகுதி இந்து மதம், பௌத்த மதம், ஜைன மதம் ஆகியவற்றின் பிறப்பிடமாம். ஆனால் பௌத்த மதத்தினரும் ஜைன மதத்தினரும் இந்தப் பகுதியில் இப்பொழுது மிகவும் குறைந்த தொகையினராகவே உளர்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம்களுள் பெரும்பாலோர் இஸ்லாம் மதத்தைத் தழுவிய இந்துக்களே யாவர். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராக உள்ள பகுதிகள் பஞ்சாபும், லாகூருக்கு மேற்கேயுள்ள வடமேற்கு இந்தியாவும் ஆகும். இவர்கள் இந்துஸ்தானத்தின் நடுப்பகுதியில் குறைவாகவும், கிழக்குப் பகுதியில் அதாவது கங்கை யாற்றுப் பள்ளத்தாக்கிலும் கழிமுகத்திலும் மிகுதியாகவும் காணப்படுகிறார்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையோராகவுள்ள பகுதிகள் 1947 முதல் பாகிஸ்தான் என்னும் தனி அரசாகவும், ஏனைய இந்தியப் பகுதிகள் இந்திய ஐக்கியம் என்னும் தனி அரசாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.

சீக்கியர்கள் என்போர் மதச் சீர்திருத்தம் செய்ய எழுந்த ஒரு குழுவினர். பின்னர் அரசியல் அமைப்பும் வகுத்துக் கொண்டனர். அவர்கள் மிகுதியாகவுள்ள பகுதி சட்லெஜ் நதிக்கும் செனாப் நதிக்கும் இடையிலுள்ளதாகும். பெரோஸ்பூர் என்னும் நகரத்துக்குத் தெற்கேயுள்ள ஒரு சிறு பகுதியில் இவர்கள் 50 சதவிகிதத்துக்கு அதிகமாகக் காணப்படுகிறார்கள்.

இந்தியாவிலுள்ள முக்கிய மதத்தினருள் கிறிஸ்தவர்களை மூன்றாவதாகக் கூறலாம். இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் சிரியன், ரோமன் கத்தோலிக், பிராட்டெஸ்டென்டு என மூன்று பிரிவுகள் உள. இந்த மூன்றும் இஸ்லாமைப் போல மேற்கேயிருந்து வந்தவையாகும். அவற்றுள் சிரியன் கிறிஸ்தவ மதமே முதன் முதல் வந்தது. இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்களுள் மூன்றில் இரண்டு பகுதியினர் உள்ள இடம் திருவிதாங்கூர்-கொச்சி, சென்னை ஆகிய இரண்டு இராச்சியங்களாகும். திருவிதாங்கூர்-கொச்சி இராச்சி யத்திலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பகுதியார் கிறிஸ்தவர்கள். அடுத்தபடியாக இவர்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகள் பம்பாயும் பஞ்சாபுமாம்.

ஜைனர்கள் மிகுதியாகவுள்ள பகுதிகள் கத்தியவாரும் பம்பாயுமாகும். ஆனால் எந்தப் பகுதியிலும் ஐந்து சதவிகிதக்திற்கு மிகுதியாக அவர்கள் இல்லை. பௌத்தர்கள் பெரும்பாலும் இமயமலைச் சாரலிலேயே காணப்படுகிறார்கள். பார்சிகள் மிகவும் குறைந்த தொகையினர்; ஜாரதூஷ்டிர மதத்தைத் தழுவுபவர்கள் உலகத்தில் பார்சிகள் மட்டுமே. பார்சிகளில் பாதிப்பேர் பம்பாய் நகரத்திலேயே வசித்து வருகிறார்கள். ஆதிக் குடிகளுள் பெரும்பாலோர் இந்தியாவின் நடுப்பகுதிகளிலும், கிழக்குப் பகுதியிலுள்ள காடுகள் நிறைந்த குன்றுகளிலும் வசிக்கிறார்கள். ஏ. சீ.

வெளிநாடுகளில் இந்தியர்

இந்தியர் இரண்டு மூன்றாயிரம் ஆண்டுகட்கு முன்பே கிழக்கு மேற்கு நாடுகளுடன் வாணிபம் செய்து வந்தனர் என்பதற்கும், அந்நாடுகளில் குடியேறி அங்கே தமது நாகரிகத்தைப் பரப்பினர் என்பதற்கும் போதிய சான்றுகள் உள்ளன (பார்க்க: தமிழர் — பிற நாடுகளில் தமிழர்).

சென்ற நூற்றாண்டில் இந்திய நாடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தமையால், இந்திய மக்கள் அயல் நாடுகளுக்கு முன்னாட்களிற்போலச் சுதந்திர மக்களாகச் செல்லாமல் வேலை தேடிச் செல்லும் நிலைமை உண்டாயிற்று. 1833-ல் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தில் (நீக்ரோ) அடிமை முறை ஒழிக்கப்பட்டது. அதனால் பிரிட்டிஷார் நீக்ரோக்களுக்குப் பதிலாக இந்தியரைத் தங்கள் குடியேற்ற நாடுகளுக்குக் கொண்டுபோய்க் கூலிகளாகப் பயன்படுத்த விரும்பினார்கள். இந்திய அரசாங்கம் அதற்குச் சம்மதித்தது. அதன் பயனாக 1834-ல் எண்ணாயிரம் இந்தியர்கள் 'முறிச்சீட்டு முறை'யில் மோரீசுக்கும் பிரிட்டிஷ் கயானாவுக்கும் சென்றனர். அதன் பின்னர் இந்திய மக்கள் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு மட்டுமன்றிப் பிரெஞ்சு, டச்சுக் குடியேற்ற நாடுகளுக்கும் செல்லலாயினர். பலவிதக் கொடுமைகளுக்கும் காரணமாயிருந்த முறிச்சீட்டு முறை காந்தியடிகள், கோகலே, ஆண்ட்ரூஸ், போலக் போன்ற பெரியார்கள் செய்த கிளர்ச்சியால் 1920-ல் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதனால் விடுவிக்கப்பெற்ற கூலிகளுள் சிலர் இந்தியாவுக்குத் திரும்பினர். சிலர் அந்த நாடுகளிலேயே தங்கினர். அவர்களுள் வெகுசிலரே பணம் தேடவும் நல்வாழ்வு பெறவும் கூடியவர்களாயிருந்தார்கள். முறிச் சீட்டு முறையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூலிகளாகச் சென்ற காலத்திலேயே இந்திய மக்களில் சிலர் வியாபாரிகளாகவும், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் அங்குச்சென்று தொழில்செய்து வந்தார்கள்.

இந்த இந்திய மக்களுள் பிரிட்டிஷ் குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்கள் பிற குடியேற்ற நாடுகளில் வாழ்ந்தவர்களைக் காட்டிலும் இழிவாக நடத்தப்பட்டார்கள். அதிலும் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்படும் விதம் கொடுமையானது.

1. தென் ஆப்பிரிக்கா : இந்தியர்கள் தென் ஆப்பிரிக்காவுக்கு முறிச்சீட்டு முறையில் முதன்முதலில் சென்றது 1860லாகும். இவர்களுடைய உழைப்பு அந்த நாட்டின் வளத்திற்குப் பெரிதும் காரணமாயிற்று என்பதை அங்குள்ள ஐரோப்பியர்களே பல முறை ஒப்புக்கொண்டுளர். ஆயினும் அவர்கள் பலவிதமான சட்டங்கள் செய்து, இந்திய மக்கரை ஒரு சார்பாக நடத்த முயன்று வந்தார்கள். அதை எதிர்த்துச் சத்தியாக்கிரக இயக்கத்தைக் காந்தியடிகள் தோற்றுவித்தார். இந்தியர்களை வேறுபடுத்தி நடத்தக்கூடாது என்று ஐக்கிய நாட்டு ஸ்தாபனம் 1946-ல் செய்த தீர்மானத்தையும் தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் புறக்கணித்தது.

தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர்களுள் பலர் சொத்துக்கள் வாங்கியுள்ளனர். இந்திய மக்களுக்கெனப் பாடசாலைகள் நிறுவியுள்ளார்கள். மூன்று பத்திரிகைகள் நடைபெறுகின்றன. இந்தியர்களும் ஆப்பிரிக்கக் குடிகளும் நேசபாவத்துடன் ஒத்துழைத்து வருகின்றனர். இப்போது தென் ஆப்பிரிக்காவிலுள்ள இந்தியர் தொகை 2,82,407 (1946).

2. கிழக்கு ஆப்பிரிக்கா: இங்குள்ள இந்தியரின் தொகை 1,69,000 (1946). இந்தப் பகுதியில் கெனியா, டாங்கன்யீக்கா, யுகாண்டா என மூன்று பிரிவுகள் உள்ளன. இங்கு இந்தியர் நிலைமை தென் ஆப்பிரிக்காவிற் போல் அத்துணை இழிவாக இல்லை. இங்குள்ளவர்க்கு வாக்குரிமை உண்டு. ஆயினும், இங்கும் பல சட்டங்களை இயற்றி, இந்தியரை நாட்டைவிட்டு. அகற்ற ஐரோப்பியர் முயன்று வருகின்றனர்.

3. சான்சிபார் : இந்தியர் தொகை 16,000 (1946). இவர்கள் கிராம்பு வியாபாரத்தினால் பிழைப்பவர்கள். அந்த வியாபாரத்தை இந்தியர்கள் மேற்கொள்ளாமலிருக்க ஐரோப்பியர் பலவிதமான சட்டங்களை இயற்றி வருகிறார்கள். இந்தியர் மூன்று பத்திரிகைகள் நடத்தி வருகிறார்கள்.

4. மோரீசு: இந்தியர் தொகை 2,71,635. இந்தத் தீவின் மொத்த மக்கள் தொகையில் 65%. ஆயினும் இவர்களுள் பெரும்பாலோர் பிரெஞ்சுக்காரர்களுடைய கரும்புத் தோட்டங்களிலும் கரும்பாலைகளிலும் வேலைசெய்யும் கூலிகளாகவே இருந்து வருகிறார்கள். ஒருசிலர் மட்டும் சொத்துடையவர்களாக இருக்கிறார்கள். என்றாலும் இவர்கள் நிலைமை அவ்வளவு தாழ்வாக இல்லையென்றே கூறவேண்டும். 1948-ல் நடந்த தேர்தலில் மொத்தம் 19 பேர்களுள் பதினொரு இந்தியர்கள் சட்டசபை உறுப்பினர்கள் ஆனார்கள். இங்கு இந்தியர்கள் ஆறு பத்திரிகைகள் நடத்திவருகிறார்கள்.

5. இலங்கை : இந்தியர் தொகை சுமார் 7 இலட்சம் (1952). இவர்களுள் பெரும்பாலோர் தமிழர்கள். இலங்கை 1802-ல்தான் இந்தியாவைவிட்டுப் பிரிந்து கிரௌன் குடியேற்ற நாடாக ஆயிற்று. அதுமுதல் நூறு ஆண்டுவரையில் தென்னிந்திய மக்கள் அங்கேயுள்ள தேயிலை, ரப்பர், காப்பித் தோட்டங்களில் வேலை செய்வதற்குக் கூலிகளாகச் சென்றனர். இலங்கை அரசாங்கம் இந்தியர்களுக்கு விரோதமாகச் சில சட்டங்களை இயற்றியுள்ளது; இப்பிரச்சினை இந்திய அரசாங்கத்தின் கவனிப்பில் இருந்து வருகிறது.

6. பர்மா: இந்தியர் தொகை 10.17,825 (1952) பர்மா 1935வரை இந்தியாவின் ஒரு பகுதியாயிருந்தது. இந்தியர்கள் அங்குப் பல தொழில்களைச் செய்து, அந்த நாட்டை வளம்படுத்தித் தாங்களும் வாழ்ந்து வந்தனர். ஆனால் பர்மா சுதந்திரம் பெற்றபிறகு அங்கே இவர்கள் அன்னியர் நிலைமையிலேயே இருக்கின்றனர்.

7. மலேயா : இந்தியர் தொகை 5,77,000 (1952). இவர்களே அங்குள்ள மூன்றாவது பெரிய இனத்தார். பெரும்பாலோர் தோட்டக் கூலிகளாகச் சென்றனர். அரசாங்கம் இந்தியர்களுக்குச் சாதகமாக இல்லாமற் போகவே இந்திய அரசாங்கம் இவர்களை அங்குச் செல்லாமல் தடுத்தது.

8. பீஜி: இந்தியர் தொகை 1,48,802(1952). இது மொத்த மக்கள் தொகையில் 47%. தென் ஆப்பிரிக்காவில் உள்ளதுபோல இங்கு இனப் பிரச்சினை இல்லை. இந்திய மக்கள் இங்கு நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். இந்தியாவிலிருப்பதைவிட இங்கு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அதிகம். இவர்கள் ஐந்தாறு பத்திரிகைகள் நடத்துகிறார்கள்.

9. மேற்கு இந்தியத் தீவுகள்: இங்கு இந்தியர்கள் 1832-ல் முறிச்சீட்டு முறையில் சென்றார்கள். நூறு ஆண்டுகளாக இந்திய அரசாங்கம் அவர்களைக் கவனிக்கவில்லை. அதனால் அங்குள்ள மக்கள் பெரும்பாலும் மேனாட்டு நாகரிகத்தை ஏற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களிடையே சாதி வேற்றுமை இல்லை. பொருளாதாரத் துறையிலும் அரசியல் துறையிலும் இவர்கள் நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். கீழ்க்கண்ட இடங்களிலுள்ள இந்தியர்களின் தொகை; ஐமெய்க்கா: 25,000 (1952), டிரினிடாடும் டோபாகாவும் : 2,14,177 (1952).

10. பிரிட்டிஷ் கயானா: இந்தியர் தொகை 1,90,880 (1952). மொத்தத் தொகையில் இந்தியர் தொகை 47%.

வரலாற்றுத் தொடக்கக் கால இந்தியா

வரலாற்று முற்காலம் (Pre-history), வரலாற்றுத் தொடக்கக் காலம் (Proto-history) என்பவை மனித நாகரிகத்தின் இரு படிகளைக் குறிக்கின்றன. இவற்றுள் முதலாவதில் எவ்வகையான எழுத்துப் படிப்பும் இல்லை எனக் கருதப்படுகிறது. இரண்டாவதில் எழுத்துப் படிப்பு அறியப்பட்டிருந்தது. எழுத்து மூலமாகவும் கர்ண பரம்பரையாகவும் வரும் மரபுகள் அக் காலத்தில் இலக்கியமும் இருந்தது என்பதைத் தெளிவாக்குகின்றன. ஆனால் இந்த இலக்கியத்தின் அடையாளங்கள் இப்போது கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அவற்றை இதுவரை யாரும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆகையால் வரலாற்றுத் தொடக்கக் காலமானது ஏதாவது ஒரு நாளில் வரலாற்றுக் காலமாக மாறிவிடக் கூடும். வரலாற்றுக் காலத்தின் பண்பாடும் நாகரிகமும் வரலாற்றுத் தொடக்கக் காலத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த வரையறைப்படி இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்தில் பின்வரும் இரண்டு காலங்களும் அடங்கும் : (1) வரலாற்றுமுன் கற்காலப் பண்பாடுகளைப் பின் தொடர்ந்ததும், வட இந்தியாவில் வரலாற்றுக் காலத்திலே அறியப்படும் அரச வமிசங்களின் (சு. கி. மு. 600-500) தோற்றத்தைக் குறிப்பதுமான காலம். சிந்து, ராஜபுதனம்,பஞ்சாப் உட்பட்ட வடமேற்கு இந்தியாவில் சிந்து நதி நாகரிகம் தழைத்து நின்ற காலம் அதுவாகும். அக் காலத்தில் ஒருவித எழுத்து வழக்கிலிருந்தது. அதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. (2) வேதங்களிலும் பிராமணங்களிலும், உபநிடதங்களிலும், முக்கியமாகப் புராணங்களிலும் விவரிக்கப்படும் காலம். நாட்டை ஆண்ட பல வமிசங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் இவற்றைப் பற்றிய திருத்தமான சான்றுகள் இதுவரை கிடைக்கவில்லை.

ஹாரப்பாவிலும், மொகஞ்சதாரோவிலும், சான்னுதாரோவிலும் நடைபெற்ற அகழ்தலிலிருந்து (Exca- vation) சிந்து நதி நாகரிகத்தின் தோற்றத்தைப்பற்றிய உண்மை எதுவும் கிடைக்கவில்லை. மேய்ச்சல் தொழிலை முக்கியமாகக் கொண்ட கிராமிய இனங்கள் சில இந்திய - பாரசீக எல்லையின் சமவெளிகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்தன என்றும், அவைகளே நாளடைவில் இந்த நகர நாகரிகத்தைத் தோற்றுவித்தன என்றும் கருதலாம். பாரசீகத்தினால் இந்த நாகரிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இதுபற்றி நிச்சயமாக ஒன்றும் கூறுவதிற்கில்லை. சிந்து நதி நாகரிகத்திற்கு முற்பட்ட பண்பாட்டைப் பற்றி எழுத்து மூலமாக ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சாயந் தீட்டப்பெற்ற அக் கால மட்பாண்டங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்து, அக்காலத்தில் வெவ்வேறான நான்கு பண்பாடுகள் இருந்திருக்க வேண்டும் எனப் பிரித்தறியப்பட்டுள்ளது. அவை குவெட்டா பண்பாடு, ஆம்ரிநால் பண்பாடு, குட்லி பண்பாடு, ஷோப் பண்பாடு எனப்படும். இவற்றுள் இரண்டாவதன் வழியில் சிந்து நதிப் பண்பாடு தோன்றியது. ஆனால் ஆம்ரிநால் பண்பாடே சிந்து நதி நாகரிகத்திற்குக் காரணமானது என்று கூறுவதற்கில்லை.

தற்காலத்திய சிந்துவிலும், பஞ்சாபிலும், பலூச்சிஸ்தானத்திலும், ராஜபுதனப் பகுதிகளிலும் சுமார் 1,000 மைல் நீளம், 400 மைல் அகலப் பரப்பில் இந்நாகரிகம் பரவி இருந்தது. அப்போது இப் பகுதிகளின் தட்பவெப்பம் இன்றுள்ள அளவுக்கு வறட்சியாக இருக்கவில்லை. பருவ மழையினால் பயன்பெற்ற இப் பிரதேசங்களில் ஓடிய பெரு நதிகள் போதிய நீர்வசதி அளித்தன. ஆகையால் அங்கு வளர்ந்த வளமான காடுகளில் புலி, காண்டாமிருகம், யானை முதவிய விலங்குகள் திரிந்தன. அங்கிருந்த ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் பொதுவான பண்பாட்டையுடைய நகரங்களும் கிராமங்களும் பெருகின. அக் காலத்தவர் நேராகவும் அகலமாகவும் இருந்த தெருக்களும், மூடிய சாக்கடைகளும், சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட குளிக்கும் அறை முதலிய வசதிகளுள்ள வீடுகளும் அமைந்த நகரங்களைக் கட்டியிருந்தனர். இரண்டு அல்லது மூன்றுவிதச் சாயங்கள் தீட்டப்பட்ட அழகிய மட்பாண்டங்களை அவர்கள் புழங்கினர். அவர்கள் தங்கத்தாலும் மணிகளாலும் ஆன நகைகளையும் பருத்தித் துணிகளையும் அணிந்தனர்; கோதுமை, பார்லி, இறைச்சி, மீன் முதலியவற்றை உணவாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது. ஒருவகைச் சித்திர எழுத்தைக் கையாண்டனர். மக்களிற் பெரும்பான்மையோர் வினோத வடிவமுள்ள ஒரு பெண் தெய்வத்தையும், சிவலிங்கத்தையொத்த பிம்பத்தையும், மரங்களையும் தொழுதனர். இவ்வளவு நாகரிகமடைந்தும் அவர்கள் கல்லால் செய்த ஆயுதங்களையே அதிகமாக உபயோகித்தனர். இவற்றோடு செம்பினாலும் வெண்கலத்தாலும் ஆன சில ஆயுதங்களும் படைக்கலங்களும் வழக்கத்தில் இருந்தன.

இந்த நாகரிகம் எவ்வாறு அழிந்தது என்பது சரிவரத் தெரியவில்லை. சிந்து நதிப் பள்ளத்தாக்குக் காலப்போக்கில் வறண்டு போனதால் இது மறைந்திருக்கலாம். அல்லது குதிரைகள் பூட்டிய வேகமான தேர்களையும், கத்திகளைப் போன்ற சிறந்த படைக் கலங்களையும் கொண்ட ஆரியர்கள் இவர்களை வென்று அழித்திருக்கக் கூடும்.

ஆரியமொழி பேசிய ஓர் இனத்தார் ஆரியரல்லாத இனம் ஒன்றன் நாகரிகத்தை அழித்துவிட்டனர் என்பதற்குச் சான்று உள்ளது. ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் காணப்படும் குறிப்புக்களைத் தவிர இவர்களைப் பற்றி வேறெதுவும் தெரியவில்லை. சிந்து நதி நாகரிகம் சு. கி. மு. 1500-ல் அழிந்தது. இதற்கும் வடகிழக்கு இந்தியாவில் கி. மு.600-ல் வரலாற்றுக் கால வமிசங்கள் தோன்றியதற்குமிடையே உள்ள காலத்தில் ஆரியர்களின் செயல்களை அந்நூல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. ஆனால் இக்காலத்தைப் பற்றிய தொல் பொருள் ஆராய்ச்சி உண்மைகள் கிடைக்கவில்லை. இதைப்பற்றி நாம் அறிவனவெல்லாம் இலக்கியத்திலுள்ளனவே யாகும்.

ஆரியர்கள் முதலில் மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள் என்றும், பஞ்சாபிலிருந்து பீகாரில் பாட்னாவரையிலும் தெற்கே விதர்ப்பம் வரையிலும் அவர்கள் பிற்காலத்தில் பரவினார்கள் என்றும் வேதங்களிலிருந்து அறியலாம். இயற்கைச் சக்திகளைத் தெய்வங்களாக முனிவர்கள் வழிபட்டனர். க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட்டனர். வைசியர்கள் நிலத்தை உழுது கால்நடைகளை வளர்த்தனர். அரசுகள் இருந்தன. திவோதாசன், சுதாசன் போன்ற புகழ்பெற்ற அரசர்கள் இருந்தார்கள். ஆரியர்கள் நாட்டின் கிழக்கிலும் தெற்கிலும் பரவியபோது யாகங்கள் முக்கியமானவை ஆயின. ஸ்ரீ அரவிந்தர் எடுத்துக் காட்டுவதுபோல இகவாழ்வின் நன்மைக்காகவும், சுவர்க்கத்தைப் பெறுவதற்காகவும் மட்டும் இயற்கைச் சக்திகளை யாகங்கள் மூலம் வழிபடவில்லை. இவைகள் சில ஆன்ம தத்துவங்களின் குறிக்கோளுமாகும். இதையடுத்து உபநிடதங்களில் விவரிக்கப்படும் தத்துவநூற் கருத்துக்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து இச்சமயத்திற்கு எதிராக பெளத்தமும் சமணமும் நடத்திய எதிர்ப்புத் தோன்றியது.

ஆனால் ஆரியர்கள் நடு இமயமலைப் பகுதியிலிருந்து வந்து, மத்திய தேசத்தில் குடியேறி, மற்றப் பகுதிகளில் பரவினார்கள் என்றும், இவர்கள் பல தொகுதிகளாகவும் உபதொகுதிகளாகவும் பிரிந்திருந்தார்கள் என்றும் புராண மரபிலிருந்து அறிகிறோம். இத்தொகுதிகளில் அய்லர்கள் (Aila) என்பவர் முக்கியமானவர்கள். இவர்களுடைய பிரிவினரான யாதவர்களும் பௌரவர்களும் முக்கியமானவர்கள். பாரதர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பௌரவ வமிசங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வமிசங்கள் தெற்கே விதர்ப்பம் வரை வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டன. மகா பாரதப்போர் நடக்கும்வரை இந்த வமிசங்கள் இருந்தன. இப்போர் எப்போது நடைபெற்றது என முடிவாகக் கூற இயல்வில்லை. யமுனையில் தோன்றிய வெள்ளத்தால் அஸ்தினாபுரம் மூழ்கியது என்றும், இதன் அரசர்கள் கங்கையாற்றங்கரையிலிருந்த கௌசாம்பிக்குத் தம் தலைநகரத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றும் கர்ணபரம்பரையாக அறியப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் இதுவரை இக்காலத்தைப் பற்றிய சான்றுகள் ஒன்றும் அறியப்படவில்லை. ஆனால் 1950-51-ல் கங்கை, யமுனைச் சமவெளிகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நேர்த்தியான மட்பாண்டங்களும்,அக்காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதுவே பாரதத்தில் விவரிக்கப்படும் வெள்ளமாக இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் இதற்கு முன்னரே இங்கு வந்து குடியேறினார்கள் என்று இதைக் கொண்டே முடிவு செய்ய முடியாது.

வரலாற்றுத் தொடக்கக் காலத்தைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் வடஇந்தியாவில் இருப்பதுபோல் தென்னாட்டில் அதிகமாக இல்லை. செம்பைப் பயன்படுத்திய பழம் பண்பாடு ஒன்று மைசூரிலும் மகாராஷ்டிரத்திலும் இருந்ததாக அண்மையில் தெரியவந்தது. ஆனால் இதுவும் இதையடுத்து வந்த பண்டைத் திராவிட நாகரிகமும் வரலாற்றுக்கு முற்பட்டவையா அல்லது வரலாற்றுத் தொடக்கக் காலத்தவையா என்பது தெளிவாகவில்லை. எச். டீ. ச.

தென்னிந்தியாவின் வரலாற்று முற்காலம் : சில ஆண்டுகளுக்குமுன் பிரமகிரியில் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா நடத்திய அகழ்தலினால், புதிய கற்காலத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் வேளாண்மை செய்துவந்த மனித சமூகத்தார், இறந்தோரைத் தாழியிற் புதைத்து ஈமக்கடன் செலுத்தினார்கள் எனத் திட்டமாகத் தெரியவருகிறது. தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் கடைப் பகுதியுடன் தொடர்ந்து, செழிப்பு மிக்க இரும்புக்கால நாகரிகம் எங்கும் வியாபித்திருப்பதைக் காண்கிறோம். புறநானூறு, மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களில் அக்காலத்தில் மாண்டோரை அடக்கம் செய்வதில் ஐவகை முறைகளைக் கையாண்டனர் எனக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவைகளில் முக்கியமாகப் புதைப்புத் தாழிகளும், புதைக்குழிமேல் எழுப்பப்பட்ட 'பெருங்கற் சின்னங்களும்' (Megalithic monuments) தென்னிந்தியாவில் ஏராளமாகத் தென்படுகின்றன. நீலகிரி, கோயம்புத்தூர்ப் பகுதிகளிலும், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த புதை குழிச்சின்னங்கள் குறிக்கும் நாகரிகம் மிக்க வளம் பெற்றதாக

புதை குழிப் பெருங்கற் சின்னங்களில் ஒருவகை உதவி: தொல்பொருள் இலாகா, சென்னை.

இருந்திருக்க வேண்டும் என்பது இப்புதை குழிகளிலிருந்து எடுத்துவந்து, சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் வைத்துள்ள தொன்மையான பண்டத் தொகுதிகளிலிருந்து பெரிதும் விளங்கும். இவைகளில் இரும்பாற் செய்த ஈட்டி முனைகளில் இருபக்கத்திலும் கூரிய விளிம்பையுடைய வாட்களும், மிக்க வேலைப்பாடமைந்த வெண்கலப் பாண்டங்களும், வெவ்வேறு உருவங்களையும் வர்ணங்களையும் கைத்திறமையின் அடையாளங்களையுமுடைய வெவ்வேறு பயன்களுடைய மட்கலங்களுமுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் பல இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து நடத்திவரும் வரலாற்று முற்காலத்து நாகரிகத்தின் பல படிகளைப் பற்றிய ஆராய்ச்சி பெரும்பயன் தருவது. ஆனால் இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கு இலக்கியச் சான்றுகளும் கர்ண பரம்பரையும் உள்ளனவே தவிர, உண்மையான தொல்பொருள் சான்றுகள் குறைவு. வரலாற்றிற்கும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கும், அதற்கும் முற்பட்ட காலத்திற்கும் உரிய தொல்பொருள் ஆராய்ச்சி உண்மைகள் இனிமேல்தான் தோன்றவேண்டும். வீ. டீ. கி.

வரலாறு

வட இந்தியா : கி. பி. 1206 வரை: இந்தியா என்னும் பெயர் பாரசீகர்களால் முதன் முதல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிந்து நதியை ஹிந்து என்று வழங்கினார்கள். இந்தியாவுக்குப் பாரத வருஷம் என்பதே இந்நாட்டு முன்னோர் இட்ட பெயர். இது ஜம்புத்வீபத்திற்குத் தென் பாகமாகக் கருதப்பட்டது. பின் வரும் வரலாற்றில் இந்தியா என்னும் பெயர் பாகிஸ்தானையும் உட்கொண்டதாகவே கருதப்பட வேண்டும்.

மலைகளும் கடல்களும் இந்தியாவைப் பிற நாடுகளினின்றும் வேறாகப் பிரிக்கின்றன. ஆயினும், இந்தியசமுத்திரத்தின் நடுவே அமைந்திருப்பதாலும், மேற்கு மலைகளின் சில கணவாய்களின் மூலமாக அயல் நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதாலும், இந்தியா எக்காலத்திலும் வெளி நாடுகளுடன் பலவிதமான தொடர்புகள் பெற்றே இருந்தது. இந்தியா நில வளமும் நீர் வளமும் பெற்ற பரந்த நாடு. முற்காலங்களில் மக்கள் தொகை குறைந்திருந்ததால், பொதுவாக எல்லா இடங்களிலும் செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்து இருந்தன. கைத் தொழில்களும் வியாபாரமும் மிகுந்திருந்தன. கல்வித் துறைகளிலும் மேன்மையுற்றிருந்தது. இப்பொழுது இந்திய வாலிபர்கள் மேனாடுகளுக்கு உயர்தரக் கல்விக்காகச் செல்வதுபோல், அக் காலங்களில் அயல் நாட்டார் பலர் இந்தியாவுக்கு வருவது வழக்கமாக இருந்தது.

இந்தியருக்கு வரலாற்று உணர்ச்சி இல்லை என்று சொல்வது வழக்கம். உண்மையில், சரித்திர நிருமாணத்திற்கு வேண்டிய கருவிகளான கல்வெட்டுக்கள், செப்பேடுகள், புராண நூல்கள் முதலியன இந்தியாவில் உள்ள அளவு வேறு எங்கும் காணப்படவில்லை. இந்தியத் தொல்பொருள் இலாகா சென்ற எழுபது, எண்பது ஆண்டுகளாகக் கண்டு பிடித்திருக்கும் சாசனங்களும், சிற்பங்களும், நாணயங்களும், இந்திய நாட்டுப் பழைய வரலாற்றை நன்றாக விளக்கி யிருக்கின்றன. அது தவிர, ஹர்ஷ சரிதம், விக்கிரமாங்க தேவ சரிதம், ராமபால் சரிதம், ராஜதரங்கிணி, கலிங்கத்துப்பரணி, மூவருலா முதலிய வரலாறு செறிந்த நூல்களும் மிகவும் பயன்படுகின்றன. பிற்காலத்து வரலாற்றிற்கு வேண்டிய சாதனங்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. முகம்மதிய ஆசிரியர்கள் பல வரலாற்று நூல்களை அவ்வக் காலத்துக்கு ஏற்றபடி இயற்றினார்கள். மகாராஷ்டிரத்திலும் பல வரலாற்று நூல்களும் கடிதங்களும் தினசரிக் குறிப்புக்கள், அறிக்கைகள் முதலியனவும் எஞ்சியிருக்கின்றன. ஆங்கில அரசாட்சி இந்தியாவில் நிறுவப்பட்டபின் உள்ள வரலாற்றுக்குச் சான்றுகள் பல பத்திர நிலையங்களில் (Record offices) அரசாங்கத்தாராலேயே சேகரித்துக் காக்கப்பட்டு வருகின்றன.

பண்டைக்காலத்துச் சுமேரியாவில் ஏற்பட்டிருந்த கோயில்களுக்கும் தென்னிந்தியக் கோயில்களுக்கும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. கோயில் கட்டும் முறை, உற்சவங்கள் முதலியவற்றில் இவற்றைக் காணலாம். இம் மாதிரி ஆங்காங்குச் சிதறிக் கிடக்கின்ற சான்றுகளைக் கொண்டு நிச்சயமான முடிவு காணுதல் அரிது. பலூச்சிஸ்தானத்தில் பிரா ஹுயிகள் என்னும் மலைநாட்டார் ஈரானிய மொழியும் திராவிட மொழியும் கலந்த ஒரு மொழியை இப்பொழுதும் பேசி வருகிறார்கள். இதனால் சிலர் திராவிடம் பேசும் மக்கள் மேனாடுகளிலிருந்து தரை வழியே இந்தியாவில் பிரவேசித்தனர் என்று சொல்லுகிறார்கள். வேறு சிலர் பிராஹுயிமொழி இக்காலத்தில் வழங்கும் இடம் இந்தியாவிலிருந்து திராவிட மக்கள் மேனாடுகளுக்குக் குடியேறின வழியைக் குறிக்கின்றது என்பர்.

சரித்திரக் காலங்களில் வெளி நாட்டார் பலர் இந்தியாவில் புகுந்து இந் நாட்டு மக்களுடன் கலந்துகொண்டார்கள் என்பதில் ஐயமில்லை ; பிற்காலத்திற் புகுந்த முகம்மதியர்களும் ஐரோப்பியர்களும் அவ்வாறு கலக்கவில்லை.

பிற நாடுகளிற்போலவே இந்தியாவிலும் மனிதர்கள் ஆதியில் நாகரிகமில்லாதவர்களாக இருந்து வந்தனர். அவர்கள் உபயோகித்த ஆயுதங்கள் ஒரு சிறிது செதுக்கப்பெற்ற கற்களே. அவர்கள் வசித்து வந்தவை பொதுவாக மலைக் குகைகளே. அவர்கள் சுவர்களில் வரைந்த சித்திரங்களை இன்னும் சில குகைகளில் காணலாம். அவர்கள் பிராணிகளை உணவிற்காக வேட்டையாடினர். பருத்தியாலும் ஆட்டு மயிராலும் உடைகள் நெய்தனர். நாட்டியம் பயின்றனர். பிணங்களைத் தாழிகளிலோ, வேறு விதமாகவோ புதைத்து, அவ்விடங்களில் பலவிதமான அடையாளங்கள் இட்டு வந்தனர். ஆனால் கல் ஆயுதங்களை விட்டு உலோக ஆயுதங்களைச் செய்யத் தொடங்க வெகு காலம் ஆயிற்று, மிகப் பழைய உலோக ஆயுதங்கள் பெரும்பாலும் புதிய கற்கால ஆயுதங்களை ஒத்தே இருக்கின்றன. அக் காலத்து மக்கள் பிணங்களைப் புதைத்த கல்லறைகள் நூற்றுக் கணக்காகத் தென்னிந்தியாவில் காணப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிரபருணி நதி யோரத்தில் ஆதிச்சநல்லூர் என்னும் கிராமத்தின் அருகே பல ஏக்கர்கள் கொண்ட இடத்தில் ஆயிரக் கணக்கான சவத்தாழிகள் காணப்படுகின்றன. அத்தாழிகளில் தங்கப் பட்டங்களும், தங்க வாய் மூடிகளும், இரும்புச் சூலங்களும் கிடைக்கின்றன. இவை இந்தியாவில் வேறு எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் பாலஸ்தீனத்திலும் சைப்ரஸ் தீவிலும் இவைகளைப் போன்ற பொருள்கள் சுமார் கி. மு. ஆயிரத்து இருநூற்றைச் சார்ந்த காலத்தனவாகக் கிடைக்கின்றன. ஆகையால் கிழக்கு மத்தியதரைக் கடலைச் சார்ந்த நாடுகளுக்கும் தென்னிந்தியாவிற்கும் கடல் வழியாகத் தொடர்புகள் அக் காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைக்க இடமுண்டு.

வரலாற்றுக் காலத்திற்கு முன் ஏற்பட்ட இந்திய நாகரிகங்களில் மிகச் சிறந்தது சிந்து வெளி நாகரிகமே (த.க.). இதைக் குறித்து 1931ஆம் ஆண்டிற்கு முன் ஒன்றுமே தெரியாமல் இருந்தது. அதற்குப் பின் நடந்த ஆராய்ச்சிகள் பலவற்றால் இந்த இடத்தில் சுமார் கி.மு. 3000-1500 வரை ஓர் அரிய பெரிய நாகரிகம் செழித்து வளர்ந்ததாக அறிகிறோம். இதற்குத் தலை நகரங்கள் சிந்து நாட்டில் மொகஞ்சதாரோ என்னும் ஊரும், பஞ்சாபில் ரவி நதிக் கரையிலுள்ள ஹாரப்பா என்னும் ஊரும் ஆகும். இவ் விரண்டு ஊர்களுக்கும் இடையே சுமார் 400 மைல்கள் உண்டு. இதைத் தவிரச் சிந்துவிலும் பலூச்சிஸ்தானத்திலும் பல சிற்றூர்களில் சற்றேறக்குறைய இந்நாகரிகத்தைச் சார்ந்த சின்னங்கள் பல அகப்படுகின்றன. ஆகவே வட மேற்கிந்தியாவில் ஒரு பரந்த பிரதேசத்தில் இந் நாகரிகம் நிலவி இருந்ததாகச் சொல்லலாம். தொடக்கத்தில் சிறு சிறு கிராமங்களே ஏற்பட்டன. விவசாயமும் கால் நடைகளும் செழித்திருந்தன. வேட்டையாடுவதும் மீன் பிடிப்பதும் பழக்கத்திலிருந்தன. அக்காலத்தில் வீடுகள் கல்லாலோ, பச்சை வெட்டுக் கற்களாலோ கட்டப்பட்டன. நதிகளில் அணை போட்டுக் பெரிய கால்வாய்கள் வழியே நீர் பாய்ச்சினார்கள். மண் பாண்டங்களை விதம் விதமாகவும் பல நிறச் சித்திரங்கள் அமைந்தனவாகவும் செய்து வந்தார்கள். உலோகங்களில் செம்பு மட்டுமே உபயோகத்திலிருந்தது.

நாளடைவில் இந்த நாகரிகம் பெருகிப் பெரிய நகரங்கள் ஏற்பட்டன. மொகஞ்சதாரோவிலும் ஹாரப்பாவிலும் வலிய கோட்டைகளால் சூழப்பட்ட முக்கியமான பல கட்டடங்களும், செவ்வனே கட்டப்பட்ட வீடுகள் செறிந்த நீளமும் விசாலமும் உடைய தெருக்களும் இருந்தன. கோட்டைக்குள் உள்ள பெருங்கட்டடங்கள் அரசாங்கத்தையோ, மத ஸ்தாபனங்களையோ சார்ந்தனவாக இருக்கவேண்டும். மொகஞ்சதாரோக் கோட்டைக்குள் எட்டடி உயரமுள்ள சுவர்களால் சூழ்ந்ததும் 180 அடி நீளமும் 108 அடி அகலமும் கொண்டதுமான ஒரிடத்தின் நடுவே ஒரு நீந்தும் குளமும், அதைச் சுற்றிச் சிறுசிறு அறைகளும் கட்டப்பட்டிருந்தன. குளத்திலுள்ள பழைய தண்ணீரைப்

போக்கவும், புதுத் தண்ணீரை நிரப்பவும் நல்ல வசதிகள் இருந்தன. ஒவ்வொரு வீட்டிலும் சுகாதார வசதிகள் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன.
1. மொகெஞ்சதாரோ அகழ்வுகள். 2. சாஞ்சி ஸ்தூபம்.
உதவி: 1. 2. தொல்பொருள் இலாகா, புது டெல்லி


1. காச்மீரம், குளிர்காலத்துக் காட்சி. 2. குதுப்மினார், டெல்லி. 3. செங்கோட்டை, டெல்லி, 4. ராஷ்ட்ரபதி பவன், டெல்லி, 5. புத்த கயா, 6. பார்லிமெண்டுக் கட்டம், புது டில்லி. 7. தேசிய பௌதிக ஆராய்ச்சிசாலை, புதுடில்லி
1, 2, 3, 4, 5, 6, 7 பத்திரிக்கை செய்தி நிலையம், இந்திய அச்சகம், 5. கே. எஸ். பாலசுப்பிரமணியம், சென்னை.
1. கன்னியா குமரி. 2. பெருவுடையார் கோயில், தஞ்சாவூர். 3. சிதம்பரம் நடராஜர் கோயில், சிவகங்கையும், வடக்கு கோபுரமும். 4. மைசூர் அரண்மனை. 5. தேசிய கலைக்கூடம், சென்னை. 6. பல்கலைக்கழக கட்டடம், சென்னை.
உதவி 1, 2, 3 இந்திய தொல்பொருள் சாலை, தென் வட்டம், சென்னை. 5. அரசாங்க பொருட்காட்சிசாலை, சென்னை 6. போட்டோ எம்போரியம், சென்னை
சிந்து நதி மக்களுடைய நடையுடை பாவனைகளையும், மதக் கொள்கைகளையும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சாதனங்கள் கிடைக்கவில்லை. பலவிதமான சுடுமண் பொம்மைகளும், கல்லாலும் மாக்கல்லாலும் செய்யப்பட்ட சில பிம்பங்களும், பல முத்திரைகளுமே நமக்குக் கிடைத்திருக்கின்ற சான்றுகள். முத்திரைகளில் சில பிராணிகளும் காட்சிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு முத்திரையிலும் ஒன்று அல்லது இரண்டு வரிகள் அடங்கிய சித்திர எழுத்துக்களும் உண்டு. இவ் வெழுத்துக்களை இன்னும் சரிவரப் படிக்க முடியவில்லை. ஆனால் ஜகன்மாதாவாகக் கொள்ளப்பட்ட ஒரு தேவதையையும், அரசு, வேம்பு முதலிய மரங்களையும் வணங்கினதோடு, யோகமும் பயின்று வந்தார்கள் எனக் கூறலாம். ஒரு நேர்த்தியான சிறு வெண்கல விக்கிரகம் ஒரு நாட்டியப் பெண்ணின் விக்கிரகமாக இருப்பதால் அக் காலத்தில் நாட்டியப் பயிற்சி ஏற்பட்டிருந்தது என்றும், வெண்கல வார்ப்பு வேலை செவ்வையாக நடத்தப்பட்டது என்றும் ஊகிக்கலாம். பருத்தியாலும் கம்பளத்தாலும் உடைகள் நெய்யப்பட்டன. தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், தந்தம், ஸ்படிகம், கோமேதகம் முதலிய விலை யுயர்ந்த பொருள்களாலும் ஆன பல ஆபரணங்கள் உபயோகத்திலிருந்தன. அம்மாதிரியான வளைகள், வாகுவலயங்கள், மேகலைகள், அட்டிகைகள் முதலியன கிடைத்திருக்கின்றன. அக்காலத்துத் தட்டார்கள் வெகு நேர்த்தியான வேலைகள் செய்து வந்ததாகவே கூறவேண்டும். வீடுகளிலுள்ள பாத்திரங்கள் மண்ணாலும் உலோகத்தினாலும் செய்யப்பட்டன. பீங்கானும் உண்டு. இரும்பு கிடையாது. ஊசிகளும் சீப்புக்களும், சிப்பியாலோ தந்தத்தாலோ செய்யப்பட்டன. சதுரமாகச் செதுக்கி உருவான கற்கள் தராசுப் படிக்கற்களாக உபயோகப்பட்டு வந்தன. குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளில் சக்கரமிட்ட வண்டிகள், நாற்காலிகள், பிராணிகளின் உருவங்கள், கிலுகிலுப்பைகள் முதலியன இருந்தன. சூதாட்டம் பழக்கத்திலிருந்தது. காளை, எருமை, ஆடு, நாய் முதலிய பிராணிகள் வளர்க்கப்பட்டன. யானையும் ஒட்டகமுங்கூட உபயோகத்திலிருந்ததாக அறிகிறோம். ஆனால் குதிரையைப் பற்றிய தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. விவசாயிகள் கோதுமை, யவம், பருத்தி முதலியன பயிர் செய்தார்கள். நெசவு, தச்சுவேலை, மண் பாண்டம் வனைதல், கல் வேலை, தந்த வேலை, நகைகள் செய்தல் முதலிய கைத் தொழில்கள் செழித்து வளர்ந்து வந்தன. தரை வழியாகவும், கடல் வழியாகவும், தென்னிந்தியாவோடும் மேனாடுகளோடும் வியாபாரம் நடந்து வந்தது.

மிக விமரிசையாக ஏற்பட்டிருந்த இந்த நாகரிகத்தை நிலை நாட்டியவர்கள் எந்த இனத்தைச் சார்ந்த மக்கள் என்று நிச்சயித்துக் கூற முடியவில்லை. அவர்களைத் திராவிட மொழி பேசினவர்கள் என்பர் சிலர். வேதத்தில் காணப்படும் ஆரிய மொழிகள் பேசியவர் என்பர் வேறு சிலர். இவ்விரு கட்சியாருக்கும் மேற்கூறிய முத்திரைகளிலுள்ள எழுத்துக்களே ஆதாரம். உண்மையில் இந்தச் சித்திர எழுத்துக்கள் எந்த மொழியைச் சார்ந்தன, எந்த விஷயங்களைக் குறிக்கின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்தச் சிந்து பதிக்கரை நாகரிகத்தைத் தவிர வரலாற்றுக் காலத்தில் பிரசித்திபெற்ற இந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் ஆரியர்களே. இந்தியாவில் பேசப்படும் ஆரிய மொழிகளுக்கும், பாரசீகத்திலும் ஐரோப்பாவிலும் பேசப்படும் ஆரிய மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இம் மொழிகள் எல்லாவற்றையும் இந்தோ-ஐரோப்பிய மொழி வமிசம் என்று கூறுவது வழக்கம். பல வேற்றுமைகளுக் கிடையே இம் மொழி ஒற்றுமை ஏற்பட்டிருப்பது சுமார் கி.மு. 2500 முதல் 1500 வரை இந்தோ-ஐரோப்பியத் தாய் மொழி ஒன்றைப் பேசி வந்த மக்கள் ஏதோ காரணம்பற்றி, ஓரிடத்திலிருந்து பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்று, அங்கங்கே தங்கி, அந்தந்த நாட்டு மக்களுடன் கலந்துகொண்டதன் பயனேயாகும். சுமார் கி. மு. 1400-ல் ஆசியா மைனரில் ஆரியத் தலைவர்கள் ஆரியத் தெய்வங்களை வணங்கிக் கொண்டு வசித்து வந்ததற்குச் சான்றுகளான சில சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. அத் தலைவர்களில் ஒருவன் துஸ்ரத்தன் என்பவன். தெய்வங்களின் பெயர்கள் மித்திரன், வருணன், இந்திரன், நாசத்தியன் என்பன. அதே சமயத்திலோ அதற்குச் சிறிது முன் பின்னாகவோ ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கவேண்டும்.

இந்தியாவில் புகுவதற்கு முன் சில நூற்றாண்டுகளாக இந்திய ஆரியர்களும், ஈரானிய அதாவது பாரசீக ஆரியர்களும் ஒன்றாகவே வசித்திருக்க வேண்டும். ரிக் வேதத்தின் மொழிக்கும் பழைய பார்சி அல்லது ஜெண்டு மொழிக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைக் கொண்டும், மத சம்பந்தமான வைதிக வழக்கங்களுக்கும். பழைய பார்சி வழக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கொண்டும் இவ்வாறு ஊகிக்கலாம். நான்கு வருணங்கள், உபநயனம், முப்பத்து மூன்று தேவர்கள், யாகங்கள். அவைகளில் உபயோகப்படும் யஜ்ஞம், மந்திரம், சோமம், ஹோதா முதலிய மொழிகள் ஆகிய இவை அக்காலத்து இந்திய ஆரியரிடத்தும் ஈரானியரிடத்தும் ஒருங்கே காணப்பட்டன.

ரிக்வேதமென்பது இந்திய ஆரியர்களால் இயற்றப்பட்ட நூல்களில் மிகப் பழமை வாய்ந்தது. அது சமஸ்கிருத இலக்கணம் வகுத்த பாணினிக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதி.

ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள நதிகளில் குபா (காபுல்), சுலாஸ்து, க்ருமு, கோமதி என்பவை முக்கியமானவை, இவையெல்லாம் சிந்து நதிக்கு மேல்புறம் வந்து சேரும் உபநதிகள். மற்றும் விதஸ்தா, அசிக்னி, பருஷ்மி அல்லது இராவதி, விபாஸ் சுதுத்ரீ ஆகிய ஐந்து பஞ்சாப் நதிகளும் கூறப்பட்டிருக்கின்றன. இவையும் சிந்து நதியின் உபநதிகளே. சரஸ்வதி, த்ருஷருஷத்வதி, ஆபயா, யமுனா, கங்கா முதலிய நதிகளும் இந்த வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் கடைசியாகக் கூறப்பட்ட நதிகள் பிற்காலத்திய பத்தாவது மண்டலத்திலுள்ள நதி ஸ்துதியில் மட்டுமே காணப்படுகின்றன. மலைகளில் ஹிமாலயமும், சோமலதை விளையும் மூஜவந்து என்னும் மலையும் குறிப்பிடப்படுகின்றன. மலைகளில் சிங்கம், ஓநாய், யானை ஆகிய மிருகங்களை ரிக்வேத கால இந்தியர் அறிவர். ஆனால் புலியைப்பற்றிய பேச்சு இல்லை. தான ஸ்துதிகளில் ஒட்டகம் அடிக்கடி கூறப்படுகிறது. தானியங்களில் யவம் உண்டு. ஆனால் அரிசி காணப்படவில்லை. பாலும், பழங்களும், இறைச்சியும் உணவுப் பொருள்களாக வழங்கி வந்தன. இறைச்சியைச் சட்டிகளில் வேக வைப்பதும் உண்டு; நெருப்பில் காய்ச்சுவதும் உண்டு. அக் காலத்திலேயே பசுவை அடிக்கக்கூடாது என்ற உணர்ச்சி மேலிட்டு, அக்னியா என்ற பெயரிட்டனர். யாகங்களில் சோமரசமும், இதர வேளைகளில் தானியங்களாலாக்கப்பட்ட சுரா என்னும் கள்ளும் மிகவும் விருப்பத்துடன் குடிக்கப்பட்டு வந்தன. மீன்களைப்பற்றிய குறிப்பு அதிகமாக இல்லை. சமுத்திரம் என்னும் வார்த்தை ரிக்வேதத்தில் வந்தாலும் அதன் பொருள் கடல் அன்று என்பதும், சிந்து நதியின் கடைசிப் பாகமே என்பதும் சிலருடைய கொள்கை. விந்திய மலையும் நருமதை நதியும் ரிக்வேதத்தில் கூறப்படவில்லை.

ரிக்வேத சூக்தங்கள் முக்கியமாகத் தெய்வங்களைத் துதித்து வணங்குவதற்கு ஏற்பட்டவை. உஷஸ் என்னும் விடியற்கால தேவதையைத் துதிக்கும் சூக்தங்கள் மிகவும் நேர்த்தியான கவிதைகளாம். ஒரு சூக்தத்தில் ஹரி - யூபிய என்னுமிடத்தில் இந்திரன் உதவியால் ஓர் ஆரிய அரசன் தன் சத்துருக்களைத் தோற்கடித்ததாகப் படிக்கிறோம். இந்த ஹரி-யூபிய என்பது இப்பொழுது ஹாரப்பா என்று வழங்கப்படும் ஊராக இருந்தால் இந்த யுத்தம் ஆரியர்களுக்கும் பூர்வீகச் சிந்துநதிக்கரை மக்களுக்கும் நடந்ததாக ஏற்படும். ஆரியர்களுக்கும், அவருக்குமுன் இந்தியாவிலுள்ள தஸ்யு அல்லது தாஸர்களுக்கும் நடந்த போர்கள் பல என்று அறிகிறோம். அனால் ஆரிய அரசர்களுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இல்லை. சமயத்துக்குத் தகுந்தபடி. அரசர்கள் போர் புரிந்தனர் எனக் காண்கிறோம். இப்போர்களில் மிகவும் பிரசித்தமானது 'பத்து அரசர்களின் போர்'. பரதர்கள் என்னும் வகுப்பினருக்கு விசுவாமித்திரர் புரோகிதராக இருந்து வந்தார். ஆனால் சுதாஸ் என்னும் அரசன் அவரைத் தள்ளிவிட்டு வசிஷ்டரைப் புரோகிதராக நியமித்தான். அதனால் கோபங்கொண்ட விசுவாமித்திரர் பரதர்களுக்கு விரோதமாக வேறுபத்து வகுப்பினரைச் சேர்த்துப் போர் தொடுக்கும்படி தூண்டிவிட்டார். பருஷ்ணி நதிக்கரையில் நடந்த போரில் சுதாசும் வசிஷ்டருமே வென்றனர். புரு வமிசத்தைச் சார்ந்த த்ரஸ தஸ்யு அதாவது தஸ்யுக்களுக்கு அபயம் என்ற பேர் பூண்ட அரசன் அக்காலத்து அரசர்களுள் பிரசித்தி பெற்ற ஒருவன். தஸ்யுக்கள் ஆகிய பெரும் புராதன இந்திய மக்கள் ஆரியரினின்றும் நிறத்திலும், மொழியிலும், மத ஆசாரங்களிலும் வேறுபட்டவர்கள். அவர்களில் அநேகர் அடிமைகளாக்கப்பட்டிருக்க வேண்டும். ரிக்வேதத்தில் அடிமைச் செல்வம் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சூத்ர என்னும் ஜாதிப் பெயர் புருஷ சூக்தத்தைத் தவிர வேறு எங்கும் ரிக்வேதத்தில் காணப்படவில்லை.

அரசர்கள் பல தாரங்களை மணந்தாலும், பொதுவாக ஓர் ஆடவனும், ஒரு பெண்ணும், அவர் குழந்தைகளும் அடங்கிய குடும்பங்களே சமுதாயத்தில் வாழ்ந்துவந்தன. சிறு வயதில், கலியாணம் செய்யும் வழக்கம் இல்லை. புருஷர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்தது. ஸ்திரீதனமும் கன்னியா சுல்கமும் பழக்கத்திலிருந்தன. கலியாண மென்பது மாற்றக் கூடாத ஒரு சம்ஸ்காரம். வயது முதிர்ந்த தகப்பன் குடும்ப விவகாரங்களைத் தன் மூத்த மகனிடம் விட்டு விடுவதுண்டு. விவசாயத்துக்கு நிலம் ஏராளமாக இருந்தது. வயல்களை அளப்பதும் உண்டு. நெருங்கின சம்பந்தமுள்ள பல குடும்பங்கள் நிறைந்தது கிராமம். அதற்கு மேற்பட்டு, வேசம், ஜனம் என்ற பிரிவுகள் இருந்தன. ஜாதிப் பிரிவுகள் அதிகமாக ஏற்படவில்லை. பிராமணரும் க்ஷத்திரியரும் ஒன்று சேர்ந்து அரசியல் நடத்தி வந்தார்கள். சாதி வேறுபாடுகள் பிற்காலத்தில் இந்தியாவிலேயே வளர்ந்த போதிலும் தெய்வ வணக்கம், கலியாணம், உணவு முதலிய விஷயங்களைச் சார்ந்த நிபந்தனைகள் மிகப் புராதனமான இந்தோ-ஐரோப்பிய சம்பிர தாயங்களைச் சார்ந்தவையே. இந்தியாவில் நாட்டின் வளம், தொழில், மதம் முதலியவற்றில் உண்டான வேறுபாடுகளால் படிப்படியாகச் சாதி வேறுபாடு அதிகரிக்க நேரிட்டது.

நாட்டுத் தலைவன் ராஜா எனப்பட்டான். முற்காலத்தில் இவனை மக்கள் தெரிந்தெடுத்தார்கள். நாளடைவில் அரசியல் ஒரே வமிசத்தில் பரம்பரையாகத் தங்கிற்று. அரசனுக்குப் பரிவாரம் பலம். படைத்தலைவனும் புரோகிதனும் இவர்களில் முக்கியமானவர்கள். கிராமணி என்பவன் ஒரு கிராமத்திலிருந்து யுத்தத்துக்குச் செல்லும் படைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கலாம். சமிதி, சபை ஆகிய இரண்டு பொது மன்றங்கள் இருந்தன என அறிகிறோம். அவைகளின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக எங்கும்காணோம். குற்றம் செய்தவர் அபராதப் பணம் கொடுப்பதுண்டு. மனிதன் சததாய என்று கூறப்படுவதால் ஒருவனைக் கொலைபுரிந்தால் அதற்கு அபராதம் நூறு பசுக்கள் அல்லது நூறு பொற்காசுகள் என்று யூகிக்கலாம். நாணயப் பழக்கம் அதிகமாக இல்லை. சிறு வியாபாரங்கள் பண்டமாற்று முறையிலேயே நடந்து வந்தன. சூதாடுவது அக் காலத்து மக்களுக்கு மிகவும் பிரியம்போல் தோன்றுகிறது. சூதாட்டத்தில் கடன் பட்டவன் வென்றவனுக்கு அடிமையாவது வழக்கம். பணக்காரர்கள் குதிரைகள் பூட்டிய தேரின் மீது ஏறிச் சென்றனர். வில், ஈட்டி, கத்தி, கோடாலி, கவண் கற்கள் ஆகியவை போர்க் கருவிகள். கவசங்கள், கேடயங்கள் முதலிய பாதுகாப்புக் கருவிகளும் உபயோகத்திலிருந்தன. அம்பின் முனை, கொம்பினாலோ, உலோகத்தாலோ ஆக்கப்பட்டது. சில வேளைகளில் அதற்கு நஞ்சு தடவுவதுண்டு.

வீடுகளையும் வயல்களையும் தவிரக் கால்நடைகளும் குதிரைகளுமே முக்கியமான செல்வம். தேர்ப் பந்தயம், குதிரைப் பந்தயம் முதலியன விளையாட்டுக்கள். ஆடுகளும் கழுதைகளும் வளர்க்கப்பட்டன; அவைகளைக் காப்பாற்றவும், இரவுகளில் காவல் காக்கவும், வேட்டையாடவும் நாய்கள் பயன்பட்டன. தச்சனுடைய தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. செம்பு, வெண்கலம், இரும்பு முதலிய உலோகங்களால் பாத்திரங்களும் கருவிகளும் செய்யப்பட்டன. தோல் வேலையும் முக்கியமான தொழில்களில் ஒன்று. ஒவ்வொருவரும் கம்பளத்தினாலோ அல்லது தோலினாலோ ஆன இரண்டு அல்லது மூன்று ஆடைகள் தரித்தனர். தங்க ஆபரணங்கள் இருபாலாரும் அணிந்தனர். பெண்டிர் தலைமயிரை எண்ணெய் இட்டு வாரிப் பின்னல்களாகவும், இருபாலாரும் அழகிய சுருள்களாகவும் செய்து கொண்டார்கள். நாட்டியத்திலும் இசையிலும் அதிகமாகப் பழகினர். மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் எல்லாம் அக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டன. சாமகானமும் போர்ப் பாடல்களும் அக் காலத்து இசையின் விசேஷமான பிரிவுகள்.

வேதகாலத்து மக்கள் இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதினர். ஆகாயம், பூமி, சூரியன், வாயு, அக்கினி எல்லாம் தெய்வங்கள். வருணன் என்னும் ஆகாய தெய்வம் உலக அமைப்பையும் தருமத்தையும் காத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நாளடைவில் வருணனினும் இந்திரனுக்குப் பிரசித்தி அதிகமாயிற்று. இந்திரன் மழைக்கும் போருக்கும் அதிபதியாகக் கொள்ளப்பட்டான். ஆரியர்களுக்கும் தாசர்களுக்கும் நடந்த போர்களில் இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றித் தாசர்களை முறியடித்தான் என்று ரிக்வேதத்தில் பல முறை கூறப்பட்டிருக்கிறது. அக் காலத்தில் நடந்த வேள்விகள் பலவும், இந்திரனுக்குச் சோமபானம் கொடுத்து, அவனுடைய பலத்தையும் ஆரியர்களின் மேன்மையையும் விருத்தி செய்வதற்காகவே ஏற்பட்டவை. வேதங்களில் சூரியனே விஷ்ணுவாகக் கூறப்படுகிறான். உருத்திரன் புயல் காற்றுக்கு அதிபதியான தெய்வம். அவனுக்கு ஊழியர்கள் மருத்துக்கள். ஆதித்தியர்கள், வசுக்கள் முதலிய வேறு பல சிறு தெய்வங்களும் உண்டு. உஷஸ் என்ற காலைத் தெய்வமும், சரஸ்வதி என்னும் நதியுமே வேதத்தில் காணப்படும் முக்கியப் பெண் தெய்வங்கள். கோவில்களைப் பற்றியாவது, விக்கிரகங்களைப் பற்றியாவது குறிப்பே கிடையாது. தேவர்களுக்கு முக்கியமான விரோதிகள் அசுரரும் இராட்சசரும். அசுரர் என்னும் பெயர் ஒரு காலத்தில் சிறப்புடையதாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் வேதத்தில் சில இடங்களில் வருணன் போன்ற பெரிய தெய்வங்களை அது குறிக்கிறது. வேள்வியானது தேவதைகளுடைய பிரசாதத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது.

அக் காலத்தில் பிணங்களைச் சுடுவதும் புதைப்பதும் உண்டு. சதி எனப்படும் சககமனம் இல்லை. யமனை முதன் முதல் இருந்த மனிதனாகவும், இறந்துபோனவர்களுக்கு அரசனாகவும் கூறுவர். ஆன்மாவுக்கு மறுபிறவி உண்டு என்ற கொள்கை ஓர் இடத்திலும் காணப்படவில்லை.

ரிக் வேதத்தின் மொழி பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால் இந்த வைதிக மொழியில் பொது மக்கள் பேசிய வார்த்தைகள் கலந்திருத்தல் கூடும். ரிக் வேதத்தின் காலத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள் பல. ஆயினும் சூக்தங்கள் செய்ய ஆரம்பித்த காலம் சுமார் கி.மு.2000 என்று ஒருவாறு கூறலாம்.

எல்லா வேதங்களும் முதலில் ஒன்றாக இருந்து, பின் பாரதம் எழுதிய வியாச முனிவரால் நான்கு வேதங்களாக வகுக்கப்பட்டன என்பது ஒரு புராண ஐதிகம். வரலாற்று முறையில் பார்த்தால் சாம வேதமும் யசுர் வேதமும் ரிக் வேத காலத்திற்குப் பிற்பட்டன என்பது தெளிவு. முதல் இரண்டும் யாகங்கள் மிகுதியாகச் செய்யத் தொடங்கிய பிறகே ஏற்பட்ட நூல்கள். யசுர் வேதம் யாகங்கள் செய்யும் முறையும் அவைகளுக்குரிய மந்திரங்களும் அடங்கியது. யாகங்களுக்குரிய இசையுடன் பாடுவதற்காக ரிக் வேதத்திலுள்ள சில மந்திரங்களை எடுத்துச் சாம வேதத்தில் அமைத்துள்ளார்கள். அக் காலத்தில் வேதங்கள் எழுதப்படாமல் குரு-சிஷ்ய பரம்பரையாகக் கற்பிக்கப்பட்டு வந்தன. அதனால் ஒவ்வொரு வேதத்திற்கும் பல சாகைகள் அல்லது கிளைகள் உண்டாயின. மந்திரங்களைத் தவிரப் பிராமணங்களும் உபநிஷத்துக்களும் நாளடைவில் ஏற்பட்டன. மந்திரங்கள் பொதுவாகப் பாக்களாகவும், மற்றவை உரை நடையிலும் உள்ளன. பிராமணங்களை மந்திரங்களுக்கு வியாக்கியானம் என்று கூறலாம். உபநிஷத்துக்கள் செய்யுள், வசனம்ஆகிய இரண்டு நடைகளில், உபாசனை முறைகளையும், யோக வழிகளையும், மற்றும் உள்ள வேதாந்தப் பிரச்சினைகளையும் விளக்கிச் செல்வன. நெடுங்காலம்வரை வேதங்கள் மூன்றாகவே கருதப்பட்டு வந்தன. பிறகு அதர்வண வேதத்தையும் சேர்த்து நான்கு வேதங்களை அங்கீகரித்தார்கள். இந்நான்காவது வேதமும் மந்திரங்கள், பிராமணங்கள், உபநிஷத்துக்கள் என்ற மூன்று பிரிவுகள் கொண்டது. ஆனால் இதிலுள்ள மந்திரங்கள் பல ஆரியர் இந்தியாவில் புகுமுன் பழக்கத்திலிருந்து, ஒரு சிறிது மாற்றப்பட்டு, அதர்வணத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நினைக்க இடமுண்டு.

பிற்பட்ட மூன்று வேதங்களில் வடமேற்கு இந்தியா அவ்வளவு பிரசித்தமாகக் கூறப்படவில்லை. குருக்ஷேத்திரம், மத்திய தேசம் விதேகம், மகதம், அங்கம் முதலிய தேசங்கள் சிறப்பிக்கப்படுகின்றன. விந்திய மலையும் அதில் வசிக்கும் காட்டு மக்களும் குறிக்கப்படுகிறார்கள். ஆசந்தீவந்த், காம்பீலம், கௌசாம்பி, காசி முதலிய பெருநகரங்கள் ஏற்பட்டன. அதர்வண வேதத்தில் பரீக்ஷித்து ஒரு பேரரசனாகக் கூறப்படுகிறான். அவன் சந்ததியிலுண்டான ஜனமேஜயன் செய்த அசுவமேத யாகம், சதபத பிராமணத்தில் போற்றப்படுகிறது. விதேக அரசனான ஜனகன் ஞானத்திற் சிறந்தவனாதலால் அவனிடம் பல பிராமணர்கள் சென்று ஞானம் பெற்றதாகக் காண்கிறோம். யாஞ்ஞவல்கியரும் சுவேத கேதுவும் காசி அரசனான அஜாதசத்துருவும் அவன் காலத்தவரே. இந்த ஜனகனையே சீதையின் தகப்பனாகத் தகுந்தவன் என்று வான்மீகி முனிவர் கருதினர் போலும். இறந்தவர்களுடைய சுட்ட எலும்புகளைப் பொறுக்கிப் புதைத்து, அந்த இடங்களில் வட்டமாகவும் சதுரமாகவும் சமாதிகள் கட்டும் வழக்கம் பிராமணங்களில் குறிப்பிடப் படுகிறது. இதிலிருந்தே பௌத்தருக்கும் சமணருக்கும் தங்கள் சமய ஆசாரியர்கள் இருந்த இடங்களைக் குறிக்க உயர்ந்த ஸ்தூபங்கள் கட்டவேண்டும் என்று தோன்றியிருக்கலாம்.

இக் காலத்தில் வைசியர், சூத்திரர் என்னும் சாதிகள் பல கிளைகளாகப் பிரிந்தன. சாதிக் கட்டுப்பாடுகள் பிற்காலத்தைப் போல் இறுகி விடவில்லை. சத்தியகாம ஜாபாலன் என்பவன் ஓர் அடிமைப் பெண்ணின் மகன். ஆயினும் அவனை ஒரு பிராமணன் தன் சீடனாகக் கொண்டான். அரசர்களின் அபிஷேகம் இராச்சியத்து உயர்தர உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தி வைக்கும் ஒரு விரிவான சடங்காக ஏற்பட்டது. கிராமத் தலைவர்கள் அரசனால் நியமிக்கப்பட்டார்கள். அந்த உத்தியோகத்தைப் பெறுவது வைசியர்களின் பெரு நோக்கமாக ஆயிற்று. சமிதி, சபை என்ற இரண்டு மன்றங்களில் சமிதி பிற்பட்ட வேத காலத்துப் பெரிய இராச்சியங்களில் வழக்கற்றுப் போயிற்று. ஒரு சிறு சபை மட்டுமே அடிக்கடி கூடி நியாய விசாரணை செய்துவந்தது. குற்றங்களுக்குத் தண்டனை சாதிக்குத் தகுந்தவாறு விதிக்கப்பட்டது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் சொந்தமான சொத்துக் கிடையாது என்ற வழக்கு ஏற்பட்டது. கோதுமையும் அரிசியும் பயிரிடப்பட்டன. கைத்தொழில்கள் பல படியாகக் கிளைத்துச் செழித்தன. துணிகளில் பூ வேலையும், சாயம் ஏற்றுதலும், கூடைகளை முடைதலும் பெண்களுக்குரிய வேலைகளாக ஏற்பட்டன. வியாபாரிகளின் சமூகங்களையும், அவர்களுக்குத் தலைவர்களான சிரேஷ்டிகளையும் குறித்துச் செய்திகள் கிடைக்கின்றன. வெள்ளி, இரும்பு, ஈயம் முதலிய உலோகங்களும் உபயோகத்துக்கு வந்தன. வீடுகள் மரத்தாலோ, மண்ணாலோ கட்டப்பட்டன. முப்பது நாட்கள் கொண்ட மாதங்கள் பன்னிரண்டு அடங்கிய ஆண்டு ஆறு இருதுக்களாகப் பிரிக்கப்பட்டது. அபிசித்தைச் சேர்த்து இருபத்து எட்டு நட்சத்திரங்கள் கணக்கிடப்பட்டன. யாகங்கள் சில பெருவேள்விகளாக விளைந்து, ஆண்டுக் கணக்காக நடத்தப்பட்டு வந்தன. ஆரியருக்கு முன் இந் நாட்டில் வசித்த பழைய மக்களின் பழக்க வழக்கங்கள் இந்த யாகங்களிலும், வேறு சடங்குகளிலும் கலந்துகொண்டன. யாகங்கள் செய்து முடித்தவர்கள் சுவர்க்கத்திலே எப்போதும் சுகமாக வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவாறு யாக முறைக்கு எதிரான உபாசனை முறைகளையும், ஞானத்தை வளர்த்து முத்தி பெறும் வழிகளையும் கூறுவன உபநிஷத்துக்கள். மறு பிறப்பு உண்டென்பதும், பிறவிக் கடலைக் கடந்து முத்தி எய்துவதே மானிடப் பிறவியின் முக்கிய நோக்கம் என்பதும் இக் காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள். மேலும் உருத்திரன் அல்லது சிவன் என்ற தெய்வமும், விஷ்ணு அல்லது கிருஷ்ணன் என்ற தெய்வமும் முக்கியமாக ஆராதிக்கப்பட்டனர். இவர்களுடைய பண்புகளும், இவர்களைச் சார்ந்த புராணக் கதைகளும், பழைய நாட்டுத் தெய்வங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்பது இக்காலத்து ஆராய்ச்சியின் துணிபு. பாமர மக்கள் மரங்களையும், பாம்புகளையும், கிராம தேவதைகளையும் தெய்வங்களாகக் கொண்டாடினார்கள்.

முக்கியமான உபநிஷத்துக்கள் கி.மு.600க்கு முன் ஏற்பட்டன. வேள்விகளையும் (சிரௌத), வீட்டுச் சடங்குகளையும் (க்ருஹ்ய), பொதுவான தருமங்களையும் (தர்ம) விளக்கும் சூத்திரங்களும் புராணங்களும் முதன்முதலாக ஏற்பட்டன. இதிகாசங்களும் புராணங்களும் தொடங்கினதும், ஆரிய நாகரிகம் விந்திய மலையைக் கடந்து தென்னாடெங்கும் பரவியதும் ஏறக்குறைய இதே சமயந்தான். அகத்தியரையும் பரசுராமரையும் சார்ந்த கதைகளும், சிலர் கொள்கைப்படி இராமாயணக் கதையும் ஆரிய நாகரிகம் தென்னாடுகளில் பரவியதைக் குறிக்கின்றன.

உபநிஷத்துக்களில் உபாசனைகளும் ஆன்மஞானமும் முத்திக்கு வழிகளாகக் காணப்படுகின்றன என்று கூறினோம். அதற்குச் சற்றுப் பின்னாக வேதத்திற்குப் புறம்பான சமயங்கள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை சமண மதமும் பௌத்த மதமும் ஆகும். இவ்விரு சமயங்களைச் சார்ந்த நூல்கள் அக் காலத்து வரலாற்று நிகழ்ச்சிகளையும் ஒருவாறு தெளிவாக்குகின்றன. புத்தர் பிறந்த காலம் நிச்சயமாகக் கூற முடியவில்லை. அவர் கி. மு. 563-ல் பிறந்து 483-ல் நிருவாணம் அடைந்ததாகக் கூறலாம். சமண மதத்தை ஸ்தாபித்த மகாவீரர் புத்தருக்குச் சில ஆண்டுகளுக்குப் பின் உடல் நீத்தார்.

புத்தர் காலத்தில் வட இந்தியாவில் 16 மகாஜன பதங்கள் இருந்தன. அவை: 1. அங்கம், 2. மகதம், 3. காசி, 4. கோசலம், 5.வஜ்ஜி, 6. மல்லா, 7. சேதி, 8. வம்சம், 9.குரு. 10. பாஞ்சாலம், 11. மச்சம், 12. சூரசேனம், 13. அஸ்ஸகா, 14. அவந்தி, 15.காந்தாரம், 16. காம்போஜ மகாஜனபதங்களாகும். வேறு ஒரு பட்டியில் 7 நாடுகளும் அவைகளின் ராஜதானிகளும் குறிக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு: கலிங்கம் (தந்தபுரம்), அஸ்ஸகம் (போதன), அவந்தி (மாகிஷ்மதி), சோவீரம் (ரோருக), விதேகம் (மிதிலா). அங்கம் (சம்பா). காசி (வாரணாசி). இந்தப் பிரிவுகள் புத்தர் காலத்திற்குச் சற்றுமுன் ஏற்பட்டன. நாளடைவில் கோசல நாடு காசியையும், மகத நாடு அங்க நாட்டையும் வென்று தம் வயமாக்கிக் கொண்டன. அவந்தியும் அஸ்ஸகமும் ஒன்று சேர்ந்திருக்கலாம். புத்தர் காலத்தில் இரண்டொரு பெரிய இராச்சியங்களும் பல சிறு இராச்சியங்களும் இருந்தன. தவிரவும் அரசனில்லாத ஜனநாயக நாடுகள் பல கோசல நாட்டிற்குக் கிழக்கே கங்கைக்கும் இமயமலைக்கும் நடுவே ஏற்பட்டிருந்தன. அவைகளில் புத்தர் பிறந்தமையாற் புகழ் பெற்றது கபிலவாஸ்துவைத் தலைநகராகக் கொண்ட சாக்கியர் நாடு. சாக்கியர்கள் எண்பதாயிரம் குடும்பங்கள் அடங்கியவர்கள்; மொத்தம் சுமார் 5.00.000 பேர் எனக் கூறலாம். அவர்களுக்கும் கோசல நாட்டு மக்களுக்கும் தொடர்பு உண்டு. ஜனநாயக நாடுகளில் அடிக்கடி மரத்தடியிலோ அல்லது சந்தாஹாரம் என்று சொல்லப்பட்ட திறந்த மண்டபங்களிலோ பொதுக் கூட்டம் கூடி நாட்டின் விவகாரங்களை நடத்துவது வழக்கம். பொதுவாக எல்லோரும் ஒரு மனப்பட்டுத் தீர்மானங்களுக்கு வருவதுண்டு. சிக்கலான விஷயங்களைச் சரிவர விசாரித்துத் தீர்மானம் செய்யச் சிறு குழுக்கள் ஏற்படுத்துவதும் உண்டு. பல இடங்களில் ராஜா என்னும் பட்டம் பெற்ற ஒரு தலைவனை ஓர் ஆண்டிற்கோ அல்லது வேறு குறிப்பிட்ட காலத்திற்கோ அரசாட்சி நடத்துவதற்குத் தேர்ந்தெடுப்பது உண்டு. ஜனநாயக நாட்டுமக்கள்: பாவா, குசிநாரா என்னும் ஊர்களைச் சார்ந்த மல்லர்கள். பிப்பலி வனத்து மோரியர், மிதிலையைச் சார்ந்த விதேகர்கள், வைசாலியைச் சார்ந்த லிச்சவிகள். கடைசியாகக் கூறப்பட்ட இரண்டு நாடுகளும், வேறு சிலவும் சேர்ந்தது வஜிய சங்கம். இந்த ஐக்கிய சங்கத்தைக் குறித்துப் பல செய்திகள் சமணர்களாலும் பௌத்தர்களாலும் தங்கள் நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

அவந்தி, மகதம், கோசலம் என்பவையே அக்காலத்து முக்கிய இராச்சியங்கள். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினி பலுகச்சா என்ற மேலைக்கடல் துறைமுகப் பட்டினத்திலிருந்து கங்கைக்கரை நாடுகளுக்குச் செல்லும் சாலையில் இருந்ததனால் மிகவும் செல்வம் விளைந்த நகராயிற்று. கோதாவரிக் கரையிலுள்ள அஸ்ஸக நாட்டோடு அதற்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. புத்தர் காலத்தில் அவந்தியை ஆண்டவன் சண்டப்பிரச்சோதனன். அவன் பெண் வாசவதத்தைக்கும் அண்டையிலுள்ள வத்ச நாட்டுக் கோசாம்பி அரசன் உதயணனுக்கும் ஏற்பட்ட காதலைப் பற்றிய கதைகள் பல. புத்தர் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் பிரச்சோதனனுடைய படையெழுச்சிக்கு அஞ்சி, மகத நாட்டரசன் தன் தலைநகரான ராஜக்கிருகத்தை ஒரு பெருங்கோட்டை கட்டிப் பலப்படுத்தினான். அவந்தி நாடு சிறிது காலத்தில் பௌத்த மதத்திற்கு முக்கிய கேந்திரமாக ஏற்பட்டது. பௌத்தநூல்கள் எழுதப்பட்ட பாலி மொழி இந்நாட்டு மொழியே.

புத்தர் காலத்தில் கோசல நாடு புகழ்பெற்றிருந்தது. சாக்கியர்கள் நாட்டையும் உள் அடக்கிக்கொண்டு இந்நாடு இமயம் முதல் பிரயாகை வரை பரவி இருந்தது. இதன் அரசியலில் தல சுய ஆட்சியும் மானியங்களும் மிகுந்திருந்தன. இந்நாடு காசி நாட்டுடன் பல தலைமுறைகளாகப் போர்புரிந்து வெற்றி பெற்றது. புத்தர் காலத்தில் அவருக்குச் சம வயதினனான பிரசேனஜித் கோசல நாட்டு அரசன். அவன் புத்த மதத்தில் சேராவிட்டாலும் புத்தரை அடிக்கடி சந்தித்தான். மகதநாட்டு அரசன் அஜாத சத்துருவுடன் பலமுறை போர்தொடுத்தான். ஒரு சமயம் தான் தோல்வி அடைந்தபோதிலும் மற்றொரு முறை அஜாதசத்துருவைக் கைது செய்து, பின் அவன் நாட்டிற்குத் திரும்ப அரசனாக அனுப்பினான். வயது காலத்தில் பிரசேனஜித்தின் மகன் விடேபன் தன் தகப்பனாரைச் சிங்காதனத்திலிருந்து விரட்டி விட்டான். அதன் பிறகு பிரசேனஜித் மகத நாட்டுத் தலைநகரான ராஜக்கிருகத்தில் மரணமடைந்தான். விடேபன் சாக்கியர்களுடன் கொடும்போர் புரிந்ததே இக்காலத்துக் கோசல நாட்டைக் குறித்த கடைசி விவரம். பின் இது மகத நாட்டின் பகுதியாகக் காணப்படுகிறது.

மகத நாடு ஆதியில் பாட்னா ஜில்லாவும், கயா ஜில்லாவில் ஒரு பாகமும் சேர்ந்து கோசல நாட்டில் ஆறில் ஒரு பங்கு பரப்புடைய ஒரு சிறு நாடாக இருந்தது. ஆனால் அதன் கிழக்கிலுள்ள அங்க நாட்டை விரைவில் தன்வயமாக்கிக்கொண்டு பெருகிற்று. புத்தர் காலத்தில் பிம்பிசாரன் அந் நாட்டுக்கு அரசன். இவனைச் சிரேணிகன் என்று சமணர்கள் அழைத்தனர். புத்தர் இறப்பதற்கு எட்டு ஆண்டுகளுக்கு முன் இவன் இறந்தான். இவனுடைய பட்டத்துராணி, பிரசேனஜித்தின் சகோதரியான கோசல தேவி. லிச்சவி நாட்டுச் செல்லனா என்பவளும், பஞ்சாபிலுள்ள மத்திர நாட்டு ராஜகுமாரி கேமாரும் மற்ற ராணிகள். இதனாலேயே மகத நாட்டின் பரப்பு வளர்ந்து வந்தது விளங்கும். பிம்பிசாரனுடைய மகன் சமணரால் கூனிகன் எனப்பட்ட அஜாதசத்துரு. பிம்பிசாரன் புத்தரை அவர் குடும்ப வாழ்க்கையைத் துறந்தது முதலே அடிக்கடி சந்தித்தான். ஆனால் அவன் சமணர்களையும் போற்றினான். கிரிவ்ரஜம் என்னும் பழைய இராசதானியை விட்டு ராஜக்கிருகம் என்னும் புதிய இராசதானியை ஏற்படுத்தினான். அவன் ஐம்பத்திரண்டு ஆண்டுகள் ஆண்டபின் தன் மகன் அஜாதசத்துருவால் கொலை யுண்டான். கோசல தேவியும் துக்கத்தால் உயிர் துறந்தாள். உடனே காசி நாட்டில் அவள் செலவுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட நிலங்களைப் பிரசேனஜித் மீட்டுக் கொண்டான். இதற்காக அஜாதசத்துரு அவனுடன் போர் தொடங்கின போது தோல்வி யடைந்து, சிறை வைக்கப்பட்டு, மீண்டும் விடுவிக்கப்பட்டான். அவன் சோனை நதியும் கங்கையும் கூடுமிடத்தில் உள்ள பாடலிபுத்திர நகரைக் கோட்டை கட்டிப் பலப்படுத்தினான். அதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு தன் மந்திரி விருஷகாரனைக்கொண்டு வஜ்ஜி நாட்டு வைசாலி நகரத்தில் கலகங்களைக் கிளப்பிவிட்டு, அதன்பின் அந் நாட்டின் மீது படை யெடுத்து ஆக்கிரமித்தான். புத்தர் இறந்து கொஞ்ச காலத்திற்குப்பின் இது நடந்தது.

அக் காலத்தைக் குறிக்கும் பௌத்த நூல்களிலிருந்து சமூக நிலை நன்றாகத் தெரிகிறது. பிராமணர்கள் விவசாயம், வியாபாரம், தச்சு வேலை, உலோக வேலை, பசு மேய்த்தல், வியாபாரிகளின் கூட்டங்களுக்கு ஊருக்கு ஊர் வழி காட்டுதல் முதலிய தொழில்களில் ஈடுபட்டனர். க்ஷத்திரியர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டனர். சாதி விட்டுச் சாதி கலியாணங்கள் சாதாரணமாக நடந்தன. பணக்காரர்களுக்கு உயர்ந்த சாதிப் பெண்கள் கிடைப்பது எளிதாக இருந்தது. தொழிலாளிகள் பதினெட்டுச் சங்கங்களாக ஏற்பட்டிருந்தனர். சங்கத் தலைவர்கள் அரசர்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள். அரிசியைத் தவிர வேறு ஏழு வகைத் தானியங்களும், கரும்பும், பயறு வகைகளும் விளைவிக்கப்பட்டன. அடிமைகள் இருந்தார்கள். ஆனால் எசமானர்கள் அவர்களை அன்போடு நடத்தினார்கள். கடனாலோ, யுத்தத்தில் பிடிப்பட்டதாலோ அல்லது பஞ்சத்தினாலோ ஒருவன் அடிமையாகலாம். ஆனால் தொழில் செய்து, பொருள் சேர்த்து, மறுபடி அவன் சுதந்திரத்தை மீட்டுக் கொள்ளலாம். பட்டணங்களில் வியாபாரிகளுக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு. மஸ்லின்கள், பட்டுவகைகள், ஜமக்காளங்கள். வாசனைத் திரவியங்கள், நகைகள், போர்க் கருவிகள் முதலிய விலையுயர்ந்த சாமான்களை எடுத்துக்கொண்டு வியாபாரிகள் கூட்டங் கூட்டமாகச் செல்வது வழக்கம். அவர்கள் சிராவஸ்தியிலிருந்து ஒரு புறம் ராஜக்கிருகத்திற்கும், மற்றொருபுறம் பருகச்சாவிற்கும், இன்னொருபுறம் பஞ்சாபிற்கும், காந்தாரத்திற்கும் திருடர்களும் காட்டு மிருகங்களும் செய்யும் உபத்திரவங்களை எதிர்த்து வியாபாரத்திற்காகச் சென்றனர். பாலைவனங்களைக் கடப்பதற்கு நட்சத்திரங்களே அவர் களுக்கு வழிகாட்டின. கொடுக்கல் வாங்கலும், நாணயங்களும், உண்டியல்களும் அதிகமாகப் பழக்கத்திலிருந்தன.

சமணர்கள் மகாவீரரைக் கடைசியான. இருபத்து நாலாவது தீர்த்தங்கரர் என்று கூறுகிறார்கள். இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரரான பார்சுவநாதர் மகாவீரருக்கு 250 ஆண்டுகளுக்குமுன் காலம் சென்றார். அவர் காசி அரசரான அசுவசேனனுக்கும் அவன் ராணி வாமா என்பவளுக்கும் பிறந்தவர். மகாபாரதத்தில் அசுவசேனன் என்பது ஒரு நாகராஜன் பெயர். பார்சுவநாதருக்கு ஏற்பட்ட அடையாளமும் ஒரு பாம்பே. பார்சுவநாதர் தம் சீடர்களுக்கு நான்கு விரதங்களை விதித்தார். அவை கொல்லாமை, சத்தியம், திருடாமை, எளிமை என்பன. மகாவீரர் பிரமசரியம் என்ற ஐந்தாவது விரதத்தையும் சேர்த்தார். பார்சுவநாதர் இரண்டு உடைகள் உடுக்கலாம் என்றார். மகாவீரரோ நிர்வாணமே மேல் என்று வற்புறுத்தினார். மகாவீரரின் இயற்பெயர் வர்த்தமானர். அவர் வைசாலி நகரத்துக்கு அருகிலுள்ள குண்டக் கிராமத்து ஞாத்ருக குலத்தைச் சேர்ந்த சித்தார்த்தன் என்னும் க்ஷத்திரியனுடைய புதல்வர். அவர் தாய் வைசாலி நகரத்துச் சேடகன் என்னும் அரசனுடைய சகோதரி. அவள் பெயர் த்ரிசலா. வர்த்தமானருக்கும் அவர் மனைவி யசோதைக்கும் ஒரு பெண் பிறந்தாள். அவள் கணவன் ஜமாலி என்பவனுக்கும் வர்த்தமானருக்கும் பிற்காலத்தில் ஏற்பட்ட பேதங்களால் சமண மதத்தில் பிளவு உண்டாயிற்று. வர்த்தமானருடைய பெற்றோர்கள் இறந்த பிறகு அவர் தம் தமயன் அனுமதியுடன் முப்பதாவது வயதில் இல்லற வாழ்க்கையைத் துறந்து 13 ஆண்டுகள் சன்னியாசியாகப் பல இடங்களில் திரிந்து, பின் கேவல ஞானம் பெற்றார். கோசாலன் என்னும் மஸ்கரி சன்னியாசி ஒருவன் நாலந்தா என்னுமிடத்தில் மகாவீரரைச் சந்தித்து, ஆறாண்டுக் காலம் அவருக்குச் சீடனாக இருந்தான். அதற்குப்பின் அவரை விட்டு விலகி, அவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னமே, தான் ஞானம் பெற்ற தீர்த்தங்கரன் ஆகிவிட்டதாகக் கூறிக்கொண்டு, ஆசீவகர்கள் என்னும் சன்னியாசிக் கூட்டத்தை ஸ்தாபித்தான். மகாவீரருக்கு அருகன், ஜினன் என்ற பெயர்களும் உண்டு. அவரைப் பின்பற்றியவர்கள் முதலில் நிர்க்ரந்தர், அதாவது பற்றற்றவர் எனப் பெயர் பெற்றுப் பிறகு சைனர்கள் அல்லது சமணர்கள் என்றழைக்கப்பட்டனர். ஞானம் பெற்றது முதல் முப்பது ஆண்டுக் காலம் மகாவீரர் மத்தியக் கங்கை நாடுகளில் தமது மதத்தைப் பிரசாரம் செய்தார். சம்பா, மிதிலை, சிராவஸ்தி, வைசாலி, ராஜக்கிருகம் முதலிய நகரங்களில் மழைக்காலங்களில் தங்கினார். பிம்பிசாரனையும் அவன் மகன் அஜாதசத்துருவையும் பலமுறை சந்தித்தார். புத்தருடன் பலதடவை வாதங்கள் நடத்தினதாக, பௌத்த நூல்கள் கூறுகின்றன. எழுபத்திரண்டாவது வயதில் ராஜக்கிருகத்திற்கருகே பாவா என்னும் சிற்றூரில் மகாவீரர் மரணமடைந்தார். அவர் கொள்கைகளில் முக்கியமானது உயிரில்லாததுபோல் தோன்றும் பொருள்களுக்குக்கூட ஆன்மாவும் உணர்ச்சியும் ஒருவாறு உண்டு என்பதே. ஆகையால் அஹிம்சை என்பது ஒரு முக்கியமான தருமம். மற்ற மதங்களைப் போல் சமணர்கள் கடவுளை நம்பி ஆராதிப்பதில்லை. ஒவ்வோரான்மாவும் தன்னுடைய கருமத்திற்கேற்றவாறு பல பிறவிகளில் பலனை அனுபவித்துப் பின் முத்தி பெறவேண்டும். வாழ்க்கையின் முக்கிய நோக்கம் ஆன்மாவின் நல்ல குணங்களை வளர்த்துத் தீயவைகளைத் தாழ்த்துவதேயாம். அஹிம்சையிலும் துறவிலும் மிக ஈடுபட்ட இச் சமணர்கள் பௌத்தர்களைப் பேராசையிலும் போகத்திலும் ஈடுபட்டவர்கள் என்று கருதி வந்தார்கள். கோசாலனுடைய மதம் மகாவீரருடைய மதத்தினின்று மிகுதியாக வேறுபட்டதில்லை. அதனாலேயே அவர்களுக்குள் விவாதம் அதிகரித்தது. சிராவஸ்தியில் ஒரு வாதத்தில் கோசாலன் பெருந்தோல்வியுற்று ஏழு நாளில் உயிர் துறந்தான். அதற்குப் பின் மகாவீரர் 16 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர் காலத்திற்குப் பிறகு சமண சமயத்தின் வரலாற்றை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்ள இடமில்லை. மகாவீரருடைய சீடர்களில் சுதர்மன் என்பவன் மட்டுமே அவருக்குப் பின் இருபது ஆண்டுகள் சமணருக்குத் தலைவனாக இருந்தான். மௌரிய அரசன் சந்திரகுப்தன் காலத்தில் ஏற்பட்ட பன்னிரண்டு ஆண்டுப்பஞ்சத்தால் பத்திரபாகு என்னும் சமணமுனிவரும், சந்திர குப்தன் உட்பட அவருடைய சிஷ்யர்கள் பலரும் கருநாடக தேசத்திற்குச் சென்றனர் என்றும், அங்கே சந்திரகுப்தன் இறந்தான் என்றும் ஓர் ஐதிகம் உண்டு.

மகாவீரரைப்போலப் புத்தரும் க்ஷத்திரிய குலத்தவரே. அவர் தந்தை கபிலவாஸ்துவிலிருந்த சாக்கிய அரசர் சுத்தோதனர். புத்தர் பிறந்த இடம் அவ்வூருக்கருகிலுள்ள லும்பினித் தோட்டம் என்பதை அவ்விடத்தில் அசோகரால் நிறுத்தப்பட்ட கல்தூணிலுள்ள ஒரு சாசனத்தால் அறிகிறோம். புத்தர் தமது எண்பதாவது வயதில் குசிநகரம் என்னும் கிராமத்தில், அதாவது இப்போது கோரக்பூர் ஜில்லாவில் காச்ய எனப்படும் ஊரில் உயிர்துறந்தார். அதற்கு முன்பே அவருடைய சீடர்கள் ஒரு முதியோர் சங்கமாக ஏற்பட்டு, மக்களுக்கு அவரவர்கள் மொழியிலேயே கதைகள் மூலமாகவும், வேறுவிதமாகவும் புத்தர் உபதேசித்த தருமங்களைக் கற்பிக்கும் முறைகளில் கைதேர்ந்து விட்டார்கள். நாளடைவில் அரசரும் வணிகரும் சங்கத்திற்கு ஆங்காங்கே ஏராளமான நிலங்கள், வீடுகள், மலைக்குகைகள் எல்லாம் கொடுத்து உதவினர். சங்கத்தார் பௌத்த மதத்தை இந்தியா முழுவது மட்டுமன்றி இலங்கை, பர்மா, சீயம், திபெத்து, சீனா, ஜப்பான் முதலிய நாடுகளிலும் பரவச் செய்தனர். புத்தர் இறந்த ஆண்டில் ராஜக்கிருகத்தில் ஒரு சபை கூடிச் சமய நூல்களைச் சேகரித்துத் தொகுத்தது என்று கூறுவர். அதற்கு நூறு ஆண்டிற்குப் பின் மற்றுமொருமுறை வைசாலி நகரத்தில் கூடினதாகவும், அச்சமயத்தில் பௌத்தமதம் பல கிளைகளாகப் பிரிய ஆரம்பித்தது என்றும் கூறுவர்.

புத்தர் காலத்திற்குப் பிறகு மகத நாட்டு வரலாறு தெளிவாக விளங்கவில்லை. அவருக்கு ஐந்து வயது இளையவனான பிம்பிசாரன் பதினைந்தாவது வயதில் அதாவது கி.மு 543-ல் பட்டத்திற்கு வந்தான். அவன் மகன் அஜாதசத்துரு அவனைக் கொன்று கி.மு. 491-ல் அரசுபுரியத் தொடங்கினான் என்பதை முன் அறிந்தோம். அஜாதசத்துருவுக்குப் பின் ஆண்ட அரசர்கள் பின்வருமாறு புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்கள் : 1. தர்சகன் (25-35 ஆண்டுகள்). 2. உதாயி (33 ஆண்டு கள்). 3. நந்திவர்த்தனன் (40-42 ஆண்டுகள்). 4. மகாநந்தி (43 ஆண்டுகள்). 5. மகாபத்மனும் அவனுடைய குமாரர்கள் எண்மரும் சேர்ந்த ஒன்பது நந்தர்கள் (100 ஆண்டுகள்).

இலங்கையில் எழுதப்பட்ட மகாவமிசம் என்னும் வரலாற்று நூலில் வேறு ஒரு பட்டி காணப்படுகிறது. அதில் தர்சகன் பெயரில்லை. ஆனால் வத்ச நாட்டு அரசன் உதயணனுடைய இரண்டாவது ராணியான பத்மாவதியின் சகோதரன் தர்சகன் மகத நாட்டை ஆண்டதைப் பாச கவியினுடைய 'சொப்பன வாசவதத்தம்' என்னும் நாடகத்திலிருந்து அறிகிறோம். தர்சகன் கட்டின பௌத்த சன்னியாசிகள் விடுதியை கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கண்டதாகச் சீன யாத்திரிகன் ஹியூன்சாங் கூறுகிறான். ஆயினும் பௌத்தரும் சமணரும் அஜாதசத்துருவின் குமாரன் உதாயியே அவன் பின் ஆண்டான் என்று கூறுகிறார்கள். அவனே பாடலிபுத்திரத்தைப் பெரிதாக்கிக் கட்டினவன். மகத நாடு தனக்குச் சமீபத்திலுள்ள இராச்சியங்களையும் குடியரசுகளையும் தன்வயமாக்கிக் கொண்டு, அவந்தி நாட்டுடன் போருக்குத் தயாரானது. அவந்திநாடு கோசாம்பியை வென்றபோதிலும் மகதத்தை ஆண்ட அரசர்கள் (சிசுநாக வமிசத்தைச் சார்ந்த முதல் மகாபத்மன் முதலியவர்கள்) க்ஷத்திரியர்கள் என்பது புராணங்களின் கூற்று. அவர்களில் கடைசியான மகாநந்திக்குப் பின் ஆண்ட ஒன்பது நந்தர்களும் உலகிற்குத் தனிச் சக்கரவர்த்திகளானதாகப் புராணங்கள் கூறுகின்றன. கோசல நாட்டில் நந்தன் பாசறை ஒன்றிருந்ததாகக் கதாசரித்சாகரத்தில் படிக்கிறோம். கலிங்க அரசனான காரவேலனை வென்றதும் இவனே என்று ஊகிக்கலாம். தட்சிணத்தில் குந்தலநாடுவரை நந்தருடைய ஆட்சி நிலவி இருந்ததாகப் பிற்காலத்துக் கன்னட சாசனங்களால் அறிகிறோம். நந்தர்களில் கடைசியானவன் வரிகள் அதிகம் வாங்கியும், வேறு விதமாகவும் பணம் ஏராளமாகச் சேகரித்து, அதைத் தங்கக்கட்டிகளாக மாற்றிக் கங்கைநீரில் ஒளித்து வைத்திருந்ததால் தன நந்தன் என்று பெயர் பெற்றான். நந்தர்கள் காலத்திலே அளவு கருவிகள் ஏற்பட்டன என்று கூறுவர். நந்தர்களுடைய படை இருபதாயிரம் குதிரைகளும், இரண்டு இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் இரதங்களும். நாலாயிரம் யானைகளும் கொண்டது என்று கிரேக்க ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். அவர்களே கடைசி நந்தன் குணம் கெட்டது என்றும், அவன் தனக்கு முந்தி ஆண்ட அரசனைக் கொன்று அவன் இராணியை மணந்து கொண்ட ஒரு நாவிதன் மகன் என்றும் கூறுகிறார்கள்.

இந்தியாவிற்கும் பாரசீகம், அரேபியா முதலிய மேல் நாடுகளுக்கும் தரை வழியாகவும் கடல் வழியாகவும் வியாபாரம் தொன்றுதொட்டு நடந்து வந்தது. எகிப்திலும் பாலஸ்தீனத்திலும் சுமார் கி. மு. 800 முதல் இந்தியாவிலிருந்து பல சரக்குகள் வரவழைக்கப்பட்டன என்று தெரிகிறது. பாபிலோனுக்குச் சில இந்திய வியாபாரிகள் மயிலை முதன்முதலாகக் கொண்டு போனதை ஜாதகக் கதையில் படிக்கிறோம். அகெமானிய அரசர்களால் பாரசீகம் ஒரு சாம்ராச்சியமாக ஆக்கப்பட்ட பிறகு இவ் வியாபாரத் தொடர்பு வலிவடைந்திருக்க வேண்டும். சைரஸ் (கி. மு. 588-530) என்னும் அகெமானிய சக்கரவர்த்தி பாரசீக ஆதிக்கத்தை இந்திய சமுத்திரம் வரைக்கும், இந்துகுஷ் மலை வரைக்கும் நிலை நிறுத்தினதாகக் கிரேக்க நூல்களில் காண்கிறோம். சைரசின் பேரன் முதலாம் டரையஸ் கி. மு. 522 முதல் 488 வரை சிந்து நதிக் கரையிலுள்ள நாடுகளை வென்று தன் இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். இந்தியாவிலிருந்து ஆண்டு ஒன்றுக்குப் பத்து இலட்சம் பவுன் மதிப்புள்ள தங்கம் அவனுக்குக் கப்பமாகக் கொடுக்கப்பட்டது என்கிறார் ஹிராடோட்டஸ் என்னும் கிரேக்க ஆசிரியர். டரையஸினுடைய கிரேக்க மாலுமி ஸ்கைலேஸ் என்பவன் சிந்து நதி வழியாக அரபிக் கடலை அடைந்து, அதன் வழியே முப்பது மாதம் பிரயாணம் செய்து எகிப்து தேசத்தை அடைந்ததாகவும், அதே ஆசிரியர் கூறுகிறார். டரையஸுக்குப் பின் பாரசீகருடைய ஆட்சி சிந்து நதிக் கரையில் எவ்வளவு காலம் நீடித்திருந்தது என்று அறிவதற்கு வேண்டிய சான்றுகள் இல்லை. இந்தியப் படைகள் சுமார் கி.மு. 480-ல் பாரசீக அரசனது கிரேக்கர் மேற் சென்ற படையெழுச்சிக்கு உதவி புரிந்தன. அதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மூன்றாம் டரையஸ், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க அரசனிடம் தோல்வியடைந்தான். இப்போரில் உதவிய இந்தியப் போர் வீரர்கள் பருத்தி ஆடைகள் உடுத்து, மூங்கில் வில்களையும், இரும்பு முனையோடு கூடிய மூங்கில் அம்புகளையும் உபயோகித்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் இதிலிருந்து அவ்வளவு காலமும் பாரசீக ஆட்சி இந்தியாவில் நிலவி யிருந்ததாக ஊகிக்க முடியாது. போர் வீரர்கள் கூலிக்காகவே போருக்குச் சென்றிருக்கலாம். தவிரவும் சிந்து நதிக்கு மேற்கே இந்துகுஷ் வரை உள்ள நாடுகளில் வசித்த மக்களைக் கிரேக்க ஆசிரியர்கள் இந்தியர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். வடமேற்கு இந்தியாவில் சில பழைய பாரசீக நாணயங்கள் அகப்படுகின்றன. கரேரஷ்டி என்று சொல்லப்பட்ட எழுத்தும் பாரசீக எழுத்திலிருந்து உண்டானதாகச் சொல்லலாம். ஏறக்குறையப் பாரசீக ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினி, யவனானி என்பது ஒரு லிபியின் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இது பாரசீக எழுத்தாய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது அவருக்குப் பின்வந்த காத்தியாயனர் என்னும் ஆசிரியர் கொண்டதுபோலக் கிரேக்க லிபியாகவும் இருக்கலாம்.

பாரசீகத்தை வென்ற மகா அலெக்சாந்தர் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தின்மீது படை யெடுத்தான். கி.மு. 327 மே மாதத்தில் இவன் இந்துகுஷ் மலையைக் கடந்து, காபுல் நகரத்துக்கருகில் சில படைகளை நிறுத்திவிட்டு, சுவாட், பஜோர் நதிக் கரைகளில் வசித்து வந்த மலை நாட்டு இந்திய மக்களைப் படியச் செய்வதற்காக ஓர் ஆண்டிற்குமேல் கடும்போர் புரிந்தான். அதே சமயத்தில் அவன் சைனியத்தின் மற்றொரு பகுதி கைபர் கணவாய் வழியாகச் சிந்து நதியை அடைந்து, அந் நதியை அலெக்சாந்தர் தன் சைனியத்துடன் கடப்பதற்காக ஒரு தோணிப் பாலத்தைத் தயாரித்தது. சிந்து நதிக்குக் கிழக்குக் கரையில் தட்சசீல நகரத்தைத் தலை நகராகக் கொண்ட ஓர் இராச்சியம் இருந்தது. இது இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவிற்குச் செல்லும் வியாபாரப் பாதையில் அமைந்திருந்ததால் மிகவும் செழிப்புற்று வளர்ந்தது. வட இந்தியாவின் பல நாடுகளிலிருந்து வேதங்கள், ஆயுர்வேதம், படைப் பயிற்சி முதலிய துறைகளில் உயர்தரக் கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அந்நகரத்துக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அவ் வூரில் பருவமடைந்த பெண்களை மணந்து கொள்ள விரும்புவோர் சந்தைகளில் அவர்களைப் பரிசோதித்துப் பொறுக்குவது வழக்கம் என்றும், பிணங்களைக் கழுகுகளுக்கு இடுவது வழக்கமென்றும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தட்சசீல இராச்சியம் சிந்து நதியிலிருந்து ஜீலம் வரை பரவியிருந்தது. ஜீலம் நதிக்குக் கிழக்கே புரு வமிசத்து அரசன் ஆண்டு வந்த இராச்சியம் ஒன்றிருந்தது. அவனைப் போரஸ் என்பர் கிரேக்கர். நாம் பௌரவன் என்று கூறலாம். இவ்விரு இராச்சியங்களுக்கும் வடக்கே மலைப் பிரதேசத்தில் அபிசார என்னும் இராச்சியம் இருந்தது. அந் நாட்டு அரசன் பௌரவனோடு நேசங்கொண்டிருந்தும், அலெக்சாந்தரிடம் தூதனை அனுப்பிச் சமாதானம் பேசினான். தட்சசீல அரசனாகிய அம்பி பௌரவனுக்கு விரோதி. ஆகையால், ஆதி முதலே அலெக்சாந்தரின் நட்பைத் தேடி, அவன் சிந்து நதியைக் கடந்ததும், அவனுக்கும் அவன் படை முழுவதுக்கும் விருந்து அளித்துப் பெரிய உபசரணைகள் செய்தான். அவன் தலைநகரிலிருந்துதான் அலெக்சாந்தர் சுற்று வட்டத்திலிருந்த இந்திய அரசர்களுக்கு அவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தூதர்களை அனுப்பினான். அந் நகருக்கருகிலுள்ள தபோவனம் ஒன்றில் இந்திய சன்னியாசிகளை அவன் முதன்முதல் சந்தித்து, அவர்களுடைய பழக்கங்களையும் கொள்கைகளையும் அறிந்துகொண்டான். அவனுடைய தூதர்கள் வந்ததும் பௌரவ அரசன் தான் அவனை எதிர்க்கப் போவதாகச் செய்தி அனுப்பினான். கி.மு. 326-ல் ஜீலம் நதிக் கரையில் பெரும் போர் மூண்டது. இறுதியில் வெற்றி அலெக்சாந்தரைச் சேர்ந்தபோதிலும் பௌரவனுடைய யானைகளால் கிரேக்கப் படைகள் மிகவும் சேதமடைந்தன. அலெக்சாந்தரும் பௌரவனுடைய வீரத்தை மெச்சி, அவன் இராச்சியத்தை அவனிடமே கொடுத்துவிட்டதுமன்றி அதனுடன் தான் புதிதாக வென்ற சில நாடுகளையும் சேர்த்தான். அலெக்சாந்தருடைய படை ஜீலத்திற்குக் கிழக்கே பியாஸ்நதி வரை வெற்றிகரமாகச் சென்றது. அதன் பிறகு பௌரவனை விட யானைப் படைகள் அதிகம் கொண்ட அரசனை எதிர்க்கவேண்டும் என்று கேள்விப்பட்ட கிரேக்கப் படைகள் தாம் இனிப் போருக்குத் தயாரில்லை என்றும், தங்கள் நாட்டை விட்டு வெகு காலமானபடியால் அதற்குத் திரும்ப வேண்டுமென்றும் பிடிவாதம் புரிந்ததால் அலெக்சாந்தர் அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. அவன் திரும்பும் வழியில் ஜீலம், சிந்து நதிகளின் வழியாகச் சிந்து தேசத்தை அடைந்தான். வழியிலெல்லாம் மானவர் முதலியோரின் குடியரசுகளோடு கடும்போர் செய்தான். சிந்து நாட்டிலிருந்து அவன் படைகளின் ஒரு பகுதி தரை வழியாகப் போலன் கணவாய்களின் வழியே மேற்கு நோக்கிச் சென்றது. மற்றொரு பகுதி கடல் வழியாகப் பாரசீக வளைகுடா வழியே சென்றது. மீதியிருந்த படைகளை அழைத்துக்கொண்டு அலெக்சாந்தர் எளிதிற் கடத்தற்கரிய கடற்கரை வழியாகக் கி. மு. 324 மே மாதத்தில் சூசா நகரத்தை அடைந்தான். ஓர் ஆண்டிற்குப்பின் கி.மு. 323 ஜூன் மாதத்தில் பாபிலோன் நகரத்தில் 33ஆம் வயதில் மரணமடைந்தான். அவன் இந்தியாவை விட்டுத் திரும்பும் போது அவன் வென்ற நாடுகளின் அரசாட்சியை நடத்தப் பௌரவனையும் அபிசார அரசனையும் தவிர மூன்று க்ஷத்திரபர்களை (கவர்னர்களை)யும் நியமித்தான். ஆனால் அவனுடைய அகால மரணத்தினால் அவன் ஆட்சி இந்தியாவில் நிலை பெறவில்லை. சுமார் கி.மு. 317க்கு மேல் அதன் சின்னங்கள் ஒன்றுமே இந்தியாவில் இல்லாமற் போயின.

வடமேற்கு இந்தியாவின்மேல் அலெக்சாந்தர் படையெடுத்த காலத்தில் கடைசி நந்த அரசன் மகத நாட்டை ஆண்டுவந்தான். அவனுக்குச் சேனாதிபதியாக இருந்த மெளரிய சந்திர குப்தனுக்கும் அவனுக்'கும் ஏற்பட்ட விரோதத்தால் சந்திரகுப்தன் நாட்டைவிட்டகன்று, பஞ்சாபிற்குச் சென்று, அலெக்சாந்தரைச் சந்தித்து, அவனை மகதநாட்டை வென்று நந்தனது ஆட்சியை ஒழிக்கும்படி வேண்டினான். ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்ப்பினால் அது நிறைவேறவில்லை. அதன் பிறகு சந்திரகுப்தனும் நந்த அரசனுடன் பகை கொண்டிருந்த சாணக்கியன் என்னும் அந்தணனும் சேர்ந்து பல சிற்றரசர்கள், குடியரசின் தலைவர்கள் முதலியோருடைய உதவியைப் பெற்று மகதநாட்டின் மீது படையெடுத்துப் போரில் நந்த அரசனையும், அவன் படைத்தலைவன் பத்திரசாலனையும் தோற்கடித்துப் பாடலிபுத்திர நகரை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். சாணக்கியன் சந்திரகுப்தனை அரசனாக்கினான். சந்திரகுப்தன் சில ஆண்டுகளில் தன் ஆட்சியை வடஇந்தியா முழுவதும் பரப்பினான். அலெக்சாந்தருக்குப்பின் அவனுடைய சாம்ராச்சியத்தின் ஆசியப் பகுதியை ஆண்ட செலுக்கஸ் என்னும் கிரேக்க அரசன் அலெக்சாந்தர் இந்தியாவில் வென்ற நாடுகளையும் தான் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சிந்து நதியைத் தாண்டி, இந்தியாவின் வடமேற்கில் சில நாடுகளின்மேற் படையெடுத்தான். ஆனால் அவன் தன் பெண் ஒருத்தியைச் சந்திரகுப்தனுக்கோ அல்லது அவன் மகனுக்கோ மணம்புரிவித்துவிட்டுப் போரில் தேர்ந்த ஐந்நூறு யானைகளைப் பதிலாகப் பெற்று ஊர் திரும்பினான். இது நடந்தது சுமார் கி. மு. 305-ல் எனலாம். சில ஆண்டுகளுக்குப் பின் செலுக்கஸ், மெகஸ்தனீஸ் என்னும் தூதனைச் சந்திரகுப்தனது தலைநகரான பாடலிபுத்திரத்திற்கு அனுப்பினான். மெகஸ்தனீஸ் இந்தியாவைக் குறித்து விரிவான அரிய நூல் ஒன்றை இயற்றினான். அது இப்போது கிடைக்கவில்லை. ஆனால் அதன் பகுதிகள் பலவற்றைப் பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் நூல்களில் எடுத்து எழுதியிருக்கிறார்கள். அவைகளிலிருந்து அக்காலத்து இந்தியாவின் நிலைமையும் சந்திரகுப்தனின் ஆட்சித்திறனும் நன்றாக வெளியாகின்றன.

சுமார் கி.மு.305-ல் சந்திரகுப்தன் சாம்ராச்சியம் மேற்கில் இந்துகுஷ்வரை பரவியிருந்தது. காச்மீர தேசமும் அதில் அடங்கியிருந்தது. சந்திரகுப்தனுக்காக அந்நாட்டை ஆண்டுவந்த புஷ்ய குப்தன் என்பவன் ஜூனாகத்திற்கு அருகே சுதர்சனம் என்ற ஒரு பெரிய ஏரியைக் கட்டுவித்தான். தட்சிண தேசமும் வங்காளமும் மௌரிய இராச்சியத்தைச் சேர்ந்திருந்தன. சந்திரகுப்தன் இருபத்துநான்கு ஆண்டுகள் அரசாட்சி புரிந்தான். பின் சமண முனிவன் பத்திரபாகு, ஒரு பெரும் பஞ்சம் வரப்போவதைக் குறித்த படியால் அவனுடன் சந்திரகுப்தனும் இராச்சியத்தை விட்டுவிட்டுச் சமணனாகித் தெற்கே மைசூர் இராச்சியத்திற்குச் சென்று, அங்கே சிரவணபெள்கொள என்னுமிடத்தில் உயிர் துறந்தான் என்று சமணர் சொல்வர். அவன் மகன் பிந்துசாரன் இருபத்தைந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். அவனுக்கு அமித்ரகாதன் என்ற பட்டம் இருந்தது. சாணக்கியன் அவனுக்கும் முதல் மந்திரியாய் இருந்ததாக எண்ண இடமுண்டு. அவன் காலத்தில் தட்சசீலத்தில் ஒரு கிளர்ச்சி ஏற்பட, அதை அடக்குவதற்குத் தன் மகன் அசோகனை அனுப்பினான் என்று வித்யாவதானம் என்னும் பெளத்த நூலில் காண்கிறோம். அந்நகரத்து மக்கள் உத்தியோகஸ்தர்கள் செய்த கொடுமைகளைத் தாங்கள் வெறுப்பதைத் தவிர, அரசனிடத்திலும் அரசகுமாரனிடத்திலும் தங்களுக்கு விசுவாசக் குறைவு இல்லை என்றனர். பிந்துசாரன் மேனாட்டுக் கிரேக்க அரசர்களுடன் நட்புப் பாராட்டி வந்தான். தனக்கு இனிப்பான சாராயத்தையும் அத்திப் பழங்களையும் ஒரு கிரேக்கத் தத்துவஞானியையும் வாங்கி அனுப்பும்படி அவன் சிரியா தேசத்து அரசன் ஆன்டியாக்கசை வேண்டினான். அவ்வரசன் சாராயத்தையும் அத்திப்பழங்களையும் அனுப்புவதாகவும், தத்துவஞானி விலைபொருள் அல்ல என்றும் பதிலளித்தான்.

பிந்துசாரனுக்குப் பின் பட்டத்துக்கு வந்தவன் அவன் மகன் அசோகன். இவன் மிகவும் பிரசித்தி பெற்ற தரும சக்கரவர்த்தி. இவன் பௌத்தமதத்தை மிகவும் ஆதரித்தான். ஆனால் பௌத்த நூல்களில் இவனைக் குறித்துக் காணப்படும் கதைகளெல்லாம் உண்மையல்ல. உதாரணமாக இவன் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்று பட்டமெய்தினான் என்ற கதைக்கு மாறாசு, இவன் தன்னுடைய சாசனங்களில், தன் சகோதரர்கள், சகோதரிகள், அவர்களுடைய குடும்பங்களுடன் பல ஊர்களில் வசித்து வந்தார்களெனக் குறிப்பிடுகிறான். தன் சாசனங்களில் பொதுவாகத் தன்னைத் தேவானாம்பிரியன் பிரியதரிசி என்று படர்க்கையிலேயே குறித்துக்கொள்ளுகிறான். அசோகன் என்னும் பெயர்

ஐதராபாத் இராச்சியத்தில் மாஸ்கியிலகப்பட்ட சாசனம் ஒன்றில் மட்டுமே காணப்படுகிறது. அசோகன் தன்னுடைய ஆட்சியின் ஒன்பதாவது ஆண்டில் கலிங்க நாட்டில் போர்புரிந்து, அதைத் தன் சாம்ராச்சியத்தில் சேர்த்துக்கோண்டான். இது ஒன்றுதான் அவன் செய்த போர். அதனால் ஏற்பட்ட கஷ்டங்களைப் பார்த்து, மனம் வருந்திப் பெளத்த தருமத்தைத் தழுவினான். அதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பௌத்த தருமத்தைப் பற்றித் தன் இராச்சியத்தில் மட்டும் அல்லாமல் அயல்நாடுகளிலும் பிரசாரம் செய்து வந்தான். இவன் நாட்டில் மூலைக்கு மூலை பாறைகளிலும், பெரிய கல்தூண்களிலும் தன்னுடைய அரசியல் நோக்கங்களையும் தரும விஷயங்களையும் எல்லோரும் அறிந்துகொள்ளும்படி பல சாசனங்கள் பொறிக்கச் செய்தான். புத்தர் பிறந்த இடத்திற்கு யாத்திரை போய்த் தான் அந்த ஊருக்கு யாத்திரையாக வந்ததையும், அவ்வூரார் கொடுக்க வேண்டிய வரியைப் பாதியாகக் குறைத்ததையும் அறிவிக்கும் சாசனம் ஒன்றைக் கல்தூணில் வரையச் செய்து அவ்விடத்தில் நிறுத்தினான். சாலைகளுக்கு அருகில் கிணறுகள் வெட்டச் செய்தான். மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தினான். அங்கங்கே பழமரங்களையும் மருந்துச் செடிகளையும் பயிரிடச் செய்தான். பிராணிகளைக் கொல்வதைப் பல சட்டதிட்டங்களால் மிகவும் குறைத்தான். தானும் வேட்டையாடுவதை நிறுத்திப் புலால் உண்ணுவதையும் மிகவும் குறைத்துக் கொண்டான். தருமங்களை நாடு முழுவதும் எடுத்து ஓதிக்கொண்டே இருப்பதற்குத் தரும மகாமாத்திரர்கள் என்ற தனி உத்தியோகஸ்தர்களை ஏற்படுத்தினான். தெற்கே தமிழ் நாடுகளுக்கும், மேற்கே கிரேக்கர்களுடைய தேசங்களுக்கும். தருமத்தைப் பிரசாரம் செய்வதற்கும், மருத்துவச் சாலைகளையும் மருந்துச் செடித் தோட்டங்களையும் உண்டுபண்ணுவதற்கும் தூதர்களை அனுப்பினான். இலங்கை அரசனான தேவானாம் பிரிய திஸ்ஸனோடு நெருங்கிய நட்புக் கொண்டான். இலங்கை பௌத்தமதத்தைத் தழுவியது இக்காலத்தில் தானென்றும், அதற்குக் காரணமாக இருந்தவர்கள் அசோகனுடைய குழந்தைகள் மகேந்திரனும் சங்கமித்திரையுந்தான் என்றும் மகாவமிசம் கூறுகிறது. அசோகன் காலத்தில் அவன் தலைநகரான பாடலிபுத்திரத்தில் சன்னியாசிகள் அதாவது பிக்ஷுக்களின் சங்கம் ஒன்று நடைபெற்றது. அதன் பயனாக, அசோகனால் கொடுக்கப்பட்ட மிகுதியான பொருளைத் தாங்கள் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு கபடமாகச் சங்கத்தின் உட்புகுந்து கலகங்கள் விளைவித்த அன்னிய சமயத்தினர் வெளியேற்றப்பட்டனர். தவிரவும் சங்கத்தில் கலகம் உண்டுபண்ணுபவர்கள் அந்தந்த நாட்டு அரசாங்க உத்தியோகஸ்தர் களால் சங்கத்தைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்ற சட்டமும் ஏற்பட்டது. அசோகன் சுமார் நாற்பது
ஆண்டுகள் ஆண்டான். அசோகனுடைய பிரதிநிதியும் யவன ராஜனுமான துஷாஸ்மன் சௌராஷ்டிரத்திலுள்ள சுதர்சன ஏரியைப் பெரிதாக்கி அழகுபடுத்தினன் என்கிறது ஒரு சாசனம்.காச்மீரத்தில் ஸ்ரீநகரமும்,நேபாளத்தில் தேவ பட்டணமும் அசோகனால் ஸ்தாபிக்கப்பட்ட பட்டணங்கள் என்று ஓர் ஐதிகம் உண்டு. அசோகன் உலக வரலாற்றிலேயே ஒரு பெரிய தரும வீரன் என்று புகழ் பெற்றவன். மக்களுடைய நன்மைக்காகத் தான் இடைவிடாது பாடுபட்டது மன்றி, ஆயிரக்கணக்கான உத்தியோகஸ்தரையும் அவ்வாறே செய்யும்படி செய்தவன். தான் பௌத்த மதத்தைத் தழு வியபோதிலும் மற்ற மதங்களையும் ஆதரித்து வந்தான். கயைக்கு அருகிலுள்ள பராபர் மலையில் சில நேர்த்தியான குகைகளைக் குடைந்து, ஆஜீவிக சன்னியாசிகளுக்குக் கொடுத்தது இதற்கொரு சான்று.

அசோகனுக்குப்பின் மௌரியர்களின் வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. புராணங்களில் மௌரிய அரச வமிசங்கள் 137 என்று காண்கிறோம். அசோகன் பேரனான தசரதனும் அவனைப்போலவே ஆஜீவிக சன்னியாசிகளுக்கு மலைக் குகைகள் கொடுத்தான் என்று சாசனங்களால் அறிகிறோம். அசோகன் பௌத்தர்களுக்குச் செய்த உபகாரங்கள் எல்லாம் சம்ப்ரதி என்னும் மற்றோர் அரசன் சமண மதத்தைத் தழுவிச் சமணர்களுக்குச் செய்தான் என்பது சமணர்களின் கூற்று. அவன்பின் ஆண்ட சாலிசூகனும் சமணர்களை ஆதரித்தான் என்று எண்ண இடமுண்டு. பொதுவாக அசோகனுக்குப் பின் வந்த அரசர்கள் பலம் குறைந்தவர்கள். அவர்கள் காலத்தில் வடமேற்கிலிருந்து கிரேக்கர் இந்தியாவின்மேற் படையெடுக்கத் தொடங்கினர். அவ்வரசர்களில் கடைசியில்ஆண்ட பிருகத்ரதனை அவன் சேனாதிபதியான புஷ்யமித்திரன் அவனை ஆட்சியை விட்டு நீக்கித் தானே அரசனாகிச் சங்கவமிசத்தை நிறுவினான். இது நடந்த காலம் சுமார் கி. மு.184. இதற்குச் சற்று முன்பின்னாகக் கலிங்க நாட்டில் சேடவம்சத்தரசர்களும், தட்சிண தேசத்தில் சாதன அரசர்களும் தங்கள் சுய ஆட்சிகளை ஆரம்பித்தனர்.

மௌரியர்கள் காலத்தில் இந்தியா மேனாடுகளோடு அதிகமாக வியாபாரம் நடத்தத் தொடங்கியது. அதன் பயனாக அரசாட்சி முறைகளிலும், கட்டடம், சிற்பம் முதலிய கலைகளிலும் மேனாடுகளிலுள்ள வழக்கங்களும் முறைகளும் இந்தியாவை வந்தடைந்தன. அசோக சாசனங்கள் பாரசீக அரசர்களின் சாசனங்களைப் பின்பற்றியவை. இந்து தரும சாஸ்திரப்படி, அரசனுக்குப் புதிதாகச் சட்டங்கள் ஏற்படுத்த உரிமை இல்லை. ஆயினும் கௌடிலியன் தனது அர்த்த சாஸ்திரத்தில் தருமம், விவகாரம், சம்பிரதாயம் எல்லாம் அரசனுடைய சாசனத்திற்குக் கீழ்ப்பட்ட திறன் உடையவை என்று தெளிவாகக் கூறுகிறான். இதுவும் கிரேக்க நாட்டு அரசியல் முறையைப் பின்பற்றி இருக்கலாம். அரசாட்சி முறை பல இலாகாக்களாகப் பிரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான உத்தியோகஸ்தர்களின் உதவியைக் கொண்டு நன்கு நடைபெற்ற இதுவும் பாரசீக, கிரேக்க முறைகளைப் பின்பற்றிய வளர்ச்சியே. குடிகளின் நன்மைக்காக அரசன் இடைவிடாது பாடுபட்டான். அசோகன் தான் எங்கிருந்தாலும், அவசரச் செய்திகளை உத்தியோகஸ்தர்கள் தன்னிடம் எக்காலத்திலும் தெரிவித்துத் தன் ஆணைகளைப் பெறலாம் என்று சாசனங்களில் கூறுகிறான். அரண்மனையில் அரசனுக்குரிய பணிவிடைகளெல்லாம் பெண்களாலேயே செய்யப்பட்டன. அவனைச் சூழ்ந்திருந்த மெய்க்காவலர்களும் பெண்களே. அரசகுமாரர்கள் படிப்பிலும் அரசியல் முறைகளிலும் தேர்ச்சி பெற்று, வயது வந்ததும் சாம்ராச்சியத்தின் பல பாகங்களில் பெரிய உத்தியோகங்களில் அமர்வது வழக்கம். தலை நகரான பாடலிபுத்திரம் கங்கையும் சோணையும் சேருமிடத்தில் மிகவும் அழகாகவும் உறுதியான கோட்டை கொத்தளங்களுடனும் அமைந்திருந்தது. அதைச் சுற்றியிருந்த மதிற் சுவரில் அறுபத்து நாலு வாயில்களும், ஐந்நூற்றெழுபது கோபுரங்களும் இருந்தன. நகர ஆட்சி முப்பதுபேர் கொண்ட நகரசபையால் நடத்தப்பட்டது. இச் சபைக்கு உள்ளடங்கி ஆறு பஞ்சாயத்துக்கள் வேலை செய்தன. சாம்ராச்சிய அலுவல்களைக் கவனிக்க அரசனுக்கு உதவியாக மந்திரிசபை இருந்தது. அதைத் தவிர இராசதானியிலும் முக்கியமான வெளியூர்களிலும் தரம் தரமாகப் பல இலாகாக்களைச் சார்ந்த உத்தியோகஸ்தர்கள் ஏற்பட்டிருந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தர்களின் பதவிகளின் பெயர்களும், தொழில்கள், மாதச் சம்பளங்கள் முதலிய விவரங்களும் மெகஸ்தனீஸ் எழுதிய குறிப்புக்களில் விரிவாகக் காணப்படுகின்றன. சந்திரகுப்தனுடைய படை ஆறு இலட்சம் காலாட்களும், முப்பதாயிரம் குதிரைகளும், ஒன்பதாயிரம் யானைகளும் அடங்கியது. படைகளுக்கு வேண்டிய உணவு, வைத்தியம் முதலிய ஏற்பாடுகளும் அந்தந்த இலாகாக்களால் கவனிக்கப்பட்டுவந்தன.

விவசாயம், கைத் தொழில், வியாபாரம் எல்லாம் சிறந்து வளர்ந்தன. காசி, மதுரா முதலிய நகரங்கள் நேர்த்தியான பருத்தி ஆடைகளும், பட்டுத் துணிகளும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தன. வியாபாரிகள் கூட்டங் கூட்டமாகத் தரை வழியாகவும், தோணிகளில் நதிகளின் வழியாகவும், கப்பல்களில் கடல் வழியாகவும் தங்கள் வியாபாரத்தை நடத்தி வந்தார்கள். மௌரியர் காலத்து நாணயங்களுக்குத் தரணங்கள், கார்ஷாபணங்கள் என்ற பெயர்கள் வழங்கிவந்தன.

கடைசியில் ஆண்ட மௌரிய அரசனான பிருகத்ரதனைக் கொன்று சுங்க வமிச ஆட்சியைத் தொடங்கிய புஷ்யமித்திரன் ஓர் அந்தணன். அவன் ஆண்டது முப்பத்தாறு ஆண்டுகள். அவன் இரண்டு அசுவமேத யாகங்கள் செய்தான். பௌத்த சமயத்திற்கு அவன் ஒரு பெரிய விரோதி என்று பௌத்த நூல்கள் கூறுகின்றன. அக்காலத்தில் இந்தியாவின்மேல் படையெடுத்து வந்த கிரேக்கர்களோடு அவனும் அவன் மகன் அக்கினிமித்திரனும் போர் புரிந்தார்கள். தகப்பனுக்குப் பின் அக்கினிமித்திரன் எட்டாண்டுண்டுகள் ஆண்டான். அவனுக்குப்பின் சுங்கவமிசத்து அரசர்களின் வரிசை பின்வருமாறு புராணங்களில் காணப்படுகிறது. (வ) சுஜேஷ்டன் 7 ஆண்டுகள்; (வ) சுமித்திரன் 10 ஆண்டுகள்; ஒட்ரகன் 7 அல்லது 2 ஆண்டுகள்; புலிந்தகன் 3 ஆண்டுகள்; கோஷன் (வசு) 3 ஆண்டுகள்; வஜ்ரமித்திரன் 9 அல்லது 7 ஆண்டுகள்; பாக(வத)ன் 32 ஆண்டுகள்; தேவபூதி 10 ஆண்டுகள்; மொத்தம் பத்துச் சுங்க அரசர்கள் 112 ஆண்டுகள் அதாவது கி.மு. 184 முதல் 72 வரை ஆண்டார்களெனக் கணக்கிடப்படுகிறது. நாடகத்தில் அதிக விருப்பங்கொண்ட சுமித்திரன் நடிகர்களுக்கு நடுவே இருந்த காலத்தில் மித்திர தேவனால் எளிதில் கொல்லப்பட்டான் என்று தமது ஹர்ஷ சரித்திரத்தில் பாணகவி கூறுகின்றார். ஒட்ரகனுடைய ஆட்சியின் பத்தாவது ஆண்டில் ஒரு குகை குடையப்பட்டதாகச் சாசனம் இருப்பதால் புராணத்தில் அவனுக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் ஆட்சி ஆண்டுகளில் ஏதோ தவறு இருக்கவேண்டும். பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதினாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூதனான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். பிறகு மந்திரி வாசுதேவன் அரசனானான். அவனைச் சேர்த்து அவன் வமிசத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். இவ் வமிசத்திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர்.

சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறிகிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம்.

அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அரசரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்ததென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங்களில் காணப்படவில்லை.

சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலிவாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப்பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்கவில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றாலும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள்படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெயரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதைகளில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னுமரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன்பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண்டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது.

ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத்தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத்தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சியத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமிசத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோதரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலையும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல்லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர்களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜசூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங்களைப் பற்றிய செய்தி அவன் மனைவி நாகனிகையால் பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து விளங்குகிறது. சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாதவாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்களிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அரசன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதினேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிரசித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான்.

சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிகவும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்தியவார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நகபானன் காலத்தில் சாதவாகனனது துறைமுகமான கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் பரிகஜா (ப்ரோச் ) வுக்குத் திருப்பப்பட்டனவாகக் காண்கிறோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர் முதலியோரை ஒழித்து, மகாராஷ்டிரம், கொங்கணம், நருமதா தீரம், சுராஷ்டிரம், மாளவம், மேற்கு ராஜபுதனம் ஆகிய நாடுகளைத் தன் ஆட்சிக்கு உள்ளாக்கினான். இவன் நகபானனைப் போரில் வென்று, அவனுடைய வெள்ளி நாணயங்களின்மீது தன்னுடைய சின்னங்களைப் பொறித்தான். இவன் ஆட்சி விதர்ப்ப நாட்டுக்கும் தெற்கே வனவாசிக்கும் பரவிற்று. இவன் இறந்தபிறகு இவன் மகன் இரண்டாவது புலுமாயியின் பத்தொன்பதாவது ஆட்சி ஆண்டில் இவன் தாயார் கௌதமி பலஸ்ரீ பொறித்த சாசனத்தில் இவனுடைய வெற்றிகள் விவரமாகக் குறிக்கப்பட்டுள்ளன. புலுமாயி குறைந்தது இருபத்துநாலு ஆண்டுகள் ஆண்டான். அவனுடைய நாணயங்கள் கோதாவரி குண்டூர் ஜில்லாக்களிலும், தெற்கே கூடலூர் வரை சோழமண்டலக் கரையிலும் அகப்படுகின்றன. இவன் கீழ்நாடுகளை வென்று கொண்டிருந்த காலத்தில் மேற்கே சகர்களின் வலிமை அதிகரித்து, மாளவமும் மேற்கு ராஜபுதனமும் அவர்கள் வசமாயின. கி.பி.126-131 புலுமாயிக்குப் பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாக்ஷத்திரபருத்திரதாமனுடைய மகளை மணந்து சகர்களுடன் நட்புப் பூண்டான். ஆனால் அவனுக்குப் பின் ஆண்ட சாதவாகன அரசன் ருத்திரதாமனால் இருமுறை தோல்வியுண்டு, வடகொங்கண நாட்டையும் நருமதாதீர நாட்டையும் இழந்தான். யஜ்ஞசாதகர்ண என்ற அரசன் கி.பி. 170 முதல் 29 ஆண்டுகள் ஆண்டான். அவன் சகர்களிடமிருந்து மேற்குத் தட்சிணத்தில் சில நாடுகளை மீட்டுக்கொண்டான். இரண்டு பாய்மரங்களைக் கொண்ட கப்பல்கள் பொறிக்கப்பட்ட அவனுடைய நாணயங்கள் பாண கவியின் கூற்றுப்படி சாதவாகனர்கள் மூன்று சமுத்திரங்களுக்கும் அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை விளக்குகின்றன. இவ்வரசனுடைய சாசனங்கள் மேற்கே நாசிக், காணேரி முதலிய இடங்களிலும், கிழக்கே சின்னகஞ்சத்திலும் காணப்படுகின்றன. சாதவாகன வமிசத்துக் கடைசி அரசனும் ஒரு புலுமாயி. அவனுடைய சாசனம் பல்லாரி ஜில்லாவிலுள்ளது. சாதவாகன சாம்ராச்சியம் எவ்வாறு நிலை குலைந்தது என்பது புலப்படவில்லை. இவ்வமிசத்தைச் சேர்ந்த சிற்றரசர்கள் பலர் தட்சிணத்திலும் மத்தியப் பிரதேசத்திலும் அங்கங்கே ஆண்டு வந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் தெரியவருகிறது.

கலிங்க தேசம் அசோகனுக்குப் பிறகு சுய ஆட்சி அடைந்ததாகக் கூறலாம். இவ்வாட்சியை நிலை நிறுத்தினவர்கள் சேத வமிசத்து அரசர்கள். இவர்களுள் மிகவும் புகழ்பெற்றவன் மூன்றாவது அரசனான காரவேலன். இவன் தனது பதினைந்தாவது வயதில் இளவரசனாகி, இருபத்துநான்காவது வயதில் பட்டத்திற்கு வந்தான். இவன் சாதவாகனர்கள்மீது இருமுறை போர் தொடுத்தான் எனத் தன் சாசனத்தில் கூறுகிறான். தன்னுடைய எட்டாவது ஆட்சி ஆண்டில் வடக்கு நோக்கிப் படையெடுத்து, ராஜக்கிருக அரசனை விரட்டிக் கோரகிரிக் கோட்டையைக் கைப்பற்றினான். பன்னிரண்டாம் ஆண்டு மகத அரசனை வென்றான். உத்தராபத அரசர்கள் இவனுக்கு அஞ்சியிருந்தனர். இவனுடைய சாசனம் மிகவும் சிதைந்துபோனபடியால் அதில் கூறப்பட்ட மற்றச் செய்திகள் நன்றாக விளங்கவில்லை.

அசோகனுக்குப் பின் வடமேற்கு இந்தியாவில் வெளி நாட்டிலிருந்து படையெழுச்சிகள் நிகழ்ந்தன. முதலில் படையெடுத்து வந்தவர்கள் கிரேக்கர்கள். சிரியா அரசனான III-ம் ஆன்டியாக்கஸ் கி. மு. 206-ல் காபுல் நதிக்கரை நாடுகளின்மேற் படையெடுத்து, அங்கே ஆண்ட சுபாகசேனனிடமிருந்து சில யானைகளைப் பெற்று மீண்டான். பாக்ட்ரியா தேசத்திலிருந்து ஆண்ட டெமட்ரியஸ் என்பவனே இந்தியாவின் மீது படையெடுத்த கிரேக்கர்களுள் முக்கியமானவன். இவன் நாணயங்களில் யானை முகத்தோடு கூடின கிரீடத்துடன் இவன் உரு காணப்படுகிறது. இந்தியாவில் இவனுடைய தலைநகரம் பஞ்சாபிலுள்ள சாகளம் (தற்காலத்துச் சியால்கோட்). யவனர்கள் சாகேத நகரத்தையும் மத்யமிகா என்னும் நகரத்தையும் முற்றுகை இட்டார்கள் எனப் பதஞ்சலி தம் மகாபாஷியத்தில் கூறுகிறார். ஒரு புராண நூலிலும், முரட்டு வலிமை பூண்ட யவனர்கள் பாஞ்சாலம், மதுரா, சாகேதம் முதலிய ஊர்களை ஆக்கிரமித்துப் பாடலிபுத்திரத்தை அடைந்தார்கள் என்றும், ஆனால் அவர்கள் நாட்டில் உட் கலகங்கள் பிறந்ததால் மத்திய தேசத்தில் நெடுநாள் தங்கியிராமல் மீண்டு விட்டார்கள் என்றும் காண்கிறோம். சுங்கர்களுக்கும் கிரேக்கர்களுக்கும் போர் நடந்தது. டெமட்ரியஸினுடைய இந்தியப் படை யெடுப்புக்களில் அவனுக்கு உதவியாக இருந்தவர்கள் அப்பல்லோடோடஸ், மினாண்டர் என்னும் இரண்டு போர் வீரர்கள். கங்கைக்கரை நாடுகளின் மேற் படையெடுத்தவனும் மினாண்டரே. அவன் சாகளத்தைத் தலைநகராகக் கொண்டு, காபுல் முதல் மதுரா வரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தைப் பல ஆண்டுகள் ஆண்டு, சு. கி. மு. 150-ல் இறந்தான். அவனுக்கும் நாகசேனன் என்னும் பௌத்த சன்னியாசிக்கும் நடந்த சம்வாதங்கள் மிலிந்தன்ஹோ என்னும் பாலி மொழியிலுள்ள பௌத்தநூலில் காணப்படுகின்றன. கடைசியாக மிலிந்தன் (அதாவது மினாண்டர்) பௌத்த மதத்தைத் தழுவினதாகவும், அவன் இறந்தபோது பல நகரங்கள் அவனுடைய எலும்புகளில் தங்களுக்குப் பங்கு வேண்டும் என்று போட்டியிட்டன வென்றும் காண்கிறோம். இது புத்தருடைய வரலாற்றை ஒட்டின கட்டுக்கதையோ அல்லது வரலாற்று நிகழ்ச்சியோ என்று தெளிவாகக் கூற முடியவில்லை. அப்பல்லோடோடஸ் என்பவனும் மகாபாரதத்தில் பகதத்தன் என்று கூறப்படும் சிந்து அரசனும் ஒருவனே என்பது சிலர் கருத்து. இது எவ்வாறாயினும் அப்பல்லோடோடஸ் குஜராத்திலிருந்து காபிச என்னும் கிழக்கு ஆப்கானிஸ்தானம் வரை உள்ள நாடுகளைப் பல ஆண்டுகள் ஆண்டான். மினாண்டருக்கும் அப்பல்லோடோடஸுக்கும் பின்வந்த கிரேக்க அரசர்கள் பஞ்சாபிலும் ஆப்கானிஸ்தானத்திலும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆண்டனர். கடைசியாக அவர்களுடைய ஆட்சிமத்திய ஆசியாவிலிருந்து படையெடுத்து வந்த சகர்களாலும் பாலவர்களாலும் முடிவு பெற்றது.

சகர்கள் இந்தியாவிற்குள் பலூச்சிஸ்தானம், போலன் கணவாய் வழியாகப் பிரவேசித்தார்கள். அவர்கள் ஆட்சி இந்தியாவில் தொடங்கின பிறகும் காபுல் நதிக்கரையில் கிரேக்க அரசர்களுடைய ஆட்சி முடிவுபெற வில்லை. சக அரசர்கள் ராஜாதிராஜன் என்ற பட்டம் தரித்துக்கொண்டு இரு கிளையினராக ஆண்டு வந்தனர். ஒரு கிளை பஞ்சாபில் சுமார் கி.மு. 72-ல் மோக அல்லது மோவஸ் என்பவனால் ஸ்தாபிக்கப்பட்டது. அவன் இராச்சியம் புஷ்கலாவதி முதல் தட்சசீலம் வரைக்கும் சிந்து நதியின் இரு கரைகளிலும் பரவியிருந்தது. அவன் நாணயங்களில் சிவனும் கிரேக்கத் தெய்வங்களும் பொறிக்கப்பெற்றிருக்கிறார்கள். அவனுக்குப்பின் ஆண்ட முதலாம் ஏசஸ் (Azes) பஞ்சாப், காந்தாரா, காபிச நாடுகளை அங்கங்கே ஆண்ட கிரேக்க அரசர்களை விரட்டிவிட்டுத் தன் வசம் ஆக்கிக்கொண்டான். சிலர் கருத்துப்படி I- ம் ஏசஸ் கி. மு. 57-ல் ஆரம்பிக்கும் விக்கிரம சகாப்தத்தை ஸ்தாபித்தவன் ஆவான். ஆனால் உஜ்ஜயினியில் ஆண்ட விக்கிரமாதித்தனே விக்கிரம சகாப்தத்தை ஆரம்பித்தவன் என்பது ஓர் ஐதீகம். அவன் தந்தை கர்த்தபில்லன், காலகன் என்னும் ஒரு சமண முனிவன் கோபங் கொள்ளும்படி நடந்தான் என்றும், காலகன் சகஸ்தானத்திலிருந்து சகர்களை உஜ்ஜயினிக்கு அழைத்துக் கர்த்தபில்லனைப் பழி வாங்கினான் என்றும், அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பின் கர்த்தபில்லன் மகன் பிரதிஷ்டானத்திலிருந்து ஒரு சேனையைத் திரட்டிக்கொண்டு உஜ்ஜயினிமீது படை யெடுத்து வந்து, சகர்களைப் போரில் வென்று, இராச்சியத்தை மீட்டுக்கொண்டு, விக்கிரம சகாப்தத்தை ஸ்தாபித்தான் என்றும் கூறுவர். இந்த ஐதிகத்தை வலியுறுத்தும் சாசனங்களோ வேறு தக்க சான்றுகளோ இல்லை. கி. மு. முதல் நூற்றாண்டில் ஒரு விக்கிரமாதித்தன் உண்மையில் உஜ்ஜயினியில் சகர்களுக்கு விரோதியாக ஆண்டிருக்கலாம்; ஆயினும் அவனைப் பற்றிய கதைகள் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்ட குப்த அரசனாகிய II-ம் சந்திர குப்தனைச் சார்ந்தவை என்பது உறுதி. அவனும் தன் காலத்துச் சக அரசர்களை வென்று விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் பெற்றவன்.

சகர்களின் இரண்டாம் கிளையினரில் வோனோனிஸ் (Vonones) என்பான் முக்கியமானவன். இவர்கள் இராச்சியம் கிழக்கு ஈரானும் அரக்கோசியாவும் ஆகும். இப் பெயர்களிலிருந்து இவர்கள் சகர்களோ, பாலவர்களோ எனும் சந்தேகம் ஏற்படக் கூடும். பஞ்சாபில் முதலாம் ஏசஸுக்குப் பின் ஆண்டவர்களைக் கொண்டா பர்னஸ் கி.பி.19-45-ல் வென்றதாகத் தெரிகிறது. இவன் பாலவன். இவன் பெயர் பாரசீக மொழியில் விந்தபர்ன அதாவது கீர்த்தி சம்பாதிப்பவன் எனப்படும். இயேசு கிறிஸ்துவின் சீடனான தாமஸ் இவனைச் சந்தித்து, இவன் நாட்டில் கிறிஸ்துமதப் பிரசாரம் செய்து கொலையுண்டான் என்பது ஒரு கிறிஸ்தவ ஐதிகம். கொண்டாபர்னஸின் பரம்பரையினரின் ஆட்சி கி.பி. 50-ல் குஷானர்களால் முடிவு பெற்றது.

குஷானர் மத்திய ஆசியாவிலிருந்து வெளிக் கிளம்பி முதலில் சகர்களை அவர்கள் இருப்பிடத்தினின்றும் விரட்டி. இந்தியாவில் புகச் செய்து, அதற்குச் சில தலைமுறைகளுக்குப்பின் தாமே இந்தியாவில் புகுந்தனர். இவர்களில் பிரசித்தி பெற்ற முதலரசன் கூஜலகர கட்பீசிஸ் என்பான். இவன் ஐந்து சிறு இராச்சியங்களாக ஏற்பட்டிருந்த குஷான நாடுகளை ஒன்று சேர்த்தான் (கி. பி. 40). பிறகு இந்துகுஷ் மலையைத் தாண்டிக் காபுல் நதிக் கரையிலும் அரக்கோசியாவிலும், அதாவது சிந்துநதிக்கு மேற்புறத்திலுமிருந்த பாலவ இராச்சியங்களைத் தன் வசமாக்கிக் கொண்டான். அவன் அன்னியனாய் இருந்தும், இந்தியாவில் புகுந்ததும் இந்துக் கொள்கைகளைப் பின்பற்றினான். இவன் நெடுநாள் செங்கோல் செலுத்தியபின் எண்பதாவது வயதில் கி.பி. 64-ல் இறந்தான். இவனுக்குப்பின் பட்டம் பெற்றவன் இவன் மகன் வேமோ கட்பீசிஸ். அவன் சிந்து நதியைத் தாண்டி மதுராவரை உள்ள நாட்டைத் தன் இராச்சியத்துடன் சேர்த்துக்கொண்டான். அவன் காலத்தில் ரோமானிய சாம்ராச்சியத்துடனும் சீன தேசத்துடனும் அதிகமாக வியாபாரம் நடந்தது. அவன் தன்னை மாகேசுவரன் என்று கூறிக்கொள்கிறான். அவன் நாணயங்களிலும் சிவன், நந்தி, ஆல், மழு முதலிய உருவங்கள் பொறிக்கப் பெற்றிருக்கின்றன. தன் தகப்பனைப் போலத் தானும் தன்னுடைய உயர்ந்த பதவியைக் குறிக்கும் விருதுகள் பல உபயோகித்து வந்தான்.

அடுத்த குஷான அரசன் புகழ்பெற்ற கனிஷ்கன். இவனுக்கும் இவனுக்குமுன் ஆண்ட அரசருக்கும் என்ன தொடர்பு என்பது புலப்படவில்லை. கி.பி. 78-ல் தொடங்கும் சகாப்தம் கனிஷ்கனாலேயே தொடங்கப்பட்டது. கனிஷ்கனுடைய தலைநகரம் புருஷபுரம் (தற்காலத்துப் பிஷாவர்). காச்மீரும், பஞ்சாபும், பாடலிபுத்திரம் வரை உள்ள பல மத்திய ஆசிய நாடுகளும், தென் சிந்து நாடும், மாளவமும் கனிஷ்க சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்கி யிருந்தன. அவன் ஆட்சியின் கடைசிக் காலத்தில் புகழ் பெற்ற சீனப்படைத் தலைவன் பாஞ்சோவிடம் தோல்வியடைந்து மத்திய ஆசிய நாடுகள் சிலவற்றையும் இழந்தான். கனிஷ்கன் அசோகனைப்போல் பௌத்த மதத்தை மிகவும் ஆதரித்தான். ஆனால் அவன் நாணயங்களில் பல நாடுகளையும் மதங்களையும் சார்ந்த தெய்வங்கள் காணப்படுகின்றன. இதனால் இவன் ஆட்சியின் பரப்பும், மத விஷயங்களில் இவனுடைய சமநிலையும் நன்றாகப் புலப்படுகின்றன. தான் பௌத்தனாக இருந்ததனால் தன் தலைநகரில் பெரிய ஸ்தூபம் ஒன்றைக் கட்டுவித்தான். இவன் காலத்துக் காச்மீர தேசத்தில் உள்ள குண்டலவன விஹாரத்திலோ அல்லது ஜாலந்தரத்தில் கவன விஹாரத்திலோ ஒரு பௌத்த சங்கம் நடைபெற்றது. இதற்கு அசுவகோஷன் போன்ற பெரிய கல்விமான்கள் பலர் வந்திருந்தனர். பௌத்த சமய நூல்கள் யாவையும் நன்றாக ஆராய்ந்து விளக்கப்பட்டன. அவை எல்லாம் செப்பேடுகளில் வரையப் பெற்றுக் கனிஷ்கனால் கட்டப்பட்ட ஒரு ஸ்தூபத்தின் நடுவே வைக்கப்பட்டதாக ஐதிகம். இந் நூல்களெல்லாம் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டன.

கனிஷ்கனுக்குப்பின் ஆண்ட அரசர்களின் வரலாறு நன்றாகத் தெரியவில்லை. அவன் இறந்த சிறிது காலத்திற்கெல்லாம் மத்திய ஆசிய நாடுகள் குஷான இராச்சியத்தினின்றும் விலகிப்போயின. அவனுக்குப் பின் ஐந்து ஆண்டுகள் ஆட்சிபுரிந்த வாசிஷ்கன் அவன் மகனாக இருந்திருக்கலாம். வாசிஷ்கன் மகன் இரண்டாம் கனிஷ்கன் கி. பி. 119-ல் ஆர நகர சமீபத்தில் ஆண்டான். ஆனால் வாசிஷ்கனுக்குப் பின் பட்டத்திற்கு வந்தவன் ஹுவிஷ்கன் (கி. பி. 107-138). அதற்குச் சிறிது காலத்திற்குப்பின் ஆண்டவன் வாசுதேவன் (152-176). மதுராப் பிரதேசமும் அயோத்தியும் அவனுக்குக் கீழ்ப்பட்டிருந்தன . அவனுடைய நாணயங்களும் அவனுக்குப்பின் ஆண்ட மூன்றாம் கனிஷ்கன் (176-210), இரண்டாம் வாசுதேவன் (210-230) ஆகியவர்களுடைய நாணயங்களும் பாரசீகத்தில் ஆண்டுவந்த சசானிய அரசர்களுடைய நாணயங்களை ஒத்திருப்பதால் குஷானரின் ஆட்சி சில காலம் சசானியருக்கு உட்பட்டிருந்திருக்கக்கூடும் என்று எண்ண இடமுண்டு. ஐந்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஹூணர் படையெழுச்சி வரைக்கும் காபுல் பிரதேசத்தில் குஷான சிற்றரசர்கள் ஆண்டுவந்தார்கள். உள்நாட்டிலும் மாளவர், வ்ஹேயர், நாகர், குணிந்தர் முதலான குடியரசு நாட்டினர் குஷானருக்கு விரோதமாகக் கிளம்பித் தங்கள் சுயராச்சியத்தை நிறுவிக்கொண்டனர்.

குஷானர்கள் தங்கள் இராச்சியத்தில் பல இடங்களில் க்ஷத்ரபர்கள் என்ற கவர்னர்களை நியமித்தார்கள். மதுரையிலும் காசியிலும் க்ஷத்ரபர்கள் இருந்தார்கள். ஆனால் இவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் மாளவத்திலும், கூர்ஜரத்திலும், குஷானருக்குப் பின்னும் நெடுநாள் ஆட்சி புரிந்துவந்த மேற்குத் திசை க்ஷத்திரபர்கள் எனப்படுவோரே. இவர்கள் இரு கிளையினர். முதலில் இருந்தவர் க்ஷஹராத வமிசத்தைச் சார்ந்த பூமகனும் நகபானனும். அதற்குச் சில காலத்திற்குப்பின் ஆண்டவர்கள் சஷ்டனன் வமிசத்தவர். இவர்களுடைய தலைநகரம் உஜ்ஜயினி. சஷ்டனனுடைய ஆட்சி கி.பி.125-ல் தொடங்கியிருக்கலாம். அவன் பேரன் ருத்திரதாமன் (கி.பி.150). ருத்திர தாமன் மிகவும் புகழ்பெற்றவன். சமஸ்கிருத மொழியில் மிகவும் தேர்ச்சியடைந்து, கவிகளையும் நாடகக் கலையையும் ஆதரித்தவன். அவன் ஆந்திரருடனும் பவ்ஹேயருடனும் போர்புரிந்து வெற்றியடைந்தான் என்று தன் சாசனத்தில் கூறுகிறான். அவன் ஆட்சியில் ஒரு பெரும் புயலால் சுதர்சன ஏரியின் அணை உடைந்துபோயிற்று. அவனுடைய மந்திரிகளும் பொறியியலறிஞரும் மனம் கலங்கிச் செயலற்று இருந்தார்கள். மக்களும் மிகவும் அஞ்சியிருந்தனர். அச்சமயம் சுவிசாகன் என்னும் பாலவ உத்தியோகஸ்தன் பொது நன்மைக்காகவும் தன் அரசனுடைய மேன்மைக்காகவும் தான் அணையைக் கட்டி முடிப்பதாக முன்வந்தான்.ருத்திரதாமனும் புது வரி, வெட்டி (Forced labour) முதலிய துன்பங்கள் குடிகளுக்குஏற்படாமல் தன்னுடைய பொக்கிஷத்திலிருந்து பெரும்பணச் செலவு செய்து அவ்வணையைத் திருப்பிக் கட்டி முடித்தான். இச் செய்தியும் அதேசாசனத்தில் அடங்கியுள்ளது. ருத்திரதாமனுக்கு மகாக்ஷத்ரபன் என்ற பட்டம் உண்டு. அவன் வமிசத்தில் பரம்பரையாக இளவரசன் முதலில் க்ஷத்ரபனாக இருந்து, தன் தந்தைக்குப்பின் மகாக்ஷத்ரபனாவது வழக்கம். இம் மாதிரி இவன் சந்ததியார் கி. பி. நான்காம் நூற்றாண்டு இறுதிவரையில் ஆண்டனர். அவர்களுக்குப்பின் அவர்களுடைய இராச்சியமானது விக்கிரமாதித்தியன் என்ற பெயர் பெற்ற குப்த சக்ரவர்த்தி II-ம் சந்திரகுப்தனால் முடிவுபெற்றது.

குஷான சாம்ராச்சியம் மறைந்ததும் பல சிறு இராச்சியங்களும் குடியரசுகளும் தலை தூக்கின. இப்படிச் சிதறிக் கிடந்த சிறு இராச்சியங்களிலிருந்து குப்த வமிசத்து அரசர்கள் ஒரு சாம்ராச்சியத்தை உண்டாக்கினர். வைசாலியரின் (லிச்சவிகள்) அரசியான குமார தேவி I-ம் சந்திரகுப்தனை மணந்து கொண்டதே குப்த இராச்சியத்தின் பெருமைக்கு ஆரம்பம்.. குப்தன், கடோற்கசன் என்ற முதல் இரண்டு குப்த அரசர்களும் மகாராஜா பட்டம் பெற்றவர்கள். மூன்றாம் அரசனாகிய சந்திரகுப்தனோ மகாராஜாதிராஜன் எனப்படுகிறான். அவன் மகன் சமுத்திரகுப்தனும் தன்னை லிச்சவி தௌஹித்திரன் என்று பெருமை பாராட்டிக்கொள்கிறான். சில நாணயங்களில் ஒரு புறம் சந்திரகுப்தனும் குமார தேவியும், இன்னொரு புறம் சிங்கத்தின்மீது உட்கார்ந்திருக்கும் தேவியும், 'லிச்சவயஹு' என்ற எழுத்துக்களும் காணப்படுகின்றன. குமாரதேவியின் கலியாணத்தினால் லிச்சவி குப்த இராச்சியங்கள் ஒன்றுசேர்ந்து குப்தர்களுடைய அதிகாரம் வலுவடைந்தது என்று கருதலாம். குப்தர்களுடைய சகாப்தம் ஒன்று கி. பி. 318 லோ, அதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகோ ஆரம்பமாயிருக்க வேண்டும். இதை நிறுவியவன் I-ம் சந்திரகுப்தனோ அல்லது அவன் மகன் சமுத்திரகுப்தனோ என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. இந்தச் சகாப்தத்தின் ஐந்தாம், ஒன்பதாம் ஆண்டுகளில் சமுத்திரகுப்தனால் கொடுக்கப்பட்ட செப்பேடுகள் நாலந்தாவிலும் கயையிலும் கிடைத்துள்ளன. I - ம் சந்திரகுப்தன் காலத்தில் குப்த இராச்சியம் பீகாரும், வங்காளமும், உத்தரப்பிரதேசத்தில் சில பகுதிகளும் அடங்கியதாகலாம்.

சமுத்திரகுப்தனுடைய கல்வெட்டு ஒன்றில் அவனுடைய வெற்றிகரமான திக்குவிசய யாத்திரைகள் வருணிக்கப்படுகின்றன. அவன் அகிச்சத்திர அரசனான அச்சுதனையும், பத்மாவதியில் ஆண்ட நாகவமிசத்து அரசனாகிய நாகசேனனையும், அவர்கள் இராச்சியத்தை விட்டு விரட்டினான். இமய மலைக்கருகில் கங்கைக் கரையிலுள்ள தோடர்களையும், புஷ்பபுரம் என்னும் கன்யாகுப்ஜத்தையும் வென்றான். வேறு போர்களில் ஆர்யாவர்த்தத்தில் ஆண்டுவந்த ஏழு அரசர்களை நிருமூலமாக்கி, அவர்களுடைய நாடுகளைத் தன் இராச்சியத்தில் சேர்த்துக்கொண்டான். ஆகவே உத்தரப் பிரதேசம் முழுவதும், மத்திய பாரதமும், வங்காளத்தின் தென்மேற்குப் பாகமும் சமுத்திரகுப்தன் வசமாயின. இந்நாடுகளைச் சுற்றி உள்ள தேசங்களில் ஆண்டுவந்த அரசரும் சமுத்திரகுப்தனுக்குக் கப்பம் கட்டி அவன் ஆணைப்படி நடந்து வந்தனர். அப்படிச் செய்து வந்த அரசர்களில் சமதடம் அல்லது கீழ் வங்காளம், காமரூபம் அல்லது அஸ்ஸாமின் மலைப் பிரதேசம், நேபாளம், டவாகம் (அஸ்ஸாமிலுள்ளது), ஜலந்தர் முதலிய நாட்டரசர்கள் முக்கியமானவர்கள். மாளவர், ஆர்ஜுனாயனர், யவ்ஹேயர், மத்ரகர், சனகானீகர் முதலிய வட இந்தியக் குடியரசு நாட்டவர்களும் சமுத்திரகுப்தனுடன் நட்பாக இருந்தனர். ஆகவே வங்காளம் முதல் பஞ்சாப் வரையிலும், இமயமலை முதல் விந்தியமலை வரையிலும் உள்ள நாடுகள் சமுத்திரகுப்தனுடைய இராச்சியத்தில் அடங்கியிருந்தன. சமுத்திரகுப்தன் தட்சிணதேசத்தின் மேற் படையெடுத்துப் பன்னிரண்டு அரசர்களுடன் போர்புரிந்து, அவர்களைக் கைதியாக்கித் திரும்ப விடுவித்தான் எனச் சாசனம் கூறுகிறது. தென் கோசல நாட்டு மகேந்திரன், மகாகாந்தார (ஒரிஸ்ஸாவிலுள்ளது)வியாக்ர ராஜன், கொல்லேறு ஏரியில் ஆண்ட மண்டராஜன், இஷ்டபுரத்து மகேந்திரன், கொட்டூரத்துச் சுவாமிதத்தன், ஏரண்டபல்லத்துத் தமனன், காஞ்சியை ஆண்ட விஷ்ணு கோபன், அவமுக்த நாட்டு நீல ராஜன், வேங்கி நாட்டு ஹஸ்திவர்மன், பலக்க நாட்டு உக்ரசேனன், தேவராஷ்டிரம் அதாவது எலமஞ்சரியில் ஆண்ட குபேரன், குஸ்தலபுரத்துத் தனஞ்சயன் ஆகிய பன்னிருவர் சமுத்திரகுப்தனை எதிர்த்துத் தோல்வியுற்றவர்கள். இந்தப் படையெழுச்சியினால் சமுத்திரகுப்தனுக்கு இராச்சியம் பெருகா விட்டாலும் புகழ் மிகுந்தது. தென்னாடுகளிலும் அதிகக் குழப்பம் ஏற்பட்டு, அதன் விளைவாகப் புதிதான அரச வமிசங்கள் தோன்ற ஆரம்பித்தன. இன்னும் தூர தேசங்களில் ஆண்ட அரசர்களில் சிலர் சமுத்திரகுப்தனுடைய நட்பை வேண்டி, அவனை நேரில் சந்தித்தும், பெண் கொடுத்தும், தங்கள் நாடுகளை ஆள அவனிடம் அனுமதி கேட்டும் வந்தார்கள் என்று சாசனம் கூறுகிறது. இப்படிச் செய்தவர்கள் இந்தியாவின் மேற்கு நாடுகளில் ஆண்ட குஷானரும், சக அரசர்களும், இலங்கை முதலிய தீவுகளில் ஆண்டு வந்த அரசருமே. இலங்கையில் ஆண்ட மேக வர்ணன் (கி. பி. 352-379) சமுத்திரகுப்தனுக்குத் தகுந்த இரத்தினப்பரிசுகளுடன் ஒரு தூது அனுப்பிப்புத்த கயையில் இலங்கையிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்காகத் தான் ஒரு சத்திரம் கட்டுவதற்கு அனுமதி பெற்று ஒரு பெரிய மடமும் கட்டினான். அது கி.பி. ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவில் பிரயாணம் செய்த சீன யாத்திரிகன் ஹியூன் சாங் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிற்று. சமுத்திரகுப்தனுக்குப் பின் ஆண்ட இரண்டாம் சந்திரகுப்தனுடைய தங்க நாணயம் ஒன்று ஜாவாவில் கிடைத்திருக்கிறது. சாம்ராச்சிய தன் பதவியைக் குறிக்கச் சமுத்திரகுப்தன் ஓர் அசுவமேத யாகம் செய்தான். யூபத்தில் கட்டப்பட்ட குதிரை உருவம் பொறிக்கப்பட்ட சில தங்கப் பதக்கங்களும், இப்பொழுது இலட்சுமணபுரி பொருட்காட்சிச் சாலையில் காணப்படும் ஒரு பெரிய கல் குதிரையும் இந்த யாகத்தைச் சார்ந்தவையே. பொதுவாகச் சமுத்திரகுப்தன் காலத்து நாணயங்கள் மிகவும் அழகாக அமைந்துள்ளன. அந் நாணயங்களில் காணப்படும் சமுத்திரகுப்தனுடைய உருவம் அவன் மிகவும் உயர்ந்து வலிமை வாய்ந்த போர்வீரன் என்பதை விளக்குகிறது. இசையிலும் கவி பாடுவதிலும் அவன் வல்லவன். இளமையில் பௌத்த ஆசிரியர் வசுபந்துவிடம் அம்மதத்தைச் சார்ந்த நூல்களைக் கற்றான். பிறகு வசுபந்துவைத் தன் மந்திரியாக்கிக் கொண்டான். சமுத்திரகுப்தன் ஆட்சி முடிவடைந்தது எப்பொழுது என்று உறுதியாகத் தெரியவில்லை. அவன் மகன் II-ம் சந்திரகுப்தனுடைய சாசனங்கள் கி. பி. 380 முதல் ஆரம்பிக்கின்றன. ஆகவே நீண்டகாலம் ஆண்ட பிறகு சமுத்திரகுப்தன் சு. கி.பி.375-ல் இறந்தான் எனக் கொள்ளலாம்.

சமீபத்தில் கிடைத்த தேவீ - சந்திரகுப்தம் என்னும் நாடகத்தின் சில பகுதிகளிலிருந்து சந்திரகுப்தனுக்கு இராமகுப்தன் என்ற அண்ணன் இருந்தான் என அறிகிறோம். அவன் ஒரு காலத்தில் சகர்களோடு போர்புரிந்து, தோல்வியுற்றுத் தன் இராணியான துருவதேவியைச் சக அரசனுக்குக் கொடுத்து விடுவதாக ஒப்புக் கொண்டானாம். இதைக் கேட்ட சந்திரகுப்தன் தான் துருவதேவி வேடம் பூண்டு, சக அரசனிடம் சென்று, அவனைக் கொன்று, துருவ தேவியைத் தானே மணந்து கொண்டு, இராமகுப்தனுடைய இராச்சியத்தைக் கவர்ந்துகொண்டு ஆண்டான் என்பது நாடகம். இவை வரலாற்று நிகழ்ச்சிகளா என்பதைப் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. சிலர் சந்திரகுப்தனுக்குமுன் இராமகுப்தன் சிறிது காலம் ஆட்சிபுரிந்திருக்க வேண்டும் என்பர். வேறு சிலர் அதை மறுப்பர்.

சந்திரகுப்தன் ஆட்சியில் முக்கிய நிகழ்ச்சி மாளவத்திலும் கூர்ஜாத்திலும் ஆண்டு வந்த சக அரசர்களை அவன் வென்றதுதான். சகர்களுடன் யுத்தம் தொடங்குமுன் பீரார் நாட்டில் ஆண்டு வந்த வாகாடக அரசர்களுடன் சந்திரகுப்தன் நட்பு ஏற்படுத்திக் கொண்டான். அவன் மகள் பிரபாவதி குப்தா என்பவளை II-ம் ருத்திரசேனனுக்கு விவாகம் செய்து கொடுத்தான். ஆனால் ருத்திரசேனன் ஒரு சிறு மகனை விட்டுவிட்டுக் காலமானான். அப்பிள்ளையின் சார்பாக ஆட்சிபுரிந்து வந்த பிரபாவதி தன் தகப்பனுக்குச் சகர்களுடன் நடந்த போரில் உதவி புரிந்தாள். பல நூற்றாண்டுகளாகக் கூர்ஜரத்தில் ஆண்டுவந்த க்ஷத்ரபர்களுடைய ஆட்சி சுமார் கி.பி. 390-ல் முடிவு பெற்றது. அதன் பிறகு அவர்களுடைய நாணயங்களைப் போன்ற சந்திரகுப்தனுடைய நாணயங்கள் அந்நாட்டில் பழக்கத்திற்கு வந்தன. கூர்ஜரமும் மாளவமும் குப்த சாம்ராச்சியத்தைச் சேர்ந்ததனால் அதற்கு வெளி நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு வியாபாரமும் வளர்ந்தது. சகர்களைத் தான் வென்றதைக் குறிப்பதற்குச் சந்திரகுப்தன் விக்கிரமாதித்தியன் என்னும் பட்டத்தைப் பூண்டான். சந்திரகுப்தனுடைய இராணி நாக வமிசத்தைச் சேர்ந்த குபேரநாகா என்பவள்; அவளுடைய மகள் தான் பிரபாவதி. சந்திரகுப்தன் வெள்ளியிலும் செம்பிலும் நாணயங்கள் அடித்தான். அவனுடைய தங்க நாணயங்கள் உருவாலும் அழகினாலும் அவன் சாம்ராச்சியத்தின் செழிப்பையும் பெருமையையும் விளக்குகின்றன. அவைகள் சிலவற்றில் அவன் வில்லாளியாகவும், வேறு சிலவற்றில் அவன் ஒரு சிங்கத்துடன் போர் புரிவதாகவும் காணப்படுகிறான். அவன் ஆட்சியின் கடைசி ஆண்டு 412-3. அதற்கு மூன்று ஆண்டுகளுக்குப்பின் அவனுக்குத் துருவதேவியினிடம் உண்டான மகன் குமாரகுப்தன் ஆட்சி புரிவதைக் காண்கிறோம். சந்திரகுப்தன் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் பிரயாணம் செய்த சீன யாத்திரிகன் பாஹியான் இராச்சியத்தின் செழிப்பையும் நல்ல அரசாட்சியையும் கண்டு மன மகிழ்ந்ததாகத் தன் யாத்திரை நூலில் கூறுகிறான்.

சுமார் 414 முதல் குமாரகுப்தன் நாற்பது ஆண்டுகளுக்குமேல் ஆட்சிபுரிந்தான். அவன் மகேந்திராதித்தன் எனப் பட்டம் பூண்டனன். ஓர் அசுவமேத யாகமும் செய்தான். அவன் தங்க நாணயங்களில் சிலவற்றில் ஒரு புறம் மயிலின்மேல் கார்த்திகேயனும், மற்றொரு புறம் மயிலுக்கு உணவு அளிக்கும் அரசனும் பொறிக்கப்பட்டிருக்கிறார்கள். குமாரகுப்தன் தனது ஆட்சியின் இறுதியில் தன் இராச்சியத்தைக் குலைக்கவந்த பகைவர்களுடன் கடும்போர் புரிய வேண்டி இருந்தது. இந்தப் பகைவர்களில் ஒரு சாரார் விந்திய மலைச் சாரல்களில் வசித்துவந்த புஷ்யமித்திரர் என்னும் சாதியார். மற்றவர் வெளிநாட்டிலிருந்து சகர்களையும் குஷானர்களையும்போல் இந்தியாவின் மீது படையெடுத்து வந்த ஹூணர்கள். பாரசீகத்திலும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே சமயத்தில் இவர்கள் செய்துவந்த தீமைகள் பல. சுமார் கி.பி. 450-ல் ஹூணர்கள் முதன்முதல் குப்த இராச்சியத்தைத் தாக்கினார்கள். அப்போது குமாரகுப்தன் வயது முதிர்ந்த கிழவனாக இருந்திருக்கவேண்டும். அவன் சைனியங்கள் தோல்வியுற்று இராச்சியம் சின்னபின்னம் ஆகும்போல் இருந்தது. அப்பொழுது அவன் மகன் ஸ்கந்தகுப்தன் எதிரிகளோடு விடாப் போர் புரிந்து வெற்றி பெற்றான். இப்போரில் ஒருநாள் இரவில் அவன் வெறுந்தரையில் தூங்கும்படியாக நேர்ந்தது என்று ஒரு சாசனம் கூறுகிறது. அவனுடைய வெற்றிச் செய்தியைக் கேட்குமுன் குமாரகுப்தன் இறந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஸ்கந்தகுப்தன் போரினின்று திரும்பிக் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த தன் தாயாரிடம், கிருஷ்ணன் தேவகியிடம் கூறுவதுபோல் தன் வெற்றியைக் கூறினான் என்று சாசனத்தால் அறிகிறோம். குமாரகுப்தன் நாலந்தாவிலுள்ள பெரிய பெளத்த விஹாரத்திற்கு அதிக உதவிபுரிந்தான் என்று சீன யாத்திரிகர்கள் கூற்றுக்களால் அறிகிறோம். ஸ்கந்தகுப்தன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான் (455-67). அவன் பட்டத்திற்கு வருவதற்கு ஏதோ தடையிருந்து நீங்கினதாக ஊகிக்க இடமுண்டு. அவன் கல்வெட்டு ஒன்று இராச்சியலக்ஷ்மியானவள் மற்ற அரசகுமாரரைப் புறக்கணித்து, அவனைத் தெரிந்து மணந்தாள் எனக் கூறுகிறது. அவன் நாணயங்கள் சிலவற்றிலும் அவன் அம்பும் வில்லுமாக நிற்க, அவன் எதிரில் ஒரு கருடத்துவசத்தையும் வலது புறத்தில் கையில் கிரீடத்தோடு லட்சுமி நிற்பதையும் காண்கிறோம். தான் பட்டம் பெற்றதும் ஸ்கந்தகுப்தன் நாட்டில் குழப்பம் ஏற்படாமல் பார்க்க அங்கங்கே கவர்னர்களை நியமித்தான். அவர்களில் ஒருவன் சௌராஷ்டிரத்தை ஆண்ட பர்ணதத்தன். ஸ்கந்தகுப்தன் ஆட்சியின் முதல் ஆண்டிலேயே மறுபடியும் சுதர்சன ஏரியின் கரை உடைந்தது. அதைத் திரும்ப வலுப்படக் கட்டின புகழ் பர்ணதத்தனையும் கிரி நகரத்துத் தலைவனாக இருந்த அவன் மகன் சக்ரபாலிதனையும் சார்ந்தது. ஸ்கந்தகுப்தன் காலத்தில் ஹுணர்களுடன் போர்கள் நிகழ்ந்தன. இப்போர்களால் வறுமை மிகுந்தது. நாணயங்கள் முன்போல் உயர்ந்த தங்கத்தினால் அடிக்க முடியாமல் போயிற்று. ஆனால் வெள்ளி நாணயங்கள் மிகுந்தன. மாளவதேசம் குப்த இராச்சியத்தினின்று விலகி, வாகாடக அரசன் நரேந்திரசேனனுக்கு உட்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் ஸ்கந்தகுப்தன் நன்கு ஆண்ட குப்த அரசர்களில் ஒருவனாகவே கருதப்பட வேண்டும். அவன் நூறு அரசர்களுக்கு அதிபதி என்றும், அவன் ஆட்சியில் அவன் இராச்சியம் முழுவதும் சமாதானம் நிலவியிருந்ததென்றும் அவன் சாசனங்கள் கூறுவது மிகையாகாது.

ஸ்கந்த குப்தனுக்குப் பிறகு ஹூணர்களின் படையெழுச்சிகள் அதிகப்பட்டுக் குப்த இராச்சியம் நிலை குலைந்தது. குப்த அரசர்களுடைய பரம்பரையும் தெளிவாக விளங்கவில்லை. புருகுப்தன், இரண்டாம் குமாரகுப்தன் என்ற இரண்டு அரசர்கள் கி. பி. 477வரை ஆண்டனர். அவர்களுக்குப்பின் ஆண்ட புதகுப்தன் காலத்தில் குப்த இராச்சியம் மீண்டும் உயிர்பெற்று மாளவம் முதல் வங்காளம் வரை பரவி இருந்தது. மைத்கர அரசர்கள் ஆண்டுவந்த சௌராஷ்டிர தேசமும் கி.பி. 545 வரை குப்தர்கள் சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்கி இருந்தது. ஆனால் வட இந்தியா முழுவதும் வலி மிகுந்த பல சிற்றரசர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் குப்த சக்கரவர்த்தியின் வலிமை மிகவும் குன்றியதாகவே கூறவேண்டும். இந்தச் சிற்றரசர்களில் ஒருவன் கி.பி.484-ல் யமுனைமுதல் நருமதைவரை உள்ள நாடுகளை ஆண்ட மகாராஜா சுரச்மிசந்திரன். அவனுக்குக் கீழ்ப்பட்டு மகாராஜா மாத்ரு விஷ்ணு ஏரண் பிரதேசத்தை ஆண்டான். அவன் இராச்சியத்திற்குக் கீழ்ப்புறம் பரிவ்ராஜக மகாராஜாக்கள் ஆண்டுவந்த நாடு இருந்தது. இவர்களில் முக்கியமான அரசர்கள் ஹஸ்தியும் (475-517), சம்க்ஷோகனும் (518-528) ஆவர். சுமார் கி.பி.500-ல் புதகுப்தன் இறந்ததும் குப்தஇராச்சியம் பிரிவுபட்டது. அதன் கீழ்ப்பாகத்தில் வைநியகுப்தனும், மேல்பாகத்தில் பானுகுப்தனும்ஆண்டனர். பானுகுப்தனும் அவனுக்குப்பின் மேல்நாடுகளை ஆண்ட நரசிம்ம குப்தனும் ஹூணர்களுடன் போர் புரிந்தனர். அவர்கள் ஆண்டகாலம் கி.பி.500 முதல் 550 வரை. நரசிம்ம குப்தனுக்குப் பாலாதித்தன் என்ற பட்டம் உண்டு. அவனுக்கு விரோதியாய் இருந்த ஹூண அரசன் பெயர் மிகிரகுலன். மிகிரகுலன் காந்தாரத்திலிருந்து மத்திய இந்தியாவரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தை ஆண்டான். அவன் ஒரு சிவபக்தன். பௌத்த மதத்திற்கு விரோதி. சிலகாலம் நரசிம்மகுப்தனைக்கூடத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். இவனுக்குப் பெரும்பகையாகத் தலைப்பட்டவன் மாளவ தேசத்து அரசன் யசோ தர்மன் என்பான். இவன் தன் சாசனங்களில் மிகிரகுலனை வென்றதாகவும், குப்தர்களும் ஹுணர்களும் வெல்லாத நாடுகளைத் தான் வென்றதாகவும், இமயமலை முதல் மகேந்திரமலைவரை ஆண்டுவந்த இந்திய அரசர்களெல்லாம் தனக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்றும் கூறுகிறான். இந்தச் சாசனங்களின் காலம் கி.பி. 534. இதற்குப்பின் நரசிம்ம குப்தன் மிகிரகுலனுடைய இராச்சியத்தை வேரறுத்தான் என்று சீன யாத்திரிகன் ஹியூன் சாங் கூற்றிலிருந்து அறிகிறோம். இதற்குப்பின் குப்த சாம்ராச்சியம் வலுக்குறைந்து 550வரை தொடர்ந்து இருந்தது. அதற்குப்பின் வடஇந்தியாவில் பல சிறு இராச்சியங்கள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை பிற்காலக் குப்தர்கள் ஆண்ட மகத இராச்சியம்; அதற்கு மேல்புறம் அதனுடன் அடிக்கடி போர் தொடுத்துவந்த மௌகரிகளுடைய இராச்சியம். சௌராஷ்டிர தேசத்தில் படார்கன் என்னும் படைத் தலைவனால் நிறுவப்பட்ட மைத்ரக வமிசமும் இங்குக் குறிப்பிடத்தக்கது. மைத்ரகர்கள் கி.பி. 550 வரை குப்தர்களின்கீழ்ச் சிற்றரசராய் இருந்து பிறகு சுதந்திரம் எய்தினர்.

குப்த சாம்ராச்சியத்தின் காலம் இந்திய வரலாற்றில் மிகவும் மேன்மையான காலங்களில் ஒன்று. பொதுவாக வடஇந்தியா முழுவதும் அமைதி நிலவிச் செழிப்பாக இருந்தகாலம் அது. பாஹியான் என்னும் சீன யாத்திரிகன் கி.பி. 401 முதல் 410 வரை இந்தியாவில் யாத்திரைசெய்தான். அவன் கருத்து முக்கியமாகப் பௌத்த மதத்திலும் அதன் ஸ்தாபனங்களிலும் சென்றது. குப்த இராச்சியத்தில் பௌத்த மதம் மிகுதியான பிரசாரத்தில் இருந்ததாக அவன் கூறுகிறான். எல்லா நகரங்களிலும் பணம் மிகுந்த விஹாரங்களும், அவைகளில் கல்வி மிகுந்த ஆசிரியர்களும், அவர்களிடம் கற்பதற்காகப் பல நாடுகளிலும் இருந்துவந்த மாணவர்களும் இருப்பதைக் கண்டான். உதாரணமாக மதுரா நகரில் இருபது விஹாரங்களும் மூவாயிரம் பிட்சுக்களும் இருந்தார்கள். அரசியல், மக்களுக்கு நன்மை பயக்கும் முறையில் நடந்து வந்தது. வரிகள் மிகவும் அதிகம் இல்லை. படைகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் ஒழுங்காக மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டது. குற்றவாளிக்குக் கடுந்தண்டனை பொதுவாக விதிக்கப்படவில்லை. மக்கள் நன்னடத்தையில் ஈடுபட்டார்கள். யாத்திரிகர்களுக்கு அங்கங்கே தங்குமிடங்களும், நோயாளிகளுக்கு மருத்துவச் சாலைகளும் இருந்தன, “மக்கள் பொதுவாகப் புலால் உண்பதில்லை; குடிப்பதில்லை; வெங்காயம் பூண்டு முதலியவற்றைத் தின்பதில்லை” என்று பாஹியான் கூறியிருப்பது பௌத்தர்கள் சம்பந்தப்பட்ட வரைக்கும் உண்மையாக இருக்கலாம். மற்றவர்கள் புலால் உண்டதாகவே தெரிகிறது. அக்காலத்து ஸ்மிருதிகளில் அது சிரார்த்தத்திற்குச் சிறந்த உணவாகக் கூறப்படுகிறது. உடைகளிலும் ஆபரணங்களிலும் சில வெளிநாட்டுப் பழக்கங்கள் இந்தியாவில் பரவத்தொடங்கின. ஆனால் தேசிய உடையான வேட்டி, அங்கவஸ்திரம், தலைப்பாகை முதலியன ஒருநாளும் வழக்கழிந்து போகவில்லை. பொதுவாகப் பருத்தி ஆடைகள் அணிந்தனர்; பட்டாடைகளும் உண்டு. அக்காலத்துச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உற்று நோக்கின் இருபாலாரும் அணிந்துவந்த ஆடை ஆபரணங்களின் வகைகளும் அழகும் வெளியாகும். முக்கியமாகப் பலவிதமான மேகலைகளும் மாலைகளும் உபயோகிக்கப்பட்டன. தலைமயிர், முகம், உதடு முதலியவற்றை அழகு படுத்தப் பல உபாயங்கள் தேடினார்கள். நாழிகையை அளக்கக் கன்னல் என்னும் கருவி உபயோகத்திலிருந்தது. வீடுகளிற் சூதும் சதுரங்கமும், வெளியே வேட்டை, ஆட்டுச் சண்டை, சேவற் சண்டை முதலியனவும் பொழுதுபோக்கும் விளையாட்டுக்களாக இருந்தன. குழந்தைகளும் பெண்களும் பந்தாடுவதுண்டு. திருவிழாக்களும் நாடக மேடைகளும், விநோதமாகப் பொழுதைப் போக்க அவகாசம் கொடுத்தன. கைத்தொழில், வியாபாரம், கொடுக்கல் வாங்கல் முதலியன விருத்தியடைந்தன. தொழிலாளிகளும் வியாபாரிகளும் தங்கள் சங்கங்களை ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். அவர்களால் பல பொது நன்மைகள் ஏற்பட்டன. உதாரணமாகத் தசபுரம் என்னும் ஊரில் உள்ள சாலியச்சங்கத்தார் கி. பி. 437-ல் சூரியன் கோவில் ஒன்று கட்டி, மறுபடி 473-ல் அதை ஜீர்ணோத்தாரணம் செய்தார்கள். அச்சங்கத்தார் பலர் சோதிடத்திலும் போர்புரிவதிலும் வல்லவர்கள் என்று அறிகிறோம். மேற்கே உள்ள அயல் நாடுகளோடு பாரசீக வளைகுடா மூலமாகவும், செங்கடல் மூலமாகவும், தரைமார்க்கமாகவும் வியாபாரம் நடந்து வந்தது. பிரயாணிகளையும் மற்றும் வியாபாரச் சரக்குகளையும் ஏற்றிச் செல்லும் 500 கப்பல்கள் கிழக்கே இந்தோனீசியா முதல் சீனா வரையுள்ள நாடுகளுடன் வியாபாரம் நடத்தி வந்தன.

கல்வியும் சிற்பமும் அக் காலத்தில் செழித்து வளர்ந்தன. இப்பொழுது டெல்லியில் குதுப்மினாருக்கு அருகே காணப்படும் இரும்புத் தூண் அக்காலத்து உலோக வேலையின் மேன்மையை நன்றாக வெளிப்படுத்துகிறது. இருபத்துநாலடி உயரமுள்ள இந்தத் தூண் ஆறரை டன் எடை உடையது. 1,500 ஆண்டுகளுக்கு மேல் வெயிலும் மழையும் தாங்கிய இத் தூணில் இது வரைக்கும் துரு ஏறியதே கிடையாது. சமீபகாலம் வரை இம்மாதிரி இரும்புத் தூண் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிலும் செய்திருக்க முடியாது. உயர்தரக் கல்விக்கு ஏற்பட்ட மொழி சமஸ்கிருதம். பீகாரும் நாலந்தாவும், கூர்ஜரநாட்டில் வல்லபியும் புகழ்பெற்ற கல்வி நிலையங்களாக விளங்கின. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஸ்மிருதிகள், இலக்கணம், தருக்கம், வேதாந்தம், வானவியல், சோதிடம், வைத்தியம், தனுர்வேதம் முதலிய எல்லாக் கலைகளும் நன்றாகப் பயிலப்பட்டு வந்தன. இக் காலத்துக் கவிகளில் மிகவும் புகழ் பெற்றவன் காளிதாசன். புராணங்கள் பலவும், யாஞ்ஞவல்கியர், நாரதர், காத்தியாயனர், பிருகஸ்பதி என்பவர்களின் பெயரால் உள்ள ஸ்மிருதிகளும் இக் காலத்தில் எழுதப் பெற்றன. நீதி நூல்களில் காமந்தகனுடைய நீதி சாரமும், சந்திரகோமி எழுதிய சந்திர வியாகரணம் என்னும் இலக்கணமும், அமரசிம்மன் தொகுத்த அமரகோசம் என்னும் நிகண்டும் இக்காலத்தவையே. வானவியலில் சிறந்த ஆரியபட்டீயமும் ஆரியபட்டரால் குப்தர்கள் காலத்திலேயே எழுதப் பெற்றது. இதை அவர் கி.பி.499-ல் இயற்றியபோது அவருக்கு வயது 23. அவருக்குப் பின் வந்தவர் வராகமிகிரர். அவருடைய நூல்கள் பிருகத் ஜாதகம், லகு ஜாதகம். பிருகத் சம்ஹிதை முதலியன. யவனர்களிடத்து வானவியல் மிகவும் வளர்ந்து இருப்பதால் அவர்களும் இந்திய ரிஷிகளுக்குச் சமமானவரே என்று அவர் கூறுகிறார். வைத்தியத்தில் வாக்படர் அஷ்டாங்க சங்கிரகம் என்னும் நூலை இயற்றினார். பாலகாப்பியர் யானை மருத்துவ நூலைச் செய்தார். பெளத்த ஆசிரியர்கள் ஆகிய புத்த கோஷர், புத்த தத்தர், வசுபந்து, ஆரிய சூரர், அசங்கர், தின்னாகர் முதலியவர்கள் பல சிறந்த நூல்களை இயற்றியதும் இக்காலமே. சமணர்களும், தங்களுடைய மத நூல்களைச் சீர்ப்படுத்தி, அவைகளுக்கு உரைகளான நிருக்திகளையும் சூர்ணிகளையும் எழுதினதும் இக்காலம். உமாசுவாதி, சித்தசேனர் என்ற இரண்டு சமண ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். பொதுவாகக் குப்தர்கள் ஆட்சிக் காலம் இந்திய வரலாற்றில் மிக்க ஒளி பெற்று விளங்குகிறது. இக்காலத்தில்தான் கலைகள் பலவும் மேன்மை யடைந்தன. நாட்டில் செல்வமும் அமைதியும் மிகுந்தன. இந்நாட்டு மக்கள் மத்திய ஆசியாவிலும், தென்கிழக்கு ஆசியாவில் உள்ள நாடுகளிலும் ஏராளமாகக் குடியேறி, அங்கே இந் நாட்டு நாகரிகத்தைப் பல நூற்றாண்டுகளாகச் செழித்து ஓங்கும்படி நிலை நிறுத்தினார்கள்.

குப்த ஆட்சி முடிந்தபின் சிறிது காலம் வட இந்திய வரலாறு தெளிவாக விளங்கவில்லை. மகதத்தில் ஆண்ட பிற்காலத்துக் குப்தர்கள் மௌகரிகளுடன் போர்கள் நடத்துவதும், சமாதானங்கள் செய்வதுமாக இருந்து வந்தனர். சிறிது காலம் மௌகரி மகத அரசர்களை வெற்றிகொண்டு, அந் நாட்டை அடக்கி ஆண்டனர். சர்வவர்மன் என்னும் மௌகரி அரசன் தாமோதர குப்தனைப் போரில் வீழ்த்தினான்.

பஞ்சாபின் கீழ்க்கோடியில் குருக்ஷேத்திரம் என்னும் புண்ணிய பூமியில் ஸ்தாணேசுவரம் என்ற ஒரு சிவ ஸ்தலம் உள்ளது. குப்தர்கள் காலத்தில் ஹுணர்களைத் தடுக்க ஏற்படுத்தப்பட்ட அரண்களில் இது முக்கியமானது. இதை ஆண்டவர்கள் புஷ்பபூபதி வமிசத்து அரசர்கள். இவ்வமிசத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவன் ஹர்ஷ வர்த்தனன். இவனை ஹியூன் சாங் வைசியன் என்கிறான். ஆனால் பிருகத் சம்ஹிதையில் வைஸ்ய என்ற ராஜபுத்திர குலம் ஒன்று குறிக்கப்பட்டிருக்கிறது. ஆகையினால் இவ்வமிசம் க்ஷத்திரிய வமிசமே. இதில் உதித்த ஆதித்திய வர்த்தனன் பிற்காலத்துக் குப்த வமிசத்து மகாசேன குப்தா என்பவளை மணந்தான். இவர்களுக்குப் பிரபாகர வர்த்தனன் என்ற ஒரு மகன் பிறந்தான். ராஜ்ய வர்த்தனன், ஹர்ஷ வர்த்தனன். ஆகிய இரு புத்திரர்களும், ராஜ்யஸ்ரீ என்ற பெண்ணும் அவனுடைய மக்களாவர். ராஜ்யஸ்ரீ கன்னோசியில் ஆண்ட மெளகரி அரசன் கிருகவர்மனுக்கு இராணியானாள். இவ்விஷயங்களும் ஹர்ஷவர்த்தனன் காலத்து நிகழ்ச்சிகளும் பாணகவியினுடைய ஹர்ஷசரிதத்திலும், ஹியூன் சாங் பிரயாணக் குறிப்புக்களிலும் விவரமாகக் காணப்படுகின்றன. ஹர்ஷன் காலத்துச் செப்பேடுகளும் இரண்டு இருக்கின்றன.புஷ்ப பூபதிவமிசத்தில் உண்டான முதல் பேரரசன் பிரபாகரவர்த்தனனே. இவன் ஹூணர், கூர்ஜரர், மாளவர், லாடர் முதலியவர்களுடன் பல போர்கள் புரிந்து தன் நாட்டைப் பெருக்கிய வீரன். கி. பி. 604-ல் யௌவனமடைந்த தன் மகன் ராஜ்ய வர்த்தனனை ஒரு பெரும் படையுடன் ஹூணர்களை எதிர்க்க அனுப்பினான். ஹர்ஷ வர்த்தனனுக்கு அப்போது வயது பதினைந்து. அவனும் ஒரு குதிரைப் படையுடன் தன் தமையன் பின் சென்றான். அப்பொழுது தன் தந்தை கடுமையான சுரத்தால் சாகுந் தறுவாயில் இருப்பதாகச் செய்தி வந்தது. உடனே திரும்பி வந்த ஹர்ஷன்தன் தந்தையினுடைய மரண காலத்தில் அவர் அருகில் இருந்தான். ராஜ்யவர்த்தனன் ஹூணர்களைத் தோற்கடித்துத் திரும்பினதும் அரசனானான். அப்பொழுது மாளவ அரசனால் கிருகவர்மன் கொல்லப்பட்டு, அவன் மனைவி ராஜ்யஸ்ரீ கடுஞ்சிறையிலிடப்பட்டதாகச் செய்தி வந்தது. இங்கே குறிக்கப்பட்ட மாளவ தேசம் இன்னதென்று தெளிவாகவில்லை. அதே மாதிரி பாணனால் தேவகுப்தன் என்றழைக்கப்பட்ட அதன் அரசனைப் பற்றியும் வேறு விவரங்கள் புலப்படவில்லை. தன் தங்கைக்கு நேரிட்ட துன்பத்தை அறிந்த ராஜ்ய வர்த்தனன் பதினாயிரம் குதிரைப் படைகளுடன் உடனே கிளம்பிச் சென்று, மாளவ அரசனை எளிதில் தோற்கடித்தான். ஆனால் அவ்வரசனுடன் நட்புக் கொண்டிருந்த கௌட அரசன் சசாங்கன் என்பான் ராஜ்யவர்த்தனனுடன் சமாதானம் பேசுவதாகப் பாசாங்கு செய்து, அவனை வஞ்சனையாற் கொன்று விட்டான். இந்தச் செய்தியும், ராஜ்யஸ்ரீ சிறையிலிருந்து வெளியேறிக் காட்டுக்கு ஓடிப்போய்விட்டாள் என்ற செய்தியும் ஹர்ஷனுக்கு எட்டின. ஹர்ஷன் உடனே புறப்பட்டுத் தன் பந்துவும், படைத் தலைவனுமான பண்டி என்பானைச் சசாங்கனைத் தொடரும்படி அனுப்பிவிட்டுத் தான் தன் தங்கையைத் தேடிச் சென்றான். விந்திய மலைப் பிரதேசங்களில் ஒரு பௌத்த சன்னியாசியால் வழிகாட்டப் பெற்று, ராஜ்யஸ்ரீ தீயில் விழுந்து தன் உயிரைத் துறக்கும் தறுவாயில் அவள் இருந்த இடத்தைச் சேர்ந்தான். அவளை மீட்டுக் கொண்டு கன்னோசி நகருக்குத் திரும்பி, அவளுடன் சேர்ந்து அந்நாட்டு ஆட்சியை மேற்கொண்டான். ஸ்தாணேசுவரத்து ஆட்சியோ ராஜ்யவர்த்தனனுக்குப் பின் ஹர்ஷனுக்கே உரித்தாயிற்று. ஹர்ஷனுடைய சகாப்தம் ஒன்று கி. பி. 606-ல் தொடங்கிற்று. ராஜ்யவர்த்தனனைக் கொன்றதற்காகச் சசாங்கனுக்கு ஒரு தண்டனையும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. கி.பி. 619-ல் அவன் இன்னும் தன் இராச்சியத்தை ஆண்டு கொண்டிருந்ததாகச் சாசனங்களால் அறிகிறோம். அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் அவன் நாட்டை ஹர்ஷன் கைப்பற்றி யிருக்கலாம்.

ஹர்ஷ வர்த்தனனுடைய சேனை ஐயாயிரம் யானைகளும், இருபதினாயிரம் காலாட்களும் கொண்டது. இப்பெரும்படையுடன் கிழக்கும் மேற்குமாகச் சென்று, ஐந்தரை ஆண்டுகள் இடைவிடாமல் போர்புரிந்து, தனக்குக் கீழ்ப்படியாத மன்னர்களைப் படியவைத்து, வடஇந்தியா முழுவதையும் தன் வயமாக்கிக் கொண்டான் ஹர்ஷன் என்று ஹியூன் சாங் கூறுகிறான். நாளடைவில் அவன் படைகள் பெருகின. அவற்றில் அறுபதாயிரம் யானைகளும் இலட்சம் குதிரைகளும் இருந்தன. முதல் ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின் போர் ஒன்றும் இல்லாமல் அமைதியாக முப்பத்தைந்து ஆண்டுகள் ஹர்ஷன் தான் ஏற்படுத்திய சாம்ராச்சியத்தை ஆண்டு வந்தான் என்பதும் ஹியூன்சாங் கூற்று. ஆனால் இதைப் பொதுப்படையாகக் கொள்ளவேண்டும். ஏனெனில் இதர ஆதாரங்களால் ஹர்ஷன் புரிந்த வேறு சில போர்கள் புலப்படுகின்றன. சுமார் கி.பி. 620-ல் ஹர்ஷன் தட்சிண தேசத்தின்மேற் படையெடுக்க முயன்று, அந்நாட்டுச் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலகேசியால் நருமதை நதிக்கரையில் தோல்வியுற்றான். கி. பி. 633 க்கும் 641 க்கும் இடையில் கூர்ஜர தேசத்தில் வல்லபியில் ஆண்டுவந்த மைத்ரக அரசன் பாலாதித்தியன் அல்லது II-ம் துருவசேனனோடு போர் புரிந்தான். சிறிதுகாலம் துருவசேனன் ஹர்ஷனுடைய விரோதிகளான II - ம் புலகேசி, பரோச்சில் ஆண்டுவந்த கூர்ஜர மன்னன் முதலியவர்களோடு நட்புக்கொண்ட போதிலும், கடைசியாக ஹர்ஷனுடன் சமாதானம் செய்துகொண்டு, அவன் மகளை மணந்து அவன்கீழ் ஒரு சிற்றரசனாக ஆண்டு வந்தான். மாளவ தேசத்தின் மேற்குப்பாகமும், அவன் இராச்சியத்தில் ஹர்ஷனால் சேர்த்துக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது அஸ்ஸாம் என்று வழங்கும் பிராக்ஜோதிஷத்தின் அரசனான குமாரபாஸ்கரவர்மன் ஹர்ஷனுடைய நெருங்கிய நண்பன். வங்க அரசன் சசாங்கனுக்குப் பெரும்பகைவன். ஹர்ஷன் இராச்சியத்தில் நேபாளம் சேர்ந்ததா இல்லையா என்று ஐயுறுவர் சிலர். ஆனால் ஹர்ஷ சகாப்தம் அந்நாட்டில் உபயோகப்பட்டு வந்ததால், அது ஹர்ஷனால் ஆளப்பட்டதாகவே கொள்ளப்படவேண்டும். வடமேற்கில் ஜாலந்திரம் என்னும் ஊர் ஹர்ஷன் நாட்டிற்கு எல்லையாக இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் ஹியூன் சாங் சீனாவிற்குத் திரும்பிப் போகும்போது ஹர்ஷனால் அவனுடைய பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்ட படைகள் இவ்வூரில் நின்றுவிட்டன. ஹர்ஷன் ஆட்சியில் நிகழ்ந்த போர்களில் கடைசியாக நடந்தது கி. பி. 643-ல் கோங்கோதா (கஞ்சம்) என்னும் நாட்டின் படையெழுச்சி. ஹர்ஷனுடைய சிற்றரசர்களில் ஒருவன் மகதத்தில் ஆண்டுவந்த பூர்ணவர்மன் என்பான். இவன் மௌரிய அரசன் அசோகனுடைய சந்ததியைச் சார்ந்தவன். புத்த கயையிலுள்ள போதி மரத்தைச் சசாங்கன் வெட்டி வீழ்த்திச் சுட்டபின், நூற்றுக் கணக்கான பசுக்களின் பாலை வார்த்து, அப்புனித மரத்தைத் திரும்ப வளரச்செய்து, அதைச்சுற்றி ஒருவலுவான வேலியையும் கட்டிவைத்தவன் பூர்ணவர்மனே.

ஹர்ஷ வர்த்தனன் தன்னுடைய பரந்த இராச்சியத்தில் அடிக்கடி பிரயாணம் செய்து, அங்கங்கே உள்ள விசேஷங்களைத் தான் நேராகவே கண்டு கண்காணித்து வந்தனன். ஹியூன் சாங் அவனது ஆட்சி முறையைப் புகழ்ந்து பேசுகிறான். ”வரிகள் அதிகமில்லை. எல்லாச் சமயத்தவரும் அரசனால் ஆதரிக்கப்பட்டு வந்தனர். கொடிய குற்றங்கள் அதிகமில்லை. ஆயினும், குப்தர்கள் காலத்தைப்போலப் பிரயாணிகளுக்கு வழிநடைப் பயமில்லை என்று கூறமுடியாது” என்று அவர் கூறுகிறார். இரண்டு தடவை ஹியூன் சாங்கும் கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டான். நீதிமன்றங்களில் உண்மையறிவதற்குச் சபதங்களும் கடுஞ்சோதனை முறைகளும் (Trial by Ordeal) பழக்கத்திலிருந்தன. சிறு குற்றங்களுக்கு அபராதமும், பெரிய குற்றங்களுக்கு அங்கச் சேதமும் கடுஞ்சிறையும் தண்டனைகள். ஹர்ஷனைச் சிவபக்தன் என்று பாணன் கூறுகிறான். ஹர்ஷனுடைய தகப்பன் சூரிய பக்தன். அவன் தமையனும் தங்கையும் பௌத்தர்கள். ஹியூன் சாங் சந்தித்த பிறகு ஹர்ஷனுக்கு மகாயான பௌத்த மதத்தில் பற்று ஏற்பட்டது. பௌத்த மதம் நாடெங்கும் தாழ்வடைந்த போதிலும், ஹியூன் சாங் இரண்டு இலட்சம் பௌத்தசன்னியாசிகள் இருந்ததாகக் கணக்கிடுகிறான். சமண மதம் சில இடங்களில் மட்டுமே பழக்கத்தில் இருந்தது. பொதுப்படையாக இந்து மதம் எங்கும் பரவியிருந்தது. மத பேதங்களால் சில சச்சரவுகளும் கலகங்களும் ஏற்பட்டன. மதக்கொள்கைகளைப் பற்றிய வாதங்களும் அடிக்கடி நிகழ்ந்தன. கி.பி.643-ல் ஹர்ஷனுடைய இராசதானியான கன்னோசி நகரத்தில் ஒரு பெரிய உற்சவம் நடைபெற்றது. இதில் பல நாட்களாகப் புத்த விக்கிரகங்கள் ஆராதிக்கப்பெற்றன. திடீரென்று ஒருநாள் பெரிய புத்த விக்கிரகம் இருந்த பந்தலில் தீ மூட்டப்பெற்றது. இது ஹர்ஷனுடைய பௌத்த மத அபிமானத்திற்காக அவனைக் கொல்லப் பிராமணர்கள் செய்த சதி என்று ஹியூன் சாங் கூறுகிறான். இது எவ்வளவு தூரம் உண்மையென்று அறிந்து கொள்ள இடமில்லை. ஹர்ஷனும் அசோகனைப்போல் உணவிற்காகப் பிராணிகளைக் கொல்வதைக் குறைக்க முயன்றான். கன்னோசி உற்சவத்திற்குச் சில நாட்களுக்குப்பின் பிரயாகையில் வேறு ஒரு விழா நடந்தது. அதற்கு ஹியூன் சாங் பிரத்தியேகமாக அழைக்கப் பெற்றான். அதனால் அவர் சீனாவிற்குத் திரும்புவதற்குக் குறித்திருந்த நாளைச் சிறிது தள்ளிவைக்க நேர்ந்தது. பிரயாகைக் கூட்டம் எழுபத்தைந்து நாட்கள் நடைபெற்றது. வேறு நாட்களில் புத்தனும், சூரியனும், சிவனும் ஆராதிக்கப்பட்டார்கள். எல்லா மதத்தினருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஐந்தாண்டுகளாக ஹர்ஷனது பொக்கிஷத்தில் சேர்ந்த சொத்தெல்லாம் கூடியிருந்த மக்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்டன. இது ஹர்ஷனுடைய ஆட்சிக் காலத்தில் நடந்த கொடைகளில் ஆறாவது.

ஹியூன் சாங் இந்தியாவை விட்டகன்ற சிறிதுகாலத்துக்கெல்லாம் கி.பி. 646 - ன் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்திலோ ஹர்ஷன் மரணமடைந்தான். பெரிய கவிகளை ஆதரித்ததுமன்றித் தானும் ஒரு கவியாக விளங்கினான். அவன் கையெழுத்து அவனுடைய செப்பேடுகளிரண்டிலும் காணப்படுகிறது. இரண்டு பெளத்தத் தோத்திரங்களும், நாகானந்தம், இரத்தினாவளி, பிரியதர்சிகா என்னும் நாடகங்களும் ஹர்ஷனால் எழுதப்பட்டன. நாகானந்தம் ஒரு பௌத்தக் கதையைத் தழுவியது. ஹர்ஷனால் ஆதரிக்கப்பட்ட கவிகளில் பாணனும் மயூரனும் முக்கியமானவர்கள். வியாகரணத்தில் புகழ்பெற்ற பர்த்ருஹரியும் அதே காலத்தவனாக இருந்திருக்க வேண்டும்.

ஹர்ஷன் சீன தேசத்தோடு தூதர்கள் மூலமாக நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணினான். தை -த்- சூன் (கி.பி. 627-49) என்னும் சீனச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய சிற்றரசனான நேபாள அரசன் அஞ்சுவர்மனுடைய மகளை மனந்தான். கி.பி. 641-ல் ஹர்ஷன் அனுப்பின பிராமண தூதனொருவன் இரண்டு ஆண்டுகட்குப்பின் சீனச் சக்கரவர்த்தி அனுப்பின தூதர்களுடன் திரும்பிவந்தான். சீனத்தூதர்கள் இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டு 645-ல் அவர்கள் நாட்டிற்குத் திரும்பினர். அடுத்த ஆண்டு இன்னும் ஒரு தூதனைச் சீனச்சக்கரவர்த்தி இந்தியாவிற்கு அனுப்பிவைத்தான். ஆனால் அவன் இந்தியாவைச் சேருமுன் ஹர்ஷன் இறந்துவிட்டான். ஆகையால் இந்தத் தூதனுக்கும் சில இந்தியச் சிற்றரசருக்கும் சண்டைகள் ஏற்பட்டன. அஸ்ஸாமில் ஆண்டுவந்த பாஸ்கரவர்மனும், சீனச்சக்கரவர்த்தியின் மகளை மணந்திருந்த திபெத்து அரசனும் உதவியதால் அத்தூதன் தன்னை எதிர்த்த இந்திய அரசர்களைத் தோற்கடித்துச் சிறைப்படுத்திக்கொண்டு சீனாவிற்குத் திரும்பினான். அந்தச் சீனத்தூதனின் பெயர் வாங்யு வாங்கே. அவன் மற்றொரு முறை கி.பி. 657-ல் சீனச் சக்கரவர்த்தியின் உத்திரவுப்படி இந்தியாவிலுள்ள பௌத்த ஆலயங்களுக்குக் காணிக்கை செலுத்துவதற்கு வந்தான். அவன் லாசா, நேபாளம் வழியாக இந்தியாவை யடைந்து, வைசாலி, புத்த கயை முதலிய பௌத்த க்ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு, ஆப்கானிஸ்தானத்தின் வழியாகச் சீனாவிற்குத் திரும்பினான்.

ஹர்ஷனுக்குப் பிறகு மகத நாட்டில் பிற்காலத்துக் குப்தர்கள் தங்கள் இராச்சியத்தை வலுப்படுத்திக் கொண்டனர். ஆதித்தியசேன குப்தன் சக்கரவர்த்தி பதம்பெற்று, அசுவமேதயாகம் செய்து கி.பி. 672வரை ஆண்டான். தெற்கேயிருந்து வரும் யாத்திரிகர்களுடைய வசதிக்காகக் கயையில் ஒரு மடம் கட்டுவித்தான். அவனுக்குப்பின் ஆண்ட அரசன் அவன் மகன் மூன்றாம் தேவகுப்தன் ஆவான். அவன் சைவனாயிருந்தபோதிலும், சீன யாத்திரிகர்களின் உபயோகத்திற்காக ஒரு மடத்தை ஒதுக்கி வைத்தானென்று கூறுகிறார்கள். அவனுக்குப்பின் சக்கரவர்த்தி பட்டத்தைத் தரித்து ஆண்டவர்கள் முறையே அவன் மகன் விஷ்ணுகுப்த சந்திராதித்தனும், பேரன் இரண்டாம் ஜீவிதகுப்தனும் ஆவார்கள். ஆனால் பொதுவாக ஹர்ஷன் இறந்த பிறகு சிலகாலம் வட இந்தியாவில் ஒரு பேரரசும் இல்லாமலே போயிற்று. இதற்கு முக்கிய காரணம் ஹர்ஷனுக்குச் சந்ததி இல்லாததுதான்.

ஹர்ஷனுக்குப் பிறகு வட இந்தியாவில் நிலைபெற்ற பல இராச்சியங்களில் முதலாவது வங்காளம். இது நான்கு பெரும்பிரிவுகளாக இருந்து வந்தது: 1. புண்டரவர்த்தனம் (வட வங்காளம்), 2. கர்ண சுவர்ணம் (பாகீரதி நதிக்கு மேற்குள்ளது), 3. சமதடம் (வங்காளத்தின் கிழக்குத் தெற்குப் பாகங்கள்). 4. தாமிரலிப்தம் (வங்கத்தின் தென்மேற்குப் பாகம்); அதே பெயர்கொண்ட துறைமுகத்தையுடையது. மகஸ்தான் என்னும் இடத்தில் கிடைத்த ஒரு சாசனத்தால் வங்கநாடு மௌரிய இராச்சியத்தைச் சேர்ந்திருந்தது என்று அறிகிறோம். குப்தர்களும் வங்கத்தில் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் வங்கத்தில் ஆண்ட அரசர்களில் முக்கியமானவர்கள் ராஜாதி ராஜனான வைஷ்ணவ அரசன் ஜயநாகனும், சைவ அரசன் சமாசார தேவனும் ஆவார்கள். ஹர்ஷன் காலத்தில் வங்கத்தை ஆண்டவன் சசாங்கன். ஆரம்பத்தில் இவன் கர்ண சுவர்ணம் என்னும் பாகத்தை ஆண்டு, பிறகு அஸ்ஸாம். ஒரிஸ்ஸா, கஞ்சம் முதலிய நாடுகளில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தினான். ஒரு சமயம் அவன் இராச்சியம் மேற்கே காசிவரை பரவியிருந்தது. அவனே ராஜ்ய வர்த்தனனைக் கபடமாகக் கொலை செய்தவன். ஹியூன் சாங் இந்தியாவிலிருந்தபோது சசாங்கனுடைய நாடுகள் சில. அஸ்ஸாம் இராச்சியத்துப் பாஸ்கரவர்மனைச் சேர்ந்துவிட்டன. மிகுதி ஹர்ஷன் இராச்சியத்தில் அடங்கிவிட்டது. ஹர்ஷனுக்குப் பின் ஆண்ட பிற்காலத்துக் குப்தர்கள் வங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டனர். அதே காலத்தில் சமதடத்தில் கட்க வமிசத்து அரசர்கள் சுயேச்சையாக ஆண்டு வந்தனர்.

ஆதிசூலன் என்ற ஓர் அரசன் வங்கத்தை ஆண்டதாகவும், அவன் ஐந்து பிராமண குடும்பங்களையும், ஐந்து காயஸ்த குடும்பங்களையும் கன்னோசியிலிருந்து வங்கத்திற்கு வரவழைத்து, அந்நாட்டில் இந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்தான் என்றும், இக்குடும்பங்களிலிருந்து உண்டானவர்களே முக்கியமான வங்காள வமிசத்தவர் என்றும் ஓர் ஐதிகம் இருக்கிறது. சிலர் இதை வெறுங் கதையென்று தள்ளிவிடுவர். உண்மையில் ஆதிசூரன் என்னும் அரசன் கௌர் என்னும் ஊரையும், அதன் அருகிலுள்ள சிறு நிலப்பகுதியையும் சுமார் கி.பி.700-ல் ஆண்டுவந்ததாக எண்ணலாம். கி. பி. 730-40-ல் ஒரு கௌட அரசன் கன்னோசியிலிருந்து படையெடுத்து வந்த யசோவர்மனால் போரில் தோற்கடித்துக் கொல்லப்பட்டான் என்று கௌடவஹோ என்னும் பிராகிருத காவியத்தால் அறிகிறோம்.

வங்கநாட்டு இராச்சிய வமிசங்களில் மிகவும் புகழ் பெற்றது பாலர்களுடைய வமிசம். இவர்கள் பௌத்தர்கள். இவ்வமிசத்து அரசர் பலர் பரந்த நாடுகளை ஆண்ட சக்கரவர்த்திகளாவர். கி. பி. எட்டாம் நூற்றாண்டின் நடுவில் வங்க தேசத்து மக்கள் கோபாலன் என்பவனைத் தங்கள் அரசனாகத் தேர்ந்தெடுத்து, நாட்டில் பரவியிருந்த அராஜகத்தை முடித்தனர். கோபாலன் மகத நாட்டை வென்று நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆண்டான்.உத்தண்டத்தில் அவன் ஒரு பௌத்த விஹாரத்தைக் கட்டுவித்தான். கூர்ஜர அரசன் வத்ச ராஜனுடன் போர்புரிந்து தோல்வியுற்றான். பாலர்களில் இரண்டாம் அரசனான தர்மபாலன் ஆண்டது அறுபத்துநாலு ஆண்டுகள்.கி. பி. 800க்குப் பிறகு அவன் கன்னோசியின் மீது படையெடுத்து, அங்கு ஆண்டுவந்த இந்திராயுதனை நீக்கிச் சக்கராயுதனுக்குப் பட்டம் கொடுத்தான். அவன் நாளில் குன்றிப்போயிருந்த பழைய மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரம் புத்துயிர் பெற்றது. விக்ரமசீலம், சோமபுரம் என்னுமிடங்களில் அவன் பௌத்த விஹாரங்கள் நிறுவினான். முதல் விஹாரம் கங்கைக் கரையில் ஒரு மலைமேல் கட்டப்பட்டது. இதில் நூற்றேழு கோயில்களும், ஆறு கலாசாலைகளும் இருந்தனவாம். தர்மபாலனுடைய ஆட்சி, வங்காளம் முதல் டெல்லி வரையிலும், ஜாலந்தரம் முதல் விந்தியமலை வரையும் பரவி இருந்தது என்பர் தாரநாத் என்னும் திபெத்து வரலாற்று ஆசிரியர். தர்மபாலன் காலத்திலும், அவனுக்குப்பின் ஆண்ட தேவபாலன் காலத்திலும் பல சித்திர வேலைக்காரர்கள், சிற்பிகள், ஸ்தபதிகள் முதலியோர் ஆதரிக்கப்பட்டார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் தீமான், விடபாலன் என்பவர்கள்.

தேவபாலன் என்னும் மூன்றாவது அரசன் மிகவும் வலிமையும் புகழும் பெற்றவன். இவன் நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆண்டான். அவன் படைத்தலைவனான லவசேனன் அஸ்ஸாம், ஒரிஸ்ஸா முதலிய நாடுகளை வென்றான். தேவபாலன் மிகவும் பக்தியுள்ள பௌத்தன். அவனுக்குச் சுவர்ணத்வீபம் என்னும் சுமாத்ரா தீவில் ஆண்டுவந்த பாலபுத்திர தேவனோடு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வரசன் நாலந்தாவில் கட்டின விஹாரம் ஒன்றிற்குச் சில கிராமங்களை அளிக்க அனுமதி கொடுத்தான். பத்தாம் நூற்றாண்டில் பால ஆட்சி காம்போஜர்கள் என்னும் மலை நாட்டாரால் தடைப்பட்டிருந்தது. 1-ம் மகிபாலன் (ஆ.கா.978-1030) அக் காம்போஜர்களை விரட்டி இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். 1023-ல் சோழ அரசன் I-ம் இராசேந்திரனால் அவன் தாக்கப்பட்டபோது, அவன் சிற்றரசனாகிய தட்சிணராட அரசன் ரணசூரன் அவனுக்கு உதவிபுரிந்தான். பால அரசர்கள் எல்லோரிலும் இவனையே மக்கள் புகழ்ந்தனர். இவன் காலத்தில் தர்ம பாலன் முதலிய பௌத்த சன்னியாசிகள் கி.பி. 1013-ல் திபெத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கே சென்று அந்நாட்டிற்குப் புத்துயிக் கொடுத்தனர். மகிபாலனுக்குப் பிறகு ஆண்டவன் நயபாலன். நயபாலன் மகன் மூன்றாம் விக்கிரம பாலன் என்பவன். அவனுக்குப்பின் அவன் பிள்ளைகள் மூவருக்குள் சண்டை ஏற்பட்டதாலும், மற்றும் மாஹிஷ்யர்கள் என்னும் சாதியாரால் செய்யப்பட்ட கிளர்ச்சியாலும் அரசு நிலைகுலைந்தது. கடைசியாக ராமபாலன் என்னும் மூன்றாம் மகன் ராஷ்டிரகூடரின் உதவியால் இராச்சியத்தை மீண்டும் வலுப்படுத்தி ஆண்டான். அவனுடைய சரிதம் ராமசரிதம் என்னும் காவியத்தில் விரிவாகக் காணப்படுகிறது. புகழ்பெற்ற பால அரசர்களில் கடைசியானவன் அவனே. அவனுக்குப்பின் இந்திரத்தியும்னபாலன் இறுதியாக ஐந்து வலியற்ற அரசர்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை ஆண்டு வந்தனர்.

பாலர்களுக்குப்பின் சேனவமிசத்து அரசர்கள் வங்காளத்தை ஆண்டனர். முதலில் இவர்கள் வட ஒரிஸ்ஸாவில் தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திப் பிறகு பாலர்களுடைய வங்க நாட்டைக் கைப்பற்றினார்கள். பதினோராம் நூற்றாண்டின் நடுவில் இவ் வமிசத்தை ஸ்தாபித்த சாமந்த சேனனும், அவன் மகன் ஹேமந்த சேனனும், மயூரபஞ்சு நாட்டிலுள்ள காசீபுரத்தைத் (இப்போது கஸ்யாரி எனப்படும்) தலைநகராகக் கொண்டு, பாலர்களின் கீழ்ச் சிற்றரசர்களாக ஆண்டனர். அடுத்த அரசன் விஜயசேனன் சுதந்திரமடைந்து வங்கநாட்டின் பெரும்பகுதியைப் பாலர்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டான். அவன் ஆட்சிக் காலம் நாற்பது ஆண்டுகள். அவன் மகன் கலிங்க அரசன் அனந்தவர்மன் சோடகங்கனுடன் நட்புப் பூண்டவன். அவன் மகன் வல்லாள சேனன் (ஆ. கா. 1108-1119) நாட்டுச் சாதி ஆசாரங்களை மாற்றினான். அவன் கௌர் அல்லது லக்னௌதி என்னும் தலைநகரத்தை நிறுவினான் என்று கூறுவர். சேனர்கள் தாந்திரிக இந்து மதத்தை அனுசரித்ததனால் பௌத்தர்களான பாலருக்கு விரோதிகளாயினர். நேபாளம், பூட்டான் முதலிய அயல் நாடுகளில் இந்து மதத்தைப் பரப்பப் பிராமண தூதர்களை அனுப்பினான். அவன் மகன் இலட்சுமண சேனன் பட்டத்திற்கு வந்த ஆண்டான. 1119 முதல் ஒரு புது சகாப்தம் ஆரம்பமாயிற்று. அவன் காலத்தில் கீதகோவிந்தம் பாடிய ஜயதேவரும், பவன தூதம் என்னும் காவியத்தை இயற்றிய தோயிக் கவியும் வாழ்ந்தனர். இலட்சுமண சேனனுக்கு மூன்று மக்கள் இருந்தனர். அவர்கள் மாதவசேனன், விசுவரூபசேனன், கேசவசேனன் என்பவர். கேசவசேனன் பல சாசனங்களைப் பொறித்ததோடு பிரயாகை, காசி, பூரி ஆகிய மூன்று ஸ்தலங்களிலும் தன் புகழைக் குறிக்கும் ஸ்தம்பங்களை நாட்டினான். சேனர்கள் கடைசியாக ஆண்டது கல்கத்தாவுக்கு அறுபது மைல் வடக்கேயுள்ள நவத்வீபம்.

கன்னோசி : ஹர்ஷனுக்குப் பிறகு பாஞ்சால நாட்டிலும் கன்னோசியிலும் மிகவும் புகழ்பெற்று ஆண்ட மன்னன் யசோவர்மன் என்பான். 731-ல் இவன் சீனாவுக்கு ஒரு தூது அனுப்பினான். உத்தர ராமசரிதம் முதலிய மூன்று நாடகங்களை எழுதின பவபூதி இவன் ஆஸ்தானத்தை அலங்கரித்தனன். அக் காலத்து மற்றொரு கவி வாக்பதி ராஜன். கௌடவஹோ என்னும் பிராக்ருத காவியத்தில் யசோவர்மன் வங்கநாட்டு அரசனைக் கொன்று, அவன் நாட்டைக் கைப்பற்றித் திரும்பிய வரலாற்றை விரிவாகக் கூறுகிறான். யசோவர்மன் கடைசியில் காச்மீர அரசன் லலிதாதித்திய முக்தாபீடன் என்பவனால் இராச்சியத்தை விட்டு விரட்டப் பட்டான். யசோவர்மன் சந்திரவமிசத்தைச் சார்ந்தவன் என்றும், சந்திரகுப்தன் வழியில் வந்தவனென்றும் கூறுவர். அவனுக்குப்பின் ஆண்ட வஜ்ராயுதனும் மற்றொரு காச்மீர அரசன் ஐயாபீடனால் சிம்மாசனத்தை இழந்தான். அவனுக்குப்பின் ஆண்ட இந்திராயுதன் 783-ல் தன் ஆட்சியை ஆரம்பித்தான். ஆனால் 800க்குப் பின் வங்கதேசத்து அரசன் தர்மபாலனால் தன் இராச்சியத்தைச் சக்ராயுதனுக்கு இழந்த செய்தி முன்னமே கூறப்பட்டது. சக்ராயுதனும் 816-ல் கூர்ஜர அரசன் நாவடனால் இராச்சியத்திலிருந்து விரட்டப்பட்டான்.

பிரதிஹாரர் : எட்டாம் நூற்றாண்டு முதல் வட இந்தியாவின் மேற்பாகத்தில் பல ராஜபுத்திர வமிசங்கள் ஆட்சிபுரியத் தொடங்கின. தற்காலத்து ஆராய்ச்சியாளர் சிலர் கருத்துப்படி இவ்வமிசங்களுக்கும், வெளியிலிருந்து படையெடுத்து வந்து குப்த இராச்சியத்தை அழித்த ஹூணர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு, அது எப்படியாயினும், ராஜபுத்திர வமிசங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பிரதிகார வமிசம். இதைக் கூர்ஜரப் பிரதிகார வம்சம் என்றும் கூறுவது உண்டு. இவர்கள் எட்டாம் நூற்றாண்டு முதல் பதினோராம் நூற்றாண்டுவரை வெகு விமரிசையாக ஆண்டனர். இராமனுக்குச் சகோதரனும் பிரதிகாரர் அதாவது வாயில்காப்பான் ஆகவும் இருந்த இலட்சுமணனுடைய வழித்தோன்றல்களாக அவர்கள் தங்களைக் கருதிவந்தனர். இவ்வமிசத்தை ஸ்தாபித்த I-ம் நாகப்பட்டன் (756) சிந்து நாட்டில் ஆண்ட துலுக்கரைத் தோற்கடித்தான். நான்காவது வங்காள அரசன் வத்சராஜன் (ஆ. கா. 775-800) வங்காள அரசனை வென்றபோதிலும், தட்சிண தேசத்து ராஷ்டிரகூட அரசன் துருவனால் தோற்கடிக்கப்பட்டான். இவன் மகன் II-ம் நாகப்பட்டன் (ஆ.கா. 800-833) தர்மபாலனால் கன்னோசியில் அரசனாக்கப்பட்ட சக்ராயுதனை விரட்டி அந்நகரைத் தன் தலைநகராக்கிக்கொண்டான் (816). அதற்கு முன் அவன் நாடு ராஷ்டிரகூட அரசன் III-ம் கோவிந்தனால் படையெடுக்கப்பட்டது. கூர்ஜரர்களில் அடுத்த பேரரசன் II-ம் நாகபட்டனின் பேரன் வீர போஜன் (ஆ.கா. 840-890). அவனுக்குப் பிரபாசன், ஆதிவராகன் என்ற பட்டங்களும் உண்டு. கடைசிப் பட்டம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் கிடைக்கின்றன. போஜன் மகன் I -ம் மகேந்திரபாலன் (ஆ.கா. 890-908) தன் தகப்பன் தனக்குக் கொடுத்த சாம்ராச்கியத்தைச் சரிவர ஆண்டு வந்தான். பிரசித்தி பெற்ற கவியாகிய ராஜசேகரன் அவனுக்கு ஆசிரியனாக இருந்தான். அவன் மூத்த மகன் II -ம் போஜன் சிறிது காலம் ஆண்டு இறந்தபின், இரண்டாவது மகன் மகிபாலன் முப்பது ஆண்டுகள் ஆண்டான் (910-40). அவன் சூரிய பக்தன். அவன் முத்திரையில் பகவதியின் உருவம் காணப்பட்டது. அவனுடைய வலிமையை மசூதி என்னும் அராபிய யாத்திரிகன் புகழ்ந்திருக்கிறான் (915). ஆனால் 916-ல் ராஷ்டிரகூட அரசனான III-ம் இந்திரனால் அவனுக்கு ஆபத்து நேர்ந்தது. இந்திரன் கன்னோசியை ஆக்கிரமிக்கவும், மகிபாலன் தன் இராச்சியத்தை விட்டு ஓடவும் நேர்ந்தது. ஆனால் விரைவில் சந்தேல அரசனின் உதவியால் தன் இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். ராஜசேகர கவி அவனை ஆர்யாவர்த்த அரசன் என்று வருணிக்கிறான். ஆயினும் ராஷ்டிரகூடப் படையெழுச்சியினால் பிரதிகார இராச்சியம் நிலைகுலைந்தது என்பதில் ஐயமில்லை. சண்டகௌசிகம் என்னும் நாடகத்தை இயற்றிய கவி க்ஷேபீசுவரன் மகிபாலனால் ஆதரிக்கப்பட்டான். மகிபாலன் மகன் தேவபாதன் (ஆ.கா. 946-960) தன் தந்தைக்கு இராச்சியத்தை மீட்டுக்கொடுத்த நன்றிக்காக ஓர் அபூர்வமான விஷ்ணு விக்கிரகத்தைச் சந்தேல யசோவர்மனுக்கு அளித்தான். அவனும் அதைக் கஜுராஹோவில் ஓர் அழகான கோயிலில் பிரதிஷ்டை செய்தான். தேவபாலனுக்குப்பின் அவன் தம்பி விஜயபாலன் ஆண்டான் (960-91). அவன் காலத்தில் வஜ்ரதாமன் என்னும் கச்சவாகத் தலைவன் கோபாத்ரி (குவாலியர்) என்னும் மலைக்கோட்டையைத் தன் வயமாக்கிக் கொண்டு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான் (977). கூர்ஜர தேசத்தில் சாளுக்கியர்களும், மாளவத்தில் பரமாரமுஞ்சனும் (974-95) தங்கள் சுதந்திரத்தை நிறுவினர்.

ஆகவே பிரதிகார இராச்சியம் குறுகிக் கொண்டே வந்தது. வட மேற்கிலிருந்து ஆப்கானிஸ்தானத்தில் கஜனியை ஆண்ட துலுக்க அரசர்களும் இந்தியாவின் மீது படையெடுக்கத் தொடங்கினர். கி.பி. 1008-ல் விஜயபாலன் மகன் ராஜ்யபாலன் பஞ்சாப் அரசன் ஆனந்தபாலனுடன் சேர்ந்து கஜனி சுல்தான் மாமூதை எதிர்த்துத் தோல்வியுற்றான். அதற்குப்பத்து ஆண்டுகளுக்குப்பின் மாமூது மதுராவைக் கொள்ளையடித்துக் கன்னோசி மீது படையெடுத்தான். ராஜ்யபாலன் கன்னோகியை விட்டு ஒடவே, அந்த நகர் முகம்மதியப் படைகளுக்கு இரையாயிற்று. அடுத்த ஆண்டு சந்தேல அரசன் கண்டனும், அவன் சிற்றரசனாகிய குவாலியர் கச்சாவாகனும், ராஜ்யபாலன் மாமூதைச் சரிவர எதிர்க்காததிற்காக அவனை யுத்தத்தில் கொன்று வீழ்த்தினர்.1019-ல் அவன் மகன் திரிலோசன பாலன் மட்டுமன்றிச் சந்தேலக்கண்டனும் மாமூதால் தோற்கடிக்கப்பட்டனர். திரிலோசனனுக்குப் பிறகு பிரதிகார வரலாறு நன்றாக விளங்கவில்லை. 1036-ல் ஆண்ட யசபாதன் அவன் மகனாக இருந்திருக்கலாம்.

சுமார் 1090-ல் காஹர்வார் தலைவன் சந்திரதேவன் கன்னோசியைப் பிடித்துக்கொண்டு, காசி, அயோத்தி, டெல்லி முதலிய இடங்களில் தன் ஆதிக்கத்தை நிறுவினான். இவன் வமிசத்தவர் 1140 வரை ஆண்டனர். அவர்களுடைய சாசனங்களில் துருஷ்க தண்டம் என்னும் ஒரு வரி குறிப்பிடப்படுகிறது. அவர்களில் 1104 முதல் 1155 வரை ஆண்ட கோவிந்தசந்திரனே மிகவும் புகழ்பெற்றவன். 1128-ல் அவன் கொடுத்த சாசனம் அக்காலத்துச் சமயநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. கோவிந்த சந்திரனுடைய பேரன் ஜயச்சந்திரனுடைய மகள் சம்யோகிதா தேவியை, அஜ்மீர் அரசன் பிருதிவி ராஜன் மணந்துகொண்ட வரலாறு ஒரு பெரிய இந்திப் புராணமாகச் சந்தவரதாயி என்னும் கவியினால் எழுதப்பட்டது. ஜயச்சந்திரனைக் காசி ராஜா என்று துருக்கிய வரலாற்று நூல்கள் குறிப்பதனால் காசி அவன் இராசதானியாக இருந்திருக்கலாம். யமுனா நதிக்கரையில் சந்தாவர் என்னுமிடத்தில் ஷிஹாபுதீன் கோரி என்னும் முகம்மதிய அரசனால் ஜயச்சந்திரன் யுத்தத்தில் கொல்லப்பட்டான். அவன் இராச்சியம் துருக்கர் வசமாயிற்று (1194).

அஜ்மீருக்கு வடக்கே சாகம்பரி என்னுமிடத்தில் சௌஹாண வமிசத்து ராஜபுத்திரர்கள் 700 முதல் ஆண்டு வந்தனர். இவர்களில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுவில் ஆண்ட நான்காம் விக்கிரக ராஜன் தன் இராச்சியத்தைப் பெருக்கிப் புகழ் பெற்றான். ஆனால் டெல்லி இவன் இராச்சியத்தில் சேரவில்லை. அது தோமர வமிசத்தார் வசம் இருந்தது. விக்கிரகராஜன் இரண்டு சமஸ்கிருத நாடகங்களைக் கறுப்புச் சலவைக் கற்களில் பொறிக்கச் செய்தான். இவனுடைய சகோதரனின் மகன் பிருதிவி ராஜன் தான் முற்கூறியவாறு கன்னோசி அரசன் ஜயச்சந்திரன் மகளைச் சுமார் 1175-ல் தூக்கிக்கொண்டுபோய் மணந்து கொண்டவன். இவன் ஒரு வீரன். சந்தேல அரசன் பர்மால் என்பவனை வென்று, அவன் இராசதானியான மஹோபாவைக்கைப்பற்றினான் (1182). படையெடுத்து வந்த துருக்கர்களுக்கு விரோதமாகப் பெரும்போர் புரிந்து,1191-ல் தலாவரி என்னுமிடத்தில் ஷிகபுதீன் முகம்மது கோரியைத் தோற்கடித்தான். ஆனால் அடுத்த ஆண்டு அதே இடத்தில் அவன் கையாலேயே தோல்வியுற்றுக் கொலையுண்டான்.

வலபி: கூர்ஜரத்தில் வலபியை இராசதானியாகக் கொண்டு மைத்ரக அரசர்கள் ஆண்டு வந்ததை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இராச்சியம் குஜராத், கட்சு, மாளவம் என்னும் நாடுகள் முழுவதும் பரவி இருந்தது. இதன் அரசர்கள் பௌத்தர்கள். வட இந்தியாவின் கீழ்ப்பாகத்தில் நாலந்தாவைப் போல் மேற்குப் பாகத்தில் வலபி ஒரு பெரிய கல்வி நிலையமாக விளங்கிற்று. குணமதி, ஸ்திரமதி,ஜயசேனன் (கி.பி. 553) என்னும் ஆசிரியர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக வலபியில் கல்வி கற்பித்து வந்தனர். அங்கே சுவேதாம்பர ஜைனர்களும் தங்கள் மத நூல்களைச் சீர்ப்படுத்துவதற்காக ஒரு சபை கூட்டினார்கள் (454 அல்லது 514).

தர்மாதித்தியன் என்ற பட்டம் பெற்ற I-ம் சீலாதித்தியன் 595 முதல் 615 வரை ஆண்டான். ஹர்ஷன் காலத்தில் ஆண்ட துருவபடனைக் குறித்து முன்னமே கூறினோம். இவ் வமிசத்தில் அவன் ஒருவனே சக்கரவர்த்தி என்னும் பட்டம் கொண்டவன். அதன் கடைசி அரசன் VII-ம் சீலாதித்தியன் (766). அராபியர்கள் 711-12-ல் சிந்து நாட்டைக் கைப்பற்றின பின் அவர்களால் வலபி இராச்சியத்திற்கு அடிக்கடி தொந்தரவு உண்டாயிற்று.

அன்ஹில்வாரா: வலபிக்குப்பின் வன ராஜனால் 746-ல் நிறுவப்பட்ட அன்ஹில்வாரா பட்டணம் தலையெடுத்தது. இவ் வரசன் சாப வமிசத்தைச் சேர்ந்தவன். இவன் உட்பட ஆறு அரசர்கள் 974 வரை ஆண்டபின் சாளுக்கியர்கள் ஆட்சி தொடங்கிற்று. இவ் வமிசத்தை நிறுவிய I -ம் மூலராஜன் (ஆ. கா. 974-995) ஒரு பேரரசன். இவன் ஆபு மலைக்கருகிலுள்ள ராஜபுத்திரர்களையும் சௌராஷ்டிரத்தையும் வென்றான். இவன் சௌஹான அரசன் இரண்டாம் விக்கிரக ராஜனால் போரில் கொல்லப்பட்டான். இவன் மகன் சாமுண்ட ராஜன் (996) தாராநகரத்துப் பரமார அரசன் சிந்து மன்னனைப் போரில் வென்றான். பேரன் பீமதேவன் I -ம் பரமார போஜனை வென்றான். கஜனி மாமூது இடித்துத் தகர்த்த சோமனாதர் கோயிலைத் திரும்பக் கட்டினான். இவன் சந்ததியாருக்கும் பரமார அரசனுக்கும் போர் நிகழ்ந்தது. இவன் பேரன் ஐயசிம்ம சித்தராஜன், பரமார யசோவர் மனைப் பிடித்துச் சிறையிலிட்டான். இவன் ஒரு சிவ பக்தனாய் இருந்தும், சமண ஆசிரியர் ஹேமசந்திரரை ஆதரித்தான். தவிரவும் பல மதஸ்தர்களையும் கூப்பிட்டு, அவர்களுக்குள் விவாதங்கள் நடக்கும்படி ஏற்பாடு செய்தான். அவனுடைய புகழ்பெற்ற மந்திரி பிருதிவிபாலன் அவனுக்குப்பின் ஆண்ட குமார பாலனுக்கும் மந்திரியாக இருந்தான். குமாரபாலன் 1144-ல் ஆளத் தொடங்கி, ஹேமசந்திரரால் சமண மதத்தில் சேர்க்கப்பட்டுப் பரம ஆர்கதன் என்ற பட்டம் பூண்டு ஆண்டுவந்தான். இவன் அஹிம்சா தருமத்தைத் தளர்ச்சியின்றி அனுசரித்தவன். குமாரபாலனுக்குப்பின் அவன் மருமகன் அஜயபாலன் (ஆ. கா. 1172-1176) பட்டம் பெற்றான். அவன் மகன் இரண்டாம் பீமதேவன் 1198 முதல் 1238 வரை ஆண்டான். இவன் துருக்க அரசருடன் பல போர்கள் புரிந்தான். 1195-ல் குத்புதீனைத் தோற்கடித்து அஜ்மீர் வரை விரட்டினான். ஆயினும் 1197-ல் துருக்கர்கள் அன்ஹில்வாராவைக் கைப்பற்ற நேர்ந்தது. அவனுக்குப்பின் அவன் மந்திரியாயிருந்த இலவணப் பிரசாதனுடைய சந்ததியார் இராச்சியத்தைக் கைப்பற்றிக்கொண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டின் கடைசிவரை ஆண்டனர். அவர்களை வாகேல வமிசத்தவர் என்பது வழக்கம்.

பரமாரர்கள்: மாளவத் தேசத்தில் தாரா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பரமார வமிசத்தார் சமஸ்கிருத இலக்கியத்தை ஆதரித்தனர். இவ்வமிசம் பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் உபேந்திரன் அல்லது கிருஷ்ண ராஜனால் ராஷ்டிரகூட அரசர்களுக்குக் கீழ் அடங்கிய சிற்றரசாக நிறுவப்பட்டது. ஆறாவது அரசனான II-ம் ஹர்ஷசீயகன் ஹுணர்களுடன் போர் புரிந்ததுமன்றி, ராஷ்டிரகூட நாடுகள் மேலும் படை யெடுத்தான். அவன் சக்கரவர்த்திப் பட்டம் பெற்றான். அவன் மகன் முஞ்சன் ஒரு கவி. பத்ம குப்தன், தனஞ்சயன் முதலிய கவிகளை ஆதரித்தான். ஹுணருடனும், சேதி அரசருடனும் போரில் வெற்றி யடைந்தான். சாளுக்கிய அரசன் இரண்டாம் தைலனுக்கு விரோதமாகப் பலமுறை போர் புரிந்து, கடைசியாக அவனால் சிறையில் இடப்பட்டான். அங்கிருந்து அவன் தப்ப முயன்றதால் 995-ல் கொல்லப்பட்டான். அவனுக்கு உத்பல ராஜன், வாக்பதி என்ற பட்டங்களும் உண்டு. அவனுக்குப்பின் அவன் தம்பி சிந்து ராஜனும், சிந்து ராஜன் மகன் போஜனும் முறையே ஆண்டனர். போஜன் ஆண்டது 1018-1060 வரை. அவன் ஆட்சியை எல்லோரும் புகழ்ந்தனர். ஹூணருடனும், கலியாணி சாளுக்கியருடனும், கஜனி மாமூதுவுடனும் போர் புரிந்து வெற்றி யடைந்தான். 1060-ல் கூர்ஜர அரசனும், சேதி அரசனும் சேர்ந்து அவனைத் தாக்கி வீழ்த்தினர். அதனுடன் அவன் வமிசத்தின் புகழ் குன்றியது. அவனுக்குப்பின் வந்த பரமாரர்கள் பதின் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை ஆண்டனர். பிறகு அவர் நாட்டைத் தோமரும் சௌஹாணரும் முறையே ஆண்டார்கள். போஜன் வானவியல், அலங்காரம், சிற்பம் முதலிய பல கலைகளில் தேர்ந்து, அவைகளில் நூல்களும் இயற்றினான். சரஸ்வதிக்கு ஒரு பெரிய கோவில் கட்டி, அதில் ஒரு சமஸ்கிருத கலாசாலையை அமைத்தான். அது இப்பொழுது முகம்மதியப் பள்ளிவாசலாக இருக்கிறது. போபாலுக்குத் தென்கிழக்கில் உள்ள மலைகளுக்கு நடுவே இருபத்தைந்து சதுர மைல் பரப்புள்ள போஜபுரி ஏரியைக் கட்டுவித்தான். இவ்வேரியின் கரைகள் பதினைந்தாம் நூற்றாண்டில் மாளவத்தை ஆண்ட குஷன்சாவின் ஆணையினால் உடைக்கப்பட்டன. ஏரி இருந்த இடத்தின் நடுவே இப்பொழுது ரெயில் பாதை போகிறது.

சந்தேலரும் சேதி அரசர்களும் : இப்போது புந்தேல்கண்டு எனப்படும் நாடு, முன்னாளில் ஜேஜாகபுக்தி அல்லது ஜஜா ஹுதி எனப் பெயர் கொண்டது. சந்தேல வமிசம் 831-ல் நன்னுகன் என்னும் தலைவனால் பிரதிகாரருடைய உதவியைக் கொண்டு இங்கு நிறுவப்பட்டது. இவ் வமிசத்து ஆறாவது அரசன் ஹர்ஷன், ராஷ்டிரகூட இந்திரன் படையெழுச்சிக்குப் பிறகு பிரதிகார அரசன் மகிபாலனுக்குத் தன் இராச்சியத்தை மீட்க உதவி புரிந்த செய்தி முன்னமே குறிக்கப்பட்டுள்ளது. ஹர்ஷன் ஆட்சிக் காலத்தில் சந்தேலர்கள் சுயேச்சையாக ஆளத் தொடங்கினர். அவன் மகன் யசோவர்மனும் பெரிய அரசன்; காளஞ்சரத்தைத் தன் நாட்டுடன் முதலிற் சேர்த்தவன் அவனே. அவனுக்குத்தான் முற்கூறியபடி கன்னோசி அரசன் தேவபாலன் ஓர் அரிய விஷ்ணு விக்கிரகத்தைக் கொடுத்தான். யசோவர்மன் மகன் தங்கன் (ஆ.கா.954-1002) இவ் வமிசத்தாருள் மிகவும் பிரசித்தி பெற்றவன். அவன் நூறு வயதிற்குமேல் வாழ்ந்திருந்தான். கஜராவிலுள்ள நேர்த்தியான கோவில்கள் அவன் கட்டியன. 990-ல் அவன் பஞ்சாப் அரசருடன் சேர்ந்து சபக்டிஜின் என்னும் கஜனி அரசனால் குர்ராம் நதிக்கரையில் தோல்வியடைந்தான். மற்றப்படி இவன் ஆட்சி வெற்றிகரமாகவே இருந்தது. இவன் காலத்தில் சந்தேல இராச்சியம் யமுனை முதல் சேதி வரையும், காளஞ்சர் முதல் குவாலியர் வரையும் பரவி இருந்தது. இவன் மகன் கண்டனும் 1008 - 9-ல் பஞ்சாப் அரசனோடு கஜனி மாமூதுவால் தோற்கடிக்கப்பட்டான். இதற்குப் பத்து ஆண்டுகளுக்குப்பின் 1019-ல் முற் கூறியபடி இவன் மகன் வித்யாதர தேவன், கன்னோசி அரசனான இராச்சிய பாலன் மாமூதுவின் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டதற்காக அவனைத் தாக்கினான். ஆனால் 1023-ல் மாமூது, தன் நாட்டின்மேற் படை யெடுத்தபோது காளஞ்சரக் கோட்டையைக் கூட அவன் காப்பாற்றவில்லை. அவன் மகனும் பேரனும் சேதி அரசர்கள் காங்கேயன், கர்ணன் என்பவர்களுக்குக் கீழ்ப்பட்டு நடக்கும்படி நேர்ந்தது. 1054-ல் பட்டம் பெற்ற பதின்மூன்றாம் அரசன் கீர்த்திவர்மதேவன் தன் நாட்டின் சுய ஆட்சியை மீட்டுக் கொண்டான். அவன் ஆட்சியில் 1065-ல் கிருஷ்ணமிசிரகவி எழுதின பிரபோத சந்திரோதயம் என்னும் வேதாந்த நாடகம் அவன் முன் நடிக்கப்பட்டது. 1165 முதல் 1203 வரை ஆண்ட பரமால் எனப்பட்ட பரமர்த்தி தேவனே இவ்வமிசத்துப் பேரரசருள் கடைசியானவன். அவன் 1182-ல் சௌஹாண அரசன் பிருதிவி ராஜனாலும் 1203-ல் காளஞ்சரைப் பிடித்துக்கொண்ட குத்புதீனாலும் தோற்கடிக்கப்பட்டான். இதனுடன் சந்தேல ஆட்சி முடிவு பெற்றது. அவர்கள் இராச்சியம் 1310-ல் டெல்லி சுல்தானால் தன் இராச்சியத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

சந்தேல இராச்சியத்திற்குத் தெற்கேயுள்ள சேதிநாடு இரண்டு பிரிவுகளாக இருந்தது. நருமதைக் கரையில் ஜபல்பூர் பிரதேசத்தில் திரிபுரி என்னும் ஊரை இராசதானியாகக் கொண்டது தாகளம் எனப்பட்ட வட சேதி நாடு ; தட்சிண கோசலம் ஆகிய தென் சேதிநாடு ரதன்பூரை தலைநகரமாகக் கொண்டிருந்தது. அந்நாடு தற்காலத்துப் பிலாஸ்பூர் ஜில்லாவுள்ள இடத்திலிருந்தது. இங்கே சேதிவமிசத்தின் ஒரு கிளையினர் ஆண்டுவந்தனர். சேதி வமிசத்து அரசர்களுக்குக் காலசூரிகள் அல்லது ஜஹையர்கள் என்று பெயர். அவர்கள் கி.பி. 249-ல் ஆரம்பித்த சகாப்த மொன்றை மேற்கொண்டனர். திரிபுரியில் ஆண்ட காலசூரிகளில் முதலானவன் கோக்கல்லன். கேயூர வர்ஷ யுவராஜன் (ஆ. கா .925-50) என்னும் ஏழாவது அரசன் ஒரு பெரு வீரன். இவன் பல கோவில்களைக் கட்டினான். இவன்மகன் இலட்சுமண ராஜன் ஒரிஸ்ஸா, கத்தியவார், கூர்ஜர இராச்சியம் முதலியவற்றோடு வெற்றிகரமான போர் தொடுத்தான். வடக்கே கண்டகி நதிக்கரையில் தன் வமிசத்துச் சிற்றரசர்களை இருத்தினான். பதினோராவது அரசன் இரண்டாம் கோக்கல்லன் காலத்தில் பரமார அரசன் முஞ்சன் திரிபுரியைப் பிடித்தான். கோக்கல்லன் மகன் காங்கேயத் தேவன் (ஆ.கா.1015-1041) விக்கிரமாதித்தியன் என்ற பட்டம் பெற்று, வட இந்தியா முழுவதற்கும் ஒரு பேரரசனாக விளங்கினான். 1019-ல் மாமூதால் பிரதிஹாரர் தோல்வியடைந்த பின் இவன் பல நாடுகளைக் கைப்பற்றிப் பிரயாகையைத் தன் இருப்பிடங்களில் ஒன்றாகக் கொண்டு இமயம்வரை தன் ஆட்சியைப் பரப்பினான். தீரபுக்தி என்னும் மிதிலை நாட்டுப் பகுதி இவன் வசமாயிற்று. இவன் மகன் கர்ணதேவன் (ஆ.கா. 1041-70) ஆவல்ல தேவி என்னும் ஹூண ராணியை மணந்தான். குஜராத் அரசன் பீமனுடன் சேர்ந்து பரமார போஜனை 1060-ல் வீழ்த்தினான். இவனுக்குத் திரிகலிங்காதிபதி என்ற பட்டம் உண்டு. தன் ஆட்சியின் கடைசிக் காலத்தில் கீர்த்திவர்மன் என்ற சந்தேல அரசனால் இவன் தோல்வியுற்றான். கர்ணதேவன் மகன், யசகர்ணன் (ஆ. கா. 1071-1125) பீகாரிலும் கோதாவரிக் கரையிலும் வெற்றிகள் எய்திப் பின் சுமார் 1105-ல் பரமார இலட்சம தேவன் சந்தேலசல்லட்சவர்மன் ஆகிய இரண்டு அரசர்களால் தோல்வியுற்றான். இவனுக்குப்பின் ஆண்ட ஐயாகர்ணன் (ஆ. கா. 1125-54) காலத்தில் சேதி இராச்சியம் ஆரம்பத்தில் இருந்ததைப் போல் ஒரு சிறு இராச்சியமாக ஒடுங்கிவிட்டது- இரத்தினபுரத்து அரசர்கள் சுயேச்சையாகப் போய்விட்டதால் இதுவும்கூட ஒரே இராச்சியமாக இருக்கவில்லை. இவ்வமிசத்துக் கடைசி அரசன் விஜய சிம்மதேவன். 1180-ல் திரிபுரியிலும் 1195-ல் பேராகாட் என்னுமிடத்திலும் இவன் சாசனங்கள் பொறித்திருக்கிறான்.

காச்மீரம்: ஆதிகாலம் தொட்டுக் காச்மீரம் என்ற அழகிய நாடு மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. அதன் சரித்திரத்தை ராஜதரங்கிணி என்னும் நூலில் கல்ஹணன் விரிவாகக் கூறி இருக்கிறான். அலெக்சாந்தர், சந்திரகுப்த மௌரியன், அசோகன், கனிஷ்கன், மிகிரகுலன், ஹர்ஷவர்த்தனன் முதலியோர்களுடைய காலத்தில் காச்மீரத்தைப் பற்றிய செய்திகள் அங்கங்கே கிடைக்கின்றன. கார்க்கோடக வமிசத்தைத் தோற்றுவித்த துர்லபவர்த்தனன் காலம் முதல் காச்மீரத்தின் வரலாற்றைத் தொடர்பாகக் கூறமுடியும். சீன யாத்திரிகன் ஹியூன்சாங்குக்கு விருந்து அளித்து, இருபது எழுத்தாளர்களைக் கொண்டு பௌத்த ஏடுகளைக் கி. பி. 631-33வரை எழுதிக்கொடுக்கச் செய்தவன் இவ்வரசன் என்றே கருதப்படுகிறது. இவனுடைய பேரன் முத்தாபீட லலிதாதிதியன்(ஆ. கா. 733-69). இவன் சீனாவுடன் நட்புப் பூண்டு காச்மீரத்தை ஒரு பெரிய இராச்சியமாகச் செய்தவன். கன்னோசி அரசன் யசோவர்மனையும், திபெத்தியரையும், சிந்து நதிக் கரையிலுள்ள துருக்கர்களையும் இவன் வென்றான். மார்த்தாண்டம் என்ற பிரசித்தி பெற்ற சூரியன் கோவில் கட்டினவனும் இவனே. இவன் பேரன் ஜயாபீடன் எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் கன்னோசி அரசன் வஜ்ராயுதனை வென்றான்.

855-ல் ஆளத்தொடங்கின அவந்திவர்மனுடன் உத்பல வமிசம் தொடங்குகிறது. இவன் 883 வரை ஆண்டான். இவன் காலத்தில் பல நூல்கள் இயற்றப்பட்டன. சுய்யன் என்னும் பொறியியல் வல்லுநரால் பல அணைகளும், வாய்க்கால்களும், மதகுகளும் கட்டப்பட்டன. இவ்வமிசத்தில் இரண்டு அரசர்கள் கொடுங்கோல் மன்னரென்ற இகழ்ச்சியே பெற்றனர். சங்கரவர்மன் (ஆ. கா. 883-902) பல புது வரிகள் ஏற்படுத்தினதோடு கோவில்களைச் சூறையிட்டான். ஹர்ஷன் (ஆ. கா.1089-1101) தேவோத்பாடன நாயகன் என்ற ஒரு புது உத்தியோகஸ்தனை ஏற்படுத்தித் தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட விக்கிரகங்களை உருக்கி நாணயங்கள் அடித்தான். இவனைச் சிலர் பைத்தியம் என்று கருதுவர்.

காச்மீரம் பௌத்தமதத்திற்கும் சமஸ்கிருத இலக்கியத்திற்கும் ஒரு முக்கியக் கேந்திரமாக வெகு காலம் விளங்கிற்று. இங்குச் சைவ மதமும் செழித்தோங்கிற்று. இந்தச் சைவம் அத்துவைத நெறியைத் தழுவியது. வசூபுக்தன் (800), கல்லடன், சோமானந்தன், உத்பலன், அபினவகுப்தன் (1000) முதலியோர் இம்மதத்தைச் சார்ந்த முக்கிய ஆசிரியர்கள். ஆறாம் நூற்றாண்டின் கடைசியில் ஆண்ட மாத்ருகுப்தனும், அவன் ஆதரித்த மேண்டனும் சமஸ்கிருத இலக்கியத்தில் சிறந்த கவிகள். அவந்திவர்மன் காலத்தில் சிவ சுவாமி, இரத்தினாகரன் முதலிய கவிகள் ஆதரிக்கப்பட்டனர். பதினோராம் நூற்றாண்டில் சில முக்கியமான அலங்கார நூல்கள் எழுதினதுடன் இராமாயணம், பாரதம், பௌத்த கதைகள் முதலியவற்றையும் எளிதான காவிய நூல்களாக இயற்றிய ஹேமேந்திரன் காச்மீரத்தில் வாழ்ந்தான். அதே காலத்தில் சோமதேவன் கதாசரித்சாகரம் என்னும் அரிய நூலை இயற்றினான். திரிபுரி, அன்ஹில்வாரா, கல்யாணி முதலிய இராசதானிகளில் ஆதரிக்கப்பட்டு வந்த பில்ஹண கவியும் காச்மீர நாட்டைச் சார்ந்தவன்.

நேபாளம்: நேபாள நாடு பொதுவாகப் பல சிறு இராச்சியங்களாகப் பிரிந்திருந்தது. சில சமயங்களில் வலி மிகுந்த அரசர்களால் ஒரே இராச்சியமாகவும் ஆளப்பட்டு வந்தது. அசோகனும் அவன் மகன் சாருமதியும் நேபாளத்திற்குச் சென்று, தேவப்பட்டணம் என்னும் ஊரை ஸ்தாபித்தார்கள் என்பது ஓர் ஐதிகம். நேபாளத்தைத் தனக்கு அடங்காத தனி இராச்சியங்களில் ஒன்றாகச் சமுத்திரகுப்தன் அலகாபாத் சாசனத்தில் கூறுகிறான். 6-7ஆம் நூற்றாண்டுகளில் லிச்சவி வமிசத்தைச் சார்ந்த பௌத்த அரசர்கள் நேபாளத்தை ஆண்டனர். நேபாளம் ஹர்ஷன் இராச்சியத்தில் உள்ளடங்கி யிருந்திருக்கலாம். தாக்கூரி வமிசத்தை நிறுவிய அம்சுவர்மன் திபெத்து அரசனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுத்தான். அதற்குப் பின் சிறிது காலம் ஹர்ஷனுடைய மரணத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளால் நேபாளம் திபெத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தது. கி.பி. 70-ல் ஒரு திபெத்து அரசன் யுத்தத்தில் உயிரிழக்கவே, நேபாளம் மறுபடியும் சுதந்திர நாடாயிற்று. ஏழாம் நூற்றாண்டு முதல் நேபாளத்தில் தந்திரத்தைச் சார்ந்த மகாயான பௌத்தமதம் செழித்து வந்தது. பல நேர்த்தியான புத்த விக்கிரகங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டன.

நேபாளமும் காச்மீரமும் இந்தியர்களுடைய பண்பாட்டைத் திபெத்திற்கும் சீனாவிற்கும் கொண்டு செல்ல ஏற்ற சாதனங்களாக இருந்தன. கே. ஏ. நீ.

கி. பி. 1206-1526: குத்புதீன் ஐபெக் என்பவன் முகம்மது கோரியினுடைய படைத்தலைவர்களில் ஒருவன் ; தன் அரசனுடைய இந்தியப் படையெழுச்சிகளில் கலந்துகொண்டு சிறந்த வீரச் செயல்கள் பல புரிந்தவன். அவனுடைய வீரச் செயல்களையும் திறமையையும் கண்டறிந்த முகம்மது கோரி 1195-ல் அவனை இந்தியாவிலிருந்த தன்னுடைய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தான். 1206-ல் அவன் இறந்தவுடன் குத்புதீன் சுயேச்சை பெற்றுத் தனியரசனாக டெல்லியிலிருந்து ஆள ஆரம்பித்தான். அவனுடைய வமிசத்தைச் சேர்ந்த மன்னர்கள் தத்தம் இளம்பருவத்தில் சாதாரண ஊழியம் புரிந்து, பின்னர்த் தம்முடைய அறிவாற்றல் முதலியவற்றால் உயர்ந்த பதவியை அடைந்தவர்கள். ஆதலால் அவர்களுடைய வமிசத்துக்கு அடிமை வமிசம் என்னும் பெயர் ஏற்பட்டது.

இந்த வமிசத்து முதல் மன்னனாகிய குத்புதீன் (ஆ. கா. 1206-10) ஆட்சியில் அவனோடு கோரியின் கீழ்ப் படைத் தலைமை வகித்த சிலரால் சில இன்னல்கள் விளைந்தன. அவற்றை யெல்லாம் அவன் திறமையோடு எதிர்த்து வெற்றி கொண்டான். டெல்லியைத் தலைநகராகக் கொண்ட அவனுடைய ஆட்சி மேற்கே பஞ்சாபிலிருந்து கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது. அவன் போர் புரிவதில் மட்டுமன்றி, நாட்டை ஆளுவதிலும் திறமை உடையவன். பொதுமக்கள் மகிழக்கூடியவகையில் அவன் ஆட்சி அமைந்திருந்தது. சிறந்த கொடைப் பண்பும் அவனிடம் அமைந்திருந்தது. மிகுந்த மதப்பற்றுடைய அவன் டெல்லியிலும் அஜ்மீரிலும் இரு மசூதிகள் கட்டினான். 1210-ல் போலோ விளையாடுகையில் தவறி விழுந்து இறந்தான்.

அவனுக்குப்பின் இல்தூத்மிஷ் பட்டம் பெற்றான் (ஆ. கா. 1210-36). இவன் முதலில் ஐபெக்கிடம் ஊழியம் புரிந்து அவனுடைய மகளை மணந்துகொண்டவன். ஐபெக் ஆட்சியில் அடங்கியிருந்த படைத் தலைவர்கள் இப்போது முரண்பட்டுத் தனியாட்சி நடத்த விரும்பினர். மேலும் டெல்லி அரசைச் சேர்ந்த வங்காளம், மூல்தான் போன்ற பகுதிகள் சுயேச்சை பெற விரும்பின. இவைகளால் டெல்லி அரசில் குழப்பம் நிலவியது. இல்தூத்மிஷ் தனது திறமையினால் குழப்பத்தைப் போக்கிச் சிறந்த முறையில் ஆட்சியை வலுப்படுத்தினான்.

இவன் காலத்தில் செங்கிஸ்கான் என்னும் மங்கோலியர் தலைவன் பாரசீகம், சீனா, மத்திய ஆசியா போன்ற இடங்களை யெல்லாம் வென்று, கொடுஞ் செயல்கள் பல புரிந்து, சிந்து நதிக் கரையில் வந்து தங்கினான். இந்தியாவின்மீது படை யெடுக்கும் நோக்கமும் அவனுக்கு இருந்தது. இந்த மங்கோலியப் படை யெழுச்சி நிகழ்ந்தால் டெல்லி அரசுக்குப் பேராபத்தாகலாமென்று இல்தூத்மிஷ் அஞ்சி யிருந்தான். ஆனால் அது நிகழவில்லை. செங்கிஸ்கான் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகட்கு அஞ்சி, இந்தியாவின் எல்லையை விட்டு அகன்று போய்விட்டான். ஆதலால் இல்தூத்மிஷ் அச்சம் தெளிந்து, தனது ஆட்சியை மேலும் வலுப்படுத்தத் தொடங்கினான். 1225-ல் வங்காளத்தைத் தன்னடிப் படுத்தினான். 1228-ல் குவாலியர் டெல்லி அரசின் வசமாகியது. மாளவமும் கைப்பற்றப்பட்டது (1234). பில்சா, உச்சயினி ஆகியவையும் அதற்குட்பட்டன. உச்சயினியில் புகழ்பெற்று விளங்கிய காளி கோயில் அழிக்கப்பட்டது. சிறிது காலங்கழித்து இஸ்மெயிலர்கள் என்னும் முஸ்லிம் மதக் குழுவினர் இம் மன்னனைக் கொல்ல ஒரு சதி செய்தனர். அது நிறைவேறவில்லை. இதற்குத் தப்பிப் பிழைத்த இல்தூத்மிஷ் 1236-ல் இறந்தான். டெல்லியில் உள்ள குதுப்மினார் இவன் கட்டியது. ஐபெக் காலத்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் அரசைப் பல இன்னல்களினின்றும் காப்பாற்றி, மேலும் அதை விரிவுபடுத்திய பெருமை இவனுக்கு உரியது. சிறந்த கல்விமான்களையும் துறவிகளையும் இவன் ஆதரித்துப் போற்றினான்.

இல்தூத்மிஷுக்குப் பல மக்கள் உண்டு. அவர்களுள் ரசியா திறமையும் அருங்குணங்களும் உடையவள். அவள் தான் தனக்குப்பின் முடிசூட வேண்டும் என்பது இல்தூத்மிஷின் விருப்பம். பிரபுக்கள் அதற்கு மாறாக இல்தூத்மிஷின் மூத்த மகனான ருக்னுதீன் பிரோலை 1236-ல் சுல்தானாக்கினர். ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட அவன் விரைவில் கொல்லப்பட்டான்.

ரசியா (ஆ. கா. 1236-40) சுல்தான் என்னும் பெயர் பூண்டு, ஆணுடை தரித்து ஆட்சி புரிந்தாள். தனது ஆட்சியின் முற்பகுதியில் ஏற்பட்ட கலகங்களைத் திறமையோடும் தந்திரத்தோடும் சமாளித்து வெற்றி கொண்டாள். ஜலால் உத்தீன் யாகுட் என்னும் ஆப்பிரிக்கன் ஒருவன் அரசவையில் செல்வாக்குப் பெற்றிருந்தான். அதைப் பல பிரபுக்கள் வெறுத்தார்கள். அவர்கள் தூண்டுதலால் பாட்டிண்டா (Bhatinda) பகுதியில் கவர்னராயிருந்த அல்ட்டூனியா, ரசியாவுக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்தான். கலகத்தை அடக்கச் சென்ற ரசியா அவனால் சிறைபிடிக்கப்பட்டாள். அவளுடைய ஆதரவைப் பெற்ற யாகுட் கொல்லப்பட்டான். இந் நிலையில் இல்தூத்மிஷின் மகன் பாஹ்ரம் என்பவன் டெல்லியில் சுல்தானானான். ரசியா அல்ட்டூனியாவை மணந்து கொண்டாள். தன் மனைவியை மீண்டும் டெல்லி அரியணையில் அமர்த்த விரும்பிய அல்ட்டூனியா ஒரு பெரும்படையுடன் டெல்லி நோக்கிச் சென்றான். ஆனால் கணவன் மனைவி இருவரும் தோல்வியுற்றுத் தமக்கு ஆதரவாயிருந்தோராலேயே 1240-ல் கொல்லப்பட்டனர். நீதி, நேர்மை, இரக்கம், போர்த்திறன், அறிஞர்களை ஆதரிக்கும் பண்பு முதலிய நற்குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்ற ரசியா ஆணாகப் பிறவாத குறையினால் சிறப்போடு நீண்டகாலம் ஆள முடியவில்லை. அவளுடைய உயர்ந்த குணங்களையும் நேர்மையையும் அக்காலத்தில் இருந்த மின்ஹஜ் உன் சிராஜ் என்னும் வரலாற்றாசிரியர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார். அவளுக்குப் பின் முடி சூடிய பாஹ்ரம் (ஆ.கா. 1240-42) வலிமையும் செல்வாக்கும் பெற்ற குழுவினராகிய 'நாற்பதின்மர்' எனப்படும் பிரபுக்களுடைய விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டியவனானான். எனினும், இயல்பாகவே வீரமும் உண்மையுமுள்ள அவன் அவ்வாறு நடக்க விரும்பவில்லை. இதனால் நாற்பதின்மர் அவனுக் கெதிராகக் கலகம்செய்து, ருக்னுதீன் மகனான மசூத் என்பவனை அரியணையிலேற்றினார்கள். பாஹ்ரம் கொல்லப்பட்டான். மசூத் (ஆ. கா.1242-1246) ஆட்சியின்போது இந்தியாமீது படை யெடுத்த மங்கோலியர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப் பட்டனர். மசூத் தனது அரசியல் கடமைகளை மறந்து, உலகவின்பங்களில் அதிகமாக ஈடுபட்டதன் பயனாகப் பிரபுக்களின் நம்பிக்கையை இழந்து, அரியணையினின்றும் நீக்கப்பட்டுச் சிறையில் 1246-ல் வைக்கப்பட்டான். பின்னர்ச் சிறிது காலத்துக்குள் அவன் இறந்தான்.

அவனுக்குப்பின் பட்டமெய்திய நசீருத்தீன் முகம்மது (ஆ. கா.1246-66) இல்தூத்மிஷின் புதல்வன். இவன் துறவி மனப் பான்மையுடையவன்; குர்ஆனில் கூறப்பட்டபடி உண்மையான முஸ்லிம் வாழ்க்கையை நடத்தி வந்தான். அழகாகக் கையெழுத்து எழுதும் திறம் படைத்த இவன் குர் ஆனைப் பிரதிசெய்து, அதனை விற்றுக் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகக் கதைகள் வழங்குகின்றன. இவனுடைய ஆட்சியில் பால்பன் முதல் மந்திரி பதவிவகித்து, அரசியலை நசீருத்தீன் சார்பாக நடத்தி வந்தான். பெயரளவில்தான் நசீருத்தீன் சுல்தானாக இருந்தான். பால்பனுடைய மகளை இவன் மணந்ததும் அவனுடைய அதிகார வளர்ச்சிக்கு ஒரு காரணமாயமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலகங்களைப் பால்பன் கடுமையாக அடக்கி ஒழுங்கை நிலைநாட்டினான். 1257-ல் ஏற்பட்ட மங்கோலியர் படையெழுச்சி முறியடிக்கப்பட்டது. நசீருத்தீன் முகம்மது 1266-ல் இறந்தான். தனக்குப்பின் பால்பன் அரசுரிமை பெறவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான்.

பால்பன் (ஆ.கா.1266-86) நசீருத்தீனின் திட்டப்படியே 1266-ல் பட்டம் பெற்றான். அரச பதவி யேற்பதற்குமுன் அவன் பல பதவிகளை வகித்து நல்ல அனுபவம் பெற்றிருந்தான். மன்னனுடைய பழைய கெளாவத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவது, நாட்டுக்கும் அரச வமிசத்துக்கும் பெரும்பகைவர்களாக விளங்கிய நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பது, மங்கோலியப் படையெடுப்பினின்றும் நாட்டைக் காப்பது போன்ற பல நோக்கங்கள் முடிசூடும் காலத்தில் பால்பனுக்கு இருந்தன. இவற்றை யெல்லாம் அவன் தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினான். சேனையைத்திருத்தியமைத்து, முக்கியமான இடங்களில் கோட்டைகளைக் கட்டி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தினான். அவன் மேற்கொண்ட தீவிரநடவடிக்கைகளால் திருடர்கள் தொல்லை ஒழிந்தது. அமைதியும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பால்பன் சிறந்த வெற்றியடைந்தான். நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பதில் ஊக்கம் கொண்டான். அப்பிரபுக்களின் முன்னோர்கள் இல்தூத்மிஷ் காலத்தில் ஜாகீர்கள் பெற்றுச் செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள். அவர்கள் சந்ததியினர் வலி குறைந்து, மன்னன் ஆளுகையில் பல சதிகளில் ஈடுபட்டு, அமைதியையும் ஒழுங்கையும் கெடுத்து வந்தார்கள். அவர்களுடைய வலிமையை அழிப்பதற்காகப் பால்பன் முதலில் அவர்கள் ஜாகீர்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தான். பின்னர் அந்த உத்தரவை மாற்றினான். எனினும் அவர்களுடைய ஆதிக்கத்தை அறவே ஒழித்துவிட்டான். நாட்டின் முழுநிருவாகத்தையும் தானே பார்த்துவந்தான். நீதி செலுத்துவதில் நடுநிலைமையோடு நடந்துவந்த பால்பன் தன் உறவினர்களையும் கூட அவர்கள் தவறினவிடத்துத் தண்டித்து வந்தான்.

அடிக்கடி மங்கோலியர் படையெடுத்துத் துன்பம் விளைப்பதைத் தடுக்க அவன் பல சிறந்த முறைகளைக் கையாண்டான். எல்லைப்புறக் காவலை இளவரசன் முகம்மதுகானுக்கு அளித்தான். திறமையும் கட்டுப்பாடும் நிறைந்த படையைத் திரட்டி டெல்லி அரசின் பலத்தை அதிகப்படுத்தினான். மங்கோலியர் இரண்டு தடவைகள் (1279, 1285) இந்தியாமீது படையெடுத்தபோதிலும், மேற்கண்ட முறைகளால் பால்பன் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இரண்டாவது படையெழுச்சியின்போது முகம்மதுகான் போர்க்களத்தில் உயிரிழந்தான்.

மங்கோலியர் படையெழுச்சிக் காலத்தில், வங்கக் கவர்னர் துக்ரில்கான் பால்பனுக் கெதிராகக் கலகம் செய்தான். அதை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட படைகளை அவன் தோற்கடித்தான். ஆகவே பால்பன் நேரில் சென்று அவனைச் சிறைபடுத்திக் கொன்றான். துக்ரில்கானுடைய நண்பர்கள் கடுந்தண்டனை யடைந்தார்கள். பின்னர் பால்பன் தன் இரண்டாவது புதல்வன் புக்ராகானை வங்காளக் கவர்னராக மித்து, துக்ரிலைப்போல அவன் நடந்தால், துக்ரிலின் கதியே அவனுக்கும் வாய்க்கும்என எச்சரித்துவிட்டுத் திரும்பினான்.

தன்னுடைய அருமைப்புதல்வன் முகம்மது 1285-ல் இறந்துவிட்டதாலும், இரண்டாவது புதல்வன் புக்ராகான் அரசபதவி ஏற்க விரும்பாததாலும், தன் பேரனும் முகம்மதுகானுடைய புதல்வனுமாகிய இளவரசன் கெய் குஸ்ருவைத் தன் வாரிசாக நியமித்துவிட்டுப் பால்பன் 1286-ல் இறந்தான்.

தன் ஆட்சிக்காலத்தில் பால்பன் பல அருங்காரியங்களைச் சாதித்து முடித்தான். அரசபதவியின் கண்ணியத்தையும் மதிப்பையும் அவன் உயர்த்த விரும்பி வெற்றியும் பெற்றான். தாழ்ந்தவர்களையும் விரும்பத் தகாதவர்களையும் அவன் வெறுத்து ஒதுக்கிவந்தான். சூதாடல் போன்ற ஒழுங்கீனமான வழக்கங்களை அவன் விட்டொழித்து, வேட்டையாடுவதில் மட்டும் ஊக்கங் காட்டினான். அவன் மிகுந்த மதப்பற்றுள்ளவன்.

பால்பனுக்குப் பின்னர் பிரபுக்கள் குஸ்ருவைப் புறக்கணித்துப் புக்ராகானுடைய மகன் கைகோபாத்தை அரியணையில் 1286-ல் அமர்த்தினர். சிறிது காலத்திற்குள் குஸ்ரு கொல்லப்பட்டான். கைகோபாத் ஒழுங்கீனமாக நடந்தான். அவன் தந்தை புக்ராகானின் அறிவுரைகளும் பயனற்றுப் போயின. பிரபுக்கள் இந்தச் சீர்கேடான ஆட்சியை ஒழிக்கத் துணிந்து, கில்ஜி வமிசத்தைச் சேர்ந்தவனும், அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவனுமாகிய ஜலாலுதீன் தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள். ஜலாலுதீன் சுல்தான் கைகோபாத்தைக் கொன்று 1290-ல் அரியணை யேறினான். இவ்வாறாக 1206-ல் ஏற்பட்ட அடிமை வமிசம் 1290-ல் முடிவுற்றது.

கில்ஜி வமிசத்தின் முதல் அரசன் ஜலாலுதீன் (ஆ. கா.1290-96) கருணை, அன்பு, எளிமை ஆகிய தன்மைகள் கொண்டவனாதலால் சுல்தானுடைய மதிப்பும் அதிகாரமும் குறைந்தன. இவன் ஆட்சியின் இறுதியில் இவனுடைய மருமகன் அல்லாவுதீன் இவனை வஞ்சகமாகக் கொன்று, அல்லாவுதீன் கில்ஜி என அரசாண்டான்.

அல்லாவுதீன் கில்ஜி (ஆ. கா.1296-1316) ஆண்ட காலம் முஸ்லிம் அரசின் வரலாற்றில் முக்கியமானதாகும். நாட்டு நிருவாகத்தில் பல முக்கியச் சீர்திருத்தங்களைத் துணிவுடன் செய்து, அவற்றை நிறைவேற்றி, ஒழுங்கும் அமைதியும் நிலைபெறச் செய்தான். முஸ்லிம்அரசின் பலவீனத்தைப் போக்குவது, இந்து மன்னர்கள், முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருடைய வன்மையை அழிப்பது போன்ற நோக்கங்கள் இவனுக்கு இருந்தன. அவற்றையெல்லாம் இவன் நிறைவேற்றிவந்தான். இவன் தான் வெளியிட்ட காசுகளில் II -ம் அலெக்சாந்தர் என்ற விருதைப் பொறித்துக்கொண்டான்.

இவன் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டப் பல கடுமையான விதிகளைச் செய்தான். பிரபுக்கள் அடிக்கடி கலந்து உறவாடக் கூடாதென்றும், சுல்தானின் அனுமதியின்றி ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்ளக் கூடாதென்றும் கட்டுப்பாடுகள் செய்தான். அளவிறந்த செல்வச் செருக்கினால் பொதுமக்கள் ஒழுங்கு தவறுவதைக் கண்ட அவன் பொது மக்களிடமிருந்து இயன்ற வழிகளிலெல்லாம் வரிகள் வசூலிக்க உத்தரவிட்டான். இவ்வாறு தங்களிடமிருந்த பொருளில் மிகப்பெரும்பகுதியை அரசாங்க வரி கொடுப்பதன்மூலம் இழந்துவிட்ட பொதுமக்கள் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட நேர்ந்ததால் கலகங்கள் செய்ய முற்படவில்லை. நாடெங்கும் ஒற்றர்களை நியமித்துப் பொதுமக்கள், பிரபுக்கள் ஆகியோருடைய செயல்களைக் கவனித்தறியுமாறு இவன் ஏற்பாடு செய்தான். அவர்கள் அடிக்கடி தம்முடைய அறிக்கைகளைச் சுல்தானுக்கு அனுப்பிவந்தார்கள். இம்முறையால் கலகங்களையும் சதிகளையும் வெகு எளிதாக அரசாங்கம் அடக்க முடிந்தது. சாராயம் போன்ற மயக்கம் தரும் பொருள்களும் சூதாட்டமும் தடைசெய்யப்பட்டன. இம் மாதிரிச் சீர்திருத்தங்களில் அல்லாவுதீன் தானே தன் விதிகளின் படி நடந்து மற்றவர்கட்கு வழிகாட்டினான். அவன் காலத்தில் இந்துக்கள் நிலை மிகவும் இரங்கத்தக்கதாக இருந்தது. அவர்கள் ஜசியா என்னும் வரி செலுத்தி வந்தார்கள். நெல், தயிர், பால் போன்ற பொருள்கள் தேவையான அளவுக்குமட்டும் அவர்களுக்குக் கிடைத்தன. அவர்கள் பொருள் சேர்க்கவும் செல்வர்கள் ஆகவும் இயலாமல் செய்யப்பட்டது. அவர்கள் எல்லாவிதமான சுதந்திரங்களையும் இழந்து வாழ்ந்துவந்தார்கள்.

அல்லாவுதீன் தன்னுடைய படைகளைத் திருத்தியமைத்து, அவை கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்தவையாக்கினான். சேனைகள் சம்பந்தமான ஒவ்வொரு விஷயத்தையும் நேராகவே கவனித்து வந்தான். போர்க் குதிரைகட்குச் சூடு போடச் செய்ததால் குதிரை வீரர்கள் மாறாட்டம் செய்வதற்கியலாமல் செய்து விட்டான். அக்காலத்திய டெல்லி அரசின் சேனையானது கட்டுப்பாடு பொருந்திய சுமார் 4,75,000 முஸ்லிம் வீரர்களைக் கொண்டிருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். அவர்கள் மதத்துக்காகத் தம் உயிரையும் தியாகம் செய்யப் பின்வாங்காதவர்கள் எனவும், தங்களுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை உண்மையோடு நிறைவேற்றுபவர்கள் எனவும் பெயர் பெற்றனர். எல்லைப்புற நாடுகளில் கோட்டைகள் பல புதிதாகக் கட்டப்பட்டன. பழைய கோட்டைகள் சீர்திருத்தி யமைக்கப்பட்டன. எல்லைப்புறக் காவலனுக்குத் தக்க தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

அல்லாவுதீன் ஆட்சியில் கோதுமை முதலிய தானியங்கள், எண்ணெய், சர்க்கரை, நெய் முதலிய உணவுப் பொருள்கள், ஆடைகள் ஆகியவற்றின் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டன. உற்பத்திக்காகும் செல்வோடு சிறிதளவு இலாபம் சேர்த்து ஒரு பொருளின் விலை நிருணயிக்கப்பட்டது. இவ் விலைக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். அக்காலத்தில் வசித்த அறிவுடை மக்கள் பொருள்களின் விலை எங்கும் ஒரேமாதிரியா யிருப்பதைக் கண்டு வியந்ததாகவும், இந்நிலை ஒரு பெரிய ஆச்சரியமென்றும் வேறு எந்த அரசனும் இதைச் செய்ய இயலாதென்றும் முஸ்லிம் வரலாற்றாசிரியர் ஒருவர் கூறியுள்ளார்.

நிலங்கள் எல்லாம் அளந்து கணக்கிடப்பட்டன. நிலத்தின் விளைச்சலில் பாதியை அரசாங்கம் வரியாகப் பெற்றுக் கொண்டது. இதைத் தவிர வீட்டு வரி, மேய்ச்சல் வரி போன்ற பல வரிகளும் வசூலிக்கப்பட்டன.

அல்லாவுதீன் ஆட்சியின் முற்பகுதியில் மங்கோலியர் படையெழுச்சிகள் நிகழ்ந்தன. 1299-ல் ஏற்பட்ட படையெழுச்சியை ஜாபர்கான் என்னும் படைத் தலைவன் எதிர்த்து, வெற்றி கொண்டு வீர மரணம் எய்தினான். பின்னர் 1304லும் 1307லும் ஏற்பட்ட படை யெழுச்சிகளைக் காசிமாலிக் என்னும் தலைவன் முறியடித்து வெற்றிகொண்டான். 1307 க்குப் பின்னர் மங்கோலியர் படையெடுப்பு எதுவும் நிகழவில்லை. டெல்லி முஸ்லிம் அரசை மங்கோலியர் தொல்லையினின்றும் விடுவித்த பின்னர் அல்லாவுதீன் அதை எங்கும் பரப்புவதில் முனைந்தான். திறமை மிக்க படைத் தலைவர்களுள்ள சேனைகள் பல நாடுகளைக் கைப்பற்ற ஆரம்பித்தன. உலூக்கான், நுஸ்ரத்கான் என்னும் படைத் தலைவர்கள் குஜராத்தை வென்று, அன்ஹில்வாரா, காம்பே, சோமநாதபுரம் ஆகியவற்றைக்கைப்பற்றினர் (1297). சோமநாதபுரம் கோயில் அழிக்கப்பட்டது. இப்படை யெழுச்சியின்போதுதான் காபூர் என்ற அடிமை ஒருவனைப் படைத்தலைவர்கள் விலைக்கு வாங்கினர். இவனே பின்னால் அலாவுதீனுடைய சிறந்த படைத்தலைவனானான். 1301-ல் ரந்தம்போர் என்னும் பகுதியும், 1303-ல் சித்தூரும், 1305-ல் மாளவமும் டெல்லி அரசின் வசமாயின. 1305-ல் அல்லாவுதீன் வட இந்தியப் பேரரசனாக விளங்கினான்.

அல்லாவுதீன் தென்னாட்டை வென்று தனது பேரரசோடு சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. தனது வடஇந்தியப் பேரரசுக்குத் தென்னாட்டு அரசுகளால் அபாயம் ஏற்படாமல் தடுக்கவும், அவைகளிடமிருந்து திறை வசூலிக்கவுமே அவன் கருதினான். முன்பே 1294-ல் அவன் தேவகிரியை ஆண்ட யாதவ மன்னன் இராமச்சந்திரனிடமிருந்து திறை வசூலித்திருந்தான். அவன் இப்போது ஒழுங்காகத் திறை செலுத்தாததாலும், வேறு சில காரணங்களாலும், அல்லாவுதீனுடைய படைத்தலைவனாக விளங்கிய மாலிக்காபூர் 1307-ல் தேவகிரி மீது படையெடுத்து வென்றான். யாதவ குல மன்னன் இராமச்சந்திரன் டெல்லி அரசின் சிற்றரசனாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் செலுத்தச் சம்மதித்தான். அவன் வாழ்நாள் இறுதிவரையில் டெல்லிப் பேரரசுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்துவந்தான். பின்னர் 1309-ல் மாலிக்காபூர் ஓரங்கல் நாட்டு மன்னன் மீது போர்தொடுத்தான். சிறிதுகாலம் எதிர்த்துநின்றபின் பிரதாபருத்திரன் என்ற காகதீய மன்னன் மாலிக்காபூருக்குப் பணிந்து திறை செலுத்த ஒப்புக்கொண்டான். அவனது நாடாகிய ஓரங்கல் நாடு கொள்ளையிடப்பெற்றது. அதன் பயனாக அளவிறந்த விலைமதிப்புள்ள பொருள்கள் மாலிக்காபூர் வசமாயின. ஆயிரம் ஒட்டகங்கள் அவற்றை டெல்லிக்குச் சுமந்து சென்றன (1310). அதே ஆண்டில் மைசூர்ப் பகுதியை ஆண்ட ஹொய்சௗ III-ம் வீரவல்லாளதேவனும் மாலிக்காபூரால் தோற்கடிக்கப்பட்டுத் தன் ஏராளமான பொருள்களை இழந்தான். இவ்வாறாக மைசூர் மாலிக்காபூரால் கொள்ளையிடப்பட்டது. இந்நிலையில் பாண்டிய நாட்டில் அரசுரிமைக்காகச் சடையவர்மன் சுந்தரபாண்டியனும் சடையவர்மன் வீரபாண்டியனும் தமக்குள் போர் புரிந்துகொண்டிருந்தனர். அதை ஒரு வாய்ப்பாகக் கொண்ட மாலிக்காபூர் மதுரைமீது படையெடுத்து, நாட்டைக் கொள்ளையடித்துப் பல அழிவு வேலைகளை அங்கே நிகழ்த்திப் பின்னர் 1311-ல் பெரும் பொருளுடன் டெல்லி திரும்பினான். அடுத்த ஆண்டில் தேவகிரியை ஆண்ட சங்கர தேவன் டெல்லிப் பேரரசுக்குக் கப்பம் தர மறுத்துக் கலகம் செய்ததால், மாலிக்காபூர் மீண்டும் தேவகிரிமீது படையெடுத்துச் சங்கரதேவனைத் தோற்கடித்துக் கொன்றான். இதன் முடிவில் மாலிக்காபூருடைய வீரமும் புகழும் எங்கும் பரவின. அல்லாவுதீனுடைய பேரரசும் மிக உயர்ந்த நிலைமை அடைந்தது.

அல்லாவுதீன் இறுதிக் காலத்தில் மாலிக்காபூர் சொற்படி நடக்க ஆரம்பித்து, அதனால் தனக்குத் தீங்கு தேடிக்கொண்டான். ராஜபுதனம், குஜராத் முதலியவை அவனுக்கு எதிராகக் கலகம் செய்தன. மனம் உடைந்த சுல்தான் அல்லாவுதீன் 1316-ல் இறந்தான். அவன் அக்கால நிலைக்கேற்ற அரசன். அவன் அருந்திறலும் நல்ல நிருவாகத் திறனும் வாய்ந்த மன்னன். கலை வளர்ச்சியிலும் கற்றோரை ஆதரிப்பதிலும் அவன் ஊக்கம் கொண்டான். குதுப்மினாரைச் சேர்ந்த பல கட்டடங்களை அமைத்து, 1310-ல் ஒரு பெரிய வாயிலையும் அவன் கட்டினான். அது சிற்பப் புகழ்பெற்றதாகும். டெல்லிக்கருகில் புதிய நகர் ஒன்றையும் அவன் அமைத்தான். சிறந்த கவிஞனாகிய அமீர் குஸ்ரு அவன் காலத்தில் இருந்தவன்.

அல்லாவுதீனுக்குப் பின்னர் டெல்லிப் பேரரசில் குழப்பம் ஏற்பட்டது. மாலிக்காபூர் அரியணையேறப் பல சதிகள் செய்தான். கடைசியில் கொல்லப்பட்டான். பின்னர் அல்லாவுதீனுடைய மகன் முபாரக் அரியணையேறினான். அவன் ஆட்சியில் கலகம் செய்த தேவகிரி மன்னன் ஹரபாலதேவன் தோற்கடிக்கப்பட்டுக் கொடுமையாகக் கொல்லப்பட்டான். தந்தை காலத்தில் ஏற்பட்ட பல சீர்திருத்தங்கள் மாற்றப்பட்டன. பாண்டிய நாட்டையும் ஓரங்கல் நாட்டையும் அவன் வென்றான். கடைசியில் தன் நண்பன் குஸ்ருகான் என்பவனால் கொல்லப்பட்டான்.

1320-ல் அரியணையேறிய குஸ்ருகான் விரைவில் பிரபுக்கள், பொதுமக்கள் ஆகியோருடைய பகைக்கு ஆளாகிக் காசிமாலிக் என்னும் தலைவனால் அதே ஆண்டில் கொல்லப்பட்டான். ஆகவே 1290-ல் தொடங்கிய கில்ஜி வமிசம் 1320-ல் முடிவடைந்தது.

காசி மாலிக் 1320-ல் கியாசுதீன் துக்ளக் என்னும் பெயரோடு முடி சூடி ஆள ஆரம்பித்தான். 1320 முதல் 1325வரை திறமையுடனும் நேர்மையுடனும் ஆட்சி புரிந்து புகழெய்தினான். அல்லாவுதீன் காலத்திய சட்டத் திட்டங்கள் எவ்வித மாறுதலுமின்றிக் கையாளப்பட் டன. 1325-ல் வங்காளப் படையெழுச்சியினின்றும் திரும்பிய அவன் ஒரு மாளிகையில் தங்கி யிருந்தபோது அது இடித்து வீழ்த்தப்பட்டதால் உயிரிழந்தான். இந் நிகழ்ச்சியில் அவனுடைய புதல்வன் முகம்மது என்பவனும் கலந்தவன். கியாசுதீன் டெல்லிக் கண்மையில் துக்ளகாபாத் என்னும் புதிய நகரைக் கட்டினான். அவனுக்குப்பின் பட்டமெய்திய முகம்மது துக்ளக் (ஆ.கா.1325-1351) மிகுந்த கல்வியறிவு உடையவன். கூர்மையான நினைவாற்றலும், அருமையான பேச்சுத் திறனும் அவனுக்கிருந்தன. அவன் பாரசீகக் கவிதை, தருக்க சாஸ்திரம் முதலியவற்றைக் கற்றவன். பிறரோடு வாதித்துத் தன் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் திறமைமிக்கவன். அவனுடைய அறிவாற்றல்களை இபன்பதூதாவும் பாரனியும் வியந்து பாராட்டுகின்றனர். இந்த அருங்குணங்களோடு பிடிவாதமும், கொடுமை முதலிய சில தீயகுணங்களும் அவனுக் கிருந்தமையினால்தான் அவனுடைய ஆட்சி நல்ல முறையில் நடைபெறாமல் பொதுமக்களுக்கு அல்லலையும், இடைவிடாத தொல்லைகளையும் கொடுப்பதாயிற்று. அதனால்தான் அவனைப் 'பேய்மனம் படைத்த துறவி" எனவும், 'துறவிபோன்ற மனப்பண்புடைய பேய்' எனவும் சிலர் கூறியுள்ளனர்.

அவன் பட்டம் பெற்றபோது போதுமான அரசியல் அனுபவம் அவனுக்கிருந்தது. 1327-ல் அவன் தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றினான். இம்மாற்றத்துக்குப் பல நல்ல காரணங்கள் இருப்பினும், அதனால் பொதுமக்கள் பெருந்துன்பம் அடைந்தார்கள். டெல்லியிலிருந்து சுமார் 700 மைல்கள் பிரயாணம் செய்து, தேவகிரியை அடையமுயன்ற மக்களில் மிகப் பெரும்பான்மையினர் களைப்பினால் வழியிலேயே இறந்தனர். எஞ்சியவர்கள் தேவகிரியை அடைந்ததும் பல வித நோய்களுக்கு இரையாயினர். பதினேழு ஆண்டுகள் கழித்து மறுபடியும் டெல்லி தலைநகராயிற்று.

பொருளாதாரத் துறையில் தேர்ந்த முகம்மது பொருட் செலாவணி முறையைத் திருத்தியமைத்து, மதிப்புக் குறைந்த தங்கத்தை வெள்ளியின் மதிப்புக்கு ஒத்திருக்குமாறு செய்தான். உயர்ந்த உலோகங்களில் நாணயங்கள் வெளியிடுவதற்குப் பதிலாகப் பித்தளை நாணயங்களை வெளியிட்டான். இம்முறையில் தவறொன்றும் இல்லையாயினும், கள்ள நாணயங்கள் ஏராளமாக வெளிவந்து உலவுவதைத் தடுக்க அவனால் இயலவில்லை. உடனே சுல்தான் தனது தவறுதலை ஒப்புக்கொண்டு, தன் புதிய நாணயங்களைத் திருப்பி வாங்கிக்கொண்டு, அவற்றுக்குப் பதிலாக நல்ல நாண யங்களைக் கொடுக்க ஏற்பாடு செய்தான். இவ்வித மாற்றங்களால் பொக்கிஷம் வறண்டது. வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டது. தனது அரசின் ஒரு பகுதியில் அரசாங்க வரியை அதிகப்படுத்தியதன் விளைவாக உழவர்கள் அல்லலுற்றுக் காடுகளில் ஒளிந்து வாழ முற்பட்டனர். அங்கும் முகம்மது துக்ளக் சென்று, மிருக வேட்டையாடுவதுபோல் அவர்களை வேட்டையாடிக் கொன்றான். தன் பெருந்தவறுகளை உணர்ந்தவுடன் பரிகாரந்தேட முன்வந்தான். ஆயினும் இதனால் பொதுமக்கள் நன்மையடைய வழியில்லாமற் போயிற்று. சதி என்னும் பழக்கத்தை அவன் சட்டவிரோதமாக்கினான். முகம்மது துக்ளக் ஓரங்கல் நாட்டை வென்று தன்னடிப்படுத்தினான். துவார சமுத்திரத்தை அடியோடு சிதைத்து அழித் தான். பாண்டியநாட்டையும் வென்று அடிப்படுத்தினான். அவனது பேரரசு வடக்கே இமயம் முதல் தெற்கே மதுரை வரையிலும், மேற்கே சிந்துநாடு முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் பரவியிருந்தது. அதில் 23 மாகாணங்கள் அடங்கியிருந்தன. இவற்றை வெல்லுதற்கான போர்களாலும், அவசியமற்ற வேறு சில சண்டைகளாலும் மிகுந்த பொருளழிவும், பொது மக்களுக்கு இன்னலும் ஏற்பட்டன.

அவனது ஆட்சியின் பிற்பகுதியில் நாடெங்கும் கலகங்கள் ஏற்பட்டன. வங்காளம், மதுரை, தேவகிரி முதலியவை சுயேச்சையடைந்தன. வட இந்தியாவில் முகம்மது துக்ளக் ஓரளவு வெற்றியடைந்தபோதிலும் தென்னிந்திய நாடுகள் முழுச் சுயேச்சை எய்திவிட்டன. இந்நிலையில் 1351-ல் ஒரு கலகத்தை அடக்குவதற்குக் குஜராத்துக்குச் சென்ற முகம்மது துக்ளக் திடீரென இறந்தான்.

பிரோஸ் துக்ளக் (ஆ.கா.1351-1388) முகம்மதுவின் சிற்றப்பன் மகன். தன் சகோதரன் ஆட்சியில் ஏற்பட்ட இன்னல்களைப் போக்கி, மக்களுக்கு நன்மை புரிவதிலேயே அவன் கவனம் செலுத்தினான். முகம்மது துக்ளக்கின் அநீதியான செயல்களால் துன்பமுற்றவர்கட்கு நன்மைகள் செய்தும், அவர்கள் சந்ததியினர்க்குப் பல சலுகைகள் காட்டியும், அவனை மன்னிப்பதாக அவர்களிடமிருந்து கடிதங்கள் வாங்கி, அவற்றையெல்லாம் ஒரு பெட்டியிலிட்டு முகம்மதுவின் கல்லறையில் வைத்தான். இவற்றால் கடவுள் முகம்மது துக்ளக்கைத் தண்டிக்காமல் விடுவார் என்ற நம்பிக்கை பிரோஸ் துக்ளக்குக்கு இருந்தது.

பிரோஸ் நிலவரி முறையைச் சீர்திருத்தி யமைத்து விவசாயிகளுக்குப் பல நன்மைகள் செய்தான். அவன் காலத்தில் நீர்ப் பாசனத்துக்கான கால்வாய்கள் பல புதிதாக வெட்டப்பட்டன. நிலவரி குறைக்கப்பட்டது. நிலவரி சம்பந்தமான சீர்திருத்தங்கள் இன்னும் பல செய்யப்பட்டன. ஒழுங்கீனமான பல வரிகள் ஒழிக்கப்பட்டன. இந்துஸ்தானம் பொன் கொழிக்கும் நாடாயிற்று. விவசாயிகள் சுகமாக வாழவும், சிறிதளவு ஆடம்பர வாழ்க்கை நடத்தவும் வசதி யேற்பட்டது.

இந்துக்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் ஜசியா வரி செலுத்த வேண்டியதாயிற்று. பிராமணர் மீதும் இவ்வரி விதிக்கப்பட்டது; ஆனால் அவர்கள் எதிர்த்ததால் அவ் வரி அவர்கட்கு மட்டும் குறைக்கப்பட்டது. சில இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டு, அவற்றுக்குப் பதிலாக மசூதிகள் கட்டப்பட்டன.

பிரோஸ் துக்ளக் புதிய நகர்கள் அமைப்பதில் விருப்பம் உள்ளவன். பிரோஸாபாத் (புது டெல்லி), ஜான்பூர் ஆகிய நகரங்களையும், பிரோஸாபாத்தில் எட்டு மசூதிகளடங்கிய பெரிய அரண்மனையையும் அவன் கட்டுவித்தான். அவை சிற்பப் புகழ் பெற்றவை. அசோகன் காலத்து இரு தூண்கள் உத்தரப் பிரதேசத்திலிருந்து அகற்றப்பட்டு, ஒன்று பிரோஸாபாத்திலும், மற்றொன்று டெல்லிக் கருகிலும் நிறுவப்பட்டன. அவனால் வெட்டப்பட்ட யமுனை, சட்லெஜ் கால்வாய்கள் நீர்ப்பாசனத்துக்கு மிகவும் உதவின.

பிரோஸ் துக்ளக், பாரனி போன்ற அறிஞர்களை ஆதரித்துப் போற்றினான். முஸ்லிம் பள்ளிகளை அமைத்தான். டெல்லியில் பொது மக்களுக்கென மருத்துவச் சாலை யொன்றை யமைத்தான். ஏழைகட்கு உதவி புரியவும், வேலை யில்லாமல் வருந்துபவர்கட்கு வேலையளிக்கவும் தக்க ஏற்பாடுகள் செய்தான். பழைய ஜாகீர் முறையையும் அவன் புதுப்பித்தான். கடைக்காலத்தில் அவன் மகன் முகம்மது ஒழுங்காக இல்லாததால் தன் பேரன் துக்ளக் ஷா என்பவனைத் தன் வாரிசாக நியமித்து 1388-ல் இறந்தான்.

துக்ளக் ஷா விரைவில் பட்டமிழந்து மறைந்தான். பின்னர் பிரோஸ் துக்ளக்கின் மகன் முகம்மது ஷா சிறிது காலம் ஆண்டு 1394-ல் இறந்தான். பின்னர் அவன் மகன் இக்பால்கான் என்பவன் உதவியால் ஆட்சி புரிந்தான். அவன் ஆட்சிக் காலத்தில்தான் தைமூர் படை யெடுத்துவந்து பல அட்டூழியங்களை இந்தியாவில் நிகழ்த்தினான் (1398-1399). அதற்குப் பின்னர் துக்ளக் வமிசத்தினர் மிகச் சுருங்கிய நிலையில் 1412 வரை ஆண்டு அழிந்தனர். பின்னர்ச் சில பிரபுக்கள் 1414வரை அதிகாரஞ் செலுத்தினார்கள். 1414-ல் சையத் வமிசம் டெல்லியில் ஆள ஆரம்பித்தது.

தைமூர் (1336-1405) மத்திய ஆசியாவில் சாமர்க்கண்டு பகுதியை ஆண்டு வந்தவன். அவன் பாரசீகம், ஆப்கானிஸ்தானம், மெசபொட்டேமியா முதலியவற்றைக் கைப்பற்றியபின் இந்தியாமீதும் படையெடுக்க விரும்பினான். டெல்லிப் பேராசின் குழப்பமான நிலை அவன் விருப்பம் நிறைவேறுவதற்குச் சாதகமாய் அமைந்தது. 1398-ல் சிந்து நதியைத் தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து, பல நகரங்களைக் கைப்பற்றி டெல்லியை நோக்கிச் சென்றான். கடும் போருக்குப்பின் டெல்லியைக் கைப்பற்றி, ஐந்து நாட்கள் அதைக் கொள்ளைவிட்டான். பலவாறு குடிகளைத் துன்புறுத்தினான் இரண்டு வாரங்கள் கழித்து ஹரித்துவாரம், மீரட், ஜம்மு ஆகியவற்றின் வழியாகத் திரண்ட பொருளோடும் சிறைப் படுத்தப்பட்ட சிற்பிகளோடும் சாமர்க்கண்டு திரும்பினான். டெல்லி தன் பழம்பெருமை யனைத்தும் இழந்து சிறுமையுற்றது. பஞ்சமும் நோயும் எங்கும் பரவின. தைமூர் சென்ற வழியெல்லாம் குடிகள் கொள்ளையிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அளவற்ற அல்லல்கட்கு உள்ளாயினர்.

கிசிர்கான் என்பவன் சையத் வமிசத்து முதல் அரசன். அவன் தைமூர்ப் படையெடுப்பின்போது அவனோடு ஒத்துழைத்தவன். தைமூருடைய பிரதிநிதியாக இந்தியாவின் சில பகுதிகளை ஆண்ட அவன் 1414-ல் டெல்லியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். சையத் என்பது முகம்மது நபியின் வழி வந்தவன் என்னும் பொருள் கொண்டதாகும். கிசிர்கான் தன்னை முகம்மது நபியின் வழி வந்தவன் என்று கூறிக்கொண்டதால் அவன் வமிசத்தினர் சையத் வமிசத்தவர் எனக் கூறப்படுகிறார்கள். அரசபதவிக் குரிய பட்டம் எதுவும் புனைந்து கொள்ளாமல் தைமூருடைய பிரதிநிதியாகவே 1421 வரை அவன் ஆண்டு வந்தான்.

முபாரக்ஷா (ஆ. கா. 1421-34), முகம்மதுஷா (ஆ. கா.1434-45), ஆலம்ஷா (ஆ. கா. 1445-51) என்பவர்கள் அவன் சந்ததியினர் ஆவர். 1451-ல் லாகூர் கவர்னரான பாஹ்லால் லோடி ஆலம்ஷாவைத் தோற்கடித்து டெல்லி மன்னன் ஆனான். ஆகவே 1451-ல் சையத் வமிச ஆட்சி முடிவுற்றது. அதன் பிறகு லோடி வமிசம் டெல்லியில் ஆண்டது.

அவ் வமிசத்து முதல் மன்னனான பாஹ்லால் லோடி (ஆ. கா. 1451-1489) ஆப்கானியர்களில் லோடி என்னும் வகுப்பைச் சேர்ந்தவன். முதல் ஆப்கானிய அரசை அவன் டெல்லியில் ஏற்படுத்தினான். அவனுக்கு நேர்மை, பக்தி, இரக்கம் முதலிய நற்குணங்கள் இருந்தன. அவனுக்குப் பிறகு பட்டமெய்திய சிக்கந்தர் லோடி (ஆ. கா. 1489-1517) காலத்தில் டெல்லி அரசு பஞ்சாபிலிருந்து பீகார்வரை பரவியிருந்தது. அவன் திறமையோடு ஆண்டபோதிலும் இந்துக்கள்மீது கொடுங்கோலாட்சி செலுத்தினான். அவர்களுடைய கோயில்கள் இடிக்கப்பட்டன.

சிக்கந்தரின் மூத்த மகனான இப்ராகீம் லோடி (ஆ. கா.1517-1526) தன்னுடைய அதிகாரத்தை வலுப்படுத்த விரும்பிப் பிரபுக்களைக் கொடுமையாக நடத்தினான். இவன் மேவார்மீது படையெடுத்து அதை வென்றான். பிரபுக்கள் நாடெங்கும் கலகம் செய்தனர். பீகார் சுயேச்சை யடைந்தது. லாகூர் கவர்னரான தௌலத்கான் லோடி என்பவன் இந்தியா மீது படை யெடுக்குமாறு பாபரை அழைத்தான். அவ்விதமே பாபர் படையெடுத்து வந்து, 1526-ல் பானிப்பட்டுப் போரில் இப்ராகீம் லோடியை வென்று கொன்றான். அதனோடு லோடி வமிசம் முடிவடைந்து, மொகலாயர் ஆட்சி வட இந்தியாவில் ஏற்பட்டது. எஸ். தி. கி. பி. 1526-1858 : கி. பி. 1526 முதல் 1556 வரை உள்ள காலப் பகுதியில் மொகலாயர்களும் ஆப்கானியரும் இந்தியாவில் ஆதிக்கம் வகிப்பதற்காகத் தமக்குள் போராடினர். தைமூர் மரபில் வந்த பாபர், வட இந்தியாவைக் கைப்பற்றிப் புதிய துருக்கியர் (மொகலாயர்) அரசுக்கு வழிகோலினான். அந்த அரசு அவன் மகன் ஹுமாயூன் காலத்தில் அழிந்து மீண்டும் 1556-ல் ஏற்பட்டது. ஹுமாயூன் புதல்வன் அக்பர் படிப்படியாக அவ்வரசை வட இந்தியா முழுதும் பரப்பினான்.

பாபர் தந்தைவழியில் தைமூரையும் தாய்வழியில் செங்கிஸ்கானையும் சேர்ந்தவன். இளம்பருவத்தில் பல அல்லல்களை அனுபவித்த அவன் வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்களைத் துணிவோடு எதிர்த்துப் போராடுவதற் கேற்ற மனப்பண்புடையவனாயிருந்தான். சாமர்கண்டை வென்று தன்னடிப் படுத்த முயன்றதில் தோல்வியுற்ற பாபர் ஓராண்டு தனது சொந்த நாட்டையும் இழந்து நின்றான். இந்நிலையில்தான் இந்துஸ்தானத்தை வெல்ல வேண்டும் என்னும் ஆவல் அவனுக்குண்டாயிற்று. சில ஆண்டுகள் கழித்துக் காபுல் அவன் வசமாகியது.

இந்தியாவில் டெல்லி அரசின்கீழிருந்த பல பிரபுக்களும் ராஜபுத்திர மன்னனாகிய ராணா சங்கிராம் சிங்கும் பாபரோடு தொடர்புகொண்டு, இந்தியாமீது படையெடுக்குமாறு அவனுக்கு ஆலோசனைகள் கூறிவந்தனர். அவற்றின்படி பாபர் 1525-ல் காபுலினின்றும் புறப்பட்டுப் பஞ்சாபை வசப்படுத்தி, டெல்லியை நோக்கி முன்னேறினான். லோடி வமிசத்து மன்னன் இப்ராகீம் தனது பெரும்படையோடு 1526 ஏப்ரல் 21-ல் பானிப்பட்டுப் போர்க்களத்தில் மொகலாயப்படையை எதிர்த்தான். தன்னுடைய சிறந்த தலைமையினாலும், போர் முறைகளாலும், பீரங்கிப்படையாலும் பாபர் எதிரியைத் தோற்கடித்து வெற்றி பெற்றான். இப்ராகீம் லோடி போர்க் களத்தில் இறந்தான். பாபர் விரைவில் டெல்லியையும் ஆக்ராவையும் கைப்பற்றினான். லோடி வமிசத்தினர் வீழ்ச்சியினால் மட்டும் இந்துஸ்தானம் பாபர் வசமாகி விடவில்லை. பானிப்பட்டுப் போருக்குப் பின்னர் தான் பாபர் மொகலாயப் பேரரசை ஏற்படுத்தும் முயற்சியை மேற்கொண்டான். பல ஆப்கானியத் தலைவர்களையும் ராஜபுத்திரர்களையும் அடக்கினால் தான் அதுமுடியும் என்று அவன் உணர்ந்தான். அவர்களோடு நிகழ்த்திய போரில் பாபரின் வீரர்கள் ராஜபுத்திரர்களை அடியோடு தோற்கடித்தார்கள். 1527-ல் நடந்த கான்வாப்போரில் ராணா சங்கர் படுதோல்வியுற்றுப் போர்க் களத்தினின்றும் தப்பியோடி, மனமுடைந்து சில ஆண்டுகளில் இறந்தான்.

ராஜபுத்திரர்களை வென்றபின் பாபர் ஆப்கானியத் தலைவர்களை முறியடிக்க முற்பட்டான். கோக்ரா ஆறு கங்கையோடு கலக்குமிடத்துக் கருகில் 1529 மே 6ஆம் நாள் நிகழ்ந்த கடும்போரில் பாபர் ஆப்கானியரை வென்றான். இதன் விளைவாக வட இந்தியாவில் பெரும் பகுதி பாபர் வசமாயிற்று. ஆக்சஸ் ஆறுமுதல் கோக்ரா வரையிலும், இமயமலை முதல் குவாலியர் வரையிலும் அவனது அரசு பரவிற்று.

ஆயினும் பாபர் தனது அரிய முயற்சிகளின் நற்பயனை நீண்டகாலம் அனுபவிக்க இயவில்லை; 1530-ல் ஆக்ராவில் இறந்தான்.

பாபருக்குப் பின் பட்டம்பெற்ற ஹுமாயூன் (ஆ. கா. 1530-40; மறுபடியும் 1555-56) போதுமான அளவு ஆளும் திறனும் போர்த்திறனும் பெற்றிருந்தான். தன் தந்தை நடத்திய போர்களில் அவனும் கலந்து கொண்டான். அவனது ஆட்சியின் முற்பகுதியில் புதிதாக ஏற்பட்ட அன்னிய அரசு நன்றாக வலுப்பெறவில்லை. ஹுமாயூன் தன் சகோதரர்களாகிய காம்ரான் முதலியவர்களோடும், ராஜபுத்திரர்களோடும், ஷெர்கான் என்னும் ஆப்கானியத் தலைவனோடும், குஜராத் சுல்தான் பகதூர்ஷாவோடும் போராட வேண்டி ஏற்பட்டது. அப்போராட்டங்களில் எல்லாம் அவன் தனது உறுதியற்ற தன்மையாலும், உலகவின்பங்களில் செலுத்திய அளவிறந்த விருப்பத்தாலும் தோல்வியடைய நேரிட்டது. சிற்சில வெற்றிகள் பெற்றபோதிலும், தொடர்ந்து எதிரியை முறியடிப்பதில் போதிய கவனம் காட்டாததனால், எதிரிகள் வலுப்பெற்று அவனைத் தோற்கடித்தனர். பகதூர்ஷாவோடு நடத்திய போராட்டத்தில் அவன் உறுதியோடு நின்று எதிரியின் வலுவை அழிக்காததால் இறுதியில் மாளவத்தையும் குஜராத்தையும் இழக்க நேர்ந்தது. ஷெர் கானுடன் நடத்திய போராட்டத்திலும் தீவிரம் கொள்ளாததால், ஷெர்கான் ஹுமாயூனை 1539-ல் சௌசாவிலும், 1540-ல் முடிவாகக் கன்னோசியிலும் தோற்கடித்து, ஆக்ரா, டெல்லி ஆகிய இடங்களைக் கைப்பற்றினான். ஹுமாயூன் நாடிழந்து 1540 முதல் 1555 வரை பல அல்லல்களை அனுபவித்தான். இக்காலத்தில் 1542-ல் அவனுடைய மகனான அக்பர் அமரக் கோட்டையில் பிறந்தான். பின்னர் ஹுமாயூன் பாரசீகம் சென்று, அந்நாட்டு மன்னனுடைய ஆதரவைப் பெற்று அங்கே தங்கியிருந்தான். சிறிது சிறிதாகக் காந்தகார், காபுல் முதலியவற்றைக் கைப்பற்றியபின், 1555-ல் இந்தியாமீது படையெடுத்து, சர்ஹிந்து என்னுமிடத்தில் டெல்லி சுல்தானை வென்று, டெல்லி, ஆக்ரா இவற்றைக் கைப்பற்றிச் சுமார் ஆறுமாதங்கள் மட்டும் அரசாண்டு 1556-ல் இறந்தான்.

1540 முதல் 1555 வரை டெல்லியில் ஆப்கானியர் ஆட்சி மீண்டும் நடைபெற்றது. ஷெர்கான் சிறந்த வெற்றிகள் பெற்று, ஆப்கானிய அரசை மீண்டும் வட இந்தியாவில் ஏற்படுத்தினான். அவனும் அவன் சந்ததியினரும் 1540 முதல் 1556 வரை வட இந்தியாவில் பற்பல இடங்களில் ஆட்சிபுரிந்து வந்தனர். 1556-ல் இறுதியாக அவர்கள் இரண்டாவது பானிப்பட்டுப் போரின் பயனாக அதிகார மிழந்தனர்.

சக்கரவர்த்திஷெர்ஷா (ஆ.கா. 1539-1545) நீண்ட காலம் தனது பேரரசை ஆளவில்லை. ஆயினும் அவன் வகுத்துக் கையாண்ட பல அரசியல் திட்டங்கள் பின்னர் மொகலாயராலும் ஆங்கிலேயராலும் கையாளப்பட்டன. ஆங்கிலேயருடைய இந்திய அரசியலைக் கூர்ந்து நோக்கினால் ஷெர்ஷா காலத்திய முறைகள் பல அதில் செறிந்து கிடப்பதைக் காணலாம்.

அவனுடைய பேரரசானது பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப் பெறாமல், சிறு சிறு சர்க்கார் (ஜில்லா) களாகவும், பர்கனாக்களாகவுமே பிரிக்கப்பட்டிருந்தது. பல கிராமங்கள் சேர்ந்த ஒரு தொகுதி ஒரு பர்கனாவாகும்.

குடிமக்களிடமிருந்து வரி வசூலிப்பதில் ஷெர்ஷா சிறந்த முறைகளைக் கையாண்டான். உழவர்களைக் கருணையோடு நடத்துவதனால் வரும் நன்மையை அவன் உணர்ந்தவனாதலின் அவர்களிடமிருந்து அநீதியான வரிகள் வசூலிக்கவில்லை. தேவையானபோது உழவர்கட்கு அவன் அரசாங்கம் கடன் கொடுத்து உதவியது. உத்தியோகஸ்தர்களுக்கு மாதச் சம்பளத்துக்குப் பதிலாக ஜாகீர்கள் அளிக்கும் முறையை அவன் வெறுத்தான். அவனுடைய நிலவரித் திட்டத்தைத்தான் பிற்காலத்தில் அக்பரும் ஆங்கிலேயரும் கையாண்டனர். ஆங்கிலேயர் அம் முறைக்கு ரயத்துவாரி முறை எனப் பெயரிட்டனர். சிறந்த நிலப் படையொன்றையும் ஷெர்ஷா திரட்டி யிருந்தான்.

வர்த்தகம் பெருகுவதற்காக இன்றியமையாத சுங்கம் போன்ற சில வரிகளைத் தவிர வேறு வரிகளையெல்லாம் ஷெர்ஷா நீக்கினான். வர்த்தகர்களுக்காகவும் பிரயாணிகளுக்காகவும் நீண்ட சாலைகள் அமைக்கப்பட்டன. வங்காளத்திலிருந்து பஞ்சாபுக்கும் லாகூரிலிருந்து மூல்தானுக்கும் செல்லும் சாலைகள் போன்ற சில இவற்றில் முக்கியமானவை. வழிப் போக்கர் தங்குவதற்காகச் சுமார் 1,700 விடுதிகள் நாடெங்கும் அமைக்கப்பட்டன. புதுமுறையான நாணயங்கள் சில வெளியிட்டு, இந்திய நாணய வரலாற்றில் அவன் சிறந்ததோர் இடம் பெற்றான். அவன் வெளியிட்ட வெள்ளி ரூபாய் 178 குன்றிமணி நிறையுள்ளதாகும். தற்காலத்தில் வழங்கும் ரூபாய் நாணயத்துக்குத் தந்தை யென்று அவனைக் கூறலாம்.

உறவினர், நண்பர் என வேறுபாடு காட்டாமல் எல்லோருக்கும் குற்றத்திற்கேற்ற தண்டனை வழங்கிய ஷெர்ஷாவின் நீதி வழுவா முறை மிகவும் பாராட்டற்குரியது.

மொகலாயர் வரலாற்றில் அக்பர் ஆண்ட காலம் (1556-1605) மிகச் சிறப்புடையது. அந்தப் பேரரசை நன்றாக நிறுவிப் பல துறைகளிலும் அதை வலுப்பெறுமாறு செய்த பெருமை அக்பருக்கு உரியதாகும். அவன் வரலாற்றை அறிவதற்கு அபுல் பசல் எழுதியுள்ள அயினி அக்பரி போன்ற நூல்கள் மிகவும் உதவுகின்றன.

ஹுமாயூன் இறந்த பின்னர் அக்பரின் நெருங்கிய உறவினனாகிய பைராம்கான் அக்பருக்கு அமிர்தசரஸுக்கு அருகில் முடி சூட்டினான். அக் காலத்தில் வட இந்தியாவில் காச்மீரம், ராஜபுதனம், சிந்து, வங்காளம், கூர்ஜரம், மாளவம் முதலியவை சுயேச்சையாயிருந்தன. ஆப்கானிய வமிசத்தைச் சேர்ந்த முகம்மது ஆதில்ஷாவும், சிக்கந்தர் ஷா போன்றவர்களும் வலிமையோடு இருந்தனர். முகம்மது ஆதில்ஷாவின் மந்திரி ஹேமூதான் மொகலாயர்களின் உண்மை எதிரியாயிருந்தான். பல போர்களில் வெற்றியடைந்த அவன் விக்கிரமாதித்தன் என்னும் பட்டம் புனைந்துகொண்டு விளங்கினான். ஆக்ரா, டெல்லி ஆகியவற்றை அவன் கைப்பற்றினான். அவனோடு போர் புரிந்து, அவன் வலிமையை ஒழிப்பது பைராம்கானின் முதற் கடமையாயிற்று. 1556-ல் நடந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரில் அக்பர் ஹேமூவை முறியடித்துக் கொன்றான். இந்த இரண்டாவது பானிப்பட்டுப் போரால் வடமேற்கிந்தியாவில் அக்பர் ஆட்சி நிலைபெறுவதற்கும், பாபரால் நிறுவப்பட்ட மொகலாயப் பேரரசு மீண்டும் ஏற்படுவதற்கும் வழியாயிற்று. அக்பருடைய பிற எதிரிகள் வலியற்று ஒழிந்தனர்.

அக்பர் ஆதரவற்றிருந்த நிலையில் பேருதவி புரிந்து சிறந்த தொண்டு செய்த பைராம்கான் விரைவில் மதிப்பிழந்து வாட நேரிட்டது. இருவருக்குமிடையில் வேறுபாடுகள் பெருகின. பதவியினின்றும் விலகி அமைதியோடு வாழ்வதற்குப் பைராம்கான் ஒருப்படவில்லை. அக்பருக்கெதிராகக் கலகம் செய்து முறியடிக்கப்பட்டபின் நாட்டைவிட்டு அகலுமாறு உத்தரவு பிறந்தது. அவ்வாறே மெக்கா நோக்கிப் பைராம்கான் செல்லுகையில், 1561-ல் எதிரி யொருவனால் கொல்லப்பட்டு இறந்தான். பின்னர் அக்பர் தானே ஆள ஆரம்பித்தான்.

அக்பர் பட்டம் பெற்ற சுமார் 20 ஆண்டுகளுக்குள் வட இந்தியாவின் சக்கரவர்த்தியாக ஆனான். ராஜபுதனத்தில் பெரும்பகுதி, கோண்டுவானா, மாளவம், கூர்ஜரம், வங்காளம், பீகார், காச்மீரம், சிந்து, ஒரிஸ்ஸா, பலூச்சிஸ்தானம், காந்தகார் ஆகியவை மொகலாயப் பேரரசில் சேர்க்கப்பட்டன. தக்கணத்தில் பேரார், அகமத்நகர், கான்தேசம் ஆகியவையும் 16ஆம் நூற்றாண்டின் கடைசியிலும் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அக்பர் வசமாயின. அகமத் நகரோடு நிகழ்ந்த போராட்டத்தில் II-ம் பர்ஹான் நையாம் ஷாவின் சகோதரியும், பிஜாப்பூர் சுல்தான் I-ம் அலி ஆதில்ஷாவின் மனைவியுமாகிய சாந்த் பீபீ மிகவும் தீரத்தோடு போர் புரிந்து புகழ்பெற்றாள். ஆனால் கடைசியில் அவள் பீராரை மொகலாயருக்கு அளிக்க நேரிட்டது. பின்னர் உள்நாட்டில் இருந்த சில பகைவரால் அவள் கொல்லப்பட்டாள். கோண்டுவானாவோடு நிகழ்ந்த போரில் இராணி துர்க்காவதி மிகவும் வீரத்தோடு போர்புரிந்தாள். மேவார் (மேவாட்) நாட்டு மன்னனாகிய பிரதாபசிம்மன் மட்டும் அக்பருக்குப் பணியாமலும் அவனோடு மணத்தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை வெறுத்தும் வந்தான். 1576-ல் ஹால்டி காட் கணவாயில் அவன் பெருந்தோல்வியுற்றும் மனந்தளரமால் விடாமுயற்சி செய்து, தனது நாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றினான். 1597-ல் அவன் இறக்கவே மேவார் வரலாற்றின் மிகச் சிறந்த பகுதி முடிவடைந்தது.

அக்பருடைய பேரரசு மிகப்பரந்ததாகும். அப்பேரரசை ஆளுவதற்கு அக்பர் ஓர் ஆட்சிமுறையை வகுத்துக் கொண்டான். அம்முறை பெரும்பாலும் அவன் ஆட்சிக்கு முன் வழங்கிய முஸ்லிம் மன்னர்கள் ஆட்சி முறையைத் தழுவியிருந்தது. இவ்விரண்டுக்கும் இடையே சிற்சில மாறுபாடுகள் உண்டு. அவ்வாட்சி முறை இந்திய நிலைக்குத் தக்கபடி மாற்றியமைக்கப்பட்ட பாரசீக-அராபிய ஆட்சி முறை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். அரசாங்கம் வரி வசூலிப்பதிலும், அமைதி நிலைநாட்டுவதிலும் மட்டும் ஈடுபடாமல் கலைகளை வளர்ப்பதிலும் வர்த்தகத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்திற்று. மன்சப்தாரி முறை என்பது இவ்வாட்சி முறையில் ஒரு பகுதியாகும். இதன்படி மன்சப்தார் எனப்படுபவர்கள் பத்து முதல் பதினாயிரம் வரையில் குறிப்பிட்ட அளவு குதிரை வீரர்களை வைத்திருக்க வேண்டும். அரசாங்கம் விரும்பும்போது அவ்வீரர்களைப் போருக்கு அனுப்பவேண்டும். இதற்கென்று அரசாங்கம் அவர்கட்கு மாதச் சம்பளம் கொடுத்து வந்தது. இந்த மன்சப்தாரி அமைப்பில் எழுபது சதவிகிதம் வேற்று நாட்டினரும், பதினைந்து சதவிகிதம் இந்திய முஸ்லிம்களும், மீதமுள்ள பகுதி ராஜபுத்திரர்களும் இருந்தனர். 8,000, 10,000 குதிரை வீரர்களைக் கொண்ட படைப் பதவிகள் அரச குடும்பத்தினருக்கே அளிக்கப்பட்டன. தோடர்மால், மான்சிங் போன்றவர் 7.000 குதிரை வீரர் கொண்ட படைகட்குத் தலைவர்களாக விளங்கினர். சாதாரணமாக 5,000 குதிரை வீரர் கொண்ட படைக்குத் தலைமையே உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்பதவிகளின் உயர்வுக்குத் தக்கபடி உமாரா, அமீர்சி ஆசம் என்ற பட்டங்கள் வழங்கப்பட்டன. இவர்களில் மிகச் சிறந்தவர்கள் அமீர் உல் உமாரா (பிரபுக்களின் தலைவன்), கான்கானன் என்னும் பட்டம் பெற்றுச் சிறப்புற்றனர். மத்திய அரசாங்கத்தில் முதல் மந்திரி, பொருளாதார மந்திரி, ராணுவ அதிகாரி, தலைமை நீதிபதி, மத இலாகா அமைச்சர் போன்றவர்கள் அதிகாரம் வகித்தனர். இம்மந்திரிகள் அரசாங்கத்தினுடைய மதிப்பையும் உயர்வையும் பெருக்கி வந்தனர். சக்கரவர்த்திக்கு ஆட்சி சம்பந்தமாக ஆலோசனை கூறுவதற்கு மந்திரிகளும், மற்ற உத்தியோகஸ்தர்களும் பிரபுக்களும் அடங்கிய மஜ்லிஸ் என்னும் சபையொன்று இருந்தது. அக்பர் காலத்தில் இச்சபையில் இருபது அங்கத்தினர்கள் இருந்தார்கள். பொதுவாக அரசியல் விஷயங்களை ஆலோசிப்பதற்கும், அவைபற்றிச் சக்கரவர்த்திக்கு ஆலோசனை கூறுவதற்கும் இச்சபை கூட்டப்படுவது வழக்கம். ஆனால் இச்சபையின் தீர்மானப்படி சக்கரவர்த்தி நடக்கவேண்டும் என்பதில்லை. மொகலாய அரசாங்கம் ஒரு தனி மனிதனுடைய ஆட்சியே யாகும். அரசனுடைய மந்திரிகள் தங்கள் மன்னர் விருப்பத்தை ஆட்சிமுறையில் நடத்தி வைக்கும் செயலாளர்களாகவேதான் இருந்தனர்.

மொகலாயப் பேரரசு 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 15 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தற்கால வட இந்திய இராச்சியம் ஒன்றின் பாதியளவுதான் அக்பர் காலத்தில் மாகாணம் ஆகும்'. ஒவ்வொரு மாகாணத்தின் முழு நிருவாகமும் சுபேதார் என்ற அரசப் பிரதிநிதியின் கீழ் இருந்தது. ஒவ்வொரு சுபேதாரும் தனது சுபாவில் சக்கரவர்த்தியைப்போல் அதிகாரம் வகிக்க விரும்பினான். சுபேதாரைத் தவிரத் தலைமை நீதிபதி, திவான் போன்ற வேறு சில உத்தியோகஸ்தர்களும் மாகாணங்களில் வேலை பார்த்து வந்தனர். மாகாணங்களின் மீது மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வை அதிகமாயில்லை.

மாகாணம் ஒவ்வொன்றும் பல சர்க்கார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜில்லாவுக்குத் தலைமை அதிகாரி பவுஜுதார். கலகக்காரர்களை அடக்குவதும் வரிவசூல் செய்வதும் இவனுடைய கடமைகள். மாகாணத் தலைவன் கீழ் இவன் வேலை பார்த்தாலும், இவனை நியமிப்பதும் மாற்றுவதும் மத்திய அரசாங்கத்துக்கு உரியவை. ஒரு சர்க்கார் பல பர்கனாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பர்கனாவின் தலைவன் சௌதரி. நகரத்துக்குத் தலைவன் கொத்தவால். தற்காலத்தில் நகரசபைகள் செய்யும் வேலையையும் போலிஸ் சூப்பரின்டெண்டென்ட் செய்யும் வேலையையும் அவன் ஒருங்கே கவனித்து வந்தான். குற்றவாளிகளைத் தன் விருப்பம்போல் தண்டிக்க அவனுக்கு அதிகாரம் இருந்தது.

வரி வசூல் முறையை மொகலாயப் பேரரசில் கையாண்டவன் அக்பருடைய நிதி மந்திரியான ராஜா தோடர்மால். இம் முறையின்படி நிலங்களெல்லாம் ஒழுங்கான கருவிகளால் அளக்கப்பட்டன. நிலங்கள் பயிரிடப்படும் முறையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. விளை பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய நிலவரியாகக் கருதப்பட்டது. இவ்வரி விகிதம் பார்வைக்குப் பழைய இந்திய விகிதத்தைக் காட்டிலும் மிக அதிகமாகவும் ஷெர்ஷாவின் வரி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவும் தோன்றினும், உண்மையில் உழவர்களுக்கு இந்த வரி விகிதத்தினால் எவ்வித இன்னலும் இல்லை. அவர்கள் வரிவிகிதம் அதிகமென்று கருதினால் வரி குறைக்கப்பட்டது. முன்னர் வசூலிக்கப்பட்டுவந்த ஜசியாவும் வேறு பல வரிகளும் எடுபட்டுவிட்டன. இத்திட்டம் மிகவும் வியக்கத்தக்கது. மொகலாயப் பேரரசில் இத்திட்டம் பத்து மாகாணங்களில் கையாளப்பட்டது. முற்கூறிய திட்டத்தால் உழவர்கள் நேரடியாக அரசாங்கத்தோடு தொடர்புகொண்டிருந்தார்கள்.

சேனையை அமைப்பதில் ஷெர்ஷா, அல்லாவுதீன் முதலியவர்கள் கையாண்ட முறைகளினின்றும் அக்பர் தவறிவிட்டான். சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய சேனையொன்று அக்பர் காலத்தில் நிலைப்படையாக இருந்தது. மன்சப்தார்களிடத்தும், விசுவாசமுள்ள சுமார் இருபது தலைவர்களிடத்துந்தான் அக்பர் ராணுவ பலத்திற்காக நம்பிக்கை வைத்திருந்தான். ஆகவே அவனது ராணுவமானது பல குறைபாடுகள் உள்ளதாயிருந்தது. மன்சப்தார்களையடக்கிக் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள குதிரைப் படைகள் வைத்துக்கொள்ளுமாறும், மன்சப்தாரி முறையில் சீர்கேடுகள் எவையும் இல்லாமல் இருக்குமாறும் அக்பர் பார்த்துக்கொண்டபோதிலும், மன்சப்தார்கள் கையாண்ட தவறான வழிகளை ஒழித்து, மன்சப்தாரி முறையைச் செம்மையும் வலிவும் கொண்ட அமைப்பாக ஆக்குவதற்கு அக்பரால் இயலவில்லை. மன்சப்தார்கள் குறிப்பிட்ட அளவு குதிரைப்படைகள் வைத்துக்கொள்ளாமல் மத்திய அரசாங்கத்தை ஏமாற்றிவந்தார்கள். படைகள் புறப்பட்டுச் செல்லும்போது மிக்க ஆடம்பரத்தோடு செல்வது வழக்கம். இம்மாதிரியான குறைபாடுகளால் அக்பருடைய படைகள் வலிமையற்று இருந்தன. இருந்தபோதிலும் தன் கையிலுள்ளவற்றைக்கொண்டு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அக்பரின் திறமையால் அப்படைகள் வெற்றியடைந்தன.

முதலில் அக்பர் முஸ்லிம் மதப்பற்று மிகுந்துதான் இருந்தான். பிறகு மற்றச் சமயங்களில் அடங்கியுள்ள உண்மைகளையறிய ஆவல்கொண்டு, இந்து மதம், ஜைன மதம், கிறிஸ்தவ மதம் இவற்றின் பிரதிநிதிகளோடு கலந்து, அவரவர்கள் மதங்களின் முக்கியக் கொள்கைகளைத் தெரிந்துகொண்டான். அம்மதத்தினர்கள் மத வாதத்துக்கென்று சிக்ரி நகரில் அக்பரால் கட்டப்பட்ட வழிபாட்டு இல்லத்தில் தத்தம் மதக்கொள்கைகள் பற்றி விவாதித்தனர். 1582-ல் அக்பர் முஸ்லிம் மதக் கொள்கைகளில் இருந்த சிக்கல்களை ஆராய்ந்து முடிவுகூறும் அதிகாரத்தைப் பெற்றான். இதனால் உலகியலில் மட்டுமன்றி மத விஷயங்களிலும் அக்பர் அதிகாரம் பெற்றான். பல மதங்களின் உண்மைகளையும் அறிந்த அக்பர் எந்த மதத்தினாலும் முழு நிம்மதி அடையவில்லை. ஆகவே எல்லா மதக் கொள்கைகளையும் ஒன்று சேர்த்துத் தின் இலாஹி என்னும் ஒரே கடவுள் வழிபாடுள்ள ஒரு மதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கினான் (1582). இம்மதத்தின் முக்கியக் கொள்கையாவது : “அல்லாவைத் தவிரக் கடவுளில்லை; அக்பர் அவருடைய மதத்தைப் பரப்பும் தீர்க்கதரிசி ” என்பதுதான். அக்பருடைய மதம் இன்னதென்று ஒருவராலும் தெளிவாகக் கூறமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தவனும் அக்பரைத் தன்தன் மதத்தைச் சேர்ந்தவனாகக் கருதினான். அக்பர் உண்மையில் சிறந்த கடவுள் நம்பிக்கை உடையவன்.

அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்திப் புதியதோர் சமுதாயத்தைக் காண விரும்பியவன். 1562-ல் ஓர் இந்துப் பெண்ணை மணந்து, அவள் வயிற்றில் உதித்த சலீமைத் தன் வாரிசாக ஏற்றுக்கொண்டான். அவன் 1563-64-ல் இந்துக்கள் செலுத்திய யாத்திரை வரி, ஜசியா ஆகியவற்றை நீக்கினான். இந்துக்களைப்போல் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டு, இந்துக் கொள்கைகளைக் கையாள முனைந்தான். இஸ்லாமியரும் இந்துக்களும் கலப்புமணம் செய்து கொள்ளுமாறு செய்தான். இந்துக்களிடையே நிலவிய குழந்தை மணம், விதவை மறுமணத்துக்கு எதிர்ப்பு, சதி ஆகியவற்றைச் சட்டவிரோதமாக்கித் தடுத்துத் தானே இந்துப் பெண்களை மணந்து, கலப்புமணத்தை நாடெங்கும் பரப்பினான். இந்துக்களில் பலர் உயர்ந்த உத்தியோகங்களை வகித்து வந்தனர். காலநிலையை ஒட்டி அக்பர் கையாண்ட இக்கொள்கை மிகவும் பாராட்டற்குரியதாகும்.

அக்பரின் பிற்காலத்தில் இளவரசன் சலீம் தனது தந்தையின் ஆயுள் நீடிப்பதைக் கண்டு பொறுமையிழந்து அடிக்கடிக் கலகம் செய்தான். அக் கலகங்கள் எல்லாம் எளிதில் அடக்கப்பட்ட போதிலும் தனது வாழ்நாளின் இறுதியில் அக்பர் மிகுந்த மனக் கவலையோடு இருந்தான். 1605-ல் அக்பர் இறந்தவுடன் இளவரசன் சலீம் ஜகாங்கீர் என்னும் பெயரோடு பட்டம் பெற்றான் (ஆ. கா. 1605-1627).

அக்பருக்குப் பின் முடி சூடுவதில் ஜகாங்கீருக்கும் அவன் பிள்ளை குஸ்ருவுக்கும் போட்டயேற்பட்டது. குஸ்ரு தோற்கடிக்கப்பட்டு, மற்றொரு பிள்ளையான இளவரசன் குர்ரம் என்பவனிடம் ஒப்படைக்கப்பட்டான். குர்ரம் 1622-ல் அவனைக் கொன்றான். எதிர்ப்பை முறியடித்து ஜகாங்கீர் சக்கரவர்த்தியானான்.

பிரதாபசிம்மனுக்குப் பிறகு முடி சூடிய அமரசிம்மனுக்கும் மொகலாயருக்கும் போர் ஏற்பட்டது. இப் போரில் இளவரசன் குர்ரம் மிகவும் திறமையோடு போர் புரிந்தான். இறுதியில் அமரசிம்மன் மொகலாயப் பேரரசின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தான். உள்நாட்டு விஷயங்களில் மொகலாயர் தலையிடுவதில்லை யெனவும், அமரசிம்மன் ஜகாங்கீரின் சபைக்கு நேரில் வரவேண்டியதில்லை எனவும் முடிவுசெய்யப்பட்டது. இவ்வாறு ராஜபுதனம் முழுமையும் வேறு சில புதிய பிரதேசங்களும் ஜகாங்கீர் வசம் வந்தன.

ஜகாங்கீர் எல்லா அலுவல்களையும் தன் மனைவியான நூர்ஜகானிடம் ஒப்படைத்துவிட்டுக் கவலையற்றிருந்தான். அவனுக்கு எதிர்க் கட்சியொன்று மகபத்கான் தலைமையில் ஏற்பட்டது.

தக்கணத்தில் மாலிக் ஆம்பர் அகமது நகரில் மீண்டும் வலுப்பெற்றுப் பல பகுதிகளைக் கைப்பற்றினான். இளவரசன் குர்ரம் மீண்டும் அவைகளைக் கைப்பற்றினான். அவன் அருஞ்செயல் காரணமாக ஷாஜகான் என்னும் பட்டம் பெற்றான்.

ஜகாங்கீரின் உடல்நிலை அளவுக்கு மிஞ்சிய மதுபானத்தாலும் அபினியாலும் கேடுற்றது. நூர்ஜகான் தனது அதிகாரத்தை இழப்பதற்கு விரும்பவில்லை; முதல் கணவனால் தனக்குப் பிறந்த பெண்ணை ஜகாங்கீருடைய மூத்த மனைவியின் மகனான ஷாரியர் என்ற அரச குமாரனுக்கு மணம் செய்வித்து, அவனை அரசனாக்குவதற்கு முயன்றாள். தன் சிற்றன்னைக்கு ஷாரியர் பணிய நேரிட்டது. பிறகு மகபத்கான் அவனோடு சேர்ந்ததால் நூர்ஜகானின் வலிமை குறைந்தது. 1627-ல் ஜகாங்கீர் இறந்த பின்னர் அவளுடைய அதிகாரம் அழிந்தது. ஷாரியர் கொல்லப்பட்டான். நூர்ஜகான் ஷாஜகானிடம் ஆண்டொன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் பெற்று, 1645 வரை உயிர் வாழ்ந்தாள்.

ஷாஜகான் (ஆ. கா. 1627-1658) தன் மனைவியாகிய மும்தாஜ் மகால் எனப்படும் அர்ஜுமண்ட் பானுவிடம் மிகவும் அன்பு கொண்டவன். தாரா, ஷூஜா, ஒளரங்கசீபு முதலியவர்கள் மும்தாஜ்மகாலின் பிள்ளைகள்; 1631-ல் அவள் இறந்ததனால் ஷாஜகான் மனமுடைந்து, அழகிய உடைகள், அணிகள் முதலியவற்றை வெறுத்தான். மும்தாஜ் மகாலின் சமாதிமீது உலகில் வேறு எந்தப் பெண்ணுக்கும் அமைக்கப் பெறாத சிறந்த ஞாபகார்த்தமாக 1632-ல் தாஜ் மகால் கட்டடம் எழுப்பினான்.

தக்கணத்தில் பிஜாப்பூர், கோல்கொண்டா இராச்சியங்கள் மொகலாயர் ஆதிக்கத்தை ஒப்புக் கொண்டன. அகமதுநகர் மொகலாயர் வசமாகியது. அங்கே பழைய மன்னர்களின் ஆட்சியை ஏற்படுத்த ஷாஜி செய்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இரு முறை ஒளரங்கசீபு தக்கணத்தில் அரசப் பிரதிநிதிப் பதவி வகித்து மொகலாயப் பேரரசைப் பரப்பினான்.

ஷாஜகான் தன் மூத்த புதல்வன் தாராவிடத்தில் அளவிறந்த அன்பு காட்டியதை மற்றப் பிள்ளைகள் பொறுக்கவில்லை. சக்கரவர்த்தி 1657-ல் கொடிய நோயால் வாடியபோது எல்லாப் புதல்வர்களும் அரசுரிமைக்காகப் போராட ஆரம்பித்தனர். அவர்களுள் ஒளரங்கசீபு பேராசை மிக்கவன்; தனது நோக்கத்தை மறைத்துக்கொண்டு, தன் சகோதரனான முராதுக்காகப் போர் புரிந்து, அவனை மன்னனாக்கித் தான் துறவு பூணப் போவதாக முராதிடம் கூறி அவனை நம்புமாறு செய்தான். உஜ்ஜயினிக் கருகில் டார்மத் என்னுமிடத்தில் நிகழ்ந்த கடும்போரில் ஔரங்கசீபு வெற்றியடைந்தான். இதற்கு முன்னால் தாராவின் குமாரன் சுலைமான்ஷுக்கோ ஷாஜுவைக் காசிக்கருகில் பகதூர் பூரில் தோற்கடித்திருந்தான். ஔரங்கசீபு ஆக்ராவை நோக்கி முன்னேறி, சாமுகார் என்னுமிடத்தில் தன் மூத்த சகோதரனாகிய தாராவுடன் கடும் போர் புரிந்து வெற்றி பெற்றான். உடனே ஆக்ரா முற்றுகையிடப் பெற்றது. முற்றுகையைத் தாங்கமுடியாமல் ஷாஜகான் கோட்டையை ஒளரங்கசீபிடம் விட்டான்; அரண்மனையில் சிறை வைக்கப்பட்டான். இது வரையில் முராதும் ஔரங்கசீபும் ஒத்துழைத்தே தம் சகோதரருடன் போர் புரிந்து வந்தனர். விரைவில் இருவருக்குள்ளும் மன வேறுபாடு ஏற்பட்டது. ஒளரங்கசீபு உடனே முராதைக் கைது செய்து குவாலியரில் சிறை வைத்தான். அங்கேயே 1661-ல் முராத் கொல்லப்பட்டான். ஒளரங்கசீபின் முன்னேற்றத்தைக் கண்ட தாரா டெல்லியை விட்டு லாகூருக்குச் சென்றான். பின்னர் ஔரங்கசீபு டெல்லியை அடைந்து, ஆலம்கீர் காசி என்ற பட்டத்துடன் முடி சூட்டிக் கொண்டான் (ஜூலை 1658). ஷாஜகானுடைய ஆட்சி முடிவுற்றது. அவன் 1666-ல் இறக்கும்வரை ஆக்ராவிலேயே சிறையிலிருந்தான்.

மொகலாயர் ஆட்சிக் காலத்தில் ஷாஜகான் ஆண்ட காலம் பொற்காலம் எனக் கருதப்படுகிறது. ஷாஜகான் கலை வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவன். அவன் தனது ஆட்சிக்காலத்தில் பல கட்டடங்களைக் கட்டியுள்ளான். டெல்லி, ஆக்ரா இரு நகரங்களிலும் அவன் கட்டுவித்த கட்டடங்கள் புகழ் வாய்ந்தவை. ஷாஜகானாபாத் என்ற புதுநகரை அவன் டெல்லியில் 1638-48-ல் கட்டுவித்தான். அந்நகரில் பெரியதோர் அரண்மனையையும் அவன் கட்டினான். ஆக்ராவில் மோத்தி மசூதி (முத்து மசூதி), ஜம்மா மசூதி, தாஜ் மகால் முதலிய கட்டடங்களைக் கட்டினான். இந்து சங்கீதக் கலைஞனாகிய ஜகன்னாதன் மகா கவிராய் என்னும் பட்டம் பெற்றுச் சிறப்புற்றான். ஓவியம், கல்வி முதலியவை அரசவையில் வளர்க்கப்பட்டன. ஷாஜகான் தாராளமான மனப்போக்குடன் இந்துக்களை ஆதரித்து, அவர்கள் கலை, மதவுண்மைகள் முதலியவற்றை அறிந்து பாராட்டி வந்தான்.

ஒளரங்கசீபு (ஆ. கா. 1658-1707) வாரிசுரிமைப் போரைத் தொடர்ந்து நடத்தித் தாராவையும் ஷூஜாவையும் முறியடித்து இரண்டாம் முறை முடி சூட்டிக் கொண்டான்.

ஒளரங்கசீபு சிறந்த கல்விமான். இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டவன். இந்துக்களைக் கொடுமையாக நடத்தி அவர்கள் பகையைத் தேடிக்கொண்டான். ராஜபுத்திரர், சீக்கியர், மகாராஷ்டிரர் முதலியோர் மொகலாயப் பேரரசுக்கு எதிரிகளாக அதனை அழிக்க முற்பட்டனர். பலவந்தமாக மதமாற்றும் வழக்கம் கையாளப்பட்டது. குர்ஆனில் கண்ட கொள்கைகளை முஸ்லிம்கள் பின்பற்றுமாறு பார்த்துக்கொள்வதற்கென்று பல உத்தியோகஸ்தர்களைப் பெரிய நகரங்கள் பலவற்றில் அவன் நியமித்தான்.

ஔரங்கசீபு ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரத்தில் சிவாஜி சுய ஆட்சியை ஏற்படுத்திப் புகழோடு விளங்கினான். அவனை முறியடிப்பதற்காக ஒளரங்கசீபு ஷாயிஸ்டகான், ஜயசிங் போன்றவர்களைத் தக்கணத்துக்கு அனுப்பினான். ஷாயிஸ்டகான் பெருத்த அவமானத்திற்குள்ளாகித் திரும்பினான். பின்னர் ஜயசிங் போர்புரிந்து சிவாஜியை வெல்ல முடியாமல் ஒப்பந்தம் செய்துகொண்டு ஆக்ராவிற்குச் செல்லும்படி சிவாஜியைத் தூண்டினான். சிவாஜியும் அவ்வாறே ஆக்ராவுக்குச் சென்றான் (1666). அங்கே ஓர் அரண்மனையில் ஒளரங்கசீபினால் சிறையிலிடப்பட்டான். சிவாஜி தந்திரமாகச் சிறையினின்றும் தப்பி மகாராஷ்டிரம் வந்துசேர்ந்தான். பிறகு சிவாஜி இறக்கும் வரை மொகலாயர்களுக்குப் பணியவில்லை. அதன் பின்னரே சாம்பாஜியைப் பிடித்துக் கொன்று மகாராஷ்டிரத்தை ஔரங்கசீபு வசப்படுத்திக் கொண்டான். அதே சமயத்தில்தான் கோல்கொண்டா, பிஜாப்பூர் ஆகியவையும் அவன் வசமாயின.

இந்துக்களை ஒளரங்கசீபு மிகவும் துன்புறுத்தினான். அரசாங்க உத்தியோகங்களினின்றும் அவர்கள் நீக்கப் பட்டார்கள். பலவிதமான தடைகள் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. இந்துக்கோயில்களை இடித்து விடுமாறு ஆணை பிறந்தது. இதன் பயனாகக் காசி, வட மதுரை, சோமநாதபுரம் ஆகியவற்றிலுள்ள கோயில்கள் அழிக்கப்பட்டன. 1679-ல் ஜசியா வரி அவர்கள் மீது விதிக்கப்பட்டது. இந்துக்கள் பலவந்தமாக மதம் மாற்றப்பட்டனர். இவற்றால் நாடெங்கும் கலகம் ஏற்பட்டு மொகலாயப் பேரரசு கலகலத்துப் போயிற்று. ஒளரங்கசீபின் ஆளுகையின் தொடக்கத்தில் அப்பேரரசு மிகப் பெரியதாயிருந்தது. அதே ஆட்சியின் இறுதியில் பல பகுதிகள் சுயேச்சை பெறப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தன. ராஜபுத்திரர்களும் சீக்கியர்களும் சுயேச்சை பெற முயன்றனர்.

ஒளரங்கசீபு தனது ஆட்சியின் இறுதிக்காலத்தில் தென்னாட்டின்மீது படையெடுத்துப் பிஜாப்பூர், கோல்கொண்டா ஆகியவற்றை வென்றபின் மகாராஷ்டிரத்தின் மீதும் படையெடுத்துச் சிவாஜியின் குமாரன் சாம்பாஜியைத் தோற்கடித்து, அவனைக் கொடுமையான முறையில் சித்திரவதை செய்து கொன்றான். பின்னர் சாம்பாஜியின் தம்பி ராஜாராமும் அவன் மனைவி தாராபாயும் மகாராஷ்டிரத்தின் சுதந்திரப் போரைத் தொடர்ந்து நடத்தி மொகலாயர்களுக்கு இன்னல் விளைவித்து வந்தனர். எழுச்சி பெற்ற மகாராஷ்டிரர்களை ஔரங்கசீபினால் அடக்க இயலவில்லை. பயனற்ற போராட்டத்தினால் அரசாங்கத்தின் கருவூலம் வறண்டது. கடைசியில் ஒளரங்கசீபு தனது எண்பத்தொன்பதாவது வயதில் தன் குறைபாடுகளை நினைந்து வருந்தி அகமது நகரில் இறந்தான் (1707). அவனது உடல் தௌலத்தாபாத் நகரில் புதைக்கப்பெற்றது.

ஒளரங்கசீபின் சந்ததியினர் திறமையும் ஊக்கமும் அற்றவர்கள். ஆகவே, தங்கள் பேரரசை அழியாமல் காப்பாற்ற அவர்களால் இயலவில்லை. மொகலாயப் பேரரசின் பல பாகங்களான பஞ்சாப், ராஜபுதனம், தக்கணம், மகாராஷ்டிரம் போன்றவை இக்காலத்தில் சுயேச்சை பெற்றன. மகாராஷ்டிரத்தில் பேஷ்வாக் கள் அதிகாரம் பெற்று, வட இந்தியாவிலும் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பினர். ஹோல்கர், காயகவார், சிந்தியா போன்ற மகாராஷ்டிரத் தலைவர்கள் இந்தூர், பரோடா, குவாலியர் ஆகிய இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். மொகலாய சக்கரவர்த்திகளும் அவர்கள் ஆதிக்கத்துக்குட்பட்டு விட்டனர். டெல்லி அரசவையிலும் கட்சிகள் தோன்றி, ஒவ்வொரு கட்சியும் சக்கரவர்த்தியைத் தன் தன் கைப்பாவையாக்கிக் கொள்ள முயன்றது. இந்நிலையில் நாதர்ஷா என்ற பாரசீக மன்னன் 1739-ல் இந்தியாவின்மீது படையெடுத்தான். மொகலாயப் படைகள் போரில் தோற்றோடின. பின்னர் சக்கரவர்த்தி முகம்மது ஷாவுக்கும் நாதர்ஷாவுக்கும் சாமாதானம் ஏற்பட்டது. புகழ் பெற்ற மயிலாசனமும் கோகினூர் வைரமும் நாதர்ஷா கையில் சிக்கின. எட்டாண்டுகள் கழித்து நாதர்ஷாவின் உத்தியோகஸ்தனான அகமத்ஷாதுரானி இந்தியாவின் மீது படையெடுத்துப் பஞ்சாப் பகுதியை வென்றான். வட இந்தியாவில் ஆதிக்கத்துக்காக மகாராஷ்டிரர்கட்கும் அகமத்ஷாவுக்கும் போட்டி ஏற்பட்டது. கடைசியாக 1761-ல் நிகழ்ந்த மூன்றாவது பானிப்பட்டுப் போரில் மகாராஷ்டிரர் படுதோல்வியடைந்தும், விரைவில் தங்கள் ஆதிக்கத்தை வட இந்தியாவில் ஏற்படுத்திக்கொண்டனர். மொகலாயச் சக்கரவர்த்தி இரண்டாம் ஷாஆலம் அவர்கள் ஆதரவில் இருந்தான். பிறகு பக்சார் சண்டைக்குப்பின் ஆங்கிலேயர் நட்பைப் பெற்றுக் கோரா, அலகாபாத் ஜில்லாக்களையும் ஆண்டொன்றுக்கு 26 இலட்ச ரூபாயையும் அவர்களிடமிருந்து பெற்றான். கடைசி மொகலாயச் சக்கரவர்த்தி II-ம் பகதூர்ஷா இந்தியக் கிளர்ச்சியின் போது பிரிட்டிஷாரை எதிர்த்தான். தலைவர்கள் எல்லோரும் அவனை இந்தியச்சக்கரவர்த்தியென விளம்பரம் செய்தனர். கடைசியில் அக்கிளர்ச்சி ஆங்கிலேயரால் அடக்கப்பட்டது. பகதூர்ஷாவின் குமாரர்கள் ஆங்கிலேயரால் டெல்லியில் கொல்லப்பட்டனர். அவனும் பர்மாவுக்கு நாடுகடத்தப்பட்டு, ரங்கூனில் வாழ்ந்து 1862-ல் இறந்தான்.

சீக்கிய மதத் தாபகர் குரு நானக் (1469-1538) பஞ்சாபிலிருந்த ஒரு மதச் சீர் திருத்தக்காரர். நல்லொழுக்கம், சாதி பேதமின்மை , கடவுள் ஒருவரே என்னும் கொள்கை ஆகியவற்றை அவர் பரவச் செய்தார். அவர் இஸ்லாமியர்களையும் இந்துக்களையும் ஒன்றுபடுத்த முயன்றார். அவருக்குப்பின் வந்த சீக்கியக் குருமார்கள் அந்த மதப் பிரசாரத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். அது விரைவாகப் பரவியது. ராமதாஸ் (1574-81) என்னும் நான்காவது குரு அக்பரிடமிருந்து இக்காலத்தில் அமிர்தசரஸ் என வழங்கும் இடத்தைப்பெற்று ஒரு பெரிய ஏரியை வெட்டி, அதன் நடுவே புகழ்பெற்ற பொற்கோயிலைக் கட்டினார். அந்த ஏரிக்கு அமிர்தசரஸ் என்ற பெயர் ஏற்பட்டது. அமிர்தசரஸ் சீக்கியர்கள் ஒன்று சேரவும் பிரார்த்தனை செய்யவும் தக்க புண்ணிய நகரமாயிற்று. அவருக்குப் பின்வந்த குரு அர்ஜுன் சிங் (1581-1606) சீக்கியர்களை ஒன்றுபட்ட ஒரு சமூகமாக்கினார். குரு நானக்கின் உபதேசங்களையும் மற்ற இந்து, முஸ்லிம் பெரியார்களின் பாடல்களையும் தொகுத்து, ஆதிக்கிரந்தம் என்னும் சீக்கிய வேதபுத்தகத்தை உருவாக்கினார். அவர் ஜகாங்கீருடைய விரோதத்தைப் பெற்றுக் கொலைத்தண்டனை அடைந்தார். இச்செயல் சீக்கியர் மனத்தில் ஆறாப்புண்ணை உண்டாக்கியது. பின் வந்த குருமார்கள் தலைமையில் சீக்கியர் மொகலாயப் பேரரசுக்கெதிராகக் கலகம் செய்தனர். டெக் பகதூர் என்ற ஒன்பதாவது குரு இஸ்லாம் மதத்தைத் தழுவ மறுத்து, ஒளரங்கசீபினால் மரண தண்டனை விதிக்கப் பட்டார். இதுபோன்ற செயல்கள் சீக்கியருக்கும் இஸ்லாமியருக்கும் இடையே உள்ள பிளவை அதிகப்படுத்தின. பத்தாவது குருவான குரு கோவிந்தசிங் சீக்கியர் பலத்தை உருவாக்கினார். அவர் சீக்கியர் அனைவரையும் கால்சா என்ற அமைப்பில் அடக்கினார். சீக்கியன் என்றால் சிஷ்யன் என்று பொருள். போர்புரிவதைப் பெருமை மிக்கதாகச் சீக்கியர் கருதினர். இந்தக் கால்சா அமைப்புச் சர்பத் கால்சா என்ற ஒரு பொதுப் பேரவையினால் ஆளப்பட்டது.

இந்த அமைப்புச் சீக்கியர்கள் பலத்தை அதிகரித்தது. மொகலாயப் பேரரசின் பலவீனமும் இதற்குத் துணை புரிந்தது. கட்டுப்பாடும் ஒழுங்கும் நிறைந்திருந்த சீக்கியத் தலைவர்கள் விரைவில் சுயநலமும் பகையும் கொண்டு பலத்தை இழந்தனர். மேற்கில் அட்டாக் முதல் கிழக்கில் ஷஹரன்பூர் வரையிலும், வடக்கே காச்மீரம் முதல் தெற்கே மூல்தான் வரையிலும் சீக்கியர் ஆதிக்கம் பரவியது.

பிற்காலத்தில் சீக்கிய வீரனான ரணஜித்சிங் சீனாப், ராவி ஆறுகட்கிடையே உள்ள குஜ்ரன்வாலாவுக்கு அதிபதியானான். விரைவில் பஞ்சாப் முழுமையும் அவன் வசமாகியது. ரண ஜித்சிங் லாகூரை 1799-ல் கைப்பற்றி, மகாராஜா என்னும் பட்டம் புனைந்து கொண்டான். சட்லெஜ் நதியைக் கடந்து நாபா, பாட்டியாலா பகுதிகளைக் கைப்பற்ற முயன்றபோது, வட இந்தியாவில் ஆதிக்கம் பெற்று விளங்கிய ஆங்கிலேயக் கம்பெனியின் பிரதிநிதியான மின்டோ பிரபு (ப. கா. 1807-13) ரணஜித்சிங்கோடு அமிர்தசரஸ் உடன்படிக்கையைச் செய்துகொண்டான் (1809). அதன்படி ரணஜித்சிங்கின் ஆதிக்கம் கிழக்கே பரவுவது தடுக்கப்பட்டது. வடக்கு மேற்குப் பகுதிகளில் தன் ஆதிக்கத்தை ரணஜித்சிங் பரப்பிப் பெஷாவர் மூல்தான் வரையுள்ள நாட்டின் அதிபதியானான். இறக்கும்வரை ரணஜித்சிங் ஆங்கிலேயரோடு நட்புக்கொண்டிருந்தான். 1839-ல் அவன் இறந்தவுடன் சீக்கியர் புதிய நாடு பிடிக்கும் நோக்கத் தோடு பிரிட்டிஷ் பகுதியின்மீது படையெடுத்தனர். முதலாவது சீக்கிய யுத்தம் மூண்ட து (1845-46). மூட்கி, அலிவால், பிரோஸ்ஷா, சொப்ரவான் என்னும் இடங்களில் சீக்கியர் தோல்வியுற்றனர். 1847 மார்ச் சில் ஏற்பட்ட லாகூர் உடன்படிக்கையின்படி ஆங்கி லேயக் கம்பெனி சட்லெஜ், பியாஸ் ஆகிய இரு. ஆறுகட்கு மிடையேயுள்ள ஜலந்தர் பிரதேசத்தைப் பெற்றது. சீக்கிய அரசாங்கம் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க ஒப்புக்கொண்டது. சேனை குறைக்கப்பட் டது. வேறு பல கட்டுப்பாடுகளும் சீக்கிய அரசாங்கத் தின்மீது சுமத்தப்பட்டன. இச்சமயத்தில் குலாப் சிங் ஒரு கோடி ரூபாய் கொடுத்துக் காச்மீரை வாங்கிக் கொண்டான். சீக்கியர் மீண்டும் கலகம் செய்யவே, இரண்டாவது சீக்கிய யுத்தம் (1848-49) ஏற்பட்டது. கவர்னர் ஜெனரல் டால்ஹௌசி பிரபு சிறந்த தளபதி களைக்கொண்டு சிலியன்வாலா, குஜராத் என்னும் இடங்களில் நடந்த போர்களில் சீக்கியரைத் தோற் கடித்தான். பஞ்சாப் ஆங்கிலேயர் வசமாயிற்று. சீக்கியர் வசமிருந்த போர்க்கருவிகள் பறிக்கப்பட்டன. பஞ்சாப் மூன்று கமிஷனர் ஆளுகையின்கீழ் வந்தது. விரைவில் சீக்கியர் தங்கள் பழைய பகைமையை மறந்து ஆங்கில ஆட்சியின் உற்ற நண்பர்களாயினர். இந்தியக் கிளர்ச்சிக் காலத்தில் பஞ்சாப் அமைதியோடிருந்தது.

வங்காளத்தில் 1690-ல் ஆங்கிலேயர் கல்கத்தாவை விலைக்கு வாங்கினார்கள். பின்னர் 1696-ல் அங்கே வில்லியம் கோட்டை கட்டப்பெற்றது. அது ஆங்கிலேயரின் முக்கிய வியாபாரத் தலமாயிற்று. இதைத் தவிர, காசிம் பசார், டாக்கா ஆகியவற்றிலும் பண்டகசாலைகள் இருந்தன. டச்சுக்காரர் சின்சுராவிலும், பிரெஞ்சுக்காரர் சந்திரநாகூரிலும் தங்கள் பண்டகசாலைகளை ஏற்படுத்தியிருந்தார்கள்.

சிராஜ் உத்-தௌலா என்ற வங்காள நவாபு ஆங்கிலேயர்மீது பகைமைகொண்டு கல்கத்தாவைக் கைப்பற்றினான் (1756). இது சம்பந்தமாக வழங்கும் இருட்டறைக் கொலை வரலாறு ஆதாரமற்றதாகும். பின்னர் நவாப் ஆங்கிலேயரோடு சமாதானம் செய்துகொண்டு நஷ்ட ஈடு கொடுக்கவும் சம்மதித்தான். ஆனால் கிளைவ் என்னும் தளபதி வங்காளத்தில் சிராஜ் உத் தௌலாவை வீழ்த்தி, மீர் ஜாபர் என்பானை அவன் பதவியில் அமர்த்தச் சதி செய்தான். இச்சதியில் அமின்சந்த் என்பவனும் சேர்ந்திருந்தான். தக்க சமயத்தில் இச்சதியை வெளிப்படுத்துவதாக அவன் பயமுறுத்தவே, அவனுக்கு நவாபின் பொக்கிஷத்தில் உள்ள திரவியத்தில் 5 சத விகிதம் தருவதாக ஒப்புக்கொண்டு, ஒரு சிவப்புத்தாளில் கிளைவ் பத்திரம் எழுதிக்கொடுத்தான். வாட்ஸன் இச் சூழ்ச்சிக்கு இணங்க மறுக்கவே, கிளைவ் பொய்க் கையெழுத்திட்டு அமின்சந்தை ஏமாற்றினான். உண்மையான உடன்படிக்கைப் பத்திரத்தில் இந்த விதி சேர்க்கப்படவில்லை. அமின்சந்த் தான் ஏமாற்றப்பட்டதைப் பின்னரே உணர்ந்தான். இக்குற்றமும் பிற்காலத்தில் கிளைவ்மீது சுமத்தப்பட்டது. பின்னர் 23-6-1757-ல் நிகழ்ந்த பிளாசிப் போரில் சிராஜ் உத்-தௌலா தோற்றுப் பிறகு உயிரிழந்தான். மீர்ஜாபர் வங்காள நவாபு ஆக்கப்பட்டான். கம்பெனிக்குப் பல புதிய சலுகைகள் வழங்கப்பட்டன. 24 பர்கனாக்கள் என்ற பகுதி கிளைவுக்கு ஜாகீராக அளிக்கப்பட்டது. உயர்ந்த உத்தி யோகஸ்தர்கள் திரண்ட செல்வத்தைப் புது நவாபினிடமிருந்து பெற்றார்கள். மீர்ஜாபர் வாக்களித்த படி வெகுமதிகள் வழங்காததாலும் டச்சுக்காரரோடு சேர்ந்து சதி செய்ததாலும் பதவியிழக்க நேரிட்டது. முதல் முறையாகக் கவர்னர் பதவி வகித்து வழிகாட்டிய கிளைவ் 1760-ல் இங்கிலாந்து திரும்பியவுடன் மீர்ஜாபருக்குப் பதிலாக அவனது உறவினனான மீர்காசிம் நவாபு ஆக்கப்பட்டான். மீர்காசிம் நன்முறையில் நிருவாகத்தை நடத்த விரும்பினான். ஆங்கிலேயர் தமக்களிக்கப்பட்ட உரிமைகளைத் தவறான வழிகளில் உப யோகித்தனர். பர்துவான், மிதுனபுரி, சிட்டகாங் முதலிய ஜில்லாக்களை மீர் காசிம் ஆங்கிலக் கம்பெனிக் களித்தான். விரைவில் மீர்காசிமுக்கும் ஆங்கிலக் கம் பெனிக்கும் சச்சரவேற்பட்டுப் போர்மூண்டது. மீர் காசிம் கெரியா, உட்வானுல்லா (1763) ஆகிய இடங்களில் தோற்று, வங்காளத்தை விட்டோடி, அயோத்தி (Oudh) இராச்சியத்தில் அடைக்கலம் புகுந் தான். அயோத்தி நவாபு ஷூஜா உத்-தௌலா, மொகலாயச் சக்கரவர்த்தி II-ம் ஷா ஆலம், மீர் காசிம் மூவரும் சேர்ந்து ஆங்கிலேயருக் கெதிராகப் போர் துவக்கினர். 1764-ல் நிகழ்ந்த பக்சார் சண்டையில் மூவரும் படுதோல்வியுற்றனர். இச்சமயம் இரண் டாம் தடவையாகக் கிளைவ் கவர்னராக நியமிக்கப் பெற்றுக் கல்கத்தா வந்துசேர்ந்தான். அவன் அயோத்தி நவாப்புடனும் மொகலாயச் சக்கவர்த்தியோடும் 1765-ல் அலகாபாத் உடன்படிக்கைகள் செய்துகொண்டான். சக்கரவர்த்தி வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் வரி வசூலிக்கும் உரிமையாகிய திவானியைக் கம்பெனிக்கு அளித்தார். அதற்குப் பதிலாகக் கோரா, அலகாபாத் ஜில்லாக்களும் ஆண்டொன்றுக்கு 26 இலட்சம் ரூபாயும் கம்பெனி சக்கரவர்த்திக்கு அளித்தது. அயோத்தி நவாபு 50 இலட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்தபின் தனது நாட்டைத் திரும்பவும் பெற்றான். ஆங்கிலேயர் அதற்குமுன் தென்னிந்தியாவில் அடைந்திருந்த இலாபங்களையும் செய்திருந்த செயல்களையும் சக்கரவர்த்தி உறுதிசெய்தார். இந்த உடன்படிக்ககளால் ஆங்கிலேயரின் பலம் மேலும் வளர்ந்தது. கிளைவ் வெற்றி பெற்ற நிலையில் மிகவும் நிதானத்தோடு நடந்து கொண்டான். ஆட்சி முறையில் பல சீர்திருத்தங்களையும் செய்தான். அவற்றில் இரட்டையாட்சி முறை முக்கியமானதாகும். 1767-ல் அவன் இங்கிலாந்துககுத் திரும்பினான். இந்தியாவில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைத் தாபித்தவன் என அவனை வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வாரன் ஹேஸ்டிங்ஸ் (ப. கா. 1772-1785) முதலில் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (1773) படி கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தான். தனது கவுன்சில் அங்கத்தினர்களால் மிகவும் துன்புற்றான். முதலாவது மகாராஷ்டிரப் போரில் மகத்ஜி சிந்தியா ஆங்கிலேயர் நண்பனாயினான். வாரன் ஹேஸ்டிங்ஸ் தனது திறமையாலும் ஊக்கத்தாலும் அப்போரில் இங்கிலீஷ் கம்பெனியின் செல்வாக்கை நிலை நிறுத்தினான். நிருவாகத்துறையில் பல சீர்திருத்தங்கள் செய்து, இரட்டையாட்சி முறையை ஒழித்து, வங்காள நவாபுக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து ஒதுக்கிவிட்டு நிருவாகததைத் தானே ஏற்றுக்கொண்டான். காசி மன்னனையும் அயோத்தி நவாபையும் அடிக்கடி பெருநதொகைகள் தருமாறு கட்டாயப்படுத்தினான். அயோத்தி இராணிகளின் செல்வத்தை அவன் பறித்துக் கொண்டதும் காசி அரசனைக் கொடுமையாக நடத்தியதும் அவன்மீது தொடரப்பட்ட வழக்கில் முக்கியமான குற்றங்கள்.

கார்ன்வாலிஸ் பிரபு (ப. கா. 1786-1793) செய்து முடித்த காரியம் சாசுவத நிலவரி ஏற்பாடாகும். இதன்படி வங்காளத்தில் பல பகுதிகளிலும் வரி வசூலிப்பதற்குப் பலர் நியமிக்கப்பட்டு, அரசாங்கத்துக்கு உரிய வரியை வசூலித்துத் தங்களுக்கென ஒரு பகுதியை வைத்துக்கொண்டு, மீதியை அரசாங்கத்துக்கு அனுப்பும்படி அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் நிலையான வருமானம் அரசாங்கத்துக்குக் கிடைத்து வந்தது. ஜமீன்தார்கள் என்னும் ஒரு புதிய வகுப்பினர் ஏற்பட்டார்கள்.

வெல்லெஸ்லி பிரபு (ப. கா. 1798-1805) பதவியேற்ற காலத்தில் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசின் நிலை நெருக்கடியாயிருந்தது. உள்நாட்டு மன்னர் ஆங்கிலேயர் ஆதிக்கத்தை ஒழிக்கத் திட்டம் போட்டுக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சுக்காரர் பலர் அவர்கள் ஆதரவைப் பெற்றுச் சேனைகளுக்குத் தக்க பயிற்சியளித்துக் கொண்டிருந்தார்கள். வெல்லெஸ்லி நிலையைக் கூர்ந்தறிந்து, தன்னுடைய துணிவான திட்டங்கள் மூலம் அந்நிலையை மாற்றி, ஆங்கிலேயக் கம்பெனியின் அந்தஸ்தை நாட்டில் உயர்த்தினான். படைத்துணை உடன்படிக்கை (Subsidiary alliances) மூலம் வட இந்தியாவிலும் தென்னிந்தியாவிலும் அவன் சுதேச மன்னர் செலவிலேயே ஆங்கிலேயப் படைகளை அவர்கள் நாடுகளில் வைத்து, அவர்கள் வெளிநாட்டு விவகாரம் முதலியவற்றில் கம்பெனிக்கு அடங்குமாறு செய்துவிட்டான். ஆண்டுதோறும் பணம் கொடுப்பதற்குப் பதிலாகச் சில குறிப்பிட்ட நாடுகளை ஒப்படைக்கும்படி செய்து, அதன்மூலம் இந்தியாவில் ஆங்கில அரசை விரிவாக்கினான். அயோத்தி நவாபு முதலில் தயங்கியபோதிலும், வெல்லெஸ்லி கட்டாயப்படுத்திப் படைத்துணை உடன்படிக்கை ஒன்றை அவனோடு செய்துகொண்டான். அயோத்தி நவாபின் வெளி நாட்டு விவகாரங்கள் கம்பெனியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டன. செழிப்பான ஜில்லாக்கள் அடங்கிய யமுனைக்கும் கங்கைக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும் ரோகில்கண்டையும் அவன் கம்பெனிக்குக் கொடுத்துவிட்டான். இதனால் அயோத்தியைச் சுற்றிலும் கம்பெனியின் அரசு ஏற்பட்டது. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமைக் கொள்கையை வெல்லெஸ்லியும் மற்றும் பல கவர்னர் ஜெனரல்களும் பின்பற்றியதால், சுதேச மன்னர்களின் ஆட்சி கெட்டு விட்டது. பிற்காலத்தில் பல நாடுகளை டால்ஹௌசி வசப்படுத்தியபோது பொதுமக்கள் அதை வரவேற்றார்கள். படைத்துணை உடன்படிக்கை செய்து கொள்ள மறுத்த ஹோல்கர், சிந்தியா, போன்சலே ஆகிய மூவரும் கம்பெனியோடு போராடத் துவங்கினார்கள். முதலில் போன்சலே, சிந்தியா இருவரும் இரண்டாவது மராட்டியப் போரில் (1803-1805) தோல்வியுற்றுப் படைத் துணை உடன்படிக்கை செய்து கொண்டனர். சூர்ஜி அர்ஜுங்கயான் என்னுமிடத்தில் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி குவாலியரில் ஆங்கிலேயப் படையொன்றை ஏற்றுக்கொண்டு, அதன் செலவுக்காக உத்தரப் பிரதேசத்தில் மேற்கு ஜில்லாக்களையும், டெல்லியைச் சூழ்ந்த பகுதிகளையும், தென்னிந்தியாவில் வேறு சில பகுதிகளையும் சிந்தியா கொடுத்துவிட்டான். இதனால் கம்பெனியின் அரசு மேலும் இந்தியாவில் பரவியது. சிந்தியா கம்பெனியின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தான். ஹோல்கார் கம்பெனியோடு நிகழ்த்திய போரில் சில வெற்றிகள் பெற்றதால் வெல்லெஸ்லியின் திட்டங்கள் தடைப்பட்டன. வெல்லெஸ்லி மற்றொரு முறையிலும் கம்பெனியின் அதிகாரத்தை வலுப்படுத்தினான். மேஜராகாத சுதேச மன்னர்களின் நாடுகளைக் கைப்பற்றிக்கொண்டு, அவர்களுக்கு உபகாரச் சம்பளம் அளித்து, வட இந்தியாவிலும் தென்னாட்டிலும் கம்பெனியின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தினான். அயோத்திக்கருகிலுள்ள பருக்கபாத் என்னும் சிறு நாடும் இவ்வாறு கம்பெனியின் ஆட்சியின் கீழ்க் கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட முறைகளால் வெல்லெஸ்லி பிரெஞ்சுக்காரர்களால் நேரவிருந்த அபாயத்தைத் தவிர்த்துக் கம்பெனியின் பலத்தை மேலும் அதிகரிக்கச் செய்தான்.

ஹேஸ்டிங்ஸ் பிரபுவும் (ப. கா. 1813-1823) வெல்லெஸ்லியின் முறைகளைப் பின்பற்றியே இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட நாடுகளின் பரப்பை அதிகப்படுத்தினான். அவன் கையாண்ட முறைக்குக் கீழ்ப்பட்ட ஒத்துழைப்பு முறை (Subordinate co-operation)என்று பெயர். இம் முறை வெல்லெஸ்லியின் படைத்துணை உடன்படிக்கை முறையை விடச் சற்றுத் தீவிரமானதாகும். இம் முறையினால் பல இந்திய மன்னர் கம்பெனிக்குக் கீழ்ப்படிந்து தத்தம் தலைநகர்களில் ஆங்கிலப் பிரதிநிதிகளை ஏற்றுக்கொள்ளவும், தமக்குள் உள்ள சச்சரவுகளைக் கம்பெனியின் தீர்ப்புக்குட்பட்டுத் தீர்த்துக் கொள்ளவும் ஒப்புக் கொண்டனர்.

பிண்டாரிகள் என்ற கொள்ளைக் கூட்டத்தினரை வட இந்தியாவிலும் தக்கணத்திலும் மிகக் குறைந்த காலத்திற்குள் (1817-1818) ஹேஸ்டிங்ஸ் ஆங்கிலேயப் படைகளைக் கொண்டு அழித்துவிட்டான். பிண்டாரிகளின் தலைவர் சிலர் சரணடைந்தனர். சிலர் கொல்லப்பட்டனர்.

நேபாளிகள் பிரிட்டிஷ் இந்திய இராச்சியத்தை அடிக்கடி தாக்கியதால் அவர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் போர் மூண்டது (1814-16). தளபதி ஆக்டர்லோனி நேபாளத்துக்குள் நுழைந்து பல வெற்றிகள் பெற்றான். அதனால் நேபாள அரசாங்கம் உடன்படிக்கை செய்து கொண்டது. அதன்படி கைனீ தால், அல்மோரா, கர்வால் பகுதிகளும் சிம்லாப் பகுதியும் ஆங்கிலேயருக்குக் கிடைத்தன. நேபாளமும் ஆங்கிலேய அரசாங்கமும் நட்புரிமை பூண்டன. நேபாளத் தலைநகரில் ஆங்கிலப் பிரதிநிதியொருவன் நியமிக்கப்பட்டான்.

ராஜபுதனத்து மன்னர்கள் பல வேற்றுமைகள் காரணமாக வெளியார் படையெடுப்பினின்றும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் திறனற்றிருந்தார்கள். ஹேஸ்டிங்ஸ் பிரபு அவர்களோடு உடன்படிக்கைகள் செய்து கொண்டு ராஜபுதனத்தில் கம்பெனியின் ஆதிக்கத்தை ஏற்படுத்தினான்.

ஆட்சிமுறையில் பல சீர்திருத்தங்களையும் ஹேஸ்டிங்ஸ் செய்து முடித்தான். எல்பின்ஸ்டன், மன்ரோ, மெட்காப்பைப் போன்ற கவர்னர் ஜெனரல்கள் இத்துறையில் பல திருத்தங்கள் புரிந்தார்கள்.

ஆம் ஹரீஸ்ட் பிரபு (ப. கா. 1823-28) காலத்தில் முதல் பர்மியப் போர் (1824-26) நிகழ்ந்தது. பர்மியர் அஸ்ஸாமைக் கைப்பற்றி, அங்கே கொடுங்கோலாட்சி நடத்தினர். அதோடு நிற்காமல் வங்காளத்தின் சில பகுதிகளைக் தமக்குத் தரவேண்டுமென்று கல்கத்தா ஆட்சியினரைக் கேட்டனர். அக்கோரிக்கை மறுக்கப்படவே வங்காளத்தின் மேலும் படையெடுத்தனர். தங்கள் வலிமையை அதிகமாகவும், இந்திய ஆங்கிலேயப் படைகளின் வலிமையைக் குறைவாகவும் மதிப்பிட்ட அவர்கள் விரைவில் அதன் பயனை அனுபவிக்க நேர்ந்தது. ரங்கூன், மணிப்பூர் ஆகியவை ஆங்கிலத் தளபதி வசமாயின. பர்மியத் தளபதி மகாபாண்டுலா போரில் தோற்று இறந்தான். பின்னர் 1826-ல் யாண்டபோ (Yandabo) என்னுமிடத்தில் ஏற்பட்ட சமாதானத்தின்படி அஸ்ஸாம், அரக்கான், டென்னாசரிம் என்னும் பகுதிகளைப் பர்மியர் ஆங்கிலேயருக்கு அளித்தனர். ஆங்கில வர்த்தகர்களுக்குப் பர்மாவில் வர்த்தகம் செய்யவும் வசதி கிடைத்தது.

பென்டிங்க் பிரபு (ப. கா. 1828-35) காலத்தில் பல முக்கியமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. நன்முறையில் ஆட்சி நடத்த வேண்டியதன் அவசியத்தை நன்குணர்ந்திருந்த அவன் அரசியல் துறையிலும் சமுதாயத்துறையிலும் பல சீர்திருத்தங்கள் செய்தான். அதிகாரிகளின் அதிகச் சம்பளத்தை அவன் குறைத்தான். சில அவசியமற்ற பதவிகள் நீக்கப்பட்டன. வரி வசூலிப்பதிலும் நீதித்துறையிலும் அவன் குறிப்பிடத்தக்க திருத்தங்கள் செய்தான். வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் புதிய கோர்ட்டுக்களை ஏற்படுத்தினான். சுலபமாகவும் விரைவாகவும் எல்லோருக்கும் நீதி கிடைக்கும்படி செய்தான். இந்தியர்களை உயர்ந்த பதவிகளில் அமர்த்தி, அவர்களுடைய சம்பளத்தையும் அந்தஸ்தையும் உயர்த்தினான். இந்தியர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளாகவும் நியமிக்கப்பட்டார்கள்.

இந்துக்களிடையே வழங்கிவந்த சதி என்னும் கொடிய வழக்கத்தை 1828ஆம் வருடத்திய பதினேழாவது ஒழுங்குமுறையின் மூலம் சட்டவிரோதமானதென்றும், குற்றவாளிகள் கடுந்தண்டனைக்குள்ளாவரென்றும் திட்டம் செய்து அவ்வழக்கத்தை ஒழித்தான். இதைப்போலவே இந்தியா முழுமையும் பரவியிருந்த தக்கர்கள் என்னும் கொலைக்குழுவினரையும் அழித்தொழித்தான். இத்துறையில் சிறந்த தொண்டு புரிந்த சிலீமன் (Sleeman) என்பார் தக்சிலீமன் (Thuggee Sleeman) என வழங்கப்பட்டார்.

பென்டிங்க் பிரபு இந்தியர்களைப் பதவிகளில் அமர்த்துவதற்காக அவர்களிடையே ஆங்கிலத்தைப் பரப்ப வேண்டியிருந்தது. சட்டமந்திரியாயிருந்த மெக்காலே பிரபு ஆங்கிலத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தான். ஆங்கிலமும் மேனாட்டுக் கலைகளும் கற்பிக்கும் கல்லூரிகளுக்கே அரசாங்கம் உதவிப்பணம் அளிப்பதென்று முடிவாயிற்று.

மெட்காப் (ப. கா. 1835-36), ஆக்லந்து (ப. கா. 1836-42), எல்லன்பரோ (ப.கா. 1842-44) என்பவர்கள் பென்டிங்குக்குப் பின் கவர்னர் ஜெனரல்களாக இருந்தனர். ஆக்லந்தின் பதவிக் காலத்தில் முதல் ஆப்கானியச் சண்டை (1838-42-ல்) நடந்தது. பின்னர் சிந்து ஆங்கிலேயர் வசமாயிற்று(1843). அங்கே ஆண்ட அமீர்கள் தோல்வியுற்று நாடிழந்தனர். இக்காலத்தில் சீக்கியர்கள் ரணசித்சிங்கின் தலைமையில் பஞ்சாபை வென்று தங்கள் இராச்சியத்தை நிறுவிக் கொண்டனர்.

இதன் பிறகு முக்கியமான கவர்னர் ஜெனரலாயிருந்த டால்ஹௌசி பிரபு (ப. கா. 1848-56) சீர்கேடான ஆட்சிமுறை நிலவும் நாடுகளைக் கைப்பற்றிப் பொதுமக்கள் சிறந்த ஆட்சியின் பயன்களைப் பெறுமாறு செய்வது தன் கடமையெனக் கருதினான். அயோத்தி நவாபின் ஆட்சி மிகவும் சீர்கெட்டிருந்தால் 1856-ல் அதைக் கைப்பற்றிக் கம்பெனி ஆளுகையின் கீழ்க் கொண்டுவந்தான். சந்ததியில்லாத அரசர்கள் சுவீகாரம் செய்து கொள்ளுவதை அவன் அங்கீகரிக்கவில்லை. அந்த மன்னர்கள் கம்பெனிக்குக் கீழ்ப்பட்டவர்களாகையால் அவர்கள் நாடுகள் கம்பெனியைச் சேர வேண்டும் என்று தீர்மானித்தான். ஜயப்பூர், ஜான்சி, நாகபுரி இவற்றின் மன்னர்கள் எடுத்துக் கொண்ட சுவீகாரத்தை அங்கீகரிக்காமல் அவர்கள் ஆண்ட நாடுகளைக் கம்பெனி நாடுகளோடு சேர்த்துவிட்டான். இது மிகுந்த மனக்கொதிப்பை உண்டாக்கிற்று. ஜான்சி ராணி லட்சுமிபாயும் அவ்விதமே மனக்கொதிப்புற்றுப் பின்னர் நிகழ்ந்த இந்தியக் கிளர்ச்சியில் சேர்ந்து போரிட்டாள். நாடிழந்த மன்னர்களின் சந்ததியினருக்குக் கொடுத்துவந்த உபகாரச் சம்பளத்தை டால்ஹௌசி நிறுத்திவிட்டுச் சிலருடைய பட்டங்களையும் பறிமுதல் செய்தான். II-ம் பாஜிராவுக்குக் கொடுக்கப்பட்டு வந்த உபகாரச் சம்பளம் அவனுடைய சுவீகார புத்திரன் நானா சாகிபுக்கு மறுக்கப்பட்டது.

டால்ஹௌசி, இருப்புப் பாதைகளைப் போட்டு ரெயில் பிரயாணத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தான். தந்தி முறை, குறைந்த செலவுள்ள தபால் முறை முதலியவற்றையும் ஏற்படுத்தினான்.

கானிங் பிரபு (ப. கா. 1856-58) காலத்தில் இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் செல்ல உடன்பட்டவர்களே சேனையில் சேர்க்கப்பட்டனர். இந்து விதவைகளின் மறுமணம் அங்கீகரிக்கப்பட்டு, அவர்கட்கும் அவர்கள் சந்ததியினர்க்கும் சொத்துரிமை போன்றவை வழங்கப்பட்டன. மேற்கூறியவை வைதிக மனப்பான்மை கொண்டவர்களிடையே வெறுப்பையும் சினத்தையும் உண்டாக்கின.

1857-58-ல் ஏற்பட்ட இந்தியக் கிளர்ச்சியின் காரணங்கள் டால்ஹௌசி கையாண்ட முறைகளும் செய்து முடித்த சீர்திருத்தங்களுமேயாம். நாடிழந்த மன்னர்களும், உபகாரச் சம்பளம்போன்ற தம் உரிமைகளை இழந்த மன்னர்களும், மனக்கொதிப்படைந்த வீரர்களும், மதப்பற்றுடைய மக்களும் ஆங்கில ஆட்சியை நீக்கிச் சுதந்திரமடைய விரும்பினர். நானா சாகிப், ராணி லட்சுமிபாய், தாந்தியாதோபி ஆகியவர்கள் தலைமை வகித்துப் போரை நடத்தினர். சிறிது காலம் கழித்து, நீல், ஹாவ்லக், சர்காலின் காம்பெல், ரோஸ் ஆகிய ஆங்கிலத் தளபதிகள் லட்சுமணபுரி, ஜான்சி போன்ற இடங்களைக் கைப்பற்றிக் கிளர்ச்சித் தலைவர்களைத் தோற்கடித்தனர். 1858ஆம் ஆண்டு ஜூலையில் கிளர்ச்சி அடக்கப்பட்டுவிட்டது. கானிங் கிளர்ச்சி செய்தவர்களைக் கொடுமையாக நடத்த விரும்பவில்லை. அதனால் அவன் காருண்ய கானிங் (Clemency Canning) என வழங்கப்பட்டான்.

இதற்குப் பின்னால் கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து, ஆங்கில அரசாங்கமே இந்திய ஆட்சியை ஏற்றுக்கொண்டது. 1858 ஆகஸ்டில் இந்திய அரசியல் சட்டம் லண்டன் பார்லிமென்டில் நிறைவேறியது. நவம்பரில் விக்டோரியா அரசி ஒரு பேரறிக்கையை வெளியிட்டு, இந்தியர்களுக்குப் பல உரிமைகள் அளிப்பதாக உறுதியளித்தார். கவர்னர் ஜெனரல் இதுமுதற் கொண்டு இந்தியாவில் ராஜப்பிரதிநிதி பதவியையும் வகித்தான். கானிங் பிரபுதான் முதல் ராஜப் பிரதி நிதியானான். எஸ். தி.

1858 - 1950 : அரசியல் மாற்றங்கள் : 1857-ல் தோன்றிய இந்தியக் கிளர்ச்சியை ஒடுக்கிய பின் ஆங்கிலேயர்கள் இந்திய அரசாங்கத்தில் பல மாறுதல்களைச் செய்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை அகற்றி, பிரிட்டிஷ் அரசாங்கமே இந்திய அரசியலை மேற்கொண்டது. பிரிட்டிஷ் மந்திரிசபை அங்கத்தினராகிய இந்தியா மந்திரியிடம் (Secretary of State) இந்நாட்டு அரசாங்கப் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக 15 அங்கத்தினர்களடங்கிய சபை ஒன்றும் அமைக்கப்பட்டது.

புதிய அரசியல் தோன்றியவுடன் விக்டோரியா மகா ராணியாரின் பேரறிக்கை 1858 நவம்பர் முதல் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்திய மக்களுடனும், உள் நாட்டு மன்னர்களுடனும் ஏற்கெனவே கம்பெனியார் செய்திருந்த ஒப்பந்தங்களை ஆங்கில அரசாங்கம் ஆதரிப்பதாகவும், இந்திய மக்களை அரசாங்க உத்தியோகங்களில் அமர்த்தும் விஷயத்தில் சாதி, மத வேற்றுமையின்றி நடத்துவதாகவும் இவ்வறிக்கை உறுதி கூறியது.

1858-க்குப்பின் படிப்படியாக இந்திய மக்களைச் சட்டசபையிலும் அரசியலிலும் சேர்த்துக்கொள்ள முற்பட்டனர். 1861-ல் இயற்றப்பட்ட இந்தியக் கவுன்சில் சட்டப்படி கவர்னர் ஜெனரலின் நிருவாக சபைக்கு ஐந்தாவது அங்கத்தினர் சேர்க்கப்பட்டதோடு, சட்டம் இயற்றும் காலத்தில் அச்சபைக்கு 12க்கு மேற்படாமல் வெளியிலிருந்து அதிகப்படியான அங்கத்தினர்களைச் சேர்த்துக்கொள்ளவும் உரிமை அளிக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட புது அங்கத்தினர்களில் பாதி அரசாங்க உத்தியோகமற்றவர்களாக இருத்தல் வேண்டும். மாகாணச் சட்டசபைகளும் இம்முறையில் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன. முதலாவதாகச் சட்டமியற்றும் வகையில் மாகாணச் சபைகளுக்கும் பொதுச்சபைக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்படவில்லை.

இரண்டாவதாக, அரசாங்கத்தைக் கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ சட்ட சபைகளுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. மேலும், அங்கத்தினர்கள் பொது மக்களின் பிரதிநிதிகளெனக் கருதத்தக்கவர்களாயில்லை. உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்கள் பலரும் ஜமீன்தார்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள் ஆகியவர்களைப் போன்றவர்களே.

இதனிடையே மேனாட்டுக் கொள்கைகள் இந்தியாவில் பரவிவந்ததன் பயனாக இந்நாட்டில் சுதந்திர இயக்கம் தோன்றியது. 1885-ல் அமைக்கப்பட்ட இந்தியத் தேசியக் காங்கிரசுச் சபை விரைவில் மக்கள் உரிமைகளை வற்புறுத்த முனைந்தது. இவர்கள் விருப்பத்தை ஒருவாறு நிறைவேற்றக் கருதியே அரசாங்கம் 1892-ல் மற்றும் ஒரு சட்டத்தை அமலுக்குக்கொண்டு வந்தது. இதன்படி கவர்னர் ஜெனரலின் சபையில் அதிகப்படி அங்கத்தினர்களாக 16 உறுப்பினர் வரையிலும், மாகாணச் சபைகளில் 20 பேர் வரையிலும் சேர்க்கப்படலாம். இச்சபைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், பொது விஷயங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்கவும் உரிமை இருந்தது. ஆயினும், அங்கத்தினர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்லர். பல்கலைக்கழகம், நகராண்மைக் கழகம் முதலியவைகள் தாம் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பின.

1892-ல் வகுத்த சட்டம் அனைவருக்கும் அதிருப்தியை அளித்தது. பாலகங்காதர திலகர் போன்ற தேசியத் தலைவர்கள் அச்சட்டத்தைக் கண்டித்தனர்.

கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் (1898-1905) அவருடைய செயல்கள் நாட்டு மக்களுக்கு வருத்தத்தையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணின. அவர் வகுத்த வங்காளப் பிரிவினையையொட்டிப் பெருங்கிளர்ச்சி தோன்றியது.

மக்களுக்கு ஆறுதலளிப்பதற்காக 1909-ல் மின்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட் டது. இதன்படி சட்ட சபைகளில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கவர்னர் ஜெனரலின் சபையில் அதிகப்படியாக 60 அங்கத்தினர் வரையிற் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்றியும், அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் முதன் முதல் கையாளப்பட்டது.

முகம்மதியர்களுக்கென்று தனித் தொகுதி அளிக்கப்பட்டது. மாகாணச் சட்ட சபைகளில் பெரும்பாலோர் அரசாங்க அலுவலாளர் அல்லாதவர்களாயிருக்க ஏற்பாடாயிற்று. வரவு செலவுத் திட்டம் பற்றி விவாதிக்கவும் கேள்விகள் கேட்கவும் சட்டசபை அங்கத்தினர்களுக்கு உரிமையளிக்கப்பட்டது.

எனினும், இதையும் பிற்போக்கான சட்டமெனவே மக்கள் பலரும் கருதிவந்தனர். உத்தியோகஸ்தர்களுக்கு இன்னும் அதிகாரம் அதிகமாகவே இருந்தது. பொறுப்பாட்சி அதுவரை ஏற்பட்டதாகவே இல்லை. ஆகவே, மக்கள் மறுபடியும் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். அரசாங்கமும் அடக்கு முறையைக் கையாண்டது. 1914-ல், முதல் உலக யுத்தம் தோன்றியபோது, இந்தியா இங்கிலாந்துக்கு உதவி புரிந்தால், போர் முடிந்ததும் பொறுப்பாட்சி கிடைக்குமென இந்திய மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 1917 ஆகஸ்டு 20-ல் பிரிட்டிஷ் இந்தியா மந்திரி மான்டேகு, இந்திய அரசியல் சம்பந்தமாக அரசாங்கத்தாரின் கொள்கையை விளக்கி ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்தியர்களுக்குப் பொறுப்பாட்சி அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென்பதும், அதற்குப் படிப்படியாக முறைகள் கையாளப்படுமென்பதும் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மான்டேகு இந்தியாவுக்கு வந்து பலரோடு கலந்து நிலையை அறிந்தார். இதன் பயனாக 1919ஆம் ஆண்டுச் சட்டம் வெளிவந்தது.

இதன்படி மத்திய அரசாங்கத்தில் இரண்டு சட்டசபைகள் ஏற்பட்டன. மேற்சபை கவுன்சில் ஆப்ஸ்டேட் எனவும், கீழ்ச்சபை லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி எனவும் அழைக்கப்பட்டன. மேற்சபையில் 60 அங்கத்தினரும், கீழ்ச் சபையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் 100 பேர் உட்பட 140 அங்கத்தினரும் இருக்க வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டது.

மாகாணச் சபைகளில் அதிகப்படியான அங்கத்தினர் சேர்க்கப்பட்டனர். அவருள் 100க்கு 70 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். இப்பொழுது தான் வரி செலுத்தும் மக்களால் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை முதல் தடவையாகக் கிடைத்ததென்று கூறலாம். இச் சட்டத்தால் ஏற்பட்ட பெரு மாற்றம் மாகாணங்களில் ஒருவிதப் பொறுப்பாட்சி அமைக்கப்பட்டதேயாகும். அரசியல் நிருவாகத்தை இரண்டாக வகுத்து, ஒரு பகுதியிலடங்கிய அதிகாரங்கள் சட்ட சபையிலிருந்து அமைக்கப்பட்ட மந்திரி சபைக்கு அளிக்கப்பட்டன. இம் மந்திரிகளின் அதிகாரம் பலவகையிலும் குறைவாக இருந்த போதிலும் பொறுப்பாட்சியின் வளர்ச்சிக்கு இதுவே தொடக்கமாகும்.

காங்கிரஸ் கட்சியினர் 1919-ல் தோன்றிய அரசியல் அமைப்பை நிராகரித்துத் தேர்தலில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டனர். மிதவாதிகள் தாம் சட்ட சபை அங்கத்தினராயினர். காங்கிரசின் மனப்பான்மை அரசாங்கத்தாருக்கு வெறுப்பை உண்டுபண்ணிற்று. அரசியலை எதிர்த்து நின்றவர்கள் மீது அடக்குமுறை கையாளப்பட்டது. ‘ரௌலத்’ சட்டம் இயற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து ஜலியன்வாலாபாக் படுகொலையும் ஏற்பட்டது. ஐரோப்பாவில் ஒரே முகம்மதிய நாடாகிய துருக்கியை அக் கண்டத்திலுள்ள மற்றத் தேசங்கள் பங்கிட்டுக்கொள்வதற்கு முயன்றதால் முகம்மதியர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுக் ‘கிலாபத்து’ இயக்கமும் அப்பொழுது ஆரம்பித்தது. மேற்கூறிய பல காரணங்களால் மகாத்மா காந்தி, 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்கினார். ஆனால் அவரைப் பின்பற்றியவர்கள் அவர் எதிர்பார்த்ததுபோல் நடந்து கொள்ளாமையால் அவர் இயக்கத்தைச் சில காலத்திற்குப் பின் நிறுத்திவைத்தார். 1922-ல் காந்தியடிகளை அரசாங்கம் சிறைப்படுத்திற்று.

அரசாங்கத்தார் இந்திய அரசியல் வளர்ச்சியைப் பார்வையிட்டு, மேல் செய்யவேண்டிய மாற்றங்களைப் பற்றிப் பரிசீலனை செய்வதற்காக 1927-ல் சர் ஜான் சைமன் என்பவர் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தனர். ஆனால், இந்தக் கமிஷனில் இந்தியரொருவரும் சேர்க்கப்படாமையால் நாட்டு மக்கள் கமிஷனோடு ஒத்துழைக்க மறுத்தனர்.

இதனிடையே இங்கிலாந்தில் 1929-ல் தொழிற்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றது. இந்திய மக்களின் விருப்பத்திற்கு ஆதரவு காட்டிவந்த அக்கட்சித் தலைவர் ஒரு வட்டமேஜை மாநாட்டைக் கூட்டி, அதில் ஒரு தீர்மானத்தை வகுக்க ஏற்பாடு செய்தார். ஆனால், இந்தியாவுக்கு டொமினியன் நிலைமை அளிப்பதாக உறுதி கூறப்படாமையால், காங்கிரசு ஒத்துழைக்க மறுத்ததுமன்றிச் சட்ட மறுப்பு இயக்கத்தையும் தொடங்கிற்று. அரசாங்கம் உடனே வழக்கம் போல அடக்குமுறையைக் கையாண்டது.

இறுதியில் 1931 மார்ச்சு மாதம் காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி சட்ட மறுப்பு இயக்கம் நிறுத்தப்பட்டுக் காந்தியடிகளும் வட்டமேஜை மாநாட்டுக்குச் சென்றார். இதற்குள் இங்கிலாந்தில் தேசியக் கட்சி பதவிக்கு வந்தது. இதன் நோக்கம் தொழிற் கட்சியின் கருத்துக்கு மாறுபட்டதாயிருந்ததால் இரண்டாவது வட்டமேஜை மாநாடும் சரியான முடிவுக்கு வாராமல் கலைந்தது.

காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பியதும் சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிற்று. தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்குப் பிரிட்டிஷ் பிரதம மந்திரி அளித்த வகுப்புவாரித் திட்டத்தை எதிர்த்துக் காந்தியடிகள் உண்ணாவிர்தம் இருந்தார். விரைவில் கூட்டு யோசனை நடந்ததன் பயனாகப் பூனா ஒப்பந்தம் தோன்றவே, சமரசம் நிலவியது. இறுதியாக 1932-ல் லண்டனில் மூன்றாவது வட்டமேஜை மாநாடு கூட்டப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை 1935-ல் பிரிட்டிஷ் பார்லிமென்டு இந்திய அரசியல் திட்டமாக அங்கீகரித்தது.

1935ஆம் ஆண்டின் இந்திய அரசியல் சட்டத்தின் படி மாகாணங்களும் சுதேச சமஸ்தானங்களும் சேர்ந்த கூட்டாட்சி ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசாங்கத்தில் ஓர் அளவு பொறுப்பாட்சி அமைக்க, அதாவது சில பகுதிகளுக்கு மந்திரிகளை நியமிக்க இத் திட்டம் இடம் கொடுத்தது. மாகாணங்களில் மந்திரிகளின் கீழ் முழுப் பொறுப்பாட்சி அமைக்கப்படவும் ஏற்பாடாயிற்று. ஆயினும் மாகாணங்களில் கவர்னருக்கும், மத்திய அரசாங்கத்தில் கவர்னர் ஜெனரலுக்கும் தனிப்பட்ட சில அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருந்தமை பொறுப்பாட்சி சரிவர நடைபெறு வதற்கு இடையூறாகவே இருந்து வந்தது.

கூட்டாட்சி ஏற்படுவதற்குச் சுதேச அரசர்களில் பலர் அதில் சேர இணங்குதல் அவசியம். அவர்கள் அதற்கு இணங்காமையால் அப்பொழுது கூட்டாட்சி ஏற்படுத்த இயலாது போயிற்று. மாகாணங்களில் மட்டும் 1937-ல் பொறுப்பாட்சி தொடங்கிற்று.

இரண்டாவது உலக யுத்தம் 1939-ல் தோன்றிற்று. இந்தியச் சட்ட சபைகளோடு கலக்காமலே பிரிட்டன் இந்தியாவையும் இப்போரில் இணைத்ததன் காரணமாக, மாகாணங்களிலுள்ள காங்கிரசு மந்திரி சபைகள் பதவியை ராஜிநாமா செய்தன. இதைத் தொடர்ந்து காந்தியடிகளின் தலைமையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கமும், வெள்ளையர்கள் நாட்டை விட்டு அகல வேண்டுமென்ற கிளர்ச்சியும் தொடங்கின. இவற்றிற்கு எதிராக வைசிராய் லின்லித்கோ பிரபு தீவிரமான அடக்குமுறையைக் கையாண்டார். 1942-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பிரதிநிதியாக, சர் ஸ்டா போர்டு கிரிப்ஸ் என்பவர் இந்தியாவுக்கு வந்து, யுத்தத் துக்குப்பின் அமைக்கப்பட வேண்டிய அரசியல் திட்டத்தைப் பற்றி இந்தியரைக் கலந்தார். ஆனால், உடனடியாக மாறுதல் ஒன்றும் ஏற்படுத்த ஆங்கில அரசாங்கத்தினர் ஆயத்தமாயில்லாததால் அவர் முயற்சி பயன்படவில்லை.

1945-ல் போர் முடிந்தபின் பிரிட்டனில் தொழிற்கட்சி பதவிக்கு வந்தது. போரினால் ஏற்பட்ட பல கஷ்டங்களைப் பிரிட்டன் அனுபவித்துக் கொண்டிருந்தது. ஆகவே உலகப் போக்கை யொட்டி, இந்தியாவுக்கு விடுதலை அளிக்க வேண்டியது இன்றியமையாததெனக் கருதப்பட்டது.

இந்தியாவில் இதனிடையே பாகிஸ்தான் கிளர்ச்சி தீவிரமாகக் கிளம்பிற்று. காங்கிரசும் முஸ்லிம் லீகும் ஒற்றுமைப்பட்டு அரசியலை நடத்துவது சாத்தியமாகத் தோன்றவில்லை. 1946-ல் வந்த காபினெட் மிஷன் (Cabinet Mission) எவ்வளவு முயன்றும் ஒற்றுமையை நிலவச் செய்ய முடியாமற் போனதால், பெரும்பான்மை முகம்மதியர்கள் அடங்கிய சில இந்தியப் பகுதிகளைச் சேர்த்துப் பாகிஸ்தான் என்னும் தனி நாடு ஏற்படுத்தப்பட்டது. 1947 ஆகஸ்டு 15ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு, இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு தனி நாடுகள் ஏற்பட்டன. இந்தியாவில் காங்கிரசுக் கட்சி பதவியேற்று ஆண்டு வந்தது. அரசியல் திட்டம் அமைக்கும் பொருட்டு உருவாகியிருந்த அரசியல் நிருணய சபையின் பெருமுயற்சியால் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்பட்டு, 1950 ஜனவரி 26ஆம் தேதி அச் சட்டம் அமலுக்கு வந்தது.

போர்களும், வெளிநாட்டுத் தொடர்பும், ஆப்கானிஸ்தானமும்: 1858க்குப் பின் இந்திய அரசாங்கம் அருகிலுள்ள சில நாடுகளோடு போர் புரியவேண்டி வந்தது. ரஷ்யாவைப்பற்றி ஆங்கிலேயருக்கிருந்த அச்சமே இதற்குக் காரணம். இதுபற்றியே ஆப்கானிஸ்தானத்தில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தை ஏற்படுத்த முயன்றனர். கவர்னர் ஜெனரல் ஆக்லந்து காலத்தில் ஆப்கானிய அரசராயிருந்த தோஸ்த்து முகம்மது பதவியினின்றும் அகற்றப்பட்டு, 1838-ல் அவர் தம்பியான ஷாஷூஜா அமீராக்கப்பட்டார். ஆனால், ஆப்கானிய மக்கள் கிளர்ச்சி செய்து பிரிட்டிஷ் படையைத் துரத்தி விட்டனர்.

லிட்டன் பிரபு வைசிராயாயிருந்தபோது (1876-80) இரண்டாவது ஆப்கானிய யுத்தம் மூண்டது. அப்போது ஆப்கானிய அரசராயிருந்த ஷெர் அலி ரஷ்யாவோடு நட்புக்கொள்ளக் கூடுமென்ற அச்சம் லிட்டன் பிரபுவுக்கு ஏற்பட்டது. ஆகவே, பிரிட்டிஷ் ஸ்தானீகர் ஒருவரைக் காபுலில் ஷெர்அலி ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று லிட்டன் பிரபு வற்புறுத்தினார். அவரது வற்புறுத்தலுக்கு ஷெர் அலி இணங்காததால் பிரிட்டிஷ் படை காபுல்மீது படையெடுத்தது. ஷெர் அலி உடனே நாட்டைவிட்டு ஓடினார். பிரிட்டிஷார் ஷெர் அலியின் மகன் யாகூப் கானை அமீராக நியமித்தனர். அவரும் பிரிட்டிஷாருடன் நட்புடன் நடந்து கொள்வதாகவே ஒப்புக்கொண்டார். ஆனால், ஒரு மாதத்திற்குள் ஆப்கானியர் கிளர்ச்சிசெய்து, பிரிட்டிஷ் ஸ்தானிகரைக் கொலை செய்தனர். மீண்டும் ஒருமுறை பிரிட்டிஷ் படை ஜெனரல் ராபர்ட்ஸின் தலைமையில் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுத்தது. யாகூப் திறமையற்றவராகக் காணப்பட்டதால், அவர் அமீர் பதவியினின்றும் அகற்றப்பட்டார். தகுதியுள்ள அமீர் ஒருவரை நியமிப்பது எளிதாகக் காணப்படவில்லை. முடிவில் ஷெர் அலியின் மருமகன் அப்துல் ரஹ்மானை ஆங்கிலேயர் அமீராக்கினர். ரஹ்மானும் (1881-1901) அவர் மகன் ஹபீபுல்லாவும் (1901-1919) அவரவர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயருடன் நட்பினராகவே இருந்துவந்தனர்.

1919-ல் அமானுல்லா அமீரானார். ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிய வேண்டுமென்ற விருப்பம் ஆப்கானியரிடம் மிகுதியாயிருந்தது. ஆகவே அமானுல்லா இந்தியாவோடு போர் செய்யத் துணிந்தார். பிரிட்டிஷ் படை ஆப்கானிஸ்தானத்துக்குள் புகுந்தது. ஆகாய விமானங்கள் காபுல்மீதும் ஜலாலாபாத்மீதும் குண்டுகள் வீசின. இதனை எதிர்த்து நின்று போர்செய்ய இயலாமல், அமீர் வெகு விரைவில் உடன்படிக்கை செய்துகொள்ள ஒப்புக்கொண்டார். அவர் அமீராக இருத்தலை ஆங்கிலேயர் ஏற்றுக்கொண்ட போதிலும், இந்தியாவின் வழியாக யுத்த தளவாடங்களை ஆப்கானிஸ்தானத்துக்குக் கொண்டுசெல்ல அனுமதியளிக்க மறுத்தனர். ஆனால் பின்னர் 1923-ல் நடைபெற்ற சமரச ஒப்பந்தப்படி இந்தத் தளவாடக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.

இதனிடையே 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆப்கானிஸ்தானத்தின் தென் பகுதியில் வாழ்ந்திருந்த ஆப்ரீடிகள் வசீரிகள் போன்றவர்களை அடக்குவதற்குப் பற்பல படையெடுப்புக்கள் நடத்தவேண்டி வந்தது. 1893-ல் அவர்களை இந்திய அரசாங்கம் தனது மேற்பார்வைக்கு உட்படுத்தியது. ஆனால் பின்னும் அவர்கள் சச்சரவுகள் நின்றபாடில்லை. ஆகவே, பிரிட்டிஷார் அடிக்கடி படை யெடுக்க வேண்டி வந்தது. கர்சன் பிரபு ஆப்கானிய நாட்டு மலைக்கூட்டத்தாரிலிருந்தே ஒரு படையைத் தயாரித்து அமைதியை நிலவச் செய்தார். கடைசியாக அவர் சிந்துநதியின் வடபாகம் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, வடமேற்கு எல்லைப்புற மாகாணமாக ஒரு தலைமைக் கமிஷனரின் கீழ் அமைத்தார். இவ்வித ஏற்பாடுகள் எவ்வளவு செய்யப்பட்ட போதிலும் 1925லும் 1930லும் சச்சரவுகள் ஏற்பட்டன.

திபெத்து : இந்நாடு பெயரளவில் சீனாவின் ஆதிக்கத்தில் இருந்தது. 1898-ல் திபெத்து மன்னராகிய தலைலாமா சீனாவிடமிருந்து விடுதலைபெற எண்ணி ரஷ்யாவுக்கு ஒரு தூது அனுப்பினார். ரஷ்யாவின் செல்வாக்குத் திபெத்தில் ஏற்பட்டால் இந்தியாவுக்குத் தீங்கு நேரக்கூடுமென்று அஞ்சிய கர்சன் பிரபு உடனே பிரான்சிஸ் யங்ஹஸ்பண்டு என்பவர் தலைமையில், திபெத்துக்கு ஒரு தூது அனுப்பினார். இதற்குப் போதிய ஆதரவு கிடைக்காததால் ஒரு சிறு சேனையையும் அனுப்பினார். இறுதியில் திபெத்தோடு பிரிட்டிஷார் 1904-ல் லாசா என்னுமிடத்தில் ஓர் உடனபடிக்கை செய்துகொண்டார்கள். இதன்படி திபெத்து யுத்தத்தை நிறுத்தும் பொருட்டு ஒரு தொகை கொடுக்க வேண்டுமென்பதுடன், அந்நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களும் பிரிட்டிஷாரின் வசமே ஒப்புவிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஸ்தானிகர் ஒருவரும் லாசாவில் அமர்த்தப்பட்டார். ஆனால், திபெத்துடன் கர்சன் பிரபு செய்து கொண்ட இவ்வொப்பந்தம் அக்கிரமச் செயலேயாகும்.

பர்மா : முதல் பர்மிய யுத்தம் நடந்ததில் 1826-ல் யாண்டபூ ஒப்பந்தப்படி ஆங்கிலேயருக்கு அஸ்ஸாம், அரக்கான், தெனாசரீம் என்னும் நாடுகள் கிடைத்தன. டால்ஹௌசி பிரபுவின் காலத்தில் பர்மிய அரசர் யாண்டபூ ஒப்பந்தத்தை நிராகரித்து, ஆங்கிலேய வியாபாரிகளுக்குப் பல இடையூறுகளும் உண்டாக்கினார். மேலும், பர்மாவுக்கு அனுப்பியிருந்த பிரதிநிதியை அவமதித்துத் துரத்தினார். டால்ஹௌசி பிரபு சமரசமாகவே சச்சரவைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் லாம்பர்ட்டு என்பவரைத் தூது அனுப்பினார். ஆனால் பர்மிய அரசர் லாம்பர்ட்டையும் அவமதித்ததால் சண்டை தொடங்கிற்று. டால்ஹௌசி பிரபு போரை ஊக்கமாய் நடத்தினார். இது தான் இரண்டாவது பர்மா யுத்தமாகும். விரைவில் ரங்கூன், பிரோம், பெகு என்னுமிடங்களைப் பிரிட்டிஷ் படைகள் கைப்பற்றிக் கீழ்ப்பர்மாவைப் பிரிட்டிஷ் வல்லரசுடன் இணைத்துக்கொண்டன.

டபரின் பிரபு வைசிராயாக இருந்தபோது (1884-88) மூன்றாவது பர்மிய யுத்தம் நடைபெற்றது. பர்மாவில் தொழில் நடத்திவந்த ஒரு வர்த்தகக் கம்பெனிக்கும் பர்மிய அரசருக்கும் நிகழ்ந்த சச்சரவே இப்போருக்கு அடிப்படையான காரணம். அக் கம்பெனியார் பர்மிய அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரித்தொகை ஏழு லட்சம் ரூபாயையும் உடனடியாகச் செலுத்த வேண்டுமென ஆவாவிலுள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்தத் திட்டத்தைத் தீர ஆராய்ந்து முடிவு செய்யுமாறு டபரின் பிரபு பர்மிய மன்னருக்குச் செய்தியனுப்பினார். இந்திய அரசாங்கம் தமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுதல் கூடாதெனப் பர்மிய மன்னர் பதிலளிக்கவே மனக்கசப்பு ஏற்பட்டது. அன்றியும் வேறு பல ஆங்கில வர்த்தகர்களும் பர்மா அரசர்மீது பல குறைகள் கூறி, பர்மா முழுவதையும் கைப்பற்றும்படி இந்திய அரசாங்கத்தைத் தூண்டினர். டபரின் பிரபு போர் புரியாமலே, பர்மிய அரசரான தீபாவைச் சிறைப்படுத்திப் பின் உபகாரச் சம்பளம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, மேல் பர்மாவை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் சேர்த்துக்கொண்டார். இவ்வாறாகப் பர்மா முழுமையும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாகிவிடவே, அது ஒரு தனி மாகாணமாக்கப்பட்டு, ஒரு கவர்னரின் ஆளுகைக்குள் வந்தது. 1935-ல் தான் பர்மா இந்திய அரசாங்கத்திலிருந்து பிரித்துத் தனி நாடாக அமைக்கப்பட்டது. 1947-ல் பர்மா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது.

உள்நாட்டு அமைதியும் சீர்திருத்தங்களும்: 1858-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா வந்தது முதல் நாட்டில் அமைதி நிலவுவதன் பொருட்டு அரசாங்கம் இடைவிடாது முயன்று வந்தது. இந்தியப்படை நவீன முறையில் அமைக்கப்பட்டதோடு, இந்தியர்களும் வெகுவாகப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்றபின் முதலாவது வைசிராயான கானிங் பிரபுவின் காலத்தில் இந்தியன் பீனல் கோடு என்ற குற்றத் தண்டனைச் சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவில் நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code), கிரிமினல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) என்னும் சட்டத் தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசாங்கத்தார் மக்களின் பொருளாதாரநிலை, வாழ்க்கைத்தரம் முதலியவற்றைச் சீர்திருத்த நன்கு முயன்றனர். இருப்புப்பாதைகள், தபால், தந்திபோன்ற வசதிகளைப் பெருக்குவதற்கு நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கம் செலவு செய்தது. விவசாயம், வாணிகம், கைத்தொழில் முதலிய துறைகளில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆயினும், இந்தியாவின் பரப்பளவு, மக்கள் தொகை, இயற்கைவளம் இவற்றிற்கு ஏற்றவாறு நாட்டை முன்னேறும்படி செய்யப்படாமையைக் குறித்தும், ராணுவத்திற்கும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குமாகப் பெருவாரியான தொகை செலவிடப்படுவதை எதிர்த்தும், தேசிய உணர்ச்சி பெற்ற தலைவர்கள் போராடினர். மேலும், நாளடைவில் மக்களாட்சியை அமைக்கும் பொருட்டுப் பொது மக்களுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படவில்லையென்ற புகார் மற்றொரு பக்கம் தோன்றியது.

கிராமக் குடிகள் தத்தம் கிராமங்களில் பணம் வசூலித்துப் பொதுமக்கள் நிருவாக சபைகளைக் கொண்டு கல்வி, சுகாதாரம், உள்நாட்டுப் பாதைகள் முதலியவற்றிற்காக அதைச் செலவு செய்துகொள்ள முதன் முதலாக வசதி அளிக்கப்பட்டது, வைசிராய் மேயோ பிரபுவின் காலத்தில்தான் (1869-72). பிற்காலத்தில் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மக்கள் ஆட்சி முன்னேற இது அடிப்படையாயிற்று. ஆனால் இத்துறையில் ரிப்பன் பிரபுவின் காலத்தில் தான் (1880-84) மிகவும் முக்கியமான சட்டம் இயற்றப்பட்டது. இவர் பொதுமக்களின் பிரதிநிதிகளின் அதிகாரத்தையும் பொறுப்பையும் பெருக்கி, மேற்பார்வை செய்துவந்த அரசாங்க அதிகாரிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முயன்றார். அவருடைய சிறந்த, விரிவான கொள்கைகளை அவருக்குப்பின் வந்தவர்கள் பலர் பின்பற்றவில்லையாயினும், ரிப்பன் பிரபுவின் சட்டம், தலசுய ஆட்சி பின்னர் ஓங்கி வளர்வதற்கு அடிப்படையாய் விளங்கிற்று.

கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் (1898-1906) தல சுய ஆட்சிக்குச் சற்றுச் சோர்வு நேர்ந்தது. கல்கத்தா நகர சபையில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கர்சன் பிரபு சுயாட்சியைவிட வலுவுற்ற, ஊக்கம் குன்றாத ஆட்சியே மேலென்னும் கொள்கையுடையவர். இம்மனப்பான்மை அவரால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலவற்றில் தெளிவாயிற்று. இது அவரது ஆட்சியில் ஒரு பெருங்குறையேயாயினும், மக்களுக்கு நன்மை விளைவித்த பல சீர்திருத்தங்களையும் அவர் செய்தார். விவசாயம், வாணிகம், கைத்தொழில் முதலிய துறைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குப் பொருள் சேமிக்க வசதி அளிக்கும் பொருட்டுக் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவினார். ஆயினும் மக்களின் பொருளாதார நிலை குன்றியே இருந்தது. பழைய கட்டடங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலியவற்றைப் பாதுகாத்து ஆராய்ச்சிகள் செய்வதற்காகத் தொல்பொருளியல் இலாகா (Archaeological Department) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. உலகத்தின் முன்னணியில் நிற்கும் பல நாட்டு மக்களின் சராசரி வருமானத்தைவிட இந்திய மக்களின் சராசரி வருமானம் மிகக் குறைவாக இருந்தது. அடிக்கடி பஞ்சம் உண்டாயிற்று. பஞ்சத்தின் கொடுமையை அகற்ற அரசாங்கத்தார் பல நிவாரண வேலைகளை மேற்கொண்டாலும், குறிப்பிடும் வகையில் மாறுதல் ஒன்றும் ஏற்பட்டதாகக் கருத முடியாது. இரண்டாவது உலக யுத்த காலத்தும், அதற்குப் பின்னும் உணவுப் பொருள்கள் குறைவால் மக்கள் பட்ட துன்பத்திற்கு ஓர் அளவில்லை.

கல்வி : மக்களின் கல்வியை வளர்க்கக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சிக் காலத்திலே துரைத்தனத்தார் முயற்சி எடுத்துக்கொண்டனர். 1835-ல் கல்வி விஷயமாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி கல்வியின் பொருட்டுத் துரைத்தனம் செலவு செய்யும் பணம் முழுதும் மேனாட்டுக் கல்விக்காகவே வினியோகிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டது. 1854-ல் சர் சார்ல்ஸ் உட் என்பவரின் அறிக்கை ஆரம்பக் கல்வி முதல் உயர் தரக் கல்வி வரையில் முற்றிலும் பயிற்றுவிக்க ஒரு முறையை வற்புறுத்தியது. பெயர் பெற்ற இச் சாசனம் நாட்டு மொழிகளைப் போற்றிப் பெருக்க வசதியளித்தது.

வைசிராய் கானிங் பிரபுவின் காலத்தில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. 1904-ல் கர்சன் பிரபு அமலுக்குக் கொண்டுவந்த ஒரு சட்டத்தின்படி, கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் இருந்த தனி உரிமைகள் சற்றுக் குறைக்கப்பட்டன. ஆயினும் கல்வி ஓங்கி வளர்ந்ததென்பதற்கு ஐயமில்லை. உயர்தரக் கல்வி பெற்ற இந்திய இளைஞர் மேனாடுகளுக்குச் சென்று, பயின்று வரலாயினர். அதையொட்டி விஞ்ஞான ஆராய்ச்சி பெருகிற்று. கர்சன் பிரபு காலத்தில் டைரக்டர் ஜெனரல் என்ற கல்வியிலாகாத் தலைமையதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி முறையை நன்கு அமைத்துப் போற்றுவதே இவரது பொறுப்பு.

கல்வி வளர்ச்சிக்காகச் செலவு செய்துவந்த பணத்தொகை அதிகரித்துக் கொண்டே வந்தது. கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நாளுக்கு நாள் பெருகி வந்தன. 1926-ல் இந்தியாவில் 15 பல்கலைக்கழகங்களும் 303 கல்லூரிகளும் இருந்தன. உயர்தரப் பள்ளிகளும் ஆரம்பப் பாடசாலைகளும் பெருகி வந்தன. ஆனால், நாட்டிற்கு வேண்டிய ஆரம்பப் பாடசாலைகள் போதிய அளவு இல்லை. நகர சபைகளும் கிராம ஸ்தாபனங்களும் கல்வித் துறையில் எடுத்துக்கொண்ட முயற்சி போதவில்லை. மேலும் உயர் தரக் கல்விப் பயிற்சி அரசாங்க உத்தியோகஸ்தர்களைத் தயாரித்து உதவி வந்ததே யொழிய, மக்கள் வாழ்க்கைக்குப் பொருந்தியதாக இல்லை என்று குறை கூறப்பட்டது. பற்பல சீர் திருத்தங்களை அமைத்தாலும், அடிப்படையான மேற்கூறிய குறைகள் இன்னும் நீக்கப்பட்டன வென்று கூறமுடியாது.

கல்வி, போக்குவரவு வசதிகள், விவசாயம் முதலியவற்றின் பொருட்டு அரசாங்கம் ஆண்டுதோறும் மிகுதியான பொருட் செலவு செய்தது. நாடு முன்னிருந்ததை விட முன்னேற்றமடைந்துள்ளதென்பதற்கு ஐயமில்லை. எனினும் இன்னும் பற்பல குறைகள் இருந்தன. ஒவ்வொரு துறையிலும் பன்மடங்கு வளர்ச்சி மக்களின் முன்னேற்றத்துக்கு இன்றியமையாததாகக் காணப்பட்டது. நாடு விடுதலை பெற்றபின் இம் முன்னேற்றம் குன்றாது ஓங்கி வளருமென நம்பப்படகிறது. கே. க.

தென்னிந்திய வரலாறு : தென்னிந்திய வரலாறு பழமையானது. சுமார் அறுநூறு ஆண்டுகளுக்குமுன் கடற்கரையில் துறைமுகப்பட்டினங்களாயிருந்த கொற்கையும் காயல்பட்டினமும் இப்போது கரைக்குச் சில மைல் தூரத்திலுள்ள சிற்றூர்களாகி விட்டன. காவிரிப்பூம்பட்டினமும் மாமல்லபுரமும் பெரும்பாலும் கடலில் மூழ்கிவிட்டனபோலும். குமரிமுனைக்குத் தெற்கேயிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்டதென்று தமிழ் நூல்களில் கூறப்படுகிறது. ஆனால் இக்கடல் கோள் எக்காலத்து நிகழ்ந்ததென்று தெரியவில்லை. தமிழர்கள் மத்தியதரைக் கடலின் கீழ்ப்பாகத்தைச் சார்ந்த நாடுகளிலிருந்தோ, மத்திய ஆசியாவிலிருந்தோ இந்தியாவில் புகுந்தவரென்று சில காரணங்களால் ஊகிக்கலாமென்பர் சிலர், சிலர் அவர்கள் எக்காலத்தும் இந்தியாவிலேயே இருந்தவர்கள் என்பர். சிந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ, ஹாரப்பா முதலிய இடங்களில் சுமார் கி. மு. 3,000 முதல் கி.மு. 1,500 வரை ஓங்கி வளர்ந்த நாகரிகம் தமிழரைச் சார்ந்ததே என்பர் சிலர்.

இனித் தமிழர் சமூக நிலையைக் கீழ்க்கண்டவாறு குறிக்கலாம். அரசர்கள் தங்கள் கோட்டைகளிலிருந்து சிறு நாடுகளை ஆண்டுவந்தனர். விழாக்களிலும் மற்றக் கொண்டாட்டங்களிலும் பாடலையும் ஆடலையும் நிகழ்த்தும் பாணரும் விறலியரும் இருந்தனர். தமிழருக்குக் கடவுள் வழிபாடுண்டு. சட்டங்களும் ஒழுக்கங்களும் உண்டு. திருமணம் உண்டு. வேளாண்மை நன்றாக நடந்து வந்தது. அம்பு, வில், ஈட்டி, கத்தி முதலிய போர்க் கருவிகள் உண்டு. நூல் நூற்றல், நெய்தல், சாயம் போடுதல் முதலிய வாழ்க்கைக்கு முக்கியமான கைத்தொழில்கள் நடந்துவந்தன. மட்பாண்டங்கள் வனைதலில் தமிழர் கைதேர்ந்தவர்களென்பது பல இடங்களில் அகப்படும் ஈமத்தாழிகளால் விளங்குகிறது. பெரியனவாகவும் சிறியனவாகவும் பல வடிவங்களைக் கொண்ட தாழிகளும் பல சிறு மட்கலங்களும் ஆதிச்ச நல்லூர், பெரும்பேர் முதலிய இடங்களிலும், மலைச்சாரல்களில் உள்ள பாண்டவக் குழிகள் பலவற்றிலும் அகப்படுகின்றன.

சேர, சோழ, பாண்டிய அரசுகள் படைப்புக் காலந்தொடங்கி மேம்பட்டு வந்தவை என்பர் பரிமேலழகர் என்னும் உரையாசிரியர். பாண்டியருக்குக் கௌரியர், பஞ்சவர் என்ற பெயர்களும், அர்ச்சுனன் பாண்டிய வமிசத்துப் பெண்ணை மணந்தான் என்ற கதையும் இவர்களுக்கும் பாண்டவருக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்துகின்றன. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்க ஆசிரியர் பாண்டிய நாடு ‘ஹிரக்கிளிஸ்’ என்னும் சிவபெருமானது புத்திரியான ‘பண்டைய’ என்னும் பெண்ணரசியால் ஆளப்பட்டு வந்தது என்று கூறுவர். மேலும் அந்நாடு 360 கிராமங்கள் அடங்கியதென்றும், ஒவ்வொரு கிராமத்தாரும் ஆண்டுக்கொரு நாள் அரசனுடைய கோயிலுக்குக் கப்பம் செலுத்தினார்கள் என்றும் கூறுகிறார். சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களும், ‘சதியபுத’ என்னும் மற்றொரு நாடும் அசோகனுடைய சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்காமல் அவனுடன் நட்புப் பூண்டிருந்தன என்பது அவனுடைய சாசனங்களால் விளங்குகிறது.

சோழ நாடு, வடக்கே ஒரு வெள்ளாறு (பரங்கிப் பேட்டையில் சமுத்திரத்தில் கலப்பது), தெற்கே புதுக்கோட்டை, மேற்கே கோட்டைக் கரை வழியாய்ப் பாயும் மற்றொரு வெள்ளாறு (திருச்சிராப்பள்ளி ஜில்லா குளித்தலை தாலுகாவில் உள்ளது), கிழக்கே கடல் என்ற இந்நான்கு எல்லைகளுக்குள் அடங்கியது. இதைக் காவிரி நாடு என்றும் சொல்லுவதுண்டு. இது தற்காலத்துத் தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களும், தென்னார்க்காட்டிலும் புதுக்கோட்டையிலும் சில பகுதிகளும் அடங்கிய நாடு. இதற்குத் தெற்கே உள்ள இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களும், திருவிதாங்கூரின் தென்பாகமும் சேர்ந்து பாண்டிய நாடாகும். சேரநாடு தற்காலத்துத் திருவி தாங்கூரின் வடபாகமும், கொச்சியும், மலையாள மாவட்டமும் பாலக்காட்டுக் கணவாயை அடுத்த கோயம்புத்தூர் மாவட்டப் பகுதியும் உள்ளடங்கின நாடென்று கூறலாம். சோழருக்குத் தலைநகர் உறையூர். துறைமுகம் புகார் எனப்படும் காவிரிப்பூம்பட்டினம். பாண்டியருக்குத் தலைநகர் மதுரை. அவர்களுக்குத் துறைமுகங்கள் கிழக்குக் கடலில் சாலியூரும் கொற்கையும். மேற்குச்சமுத்திரத்தில் கிரேக்கர்கள் ‘லெர் கிண்டா’ என்று அழைத்து வந்த ஒரு துறைமுகமும் இருந்தது. இது தற்காலத்துக் கோட்டையத்திற்கு அருகில் இருந்திருக்கவேண்டும். சேரர்கள் தலைநகர் வஞ்சிமா நகரம். இது சிலர் கருத்துப்படி கொச்சி நாட்டிலுள்ள திருவஞ்சைக்களம் ஆகும். ஆனால் வேறு சிலர் இது கரூரிலோ, அதன் சமீபத்தில் வேறிடத்திலோ இருந்ததென்பர். டாலமி என்னும் கிரேக்க ஆசிரியர் தமது பூகோள நூலில் சேரர் தலைநகர் கரூர் என்று கூறுவதும், கரூருக்கு அருகில் பல பழைய ரோமானிய நாணயங்கள் அகப்படுவதும், கரூரின் பெயர் வஞ்சிமா நகர் என்று ஒரு சாசனத்தில் காணப்படுவதும், உள்நாட்டுக் கரூரே சேரர் தலைநகராக இருந்திருக்கலாம் என்பதை வற்புறுத்துகின்றன. முசிரி, தொண்டி முதலிய துறைமுகங்கள் மேற்குக் கடற்கரையில் சேர நாட்டைச் சார்ந்தவை.

சத்திய புத்திரர்கள் மெய்ம்மலிகோசர், ஒன்று மொழிக்கோசர் எனச் சங்க நூல்களில் புகழப் பெற்றவர்களாயின், இவர்கள் நாடு கொங்கு நாடு எனலாம். நாளடைவில் அக் கோசர்கள் துளுநாட்டையும் கைப்பற்றினார்கள். மகாராஷ்டிர நாட்டில் இக்காலத்தும் சாத்புதே என்னும் குலப் பெயர் வழங்கி வருகிறது. இப்பெயர் பூண்டவர்கள் அசோகன் காலத்துச் சத்திய புத்திரரின் சந்ததிகளாய் இருக்கலாம் என்பர் டீ. ஆர். பண்டாரகர்.

மௌரியர்கள் தென்னாட்டை நோக்கிப் படையெடுத்து வந்து, பொதியமலைவரை உள்ள நாடுகளைத் தாக்கினார்கள் என்று சிலர் கூறுவர். ஆயினும் அதற்குத் தக்க சான்று யாதொன்றும் கிடையாது. கௌடிலியனுடைய அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் தென்னாட்டுக்கும் வட இந்தியாவிற்கும் வியாபாரம் மிகுதியாக நடந்து வந்ததாகக் காண்கிறோம். பாண்டிய சேரநாடுகளிலிருந்து முத்துக்களும், வைரம், வைடூரியம், சந்தனம் முதலிய அருமைச் சரக்குக்களும், வட நாட்டிற்கு ஏற்றுமதியாயின என்று தெரிகிறது.

தென்னிந்தியாவில் உள்ள சில மலைக்குகைகளில் முனிவர்கள் படுக்க வசதியான தளங்களும், அவைகளில் ஓர் ஓரத்தில் தலையணை போன்ற மேடையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளின் அருகே பிராமி எழுத்தில் சுருக்கமான கல்வெட்டுக்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. எழுத்தின் வடிவைக்கொண்டு, இக்கல் வெட்டுக்கள் கி. மு. மூன்றாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தன என்று ஊகிக்கலாம். இவைகளின் மொழி தமிழ்தான். இவற்றில் காணப்படும் பெயர்கள் குகைகளைச் செய்வித்தவர்களையோ அல்லது அவற்றில் வசித்த முனிவர்களையோ குறிக்கவேண்டும். இக்குகைகள் கழுகுமலையில் காணப்படுகின்றன. கழுகு மலை என்பது வடநாட்டில் புத்தருடன் நெருங்கின சம்பந்தம் கொண்ட மலையின் பெயரான கிருத்திர கூடத்திற்குச் சரியான மொழிபெயர்ப்பு. இதுபோன்ற காரணங்கள் பற்றி இம்மலைக்குகைகள் அனைத்தும் பௌத்த சன்னியாசிகளைச் சார்ந்தவைகளே என்று சிலர் கருதுவர். ஆனால் சமண மதமும் அக்காலத்தில் தென்னிந்தியாவில் பரவியிருந்ததாகச் சமண நூல்களில் கூறப்படுகிறது. இன்னும் புதிதாகக் குகைகளும் கல்வெட்டுக்களும் அங்கங்கே அகப்பட்டு வருகின்றன. ஆகையால் இக்குகைகளில் இருந்தவர்கள் பௌத்தரும் சமணரும் என்று கருத இடமுண்டு. இக்கல்வெட்டுக்களின் காலத்தில் தமிழ் எழுத்துக்கள் முழுவளர்ச்சியும் பெற்றிருக்கவில்லை. அந்தக்காலம் வடநாட்டுப் பிராமி எழுத்துக்களைத் தமிழுக்குத் தக்கவாறு மாற்றிவந்த காலம். தமிழ் மொழிக்குச் சிறப்பான ற, ழ, ள, ன முதலிய ஓசைகளுக்குத் தனிக்குறிகள் அமைந்துவிட்டன. ஆனால் உயிர் பெற்ற மெய்யெழுத்துக்களுக்கு வேண்டிய குறிகள் ஏற்படவில்லை. உதாரணமாக யு எழுதவேண்டிய இடத்தில் ய, உ என்று எழுதுவது வழக்கமாயிருந்தது. சமண மதமும் பௌத்த மதமுமே தமிழ்நாட்டில் இக்காலத்தில் ஓங்கி வளர்ந்தன என்று நினைப்பது சரியன்று. இதற்குச் சற்றுப் பின்வந்த சங்க காலத்தில் வைதிக மதம் நாடெங்கும் பரவியிருந்ததாகச் சங்க நூல்களிலிருந்து காண்கிறோம்.

சுமார் கி. மு. 165-ல் கலிங்க தேச அரசன் கார வேலன் தன்னாட்டுக்குப் பகையாக இருந்த தமிழ் நாட்டுக் கூட்டம் ஒன்றைப் போரில் வென்றதாகத் தன் சாசனத்தில் கூறிக்கொள்கிறான்.

தமிழ்நாட்டின் வரலாற்றைத் தெளிவாக நாம் முதன் முதல் அறிந்து கொள்வது சங்க இலக்கியங்களின் மூலமாகத்தான். ஒரு சங்கம் தமிழ் நூல்களை ஆராய்வதற்கு மதுரையில் பாண்டியரால் நிறுவப்பட்டது என்பது வரலாற்று நிகழ்ச்சி. இது சின்னமனூர்ச் செப்பேடுகளில் கூறப்பட்டிருக்கிறது. சேர வேந்தர்களில் ஒருவன் மகாபாரத யுத்தத்தில் இரு திறத்துப் படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்தது புறநானூற்றில் சொல்லப்படுகிறது. மேலும் புறநானூற்றுப் பாடல்களில் தமிழ் அரசரும் பிறரும் வேத வேள்விகள் நடத்தியதாகக் காண்கிறோம். ஆரியமும் - தமிழும் நன்றாகக் கலந்தபின் தமிழ் நாட்டில் உண்டானதே வரலாற்றுக் காலத்து நாகரிகம் என்பர்.

சங்க காலம் கி. பி. முதல் மூன்று நூற்றாண்டுகள் அடங்கினது என்று கொள்ளலாம். யவனர்களுடன் தமிழர் செய்து வந்த வியாபாரத்தைக் குறித்த செய்திகள் சங்க நூல்களில் பல இடங்களில் காண்கிறோம். அதற்கேற்பத் தமிழ் நாட்டில் பல ஊர்களில் பழைய ரோமானிய நாணயங்கள் கிடைத்திருக்கின்றன. தவிரவும் சிலப்பதிகாரம் பிற்காலத்து நூல் ஆனபோதிலும், அதில் குறிப்பிட்ட பிரகாரம் சேரன் செங்குட்டுவன், கரிகாற்சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், இலங்கை வேந்தன் கயவாகு இந் நால்வரும் ஒரே காலத்தவராக இருந்திருக்கலாம். கண்ணகி சரித்திரம் ஒரு பழங்கதையாயினும், அதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்புகுந்த ஆசிரியர் வரலாற்று உண்மையைத் தொடர்ந்து ஒரே காலத்தில் ஆண்ட அரசர்களைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்க இடமுண்டு. இலங்கையில் கயவாகு ஆண்ட காலம் கி. பி. 173 முதல் 195 வரை. புதுச்சேரிக்கு அருகில் அரிக்கமேடு என்னும் இடத்தில் கி. பி. முதல் நூற்றாண்டில் செழித்து வளர்ந்த ஒரு யவன பண்ட சாலை சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் சங்க நூல்களில் கூறப்பட்டிருக்கும் வியாபாரச் செய்திகளை ஒத்திருத்தலால், சங்க நூல்களுக்கு நாம் குறிப்பிட்டிருக்கும் காலத்தை வலியுறுத்துகிறது.

உதியஞ்சேரல் (கி. பி. 130) குருக்ஷேத்திரத்தில் படைகளுக்குப் பெருஞ்சோறு கொடுத்தவனாகப் புகழப்படுகிறான். இது இவன் முன்னோர் செய்ததை இவன் மேல் ஏற்றிக் கூறப்பட்டதாகக் கொள்ளவேண்டும். இவன் மகன் நெடுஞ்சேரலாதன் உள்நாட்டுச் சத்துருக்கள் சிலரைக் கடற்போரில் வென்றதோடு அவரிடமிருந்தே அரிய கலங்களையும் வைரத்தையும் பெற்று அவர்களை விடுவித்தான். இவனுக்கு இமய வரம்பன் என்ற பெயரும் உண்டு. இவன் ஆண்ட ஆண்டுகள் 58. இவனுக்குப்பின் ஆண்ட இவன் தம்பி பல்யானைச் செல்கெழுதட்டுவன் சேர ஆட்சியைப் பரப்பினான். நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு மனைவியரிடம் இரண்டு மக்களிருந்தனர். அவர்களில் ஒருவன் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல். இவன் பூழிநாட்டு மன்னனைப் போரில் வென்றான். ஆதனுடைய மற்றொரு மகன் செங்குட்டுவன் (கி. பி. 180) பரணரால் புகழப்பட்டவன். இவனைக் ‘கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்’ என்பர்.

ஆக உதியஞ்சேரல் வமிசத்து அரசர் ஆட்சிசெய்த ஆண்டுகள் மொத்தம் 201. மற்றொரு கிளை அரசர்கள் மூவர். மொத்தம் 58 ஆண்டுகள் ஆண்டனர். இவர்களெல்லாம் முறையே ஒருவருக்குப்பின் ஒருவர் ஆண்டதாகக் கொள்ள இடமில்லை. பெரும்பாலும் ஒரே காலத்தில் பலர், நாட்டின் பல பகுதிகளில் ஆண்டிருக்கவேண்டும். இதே மாதிரி கொண்டால்தான் 9 சோழ மன்னர்கள் ஒரு காலத்தில் செங்குட்டுவனால் நேர்வாயில் போரில் வீழ்த்தப்பட்டனர் என்பது விளங்கும். இரண்டாம் கிளையினர் ஆகிய சேர மன்னருள் அந்துவன் வீரனும் வள்ளலுமாக விளங்கினான். அவன் மகன் செல்வக்கடுங்கோவாழிஆதன் பல வைதிக வேள்விகள் செய்தான். அவர்களுக்குச் சமகாலத்தரான வேளிருள் ஆயும் பாரியும் சிறந்தவர்கள். வேள் ஆய் ஆண்ட நாடு பொதிய மலையைச் சார்ந்தது. அதைக் கிரேக்க ஆசிரியர் டாலமியும் குறிப்பிட்டிருக்கிறார். வேள் பாரி வள்ளன்மை பொருந்திய மற்றொரு வீரன். அவன் ஆண்டது பாண்டிய நாட்டில் கொடுங்குன்றம் அல்லது பிரான் மலையைச் சூழ்ந்த பகுதியே.

செல்வக்கடுங்கோவாழி ஆதன் மகன் பெருஞ்சேரல் இரும்பொறை (கி. பி. 190). இவன் அதியமான் அஞ்சியையும் வென்றான். இவனால் வெல்லப்பட்ட அதியமான் ஒளவையாரை ஆதரித்து வந்த தலைவன்.. அதியமான் ஒரு காலத்தில் ஏழு அரசர்களைப் பகைத்துப் போரில் வென்றான். மற்றொரு சமயம் இவன் கோவலூரை வென்றதைப் பரணர் புகழ்ந்து பாடி இருக்கிறார். இவன் மகன் பொகுட்டெழினி.

பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தின் தலைவனான குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறை என்பான் (கி. பி. 190) பாண்டியன், சோழன், விச்சிக்கோன் முதலோரை வென்று, அவன் தலைநகராகிய வஞ்சிக்கு மிக்க பொருளைக்கொண்டு வந்து சேர்த்தான். யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை (கி. பி. 210) என்ற மற்றொரு சேர அரசன், பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் சிறை வைக்கப்பட்டு வெளிவந்ததும் தன் சத்துருக்களை மாய்த்துச் சிங்காதனம் எய்தினான்.

சோழர்களில் முக்கியமானவன் கரிகாலன் (கி. பி. 190). இவன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் மகன். இவனுக்குக் குழந்தைப் பருவத்தில் காலில் நெருப்புச் சுட்டதால் கரிகாலன் என்ற பெயர் வந்தது. பிற்காலத்தில் இப்பெயரை வடமொழியாகக் கொண்டு வேறு பொருள்கள் கற்பித்தனர். இளமைப் பருவத்தில் இவன் சத்துருக்களால் சிறையிலிடப்பட்டுத் தன் வலிமையால் அதனின்று வெளியேறி இராச்சியம் பெற்றது பட்டினப்பாலையில் கூறப்பட்டிருக்கிறது. வெண்ணிப் போரில் இவன் அடைந்த பெருவெற்றியில் பாண்டியனும் சேரனும் பல வேளிரும் தோல்வியுற்றார்கள். சேரன் முதுகில் புண்ணுற்று வடக்கிருந்து உயிர் நீத்தான். வாகைப்பறந்தலையில் சிற்றரசர்கள் ஒன்பதின்மர் கரிகாலனுடன் போரிட்டுத் தங்கள் குடைகளை இழந்தார்கள். இவன் வெற்றிகளால் வெளிநாட்டாருடைய வீரம் குறைந்தது. அருவாநாட்டார் இவன் இட்ட தொழில்களைச் செய்தனர். வடநாட்டரசர் வாடவும், சேர நாட்டவர் மனவெழுச்சி குறையவும், தென்னவன் திறல் கெடவும் நேர்ந்தன. தவிரவும் பிற அரசர்களும் வேளிர் குலங்களும் வலி ஒடுங்கின. இவன் நாட்டுத் துறைமுகமாகிய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையும் அதன் வியாபாரப் பெருக்கும் அதன் துறைமுகத்தில் கப்பல்களின் போக்குவரத்தும் பட்டினப்பாலையில் விரிவாக வருணிக்கப்படுகின்றன.

காஞ்சீபுரத்திலாண்ட தொண்டைமான் இளந்திரையனும் கரிகாலன் காலத்தவனே. இவன் திருமால் வழித் தோன்றல் என்றும், கடலின் திரைகளால் தரப்பட்ட மரபினன் என்றும் புகழப்படுகிறான். அதியமானுக்காக ஒளவையார் தூது சென்றது இவனிடமோ அல்லது இவன் வமிசத்து வேறொரு தொண்டைமானிடமோ என்று தெரியவில்லை.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆண்ட காலம் சுமார் கி. பி. 210. இவன் ஒரு கவி ; மாங்குடி மருதனார், நக்கீரர் முதலிய புலவர்களாற் புகழப்பட்டவன் ; நெடியோன் என்ற ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியனும், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியும், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனும் இவனுடைய முன்னோர்களாவர். கடைசியாகக் கூறப்பட்டவன் கரிகாலனுடனும் சேரன் செங்குட்டுவனுடனும் சம காலத்தவன் என்பதும், கோவலனை அநியாயமாகக் கொல்வித்ததற்காக வருந்தி உயிர் நீத்தவன் இவனே என்பதும் சிலப்பதிகாரக் கதை. நெடுஞ்செழியன் சிறு பிராயத்திலேயே பட்டத்திற்கு வந்தான். அதனால் இவன் சத்துருக்கள் “பெரியம் யாமே, நம்மிற் பொருநனும் இளையன், கொண்டியும் பெரிது” எனக் கொண்டு, இவன் நாட்டின்மேற் படையெடுத்து வந்தனர். பாண்டியன் மதுரைக்கருகிலேயே இவர்களைச் சந்தித்து, வடபால் வெகுதூரம் இவர்களைத் துரத்தித் திருவாரூருக்கு எட்டு மைல் வடமேற்கேயுள்ள தலையாலங்கானம் என்னுமிடத்தில் இவர்களை முறியடித்தான். இப்போரில் தான் யானைக்கட்சேய் பிடிபட்டுச் சிறையிலடைக்கப்பட்டான். பாண்டியன் வேள் எவ்வியிடமிருந்து, மிழலை, முத்தூறு என்னும் இரண்டு கூற்றங்களைப் பறித்துத் தன் நாட்டோடு சேர்த்தான். மதுரைக் காஞ்சியில் மதுரையின் வனப்பும், பாண்டி நாட்டின் வளமும் நெடுஞ்செழியன் ஆட்சியின் மேன்மையும் விரிவாகக் கூறப்படுகின்றன.

கரிகாலனுக்குப் பின் சோழநாட்டில் நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் ஏற்பட்ட போர்களைக் குறித்துக் கோவூர்கிழாரும் வேறு புலவர்களும் பாடிய பாடல்கள் பல புறநானூற்றில் உள. நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை நெடுங்கிள்ளி, ‘இவன் ஒற்று வந்தான்’ என்றெண்ணிக் கொல்லப் புகுந்தபோது, கோவூர் கிழார் அவனை உயிர் தப்புவிக்கப் பாடிய பாடல் ஒன்றும் இவைகளில் அடங்கியுள்ளது. செருப்பாழி, பாமரூர் என்னும் கோட்டைகளைச் சேரர்களிடமிருந்து கைப்பற்றின நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியும் அக்காலத்துச் சோழ அரசர்களில் ஒருவன், சோழன் செங்கணான் சங்க காலத்து இறுதியிலோ, அதற்குக் கொஞ்சம் பின்னோ ஆண்டிருக்கவேண்டும். இவன் போர் என்னுமிடத்தில் நடத்திய போரிற் கணைக்கால் இரும்பொறை என்ற சேர அரசனைப் பிடித்துச் சிறையிலிட்டான். அவ்வரசனுடைய நண்பராகிய பொய்கையார் என்னும் புலவர் ‘களவழி நாற்பது’ என்னும் நூலைப் பாடி இரும்பொறையைச் சிறை மீட்டதாக ஒரு வரலாறுண்டு. செங்கணான் ஒரு சிவபக்தன். இவன் பல கோயில்கள் கட்டி யிருக்கிறான்.

நல்லியக்கோடனைக் குறித்து நத்தத்தனார் பாடிய சிறுபாணாற்றுப்படையால் சங்க காலத்து இறுதியில் தமிழ் நாட்டில் ஏற்பட்ட மாறுதல்கள் வெளியாகின்றன. நல்லியக்கோடன் ஆண்டது தற்காலத்துத் தென்னார்க்காட்டின் ஒரு பகுதி. அவன் ஆண்ட காலம் சுமார் கி. பி. 275-300 வரை. அக் காலத்தில் வஞ்சி, மதுரை, உறையூர் ஆகிய தலைநகரங்கள் தாழ்நிலை அடைந்திருந்தன என்றும், தருமம் செய்யக் கூடிய வேளிர்கள் பலரும் காலம் சென்றுவிட்டனரென்றும் நத்தத்தனார் பாடுகிறார். இதற்கப்புறம் அடுத்த மூன்று நூற்றாண்டுகளுக்குத் தமிழ் நாட்டின் வரலாறு சரியாக விளங்காததால் இதை ஓர் இருண்ட காலம் என்றே சொல்லலாம்.

சங்க காலத்தில் நீர்வளமும் நிலவளமும் பெருகி மக்கள் திருப்தியுடன் வாழ்ந்ததாகக் கூறலாம். சேர நாட்டில் எருமை, பலா, மிளகு, மஞ்சள் முதலியவை மிகுதி. ஒரு வேலி ஆயிரம் கலம் கொடுக்குமென்றும், ஒரு பெண் யானை படுக்குமிடம் ஏழு யானைகளுக்கு உணவளிக்குமென்றும் சோழநாட்டு வளம் கவிகளால் புகழப்படுகிறது.

உள்நாட்டிலும் அயல் நாடுகளுடனும் வியாபாரம் மும்முரமாக நடந்து வந்தது. துறைமுகப்பட்டினங் களில் பெரிய கப்பல்கள் வருவதும் போவதும் அயல் நாட்டார் பலர் வந்து தங்குவதும் நடைபெற்றன. புகாரும் முசிரியும் மிகவும் புகழ்பெற்ற வணிக நகரங்களாக விளங்கின. பாண்டி நாட்டில் சாலியூரும், சேரநாட்டில் தொண்டியும் அவ்வாறே விளங்கின. வேறு பல சிறு துறைமுகங்களும் இருந்தன. புகாரின் வளமும், அங்குள்ள வணிகர்களின் செல்வமும் நேர்மையும் பட்டினப்பாலையில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டிருக்கின்றன. கடல் வழியாகக் குதிரைகள் வந்து இறங்கின. மிளகும் கருவாப்பட்டையும், அகில், சந்தனம் முதலிய வாசனை மரங்களும், வாசனைத் திரவியங்களும் தந்தமும், நயமான துணிகளும் மணிகளும் வைரமும் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டன. இறக்குமதிச் சரக்குக்களில் முக்கியமானவை தங்கமும் வெள்ளியும் ; இவை நாணயங்களாக வந்தன. அக் காலத்தில் வந்த பல நாணயக் குவியல்கள் இன்னும் நாட்டில் பல இடங்களில் புதைந்து கிடந்து, தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. பெரிப்ளுஸ் என்னும் கிரேக்க நூலில் மூன்று வகையான தமிழ் நாட்டுக் கப்பல்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் மிகப் பெரியவை பெரிய சமுத்திரங்களைத் தாண்டிப் பல அயல் நாடுகளுக்குச் சென்றன என்று கூறப்பட்டிருக்கிறது. வாணிகம் கி. பி. முதல் இரண்டு நூற் றாண்டுகளில் செழித்து வளர்ந்து, மூன்றாம் நூற்றாண் டில் குறைய ஆரம்பித்தது. மறுபடி ஐந்தாம் நூற்றாண்டில் சிறிது அதிகரித்தது. ஆனால் அது வெகு காலம் நீடித்திருக்கவில்லை. கடல் வியாபாரம் செழித்து வளர்ந்த நாட்களில், அதாவது கி. பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் பல தமிழர்களும் ஆந்திரரும் நாட்டைவிட்டுக் கிழக்கிலுள்ள மலேயா தீபகற்பத்திற்கும், ஜாவா, சுமாத்ரா முதலிய தீவுகளுக்கும், இந்தோ சீன நாட்டுக்கும் சென்று குடியேறினர் என்பதற்குப் பல சான்றுகள் கிடைக்கின்றன. (பார்க்க : தமிழர்- பிற நாடுகளில் தமிழர்).

உள் நாட்டில் வியாபாரச் சரக்குக்கள் வண்டிகளிலும் மாடுகள், குதிரைகள், கழுதைகள் முதலிய பிராணிகளின் முதுகிலும் ஊர் ஊராகக் கொண்டு போகப்பட்டன. பண்டங்களை ஒன்றுக்கொன்று மாற்றும் வழக்கம் மிகுந்திருந்தது. தேனும் கிழங்கும் மீனுக்கும் கள்ளுக்கும் மாற்றப்பட்டன. கரும்பும் அவலும் மான் இறைச்சிக்கு விற்கப்பட்டன. முசிரியில் மீன் விற்று நெல் கொண்டனர். நிலத்தைப் பயிரிடுவதில் உழவர்கள் மிகவும் ஈடுபட்டனர். வேளாளர் உழுது உண்பவரும் உழுவித்து உண்பவருமாக இரு வகைப் பட்டனர். ஒரு வகையினர் படைகளிலும் அரசியல் வேலைகளிலும் ஈடுபட்டு, அரசரால் மதிக்கப் பெற்று 'மாராயம்' பெறுவது உண்டு. நூற்றலும் நெசவும் பலரால் கையாளப்பட்டன. ஊசி, கத்தரிக்கோல் முதலிய கருவிகள் வழக்கத்திலிருந்தன.

வேத வேள்விகள் அரசராலும் அந்தணராலும் நடத்தப்பட்டு வந்தன. பசுவின் கொலை, கருவழித்தல், பார்ப்பாரைப் பழித்தல் முதலியவை குற்றங்களாகக் கருதப்பட்டன. நன்றி மறத்தல் இவற்றிலும் கொடிய குற்றமாகக் கருதப்பட்டது. பிணங்களை எரிப்பது, தாழியில் அடக்குவது, குழிகளில் இடுவது முதலிய பல வேறு வழக்கங்கள் இருந்தன. இறந்த கணவனுக்கு அவன் மனைவி இடும் பிண்டத்தில் புலையனுக்கும் பங்குண்டு. உடன் கட்டையேறுதல் கையாளப்பட்டு வந்தது. கைம்பெண்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்த தாகவே இருந்தது. முருகன், சிவன், திருமால், பலராமன், முதலிய தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்தனர். கோயில்களுக்குப் பெண்டிரும் குழந்தைகளும் போவதுண்டு. முருகன், கொற்றவை, திருமால் முதலி யோருடைய வணக்கத்தில் ஆடலும் பாடலும் அதிகமாகக் கையாளப்பட்டு வந்தன. பல மதங்களிலும் துறவிகளின் வாழ்க்கை சிறப்பிக்கப்பட்டது. ஆகவே ஆண்களிலும் பெண்களிலும் சிலர் இல்லறவாழ்க்கை யைத் துறந்தனர்.

சங்க காலத்தின் முடிவு சுமார் கி. பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதி என்று வைத்துக்கொள்ளலாம். அதற்குப் பின் ஆறாம் நூற்றாண்டின் இறுதிவரை தமிழ் நாட்டின் வரலாற்றில் ஓர் இருண்ட காலம். அக்காலத்தில் நடந்த செய்திகளைக் குறிக்கும் நூல்களோ சாசனங்களோ கிடைக்கவில்லை. ஆனால் சமண மதமும் பௌத்த மதமும் ஓங்கி வளர்ந்தன. பதினெண்கீழ்க்கணக்குக்களில் பல நூல்கள் (குறள் உட்பட) இயற்றப்பட்ட காலம் இதுவேயாகலாம். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதே காலத்திலோ, சற்றுப் பின்னாகவோ இயற்றப்பட்டிருக்க வேண்டும். பிற்காலத்துச் சாசனங்கள் பல, முக்கியமாக வேள்விகுடிச் செப்பேடு, இவ்விருண்ட காலத்தில் களப்பிர ரென்னும் கொடிய வேந்தர்கள் தங்கள் கொடுங் கோன்மையைத் தமிழ் நாட்டில் நடத்தியதாகக் கூறு கின்றன. அச்சுத விக்ராந்தன் என்ற களப்பிர குல மன்னன் சோழநாட்டை ஆண்டானென்றும், பல பௌத்த விஹாரங்களைக் கட்டிப் பௌத்த ஆசிரியரை ஆதரித்தும் அவர்களை நூல்களியற்றச் செய்தானென்று, அக்காலத்துப் புத்ததத்தர் என்னும் ஆசிரியர் எழுதிய நூல்களால் அறிகிறோம். இவ்வச்சுதனைப் பற்றிய சில பழைய பாடல்களும் யாப்பருங்கலத்திலும் தமிழ் நாவலர் சரிதையிலும் காணப்படுகின்றன. இவன் தமிழரசர் மூவரையும் வென்று சிறை வைத்தானென்று அறிகிறோம்.

கி. பி. ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாதாமிச் சாளுக்கியர், காஞ்சீபுரப் பல்லவர்கள், மதுரைப் பாண்டியர் ஆகிய மூன்று அரச வமிசத்தினர் முன்னேற்றமடைந்தனர். அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் இவர்களுடைய வரலாறே தென்னிந்திய வரலாறு. சோழர் தம் ஆதிக்கம் குன்றி, உறையூரின் அருகில் சிற்றரசராக வதிந்து வந்தனர். அக்காலத்தில் சண்டைகள் பல நிகழ்ந்த போதிலும், கைத்தொழில்கள், வியாபாரம், இலக்கியம், சிற்பம் முதலியவை சிறந்து முன்னேற்றமடைந்தன.

தட்சிண பீடபூமியும் மைசூரின் வடபாகமும் மௌரிய சாம்ராச்சியத்தைச் சேர்ந்திருந்தன. அசோகன் இறந்து சில காலத்திற்குப் பின் ஆந்திரசாதியைச் சேர்ந்த சாதவாகன குலத்து அரசர்கள் சுதந்திர அரசர்களாக மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரைத் தலைநகராகக் கொண்டு ஆளத்தொடங்கினார்கள். கி. பி. முதல் நூற்றாண்டில் பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாட்டில் மதில் சூழ்ந்த முப்பது நகரங்கள் இருந்தனவென்றும், அதன் படை இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைப் படையும், ஆயிரம் யானைகளும் அடங்கியதென்றும் கூறுகிறார். விசுவாமித்திரர் சாபத்தால் சாதி நீக்கம் அடைந்த மக்களில் ஆந்திரரும் ஒருவர் என்று ஐதரேய பிராமணம் கூறும். சாதவாகன குலத்து அரசர் கிழக்குத் தட்சிணத்தில் கிருஷ்ணா நதிக் கரையில் உள்ள ஸ்ரீகாகுளத்தில் முதன் முதல் தங்கள் ஆதிக்கத்தைத் தாபித்தனர் என்று சிலர் கொள்வது பொருத்தமின்று; ஆதி சாத வாகனரின் சின்னங்கள் ஒன்றும் கோதாவரி கிருஷ்ணா ஜில்லாக்களில் காணப்படவில்லை. இவ்வமிசத்தவர் மௌரிய அரசரிடம் உத்தியோகம் பெற்று, மேற்குத் தட்சிணத்தில் வேரூன்றியபின் மௌரியர் வலிமை குன்றவே தங்களுடைய சுதந்திரத்தைத் தாபித்தனர் என்று கொள்வதே தகும். சாதவாகனன் என்ற பெயரைப் பிற்காலத்தவர் சாலிவாகனன் என்று வழங்குவர். மேல்நாட்டு விமர்சகர் ஒருவர் இது சதம் (குதிரை), ஹபன் (மகன்) என்ற இரண்டு , முண்டா மொழிச் சொற்களடங்கியதால் அசுவமேதம் செய்தவன் மகன் எனப் பொருள்படும் என்பர். சாதகர்ணி என்ற பெயரும் அதே பொருளுடைத்தென்பர். இது உண்மையாயின், சதகர்ணியை நூற்றுவர் கன்னர். எனச் சிலப்பதிகார ஆசிரியர் மொழிபெயர்த்திருப்பது தவறாகும். கௌதமீ புத்ரசாதகர்ணி என்ற அரசன் நிகரற்ற பிராமணன் என்றும், க்ஷத்திரியர் பெருமையை அடக்கினவன் என்றும் சாசனங்களில் புகழப்படுகிறான். ஆகையால் சாதவாகனர் பிராமணரென்று கொள்ளலாம். மச்ச புராணத்தில் முப்பது சாதவாகன அரசர் சுமார் 460 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறப்படுகிறது; ஆனால் வாயுபுராணம் 17, 18 அல்லது 19 அரசர் 300 ஆண்டுகள் ஆண்டதாகக் கூறும். மச்சபுராணப் பட்டியிலுள்ள பல அரசர்களின் பெயர்கள் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படுவதால் அதுவே சரியென்று கொள்ளவேண்டும்.

முதல் சாதவாகன அரசன் சிமுகன் (ஸ்ரீமுகன்) 23 ஆண்டுகள் ஆண்டபின் சில கொடுமைகள் விளைத்தபடியால் குடிகளால் கொல்லப்பட்டான் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவனுக்குப்பின் அவன் சகோதரன் கண்ணன் (கிருஷ்ணன்) இராச்சியத்தை நாசிக் வரை மேற்றிசையில் பரப்பினான். மூன்றாம் அரசன் முதல் சாதகர்ணி மிகவும் திறமை வாய்ந்தவன். அவனுக்கும் அவன் தகப்பன் சிமுகனுக்கும் நானாகாட் குகையில் உருவச் சிலைகள் செதுக்கப்பட்டன. அவை இப்போது சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. அவன் மேற்கு மாளவ தேசத்தைச் சுங்கரிடமிருந்து வென்று கொண்டான். இரண்டாம் சாதகர்ணியான ஆறாம் அரசன் 56 ஆண்டுகள் ஆண்டான். இவன் ஆட்சியே சாதவாகன ஆட்சிகளெல்லாவற்றிலும் மிக வும் நீண்டதாகும். இவன் ஆட்சியிறுதியில் கிழக்கு மாளவ தேசமும் இவன்' வசமாயிற்று. ஆபீலகன் என்னும் எட்டாம் அரசன் காலத்தில் மத்தியப் பிரதேச மும் சாதவாகன ஆட்சிக்குள்ளடங்கியிருந்தது. பதினேழாம் அரசன்' ஹால (கி. பி. 20-24) என்பவன் சத்தசாயி என்ற 700 பாக்கள் கொண்ட அரிய மகாராஷ்டிரப் பிராகிருத நூலைத் தொகுத்தான்.

இதற்குப் பின் கூர்ஜரத்தில் ஆண்டு வந்த சக அரசர்களால் சாதவாகன இராச்சியத்திற்குத் தீங்கு ஏற்பட்டது. இவ்வரசர்களுக்கு க்ஷத்ரபர் என்று பெயர்; இவர்கள் சுகராத வமிசத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் முதல் அரசன் பூமகன். நகபானன் என்பவன் பெரிய வெற்றிகள்பெற்ற போர் வீரன். அவன் கூர்ஜரத்தைத் தவிர வடமகாராஷ்டிரம், கொங்கணம் முதலிய நாடுகளைச் சாதவாகனரிடமிருந்து வென்று கொண்டு தன் இராச்சியத்தைப் பெருக்கினான். அவன் காலத்தில் மேற்கு நாடுகளிலிருந்து வரும் வியாபாரக் கப்பல்கள் சாதவாகனத் துறைமுகமான கலியாணுக்குப் போகாமல் தடுக்கப்பட்டுப் பரிகஜா, பருகச்சா அல்லது ப்ருகுகச்சம் (தற்காலத்துப் புரோச்) என்னும் சகத் துறைமுகத்துக்கே சென்றன. சகர் ஆதிக்கத்தின் வெற்றிக்காலம் சுமார் கி. பி. 40-80 என்று கூறலாம்.

இருபத்து மூன்றாம் சாதவாகன அரசனான கௌதமீ புத்ர சாதகர்ணி (கி. பி. 80-104) நகபானனையும் அவன் நட்பரசரையும் பலமுறை தோற்கடித்துத் தன் முன்னோர் இழந்த நாடுகளை மீட்டுக் கொண்டான். அவன் ஆட்சி நருமதையைத் தாண்டி மாளவம், மேற்கு ராஜபுதனம் முதலிய நாடுகளில் நிலவியது. விதர்ப்ப தேசமும் (பேரார்) வனவாசியும் கூட அவனுக்குக் கீழ்ப்பட்ட நாடுகளே. அவன் இறந்து பத்தொன்பது ஆண்டுகளுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் புளுமாயி 24 ஆண்டுகள் ஆண்டான். அவன் நாணயங்கள் கோதாவரி, குண்டூர் ஜில்லாக்களிலும், சோழ மண்டலக் கரையில் கடலூர் வரையிலும் அகப்படுகின்றன. அவன் காலத்தில் கிழக்குத் தட்சிண நாடுகளை அவன் வென்றுகொண்டிருந்த காலத்தில் போலும் மேற்கே சகர்கள் மறுபடி சாதவாகன இராச்சியத்தின்மீது படையெடுத்துத் தங்கள் ஆட்சியைப் பெருக்கிக் கொண்டது. மேற்கு ராஜபுதனமும் மாளவ தேசமும் அவர்கள் வசமாயின (கி. பி. 126-31). அவர்களுடன் சமாதானம் ஏற்படும் பொருட்டுப் புளுமாயிக்குப்பின் ஆண்ட சாதகர்ணி ஒருவன் மகாஷத்ரப ருத்ரதாமன் மகளை மணந்தான். ஆனால் ருத்ரதாமன் அடுத்த சாதவாகன அரசருடன் இருமுறை போர்புரிந்து வெற்றி பெற்றான். கி. பி. 170 வாக்கில் 29 ஆண்டுகள் ஆண்ட யஞ்ஞ சாதகர்ணி மிகவும் பிரசித்தி பெற்றவன். பிராத வமிசத்தின் கடைசியான அரசன் நான்காம் புளுமாயி.

சாதவாகனர் ஆட்சிக் காலத்தில் (கி. மு. 230 கி. பி. 250) கைத்தொழில்கள், வியாபாரம், கலைகள் முதலியவை செழித்து வளர்ந்து வந்தன. குணாட்டியனென்னும் கவி பிருகத்கதை என்னும் நூலைப் பைசாச மொழியில் இயற்றினான். சாதவாகனருக்குப் பகையாக இருந்த சக மன்னர்கள் வட மொழியையும், விசேஷமாக நாடகத்தையும் போற்றி வந்ததாக எண்ண இடமுண்டு. பௌத்த விஞ்ஞானிகளான நாகார்ஜுனனும் அவன் சீடன் ஆரியதேவனும் இதே காலத்தவரே. சாதவாகனர் இந்துக்களே ஆயினும் அவர் காலத்தில் பௌத்த மதம் மிகவும் சிறப்பாக விளங்கிற்று. நாசிக், கார்லா, பேத்சா, கானேரி முதலிய மேலைமலைக் குகைக் கோயில்களும் அமராவதி, ஜக்கய்யபெட்டை, கண்ட சாலா முதலிய கீழ்த்தட்சிண ஊர்களிலுள்ள தூபிகளும் விஹாரங்களும் பௌத்தர்களுடைய சிற்பச் சிறப்பை நன்றாக வெளிப்படுத்துகின்றன.

சாதவாகனர் ஆதிக்கம் குன்றியபின் தட்சிணத்தில் பல சிறிய இராச்சியங்கள் ஏற்பட்டன. வடமேற்கில் ஆபீரா என்னும் அயல் நாட்டார் சிறிது காலம் ஆண்டனர். அவர்கள் முதலில் சகர்களுக்குப் படைத்தலைவராக இருந்தனர். புராணங்களில் பத்து ஆபீர அரசர்கள் 67 ஆண்டு ஆண்டனர் என்று காண்கிறோம்; ஆனால் ஈசுவரசேனன் (கி. பி. 235-40) என்ற ஓர் அரசன் பெயர் மட்டுமே கிடைத்திருக்கிறது. மகாராஷ்டிர தேசத்திலும் குந்தள தேசத்திலும் சுடு வமிசத்தவர் ஆண்டனர். அவர்களைச் சிலர் சாதவாகனரில் ஒரு பகுதியினர் எனக் கருதுவர் ; சிலர் நாக வமிசத்தவரென்பர். அவர்களுடைய சாசனங்களும் நாணயங்களும் வடகன்னடம், சித்திர துருக்கம், அனந்தப்பூர், கடப்பை ஜில்லாக் களிலும்‌ கானேரியிலும்‌ காணப்படுகின்றன. அவர்கள்‌ நாடு கடைசியாகப்‌ பல்லவரால்‌ ஆக்கிரமிக்கப்பட்டது. கிருஷ்ணா, குண்டூர்‌ ஜில்லாக்களில்‌ இட்சுவாகு வமிசத்‌தவர்‌ ஆண்டனர்‌. அவர்களுக்கு. ஆந்திரப்பிருத்தியரென்றும்‌ ஶ்ரீ பார்வதியரென்றும்‌ பெயருண்டு. இவை ஆந்திரருடைய சேவகர்கள்‌, ஶ்ரீ பார்வதி அரசர்கள்‌ என்று பொருள்படும்‌. புராணங்கள்‌ ஏழு இட்சுவாகு அரசர்கள்‌ 52 ஆண்டுகள்‌ ஆட்சி செய்தனர்‌ என்று கூறும்‌. முதல்‌ அரசன்‌ வாசிஷ்டபுத்திர சாந்தமூலன்‌ என்பவன்‌ வாஜபேயம்‌, அசுவமேதம்‌ முதலிய யாகங்கள்‌ செய்தான்‌. ஆனால்‌ அவன்‌ மகன்‌ வீரபுருஷ தத்தன்‌ காலத்தில்‌ பௌத்தமதம்‌ மிகவும்‌ செழித்தோங்கியது. அவன்‌ உஜ்‌ஜயினியிலிருந்த ஒரு சக அரசன்‌ மகளை மணந்தான்‌. தன்‌ மகளைச்‌ சடுகுல அரசனுக்கு அளித்‌தான்‌. நாகார்ஜுனகொண்டாவின்‌ தூபிகளும்‌ பல விஹாரங்களும்‌ மண்டபங்களும்‌ இவன்‌ காலத்தில்‌ கட்டப்பட்டன. அவனுக்குப்பின்‌ ஆண்ட எகுவலசாந்த மூலனும்‌ பௌத்த மதத்தை ஆதரித்தவனே. அவன்‌ காலத்தில்‌ இலங்கைக்கும்‌ அவன்‌ நாட்டுக்கும்‌ மிக்க தொடர்பு ஏற்பட்டது. இட்சுவாகுக்களுக்குப்பின்‌ பிருகுத்பலாயனர்‌ ஆண்டனர்‌. அவருள்‌ ஜயவர்மனென்‌ற ஓர்‌ அரசனுடைய பெயர்‌ மட்டுமே கிடைத்‌திருக்கிறது.

கி.பி. மூன்றாம்‌ நூற்றாண்டின்‌ பிற்பகுதியில்‌ பல்‌லவர்கள்‌ தொண்டை நாட்டை ஆளத்தொடங்கினர்‌. சுடுகுலத்தவர்‌, கதம்பர்‌ முதலியோரைப்‌ போல வட இந்தியாவிலிருந்து தென்னாட்டில்‌ குடியேறி, அங்‌குள்ள மக்களுடன்‌ கலந்து, அவர்கள்‌ நாகரிகத்தைக்‌ கைக்கொண்டனர்‌ என்று எண்ணலாம்‌. பல்லவருக்கும்‌ சங்ககாலத்துத்‌ தொண்டைமான்களுக்கும்‌ ஏதாவது தொடர்புண்டா என்பது தெரியவில்லை. தொண்டை ஒரு கொடி; பல்லவம்‌ என்றால்‌ தளிர்‌. இதைத்‌ தவிர வேறு சான்‌று ஒன்றும்‌ காணோம்‌. பிற்காலத்துப்‌ பல்‌லவர்‌ தங்களை அசுவத்தாமாவுக்கும்‌ அப்சரசு ஒருத்‌திக்‌கும்‌ பிறந்த பிள்ளையின்‌ வழியினர்‌ என்‌றும்‌, அப்பிள்ளையைப்‌ பிறந்தவுடன்‌ அவன்‌ தாயார்‌ தளிர்கள்‌ அடங்கிய ஒரு தொட்டிலில்‌ இட்டதால்‌ அவனுக்குப்‌ பல்லவன்‌ என்று பெயர்‌ ஏற்பட்டதென்றும்‌ கதைகள்‌ கட்டிக்‌ கொண்டனர்‌. இப்போது நமக்குத்‌ தெரிந்த பல்லவ அரசருக்குள்‌ முந்தியவன்‌ சிம்மவர்மன்‌. இவனுடைய கல்வெட்டொன்று குண்டூர்‌ ஜில்லா, பல்‌ நாடு தாலுகாவில்‌ சில ஆண்டுகளுக்குமுன்‌ அகப்பட்டது. ௮து பிராகிருத மொழியில்‌ இட்சுவாகு சாசனங்களிலுள்ளவற்றைப்‌ போன்ற எழுத்துக்களில்‌ வரையப்பெற்றது. மற்றப்‌ பல்லவரைப்போலவே இவனும்‌ பாரத்‌துவாச கோத்திரத்தைச்‌ சேர்ந்தவன்‌. இவனுக்குப்பின்‌ ஸ்கந்தவர்மன்‌ சில காலம்‌ இளவரசனாக இருந்தபின்‌ தர்ம மகாதிராஜனாக ஆண்டான்‌. இவனுக்குத்‌ தலைககர்‌ காஞ்சி. இவன்‌ ஆட்சி வடக்கே கிருஷ்ணாநதி வரையும்‌, மேற்கே அரபிக்கடல்‌ வரையும்‌ பரவியிருந்தது. இவன்‌ மகன்‌ இளவரசனாகவிருந்த புத்தவர்மன்‌; இவனுக்குச்‌ சாருதேவி என்ற மனைவியும்‌ புத்யங்குரன்‌ என்ற மகனும்‌ இருந்தனர்‌. இவைகளெல்லாம்‌ அக்‌காலத்துச்‌ செப்பேடுகள்‌ மூன்‌றினால்‌ தெரிய வருகின்‌றன. தக்க ஆதாரங்கள்‌ கிடைக்காமையால்‌ இக்காலத்‌துப்‌ பல்லவரின்‌ வரலாற்றை ஒழுங்காகக்‌ கூற இயலவில்லை. நான்காம்‌ நூற்றாண்டின்‌ முற்பகுதியில்‌ குப்த அரசனான சமுத்திரகுப்தன்‌ தட்சணத்தின் மீது படையெடுத்து வந்தபோது அவனை எதிர்‌த்த அரசர்களில்‌ காஞ்சிபுரத்து விஷ்ணுகோபன்‌ என்னும்‌ பல்லவ அரசனும்‌ ஒருவன்‌. ஏறத்தாழ அதே காலத்தில்‌ குமாரவிஷ்ணுவும்‌ (325-50) ஆண்டான்‌. இவன்‌ சந்ததியார்‌ சுமார்‌ கி.பி. 500 வரை ஆண்டனர்‌. அவர்கள்‌ காலத்‌துச்‌ செப்பேடுகள்‌ பல கிடைத்திருக்கன்றன. அவை வடமொழியில்‌ எழுதப்பட்டு, அவர்கள்‌ செய்த தானங்‌களைக்‌ குறிப்பதைத்‌ தவிர வேறு முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவில்லை. அக்காலத்துக்‌ கங்க அரசர்‌ சாசனங்களால்‌ அவர்களுக்கும்‌ பல்லவர்‌களுக்கும்‌ உள்ள தொடர்புகள்‌ வெளியாகின்றன. கி.பி. 458 ஆம்‌ ஆண்டு ஒரு சிம்மவர்மன்‌ ஆட்சியின்‌ 22 ஆம்‌ ஆண்டென்பது அக்காலத்தில்‌ எழுதப்பட்ட லோக விபாகம்‌ என்ற ஒரு சமண நூலால்‌ அறிகிறோம்‌. இக்‌காலத்துப்‌ பல்லவச்‌ செப்பேடுகள்‌ பொதுவாக மற்ற ஊர்களிலிருந்து கொடுக்கப்பட்டனவாகக்‌ கூறப்படுவதால்‌ காஞ்சிபுரம்‌ இக்காலத்தில்‌ பல்லவர்‌ வசமின்றிச்‌ சோழர்‌ வசமாயிருக்கலாமென்பது சிலர்‌ கொள்கை. இவ்‌ வடமொழிச்‌ செப்பேடுகளில்‌ குறிக்கப்பட்டவர்‌களையும்‌ அவர்கள்‌ காலத்தையும்‌ அட்டவணையில்‌ காணலாம்‌.

      செப்பேடுகள்‌ கூறும்‌ குமாரவிஷ்ணுவின்‌ வமிசாவளி
                        குமாரவிஷ்ணு I (325-50) 
                                   ︱
                         ஸ்கந்தவர்‌மன்‌ I (350-75)
                                   │
                           வீரவர்மன் (375–400)
                                   │
                        ஸ்கந்தவர்மன்‌ II (400–36)
                                   │
    ┌──────────────────────────────┴────────────────────────────┐
    │                              │                            │
சிம்மவர்மன்‌ I                 யுவ மகாராஜா              குமாரவிஷ்ணு II               
(436-60 லோகவிபாகம்‌)      விஷ்ணுகோபவர்மன் I      
    │                              │                            │
ஸ்கந்தவர்மன் II             சிம்மவர்மன் II                புத்தவர்மன்
 (460-80)                      (480-500)       
    │                              │                            │ 
நந்திவர்மன்             விஷ்ணுகோபவர்மன் II           குமாரவிஷ்ணு III                       

தட்சிணத்தில்‌ சமுத்‌திரகுப்தனை எதிர்த்த அரசர்‌களுள்‌ வேங்கி அரசன்‌ ஹஸ்திவர்மனும்‌ ஒருவன்‌. இவன்‌ சாலங்காயன கோத்திரத்தவன்‌. இவன்‌ வமிசத்திற்கும்‌ அதே பெயர்‌. இவன்‌ பிருகத்பலாயனரிடமும்‌ பல்லவரிடமும்‌ இருந்த நாடுகளை வென்று தன்‌ இராச்‌சியத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்க வேண்டும்‌, இவ்வமிசத்து முதலரசன் பட்டாரக தேவவர்மன்; இவ்வமிசத்து அரசர்கள் பின்வருமாறு:

           ஹஸ்திவர்மன் I (350) 
                    ︱
            நந்திவர்மன் I (375)
                    │
    ┌───────────────┴────────────┐
    │                            │
ஹஸ்திவர்மன்         II சண்ட வர்மன் (400) 
    │                            │  
 ஸ்கந்தவர்மன்         நந்திவர்மன் II (440) 
                      

                                  

பல்லவருக்குப் போலவே சாலங்காயனருக்கும் ரிஷபமே இலச்சினையாக இருந்தது.

சாலங்காயனருக்குப்பின் தெலுங்கு தேசத்தில் விஷ்ணுகுண்டி வமிசத்து அரசர் ஆண்டனர், இவ் வமிசத்தைத் தாபித்தவன் மாதவவர்மன் (கி. பி. 470-90). பதினோர் அசுவமேத யாகங்களும் எண்ணிறந்த அக்னிஷ்டோமங்களும் புரிந்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன. இவன் சந்ததியில் வந்த III-ம் மாதவவர்மனையும் குறித்து இதே மாதிரி கூறப்படுகிறதால் இது எவ்வளவு தூரம் உண்மையென்று ஐயுற இடமுண்டு. I-ம் மாதவவர்மன் இராணி வாகாடக வமிசத்தவள், அவன் பேரன் இந்திரபட்டாரகன் (510-540) தன் தாயாதி II-ம் மாதவவர்மனுடன் போர்புரிந்து, கடைசியில் சமாதானம் செய்துகொண்டு, அவன் நாட்டின் ஒரு பகுதியைத் 'திரிகூட, மலயாதிபதி' என்னும் பட்டத்துடன் ஆளச் சம்மதித்தான். கலிங்க நாட்டின் தென்பாதியைத் தன் வயமாக்குவதற்காகக் கலிங்க அரசன் இந்திரவர்மனோடு போர் தொடுத்தான். ஜனானயன் என்று பட்டம் பெற்ற II-ம் மாதவ வர்மனோ (586-616) மிகவும் புகழ்பெற்றவன். அவனும் கோதாவரியைக் கடந்து கலிங்க அரசனுடன் போர் புரிந்தான்.

கி. பி. 4, 5ஆம் நூற்றாண்டுகளில் பேராரிலும் மத்தியப் பிரதேசத்திலும் வாகாடக வமிச அரசர்கள் பிரபலமாக ஆண்டுவந்தனர். அவர்களுக்குக் குப்தர், விஷ்ணுகுண்டிகள், கதம்பர் முதலிய அரச வமிசத் தினருடன் மணத்தொடர்புகள் உண்டு. அவர்கள் ஆதரவின் கீழ் அஜந்தா குகைக் கோயில்கள் பல அமைக்கப் பட்டு, அவற்றிலுள்ள ஓவியங்களில் பல தீட்டப்பட்டன. சாதவாகனரும் க்ஷத்ரபரும் வலி குன்றிய பின் அவர்கள் தலையெடுத்தனர். அவன் தலைநகர் புரிகா எனப்பட்ட நகர்; அவன் ஆட்சி விந்திய மலைக்கு அப்பால் விதிசாவரையிலும் பரவியது. அவன் மகன் 1-ம் பிரவரசேனன் (280-340) பிரபலமான சக்கரவர்த்தி. அவன் நாலா பக்கத்திலும் நாடுகளை வென்று தன்னுடைய நான்கு குமாரர்களையும் தனக்குப் பிரதிநிதிகளாக ஆள அனுப்பினான். அவனுடைய ஆட்சிக்குள் மத்தியப் பிரதேசமும் க்ஷத்ரப நாடுகளும் அடங்கியிருந் தன. அவன் பேரன் 1-ம்ருத்ரசேனன் (340-65) ஆட்சியில் அவனுக்கும் அவன் சிற்றப்பன்மாருக்கும் கலகங்கள் ஏற்பட்டன, தன் தாய்ப்பாட்டனாகிய பத்மாவதியில் ஆண்ட நாகஅரசன் பவநாகன் உதவியைக் கொண்டு ருத்ரசேனன் இரண்டு சிற்றப்பன்மாரைத் தோல்வியுறச் செய்தான். ஆனால் சர்வசேனன் என்ற மற்றொரு சிற்றப்பன் வத்சகுலம் நகரத்தில் (தற்காலத்து பாசிம்) ஒரு தனியாட்சியேற்படுத்தித் தன் சந்ததியாருக்களித்தான். ருத்ரசேனன் மகன் I-ம் பிருதிவிசேனனும் (365-90) சர்வசேனன் மகன் விந்தியசேனன் அல்லது II-ம் விந்தியசக்தியும் சேர்ந்து குந்தள தேசத்தை வென்றுகொண்டனர். I-ம் பிருதிவிசேனன் மகன் II-ம் ருத்ரசேனன் குப்த அரசனான II-ம் சந்திரகுப்தனாகிய விக்கிரமாதித்தன் மகள் பிரபாவதி குப்தா என்பவளை மணந்தான். அவன் ஐந்து ஆண்டுக் காலமே ஆண்டு இறந்தபின் அவன் மனைவி பிரபாவதி தன் சிறு மக்கள் சார்பில் இராச்சியம் ஆண்டுவந்தாள். அக்காலத்தில் அவள் கூர்ஜர நாட்டை வெல்லத் தன் தகப்பனுக்கு உதவியாக விருந்தாள். அவள் முதல் மகன் சிறு பிராயத்தில் இறந்தான் ; இரண்டாம் மகன் தாமோதரசேனன் அல்லது 11-ம் பிரவரசேனன் கி. பி. 410-ல் வயது வந்ததும் இராச்சியத்தை ஆளத் தொடங்கி, 23 ஆண்டு நன்கு ஆண்டான். அவன் பிரவரபுரமென்ற ஒரு புதிய தலைநகரை நிருமித்தான். அவனுடைய முதல் தலைநகரம் ராம்டேகுவுக்கு அருகிலுள்ள நந்திவர்த்தனம். அவன் மகன் நரேந்திர சேனன் கதம்ப வமிசத்து அஜிதபட்டாரிகையை மணந்தான். குப்தர் ஆதிக்கம் ஹூணரின் தொந்தரவுகளால் குன்றியிருப்பதைக் கண்ட அவன் மாளவம், மேகலை, தென்கோசலம் முதலிய நாடுகளைத் தன் வயமாக்கிக் கொண்டான். அவன் மகன் II-ம் பிருதிவிசேனனே இவ்வமிசத்துக் கடைசி அரசன். அவன் இருமுறை நளவமிச அரசருடனும் தென் கூர்ஜரத்துத் திரைகூடகருடனும் போர்புரிந்து நாட்டைக் காப்பாற்றினான். அவனுக்குப்பின் பாசிம் கிளையைச் சேர்ந்த ஹரிசேனன் (480-515) வாகாடக நாடுகள் முழுமைக்கும் அரசனான். அவனே அவ்வரசரில் மிகவும் பராக்கிரமசாலி, அவன் காலத்தில் வாகாடக இராச்சியம் கூர்ஜரம், மாளவம், தென்கோசலம், குந்தலம், பேரார், மத்தியப் பிரதேசம், ஐதராபாத்தின் வடபாகம் ஆகிய நாடுகளெல்லாம் அடங்கி, முதல் பிரவரசேனன் காலத்தினும் மிகவும் பெரிதாக இருந்தது. அவன் மகள் ஒருத்தி விஷ்ணு குண்டி அரசன் முதல் மா தவவர்மனுடைய இராணி யானாள். கி. பி. 515-550-ல் வாகாடக ஆதிக்கம் குன் றிற்று. மாளவத்தில் யசோதர்மனும், மற்ற இடங் களில் சோம வமிச அரசரும் (கோசலம்), கதம்பரும் (தென் மகாராஷ்டிரம்) காலசூரிகளும் (வட மகாராஷ் டிரம்) தலையெடுத்தனர். கடைசியாகப் பாதாமிச்சாளுக் கியரும் தோன்றினர் (550).

தட்சிணத்தின் தென்மேற்குப் பாகத்தில் கி: பி. நான்காம் நூற்றாண்டின் மத்தியில் கதம்பர் முன்னேறியது, சமுத்திரகுப்தன் படையெழுச்சியால் பல்லவ ஆதிக்கம் நிலைகுலைந்த காரணம் பற்றியேயிருக்கலாம். கதம்ப சாசனங்கள் முதலில் பிராகிருதத்திலும், பிறகு வட மொழியிலும் வரையப்பட்டிருக்கின்றன. அவர்கள் கடம்ப மரத்தைப் போற்றி வளர்த்ததால் அவர்களுக்குக் கதம்பரென்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர். அவர்கள் முருகக் கடவுளை வணங்கி வந்தனர். கடம்ப மரம் முருகனுக்கேற்ற தென்பதும் கவனிக்கத்தக்கது. இவ்வமிசம் ஆரம்பித்த வரலாறு பின்வருமாறு : மயூர சர்மன் என்பவன் வனவாசியைத் தலைநகராகக் கொண்டு (கி. பி. 345) அந்நாட்டை ஆளத் தொடங்கினான். காகுத்தவர்மன் என்பான் இவ்வமிசத்தில் ஒரு பெரிய அரசன், அவன் மகளிரைக் குப்த வாகாடகக் கங்க வமிசத்து அரச குமாரர்கள் மணந்தனர். அவன் மகன் சாந்திவர்மனுக்குப் (450-75) பல்லவரால் தீங்கு விளைந்தது. அப்பல்லவர்கள் காஞ்சி அரசரல்லர்; வேறொரு கிளையினர். அப்போது அவன் தன் இராச்சியத்தை இரு பகுதிகளாக்கித் தென்பாதியை அவன் தம்பி I-ம் கிருஷ்ணவர்மனுடைய ஆதிக்கத்தில் வைத்தான். கிருஷ்ணவர்மன்' பல்லவருடன் செய்த போரில் உயிரிழந்தான். அவன் மகன் விஷ்ணுவர்மனும் பகைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டிவந்தது. சாந்திவர்மன் மகன் மிருகேசவர்மன் பல்லவருடனும் கங்கருடனும் செய்த போர்களில் வெற்றி பெற்றான். அவன் புலமை வாய்ந்தவன்; யானை, குதிரை முதலியவற்றை நன்றாக வளர்க்கும் திறமை பெற்றவன். பாலாசிகா (ஹால்சி)வில் ஒரு சமணக்கோயில் கட்டித் தன் தகப்பன் பெயரை நிலைநாட்டினவன். சாந்திவர்மனுடைய மகன் ரவிவர்மன் போரில் மடிந்தான்; பல்லவ அரசன் சண்ட தண்டன் விரட்டியடிக்கப்பட்டான். ரவிவர் மன் மகன் ஹரிவர்மன் காலத்தில் (538) சாளுக்கிய அரசன் முதல் புலகேசியால் கதம்ப ஆதிக்கம் குறைந்தது. கதம்ப வமிசத்து இரு கிளையினரும் மறுபடியும் போர் தொடங்கினர்; ΙΙ-ம் கிருஷ்ணவர்மன் வனவாசியின்மீது படையெடுத்து, ஹரிவர்மன் ஆட்சியையும் வமிசத்தில் மூத்த கிளையையும் ஒருங்கே முடியச் செய்தான்.

மேற்கே கதம்ப இராச்சியத்திற்கும் கிழக்கே பல்லவ இராச்சியத்திற்கும் நடுவில் மைசூர் கங்க. அரசருடைய நாடு இருந்தது. இதற்குக் கங்கவாடி என்று பெயர். கங்க வமிசத்தின் மூலபுருஷன் கொங்கணிவர்மன். அவன் காண்வாயனக் கோத்திரத்தவன் , அவனுக்குத் தர்ம மகாராஜன் என்ற பட்டம் உண்டு. அவனுக்குக் காஞ்சிப் பல்லவ அரசர்கள் பாண வமிசத்து அரசை வெல்வதற்காகப் பட்டம் கட்டினார்களென்று பிற் காலச் சாசனங்கள் கூறுகின்றன. பாண இராச்சியம் கங்க நாட்டிற்கு வடகிழக்கிலுள்ளது. கொங்கணி வர்மன் காலம் சுமார் கி. பி. 400. அவன் தலைநகர் கோலார். பிற்காலத்தில் அவன் சந்ததியார் காவேரிக் கரையிலுள்ள தலைக்காட்டைத் தலைநகராக்கிக் கொண்டனர். அவர்களுடைய இலச்சினை யானை. கொங்கணிவர்மனுடைய மகன் முதல் மாதவ மகாராஜன் (கி. பி. 425) நீதி சாஸ்திரத்திலும் காம சாஸ்திரத்திலும் வல்லவன். மாதவன் மகன் ஆரியவர்மன் (450) ஒரு புலவனும் வீரனும் ஆவான். இவனுக்குக் காஞ்சி அரசன் Ι-ம் சிம்மவர்மன் பட்டங்கட்டினதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சமயம் இவனுக்கும் இவன் தம்பி கிருஷ்ணவர்மனுக்கும் ஏதோ பகை ஏற்பட்டுப் பல்லவ அரசன் அவர்களைச் சமாதானம் செய்திருக்கலா மென்று எண்ண இடமுண்டு. பிற்காலச் சாசனங்கள் ஆரியவர்மனை ஹரிவர்மன் என்று அழைப்பதோடு, அவன் தலைநகரைத் தலைக்காட்டுக்கு மாற்றினானென் றும் கூறுகின்றன. இவ்விரு சகோதரரும் தங்கள் மக்களுக்களுக்குச் சிம்மவர்மனென்று பெயரிட்டனர். இராச்சியம் இரண்டு பிரிவுகளாக அவர்கள் காலத்தி லும் அவர்கள் மக்கள் காலத்திலும் ஆளப்பட்டு வந் தது. ஆரியவர்மன் மகனுக்கு 11-ம் மாதவன் என்ற பெயரும் உண்டு; அவனுக்குப் பட்டங் கட்டியவன் பல்லவ ஸ்கந்தவர்மன், மாதவன் மகன் அவிநீதன் குழந்தைப் பருவத்திலேயே அரசு பெற்று (கி. பி. 500) நீண்டகாலம் ஆண்டான்.

பாதாமிச் சாளுக்கிய இராச்சியத்தைத் தாபித்தவன் புலகேசி Ι. இப்பெயருக்குப் பெரிய சிங்கம் எனப் பொருள் கொள்ளலாம். இவன் கி. பி. 543-4-ல் பாதாமி ஊரை ஒரு மலையரணாகக் கட்டிக் கதம்பரிட மிருந்து சில நாடுகளைத் தன் வயமாக்கிக் கொண்டான். அவன் மகன் Ι-ம் கீர்த்திவர்மன் (567-98) வனவாசிக் கதம்பருடனும், கொங்கணத்து மௌரியருடனும், மற்றும் நள வமிசத்து அரசருடனும் போர்கள் புரிந்து தன் இராச்சியத்தைப் பெருக்கினான். அவன் மகன் Ι-ம் புலகேசிக்கு வயது வராததால் அதுவரை புலகேசியின் தம்பி மங்கலேசன் அரசாண்டான். மங்கலேசன் காலசூரி அரசன் புத்தராஜனை வென்றான் ; ஆனால் புத்தராஜனுடைய இராச்சியம் (கூர்ஜரம் கான் தேசம், மாளவம்) இப்போரினால் குறைந்து போனதாகத் தெரியவில்லை. ரேவதி துவீபத்தில் ஏற்பட்ட ஒரு சச்சரவை மங்கலேசன் அடக்கினான். ஆனால் ΙΙ-ம் புலகேசிக்கு வயது வந்ததும் இராச்சியத்தை அவனிடம் ஒப்புவிக்காமல் தன் ஆட்சியை நீட்டித்துத் தன் மகனையே அரசனாக்க எண்ணினான். புலகேசி பாதாமியினின்றும் வெளியேறி, ஒரு சேனையைத் திரட்டித் தன் சிற்றப்பனுக்கு எதிராகப் போர் புரிந்து, அவனைப் போர்க்களத்தில் கொன்று வீழ்த்தும்படி நேரிட்டது. பிறகு தானே அரசனானான் (609-10). தனக்கும் சிற்றப்பனுக்கும் ஏற்பட்ட யுத்தத்தினால் சீர்குலைந்திருந்த இராச்சியத்தை நிலைநிறுத்தினான். வனவாசியைத் தாக்கிக் கதம்பர் ஆட்சியை முடித்தான். தென்கன்னட நாட்டு ஆளும் அரசரும் மைசூர் நாட்டுக் கங்கரும் இவனுக்குக் கீழ்ச் சிற்றரசரானார்கள். கங்க துர்வினீதன் மகளை இவன் மணந்தான். அவன் மகனே முதல் விக்கிரமாதித்தன், புலகேசி வடகொங்கணத்து அரசை வென்றான். அவன் இராசதானியாகிய (பம்பாய்க்கருகில் எலிபான்டா தீவிலுள்ள) புரீ என்னும் துறைமுகப் பட்டினத்தைத் தன் வயமாக்கிக் கொண்டான், இவ் வெற்றிகளால் வட இந்திய அரசனாகிய ஹர்ஷனுக்குப் பயந்த லாடர், மாளவர், கூர்ஜரர் முதலானோர் இவனுடைய நட்பை விரும்பி இவனுக்குக் கீழ்ப்பட்டனர். ஆகவே இவன் இராச்சியத்தின் வட எல்லை மகாநதி வரை அகன்றது. ஹர்ஷன் தக்காணத்தின்மேற் படையெடுக்க முயன்றபோது புலகேசி அவனை நருமதைக் கரையில் எதிர்த்து, வெற்றி பெற்று, அவனுடைய யானைகள் பலவற்றைக் கவர்ந்தான். இவை எல்லாம் இவன் ஆட்சியில் முதல் நாலைந்து ஆண்டு களில் நிகழ்ந்தவை.

பிறகு தன் தம்பி விஷ்ணுவர்த்தனனை இளவரசனாக இராசதானியில் இருத்திவிட்டுத் தான் கீழ்த்திசைத் திக்குவிசயத்திற்காகப் புறப்பட்டான். தென் கோசல நாடு, கலிங்கம், பிஷ்டபுரம் (பிட்டாபுரம்) எல்லாம் இவன் வசமாயின. கொல்லேறு ஏரி கரையில் ஒரு பெரும்போரில் விஷ்ணுகுண்டி அரசரைத் தோற் கடித்தபின், அவர்களுக்குத் தெற்கிலாண்டு வந்த பல்லவர்மீது படையெடுத்துச் சென்றான்.

புலகேசி பாதாமிக்குத் திரும்பிய பிறகு, தன் தம்பி விஷ்ணுவர்த்தனனைத் தன் பிரதிநிதியாக ஆந்திர நாட்டை ஆளுவதற்காக அனுப்பினான். அங்கே அவன் கீழைச் சாளுக்கியரென்றும் வேங்கிச் சாளுக்கியரென்றும் பெயர்போன அரச வமிசத்தைத் தாபித்தான். அவ் வரசர்கள் பதினொன்று, பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை ஆண்டு வந்தனர். புலகேசிக்கும் பாரசீக அரசன் ΙΙ-ம் குஸ்ருவுக்கும் கி. பி. 625-6-ல் தூதுகளும் போக்குவரத்தும் நடந்தன. நாயன்மார்களும் ஆழ்வார்களும் சமண சாக்கிய மதங்களை அடக்கிச் சைவமும் வைணவமும் தமிழுலகில் பெருகச் செய்த காலமும் இதுவே.

பாண்டியாதிராஜன் கடுங்கோனும் பல்லவ அரசன் சிம்மவிஷ்ணுவும் ஒரே காலத்தில் களப்பிரரைத் தாக்கி அவர் ஆட்சியை முடித்தனர். அதன்பின் பாண்டியருக்கு மதுரையும், பல்லவருக்குக் காஞ்சியும் தலைநகர்களாயின. சிம்மவிஷ்ணு காவேரிவரை உள்ள நாடுகளை வென்று. பாண்டியனுடனும் இலங்கை வேந்தனுடனும் போர் புரிந்தான். இவன் ஆண்டகாலம் சுமார் கி. பி. 575 முதல் 600 வரை. இவன் மகன் Ι-ம் மகேந்திரவர்மன் (600-830) விசித்திரசித்தன், மத்தவிலாசன், குணபரன் முதலான பல விருதுகள் கொண்டவன், இவன் வடமொழிப் புலமை பெற்றவன் மத்தவிலாசமும் பகவ தச்சுகமும் இவன் இயற்றிய சிறு நாடகங்கள். சங்கீதம் வல்லவன். இவன் முதலில் சமணனாகவிருந்து திருநாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்டானென்பது பெரிய புராண வரலாறு. இவனுடைய திருச்சி மலைக் கோட்டைச் சாசனத்தில் ஒரு சுலோகமும் இதையே குறிக்கின்றது. இவன் ஆட்சியின் துவக்கத்தில் இவ னுடைய இராச்சியம் கிருஷ்ணாநதி வரை பரவியிருந்தது. பாதாமி அரசன் இரண்டாம் புலகேசியினுடைய திக்குவிசயத்தில் அவன் வடக்கிலிருந்து கிருஷ்ணாவைத் தாண்டி, நெல்லூர் வழியாகக் காஞ்சியின் மீது படையெடுத்தான். அந்நகருக்கு Ι5 மைல் வடக்கே புள்ளலூரில் மகேந்திரவர்மன் புலகேசியைத் தோற்கடித்தான். ஆனால் நெல்லூரும் அதன் வடக்கேயுள்ள நாடுகளும் சாளுக்கியர் வசமாயின. இது முதல் பல்லவருக்கும் சாளுக்கியருக்கும் இடைவிடாத பகைமையும் போர்களும் ஆரம்பித்தன.

மறுமுறை புலகேசி பல்லவ நாட்டின்மீது படையெடுத்த காலத்தில் மகேந்திரவர்மன் மகன் நரசிம்மவர்மன் (630-668) ஆண்டு கொண்டிருந்தான். இவனே மாமல்லபுரத்தை நிருமித்த மகாமல்லன்; இவ்வூரை மகாபலிபுரமென்று வழங்குவது தவறு. புலகேசி முதலில் பல்லவருக்குக் கீழ்ப்பட்ட பாண அரசரைத் தாக்கினான்; அவர்களை வென்றபின் பல்லவ நாட்டை அடைந்தான். அவனால் மறுபடியும் காஞ்சிக்கு அபாயம் ஏற்படடது. ஆனால் பல போர்களில் நரசிம்மன் சாளுக்கியரைத் தோற்கடித்தான் ; இப்போர்களில் ஒன்று காஞ்சிக்கு 20 மைல் கிழக்கேயுள்ள மணிமங்கலத்தில் நடைபெற்றது. இலங்கை அரச வமிசத்தைச் சேர்ந்த மானவர்மா நரசிம்மனுக்கு மிகுந்த உதவி புரிந்தான். கடைசியாக நரசிம்மன் சாளுக்கிய நாட்டில் புகுந்து, அவன் தலை நகர் வாதாபி (பாதாமி)யையே முற்றுகையிட்டான். புலகேசி போரில் உயிரிழந்தான் (கி. பி. 624). வாதாபி சில காலம் நரசிம்மனால் ஆக்கிரமிக்கப்பட்டது. அவ்வூர் மல்லிகார்ஜுனன் கோயிலின் பின்புறமுள்ள பாறையொன்றில் ஒருசாசனம் நரசிம்மனால் செதுக்கப்பட்டது. சிறிது சிதைந்தபோதிலும் அது இன்னும் அதே இடத்தில் காணப்படுகின்றது. நரசிம்மவர்மன் காஞ்சிக்குத் திரும்பியதும், தன் நண்பன் மானவர்மாவை இலங்கைக்கு அரசனாக்கவேண்டி இரண்டுமுறை கப்பற்படைகளை அனுப்பினான்; இரண்டாம்முறை வெற்றி கிடைத்தது (654-5). ஆயினும் மானவர்மா விரைவில் மறுபடியும் தன் நாட்டை இழந்து பல்லவ நாட்டில் வந்துவாழ நேர்ந்தது. நரசிம்மவர்மன் காலத்தில் பிரசித்திபெற்ற சீன யாத்திரிகன் 'ஹியூன் சாங்’ காஞ்சீபுரத்திற்கு வந்து சிறிது காலம் தங்கினான். சுமார் கி. பி. 668-ல் நரசிம்மவர்மன் இறந்தான்; அவன் மகன் ΙΙ-ம் மகேந்திரவர்மன் பட்டம் பெற்றுச் சில ஆண்டுகளே ஆண்டான் ; அதற்குள் அவனுக்கும் சாளுக்கியப் புலகேசியின் மகன் முதல் விக்கிரமாதித்தனுக்கும் போர் நிகழ்ந்தது. காஞ்சியிலுள்ள கடிகை (கல்லூரி) இம்மகேந்திரவர்மனால் ஆதரிக்கப்பட்டது. அவனுக்குப்பின் அவன் மகன் Ι-ம் பரமேசுவரவர்மன் (670-80) பட்டமடைந்தான். அவன் காலத்திலும் சாளுக்கிய Ι-ம் விக்கிரமாதித்தன் மகேந்திரவர்மனுடன் தொடங்கிய யுத்தம் சிலகாலம் நடந்தது. விக்கிரமாதித்தனுக்குப் பாண்டிய அரசன் அரிகேசரி மாறவர்மன் (670-7Ι0) உதவியாக இருந் தான், இந்த யுத்த வரலாற்றைக் கூறுமுன் பாண்டிய நாட்டு வரலாற்றைச் சிறிது கூறுவது அவசியம். களப்பிரரை வென்று பாண்டியர் ஆட்சியை மீண்டும் தாபித்தவன் கடுங்கோன் (590-620). அவன் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி (620-45) தன் தந்தையைப் போலவே பாண்டிய ஆதிக்கத்தை வளர்த்து வந்தான். இவ்வமிசத்து மூன்றாம் அரசனான சேந்தன் அல்லது ஜயந்தவர்மன் சேரரை வென்றான். அவன் மகன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் ஒரு பெரும் போர்வீரன். பாண்டிய ஆட்சியைப் பெருக்குவதற்காகப் பல்லவரோடு போர் புரிந்தான். ஆகவே அவர்களுடைய மற்றொரு பகைவனான விக் கிரமாதித்தனுடன் நட்புப் பூண்டான்.

விக்கிரமாதித்தனோ தன் தந்தையின் இறுதிக் காலத்தில் நடந்த பல்லவப் போரில் உண்டான கேடுகளைத் தன் தாய்ப் பாட்டன் உதவி கொண்டு சீர் செய்தான். பிறகு பல்லவருடன் போர் தொடங்கி, ΙΙ-ம் மகேந்திரனை மைசூர் நாட்டில் கொன்று வீழ்த்தி, அவன் மகன் பரமேசுவரவர்மனுடைய ஆட்சியின் தொடக்க ஆண்டுகளில் காஞ்சியின் அருகில் வந்து தன் பாடிவீட்டைத் தாபித்தான். அப்போது பரமேசுவரவர்மன் காஞ்சி நகரை விட்டோடினான். விக்கிரமாதித்தனும் காவேரிக் கரையிலுள்ள உறையூருக்குச் சென்று, அங்கே வந்திருந்த பாண்டிய சேனைகளுடன் கலந்து கொண்டு பரமேசுவரனை எதிர்க்க ஆயத்தமானான். இதற்குள் பரமேசுவரனுக்கும் விக்கிரமாதித்தனுடைய சிற்றரசனான கங்கபூதிவிக்கிரமனுக்கும் விளந்தை என்னுமிடத்தில் போர் நிகழ்ந்தது. பரமேசுவரன் தோல்வியுற்றான். உக்கிரோதயம் எனப்பட்ட அரிய மணிகள் பதித்த மாலை யொன்றைப் பல்லவனிடமிருந்து கங்க அரசன் பறித்துக்கொண்டான். இத் தோல்வியால் மனம் தளராத பரமேசுவரன் தன் படைத்தலைவர் சிறுத்தொண்டரை வாதாபி நகரத்தைத் தாக்கச் சொல்லியனுப்பிவிட்டுத் தான் வேறொரு பெருஞ் சேனையுடன் உறையூருக்கு இரண்டு மைல் வடமேற்கேயுள்ள பெருவள நல்லூரில், விக்கிரமாதித்தனுடன் கடும் போர் புரிந்து அவனை வென்றான், சிறுத்தொண்டரும் வாதாபியைத் தாக்கி, வெற்றி பெற்றுத் திரும்பி வந்தார் (670-74). இவ்வெற்றிகளுக்குப்பின் சில காலம் பல்லவருக்குச் சாளுக்கியருடைய தொந்தரவு குறைந்தது.

பரமேசுவரவர்மனுக்குப்பின் அவன் மகன் ΙΙ-ம் நர சிம்மவர்மன் (680-720) நாற்பது ஆண்டுகள் ஆண்டான். அவனுக்கு ராஜசிம்மன் என்ற பெயரும் உண்டு. பாதாமியில் அவனுக்குச் சமகாலத்தவர் விக்கிரமாதித் தன் மகன் வினயாதித்தனும் (681-96), அவன் மகன் விஜயாதித்தனும் (697-733) ஆவர். இவ்வரசர்கள் எல்லோரும் சமாதானத்தில் மனமுடையவர். அவர்கள் காலத்தில் கோயில் கட்டுவதும் இன்னும் மற்றப் பொது நன்மை விளைவிக்கக்கூடிய வேலைகளும் ஆதரிக் கப்பட்டன. வினயாதித்தன் ஒருமுறை தன் மகனுடன் வட இந்தியாவின்மீது படையெடுத்தான். ராஜசிம்மன் மாமல்லபுரத்துக் கடற்கரைக் கோயிலையும் காஞ்சியில் கைலாசநாதர் கோயிலையும் கட்டி முடித்தான். தண்டி என்னும் புலவன் அவனால் ஆதரிக்கப்பட்டான். கடல் வியாபாரம் செழித்துச் சீனாவுடன் தூதர் போக்கு வரத்து ஏற்பட்டது. அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் பரமேசுவரன் ஆண்டான் (720-31). அவன் திருவதிகைக் கோயிலுக்கும் பெரிய திருப்பணி செய்திருக்கலாம். அங்கு அவன் சாசனம் ஒன்று இருக்கிறது. அக்கோயில் பிற்காலத்தில் பலமுறை புதுப் பிக்கப்பட்டிருக்கிறது. பாதாமியில் விஜயாதித்தனுக்குப் பின் அவன் மகன் ΙΙ-ம் விக்கிரமாதித்தன் பட்டத்துக்கு வந்தான் (733-4). விக்கிரமாதித்தன் இளவரசனாக இருந்த காலத்தில் காஞ்சியின் மீது படையெடுத்துப் பரமேசுவரவர்மனிடம் திறை கொண்டதாகச் (731) சமீபகாலத்தில் உள்சலா என்னும் ஊரில் கிடைத்த கல்வெட்டொன்று கூறுகிறது. விக்கிரமாதித்தன் ஆட்சியின் முதல் ஆண்டுகளில் சிந்து நாட்டில் வேரூன்றியிருந்த அராபித் துருக்கர் தட்சிணத்தின்மீது படையெடுத்தனர். அவர்களைப் புலகேசி யென்னும் லாட தேசத்துச் சாளுக்கிய அரசனும், தந்திவர்ம னென்ற ராஷ்டிரகூடத் தலைவனுமாகச் சேர்ந்து தோற்கடித்து விரட்டி விட்டனர். புலகேசியின் வீரத்தை மெச்சி அவனுக்கு அவனி ஜனாசிரயன் என்ற பெயரை விக்கிரமாதித்தன் அளித்தான்.

பல்லவ நாட்டில் II-ம் பரமேசுவரன் இறந்ததும் பட்டத்துக்குத் தகுந்த வாரிசில்லை. ஆகையால் மந்திரிகள் சேர்ந்து ஹிரண்யவர்மனென்ற வேறொரு கிளையைச் சார்ந்த பல்லவத் தலைவனுடைய மகனும், II-ம் நந்திவர்மனுமாகிய பல்லவமல்லனைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் அவனுக்கு எதிரியாகச் சித்திரமாயன் என்ற ஒரு போலிப் பல்லவன் கிளம்பி, உள்நாட்டிலும் பாண்டிய அரசனிடமிருந்தும் உதவி பெற்றான். பாண்டி நாட்டில் அரிகேசரி பராங்குசனுக்குப்பின் அவன் மகன் கோச்சடையன் ரணதீரன் (700-730) ஆண்டான். அவன் பாண்டிய ஆதிக்கத்தைக் கொங்கு நாட்டில் பரவச் செய்தான். ஆய் என்னும் மலைநாட்டுத் தலைவன் பொதிய மலையில் கலகம் விளைத்தபோது அவனை அடக்கினான். சடையனுக்குப்பின் அவன் மகன் I-ம் மாறவர்மன் ராஜசிம்மன் பட்டம் பெற்றதும், சித்திர மாயன் கட்சியை ஆதரித்துப் பல்லவ மல்லனைப் பன்முறை தோற்கடித்துக் கும்பகோணத்திற்கருகிலுள்ள நந்திபுரத்தில் முற்றுகையிட்டான். பல்லவசேனாபதி உதயசந்திரன் பாண்டியப் படைகளைப் பன்முறை தாக்கிச் சித்திரமாயனையும் சிரச்சேதஞ் செய்து நந்திவர்மன் ஆட்சியை நிலைநிறுத்தினான். சபரராஜன் உதயணன், நிஷாதத்தலைவன் பிருதிவீ வியாக்கிரன் போன்ற மற்றப் பகைவர்களையும் வென்றான். இவர்களெல்லாம் சாளுக்கிய விக்கிரமாதித்தனுடன் நட்புப் பூண்டவராயுமிருந் திருக்கலாம். கி.பி. 740-ல் விக்கிரமாதித்தன் பல்லவ நாட்டின்மீது படையெடுத்தான்; அவனுக்குக் கீழ்ச் சிற்றரசனான கங்க ஸ்ரீ புருஷனும் அவனுக்கு உதவி புரிந்தான், 'நந்திவர்மன் தோல்வி யடைந்தான் ; காஞ்சி நகரம் விக்கிரமாதித்தன் வசமாயிற்று. ஆனால் விக்கிரமாதித்தன் ஊருக்கு ஒரு சேதமுமில்லாமல் காத்து, கைலாசநாதர் கோயில் சொத்துக்களையும் கொள்ளையிடாமல் திருப்பிக் கொடுத்தான். தன் வெற்றிக்கு அறிகுறியாக ஒரு கன்னட சாசனத்தை மட்டும் ஒரு கற்றூணில் பொறிக்கச் செய்து, முற்காலத்தில் பல்லவர் பாதாமியில் பொறித்த சாசனத்திற்கு மாறு செய்தான். அதன்பின் இராச்சியத்தை நந்திவர்மனுக்குத் திருப்பிக்கொடுத்து ஊர் திரும்பினான், சில ஆண்டுகளுக்குப்பின் மற்றும் ஒருமுறை தன் மகன் கீர்த்திவர்மனைக் காஞ்சியின்மீது படையெடுக்கச் சொல்லிப் பல யானைகள், மணிகள், தங்கக் குவியல் முதலியவற்றைக் கவர்ந்துகொண்டான்.

விக்கிரமாதித்தனுக்குபின் அவன் மகன் II-ம் கீர்த்தி வர்மன் 744-5 லிருந்து பாதாமியில் ஆண்டான். இவ் விருவர் ஆட்சிக் காலத்திலும் பல கோயில்கள் கட்டப் பட்டன. பாண்டிய மாறவர்மன் ராஜசிம்மன் கொங்கு நாட்டை ஆக்கிரமிக்கவே, அவனுக்கும் கங்க அரசன் மாரசிம்மனுக்கும் பகை ஏற்பட்டது. மாரசிம்மன் தன் மேலரசனான சாளுக்கிய கீர்த்திவர்மனுடைய உதவியை நாடினான். வெண்பையில் நடந்த பெரும் போரில் சாளுக்கியனும் கங்கனும் தோல்வியுற்றனர். கங்கனுடைய மகள் பாண்டிய இளவரசனுக்கு மனைவியானாள். பிறகு, சமாதானமும் ஏற்பட்டது. பாதாமிச் சாளுக்கியரில் இவனே கடைசி அரசன். அவன் அதிகாரத்தைப் படிப்படியாகச் சீர்குலைத்தவன் ராஷ்டிரகூடத் தந்திரவர்மன். இவன் லாடசாளுக்கியப் புலகேசியுடன் கூடி அராபியச் சேனையை எதிர்த்ததை முன்னமே கூறினோம். 742-ல் எல்லோராவில் இவன் ஆட்சி நடந்து வந்தது. மாளவம், தென்கோசலம், கலிங்கம், தெலுங்கு சோழராச்சியமாகிய ஸ்ரீசைலநாடு முதலிய தேசங்களை இவன் வென்று கொண்டான். தவிரவும், காஞ்சியின்மீது படையெடுத்த நந்திவர்ம னுடன் சமாதானம் செய்து, தன் மகள் ரேவா என்பவளை அவனுக்கு மணஞ்செய்து கொடுத்தான். அவள் மகனே நந்திவர்மனுக்குப்பின் பல்லவ நாட்டை ஆண்ட தந்திவர்மன். இவ்விதம் படிப்படியாகக் கீர்த்திவர்மனுடைய இராச்சியத்தைக் கூறாக்கியபின் சுமார் கி. பி. 753-ல் ராஷ்டிரகூடத் தந்திவர்மன் தன் மேலரசனான சாளுக்கியக் கீர்த்திவர்மனைத் தோற்கடித்துத் தன் சுய ஆட்யைத் தாபித்தான்.

பல்லவ நந்திவர்மனோ விளந்தைப் போரில் ஸ்ரீபுருஷனை வென்று, அவன் முன்னோர் பல்லவரிடமிருந்து கவர்ந்த உக்கிரோதயமென்ற மணியடங்கிய ஆரத்தை மீட்டுக் கொண்டான். கங்கனிடமிருந்து சிறிது பூமியைப் பற்றித் தன் சிற்றரசன் பாணஜய நந்திவர்மன் வசமளித்தான். கி. பி. 777க்குப் பிறகு பாண்டிய அரசன் ஜடிலன் போர் தொடுத்தான். வரகுணன் I-ம் ராஜசிம்மனுடைய மகன். பெண்ணாகடப் போரில் பல்லவன் தோல்வியடைந்தான்; கொங்கன், கேரளன், தகடூர் அதிகமான் முதலியவருடைய உதவியைப் பெற்றுப் பாண்டிப் போரை விடாமல் நடத்தினான். ஆயினும் வெற்றி பாண்டியனையே சேர்ந்தது. அவன் கொங்க அரசனைச் சிறையிட்டதோடு, தொண்டை நாட்டில் புகுந்து, பெண்ணையாற்றங்கரையிலுள்ள அரசூரில் தன் பாடி வீட்டை அமைத்துக்கொண்டான். ஆகவே நந்திவர்மனால் பாண்டிய ஆதிக்கத்தின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடவில்லை.

வரகுணன் வேறிடங்களிலும் வெற்றிகள் பெற்றான். விழிஞத்துக் கோட்டையை அழித்து வேணாட்டை வென்றான். பொதியில் தலைவன் ஆயையும் போரில் வென்றான்; அவன் வேணாட்டரசனுடன் நட்புக்கொண்டனன் போலும். திருச்சிக்கப்பால் தஞ்சை, சேலம், கோயம்புத்தூர் ஜில்லாக்கள் அநேகமாக அவன் நாட்டின் பகுதிகளாயின. அவன் மகன் பரசக்ரகோலாகலன் என்ற விருது பெற்ற ஸ்ரீமாற ஸ்ரீவல்லபனும் (815-62) தன் தந்தையைப் போலவே நாட்டைப் பெருக்க யத்தனித்தான். இலங்கையின் மீது படையெடுத்து, அதன் வடபாகத்தைக் கைப்பற்றியதுடன் தலை நகரையும் தாக்கினான்; இலங்கை அரசன் I-ம் சேனன் (831-51) கீழ்ப்படிந்து சமாதானம் செய்யவே இலங்கையை விட்டகன்றான்.

பல்லவமல்லன் ஆட்சி சுமார் 789-ல் முடிவுபெற்றது. அவன் மகன் தந்திவர்மன் (789-839) பட்டத்துக்கு வந்ததும் அவனுக்குப் பாண்டியரால் மட்டுமன்றித் தன் பந்துக்களான ராஷ்டிரகூடராலும் இடையூறுகள் நேர்ந்தன.

கி. பி. 756-ல் தந்திதுர்க்கன் பிள்ளையில்லாமல் இறந்தான், அவன் சிற்றப்பன் I-ம் கிருஷ்ணன் பட்டம் பெற்று, எஞ்சியிருந்த சாளுக்கிய அதிகாரத்தை நீக்கித் தென் கொங்கணத்தை வென்று, அங்கே சிலாகார வமிசத்தவரைத்தன்னுள்ளடங்கிய சிற்றரசராகநியமித் தான். கங்க ஸ்ரீபுருஷனையும் தன் அதிகாரத்தை அங்கீகரிக்கச் செய்தான் (768). வேங்கி நாட்டின்மீது படையெடுக்கத் தன் மகன் II-ம் கோவிந்தனை அனுப்பினான். அந்நாட்டரசன் I-ம் விசயாதித்தன் (755-762) கீழ்ப் படிந்து சமாதானம் செய்து கொண்டான். எல்லோராவிலுள்ள அற்புதமான கல்வெட்டுக் கோயிலை நிருமித்து, அதற்குக் கைலாசமென்ற பெயரிட்டான். அவன் மகன் கோவிந்தன் சுமார் 773-ல் பட்டம் பெற்றான். மூன்று நான்கு ஆண்டுகளுக்குப்பின் அவனும் பல்லவ நந்திவர்மனும் சேர்ந்து, கங்க அரசன் II-ம் சிவமாரனுக்கு அவன் சகோதரன் துக்கமார எறெயப்பனுக்கு எதிராக உதவி புரிந்து பட்டமெய்தச் செய்தனர். கோவிந்தன் அரசியல் காரியங்களைக் கவனிக்காது இன்பத் துறைகளில் மூழ்கினான். அவன் தம்பி துருவன் தானே அரசனாக முயன்று அரசனானான் (780). கோவிந்தன் கடைசியில் என்ன ஆனான் என்பது தெரியவில்லை. துருவன் தனக்குப் பகைவனான கோவிந்தனுடன் நட்புக்கொண்ட அரசரைத் தண்டித்தான். கங்க மன்னனான II-ம் சிவமாரனைச் சிறையிலிட்டான். பல்லவனிடமிருந்து யானைத்திறை கொண்டான். விந்திய மலையைக் கடந்து, மாளவத்திலாண்ட கூர்ஜர அரசன் வத்சராஜனை விரட்டியடித்தான். வேங்கி அரசன் IV-ம் விஷ்ணுவர்த்தனனிடமிருந்து சிறிது நாட்டைப் பற்றிக் கொண்டதுமல்லாமல் அவன் மகள் சீலமகா தேவியை மணந்துகொண்டான். மாளவ வெற்றிக்குப் பின் கங்கைக்கும் யமுனைக்கும் நடுவேயுள்ள நாட்டுக்குச் சென்று, அங்கே வந்த அரசன் தர்மபாலனைப் போரில் வென்றான். கடைசியாகத் தன் மக்களுக்குள் மிகுந்த திறமைசாலியான II-ம் கோவிந்தனை அரசனாக்கித் தான் சிம்மாசனத்தைத் துறந்தான். ஆனால் அவன் 793-4-ல் இறந்து படவே, கோவிந்தனுக்கும் அவன் சகோதரருக்கும் கலகம் உண்டாயிற்று. துருவனுடைய மூத்த மகன் கம்பன் உட்படப் பன்னிரண்டு சிற்றரசர்கள் கோவிந்தனை எதிர்த்தனர். கோவிந்தனால் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கங்கசிவமாரனும் அவர்களையே சேர்ந்தான். கோவிந்தன் தன்னந்தனியே இவர்களெல்லோரையும் ஒருங்கே வென்று தன் சத்துருக்களைப் பழிவாங்காமல் பட்சமாகவே நடத்தினான். கம்பனுக்கு மறுபடியும் அவனுடைய பழம் பதவியாகிய கங்கவாடியின் ஆட்சியை அளித்தான். சிவமாரனை மட்டும் மறுபடியும் சிறை வைத்தான். தனக்கு அனுகூலமாக விருந்த தம்பி இந்திரனை லாடதேசத்திற்குத் தன் பிரதி நிதியாக அனுப்பினான். இவ்வெற்றிக்குப்பின் கோவிந்தன் வடஇந்தியா மீது படையெடுத்தான். மாளவ அரசன் இரண்டாம் நாகப்படனை வென்று, அவன் நாட்டை லாடநாட்டுப் பிரதிநிதியின் கீழாக்கினான். இன்னும் வடக்கே சென்று, கன்னோசி அரசன் சக்ரா புதனும் அவன் மேலரசன் வங்கநாட்டுத் தர்மபாலனும் கீழ்ப்படியும்படி செய்தான். திரும்பும் வழியில் நருமதைக்கரையில் ஸ்ரீபவனத்தில் கோவிந்தனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான் (602). அவனே I-ம் அமோகவர்ஷன். அவன் ஸ்ரீபவனத்தினின்றும் விரைவாய்ப் பல்லவ நாட்டின்மீது படையெடுத்துச் சென்று (803-4), தந்தி வர்மனைப் போரில் வென்று, காஞ்சிக்கு இலங்கை அரசனால் அனுப்பப்பட்ட தூதருடைய வணக்கத்தைப் பெற்றுப் பின் துங்கபத்திரைக் கரையை அடைந்து, இராமேசுவர தீர்த்தமென்னுமிடத்தில் தன் பாடிவீட்டை யமைத்தான். வேங்கி அரசர்கள் IV-ம் விஷ்ணு வர்த்தனனும் II-ம் விசயாதித்தனும் 808-ல் கோவிந்தனுடன் போர் புரிந்தனர். ஆகவே III-ம் கோவிந்தன் ராஷ்டிரகூட அரசரில் மிகப் பிரசித்திபெற்ற வீரன்.

தென்னாட்டில் பல்லவ தந்திவர்மன் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் பகைவர்களால் தாக்குண்டு நிலைக்க முடியாமல் தவித்தான். அவன் மகன் III-ம் நந்திவர்மன் (839-60) தன் தகப்பனைவிடத் திறமைசாலி. அவன் ஸ்ரீமாற ஸ்ரீவல்லப பாண்டியனுக்கு விரோதமாகப் பல மன்னரை ஒருங்கு சேர்த்துத் தெள்ளாற்றுப் போரில் முறியடித்துத் தெள்ளாறெறிந்த நந்தி எனப் புகழ் பூண்டான். கங்கர், சோழர், ராஷ்டிரகூடரும்கூடத் துரத்தப்பட்டதுமன்றிப் பல்லவ சைனியம் வைகையாறு வரை படையெடுத்தும் சென்றது. ஆயினும் ஸ்ரீமாறன் மறுபடி போர் தொடங்கி, நந்தியையும் அவன் நண்பர்களையும் கும்பகோணப் போரில் தோல்வியுறச் செய்தான் (859). இத்தோல்விக்குப் பின் நந்தி வெகுகாலம் உயிருடனிருக்கவில்லை. அவன் காலத்தில் ஒரு பெருங் கடற்படையிருந்தது. நந்திவர்மனுக்குப் பின் அவன் மகன் நிருபதுங்கன் பட்டம் பெற்றான் (860); விரைவில் பல்லவ நிருபதுங்கன் அரிசிலாற்றங்கரைப் போரில் ஸ்ரீமாறனுடன் பொருது, வெற்றி பெற்றுப் பல்லவருக்குக் கும்பகோணப் போரினால் உண்டான அபகீர்த்தியைத் துடைத்தான்.

ஸ்ரீமாறனுக்கு தோல்வியைத் தவிர வேறு விபத்துக்களும் நேரிட்டன. இலங்கை அரசன் II-ம் சேனன் (851-885) பல்லவருடன் சேர்ந்துகொண்டு, ஒரு பாண்டிய இளவரசனுக்கு உதவியாக மதுரைமீது படையெடுக்கத் தன் சைனியத்தை அனுப்பினான். ஸ்ரீமாறன் அரிசில் தோல்விக்குப்பின் திரும்பி வரும்பொழுதும் மதுரை, இலங்கைப் படைகளால் தாக்கப்பட்டது ; ஸ்ரீமாறன் உயிரிழந்தான். அவன் மகன் II-ம் வரகுண வர்மன் சிங்களப் படைத் தலைவனால் அரசனாக்கப்பட்டான் (862) ; ஆனால் அவன் பல்லவனுக்குள்ளடங்கிய சிற்றரசனாக ஆள வேண்டியிருந்தது.

ராஷ்டிரகூட நாட்டில் III-ம் கோவிந்தன் மகன் I-ம் அமோகவர்ஷன் நிருபதுங்கன் இளமையில் அரசனானான் (814). பல சிற்றரசர்களால் சச்சரவு ஏற்பட்டது; கீழைச் சாளுக்கிய III-ம் விசயாதித்தனும் I-ம் கங்கராசமல்லனும் கலகக்காரருடன் சேர்ந்தனர். ஆனால் லாடதேசத்துச் சிற்றரசன் கர்க்கன் தன் உறவினன் அமோகவர்ஷன் பக்கம் சேர்ந்து, சத்துருக்களை முறியடித்து இராச்தியத்தை நிலைநிறுத்தினான் (821). ஆயினும் அமோகவர்ஷனுடைய நீண்ட ஆட்சிக்காலமான 64 ஆண்டுகளிலும் ஒருகாலும் அவன் இராச்சியத்தில் முற்றிலும் அமைதியிருந்ததாகச் சொல்ல இய லாது. கி.பி. 850-ல் மறுபடியும் கீழைச் சாளுக்கிய III-ம் குண கவிஜயாதித்தனுடன் போர் தொடங்கினான். இவன் விஜயாதித்தன் பேரன். புகழ்பெற்ற வீரன், வேங்கியைச் சுயஆட்சி நாடாக்க முயன்றான். ஆனால் கம்பத்தி னருகில் வீங்காவல்லிப் போரில் படுதோல்வியடைந்தான். அதற்குப்பின் அமோகவர்ஷனோடு மிகுந்த விசுவாசத்துடன் உழைத்து வந்தான். நீதிமார்க்கன், ரணவிக்கிரமன் என்ற பட்டங்கள் பெற்ற கங்க அரசன் ஏறெயப்பன் (837-70) I-ம் ராஜமல்லன் மகன் அமோக வர்ஷனுக்கு விரோதமாகக் கிளம்பினான். வேறு சில சிற்றரசரும் அவனுடன் சேர்ந்தனர். ராஷ்டிரகூடப் படைத்தலைவன் பங்கேசன் அவர்களைப் பலமுறைத் தோற்கடித்தான். அவன் இருந்து தன் காரியத்தைச் சரிவர முடிக்குமுன் உள்நாட்டில் வேறு கலகங்கள் ஏற்பட்டதால் அவைகளைத் தடுப்பதற்காக அமோகவர்ஷன் அவனைத் திரும்பச் சொன்னான். இக்கலகம் இளவரசன் II-ம் கிருஷ்ணனாலும், லாட அரசன் கர்க்கன் மகன் I-ம் துருவனாலும் ஆரம்பிக்கப்பட்டது. பங்கேசன் போரில் துருவனைக் கொன்றது மல்லாமல், அவன் மகன் அகாலவர்ஷனுடனும், பேரன் II-ம் துருவனுடனும் போர் நடத்த வேண்டியதாயிற்று. மாளவநாட்டுக் கூர்ஜர அரசன் மிஹிரபோஜன் துருவனைத் தாக்க ஆரம்பித்ததும், துருவன் II-ம் அமோகவர்ஷனுடன் சமாதானம் செய்துகொண்டு (860), பிற பகைவர்களை வென்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொண்டான் (867). பங்கேசன் திரும்பிச் சென்ற பிறகு குணகவிஜயாதித்தன் கங்கனுடன் போர் புரிந்தான். அவன் நுளம்ப நாட்டின் வழியே கங்க நாட்டிற்கு வரவேண்டியிருந்ததால் மங்கி எனப்பட்ட நுளம்ப அரசனைப் போரில் கொன்றான். பிறகு கங்க நாட்டையடைந்து, நீதிமார்க்கனை அமோகவர்ஷனுக்குக் கீழ்ப் படியுமாறு செய்தான். அமோகவர்ஷன் போர் விருப்பற்றவன். சில வேளைகளில் அரசு தொழிலைத் துறந்து, சமண முனிவருடன் கலந்து, தியானத்திலும் வேதாந்தத்திலும் ஈடுபடுவதுண்டு. பிரச்னோத்தர ரத்ன மாலை யென்ற ஒரு சிறு சமண நூல் அவனால் இயற்றப்பட்டதென்பர். அவன் கவிராஜமார்க்கம் என்ற கன்னட நூலும் இயற்றியவன். அவனுக்குப் பின் அவன் மகன் II-ம் கிருஷ்ணன் பட்டம் பெற்றான் (880).

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து சு. 350 ஆண்டுகள் வரையில் தமிழ்நாடு சோழ இராச்சியமாக விளங்கிற்று. அவர்கள் படைகள் வடக்கே கங்கை வரையிலும் கிழக்கே சமுத்திரத்திற்கப்பால் கடாரம், ஸ்ரீ விஜயம் வரையிலும் சென்று வெற்றிகள் பெற்றன. அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறப்புற்றுத் தமிழ்க் கலைகளும் சிறந்தோங்கின. இலக்கியம், சிற்பம், ஓவியம் முதலியவை அக்காலத்திற்போல வேறு எக்காலத்திலும் வளர்ச்சி பெறவில்லை. அரசாட்சியும் எண்ணிறந்த கிராம சபைகளாலும் அரசாங்க உத்தியோகஸ்தராலும் வெகு நன்றாக நடத்தப் பெற்றதற்கு நூற்றுக்கணக்கான சாசனங்கள் அத்தாட்சியாகும். கடைசியாகப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழரும் சாளுக்கியரும் சளைத்தனர். அவர்களுக்கு நெடுங்காலம் உட்பட்ட சிற்றரசர்கள் தலையெடுத்துச் சுயஆட்சியைத் தாபித்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் தெற்கே பாண்டியரும் ஹொய்சளரும்; வடக்கே யாதவரும் காகதீயரும். பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவர்களெல்லோருக்கும் வட இந்தியாவில் டெல்லியில் வேரூன்றிப்போன முகம்மதிய சுல்தான்களால் விபத்து நேர்ந்தது. அதை நீக்கப் பல முயற்சிகள் நடந்தன. அவற்றின் பயனாக விஜயநகர சாம்ராச்சியம் ஏற்பட்டது.

கி. பி. 850க்குச் சற்று முன்பாக விஜயாலய சோழன் பாண்டியச் சிற்றரசர் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைப் பிடித்துக்கொண்டான். அப்போது அவன் பல்லவரின்கீழ்ச் சிற்றரசனாக இருந்திருக்கவேண்டும். அதற்குப்பின் பாண்டியன் II-ம் வரகுணவர்மன் பல்லவர் மீது படையெடுத்து வந்தபோது பல்லவ நிருபதுங்கன் மகனும் இளவரசனும் ஆகிய அபாரஜிதன் அவனை எதிர்த்தான். அபராஜிதன் பக்கம் சோழன் I-ம் ஆதித்தனும், கங்கன் I-ம் பிருதிவீபதியும் சேர்ந்தனர். கும்பகோணத்துக்கருகில் திருப்புறம்பயத்தில் பெரும்போர் நிகழ்ந்தது (880). இதில் பிருதிவீபதியும் வரகுணவர்மனும் உயிர் நீத்தனர். அபராஜிதன் வெற்றி பெற்றான். ஆதித்தனோ இதுமுதல் தன் ஆதிக்கத்தை வளர்ப்பதே கருத்தாகக் கொண்டான். தொண்டை மண்டலத்தின்மீது படையெடுத்து, அபராஜிதனையே ஒரு போரில் கொன்று வீழ்த்திப் பல்லவரை வென்றான். பல்லவர் அரசு முடிந்து, சோழர் ஆதிக்கம் பெருகி, ராஷ்டிரகூடருடன் போட்டிக்குத் தயாராக நின்றனர் (890). கங்க அரசன் I-ம் பிருதிவீபதியின் பேரன் II-ம் பிருதிவீபதி ஆதித்தனுடைய ஆதிக்கத்தை அங்கீகரித்தான். காவேரிக் கரையெங்கும் சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டினான். இவன் காளத்திக்கருகில் தொண்டை நாட்டெல்லையில் இறந்தான். அங்கு அவனுக்கு ஒரு சமாதிக் கோயிலை அவன் மகன் I-ம் பராந்தகன் நிருமித்தான்.

I-ம் பராந்தக சோழன் 907-ல் பட்டம் பெற்று 48 ஆண்டுகள் ஆண்டான். பெரும்பாலும் அவன் ஆட்சி வெற்றிகரமாகவே இருந்தது. ஆனால் கடைசிக் காலத்தில் ராஷ்டிரகூடரால் பெருந்தொல்லை நேர்ந்தது. ஆட்சியின் தொடக்கத்தில் பராந்தகன் பாண்டிய மன்னனான ராஜசிம்மனையும் (900-20) அவனுக்கு உதவிபுரிந்த இலங்கை வேந்தன் II-ம் கஸ்ஸபனையும் வெள்ளூரில் தோற்கடித்து, ராஜசிம்மனை இலங்கைக்கு ஓடச் செய்து, 'மதுரை கொண்ட' என்ற விருதையும் பெற்றான். ராஜசிம்மன் இலங்கையினின்றும் கேரளத்துக்குச் சென்றான். அது அவன் தாய் பிறந்த நாடு. சில ஆண்டுகளுக்குப் பின் பராந்தகன் இலங்கையில் ராஜசிம்மன் வைத்துப்போன பாண்டிய முடியையும் ஆபரணங்களையும் IV-ம் உதய (940-53)னிடமிருந்து பெற முயன்றும் முடியவில்லை. இதை மறவாமல் பிற் காலத்தில் I-ம் ராஜேந்திரன் நிறைவேற்றினான்.

இதற்கிடையே ராஷ்டிரகூட நாட்டில் அமோகவர்ஷனுக்குப்பின் 980-ல் பட்டமெய்திய அவன் மகன் II-ம் கிருஷ்ணன் சோழநாட்டின்மீது படையெடுத்தான். அதற்குமுன் அவன் லாடதேசத்தை ஆண்டுவந்த தன் பிரதிநிதியை நீக்கி, அந் நாட்டைத் தன் ஆட்சிக் குள்ளாக்கினான். வேங்கி அரசன் குணகவிஜயாதித்த னுடன் போர் தொடங்கிப் பெருந்தோல்வியுற்றான் ; தன்னாட்டை விட்டுத் தன் மனைவியின் பிறப்பிடமான சேதி நாட்டுக்கு ஓடினான் ; அவனைத் துரத்திக் கொண்டு வந்த வேங்கிப் படைத்தலைவன் பண்டரங்கன், அவனையும் சேதிப்படைகளையும் தோற்கடித்து, கிருஷ்ணன் விசயாதித்தனை அடி வணங்கும்படி செய்தான். பிறகு அவன் நாடு அவனுக்கு மீண்டும் கொடுக்கப்பட்டது. விசயாதித்தன் இறந்ததும் (982) அவனுக்குப் பின் பட்டம் பெற்ற முதல் சாளுக்கிய வீமன் முடி சூட்டுமுன் அவனைக் கிருஷ்ணன் சிறைப் படுத்தினான். ஆனால் அவன் தப்பியோடி ராஷ்டிரகூட சேனைகளைத் தன் நாட்டினின்றும் விரட்டியடித்துச் சுய ஆட்சியை மீட்டுக்கொண்டான். கிருஷ்ணன் மறுபடி யும் போர் ஆரம்பிக்கவும், அவன் சேனை நிரவத்யபுரம், பெருவங்கூரு என்னுமிடங்களில் தோல்வியுற்றது. கிருஷ்ணன் சோழப் போர் ஆரம்பித்த காரணம் பின் வருமாறு : அவன் மகள் ஒருத்தி I-ம் ஆதித்தன் மனைவியாயிருந்து கன்னரதேவன் என்ற மகனைப் பெற்றாள். பராந்தகன் பட்டமெய்தியதால் கிருஷ்ணன் கன்னரதேவன் சார்பாகத் தன்னுடன் நட்புக்கொண்ட பாணர், வைதும்பர் முதலியவரையும் சேர்த்துக் கொண்டு போர் ஆரம்பித்தான். II-ம் கங்கப்பிருதிவீபதி பராந்தகனுக்காகப் போர் புரிந்து திருவல்லம் (வல்லாளம்) என்னுமிடத்தில் வெற்றியடைந்தான். பராந்தகன் பாணருடைய இராச்சியத்தைப் பறித்துப் பிருதிவீபதியிடம் கொடுத்து அவனுக்குப் பாணாதிராஜன் என்ற பட்டமும் அளித்தான். இது நடந்தது சு. 912-13-ல் II-ம் கிருஷ்ணனுக்குப் பின் அவன் பேரன் III-ம் இந்திரன் 915-ல் ராஷ்டிரகூட இராச்சியத்தை ஆள ஆரம்பித்தான். அவன் இளவரசனாயிருந்தபோதே பரமார உபேந்திரனுடன் வெற்றிகரமான போர் தொடுத்தான், பட்டம் பெற்ற பின் கன்னோசி அரசன் பிரதிகார I-ம் மகிபாலனை (ஆ. கா. 913-43) அவன் நாட்டை விட்டோடும்படி செய்தான் ; சில காலத்திற்குப் பின் அவன் சண்டேல ஹர்ஷதேவன் உதவியைக் கொண்டு தன் நாட்டை மீட்டுக்கொண்டான். வேங்கியின் அரசன் முதல் அம்மராஜன் கிருஷ்ணனுடைய பகைமையைப் பொருட்படுத்தாமல் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்து 926-ல் இறந்தான். அதன் பிறகு ஏற்பட்ட சச்சரவுகளால் இந்திரனுக்கு வேங்கி நாட்டை ஆக்கிரமிக்க அவகாசம் கிடைத்தது. இந்திரனுக்குப் பின் ஆண்ட II-ம் அமோகவர்ஷன் (927-30) சிறிது காலம் ஆண்டபின் அவன் தம்பி IV-ம் கோவிந்தனால் நீக்கப்பட்டான். கோவிந்தனும் இன்பத்திலீடுபட்டு, அரசியலைக் கவனிக்காது தன் சிற்றரசரால் விலக்கப்பட்டபின், இந்திரனுடைய மாற்றாந் தாய் மகன் III-ம் அமோகவர்ஷன் பட்டம் பெற்றான். அவன் சாந்த குணமுடையவன்; அவன் மகன் III-ம் கிருஷ்ணன் அப்படியில்லை. அவன் கங்கராஜமல்லனுடன் போர் புரிந்து கங்கநாட்டைத் தன் சகோதரியின் கணவனான II-ம் பூதுகனை ஆளும்படி செய்தான். 939-ல் அமோகவர்ஷன் இறந்ததும் அவன் தானே அரசனானான். சிறிது காலஞ் சென்றதும் பாணராலும் வைதும்பராலும் தூண்டப்பட்டுச் சோழநாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். பூதுகன் இதற்கு உதவியாக நின்றான். இதற்குள் II-ம் கங்க பிருதிவீபதி இறந்ததால் சோழநாட்டின் வடமேற்கு எல்லையைக் காக்கப் பராந்தகன் தன் மூத்த மகன் இராசாதித்தனையும் அவன் தம்பி அரிகுலகேசரியையும் தக்க படைகளுடன் அனுப்பினான். கிருஷ்ணனும் பூதுகனும் படையெடுத்து வரவே தக்கோலத்தில் ஒரு பெரும் போர் நிகழ்ந்தது (949). அதில் இராசாதித்தன் பூதுகனால் கொலையுண்டான். அதற்குப் பின் சில நாட்களில் சோழராச்சியத்தின் வடபாகம் கிருஷ்ணன் வசமாயிற்று ; அவனும் ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’ என்ற பட்டம் பெற்றான். தவிர வேங்கி நாட்டிலும், 11-ம் அம்மராஜனுக்கு எதிராக அவன் அண்ணன் (மாற்றாந்தாய் மகன்) தானார்ணவனையும் வேறு ஒரு கிளையைச் சார்ந்த பாதபன் தாழன் ஆகிய ராஜகுமாரரையும் கிளப்பி விட்டான். பல இடையூறுகளுக்கிடையில் அம்மராஜன் 970 வரை ஆண்டு, பின் தானார்ணவனால் கொல்லப்பட்டான். தன் ஆட்சியின் இறுதியில் கிருஷணன் வட இந்தியாவின் மீது படையெடுத்து (963) மாளவநாட்டுப் பரமார அரசன் ஹர்ஷசீயகனை ராஷ்டிரகூட மேலாட்சியை ஒப்புக்கொள்ளச் செய்தான்; இப்படை யெடுப்பில் பூதுகன் மகன் II-ம் மாரசிம்மன் தன் மாமனுக்கு மிக்க உதவி புரிந்தான். கிருஷ்ணன் பெரிய வீரன். ஆயினும் இராச நீதியில் கை தேர்ந்தவனல்லன். அவன் பூதுகனுக்கும் அவன் மகனுக்கும் அதிகமாக இடங் கொடுத்ததுமன்றிச் சாளுக்கிய வமிசத்து ஆகவமல்ல தைலப்பனையும் முன்னேற விட்டான் ; தைலப்பனுக்குத் தன் இராசதானிக்கருகில் உள்ள நாட்டை அணுக்க ஜீவிதமாகக் கொடுத்தான். இது இவன் பின்னோருக்கு வினையாக முடிந்தது.

கிருஷ்ணனுக்குப் பின் அவன் மாற்றாந்தாய் மகன் கொட்டிகன் (967) ஆளத் தொடங்கினான். உடனே பரமார ஹர்ஷசீயகன் நருமதைக் கரையில் ராஷ்டிர கூட சேனையை முறியடித்துக் கொட்டிகனுடைய இராசதானியாகிய மானிய கேடத்தைத் தாக்கினான் (927-3). மாரசிம்மன் உதவியால் பெருங்கேடு ஒன்றும் ஏற்படவில்லை. பரமார சைனியமும் திரும்பிப் போயிற்று. இதற்குப்பின் கொட்டிகன் இறந்தான். அதன் மகன் II-ம் கர்க்கன் பட்டத்துக்கு வந்ததும் சாளுக்கிய வமிசத்துத் தைலப்பன் அவனை நீக்கி இராச்சியத்தைத் தன் வசமாக்கிச் சாளுக்கிய வமிசத்தை மறுபடி நிலை நிறுத்தினான். மாரசிம்மனும் (975) அவன் மருமகனும், கிருஷ்ணன் பேரனுமாகிய IV-ம் இந்திரனும் (982) சல்லேகனமெனும் சமண முறையால் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தனர். மாரசிம்மன் கீழ்ச் சிற்றரசனாயிருந்த பாஞ்சால தேவன் தைலப்பனால் போரில் கொன்று வீழ்த்தப்பட்டான்.

சோழநாட்டில் I-ம் பராந்தகனுக்குப்பின் ஆண்ட கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் சிறந்த சிவபக்தர்கள். கண்டராதித்தன் 957-ல் காலஞ்சென்றான். அப்போது சோழராச்சியம் மிகக் குறுகியிருந்தது; கண்டராதித்தன் தம்பி அரிஞ்சயன் ஆண்டது சிறிது காலமே (956-7). அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் பராந்தகனான சுந்தரசோழன் (957-973) ஆண்டான். பாலனான அவன் மகன் II-ம் ஆதித்தன் இளவரசனானான். பாண்டி நாட்டில் சுய ஆட்சி செய்துவந்த வீரபாண்டியன் இலங்கை அரசன் IV-ம் மகிந்தாவுடன் நட்புக் கொண்டு சுந்தரசோழனை எதிர்த்தான். இதற்கு முன்னமே அவன் ஒரு சோழனை வென்று, ‘சோழன் தலை கொண்ட’ என்ற பட்டமேற்றிருந்தான். வீரபாண்டியன் இரண்டு போர்களில் தோல்வியுற்று, இரண்டாம் போரில் ஆதித்தனால் கொல்லப்பட்டான். பாண்டியர்களை வென்று, வீரபாண்டியனைக் கொன்று இலங்கைமீதும் படையெடுத்தான் (959). என்ன இருந்தும் சோழ ஆதிக்கம் தென்னாட்டில் முன்னேறவில்லை. வடக்கே சுந்தரசோழனுக்கு வெற்றி கிடைத்தது. அவன் 973-ல் காஞ்சியில் இறந்தான். கடைசிக் காலத்தில் சுந்தர சோழனுக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்பட்டது. கண்டராதித்தன் மகன் உத்தமசோழன் இளவரசுப் பதவி பெற ஆசைப்பட்டு, ஆதித்தனைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தான் (969). சுந்தரசோழன் தன் இரண்டாம் மகன் அருள்மொழியை மறந்து, உத்தம சோழனை இளவரசனாக்க வேண்டி வந்தது. உத்தமசோழன் 973-ல் அரசனாகு முன் தொண்டைமண்டல முழுவதும் ராஷ்டிரகூடரிடமிருந்து மறுபடியும் சோழர் வசமாயிற்று.

ஆனால் சோழராச்சியத்தின் பெருமை அருள்மொழியாகிய I-ம் இராசராசன் (985-1014) பட்டம் பெற்ற பிறகே வளர்ந்தது. I-ம் இராசராசன் இரண்டு போர்களில் பாண்டியரை வென்று, காந்தளூரையும் விழிமத்தையும் வென்று கேரள நாட்டைத் தன் வசமாக்கினான். பிறகு இலங்கைக்கெதிராக ஒரு கப்பற் படையை அனுப்பி, V-ம் மகிந்தனை அத்தீவின் தென் கிழக்கிலுள்ள மலை நாட்டில் ஓடி ஒளியுமாறு செய்து, அனுராதபுரத்தை அழித்துப் பொலன்னருவாவைச் சோழப் பிரதிநிதியின் தலைநகராக்கினான். அதற்குப் பின் மைசூர் நாட்டில் கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி முதலிய பகுதிகளை வென்று, சாளுக்கிய தைலப்பனுடன் போர் புரியத் தயாரானான். முதலில் வெற்றி பெறாவிடினும் தைலப்பன் மகன் சத்தியாசிரயனைத் தோல்வியுறச் செய்தான்.

சாளுக்கிய II-ம் தைலப்பன் ராஷ்டிரகூடரை வென்றபின் மானிய கேடத்தையே தன் தலைநகராகக் கொண்டு, தன்னாட்டின்மீது படையெடுத்து வந்த பரமார முஞ்சனைச் சிறை வைத்துப் பலவிதமாக அவமானப்படுத்திக் கடைசியாகக் கொன்று விட்டான். தைலப்பனுடைய போர்களிலெல்லாம் உதவியாக நின்ற அவன் மகன் சத்தியாசிரியன் தைலப்பனுக்குப் பின் 997-ல் அரசனானான். அவன் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த சோழ ஆதிக்கத்தைத் தடுக்க வேண்டி வேங்கி நாட்டு விவகாரங்களில் தலையிட்டான். அங்குத் தானார்ணவன் மூன்று ஆண்டுகள் ஆண்டபின் தெலுங்குச் சோடன் ஜடாசோடபீமனால் கொல்லப்பட்டான் (973). சோடபீமன் II-ம் சாளுக்கிய பீமனுடைய பெண் வயிற்றுப் பேரன் ; II-ம் அம்மராஜனுக்கு மைத்துனன். இவன் வேங்கியை இருபத்தேழு ஆண்டுகள் ஆண்டான் (973-1000); இவன் ஆட்சி பிற்காலத்துச் சாளுக்கியச் செப்பேடுகளில் அராஜகம் எனக் குறிக்கப்படுகின்றது. இக் காலத்தில் தானார்ணவனுடைய மக்கள் சோழநாட்டையடைந்து இராசராசனால் ஆதரிக்கப்பட்டு வந்தனர். சோடபீமன் தொண்டைநாட்டின்மீது படையெடுத்து இராசராசனுடன் போர் தொடங்கினான். இதற்குக் காரணம் இராசராசன் தானார்ணவன் மக்களை ஆதரித்ததே. சோடபீமன் தோல்வியுற்றுச் சிறைப்பட்டான். தானார்ணவனுடைய மூத்தமகன் I-ம் சக்திதர்மன் வேங்கி அரசனானான்; ஆனால் சோழ ஆதிக்கத்தின் கீழ்ச் சாளுக்கியனான விமலாதித்தியன் இராசராசன் மகள் குந்தவையை மணந்தான். இவ்விதமாகச் சோழ ஆதிக்கம் வேங்கி நாட்டில் பரவிற்று. சத்தியாசிரயன் அந்நாட்டின்மீது படையெடுக்கத் தன் சேனைத் தலைவன் பாயல் நம்பியை அனுப்பினான் (1006). அவன் தரணிக் கோட்டை முதலான பல கோட்டைகளைப் பிடித்தான். இதற்கு எதிராக இராசராசன் மகன் இராசேந்திரன் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்து (1007), பிஜாப்பூர் ஜில்லா தோனூர் வரை சென்று நாட்டை அழித்தான். வனவாசியையும் ராய்ச்சூரையும் பிடித்துக்கொண்டு, சாளுக்கிய இராசதானியான மானியகேதம் என்னும் ஊரையும் தாக்கினான். அதே சமயத்தில் மற்றொரு சோழப்படை வேங்கியிலிருந்து கிளம்பி, ஐதராபாத்துக்கு 45 மைல் வடகிழக்காக உள்ள கொள்ளிப்பாக்கை என்னும் கோட்டையைப் பிடித்துக் கொண்டது. சத்தியாசிரயன் படைகள் வேங்கியை விட்டுப் பின்வாங்கிச் சென்றன. சோழசேனையும் மிகுந்த கொள்ளைப் பொருள்களுடன் துங்கபத்திரையின் தென்கரையை அடைந்தது.

இராசராசன் தன் ஆட்சியின் கடைசியில் ‘பல் பழங்தீவு பன்னீராயம்’ எனப்பட்ட மாலதீவுகளைப் பிடித்துத் தன் இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். 1012-ல் இராசேந்திரனை இளவரசனாக்கினான். தஞ்சையில் இராசராசேச்சுரமென்னும் பெரிய கோயிலை நிருமித்தான். கோயில் கட்டி முடிந்த ஆண்டு சு. 1010. நாகபட்டினத்தில் சைலேந்திர வமிசத்தைச் சார்ந்த ஸ்ரீ விஜய நாட்டு அரசன் மாரவிஜயோத்துங்கவர்மனுக்கு ஒரு பெரும் பௌத்த விஹாரம் கட்ட அனுமதி கொடுத்தான். அதன் பெயர் சூடாமணி விஹாரம். சூடாமணர்வர்மன் மாரவிஜயோத்துங்கவர்மனுடைய தகப்பன். இராசராசன் ஆட்சி 1014-ல் முடிவு பெற்றது.

முதல் இராசேந்திரன் காலத்தில் (ஆ. கா. 1014 1044) சோழ சாம்ராச்சியம் இன்னும் பிரபலமாக வளர்ந்தது. இலங்கை முற்றிலும் வெல்லப்பட்டது. அதன் அரசன் V-ம் மகிந்தன் சிறைப்பட்டுச் சோழநாட்டில் இறந்தான். ஆனால் மகிந்தன் மகன் கஸ்ஸபன் தென்னிலங்கையில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தி, I-ம் விக்கிரமபாகு என்னும் பட்டத்துடன் 1029-1041 வரை ஆண்டுவந்தான். பாண்டிய, கேரள நாடுகளை ஆளுவதற்காகத் தன் புதல்வரில் ஒருவனை இராசேந்திரன் சோழபாண்டியன் என்னும் பட்டங்கட்டித் தன் பிரதிநிதியாக மதுரையில் அமர்த்தினான்.

சாளுக்கிய நாட்டில் 1008-ல் சத்தியாசிரயனுக்குப் பின் அவன் தம்பி மகன் V-ம் விக்கிரமாதித்தன் பட்டமேற்று ஏழாண்டுகள் ஆண்டான். 1015 முதல் விக்கிரமாதித்தன் தம்பி II-ம் ஜயசிம்மன் (1015-42) ஆட்சி புரிந்தான். ஜயசிம்மனுக்குப் பகைவர் பலர். மாளவநாட்டரசன் பரமாரபோஜன், முன் முஞ்சனடைந்த தோல்விக்குப் பதிலாக லாட தேசத்தையும் வட கொங்கணத்தின் சில பகுதிகளையும் ஆக்கிரமித்தான்; கடும்போர் புரிந்து, பின்னரே ஜயசிம்மன் தன் நாட்டை மீட்டுக்கொண்டான். ஆனால் இராசேந்திரனே அவனுக்கு முக்கியப் பகைவன். சோழன் தென்னாடுகளில் போர் புரிந்துகொண்டிருந்த காலத்தில் ஜயசிம்மன் வேங்கி நாட்டில் கலகம் ஆரம்பித்தான். அங்கே I-ம் சக்திவர்மனுக்குப் பின் அவன் தம்பி விமலாதித்தன் ஏழாண்டுகள் (1011-18) ஆண்டான். அவனுக்குச் சோழராணி குந்தவையிடம் பிறந்த இராசராசன் பட்டத்துக்கு வராமல் தடுப்பதற்காக ஜயசிம்மன் விமலாதித்தனுடைய மற்றொரு மகன் VII-ம் விஜயாதித்தனைக் கிளப்பிவிட்டான். மேலும் துங்க பத்திரையைக் கடந்து பல்லாரியையும், கங்கவாடியின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்தான். இச் செய்திகளைக் கேட்டதும் இராசேந்திரன் இரண்டு சேனைகளை வடக்கே அனுப்பினான். ஒன்று துங்கபத்திரையைத் தாண்டி, முசங்கி (தற்கால மாஸ்கி)ப் போரில் ஜயசிம்மனைத் தோல்வியுறச் செய்தது. மற்றது வேங்கி நாட்டில் புகுந்து, விஜயாதித்தனைப் பலமுறை தாக்கி, வேங்கியை இராசராசன் வசமாக்கி, ஜயசிம்மனுடன் சேர்ந்த கலிங்க அரசன் மதுகாமார்ணவனைத் (ஆ. கா. 1019 1038) தண்டித்த பின் வெற்றிகரமாகக் கங்கையை நோக்கிச் சென்றது. இப்படையெழுச்சியினால் இராசேந்திரனுக்குக் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டம் வந்தது. ஆனால் அப்படை வடநாட்டிலிருக்கும் போது அதற்குத் திரும்பமுடியாத விபத்துக்கள் நேராமலிருப்பதற்காக இராசேந்திரனே நேராகக் கோதாவரிக்கரை சென்று, மீளும் வழியில் தன் மருமகன் இராசராசனுடைய பட்டாபிஷேகத்தைச் செவ்வனே நடத்திவைத்தான் (1022). பிறகு கங்கையைக்கொண்டு திரும்பிய படையுடன் தன் புதிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்திற்குத் திரும்பினான்.

இராசேந்திரன் ஆட்சியில் அடுத்த பெருநிகழ்ச்சி ஸ்ரீ விஜய இராச்சியத்தின்மீது படையெடுப்பு. இந்நாட்டிற்கும் சோழருக்கும் ஏற்பட்டிருந்த நட்பு ஏதோ காரணம்பற்றி மாறியது. ஒரு வேளை சோழநாட்டார் சீன தேசத்தோடு செய்துவந்த வியாபாரத்திற்கு ஸ்ரீ விஜய அரசரால் இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம். ஏனென்றால், சீனாவிற்குப் போகும் வழிகளெல்லாம் அவர்களுடைய பரந்த கடல் இராச்சியத்தின் வழியே அமைந்தவை. அல்லது இராசேந்திரன் தன் திக்குவிசயத்தில் சமுத்திர இராச்சியமான ஸ்ரீ விஜயத்தையும் வெல்ல வேண்டியது அவசியமென்று கருதியிருக்கலாம். அது எப்படியாயினும் சுமார் கி. பி. 1025-ல் அலைகடல் “நடுவுட் பலகலஞ் செலுத்தி” இராசேந்திரன் கடாரம், ஸ்ரீ விஜயம் முதலிய பல பட்டணங்களைத் தாக்கி, மார விஜயோத்துங்கவர்மனுக்குப் பின் ஆண்ட சங்கிராம விஜயோத்துங்கனைச் சிலகாலம் சிறையிலிட்டான். கடைசியாக அவன் நாட்டை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டுச் சோழக் கடற்படை மீண்டது. சுமாத்திரா தீவில் கி. பி. 1088-ல் வரையப்பட்ட தமிழ்ச் சாசனப்பகுதி ஒன்று தமிழ்நாட்டிற்கும் ஸ்ரீவிஜயத்திற்கும் உள்ள நீடித்தவாணிகத் தொடர்பைக் குறிக்கிறது. சோழ நாட்டிலிருந்து சீனதேசத்திற்கு 1016, 1033, 1077 ஆண்டுகளில் வணிகர்களின் கூட்டங்கள் சென்று மீண்டன.

இதற்குப்பின் பாண்டிய கேரள நாடுகளில் ஏற்பட்ட கலகங்களை இளவரசன் இராசாதிராசன் அடக்கினான். அவனே இலங்கை I-ம் விக்கிரமபாகுவுக்கு விரோதமாக அத்தீவின்மீது 1041-ல் படையெடுத்தான். ஆயினும் இலங்கையில், முக்கியமாகத் தென்பகுதியில் சோழருக்கு எதிர்ப்பு இருந்துகொண்டேயிருந்தது. இராசேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் வேங்கி காரணமாக மறுபடியும் போர் ஆரம்பித்தது. சாளுக்கிய இராச்சியத்தில் II-ம் ஜயசிம்மனுக்குப் பின் அவன் மகன் I-ம் ஆகவமல்ல சோமேசுவரன் 1042-ல் சிம்மாசனமேறினான். அவன் தன் தலைநகரை மானியகேடத் திலிருந்து கலியாணி நகருக்கு மாற்றினான் ; அங்கே பல அழகிய கட்டடங்களை அமைத்தான். மாளவநாட்டுத் தலைநகரான தாராநகரைத் தாக்கிப் போஜராஜனிடம் கப்பம் பெற்றான். சக்கிரகூடம் (தற்காலத்துப் பஸ்தர்) என்ற நாட்டை ஆண்டுவந்த நாகவமிச அரசன் தாராவர்ஷனைத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். அவன் மக்களான I-ம் புரோலன் பேதன் என்ற காகதீயத் தலைவர்களோடு சோமேசுவரன் யுத்தங்களை நடத்தி, அவர்களிடமிருந்து அனுமகொண்ட விஷயம் என்னும் பகுதியைத் தன்னாடாகப் பெற்றான். சோமேசுவரன் மற்றொரு பக்கம் வேங்கியைத் தாக்கிச் சோழப்போரை ஆரம்பித்தான். அதேசமயத்தில் விஜயாதித்தன் வேங்கியைத் தாக்கி இராசராசனை விரட்டித் தானே அரசு புரிய ஆரம்பித்தான் (1031). 1035-ல் இராசராசன் மீண்டு வந்து விஜயாதித்தனை மேலைச் சாளுக்கிய நாட்டுக்கு விரட்டினான். இதற்குள் இராசேந்திரன் இறந்து I-ம் இராசாதிராசன் பட்டமெய்தினான் (1044). உடனே தானே தெலுங்கு நாட்டுக்குச் சென்று, தானிய கடகம் என்னும் தன்னாடையில் சாளுக்கிய சைனியத்தை முறியடித்து, விஜயாதித்தனையும் சோமேசுவரன் மகன் விக்கிரமாதித்தனையும் வெருண்டோடச் செய்து, கொள்ளிப்பாக்கை என்னும் சாளுக்கியக் கோட்டையைத் தீக்கிரையாக்கினான். இந்நிகழ்ச்சிகளால் கீழைச்சாளுக்கிய அரசனான இராசராசனுக்குச் சிறிது நிம்மதி ஏற்பட்டது. மேற்குப்பாகத்திலும் சோழப் படைகள் கம்பிலி நகரிலுள்ள சாளுக்கிய மாளிகையைத் தகர்த்துக் கிருஷ்ணா நதிக்கரையிலுள்ள பூண்டூரில் பெரு வெற்றி பெற்று, அவற்றைக் கடந்து அப்பாலுள்ள ஏதகிரியில் புலி பொறித்த ஒரு ஜயத்தம்பத்தை நாட்டின. பிறகு கலியாணபுரத்தையே தாக்கி, அங்கே வீராபிஷேகம் செய்து கொண்டு, இராசாதிராசன் விசயராசேந்திரன் என்னும் பட்டமெய்தினான். திரும்பும்போது கலியாணபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட ஓர் அரிய துவார பாலகனுடைய சிலை இன்றும் தாராசுரம் கோயிலின் முன் புறமிருக்கிறது. சோமேசுவரன் தன் விடாமுயற்சியால் சுமார் கி. பி. 1050-ல் சோழப்படைகள் தன்னாட்டை விட்டகலச் செய்தான். வேங்கியிலும் இராசராசனைச் சோழரை விட்டுப் பிரித்துத் தனக்குள்ளடங்கிய சிற்றரசனாக்கிக் கொண்டான். ஒரு சமயம் சாளுக்கியப் படைகள் சோழநாட்டிற் புகுந்து காஞ்சீபுரம் வரை சென்றன. இவையெல்லாம் இராசாதிராசனது இரண்டாம் போர் முயற்சிக்குத் தூண்டுகோலாகவிருந்தன. யாது காரணம் பற்றியோ கலிங்கத்திலும் வேங்கியிலும் தன் ஆட்சியை மறுபடியும் நிறுவ அவன் முயற்சி செய்யவில்லையெனினும், அவனும் இராசாதிராசனும் அவன் தம்பியும் இளவரசனுமான II-ம் இராசேந்திரனும் 1053-54 சாளுக்கிய நாட்டிற் புகுந்து கொப்பத்தில் பெரும்போர் தொடுத்தனர். இராசாதிராசன் களத்தில்பட்டு வீழ்ந்தான். ஆயினும் இராசேந்திரன் ஓடப்புகுந்த படைகளை நிறுத்தி வெற்றிபெற்றான். களத்திலேயே இராசேந்திரன் பட்டாபிஷேகம் செய்துகொண்டு, பிறகு கொல்லாபுரம் சென்று, அங்கு ஒரு ஜயத்தம்பத்தை நாட்டினான். இத் தோல்வியினால் ஏற்பட்ட அவமானத்தைத் தீர்க்க எண்ணிய சோமேசுவரன் மறுபடியும் போர் வேண்டினான். வேங்கியில் இராசராசன் 1061-ல் இறந்தான். சோமேசுவரன் விஜயா தித்தன் மகன் II-ம் சக்திவர்மனை அந்நாட்டுக்கு அரசனாக்குமாறு கட்டளையிட்டுச் சாமுண்டராஜன் என்னும் படைத்தலைவனை அனுப்பினான். தன் மக்கள் விக்கிரமாதித்தனையும் ஜயசிம்மனையும் கங்கவாடியின் மேற் படையெடுக்கச் செய்தான். இராசேந்திரன் பின் வாங்கவில்லை. அவன் தம்பி வீரராசேந்திரனும், மகன் இராசமகேந்திரனும் போரில் கலந்துகொண்டனர். வேங்கியில் சாமுண்டராஜனும் சக்திவர்மனும் தோற்றுக் கொலையுண்டனர். கங்கவாடிமீது படையெடுத்த அரசகுமாரர்களைக் கூடல்சங்கமத்துப் போரில் வென்றான். சோமேசுவரன் நினைவு கைகூடவில்லை (1061-62), அடுத்த ஆண்டு இளவரசன் இராசமகேந்திரனும் இராசேந்திரனும் இறந்தனர். வீரராசேந்திரன் அரசனானான் (1063).

சோமேசுவரன் மறுபடி போருக்குத் தயார் செய்தான். தாராவர்ஷனும், கலிங்க கங்க அரசன் 111-ம் வச்சிரகஸ்தனும் அவனுக்கு உதவியாக நின்றனர். ஜனநாதன் என்ற பரமார அரசகுமாரனும் அவனுக்குப் படைத்தலைவனாகி, விஜயவாடாவின் அருகில் சேனையுடன் தயாராக நின்றான். மேற்கே விஜயாதித்தன் சாளுக்கிய சேனைகளைச் சோழராச்சியத்தின்மீது படையெழுச்சிக்காகத் தயாரித்தான். யுத்தம் ஆரம்பித்ததும் முதலில் சோழருக்குப் பெருவெற்றியொன்றும் ஏற்படாவிட்டாலும், 1066-ல் முடக்காற்றில் (துங்கபத்திரையாயிருக்கலாம்) சோமேசுவரன் படைகள் தோற்றுப் போயின. ஆனால் அவன் மறுபடி கடல் சங்கமத்தில் குறித்த நாளில் போர் நிகழவேண்டுமென வீரராசேந்திரனுக்குத் தூது அனுப்பினான். அந்நாளில் வீரராசேந்திரன் சாளுக்கியப் படைகளை அவ்விடத்தில் சந்தித்தானேயொழியச் சோமேசுவரன் வரவில்லை. ஒரு மாதகாலம் அவன் வரவிற்காகக் காத்திருந்து பின் சாளுக்கியப் படைகளை முறியடித்தான். பிறகு வேங்கிக்குச் சென்று, அங்கே அவனுக்கு முன் வந்திருந்த விசயாதித்தனையும் ஜனநாதனையும் விஜயவாடாப் போரில் தோற்க வைத்துப் பின் கிருஷ்ணா நதியைக் கடந்து, கலிங்கநாட்டிலும் நாக வமிச தாராவர்ஷனுடைய சக்கரகூட நாட்டிலும் போர் புரிந்தான். இப்போர்களில் சாளுக்கியர் பக்கம் வச்சிரகஸ்தன் மகன் இராசராசனும் விக்கிரமாதித்தனும் போர்புரிந்தனர். சோழர் பக்கம் வேங்கி இராசராசன் மகன் இராசேந்திரன் (பிறகு இவனே முதற் குலோத்துங்கனெனப் பட்டான்) சேர்ந்தான். இதனிடையில் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த சோமேசுவரன் நீரில் மூழ்கி உயிர் துறந்தான் (1068). சாளுக்கிய மன்னரில் சோமேசுவரன் பெரிய இராசதந்திரம் வல்ல ஓர் அரசன். அவன் கல்யாணி நகரை மிகவும் சிறப்பாக அழகுபடுத்தினான்.

அவனுக்குப் பின் அவன் மூத்த மகன் II-ம் சோமேசுவரன் பட்டமெய்தினான். ஆனால் அவன் தம்பி விக்கிரமாதித்தனுக்கு ஆதிமுதலே தான் ஆள வேண்டுமென்ற எண்ணமுண்டு. வீரராசேந்திரன் குத்திக்கோட்டையை முற்றுகையிட்டுக் கம்பிலி நகரத்தையும் தாக்கினான். இதுதான் தனக்கு ஏற்ற சமயமென்று விக்கிரமாதித்தன் பல சிற்றரசரின் உதவியை நாடித் தன் தமையனுக்கு விரோதமாக வீரராசேந்திரனுடன் நட்புக்கொண்டாட ஆரம்பித்தான். இதன் பயனாக விஜயாதித்தன் வீரராசேந்திரனுக்கு அடிபணிந்து அவன்கீழ்ச் சிற்றரசனாக வேங்கி நாட்டை ஆளச் சம்மதித்தான். வீரராசேந்திரனுடைய பெண்களிருவரில் ஒருத்தி விக்கிரமாதித்தனையும் மற்றொருத்தி கலிங்க இராசராசனையும் மணந்தனர். விக்கிரமாதித்தனை II-ம் சோமேசுவரனுக்கு இளவரசாக நியமித்துச் சாளுக்கிய இராச்சியத்தின் தென்பாதியை அவன் ஆட்சிக்குள்ளாக்கிச் சமாதான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வேற்பாடுகள் 1070-ல் வீரராசேந்திரன் இறந்ததும் சீர்குலைந்து போயின.

1067-ல் வீரராசேந்திரன் இலங்கைக்கு ஒரு சேனையை அனுப்பிச் சோழரை எதிர்த்து I-ம் விஜய பாகுவை வென்று அவன் அரசியைச் சிறைபிடித்தான். விஜயபாகு வாதகிரி (வகிரிகலா)யில் ஓடி ஒளிந்திருந்து சில ஆண்டுகள் கழித்து அங்கிருந்து வெளிக் கிளம்பிச் சோழ ஆதிக்கத்தை இலங்கையிலிருந்து நீக்கித் தானே அத்தீவு முழுமைக்கும் அரசனானான். அப்போதைய சோழமன்னனான குலோத்துங்கனால் அதைத் தடுக்க இயலவில்லை (1072-73). வீரராசேந்திரன் 1068-ல் கடாரத்துக்கு ஒரு கப்பற்படையை யனுப்பித் தன்னை வணங்கிய அரசகுமாரனொருவனுக்கு அவன் உரிமையை மீட்டுக்கொடுத்தான். வீரராசேந்திரனுக்குப் பின் அவன் மகன் அதிராசேந்திரன் விக்கிரமாதித்தனுடைய உதவியால் அரசனான். ஆனால் ஒரு பொதுக் கலகத்தில் அவன் உயிரிழந்தான். வேங்கி அரசகுமாரனான இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பட்டத்துடன் சோழ சிம்மாதனமேறினான் (1070). குலோத்துங்கன் 1070-ல் சோழ நாட்டையும் அதற்குச் சற்று முன்பின்னாக விஜயாதித்தனிடமிருந்து வேங்கியையும் ஒருங்கே பெற்று ஆண்டு வந்தான்.

ஆகவே விக்கிரமாதித்தனுக்கு ஒரு புறம் தன் தமையன் சோமேசுவரனும், மற்றொரு புறம் குலோத்துங்கனும் விரோதிகளாக ஏற்பட்டனர். அவர்களிருவரும் சேர்ந்து விக்கிரமாதித்தனைத் தாக்க உடன்படிக்கை செய்துகொண்டனர். விக்கிரமாதித்தன் பக்கம் அவன் தம்பி ஜயசிம்மனும் விஜயாதித்தனும் சேர்ந்தனர். மேலும் கொங்கண நாட்டுக் கதம்ப ஜயகேசியும் ஹொய்சள வமிசத்து வினயாதித்தனும் அவன் மகன் எறெயங்கனும் பல சிற்றரசரும் சேர்ந்தனர். யுத்தம் 1075-ல் ஆரம்பித்தது. கங்கவாடியில் விக்கிரமாதித் தன் தோல்வியடைந்து துங்கபத்திரை நதிவரை விரட்டப்பட்டான். ஆனால் மற்றொரு பக்கத்திலிருந்து அவனைத் தாக்கின சோமேசுவரன் அவன் தம்பியினிடம் சிறைப்பட்டான். விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசனாகிச் சாளுக்கிய விக்கிரம சகாப்தத்தைத் (1075-76) துவக்கினான்.

குலோத்துங்கன் மகள் சூரியவல்லி என்பவள் வீரப் பெருமாள் என்ற சிங்கள அரசகுமாரனை மணந்தாள். இதனால் இலங்கை அரசனும் குலோத்துங்கனும் நட்பாகவே இருந்தனர் என்று கொள்ளலாம். ஆனால் பாண்டிய கேரள நாடுகளில் குழப்பம் ஏற்பட்டது. இதை அடக்கச் செம்பொன்மாரி, கோட்டாறு, விழிஞம், சாலை முதலிய இடங்களில் குலோத்துங்கன் பல வெற்றிகரமான போர்களை நடத்திப் பாண்டிய கேரள நாடுகளையும் மறுபடி தன் ஆட்சிக்குக் கீழ்ப்படியச் செய்தான். முக்கியமான இடங்களில் நிலைப்படைகளை நிறுவி, நாட்டில் மறுபடி கலகமேற்படாமல் காத்தான். ஆனால் பரம்பரையான பாண்டிய சேர அரசர் ஆட்சியை நீக்கவில்லை. சோழ நாட்டிலிருந்து 72 வியாபாரிகள் 1077-ல் பல விலையுயர்ந்த சரக்குக்களை எடுத்துக் கொண்டு சீன தேசத்துக்குக் கடல் வழியாகச் சென்று மீண்டதாகச் சீன நாட்டு வரலாற்றுக் குறிப்புக்களால் அறிகிறோம். 1090-ல் கடாரத்தரசன் நாகப்பட்டினத்து விஹாரங்களுக்காகக் குலோத்துங்கனிடம் ஒரு தூது அனுப்பினான்.

வேங்கியில் விஜயாதித்தனுக்குப்பின் குலோத்துங்கன் மக்கள் அவனுக்குப் பிரதிநிதிகளாக ஆண்டனர்: இராசராச மும்முடிச் சோழன் (1076-78); வீரசோழன் (1078-84); சோழகங்கன் (1084-89); மறுபடி வீரசோழன் (1089-92); கடைசியாக விக்கிரமசோழன் (1092-1118). 1097-ல் கொலனு அல்லது கொல்லேற்றின் கரையிலாண்ட கலிங்க மன்னன் அனந்தவர் மன் சோடகங்கனுடன் சேர்ந்து, விக்கிரமசோழனுக்கு எதிராகப் போர் தொடங்கினான். அப்போது விக்கிரமசோழனுக்கு உதவியாகச் சென்ற சிற்றரசரில் பராந்தக பாண்டியன் ஒருவன் (இச்செய்தி இவ்வரசனுடைய கன்னியாகுமரிச் சாசனமொன்றால் வெளியாகிறது). கொலனு அழிபட்டது; கலிங்க நாடும் படையெடுப்புக்கு உள்ளாகியது. எதிர்த்து நின்ற இரு மன்னரும் கீழ்ப்படிந்தபின் போர் நின்றது. மறுமுறை சுமார் 1110-ல் கலிங்க மன்னன் கப்பம் கட்டுவதை நிறுத்தவே, குலோத்துங்கனுடைய படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் பெருஞ்சேனையுடன் கலிங்க நாட்டில் புகுந்து, பெருஞ்சேதம் விளைவித்து, மிக்க பொருட்குவையுடன் திரும்பினான். இப்போரையே ஐயங்கொண்டார் தமது கலிங்கத்துப் பரணியில் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

கி. பி. 1115 வரை சோழ சக்கரவர்த்திக்கு இலங்கை பிரிந்து போனதைத் தவிர வேறு யாதொரு நஷ்டமும் ஏற்படவில்லை. துங்கபத்திரைக்குத் தெற்கேயுள்ள நாடு முழுவதும் வேங்கி நாடும் அவன் ஆட்சிக்குள்ளிருந்தன. கலிங்க நாடு கப்பம் கட்டி வந்தது. வட இந்தியாவில் கன்னோசி, பர்மாவில் பகான், இந்தோசீனாவில் காம்போஜம் முதலிய நாடுகளுடன் குலோத்துங்கன் நட்புப் பாராட்டித் தூதுகள் அனுப்புவதும் வரவேற்பதுமாக இருந்தான். ஆனால் விக்கிரமாதித்தன் சூழ்ச்சிகளால் கடைசி ஆண்டுகளில் மைசூரிலும் வேங்கியிலும் மறுபடியும் சச்சரவுகள் ஏற்பட்டன.

தொடக்கத்தில் ஏற்பட்ட போர்களுக்குப் பின் பொதுவாக விக்கிரமாதித்தனும் குலோத்துங்கனும் தத்தம் நாடுகளை அமைதியாகவே வெகுகாலம் ஆண்டு வந்தனர். விக்கிரமாதித்தன் பில்ஹணனைப் போன்ற கவிகளையும், விஞ்ஞானேசுவரரைப் போன்ற சரித்திரம் வல்லாரையும் ஆதரித்து வந்தான். சு. 1083-ல் அவன் தம்பி ஜயசிம்மன் அவனுக்கு விரோதமாகக் குலோத்துங்கனுக்குத் தூதனுப்பினான். விக்கிரமாதித்தன் அவனைப் போரில் வென்று சிறைப்படுத்தினான். ஹொய்சள நாட்டிலிருந்து நேரிட்ட ஆபத்து இதைவிட அதிகமானது. அங்கே எறெயங்கனுக்குப்பின் I-ம் பல்லாளன் (1100-1110) ஆண்டான். இவனும் இவன் முன்னோரும் சாளுக்கிய ஆதிக்கத்தை அங்கீகரித்த போதிலும், சிறிது சிறிதாகத் தங்களாட்சிக்குட்பட்ட நாடுகளைப் பெருக்கிக்கொண்டே வந்தனர். இதன் பயன் பல்லாளன் தம்பி பிட்டிகன் அல்லது விஷ்ணு வர்த்தனுடைய ஆட்சிக் காலத்தில் நன்றாகப் புலப்பட்டது. அவன் வீரமும் ஆற்றலும் வாய்ந்தவன். அவன் சோழநாடான கங்கவாடியை முதலில் தாக்கினான். தலக்காட்டில் சோழப் பிரதிநிதியான அதிக மானை வென்று கங்கவாடியைத் தன்னாட்டுடன் சேர்த்துக் கொண்டான் (1116). இது குலோத்துங்கனுக்குப் பெரு நஷ்டமானதுடன், விக்கிரமாதித்தனுக்குக் கேடாகவே முடிந்தது. ஏனெனில் விஷ்ணுவர்த்தனன் உச்சங்கி பாண்டியனையும் கோவா (கதம்ப) II-ம் ஜயகேசியையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, விக்கிரமாதித்தனுக்கு விரோதமாகத் தோன்றி, வடக்கே கிருஷ்ணா நதி வரையிலுள்ள நாடுகளை விரைவில் ஆக்கிரமித்துக் கொண்டான். அப்போது சிந்தி வமிசச் சிற்றரசன் ஆசுகி என்பான் விக்கிரமாதித்தனுக்குப் பேருதவி புரிந்தான். கோவா தகர்க்கப்பட்டுத் தீக்கிரையாயிற்று. பாண்டியன் வெகு தூரம் துரத்தப்பட்டான். விஷ்ணுவர்த்தனன் சாளுக்கிய நாடுகளினின்று விரட்டப்பட்டதுமன்றித் தன்னாட்டு மலைக் கோட்டைகளில் சாளுக்கியப் படைகளால் முற்றுகையிடப்பட்டான். பல நீடித்த போர்களுக்குப் பின் விஷ்ணுவர்த்தனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாக ஒப்புக் கொண்டான் (1122-23).

இதே சமயத்தில் விக்கிரமாதித்தன் குலோத்துங்கனுக்குத் தீங்கு விளைவிக்க முயன்றான். 1097-ல் கொலனு அரசனும் அனந்தவர்மனும் நடத்திய போரில் அவனுக்கு என்ன தொடர்புண்டென்று கூற இயலவில்லை. ஆனால் விசேஷமாக 1118 முதல் அதாவது விக்கிரமசோழன் தான் சோழநாட்டில் இளவரசு பதத்தை வகிப்பதற்காக வேங்கியை விட்டகன்றது முதல், விக்கிரமாதித்தன் வேங்கியில் தலையிட-ஆரம் பித்தான். 1118-ல் அனந்தபாலன் என்ற படைத்தலைவன் தன்னை வேங்கி அரசன் என்று கூறிக் கொண்டான்; வேறு சாளுக்கியச் சேனாபதிகளும் தெலுங்கு நாட்டில் ஆங்காங்கே சென்று சோழ ஆட்சியை முடித்தனர். இதுமுதல் பல ஆண்டுகள் வரையிற் சோழருடைய சின்னங்களே தெலுங்கு நாட்டில் இல்லாமற் போயின. ஆகவே குலோத்துங்கன் இராச்சியம் அவன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் தமிழ்நாடு மட்டுமே என்னும்படியாயிற்று. ஆயினும் குலோத்துங்கன் ஒரு பேரரசன் என்பதில் ஐயமில்லை. குடிகளின் நன்மையைக் கருதி அவன் வீண் போர்களில் தலையிடாமல் விலகினான். அவனுக்குப் பின் ஒரு நூற்றாண்டுக் காலம் சோழ சாம்ராச்சியம் சலியாமல் நீடித்திருந்தது அவனுடைய திறமைக்கும் தீர்க்கதரிசனத்துக்கும் சான்றாகும். அவனுக்குச் சுங்கந் தவிர்த்த சோழன் என்ற பெயருமுண்டு. ஆனால் இந்தச் சீர்திருத்தத்தின் விளக்கம் ஒன்றும் தெளிவாகக் கிடைக்கவில்லை.

விக்கிரமசோழன் ஆட்சி 1118-ல் ஆரம்பித்தது. ஆனால் I-ம் குலோத்துங்கன் அதற்குப்பின் நான்கு ஆண்டுகள் வாழ்ந்ததாக எண்ண இடமுண்டு. விக்கிரம சோழன் ஆட்சிக் காலமாகிய பதினேழாண்டுகளும் பொதுவாக அமைதியாகவே சென்றன. சிதம்பரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் அவன் பல திருப்பணிகளைச் செய்வித்தான். 1127-ல் விக்கிரமாதித்தன் இறந்தான். அவன் மகன் III-ம் சோமேசுவரன் பட்டம் பெற்றதும் விக்கிரமசோழன் வேங்கி நாட்டில் சோழ ஆட்சியை எளிதில் மீண்டும் ஸ்தாபித்தான்; 1133-ல் கோதாவரியாற்றங்கரையில் சோமேசுவரன் முன்னிலையிலேயே சாளுக்கியப் படை தோல்வியுற்றது. சாளுக்கியர் பக்கம். அனந்தவர்ம சோடகங்கனும், சோழர் சார்பில் வெலனாட்டு II-ம் சோடகங்கனும் கலந்து கொண்டனர். பல சாளுக்கியப் படைத்தலைவருடன் குதிரைகளும், ஒட்டகங்களும், நிதிக்குவையும் சோழர் வசமாயின. கோலார் மாவட்டத்தின் சில பகுதிகளை விக்கிரமசோழன் மீட்டுக்கொண்டபோதிலும், கங்க வாடியில் வேங்கியைப் போன்ற வெற்றி கிடைக்கவில்லை. அவனுக்குப்பின் அவன் மகன் II-ம் குலோத்துங்கன் (1133-50) ஆண்டான். தன் தகப்பன் ஆரம்பித்த திருப்பணி வேலையைச் சிதம்பரத்தில் நடத்தும் போது நடராஜர் சன்னிதியிலிருந்து கோவிந்தராசப் பெருமாளுடைய விக்கிரகத்தைப் பிடுங்கிக் கடலில் எறிந்துவிட்டான். அது திரும்ப விஜயநகர அரசர் நாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. குலோத்துங்கன் மகன் II-ம் இராசராசன் 1046 முதல் இளவரசனாகவிருந்து 1050 முதல் 1073 வரை தானே அரசனாக ஆண்டான். அவனுக்கு வயதுவந்த மகனில்லாமையால் விக்கிரம் சோழனுடைய பெண் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராசாதிராசனை 1166-ல் இளவரசாக்கினான். மத்திய அரசாங்கத்தின் வலுக்குறைவினால் சிற்றரசரெல்லாம் கட்டுக்கடங்காமல் தாந்தோன்றிகளாக ஆரம்பித்தனர். அது அடுத்த ஆட்சிகளில் வரவர அதிகமாயிற்று.

இராசாதிராசன் இளவரசானவுடன் பாண்டிய நாட்டில் ஒரு பெரிய தாயாதிச் சச்சரவு ஏற்பட்டு, அதில் சிங்களரும் சோழரும் தலையிட நேரிட்டது. பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகரனுக்கும் விவாதம் ஏற்பட்டுக் குலசேகரன் பராக்கிரமனை மதுரையில் முற்றுகையிட்டான். பராக்கிரமன் இலங்கை வேந்தன் I-ம் பராக்கிரமபாகு (1153-86)வின் உதவியை வேண்டினான். அவன் அனுப்பிய சேனை வருமுன் குலசேகரன் மதுரையைப் பிடித்துப் பராக்கிரமனையும் அவன் பெண்டிர் பிள்ளைகளையும் கொலை செய்துவிட்டான். ஆயினும் பராக்கிரமபாகு மதுரையைப் பராக்கிரமன் வமிசத்து அரசன் ஒருவன்கீழ் ஆக்கும்வரைப் போரை நிறுத்தக்கூடாதென்று உத்தரவனுப்பினான்; இலங்காபுரிக்கு உபரிப்படைகளும் அனுப்பிவைத்தான். குலசேகரன் சோழ மன்னனுடைய உதவியை வேண்ட, அவன் பல்லவராயனுடைய தலைமையின்கீழ் ஒரு பெருஞ்சேனையை யனுப்பிவைத்தான். முதலில் குலசேகரன் தோல்வியடைந்தான். பராக்கிரமன் மகன் வீர பாண்டியன் மதுரைக்கரசனானான். ஆனால் விரைவில் பல்லவராயன் சேனை சிங்களப் படைகளை முறியடித்துத் தலைவர்களுடைய தலைகளை அறுத்து, மதுரை மாநகர் மதில் கதவுகளில் ஆணிகளடித்துத் தைத்தது. குலசேகரன் மதுரையைப்பிடித்து, அது இலங்கையின் கீழ்ப்பட்ட நாடாகாமல் தடுத்தான். இதைக் கேள்வியுற்ற பராக்கிரமபாகு வேறு படையைத் திரட்ட ஆரம்பித்தான். பல்லவராயனோ பராக்கிரமபாகுவுக்கு விரோதமாக அவன் உறவினன் ஸ்ரீவல்லபனைத் தூண்டிவிட்டு, அவனுக்கு ஒரு படையை உதவி, இலங்கையின்மீது படையெடுக்கச்செய்தான். இதனால் தனக்குமிகுந்த இடையூறுகள் ஏற்படவே பராக்கிரமபாகு குலசேகரனை மதுரைக்கரசனாக ஒப்புக்கொண்டு, அவனுடன் சேர்ந்து சோழரை எதிர்க்க முயன்றான். குலசேகரன் மோசம் செய்ததைச் சோழன் கண்டுபிடித்ததும் பல்லவராயன் வீரபாண்டியனையே மதுரையில் ஆளச்செய்து குலசேகரனை வெளியே விரட்டினான். ஆகவே பராக்கிரமபாகுவின் எண்ணம் கைகூடவில்லை. இந்நிகழ்ச்சிகளெல்லாம் 1169 முதல் 1177 வரை நடந்தன. ஆனால் பாண்டிய நாட்டுப் போர் முடிந்தபாடில்லை.

இராசாதிராசன் 1182 வரை உயிருடன் இருந்தான். ஆனால் 1178 முதலே மூன்றாம் குலோத்துங்கனுடைய ஆட்சி ஆரம்பித்தது. அவனுக்கும் இராசாதிராசனுக்கும் உள்ள உறவுமுறை புலப்படவில்லை. குலோத்துங்கன் திறமையால் சோழ ராச்சியத்தின் குலைவு ஒருவாறு தடுக்கப்பட்டது. அவன் காலத்தில் கும்பகோணத்துக் கருகில் திரிபுவனத்தில் கம்பகரேசுவரர் கோயில் கட்டப்பட்டது. இது சோழரால் கடைசியாகக் கட்டப்பட்ட பெருங்கற்கோயில். முதலில் குலோத்துங்கன் தன் கவனத்தைப் பாண்டி நாட்டில் செலுத்தவேண்டியிருந்தது. மறுபடியும் பராக்கிரமபாகு வீர பாண்டியனையும் வேணாட்டரசனையும் தன்னுடன் சேர்ந்து சோழரை எதிர்க்கச் செய்தான். இதற்குள் குலசேகரன் இறந்துபட்டான். அவன் உறவினன் விக்கிரம பாண்டியன் என்பான் வீரபாண்டியனுக்கு விரோதமாகக் குலோத்துங்கன் உதவியை நாடினான். சோழ சேனை பாண்டிய நாட்டில் புகுந்து பாண்டியரையும் சிங்களரையும் போரில் வென்றது. வீர பாண்டியன் ஓடிவிடவே விக்கிரம பாண்டியன் மதுரைக்கரசனானான் (1182). வீரபாண்டியன் மறுமுறை எதிர்த்தபோது நெட்டூர்ப் போரில் தோற்று இலங்கைக்கு ஓடிப்போனான். ஆகையால் அவனும் வேணாட்டரசனும் குலோத்துங்கனைப் பணிவதே நலமென்று கருதி மதுரையை யடைந்து அவ்வாறே செய்தனர். அதே சமயத்தில் குலோத்துங்கன் இலங்கை வேந்தனுடைய முடிமேலடி வைத்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன (1189). வீர பாண்டியனுக்குச் சிறிது நிலமும் பொருளும் வழங்கப்பட்டன. அதுமுதல் அவன் அரசியலில் தலையிடவில்லை. இதற்குப்பின் குலோத்துங்கன் ஹொய்சளர் ஆதிக்கம் வளர்ந்து கொண்டிருப்பதைத் தடுக்க வேண்டிக் கொங்குநாட்டையடைந்தான். அங்குத் தகடூர் அதிகமானத் தனக்குக் கீழ்ப்படியச் செய்து, சேர வேந்தனைப் போரில் வென்று, கருவூரில் 1193-ல் வெற்றி விழாக் கொண்டாடினான். இதன் பிறகு II-ம் ஹொய்சள பல்லாளனுடன் நட்புக் கொண்டு, அவனுக்கு ஒரு சோழ வமிசத்துக் குமாரியை மணம் புரிவித்தான்.

விக்கிரம பாண்டியனுக்குப் பின் 1190 முதல் பாண்டிய நாட்டை ஆண்ட ஜடாவர்மன் குலசேகரன் குலோத்துங்கனுக்கு சரிவரக் கீழ்ப்படியாமையால் 1205-ல் சோழ சேனைகள் பாண்டி நாட்டின் மேற் படையெடுத்தன. மதுரையைத் தாக்கிப் பாண்டிய அபிஷேக மண்டபத்தைத் தகர்த்தன. குலசேகரன் மீண்டும் தன் நாட்டைப் பெற்றும், அவனும் அவன் தம்பி சுந்தர பாண்டியனும் தங்களுக்கேற்பட்ட அவமானத்தை மறக்கவில்லை.

சாளுக்கிய III-ம் சோமேசுவரன் காலத்தில் ஹொய்சள விஷ்ணுவர்த்தனன் தன் ஆட்சியை மீட்டுக்கொண்டதுமன்றி, நுளம்பபாடி, வனவாசி, ஹானகல்லு முதலிய பிரதேசங்களில் சாளுக்கியருக்கு விரோதமாகத் தன் ஆட்சியை ஸ்தாபித்தான். சோமேசுவரனுக்குப் பின் ஆண்ட அவன் மக்கள் II-ம் ஜகதேகமல்லன் (1135-51), III-ம் தைலன் (1150-56) காலத்திலும் அப்படியே. 1149-ல் விஷ்ணுவர்த்தனன் தன் மகன் நரசிம்மனைத் துவாரசமுத்திரமாகிய தலைநகரில் இருத்தி விட்டுத் தான் பங்காபுரத்தில் பாடிவீடு அமைத்துக் கொண்டான். சாளுக்கிய சாம்ராச்சியம் நிலை குலைந்தது. III-ம் சோமேசுவரன் நாளிலிருந்து தர்த்தவாடியை ஆண்டுவந்த காலசூரி வமிசத்தாரும், அனுமகொண்டாவில் ஆண்டுவந்த காகதீயரும் தலை தூக்கினர். தேவகிரி யாதவரும் இதுவரை சாளுக்கியருக்கு விசுவாசமாக இருந்துவிட்டு, இப்போது வேறுவிதமாக நடக்க ஆரம்பித்தனர். மூன்றாம் தைலனை ஏமாற்றிக் காலசூரி பிஜ்ஜௗன் எல்லா அதிகாரங்களையும் தன் கைவசமாக்கிக் கொண்டு, 1157-ல் சக்கரவர்த்திப்பட்டம் ஏற்றுத் தன் குலப்பெயரால் ஒரு சகாப்தமும் ஏற்படுத்தினான். தைலன் காகதீய II-ம் புரோலனுடன் யுத்தத்துக்குச் சென்று அனுமகொண்டாவை முற்றுகையிட்டான். ஆனால் புரோலன் மகன் உருத்திரன் காலத்தில் தைலன் அவனுக்குப் பயந்து நோய்வாய்ப்பட்டு இறந்தான் (1163). காலசூரிகள் கையோங்கிற்று. பிஜ்ஜௗன் கலியாணியில் அரசனாகி ஆண்டான். அவன் வனவாசியை ஹொய்சள நரசிம்மனிடமிருத்து பிடுங்கிக் கொண்டான். 1168-ல் III-ம் ஜகதேக மல்லன் என்ற சாளுக்கிய அரசன் ஆண்டு கொண்டிருந்தபோதிலும், பிஜ்ஜௗன் ஆட்சியும் நடந்து வந்தது. அவனால் துன்புறுத்தப்பட்ட லிங்காயதர் கையால் அவன் உயிரிழந்தானென்று ஓர் ஐதிகம் உண்டு; அதன் உண்மை தெளியக் கூடவில்லை. அவனுக்குப் பின் அவன் மக்கள் மூவர் ஒருவர் பின் ஒருவராய் 1183 வரை ஆண்டனர்; அவர்கள் I-ம் ஹொய்சள பல்லாளனுடன்(1173-1200) போர்புரிந்து வெற்றி பெற்றனர். 1183-ல் III-ம் தைலப்பன் மகன் IV-ம் சோமேசுவரன் காலசூரிகளை நீக்கி அரசு புரிந்தான். இதற்கு அவனுக்கு உதவியாயிருந்தவன் முன்கால சூரிப் படைத் தலைவனாயிருந்த பிரம்மன் அல்லது பர்மிதேவன். சோமேசுவரனுடைய சிற்றரசன் யாதவ பில்லமன் (1187-91) சாளுக்கிய ஆட்சியின் வலியின்மை உணர்ந்து, சாளுக்கிய வடபாகங்களைக் கைப்பறினான் (1189). அவனுக்கும் தெற்கேயிருந்து சாளுக்கிய நாடுகளைக் கவர எண்ணிய ஹொய்சள பல்லாளனுக்கும் போர்கள் ஏற்பட்டன. பல்லாளன் சோமேசுவரனையும் அவன் சேனாதிபதி பிரம்மனையும் பல போர்களில் வென்று (1190), பில்லமனுடன் கடைசியாக கதக் என்னுமிடத்தில் போர் புரிந்து, பில்லமனைக் கொன்று வீழ்த்தி (1191), மலப்பிரபா, கிருஷ்ணா நதிகள் வரை தன் ஆதிக்கத்தைப் பரப்பினான். அதற்கு வடக்கேயுள்ள நாடுகள் யாதவர் வசம் தங்கின. பில்லமன் தேவகிரியைத் தன் தலைநகராக்கினான். சாளுக்கிய இராச்சியம் குலைந்ததில் காகதீயருக்கும் சிறிது நாடு கிடைத்தது. யாதவர் சும்மா இருக்கவில்லை. பில்லமன் மகன் ஜெய்துகி காகதீயருத்திரனைப் போரில் கொன்று, அவன் சிற்றப்பன் மகன் கணபதியைச் சிறைப்படுத்தினான் (1196). ருத்திரனுக்குப் பின் சில ஆண்டுகள் ஆண்ட அவன் தம்பி மகாதேவன் காலத்தில் குடிகளின் கலகமும் யாதவருடன் யுத்தங்களும் நிகழ்ந்தன. அவன் 1199-ல் இறந்த பின், ஜெய்துகி கணபதியை விடுவித்துக் காகதீய நாட்டை ஆளும்படி அனுப்பினான். ஜெய்துகியின் மகன் சிங்கணன் 1210-ல் பட்டம் பெற்று, கொங்கணத்துக் கதம்பர் உதவியைக்கொண்டு ஹொய்சள பல்லாளனுடன் போர்புரிந்து, அவன் சோமேசுவரனிடமும் பில்லமனிடமும் இருந்து வென்றிருந்த நாடுகளை மீட்டுக்கொண்டான் (1216).

வேங்கி நாட்டில் II-ம் இராசராசன் ஆட்சி முடிவுற்றது முதல் வெலநாட்டுச் சோடர்கள் தங்கள் சுய ஆட்சியை ஸ்தாபித்துக் கொண்டனர். பிறகு நெல்லூரில் விக்கிரமசோழன்கீழ்ச் சிற்றரசனாயிருந்த பேதன் சந்ததியாரான தெலுங்குச் சோடர்கள் நெல்லூரிலிருந்து ஆண்டனர். II-ம் இராசாதிராசன் நெல்லூரிலாவது அதற்கு வடக்கேயாவது ஆண்டதாகத் தெரியவில்லை. ஆனால் III-ம் குலோத்துங்கன் நாளில் தெலுங்குச் சோடர்கள் சோழ ஆதிக்கத்தை அங்கீகரித்தனர். இவர்கள் நல்லசித்தனும் அவன் தம்பி தம்முசித்தனுமாவர் (1187-1216). ஆனால் மத்தியில் சில ஆண்டுகள் (1192 96) நல்லசித்தன் காஞ்சியை ஆக்கிரமித்துக் குலோத்துங்கனை எதிர்த்து நின்றான். 1208 வாக்கில் குலோத்துங்கன் வடநாட்டில் போர்புரிந்து வேங்கியையடிப்படுத்திக் காகதீயத் தலைநகரான ஓரங்கல்லில் பிரவேசித்ததாகச் சாசனங்கள் கூறுகின்றன. குலோத்துங்கன் ஆட்சியின் கடைசி ஆண்டுகளில் அவன் பாண்டியப் படை யெழுச்சியினால் வருந்தும்போது தெலுங்குச் சோடர்கள் தங்களுடைய சுதந்திரத்தை நிறுவிக் கொண்டனர்.

பாண்டிய நாட்டில் ஜடாவர்மன் குலசேகரனுக்குப் பின் அவன் தம்பி மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம் பெற்றான் (1216). உடனே அவன் சோழரால் முன் விளைந்த அவமானத்தை நினைந்து, அதை மாற்றுவதற்காகச் சோழநாட்டின்மீது படையெடுத்தான். அவன் ஆற்றலின் வேகமும் குலோத்துங்கன் மூப்பும் அவன் படையெழுச்சிக்கு எதிர்ப்பு ஒன்றுமில்லாமலாக்கி விட்டன. உறையூரும் தஞ்சாவூரும் தாக்குண்டன. குலோத்துங்கனும் அவன் மகன் இளவரசனாகிய III-ம் இராசராசனும் ஓடி ஒளிந்தனர். கும்பகோணத்தருகேயுள்ள ஆயிரத்தளியில் சுந்தரபாணடியன் வீராபிஷேகம் செய்துகொண்டான். பிறகு சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை வணங்கினான். திரும்பும் வழியில் புதுக்கோட்டையிலுள்ள பொன்னமராவதியில் அவன் தங்கியிருக்கும்போது குலோத்துங்கனும் அவன் மகனும் வந்து அடிபணிந்தனர். இதற்குள் குலோத்துங்கன் வேண்டுகோளுக்கிணங்கி ஹொய்சள பல்லாளன் தன் மகன் நரசிம்மனை ஒரு சேனையுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினதால் சுந்தர பாண்டியன் சோழனுடன் சமாதானம் செய்ய வேண்டிவந்தது. குலோத்துங்கன் தன் நாட்டை மீளப் பெற்றுப் பாண்டிய ஆதிக்கத்திற்குட்பட்டு நடக்கச் சம்மதித்தான். பாண்டியன் ‘சோணாடு வழங்கியருளிய’ என்ற விருதை ஏற்றுக் கொண்டான். குலோத்துங்கன் 1218-ல் இறக்கவே, III-ம் இராசராசன் பட்டம் பெற்றான். அவன் வலுவற்றவன்; அவன் காலத்தில் சோழ இராச்சியம் நிலைகுலைந்தது. எவ்விதமாகவோ ஒட்டப்படை ஒன்று ஸ்ரீரங்கத்தை யடைந்து, இரண்டு ஆண்டுக் காலம் சச்சரவுகள் செய்தபின் சுந்தரபாண்டியனால் 1225-ல் துரத்தப்பட்டது. ஹொய்சளர்கள் காஞ்சியைப் பிடித்துக்கொண்டு தெலுங்குச் சோடர்களுடனும் அவர்கள் மேலதிகாரிகளான காகதீயருடனும் போராடிக்கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சிங்கன் என்னும் காடவத் தலைவன் தென்னார்க்காட்டில் தன் அதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டு, இராசராசனுக்கும் ஹொய்சளருக்கும் விரோதமாகச் சுந்தரபாண்டியனுடன் உடன்படிக்கை செய்துகொண்டான். இவற்றையெல்லாம் சற்றும் கவனிக்காமல் இந்தச் சமயத்தில் இராசராசன் சுந்தரபாண்டியனுக்குச் சேர வேண்டிய கப்பத்தைக் கட்டாமல் நிறுத்தியதல்லாமல் அவனுடன் போரும் தொடங்கினான். உடனே சுந்தர பாண்டியன் சோழநாட்டின்மீது படையெடுத்து, இராசராசனைப் போரில் வென்று, அவன் பட்ட மகிளியுட்படப் பல பெண்டிரைச் சிறைப்படுத்தி, முடி கொண்ட சோழபுரமாகிய ஆயிரத்தளியில் மற்றொரு முறை விஜயாபிஷேகம் செய்துகொண்டான். வடக்கேயுள்ள ஹொய்சள II-ம் நரசிம்மன் சேனையுடன் சேர வேண்டிப்போன இராசராசன் காடவன் கோப்பெருஞ் சிங்கனால் தெள்ளாற்றுப் போரில் தோற்கடிக்கப் பெற்றுச் சேந்தமங்கலக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டான். சோழனுக்குற்ற விபத்துக்களைக் கேட்டு நரசிம்மன் உடனே காடவன் நண்பனான சேலம் மாவட்டத்திலுள்ள மகரநாட்டரசனைத் தாக்கிப் பின் ஸ்ரீரங்கம் சேர்ந்தான். அங்கிருந்து அவன் படைத் தலைவர் அப்பண்ணன், கொப்பய்யன் என்பவரைச் சோழமன்னனை விடுவிக்க அனுப்பினான். அவர்கள் பெரம்பலூர், தொழுதூர் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று, கோப்பெருஞ்சிங்கன் நாட்டில் பல இடங்களை அழித்து வீட்டுச் சிதம்பரம் சென்றனர். அங்கிருந்து சேந்த மங்கலத்தைத் தாக்க எத்தனித்தனர். அதற்குள் கோப்பெருஞ்சிங்கன் நரசிம்மனிடம் சமாதானம் பேசத் தூது அனுப்பினான். நரசிம்மன் அத்தூதரைத் தன் படைத் தலைவரிடம் அனுப்பவே, அவர்கள் கோப்பெருஞ்சிங்கனால் விடுவிக்கப்பட்ட இராசராசனை வரவேற்றுச் சோழ நாட்டிற்கரசனாக மறுபடியும் அமர்த்தினர் (1231). நரசிம்மனும் சுந்தரபாண்டியனைக் காவேரிக் கரையில் மகேந்திர மங்கலப் போரில் தோற்க வைத்தான். சுந்தரபாண்டியன் சோழமன்னனுக்கு மறுபடி ஆட்சியைக் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. காடவனுடன் போர் நடந்துகொண்டிருப்பினும் ஹொய்சளர், சோழர், பாண்டியருக்குள் சமாதானம் ஏற்பட்டு, மணத்தொடர்புகளும் ஏற்பட்டன. நரசிம்மன் மகன் சோமேசுவரன் சுந்தரபாண்டியனுக்கும் இராசராசனுக்கும் பின் ஆண்ட பாண்டிய சோழ மன்னரால் மாமடி (மாமன்) என்றழைக்கப்படுகிறான். இராசராசன் (1231-1256) வரை ஆண்டான். ஆனால் அவன் ஆட்சியின் வலுக் குறைந்துகொண்டே வந்தது. கலகங்கள், துரோகங்கள், சிற்றரசருக்குள் போர்கள், சமாதானங்கள் முதலியன இராசராசனுக்குத் தெரியாமலே நடந்து வந்தன. ஹொய்சளருடைய மேலாதிக்கம் பாண்டிய சோழ நாடுகளில் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்குக் காரணம் சோமேசுவரன் மைசூர் ஆட்சியைத் தன் மந்திரிகள் வசம் விட்டு விட்டுத் தான் நேராகத் தமிழ் நாட்டில் ஹொய்சள அதிகாரத்தை நிலைநாட்டக் கங்கணம் கட்டிக் கொண்டது தான்.

1246-ல் சோழ இளவரசான மூன்றாம் இராசேந்திரன் இராசராசனைவிட மிகுந்த திறமைசாலி. அவன் சோழர் ஆதிக்கத்தை மீட்க முயன்றான். சோமேசுவரன் குறுக்கிடாவிட்டால் அவன் எண்ணம் நிறைவேறியிருக்கும். இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மேற்படையெடுத்து, இரு பாண்டிய வேந்தரைத் தோற்கடித்தான். அவர்களில் ஒருவன் II-ம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1233). உடனே சோமேசுவரன் பாண்டியர் கட்சியில் சேர்ந்து, இராசேந்திரனைப் போரில் வென்று, பின் அவனுடன் சமாதானம் செய்துகொண்டான். பாண்டியராவது சோழராவது ஹொய்சள உதவியின்றித் தனியரசு செலுத்தக் கூடாதென்பதே அவன் நோக்கம். 1240-ல் சோமேசுவரனால் தாக்கப்பட்ட நெல்லூர் அரசன் சோடதிக்கன் அல்லது கண்டகோபாலனென்பவன் இராசேந்திரனுடன் நட்புக்கொண்டான். திக்கன் தான் புரிந்த போர்களால் சாம்புவராயரையும் காடவராயரையும் அடக்கி இராசேந்திரன் ஆட்சியை வலுப்படுத்தினான். சோமேசுவரனையும் எதிர்த்துக் காஞ்சி நகரைத் தன் வயமாக்கிக் கொண்டான். சோமேசுவரனுக்கு மற்றொரு விரோதியான காகதீய கணபதியைத் தனக்கு மேலரசனாக ஒப்புக்கொண்டான்.

1251-ல் மிகவும் பராக்கிரமசாலியான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம் பெற்றதும் இராசேந்திரனுக்கும் சோமேசுவரனுக்கும் உள்ள நட்புப் பெருகியது. சுந்தரபாண்டியன் பல போர்களால் பாண்டியநாட்டின் ஆதிக்கத்தைப் பெருக்கி, நெல்லூர் வரையுள்ள நாடுகளைத் தன்வயமாக்கியதுமன்றி, இலங்கையையும் கேரளத்தையும் பாண்டியருக்கடிப்படுத்தினான். ஹொய்சள ஆதிக்கம் மைசூர் பீடபூமிக்குள் அடைபட்டது. சுந்தரபாண்டியனுடைய போர்களில் ஜடாவர்மன் வீரபாண்டியன் (1253) அவனுக்குத் துணையாய் நின்றான். சேரநாட்டரசன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மனும், சோழன் இராசேந்திரனும் சுந்தரபாண்டியனுக்குக் கீழ்ப்படிந்தனர். இலங்கையிலிருந்து முத்துக்களும் யானைகளும் திறையாகக் கொடுக்கப்பட்டன. காவேரிக்கரையிலுள்ள கண்ணனூர்க் கொப்பம் என்ற ஹொய்சளர் கோட்டை சுந்தரபாண்டியன் வசமாயிற்று. பல ஹொய்சளப் படைவீரர் உயிர் துறந்தனர்; பல பெண்டிர் பிடிபட்டனர்; பண்டாரங்களும் யானை குதிரைகளும் பிடிபட்டன. கடைசியாக அப்போரில் 1262-ல் ஸ்ரீரங்கத்துக்கருகில் சோமேசுவரனே உயிர் நீத்தான். அதன் பிறகு சுந்தர பாண்டியன் சேந்தமங்கலத்தைத் தாக்கிக் காடவனை நடுங்கச் செய்து தன் சிற்றரசனாக்கிக் கொண்டான். மகத நாட்டையும் கொங்கு நாட்டையும் பாண்டிய நாட்டுடன் சேர்த்தான்; கண்ட கோபாலனைக் கொன்று காஞ்சீபுரத்தைப் பிடித்துக்கொண்டான். காகதீய கணபதியுடனும் அவனுடைய தெலுங்கச் சிற்றரசருடனும் நெல்லூர் மாவட்டத்திலுள்ள முடுகூரில் போர் புரிந்து வெற்றியடைந்தான். முடிவில் நெல்லூரில் ஒரு வீராபிஷேகம் செய்து கொண்டான். 1262-64-ல் இலங்கையிலிருந்து சில மந்திரிகள் வேண்டுகோளுக்கிணங்கி, வீரபாண்டியன் அத்தீவின் மீது படையெடுத்துச் சென்று, ஓர் அரசனை வென்று, மற்றொருவனைக் கொன்று, இலங்கையில் ஒரு பகுதியை ஆண்டு கொண்டிருந்த சாவக (மலேயா) அரசன் சந்திரபானுவின் மகனுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டான்.

விரோதிகளின் தொந்தரவினால் சோமேசுவரன் தன் வாழ்நாளிலேயே தன் இராச்சியத்தை இரண்டாகப் பிரித்து, வடபாகத்தில் மூத்த மகன் III-ம் நரசிம்மனையும், தென் பாகத்தில் இளையவன் இராமநாதனையும் ஆட்சிக்கு நியமித்தான். தன் தகப்பன் காலஞ்சென்ற பின் இராமநாதன் கண்ணனூர்க் கொப்பத்தை மீட்டுக்கொண்டான். சுந்தரபாண்டியன் 1268-ல் மரணமடைந்ததும், மாறவர்மன் I-ம் குலசேகரன் (1268 1308) பட்டம் பெற்றான். அவனும் ஒரு பேரரசன். அவன் காலத்தில் அவன்கீழ்ப் பல பாண்டிய அரசகுமாரர் நாட்டின் பகுதிகளைத் தனித்தனியே ஆண்டு வந்தனர். இது பாண்டிய வமிசத்தில் தொன்று தொட்ட வழக்கம்போல் தோன்றுகிறது. I-ம் குலோத்துங்கன் காலத்திலேயே அவன் ஐந்து பாண்டியரைப் போரில் வென்றதாகச் சாசனங்கள் கூறுகின்றன. குலசேகரன் 1279-ல் இராமநாதனையும் சோழ இராசேந்திரனையும் ஒருங்கே போரில் வென்றான். சோழ நாடும் ஹொய்சளருடைய தமிழ் நாடுகளும் அவன் வசமாயின. அவன் திருவிதாங்கூர் நாட்டில் ஏற்பட்ட சிறு கலகங்களை அடக்கினதுமன்றி, இலங்கைத் தீவு பஞ்சத்தில் வருந்திக்கொண்டிருந்த சமயம் பார்த்துத் தன் மந்திரி ஆரிய சக்கரவர்த்தியை அத்தீவின் மீது படையெடுக்கச் செய்தான். அவன் அங்கே சென்று, பல பாகங்களை அழித்துச் சுபகிரி (யாபகு)க் கோட்டையைப் பிடித்து, புத்தருடைய ‘பல்’ விக்கிரகத்தையும் மற்றும் பொருட் குவைகளையும் எடுத்துக்கொண்டு திரும்பினான். இது I-ம் புவனேகபாகுவின் ஆட்சிக்காலத்தின் இறுதியில் நடந்தது. அதற்குப்பின் இலங்கை சுமார் இருபது ஆண்டுகள் வரை பாண்டியனால் ஆளப்பட்டுவந்தது. 1303-ல் பட்டம் பெற்ற III-ம் பராக்கிரமபாகு பாண்டி நாட்டுக்கு நேராகச் சென்று, குலசேகரனிடம் நயந்து பேசிப் புத்தர் பல்லை மீட்டுக்கொண்டான். குலசேகரன் இறந்தபின் ஏற்பட்ட கலகங்களுக்கிடையே இலங்கை தன் சுயஆட்சியை மீட்டுக்கொண்டது. குலசேகரனுடைய கடைசிக்காலத்தில் அவனுடைய மக்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. குலசேகரன் இளையாள் மகன் வீரபாண்டியனுக்குப் பட்டங்கட்ட ஏற்பாடு செய்தான். ஆகையால் அவன் காலஞ்சென்றதும் அவன் மூத்த மகன் சுந்தரபாண்டியன், வீரபாண்டியனுடன் போர்தொடுத்தான். சுந்தரபாண்டியனே குலசேகரனைக் கொன்றதாகவும் சில ஆதாரங்கள் காணப்படுகின்றது. யுத்தத்தில் வீரபாண்டியன் வென்றான். சுந்தரபாண்டியன் வடநாட்டுத் துருக்கர்களுடைய உதவியை (1310) நாடவேண்டி வந்தது.

இராமநாதன் தமிழ்நாட்டை யிழந்ததும் மைசூருக்குச் சென்று தன் தமையன் நரசிம்மனிடம் நாட்டில் பங்குவேண்டிப் போர் தொடங்கினான். நரசிம்மன் அதே சமயத்தில் யாதவருடனும் காகதீயருடனும்போர் புரிய வேண்டியிருந்தது. இராமநாதன் பெங்களூர், கோலார், தும்கூர் மாவட்டங்களைப் பிடித்துக்கொண்டு, குந்திரணியைத் தன் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். நரசிம்மன் 1292-ல் இறந்தான்; அவனுக்குப்பின் III-ம் பல்லாளன் பட்டம் பெற்றான். இராமநாதன் அவனுடன் போர் புரியாவிடினும் அவனுக்கு விரோதமாகவே இருந்து, மூன்று ஆண்டுகளுக்குப்பின் மரணமடைந்தான். அவன் மகன் விசுவநாதனும் சில ஆண்டுகள் பல்லாளனுக்கு விரோதியாக இருந்து பின் எங்கேயோ மறைந்தான். 1300க்கு முன் ஹொய்சள ராச்சியம் மறுபடி ஒன்றுபட்டுப் பல்லாளனால் ஆளப்பெற்றது. பாண்டிய நாட்டில் ஏற்பட்ட உட்கலகத்தின் போது, இராமநாதன் இழந்த தமிழ்நாட்டுப் பகுதிகளைப் பல்லாளன் மீட்டுக்கொள்ள முயன்றான். ஆனால் வடக்கிலிருந்து மாலிக்காபூருடைய படையெடுப்பினால் அவன் எண்ணம் நிறைவேறவில்லை.

வடக்கே யாதவ இராச்சியத்தில் ஜெய்துகிக்குப் பின் அவன் மகன் சிங்கணன் (1210-1247) ஆண்டான். அவன் காலத்தில் யாதவருடைய ஆதிக்கம் மிகச்சிறந்து விளங்கியது. அவன் குஜராத் நாட்டின் மீது 1231-32 லும், 1237-38லும் இருமுறை படையெடுத்தான். தெற்கே ஹொய்சள II-ம் பல்லாளனுடன் போர்புரிந்து, கிருஷ்ணா, மலப்ரபா நதிகளுக்குத் தெற்கேயுள்ள நாடுகள் பலவற்றைக் கவர்ந்தான். II-ம் நரசிம்மனிடத்திலிருந்து சாகம் தாலுகாவையும் பல்லாரி மாவட்டத்தையும் கைப்பற்றினான். ஆனால் நரசிம்மனுக்குப் பின் சோமேசுவரன் யாதவர் நாட்டில் புகுந்து, பண்டரிபுரம் வரை படையெடுத்துச் சென்றான் (1236). யாதவ நாட்டின் தென்பாதியை ஆண்டுவந்த படைத்தலைவன் வீசனன் ஹொய்சளப் படைகளைத் தன் நாட்டிலிருந்து விரட்டியடித்ததுமன்றி, ஹொய்சள நாட்டில் புகுந்து காவேரிக்கரையை (1239) அடைந்தான். கடைசியில் சோமேசுவரன் தன் முன்னோரைவிட அதிக நாடுகளை யாதவருக்கு விட்டுக்கொடுக்க நேர்ந்தது. சிங்கணன் காகதீய கணபதியோடும் மாளவ அரசனோடும் வீண் போர்கள் புரிந்தான். வானவியற் புலவர் பாஸ்கராசாரியருடைய பேரனும் முதல் ஜெய்துகியின் பிரதான பண்டிதர் லக்ஷ்மிதரருடைய மகனுமான சங்கதேவர் சிங்கணனுக்கு ஆஸ்தானச் சோதிடராக இருந்தார். தம் பாட்டனாருடைய சித்தாந்த சிரோமணி முதலான நூல்களைப் பயில்வதற்காகப் பாட்னா என்னும் ஊரில் ஒரு கலாசாலையை யேற்படுத்தினார்.

சிங்கணன் மகன் II-ம் ஜெய்துகி அவன் தகப்பனுக்குமுன் இறந்துவிட்டபடியால் அவன் மகன் கிருஷ்ணனே அடுத்த அரசனானான் (1247-60). காகதீய கணபதி அவனிடமிருந்து தெலிங்கானத்தின் ஒரு பகுதியைக் கவர்ந்துகொண்டான். மற்றப்படி சிங்கன் விட்டுப் போன இராச்சியத்தில் ஒரு குறைவும் ஏற்படவில்லை. கிருஷ்ணன் பல யாகங்கள் செய்தான். அவன் மந்திரி ஜல்ஹணன் ஸூக்தி முக்தாவளி என்னும் நூலைத் தொகுத்தான். அவன் காலத்தில் அமலாநந்தர் வேதாந்தகல்பதரு என்னும் சிறந்த உரை நூலை இயற்றினார். கிருஷ்ணனுக்குப்பின் அவன் தம்பி மகாதேவன் (1260-71) ஆண்டான். அவன் காகதீய ருத்ராம்பாளுடன் போர்புரிந்து, பல யானைகளையும் அரச சின்னங்களையும் கவர்ந்து, அவளைப் பெண்ணாகையாற் கொல்லாது விடுத்தான் என்பர். மேலும் அவன் வட கொங்கணத்தின் மீது படையெடுத்துச் சிலாகார சோமேசுவரனை வென்று, அவன் நாட்டை யாதவ இராச்சியத்துடன் சேர்த்தான். புகழ்பெற்ற ஸ்மிருதி நூல்களெழுதிய ஹேமாத்திரி பண்டிதர் அவன் காலத்திலும் அவன் பின்னோர் காலத்திலும் ஸ்ரீகரணாதிபதன் என்ற பதவியை வகித்தார். அவர் பல பண்டிதரை ஆதரித்தார். தாமும் பல நூல்களியற்றினார். பல கோயில்களும் கட்டிவைத்தார். கிருஷ்ணன் மகன் இராமச்சந்திரன் 1271-ல் சிம்மாதனமேறினான். அவனுக்கும் மகாதேவன் மகன் ஆமணனுக்கும் ஒரு சிறு போர் ஏற்பட்டது. இராமச்சந்திரன் மாளவ அரசனுடனும் ருத்ராம்பாளுக்குப்பின் ஆண்ட காகதீய அரசன் II-ம் பிரதாபருத்திரனுடனும் போர்கள் தொடுத்தான். 1276-7-ல் அவனுடைய படைத்தலைவன் சாளுவதிக்கமன் ஹொய்சள நாட்டின் மீது படையெடுத்து, அதன் தலைநகராகிய துவாரசமுத்திரத்தை முற்றுகையிட்டுச் சிறந்த வெற்றியுடனும் மிகுந்த கொள்ளையுடனும் திரும்பினான்; ஆனால் ஹொய்சள III-ம் நரசிம்மன் தன் இராச்சியத்தில் சிறிதும் இழக்கவில்லை. இராமநாதனுடனும் போர் நிகழ்ந்தது. பிறகு இராமச்சந்திரனுக்கும் III-ம் பல்லாளனுக்கும் போர் ஆரம்பித்தது. ஆனால் துருக்கர் படையெடுப்பினால் அது அதிகமாக முதிரவில்லை. இராமச்சந்திரன் ஆட்சியில் மகாராஷ்டிர வேதாந்தி ஞானேசுவரர் கீதைக்குச் சிறந்த மகாராஷ்டிர வியாக்கியானமாகிய ஞானேசுவரி என்னும் நூலை 1290-ல் இயற்றினார்.

காகதீய இராச்சியத்தில் ஜெய்துகியால் விடுவிக்கப்பட்ட கணபதி அறுபத்து மூன்று ஆண்டுகள் (1199-1262) மிக்க திறமையுடன் ஆண்டான். ஆந்திர தேசத்தில் வெலநாட்டுச் சோடர் ஆட்சி 1186க்குப் பின் குன்றியது. அந்நாட்டின் செல்வத்தையும் வியாபாரத்தையும் கைப்பற்றிக்கொள்ள நல்ல இடம் கொடுத்தது. அந்நாட்டில் இரும்பு, வைரம் முதலிய சுரங்கங்களும் நல்ல துறைமுகங்களும் மிகுந்திருந்தன. அதைக் கணபதி 1209-14-ல் ஆக்கிரமித்தான். நெல்லூரில் ஆண்ட தெலுங்குச் சோடர்களைத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். அவர்களுக்காக அவன் III-ம் குலோத்துங்கனுடன் புரிந்த போர்களைப் பற்றி ஏற்கெனவே கூறியுள்ளோம். கலிங்க நாட்டு மூன்றாம் அநங்க பீமனுடனும் (1211-38) போர்கள் ஏற்பட்டன. பீமனுக்கு அச்சமயம் வங்காளத்துத் துருக்கரும், தும்மணத்தில் ஆண்ட சேதி மன்னருங்கூட வீரோதிகளாக இருந்தனர். 1231-ல் யாதவ சிங்கணனோடு போர் நடந்தது. கடப்பை, கர்நூல் மாவட்டங்களில் ஆண்ட காயஸ்தத் தலைவர்களையும் கங்கய சாகினியையும் அவன் மருமக்கள் திரிபுராந்தகன் அம்பதேவன் முதலியோரையும் கணபதிவென்று தனக்குக் கீழ்ப்படுத்திக்கொண்டான் (1239). அதன் பிறகு தன் பெண் ருத்ராம்பாளை வாரிசாக நியமித்ததுடன் அவளை ருத்ரதேவ மகாராஜா என்று அழைக்க ஆரம்பித்துத் தான் இருக்கும்போதே அவளுக்கு அரசாட்சியில் ஒரு தக்க பங்கும் கொடுத்தான். கடல் வழியாக வந்து வர்த்தகம் செய்யும் பிற நாட்டு வியாபாரிகளுக்கு அபய சாசனம் ஒன்று கொடுத்தான். அது மோடுபள்ளியில் ஒரு கல்வெட்டாக இன்றும் காணப்படுகிறது. ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் நெல்லூரை விட்டகன்றபின், தெலுங்கு பாரத ஆசிரியர் திக்கனசோமயாஜியின் வேண்டுகோளின்படி கணபதி மனுமசித்தரசனுக்கு உதவி புரிந்து, அவன் விரோதிகளை விரட்டி, நெல்லூர் இராச்சியத்தை அவன் வசமாக்கினான். முரடனான கோப்பெருஞ்சிங்கனுங்கூடக் கணபதிக்குப் படிந்தான். கணபதிக்குப்பின் அவன் மகள் ருத்ராம்பாள் அரசியானாள். அவளுக்குக் கோப்பெருஞ்சிங்கன், அம்பதேவன் யாதவ மகாதேவன் முதலியோரால் கெடுதிகள் நேர்ந்தன. அவள் பெண் வயிற்றுப் பேரன் பிரதாபருத்ர தேவன் வாலிபத்திலேயே இப்போர்களில் தன் வீரத்தைக் காட்டினான். 1280-ல் அவன் இளவரசனாக்கப்பட்டான். எட்டாண்டுகளுக்குப் பின் மறுமுறை அம்பதேவன் ஹொய்சள யாதவ அரசருடைய உதவியுடன் கலகம் விளைவித்தபோது, பிரதாபருத்ரன் அவர்களுடைய படைகளை அழித்து அம்பதேவனைக் கீழ்ப்படிய வைத்தான் (1291). அதற்கு நான்காண்டுகளுக்குப் பின் ருத்ராம்பாள் இறந்ததும் தானே பட்டம் பெற்று, 1326 வரை ஆண்டான். ஆட்சியின் ஆரம்பத்தில் ஆதவானி (ஆதோனி), ராய்ச்சூர் முதலிய கோட்டைகளைப் பிடித்து, யாதவருடைய நாடுகள் சிலவற்றைக் காகதீய இராச்சியத்துடன் சேர்த்துக் கொண்டான். நாட்டின் அரசியல் முறையை முற்றிலும் சீர்திருத்திப் பத்மநாயக்கர் எனப்பட்ட இனத்தாரிலிருந்து நாயக்கர்களைப் பொறுக்கியெடுத்து, நாடு முழுவதையும் 77 நாயக்க ஆட்சிப் பிரிவுகளாகச் செய்தான். இந்நாயக்கர்களிலே பிற்காலத்தில் காபய நாயக்கன் முதலானோர் துருக்க ஆதிக்கம் வலுக்காமல் தடுப்பதற்கு முன் வந்து, விஜயநகர சாம்ராச்சியம் ஏற்படுவதற்கான வசதிகளைச் செய்தனர்.

கலிங்க நாடு கங்க அரசர் வசமிருந்தது. அநந்தவர்மன் சோடகங்கனுடைய பேரன் III-ம் இராசராசன் (1198-1211) நாளில் துருக்கர் முதன்முதல் ஒட்ட நாட்டின்மீது படையெடுத்தனர் (1205). அப்போதும் மறுமுறை III-ம் அனியங்க பீமன் காலத்தில் (சு. 1220) மற்றொரு படையெடுப்பிலும் துருக்கருக்குத் தோல்வியேற்பட்டது. அனியங்க பீமன் காகதீய கணபதியுடன் போர்புரிந்தான். அவன் படைகள் முன்னமே கூறியபடி காஞ்சீபுரம், ஸ்ரீரங்கம் வரை சென்றன; அவன் மகன் I-ம் நரசிம்மன் (1238-64) வங்காளத் துருக்க அரசர்மீது மூன்று முறை படையெடுத்துச் சென்றான். II-ம் பானுதேவன் (1306-28) காலத்தில் துக்ளக் அரச குமாரன் உலுக்கான் ஒரிஸ்ஸாவின்மீது படையெடுத் துப்பானுதேவனிடம் யானைத் திறைகொண்டான். III-ம் பானுதேவன் (1352-78) பிரோஸ் துக்ளக்படையெடுப்புக்குத் தணிந்துகொடுக்க வேண்டியதாயிற்று. IV-ம் நரசிம்மன் (1378-1414) கங்க வமிசத்தைச் சார்ந்த கடைசிப் பேரரசன். அவன் காலத்தில் மாளவ நாட்டுத் துருக்க அரசன் ஒரிஸ்ஸாமீது படையெடுத்து வந்தும் பயன் ஒன்றும் பெறவில்லை. IV-ம் பானு தேவன் (1414-32) சந்ததியில்லாமல், இறக்கவும், அவன் சேனாபதி கபிலேசுவர கஜபதி சிங்காதனம் ஏறினான்.

இனி, கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டிருந்த அரசியல் முறைகளைச் சற்றுக் கவனிப்போம். அக்காலத்தில் அரசனுடைய முக்கியமான கடமை உள் நாட்டுக் கலகங்கள் ஏற்படாமலும், அயல் நாட்டு அரசரிடமிருந்து தொல்லை ஏற்படாமலும் நாட்டைக் காத்துக் குடிகள் தத்தம் தொழில்களைச் சரிவரச் செய்து சமாதானமாக வாழ ஏற்பாடு செய்வதேயாகும். இதற்குப் பிரதியாக அரசனுக்கு நிலவரியும் வேறு சில வரிகளும் மக்கள் கொடுத்து வந்தனர். மற்றப்படித்தற் காலத்திற்போலவே எல்லாக் காரியங்களிலும் புதிது புதிதாகச் சட்டம் ஏற்படுத்தும் உரிமை அரசாங்கத்துக்குக் கிடையாது. வேதங்கள், தரும சாத்திரம், முதியோர் பழக்கங்கள் ஆகிய இவையே நாட்டுப் பழக்கங்களுக்கு ஆதாரமாகும். சாதி, மதம், இருப்பிடம், தொழில் முதலியனபற்றி ஏற்பட்டிருந்த ஒவ்வொரு இனத்தாரும் தங்கள் விவகாரங்களைத் தங்களுடைய பஞ்சாயத்துக்களில் தீர்த்துக்கொள்வது வழக்கம். தீராத கட்சிகளுக்கு மட்டுமே அரசாங்க உத்தியோகஸ்தரிடமோ, கடைசியில் அரசனிடமோ செல்வது வழக்கம். அவர்களும் தீர்ப்புக் கொடுக்கும்போது தரும சாத்திரம் வல்லோரைக் கேட்டும், அந்தந்த இடம், பொருள் முதலியவற்றை நன்கு ஆராய்ந்தும் கொடுப்பது வழக்கம். ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் காரியங்களை நிருவகிக்கத் தனியாட்களையோ, சிறு சபைகளையோ, அவரவர் திட்டங்களுக்கேற்றவாறு தேர்ந்தெடுப்பது வழக்கம். கிராம சபைகள் இம்மாதிரிக் கூட்டங்களில் மிகவும் முக்கியமானவைகளாக இருந்து வந்தன. சபை, ஊர், நகரம் என மூன்று வகைப்பட்ட கூட்டங்கள் சாசனங்களில் அடிக்கடி காணப்படுகின்றன. சபையெனப்படுவது பிராமண அக்கிரகாரத்து நிலச்சுவான்களின் கூட்டம். ஊர் என்றது எல்லாக் கிராம நிலச்சுவான்களின் கூட்டம். நகரமெனப்படுவது வியாபாரிகளின் கூட்டம். பல பெரிய கிராமங்களிலும் பட்டணங்களிலும் இவை எல்லாம் சேர்ந்தோ அல்லது எவையேனும் இரண்டுவிதக் கூட்டங்கள் மட்டுமோ நடந்து வரக்கூடும். பல கிராமங்கள் சேர்ந்த நாடுகளுக்கும் இம்மாதிரிக் கூட்டங்களும், அவைகளுடைய நிருவாக அதிகாரிகளும் இருப்பதுண்டு. இக்கூட்டங்களுக்கும் அரசனால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளுக்கும் உள்ள சம்பந்தம் இடத்தையும் காலத்தையும் பொறுத்து வேறுபட்டிருந்தது. உத்தரமேரூர் போன்ற பெரிய கிராம சபைகள் தங்கள் காரியங்களைப் பல வாரியங்களுக்குப் (கமிட்டிகள்) பங்கிட்டுக் கொடுப்பதும் உண்டு. தட்சிண பீட பூமியில் உள்ள கிராமங்களிலும் கிராம மக்களும் காமுண்டரும் காரியங்களைப் பார்த்து வந்ததாகச் சாசனங்களால் அறிகிறோம். கிராமத்தார் கோவில், குளம், சாலை முதலிய பொதுக்காரியங்களைக் கவனிப்பதுடன், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் தங்கள் கிராமத்தில் வந்து தங்கும்போதும், அதன் வழியாக மற்ற இடங்களுக்குச் செல்லும்போதும் அவர்களுக்கு வேண்டிய உதவியெல்லாம் செய்யவேண்டும். தங்க இடம், உணவு, வண்டி, மாடு முதலியவெல்லாம் இலவசமாகக் கொடுக்கவேண்டும். மேற்குத் தட்சிணத்தில் தங்கிய அராபிய வியாபாரிகளும் யாத்திரிகர்களும் இந்தியாவில் வரிகள் அதிகமென்று கருதினர். அரசாங்க வரிகளைத் தவிரப் பலவிதமான சங்கங்கள் தங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக வரி வசூலித்துக் கொள்வதுமுண்டு. இம்மாதிரி சுயேச்சை வரிகளை கோவில் கட்டுவதற்கும், குளங்கள் தூர்ந்து போகாமல் காப்பதற்கும், பள்ளிக்கூடங்கள், மருத்துவச் சாலைகள் நடத்துவதற்கும், வேறு பல பொதுக் காரியங்களைச் செய்வதற்கும் வசூலிப்பதுண்டு.

பல கிராமங்கள் கூடின தொகுதி ஆஹாரம், ராஷ்டிரம், நாடு, கோட்டம், விஷயம் எனப் பல பெயர்கள் பெற்ற பிரிவுகளாகும். அவைகளுக்கு மேற்பட்ட பிரிவு வளநாடு அல்லது மண்டலமெனப்படும். சில பிரிவுகள் பாணராஜ விஷயம் என்றாற் போலப் பாணர் ஆட்சியை ஒத்த வரலாற்று நிகழ்ச்சிகளால் பெயர் பெறும். இப்பெரும் பிரிவுகளை ஆள, அநேகமாக அரசகுமாரர்களை அனுப்புவது வழக்கம். இவ்வழக்கம் சில சமயங்களில் கேடு விளைவிக்கவும் கூடும். II-ம் புலகேசி வாதாபி முற்றுகையில் உயிரிழந்ததும் (642), அவன் மக்கள் நால்வர் அவரவர்கள் பிரிவுகளைத் தனி, நாடுகளாக்க முயன்றனர் ; I-ம் விக்கிரமாதித்தன் பெருமுயற்சியால் அது தடுக்கப்பட்டுச் சாளுக்கிய இராச்சியத்தின் ஒற்றுமை காப்பாற்றப்பட்டது (642-55). பல அரசியல் அதிகாரிகளின் பெயர்கள் முக்கியமாகப் பல்லவ சாசனங்களில் காணப்படுகின்றன; அப்பெயர்கள் பொதுவாக வடமொழிப் பெயர்களே. உதாரணமாக : சாடர், படர், சாசனர், சஞ்சாரி, கோசாத்யட்சன், ரகசி, யாதிக்ருதனர் என்பன. நிலக்களத்தார், வாயில் கேட்பார் என்பன போன்ற தமிழ்ப் பெயர்களும் உண்டு. மந்திரி சபைகள் அரசர்களுக்குப் பேருதவியாயிருந்தன. பல்லவ மல்லனைத் தேர்ந்து பல்லவ அரசனாக்கியவர்கள் முக்கியமான பல்லவ மந்திரிகளும் கடிகை எனப்பட்ட காஞ்சீபுரத்துக் கல்லூரி ஆசிரியருமே. அக்காலத்து அரசர்கள், முக்கியமாகப் பல்லவர்கள் தங்களைத் தரும மகாராஜாதிராஜர் என்று சொல்லிக் கொண்டனர். இதனால் அவர்களுக்குத் தருமங்களைக் காப்பாற்றுவதில் ஏற்பட்டிருந்த அக்கறை புலப்படுகிறது. அவர்கள் தங்களுடைய மதப்பற்று எதுவாயிருப்பினும், பொதுவாக எல்லா மதங்களையும் ஒருங்கே ஆதரித்து வந்தனர். ஆயினும் நாயன்மாரும் ஆழ்வார்களும் சமணரையும் சாக்கியரையும் நாட்டை விட்டொழிப்பதற்காகச் செய்த பெருங் கிளர்ச்சியை அரசர் தடுக்க எண்ணவில்லை. புதிதாக வென்ற நாடுகளில் பழைய ஸ்தாபனங்களை மாற்றாமல் தொடர்ந்து நடக்கும்படி செய்வதே பொதுவான வழக்கமாயிருந்தது.

ஒவ்வொரு அரச வமிசமும் தனக்கெனக் கொடியும் இலச்சினையும் பெற்றிருந்தது. உதாரணமாகப் பல்லவருக்கு விடைக்கொடி, சோழருக்குப் புலிக்கொடி, பாண்டியருக்குக் கயற்கொடி, சேரருக்கு விற்கொடி, சாளுக்கியருக்குக் கேழற்கொடி. சத்துருக்களிடமிருந்து கவர்ந்து கொண்டுவந்த யானை குதிரைகளையும், சில சமயம் வாயில் காப்பானாகத் தோல்வியுற்ற மன்னனுடைய உருவச்சிலையையும் அரண்மனை வாயிலில் நிறுத்துவதுண்டு. ராஷ்டிரகூடத் துருவன் இராணியாகிய சீல பட்டாரிகை, பல்லவ ராஜசிம்மன் இராணியாகிய ரங்க பதாகை போன்ற சில அரச வமிசத்துப் பெண்டிர் அரசியல் நிருவாகங்கள் செய்தும் வந்தனர். II-ம் புலகேசி யின் மருமகள் விஜயப்பட்டாரிகை தேர்ந்த வடமொழிக் கவியாயிருந்தாள்.

ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் விஜயாலயன் வமிசத்துச் சோழரும் கலியாணிச் சாளுக்கியரும் பெரிய சாம்ராச்சியங்களை ஆண்ட காலத்தில் அரசனுடைய ஆடம்பரமும் அரண்மனையின் செல்வச் செருக்கும் மிகுந்தன. அரசனுடைய முடிசூட்டு விழாவும் அதிக விமரிசையுடன் நடந்தது. சாளுக்கியர் பட்டதகல் என்னும் ஊரில் முடிசூட்டிக் கொண்டனர். சோழருக்குத் தஞ்சை, சிதம்பரம், காஞ்சீபுரம், கங்கை கொண்டசோழபுரம், ஆயிரத்தளி என்று பல ஊர்களிருந்தன. I-ம் இராசராச சோழன் காலமுதல் அந்தந்த அரசன் ஆட்சியில் ஏற்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளை அழகிய அகவற்பாவால் அமைந்த மெய்க்கீர்த்திகளில் அமைக்கும் வழக்கம் ஏற்பட்டது. போகப் போக இவை பெருகிக் கொண்டே போவது வரலாற்று ஆராய்ச்சிக்குப் பேருதவியாக அமைந்திருக்கிறது. சோழ அரண்மனையின் சேவகர்கள் பல வேளங்களாகப் பிரிக்கப்பட்டுத் தலைநகரில் பல இடங்களில் வசித்து வந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தரும் பெருந்தனம், சிறுதனம் என்று இரண்டு பிரிவினராக அமைந்திருந்தனர். அரசனைச் சுற்றி உடன் கூட்டம் ஒன்றுண்டு. அரசனிடும் ஆணைகளை அவர்கள் கேட்டு எழுதிக் கொண்டு, ஓலைநாயகம் என்னும் அதிகாரிக்கு அனுப்புவதுண்டு. அவன் மேல் நடவடிக்கைகள் நிகழ்த்துவான். பொதுவாக உத்தியோகஸ்தருக்கு ஜீவிதங்களாக நிலம் கொடுக்கப்பட்டது; பட்டங்களும் வழங்கப்பட்டன. சோழர் காலத்தில் நிலவரி இலாகா மிகவும் சிறந்து விளங்கியது. ஒவ்வோர் ஊரிலும் நத்தம், வரிநிலம், வரியிலா நிலம் எல்லாவற்றையும் செவ்வையாக அளந்து, ஊரிலிருந்து சேரவேண்டிய வரியையும் கணக்கிட்டு, இவற்றையெல்லாம் ஒழுங்காகப் புத்தகங்களில் பதிவு செய்து வந்தனர். வரியிலா நிலங்களும் உண்டு; அவை தேவதானங்கள், பிரமதேயங்கள் போன்றவை. அவைகளையும் சாக்கிரதையாகப் பதிவு செய்து வந்தனர். வரி விளைபொருள்களைப் பொறுத்திருந்ததால் நிலங்களில் வளரும் பயிர் விவரங்களும் அவ்வப்போது விசாரித்து வரையப் பெற்றன. சுருங்கச் சொன்னால் தற்காலத்து நிலவரி இலாகா செய்யும் காரியங்களெல்லாம் அக்காலம்முதல் நடந்துவந்ததாகவே கொள்ளவேண்டும்.

பதின்மூன்றாவது நூற்றாண்டின் முடிவில் மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வர்த்தகன் தென்னிந்தியாவில் சுமார் இரண்டாண்டு காலம் யாத்திரை செய்து அவன் கண்டதையும் கேட்டதையும் விவரமாகக் குறித்து வைத்திருக்கிறான். அவன் காலத்தில் கொல்லம் முதல் நெல்லூர் வரை உள்ள கடற்கரை மாபர் (அரபு மொழிச் சொல்; வழி அல்லது கடக்குமிடம் என்று பொருள்) எனப்பட்டது. பாண்டிய நாட்டிலுள்ள காயல்பட்டினம் ஒரு பெரிய துறைமுகமாக விளங்கிற்று. அவ்வூரை ஆண்ட அரசன் (பாண்டியன்) சேர்த்து வைத்திருந்த நகைகள், பொன், முத்து முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. அவன் அயல்நாட்டு வியாபாரிகளை மிகவும் ஆதரித்தான். ஆகையால் அவர்கள் காயல்பட்டினத்திற்கு வர விரும்பினர். பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்தன; குதிரைகள் இறக்குமதி அதிகம். அரபிக் குதிரைகள் இந்தியாவில் வெகுநாள் உழைப்பதில்லை; சீக்கிரம் நோய்ப்பட்டு மாண்டுவிடுவதால் அவைகளுக்குப் பதிலாகக் குதிரைகள் எப்போதும் வேண்டியிருந்ததால், ஒவ்வோர் ஆண்டிலும் ஏராளமாகப் புதிய குதிரைகள் வந்து கொண்டேயிருந்தன. இதனால் இந்தியருக்கேற்பட்ட பொருட்செலவு அதிகம். முத்துக் குளிக்கும் பரவரையும் அவர் தொழிலையும் பற்றி மார்க்கோ போலோ விவரமாக எழுதுகிறான். பெரிய முத்துக்களை வியாபாரிகள் நாட்டு அரசனுக்கே விற்கவேண்டும்; பகிரங்கமாக வேறு இடங்களுக்கு அனுப்பமுடியாது. படை வீரரில் சிலர் அரசனைச் சூழ்ந்து, அவனுக்குப் பாதுகாப்பாக இருந்து, அவன் இறந்தால் கூடவே இறப்பது வழக்கம். அவர்களை வேளைக்காரர்கள் என்று சோழ நாட்டிலும், தென்னவன் ஆபத்துதவிகள் என்று பாண்டிய நாட்டிலும், வேறு இடங்களில் வேறு பெயர்களிட்டும் அழைத்தார்கள். இந்த ஏற்பாட்டை மார்க்கோ போலோ நன்றாகத் தெரிந்துகொண்டான். மக்கள் உடல்மீது அங்கியின்றிச் செல்வது அவனுக்கு வியப்பாயிருந்தது. அதனால் அவன் இந்தியாவில் தையற்காரரே யில்லையென்று எழுதிவிட்டான். ஆனால் தையற்காரரைப்பற்றி அக்காலத்துச் சாசனங்கள் பலவற்றில் படிக்கிறோம். உடன் கட்டையேறல் வழக்கத்திலிருந்ததென்று தெரிகிறது. மரண தண்டனைக்குட்பட்ட குற்றவாளிகள் தங்களைச் சில தெய்வங்களுக்குப் பலியாக அர்ப்பணம் செய்து கொள்வதுமுண்டு. வீடுகளில் தரையைக் கோமயத்தால் மெழுகுவதையும், எல்லோரும் பொதுவாகத் தரையில் உட்காருவதையும் மார்க்கோ போலோ கூறுகிறான். ஒவ்வொருவரும் தினம் நீரில் குளிப்பதும், சாப்பிட வலக்கையை மட்டும் உபயோகிப்பதும், நீர் பருக ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பாத்திரம் வைத்திருப்பதும், நீர் பருகும்போது எச்சிலில்லாமல் உயர்த்திப் பாத்திரத்திலிருந்து நீரை வாயில் வார்த்துக் கொள்ளுவதும் அவனுக்கு ஆச்சரியமாகத் தோன்றின. ஒருவன் கொடுக்க வேண்டிய கடன் பணத்தை வசூலிக்க அவனைக்கண்ட இடத்தில் அவனைச் சுற்றி ஒரு கோடிட்டுப் பணம் கொடுக்காமல் அதைத் தாண்டக்கூடாது என்று ஆணையிடும் வழக்கமிருந்தது. குடிப்பது குறைவு ; குடியர்களும் கப்பல்களிலே வேலை செய்பவரும் சாட்சியம் சொல்லத் தகுதியற்றவராகக் கருதப்பட்டனர்.

மந்திரவாதம், சோதிடம், சகுனம் முதலியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது, கோவில்களில் தேவதாசிகள் சேவகம், வாசனைச் சரக்குக்களுடன் வெற்றிலை போடுதல், பாம்பு, தேள் முதலியவற்றினின்றும் தப்புவதற்காகச் செல்வர் கூரையிலிருந்து கயிறுகளால் தொங்கவிடப்பட்ட மெல்லிய கட்டில்களில் தூங்குதல் முதலிய விவரங்களையும் மார்க்கோ போலோகூறுகிறான். ஆந்திர நாட்டில் பெண் (ருத்ராம்பாள்) அரசு புரிந்ததையும், அவள் நாட்டில் வைரச் சுரங்கங்கள் இருந்ததையும் அங்கே நயமான துணிகள் நெய்யப்பட்டதையும் அவன் குறிக்கிறான். மலையாள நாட்டில் யூதரும் கிறிஸ்தவரும் இருந்தனர். மிளகும் அவுரியும் இஞ்சியும் அதிகம். அவைகளுக்காகப் பல வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து வந்தனர். மலையாளக் கடற்கரையில் கடற் கொள்ளைக்காரர் அதிகமாக இருந்தனர். கே. ஏ. நீ.

(தமிழர், சிலப்பதிகாரம், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய வேறு கருத்துக்களுக்கு அத்தலைப்புக்களுள்ள தனிக் கட்டுரைகளைப் பார்க்க).

1300-1600 : இம் மூன்று நூற்றாண்டுகள், காவிரிக் கரையைச் சார்ந்த தமிழர்களுடைய அரசியல் தலைமை முடிவுற்ற காலம் ; துங்கபத்திரை நதிக் கரையில் எழுந்த விஜயநகர இராச்சியம் ஓங்கி இருந்த காலம். 1268-1310 ஆகிய நாற்பத்திரண்டு ஆண்டுகளாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் தென் இந்தியாவில் அமைதியை நிலை நாட்டி, நாடு செழிக்கச் செய்தான். ஆயினும் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் ஆகிய தன் இருமக்களில் இளையவனைத் தனக்குப் பின்பு அரசனாக்க அவன் விரும்பினமையால் அந்த மக்களுக்குள் பகையுண்டாயிற்று. 1310-ல் சுந்தரன் தன் தந்தையைக் கொன்றான். வீரபாண்டியன் டெல்லி சுல்தானுடைய படைத் தலைவனான மாலிக்காபூரிடம் முறையிட்டுக்கொண்டு, அவன் உதவியால் பட்டம் எய்தினான். ஜடாவர்மன் என்னும் மறுபெயர் பூண்ட அந்த வீரபாண்டியன் 1340 வரையில் ஆண்டான். ஆயினும் 1334 லிருந்தே முகம்மதியர்களுக்கு மதுரையில் அடியிடுவதற்கு ஓர் இடம் கிடைத்துவிட்டது.

முகம்மதியர்கள் தென்னிந்தியாவில் புகுந்தது அக்கால அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. தென்னிந்திய அரசியலில் முக்கிய இடத்திற்குப் போட்டியிட முடியாத நிலையில் யாதவர்களும், காகதீயர்களும், ஹொய்சளர்களும் இருந்தனர். யாதவ அரசன் இராமச்சந்திரனும், காகதீய அரசன் பிரதாபருத்திரனும் ஹொய்சள மன்னன் மூன்றாம் வீரபல்லாளனும் பாண்டிய குலசேகரனும் தென் இந்திய ஆதிக்கத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர். இப் பங்கீட்டைத் தகர்க்க முகம்மதியர் புகுந்தனர். 1294-ல் யாதவர்களை அலாவுதீன் கில்ஜி தோற்கடித்தான். பிரதாபருத்திரனை மாலிக்காபூர் 1309லும், குஸ்ருகான் 1318லும், உலுக்கான் 1321 லுமாகப் பன்முறை புறங்கண்டனர். வீரபல்லாளன் முகம்மதியர்களோடு பன்முறை போர் புரிந்து இறுதியில் தோல்வியே கண்டான்.

1342-ல் மதுரையிலிருந்த சுல்தான் கயாசுத்தீன் என்பவன், 80 ஆண்டுகள் ஆண்டு, உடலும் மனமும் தளர்ந்திருந்த III-ம் வீரபல்லாளனைப் போரில் தோற்கடித்துச் சிறை பிடித்து, உயிரோடு அவன் தோலை உரித்துவிட்டான். மூன்றாம் வீரபல்லாளன் மகன் நான்காம் வீரபல்லாளன் போரைத் தொடர்ந்து நடத்தினான் எனினும் 1346-ல் அவனும் தோற்றான். இதனோடு ஹொய்சளர்களுடைய ஆதிக்கம் ஒருவாறு ஒடுங்கிற்று.

முகம்மது-பின்-துக்ளக்கின் தென் இந்தியப் படையெடுப்பு தென் இந்திய இந்துக்களிடையே ஒற்றுமையைத் தோற்றுவித்தது ; இந்து ஒற்றுமை விஜயநகர இராச்சியத்திற்கு அடிகோலிற்று. 1336-ல் துங்கபத்திரைக் கரையில் நிறுவப்பெற்ற விஜயநகரத்தின் தோற்றத்தைப் பற்றிப் பலவிதமான வரலாறுகள் கூறப்படுகின்றன. ஹொய்சளர்களிடமோ அன்றிக் காகதீயர்களிடமோ ராணுவ அதிகாரிகளாக இருந்த ஹரிஹரன், புக்கன் என்னும் இரு வீரர்கள் வித்தியாரணிய முனிவருடைய அருளால் விஜயநகர இராச்சிய ஸ்தாபனம் செய்தனர். முகம்மதியர் மேலும் தென்இந்தியாவில் தங்கள் ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொள்வதைத் தடுக்கவே இவர்கள் இவ்வாறு செய்தனர் என்பது தெளிவு. இவர்கள் எண்ணம் சில நூற்றாண்டுகள் வரையில் பலித்தது.

புக்கனுடைய மகனான இரண்டாம் ஹரிஹரனே (1376 1404) விஜயநகரத்தின் முதல் ‘சுதந்திரப் பேரரசன்,’ இவன் தனது இராச்சியத்தைத் தெற்கே பரவச் செய்தான். இவ்வாறு பரவிய இராச்சியத்தை ஆறு மாகாணங்களாகப் பிரித்தான். வேதத்திற்கு உரை கண்ட சாயனர் இவனுடைய குருவாயும் மந்திரியாயும் இருந்து பல உதவிகள் புரிந்தார். இரண்டாம் தேவராயன் பட்டத்திற்கு வந்ததும் அவன் தனது பெரும்படையில் முஸ்லிம்களையும் சேர்த்துக்கொள்ளத் தொடங்கினான். இவனுடைய ஆட்சியில் விஜயநகர முதல் வமிசம் (சங்கம வமிசம்) தனது ஆதிக்கச் சிகரத்தை எட்டிற்று. லக்கண்ணா, மாதண்ணா என்னும் மந்திரிகள் இவனுக்குப் பேருதவியாயிருந்தனர். இவன் காலத்தில் இங்கு வந்த அப்துர் ரசாகு என்னும் பாரசீகத் தூதுவர் இவ்விராச்சியத்தின் பெருமைக்குச் சான்று கூறுகின்றான். ஆனால் தேவராயனன் சந்ததியாரின் காலத்தில் நிருவாக பலம் குறைந்தது. சாளுவ நரசிம்மனுடைய ஆதிக்கம் தொடங்கியது. விரூபாட்சன் காலத்தில் சாளுவன் அதிக வன்மையடைந்தான்; 1485-ல் விரூபாட்சன் கொலையுண்ட பிறகு சாளுவ நரசிம்மன் விஜயநகரப் பேரரசனானான்; இதிலிருந்து விஜயநகரத்தின் இரண்டாம் வமிச ஆட்சி தொடங்கிற்று.

சாளுவ நரசிம்மனுடைய எட்டாண்டு ஆட்சி சாம்ராச்சியத்தை மிகவும் பலப்படுத்திற்று. சாம்ராச்சியம் முன்பு இழந்த பிரதேசங்களைத் திரும்பவும் கைப்பற்றிற்று; இவனைச் சுற்றி நரச நாயக்கன், நாகம நாயக்கன், ஆரவீடிபுக்கன் முதலியவர்கள் எப்போதும் இருந்தனர். இச் சாளுவ நரசிம்மனுடைய மக்கள் திம்மரசு, இம்மடி நரசிம்மன் என்பவர்கள். முதலாமவன் பட்டமெய்திச் சில தினங்களில் கொலையுண்டிறக்கவே, இம்மடிநரசிம்மன் பட்டத்திற்கு வந்தான். அவன் காலத்தில் நரச நாயக்கன் என்னும் தலைவனுடைய ஆதிக்கம் ஓங்கி அவன் பட்டமெய்தினான். 1507-ல் நரச நாயக்கன் இறக்கவே, வீரநரசிம்மன் பட்டமெய்தி 1509 வரை ஆண்டான். இவனுக்குச் சாளுவ திம்மன் அமைச்சனாயிருந்தான்.

1509-ல் பட்டத்திற்கு வந்த கிருஷ்ணதேவராயர் விஜயநகர வரலாற்றில் மிகவும் முக்கியமானவர். இவர் பட்டத்திற்கு வந்தகாலத்தில், ஒரிஸ்ஸா மன்னர் ஆதிக்கம் ஓங்கியிருந்தது; பிஜாப்பூர் அருகே பகைமன்னர் வலுத்திருந்தனர். இந்த நிலையில் கிருஷ்ணதேவராயர் ஓராண்டு விஜயநகரிலேயே தங்கி இராச்சியத்தின் செல்வ நிலையைச் சீர்திருத்தினார்; பிறகு திக்குவிசயம் தொடங்கித் தமது சாம்ராச்சியத்தை நிறுவினார். உம்மத்தூர் தலைவனிடமிருந்து சிவசமுத்திரத்தையும், கிழக்கே ஒரிஸ்ஸா மன்னனிடமிருந்து உதயகிரி, கொண்டவீடு, கொண்டபள்ளி ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்; ஒரிஸ்ஸா மன்னனுடைய மகளையும் மணந்துகொண்டார். 1520-ல் ராய்ச்சூரில் பிஜாப்பூரைத் தோற்கடித்ததே அவருடைய சிறந்த வெற்றியாம். பின்னர் கிருஷ்ணதேவராயர் பிஜாப்பூரை அடைந்து குல்பர்கா இராச்சியத்தையும் அடக்கினார். தம் மந்திரி சாளுவ திம்மனுடைய உதவியைக் கொண்டு இவர் விஜயநகர மக்களின் நலத்தை வளர்த்தார். இவர் புலவராயும் புரவலராயும் இருந்தார். மிக அழகிய கோயில்கள் பலவற்றைக் கட்டுவித்திருக்கிறார்.

கிருஷ்ணதேவராயர் 1525-ல் தம் ஆறு வயது மகன் திருமலைராயனிடம் இராச்சியத்தை ஒப்படைத்துவிட்டுத் தாம் அவனுக்கு மந்திரியாயிருந்தார் என்றும், திம்மனுடைய மகன் இத்திருமலைராயனை விஷம் கொடுத்துக் கொன்று விட்டான் என்றும், அக்குற்றத்துக்குச் சாளுவதிம்மனும் அவன் மகனும் ஆகிய இருவரும் சிறையிலிடப்பட்டனர் என்றும் நூனிஸ் என்னும் போர்ச்சுக்கேசியர் குறித்துள்ளார். ஆயினும் இவ்விவரங்களுக்கு இவர் குறிப்புக்களைத் தவிர வேறு ஆதாரங்கள் இல்லை. கிருஷ்ணதேவராயர் 1529-ல் இறந்தார்; அவருக்குப் பின் அவர் சகோதரர் அச்சுத தேவராயர் பட்டத்திற்கு வந்தார்; அவருக்குப்பின் அரசுகட்டில் ஏறிய சதாசிவராயர் காலத்தில் அரசியல் பொறுப்பு அவர் மந்திரி ராமராயரிடம் இருந்தது; 1543-ல் அவர் அகமத்நகர், கோல்கொண்டா அரசர்களோடு சேர்ந்து கொண்டு பிஜாப்பூரை பகைத்துக் கொண்டார். பிறகு பிஜாப்பூரோடு நட்புப்பூண்டு, அகமத்நகரை பகைத்துக்கொண்டார். அகமத் நகரை ராமராயருடைய படைகள் அழித்தன. இதனின்று தமக்குள் ஒற்றுமை மிக இன்றியமையாதது என்பதை முகம்மதியர்கள் உணர்ந்துகொண்டனர். 1565-ல் பிஜாப்பூர், கோல்கொண்டா, பீடார் சுல்தான்கள் ஒன்றுபட்டு விஜயநகரை எதிர்த்தனர். அவ்வாண்டு தலைக்கோட்டை அல்லது ராட்சச தங்கடி என்னுமிடத்தில் நடந்த பெரும்போரில் முகம்மதியர்கள் வெற்றியடைந்தனர். இந்துக்களது ஆதிக்கத்தை அழிப்பதற்கு முஸ்லிம்கள் செய்த இறுதிப் பெருமுயற்சி இதுவே. விஜயநகரப்படை போரில் முதுகிட்டு ஓடி மறைந்தது; ராமராயர் முகம்மதியரால் கொல்லப்பட்டார். தலைக்கோட்டைப் போர் இந்துக்களது ஆதிக்கத்தை இறுதியாக ஒழித்துவிட்டது என்பது சிலர் கருத்து இன்னும் சிலர் இந்துக்களைத் தென்இந்தியாவில் தலை தூக்க முடியாதவாறு இப்போர் செய்துவிடவில்லை என்றும், இப்போருக்குப் பிறகு விஜயநகர நான்காம் வமிசம் ஆண்டதே இதற்குச் சான்று என்றும் கூறுவர்.

1570-ல் விஜயநகர மன்னனாகப் பட்டமெய்திய ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த திருமலைராயர் தென்னாட்டில் அமைதியை நிறுவினார். இவருக்குப்பின் முதல் ஸ்ரீரங்கனும், முதல் வேங்கடனும் (இவரைச் சிலர் இரண்டாம் வேங்கடன் என்பர்) பட்டமெய்தினர். இவர்களில் வேங்கடன் ஆரவீடு வமிசத்தினரில் தலைசிறந்த மன்னராக 1586 முதல் 1614 வரை ஆண்டார். வேங்கடன் தமது தலைநகரத்தைச் சந்திரகிரிக்கு மாற்றிக் கொண்டார். இவர் ஐரோப்பியர்களோடு, முக்கியமாகப் போர்ச்சுக்கேசியருடன் சிறந்த முறையில் பழகினார்; கல்வியை ஆதரித்தார்; ஐரோப்பியரது ஓவியக் கலையை விரும்பினார். இவர் காலத்திற்குப் பிறகு, விஜயநகர சாம்ராச்சியம் பட்டம் பற்றிய உரிமைப் போர்களால் பலவீனமுற்றது. இவ்வமிசத்தின் கடைசி அரசர் மூன்றாம் ஸ்ரீரங்கன் என்பவர்; அவர் காலத்தில் உண்டான உள்நாட்டுப் போர்க் குழப்பம், துரோகச் செயல்கள் முதலியவற்றால் விஜயநகர ராச்சியம் மறைந்து போயிற்று.

விஜயநகரத்தில் கிருஷ்ணதேவராயருடைய ஆட்சி முடிவுற்ற காலத்தில் தெற்கே மதுரையில் நாயக்கர் ஆட்சி தொடங்கியது. பாண்டிய நாட்டைக் காப்பாற்றுவது இவர்களுடைய முக்கியமான கருத்தாயிருந்தது. மதுரை நாயக்கர் மன்னர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவர். கோயம்புத்தூர், சேலம், திருச்சிராப் பள்ளி ஜில்லாக்களும், தெற்கே குமரிமுனை வரையுள்ள பிரதேசங்களும் அடங்கிய நாடு இவருடைய இராச்சியமாயிருந்தது. தம்முடைய நாட்டை இவர் பல பாளையங்களாகப் பிரித்துப் பாளையக்காரர்கள் நாயக்க மன்னருக்குக் கப்பம் கட்டிவிட்டுச் சுயேச்சையாகப் பாளையங்களையாண்டு வரலாமென்று நிருவாக ஏற்பாடு செய்திருந்தார். சாம்ராச்சியமுறையில் அமைக்கப்பட்ட இவ்வேற்பாடு அக்காலத்தில் நன்கு நடைபெற்றது. தளவாய் அரியநாத முதலியார் இவருடைய பிரதம மந்திரியாயிருந்தார். இவர் 1565-ல் தலைக்கோட்டைப் போரில் ராமராயருக்கு உதவியாக ஒரு சிறுபடை கொண்டு சென்றார். இந்நாயக்க மன்னர்களுக்கும் விஜயநகரப் பேரரசர்களுக்குமிடையே திருமலை நாயக்கர் காலம் வரையில் நல்லுறவு இருந்து வந்தது.

1540ஆம் ஆண்டையொட்டித் தஞ்சை, செஞ்சி, இக்கேரி என்ற இடங்களைச் சார்ந்த மூன்று நாயக்கராட்சிகள் நிறுவப்பட்டன. கேசவப்பர் தஞ்சை வமிசத்தையும், முதல் கிருஷ்ணப்பர் செஞ்சி வமிசத்தையும், சதாசிவர் இக்கேரி வமிசத்தையும் ஆரம்பித்து வைத்தனர். 1549-ல் சின்னபொம்ம நாயக்கர் என்பவர் வேலூர் நாயக்கர் வமிசத்தைத் தொடங்கி வைத்தார்.

அக்காலத்தில் அனேக தனி இராச்சியங்களும் நிறுவப்பட்டன. அவற்றுள் மைசூரில் ராஜ உடையார் என்பவர் ஏற்படுத்திய இராச்சியம் முதன்மையாகக் குறிப்பிடத்தக்கது. அவர் கன்னட நாடு முழுவதிலும் ஆதிக்கத்தை நிலைநாட்டினார். பிஜாப்பூராலும் இவரது ஆட்சியை அசைக்க முடியவில்லை. 1610-ல் அவர் விஜயாகர மன்னர்களிடமிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்தைக் கைப்பற்றிக் கொண்டார். 1612-ல் முதல் வேங்கடர் அவருடைய ஆட்சியை ஒப்புக் கொண்டார்.

1300லிருந்து 1600 வரையுள்ள மூன்று நூற்றாண்டுகளில் தென் இந்தியாவில் விஜயநகரப் பண்பாடே பரவிற்று; முக்கியமாக இதை இந்துப் பண்பாடெனவே கருதலாம். ஆயினும் அப்பண்பாடு இந்து மதவெறியன்று. அக்காலத்தில் அவர்கள் பிற மதங்களை வெறுத்தவர்களில்லை. கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் இந்துக்களோடு சமமாகப் பழகினர். “மூர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், பிறராயினும் சுதந்திரமாகவும் மதக் கோட்பாடுகளை மாற்றிக் கொள்ளாமலும் விஜய நகரத்தில் வாழ்ந்துவர முடிந்தது” என்று துவார்ட் பார்போசா (Duarte Barbosa) கூறுவது ஈண்டுக் கருதத்தக்கது. இந்து மதத்தை மக்கள் விருப்பத்தோடு போற்றுவதற்கான முயற்சிகள் பல கையாளப்பட்டன என்பதில் ஐயமில்லை. பக்தி மார்க்கத்தை வற்புறுத்தும் விட்டோபா தத்துவம்பரவியது இக்காரணத்தாலேயே. வித்தியாரணியர், வேதாந்த தேசிகர், வியாசராயர், அப்பய்ய தீட்சிதர், தாதாசாரியர் முதலிய தத்துவஞானிகள், இவ்வகை இந்து மறுமலர்ச்சிக்கு முக்கியமான காரணர்கள் எனலாம். தென்கலை வைணவம் போன்ற மத ஏற்பாடுகளும் இக்காலத்தில் அதிகமாகப் பரவத் தொடங்கின.

விஜயநகர மன்னர்களுடைய பேராதரவின் கீழ்த் தெலுங்கு இலக்கியம் மிகச்சிறந்த நிலையை யடைந்தது; ஆயினும் அம்மன்னர்கள் வடமொழி, கன்னடம், தமிழ் முதலிய மொழிகளையும் ஆதரித்தார்கள். பொது மக்களின் கல்வியிலும் மன்னர்கள் கருத்தைச் செலுத்தி வந்தனர். கோயில்களிலும் மடங்களிலும் பண்டைய முறைக் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இது தவிரச் சோதிடம், வானசாஸ்திரம், மருத்துவம் முதலிய கலைகளும் கற்பிக்கப்பட்டன. மதுரையில் பதினாயிரம் மாணவர்களுக்குமேல் ஆசிரியர்களிடம் கல்வி கற்று வந்தனர் என்று நொபிலி (1610) என்னும் பாதிரியார் கூறியுள்ளார். கிறிஸ்தவப் பாதிரிமார்களுடைய முயற்சிகளால் ஏட்டுச்சுவடிகளை எழுதும் பழக்கம் சிறிது சிறிதாக மறைந்து வந்தது; 1577-ல் மலையாள நாட்டிலுள்ள அம்பலக்காடு என்னுமிடத்தில் முதல் தமிழ் அச்சு எந்திரசாலை ஏற்படுத்தப்பட்டது.

விஜயநகர மன்னர்கள் தமது நகரிலும், சாம்ராச்சியம் முழுவதிலும் பல கோயில்களை எழுப்புவதிலும், விசாலமான அரண்மனைகளைக் கட்டுவதிலும், காரியாலயங்கள், நீர்ப்பாசன வேலைகள் முதலியவற்றை நிருமாணிப்பதிலும் மிகுந்த ஊக்கம் காட்டி வந்தனர். ஹம்பெயில் உள்ள பாழடைந்த கட்டடங்கள் முதலியவை முற்காலத்திய விஜயநகரத்தின் பெருமையை நமக்கு நினைவூட்டுகின்றன. விஜயநகரச் சிற்பக் கலையின் சிகரமாகக் கருதத்தக்கது விட்டலசுவாமி கோயில் என்பது அறிஞர் கொள்கை. ஹஸ்ரா இராமசுவாமி கோயிலும் கிருஷ்ணர் கோயிலும் இக்காலத்தில் விஜயநகரத்தில் கலைக்கட்டடங்களில் முக்கியமானவை. ஆயினும் விஜயநகர மன்னர்களுடைய ஆதரவில் கட்டப்பெற்ற கட்டடங்கள் பெனுகொண்டா, சந்திரகிரி, வேலூர், செஞ்சி முதலிய ஊர்களிலும் காணப்படுகின்றன. சிதம்பரம், திருவண்ணாமலை, மதுரையாகிய நகரங்களில் உள்ள கோயில் கோபுரங்களும், மதுரையிலுள்ள பெரிய அரண்மனைகளும் இவ்வகைகளைச் சார்ந்தவையே. கும்பகோணத்தில் உள்ள இராமசுவாமி கோயிலின் உட்பிராகாரத்தில், இராமாயணத்தில் கண்ட செய்திகள் பல பொறிக்கப்பட்டுள்ளன. இதனால் விஜய நகர மன்னர்கள் சித்திரக் கலையில் எவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதும் புலனாகும். மு. ஆ.

1600 - 1800: 17ஆம் நூற்றாண்டில் மொகலாயரின் ஆட்சிக்கு உட்படாமல் தக்கணத்தில் சுதந்திரமாயிருந்த இராச்சியங்கள் அகமத்நகர், பிஜாப்பூர், கோல் கொண்டா என்னும் மூன்றுமே. பிறகு அகமத்நகரை ஆண்ட சாந்த் பீபீ இறந்ததும் அதன் பெரும்பகுதியை மொகலாயர் கைப்பற்றிக் கொண்டமையால், மற்ற இரண்டும் அக்பரின் ஆட்சிக்குள் அடங்கின.

அகமத்நகரின் அமைச்சராக இருந்த மாலிக் ஆம்பரின் மகன், காஞ்சகான் லோடி என்னும் ஆப்கானியரின் உதவியைக் கொண்டு மொகலாயரைத் தாக்கினார். ஷாஜகான் காஞ்சகானைப் போரில் முறியடித்து 1637-ல் இராச்சியம் முழுவதையும் கைப்பற்றினார்.

1600-ல் இரண்டாம் இப்ராகீம் ஆதில்ஷா பிஜாப்பூரை ஆண்டு வந்தார். அவர் எல்லாச் சமயத்தினர்க்கும் சலுகை காட்டினார். போர்ச்சுக்கேசியருடன் நட்புக்கொண்டார். பெரிஷ்டா என்னும் பிரசித்தி பெற்ற வரலாற்று ஆசிரியர் இவர் காலத்தில் விளங்கினார். 1656-57-ல் ஒளரங்கசீபு பிஜாப்பூரைத் தாக்கினார். 1685-ல் நகரம் முற்றுகையிடப்பட்டு மொகலாயரால் கைப்பற்றப்பட்டது. இராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது.

1580 முதல் 1611 வரை முகம்மதுகுலீ கோல்கொண்டா நாட்டை ஆண்டார். அவருக்குப்பின் தனி இராச்சியம் என்ற சிறப்பைக் கோல்கொண்டா இழந்தது. 1687-ல் ஒளரங்கசீபு இந்நகரை முற்றுகையிட்டு, அபுல் ஹசன் குதுப்ஷா என்னும் மன்னனைச் சிறைப்படுத்திச் சென்றார். இவ்விராச்சியமும் மொகலாயர் ஆட்சிக்குட்பட்டது.

மகாராஷ்டிரர் : ஷாஜி போன்சலே என்பவர் சிறந்த வீரர். அகமத்நகரிலும் பிஜாப்பூரிலும் இவர் அமைச்சராயிருந்தார். இவர் ஜீஜாபாயை மணந்தார். சிவாஜி இவர் மகன். தாதாஜி கொண்டதேவர் சிவாஜியின் ஆசிரியர். ஜீஜாபாய் குழந்தைக்குச் சிறந்த பயிற்சி அளித்தார். சிவாஜிக்குப் பரமகுருவாயிருந்து ஞானோபதேசம் செய்தவர் இராமதாசர். சிவாஜி ஓர் இந்துப் பேரரசை அமைத்து, அறத்தை வளர்த்து ஆட்சிபுரிய விரும்பினார். சிறந்த மகாராஷ்டிர வீரர்களைக் கூட்டிப் பயிற்சி அளித்து, அவர்களைத் துணைகொண்டு, ராஜ்கர், புரந்தர் முதலிய மலைக்கோட்டைகளைப் பிடித்தார். பிஜாப்பூரின் தளகர்த்தர் அப்சல்கானைக் கொன்று, ஒளரங்கசீபால் அனுப்பப்பட்ட ஷாயிஸ் தகானைப் புறங்காட்டியோடச் செய்தார். பின் சூரத்துநகர் சென்று அதைத் தாக்கினார். புரந்தரில் மொகலாயருடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார். ஆக்ராவுக்குச் சென்ற சிவாஜியை ஒளரங்கசீபு சிறைப்படுத்தினார். சிவாஜி சிறையினின்றும் தப்பி, மீண்டும் கான்தேசத்தைத் தாக்கினார். 1674-ல் சிவாஜி சத்திரபதி என்னும் பட்டத்துடன் முடிசூட்டிக்கொண்டார். இந்து இராச்சியம் ஒன்று மேற்குத்தக்காணத்தில் நிறுவப்பட்டது.

பிறகு, சிவாஜி கருநாடகத்துள் நுழைந்து, வேலூர், செஞ்சி முதலிய 100 கோட்டைகளடங்கிய பெரிய பிரதேசத்தைக் கைப்பற்றிக் கொள்ளிடம்வரை தம் ஆட்சியைப் பரவச்செய்தார். தஞ்சைக்குத் தம் தம்பி ஏகோஜியை அரசராக்கினார். கடற்படையைப் பலப்படுத்தி, மொகலாய வியாபாரக் கப்பல்களையும் யாத்திரிகர்களையும் தாக்கினார்.

மகாராஷ்டிரர் மொகலாய நாட்டிலும் சென்று கொள்ளையடித்து வந்தனர். நிலவரியில் நான்கில் ஒரு பங்காகிய சௌத்தைச் சில இடங்களிலும், பத்தில் ஒரு பங்காகிய சர்தேஷ்முக்கியைச் சில இடங்களிலும் வசூலித்துக்கொள்ளும் உரிமையை மகாராஷ்டிரர் பெற்றனர்.

1679-ல் சிவாஜி தம் சேனையைப் பிஜாப்பூருக்கு உதவியாக மொகலாயருடன் போர் செய்ய அனுப்பினார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. சேனை அதிக சேதமின்றித் திரும்பியது. 1680 ஏப்ரல் மாதம் சிவாஜி மரணமடைந்தார்.

சிவாஜி ஆட்சியின் கீழ்ப் பல கோட்டைகள் பலப்படுத்தப்பட்டன. காலாட் படைக்குச் சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டது. நாயக், ஹவில்தார், ஜும்லாதார், ஹசாரி, சேனாபதி என்னும் அதிகாரங்களை வகுத்தார். அவரிடம் சிறந்த குதிரைப் படையும் இருந்தது.

அவருக்கு உதவி செய்த அஷ்டப்பிரதானி சபை எட்டு மந்திரிகள் கொண்டது. மூன்று மாகாணங்களிலும் அவருடைய பிரதிநிதிகள் ஆண்டு வந்தனர். கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் அமலில் இருந்தன. நிலங்களை அளந்து, மகசூலில் ஐந்தில் இரண்டு பங்கு வரி வசூலிக்கப்பட்டது. சர்க்காரே நிலவரியை வசூலித்து வந்தனர். அதிகாரிகள் கொடுமையின்றி மக்கள் இனிது வாழ்ந்தனர். இந்து மத தருமத்தை ஒட்டியே அரசியல் நடைபெற்றது. சிவாஜி பவானிதேவியின் சிறந்த பக்தர். இவர் துக்காராம், இராமதாசர் ஆகியோரின் ஆசியைப்பெற்று, மகாராஷ்டிர மக்களை ஒன்று கூட்டித் தரும ராச்சியத்தை நடத்தினார். இவர் குர்ஆன் என்னும் முஸ்லிம் சமய நூலை மிகவும் கௌரவித்தார். சிறையாகப் பிடிபட்ட மகளிரைத் தக்க பாதுகாப்புடன் அவர்களின் உறவினர்களிடம் அனுப்பி வைத்தார். தேகவன்மை, அறிவு நுட்பம், தீர்க்க தரிசனம், விடாமுயற்சி, கருணை, அறத்தில் பெருநம்பிக்கை, கடவுளினிடம் பக்தி முத லிய சீரிய குணங்களுடன் விளங்கிய சிவாஜி மன்னர் உலக வரலாற்றில் ஒரு சிறந்த இடம் பெற்றிருக்கிறார்.

சிவாஜிக்குப்பின் மகாராஷ்டிரர் : இவருக்குப்பின் 1680-ல் இவர் புதல்வர் சாம்பாஜி சத்திரபதி ஆனார். இவர் உறுதி இல்லாதவர்; சிற்றின்பத்தில் திளைத்தவர். கவிகுலேஷ் என்னும் பிராமணன் இவருடைய நெருங்கிய நண்பன். அவன் எல்லாத் தீய குணங்களுக்கும் உறைவிடம். அரசர் அவன் சொற்படி நடந்துவந்தார். பிரபுக்களின் பகையைப் பெற்றார். பிஜாப்பூர், கோல்கொண்டாவுக்குத் துணை புரிந்து, மொகலாயர் செல்வாக்கை அடக்க முயலாமல் கோவா, ஜாஞ்சீரா முதலிய இடங்களை முற்றுகையிட்டு வீணாகப் பணத்தைச் செலவு செய்தார். ஔரங்கசீபு கோல்கொண்டா, பிஜாப்பூர் இவற்றை வென்று, சாம்பாஜியைத் தந்திரமாகச் சிறையிலிட்டுக் கொன்றார். சாம்பாஜியின் தம்பி ராஜாராம் செஞ்சிக்குச் சென்றார். அங்கும் மொகலாயர் சென்று முற்றுகையிட்டனர். 1698-ல் ராஜாராம் மகா ராஷ்டிர நாடு சென்று, இழந்த கோட்டைகளைக் கைப்பற்றினார். ராஜாராம் இறந்தபின் அவர் மனைவி தாராபாய் அரசை நடத்தினார். 1707-ல் ஒளரங்கசீபு இறந்த பின் சாஹு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு அரசை ஏற்றுக்கொண்டார்.

விஜயநகர ராச்சியம் : ஆரவீடு வமிசத்தைச் சேர்ந்த விஜயநகர மன்னர் I-ம் ஸ்ரீரங்கன் 1685-ல் இறந்ததும், அவர் தம்பி II-ம் வேங்கடன் பட்டத்துக்கு வந்தார். தக்கணத்தில் முஸ்லிம்களின் செல்வாக்கை அடக்கிக் கிருஷ்ணா நதி வரையிலுள்ள நாடுகளைத் தம் வசப்படுத்தினார். கோலார், நந்தியால் முதலிய இடங்களிலுள்ள சிற்றரசர்களின் கலகத்தை அடக்கி வேலூரைக் கைப்பற்றினார். குடிகளின் வரியைக் குறைத்தார். நாட்டின் வளத்தைப் பெருக்கினார். 1614-ல் II-ம் ஸ்ரீரங்கன் அரசரானார். நாட்டில் கட்சிக்கலகம் உண்டாயிற்று. அதில் அரசர் இறந்தவுடன் அவர் மகன் இராமன் அரசரானார். அவருக்குப்பின் III-ம் வேங்கடன் ஆட்சியைப் பெற்றார். வேங்கடன் 1642-ல் இறந்தார். அவருக்குப்பின் வந்த III-ம் ஸ்ரீரங்கன் நாற்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்து 1681-ல் மரணமடைந்தார். இவரோடு விஜய நகர சாம்ராச்சியம் முடிவுற்றது.

தமிழ்நாட்டுச் சிற்றரசுகள் : 1. மதுரை நாயக்கர் : தமிழ்நாட்டுச் சிற்றரசர்களுள் நாயக்க வமிசத்தார் மதுரையில் ஆட்சிபுரிந்தனர். விசுவநாத நாயக்கரால் மதுரைப்பாளையம் இணைக்கப்பட்டது. இவருக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர்கள் விஜயநகர மன்னர்களின் அதிகாரத்தைப் பெயரளவுக்கு ஒப்புக்கொண்டனர். 1623-ல் பட்டத்துக்கு வந்த திருமலை நாயக்கர் விஜயநகர மன்னராட்சிக்கு உட்படாமல் முஸ்லிம் மன்னருக்குத் துணை புரிந்தார். திருவிதாங்கூர்வரை படையெடுத்துச் சென்று, மறவ நாட்டின் அதிபதி இராமநாதபுரம் சேதுபதியை அடக்கினார். கண்டீரவ நரச உடையார் என்னும் மைசூர் மன்னர் மதுரைமீது படையெடுத்து வந்தபோது இராமநாதபுரம் இரகுநாத சேதுபதி மைசூர்ப்படையைப் புறங்காட்டியோடச் செய்தார். பின்னர் ஆண்ட I-ம் சொக்கநாத நாயக்கர் திருச்சிராப்பள்ளியைத் தலைநகராக்கிக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் தஞ்சையைக் கைப்பற்றி, அதற்குத் தம் தம்பி அழகிரியை முடிசூட்டினார். எனினும் 1675-ல் ஏகோஜி தஞ்சையை வென்று, அங்கு மகாராஷ்டிர இராச்சியத்தை ஏற்படுத்தினர். சொக்கநாதர் மைசூர் அரசரால் தோற்கடிக்கப்பட்டுச் சேலத்தையும் கோயம்புத்துரையும் இழந்தார், அவருக்குப்பின் ஆண்டவர் முத்து அழகாத்திரி (முத்துலிங்கன்). இவர் மகாராஷ்டிரரின் உதவியைப் பெற்று, மைசூர் மன்னர் முற்றுகையிலிருந்து தப்பினார். அவருக்குப்பின் ஆண்டவர் IV-ம் முத்து வீரப்பர். அவருக்குப்பின் ஆண்டவர் இராணி மங்கம்மாள். இவர் மொகலாயர் துன்பத்தினின்றும் தந்திரமாகத் தப்பினார். தமக்குப் பகைவராயிருந்த தஞ்சை மன்னர் ஷாஜியுடன் நட்புக்கொண்டு மைசூர் அரசரை எதிர்த்தார். திருவிதாங்கூருக்கு நாயக்கர் படை சென்று வெற்றிபெற்றது. சேதுபதி இராமநாதபுரத்தில் தனியரசு செலுத்தத் தொடங்கினார். மங்கம்மாளுக்குப் பின் ஆண்ட நாயக்க மன்னர், II-ம் சொக்கநாதர். அவர் மனைவி மீனாட்சி அவருக்குப்பின் ஆட்சிபுரிந்தார். சந்தா சாகேப் மதுரையைக் கைப்பற்றியதால், மீனாட்சி நஞ்சுண்டு 1739-ல் மரணமடைந்தார்.

2. தஞ்சை நாயக்கர் : தஞ்சையில் செல்வப்ப நாயக்கர் ஓர் இராச்சியத்தை ஏற்படுத்தினார். விஜய ராகவ நாயக்கர் (1633-73) காலத்தில் பிஜாப்பூர் சேனை தஞ்சையைச் சிலகாலம் கைப்பற்றி இருந்தது. மதுரைச் சொக்கநாத நாயக்கர் தஞ்சையின்மீது படையெடுத்த போது விஜயராகவர் உயிர் துறந்தார். ஏகோஜி (வேங்காஜி) தஞ்சையைக் கைப்பற்றினார்.

3. செஞ்சி நாயக்கர் : கிருஷ்ணதேவராயர் காலம் முதற்கொண்டே செஞ்சிநாடு நாயக்க மன்னர்களால் ஆளப்பட்டது. 1649-ல் பிஜாப்பூர் படையினர் இதைக் கைப்பற்றிக் கொண்டனர்.

4. இக்கேரி : இக்கேரி அல்லது கௌதி சமஸ்தானம் விஜயநகரின் சாமந்த மன்னர்களான நாயக்கரின் நேராட்சியிலிருந்து வந்தது. முதல் வேங்கடப்பா (1589-1629) தனியரசை ஏற்படுத்தி ஆளத்தொடங்கினார். அவர் பேரன் வீரபத்திரன் (1620-45) பெத்னூருக்குத் தம் தலைநகரை மாற்றிக்கொண்டார். அவர் மகன் சிவப்பா (1645-1660) விஜயநகர மன்னராகிய III-ம் ஸ்ரீரங்கனுக்கு உதவி புரிந்தார். முதல் சோம சேகரன் காலத்தில் (1663-1671) சிவாஜி இந்நாட்டைத் தாக்கினார். 1763-ல் ஐதர் அலி பெத்னூரைக் கைப்பற்றியபின் இவ்வமிசம் முடிவடைந்தது.

ஐரோப்பியர்கள் : 1. போர்ச்சுக்கேசியர் : இந்தியாவுடன் வாணிகத்தொடர்பு வைத்துக்கொண்டிருந்த போர்ச்சுக்கேசியர்களுக்குப் போட்டியாக 16ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்ற ஐரோப்பிய நாட்டினர் கிளம்பினர். 1602-ல் ஹாலந்து நாட்டினர் கீழ்த்தேசங்களில் வியாபாரஞ்செய்ய விரும்பி டச்சுச் சங்கங்களை இணைத்தனர். அவர்கள் போர்ச்சுக்கேசியரிடமிருந்து நன்னம்பிக்கை முனையையும், மற்ற ஆப்பிரிக்கத் தீவுகளையும் கைப்பற்றிக் கொண்டனர். இலங்கையிலிருந்தும் போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, மோலக்கஸ், ஜாவா தீவுகளைப் பிடித்துக் கொண்டனர். இந்தியாவில் கீழ்க்கரையில் மசூலிப்பட்டினம், பெத்தபொலி, பழவேரி, சான்தோம் (மயிலாப்பூர்), நாகப்பட்டினம் முதலிய துறைமுகங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். 1620லிருந்து மேற்குக்கரையில் சூரத், புரோச்சு, காம்பே, அகமதாபாத் முதலிய இடங்களில் வியாபார ஸ்தலங்களை ஏற்படுத்திக் கொண்டனர். 1661-63-ல் கொல்லம், கொடுங்களூர், கொச்சி, கண்ணனூர் முதலிய துறைமுகங்களிலிருந்து போர்ச்சுக்கேசியரை விரட்டிவிட்டு, அவ்விடங்களில் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கினார்கள்.

பிரெஞ்சுக்காரர் : 1664-ல் பிரெஞ்சு இந்திய சங்கம் நிறுவப்பட்டது. மடகாஸ்கர் முதலிய தீவுகளை இச் சங்கத்தார் பிரெஞ்சு அரசாங்கத்தினிடமிருந்து பெற்றனர். 1669-ல் தெலாஹேயின் தலைமையின்கீழ்க்கப்பற் படை ஒன்று சென்று சான்தோமை முற்றுகையிட்டது. எனினும் வெற்றிபெறாது மீண்டது. பின் பிரெஞ்சுக்காரர் புதுச்சேரியில் ஒரு வியாபார ஸ்தலத்தை ஏற்படுத்திக்கொண்டனர். 1674-ல் பிரான்சுவா மார்த்தான் என்பவர் புதுச்சேரியில் கோட்டை ஒன்றைக் கட்டினார். 1693-ல் டச்சுக்காரர் புதுச்சேரியைக் கைப்பற்றினர். பிரெஞ்சுக்காரர் அவரோடு பொருது அதனை மீட்டனர். மார்த்தான் அதை அழகிய நகராகப் புதுப்பித்துப் பிரெஞ்சுக்காரரின் முக்கிய நகரமாக்கினார். மசூலிப்பட்டினமும் பிரெஞ்சுக்காரரின் முக்கிய வியாபாரஸ்தலமாக விளங்கியது.

1600-ல் ஆங்கிலக் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பெனியார் பட்டயம் பெற்றனர். 1612-ல் கட்டப்பட்ட சூரத்து பண்டகசாலை செழித்தது. அதை ஓர் ஆட்சித் தலமாக (Presidency) ஆக்கினர். அங்கு ஒரு கவர்னர் நியமிக்கப்பட்டார். 1657-ல் கிராம்வெல் அந்த அரச பட்டயத்தை உறுதி செய்து, கிழக்கிந்தியக் கம்பெனிக்கே வியாபார உரிமையை அளித்தனர். வியாபாரம் செழித்து இலாபம் வரத்தொடங்கியது. வேறு சில ஆங்கில வர்த்தகர்களும் இந்திய வியாபாரத்தில் முனைந்தார்கள். 1668-ல் போர்ச்சுக்கேசியரிடமிருந்து தமக்குச் சீதனமாகக் கிடைத்த பம்பாயைச் சார்லஸ் மன்னர் வர்த்தகக் கம்பெனிக்கு அளித்தனர். அந் நகரம் விரைவில் பெரிய நகரமாக வளரத் தொடங்கியது. 1688-ல் போட்டிக் கம்பெனி ஒன்று தோன்றியது. 1708-ல் இரண்டு கம்பெனிகளும் இணைக்கப்பட்டன.

கோல்கொண்டா அரசரின் உத்தரவு பெற்றுக் கம்பெனியார் அங்கும் ஒரு பண்டகசாலையை ஏற்படுத்திக் கொண்டனர். எனினும், அங்கு முன்னரே இருந்த டச்சுக்காரரும் போர்ச்சுக்கேசியரும் ஆங்கிலேயரின் வியாபாரத்துக்குத் தடை செய்தார்கள். 1639-ல் ஆங்கிலக் கம்பெனியின் அங்கத்தினரில் ஒருவரான பிரான்ஸிஸ் டே (Francis Day) சந்திரகிரி அரசரிடமிருந்து சென்னையைப் பெற்றார். இங்கு ஆங்கில வர்த்தகக் கம்பெனியார் செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிக்கொண்டனர். கீழ்க்கரையிலுள்ள ஆங்கில வர்த்தகசாலைகட்குச் சென்னை 1652-ல் தலைநகரமாகச் செய்யப்பட்டது. 1687-ல் சென்னை நகர பரிபாலன சபை தோன்றியது. மக்களின் தொகையும் அதிகரித்தது. ஜெரல்டு அஞ்சியரின் (Gerald Aungier) முயற்சியால் பம்பாயும் செல்வத்தில் அபிவிருத்தியடைந்தது. மக்கள் தொகையும் அதிகரித்தது. வில்லியம் ஹீத் (William Heath) சிட்டகாங் நகரைத் தாக்கி மொகலாயரால் தோல்வியடைந்தார். தங்கள் கப்பல்களை ஆங்கிலேயர் கைப்பற்றியதன் காரணமாக மொகலாயர் சூரத்திலுள்ள ஆங்கிலேயர்களைச் சிறைப்படுத்திப் பம்பாய் நகரைக் கைப்பற்றினார். 1690-ல் நடந்த சமாதானத்திற்குப் பிறகு ஆங்கிலேயரின் செல்வாக்கும் பலமும் உயர்ந்தன. டச்சுக்காரரின் செல்வாக்குக் குறையத் தொடங்கியது.

18ஆம் நூற்றாண்டின் முதற் பகுதியில் மகாராஷ்டிர சாம்ராச்சியம் : சாஹு சத்திரபதி (1713-1720) பாலாஜி விசுவநாதரைத் தமக்குப் பேஷ்வாவாக அமைத்துக் கொண்டார். அதுமுதல் மன்னர்களின் அதிகாரம் குன்றியது. பேஷ்வாக்களே அரசியலை மேற்கொண்டு நடத்தி வந்தார்கள். பாலாஜி மகாராஷ்டிரரின் ஒற்றுமையைப் பலப்படுத்தினார். சௌத் வரி வசூலிக்கும் உரிமையை மொகலாயரிடமிருந்து பெற்றார். பாஜிராவ் (1720-40) இரண்டாவது பேஷ்வா. இவர் மிக்க திறமை வாய்ந்தவர். மொகலாய ஆட்சியை அடிப்படையில் தாக்கி அழிப்பதை நோக்கமாகக் கொண்டார். ஐதராபாத் நிஜாமைப் போபாலுக்கருகில் முறியடித்தார். கூர்ச்சரம், மாளவம், பேரார், நாகபுரி முதலியவற்றைக் கைப்பற்றி, ஆங்காங்கு மகாராஷ்டிரர்களை ஆட்சியில் அமர்த்தினார். கெயிக்வார், ஹோல்கர், சிந்தியா, போன்சலே என்னும் வமிசங்கள் தோன்றி ஆளத்தொடங்கின. மகாராஷ்டிரர் அயோத்தியையும், டெல்லிக்கருகிலுள்ள பிரதேசங்களையும் கொள்ளையடித்தனர். கருநாடகம், வங்காளம் முதலிய நாடுகளையும் மகாராஷ்டிரப் படைகள் கொள்ளையடித்து வந்தன. போர்ச்சுக்கேசியரின் வியாபார ஸ்தலமாகிய பேஸேன் என்னும் நகரையும் கைப்பற்றினர். மூன்றாம் பேஷ்வா பாஜிராவ் (1740-1761) இவர் காலத்திலும் மொகலாயர் பல இடங்களில் தாக்கப்பட்டனர். நாதர்ஷா, அகமத்ஷா அப்தாலி இவர்களின் படையெடுப்புக்குப் பின் மொகலாயரின் ஆட்சி மிகக் குன்றியது. மகாராஷ்டிரரின் செல்வாக்கின்கீழ் அவர்கள் முற்றிலும் ஒடுங்கிவிட்டனர். பஞ்சாபிலுள்ள மகாராஷ்டிரர் பாஜிராவின் உதவி பெற்று, அங்குத் தமது வீரத்தைக் காட்டி வந்தனர். 1759-ல் அகமத்ஷா அப்தாலி மீண்டும் இந்தியாவுக்கு வந்து ரோஹில்லரின் உதவியையும் அயோத்தி நவாபின் உதவியையும் பெற்று மகாராஷ்டிரரை எதிர்த்தார். 1761-ல் பானிப்பட்டில் சதாசிவராவின் தலைமையின்கீழ்ப் போர்புரிந்த மகாராஷ்டிர வீரர்கள் அகமத்ஷா அப்தாலியின் படையால் தோல்வியடைந்தனர். எனினும் இந்த வெற்றியால் முஸ்லிம்களின் ஆட்சிக்கு நன்மை ஏற்படவில்லை. மகாராஷ்டிரரின் பலம் சிறிது குன்றியது. எனினும் அவர்களின் ஆட்சிக்கு முடிவு வரவில்லை. 50 ஆண்டுகட்குப்பின் ஆங்கிலேயர் செல்வாக்கு ஓங்கியபின் தான் மகாராஷ்டிரர் பலம் ஒடுங்கி, அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

ஐதராபாத் இராச்சியம் : டெல்லியில் பாரூக்கியர் ஆட்சி புரிகையில் ஷீயா மதத்தைச் சேர்ந்த சையது சகோதரர்கள் இருவர் அரசியலில் மிகுந்த செல்வாக்கைப் பெற்றிருந்தனர். இவர்களுக்கு விரோதமாக சீன்குலீச்கான், அசப்ஜா, நிஜாம்-உல்-முல்க் என்பவரின் தலைமையின்கீழ் ஒரு மொகலாயர் கட்சி தோன்றியது. இவர் மகாராஷ்டிரரின் முன்னேற்றத்தை வெறுத்தார். இவர் மாளவத்தின் அதிகாரியாக இருந்த போது தக்கணத்தைக் கைப்பற்றித் தம் பகைவர்களை முறியடித்தார். டெல்லியில் பாரூக்கியர் கொல்லப்பட்டபின் சையது சகோதரர்கள் இரு சிறுவர்களைச் சக்கரவர்த்திகளாக்கிப் பின் அவர்களைக் கொன்று முகம்மது ஷாவுக்குப் பட்டம் கட்டினார்கள். சையது சகோதரர்கள் இறந்ததும் முகம்மது ஷாவின் அதிகாரம் நிலைத்தது. எனினும் அவர் திறமையற்றவராக இருந்ததால் நிஜாம் வெறுப்பினால் டெல்லியில் தமக்கிருந்த பதவியைக் கைவிட்டு 1723-ல் தக்கணம் வந்து சேர்ந்தார். கான்தேசத்தின் அதிகாரியான முபாரிஸ்கான் நிஜாமுக்கு டெல்லியில் இருந்த பகைவர்களின் தூண்டுதலின்பேரில், நிஜாமை எதிர்த்தார். நிஜாம் முபாரிஸ்கானைப் போரில் கொன்று, பேரார் மாகாணத்தைத் தம் வயப்படுத்திக் கொண்டு, தக்கணத்தில் தமது ஆட்சியை நிலைநாட்டினார். இதுதான் ஐதராபாத் சமஸ்தானத்தின் ஆரம்பமாகும். சாஹுவுக்குப் போட்டியாகத் தோன்றியவர்களுக்குத் துணைபுரிய முற்பட்டு, அதையே நிமித்தமாக்கிக்கொண்டு மகாராஷ்டிரரை எதிர்த்துத் துன்புறுத்தி வந்தார். அவர் முயற்சி பலிக்கவில்லை. ஆகவே அவர் பாஜிராவுடன் சமாதானம் செய்துகொண்டார். பாஜிராவ் டெல்லியின்மேல் படையெடுத்துச் செல்கையில், நிஜாம் சக்கரவர்த்திக்கு உதவியாகச் சென்று, போபாலுக்கருகே தோல்வியடைந்து, பேஷ்வாவோடு சமாதானம் செய்துகொண்டார். 1748-ல் நிஜாம் மரணமடைந்தார். இரண்டாம் மகன் நாசிர் ஜங்குக்கும், பேரனான முஜபர் ஜங்குக்கும் பட்டத்தைப் பெறும் உரிமைக்காகப் போட்டி ஏற்பட்டது. ஆங்கிலேயர் நாசிர் ஜங்குக்கு உதவியாக இருந்தனர். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்றார். நாசிர், முசபரைச் சிறை செய்தார். எனினும் பகைவனொருவனால் குத்திக் கொல்லப்பட்டார். பிறகு முசபர் நிஜாம் பதவியைப் பெற்ற போதிலும் பிரெஞ்சுக்காரரே உண்மையில் அரசியலை நிருவகித்து வந்தனர். சில குறுநில மன்னரால் முஜபர் கொல்லப்பட்டபின் நாசிரின் தம்பி சலாபத் ஜங் பிரெஞ்சுக்காரரின் உதவியால் அரசைப் பெற்றார். அவர் சேனைக்குப் பிரெஞ்சுக்காரர் சிறந்த பயிற்சியை அளித்தனர். அரசியல் நிலைமையும் அவர்களின் உதவியால் திருந்தியது. கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா முதலிய ஜில்லாக்களடங்கிய வடசர்க்கார் பகுதி நிஜாமால் பிரெஞ்சுக்காரருக்குக் கொடுக்கப்பட்டது. சலாபத்தின் தம்பி நிஜாம் அலி, உத்கீர் என்னுமிடத்தில் மகாராஷ்டிரருடன் போர்புரிந்து தோல்வியடைந்தார். நிஜாம் அலி ராய்ச்சூரைக் கைப்பற்றிப் பூனாவையும் பிடிப்பதற்காகச் செல்கையில் மகாராஷ்டிரரால் ஏற்பட்ட இன்னல்களைப் பொறுக்க முடியாமல், அவர்களோடு சமாதானம் செய்துகொண்டார். பிறகு, தம் தமையன் சலபத்தைச் சிறையிலிட்டுத் தாமே 1762-ல் பட்டமேறினார். டெல்லி சக்கரவர்த்தி ஷாஆலம் அவரைத் தக்கணத்தின் அதிபராக ஏற்றுக்கொண்டு, அவருக்கு இரண்டாம் ஆசப் ஜங் நிஜாம்-உல்-மல்க் என்னும் பட்டத்தையும் அளித்தார்.

தென்னாட்டின் நிலைமை : கன்னடப்பிரதேசத்தின் பெரும்பகுதி பேஷ்வாவின் அமலிலிருந்தது. சிரா, சவனூர், கர்நூல், கடப்பை என்னும் பகுதிகளை ஆண்ட நவாபுகளைப் பேஷ்வா அடக்கி வைத்தனர்.

ஆர்க்காடு நவாப் தோஸ்து அலி 1740-ல் மகாராஷ்டிரரால் முறியடித்துக் கொல்லப்பட்டார். பின்பு மகாராஷ்டிரர் திருச்சிராப்பள்ளிக்- கோட்டையைக் கைப்பற்றி, அங்கு நிருவாகம் செய்த தோஸ்து அலியின் மருமகனான சந்தா சாகேபைச் சிறைப்படுத்தினார்கள். தோஸ்து அலியின் மகனான சப்தர் அலி கொலை செய்யப்பட்டார். நிஜாம்-உல்-மல்க் தெற்கே வந்து தம்முடைய பிரபுக்களில் ஒருவரான அன்வர் உத்தீனைக் கருநாடக (ஆர்க்காடு) நவாபாக நியமித்தார்.

1748-ல் அசப்ஜா நிஜாம் இறந்ததும் அன்வர், பிரபுக்களின் பகைமையை ஏற்படுத்திக் கொண்டார். சூழ்நிலையில் கலவரம் ஏற்பட்டது. ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் இதைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கமுடையவராயிருந்தனர். இவர்களுக்குள் பெரும் போட்டி ஏற்பட்டது.

ஆங்கில-பிரெஞ்சுப்போட்டி : மர்த்தானுக்குப் பிறகு டூமா (Dumas) புதுச்சேரியில் கவர்னராக ஆட்சி புரிந்தார். திருச்சிராப்பள்ளியில் அதிகாரம் பெற்று ஆண்டுவந்த சந்தா சாகேபின் நட்பைப்பெற்று, அவர் மூலம் காரைக்காலைப் பெற்றார். 1741-ல் டூப்ளே கவர்னரானார். அவர் புத்தி நுட்பமும் அரச தந்திரமும் மிகுந்தவர். பலமிழந்த இந்திய மன்னர்களை வசப்படுத்திப் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்கைப் பரப்பவும், இதற்கு விரோதமாயிருந்த ஆங்கிலேயரை அழிக்கவும் கருதினார். ஐரோப்பாவில் பிரான்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் யுத்தம் தொடங்கியது. அது இந்தியாவுக்கும் பரவியது. லபோர்தனே என்னும் பிரெஞ்சுக் கப்பற் படைத்தலைவர் 1746-ல் பாதுகாப்பற்ற நிலையிலிருந்த சென்னையைக் கைப்பற்றினார். டூப்ளேயை எதிர்க்கக் கருநாடக நவாபின் சேனை அனுப்பப்பட்டது. அது அடையாற்றினருகே தோல்வியடைந்தது. 1748-ல் ஐரோப்பாவில் சமாதானம் ஏற்பட்டது. சென்னை ஆங்கிலேயருக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. இச்சண்டையில் ஐரோப்பியப் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் கொண்ட சேனையின் பலம் வெளிப்பட்டது. நிஜாம்-உல்-முல்க் இறந்ததும் பட்டத்துக்குப் போட்டி ஏற்பட்டது என்பதும் நாசிர் ஜங்கின் கட்சிக்கு உதவியளித்தனர் என்பதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. சந்தா சாகேப் முசபருக்கு உதவி புரிந்தார். இவ்விருவரும் பிரெஞ்சுக்காரரின் உதவியைப் பெற்று, ஆம்பூர்ப் போரில் அன்வர்-உத்தீனைக் கொன்றார்கள். அன்வரின் புதல்வன் முகம்மது அலி திருச்சிராப்பள்ளிக் கோட்டையில் மறைந்திருந்தார். பின் முசபர் ஆர்க்காட்டைக் கைப்பற்றிக்கொண்டார். தம்மையே நிஜாமென்று சொல்லிக்கொண்டு, சந்தா சாகேபைக் கருநாடக நவாபாக நியமித்தார். டூப்ளேக்குப் புதுச்சேரிக்கருகிலுள்ள கிராமங்களையும் மசூலிப்பட்டினத்தையும் கொடுத்து அவரது நட்பைப் பெற்றார். ஆங்கிலேயரும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கான ஏற்பாடு செய்துவந்தனர். தஞ்சாவூர் மன்னனிடமிருந்து கொள்ளிட சங்கமத்திலுள்ள தேவிக்கோட்டையைப் பெற்று முகம்மது அலிக்கு உதவி செய்வதாக வாக்களித்தார்கள்.

நாசிர் ஜங் தம்முடைய படையோடு கருநாடகத்துக்கு வந்தார். கடப்பை, கர்நூல், காவலூர் நவாபுகளால் ஏற்பட்ட சண்டையில் நாசிர் ஜங் கொல்லப்பட்டார். முஜபர் பிரெஞ்சுக்காரரின் உதவியால் நிஜாமானார். தமக்குதவியாக புஸ்ஸி என்ற தளகர்த்தரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். போகும் வழியில் அவர் கொல்லப்பட்டார். சலாபத் ஜங் நிஜாமானார். அவர் புஸ்ஸிக்கு வடசர்க்காரை அளித்தமை முன்னரே கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் முகம்மது அலியைக் காப்பாற்ற முன் வந்தனர். சந்தாசாகேப் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டார். சென்னையில் சாதாரண உத்தியோகத்தில் அமர்ந்திருந்த ராபர்ட் கிளைவ் என்பவரின் யோசனை தான் வெற்றி அளித்தது. கிளைவ் ஆர்க்காட்டைக் கைப்பற்றி, அதை மீட்க வந்த சந்தா சாகேபின் படையைச் சிதற அடித்தார். ஆங்கிலேயப் படை ஒன்று திருச்சியை அடைந்தது. குத்தியைப் பரிபாலித்த முராரி ராவும் மைசூர் மன்னரும் உதவியளித்தார்கள். திருச்சிராப்பள்ளியை ஆங்கிலேயர் கைபபற்றியதும் சந்தா சாகேப் தஞ்சாவூரில் சரண் புகுந்தார். அங்குக் கொல்லப்பட்டார். 1751 முதல் 1753 வரை மூன்றாண்டுகள் முற்றுகை நடைபெற்றது. பிறகு போட்டியில்லாமல் முகம்மது அலி நவாப் ஆனார்.

பிரெஞ்சு வியாபாரக் கம்பெனியின் தலைவரான கோதயூ (Godehew) இந்தியாவுக்கு வந்தார். அவர் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் யுத்தம் செய்யாமல் தத்தம் வியாபாரத்தையே கவனித்து வரவேண்டுமென்று வற்புறுத்தி 1754-ல் சமாதானம் செய்தார். டூப்ளேயின் மனோரதம் வீணாயிற்று. அவர் பிரான்ஸ் சென்று, புகழ் இழந்து, வறுமையால் பீடிக்கப்பட்டு இறந்தார். அவர் பிரெஞ்சுக்காரரின் கௌரவத்தை நிலை நிறுத்தியவர். எனினும் அதைப் பாராட்டிப் பிரெஞ்சு அரசாங்கத்தார் அவரைக் கௌரவிக்கவில்லை.

ஆங்கிலேயர் உதவிபெற்று முகம்மது அலி மதுரை, திருநெல்வேலி நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். கோதயூவின் முயற்சி வீணாயிற்று. இரு திறத்தார்க்கும் போர் நிற்கவில்லை. ஐரோப்பாவில் ஏழாண்டுப் போர் தொடங்கியது. இந்தியாவிலும் போர் நடந்தது. இந்த ஏழாண்டுகளிலும் வங்காளத்தில்தான் கிளைவ் இப்போரை நடத்தினார். அப்போது வட சர்க்கார் ஜில்லாக்களைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து கவர்ந்து, அவற்றை ஆங்கில ஆட்சிக்கு உட்படுத்தினார். தெற்கில் லாலி (Lally) என்ற பிரெஞ்சு தளகர்த்தர் கூடலூருக்கருகில் ஆங்கிலேயருக்குச் சொந்தமான செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துச் சென்னையை முற்றுகையிட்டார். அது நிறைவேறவில்லை. ஆங்கிலச் சேனாபதியான கர்னல் கூட் வந்தவாசியில் லாலியைத் தோற்கடித்துப் புதுச்சேரியையும் செஞ்சியையும் பிடித்துக்கொண்டார். முடிவில் சமாதானம் ஏற்பட்டது. புதுச்சேரியைப் பிரெஞ்சுக்காரர் மீண்டும் பெற்றனர். இதற்குப் பின் பிரெஞ்சுக்காரரின் போட்டி முடிவுற்றது. கப்பற்படைப் பலமின்மையாலும், தாய் நாட்டரசாங்கத்தாரின் உதவியின்மையாலும், இந்தியாவில் பிரெஞ்சு அதிகாரிகட்கும் தளபதி கட்கும் ஒற்றுமையின்மையாலும் இந்தியாவில் பிரெஞ்சுக்காரரின் செல்வாக்குக் குன்றியது.

1762-1800-ல் தக்கணத்தின் நிலைமை : பானிப்பட்டு யுத்தத்துக்குப்பின் மகாராஷ்டிரர்கள் தாமிழந்த பலத்தை மீண்டும் பெறலானார்கள். 1761-1772 வரை ஆண்ட மாதவ ராவ் பேஷ்வாவுக்கும் அவர் சிறிய தந்தை இரகுநாத ராவுக்கும் போட்டி ஏற்பட்டது. மாதவ ராவ் மிக்க திறமை வாய்ந்தவர். மைசூரில் வெற்றி பெற்று, ராஜபுத்திர நாடுகளின் மீதும், ஜாட்டுக்களின் நாட்டின்மீதும், ரோஹில்லர் நாட்டின் மீதும் படை யெடுத்தார். அவர் பெருவெற்றி பெற்றுத் தம்மைப் பானிப்பட்டில் அவமானப்படுத்திய ரோஹில்லர் மீது பழிக்குப்பழி வாங்கி, ஆங்கிலேயரின் பாதுகாப்பிலிருந்த ஷாஆலம் சக்கரவர்த்தியை அவர்களிடமிருந்து மீட்டு அவரை டெல்லிக்கு வரச் செய்தார். பெரு வீரரான மாதவராவ் இளவயதிலேயே இறந்தார். அவருக்குப்பின் பேஷ்வா பதவியை வகித்த நாராயணராவ் சில மாதங்களுக்குள் துரோகிகள் சிலரால் கொல்லப்பட்டார். இதனால் சீற்றங்கொண்ட பிரபுக்கள் இரகுநாத ராவ் பட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்தார்கள். இப் பிரபுக்களின் தலைவர் நானாபட்னாவிஸ். மாதவ ராவ் இறந்தபின் அவர் பெற்ற சிசுவை இரண்டாவது மாதவ ராவ் என்னும் பட்டம் சூட்டிப் பேஷ்வாவாக நியமித்தனர். அவருக்கு உதவியாக அரசியல் நடத்த மந்திரி சபை ஒன்று அமைக்கப்பட்டது. இரகுநாத ராவ் பம்பாயிலிருந்து ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்குப் பம்பாய்க்கடுத்த சால்செட், பேஸேன் என்னும் தீவுகளைக் கொடுப்பதாக வாக்களித்தனர். இது 1775-ல் நடந்த சூரத்து உடன்படிக்கையாகும். இதனிடையே வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நானாவுடன் புரந்தர் நகரத்தில் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். ஆயினும் கம்பெனியின் அதிகாரிகள் இரகுநாத ராவையே பேஷ்வாவாகத் தேர்ந்தெடுத்தனர். வாட்கான் என்னுமிடத்தில் போர் நடந்தது. ஆங்கிலேயர் தோல்வியடைந்தனர். ஹேஸ்டிங்க்ஸ் ஒரு படையை அனுப்பி, கூர்ஜரத்தில் பல நாடுகளைக் கைப்பற்றியதால் வடக்கிலிருந்து மகாராஷ்டிரர்கள் நானாவின் உதவிக்கு வரமுடியவில்லை. சால்பாய் என்னுமிடத்தில் 1782-ல் நானா ஆங்கிலேயருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1783-ல் இரகுநாத ராவ் இறந்தார். மகத்ஜி சிந்தியா உன்னத நிலையை அடைந்தார்; எனினும், அவருக்கும் நானாவுக்கும் நட்பு இல்லை. அவர் 1794-ல் காலமானார்.

நிஜாம் நாடுகளில் முதல் பாஜிராவ் காலமுதல் விதிக்கப்பட்டு வந்த சௌத் வரியில் பாக்கி நின்றுவிட்டது. நானா அதைச் செலுத்தும்படி நிஜாம் அலியை வற்புறுத்தினார். ஆங்கிலேயர் நிஜாமுக்கு உதவி செய்யவில்லை. இது காரணமாகத் தொடர்ந்த போரில் கர்தா என்னுமிடத்தில் மகாராஷ்டிரர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1795-ல் பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் நோய் கண்டிறந்தார். இரண்டாம் பாஜிராவுக்கும் சிம்னாஜிக்கும் போட்டி ஏற்பட்டது. அதிகாரத்தை இழக்க மனமில்லாத நானா, நிஜாம் அலியின் உதவியை நாடினார். சிம்னாஜி சிறை செய்யப்பட்டார். 1794-ல் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். உடனே நானாவுக்கும் அவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. எனினும் இவர்களுக்குள் சிறிது காலத்திலேயே பகை மூண்டது. பேஷ்வா, சிந்தியாவின் நட்பைப்பெற்று மக்களுக்குக் கொடுமை புரியலானார். 1790-ல் ஆங்கிலேயருக்கும் மைசூருக்கும் நடந்த போரில், ஆங்கிலேயருக்கு உதவி செய்யும்படி நானா பாஜிராவிடம் ஆலோசனை சொன்னார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. 1800-ல் நானா மரணமடைந்தார். பின்னர்க் குழப்பம் மிகுந்தது. பேஷ்வாவின் நாடு போர்களுக்கு உள்ளாகியது. முடிவில் அவருடைய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது.

ஐதராபாத் : இரண்டாம் அசப்ஜா நிஜாம் அலி (1762-1803) ஆங்கிலேயருடன் நட்புக்கொண்டிருந்தார். 1766லும் 1778லும் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின்படி போர் ஏற்பட்டால் தம் நாட்டைக் காக்கப் படைகளைக் கொடுத்து உதவுவதாக ஆங்கிலேயர் வாக்களித்தனர். 1792லும் 1799 லும் மைசூருக்கு விரோதமாக ஆங்கிலேயருக்கு உதவி புரிந்து, அவ்வுதவிக்குக் கைம்மாறாகக் கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் முதலிய நாடுகளைப் பெற்றார். இவைகளுக்குக் ‘கொடுக்கப்பட்ட ஜில்லாக்கள்’ (Ceded Districts) என்று பெயர். 1798, 1800 ஆண்டுகளில் ஆங்கிலேயருடன் பாதுகாப்பு முறை உடன்படிக்கை (Subsidiary Alliance) செய்து கொண்டார். அதன்படித் தம் நாட்டைக் காப்பாற்ற ஒரு சேனையை வைத்துக்கொண்டு, அதன் செலவுக்காக 24 இலட்சம் ரூபாய் கொடுத்துத் தாம் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற ஜில்லாக்களை அவர்களுக்கே கொடுத்து விட்டார். ஆங்கிலேயர் அல்லாத பிற ஐரோப்பியரைத் தம்மிடம் வைத்துக்கொள்வதில்லையென்றும், மற்ற இந்திய மன்னருடன் ஆங்கிலேயரின் உத்தரவின்றி எவ்வித உடன்படிக்கையும் செய்து கொள்வதில்லை யென்றும் ஒப்புக்கொண்டார். மற்றும் சில பாதுகாப்பு முறைத் திட்டங்களுக்கும் உட்பட்டனர்.

கருநாடகம் : முகம்மது அலியின் ஆட்சி மிகக் கீழான நிலைமையிலிருந்தது. நாட்டிலுள்ள கோட்டைகள் யாவும் ஆங்கிலேயரின் வசமிருந்தன. நவாபின் வரி வசூல் (திவானி) அதிகாரம் சொல்லளவுக்குத் தம்மிடமிருந்தாலும் இரட்டையாட்சிதான் நடந்து வந்தது. மற்றத் தென்னாட்டு மன்னர்களோடு நவாப் அக்கிரமமாகக் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். கம்பெனியாருக்கும் நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பேராபத்தை விளைவிக்க மைசூரில் ஐதர் அலி தோன்றினார்.

மைசூர் : ஐதர் அலி, திப்பு : ஐதர் மைசூர் சேனையின் அதிகாரி ஒருவரின் புதல்வர். அமைச்சர் நஞ்ச ராஜரின் நன்மதிப்பைப் பெற்றுத் திண்டுக்கல்லுக்குப் பவுஜதராக நியமிக்கப்பட்டார். 1761-ல் மைசூரில் சர்வாதிகாரியானார். 1763-ல் பிதனூர் சமஸ்தானத்தை வென்று பெருந்திரவியத்தைப் பெற்றார். சவனூர், கடப்பை, கர்நூல் முதலியவற்றைக் கைப்பற்றினார். பேஷ்வாவுடன் நடந்த போர்களில் தோல்வியடைந்தார். தமது தலைநகரமான ஸ்ரீரங்கபட்டணத்தைக் காத்தலே அவருக்குப் பெருமுயற்சியாக ஆயிற்று. எனினும் மற்ற இடங்களில் அவருக்கு வெற்றியே கிடைத்தது. மலையாளம், கன்னடம் முதலிய நாடுகளைக் கைப்பற்றினார். 1767-ல் அவர் ஆங்கிலேயரை எதிர்த்தார். திருவண்ணாமலையிலும், செங்கம் கணவாயிலும் போர் நடந்தது. எனினும் ஐதரைக் கருநாடகத்திலிருந்து துரத்த முடியவில்லை. ஐதர் தஞ்சாவூரைத் தாக்கி மிகுந்த திரவியத்தைப் பெற்றார். அவர் சென்னையை நோக்கி வந்ததை அறிந்த ஆங்கிலேயர் அவருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1778-ல் மீண்டும் போர் மூண்டது. 1780-ல் ஐதர் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கருநாடகத்துள் நுழைந்தார். காஞ்சீபுரத்தில் ஆங்கிலத் தளகர்த்தர் பெய்லி தோல்வியடைந்து சிறைப்படுத்தப்பட்டார். ஆர்க்காடு ஐதரால் பிடிபட்டது. சென்னை அரசாங்கத்தின் துணைக்காக அயர்கூட்டின் (Eyre Coote) தலைமையின்கீழ் ஒரு படையும், மற்றும் ஒரு கப்பற்படையும் அனுப்பப்பட்டன. வந்தவாசியில் நடந்த போரில் ஐதர் தோல்வியுற்றார். அமெரிக்கச் சுதந்திரப் போரின் விளைவாக ஹாலந்தும் பிரான்ஸும் இங்கிலாந்துடன் பகைமை கொண்டன. இந்தியாவிலும் ஆங்கிலேயர் நாகபட்டினம் முதலிய டச்சுத் துறைமுகங்களைப் பிடித்தனர். பிரெஞ்சுக் கடற்படைகள் ஐதருக்கு துணை புரிய அனுப்பப்பட்டன, 1782-ல் ஐதர் மரணமடைந்தார். அவர் புதல்வரான திப்பு போரை நடத்தினார். புஸ்ஸி (Bussy) ஒரு பிரெஞ்சுப் படையுடன் வந்து இறங்கினார். பம்பாயிலிருந்து அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் படை ஒன்று மங்களூர், பிதனூர் முதலிய இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் திப்பு பிதனூரைத் திரும்பப் பிடித்துக் கொண்டார். தெற்கிலிருந்து ஓர் ஆங்கிலப் படை மைசூருக்கு வந்தது. 1784-ல் மங்களூரில் சமாதானம் ஏற்பட்டது. இருதிறத்தாரும் கைப்பற்றிய நாடுகள் மீண்டும் அவரவர்க்கே திருப்பி அளிக்கப்பட்டன.

மங்களூர் உடன்படிக்கையின்படி திப்பு நடந்து கொள்ளவில்லை என்று கவர்னர் ஜெனரல் மறுபடியும் போர் தொடுத்தார். திப்பு மலையாளத்தின் மீது படை யெடுத்து, திருவனந்தபுரம்வரை சென்று, அதைத் தாக்கத் தொடங்கினார். பிரெஞ்சுக்காரருடன் நட்புக் கொண்டார். இதைக்கண்டு நிஜாமும் ஆங்கிலேயரும் அச்சமடைந்தனர். 1790-ல் ஆங்கிலேயர் மகாராஷ்டிரருடனும் நிஜாமுடனும் கூட்டுடன்படிக்கை செய்து கொண்டு போரைத் துவக்கினார். காரன்வாலிஸ் பெங்களூரைக் கைப்பற்றிப்பின் ஸ்ரீரங்கபட்டணத்தை முற்றுகையிட்டார். திப்பு சாமாதானம் செய்து கொள்ள விரும்பித் தமது இராச்சியத்தில் பாதியைக் கொடுத்தார். அதை ஆங்கிலேயரும் அவர்களின் நண்பர்களும் பங்கிட்டுக்கொண்டனர். திப்பு தமது குமாரரை ஜாமீனாக ஆங்கிலேயரிடம் அனுப்பினார். திப்புவால் சிறைப்பட்ட குடகு அரசர் விடுவிக்கப்பட்டார். ஆங்கிலேயருடைய பாதுகாப்புக்கு அவர் சம்மதித்தார். மலையாளம், திண்டுக்கல், பாராமகால் ஆங்கிலேயர்க்குக் கிடைத்தன.

அடுத்த மைசூர் யுத்தம் 1779-ல் வெல்லெஸ்லி காலத்தில் நடந்தது. சென்னை, பம்பாய், ஐதராபாத் ஆகிய இடங்களிலிருந்து சேனைகள் வந்து, மைசூரில் புகுந்து, ஸ்ரீரங்கபட்டணத்தைத் தாக்கின. திப்பு தீரத்துடன் போர் புரிந்து கடுங்காயமடைந்து உயிர் துறந்தார். கன்னடம் முதலிய நாடுகள் சென்னையுடன் இணைக்கப்பட்டன. எஞ்சியுள்ள மைசூர் நாட்டுக்குப் பழைய அரச வமிசத்தினரான கிருஷ்ணராஜ உடையார் அரசராக நியமிக்கப்பட்டார்.

ஐதர் எழுதப்படிக்க தெரியாதவர். ஆனால் புத்தி நுட்பமுடையவர். திறமையுள்ள அதிகாரிகளை நியமித்து நாட்டை நன்கு ஆட்சி புரிந்தார். எல்லா மதத்தினரையும் சமமாகப் பாராட்டினார். திப்பு தம் தகப்பனாரைப்போன்ற புத்தி நுட்பமுடையவர் அல்லர்; எனினும் திறமையும் விடாமுயற்சியும் உடையவர். இஸ்லாம் மதத்தில் அதிகப்பற்றுள்ளவர். இந்து மடங்களுக்கும் ஆலயங்களுக்கும் ஏராளமான பணம் வழங்கியுள்ளார். ஆனால் கடினமான சித்தமுடையவர். ஆங்கிலேயரை வெறுத்துப் பகைத்தார். இவர் காலத்தில் மைசூர் விவசாயத்தொழிலில் அபிவிருத்தியடைந்தது.

கருநாடகம் : முகம்மது அலியின் ஆட்சிக்குட்பட்டிருந்த மதுரையிலும் திருநெல்வேலியிலும் வரி வசூலிக்கவும், நாட்டின் நிருவாகத்தைக் கவனிக்கவும் மஹ்பஸ்கான் நியமிக்கப்பட்டார். அவர் நிருவாகம் நேர்முறையில் நடக்கவில்லையெனக் கண்டு, அவரை விலக்கி, அப்பதவிக்கு யூசுப்கான் என்னும் போர்வீரர் நியமிக்கப்பட்டார். யூசுப்கானும் நவாபின் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. 1763-ல் கம்பெனியாரின் படை உதவியால் நவாபு மதுரையை முற்றுகையிட்டார். யூசுப்கான் கொல்லப்பட்டார். தஞ்சாவூர் மன்னர் துல்ஜாஜிமீது பல குற்றங்களைச் சாட்டி, நவாபு ஆங்கிலேயர் உதவிய படையைக்கொண்டு தஞ்சாவூரைப் பிடித்து, 1773-ல் மன்னரையும் அவருடைய உத்தியோகஸ்தரையும் சிறைப்படுத்தினார். இங்கிலாந்திலிருந்த கம்பெனியின் அதிகாரிகளுக்கு இது பிடிக்கவில்லை. துல்ஜாஜியிடமே அவர் இராச்சியத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி இங்கிலாந்திலிருந்து கண்டிப்பான உத்தரவு பிறந்தது. அப்போது சென்னையில் கவர்னராக இருந்த பீகோ (Pigot) 1776-ல் துல்ஜாஜியை மறுபடியும் தஞ்சாவூரின் மன்னராக ஆக்கினார். மைசூரில் யுத்தம் நடந்தபோது காரன்வாலிஸ் செய்து கொண்ட நிபந்தனையின்படி நவாபு கருநாடகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்புவித்துவிட்டார். நவாபின் கடன் மிகப் பெருகிவிட்டது. அதற்கு ஈடு செய்வதற்காக அவர் ஜில்லாக்களிற் கிடைத்துவந்த வருமானத்தைக் கொடுக்க நேர்ந்தது. ஸ்ரீரங்கபட்டணத்தைப் பிடிக்கும்போது திப்புவுக்கு நவாபு எழுதிய சில கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்குக் கிடைத்தன. இது காரணமாக 1801-ல் வெல்லெஸ்லி கருநாடகத்தை ஆங்கில ஆட்சிக்குட்படுத்தினார்.

மற்றத் தமிழ்நாட்டு இராச்சியங்கள்: சரபோஜி மன்னர் இராமநாதபுர சமஸ்தானத்தின் வார்சுரிமைப் போட்டியில் தலையிட்டு, இராமநாதபுரத்தைச் சிவகங்கை இராமநாதபுரம் என்னும் இரண்டு பாகங்களாகப் பிரித்தார். துக்கோஜிக்குப்பின்(1728-36) தளகர்த்தராகவிருந்த ஆனந்த ராவ், புதுக்கோட்டைமீது படையெடுத்தார். எனினும் அதனால் அவர் ஒரு பயனும் அடையவில்லை. 1773-ல் நவாபு ஆங்கிலேயரின் உதவியைக்கொண்டு துல்ஜாஜியைச் சிறைப்படுத்தி, தஞ்சையைத் தம் ஆட்சியில் சேர்த்துக் கொண்டதும், 1776-ல் கவர்னர் பீகோ மீண்டும் துல்ஜாஜியைத் தஞ்சைக்கு மன்னர் ஆக்கியதும் முன்னரே கூறப்பட்டுள்ளன. அமர் சிங் (1787-98) துல்ஜாஜிக்குப்பின் அரசாண்டார். அவருக்குப்பின் இரண்டாம் சரபோஜி அரசரானார். அவர் காலத்தில் தஞ்சை ஆங்கிலேய ஆட்சியில் சேர்க்கப்பட்டது.

இராமநாதபுரம், சிவகங்கை : சடையக்கர் என்பவர் முதலில் சேதுபதியாக மதுரை நாயக்கரால் நியமிக்கப்பட்டார். திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்பட்ட வார்சுப்போர் தீர்ந்தவுடன், இரகுநாத சேதுபதி பட்டத்துக்கு வந்தார். அவர் திருமலை நாயக்கருக்குதவியாக மைசூர் கண்டீரவ மன்னரின் சேனையை முறியடித்தார். சரியான வார்சில்லாமையால் 1674-ல் மறவக் குடிகள் கிழவன் சேதுபதி என்று பிரசித்தி பெற்ற இரகுநாத தேவரை அரசராக்கினார்கள். கிழவன் சேதுபதி சமஸ்தானத்தை மதுரையின் பாதுகாப்பிலிருந்து விலக்கித் தனி இராச்சியமாக அமைத்தார். இரகுநாத தொண்டைமானின் தங்கையை மணம் புரிந்து புதுக்கோட்டையை அவருக்கு அளித்தார். புதுக்கோட்டை இராச்சியத்தின் ஆரம்பம் இதுதான். 1726-ல் வார்சுப் போர் மீண்டும் தொடங்கியது. தஞ்சை மன்னர் பவானிசங்கரை ஆதரித்தார். மதுரை நாயக்கரும் தொண்டைமானும் தண்டத்தேவரை ஆதரித்தார்கள். பவானிசங்கரரின் ஆட்சி சரிவர நடைபெறாமையால் சரபோஜி மன்னன் அவரை நீக்கிச் சில ஜில்லாக்களைத் தாமே கைப்பற்றிக்கொண்டார். எஞ்சியதை ஐந்து பாகங்களாகப் பிரித்து, மூன்றைக் காத்த தேவருக்கும், இரண்டைச் சசிவர்ண தேவருக்கும் கொடுத்தார். சசிவர்ணரின் பங்குதான் சிவகங்கை சமஸ்தானமாகும். பெரிய மறவர், சிறிய மறவர் என்று இரண்டு பிரிவுகள் ஏற்பட்டபின் சேதுபதி சமஸ்தானம் தன் பெருமையை இழந்தது. தஞ்சை மன்னருக்கும் சேதுபதிகளுக்கும் ஓயாமல் சண்டை நடந்துகொண்டிருந்தது. நவாபுவின் தூண்டுதலின்பேரில் ஆங்கிலேயர் இராமநாதபுரத்தைப் பிடித்துக்கொண்டனர். 1773 முதல் 1781 வரை இது நவாபுவின் ஆட்சியின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. 1795-ல் சேதுபதியை விலக்கி, இராமநாதபுரத்தை ஆங்கிலேயர் தமது ஆட்சியில் சேர்த்துக் கொண்டு, 1803-ல் அரசை ஜமீன்தாரியாக மாற்றினர்.

1772-ல் ஆங்கிலேயர் சிவகங்கையையும் பிடித்துக் கொண்டனர். அரசர் கொல்லப்பட்டு நாடு 1780 வரை நவாபுவின் ஆட்சியின் கீழ் வைக்கப்பட்டது. மருது, பாண்டியர் என்ற இருவர் வசம் நிருவாகத்தை இராணியார் ஒப்புவித்தார். மருது சகோதரர்கள் பாஞ்சாலங்குறிச்சி மன்னர்களோடு சேர்ந்து போரிட்டதால், ஆங்கிலேயர் அவர்களைத் தூக்கிலிட்டுக் கொன்று, சிவகங்கையையும் தமது ஆட்சியில் சேர்த்து, அதை ஜமீன்தாரியாக்கினர்.

புதுக்கோட்டை : ஆவுடைத் தொண்டைமான் என்பவர் அம்புக்கோவில் என்னும் அழம்பில் நாட்டினை ஆண்டு வந்தார். அவர் புதல்வர் இரகுநாதராயத் தொண்டைமான், கிழவன் சேதுபதியிடமிருந்து புதுக்கோட்டையைப் பெற்றார். திருமயம், ஆலங்குடி முதலியவற்றைச் சேர்த்துக்கொண்டு அவர் புதுக்கோட்டையை ஆண்டார். அவர் திருச்சியில் நாயக்கருக்கு உதவி செய்து, மேற்கிலும் வடமேற்கிலும் சில பாளையங்களைக் கைப்பற்றினார். நாயக்க வமிசம் முடிவடைந்ததும் விஜயரகுநாதராயர் (1730-60) தமது நாட்டைச் சுற்றிலுமுள்ள தஞ்சாவூர், இராமநாதபுரம் முதலிய இராச்சியங்கள் தமக்குப் பகையாக இருந்தபடியால் நவாபுவின் நட்பை நாடினார். அவர் மூலமாகக் கம்பெனியாரின் நட்பையும் பெற்றார். அவர் பிரெஞ்சுப் போர்களில் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். நவாபுவின் சண்டைகளெல்லாவற்றிலும் அவர் உதவி புரிநதார். பின் அரசாண்ட இராயரகுநாதரும் (1769-89) விஜயரகுநாதரும் (1789-1807) மைசூர் யுத்தங்களிலும், பாளையக்காரருடன் நடந்த யுத்தங்களிலும் ஆங்கிலேயருக்கு உதவி புரிந்தார். கருநாடகத்தைத் தமது ஆட்சிக்கு கொண்டுவந்தபோது ஆங்கிலேயர் புதுக்கோட்டையை ஒரு பாதுகாப்பு இராச்சியமாகப் பாவித்து, இம் மன்னர்களுக்குச் சில மரியாதைகளையும் வழங்கினார்கள்.

திருநெல்வேலி பாளையக்காரர்களின் எதிர்ப்பு : தமிழ்நாட்டு இராச்சியங்கள் இப்படி அழிந்து மறைவதைப் பொறாமல், ஆங்கிலேயரை நாட்டைவிட்டு விரட்ட வேண்டுமென்னும் நோக்கத்துடன், திருநெல்வேலிச் சீமையிலுள்ள பாளையக்காரர்கள் ஒன்றுகூடித் தாங்கள் கொடுக்கவேண்டிய பேஷ்கஷ் தொகையைக் கொடுக்க மறுத்து, ஆங்கிலேயரின் சேனையைத் துன்புறுத்தி எதிர்த்தார்கள். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மு நாயக்கரும், நாகலாபுரம் நாயக்கரும் இப்பாளையக்காரர்களின் எதிர்ப்புக்குத் தலைமை வகித்தார்கள். மைசூர் யுத்தம் முடிந்ததும் ஆங்கிலேயர் படை பாஞ்சாலங்குறிச்சியைத் தாக்கிற்று. கட்டபொம்மு தம் கோட்டையினின்றுத் தப்பிச் செல்கையில், எட்டயபுரம் பாளையக்காரரால் துரத்தப்பட்டுச் சிவகங்கை சென்று, பிறகு, தொண்டைமான் சீமைக்கடுத்த காட்டிலுள்ள காலியாப்பூர் என்னுமிடத்தில் ஒளிந்து கொண்டார். கலெக்டர் லஷிங்க்டன் கட்டளைப்படி தொண்டைமானின் ஆட்கள் அவரைப் பிடித்தனர். காப்டன் ஸ்மித் அவரைக் கயத்தாருக்குக் கூட்டிச் சென்று, அங்குப் போலி விசாரணை ஒன்றை நடத்தி அவரை 1799-ல் தூக்கிலிட்டார். கட்டபொம்முவின் இரண்டு சகோதர்களும் (இருவர்களுள் இளையவரை ஊமையன் என்றும் வழங்குவர்), மற்றப் பாளையக்காரர்களும் சிறையினின்றும் தப்பி, வெளிவந்து, பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் புதுப்பித்துப் பலப்படுத்தினர். ஆங்கிலேயர் சேனாபதி ஆக்னியூ (Agnew) 1801-ல் கோட்டையைக் கைப்பற்றினார். ஊமையன் தப்பிச் சிவகங்கையை அடைந்தார். அங்கு மருது சகோதரர்கள் அவருடன் சேர்ந்துகொண்டார்கள். ஆங்கிலேயர் காளையார்கோயில் முதலிய இடங்களைப் பிடித்தனர். முடிவில் ஊமையனும் மருது சகோதரர் களும் பிடிபட்டுத் தூக்கிலிடப்பட்டனர். தமிழ் நாட்டின் சிறிய விடுதலைப்போர் இவ்விதம் முடிவடைந்தது.

மலையாள இராச்சியங்கள் : கோழிக்கோடு தம்பிரானும் கொச்சி மன்னனும் போர்ச்சுக்கேசியரின் ஆட்சிக்குட்பட்டிருந்தனர். இந்நாட்டின் பல கிராமங்கள் போர்ச்சுக்கேசியரின் கையில் இருந்தன. கோழிக் கோட்டுக்கும் கொச்சிக்கும் அடிக்கடி போர்கள் நிகழ்ந்தன. இந்நாட்டு மன்னர்கள் போர்ச்சுக்கேசியரின் உதவியை நாடினர். 1650-ல் தானூர் வமிசத்தைச் சேர்ந்த இராமவர்மனைப் போர்ச்சுக்கேசியர் கொச்சி நாட்டின் அரசராகப் பட்டஞ்சூட்டி, அவருக்குப் போர்ச்சுக்கேசிய மன்னரின் துணைவீரர் (Brother in-arms to the King of Portugal) என்னும் பட்டத்தையும் அளித்தனர். 1661-63-ல் டச்சுக்கார் போர்ச்சுக்கேசியரைத் துரத்திவிட்டுக் கொல்லம், கொச்சி, கொடுங்கோளூர், கண்ணனூர் முதலிய துறைமுகங்களைப் பிடித்துக்கொண்டார்கள். டச்சுச்காரர் தமது வியாபாரத்தை மட்டும் கவனித்தார்கள். சுதேச மன்னர்களின் விஷயங்களில் தலையிடவில்லை. அவர்கள் சுயேச்சையாக ஆண்டுவந்தனர். டச்சுக்காரர் நாட்டினரைக் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றும் முயற்சியில் ஈடுபடவில்லை.

1759-ல் கோழிக்கோடு தம்பிரான் கொச்சியின்மீது படையெடுத்தார். திருவிதாங்கூர் மன்னர் கொச்சிக்கு உதவிபுரிந்தார். அதற்காகக் கொச்சி மன்னரிடமிருந்து சில பகுதியைத் திருவிதாங்கூர் மன்னர் பெற்றார். 1776-ல் ஐதர் அலி கொச்சியிற் பிரவேசித்தார். மன்னர் கப்பம் கட்டுவதாக ஒப்புக்கொண்டு, 1791 வரை மைசூருக்குப் பணிந்து நடந்துவந்தார். பிறகு அவர் ஆங்கிலேயரின் பாதுகாப்புக்கு உட்பட்டார். 17ஆம் நூற்றாண்டில் பல குறுநில மன்னர்கள் திருவிதாங்கூரில் ஆண்டுவந்தனர். தென்பகுதி மதுரை நாயக்கர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1698-ல் இராணி மங்கம்மாளின் படை திருவிதாங்கூரைத் தாக்கியது. 18ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மார்த்தாண்டவர்மன் சிறு நாடுகளையெல்லாம் வென்று ஒன்று கூட்டினார். பிறகு திருவனந்தபுரத்துக்கு வடக்கேயுள்ள காயங்குளம், அம்பலப்புழை, சங்கனாச்சேரி முதலிய நாடுகளைச் சேர்த்துக்கொண்டார். 1759-ல் கொச்சியில் சில பகுதிகளும் சேர்ந்தன. இவர் காலத்தில்தான் திருவிதாங்கூர் இப்போதுள்ளபடி பூர்ணமாக அமைந்தது. ஆகையால் இவரைத் ‘தற்காலத் திருவிதாங்கூரைப் படைத்தவர்’ (Maker of Modern Travancore) என்று அழைப்பதுண்டு. இவர் பிளாண்டர்ஸ் தேசத்தினரான தெ லென்னாய் (De Lennoy) என்ற ராணுவ வீரரைத் தம் சேனையில் அமர்த்திப் படைகளுக்குச் சிறந்த பயிற்சியளித்துக் கோட்டைகளைப் பலப்படுத்தினார்.

அவருக்குப்பின் ஆண்ட இராம வர்மன் மற்றுமுள்ள சில மன்னர்களை அடக்கினார். கொடுங்கோளூர் காயங்கரையிலிருந்து மேற்குத்தொடர்ச்சி மலைவரையில் ஒரு பலமான அரணைக் (Travancore Lines) கட்டினார். 1766, 1776 ஆண்டுகளில் ஐதர் இச்சீமைக்கு வர முயன்றபோது இவ்வரணும், டச்சுக்காரர் அனுப்பிய படையுந்தான் அவரைத் தடுத்துத் திருவிதாங்கூரைக் காப்பாற்றின. 1778-ல் ஆங்கிலேயர் கட்சியில் சேர்ந்து கொண்டு, 1789-90-ல் திப்புவின் படையை முறியடித்தார். 1795-ல் ஆங்கிலேயரின் பாதுகாப்பு விதியை அவர் அங்கீகரித்தார்.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மொகலாய ஆட்சியின் வீழ்ச்சியால் பலமடைந்தது மகாராஷ்டிர-ரது ஆட்சியாகும். நூற்றாண்டின் நடுவில் அவர்களின் பேராட்சி பஞ்சாபிலிருந்து காவிரிக்கரைவரையும் பரவியிருந்தது. டெல்லி சக்கரவர்த்தி சிலகாலம் அவருக்குட் பட்டிருந்தார். நிஜாமும் மற்ற மன்னர்களும் அவர்களின் பலத்தை அசைக்க முடியவில்லை. பானிப்பட்டுத் தோல்வியாலும் அவர்கள் பலம் ஒடுங்கவில்லை. முதல் மூன்று பேஷ்வாக்கள், நாராயண ராவ், நானா பட்னாவிஸ், மகத்ஜி சிந்தியா முதலியவர்களின் வீரச் செயல்கள் அதிசயிக்கத் தக்கவை. மகாராஷ்டிரத் தலைவர்கள் தங்கள் பூசல்களையும் பொறாமைகளையும் ஒழித்துத் திப்புவைப்போலக் காரியத்தில் குறியுள்ளவர்களாக ஆங்கிலேயரை ஒன்றுபட்ட நோக்கத்துடன் பகைத்திருந்தால், ஆங்கிலேயரின் முன்னேற்றம் வெகு காலம் தடைப்பட்டிருக்கும் என்று வரலாற்று ஆசிரியர் ராபர்ட்ஸ் கூறுவது முற்றும் பொருந்தும். மகாராஷ்டிரம் கட்சிகளால் பிளவுபட்டவுடன், ஆங்கிலேயர் சிறிய மன்னர்களைப் போட்டிக்குவிட்டுச் சமயத்துக்கேற்றபடி உதவிசெய்து, தங்களுக்குப் பல கஷ்டங்களைக் கொடுத்துவந்த பிரெஞ்சுக்காரர், ஐதர், திப்பு ஆகியவர்களை வென்று, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை இராசதானியை நிருமாணித்தார்கள். ஐதராபாத், மைசூர், திருவிதாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகியவை 'பாதுகாப்பு' இராச்சியங்களாயின.

மக்களின் பொதுவாழ்க்கை , பண்பாடு : சிவாஜியின் அரசியல் திட்டம் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. பேஷ்வாவின் ஆட்சி தக்கணத்தில் மகாராஷ்டிரத் தாய் நாட்டில் சீரான முறையில் நடைபெற்று வந்தது. அவர்கள் வென்ற மற்ற நாடுகளில் அமைதியான நிருவாகம் நடைபெறவில்லை. மக்களிடமிருந்து பல வகைகளில் பணம் வசூலிக்கப்பட்டது. மைசூர், பிதனூர், தஞ்சாவூர், மதுரை முதலிய சமஸ்தானங்களின் அரசியல் நிருவாகம் நன்றாகவே நடந்து வந்தது. வாய்க்கால்களும் குளங்களும் வெட்டப்பட்டன. நீர்ப்பாசனம் நன்கு கவனிக்கப்பட்டது. ஐதர், திப்பு இவர்களின் ஆட்சிக்காலத்தில் குடியானவர்களும் கூலித்தொழிலாளிகளும் நன்கு கவனிக்கப்பட்டனர். அவர்களது ஆட்சித்திறனை ஆங்கிலேயரும் பாராட்டிக் கூறியுள்ளனர். தஞ்சை இன்றுபோலவே அன்றும் நெற்களஞ்சியமாக விளங்கியது.

மகாராஷ்டிரரின் எளிய வாழ்க்கை நிலை நாளடைவில் மாறியது. மொகலாயர்களின் ஆடம்பர சுகவாழ்க்கை மகாராஷ்டிரரின் உள்ளத்தைக் கவர்ந்தது. மொகலாயரின் அரண்மனைகளைப்போன்ற பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டன. “என் தந்தையார், பாட்டனார் காலம் முதல் சென்ற 24 ஆண்டுகளாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெள்ளமெடுத்துப்பாயும் ஆறுபோல் பொன்னும் பணமும் பெருகுகின்றன; அவை அவ்வளவு ஏராளமாகக் கிடைத்தும், நம் ஆசை மேன்மேலும் அதிகரிக்கிறது” என்று பேஷ்வா பாலாஜி தாம் எழுதிய கடிதமொன்றில் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணப்பெருக்கம் ஒன்றே அவர்கள் வாழ்க்கையை மாற்றப் போதுமானது. தெற்கில் மதுரைவரையில் அரசியல் மரியாதைகள் மொகலாய அரண்மனைகளில் நடப்பது போலவே சம்பிரதாயமாக நடைபெற்று வந்தன. உடையிலும் அப்படி மாறுபாடு தோன்றியது. பாரசீக மொழியே அரசியல் மொழியாகப் போற்றப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியிலுள்ள பட்டணங்களில் கவர்னர்கள் நவாபுகளின் படாடோபத்துடன் வசித்தார்கள். கம்பெனியில் வேலைசெய்யும் ஆங்கிலேயர்கள் தாங்கள் தனியே வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது வழக்கமாக இருந்தது. இந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் போரும், கலகமும், கொள்ளையும் மக்கள் வாழ்க்கையை எல்லாவிதத்திலும் பாதித்தன. சேனைகள் சென்ற ஊர்கள் பாழாயின. சண்டைக்குப் பிறகும் சேனையில் கூலிக்குச் சேவை செய்யும் வீரர்கள் கிராமங்களைக் கொள்ளையடிப்பது வழக்கம். உயிருக்கும் சொத்துக்கும் அடிக்கடி அபாயம் நேரும் காலமாகவே யிருந்தது. முஸ்லிம் படையெடுப்பைத் தடுக்கத் தஞ்சை விஜயராகவ நாயக்கர் அவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்தார். நஷ்டத்தை ஈடுசெய்ய மக்களிடம் உபரியாக வரி சுமத்தப்பட்டது. ஏகோஜி காலத்திலும் அதிக வரி வசூலிக்கப்பட்டது; கோயில்களின் பணமும் செலவு செய்யப்பட்டது. இப்படிப் பல இடங்களில் நடந்தது. இந்த நிலைமையில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. “1630-ல் கூர்ஜரத்திலிருந்து கிழக்குக்கரைவரை எங்குப் பார்த்தாலும் பஞ்சத்தின் கொடுமையால் பிணக் குவியலாகத் தென்பட்டது” என்று ஓர் ஆங்கில வியாபாரி எழுதியிருக்கிறார். பஞ்சத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு அன்னமளிப்பதை மதுரைச் சொக்கநாத நாயக்கர் நேரில் கவனித்தாராம். 17ஆம் நூற்றாண்டில் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை டச்சுக்காரர் விலைக்கு வாங்கி வெளி நாடுகளில் அடிமைகளாக விற்றார்களாம். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய வியாபாரிகளும் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் வழக்கம். 1788-ல் தான் அடிமைகளை ஏற்றுமதி செய்வது தடுக்கப்பட்டது.

பேஷ்வா, மைசூர் உடையார், தஞ்சை நாயக்கர், மகாராஷ்டிர போன்சலே, மதுரை நாயக்கர், சேதுபதி, தொண்டைமான் முதலிய அரச வமிசத்தினர் கல்வியை வளர்த்தார்கள். பல கவிகளையும் ஆசிரியர்களையும் ஆதரித்தார்கள். சதாசிவப் பிரமேந்திரர், அப்பய்ய தீட்சிதர், நீலகண்ட தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், ராமபத்திர தீட்சிதர், வேங்கடேச தீட்சிதர், வாசுதேவ தீட்சிதர், நாரயண தீட்சிதர், திருவிதாங்கூர் பாலராம வர்மா, இக்கேரி பசவ நாயக்கர், கலாலே நஞ்ச ராஜா முதலியவர்கள் இக்காலத்தில் பிரசித்தி பெற்ற வடமொழி ஆசிரியர்கள்.

ஸ்ரீதரர், மகீபதி, ராம்ஜோஷி, நரோசங்கர் முதலியவர்கள் மராத்தி மொழியில் பிரபல ஆசிரியர்கள், இக்காலத்தில் வரலாற்றைக் குறிக்கும் 'பக்கார்' (Bakhar) என்னும் மராத்தி நூல்கள் மிகவும் உபயோக முள்ளவை.

கன்னடத்தில் வீர சைவ, சமண ஆசிரியர்களால் புராணங்கள், பக்தர்கள், பெரியார்களின் சரித்திரங்கள் முதலியவைகள் எழுதப்பட்டன. தெலுங்கில் சதகங்களும் பிரபந்தங்களும் எழுதப்பட்டன. தஞ்சை நாயக்கர் சபையில் தெலுங்குமொழி மேன்மை யடைந்தது.

தமிழில் பிரபந்தங்களும், புராணங்களும், தொண்டை மண்டல சதகம், சோழ மண்டல சதகம் முதலிய சதகங்களும் எழுதப்பெற்றன. உமறுப் புலவர் நபிநாயகத்தின் சரித்திரத்தைச் சீறாப்புராணம் என்று பாடினார். கீழைக்கரை ஷயிக் காதர், சீதக்காதி மரக்காயர் இருவரும் முஸ்லிம் புலவர்கள். வீரமா முனிவர் (பெஸ்கி)என்ற கிறிஸ்தவப் பாதிரியார் தமிழில் அகராதி, இலக்கணம் முதலியவை இயற்றினார். ஆனந்தரங்கப் பிள்ளையின் தினசரிக் குறிப்பு வரலாற்று ஆராய்ச்சியாளர் களுக்கு இன்றியமையாதது.

சமயச் சண்டைகளை ஒழித்து, எச்சமயமும் உண்மையே என்று உபதேசித்த தாயுமானவர் அவதரித்த காலம் திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் காலம். வேதாந்தத்தின் உண்மையை விருத்தியுரை, கீர்த்தனம் ஆகியவற்றின் வாயிலாக உபதேசித்த முனிவர் சதாசிவேந்திரர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பய்ய தீட்சிதரும் சைவம், வேதாந்தம் இவைகளைச் சமரசப்படுத்தினார். சிவஞான முனிவர் 18-ஆம் நூற்றாண்டின் இடையில் திராவிட மாபாடியம் முதலிய சமய நூல்களை இயற்றினார். இசை வளர்ச்சியைக் கவனிப்போமானால் சதாசிவேந்திர பிரமேந்திரரின் கீர்த்தனங்கள், நாராயண தீர்த்தரின் 'கிருஷ்ண லீலாதரங்கிணி', நஞ்சராஜரின் 'சங்கீத கங்காதர' முதலிய வடமொழி கீதங்களும், 'பவாதா' என்ற மராத்தி பாக்களும், கன்னடத்தில் தாசர் பதங்களும், யட்சகானங்களும், தெலுங்கில் யட்சகானங்களும், பிறகு க்ஷேத்திரய்யாவின் பதங்களும், தியாகராஜரின் கீர்த்தனங்களும், தமிழில் குற்றாலக் குறவஞ்சியும்', அருணாசலக் கவிராயர் 'இராம நாடகமும்' கவிகுஞ்சர பாரதியின் பதங்களும், பல கவிகளாலியற்றப்பட்ட நாட்டுப் பாட்டு வகைகளும் குறிப்பிடத்தக்கன.

இசைக் கலையை வளர்த்தது தஞ்சையே. இங்கு நாயக்கர்களால் கட்டப்பட்ட 'சங்கீத மகால்' அற்புதமான கட்டடம். இரகுநாத நாயக்கர் காலத்தில் பல இராகங்களும், தாளங்களும், அபிநயங்களும் சீர்திருத்தப்பட்டன. புதியனவாகவும் நிறுவப்பட்டன. மகாராஷ்டிர துல்ஜாஜி மன்னர் ' சங்கீத சாராம்ருதம்' என்ற இசை நூலை இயற்றினார். இரகுநாத நாயக்கரின் இராணிகளாகிய இராமபத்திராம்பாளும், மதுரவாணியும், விஜயராகவ நாயக்கரின் ராணி ரங்கஜம்மாவும், சம்பகவல்லி, கஸ்தூரி, சசிரேகா, மோகனமூர்த்தி, கிருஷ்ணா முதலிய அரண்மனை மாதர்களும், முத்துப் பழனியும் கலைவாணிகள் என்று கூறலாம். இவர்கள் கவி இயற்றுவதிலும், இசைக் கலை, வாத்தியக் கலை, நாடகக் கலை, இம்மூன்றிலும் கீர்த்தி வாய்ந்தவர்கள். வீணை வித்துவான் பச்சிமிரியம் ஆதியப்பா, பல்லவி கோபாலய்யர் முதலாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த கருநாடக இசையின் மணிகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் தஞ்சையில் தோன்றினார்கள்.

இந்து மன்னர்கள், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அதிகமாகச் சலுகை காட்டி வந்தார்கள். மங்கம்மாள் திருச்சிராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற தர்க்காவுக்கும் மகாராஷ்டிர மன்னர் நாகூர் தர்க்காவுக்கும், சேதுபதி ஒருவர் திருமயத்திற்கு அருகிலுள்ள காட்டுபாவா தர்க்காவுக்கும் மானியங்கள் - விட்டுள்ள செய்திகளைக் குறிக்கும் சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படியே முகம்மது அலி ஸ்ரீரங்கம் முதலிய பெரிய கோயில்களுக்கு நிலங்கள் விட்டுள்ளனர். திப்பு, பல கோயில்களுக்கும் மடங்களுக்கும் நன்கொடை யளித்தார். விஜயநகர காலத்திலிருந்தே கிறிஸ்தவப் பாதிரிகளைக் கௌரவமாக நடத்தினதுடன் அவர்கள் கோயில்களைக் கட்டவும், மதப்பிரசாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். சுவார்ட்ஸ் (Schwartz) என்ற கிறிஸ்தவப் பாதிரியார் தஞ்சை சரபோஜி மன்னருக்கு ஆசிரியராகவிருந்து, திருச்சிராப்பள்ளியிலும் தஞ்சையிலும் பள்ளிக்கூடங்களைநிறுவிப் பெருஞ் சேவை செய்தார். ஜெஸ்யூட் (Jesuit) சங்கத்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் பல இடங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். அக்கிரகாரங்கள் தோறும் அறிஞர்கள் பிள்ளைகளுக்கு இலவசமாக வடமொழி நூல்களைப் போதித்தார்கள். சைவ, வைணவ மடங்கள் தோறும் சமயக்கல்வியும் சாத்திரக்கல்வியும் போதிக்கப்பட்டன.

விஜயநகரக் கட்டடக் கலையின் வளர்ச்சி நாயக்கர் காலத்தில் காணப்பட்டது. 100, 1000 கால்களடங்கிய மண்டபங்கள் பலவிடங்களில் ஏற்பட்டன. நாயக்கர்கலையில் விசேஷமானவை இருபுறமும் உயர்ந்த பருத்த தூண்கள் வரிசையாக உள்ள பிராகாரங்கள். அத்தூண்களில் உயர்ந்த கம்பீரமான தோற்றமுள்ள பிம்பங்களும், யாளி, சிங்கம் முதலிய உருவங்களும் காணப்படும். சில இடங்களில் பல தாண்களின் கூட்டமடங்கிய தூண்கள் உள்ளன. இராமேசுவரத்தின் பிராகாரங்கள் உலகிலேயே மிக நீண்டவை. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் நாயக்கர் கலையின் மேம்பாட்டைப் பார்க்கலாம். இவ்விரண்டு நூற்றாண்டுகளில் தஞ்சை இசைக்கலையை வளர்த்தது. மதுரை சிற்பக் கட்டடக் கலைகளை வளர்த்தது. கூ. ரா. வே.

1800-1950 : 1799-ல் திப்பு சுல்தான் வீழ்ச்சியுற்றதும், ஆங்கிலேயர்கள் கன்னடத்திற்கும் பாராமகாலுக்கும் இடையேயுள்ள நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். சோழமண்டலக் கடற்கரைக்கும் மலபாருக்கும் இடையேயுள்ள நிலப்பரப்பு முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று. 1800-ல் அச் சுல்தான் ஆங்கிலேயர்களோடு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 1792-1799 வரை தமது மைசூர் வெற்றிகளால் அடைந்த நிலப்பகுதிகளை யெல்லாம் கம்பெனியாருக்கு விட்டுக் கொடுத்தார். இவ்வாறாக பிரிட்டிஷார் துங்கபத்திர நதி வரையிற் படர்ந்திருந்த பல்லாரி, கடப்பை, அனந்தப்பூர் ஜில்லாக்களைப் பெற்றனர். 1842-ல் பட்டமிழந்த கர்நூல் நவாபின் பிரதேசமும் பிரிட்டிஷாருக்கு உடைமையாயிற்று. இப்பிரதேசங்களில் முதன்முதல் கலெக்டராயிருந்த தாமஸ் மன்ரோ அந்த ஜில்லாக்களின் நிலைமையைச் செம்மைப் படுத்தினார்.

கருநாடகப் பிரதேசம் 1801-ல் கம்பெனியாரால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் முகம்மது அலியும் அவர் மகனும் வாக்குத் தவறி நடந்தனர் என்று குற்றஞ்சாட்டி வேறொருவருக்குப் பட்டங்கிடைக்கச் செய்தனர். புதிய நவாபு பெயரளவில் நவாபாகி விட்டதால் பிரிட்டிஷார் கைக்கு உண்மையான அதிகாரம் மாறிற்று. கருநாடகத்தைக் கைப்பற்றுவதற்குச் சிறிது காலம் முன்பே வண்மை மிக்க தஞ்சை இராச்சியம் ஆங்கிலேயர் கையிற் சிக்கிற்று. 1799-ல் தஞ்சை அரசை எய்திய சரபோஜி அரசர் இராச்சிய அதிகாரத்தைப் பிரிட்டிஷார் வசம் ஒப்புவித்துவிட்டுத் தஞ்சை நகரைமட்டும் தம் ஆட்சியின் கீழ் வைத்துக் கொள்வதென்று ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. இப்பிரதேசங்களை எல்லாம் கைப்பற்றிய பிறகு சென்னை இராசதானி ஒருவாறு அமைந்தது. திருநெல்வேலி, மதுரை ஜில்லாக்களில் இருந்த பாளையக்காரர்களை யடக்குவதற்குப் பிரிட்டிஷார் பன்முறை போர் தொடுக்கவேண்டிய தாயிற்று. 1801-ல் பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த கட்டபொம்ம நாயக்கரின் வீழ்ச்சியோடு அவர்களுடைய எதிர்ப்பும் ஒடுங்கிற்று.

1806-ல் வேலூரில் ஒரு சிப்பாய் கலகம் தோன்றிற்று; 1857-ல் தோன்றிய பெரிய இந்தியக் கிளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக இது அமைந்தது. சிப்பாய்களின் சமயவுணர்ச்சிகளைப் புண்படுத்தும் முறையில் ஏற்படுத்தப்பட்ட சில விதிகளின் காரணமாக இக்கலகம் உண்டாயிற்று.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுடைய ஆதிக்கத்தைக் குறைப்பதும், சட்டமன்றங்களை நிறுவுவதும், நிலவரித் திட்டங்களை நன்முறையில் அமைப்பதுமே ஆங்கிலேயர்களுடைய முக்கிய வேலையாக இருந்தது. சாலைகளை அமைத்தல், ஏரிகளை மராமத்துச் செய்தல், பஞ்ச நிவாரணம், கைத்தொழில் முன்னேற்றம் முதலிய வேலைகளை அவர்கள் கவனிக்கவில்லை. கவர்னரால் ஏற்படுத்தப்படும் விதிகளும் புதுமுறை நீதி நிருவாகமும் நடைமுறைக்கு வரலாயின. ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு நீதிபதி நியமிக்கப்பெற்றார் ; அந்நீதிபதியே போலீஸ் அதிகாரமும் பெற்றிருந்தார். அந்நீதிபதிகளை மேற்பார்க்க இராசதானிச் சட்டமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டது. வரி வசூல் விஷயங்களில் மக்களோடு நெருங்கிப் பழகும் நிலையில் இருப்பதால் கலெக்டருக்கு நீதி அதிகாரமும் இருக்கவேண்டும் என்று மன்ரோ கருதினார். 1814-ல் அவர் நிருவாகத்தில் மாறுதல்கள் செய்வதற்கெனத் தனிக் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 1816-ல் நீதி, போலீஸ் அதிகாரங்கள் கலெக்டருக்கு மாற்றப்பட்டன. சிறு வழக்குக்களை விசாரிக்க இந்திய முன் சீப்புகள் நியமிக்கப்பட்டனர். இந்திய நாட்டுத் தாபனங்களில் ஒன்றான பஞ்சாயத்தைக் கிராமங்களில் நிறுவவதில் மன்ரோ அக்கறை காட்டினார். நெசவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா இக்காலத்தில் இறக்குமதி செய்யத் தொடங்கியது. 1843-ல் இந்திய அரசாங்கச் சட்டப்படி இந்தியா முழுவதிலும் அடிமைநிலை அகற்றப்பட்டது. 1878-ல் தங்க நாணயமான வராகனை நீக்கி, வெள்ளி நாணயமான ரூபாயை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

1871-ல் மைசூர் அரசர் திவான் பூர்ணையாவை வேலையினின்றும் அகற்றிவிட்டுத் தாமே ஆட்சியை மேற்கொண்டார். அவர் ஆட்சி திருப்திகரமாயில்லை என்று அங்கிருந்த ரெசிடென்டு சென்னை அரசாங்கத்திற்கு எழுதினார். மைசூர் அரசருக்குப் பிரிட்டிஷ்காரர்கள் பன்முறை எடுத்துக்காட்டியும் அவருடைய ஆட்சி முன் போலவே இருந்துவந்தது. குடிமக்கள் அந்த ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். ஆயினும் 1831-ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் விரைவில் கலகத்தை அடக்கிவிட்டனர். 1799ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி பென்டிங்க் பிரபு மைசூர் ஆட்சியைக் கம்பெனியே எடுத்து நடத்துவதென ஏற்படுத்திவிட்டார். அதே சமயத்தில் மெர்க்காராவையும் ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர். குடகில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை விரும்பினர் என்று கூறிக்கொண்டு 1834-ல் குடகு முழுவதையும் சேர்த்துக்கொண்டனர். அக்காலத்தில் சில உள்ளூர்த் தகராறுகளைத் தவிர, திருவாங்கூரிலும் கொச்சியிலும் எவ்விதக் குழப்பமும் இல்லை.

1855-ல் கருநாடக நவாபு வார்சின்றி இறந்துபோன தால் நவாபு பதவியை டால்ஹௌசி யொழித்தார். அதே யாண்டில் தஞ்சை மன்னருடைய பதவியும் போயிற்று. 1857-58 இந்தியக் கிளர்ச்சிக் காலத்திலும் தென் இந்தியாவில் ஒருவித குழப்பமும் ஏற்படவில்லை.

சென்னைப் படையில் இருந்த சிப்பாய்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதுவரை சிப்பாய்கள் செய்துவந்த சில வேலைகளையெல்லாம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட போலீஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். 1859-1861-ல் ராபின்சன் என்பவர் போலீஸ் இலாகாவை வரிசைக்கிரம முறையில் அமைத்தார். காடுகளைக் காப்பாற்றும் வேலையும் அக்காலத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரியில் கொய்னாவும் மலையாளத்தில் தேக்குமரங்களும் ஏராளமாகக் கிடைத்தமையால் அக்காடுகள் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்தது. மேனாட்டுக் கல்விமுறையிலும் சென்னை வங்காளத்திற்குப் பின்வாங்கவில்லை. இராசதானிப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியர் முயற்சியால் தொடங்கப்பட்ட பல பள்ளிகளும் எழுந்தன. நாட்டு மொழிகளை அரசாங்கத்தார் முழுவதும் புறக்கணித்தனர் என்று கூற இயலாது. ஜில்லாக்கள் தோறும் நாட்டு மொழிப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது.

1876-1877-ல் தென்னிந்தியாவில் ஒரு பெரும்பஞ்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பஞ்சம் ஏறத்தாழத் தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. 1881-ல் ரிப்பன்பிரபு மைசூர் இராச்சியத்தைச் சுதேச மன்னராட்சியாகத் திரும்பவும் அமைத்தார். 1823-ல் சட்டமியற்றும் தனி அதிகாரத்தை இழந்த சென்னை இராச்சியம் 1861-ல் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றது. அக்காலத்தில் சென்னையில் உயர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி முதலிய ஆற்று அணைக்கட்டுக்களும் நீர்ப்பாசனங்களும் அரசாங்கத்தாரால் ஏற்றுச் செய்யப்பட்டன. பிற்காலத்துப் பைக்காரா, மேட்டூர் நீர் மின்சாரத் திட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. மற்ற மாகாணங்களைவிடச் சென்னையில் பொதுவாகக் கல்வி முன்னேற்றமும், சிறப்பாக மாதர் கல்வி முன்னேற்றமும் அதிகமாயிருந்தன.

1892, 1909, 1919, 1921 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷார் புகுத்திய அரசியல் மாறுதல்களின் விளைவாகச் சென்னை மாகாணச் சட்டசபைகள் அதிகப் படியான அதிகாரங்களைப் பெற்றன. சென்னையில் செய்தித்தாள்களின் வரலாறும் முன்னேற்றத்தையே குறிக்கின்றது. சென்ற ஒரு நூற்றாண்டாகவே அவை செய்துள்ள வேலைகளும், அவற்றின் முன்னேற்றமும் போற்றத் தக்கவை. முன்பும் லிட்டன் பிரபு காலத்தில் சுதேச மொழி அச்சகச் சட்டத்தை எதிர்த்தது சென்னை மாகாணம் ஒன்றுதான். சமூகச் சீர்திருத்தமும் சமயச் சீர்திருத்தமும் சென்ற நூற்றாண்டுத் தென்னிந்திய வரலாற்றில் காணப்படும். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் பிரமஞான சபையின் தலைமை அலுவலகம் நிறுவப் பெற்றது; அச்சபையின் தலைவராயிருந்த பெசன்ட் அம்மையார் தக்க முறையில் இந்திய முன்னேற்றத்திற்குத் தொண்டு புரிந்துள்ளார். இந்திய மொழியும் கலைகளும் முன்னேற்றம் அடைந்தன.

சென்னை மாகாணத்தைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சி என ஒரு கட்சி ஏற்படுத்திக் கொண்டு, 1920ஆம் ஆண்டுத் தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுச் சென்னை இராச்சியத்தின் ஆட்சியில் அமர்ந்தனர். 1921 ஆகஸ்டில் மலையாள நாட்டு ‘மாப்பிள்ளைகள்’ என்னும் முஸ்லிம் பிரிவினர் கலகம் செய்யத் தொடங்கிக் கொலை முதலியவற்றில் ஈடுபடலாயினர்.

இரண்டு உலக யுத்தங்களிலும் கலந்துகொண்ட சென்னைச் சிப்பாய்களின் போர்த்திறமையைப் பலரும் புகழ்ந்ததன் மூலம் சென்னைவாசிகள் போர்த்திறனற்ற வர்கள் என்னும் வசைச்சொல் நீங்கிற்று.

1920க்குப் பிறகு தென்னிந்திய வரலாறு பெரும்பாலும் இந்திய வரலாற்றின் பொது முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகவே அமைந்தது. சி. எஸ். ஸ்ரீ.

அரசியல் அமைப்பு

வடமேற்கு மாகாணத்திலிருந்து அஸ்ஸாம் வரையிலும், காச்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து கிடக்கும் இந்தியாவைப் பிரிட்டிஷார் ஆண்டு வந்தபோது, பிரிட்டிஷ் இந்தியா எனப்பட்ட மாகா-ணங்கள் பிரிட்டிஷாருடைய நேர் ஆட்சியிலும், சமஸ்தான இந்தியா என்னும் பல நூறு சமஸ்தானங்கள் பிரிட்டிஷாருக்கு அடங்கிய சுதேசமன்னர் ஆட்சியிலும் இருந்து வந்தன. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷார் இந்த நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்து, இரண்டையும் சுதந்திரமுள்ள ஆதிபத்திய வல்லரசுகளாகச் செய்தனர். கிழக்கு வங்காளம், மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புறம், பலூச்சிஸ் தானம் ஆகியவை பாகிஸ்தான்; ஏனைய பகுதி இந்தியா. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் முடியரசின் கீழ் உள்ள குடியேற்ற நாடுகளாயின. ஆயினும் அவை உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களைத் தங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

1947 முதல் 1949 டிசம்பர் வரை இந்தியாவின் எல்லைக்குள் அடங்கிய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்துகொண்டன. அதன்பின் பல சிறு சமஸ்தானங்கள் அடுத்துள்ள மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன. எஞ்சியுள்ளவற்றில் மூன்று தவிர ஏனையவை சில ஐக்கியங்களாகத் தொகுக்கப்பெற்றன. ஆகவே, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பழைய சமஸ்தானங்களில் இப்போது மூன்று தனி சமஸ்தான இராச்சியங்களாகவும், ஆறு ஐக்கியங்களாகவும் நிலைத்தவை தவிர, மற்றவை மாகாணங்களுடன் கலந்துவிட்டன.

மாகாணப் பிரதிநிதிகளும் சமஸ்தானப் பிரதிநிதிகளும் அடங்கிய அரசியல் நிருணய சபை ஏற்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தை 1949 நவம்பர் 26ஆம் நாள் நிறைவேற்றியது. அது 1950 ஜனவரி 26ஆம் நாள் அமலுக்கு வந்தது. இந்தியா ஒரு சம்பூரண அதிகார ஜனநாயகக் குடியரசு என்று இந்திய மக்கள் முடிவு செய்வதாக அச்சட்டத்தின் பீடிகை கூறுகிறது.

இந்தியா குடியரசானதால் இங்கிலாந்தரசர் இனிமேல் இந்தியாவின் அரசராக இருக்கமாட்டார். இந்தியா அவரைத் தலைவராகக் கொண்ட காமன் வெல்த்தின் உறுப்பாக இன்று இருந்துவருகிறது. நினைத்தபோது காமன்வெல்த்தை விட்டு விலக இந்தியாவுக்கு உரிமையுண்டு.

இந்தியக் குடியரசு வேறு யாருக்கும் அடங்கியதன்று. பூரண சுதந்திரமுடையது. அதனால் அது ஓர் ஆதிபத்திய வல்லரசாகும். அதன் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் நடை பெறுமாதலால் அது ஜனநாயக அரசாகும்.

இந்தியா அல்லது பாரதம் பல இராச்சியங்களின் (States) ஐக்கியமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அது இந்திய யூனியன் என்றும் வழங்கும். மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கமும் தனி அரசாங்கங்கள். ஓரளவுக்குக் கூட்டாட்சி அமைப்புப் போலவே இந்தியாவின் அரசியலமைப்புத் தோன்றுகிறது. இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே நிலையாகக் குடியிருப்போரும், பிற நாட்டில் பிறந்தாலும் இந்தியாவில் பிறந்த ஒருவரைப்பெற்றோரில் ஒருவராக உடையவராயும், இந்தியாவில் நிலையாகக் குடியிருப்பவராயும் உள்ளவரும், பிற நாட்டில் பிறந்திருந்தாலும் 1950 ஜனவரி 26ம் ஆம் நாளுக்கு முன் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராயும், இப்போது இந்தியாவில் நிலையாகக் குடியிருட்பவராயு முள்ளவரும் இந்திய யூனியன் குடிகள் ஆவர். மற்றவர்கள் குடியுரிமை பெறுவதற்குள்ள விதிகளும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இயற்றப்பெறும் சட்டங்கள் அனைத்தும் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு முரண்படாதவையா யிருக்கவேண்டும். அதிலும் முக்கியமாக அடிப்படை உரிமைகளுக்கு முரண்படக்கூடாது; எந்த அளவுக்கு முரண்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவை பயனற்றவையாகும்.

இந்திய அரசாங்கங்கள் நாட்டை ஆளும்போது கவனித்து அமலுக்குக் கொணர வேண்டிய இலட்சியங்கள் சில அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அத்தியாய மாகக் காணப்படுகின்றன. அரசாங்கம் இவைகளைக் கவனியாது நடந்தால், அதனால் பாதிக்கப்படுவோர் நீதி மன்றம் சென்று பரிகாரம் பெற முடியாதெனினும், அரசாங்கங்களுக்கு இவை சமூகப் பொருளாதாரத் துறைகளில் சிறந்த வழிகாட்டியாக உதவும்.

இந்திய ஐக்கியத்தின் நிருவாகத் தலைவர் ராஷ்டிரபதி எனப்படுவர். அவர் பார்லிமென்டின் உறுப்பினரும், இராச்சிய சட்டசபை உறுப்பினரும் தேர்ந்தெடுத்த வாக்காளர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை தேர்ந்தெடுக்கப்படலாம். தேர்ந்தெடுத்தபின் ஐந்து ஆண்டுகள் பதவிவகிப்பார். அவர் அரசியலமைப்புக்கு விரோதமாக நடந்ததாகப் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டப்பட்டு, அக்குற்றச்சாட்டு ருஜுவானால் அவர் பதவியைவிட்டு விலகக் கடவர். அவர் தாமாக ராஜிநாமா செய்யலாம்.

பார்லிமென்டின் உறுப்பினர்கள் உபராஷ்டிரபதியைத் தேர்ந்தெடுப்பர். அவரும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர். அவர் விலக வேண்டும் என்று பார்லிமென்டு தீர்மானித்தால் அவர் விலகுவார். ராஷ்டிரபதி தாற்காலிகமாக அயல்நாடு சென்றபோதும், ராஷ்டிரபதி தேர்ந்தெடுக்கப்பெறும் வரையும் உபராஷ்டிரபதி ராஷ்டிரபதியின் கடமைகளைச் செய்வார். உபராஷ்டிரபதியே பார்லிமென்டின் மேல்சபைக்குத் தலைவராவர்.

ராஷ்டிரபதி தம்முடைய பிரதம மந்திரியையும் அவருடைய கருத்துப்படி பிற மந்திரிகளையும் நியமிப்பார். மந்திரிகள் அனைவரும் கூட்டாகப் பார்லிமென்டுக்குப் பொறுப்புடையவர். ராஷ்டிரபதி மந்திரிகளின் கருத்துப்படி நடப்பர். மந்திரிகளுடைய கருத்துப் பிடிக்காவிடினும், அவர்கள் நடவடிக்கை அதிருப்தி தரினும், அவர்களை ராஜிநாமா செய்யுமாறு பணிக்க ராஷ்டிரபதிக்கு அதிகாரம் உண்டு.

மத்தியச் சட்டத் தாபனம் பார்லிமென்டு என்று வழங்கும். அது இராச்சியங்களின் சபை, மக்கள் சபை என்ற இரு சபைகள் கொண்டதாகும். இராச்சியங்களது சபையின் உறுப்பினர் 250க்குக் குறையாத தொகையினராவர். அவர்களுள் இலக்கியம், விஞ்ஞானம், கலை, பொதுமக்களுக்குத் தொண்டு செய்தல் ஆகியவற்றில் தனித் திறமை அல்லது பயிற்சியுடைய பன்னிருவர் ராஷ்டிரபதியால் நியமிக்கப் பெறுவர். ஒவ்வொரு இராச்சியத்திலிருந்தும் மேல்சபைக்குச் செல்லவேண்டிய உறுப்பினர் தொகை அதன் மக்கள் தொகையைப் பொறுத்ததாகும். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியார் இரண்டாண்டுகட்கு ஒருமுறை தங்கள் பதவியினின்றும் விலகுவர். இச்சபை ராஷ்டிரபதியால் கலைக்கப்பட மாட்டாது.

மக்கள் சபை உறுப்பினர் ஐந்தாண்டு பதவியில் இருப்பர். இச்சபையில் 500க்கு மேற்படாத உறுப்பினர் இருப்பர். இவர்களும் மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பெறுவர். வயது வந்தவர்கள் அனைவரும் வாக்காளர் ஆவர். இச்சபையின் உறுப்பினர்கள் தங்கள் சபாநாயகரையும் உபசபாநாயகரையும் தேர்வர். உபசபாநாயகர் சபாநாயகர் வராத போதும், சபாநாயகர் பதவி காலியாயிருக்கும்போதும் சபாநாயகர் கடமைகளைச் செய்வர். இச்சபையை ராஷ்டிரபதி கலைக்கவும், அது கூடும் காலத்தை ஒத்திப்போடவும் செய்யலாம்.

பண மசோதா தவிர மற்ற மசோதாக்கள் இரண்டு சபைகளுள் எதிலும் தொடங்கலாம். ஆனால் இரண்டு சபைகளும் ஏற்றுக்கொண்டு ராஷ்டிரபதியின் இசைவு பெற்றால் தான் சட்டமாகும். ஆயினும் ராஷ்டிரபதி இசைவு மறுக்கமாட்டார் என்பதே கருத்து. இரண்டு சபைகளுக்குள் கருத்து வேறுபாடு தோன்றினால் ராஷ்டிரபதி இரண்டு சபைகளையும் ஒன்றாகக் கூட்டுவிப்பார். பெரும்பான்மையோர் மசோதாவின் கதியை முடிவு செய்வர். பண மசோதா மக்கள் சபையிலேயே தொடங்கும். மேல்சபை திருத்தங்கள் கூறலாம். ஆனால் மக்கள் சபை அவைகளை ஒதுக்கிவிட்டு மசோதாவை நிறைவேற்றலாம்.

இந்திய யூனியனின் தலையாய நீதி அமைப்பு உச்ச நீதிமன்றம். இது எல்லா நீதிமன்றங்களுக்கும் மேலாகவுள்ள அப்பீல் மன்றமாகும். அதன் நீதிபதிகளை ராஷ்டிரபதி நியமிப்பர். அறுபத்தைந்து வயதானதும் அவர்கள் பதவி விட்டு விலகுவர். திறமையில்லை என்றோ, தவறாக நடந்தார் என்றோ நிரூபிக்கப்பட்ட காரணத்தைக் காட்டி, ஒரு நீதிபதியை நீக்கவேண்டும் என்று பார்லிமென்டு சபைகள் இரண்டும் ராஷ்டிரபதியை வேண்டிக் கொண்டால் ராஷ்டிரபதி அவரை நீக்கலாம். வேறுவிதமாக நீக்க முடியாது. தேவை ஏற்பட்டால் விலகிய நீதிபதிகளை மறுபடியும் பதவி ஏற்குமாறு கேட்கலாம். இம்மன்றம் கிரிமினல் அப்பீல் மன்றமாகவும், சிவில், அசல் அப்பீல் மன்றமாகவும் இருக்கிறது. ஆதார உரிமைகள் சம்பந்தமான வழக்குக்களுக்கும், இராச்சியங்களிடையே எழும் வழக்குக்களுக்கும், இராச்சியத்துக்கும் யூனியனுக்குமிடையே நிகழும் வழக்குக்களுக்கும் அசல் மன்றமாகவும் உள்ளது. நாட்டிலுள்ள எல்லாவகை நீதிமன்றங்களையும் கண்காணிக்கும் உரிமை இதற்கு உண்டு. சட்டப் பிரச்சினைகளைப் பற்றி இம்மன்றத்தினிடம் யோசனை கேட்கும் உரிமை ராஷ்டிரபதிக்கு உண்டு. இது 1949க்குப்பின் பிரிவி கவுன்சில் தானத்திலுள்ள அப்பீல் கோர்ட்டாகும்.

முன் பிரிட்டிஷ் இந்தியாவில் மாகாணமாயிருந்த ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ராஷ்டிரபதியால் ஐந்து ஆண்டுக்காலத்துக்கு நியமிக்கப்பட்ட கவர்னர் உண்டு. இவர் இராச்சியச் சட்ட அமைப்புக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையின் கருத்துப்படி நடப்பர். முன் சுதேச, சமஸ்தானமாயிருந்த ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ராஷ்டிரபதியின் அங்கீகாரம்பெற்ற ராஜப்பிரமுகர் உள்ளார். இவரும் சட்டசபைக்குப் பொறுப்புள்ள மந்திரிசபையின் கருத்துப்படியே நடக்கக் கடவர்.

சில இராச்சியங்களில் அசெம்பிளி என்ற சட்டசபையும், சில இராச்சியங்களில் அசெம்பிளியுடன் கவுன்சில் என்ற மேல் சபையும் காணப்படும். வயது வந்த வாக்காளர்கள் நேரடித்தேர்தல் மூலம் அசெம்பிளிக்கு 500க்கு அதிகப்படாமலும் 60க்குக் குறையாமலும் உறுப்பினர்களைத் தேர்வர். கவுன்சில் உறுப்பினர் தொகை அசெம்பிளி தொகையின் நாலில் ஒரு பங்குக்கு அதிகமாகாமலும் நாற்பதுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். அசெம்பிளி ஐந்துவருடமிருக்கும். கவுன்சில் இராச்சிய சபைபோல் இருந்துகொண்டே இருக்கும். மூன்றில் ஒருபகுதி உறுப்பினர் இரண்டாண்டுக்கு ஒரு முறை பதவியினின்றும் விலகுவார்கள். அசெம்பிளி உறுப்பினர்கள் சபாநாயகரையும் உபசபாநாயகரையும் தேர்ந்தெடுப்பார்கள். அதுபோல் கவுன்சில் உறுப்பினர்கள் தலைவரையும் உப தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். இரண்டு சபைகளும் நிறைவேற்றிய மசோதா கவர்னரிடம் அவருடைய இசைவுக்காக அனுப்பப்பெறும். அவர் இசைவார்; அல்லது இசைவு தரவில்லை என்பார்; அல்லது ராஷ்டிரபதியின் கருத்தறிய அனுப்புவார். கவர்னர் இசைவு தராவிடினும் சட்டசபை மறுபடியும் அம்மசோதாவை நிறைவேற்றினால் அது சட்டமாகி விடும். ஆனால் இராச்சிய சட்டசபை விவாதிக்கும் எந்த மசோதாவிற்கும் இசைவு மறுக்கும் உரிமை ராஷ்டிரபதிக்கு உண்டு. இரு சபைகளுக்குள் கருத்து வேற்றுமை தோன்றின், அசெம்பிளி மசோதாவை இரண்டாம் முறை நிறைவேற்றினால் அது சட்டமாகிவிடும். ராஜப்பிரமுகர் உள்ள இராச்சியங்களிலும் இதுபோலவே நடைபெறும்.

ஒவ்வோர் இராச்சியத்திலும் பிரதம நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் கொண்ட உயர் நீதிமன்றம் இருக்கும். நீதிபதிகளை ராஷ்டிரபதி நியமிப்பார். இவர்கள் அறுபது வயதுவரை வேலை பார்ப்பர், பார்லிமென்டின் இரண்டு சட்டசபைகளும் வேண்டும் பொழுது, ராஷ்டிரபதி நீதிபதியை நீக்கலாம். வேறுவிதமாக நீக்க முடியாது. நீதிபதி விலகியபின் இந்திய யூனியன் எல்லைக்குள் வழக்கறிஞராக இருக்க முடியாது. பிரதம நீதிபதி, ராஷ்டிரபதியின் இசைவு பெற்று, விலகிய நீதிபதி எவரையும் மறுபடியும் நீதிபதியாக வேலைபார்க்குமாறு அவர் இசைந்தால் வேண்டிக்கொள்ளலாம். உரிமைக் கட்டளைகளைப் பிறப்பிக்கவும், இராச்சியத்திலுள்ள சகல நீதி அமைப்புக்களையும் கண்காணிக்கவும், உயர் நீதி மன்றத்துக்கு அதிகாரம் உண்டு.

பார்லிமென்டு இயற்றும் சட்டங்கள் சம்பந்தமான விஷயங்களை யூனியன் நிருவாகமும், இராச்சியச் சட்ட சபைகள் இயற்றும் சட்டங்கள் சம்பந்தமான விஷயங்களை இராச்சிய நிருவாகமும் நிருவகிக்கும். சட்டம் இயற்றும் விஷயங்கள் அனைத்தும் (1) ஐக்கிய சட்ட சபை இயற்ற அதிகாரம் பெற்றவை, (2) இராச்சிய சட்டசபை இயற்ற அதிகாரம் பெற்றவை, (3) இரண்டு வித சட்டசபைகளும் இயற்ற அதிகாரம் பெற்றவை என்று மூன்று வகையினவாகும். ஆயினும் (1) அவசர நிலைமை உண்டாயபோதும், (2) இராச்சியங்களின் கவுசின்சில் மூன்றில் இரு பங்கு தொகை உறுப்பினரால் அவசியம் என்று தீர்மானிக்கும் போதும், (3) சட்டத்தின் முதல் தபசிலின் ஏ, பீ பிரிவுகளில் சேர்க்கப் படாத நிலப்பகுதிகள் சம்பந்தமாயும் இராச்சிய சட்ட சபை மட்டும் அதிகாரம் பெற்ற விஷயங்கள் பற்றிச் சட்டங்கள் இயற்ற அதிகாரம் உடையதாகும். பார்லி மென்டுச் சட்டமும் இராச்சியச் சட்டமும் முரணானால், பார்லிமென்டுச் சட்டமே அமலாகும். ஆனால் ராஷ்டிரபதி இசைவுடன், இரு சபைக்கும் அதிகாரமுள்ள விஷயங்கள் பற்றி இராச்சிய சட்டசபை சட்டமியற்றின், அது பார்லிமென்டுச் சட்டத்தை நீக்கி அமலாகும். இந்த மூன்றுவித விஷயங்களும் தவிர ஏனைய விஷயங்களைப் பற்றிச் சட்டம் இயற்றப் பார்லி மென்டுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் விதிகள் : இந்திய யூனியனை விட்டுப் பிரிய எந்த இராச்சியத்துக்கும் உரிமை கிடையாது. இந்தியர் ஒவ்வொருவரும் யூனியனுக்கே குடியாவர். யூனியனுக்கும் இராச்சியத்துக்கும் குடியாக மாட்டார். ஒவ்வொரு குடியும் அடிப்படை உரிமைகள் பெறுவார். இந்த உரிமைகளைப் பாதுகாத்துக் கொடுக்கும் பொறுப்பு உச்ச நீதிமன்றத்தினுடையதாகும். அரசியலின் நோக்கங்கள் எனப்படுபவை கோர்ட்டு மூலம் பெறக்கூடிய உரிமைகள் அல்ல. அரசாங்கம் நினைவில் வைத்துக் காரியங்கள் செய்வதற்காக வேண்டிய குறிப்புக்களாகும். இந்திய ஐக்கியத்தின் அரசாங்க மொழி, தேவநாகரி லிபியில் எழுதும் இந்தியாகும். ஆனால் ஆங்கில மொழி 1950 ஜனவரி 26 லிருந்து 15ஆண்டுகள் அரசியல் மொழியாக இருந்து வரும். இராச்சியச் சட்டசபை இராச்சியத்தில் இப்போது பயன்பட்டுவரும் ஏதேனும் ஒரு மொழியையோ, பல மொழிகளையோ, இந்தியையோ அரசாங்க மொழியாக ஆக்கலாம். அவ்வாறு செய்யும்வரை ஆங்கில மொழி அரசாங்க மொழியாக இருந்துவரும். சர்வதேச எண்கள் அரசாங்க எண்களாக ஆகும்.

இந்த அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், திருத்த மசோதா பார்லிமென்டு சபைகளுள் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப்பட்டு, பிறகு ஒவ்வொரு சபையிலும் சபையின் மொத்த உறுப்பினர்களுள் பெரும்பான்மையோராலும், அன்று வந்து வாக்களிக்கும் உறுப்பினருள் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத தொகையினராலும் நிறைவேற்றப்பட வேண்டும். ராஷ்டிரபதி தேர்தல் முறை, யூனியனின் நிருவாக அமைப்பு, இராச்சியங்களின் நிருவாக அமைப்பு, ஈ இராச்சியங்களுக்கான உயர்நீதி மன்றங்கள், யூனியன் நீதி மன்றங்கள், இராச்சிய நீதி மன்றங்கள், சட்ட நிரூபண உறவுகள், ஏழாவது தப்சீலில் கண்ட பட்டிகள், பார்லிமென்டில் இராச்சியங்களின் பிரதிநிதித்துவம், அரசியலமைப்புத் திருத்தமுறை ஆகிய விஷயங்களில் எதைப்பற்றி ஒரு திருத்தம் ஏற்படுத்த வேண்டுமாயினும், முதல் தப்சீலில் கண்ட ஏ, பீ இராச்சியங்களில் பாதிக்குக் குறையாத சட்டசபைகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். அரசியலமைப்பிலுள்ள ஷரத்துக்கள் திருத்தப்படவேண்டுமாயின், இறுதியாக ராஷ்டிரபதி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயினும் ராஷ்டிரபதி மறுக்காமல் ஏற்றுக் கொள்வார் என்பதே கொள்கை.

நூல் : இந்திய அரசியல் அமைப்பு - சென்னை அரசாங்க வெளியீடு.


கல்வி

இந்தியாவில் பண்டைக்காலத்தில் பாடசாலைகளும், ஆச்சிரமங்களும், மடாலயங்களும், தொழிற்பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் ஏராளமாக இருந்து கல்வியை வளர்த்து வந்தன. தட்சசீலம், நாலந்தா, காஞ்சி, மதுரை, விக்கிரமசீலம், நவத்வீபம், காசி முதலிய இடங்களிலிருந்த பண்டைய பல்கலைக்கழகங்கள் இலக் கியத்துறையிலும் விஞ்ஞானத்துறையிலும் பெரிய ஆராய்ச்சி நிலையங்களாகவும் இருந்தன. சில நகரங்கள் குறிப்பிட்ட துறையில் சிறப்படைந்திருந்தன. எடுத்துக் காட்டாகத் தஞ்சாவூர் இலக்கியம், கலை, விஞ்ஞானம் என்பவற்றிலும், கல்யாண் சட்டத்திலும், வானவியலிலும், பைத்தான் சட்டத்திலும், விஞ்ஞானத்திலும் பெயர்பெற்றிருந்தன. சிறந்த அயல்நாட்டுப் புலவர்களும் கவிஞர்களும், கல்யாண், நாலந்தாக் கழகங்களுக்கு வந்துபோயினர்.

முஸ்லிம்கள் ஆண்ட காலங்களில் நாடெங்கும் மக்தாப் என்ற பாடசாலைகளும், டெல்லி, லாகூர், ராம்பூர், இலட்சுமணபுரி, அலகாபாத், ஜான்புரி, அஜ்மீர், பீடார் என்ற ஊர்களில் மதராசா என்னும் கல்லூரிகளும் ஏற்பட்டன. இக்கல்லூரிகளில் இலக்கணம், தருக்கம், சட்டம், இயற்கையியல், தத்துவ சாஸ்திரம், உடலியல், வடிவ கணிதம், வானவியல் ஆகியவற்றில் சிறப்பான ஆராய்ச்சிகள் நடந்தன.

19ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பிரிட்டிஷார் ஆங்கிலமொழி மூலமாகக் கல்வி போதிக்கத் தொடங்கினர். அவர்களுடைய தலையாய நோக்கம் அரசாங்க நிருவாகத்துக்கு வேண்டிய குறைந்த சம்பள அலுவலாளர்களைத் தயாரிப்பதேயாகும். அதனால் தொழிற் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சியும் அருமையாகவே இருந்தன. ஆரம்பக்கல்வி நன்கு கவனிக்கப்படவில்லை. பிரிட்டிஷார் ஆண்டகாலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் தொகை 15% ஆகவே இருந்தது. ஆயினும் மேனாட்டுக் கல்வியானது இந்திய மக்களிடத்தில் சுதந்திரதாகத்தை எழுப்பியது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அரசாங்கத்தின் கல்விக்கொள்கை நான்கு குறிக்கோள்களை உடையதாயிருக்கிறது. அவையாவன : 1. பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவச ஆரம்ப ஆதாரக்கல்வி அளித்தல். 2. வயதுவந்தவர்க்குக் கல்வியறிவும், விவசாயம், கிராமக் கைத்தொழில்கள், குடியுரிமை முதலிய விஷயங்களைப்பற்றிய அறிவும் தருதல். 3. தொழில் நுட்பக்கல்வியை வளர்த்துப் பெருக்குதல். 4. பல்கலைக்கழகக் கல்வியைச் சீர்திருத்தி அமைத்தல்.

மத்தியக் கல்வி மந்திரி நிலையமானது இராச்சிய அரசாங்கங்களுடன் கலந்துகொண்டு நாடெங்கும் கட்டாய இலவச ஆதாரக்கல்வியைப் பரப்பும் 16 ஆண்டுத் திட்டத்தையும், 45 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்க்குச் சமூகக் கல்வி தரும் பத்தாண்டுத் திட்டத்தையும் வகுத்து, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரத் தொடங்கி யுள்ளது.

நடுத்தரக் கல்வியைச் சீர்திருத்தி அமைப்பதற்கான யோசனைகளைக் கூறுமாறு ஒரு கமிஷனை அரசாங்கத்தார் அமைத்தனர். அக்கமிஷன் கூறிய யோசனைகளை அரசாங்கத்தார் ஆராய்ந்து வருகிறார்கள், ஆசிரியர்கள் பயிற்சிக்கான முயற்சிகளையும் மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ளன. டெல்லியிலுள்ள கல்வி மத்திய நிலையம் கல்விப் பிரச்சினை களைப்பற்றி ஆராய்ச்சி செய்கின்றது. சாந்திநிகேதனத்திலுள்ள வினயபவனம் கலைகள் மூலமாக ஆதாரக் கல்வி அளிப்பதுபற்றிப் புதிய முறை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் விஞ்ஞானக் கல்வியையும் தொழில் நுட்பக் கல்வியையும் வளர்ப்பதற்கான காரியங்களையும் செய்து வருகிறது. பல விஞ்ஞானிகளும் தொழில் நிபுணர்களும் பயிற்சி பெறுவதற்காக அயல் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாட்டில் பன்னிரண்டு விஞ் ஞான ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆராய்ச்சி செய்ய ஆவலுள்ள திறமையான மாண வர்க்கு உபகாரநிதி அளிக்கப்படுகிறது.

அரசாங்கம் 1948-ல் பல்கலைக்கழகக் கல்விக் கமிஷனை நியமித்தது. அதன் யோசனைகளில் முக்கியமானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி, அலிகார், காசி ஆகிய பல்கலைக் கழகங்கள் விஷயமாகச் சொன்ன யோசனைகளை நிறைவேற்றச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அக்கமிஷன் கூறியபடி ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விசுவபாரதி ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக பல கழகங்கள் ஏற்பட்டு வருகின்றன. மிகச் சிறந்த இசைவலாளர்களுக்கு ராஷ்டிரபதி பரிசுகள் வழங்குகின்றனர். தமது கலையை வளர்ப்பதற்காகச் சிறந்த கலைஞர்களுக்கு உதவி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

பிறநாட்டுக் கல்வி நிலையங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களும் இடப்பட்டிருக்கின்றன. இந்த நோக்கத்துடன் 1949-ல் பண்பாட்டுத் தொடர்பு இந்தியக் கவுன்சில் டெல்லியில் அமைக்கப்பெற்றுள்ளது. ஈரான் தலைநகரான டெகரானில் சமஸ்கிருதத் துறையை இந்திய அரசாங்கத்தார் அமைத்துளர். இந்தியப் பண்பாடு, வரலாறு, சமஸ் கிருத இலக்கியம் இவை பற்றிய நூல்களை ஆப்கானிஸ்தானம், பர்மா, இந்தோனீசியா, ஜப்பான், பாரசீகம், துருக்கி ஆகிய நாடுகளிலுள்ள குறிப்பிட்ட நூல்நிலையங்களுக்கு அரசாங்கத்தார் வழங்கியுளர். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்று பழகும் மாணவர்கள் நூறு பேருக்கு உதவி அளிக்கப்படுகிறது. டாஸ்மேனியா, சான்சிபார், மலேயா போன்ற நாடுகளுக்கு ஆசிரியர்கள் அனுப்பப்பெற்றுளர்.

இந்தியக் கலைப்பொருள்களை ஒன்று சேர்த்துவைத்துத் தேசியப் பொருட்காட்சிச்சாலை அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளது. சிறந்த கலைப்பொருள்களை வெளி நாடுகளுக்கு அனுப்புவதைத் தடுக்கச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. தற்கால இந்தியக் கலைக்காட்சிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள பல அறிஞர்களைக் கொண்டு கீழ்நாட்டு மேனாட்டுத் தத்துவசாஸ்திர வரலாறு எழுதி, இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளனர்.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்திய ஆண்டில் கல்விக்காகச் செலவான பணம் 20.5 கோடி ரூபாய். ஆனால், 1951-52-ல் அது 47 கோடியாகும். 1948-49-ல் இருந்த பாடசாலைகள் ஆண்களுக்கு 1,69,843; பெண்களுக்கு 13,979; கல்லூரிகள் ஆண்களுக்கு 472. பெண்களுக்கு 65. இந்தியா முழுவதிலும் பாடசாலைகளிலும் கல்லூரிகளிலும் படிக்கும் மாணவர் தொகை ஆண்கள் 1,29,60,532. பெண்கள் 41,32,400. இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் 30-ல் பம்பாயிலுள்ள எஸ். என். டீ. டி. பெண்கள் பல்கலைக்கழகம் பெண்களுக்கு மட்டுமே ஏற்பட்டது.

இதுவரை குருடர்களுக்கும் செவிடர்களுக்கும் அரசாங்கம் பாடசாலைகள் நடத்தவில்லை. இப்போது இந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, குருடர்களுக்காக பிரேல் (Braille) அச்சகம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதனுடன் இக்கல்விக்கு வேண்டிய ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகப் பயிற்சி நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.


பொதுச் சுகாதாரம்

பொதுச் சுகாதாரமும் மருத்துவமும் இராச்சியங்களின் பரிபாலனத்தில் சேர்ந்தவை. ஆயினும் இவை பற்றி இராச்சியங்கள் மேற்கொள்ளும் பணியை இணைக்கும் முக்கியமான வேலையை மத்திய அரசாங்கம் செய்கின்றது. இராச்சியங்களில் மருத்துவம், பல் வைத்தியம், தாதி வேலை, மருந்து உற்பத்தி ஆகியவை வளர்வதற்கு வேண்டிய உதவியும் புரிகின்றது. மத்திய அரசாங்கமே சர்வதேச உடல் நல உறவுகளையும், துறைமுகங்களில் “பிரித்து வைக்கும் சாலை”களையும் கவனித்துக்கொள்கிறது.

மத்திய அரசாங்கம் நடத்தும் உடல் நல நிலையங்ககளுள் முக்கியமானவை கல்கத்தாவிலுள்ள பொதுச் சுகாதார அகில இந்திய நிலையம், டெல்லியிலுள்ள மலேரியா நிலையம், கசாலியிலுள்ள மத்திய ஆராய்ச்சி நிலையம், மத்திய மருந்துச்சரக்கு ஆய்வுக்களம் என்பன. கல்கத்தாவிலுள்ள - அகில இந்திய நிலையமே தென் கிழக்கு ஆசியா முழுவதுக்கும் உள்ள ஒரே நிலையம். இது பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வேண்டிய உத்தியோகஸ்தர்களுக்குப் பயிற்சி அளிக்கின்றது.

இராச்சியங்களில் சிற்றூர்ப் பகுதிகளிலுள்ள மக்களுடைய உடல் நலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு, இராச்சிய அரசாங்கம், சிற்றூர்களில் தங்கி இலவசமாகச் சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு உதவிநிதி அளிக்கின்றது. மருத்துவ வண்டிகளும் அடிக்கடி சிற்றூர்களுக்குப் போய் வருகின்றன. சிற்றூர்க் கூட்டுறவுச் சங்கங்களும் தம் உறுப்பினர்க்கு மருத்துவ உதவி அளித்து வருகின்றன. மருத்துவர், தாதிகள் தொகையைப் பெருக்குவதற்காக மருத்துவப் பாடசாலைகளை எல்லாம் மருத்துவக் கல்லூரிகளாக ஆக்கியுள்ளனர். டெல்லிப் பல்கலைக்கழகம் க்ஷயநோய் டிப்ளமோக்கல்வி அளித்து வருகிறது. அதனுடன் அது மருத்துவத் தாதி பீ. எஸ். ஸீ. (ஆனர்ஸ்) பட்டக்கல்வியும் அளிக்கின்றது. டெல்லியிலுள்ள லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி ஒன்றே இந்தியாவில் மாணவிகளுக்கு மட்டுமே கல்வியளிப்பதாகும்.

மத்திய அரசாங்கம் பம்பாயில் புற்றுநோய் ஆராய்ச்சி நிலையம் நிறுவுவதற்காக டாட்டா நினைவு மருத்துவச்சாலையார்க்கு உதவிநிதி அளித்துள்ளது. அதுபோல் நாட்டின் பல விடங்களிலும் நடைபெறும் பல்வேறு ஆராய்ச்சி நிலையங்கட்கும் உதவி அளித்து வருகின்றது. சர்வதேச உடல்நல ஸ்தாபனங்கள் மலேரியா, க்ஷயம், மேக நோய் ஆகியவற்றை ஒழிப்பதற்காக உதவி செய்து வருகின்றது. அன்னிய நாட்டு நிபுணர்கள் வந்து இங்குள்ளவர்க்குப் பயிற்சி அளித்து விட்டுச் சென்றனர்.

இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 25 இலட்சம் பேர் க்ஷயநோயால் பீடிக்கப்படுகின்றனர். 5 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதைத் தடுக்கும் பொருட்டுச் சர்வதேச ஸ்தாபனத்தின் உதவி கொண்டு பீ. சீ. ஜீ. ஊசி குத்துதல் 1948-ல் தொடங்கப்பட்டது. சென்னைக்கு அருகிலுள்ள கிண்டியிலுள்ள ஆராய்ச்சி நிலையம் பீ. சீ. ஜீ. மருந்தைத் தயாரித்து வருகின்றது. இங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இந்த மருந்து அனுப்பப்படுகிறது. 1952 இறுதிவரையில் 78 இலட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுளர். 25 இலட்சம் பேர் ஊசி குத்திக்கொண்டனர். க்ஷயத்தைக் கட்டுப்படுத்தும் வழிகளைக் கற்றுக்கொடுப்பதற்காகப் புதுடெல்லியிலும், பாடலிபுத்திரத்திலும், திருவனந்த புரத்திலும் க்ஷயநோய் நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன. புனாவில் பெனிசிலின் மருந்தும், டெல்லியில் டீடீடி மருந்தும் உற்பத்தி செய்யச் சாலைகள் நிறுவப் பெற்றுள்ளன. குடும்பத்திட்டம் என்னும் பொருள் பற்றி ஆராய்வதற்காகவும் ஏற்பாடாகியிருக்கிறது. கருப்பம் உண்டாகாத பருவம் என்பது பற்றி ஆராய்வதற்காக மூன்று தொடக்க நிலையங்கள் நிறுவப்பெற்றுள்ளன.

இந்தியாவில் போதுமான மருத்துவச்சாலைகள் இல்லை. 1949-ல் நகர மக்கள் 24 ஆயிரம் பேர்க்கு ஒன்று வீதமும், சிற்றூர் மக்கள் 50 ஆயிரம் பேர்க்கு ஒன்று வீதமும் இருந்தன. இங்கிலாந்தில் ஆயிரம் பேர்க்கு ஒரு மருத்துவர் வீதமும், இந்தியாவில் ஆறாயிரம் பேர்க்கு ஒரு மருத்துவர் வீதமும் உள்ளனர்.

ஐந்தாண்டுத் திட்டமானது மருத்துவச்சாலைகளையும் அங்குள்ள வசதிகளையும் பெருக்குவதற்கு வழி செய்துளது:

1950 1951 1955 1956
நிலையங்கள் படுக்கைகள் நிலையங்கள் படுக்கைகள்
உடல்நல நிலையங்கள் 37 4161 46 5656
மருத்துவச் சாலைகள் 48 3077 50 4814
மருத்துவச் சோதனைச் சாலைகள் 127 2323 180 2652
பீ. சீ. ஜீக் குழு 73
137

மலேரியாவால் ஆண்டுதோறும் 10 கோடி மக்கள் துன்புறுகின்றனர். 20 இலட்சம் பேர் இறக்கின்றனர். இதை நீக்கும் பொருட்டு இந்திய அரசாங்கம் மூன்றரை ஆண்டுகளில் 15 கோடி ரூபாய் செலவு செய்து, வேண்டுவன செய்யத் திட்டம் செய்துள்ளது.

குஷ்டநோயால் வருந்துவோர் தொகை சுமார் பத்து இலட்சமாகும். இந் நோய் மிகுந்துள்ள இராச்சியங்கள் அஸ்ஸாம், பீகார், ஐதராபாத், சென்னை, ஒரிஸ்ஸா, ஆந்திரா, திருவிதாங்கூர் கொச்சி, மேற்கு வங்காளம். இந் நோய் பற்றிய ஆராய்ச்சி கல்கத்தாவிலுள்ள வெப்ப வலய மருத்துவ நிலையத்தில் நடைபெறுகிறது.

மேகநோய் நகரங்களிலேயே மிகுதி. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலுள்ள மக்களுள் 6.7% பீடிக்கப்பட்டுளர். காச்மீரத்திலிருந்து அஸ்ஸாம் வரையுள்ள குன்றுப்பகுதிகளிலும் மிகுதியாகப் பரவியுள்ளது. இந்திய அரசாங்கம் இதைத் தடுப்பதற்கு வேண்டிய மருந்து உற்பத்தி செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

நிதியாதாரம்

இந்தியாவின் அரசியல் கூட்டாட்சி முறையில் அமைவதால், அதன் நிதியும் கூட்டு முறையிலேயே அமைகின்றது. மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் தங்கள் கடமைகளைப் பிரித்து வகுத்திருப்பது போலவே, தங்கள் வருவாய் இனங்களையும் பிரித்துக் கொண்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தின் வருமானம், சென்ற சில ஆண்டுகளில் இருந்த நிலை வருமாறு:

ஆண்டு கோடி ரூபாய்
1938-39 73.90
1948-49 319.94
1949-50 311.54
1950-51 357.00
1951-52 459.99
1952-53 (திருத்திய மதிப்பு) 372.29
1953-54 (வரவு செலவுத் திட்ட மதிப்பு) 370.44

1953-54 வரவு செலவுத் திட்ட மதிப்பின்படி வருமான இனங்கள் வருமாறு :

வருமான இனம் கோடி ரூபாய்
1. சுங்கம் 170.00
2. யூனியன் கலால் வரி 94.00
3. கார்ப்பொரேஷன் வரி 36.62
4. வருமான வரி (மத்திய அரசாங்கத்தின் பங்கு) 68.48
5. நாணயம் (ரிசர்வ் பாங்கு இலாபம் உட்பட) 459.99
6. ரெயில்வே தரும் உதவி 7.65
1953-54 துறைமுகங்கள், தந்தி இலாகா 0.40

சுங்க வருமானம் 1951-52-ல் 31.69 கோடியாக உச்சநிலை அடைந்து பின்னர் இறங்கிற்று. இவ்வருமானத்தில் பெரும்பகுதி இறக்குமதியாகும் பலவகைப் பொருள்களுக்கு விதிக்கப்படும் வரியாகும். அப் பொருள்களுள் ஆடம்பரப் பொருள்களின் வரி விகிதம், மற்றப் பொருள்களின் வரி விகிதத்தைவிடக் கூடியதாகும். ஏற்றுமதி வரி கச்சாப்பொருள்களுக்கும் விவசாயப் பொருள்களுக்கும் விதிக்கப்படுகிறது.

யூனியன் கலால் வரிகள் 1934 முதல் சர்க்கரைக்கும் தீப்பெட்டிக்கும், 1938-39 முதல் மண்ணெண்ணெய்க்கும். 1943-44 முதல் தாவரநெய்க்கும், 1944-45 முதல் தேயிலை, காப்பிக்கொட்டை, பாக்கு ஆகியவற்றுக்கும் விதிக்கப்படுகின்றன. மேலும், மோட்டார் ஸ்பிரிட்டு, டயர், குழாய், புகையிலை ஆகியவற்றிற்கும் வரி விதிக்கப்படுகின்றது. 1947-ல் நீக்கப்பெற்ற உப்புவரி, இந்தியாவில் மிகப் பழைய கலால் வரியாகும். இவ்வரியால் ஆண்டுதோறும் 8-10 கோடி ரூபாய் வருமானம் வந்துகொண்டிருந்தது.

வருமான வரி 1886-ல் நிலையான வரியாயிற்று. மத்திய அரசாங்கம் இதனை வசூலித்து இராச்சியங்களுடன் பங்கிட்டுக்கொள்கின்றது. அண்மைவரையில், 1936-ல் ஏற்பட்ட நீமேயர் தீர்ப்புப்படி (Niemeyer Award) இராச்சியங்கள் 50% வரியைப் பெற்றுக்கொண்டிருந்தன. 1952-ல் நிறுவப்பெற்ற நிதிக்கமிஷன் சிபார்சுப்படி 1953-54 முதல் இராச்சியங்கள் 55% பெறுகின்றன. இந்திய வருமான வரி முறையின் முக்கிய அமிசங் களாவன : (I) 1939-ல் படி (Step) முறையை நீக்கித் தட்டு (Slab) முறை அமைக்கப்பட்டுள்ளது. படி முறையின்படி ரூ. 3,000 வரை வருமானமுள்ளவர் வரி தரவேண்டியதில்லை என்றும், ரூ. 3,000 முதல் ரூ.4,000 வரை வருமானவரி ரூ.1க்கு ஓர் அணா என்றும், ரூ.4,000 முதல் ரூ. 5,000 வரை ரூபாய் ஒன்றுக்கு இரண்டணா என்றும் இருந்தால் ரூ. 3,900 வருமானமுடையவர் 900 அணாவும், ரூ. 4,010 வருமானமுடையவர் (1010X2) அதாவது 2020 அணாவும் தர வேண்டும். ஆனால் தட்டு முறைப்படி அவர்கள் முறையே 900 அணாவும், (1000+20) அதாவது 1020 அணாவும் தந்தால் போதும் (பார்க்க : வருமானவரி). (2) வருமானம் கிடைக்குமிடத்திலேயே வசூலித்தல். (3) கூட்டு வருமானத்தை அதாவது கணவன் மனைவி இருவருக்கும் வருமானம் இருந்தால், அவற்றை ஒரே மொத்த வருமானமாகப் பாவித்து வரி வசூலிக்க ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள். (4) 1942-43 முதல், வருமானத்தைச் சொந்தமாகச் சம்பாதித்தது, அல்லாதது என இருவகையாகப் பிரித்து, முந்தினதற்கு நிவாரணம் தருதல், (5) சமய, தரும நிலையங்களிடம் வசூலிப்பதில் விதிவிலக்கு அளிப்பது போன்ற பல விதிவிலக்குக்கள் ஏற்படுத்துதல். (6) கடந்த ஆண்டு வரை (1952-53) வரி கொடுக்க வேண்டாத வருமான எல்லை, தனி நபருக்கு ரூ. 3,600 ஆகவும், இந்து ஏக குடும்பங்களுக்கு ரூ. 7,200 ஆகவும் இருந்தது. 1953-54 முதல் மக்களுக்குச் சிறிது நிவாரணம் தருவதற்காகவும், வரி வசூலிக்கும் நிருவாகத்துக்குச் சிறிது வசதி தருவதற்காகவும், இந்த எல்லைகள் முறையே ரூ. 4,200 ஆகவும் ரூ. 8,400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளன. மத்திய அரசாங்கம் வசூல் செய்யும் வருமான வரியில் மிகை வரியும் (Super-tax) மேல் வரியும் (Surcharge) அடங்கும்.

வியாபாரக் கூட்டுநிலைய வரி (Co-operation tax) முற்றிலும் மத்திய அரசாங்க வருமானமாகும். அதில் இராச்சியங்களுக்குப் பங்கு கிடையாது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது முதல், வருமான வரியிலிருந்து கிடைக்கும் தொகை ஒழுங்காகக் கூடிவந்து, 1951-52-ல் ரூ. 134.74 கோடியாக உச்சநிலை அடைந்தது. அதன்பின் ஏற்பட்ட வியாபார மந்தத்தாலும், விலைகளின் இறக்கத்தாலும், அவ்வரு மானம் குறைந்து வருகிறது. 1953-54 வரவு செலவுத் திட்டப்படி வியாபாரக் கூட்டுநிலைய வரியும், மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானவரிப் பங்கும் சேர்ந்து ரூ. 105.10 கோடி, அதாவது மத்திய அரசாங்கத்தின் மொத்த வருமானத்தில் 28.4% ஆகும்.

மரண வரி இல்லாதது இந்திய நிதி முறையில் ஒரு குறையாக இதுவரை கருதப்பட்டது. ஆனால், 1953 இறுதியில் இயற்றப்பட்ட மரண வரிச் சட்டம் இந்தக் குறையை நீக்கிவிட்டது. எஸ்டேட்டு வரியும, வாரிசு வரியும் விவசாய நிலத்திற்கு விதிப்பதற்கு இராச்சியங்கட்கும், விவசாய நிலமில்லாத சொத்துக்களுக்கு விதிப்பதற்கு மத்திய அரசாங்கத்துக்கும் இந்திய அரசியல் சட்டம் அதிகாரம் அளிக்கின்றது.

மத்திய அரசாங்கம் மேற்கூறிய வரிகளின் வாயிலாகப் பெறுவது தவிர, காடுகள், சாதல்வார், அச்சடித்தல், சாலைப் போக்குவரத்து, தபால் தந்தி, ரெயில்வே, அதிகாரிகளை வைத்து நடத்தும் சிறு வியாபார நிலையங்கள், நாணயச் செலாவணி, ரிசர்வ் பாங்கு இலாபம் முதலிய வகைகளான வரியல்லாத துறைகளின் வாயிலாகவும் வருமானம் பெறுகின்றது. இந்த இனங்கள் மட்டும் ஆண்டுக்குச் சுமார் 20 கோடி ரூபாய் தருகின்றன. 1951-52 வரை ரெயில்வே ரூ. 6.93 கோடியும், தபால் தந்தி ரூ. 3.43 கோடியும் தந்தன. இவை 1953-54 வரவு செலவுத் திட்டப்படி தரக்கூடிய தொகைகள் முறையே ரூ. 7.65 கோடியும், ரூ. 2.30 கோடியும் ஆகும்.

மத்திய அரசாங்கத்தின் செலவு இனங்களுள் முக்கியமானவை :

செலவினம்

கோடி ரூபாய்
1954-54 வரவுசெலவுத்
திட்டப்படி

1. ராணுவம் 199.84
2. அதிகார வர்க்கம் 71.27
3. கடனுக்கு வட்டி 37.17
4. வசூலிக்கும் செலவுகள்
முதலியன
32.49

இவை மொத்தம் ரூ. 340.77 கோடி, அதாவது வரி வருமானத்திலிருந்து செலவாகும் மொத்தத் தொகையில் 77% உச்சச் செலவு ராணுவத்துக்கும், அடுத்தபடி செலவு அதிகாரவர்க்கத்திற்கும் அதாவது மொத்தச் செலவில் முறையே 45.5%, 16.2% ஆகின்றன.

இராச்சியங்களின் நிதி : 1953-54 வரவு செலவுத் திட்டப்படியுள்ள புள்ளி விவரங்கள் வருமாறு :

ஏ இராச்சியங்கள் பீ இராச்சியங்கள்
இராச்சியம் கோடி
ரூபாய்
இராச்சியம் கோடி
ரூபாய்
அஸ்ஸாம் 6.85 ஐதராபாத் 22.58
பீகார் 22.44 மத்திய பாரதம் 9.40
பம்பாய் 49.20 மைசூர் 5.54
மத்தியப்பிரதேசம் 16.57 பெப்சு 4.48
சென்னை 49.19 ராஜஸ்தான் 14.15
ஒரிஸ்ஸா 7.90 சௌராஷ்டிரம் 4.17
உத்தரப்பிரதேசம் 50.87 திருவிதாங்கூர்
கொச்சி
5.11
மே. வங்காளம் 30.29


233.31 68.43


ஏ இராச்சியங்களின் வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் வருமான வரிப் பங்கும், வரி விதித்திருந்தால் விவசாய வருமான வரியும் சேர்ந்ததாகும். அடுத்த பெரிய இனங்கள் நிலவரியும் விற்பனை வரியுமாகும்.

விவசாய வருமானவரி விதிப்பதும் வசூலிப்பதும் இராச்சியங்களின் உரிமை. இதுவரை பீகார், மே. வங்காளம், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், ஒரிஸ்ஸா ஆகிய ஏ இராச்சியங்களும், ஐதராபாத், ராஜஸ்தான், திருவிதாங்கூர்-கொச்சி ஆகிய பீ இராச்சியங்களும் விதித்துள்ளன. இவைகள் அனைத்துக்கும் இதன் வாயிலாகக் கிடைப்பது சுமார் ரூ. 4 கோடி.

நிலவரியின் வரலாறு இந்து ஆட்சிக்காலம் முதல் தொடங்குகிறது என்னலாம். இந்து அரசர்கள் நில மகசூலில் 1/6-1/12 பங்கு தங்கட்கு உண்டு என்று உரிமை கொண்டாடினார்கள். அக்காலத்தில் வரியானது விளைபொருளாக அறுவடைக்காலத்தில் சிற்றூர்த் தலைவரிடமிருந்து வசூலிக்கப்பட்டது. அக்பர் காலத்தில் நிலவரி, மகசூலில் 1/3 பாகம் என்று நிருணயிக்கப்பட்டுப் பணமாக வசூலிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் காலத்தில் நிலவரி வசூல்முறை சீர்செய்யப் பெற்றது. 1793-ல் காரன்வாலிஸ் பிரபு, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா ஆகிய பகுதிகளில் நிலையான நிலவரித்திட்டம் ஏற்படுத்தினார். ஜமீன்தார்கள் நிலத்துக்குச் சொந்தக்காரர். இவர்கள் தங்கள் குத்தகைதாரிடமிருந்து பெறுவதில் 10/11 பகுதி அரசாங்கத்திற்குத் தரவேண்டுமென்பது இத்திட்டத்தின் சாரம். பிறகு இத்திட்டம் ஆக்ரா, அயோத்தி என்பவை சேர்ந்த ஐக்கிய மாகாணத்திலும் அமல் செய்யப்பட்டது. மற்ற மாகாணங்களில் 20-30 ஆண்டுகட்கு ஒருமுறை செய்யும் திட்டப்படி வரி வசூல் செய்யப்பட்டது. இத்திட்டப்படி நிலங்களை அளந்து, மண்ணின் வளத்துக்குத் தக்கவாறு தரம் பிரித்து வரி நிருணயிக்கப்படும். சராசரி ஆண்டு மகசூல் மதிப்பை வைத்து, வரி திட்டப் படுத்தப்படும். இப்போது வரி விதிப்பு முறையும் வரி விகிதங்களும் இராச்சியத்திற்கு இராச்சியம் வேறுபட்டுள்ளன. ஜமீன்தாரி முறையைச் சட்டவாயிலாக நீக்கிவிட்டு, எங்கும் ஒரே வரிவிதிப்பு முறையை ஏற்படுத்தவேண்டும் என்று இப்போது எழுந்துள்ள கோரிக்கை நிறைவேறினால், நாட்டில் வரிமுறை வேறுபாட்டுச் சிக்கல்கள் காணப்படமாட்டா. 1919-ல் நிலவரி உரிமை இராச்சிய அரசாங்கங்களுக்கு அளிக்கப்பட்டது முதல், அது இராச்சியங்களின் முக்கியமான வருமானங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஏ இராச்சியங்கள், பீ இராச்சியங்கள் எல்லாவற்றின் மொத்த நிலவரி 1953-54-ல் ரூ. 67.48 கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அது அவற்றின் மொத்தவரி வருமானத்தில் 21.4% ஆகும்.

விற்பனை வரி முதலில் 1938-ல் சென்னை இராச்சியத்தில் விதிக்கப்பட்டது. இப்போது ராஜஸ்தான் தவிர, ஏனைய இராச்சியங்கள் அனைத்திலும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரி விதிப்பும் விகிதமும் வேறுபடுகின்றன. ஆயினும் இது ஒரு திருப்திகரமான வருமான இனம் என்று எல்லா இராச்சியங்களிலும் கருதப்படுகிறது. 1953-54-ல் மொத்த வருமானத்தில் விற்பனை வரி வாயிலாக ரூ. 54.61 கோடி அதாவது 17%ம், கலால் வரி ரூ. 60.67 அதாவது 19.5% ம் கிடைக்கும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. கலால் வரி, நாட்டுச்சாராயம், கஞ்சாச் சரக்குக்கள் உற்பத்திக்கே விதிக்கப்பட்டிருக்கிறது. மதுவிலக்குச் சில இராச்சியங்களில் அரைகுறையாகவும், சில இராச்சியங்களில் பூரணமாகவும் ஏற்பட்டு வருமானத்தைப் பாதித்திருக்கிறது. சென்னை இராச்சியத்தில் மதுவிலக்கால், கலால் வரி 1947-48-ல் ரூ. 1069-18 இலட்சமாயிருந்தது, 195152-ல் ரூ. 41 இலட்சமாகக் குறைந்துள்ளது. நிதிக்குழுவினுடைய கருத்துக்களை ஏற்று, மத்திய அரசாங்கம் இராச்சியங்கட்கு அவற்றின் மக்கள் தொகைக்கு ஏற்ப, புகையிலை, தீப்பெட்டி, தாவரநெய் முதலிய தாவரச் செய்பொருள்கள் ஆகியவற்றுக்கு வசூல் செய்யும் கலால் வரி வருமானத்தில் 40% பிரித்துக் கொடுக்க ஏற்றுக்கொண்டிருக்கிறது.

இராச்சியங்கள் செலவில் பெரும்பகுதி அபிவிருத்தி இனங்களினதாகும். 1953-54-ல் ஏ இராச்சியங்களின் மொத்தச் செலவு மதிப்பு : ரூ. 362.93 கோடி. பீ இராச்சியங்களின் மொத்தச்செலவு மதிப்பு : ரூ.118.62 கோடி, இதில், விஞ்ஞான இலாகா, கல்வி, மருத்துவம், சுகாதாரம், விவசாயம், கால்நடை மருத்துவம், கூட்டுறவு, கைத்தொழில்கள், சிற்றூர் வளர்ச்சி, தொழிலாளர் நலம், விமானப் போக்குவரத்து, ரேடியோ, மின்சாரம், சமூகவளர்ச்சித் திட்டங்கள் ஆகிய அபிவிருத்தி இனங்களுக்காகவுள்ள செலவு ஏ இராச்சியங்களின் மொத்தச்செலவில் ரூ. 141.75 கோடி. அதாவது 39.1%. பீ இராச்சியங்களின் மொத்தச் செலவில் ரூ.50.44 கோடி அதாவது 42.5% ஆகும். வரி வசூல் நிருவாகத்துக்கும், நீதி பரிபாலனம், சிறை, போலீஸ் முதலிய அதிகார நிருவாகத்துக்கும் செலவு விகிதம் ஏ இராச்சியங்களில் முறையே 9.1%, 24%. பீ இராச்சியங்களில் முறையே 9.1%, 19% ஆகும்.

இராச்சியங்கள் இந்தச் செலவுகள் தவிர, ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டங்கள், நீர்ப்பாசனம், சாலைப் போக்குவரத்து, கைத்தொழில் வளர்ச்சி முதலிய ஐந்தாண்டுத் திட்டப் பகுதிகளுக்காக முதலீட்டுச் செலவுகளும் செய்கின்றன. 1951-52-ல் ஏ இராச்சியங்களின் மொத்த முதலீடு ரூ. 79.69 கோடி ; பீ இராச்சியங்களில் ரூ. 20-60 கோடி. 1953-54-ல் இவை முறையே ரூ. 126-78 கோடியும், ரூ. 27-96 கோடியுமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

1952-53 முதல் அஜ்மீர், குடகு, டெல்லி, இமாசலப் பிரதேசம், விந்தியப்பிரதேசம், போபால் ஆகிய ஆறு சீ இராச்சியங்கள் தனியாக வரி வருமான வரவு செலவுத் திட்டம் தயார் செய்கின்றன. மீதியுள்ள இராச்சியங்களான கட்சு, பிலாஸ்பூர், மணிப்பூர், திரிபுரா ஆகியவற்றின் வரவுசெலவுகள் மத்திய அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டத்தில் சேர்ந்துள்ளன.

டெல்லி தவிர, ஏனைய சீ இராச்சியங்களில் வரி வருமான விகிதமானது வரியில்லாத வருமான விகிதத்தை விடக் குறைவாயிருக்கிறது. வரியல்லாத வருமானத்தில் பெரும்பகுதி மத்திய அரசாங்கம் தரும் உதவிநிதியேயாம்.

அரசாங்கக் கடன் : இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதற்கு முந்திய ஆண்டில் இந்திய அரசாங்கக் கடன் ரூ. 1,205.76 கோடி. இதில் இந்தியாவில் வாங்கியது ரூ. 736.64. அயல்நாட்டில் வாங்கியது ரூ. 469.12 கோடி. யுத்தகாலத்தில் வியாபாரம் வளர்ந்ததாலும், பிரிட்டிஷ் அரசாங்கத்துக்காக இந்திய அரசாங்கம் யுத்தச் செலவுகள் செய்ததாலும், பிரிட்டனுக்கு 1939-ல் தரவேண்டிய கடன் சவரன் 4,700 கோடியானது யுத்த முடிவில் 700 கோடியாகக் குறைந்தது. அதே சமயத்தில் வெளிநாட்டுக் கடனை உள்நாட்டுக்கடனாக மாற்றியதால் இந்திய ரூபாய்க் கடன் அந்த அளவுக்கு மிகுந்தது. ஆகவே மத்திய அரசாங்கம் 1952-53 இறுதியில் தரவேண்டிய வட்டிக்கடன் மொத்தம் ரூ. 2,645-70 கோடி. இதில் இந்திய ரூபாய்க் கடன் ரூ. 2,501.73 கோடி. வெளிநாட்டுக் கடன் (டாலர் கடன் உட்பட) ரூ. 143.97 கோடி.

ஏ இராச்சியங்களின் கடன் 1952-53 இறுதியில் மொத்தம் ரூ. 399.86 கோடி. இதில் நிலையான கடன் ரூ. 78.36 கோடி; நிலையாக் கடன் (Floating Debt) ரூ. 3:53 கோடி; மத்திய அரசாங்கத்திடம் வாங்கியவை ரூ. 279.38 கோடி; இனப்படுத்தாத கடன் (Unfunded Debt) ரூ. 36.79 கோடி. இப்புள்ளிகள் திட்டமானவை யல்ல.

1952-53 இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வட்டிக்கடன், முந்திய ஆண்டில் இருந்ததைவிட ரூ. 34 கோடி. மிகுந்துள்ளது. ஏ இராச்சியங்களின் கடன் அந்த ஆண்டில் ரூ. 77 கோடி மிகுந்துள்ளது.

நாணயச் செலாவணி

இந்தியாவில் 18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி துவங்கியபொழுது இந்தியாவில் சுமார் 994 வகை நாணயங்கள் பழக்கத்திலிருந்தன. அவை எடையிலும் மாற்றிலும் வேறுபட்டிருநதனவாதலால், வாணிகத்துக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டன. கம்பெனியார் அக் குறைகளை நீக்கக் கம்பெனியின் குறியிட்டவையும், குறிப்பிட்ட மாற்றும் எடையும் பரஸ்பர மதிப்பும் விகிதமும் உள்ளவையுமான தங்க நாணயங்களையும் வெள்ளி நாணயங்களையும் வெளியிட்டு, இரட்டை உலோக நாணய முறையை (Bimetallism) ஏற்படுத்த முயன்றனர். ஆனால் இந்த இரண்டு உலோகங்களின் இயல்பான மதிப்பு (Intrinsic value) அடிக்கடி மாறவே, சட்டப்படி திட்டம் செய்த மதிப்பும் விகிதமும் மாறின. ஆகையால் 1818-ல் வெள்ளிப் பிரமாண நாணயத்திட்டம் (Silver Standard) ஏற்படுத்துவதென்று முடிவு செய்து, தங்க நாணயத்திற்குப் பதிலாக 180 கிரெயின் எடையும், 11/12 மாற்றும் உள்ள வெள்ளி ரூபாய்களை வெளியீட்டனர். ஆயினும் பழக்கத்தில் இருந்துவந்த தங்க வராகன்கள், வராகன் ஒன்றிற்கு 15 ரூபாய் வீதம் செலாவணியில் இருந்துவந்தன. 1835ஆம் ஆண்டு நாணயச் சட்டப்படி (Coinage Act) இந்த ரூபாய், இந்தியாவில் கம்பெனியின் ஆட்சிக்குட்பட்ட இடங்களில் திட்ட நாணயமாகவும் (Standard Coin), சட்டச் செலாவணி (Legal tender) நாணயமாகவும் வெளியிடப்பட்டது. வெள்ளியைத் தடையின்றி யாவரும் ரூபாய் நாணயமாக அடித்துக்கொள்ளும் உரிமையும் (Open mint for silver) கொடுக்கப்பட்டன. ஆனால் தங்க நாணயங்களும் செலாவணியில் இருந்து வந்தன. 1870ஆம் ஆண்டிலிருந்து வெள்ளியின் விலை குறையத் தொடங்கிற்று. ஆண்டுதோறும் இந்தியாவில் குவிந்த வெள்ளி, ரூபாயாக மாற்றப்பட்டது. பணப்பெருக்கெடுத்து விலைவாசிகள் ஏறின. வெள்ளியின் மதிப்புக் குறையவே, ஒரு ரூபாய்க்கு 2 ஷில்லிங்காக இருந்த ரூபாய்-பவுண்டு நாணயமாற்று விகிதம் ஒரு ரூபாய்க்கு 1 ஷி. 2 பெ. ஆயிற்று. இங்கிலாந்துக்கு இந்தியா செலுத்தவேண்டிய இனங்களுக்கு முன்னைவீட அதிக ரூபாய்கள் செலவு செய்ய வேண்டியதாயிற்று. தங்க நாணயத் திட்டமுள்ள (Gold Standard) நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்களுக்கு அதிக ரூபாய்களும், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்களுக்கு அதிகச் சம்பளமும் கொடுக்கவேண்டி வந்தது. 1892-ல் ஹெர்ஷல் (Herschell) தலைமையில் ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக் கமிட்டியின் சிபார்சுப்படி 1893-ல் தங்கசாலைகளில் வெள்ளியைக் கொடுத்துத் தடையின்றி நாணயமாக மாற்றும் உரிமை ரத்து செய்யப்பட்டது. ரூபாய் திட்ட நாணய அந்தஸ்தை இழந்து, சட்டச் செலாவணி நாணயமாக மாத்திரம் இருந்தது. மேலும் அரசாங்கத்தார் ஒரு ரூபாய்க்கு 1 ஷி .4 பெ. வீதம் சவரன்களையும் அரைச் சவரன்களையும் பெற்றுக் கொள்வதாக அறிக்கை யிட்டனர்.

1898-ல் இந்தியாவில் தங்கநாணயத் திட்டம் ஏற்படுத்துவதைப்பற்றி ஆராயச் சர் ஹென்ரி பவுலர் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்தியாவில் தங்க நாணயச் செலாவணியுடன் தங்கத் திட்ட நாணய முறை ஏற்படுத்த வேண்டு மென்று கூறியது. கமிட்டியின் சிபார்சுகளை அரசாங்கம் ஏற்றது. 1899-ல் சவரன்களும் அரைச் சவரன்களும் சட்டச் செலாவணி நாணயங்களாகச் செய்யப்பட்டன. வெள்ளி ரூபாயும் சட்டச் செலாவணி நாணயமாக இருந்தது. ஆனால் வெள்ளியைக் கொடுத்து ரூபாயாக மாற்றும் உரிமை மட்டிலும் இல்லை. சவரன்களுக்கும் ரூபாய்க்கும் பரஸ்பர மதிப்பு விகிதம் ரூ., 1ஷி. 4பெ. (அதாவது 1 சவரன் = ரூ.15) ஆனால் இந்தியாவில் தங்கத் திட்ட நாணய முறை அமைக்க வேண்டுமென்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதற்குப் பதிலாகத் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் (Gold Exchange. Standard) தோன்றியது. 1894-1900 ஆண்டுகளில் தங்க நாணயங்களை வழங்கிப் பழக்கத்தில் கொண்டுவர அரசாங்கத்தார் முயன்றனர். ஆனால் நாட்டில் பஞ்சமேற்பட்டிருந்ததால் அதிக மதிப்புள்ள நாணயத்துக்குத் தேவையில்லாமல் ரூபாய்களுக்கு அதிக கிராக்கி யேற்பட்டது. தங்க நாணயங்கள் திரும்பவும் கஜானாவில் வந்து சேர்ந்தன. அரசாங்கத்தார் நாட்டில் தங்க நாணயங்களில் ஆசையில்லை என்று எண்ணித் திரும்பவும் வெள்ளி வாங்கி ரூபாய்கள் அச்சிட்டு வெளியிட்டனர். ஆகையால் நடை முறையில் உள்நாட்டில் குறி அல்லது ஒப்பு நாணய (Token Money) அந்தஸ்து வாய்ந்த ரூபாய்களும் காகித நோட்டுக்களும் (Paper Notes) செலாவணியாயிருந்தன. மேலும் 1904 வரை இந்திய மந்திரி இந்திய சர்க்கார் சம்பந்தமான செலவுக்கு வேண்டிய மட்டில் அவ்வப்பொழுது கவுன்சில் பில் (Council Bills) முறையில் ஸ்டர்லிங்கு வருவித்துக் கொள்வது வழக்கம். அதாவது இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பணம் அனுப்ப விரும்புவோர்க்கு அவர்களிடமிருந்து பவுண்டு ஸ்டர்லிங்கு பெற்றுக்கொண்டு, அதற்குப் பதிலாக 1ஷி. 4 பெ.க்கு ஒரு ருபாய் வீதம் இந்தியாவின் பெயரில் (கவர்னர் ஜெனரல் மீது) உண்டியல் விற்பது வழக்கம். கவுன்சில் பில் அல்லது கவுன்சில் உண்டியல் என்ற இந்த உண்டியல்களுக்கு இந்தியாவில் ரூபாய் கொடுப்பது வழக்கம். ஆனால் 1904 முதல் இந்தியாவில் ரூபாய்களுக்குக் கிராக்கி ஏற்பட்டு, ரூபாயின் மாற்று விகிதம் 1 வி. 4 பெ.க்கு மேல் ஏறும்பொழுதெல்லாம் இந்தியா மந்திரி ரூ. 1க்கு 1 ஷி. 4 பெ. வீதம் தம் தேவைக்கு மட்டுமன்றி, இந்தியாவுக்குப் பணம் அனுப்பவேண்டியவர்களுக்கெல்லாம் கவுன்சில் உண்டியல்களை விற்பது வழக்கமாயிற்று. 1907-8-ல் இந்தியாவின் ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்ததின் பயனாக இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு அதிகப் பணம் அனுப்ப வேண்டி வந்தது. பவுண்டு ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி ஏற்பட்டது. ரூபாயின் நாணய மாற்று மதிப்புக் குறைந்தது. இச்சமயம் இந்தியா மந்திரியின் உத்தரவின்பேரில் கவர்னர் ஜெனரல் இங்கிலாந்துக்குப் பணம் அனுப்ப வேண்டியவர்களிடமிருந்து ரூபாய் பெற்று, அதற்குப் பதிலாக 1 ஷி. 4 பெ. வீதம் இந்தியா மந்திரியின் பெயரால் உண்டியல் விற்றார். இவ் வுண்டியல்களுக்கு இந்தியா மந்திரி இங்கிலாந்தில் பவுண்டு ஸ்டர்லிங்கு கொடுத்துவந்தார். இவ்வுண்டியல்களுக்கு ரிவர்ஸ் கவுன்சில் பில், அல்லது ரிவர்ஸ் கவுன்சில் உண்டியல் என்று பெயர். இம்மாதிரி இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே உண்டியல்கள் மூலம் குறிப்பிட்ட நாணய மாற்று விகிதப்படி பணம் அனுப்பப்பட்டது. இத்திட்டத்தை நிறைவேற்றத் தனியாகத் தங்கத் திட்டச் சேமநிதி ஒன்று (Gold Standard Reserve) ஏற்படுத்தப்பட்டது. இவ்வாறாக 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்தியாவில் உள்நாட்டில் தங்க நாணயச் செலாவணி இல்லாமல், ஒப்பு அல்லது குறி நாணயங்களான ரூபாய்களும், நோட்டுக்களும், வேறு சில்லரை நாணயங்களும் பழக்கத்தில் வந்தன. இங்கிலாந்துக்குப் பணம் செலுத்தவேண்டி வந்தபோது, அரசாங்கத்தாரால் 1 ஷி .4 பெ. மாற்று விகிதப்படி உள்நாட்டு நாணயத்துக்குப் பதிலாக அயல் நாட்டில் தங்க நாணயம் கொடுக்கப்பட்டது. இத்திட்டத்திற்குத்தான் தங்க நாணய இனமாற்றுத் திட்டம் என்று பெயர். 1913-ல் நாணய முறை விஷயமாக ஆலோசனை கூற ஜோசப் ஆஸ்ட்டென் சேம்பர்லின் தலைமையில் நியமிக்கப்பட்ட ராயல் கமிஷனும் இந்தியாவுக்குத் தங்க நாணயச் செலாவணி முறை தேவையில்லையென்றும், தங்க நாணய இன மாற்றுத்திட்டமே மிகவும் உகந்ததென்றும் 1914-ல் தனது அறிக்கையில் கூறிற்று.

ஆனால், 1915க்குப்பின் இந்தியாவின் வர்த்தகச் சாதக நிலை அதிகரித்து, ரூபாய்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. மேலும் 1916லிருந்து வெள்ளி விலையும் வெகுவாக அதிகரித்தது. 1915-ல் ஓர் அவுன்ஸ் வெள்ளி விலை 27 பெ. 1919-ல் 78 பெ. இந்தியாவில் வெள்ளி ரூபாய்கள் உருக்கிப் பதுக்கப்பட்டன. நாணயப் பஞ்சமும் ஏற்பட்டது. ஒரு ரூபாய் இரண்டரை ரூபாய் நோட்டுக்களும், நிக்கல் இரண்டணாக்களும் வெளியிடப்பட்டன. வெள்ளி விலை ஏற்றத்தாலும், ரூபாய்க்குக் கிராக்கி ஏற்பட்டதாலும் ரூபாயின் ஸ்டர்லிங்கு மதிப்பு உயர்ந்து கொண்டேபோய் 1919-ல் 2ஷி. 4 பெ. ஆக இருந்தது. அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தை 1ஷி. 4பெ. ஆக நிலைநிறுத்த எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. ரூபாயின் மதிப்பு, வெள்ளியின் விலையைப் பின்பற்றியது. தங்க நாணய இனமாற்றுத் திட்டம் குலைந்தது. 1919-ல் இந்திய நாணய முறைகளை ஆராய்ந்து சீராக்க வழி கூற, சர் ஹென்ரி பாபிங்க்டன் ஸ்மித் தலைமையில் நியமிக்கப்பட்ட கமிட்டியாரின் அறிக்கையில் ரூபாயின் மாற்று விகிதத்தை நிலைநிறுத்த வேண்டு மென்றும், 1 ரூபாய்க்கு 2 ஷி. விகிதமே (1 சவரன் = ரூ. 10) சரியானது என்றும் வற்புறுத்தப்பட்டது. இதன் படி1920-ல் 1 சவரன் 10 ரூபாய் என்று சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் விரைவில் முன்னிருந்த நிலைமை மாறியது. இந்தியாவின் ஏற்றுமதிகள் குறைந்து, இறக்குமதி அதிகரித்து, வர்த்தகப் பாதக நிலையேற்பட்டு, ஸ்டர்லிங்குக்குக் கிராக்கி உண்டாகி, ஸ்டர்லிங்கு மதிப்பு ஏறி, ரூபாய் மதிப்பு 1 ஷி.3 பெ. வரை இறங்கியது. அரசாங்கத்தார் 2ஷி. விகிதத்தில் இங்கிலாந்தின்மேல் உண்டியல் விற்று, இந்த 2 ஷி. விகிதத்தை நாட்ட முயன்றனர். ஆனால் அரசாங்கத்தாருக்கும் வியாபாரிகளுக்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டது. கடைசியில் 1920 செப்டம்பரிலிருந்து அரசாங்கத்தார் ரூபாயின் மாற்று விகிதத்தைக் கட்டுப்படுத்துவதைக் கைவிட்டனர்.

1925 ஆகஸ்டில் எட்வர்டு ஹில்ட்டன் யங் தலைமையில் இந்திய நாணய நிலையைப் பற்றி ஆராய்ந்து ஆலோசனை கூற ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன், இந்தியாவில் தங்க நாணய இனமாற்றுத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், தங்க நாணயச் செலாவணி யில்லாமல் தங்கத் திட்டம் ஏற்படுத்த வேண்டுமென்றும், 1ஷி. 6 பெ. விகிதத்தில் ரூபாயின் மதிப்பை நாட்ட வேண்டுமென்றும், ரிசர்வ் பாங்கு என்ற பெயரில் ஒரு மத்திய பாங்கு ஸ்தாபிக்க வேண்டுமென்றும், இந்தப் பாங்கு யாதொரு தடையுமின்றி 400 அவுன்ஸுக்குக் குறையாமல் குறிப்பிட்ட விலைக்குத் தங்கம் வாங்கவும் விற்கவும் வேண்டுமென்றும், நாட்டில் ரூபாயும் நோட்டுகளுமே செலாவணியில் இருக்க வேண்டுமென்றும் கூறியது. இப்புதுத் திட்டத்துக்குத் தங்கக்கட்டி நாணயத் திட்டம் (Gold Bullion Standard) என்று பெயர். அரசாங்கத்தாரால் மேற்படி சிபார்சுகள் ஏற்கப்பட்டு, 1927ஆம் ஆண்டின் நாணயச் சட்டம் பிறந்தது. நாட்டில் வலுத்த எதிர்ப்பு இருந்தும், 1ஷி . 4 பெ. விகிதமே நாட்டுக்கு நலன் பயக்குமென்ற கிளர்ச்சியிருந்தும், ரூபாய்க்கு 1ஷி. 6 பெ. மதிப்பிடப்பட்டது. தோலா ரூ.21-3-10க்குத் தங்கம் 40 தோலாக் கட்டிகளாக வரையின்றி வாங்குவதாகவும், இந்த விலைக்கு 400 அவுன்ஸுக்குக் குறையாமல் தங்கக்கட்டிகள் அயல்நாடுகளுக்கு அனுப்பி விற்பதாகவும் அல்லது சர்க்காரின் நோக்கம்போல் இங்கிலாந்தில் ஸ்டர்லிங்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இம் மாதிரி, தங்கக்கட்டி நாணயத்திட்டம் 1931 செப்டம்பர்வரை அமலில் இருந்தது. 1931. செப்டம்பர் 20 பிரிட்டனில் தங்க நாணயத் திட்டம் கைவிடப்பட்டு, ஸ்டர்லிங்கு நாணயத் திட்டம் ஏற்பட்டது. இந்தியாவும் தங்கக்கட்டி நாணயத் திட்டத்தைக் கைவிட்டது. 1 ஷி.6 பெ. வீதம் ரூபாய்க்கும் ஸ்டர்லிங் குக்கும் (ஸ்டர்லிங்கு நோட்டு) தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இப்புதிய திட்டத்திற்கு ஸ்டர்லிங்கு மாற்றுத் திட்ட நாணயமுறை (Sterling Exchange Standard) என்று பெயர்.

இரண்டாவது உலகயுத்தத்தின் பயனாக நாட்டில் 1939 முதல் பணப்பெருக்கம் அதிகரித்தது. விலைவாசிகள் உயர்ந்தன. போர்ச் செலவுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் இந்தியாவுக்கு இங்கிலாந்தில் கொடுக்கப்பட்ட ஸ்டர்லிங்கின் ஈட்டின்பேரில் இந்தியாவில் ரூபாய் நோட்டுக்கள் ஏராளமாக அச்சடிக்கப்பட்டன. பணவீக்கத்தைக் குறைக்க அரசாங்கத்தார் பல முறைகளைக் கையாண்டனர். யுத்தத்தின் பயனாகப் பலவகை நாணய மாற்றுக் கட்டுப்பாடுகளும் (Exchange Control) ஏற்பட்டன. பிரிட்டிஷ் சாம்ராச்சிய டாலர் சேமிப்பு நிதியில் (Empire Dollar Pool) இந்தியா ஓர் அங்கமாகச் சேர்ந்தது. 1945-ல் உலக நாணய நிதியிலும் (International Monetary Fund) சேர்ந்தது. 1947 ஏப்ரலில் ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் இருந்த தொடர்பு அகற்றப்பட்டது. ரூபாய்க்கும் வேறு நாடுகளின் நாணயங்களுக்கும் நேர் உறவு ஏற்படுத்தப்பட்டது. ஒரு ரூபாய் 4.1 சொச்சம் கிரெயின் தங்கத்துக்கும், 3.30 சொச்சம் ரூபாய்கள் அமெரிக்க டாலர் ஒன்றுக்கும் சமம் என்றும் நிருணயம் செய்யப்பட்டது. ரூபாய்க்கும் ஸ்டர்லிங்குக்கும் 1ஷி. 6 பெ.விகிதமே நடைமுறையில் இருந்து வருகிறது.

1949 செப்டம்பர் 18ஆம் தேதி ஸ்டர்லிங்கின் மதிப்பைப் பிரிட்டன் குறைத்தது. இந்தியாவும் அதே அளவுக்கு ரூபாயின் மதிப்பைக் குறைத்தது. தற்சமயம் டாலர் ரூபாய் மதிப்புச் சமன் (Par value) 1 டாலர் = 4.7 சொச்சம் ரூபாய்கள். அதாவது ஒரு டாலருக்கு ரூ.4-12-4 4/21 ரூபாய் ஸ்டர்லிங்கு விகிதம் 1 ஷி. 6பெ. பாகிஸ்தான் தனது ரூபாயின் மதிப்பைக் குறைத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் 144 இந்திய ரூபாய் 100 பாகிஸ்தான் ரூபாய்கள் சமமாயின.

காகித நாணயம்: 1861க்கு முன் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களிலிருந்த மாகாண பாங்குகளுக்குக் காகித நாணயம் அல்லது நோட்டுக்கள் அச்சடிக்க உரிமை கொடுக்கப்பட்டு, இந்த நோட்டுக்கள் மேற்கண்ட நகரங்களில் மாத்திரமே செலாவணியிலிருந்தன. அச்சடிக்கக்கூடிய நோட்டுக்களின் மதிப்பு வரம்பும் ஒதுக்கு நிதித் (Reserve) தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தன. 1861-ல் தான் முதன் முதலாக நோட்டுக்கள் வெளியிடுவது அரசாங்கத்தாரின் ஏக உரிமை (Monopoly) யாகியது. அரசாங்கத்தாரின் பத்திரங்களை ஆதாரமாகக்கொண்டு, இவ்வளவு மதிப்புள்ள நோட்டுக்கள் தான் வெளியிடலாமென்றும், அதற்கு மேல் வெளியிடும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக நாணயங்களும், தங்கம் வெள்ளிக்கட்டிகளும் வைக்க வேண்டுமென்ற முறையில் காகித நாணயங்கள் முதலில் வெளியிடப்பட்டன. கல்கத்தா, பம்பாய், சென்னை என்னுமிடங்களை முக்கியமாக வைத்து, நாட்டை மூன்று வட்டங்களாகப் பிரித்து, அந்தந்த நகரங்களில் வெளியிடப்படும் நோட்டுக்கள் அந்தந்த வட்டங்களில் தான் சட்டப்படி செலாவணியிலிருந்தன. 1910க்குள் ரங்கூன், கராச்சி, கான்பூர், லாகூர் என்று மேலும் நான்கு வட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. 10, 20, 50, 100, 500, 1000, 5000 ரூபாய் நோட்டுக்கள் வெளிவந்தன. 1910லிருந்து 1931-32க்குள் நாளடைவில் எவ்வட்டத்தைச் சேர்ந்த நோட்டுக்களும் தேசம் முழுவதிலும் செலாவணிக்குரியனவாகச் செய்யப்பட்டன. மேலும் 1905லிருந்து ஸ்டர்லிங்குப் பத்திரங்களின் ஈட்டின் பேரிலும் நோட்டுக்கள் வெளியிடலாமென்றும் ஏற்பட்டது.

முதல் உலகயுத்தம் துவங்கினவுடன் நாட்டில் திகில் ஏற்பட்டு, நோட்டுக்களை நாணயமாகமாற்ற மக்கள் முன் வந்தனர். ஆனால் நாளடைவில் மக்களிடையே நம்பிக்கை உண்டாகி அமைதியேற்பட்டது. யுத்தகாலத்தில் பணத் தேவை மிகுந்து, நோட்டுக்கள் வெகுவாக அதிகரிக்கப் பட்டன. 2½ ரூ.1 ரூ. நோட்டுக்களும் வெளிவந்தன.

1920-ல் இயற்றப்பட்ட சட்டப்படி நோட்டுக்கள், விகித சம ஒதுக்கு நிதி முறையில் (Proportional Reserve System) வெளியிடப்பட்டன. இதன்படி வெளியிடப்படும் நோட்டுக்களின் மதிப்பில் 50% ரூபாயாகவோ, சவரன்களாகவோ, தங்கம், வெள்ளிக்கட்டிகளாகவோ ஈடு இருக்கவேண்டும். ஆனால் அவ்வப் பொழுது வியாபாரப் பெருக்கம் ஏற்படும் காலங்களில் தேவையான செலாவணிக்கு உள்நாட்டு உண்டியல் பேரில் 5 கோடி ரூபாய்கள் மதிப்புள்ள நோட்டுக்கள் வெளியிடலாம் என்று ஏற்பாடாயிற்று.

ஹில்ட்டன் யங் கமிஷன் சிபார்சுப்படி 1927-ல் பிறப்பிக்கப்பட்ட நாணயச் சட்டப்படி வெளியிடப்படும் நோட்டுக்களுக்கு ஆதாரமாக 40% தங்கம், தங்க நாணயங்கள் அல்லது ஸ்டர்லிங்கு பத்திரங்களாகவும், மற்ற 60%க்கு ரூபாய் நாணயங்களும், இந்திய சர்க்கார் பத்திரங்களும், வர்த்தக உண்டியல்களும் ஆக இருக்கலாமென்று ஏற்பட்டது. 1935-ல் நோட்டுக்கள் வெளியிட்டு நிருவாகம் செய்யும் ஏகவுரிமையும் பொறுப்பும் ரிசர் பாங்குக்குக் கொடுக்கப்பட்டது. ரிசர்வ் பாங்கு நோட்டுக்கள் சர்க்கார் உத்திரவாதம் பெற்றவை.

பாதுகாப்பு

இந்திய ராணுவமானது தரைப்படை (Army), கடற்படை (Navy), ஆகாயப்படை (Air Force) என மூன்று பிரிவுகளுடையது. ராணுவத்தின் கடமை இந்தியாவை வெளிநாடுகள் தாக்காவண்ணமும், உள்நாட்டில் செழிப்பும் சமாதானமும் நிலவுவதற்கான நிலைமை தளராவண்ணமும் பாதுகாப்பதாகும். இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு மந்திரி இலாகா இம் மூன்று படைகளும் ஒத்துழைக்குமாறு செய்கின்றது; படைக்கல உற்பத்திச்சாலைகளை மேற்பார்க்கின்றது; படைகளுக்கு வேண்டிய மருத்துவ இலாகாவையும், பாதுகாப்பு விஞ்ஞான இலகாவையும் நடத்துகின்றது.

தரைப்படை : இதில் சேனாதிபதி முதல் போர்வீரன் வரை எல்லோரும் இந்தியராகவே யுள்ளனர். தொழில்நுட்ப நிபுணர்களுள் மட்டும் சில பிரிட்டிஷ் அலுவலாளர்கள் உள்ளனர். தகுதியுள்ள இந்திய மக்கள் யாவராயினும் ராணுவத்தில் சேர உரிமையுடையவராவர்.

இந்தியப் படைகளுள் தரைப்படை தலையாயது. இந்தியத் தரைப்படை சென்ற இரண்டு உலக யுத்தங்களிலும் புகழ் பெற்றுள்ளது. இப்போதும் உலகிலுள்ள மிகச்சிறந்த படைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. சுதந்திரம் வந்த பின்னர் நடைபெற்ற காச்மீரம்; ஐதராபாத் நிகழ்ச்சிகளிலும் புகழ்பெற நடந்து வந்துள்ளது.

மேலும், சென்ற ஐந்தாண்டுகளாகத் தரைப்படையினர் ஆற்று வெள்ளம் ஏற்பட்ட காலங்களிலும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்பட்டபொழுதும், சாலைகள் அமைக்க வேண்டியபொழுதும் பொதுமக்களுக்குச் சமூக சேவையும் செய்து வருகிறார்கள்.

இதைத்தவிரப் பிரதேசப்படை (Territorial army) ஒன்றும் இருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் பொதுமக்களையும் நாட்டின் பாதுகாப்பில் ஈடுபடுத்துவதேயாகும். தரைப்படைக்குப் பக்கபலமாக இருந்து போக்குவரத்துப் பாதைகளையும் கடற்கரைகளையும் காப்பதும், பொதுவாக நாட்டில் அமைதியும் சட்டமும் நிலவுவதற்கு அரசாங்கத்துக்குத் துணையாக நிற்பதுமே இதன் முக்கியக் கடமைகள்.

ராணுவத்திற்கு வேண்டிய படைக்கலங்களை இந்தியாவிலேயே செய்துகொள்ள வேண்டுமென்பதே இலட்சியமாகும். அதற்காக வடாலா என்னுமிடத்திலும், புசாவல் என்னுமிடத்திலும் இரண்டு உற்பத்திச்சாலைகள் வேலைசெய்து வருகின்றன. அம்பர்நாத் என்னுமிடத்தில் எந்திரக்கருவி உற்பத்திச்சாலை நிறுவப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு வேண்டியவற்றைப் பற்றி ஆராய்வதற்காகப் பாதுகாப்பு விஞ்ஞான ஸ்தாபனம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மந்திரி இலாகா விற்கு ஒரு விஞ்ஞான ஆலோசகர் நியமிக்கப்பட்டுளர். படைக்கலங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக ஒரு சோதனை நிலையமும் நிறுவப்படும்.

கப்பற் படை: சுதந்திரம் வந்த சமயம் இருந்த படையைக் கப்பற்படை என்று கூறமுடியாது. ராயல் நேவி என்னும் ஆங்கிலக் கப்பற் படையின் ஒரு சிறு துணைப் படையாக மட்டுமே இருந்தது. பாகிஸ்தான் பிரிவினையால் அது, அதனினும் சிறிதாக ஆகிவிட்டது. இந்தியாவின் மூவாயிரத்து ஐந்நூறு மைல் நீளமுள்ள கடற்கரையைப் பாதுகாக்கச் சிறிதளவுகூடப் போதுமானதாக இருக்கவில்லை. அப்படை இப்போது விரிவடைந்துள்ளது. கடற் பயிற்சிக்கும் கடற்கரைப் பயிற்சிக்கும் பழைய நிலையங்கள் விரிவடைந்தும், புதிய நிலையங்கள் நிறுவப்பட்டும் வருகின்றன. கடற்படை விமானப் போக்குவரத்துக் கிளை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. கப்பற் படைக்கு வேண்டியவர்களைத் தயாரிக்கும் நிலையம் கொச்சியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கப்பற் படை அலுவலாளர்கள் இந்தியாவிலும் இங்கிலாந்திலும் பயிற்சி பெறுகிறார்கள். ஜாம்நகரிலும் லொனாவலாவிலுமுள்ள நிலையங்கள் விரிவாக்கப்பட்டன. கொச்சியிலும் விசாகப்பட்டினத்திலும் புது நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டன. கொச்சி நிலையமே இந்தியாவில் மிகப் பெரிய பயிற்சி நிலையமாகும்.

டேராடூனிலுள்ள இந்திய ராணுவக் கல்லூரி 1949-ல் திருத்தி அமைக்கப்பட்டது. அதனுடன் மூன்று படை உத்தியோகஸ்தர்களுக்கும் கூட்டு ஆதாரப் பயிற்சி கொடுக்கக் கூட்டுப்படைக் கிளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இக்கிளையில் இரண்டு ஆண்டுகள் பயின்ற கடற் படைப் பயிற்சி மாணவர்கள் (Cadets) மீண்டும் 4-6 ஆண்டுகள் பயிற்சி பெறுவதற்காக இங்கிலாந்துக்கு அனுப்பப்பெறுகின்றனர்.

ஆகாயப் படை: இது பாகிஸ்தான் பிரிவினையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வடமேற்கிலிருந்த ஆகாயப் படை நிலையங்களுள் பெரும்பாலானவை பாகிஸ்தானிடம் சேர்ந்தன. ஆயினும் இந்திய யூனியன் ஆகாயப் படையினர் 1947-ல் மேற்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளை இந்தியாவுக்கு வெகு திறமையுடன் கொண்டுவந்து சேர்த்தார்கள். இதுபோல் காச்மீர நிகழ்ச்சியிலும் அரிய சேவை செய்தனர்.

இப்போது இந்தியக் கடற்படைக்கு இக் காலத்திய எந்திரங்கள் வாங்கப்படுகின்றன. பலவிதமான வேலைகளுக்கேற்ற கிளைகளும் ஏற்படுத்தப்படுகின்றன. நெடுந்தூரம் விமானம் ஓட்டிச் செல்லும் பயிற்சியும் அளிக்கப்டுகிறது. விமானம் ஓட்டும் பயிற்சி யளிப்பதற்காக அம்பாலாவிலும் ஜோதிபுரியிலுமிருந்த ஆரம்பப் பயிற்சிக்கிளைகள் இரண்டு பெரிய கல்லூரிகளாகத் திருத்தி அமைக்கப்பட்டுள. கப்பற் படைக்கான பொறியியல் நுட்பங்கள் கற்றுக் கொடுப்பதற்காகப் பெங்களூரில் பொறி நுட்பப் பயிற்சிக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவின் பகுதிகளையும் ஆகாயவிமானத்திலிருந்து போட்டோ பிடித்துத் தேசப் படங்கள் தயாரிக்கவும், சர்வே இலாகா ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. பம்பாயிலுள்ள இந்தியக் கடற் படையின் கப்பற்கட்டு நிலையத்தை விரிவுபடுத்த ஆலோசனை நடந்து வருகிறது.

இந்திய ராணுவத்திலுள்ளவர்களின் மக்கள் ராணுவ சேவை செய்வதற்கு ஏற்ற பயிற்சியும் கல்வியும் பெறுவதற்காக, ஜலந்தர், அஜ்மீர், பெல்காம், பெங்களூர் ஆகிய ஊர்களில் ராணுவக் கல்லூரிகள் இருக்கின்றன. ராணுவ உத்தியோகஸ்தர்களுக்கு அன்னிய மொழிகள் கற்றுக் கொடுப்பதற்காகப் புது டெல்லியில் அன்னிய மொழிக் கல்லூரி 1949-ல் அமைக்கப்பட்டது. ராணுவ மருத்துவக் கல்லூரி பூனாவில் நடந்து வருகிறது.

பொருளாதாரம்

வரலாறு: கிழக்கிந்தியக் கம்பெனியாரின் வருகையும், இந்தியாவின் பொருளாதார வாழ்க்கை மாறுபாடும்: இந்தியாவில், 17ஆம் நூற்றாண்டிலும், 18ஆம் நூற்றாண்டின் முற்பாதியிலும் வேளாண்மையே முக்கியத் தொழிலாயிருந்தது. இது தவிரப் பல கைத்தொழில்களும் வேலைகளும் உண்டு. இவைகளில் தலைசிறந்தது நெசவுத்தொழில். டாக்கா மஸ்லின் உலகறிந்தது. வங்காளத்தில் பட்டு நெய்தல், தோய்த்தல், காச்மீரத்திலும் லாகூரிலும் சால்வைகள் நெய்தல், லாகூரிலும் ஆக்ராவிலும் இரத்தினக் கம்பு ளங்கள் நெய்தல் சிறப்பான தொழில்களாயிருந்தன. இந்நாட்டில் கப்பல் கட்டுதலும் உண்டு. அக்காலத்தில் ஆசியா, ஐரோப்பா நாடுகளுடன் இந்தியா வியாபாரப்நடத்தி வந்ததுண்டு. அக்பர் காலம் முதல் ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்து பல இடங்களில் பண்டக சாலைகளைக் கட்டிக் கொண்டனர். அப்போது இந்தியாவில் ஆக்ரா, பாட்னா, அகமதாபாத், லாகூர், காசி,ஹூக்ளி, டாக்கா முதலிய பல நகரங்கள் செழிப்புற்றிருந்தன. போக்குவரத்துக்குச் சாலைகளும் ஆறுகளும் பயன்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் நாட்டில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளலும் குழப்பங்களாலும் மக்களின் பொருளாதார நிலை சீர்குலையத் தொடங்கியது. அன்னியர்கள் ஏராளமான செல்வத்தை இந்தியாவிலிருந்து கடத்தியதும், நாட்டில் ஆட்சிப் பலவீனமுண்டாயதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.

கம்பெனியார் ஆட்சியின் வளர்ச்சி : 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவெங்கும் பண்டக சாலைகள் ஏற்படுத்தி வியாபாரம் தொடங்கிற்று. சென்னை, பம்பாய், கல்கத்தா தலைநகரங்களாக ஆயின. 1744-1763-ல் மூன்று கருநாடக யுத்தங்களில் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்தியபின் தென்னிந்தியாவில் கம்பெனியார் ஆதிக்கம் பெற்றனர். 1757-ல் பிளாசிச் சண்டைக்குப் பின்னர், வங்காளத்திலும் ஆதிக்கம் அடைந்தனர். 1765-ல் மொகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்து வங்காளத்தின் ஆட்சியுரிமையும் பெற்றனர். இதன் மூலம் சட்டபூர்வமான ஆட்சிநிலை அடைந்தனர். 1773ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Regulating Act) வாயிலாகப் பார்லிமென்டு சபையின் அங்கீகாரமும் கிடைத்தது. 1784-ல் பிட் இந்தியச் சட்டப்படி (Pitt's India Act) கம்பெனியின் ஆட்சி இங்கிலாந்து மன்னரின் மேற்பார்வைக்குள்ளாக்கப்பட்டது. 1833ஆம் ஆண்டில் கம்பெனியின் சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அவர்கள் வியாபாரத்தை முற்றிலும் விட்டுவிட்டு இந்தியாவை ஆளத் தொடங்கினர். 1775 - 1833க்குள் காசி, சால்செட், மைசூர், சூரத்து, தஞ்சை, கருநாடகம், தற்காலம் பம்பாய் மாகாணம் என வழங்கும் பேஷ்வாவின் நாடு, அஸ் ஸாம், அரக்கான், டெனாசரிம், குடகு முதலிய பகுதிகளும் கம்பெனிக்குச் சொந்தமாயின.

கம்பெனியின் ஆதிக்கம் வளர வளர நாட்டில் செழிப்புற்றிருந்த வாணிகமும் கைத்தொழிலும் சீர் குலையத் தொடங்கின. கம்பெனியாரின் குமாஸ்தாக்களும் மற்ற வேலைக்காரர்களும் சுதேச நவாபுகளிடமிருந்தும் அரசர்களிடமிருந்தும் பல வழிகளில் சேர்த்த செல்வமும், ஆட்சி வருமான மீதமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, நாடு வறுமையுற்றது. கம்பெனியாரின் அநியாயப் போட்டியாலும் வழிகளாலும் இந்திய வியாபாரிகள் அழிந்தனர். வங்காளத்தில் நெசவாளிகள் கம்பெனியாரால் துன்புறுத்தப்பட்டனர். இந்தியத் துணிகள் இங்கிலாந்தில் இறக்குமதி யாகாவண்ணம் சட்டம் போட்டும், கடற்சுங்க வரியை உயர்த்தியும் தடுத்தனர். இவற்றால் வங்காளத்தின் நெசவுத்தொழில் பாழாயிற்று. நிலவரியின் சுமை தாங்காமல் வேளாண்மை கேடுற்றது. கருநாடகத்தில் நவாபுக்குக் கடன்கொடுத்த அன்னியர்கள் ஈடாக நிலத்தின் வருமானம் முழுவதையும் பெற்றுத் தம் நாட்டுக்கு அனுப்பினர். பொதுவாகக் கம்பெனியார் இந்தியாவின் வருமானத்தை நாட்டின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யாமல் நாட்டிலிருந்து வெளியேற்றி வந்தனர்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை: இந்தியாவின் வாழ்க்கை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களிலே வசித்து வந்தனர். ஒவ்வொரு கிராமமும் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்து கொண்டது. போக்குவரத்துச் சாதனங்களில் பல குறைகள் இருந்தன. இதனால் வாணிகம் தடைப்பட்டது. பஞ்ச காலங்களில் ஓரிடமிருந்து மற்றோரிடத்துக்கு உணவுப் பொருள்கள் கொண்டுபோவது இயலாத காரியம். கிராமங்களில் நாணயப் பழக்கம் இல்லை. பண்ட மாற்றுத்தான் நடைபெற்றது. தானிய மூலமாக செலவு செய்யப்பட்டது. நிலந்தான் செல்வமாயிருந் தது. நிலச் சொந்தக்காரர்களுக்குரிய பகுதி, தொழிலாளிகளுக்குரிய கூலி, சாமான்களுக்குரிய விலை முதலியன கிராம வழக்கப்படி தீர்மானிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் கிராமங்கள் அன்றிப் பல நகரங்களும் இருந்தன. இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவீதம் நகரங்களில் இருந்ததென்று கூறலாம். ஒவ்வொரு நகரத்திலும் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யப்பட்டு வந்தது. கைத்தொழிலால் வந்த பொருள்கள் மிகுந்த கலை நுணுக்கம் அமைந்த வேலைப்பாடுகளுடன் விளங்கினமையால் உலகப்புகழ் பெற்றிருந்தன. முக்கியமாக நெசவுத் தொழிலைத் தேசியத் தொழில் எனக் கூறலாம். இரும்பு, எஃகு உற்பத்தியும் உண்டு. பீரங்கி, வாள் முதலியன செய்யப்பட்டு வந்தன. வாளின் பிடிகளுக்கும் கேடயங்களுக்கும் சித்திர வேலைப்பாடு செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்தது. தங்கம், வெள்ளி, பித்தளைச் சாமான்களின்மீது எனாமல் பூசுவதும், சரிகைக் கம்பிகள் இழுத்தல், சலவைக்கல், தந்தம், சந்தனக் கட்டை ஆகியவற்றின் மீது சிற்ப வேலைகள் செய்தல், தோல் பதனிட்டுச் சாமான்கள் செய்தல், காகிதம் செய்தல், வாசனைச் சாமான்கள் செய்தல், கப்பல் கட்டுதல், கண்ணாடிச் சாமான்கள் செய்தல் முதலிய பலவிதத் தொழில்களும் நாட்டின் பற்பல பாகங்களில் செய்யப்பட்டு வந்தன. தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர்களின் நலனைக் கவனித்தும், ஆக்கப்படும் பொருள்களின் தரத்தைப் பாதுகாத்தும் வந்தன. மேலும் சில அறங்களிலும் ஈடுபட்டு வந்தன. பொதுவாக ஒவ்வொரு தொழிலாளியும் விலைக்குச் செய்யச் சொல்லும் பொழுதே பொருள்கள் செய்து கொடுத்தனன். அதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களைச் சாமான்கள் வாங்குபவர்களிடமே பெற்றனன்.

பொருளாதார மாறுபாடு : சுமார் 19ஆம் நூற்றாண்டின் இடையிலிருந்து பொருளாதார வாழ்க்கையில் பல மாறுபாடுகள் உண்டாயின. இதற்கு நாட்டில் அன்னியர்களும் மேனாட்டுப் பண்பும் புகுந்தமையும், இருப்புப் பாதைகள் முதலிய புதிய போக்குவரத்துச் சாதனங்கள் ஏற்பட்டமையும், சூயெஸ் கால்வாய் வெட்டப்பட்டமையும், இங்கிலாந்தில் தொழிற் புரட்சியின் காரணமாக எந்திரங்களால் பெருவாரியாக ஆக்கப்பட்ட சாமான்களை இந்தியாவில் விற்கவேண்டி அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட புதுக்கொள்கைகளும் காரணங்களாகும். கிராமங்களில் சுயதேவைகளைப் பூர்த்தி செய்வது நின்றது. அன்னிய நாட்டுப்பொருள்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. நாணயப் புழக்கம் உண்டாகியது. அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்று விவசாயம் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளுக்கிடையே கடன் மிகுந்து, நிலங்கள் கடன் கொடுத்தவர்களின் வசமாயின. ஏற்கெனவே பல கைத்தொழிற் பொருள்களை ஏற்றுமதி செய்த இந்தியா உணவுப் பொருள்களையும், மேனாட்டு எந்திரக் கைத்தொழிலுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்து, மேனாட்டிலிருந்து உற்பத்தி செய்த பொருள்களை இறக்குமதி செய்தது. இங்கிலாந்திலிருந்து குறைந்த விலையில் பெருவாரியாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் முன், இந்தியக் கைத்தொழிற் பொருள்கள் நிற்க முடியவில்லை. மேலும் பிரான்சில் இந்தியச் சால்வைகளுக்குக் கிராக்கி குறைந்தது. மரக்கரி விலை ஏற்றத்தாலும், வெளிநாடுகளிலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாலும் இந்திய இரும்பு, எஃகு உற்பத்தித் தொழில் பாழாகியது. சிலிநாட்டில் நைட்ரேட் இயற்கையில் அகப்பட்டதால் இந்தியாவில் வெடியுப்பு உற்பத்தி நின்றது. இவ்வாறு பல காரணங்களால் இந்தியக் கைத்தொழில்கள் அழிந்தன. பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிலவரியும் நில உரிமையும் : இந்தியாவில் பண்டைக் காலம் முதல் நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானமாக இருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்தின் மொத்த மகசூலில் ஆறில் ஒரு பங்கு அரசனுடையது. இப்பங்கு கிராமத் தலைவனால் களத்துமேட்டிலேயே வசூலித்துக் கொடுக்கப்பட்டது. முஸ்லிம் ஆட்சியிலும் இம்முறையே வழக்கிலிருந்தது. ஆனால் முன்னைவிட இப் பங்கு அதிகம். முதன் முதலாக அரசாங்க வருமானத்தை நாணயமாகப் பெற்றுக் கொள்வதற்குத் தைமூரினாலும், பிறகு ஷெர்ஷாவினாலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்பர் ஆட்சியில் தோடர் மல் செய்த நிலவரி ஏற்பாட்டின்படி நிலங்கள் அளக்கப்பட்டும், தரவாரியாகப் பிரிக்கப்பட்டும், அரசாங்கத்தின் பங்கு மொத்த மகசூலில் மூன்றில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டது. பிறகு முன் 19 ஆண்டுகளின் தானியச் சராசரி விலை விகிதப்படி மதிப்பீட்டு, இத்தொகை ஒவ்வொரு குடியானவனிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இத்தொகையைத் திரட்டிச் சர்க்காருக்குச் செலுத்தப் பல தரகர்கள் இருந்தனர். தோடர் மல்லின் ஏற்பாடு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு அமலில் இருந்தது. மொகலாய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஒரு புதிய வழக்கம் தோன்றியது. ஒரு ஜில்லா அல்லது பர்கனாவில் நிலவரியை வசூல் செய்யும் உரிமை ஏலத்தில் விடப்பட்டு ஏலமெடுப்போரிடமிருந்து அரசாங்கத்தார் - தொகையைப் பெற்றுக்கொண்டனர். சர்க்காருக்குக் கட்டின தொகைபோக மீதி ஏலமெடுப் போருடையது. நாளடைவில் இவ்வரி வசூல் செய்யும் உரிமை பெற்றவர்கள் மிக்க ஆதிக்கம் பெற்றனர். உரிமையும் பரம்பரைப் பாத்தியமாக ஆயிற்று. வங்காளத்தில் இவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டு, நிலத்தின் சொந்த உரிமையையும் அடைந்தனர். ஐக்கிய மாகாணத்திலும் மற்ற இடங்களிலும் இவர்கள் பல உரிமைகளைப் பெற்றனர்.

1765-ல் கிழக்கிந்தியக் கம்பெனியார் சர்க்கரவர்த்தி ஷா-ஆலமிடமிருந்து வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். கம்பெனியார் முதன் முதலில் ஜமீன்தார்களிடமே வரி வசூலிக்கும் வேலையை ஒப்படைத்தனர். ஆனால் ஜமீன்தார்கள் குடியானவரைத் துன்புறுத்தாவண்ணம் பாதுகாக்கப் பார்வையாளர்களையும் ஏற்படுத்தினர். 1769 முதல் 1774 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நிலவரியை ஒப்பந்தம் பேசிக் குத்தகைக்கு விட்டனர். பிறகு இக்குத்தகைத் தொகையை ஏலம் கூறி, ஏலமெடுப்போரிடமிருந்து மொத்தமாகப் பெற்று, வரி வசூல் உரிமையை ஏலதாரிடம் கொடுத்தனர். ஆண்டுதோறும் வரிவசூல் உரிமை குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இம்முறைகளில் பல குறைகள் இருந்தன. ஏலத்தில் அதிகத் தொகைக்கு எடுத்த பலர் பாழாயினர். 1786-ல் கவர்னர் ஜெனரலாக வந்த காரன் வாலிஸ் பிரபுவின் சிபார்சுப்படி 1793ஆம் ஆண்டில் வங்காளத்தில் சாசுவத நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி நிலவரியைக் குத்தகை எடுத்து வந்த ஜமீன்தார்கள் நிலச் சொந்தக்காரர்களாயினர். குடியானவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தொகையில் பதினொன்றில் பத்துப் பங்கு கம்பெனியாருக்குக் கட்டுவதென்றும், மீதி ஜமீன்தார்களுக்குரியதென்றும் ஏற்பாடாயிற்று. இத்தொகையை ஏற்றுவதோ குறைப்பதோ இல்லை என்று கம்பெனியார் உறுதி செய்தனர். 1802-1805-ல் இதே ஏற்பாடு வட சர்க்காரிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் திருநெல்வேலி ஜில்லாவிலும், இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் இருந்த பாளையக்காரர்களிடமும் இதே ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் சென்னை முதலிய தலைநகர்களைச் சுற்றிலும் கம்பெனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலங்களைப் பல துண்டுகளாகப் பிரித்து ஏலம் கூறி, ஏலமெடுப் போரைச் சாசுவத நிலவரி ஏற்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதே முறையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டுமென்று பலர் வற்புறுத்தினர். ஆனால் 1803-ல் இந்தியா மந்திரி மறுத்துவிட்டார். 1792-1802-ல் தற்காலம் சென்னை மாகாணத்தில் அடங்கிய பகுதிகள் கம்பெனியாருக்குச் சொந்தமாயின. இங்கே அக்காலம் கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்துவாரி நில ஏற்பாட்டை நிறுவினார். இம்முறைப்படி ஒவ்வொரு நிலச்சுவான்தாரிடமிருந்தும் நிலவரி வசூல் செய்வதென்று ஏற்பாடாயிற்று. நிலவரி செலுத்தும் வரை நிலத்தைப் பயிரிடுவதற்கும், பிறருக்கு மாற்றுவதற்கும், விற்பதற்கும் நிலச்சுவான்தார்களுக்கு உரிமை உண்டு. வரித்தொகை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபடியும் தீர்மானிக்கப்படும். இதே ஏற்பாடு பம்பாய் மாகாணத்திலும் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் பல கிராமங்கள் கிராம சமுதாயத்திற்குச் சொந்தமாக இருந்தன. இங்கே கம்பெனியார் இச்சமுதாய உரிமையை ஒப்புக் கொண்டு, நிலவரி செலுத்தும் பொறுப்பைச் சமுதாயத்தின் மீதும், ஒவ்வொரு கிராமவாசியின் மீதும் ஏற்றினர். மேலும் நிலவரித் தொகை தற்காலிகமாகவே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேற்பாட்டுக்கு மகல்வாரி முறை என்று பெயர். சில மாறுதல்களுடன் இதே முறை பஞ்சாபிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மத்திய மாகாணங்களில் ஒவ்வொரு கிராமத்திலிருந்த குடியானவர் தங்களால் பயிரிடப்படும் நிலத்தின்மேல் உரிமை கொண்டாடினர். மேலும் இங்கு மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் குடியானவர்களிடமிருந்து வரி வசூல் செய்து அரசாங்கத்திற்குச் செலுத்திவந்த நடுவர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்குப் பட்டேல்கள் அல்லது மல்குசார்கள் என்று பெயர். இவர்களையே நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்கி, வரி செலுத்தும் பொறுப்பை இவர்கள் மீது ஏற்றினர். இவ்விடத்திலும் தற்காலிகத் தீர்வைதான் போடப்பட்டது. இது தவிர ஐக்கிய மாகாணம், பஞ்சாப், வங்காளம், பம்பாய் முதலிய மாகாணங்களில் சிற்சில பகுதிகளில் இருந்து வந்த ஜமீன்தார்களோடு தாற்காலிகத் தீர்வை ஏற்பாடும் செய்யப்பட்டது. இம்மாதிரி இந்தியாவில் பற்பல நிலத்தீர்வை முறைகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. பொதுவாக இவைகளைச் சாசுவத ஜமீன் ஏற்பாடு என்றும், தாற்காலிக ஜமீன் ஏற்பாடு என்றும், ரயத்துவாரி தீர்வை ஏற்பாடு என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் அரசாங்கத்தின் உரிமை என்னவென்று பார்க்கலாம். இந்து, முஸ்லீம் ஆட்சியில் அரசாங்கத்தார் நிலத்திற்குச் சொந்த உரிமை கொண்டாடவில்லை. ஆகையால் ஆங்கிலேய அரசாங்கத்திற்குச் சட்டப்படி இவ்வுரிமை இல்லை. ஆனால் வரி விசாரணைக் கமிட்டி கூறியபடி இந்திய அரசாங்கத்தார் தங்களுடைய விசேஷ அதிகாரத்தினால் நில உரிமைகளைச் சிலருக்கு அளித்தும், சிலர் கொண்டாடி வந்த உரிமைகளை அனுமதித்தும் வந்தனர். ஆனால் புறம்போக்கு நிலங்களையும், கனிச்சுரங்கங்களையும், ஆறு, ஏரித் தண்ணீரையும் தங்களுக்கே சொந்தமென்று வைத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் சில சந்தர்ப்பங்களில் நிலத்தைத் தங்கள் விருப்பம்போல் வினியோகிக்கும் உரிமையையும் பறிமுதல் செய்யும் உரிமையையும் வைத்துக்கொண்டிருக்கின்றனர். பொதுவாக ஜமீன்தார்களுக்கும் ரயத்துக்களுக்கும் நிலத்தீர்வை செலுத்திக் கொண்டிருக்கும்வரை, நிலச் சொந்தம் உண்டு. ஜமீன் திட்டத்தில் முதன் முதலில் குடிகளின் உரிமைகளைப் பற்றி யாதும் கூறவில்லை. பிறகு ஜமீன்தார்களுக்கு விசேஷ அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன் பயனாகப் பயிரிடும் குடிகள் பல கஷ்டங்களுக்கு உள்ளாயினர். 1859-ல் குடிவாரச் சட்டம் ஒன்று பிறப்பித்தனர். இதனால் வாரத்தை அதிகப்படுத்தவோ, குடிகளை நிலத்திலிருந்து வெளிப்படுத்தவோ ஜமீன்தார்களுக்கு இருந்த அதிகாரம் குறைக்கப்பட்டது. 1885-ல் குடிவாரச் சட்டத்தின்படி குடிகளுக்கப் பல உரிமைகள் கொடுக்கப்பட்டன. இதுவே இந்தியாவில் குடிவாரச் சீர்திருத்தங்களுக்கு முதற்படியாகும். 1937லிருந்து கிசான் இயக்கங்களின் பயனாகப் பல மாகாணங்களில் குடிகளின் உரிமைகளைப் பாதுகாக்கப் பல சட்டங்கள் நிறுவப்பட்டிருக்கின்றன. இவைகளின் மூலம் நில வாரம் (Rent) குறைக்கப்படுகிறது. குடிகளை நிலத்திலிருந்து வெளியேற்றுவது தடுக்கப்படுகிறது. குடிகளுக்கு நிலத்தில் கிணறுகள் வெட்டிக்கொள்வதற்கும் வீடுகள் கட்டிக் கொள்வதற்கும் உரிமைகள் அளிக்கப்படுகின்றன. மேலும் நில வார நிலுவைமீது அதிக வட்டி வாங்கவும் முடியாது. குடிவாரப் பாத்தியத்தைப் பிறருக்கு மாற்றிக் கொடுக்கவும் இயலும்.

1938-ல் வங்க அரசாங்கம் சர் பிரான்சிஸ் புளொடு (Sir Francis Floud) தலைமையின்கீழ் ஒரு நிலத் தீர்வைக் கமிஷன் நியமித்தது. நிலவரித் திட்டங்களையும், முக்கியமாகச் சாசுவத நிலவரி ஏற்பாட்டையும் பரிசீலனை செய்து, அபிவிருத்திக்கு ஏற்ற ஆலோசனை கூறுவது இதன் வேலை. 1940-ல் இக்கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் சாசுவத நிலவரி ஏற்பாட்டை நீக்க வேண்டுமென்றும், ரயத்துவாரி முறையை நடை முறைக்குக் கொண்டுவர வேண்டுமென்றும் சிபார்சு செய்யப்பட்டது. இதன் பயனாகத் தற்காலம் பல மாகாணங்களில் ஜமீன்தாரி முறையை அறவே ஒழிக்கச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

வேளாண்மை வரலாறு: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலிருந்து இந்திய வேளாண்மையில் புரட்சிகரமான ஒரு மாறுதல் ஏற்பட்டது. இந்திய விவசாயிகள் கைத்தொழில்களுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களை மேலும் மேலும் அதிகமாக உண்டாக்கத் தலைப்பட்டனர். மேலும் அதுவரை உள்நாட்டுத் தேவைக்கென்றே செய்யப்பட்டு வந்த வேளாண்மை இப்பொழுது அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக விசேடமாகச் செய்யப்பட்டு வந்தது. அரிசி, கோதுமை, பருத்தி, சணல்,எண்ணெய் வித்துக்கள் முதலியன கிராமங்களிலிருந்து அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இம் மாறுதலுக்குப் பல காரணங்கள் உண்டு. கம்பெனியார் இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்து, இந்தியாவுக்கு இங்கிலாந்திலிருந்து உற்பத்திப் பொருள்களை இறக்குமதி செய்வதையே கொள்கையாகக்கொண்டு, தானியங்களையும், கச்சாப் பொருள்களையும் விளைவிக்கவும் ஏற்றுமதி செய்யவும் ஆதரவளித்தனர். மேலும் சாலைகள், இருப்புப் பாதைகள், நீராவிக்கப்பல்கள் முதலிய போக்குவரத்துச் சாதனங்களின் அபிவிருத்தியினாலும், சூயெஸ் கால்வாயின் திறப்பினாலும் இந்தியாவிலிருந்து விளைபொருள்களை ஏற்றுமதி செய்தல் எளிதாயிற்று. கிராமங்களில் பணப் பழக்கம் ஏற்பட்டு, நில வாரம், கூலி, வட்டி முதலியன பணமாகக் கொடுக்க வேண்டி வந்ததால் குடியானவர் தங்களுடைய பொருள்களை விற்றுப் பணமாக்க வேண்டியதாயிற்று. இது தவிர அமெரிக்காவில் நடந்த உள்நாட்டுப்போரின் காரணமாக அந்நாட்டிலிருந்து இங்கிலாந்திற்குப் பருத்தி ஏற்றுமதி குறைந்தது. ஆகவே, இங்கிலாந்தில் இந்தியப் பருத்திக்கு அதிக கிராக்கி ஏற்பட்டது. விவசாயப் பொருள்களுக்கு அதிகவிலை கிட்டியது. ஆனால் 1870 லிருந்து 1880 வரை அடுத்தடுத்துப் பல பஞ்சங்கள் ஏற்பட்டதாலும், பருத்தி விலை குறைந்ததாலும், வரிச் மிகவும் ஏறினதாலும் குடியானவர் துன்பங்களுக்கு ஆளாயினர். சுமை

1870-ல் அரசாங்கத்தார் முதன் முதலில், இம்பீரியல் விவசாய இலாகா ஏற்படுத்தினர். மாகாணங்களிலும் விவசாய இலாகாக்கள் நிறுவப்பட்டன. வேளாண்மைக்குரிய புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதும், விசாரணைகளைச் செய்வதும், பஞ்ச காலங்களில் நிவாரண வேலை செய்வதும். பொதுவாக வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவதும் இந்த இலாகாக்களின் வேலைகளாகும். குடியானவரின் கடன் தொந்தரவை நீக்க 1879-ல் தக்காண விவசாயிகள் உதவிச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

1880 முதல் 1895 வரை பொதுவாக விவசாயிகளுக்கு நல்ல காலமென்று கூறலாம். ஆனால் 1895-ல் கஷ்ட காலம் தொடங்கியது. இரண்டு பஞ்சங்கள் உண்டாகி, மக்களுக்கும் கால்நடைகளுக்கும் மிகுந்த சேதம் ஏற்பட்டுப் பயிர்த்தொழிலுக்கும் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதிக்கும் குறைவு ஏற்பட்டது. 1883-ல் நில அபிவிருத்திச் சட்டமும், 1884-ல் விவசாயிகள் கடன் சட்டமும் அமலுக்கு வந்தன. அரசாங்கத்தாரால் குடியான வருக்கு நிலத்தை வளப்படுத்தவும், மாடுகள் விதைகள் வாங்கவும் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுக்கப்பட்டு, நாளடைவில் சிறுகச் சிறுக அத்தொகை திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் முதன்முதலில் வேளாண்மை முறைகளைப்பற்றி ஆராய்ந்து, முன்னேற்றத்துக்கான வழிகளை அறிய முயற்சியெடுக்கப்பட்டது. இதற்கு டாக்டர் வோயல்கர் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டார். இவரது அறிக்கையின் பயனாக வேளாண்மை, காடுகள் முதலியவைகளைப் பற்றிய கல்வியைக் கற்பிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மற்றும் மக்களுக்கு வேளாண்மையில் புது முறைகள், புது உழவுக் கருவிகள் இவைகளின் நன்மைகளை நேரில் காட்ட ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தப்பட்டு வந்தன. சாதிக் குதிரைகள், ஆடுமாடுகள் இன அபிவிருத்தியின்பொருட்டுக் கண்காட்சிகளும், பொலிகாளைப் பண்ணைகளும் நடத்தப்பட்டு வந்தன.

1903-ல் பூசா என்ற இடத்தில் ஆராய்ச்சிக்குத் தேவையான நிபுணர்களையும் வசதிகளையும் கொண்ட ஓர் இம்பீரியல் விவசாய இன்ஸ்டிடியூட் ஸ்தாபிக்கப்பட்டது. 1905-ல் மாகாண விவசாய இலாக்காக்களின் வேலைகளையும் திட்டங்களையும் இணைத்துச் சீர் செய்ய ஓர் அகில இந்திய விவசாய போர்டு அமைக்கப்பட்டது. 1908-ல் பூனாவில் ஓர் உயர்தர வேளாண்மைக் கல்லூரி திறக்கப்பட்டது. பின் ஆண்டுகளில் கான்பூர், நாகபுரி, லயல்பூர், கோயம்புத்தூர் முதலிய இடங்களிலும் உயர்தர விவசாயக் கல்லூரிகள் நிறுவப்பட்டன. 1921 முதல் மாகாணங்கள் விவசாய இலாகாவின் பொறுப்பை ஏற்றுக்கொண்டன. அது முதல் இம்பீரியல் விவசாய இலாகா, நாட்டின் பொதுவான விஷயங்களைக் கவனித்தும், வேளாண்மையையொட்டிய பலவேறு விஷயங்களை ஆராய்ச்சி செய்யும் ஸ்தாபனங்களை நடத்தியும் வருகிறது. 1929-ல் விவசாய ராயல் கமிஷன் கூறியபடி இம்பீரியல் விவசாய ஆராய்ச்சிச் சபை நிறுவப்பட்டு, வேளாண்மை முன்னேற்றம், கால்நடை ஆராய்ச்சி, விளைபொருள்களைச் சீராக விற்பனை செய்தல், வேளாண்மைக்குரிய அரசாங்க வெளியீடுகளை வெளியிடுதல் போன்ற வேலைகளைக் கவனித்துவருகிறது. இந்த நூற்றாண்டு முதல் நீர்ப்பாசனம், கூட்டுறவு இயக்கம் ஆகியவற்றிலும் அரசாங்கம் ஊக்கம் காட்டியது. மேலும் 1930-ல் அயல் நாட்டுக் கோதுமை, அரிசி, சர்க்கரை மூலம் இந்நாட்டுப் பொருள்களுக்கு ஏற்பட்ட போட்டியைக் கடல் சுங்க வரி போட்டு முறிக்கச் சர்க்கார் ஏற்பாடு செய்தது. 1926-ல் லின்லித்கோ பிரபுவின் தலைமையின்கீழ் ஒரு விவசாயக் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1928-ல் இக் கமிஷன் வெளியிட்ட அறிக்கையை ஆதாரமாகக் கொண்டுதான் இந்தியாவில் வேளாண்மைச் சீர்திருத்தம், கிராமச் சீரமைப்பு முதலியன நடைபெற்று வந்தன. 1937-ல் இங்கிலாந்திலிருந்து சர் ஜான் ரஸ்ஸல், என். சீ. ரைட் என்ற இரு நிபுணர்கள் இந்திய வேளாண்மை முன்னேற்றத்திற்கான வழிகள் கூற வரவழைக்கப்பட்டனர். அவர்களும் பூச்சி யிடையூறுகளைத் தொலைத்தல், புன்செய்ப் பயிர் ஆராய்ச்சி, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலியவை களை நல்ல முறையில் பயிரிடுதல், கால்நடை அபிவிருத்தி முதலிய பல துறைகளில் ஆலோசனை கூறினர்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ச்சி குன்றியிருந்த வேளாண்மை 1914க்குள் தழைத்தது. 1918-ல் ஒரு பஞ்சம் வந்தது; முதல் உலக யுத்த காலத்தில் சர்க்கார் உணவுத் தானியங்களின் விலைகளைக் கட்டுப்படுத்தினர். ஆனால் குடியானவர்களுக்குத் தேவையான வெளிநாட்டுச் சாமான்களின் விலை கட்டுப்படுத்தப் படாததால் அவர்களுக்குக் கஷ்டம் உண்டாயிற்று; 1921-23-ல் சற்று நிமிர்ந்த குடியானவர் 1929-ல் உலகம் முழுவதும் உண்டாகிய வியாபார மந்தத்திற்கு உள்ளாயினர். பொருள்களின் விலை இறங்கியது. கோதுமை, எண்ணெய் வித்துக்கள் முதலிய பொருள்களுக்கு வெளிநாட்டுப் போட்டி ஏற்பட்டது. இதனால் குடியானவர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. 1935-36-ல் வியாபார மந்தம் நீங்கியது. 1939-ல் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியது. ஜப்பான் போரில் இறங்கியதிலிருந்து விவசாயப் பொருள்களுக்கு விலை ஏறியது. நில விலையும் ஏறிற்று. கிராமங்களில் பணம் குவிந்தது. ஆனால் 1943-ல் சர்க்கார் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தியதிலிருந்து குடியானவர் விளைவிக்கும் பொருள்களுக்கு வருவாய் குறைந்தது. ஆனால் அவர்கள் வாங்கவேண்டிய பொருள்களுக்கு விலை அதிகம் கொடுக்கவேண்டியதாயிற்று.

பர்மாவிலும் கிழக்குக் கோடி நாடுகளிலும் போர் பரவிய பின்னர், இந்தியாவில் உணவு நெருக்கடி மிகுந்தது. 1942-ல் சர்க்கார் உணவுப் பெருக்க இயக்கத் தைத் தொடங்கினர். 1943-ல் உணவுத் தானியங்கள் பற்றி ஒரு கொள்கையை மேற்கொள்ள, அதற்கு வேண்டிய ஆலோசனை கூற டாக்டர் கிரெகரியின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. இக் குழுவினர் இந்தியாவிலிருந்து உணவுப் பொருள்களை ஏற்றுமதி செய்யக் கூடாதென்றும், ஒரு நெருக்கடியான நிலைமை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க உணவுத் தானியங்களைச் சேகரித்து, ஒதுக்கி வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், சர்க்காரே உணவுத் தானியங்களைச் சேகரித்து, அதைப் பங்கீடு செய்யும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், மக்களிடையே உணவுப் பங்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், உணவுப் பெருக்க இயக்கத்தை வெற்றிகரமாக மேலும் நடத்த வேண்டுமென்றும் கூறினர். ஒரு நான்கு ஆண்டுகளுக்கு இக் கொள்கையை அரசாங்கம் மேற்கொண்டது. 1943-ல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தைப் பற்றி விசாரணை செய்த உட்ஹெட் கமிஷன் கூறிய பல ஆலோசனைகளின் பயனாக வெளி நாடுகளிலிருந்து உணவுத் தானியம் இறக்குமதி செய்யப்பட்டது. உணவுத் தானியங்களுக்கும் மற்ற விளை பொருள்களுக்கும் சரியான விலை என்ன கொடுக்கலாம் என்று தீர்மானிக்க 1944-ல் ஒரு துணைக் குழுவும் நியமிக்கப்பட்டது. 1946 ஜனவரியில் இந்திய அரசாங்கம் தமது உணவு, வேளாண்மைக் கொள்கைகளை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி வேளாண்மையை அபிவிருத்தி செய் வதும், உணவைப் பெருக்குவதும், வேளாண்மையில் ஈடுபடும் வேலைக்காரர்களுக்கு நேர்மையான கூலி கொடுக்க வேண்டும் என்பதும், கிராம மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், உடல் வளர்ச்சிக்கேற்ற உணவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதும், குடிசைத் தொழில் முன்னேறச் செய்வதும் அரசாங்கத்தாரின் கொள்கைகளாம். 1947 செப்டெம்பர் மாதம் சர்க்கார் உணவுத் தானியங்களை விரைவில் பெருக்க வழி கூற, சர் புருஷோத்தம தாஸ் தாகூர் தாஸின் தலைமையில் மற்றொரு உணவுத் தானியக் கமிட்டியை நியமித்தனர். 1947-ல் இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. வேளாண்மைக்குத் தீங்கு விளைத்தது. சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் இருந்த நல்ல நீர்ப்பாசன வசதிகள் கூடிய நிலங்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட்டன. அவ் விடங்களில் தேவைக்குமேல் விளையும் தானியங்கள் இந்திய யூனியனுக்குக் கிடைக்காமற் போயின. இதனால் உணவு நெருக்கடி பெருகியிருக்கிறது. மேலும் நல்ல சாதி ஆடுமாடுகள் பிரதேசங்களும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. மற்றும் பாகிஸ்தானிலிருந்து இந்து அகதிகள் ஏராளமாக இந்தியாவிற்கு வந்ததன் பயனாகவும் உணவு நெருக்கடி மிகுந்திருக்கிறது. முஸ்லிம்களால் காலி நிலங்கள் இவர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்கள் ஏற்கெனவே சிந்து, பஞ்சாப் மாகாணங்களில் மேற்கொண்ட வேளாண்மை முறைகளைக் கைவிட்டுப் புதிய முறைகளைக் கையாள வேண்டியதாயிற்று. பருவ மழைகள் சரியாகப் பெய்யாததனால் உணவு நெருக்கடி இன்னும் அதிகரித்திருக்கிறது. அயல் நாட்டிலிருந்து உணவு இறக்குமதி செய்ததனால், இந்தியா சம்பாதித்துச் சேர்த்த அன்னிய நாட்டு நாணய நிதி (Foreign Exchange Resources) வீணா கக் குறைந்து போகிறது. ஆகவே தனக்கு வேண்டிய உணவை இந்தியாவே உற்பத்தி செய்துகொள்ளவேண்டுமென்று அரசாங்கம் வேண்டிய முயற்சி எடுத்து வருகிறது. பற்பல மாகாணங்களில் தரிசாகக் கிடக்கும் நிலங்கள் எந்திரக் கலப்பைகளின் உதவியால் சாகுபடிக்குக் கொண்டு வரப்படுகின்றன. மத்திய அரசாங்கத்தாரால் மாகாணங்களுக்கு எந்திரக் கலப்பைகள் (Tractors) கொடுக்கப்பட்டிருக்கின்றன. 1951க்குள் வெளி நாடுகளிலிருந்து உணவு இறக்குமதியை நிறுத்திவிட வேண்டுமென்று திட்டமும் போட்டிருந்தனர். ஆனால் பல எதிர்பாராத காரணங்களால் அத் திட்டம் நிறைவேறவில்லை.

பஞ்சமும் பஞ்சகால உதவியும் : இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன் ஏற்பட்ட பஞ்சங்களின் முழு விவரங்கள் தெரியவில்லையாயினும் அடிக்கடி பஞ்சங்கள் ஏற்பட்டு வந்தனவென்றும், 1291, 1555, 1630ஆம் ஆண்டுகளில் மிகக்கொடிய பஞ்சங்கள் மக்களை வாட்டினவென்றும் அறிகிறோம். கிழக்கிந்தியக் கம்பெனியார் ஆட்சியிலும் (1760-1857) இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றின. முதன்முதலில் கம்பெனியார் யாதொரு நடவடிக்கையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் பின்னர் பஞ்ச காலத்தில் தானியவிலைக் கட்டுப்பாடு செய்தல், தானிய ஏற்றுமதியைத் தடுத்தல், பொது மராமத்து வேலைகளைத் துவக்குதல் போன்ற சில முறைகளைக் கையாண்டனர். 1857 முதல் நாளிதுவரை இந்தியாவில் பல பஞ்சங்கள் தோன்றியிருக்கின்றன. இவைகளில் 1860-61-ல் வட மேற்கு இந்தியாவில் உண்டான பஞ்சம், 1865-67-ல் ஒரிஸ்ஸா பஞ்சம், 1868-69-ல் ராஜபுதனப் பஞ்சம், 1873-74-ல் பீகார் பஞ்சம், 1976-78-ல் சென்னை மாகாணப் பஞ்சம், 1896-98-ல் தேச முழுவதும் ஏற்பட்ட பஞ்சம், 1899-1900 பஞ்சம், 1918-20 பஞ்சம், 1943-ல் வங்காளப் பஞ்சம் ஆகியவை கொடியவை. பொதுவாக மக்கள் தொகை பெருகி நிலத்திலிருந்து வருவாய் போதாததும், நகரங்களில் இருந்த கைத்தொழில்கள் அழிந்ததும், பருவ மழைகள் சரிவரப் பெய்யாமையும், போக்குவரத்து வசதிகள் இல்லாமையும் பஞ்சங்களுக்குக் காரணங்களாகும். 1860க்குமுன் பஞ்சம் என்றால் உணவுப் பஞ்சம்தான். உணவுப் பொருள்களைக் குறையேற்பட்ட பிரதேசங்களுக்கு விரைவில் அனுப்ப இயலாமல் போனதால் அவை ஏற்பட்டன. ஆனால் 1860க்குப் பின் இருப்புப் பாதைகள், சாலைகள் முதலியன போட்ட பிறகு பஞ்சம் என்றால் பணப் பஞ்சந்தான். வேலையின்மையால் தேவையானவற்றை வாங்குவதற்குப் போதுமான பணமில்லாமல் கஷ்டம் ஏற்பட்டது. 1943-ல் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு அரிசி இறக்குமதி நின்றதாலும் உணவுப் பொருள்களின் விலை ஏறியதாலும், மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கமும் உடனே நடவடிக்கை எடுக்காததாலும் வங்காளத்தில் பஞ்சம் ஏற்பட்டது.

முதன் முதலாக 1865-ல் ஏற்பட்ட ஒரிஸ்ஸா பஞ்சத்திற்குப் பின் தான் அரசாங்கத்தார் பஞ்சநிவாரணவேலையில் ஊக்கம் காட்டினர். எவ்விதத்திலேனும் பஞ்சத்தினால் ஏற்படக்கூடிய உயிர்ச் சேதத்தைத் தடுப்பது தங்கள் பொறுப்பு என்று அறிவித்தனர். 1873-74-ல் பீகாரில் பஞ்சத்தின்போது எல்லா ஜில்லாக்களிலும் பஞ்ச நிவாரண வேலைகள் துவக்கப்பட்டன. உணவுத் தானியங்கள் அரசாங்கத்தாரால் இறக்குமதி செய்யப்பட்டன ; 1880-ல் சர் ரிச்சர்டு ஸ்ட்ராட்ஸியின் தலைமையில் பஞ்ச விசாரணைக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இவர்களது அறிக்கையில் பஞ்ச காலத்தில் உடல் வலிமை உள்ளவர்களுக்கு வேலைகொடுத்து, உயிர் வாழ்ப் போதுமான கூலி கொடுக்க வேண்டுமென்றும், வேலைசெய்ய இயலாதவர்க்கு இலவச உதவியளிக்க வேண்டுமென்றும், நிலச்சுவான்தார்களுக்கு நிலவரியைத் தள்ளுபடி செய்தும், கடன் கொடுத்தும் உதவ வேண்டுமென்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இக்கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு மாகாணத்திலும் பஞ்சநிவாரணச் சட்டத் தொகுப்புக்கள் செய்யப்பட்டன. 1878 முதல் மத்திய அரசாங்கம் ஒவ்வோராண்டிலும் ரூ.1½ இலட்சம் பஞ்ச நிவாரணத்திற்கென்று ஒதுக்கிவைக்கலாயிற்று. பஞ்ச காலத்தில் உதவவும், சாதாரண காலங்களில் நீர்ப்பாசனம் முதலிய வசதிகளைச் செய்து கொடுத்துப் பஞ்சம் வராமல் தடுக்கவும் இந்நிதியிலிருந்து பணம் கொடுக்கப்பட்டது. தவிர, சர்க்கார் காடுகளில் ஆடுமாடுகளை மேய்க்க அனுமதித்தனர். கால் நடைகளைப் பாதுகாக்க வைக்கோல் டிப்போக்கள் வைத்தனர். இருப்புப் பாதைகளை அதிகமாக அமைத்தனர். 1898-ல் சர் ஜேம்ஸ் லயல் தலைமையில் ஒரு பஞ்ச விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் அறிக்கையைப் பரிசீலனை செய்வதற்குள்ளாக 1899-1900-ல் பஞ்சம் தோன்றியது. 1901-ல் அந்தோனி மக்டானல் தலைமையில் மூன்றாவது பஞ்சவிசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் முக்கியமாகப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு மன உறுதியை உண்டாக்க வேண்டுமென்றும், அதற்காகப் பஞ்சம் வரக்கூடுமென்ற நிலையிலேயே குடியானவர்களுக்குக் கடன் கொடுத்தும், நிலவரியைத் தள்ளுபடி செய்தும் உதவ வேண்டுமென்றும், முன்கூட்டியே பஞ்சநிவாரண வேலைக்கான திட்டங்கள் சித்தமாக வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்களின் உதவியையும் நாட வேண்டுமென்றும், கூட்டுறவு இயக்கத்தைத் துவக்க வேண்டுமென்றும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க வேண்டுமென்றும் வற்புறுத்தினர். இக் கமிஷன் சிபார்சுப்படி மறுபடியும் பஞ்சச்சட்டத் தொகுப்புக்கள் திருத்தியமைக்கப்பட்டுப் பின் தோன்றிய பஞ்சங்களில் அவ்வாறே உதவி செய்யப்பட்டு வந்தது. 1937 லிருந்து மாகாணங்களே பஞ்சநிவாரணப் பொறுப்பை முற்றிலும் ஏற்கலாயின. 1943-ல் வங்காளப் பஞ்சத்தின் பயனாக உட்ஹெட் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் தேசமக்கள் அனைவருக்கும் போதுமான உணவு அளிக்கும் பொறுப்பை அரசாங்கமே ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும், தானியங்களைச் சேகரித்துப் பங்கீடு செய்ய வேண்டுமென்றும், கள்ளமார்க்கட்டு லஞ்ச ஊழல் முதலியவைகளைத் தடுக்கவேண்டும் என்றும், விவசாயப் பொருள்களுக்கு நியாயமான விலை கொடுக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட உணவு இலாகா ஒன்று ஏற்படுத்தவேண்டுமென்றும் கூறிற்று. இந்த ஆலோசனைகள் மிகவும் பயன் தரலாயின.

நீர்ப் பாசனம் : இந்தியாவில் வேளாண்மை செய்வோர் பருவ மழையையே எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பெரிய அணைக்கட்டு (Grand Anicut) காவேரி கழிமுகத் தீவுப் பிரதேசங்களுக்கு நீர்ப்பாசனம் அளித்து வந்திருக்கிறது. துங்கபத்திரை ஆற்றில் அமைந்த பல அணைகள் 16ஆம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டவை. பிரோஸ் துக்ளக்கினால் யமுனையிலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் பின்பு அக்பரால் பழுது பார்க்கப்பட்டது. ஷாஜகான் காலத்தில் அதிலிருந்து டெல்லிக்கு ஒரு கிளை கொண்டு போகப்பட்டது பஞ்சாப், சிந்து மாகாணங்களிலும் கூடப்பல கால்வாய்கள் வெட்டப்பட்டிருந்தன. 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் பழைய கால்வாய்கள் அனைத்தும் பழுதடைந்திருந்தன. ஆனால் ஹேஸ்டிங்ஸ் பிரபு காலம் முதல்தான் இவைகளைக் கம்பெனியார் சீர்செய்ய வாரம்பித்தனர். தென்னிந்தியாவிலும் பண்டைக் காலத்து அரசர்களாலும் பாளையக்காரர்களாலும் கட்டப்பட்ட பல நீர்த்தேக்கங்கள் சீர்கெட்டுக் கவனிக்கப்படாமலிருந்தன. 1836-ல் கொள்ளிடத்தில் அணைக்கட்டு வேலை துவக்கப்பட்டது. அதனால் தஞ்சை, திருச்சி, தென் ஆர்க்காடு முதலிய மாவட்டங்களுக்குப் பாசன வசதி ஏற்பட்டது. இவ்வேலையைத் துவக்கி நடத்திய புகழ் சர் ஆர்தர் காட்டன் என்பவரைச் சார்ந்தது. இவர் பின்னர் கோதாவரி ஆற்றில் அணைக்கட்டுக்கள் கட்டினார். 1853-ல் கிருஷ்ணா நதியில் அணைக்கட்டையும் துவக்கினார். லாரன்ஸ் பிரபு காலத்தில் நீர்ப்பாசன வேலைகளை அரசாங்கத்தாரே செய்து முடிப்பதென்றும், அவற்றிற்கான மூலதனத்தைக் கடன் வாங்கிச் சேகரிப்பதென்றும் முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின்படி 1860-1880க்குள் ஐக்கிய மாகாணத்திலும் பஞ்சாபிலும் பல பெரிய திட்டங்கள் முடிக்கப்பட்டன. ஆயினும் இக்காலத்தில் அரசாங்கத்தார் இருப்புப் பாதைகள் போடுவதில் காட்டின ஊக்கத்தைக் கால்வாய்கள் வெட்டுவதில் காட்டவில்லை.

1880-ல் பஞ்ச விசாரணைக் கமிஷனின் ஆலோசனைப் படிபஞ்சம் ஏற்படக் கூடிய பிரதேசங்களில் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கத் தீர்மானித்தனர். இவ்வகைத் திட்டங்களுக்குப் பாதுகாப்புத் திட்டங்களென்றும், மற்றும் பெரிய திட்டங்களுக்கு வருவாய் அளிக்கும் திட்டங்கள் என்றும் பெயர். இவ்விருவகை வேலைகளும் பெரிய திட்டங்களாகும். இவை தவிர, குளங்கள், பாசன ஏரிகள் முதலியவைகளையும் சர்க்கார் கண்காணித்து வந்தனர். இவைகளைச் சில்லரை மராமத்து வேலைகள் என்று கூறுவதுண்டு. 1900க்குள் பல பஞ்சப் பாதுகாப்பு வேலைகள் செய்து முடிக்கப்பட்டன. இவற்றிற்கு வேண்டிய பொருள் பஞ்ச நிவாரண நிதியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது.

1901-ல் நியமிக்கப்பட்ட நீர்ப்பாசனக் கமிஷனின் சிபார்சுகளை அடிப்படையாகக்கொண்டு 1903லிருந்து பல கால்வாய்கள் வெட்டப்பட்டன; முன்னைவிட இரண்டு மடங்கு பணம் செலவு செய்யப்பட்டது; தண்ணீர் வசதியடைந்த நிலப்பரப்பும் 70 சதவீதத்திற்கு மேல் பெருகியது; 1922 லிருந்து நீர்ப்பாசன வேலைகள் மாகாணங்களின் கண்காணிப்புக்குள்ளாயின; மாகாணங்களுக்கு அதிக அதிகாரமும், பணச் செலவு செய்வதில் அதிக சுதந்திரமும் கொடுக்கப்பட்டன. பஞ்சாபில் சட்லெஜ் நதித் திட்டங்கள், சிந்துவில் சுக்குர் நீர்த்தேக்கம், சென்னை மாகாணத்தில் மேட்டூர் அணை, பம்பாயில் பந்தர்தாரா, லாயிடு அணைகள், ஐக்கிய மாகாணங்களில் சாரதா-அயோத்திக் கால்வாய்கள் போன்ற பெரிய திட்டங்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் போடப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசாங்கம் நீர்ப்பாசனத்தில் அக்கறை காட்டி வருகிறது. 1931-ல் மத்திய நீர்ப்பாசனச் சபை ஒன்று, நீர்ப்பாசன முறைகளில் செய்யப்பட்ட ஆராய்ச்சி அறிவைத் திரட்டி மாகாணங்களுக்கு அளிப்பதற்காக நிறுவப்பட்டது. 1945-ல் மத்திய நீர் வழி, நீர்ப்பாசனக் கப்பல் போக்குவரத்துக் கமிஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. புதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் போடுவதும், அவைகளைத் துவக்குவதும், மேற்படி துறைகளில் இஞ்சினீயர்களைப் பயிற்சி செய்விப்பதும், அரசாங்கத்தாருக்கு நீர்ப்பாசனம் சம்பந்தமான ஆலோசனை கூறுவதும், இக்கமிஷனின் அலுவல்களாகும். 1947-ல் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் பிரிவினால் சிந்துவிலும் பஞ்சாபிலும் உள்ள பெரிய கால்வாய்களும் அணைகளும் பாகிஸ்தானுக்குச் சொந்தமாயின. தற்காலம் இந்திய சர்க்கார் நாட்டிலுள்ள நீர் நிலைகளைப் பல காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய பலநோக்கத் திட்டங்கள் போட்டிருக்கின்றனர். இத்திட்டங்களால் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும், நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கவும், மின்சாரச் சக்தியை மிகுதியாக உண்டாக்கவும் போக்குவரத்துச் சாதனங்களைப் பெருக்கவும் கூடும் சில திட்டங்கள் ஏற்கெனவே துவக்கப்பட்டிருக்கின்றன. மேற்கூறிய திட்டங்களில் ஆந்திர ராச்சியத் துங்கபத்திரை யாற்றுத் திட்டம், கோதாவரி மீது ராமபாதசாகர் அணை, கிழக்குப் பஞ்சாபில் பாக்ராநங்கல் திட்டம், பீகார்-மேற்கு வங்காளத்தில் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம், ஓரிஸ்ஸாவில் மகாநதித் திட்டம், நேபாளம், வடக்கு பீகாரில் கோசித் திட்டம், மத்திய மாகாணத்தில் நருமதை தபதித் திட்டங்கள் முக்கியமானவை. பார்க்க: ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம்.

இவை தவிர விவசாயிகளுக்குக் கடன் கொடுத்துக் கிணறுகள் வெட்ட ஊக்கமளிக்கப் படுகிறது; பாசனத்திற்காகத் தண்ணீர்க் குழாய்கள் வைத்து எந்திரப் பம்புகளை வைக்கவும், குளங்களைச் சீர்செய்யவும் உதவியளிக்கப்படுகிறது.

கூட்டுறவு இயக்கம் : தற்சமயம் இந்தியாவிலுள்ள சங்கங்களை நாணயச் சங்கங்களென்றும், மற்றச் சங்கங்களென்றும் இரு வகையாகப் பிரிக்கலாம். நாணயச் சங்கங்களை விவசாயிகள் சங்கம் என்றும் விவசாயிகளல்லாதார் சங்கம் என்றும் பிரிக்கலாம். பிரதம சங்கங்களுக்குமேல் யூனியன்களும், மத்திய பாங்குகளும், மாகாண பாங்குகளும் உண்டு. மேலும் ஆதார நில அடமான பாங்குகளும், மத்திய நில அடமான பாங்குகளும் உண்டு. மற்றச் சங்கங்களில் முதலில் ஆதாரப் பண்டகசாலைகளும், அவைகளுக்குமேல் பண்டங்களை மொத்தமாக வாங்கி ஆதாரப் பண்டகசாலைகளுக்கு வினியோகிக்கும் மொத்தப் பண்டகசாலைகளும், தொழிலாளிகளுக்குத் தேவையான கச்சாப் பொருள்கள், தொழிற் கருவிகள் முதலியன வாங்கும் சங்கங்கள், வீடுகட்டும் சங்கங்கள், இன்ஷுரன்சு செய்யும் சங்கங்கள், விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யும் சங்கங்கள், பால் விற்பனைச் சங்கங்கள், நெசவாளர், கரும்பு சாகுபடி செய்வோர் சங்கங்கள் போன்ற பலவகைச் சங்கங்களும் இருக்கின்றன. மேலும், வேளாண்மை, பாடசாலை நடத்துதல், மருத்துவ உதவியளித்தல் முதலியனவும் கூட்டுறவு முறையில் நடைபெற்று வருகின்றன.

கூட்டுறவு இயக்கம், சங்க அங்கத்தினரிடையே சிக்கன வாழ்க்கையும், பரஸ்பர உதவியும் பரவச் செய்திருக்கிறது; அங்கத்தினருக்குக் குறைந்த வட்டிக்குப் பணம் கிடைக்க வசதியளித்திருக்கிறது; பொதுவாகக் கொடுக்கல் வாங்கல் செய்வோரிடையே வட்டி விகிதத்தைக் குறைக்கவும் காரணமாக இருக்கிறது. கூட்டுறவுப் பாங்குகள் பணச் சேமிப்புக்கு வசதிகள் அளித்து, மக்களிடையே சேமிக்கும் பழக்கத் தையும் பரவச் செய்திருக்கிறது. பார்க்க: கூட்டுறவு.

கைத்தொழில் வளர்ச்சி : 19ஆம் நூற்றாண்டிலிருந்து புதிய கைத் தொழில்கள் பல தோன்றின. இவைகளைத் தோட்டக்கால் கைத்தொழில்களென்றும் (Planta tion Industries). தொழிற்சாலைக் கைத்தொழில்களென்றும் (Factory Industries) இரு வகையாகப் பிரிக்கலாம்.

தோட்டக்கால் கைத் தொழில்கள் : முதலிலிருந்தே ஐரோப்பியர்களே இத் தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தேயிலை, காப்பி, அவுரி, ரப்பர், சணல் முதலிய வைகள் முக்கியமான தோட்டக்கால் பயிர்கள்.

தேயிலை : 1834-ல் பென்டிங்க் பிரபு காலத்தில் தேயிலைப் பயிர் செய்வதில் ஊக்கம் கொண்டு சீனாவிலிருந்து விதைகளும், பயிரிட ஆட்களும் வருவித்து, 1835-ல் அஸ்ஸாமில் ஒரு தேயிலைத் தோட்டம் போடப்பட்டது. சில ஆண்டுகளுக்குள் அஸ்ஸாம், வங்காளம், வயனாடு, நீலகிரி, திருவிதாங்கூர், பஞ்சாப் முதலிய இடங்களிலும் பல தேயிலைத் தோட்டங்கள் போடப்பட்டன. 1871லிருந்து இத் தொழில் செழித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டது. பயிர் செய்வதில் நல்ல முறைகள் கையாளப்பட்டதாலும், தேயிலையைப் பாடம் செய்வதில் எந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டதாலும் தேயிலை மகசூல் பெருகி, உலகச் சந்தையிலே இந்தியத் தேயிலை ஒரு முக்கிய இடம் பெற்று விட்டது. 1930-ல் உலக வியாபார மந்தத்தாலும் ஜாவாவிலும், சுமாத்திராவிலும் தேயிலை பெருவாரியாகப் பயிரானதாலும் இந்தியாவில் இத் தொழிலுக்குக் குறைவு ஏற்பட்டது. எனவே இந் நிலையைச் சமாளிக்க 1933லிருந்து 1947 வரை தேயிலை ஏற்றுமதி செய்யும் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து, அவைகளைப் போலவே தேயிலை ஏற்றுமதி விகிதத்தைக் குறைத்துக்கொண்டது. இரண்டாவது உலக யுத்தத்தின் காரணமாகத் தேயிலை விலையும் ஏற்றுமதியும் ஏராளமாக உயர்ந்தன.

காப்பி : இந்தியாவில் 1830லிருந்து காப்பிச் செடிகள் பயிராக்கப்பட்டு வந்துள்ளனவாயினும் 1840-ல் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் இத் தொழிலைக் கைப்பற்றிய பின்னரே காப்பித் தோட்டத் தொழில் வளர்ச்சி யடைந்தது. 1860 முதல் 1879 வரை இத் தொழில் நல்ல ஏற்றம் அடைந்தது. ஆனால் 1879-ல் ஒருவித நோயினாலும், வண்டுகளாலும் பயிருக்கு அழிவும், பிரேசில் காப்பிக்கொட்டையினால் போட்டியும் ஏற்பட்டு, இத் தொழிலில் ஊக்கம் குறைந்து, காப்பித் தோட்டங்கள் தேயிலைத் தோட்டங்களாகவும் சின்கோனாத் தோட்டங்களாகவும் மாற் றப்பட்டன. 1889 முதல் 1896 வரை சற்றுத் தலை நிமிர்ந்த இத் தொழிலுக்கு மறுபடியும் மந்தம் ஏற்பட்டது இதற்குக் காரணம் உலகத்தில் தேவைக்கு மேல் அதிகக் காப்பிக்கொட்டை உற்பத்தியானதே. இரண்டாவது யுத்தத்தின்போது இந்தியக் காப்பிக் கொட்டையை அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாமல் இத் தொழிலுக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டது. இந் நிலையைப் போக்க இந்தியக் காப்பி போர்டு ஒன்று அமைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தி, உள் நாட்டில் பிரசாரம் மூலம் காப்பி குடிக்கும் பழக்கத்தைப் பெருகச் செய்து தொழிலுக்கு உயிர் அளித்தனர். காப்பிச் செடியும் நிரம்பப் பயிர் செய்யப்பட்டு மகசூலும் பெருகிற்று. 1943-ல் காப்பிக்கொட்டையின் ஏற்றுமதி, உள் நாட்டு வினியோகம், விலை நிருணயம் முதலிய எல்லா அதிகாரத்தையும் இந்தப் போர்டுக்குக் கொடுத்தனர். 1948 லிருந்து காப்பிக்கொட்டையின் விலை ஏறியிருக்கிறது. இதற்குக் காரணம் உலகத்தில் காப்பி உற்பத்திக் குறைவும், உள்நாட்டிலும் ஐரோப்பாவிலும் காப்பிக் கொட்டைக்குக் கிராக்கி மிகுந்திருப்பதுமே யாகும்.

அவுரி : அவுரிச் சாகுபடியும், அவுரிச் சாயம் இறக்குதலும் இந்தியாவில் வெகுகாலமாக நடந்து வந்த தொழிலாகும். முற்காலத்தில் குஜராத்திலும், இந்தியாவின் மேற்குப்பாகத்திலும் அவுரி பயிராக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் அவுரிச் சாய வியாபாரம் செய்தனர். பின்னர் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இத்தொழில் குன்றியது. கம்பெனியார் திரும்ப 19ஆம் நூற்றாண்டில் இத்தொழிலை வங்காளத்தில் துவக்கினர். 1895 வரை இத்தொழிலுக்கு ஏற்றம் உண்டாயிற்று. ஆனால் 1897லிருந்து ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் ரசாயன முறையில் சாயம் தயாரிக்கப்படவே, இச்சாய ஏற்றுமதி குறைந்து அவுரிச் சாகுபடியும் குன்றியது. முதல் உலக யுத்தத்தின்போது சற்றுத் தலைநிமிர்ந்த இத்தொழில் மறுபடியும் குன்றிவிட்டது. இரண்டாவது உலக யுத்தத்தினால் பயன் ஒன்றும் ஏற்படவில்லை.

ரப்பர் : 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ரப்பர் தோட்டத் தொழில் இந்தியாவில் தொடங்கிற்று. திருவிதாங்கூர், கொச்சி, சென்னை, அஸ்ஸாம், குடகு, மைசூர், அந்தமான் ஆகிய இடங்களில் ரப்பர் மரங்கள் பயிராகின்றன. முதல் உலக யுத்தம் இரண்டாம் உலக யுத்த காலங்களில் இந்தியாவில் விளையும் ரப்பருக்குக் கிராக்கி மிகுந்தது. யுத்தத்திற்குப் பிறகு விலை இறங்கிவிட்டது. வெளிநாட்டுப் போட்டியைத் தடைசெய்ய, அரசாங்கம் ரப்பர் விலையைக் கட்டுப்படுத்தியும், இறக்குமதியைத் தடுத்தும், இறக்குமதியாகும் ரப்பர் சாமான்கள்மீது வரி போட்டும் இந்திய ரப்பர் தோட்டத் தொழிலைப் பாதுகாக்க உதவியிருக்கிறது.

தொழிற்சாலைத் தொழில்கள் : பிரிட்டிஷ் வர்த்தக முதலாளிகளின் தூண்டுதலின் மேல், கிழக்கிந்தியக் கம்பெனியார் இந்தியக் கைத்தொழிலுக்கு ஆதரவு அளித்து வந்ததை நிறுத்த வேண்டுமென்றே கைத் தொழில்களைத் தலைகாட்டாமல் அடித்தனர். 1858 லிருந்து இந்தியா ஆங்லேய மன்னரின் ஆட்சிக்குட்பட்ட பின்னரும் அரசாங்கத்தார் கைத்தொழில் வளர்ச்சியில் போதுமான ஊக்கம் காட்டவில்லை. 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கர்சன் பிரபு காலத்தில்தான் அரசாங்கத்தாரின் போக்குச் சற்று மாறி கைத்தொழில் வளர்ச்சிக்காக இம்பீரியில் வர்த்தக இலாகாவும், 1906-ல் மாகாணங்களில் கைத்தொழில் இலாகாக்களும் நிறுவப்பட்டன. ஆனால் மறுபடியும் பிரிட்டிஷ் முதலாளிகளுடைய எதிர்ப்பினாலும், 1910-ல் இந்தியா மந்திரி மார்லி பிரபு இம் முற்போக்குக் கொள்கையை ஆதரிக்காததாலும் இந்திய அரசாங்கத்தாருக்கு ஊக்கம் குன்றி இலாகாக்கள் கலைக்கப்பட்டன. ஆனால் இதுசமயம் நாட்டில் சுதேசி இயக்கம் வலிவு பெற்றது. மறுபடியும் 1914-ல் தான் கைத்தொழில் இலாகா நிறுவப்பட்டது. இவ்வாறு சர்க்கார் அசட்டையாக இருந்தும்கூட 19ஆம் நூற்றாண்டில் சில முக்கியமான கைத்தொழில்கள் தோன்றின.

நிலக்கரி எடுத்தல் : 1830-ல் ராணிகஞ்சு என்ற இடத்தில் முதன் முதல் நிலக்கரி வெட்டி யெடுக்கப்பட்டது. 1854க்குள் இன்னும் மூன்று சுரங்கங்கள் வெட்டப்பட்டன. கிழக்கிந்திய ரெயில்வே அமைக்கப்பட்ட பின்நிலக்கரிக்குத் தேவை அதிகம் ஏற்பட்டு, 1880க்குள் 56 சுரங்கங்களில் வேலை நடந்து வந்தது. ஆனால் சூயெஸ் கால்வாய் போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டபின் அயல்நாட்டு நிலக்கரி இறக்குமதியால் போட்டி ஏற்பட்டது. நாளடைவில் இக்கரியும் இந்தியாவுக்குத் தேவையாக இருந்தது. பின்னர் இருப்புப் பாதைகளும் தொழிற்சாலைகளும் அதிகரிக்கவே, இத்தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது.

முதல் உலக யுத்தமும் கைத்தொழில்களும்: 1914 முதல் 1919 வரை நடந்த முதல் உலக யுத்தத்தின் பயனாக இந்தியக் கைத்தொழிற் பொருள்களுக்கு ஏராளமான கிராக்கி ஏற்பட்டுக், கைத்தொழில்கள் செழித்து வளர்ந்தன. மேலும் இந்தியக் கைத்தொழில் வளராவிடில் யுத்த உதவிக்கு இடையூறு ஏற்படும் என்பதைப் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் உணர்ந்தனர். இந்தியக் கைத்தொழில் நிலைமையைப் பரிசீலனை செய்து, மேலும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூற 1916-ல் கைத்தொழில் கமிஷன் ஒன்று நியமித்தனர். 1917-ல் இந்தியாவின் பொருட் சாதனங்களை யுத்த உதவியில் முற்றிலும் ஈடுபடுத்த இந்தியன் மியூனிஷன்ஸ் போர்டு (Indian Munitions Board) நியமிக்கப்பட்டது. இப்போர்டு இந்தியாவில் நடந்துவந்த கைத்தொழில்களுக்கும், இந்திய முதலாளிகள் புதிதாகக் கைத்தொழில்களை ஏற்படுத்துவதற்கும் பல உதவிகள் செய்தது.

1916-ல் தாமஸ் ஹாலண்டு தலைமையில் நியமிக்கப்பட்ட கைத்தொழில் கமிஷன் 1918-ல் அறிக்கை விடுத்தது. இவ்வறிக்கையில் இந்தியா தன் சுய தேவைகளைத் தானே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையில் அமைய வேண்டுமென்றும், அதற்காகக் கைத்தொழில்களை வளர்க்க அரசாங்கம் முழு உதவியும் செய்ய வேண்டுமென்றும் முக்கியமாக வற்புறுத்தப்பட்டன. கமிஷன் செய்த சிபார்சுகள் சிலவற்றைத்தான் அரசாங்கத்தார் ஏற்றனர். யுத்தம் முடிந்தவுடன் கைத்தொழில் இலாகாக்கள் ஏற்படுத்தப்பட்டன. 1919-ல் கைத்தொழில் விஷயங்கள் மாகாண அரசாங்கத்தின் நிருவாகத்திற்குட்பட்டன. ஆனால் மாகாணங்களுக்குக் கைத்தொழில்களை வளர்ப்பதற்கு வேண்டிய வசதிகள் இல்லை. மேலும் 1920க்குப்பின் வியாபார மந்தம் ஏற்பட்டுக் கைத்தொழில்களுக்குக் குறைவேற்பட்டது. தவிர அயல்நாட்டுப் போட்டியும் உண்டாயிற்று. சணல் தொழிலைத் தவிர மற்ற எல்லாக் கைத்தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டது. இறக்குமதி வரியின் மூலம் அயல்நாட்டுப் போட்டியைத் தடுக்க வேண்டுமென்று முதலாளிகள் கேட்டனர். 1921-ல் இந்திய வருமான ஆராய்ச்சிக்கமிஷன் (Indian Fiscal Commission) நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் 1922-ல் சமர்ப்பித்த அறிக்கையில் நாட்டின் பரப்பு, மக்கள் தொகை, வளம் முதலியவைகளுக்கு ஏற்றவாறு இந்தியாவின் கைத்தொழில்கள் வளர்ச்சியடையவில்லையென்றும், கைத்தொழில் வளர்ச்சிக்காகக்குறிப்பிட்ட சில கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரியின் மூலம் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்றும் கூறியது. பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களுக்கு ஏராளமான கச்சாப் பொருள்கள், தொழிலாளிகள், உள்நாட்டுக் கிராக்கி, எந்திரங்களை இயக்க மலிவான மின்சாரம் அல்லது வேறு சக்தி சாதனங்கள் முதலிய வசதிகள் இருக்க வேண்டும். மேலும் அக்கைத்தொழில் நாளடைவில் பாதுகாப்பின்றி அயல் நாட்டுப் போட்டியைத் தாங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மேற்கண்ட வகையில் அளிக்கப்படும் பாதுகாப்புக்குப் பகுத்தறிந்தளிக்கப்படும் பாதுகாப்பு (Discriminating Protection) என்று பெயர். நாட்டின் அடிப்படையான அல்லது மூலாதாரக் கைத்தொழில்களுக்கு (Basic Industries) நன்கொடை (Bounties)யளிக்க வேண்டுமென்றும், பாதுகாப்புக்குரிய கைத்தொழில்களைத் தேர்த்தெடுத்துச் சிபார்சு செய்யச் சரக்கு வரி போர்டு (Tariff Board) ஒன்று நிறுவ வேண்டுமென்றும் கமிஷன் கூறிற்று. இக்கமிஷனின் சிபார்சுகளை அரசாங்கத்தார் ஒப்புக்கொண்டனர். 1923-ல் சரக்குவரி போர்டு நியமிக்கப்பட்டது. இப்போர்டு 1939 வரை யிருந்தது. அநேக கைத்தொழில்களைப்பற்றி விசாரணைகள் நடத்திப் பல கைத் தொழில்களுக்குப் பாதுகாப்புச் சிபார்சு செய்தது. இதனால் பல கைத்தொழில்கள் நல்ல வளர்ச்சியடைந்தன.

தீக்குச்சித் தொழில்: i 1922க்குப் பின்னரே இக் கைத்தொழில் ஏற்றமடைந்தது. முக்கியமாக, சுவீடன் நாட்டுக் கூட்டுக் கம்பெனி (Combine) ஒன்று இந்தயாவில் பல தீக்குச்சித் தொழிற்சாலைகளை ஏற்படுத்தியது. இக் கம்பெனியின் போட்டியைத் தடுக்க இந்தியத் தொழில் முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் நாட்டில் உள்ள கம்பெனிகளுக்குள் யாதொரு வித்தியாசமும் பாராட்டாமல் அயல் நாட்டிலிருந்து வரும் சரக்கின்மீது 1928-ல் அரசாங்கம் பாதுகாப்பு வரி போட்டது. இன்று அயல் நாட்டு இறக்குமதி மிகக் குறைவு.

காகிதம் செய்தல்: 1918 லிருந்து காகிதத் தொழிற்சாலைகள் பல இந்தியாவில் நிறுவப்பட்டன. 1925-ல் இத் தொழிலுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இதன் பயனாக இத் தொழில் நல்ல வளர்ச்சியடைந்தது. மேற்கூறியவைகளைத் தவிரப் பல்வேறு கைத்தொழில்களும் வளர்ந்து வந்தன. நிலக்கரித் தொழில் 1944-ல் அரசாங்கத்தாரின் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. பல வகையில் சர்க்கார் உதவி பெற்று நிலக்கரி எடுப்பும் அதிகரித்து வருகிறது. தோல் பதனிடும் தொழிலுக்கு 1935 வரை பதனிடாத தோலின் மேல் ஏற்றுமதி வரி போட்டு அரசாங்கம் உதவி செய்தது. இரண்டாவது யுத்தம் நல்ல ஏற்றம் அளித்தது. முதல் யுத்தத்தின்பின் இந்தியாவில் சிமென்டு கம்பெனிகள் ஏற்பட்டன. ஆனால் 1923-25-ல் வியாபார மந்தத்தினால் நெருக்கடி ஏற்பட்டது. கம்பெனி முதலாளிகள் பாதுகாப்பு வேண்டுமென்று கூறினர். ஆனால் சரக்கு வரி போர்டு சிபார்சு செய்யவில்லை. ஏனெனில் இத்தொழிலுக்கு இந்த நிலை அயல் நாட்டுப் போட்டியினால் ஏற்படவில்லை யென்றும், உள் நாட்டு உற்பத்திப் பெருக்கத்தால் ஏற்பட்டதென்றும் அது கூறியது. 1936-ல் எல்லாக் கம்பெனிகளும் அசோசியேட்டெட் சிமென்டு கம்பெனி என்ற பெயரில் ஒன்றாக இணைக்கப்பட்டன. இவ்விணைப்பினால் உள்நாட்டுப் போட்டி குறைந்து இத்தொழிலுக்கு வளர்ச்சி யேற்பட்டது. 1936-37-ல் இன்னும் பல புதிய கம்பெனிகள் தோன்றின. புதுக் கம்பெனிகளால் மறுபடியும் போட்டி உண்டாயிற்று. புதுக் கம்பெனிகளை ஒன்றாக இணைக்க முயற்சிகள் செய்தும் வீணாயின. சமீபகாலத்தில் எல்லாக் கம்பெனிகளுக்கிடையேயும் ஒப்பந்தம் ஏற்பட்டுப் போட்டி நின்றது. இரண்டாவது யுத்தத்தினால் இத்தொழிலுக்கும் நல்ல ஏற்றமுண்டாகியது. இதுவரை கூறிய பழைய கைத்தொழில்கள் தவிர. 1939லிருந்து பிளாஸ்டிக் சாமான்கள், நெசவு எந்திரங்கள், எந்திரக் கருவிகள், மின்சாரச் சாமான்கள் முதலியன செய்தல், கப்பல் கட்டுதல் போன்ற பலவித புதிய தொழில்களும் ஆரம்பிக்கப் பட்டிருக்கின்றன. பார்க்க : கைத் தொழில்கள் - இந்தியக் கைத்தொழில்.

இந்தியாவின் வெளிநாட்டு வாணிகம்: 19ஆம் இந்தியாவின் நூற்றாண்டின் இடைக்காலத்திலிருந்து இந்திய வாணிகத்தில் புரட்சிகரமான மாறுதல்கள் ஏற்பட்டன. ஏற்றுமதியும் இறக்குமதியும் மிகவும் பெருகின. அதுவரை நேர்த்தியான பஞ்சு பட்டு ஆடைகள், அவுரிச் சாயம், வெடியுப்பு முதலிய பண்டங்களை ஏற்றுமதி செய்து, தங்கம், வெள்ளி, கம்பளி ஆடைகள் முதலியவைகளை இறக்குமதி செய்த இந்தியாவிலிருந்து உணவுத் தானியங்கள், தேயிலை, பருத்தி, சணல், எண்ணெய் வித்துக்கள் முதலிய மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுத் துணிமணி, எந்திரங்கள், சர்க்கரை, ரசாயனப் பொருள்கள், மருந்துவகைகள்; கண்ணாடிச் சாமான்கள், சாயச்சரக்குகள், பெட்ரோல் முதலிய உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இம்மாறுதல்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உண்டான தொழிற்புரட்சியின் காரணமாக பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களையும் உணவுத் தானியங்களையும் மாத்திரம் இறக்குமதி செய்து, இந்தியாவுக்குப் பிரிட்டிஷ் எந்திரச்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை ஏற்றுமதி செய்யத் தீர்மானித்துப் பல முறைகளைக் கையாண்டனர். புதிய சாலைகளும் ரெயில் வண்டிகளும், நீராவிக் கப்பல்களும் இந்திய வாணிகத்தைப் பெருக்கவும், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்து மூலப் பொருள்களைத் திரட்டி ஏற்றுமதி செய்யவும், அயல் நாட்டுப் பண்டங்களை நாட்டிற் புகுத்தவும் உதவின. அமெரிக்க உள்நாட்டுப் போரின் (1861-65) பயனாக இங்கிலாந்தில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நின்று இந்தியப் பருத்திக்கு ஏராளமான தேவையேற்பட்டது. 1869-ல் சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் பயனாக இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பண்டங்களை வெகு விரைவில் கேடு வராமலும், குறைந்த செலவிலும் ஏற்றிச் செல்ல இயன்றது. மத்தியதரைக் கடலில் அமைந்த துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நேர் வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடிந்தது; வியாபாரமும் பெருகிற்று.

19ஆம் நூற்றாண்டு முடிய இந்திய அரசாங்கத்தார் வியாபார விஷயமாகத் தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றினர். வருமானத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அவ்வப்பொழுது குறைவான ஏற்றுமதி இறக்குமதி வரி போட்டதைத் தவிர வேறு தடையொன்றும் செய்யவில்லை; தடையிலா வாணிகம் (Free Trade) நடந்து வந்தது. 1900 முதல் 1914 வரை இந்திய வாணிகத்தில் இறக்குமதியை விட ஏற்றுமதி மிகுந்து வந்தது. மேலும் இக்காலத்தில் இங்கிலாந்துடன் வியாபாரத் தொடர்பு அதிகம் உண்டெனினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஜப்பானுடனும், மத்திய ஐரோப்பிய நாடுகளுடனும் வாணிகம் பெருகி வந்தது. மேலும் கர்சன் பிரபு காலத்தில் அரசாங்கத்தாரும் முதன் முதல் வாணிகத் துறையில் தலையிட்டு உதவி செய்ய வேண்டுமெனக்கருதி, 1950-ல் வாணிகக் கைத்தொழில் இலாகா ஒன்று ஏற்படுத்தினர்.

முதல் உலக யுத்தத்தினால் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளுடன் வியாபாரம் நின்றது. யுத்தகாலக் கட்டுப்பாடுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலின் தொந்தரவினாலும் நடுநிலைமை நாடுகளுடனும் கூட வியாபாரம் செய்யத் தடையுண்டாயிற்று. போதுமான கப்பல்களின்மையால் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குக்கூட ஏற்றுமதி குறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்தது. ஆயினும் யுத்தத்தின் பயனாக இந்திய வாணிகத்தில் ஒரு நல்ல மாறுதல் உண்டாயிற்று. துணி, சணற் பைகள், இரும்பு, எஃகு சாமான்கள் முதலிய உள்நாட்டுப் பொருள்களுக்குத் தேவையேற்பட்டு, ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 1916 முதல் 1921 வரை அரசாங்கத்தாரின் தடையிலா வாணிகக் கொள்கை மாறியது. பண நெருக்கடியை முன்னிட்டுச் சுங்க வரி விகிதத்தை உயர்த்தியும், பல சாமான்கள் மீது புதிதாக வரி போட்டும், தோல், தேயிலை, அரிசி முதலியவைகள் மீது ஏற்றுமதி வரி போட்டும் வந்தனர். மேலும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பதனிடும் தோலுக்குச் சுங்க வரி விஷயத்தில் சலுகையும் காட்டப்பட்டது. இவ்வாறு முதன் முதலாகத் தடையிலா வியாபாரக் கொள்கைக்குத் தடை ஏற்பட்டது; வியாபாரச் சலுகையும் காட்டப்பட்டது.

1919க்குப் பின் யுத்த நெருக்கடிகள் தீர்ந்து, இந்திய வாணிகம் யுத்தத்திற்கு முன் இருந்ததைவிடப் பெருகிற்று. அயல்நாட்டு உற்பத்திப் பண்டங்களின் இறக்குமதி மேலும் குறைந்தது. இந்தியாவிலிருந்து சணல், தோல், கம்பளி, உலோகங்கள் முதலிய பொருள்களால் ஆக்கப்பட்ட பண்டங்களின் ஏற்றுமதி பெருகிற்று. ஆனால் நூல், பட்டு, அவுரிச்சாயம், கஞ்சா முதலிய பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. பிரிட்டன், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதியும், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தன. 1923 லிருந்து அரசாங்கத்தார் இந்தியக் கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரி மூலம் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததிலிருந்து தடையிலா வாணிகக் கொள்கை அடியோடு கைவிடப்பட்டது. 1929 முதல் 1939 வரை உலக வியாபார மந்தம் தொடங்கிற்று. இந்திய விவசாயப் பொருள்களின் விலை இறக்கத்தாலும், நாட்டில் பணப்பழக்கக் குறைவாலும், பாதுகாப்புக் கொள்கை பின்பற்றப்பட்டதாலும் இந்தியாவின் அயல்நாட்டு வியாபாரம் மிகுதியும் குறைந்தது. இறக்குமதியைவிட ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவுக்கு வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1931-32 லிருந்து தங்கம் ஏற்றுமதிசெய்ய வேண்டிவந்தது. 1932 லிருந்து மந்தம் நீங்கி, நிலைமை மாறி 1934-37-ல் ஏற்றுமதி அதிகரித்தது. 1937-39-ல் மறுபடியும் சற்று வாணிகத்தில் குறைவு ஏற்பட்டு, 1939-ல் திரும்பத் தழைத்தது. 1929 லிருந்து 1939 வரை பத்தாண்டுகளில் அயல் நாடுகளிலிருந்து இந்தியக் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களும் எந்திரங்களும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அரசாங்கத்தாரால் வியாபார வளர்ச்சிக்காக 1918-ல் இங்கிலாந்தில் ஒரு வர்த்தகக் கமிஷனர் நியமிக்கப்பட்டார். 1926-ல் வர்த்தகப் பிரசார உத்தியோ கஸ்தர் கமிஷனருக்கு உதவியாக நியமிக்கப்பட்டார். 1930லிருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அலெக்சாந்திரியா முதலிய இடங்களிலும் வர்த்தகக் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். 1922-ல் வர்த்தக விவரப் புள்ளி இலாகா (Department of Commercial Intelligence & Statistics) திருத்தியமைக்கப்பட்டது. இந்த இலாகா சர்க்காருக்கும் வியாபாரிக்குமிடையே தொடர்பு ஏற்படுத்தியும், எல்லாவிதமான புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிட்டும், மற்றும் பல வகையிலும் வியாபாரத்துக்கு உதவி செய்கிறது.

இந்தியா - பிரிட்டன் வியாபார ஒப்பந்தங்கள்: 1932-ல் கானடா நாட்டில் ஆட்டவா (Ottawa) நகரில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைச் சேர்ந்த நாடுகள் கூடிய சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் சாம்ராச்சிய நாடுகளுக்கிடையில் வியாபாரச் சலுகைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டன. இந்தியாவும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் பலவற்றிற்கு மற்ற நாட்டுப் பண்டங்களுக்கு மேல் போடும் இறக்குமதி வரியைக் காட்டிலும் குறைந்தவரி போட்டுச் சலுகை காட்டுமென்றும், அதேபோல இந்தியப் பொருள்களுக்கு இங்கிலாந்தில் சலுகை காட்டுவதென்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டு, 1933 லிருந்து அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. 1933 செப்டெம்பர் மாதம் ஆட்டவா ஒப்பந்தத்தையொட்டி இரும்பு, எஃகு இறக்குமதி பற்றி மற்றொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இவைகளுக்கு இந்தியாவில் எதிர்ப்பு இருந்து வந்தது. 1935-ல் இந்தியாவும் இங்கிலாந்தும் மற்றுமொரு வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மேலும் பல வியாபாரச் சலுகைகள் காட்டுவதென்றும், வேறு உதவிகள் செய்வதென்றும் ஏற்பட்டன. 1936-ல் கூடிய புதிய இந்தியச் சட்டசபை மேற்கூறிய ஒப்பந்தங்களை எதிர்த்து, அவற்றை ரத்து செய்யப் போவதாகப் பிரிட்டனுக்கு எச்சரிக்கையும் செய்தது. 1939-ல் புதிய இந்திய - பிரிட்டிஷ் வியாபார ஒப்பந்தம் நிறைவேறிற்று. இதன்படி முன்செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, இங்கிலாந்துக்குக் காட்டி வந்த சலுகைகள் குறைக்கப்பட்டன.

இந்தியா-ஜப்பான் வியாபார ஒப்பந்தங்கள் : 1932 லிருந்து ஜப்பானியத் துணிமணிகளால் இந்தியத் துணிமணிகளுக்கு ஏற்பட்ட வலுத்த போட்டியைத் தடுக்க அரசாங்கத்தார் இறக்குமதி வரியை மிக உயர்த்தினர். உடனே ஜப்பான் இந்தியப் பருத்தியை வாங்காமல் புறக்கணித்தது. 1934-ல் இரண்டு நாடுகளும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 1937-ல் புதிய ஒப்பந்தம் ஒன்றும் செய்துகொள்ளப்பட்டது. இவ்வொப்பந்தப்படி ஜப்பான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் துணிமணிகளுக்கும், இந்தியாவிலிருந்து ஜப்பான் வாங்க வேண்டிய பருத்திக்கும் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த ஒப்பந்தம் 1940 வரை அமலில் இருந்தது.

இரண்டாவது உலக யுத்தம் : 1939-45 யுத்தத்தின் பயனாக எதிரி நாடுகளுடனும் எதிரிகள் வசமான நாடுகளுடனும் இந்திய வியாபாரம் நின்றது. இதர நாடுகளுடனும் வாணிகம் செய்யப் பல இன்னல்கள் உண்டாயின. ஆனால் இந்தியப் பொருள்களுக்கு நேச நாடுகளில் நல்ல கிராக்கி ஏற்பட்டது. எதிரிகள் கையில் பண்டங்கள் போகாமல் தடுக்கவும், அவசியமான பொருள்கள் நாட்டைவிட்டு அகலாமலிருக்கவும் கண்டிப்பான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் செய்யப்பட்டன. 1940லிருந்து இறக்குமதியும் அரசாங்க அனுமதி பெற்றுத்தான் செய்யவேண்டியதாயிற்று. இறக்குமதி செய்யவேண்டிய பொருள்களின் தேவையைப் பொறுத்தும், அவைகளுக்கு மாற்றுப் பண்டங்கள் உள்ளதைப் பொறுத்தும், இறக்குமதியினால் இந்தியா சம்பாதித்த அயல்நாட்டு நாணய நிதியில் வீண் குறைவு ஏற்படுமா ஏற்படாதா என்பதைப்பொறுத்தும் இறக்குமதிசெய்ய அனுமதிகள் கொடுக்கப்பட்டன. பொதுவாக இந்தியாவின் ஏற்றுமதியில் குறைவு ஏற்படவே, இதைப் பெருக்க வழிகள் கூற 1940-ல் ஓர் ஏற்றுமதி ஆலோசனைச் சபை (Export Advisory Council) ஏற்படுத்தப்பட்டது. மேலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இந்திய வியாபாரத்தைப் பெருக்க வழிதேட டாக்டர் கிரெகரி, சர் டேவிட் மீக் ஆகிய இருவரும் தூது சென்றனர். ஆனால் அவர்களுடைய அறிக்கையில் அ.ஐ. நாடுகளில் இந்திய வியாபாரத்துக்குப் பல இன்னல்கள் உள்ளனவென்றும், இங்கிலாந்து, சீனா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய நாடுகளுக்குத்தான் இந்தியப் பண்டங்களை ஏற்றுமதி செய்ய வழி தேடவேண்டுமென்றும் கூறினர்.

1945-ல் ஜெனீவா நகரத்தில் 23 நாடுகள் கூடி வர்த்தகம், சரக்கு வரி சம்பந்தமாக ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டன. இந்தியாவும் இந்த ஒப்பந்தத்திற்கு இணங்கியது. இவ்வொப்பந்தப்படி 23 நாடுகளும் ஒன்றுக்கொன்று வியாபாரச் சலுகைகள் காட்டிவந்தன. 1948 மார்ச்சில் ஹவானா (கியூபா) நகரத்தில் ஐக்கிய நாடுகள் (United Nations) வர்த்தகம், தொழில் சம்பந்தமான கூட்டம் ஒன்று கூட்டிச் சர்வதேச வர்த்தகம் பற்றி ஒரு குறிப்பை வெளியிட்டன. உலக நாடுகளுக்கிடையில் தடையிலா வாணிகம் நிலவச் செய்ய உலக வாணிக ஸ்தாபனம் ஒன்று நிறுவப்பட்டது. உலக வாணிகத்தில் தடைகள், விசேஷச் சலுகைகள் வேற்றுமைகள் முதலியவைகளை அகற்றுவதே ஹவானா ஒப்பந்தத்தின் நோக்கமாகும். ஆனால் கைத்தொழில்களில் வளர்ச்சியடையாத நாடுகளுக்கு மட்டும் வியாபாரத் தடைகள் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. உலக வாணிக ஸ்தாபனத்தின் குறிக்கோளுக்கும் திட்டங்களுக்கும் உட்பட்டு இந்திய அரசாங்கத்தார். அ.ஐ. நாடு, ஜப்பான், செக்கோஸ்லோவாக்கியா, எகிப்து, பெல்ஜியம், ஜெர்மனி, யூகோஸ்லாவியா, பிரான்ஸ், ஆஸ்திரியா, போலந்து, இத்தாலி, ஆப்கானிஸ்தானம், சுவிட்ஸர்லாந்து, ஹங்கேரி,பின்லாந்து, இலங்கை முதலிய நாடுகளோடு வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டிருக்கின்றனர். இந்தியாவுக்குத் தேவையான உணவுப் பொருள், எந்திரம், கருவிகள், ரசாயன உரம், ரசாயனப் பொருள்கள், மருந்து முதலியவைகளைத் தருவிப்பதும் இந்திய வாணிபத்தைப் பெருக்குவதுமே இவ்வொப்பந்தங்களின் நோக்கமாகும்.

1947 ஆகஸ்டு 15-ல் இந்தியாவும் பாகிஸ்தானும் 1948 பிப்ரவரி வரை யாதொரு வியாபாரத்தடையும் செய்வதில்லையென்று ஒரு தாற்காலிக ஒப்பந்தம் செய்துகொண்டன. 1948 மார்ச்சு முதல் வியாபாரத் தடைகள் ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் கஷ்டங்கள் உண்டானமையால் 1948 மே மாதத்தில் ஒரு வியாபார ஒப்பந்தமும், 1949 ஜூன் மாதம் ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. ரூபாயின் மதிப்பை இந்தியா குறைத்தது. ஆனால் பாகிஸ்தான் அவ்வாறு குறைக்காததால் இந்தியா-பாகிஸ்தான் வர்த்தகத்தில் பல இன்னல்கள் ஏற்பட்டன. 1950 ஏப்ரலில் இரு நாடுகளும் மறுபடியும் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டன.

இந்திய வியாபாரமும், கொடுக்கல் வாங்கல் நிலையும் : 1900 க்கு முன் சரியான புள்ளி விவரங்கள் இல்லாமையால் இந்தியாவின் கொடுக்கல்-வாங்கல் நிலையைப் பற்றித் திட்டமாக ஒன்றும் கூற முடியவில்லை. ஆயினும் பொதுவாக வெகு காலந்தொட்டு இந்தியாவின் பண்ட ஏற்றுமதி மிகுதி, கொடுக்கல் மிகுதி, வாங்கல் குறைவு. ஆகையால் மற்ற நாடுகளிலிருந்து தங்கமும் வெள்ளியும் இந்தியாவில் வந்து குவிந்தன. அன்னிய ஆட்சி வந்தும் கூட இந்தியாவிலிருந்து மேனாட்டுக் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருள்கள் ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டமையால், இந்தியாவிற்கு வர்த்தகச் சாதக நிலையே இருந்து வந்தது. ஆனால் இதில் கிடைத்த லாபம் இந்தியா இங்கிலாந்துக்குப் பல வகையில் செலுத்த வேண்டிய இனங்களுக்கு ஈடாகி வந்தது. 1914 முதல் 1929 வரை ஈடு செய்தது போக மிச்சம் கூட ஏற்பட்டு ஆண்டுதோறும் தங்கம் வந்து குவிந்தது. 1929 லிருந்து உலக வியாபார மந்தத்தால் ஏற்றுமதி குறைந்து, வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1934-39-ல் நிலைமை மோசமாகி, இந்தியாவிலிருந்து ரூ.300 கோடி மதிப்புள்ள தங்கம் 1939 வரை ஏற்றுமதி செய்யவேண்டி வந்தது. ஆனால் இரண்டாவது உலக யுத்தம் தொடங்கியதும் நிலைமை முற்றிலும் மாறியது; இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி மிகுந்தது. தவிர இங்கிலாந்து, அ.ஐ. நாடுகளின் சார்பாக, இந்திய அரசாங்கம் ஏராளமாகப் போர்ச் செலவு செய்தது. இந்தியா கொடுக்க வேண்டிய கடன் முழுவதும் நீங்கி, இங்கிலாந்து இந்தியாவுக்குக் கடன்பட்டது. 1945-46-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய தொகை ரூ.1,733 கோடியாயிருந்தது. இதை ஸ்டர்லிங்கு நிலுவைகள் என்று கூறுவர். போர் முடிந்தவுடன் இங்கிலாந்து இத்தொகையை உடனே கொடுக்க முடியாத நிலையில் இருந்தது. இங்கிலாந்தில் பலர் இத்தொகையில் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கூறினர். இது விஷயமாகப் பல பேச்சுக்கள் நடந்தன. பின்னர் 14-8-47-ல் ஒரு தாற்காலிக ஒப்பந்தமும், 1948 ஜனவரியில் மற்றோர் ஒப்பந்தமும், 1948 ஜூலையில், 1951 ஜூன் முடிய மூன்று ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. இவற்றின்படி இந்தியாவிற்குரிய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து அவ்வப்பொழுது இந்தியாவின் தேவைக்காகக் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள கொடுக்கல்வாங்கல் கணக்குச் சரி பார்க்கப்பட்டு நிலுவையில் ஈடு செய்யப்பட்டது.

யுத்தத்திற்குப் பின் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பல பண்டங்கள் தேவையாக இருந்து வருகின்றன. நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவுத் தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டி வருகிறது. ஆனால் இந்தியாவிலிருந்து மூலப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பயனாக மூலப்பொருள்களும் உணவுப் பொருள்களும் அதிகமாக விளையும் பகுதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தன. ஆகையால் இந்தியாவிற்கு வர்த்தகப் பாதக நிலை ஏற்பட்டது. அமெரிக்க டாலர் நாணய நெருக்கடியால் இந்திய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து விருப்பப்படி எடுத்து வர்த்தக நிலையைச் சமமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் இந்தியாவில் இறக்குமதியை 1947-48 வரை கடுமையாகக் கட்டுப்படுத்த நேர்ந்தது. 1948 செப்டெம்பரில் பிரிட்டன் ஸ்டர்லிங்கு மதிப்பைக் குறைத்தபோது இந்தியாவும் ரூபாயின் மதிப்பைக் குறைக்கவே, இந்தியாவிலிருந்து டாலர் பழக்க நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தது. அந்நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்தது. ஆகவே 1949 வரை குறைந்து வந்த ஸ்டர்லிங்கு நிலுவை மறுபடி ஏறி வருகிறது. 1950 ஜூலை முதல் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

தொழிலாளர் முதலாளிகள் நல்லுறவு: 1914க்கு முன் அகமதாபாத்தில் பஞ்சு நெசவு ஆலையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்படும் சச்சரவைத் தடுக்க ஒரு மத்தியஸ்த போர்டு (Arbitration Board) இருந்து வந்தது. ஆனால் முதல் யுத்தத்திற்குப் பின் நாட்டில் வேலை நிறுத்தங்கள் அதிகரிக்கவே, இவைகளைத் தடுக்க ஓர் ஏற்பாடு அவசியமென்று புலப்பட்டது. சச்சரவுகளை விசாரித்து, அவற்றை நீக்க முதன் முதலாகச் சென்னை அரசாங்கத்தாரால் கோர்ட்டுகள் நியமிக்கப்பட்டு வந்தன. 1929-ல் தொழில் வழக்குச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சச்சரவு ஏற்பட்டால், அரசாங்கத்தாருக்கு அறிவிக்கலாமென்றும், அதைத் தடுக்கவோ தீர்க்கவோ அரசாங்கத்தார் விசாரணைக் கோர்ட்டுகள் (Courts of Enquiry) அல்லது சமரச போர்டு (Board of Conciliation) நியமிக்கலாமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் இருப்புப்பாதை, தபால், தந்தி, தண்ணீர் வசதி, சுகாதாரம் முதலிய அவசியமான தொழில்களில் முன் அறிவிப்பில்லாமல் வேலை நிறுத்தம் செய்தலும் தொழிற்சாலையை அடைத்தலும் குற்றமென்றும், தொழிற் சச்சரவு தவிர மற்றக் காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்வது சட்டத்திற்கு முரணானது என்றும் ஏற்பட்டது. 1937-ல் பம்பாய் அரசாங்கத்தார் ஒரு தனிச் சட்டம் பிறப்பித்தனர். இதனால் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தமோ, வேலை நீக்கமோ செய்வதற்குமுன் கட்டாயமாக மத்தியஸ்தத்திற்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது; தொழில் சம்பந்தமான விவகாரங்களைத் தீர்க்க ஒரு கோர்ட்டை நியமிக்கவும் ஏற்பாடாயிற்று. இரண்டாவது உலக யுத்தத்தின்போது அவசரச் சட்டத்தினாலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தினாலும் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்குப்பின் சச்சரவுகள் பெருகினமையால் 1947-ல் புதிய தொழில் வழக்குச் சட்டம் ஒன்று செய்யப்பட்டது. இச்சட்டப்படி சச்சரவுகள் ஏற்பட்டால் கட்டாயமாக மத்தியஸ்த நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், சமரசப் பேச்சுக்கள் முடிவடையுமுன் வேலை நிறுத்தமோ தொழிற்சாலை அடைப்போ செய்யக் கூடாதென்றும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நல்லுறவு நிலவச் செய்யத் தொழிற் கமிட்டி அமைக்கவேண்டுமென்றும், இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகள் பிரதிநிதிகளும் பாதிக்குப் பாதி இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் சச்சரவுகளைத் தீர்க்கவும், நல்லுறவு ஏற்படுத்தவும், தகுந்த உத்தியோகஸ்தர்களும் கோர்ட்டுக்களும் மத்தியஸ்தர்களும் நியமிக்க இச்சட்டம் அதிகாரம் அளித்தது.

1947 டிசம்பர் 15ஆம் தேதி தொழிலாளர், முதலாளிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கைத்தொழில் மாநாடு ஒன்று கூடி, மூன்று ஆண்டுகளுக்கு யாதொரு சச்சரவும் செய்வதில்லையென்றும், பொருளுற்பத்தியில் அனைவரும் முழுமனத்தோடும் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டன. 1948 ஏப்ரலில் சர்க்காரும் இந்த ஒப்பந்தத்திற்கு இசைந்தனர். மேலும் அரசாங்கத்தார் நியாயமான கூலி, நியாயமான இலாபம், தொழிலாளர்களுக்கு நல்ல நிலைமை முதலியன ஏற்படுத்துவதும், கைத்தொழில் சம்பந்தமான எல்லா விவகாரங்களிலும் தொழிலாளர்களையும் கலந்து கொள்வது தங்கள் நோக்கமென்றும் அறிவித்தனர். இத்திட்டங்களைப்பற்றிய ஆலோசனை கூற மாகாண அரசாங்கத்தாருக்கும் மத்திய அரசாங்கத்தாருக்கும் முக்கட்சி ஆலோசனைச் சபைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கு ஒரு பங்கு கொடுப்பது (Profit-sharing) நல்ல பயனளிக்குமென்று அரசாங்கத்தார் எண்ணினர். எவ்வகையில் இலாபம் பங்கு பிரிப்பதென்பதையும், நியாய இலாபம், நியாயக் கூலி ஆகியவற்றையும் நிருணயம் செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டி முதலில் ஆறு கைத்தொழில்களில் இலாபப்பிரிவினைச் சிபார்சு செய்தது. ஆனால் அவர்கள் கூறியதை இருதிறத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை. தொழிலாளரிடையே அமைதி யுண்டாக்கப், பஞ்சு நெசவு, நிலக்கரி எடுப்பு, தோட்டக்கால் தொழில், சிமென்டு உற்பத்தி முதலிய சில தொழிற்சாலைகளில் முக்கட்சித் தொழிற் கமிட்டிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொழிலாளர் பாதுகாப்பு: தொழிற்சாலைச் சட்டங்கள்: 1875-ல் பம்பாயில் தொழிலாளர் நிலையை விசாரணை செய்யத் தொழிற்சாலைக் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1881-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டத்தின் பயனாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு நலன் ஏற்பட்டது. பகலில் ஓய்வு நேரத்துக்கும், ஆபத்துக்களைத் தடுக்கவும் இச்சட்டம் வழிதேடியது. 1890-ல் நிறுவப்பட்ட ஒரு கமிஷனுடைய சிபார்சுப் படி 1891-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு மேலும் நலன் ஏற்பட்டது. பெண்கள் இரவிலும், ஒரு நாளில் 11 மணிக்கு அதிகமாகவும் வேலை செய்யக்கூடாதென்று இச்சட்டம் கூறியது. மேலும், தொழிற்சாலைகளில் காற்று வசதி, சுகாதாரம், போதுமான இடவசதி முதலியன இருக்கவேண்டுமென்பதும் இச்சட்டத்தினால் ஏற்பட்டது. பிறகு 1908-ல் மற்றொரு தொழிற்சாலைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் பலவிதத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை ஆராய்ந்து விடுத்த அறிக்கையின் பயனாக 1911-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆண்கள் உட்பட எல்லா வேலைக்காரர்களுக்கும் நலன் கிட்டியது. தண்ணீர் வசதி, எந்திரங்களுக்குக் காப்பு, தீ விபத்திலிருந்து தப்புவிக்க வசதிகள் முதலியன முன்னைவிட அதிகம் செய்யப்பட்டன. முதல் யுத்தத்திலிருந்து தொழிலாளர்களிடையே பொருளாதாரக் கஷ்டமும் மனக்குறையும் பெருகிக் கிளர்ச்சியேற்பட்டது. மேலும் வாஷிங்டனில் கூடிய உலகத் தொழிலாளர் மாநாட்டின் ஒப்பந்தப்படி தொழிலாளர் நிலையை உயர்த்த வேண்டியிருந்தது. ஆகையால் 1922-ல் புதியதொரு தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டப்படி தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய வயது உயர்த்தப்பட்டது. சிறுவர்கள் முதியோர்களின் வேலைக்காலம் குறைக்கப்பட்டது. தினசரி ஓய்வு நேரம் அதிகமாக் கப்பட்டது. வாரத்துக் கொருமுறை விடுமுறையும் விடப்பட்டது. 1929-ல்தொழிலாளர் நிலைமையை விசாரிக்க விட்லி பிரபுவின் தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1931-ல் அவர்கள் விடுத்த அறிக்கையின் பயனாக 1934-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறந்தது. இதனால் தொழிலாளிக்கு மற்றும் பல நன்மைகள் ஏற்பட்டன. 1948-ல் மறுபடியும் ஒரு புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் கீழ் அநேகமாக எல்லாத் தொழிற்சாலைகளும் கொண்டுவரப்பட்டன. தொழிற்சாலைக்காகக் கட்டடம் கட்டுமுன் லைசென்ஸ் பெற வேண்டுமென்பது, சுகாதாரம், காற்றோட்டம், இட வசதி முதலியவைகளைப் பற்றித் திட்டமான விதிகளும் ஏற்பட்டன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளிகளின் நலனைக் கவனிக்க உத்தியோகஸ்தர்களை (Welfare officers) நியமிக்கவும், சிற்றுண்டிச் சாலைகள் ஏற்படுத்தவும், மற்றும் பலவித நலன்கள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாளில் 9 மணிக்கு மேலும், ஒரு வாரத்தில் 48 மணிக்கு மேலும் வேலை செய்வதும், 14 வயதுக்குட்பட்டவர்களைத் தொழிற்சாலைகளில் நியமிப்பதும் நிறுத்தப்பட்டன. இச்சட்டத்தினால் சுமார் 35 இலட்சம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், கப்பல்கள், துறைமுகங்கள் முதலியவைகளில் வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தனித்தனிச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வேறு நலன்களுக்கான திட்டங்கள்: முதன் முதலில் 1884-ல் பம்பாய்த் தொழிலாளிகளால் தொழிற்சாலைகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத ஆபத்துக்களுக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கிளர்ச்சி செய்யப்பட்டது. ஒரு தொழிலாளி ஆபத்து ஏற்பட்டு இறந்தால், 1885-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தின்படி அவரை வேலையில் அமர்த்தியவர்மீது கோர்ட்டில் தாவா செய்ய இயன்றது. 1923-ல் தான் முதன்முதல் தொழிலாளர் நஷ்ட ஈட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்யும்பொழுது உடலுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டாலும், தொழிலில் ஈடுபட்டதன் விளைவாக நோய் ஏற்பட்டாலும் அவற்றிற்காக நஷ்டஈடு பெறக்கூடும். முதன்முதலில் பத்து வகையான தொழிலாளர்களுக்குத்தான் இச்சட்டம் நலன் அளித்தது. பிறகு இச்சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டு அநேகத் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க இயன்றது.

1919-ல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பேறுகால உதவி செய்ய வேண்டுமென்று உலகத் தொழிலாளர் மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது. 1924-ல் என். எம். ஜோஷியினால் மத்தியச் சட்ட சபையில் இவ்வுதவி அளிக்கவேண்டிக் கொண்டுவரப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது. தொழிலாளர் ராயல் கமிஷனும் இவ்வுதவி அவசியம் கொடுக்க வேண்டுமென்று வற்பறுத்தியது. 1929-ல் பம்பாய் அரசாங்கம் பேறுகால உதவிச் சட்டம் ஒன்று பிறப்பித்தது. இதை அடுத்து மற்ற எல்லா மாகாணங்களிலும் இதுபோலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அஸ்ஸாமிலும், மேற்கு வங்காளத்திலும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் உதவியளிக்கப்பட்டது. 1941-ல் மத்திய அரசாங்கத்தாரால் நிலக்கரி முதலிய சுரங்கங்களில் வேலை செய்வோருக்கும் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டங்களால் பெண்களுக்குப் பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஓய்வும், பண உதவியும் கொடுக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது.

1936-ல் தொழிலாளர்களுக்குக் காலதாமதமின்றிக் கூலி கொடுப்பதற்காகவும், கூலியை நியாயமில்லாமல் குறைப்பதைத் தடுக்கவும், கூலி கொடுக்கைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1948-ல் மத்தியச் சட்டசபையால் குறைந்த அளவுக் கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் எந்த எந்தத் தொழில்களில் கூலிக்காரர்களுக்கு நியாயமான கூலி கொடுக்காமல் வேலை மட்டும் வாங்குகிறார்களோ, அந்த அந்தத் தொழில்களில், குறைந்த அளவு கூலி எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட அரசாங்கத்தாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1947 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொழிலாளிகளுக்காக இன்ஷூரன்சுத் திட்டத்தில் அவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள். வேலை செய்வோரும் வேலை கொடுப்போரும் சந்தாக் கொடுக்கவேண்டும். நோய்வாய்ப்பட்டபோதும், வேலை செய்ய முடியாமல் சீர்கெட்ட பொழுதும், பேறு காலத்திலும் உதவியளிப்பதோடு அண்டியவர்களுக்கு உதவியும், மருத்துவ உதவியும் செய்யப்படும். இத்திட்டத்தை நிருவாகம் செய்ய ஒரு கார்ப்பொரேஷன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர் பிரதிநிதியும் உண்டு.

தொழிற் சங்கங்கள்: 1918-ல் வாடியா என்பவரால் நெசவாலைத் தொழிற்சாலை வேலைக்காரர்களுக்காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன.

1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். கே. ஆர்.

நிலப்பயன்பாடு

இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு:

பயிர்கள் ஏக்கர்
இலட்சத்தில்
மொத்தத்தில்
சதவிகிதம்
1. காடுகள் 934 15.0
2. சாகுபடியாகும் நிலம் 2684 43.0
3. தரிசு 494 9.5
4. பயிரிடக்கூடிய கரம்பு நிலம் 1027 16.0
5. பயிரக்கூடாத நிலம் 996 16.0


மொத்தம் 996 100


புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம்.

பயிர்த் தொழில்: பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு:

பயிர்கள் ஏக்கர்
இலட்சத்தில்
மொத்தத்தில்
சதவிகிதம்
I. உணவுப் பயிர்கள்
1. தானிய வகைகள் 1934.0 60.88
2. கடலை 187.1 5.90
3. மற்ற பருப்பு வகைகள் 284.7 8.98
4. பழம், காய்கறி வகைகள் 50.0 1.58
5. பிற உணவுப் பயிர்கள் 16.5 0.52


மொத்தம் 2472.3 77.86


II. வியாபாரப் பயிர்கள்
6. முக்கியமான எண்ணெய் வித்துகள் 266.8 8.41
7. பிற எண்ணெய் வித்துகள் 42.7 1.35
8. பருத்தி 145.6 4.59
9. சணல் 14.5 0.46
10. பிற நார் வகைகள் 10.5 0.33
11. கரும்பு 42.1 1.33
12. புகையிலை 9.0 0.28


மொத்தம் 531.2 16.75


II. தோட்டங்கள்
13. தேயிலை, காபி, ரப்பர் 11.9 0.37
14. சுவைப்பொருள்களும் வாசனைப் பொருள்களும் 24.6 0.78


36.5 1.15


15. தட்டைப் பயிர்கள் 111.7 3.52
16. பிற பயிர்கள் 22.7 0.72


134.4 4.24


ஆகமொத்தம் பயிர்நிலப்பரப்பு 317.0 100.00


சென்ற நாற்பது ஆண்டுகளின் நிலைமையிலிருந்து பயிர்த் தொழிலின் போக்கைத் தெளியலாம். 1. உத்தரப்பிரதேசத்தில் தவிர வேறெங்கும் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு அதிகப்படவில்லை. ஆண்டுக்கொரு போகத்துக்குமேல் சாகுபடியாகும் நிலத்தின் பரப்பு 20 சதவீதம் ஏறியிருக்கிறது. ஆகவே, மொத்தத்தில் விளையும் பயிர்களின் அளவும் அதிகமாயிற்று. ஆயினும் மக்கட் பெருக்கத்திற்கு ஏற்றவாறு அதிகப்படவில்லை. 2. நீர்ப்பாசனத்துக்குட்பட்ட நிலப்பரப்பு 10 சதவீதம் ஏறியிருக்கிறது. இது பெரும்பாலும் புதிய கால்வாய்கள் வெட்டியதின் பயனாகும். 3. பருத்தி விளைவு 1920 க்குப் பின் சற்றுக் குறைந்ததனால் தரிசு நிலப் பரப்புச் சிறிது அதிகப்பட்டிருக்கிறது.

பயிர்வகைகளின் போக்கில் கீழ்க்கண்டவற்றைக் காணலாம்: 1. 1940க்கும் 1950க்கு மிடையே பருத்தி உற்பத்தியாகும் நிலப்பரப்புக் குறையத் தொடங்கியதால், உணவுப்பொருள்கள் பயிராகும் நிலப்பரப்பில் சிறிது பெருக்கம் உண்டாயிற்று. 2. போர் நடந்த 1914-18, 1939-45 ஆண்டுகளில் பருத்தி விளைவு குறைந்து, போர் முடிந்தபிறகு படிப்படியாக ஏறி வந்திருக்கிறது. 3. எண்ணெய் வித்துக்கள், சிறப்பாக வேர்க்கடலைப் பயிர் நிலம் 40 இலட்சம் ஏக்கர் அதிகப்பட்டுள்ளது. 4. பாகிஸ்தான் பிரிந்தபின் சணல் பயிர் நிலங்களின் பரப்புப்பத்து இலட்சம் ஏக்கர் அதிகமாகி உள்ளது. 5. கரும்பு பயிரிடும் நிலமும் சென்ற இருபதாண்டுகளில் பத்து இலட்சம் ஏக்கருக்கு மேல் அதிகரித்துள்ளன.

நிலங்கள் சிறிய அளவினவாக இருந்தபோதிலும், பயிர்களினளவு விலை மாற்றத்தால் வேறுபடுவதை இதிலிருந்து அறியலாம். மக்கள் தொகையில் பெருக்கம் ஏற்பட்டிருந்தும், சென்ற 40 ஆண்டுகளாகக் கரம்பு நிலங்களை அவ்வளவாகச் சாகுபடி செய்யவில்லை. கரம்பு நிலத்தைச் சாகுபடி செய்வதற்குப் போதுமான பொருள் வசதிகள் உழவர்களுக்குக் கிடையாமையே இதற்குக் காரணம்.

முக்கியச் சாகுபடிப் பயிர்கள் : நெல் விளையும் நிலப் பரப்பு 7 கோடி ஏக்கர். இதில் கங்கைப் பள்ளத்தாக்கில் 2 கோடி ஏக்கர் உள்ளன; கீழ்க்கடற்கரைத் தாழ் நிலங்களிலும், மலையாளக் கொங்கணப் பகுதிகளிலும் சுமார் 10 கோடி ஏக்கர் உள்ளன. வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப் பிரதேசம், சென்னை ஆகிய பகுதிகளில் அரிசிதான் முக்கிய உணவுப் பொருள். ஆண்டின் மொத்த உற்பத்தி 260 இலட்சம் டன். தரத்திலும் விளைவிலும் வேறுபடும் நூற்றுக்கணக்கான நெல் வகைகள் உள்ளன. நடவு நடும் பயிர்களே அதிக விளைவைத்தரும். போதுமான அளவு மழை பெய்வதால் வங்காளம், வடகிழக்கு இந்தியா இவற்றில் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் மிகக் குறைவு. ஆனால் சென்னையில் நெல் பயிராகும் 12 கோடி ஏக்கரில் நீர்ப்பாசனத்தால் சாகுபடியாவது 80 இலட்சம் ஏக்கர். இங்கு விளைவும் அதிகம். இந்தியாவில் ஓர் ஏக்கருக்குச் சராசரி 1,500 பவுண்டு நெல் தான் விளைகிறது. ஆனால் நவீன உழவு முறைகளில் ஓர் ஏக்கரில் இதைப்போல் ஐந்து மடங்குக்கு மேலாகவும் சென்னை இராச்சியத்திலேயே நெல் விளைவித்திருக்கின்றனர்.

3.2 கோடி ஏக்கரில் பயிராகும் கோதுமையில் விளைவு ஆண்டில் 90 இலட்சம் டன். கோதுமை முக்கியமாக பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசங்களில் பயிராகிறது. நீர்ப்பாசன வசதியில்லாமையால் மத்தியப் பிரதேசத்தில் குறைந்த விளைவே கிடைக்கிறது. முன்னர் இந்தியாவிலிருந்து ஆண்டில் ஏறக்குறைய 10 இலட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது மக்கள் பெருக்கத்தால் கோதுமை நாட்டிலேயே செலவாகிவிடுகிறது.

6.2 கோடி ஏக்கர் புன்செய்ப் பயிர்வகைகளில் சோளம் 3.5 கோடி ஏக்கரிலும், கம்பு 16 கோடி ஏக்கரி சோளம் மழைக்காலத்தில் விளையும் முக்கியமாகப் பயிராகின்றன. புன்செய்ப் பயிர், சோளம் மக்களுக் குப் பயன்படுவதோடு சோளத்தட்டு கால்நடைகளுக்கு ஒரு முக்கிய உணவாகிறது. அரிசியினும் இத்தானியங்களில் உணவுச் சத்துப் பொருள்கள் அதிகம் உள்ளன. துவரை, கடலை போன்ற பருப்பு வகைகள் சுமார் 5 கோடி ஏக்கரில் பயிராகின்றன. இந்திய விவசாயத்தில் இவை மூவகையிற் பயன்படுகின்றன. முதன்மையாக இப் பயிர்கள் நிலத்தின் வளத்தைக் காக்க உதவுகின்றன. மரக்கறி உணவுகளையே உண்டு வாழும் மக்களுக்கு உணவுச் சத்துக்களில் இன்றியமையாதனவாகிய புரோட்டீன்கள் இவற்றில் இருந்துதான் மிகுதியாகக் கிடைக்கும். மாடு, குதிரைகளுக்கும் இவை சிறந்த உணவாகின்றன. கம்பு, சோளம் முதலியவற்றோடும் பருத்தியோடும் சேர்த்து இவைகளைப் பயிராக்குவது வழக்கம். அப்படிச் செய்யும்போது சோளம், கம்பு முதலியவற்றை முதலிலும், பருத்தியைக் கடைசியி லும், பருப்பு வகைகளை இடையிலும் அறுவடை செய்வர்.

வியாபாரப்பயிர் வகைகளில், எண்ணெய் வித்துக்கள் பயிராகும் நிலத்தின் பரப்பு மிகப் பெரியது (2 கோடி ஏக்கர்). இவற்றுள் முக்கியமானது வேர்க்கடலை சென்ற 30 ஆண்டுகளாக இப் பயிர் பல ஜில்லாக்களுக்குப் பரவி யிருக்கிறது. வேர்க்கடலையோடு அதன் எண்ணெயும் பிண்ணாக்கும் மிகுதியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன. 1939 முதல் வனஸ்பதித் தொழிற்சாலைகள் பல ஏற்பட்டபடியால் உற்பத்தியாகும் வேர்க்கடலை முழுவதும் நாட்டிலேயே செலவாகின்றது. தீபகற்பத்தின் வறண்ட பகுதிகளில் வேர்க்கடலை நன்றாகப் பயிராகிறது. வளம் குறைவாயுள்ள மணல் நிலங்களிலும் பயிராவது இதன் சிறப்பாகும். எள்ளும் கடுகும் வட இந்தியாவில் மிகவும் பயன்படுகின்றன. எண்ணெய் மக்களுக்கும், பிண்ணாக்கு மாடுகளுக்கும் உணவுப் பொருளாக உதவுகின்றன. ஆளி விதை பெரும்பான்மை உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் ஆகியவற்றில் மற்றப் பயிர்களோடு சேர்ந்து பயிராகிறது. ஆளி விதையில் அரைப் பகுதி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

இந்தியாவில் விளையும் வியாபாரப் பயிர்களில் பருத்தி மிகவும் முக்கியமானது. இது பயிராகும் நிலப்பரப்பு 1½ கோடி ஏக்கர். பாகிஸ்தான் பிரிவினைக்கு முன் 2.7 கோடி ஏக்கரில் 65 இலட்சம் பேல் உற்பத்தியாயின. இவற்றில் 25 இலட்சம் பேல் இந்திய எந்திரசாலைகளில் செலவாயின. 35 இலட்சம் பேல் வெளி நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பருத்தி விளைவிற்கு முதன்மையானது தக்கணம், அதாவது பேரார், கான்தேசம், மத்திய இந்தியா உள்ளடங்கியது. இவ்விடங்களில் நீர்ப்பாசனமின்றியே பயிராவது பெரும்பாலும் குறுகிய இழைப்பருத்தி வகைகளே. கத்தியவார், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் விளையும் பருத்திவகைகளில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட நீண்ட இழை உடையன பல உண்டு. இத்தகைய கம்போடியாப் பருத்தி கோயம்புத்தூர் மாவட்டத்திலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் பயிராகிறது.

சணல் இந்தியாவில் பயிராகும் நார்ப் பயிர்களில் முதன்மையானது. சணல் விளையும் நிலங்களிற் பெரும் பகுதி பாகிஸ்தானிற் சேர்ந்துவிட்டது. இந்தியன் யூனியனில் சணல் 15 இலட்சம் ஏக்கருக்கும் குறைவாகவே பயிரிடப்படுகிறது. இப்போது இது பயிராகும் நிலத்தின் பரப்பு அதிகரித்து வருகிறது.

கரும்பு 40 இலட்சம் ஏக்கரில் பயிராகிறது. இதில் அரைப்பகுதி கங்கைப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. வெளியிலிருந்து வந்துகொண்டிருந்த வெள்ளைச் சர்க்கரைமீது விதிக்கப்பட்ட இறக்குமதிக் கட்டணத்தை உயர்த்திவிட்டபடியால் சென்ற 20 ஆண்டுகளாகக் கரும்பு முன்னிலும் இரண்டு மடங்கு அதிகமாகப் பயிர் செய்யப்படுகிறது. 150 கரும்பாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் உள்ளன. இவற்றிலிருந்து 10 இலட்சம் டன் வெள்ளைச் சர்க்கரை கிடைக்கின்றது. ஆகையால் ஜாவாவிலிருந்து இவ்வளவு சர்க்கரை 1933க்கு முன் இறக்குமதியாய் வந்தது இப்போது நின்றுவிட்டது.

காப்பி, தேயிலை முதலியன பயிராகும் தோட்டங்கள் 12 இலட்சம் ஏக்கர் பரப்புள்ளவை. இவற்றில் பாதிக்கு மேற்பட்ட பகுதி தேயிலைத் தோட்டங்கள் ; இவை பெரும்பாலும் அஸ்ஸாமில் உள்ளன. மேற்கு மலைத் தொடர்களில் உள்ள தென்னிந்திய மலைச் சரிவுகளிலும் தேயிலையோடு காப்பி, ரப்பர், ஏலக்காய் முதலியவையும் பயிராகின்றன. எனினும் அஸ்ஸாமில் உள்ளவற்றை விடத் தென்னிந்தியாவில் உள்ள தோட்டங்கள் சிறியவை. தென் இந்தியாவில் உள்ள தோட்டங்களில் பெரும்பகுதி இந்தியருக்குச் சொந்தமாகவும், இந்தியரின் அதிகாரத்திலும் உள்ளவை. இத் தோட்டங்கள் எல்லாம் சென்ற நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையே என்பது கருதற்பாலது.

புகையிலை இந் நாட்டில் பல இடங்களில் விளைகிறது. உயர்ந்த ரகமான வர்ஜீனியா புகையிலை குண்டூரில் 3 இலட்சம் ஏக்கருக்கு மேல் பயிராகிறது. பயிராகும் புகையிலை ஏராளமாக வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றது. பீ. எம். தி.

நீர்ப்பாசனம்

பழங்காலத்திலிருந்தே இந்தியாவில் நீர்ப்பாசன முறையைக் கையாண்டு வந்துள்ளனர். நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் நீர்ப்பாசன முறையைக் காணலாம். இதற்குக் காரணம் ஆங்காங்குப் பெய்யும் மழை நிலையாகப் பெய்யாததேயாகும். சிந்து, ராஜபுதனம், பஞ்சாபின் தென் மேற்குப் பகுதி ஆகிய இடங்களில் மழை மிகச் சொற்பம். தக்கண பீடபூமி ஐக்கிய, மத்திய மாகாணங்களின் மேற்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் மழை ஓராண்டுபோல் மற்றோராண்டும் பெய்யும் என்று சொல்வதற்கில்லை. ஆகவே இவ்விடங்களில் பயிர்த் தொழில் மிகக் கேவலமான நிலைமையில் இருத்தலைக் காண்கிறோம். வங்காளம், அஸ்ஸாம், மேற்குக் கரைப் பிரதேசம் என்னும் இடங்களில்தான் ஆண்டுதோறும் 50 அங்குலங்களுக்கு மேல் மழை பெய்கிறது. இங்கு நீர்ப்பாசன ஏற்பாடின்றியே வேளாண்மை செய்தல் இயலும். நாட்டின் பல பாகங்களிலும் நடைபெறும் நீர்ப்பாசன நிலங்களின் பரப்பு அடுத்த பக்கத்தில் உள்ள அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத்துக்குத் தண்ணீர் மூன்று வகைகளில் கிடைக்கிறது: 1. ஆறுகளிலிருந்து கால்வாய்களின் மூலமாகக் கொள்ளுதல், 2. ஆற்று வெள்ளத்தையும் மழை நீரையும் அணை கட்டி ஏரிகளில் தேக்கி வைத்தல், 3. கிணறுகள் வெட்டி நீர் சுரக்கும்படி செய்தல்.

வெள்ளப் பெருக்கோடும் கால்வாய்கள், எப்போதும் நீர் வற்றாத கால்வாய்கள் என இந்தியாவில் இருவகைக் கால்வாய்கள் உள்ளன. வெள்ளப் பெருக்குள்ள காலங்களில் ஆறுகளின் கரைகளை மீறி வழிந்து செல்லும் நீரைப் பயன்படுத்த வெட்டியுள்ள கால்வாய்கள் வெள்ளக் கால்வாய்களாகும். கால்வாயின் அடி மட்டத்திற்கும் தாழ்வாக ஆற்றின் நீர் மட்டம் குறையும் வரையில் இவ் வெள்ளக் கால்வாய்களில் நீர் செல்லும். மே மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை சிந்து, பஞ்சாப் நாடுகளில் சிந்து நதியில் வெள்ளம் கரை புரண்டு சென்று இவ்வகைக் கால்வாய்களிற் பாயும். இத்தகைய கால்வாய்கள் இம் மாகாணங்களிலேதான் மிகுதியாகக் காணப்படுகின்றன. ஆனால் நீர்க்குறை மிகும் வேனிற் காலங்களில் இக்கால்வாய்கள் வறண்டு விடும். ஆண்டுதோறும் தவறாது வெள்ளப் பெருக்குற்றாலொழிய இக் கால்வாய்கள் நீரற்று விடுமாதலின், இவற்றையே நீர்ப்பாசனத்துக்கு நிலையாக நம்புவதற்கில்லை.

என்றும் நீர் வற்றாமல் செல்லும் கால்வாய்களின் மொத்த நீளம் ஏறக்குறைய 75,000 மைல்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் நீரோடும் பொருட்டு, ஆற்று நீர் வேண்டிய அளவுக்குத் தேங்குமாறு அவ்வாறுகளின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டுள்ளன. பஞ்சாபில் உள்ள முக்கால்வாய், கங்கைநதிக் கால்வாய், உத்தரப்பிரதேசக் கால்வாய், சிந்துவிலுள்ள சுக்குர் அணைத்திட்டம் ஆகியவை எப்பொழுதும் நீர் வற்றாக் கால்வாய்களே. கிருஷ்ணா, கோதாவரி, காவேரி ஆகிய இவற்றின் டெல்ட்டாத் திட்டங்களும் இவ்வகைப்பட்டவையே. ஆனால் ஆற்றின் இடையேயுள்ள டெல்ட்டா நிலங்களுக்கே கிளைநதிகளின் மூலமாக நீர் பாயும்; ஆற்றினின்றும் நீங்கியுள்ள நிலங்களுக்கு எட்டாது. தென் இந்தியாவின் மற்றப் பாகங்களில் ஆறுகள் ஆழமான பள்ளத்தாக்குக்களினூடே செல்லுகின்றன. பெரிய ஆறுகளின் குறுக்கே அணைகள் கட்டி, அவற்றின் நீரைப் பெரிய தேக்கங்களில் சேர்த்து வைத்தால்தான் அந்நீரை வாய்க்கால்களின் மூலம் ஆண்டுமுழுவதும் கொண்டு சென்று பயன்படுத்த முடியும். ஆயினும் இத்தகைய பெரிய அணைகளைக் கட்டவும், கால்வாய்களை வெட்டவும் ஏராளமான பணம் செலவாகும். அரசாங்கமே பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும். சில ஆண்டுகட்கு முன்னர் ஒரு மாகாணத்துக்குள்ளேயே அடங்கியுள்ள அணைகளும் கால்வாய்களும் மட்டும் அம்மாகாண அரசாங்கத்தால் நிருமாணிக்கப்பட்டு வந்தன. அதற்கு வேண்டிய செலவு முழுவதையும் அம்மாகாணமே ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது இராச்சியங்கள் ஒன்றுசேர்ந்து பலருக்கும் பொதுவாகப் பயன்படுமாறு பல பெரிய திட்டங்கள் ஏற்பாடாகி வருகின்றன. உதாரணமாக, ஐதராபாத்தும் சென்னையும் சேர்ந்து துங்கபத்திரைத் திட்டத்தை வகுத்துள்ளன.
பீகாரும் நேபாளமும் சேர்ந்து கோசித் திட்டத்தையும், உத்தரப்பிரதேசமும், பீகாரும், ரீவாவும் சேர்ந்து சோன் பள்ளத்தாக்குத் திட்டத்தையும் மேற்கொண்டுள்ளன.

மேற்கூறிய நீர்ப்பாசனத் திட்டங்களால் வேறு நன்மைகளும் உண்டு. கால்வாய்களின் மூலம் நீர் செல்வதற்குமுன் அதை டர்பைன்கள் வழியாகச் செலுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றனர். மீன் பண்ணைகளையும் பலவகை நீர்விளையாட்டு வசதிகளையும் ஏற்படுத்துவதற்கு இவை அனுகூலமாக உள்ளன. கால்வாய்களின் மூலம் படகுகள் செல்லுகின்றன.

கிணறுகள்: கிணற்று நீரை மேலேகொண்டு வருவதற்கு உடலுழைப்பு அல்லது எந்திர உதவி அவசியமாகிறது. இக்கிணற்று நீர்ப்பாசன முறையைத்தான் இந்திய ஏழைக்குடியானவன் வெகு காலமாகக் கையாண்டு வந்திருக்கிறான். இதற்குச் செலவு அதிகம் இல்லை. அரசாங்க உதவியையும் குடியானவன் எதிர்பார்க்காமலே கிணற்றை எளிதில் வெட்டிக்கொள்ள முடியும். வட இந்தியாவில் உள்ள வண்டல்மண் சமவெளிகள் கிணற்றுப் பாசனத்துக்கு மிகவும் ஏற்றவை. ஜீவநதிகள், மழை மிகுதி, நீர் ஊறாத களிமண் படைகள் ஆகியவை உள்ள இடங்களில் தோண்டப்படும் கிணறுகளில் நீர் எளிதிற் குறைவதில்லை. ஆனால் சிறிது தோண்டிய உடனே, ஊற்றுப்பெருக்குண்டாகும் கிணறுகள் சிறிது காலத்தில் தூர்ந்துவிடும். இந்தியா முழுவதிலும் கிணற்று நீர்ப்பாசனத்தால் பயிரிடப்படும் நிலங்களில் பாதிக்குமேல் உத்தரப்பிரதேசத்தில் உள்ளன. மழை இல்லாக் காலங்களில் இக்கிணறுகளின் தொகை அதிகரிக்கும். தென் இந்தியாவில் கிணறுகளை மிக ஆழமாகத் தோண்டிய பின்னரே பல இடங்களில் ஊற்றுப்பெருக்குண்டாகும். சிலவிடங்களில் பாறைகளை வெடிமருந்து கொண்டு உடைத்தும் கிணறுகளைத் தோண்டுகின்றனர். கிணறுகள் பெரும்பாலும் உறுதியாகவும் நிலையாகவும் கட்டுப்பட்டுள்ளன. கூர்ஜரத்திலும், சென்னைக் கடற்கரைப் பிரதேசங்களிலும் வண்டல் நிலங்களில் கிணறுகள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன.

குழாய்க் கிணறுகள் சென்ற சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. பெரும்பாலும் உத்தரப் பிரதேசத்தில் அரசாங்க உதவி பெற்றுப் பலர் இக்குழாய்க் கிணறுகளை அமைத்து வருகின்றனர். 1950-ல் உத்தரப் பிரதேசத்தில் 7,000 குழாய்க்கிணறுகள் மூலம் சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு கிணற்றின் நீரைக் கொண்டும் 500 ஏக்கர் நிலம் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. கங்கைச் சமவெளியில் புதிதாக அமைத்த இக்குழாய்க் கிணற்று நீரைக்கொண்டு சுமார் 20 இலட்சம் ஏக்கர் நிலம் சாகுபடி செய்கிறார்கள்.

ஏரிகள்: பெரியாறு போன்ற சில பெரிய நீர்த்தேக்கங்கள் ஏற்பட்டிருப்பினும் ஏரிகளினால் சாகுபடியாகும் நிலத்தின் பெரும்பாகம் பழைய ஏரிகளையே ஆதாரமாய்க் கொண்டுள்ளது. இவற்றையும் அரசாங்கமே கவனித்து வருகின்றது. சாதாரணமாக மழை காலத்தில் அதிகமாகப் புரண்டோடும் நீரை ஏரிகளில் தேக்கி, அதைக் கோடை காலத்தில் பயன்படுத்துகின்றனர். மழை பெய்யாமற்போமாயின், ஏரிகளிலும் தண்ணீர் இராது. தக்கணக் கரிசல்மண் பிரதேசத்திற்கும் கிழக்குக் கடற்கரைச் சமவெளிக்கும் இடையே கருங்கற்பாறைகளும் மணற்பாறைகளும் அமைந்துள்ள பாகங்களில் ஏரிப் பாசனம் நடைபெறுகிறது. இங்கு நிலம் மேடு பள்ளமாக இருப்பதனால் பள்ளங்களின் குறுக்கே அணைகளை அமைத்து மழை நீரை எளிதில் தேக்கலாம். செங்கற்பட்டு, சித்தூர், வட ஆர்க்காடு சேலம் மாவட்டங்கள், மைசூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இவ்வகை ஏரிகள் அநேகம் உள்ளன. மேலும் ஆறுகளிலிருந்தும் ஓடைகளிலிருந்தும் வாய்க்கால் மூலம் நீரைப் பல வகைச் சாத்னங்களைக் கொண்டு இறைத்துப் பயன்படுத்திக் கொள்வார்கள். ஆனால் இவ்விதச் சாகுபடி சிறிய அளவிலேயே நடை பெறுகிறது.

இந்தியாவில் நீர்ப்பாசனத்துக்கான வசதிகள் ஏராளமாக உள்ளன. ஆண்டுதோறும் இந்தியாவின் ஆறுகள் மூலமாகச் செல்லும் நீரின் அளவு ஒரு செகண்டுக்கு 23,00,000 க. அடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. அதில் 6 சதவிகிதம் அதாவது 1,33,000 கன அடி அளவுள்ள தண்ணீரையே நாம் இப்போது கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குப் பயன்படுத்துகிறோம். எஞ்சியுள்ள 94 சதவிகிதத்தில் பெரும்பாகத்தையும் பயன்படுத்திக்கொள்ள வசதிகள் உள்ளன. இதைத் தவிரத் தரையில் ஊறியுள்ள நீரும் நிறைய உண்டு. அதிலிருந்து இப்போது ⅓ பாகத்தையே கிணறுகள் மூலம் பயன்படுத்துகிறோம். பீ. எம். தி.

தாதுப்பொருள்கள்

பல இந்தியாவில் பயனுள்ள தாதுப்பொருள்கள் போதுமான அளவு கிடைத்தபோதிலும் சில முக்கியமான தாதுப்பொருள்கள் அகப்படுவதில்லை. இன்னும் விரிவான புவியியல் ஆராய்ச்சிகளால் அவைகளும் கிடைத்தாலும் கிடைக்கும். இந்தியாவில் கிடைக்கும் முக்கியமான தாதுப்பொருள்கள் இரும்பு, மாங்கனீஸ், குரோமியம், மக்னீசியம், அலுமினியம், டைட்டேனியம். நிலக்கரி, மண்ணெண்ணெய், மோனசைட்டு, சுண்ணாம்புக்கல், டாலமைட்டு, இயற்கையிற் கிடைக்கும் மெருகூட்டிகள், கண்ணாடி செய்வதற்கான பொருள்கள், சாயங்கள் செய்வதற்கான பொருள்கள் ஆகியவை. எல்லா நாடுகளுக்கும் அப்பிரகமும், மாங்கனீஸும் இல்மனைட்டும் இந்தியாவிலிருந்தே அநேகமாக ஏற்றுமதியாகின்றன. இந்தியாவில் உயர்ந்த ரக இரும்புத் தாதுக்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. ஆனால் மண்ணெண்ணெய், வெள்ளி, காரீயம், நாகம், நிக்கல், கோபால்ட்டு, வெள்ளீயம், டங்ஸ்டன் ஆகியவை குறைவு.

நிலக்கரி: பலவிதமான வேலைகளுக்கும் பயன்படக்கூடிய நிலக்கரிப் புலங்கள், அஸ்ஸாமின் கீழ்ப்பாகத்திலும், வங்காளத்திலும், பீகார், மத்தியப்பிரதேசம், ஐதராபாத் ஆகிய பிரதேசங்களிலும் நெடுந்தூரம் பரவிக்கிடக்கின்றன. இவைகளில் கிடைக்கக்கூடிய, கோண்டுவானா காலத்தில் உண்டான நிலக்கரி 1.000 அடி ஆழம்வரையிருப்பதாகவும், 6.000 கோடி டன் நிறையுள்ளதாகவும் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதில் மூன்றிலொரு பகுதி 4 அடிவரை ஆழமுள்ளதாயிருக்கிறது. அதுவே வெட்டியெடுக்கத் தகுந்தது. அதிலும் 150 கோடி டன் கரியே உலோக வேலைகளுக்கேற்றது. அத்தகைய கரியில் பெரும்பகுதி எடுத்தாய்விட்டது. மூன்றாம் புவியுகத்தில் உண்டான நிலக்கரி அஸ்ஸாமில் காணப்படும் 500 கோடி டன் மட்டுமே கோதாவரி, மகாநதி பள்ளத்தாக்குக்களிலுள்ள நிலக்கரிப் புலங்களைச் சரிவர ஆராய்ந்தால் அதிகமான நிலக்கரி கண்டுபிடிக்கப்படலாம். ஆண்டுதோறும் வெட்டி எடுக்கப்பெறும் நிலக்கரியின் நிறை 260 முதல் 300 இலட்சம் டன் வரையாகும்.

லிக்னைட்டு : மூன்றாம் யுகத்தில் உண்டான லிக்னைட்டு என்னும் முற்றாத பழுப்பு நிற நிலக்கரிப் புலங்கள் சென்னை, திருவிதாங்கூர்க் கடற்கரைகளிலும் காச்மீரத்திலும் ராஜஸ்தானத்திலும் காணப்படுகின்றன. அவைகளில் 150 கோடி டன் நிலக்கரி இருக்கக்கூடும். சென்னை மாகாணத்திலுள்ள தென்னார்க்காடு ஜில்லாவில் காணப்படும் புலங்கள் ஆராயப்பட்டுள்ளன. இங்கு இதை வெட்டி எடுக்கும் வேலை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண்ணெண்ணெய் : வட அஸ்ஸாமிலுள்ள மண்ணெண்ணெய்ப் புலங்களிலிருந்து ஆண்டுதோறும் ஆறரைக் கோடி முதல் ஏழரைக் கோடி காலன் வரையுள்ள எண்ணெய் கிடைக்கிறது. அஸ்ஸாம் மலைப் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்ப் புலங்கள் இருக்கின்றனவா என்று அறிய ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. கட்சு, குஜராத், வங்காளம், இமயமலை அடி வாரம், மூன்றாம் புவியுகத்துப் பாறைகளுள்ள கடற்கரைப் பகுதிகள் ஆகிய இடங்களிலும் மண்ணெண்ணெய் கிடைக்கக்கூடும் என்று தெரிகிறது. இந்தியாவுக்குத் தேவையான மண்ணெண்ணெயில் பத்தில் ஒரு பகுதியே இந்தியாவில் கிடைக்கிறது. மீதி வெளிநாடுகளிலிருந்து வருகிறது. புதுப்புலங்கள் கிடைக்காவிட்டால் எப்பொழுதும் இந்தியா மண்ணெண்ணெய்க்குப் பிறநாடுகளை எதிர்பார்க்க வேண்டியதுதான்.

தங்கம்: பழங்காலப் பாறைகளுள்ள இடங்களில் பெய்கின்ற மழை நீரைக் கொண்டு செல்லும் ஆறுகளிலுள்ள வண்டலைக் கழுவித் தங்கமெடுக்கும் தொழில் இந்தியாவில் பழங்காலத்திலிருந்து நடந்துவந்திருக்கிறது. பீகாரிலும் ஐதராபாத்திலும் சென்னையிலும் தங்கச் சுரங்கவேலை நடந்துவந்திருப்பதைக் காட்டக்கூடிய அடையாளங்கள் காணப்படுகின்றன. மைசூர் இராச்சியத்திலுள்ள கோலாரில் காணப்பட்ட பழைய சுரங்கங்களை ஆராய்ந்தபொழுது மிகுந்த தங்கம் இருப்பதாகத் தெரியவந்தது. இப்பொழுது 9,000 அடி ஆழம்வரை உள்ள தங்கத் தாதுக்கள் அங்கு வெட்டி எடுக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் அவுன்ஸ் தங்கம் கிடைக்கிறது. ஐதராபாத்திலுள்ள ஹட்டி சுரங்கங்களில் தங்கம் சிறிதளவே கிடைக்கிறது. இருபது ஆண்டுகளுக்குமுன் அனந்தப்பூர் ஜில்லாவிலும் மலையாளத்திலுள்ள வயநாட்டுப் பகுதியிலும் சில சுரங்கங்கள் வேலை செய்துவந்தன.

செம்பு: செம்புப் புலங்கள் ராஜஸ்தானிலுள்ள கேத்ரி, தாரிபா என்ற இடங்களிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள சலிமனாபாத்திலும், பீகாரிலுள்ள சிங்கபூமியிலும், சிக்கிமிலும், நெல்லூரிலும் காணப்படுகின்றன. இவ்விடங்களில் வெகுகாலமாகச் செம்பு வெட்டி எடுக்கப்பட்டபோதிலும் இப்பொழுது வேலை நடப்பது டாட்டா நகருக்கு அருகிலுள்ள மோசபோனி என்னும் இடத்தில் மட்டுமே. இங்கு ஆண்டுதோறும் 6,000 டன் செம்பு கிடைக்கிறது. இது பெரும்பாலும் பாத்திரங்கள் செய்யவே பயன்படுகிறது. சிக்கிம் ராஜஸ்தான் புலங்களை ஆராய்ந்தால் இந்தியாவுக்கு வேண்டிய செம்பு முழுதும் கிடைக்கும் என்று தெரிகிறது.

அலுமினியம்: அலுமினியம் கிடைக்கக்கூடிய முக்கிய தாதுப்பொருள் பாக்சைட்டு எனப்படும். கிடைக்கும் புலங்கள் பம்பாய், மத்திய பாரதம், மத்தியப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல தொழில்களுக்கும் பயன்படும் அலுமினியத்தைத் தரக்கூடிய இத்தாதுப்பொருள் இவ்வளவு அதிகமாகயிருந்தபோதிலும், திருவிதாங்கூரிலுள்ள் ஆல்வாயிலும், வங்காளத்திலுள்ள அசன்சாலுக்கருகிலும் இரண்டு தொழிற்சாலைகள் மட்டுமே தற்போது வேலை செய்கின்றன. அவைகளும் ஆண்டுக்கு 6,000 டன் அலுமினியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றன.

மக்னீசியம் : மாக்னசைட்டு, டாலமைட்டு, புளுசைட்டு என்ற தாதுக்களிலிருந்தும், கடல்நீரிலிருந் தும்மக்னீசியம் தயார் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்திலும் மைசூரிலும் 10 கோடி டன் நிறையுள்ள சிறந்த மாக்னசைட்டு தரக்கூடிய புலங்களிலிருக்கின்றன. டாலமைட்டு நாட்டின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது. மக்னீசியம் கடல்நீரில் சிறிதளவே காணப்படினும் இந்தியக் கடற்கரையின் நீளம் அதிகமாயிருப்பதால் மக்னீசியத்தைக் கடல்நீரிலிருந்து அதிக அளவு பெற முடியும்.

டைட்டேனியம் : இதன் முக்கியத் தாதுவான இல்மனைட்டு திருவிதாங்கூர், சென்னைக் கடற்கரைகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. இவைகளில் மொத்தம் சுமார் 200 கோடி டன் இருக்கும். திருவிதாங்கூரில் ஆண்டுதோறும் ஒன்றரை இலட்சம் டன் முதல் 2 இலட்சம் டன்வரை நிறையுள்ள இல்மனைட்டு மணலிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது. டைட்டேனியம் ஆக்சைடுகளில் ஒன்றாகிய ருடைல் என்னும் தாது திருவிதாங்கூர் மணல் காணப்படுகிறது. அது எஃகு பொருள்களை இணைப்பதற்குப் பயன்படுகிறது. `

காரீயமும் நாகமும் : பீகார், ராஜபுதனம். சென்னை ஆகிய இடங்களில் இவை காணப்படுகின்றன. ஆனால் ராஜஸ்தானிலுள்ள சாவார் என்னும் இடத்தில் மட்டும் வேலை நடக்கிறது. அங்கே ஆண்டுதோறும் சிறிதளவு காரீயமே தயாரிக்கப்படுகிறது. எல்லாப் புலங்களிலும் வேலை செய்தால் தேவைக்குப் போதுமான காரீயமும் நாகமும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இரும்பு : ஹெமடைட்டு என்னும் இரும்புத் தாதுப்புலங்கள் பீகார், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேசம் ஆகிய இடங்களில் ஏராளமாகப் பரந்து கிடக்கின்றன. இவைகளில் 60 சதவிகிதத்திற்கு அதிகமான இரும்பையுடைய உயர்ந்த ரக தாதுக்கள் 800 கோடி டன் இருக்கும் என்றும், கீழ்த்தரத் தாதுக்கள் அவற்றிலும் இரண்டு மடங்கு இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மைசூர், சாண்டூர், கோவா ஆகிய இடங்களில் இந்தத் தாதுப்புலன்கள் சிறிதளவு காணப்படுகின்றன. மாக்னடைட்டு என்னும் இரும்புத்தாது மைசூரிலும் சேலம் மாவட்டத்திலும் படிகக்கல்லுடன் படிந்து காணப்படுகின்றது. இப் புலங்களிலிருந்து 200 கோடி டன் இரும்பு கிடைக்கலாம். லிமோனைட்டு என்னும் இரும்புத் தாது ராணிகஞ்சு நிலக்கரிப் புலங்களில் ஏராளமாகக் கிடைக்கிறது.

ஜம்ஷெத்பூர், குல்தி, அசன்சால், பத்திராவதி ஆகிய இடங்களிலுள்ள இரும்புத் தொழிற்சாலைகள் உயர்ந்த ரகத் தாதுக்களை உபயோகித்து எஃகையும் வார்ப் பிரும்பையும் தயாரித்து வருகின்றன.

30 முதல் 35 சதவீதம் வரை இரும்புள்ள சரளை (லாட்டரைட்டு) என்னும் தாது இந்தியாவின் பல பாகங்களிலும் ஏராளமாகக் காணப்படுகிறது. உயர்ந்த ரகத் தாதுப்பொருள்கள் தீர்ந்தபின் இவை உபயோகிக்கப்படலாம்.

மாங்கனீஸ் : மாங்கனீஸ் தாதுக்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடுகளுள் இந்தியாவே முதன்மையானது. அது மத்தியப் பிரதேசம், பம்பாய், சென்னை, ஒரிஸ்ஸா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இவற்றில் 48 சதவீதம் மாங்கனீஸ் உள்ள உயர்ந்த தாது 2 கோடி டன்னும் கீழ்த்தரத் தாது இதைப்போல் இரண்டு மடங்கும் இருக்கலாம் என்று கணக்கிடப்படுகிறது. குரோமியம் : குரோமியத்தின் முக்கியத் தாதுவான குரோமைட்டு பீகாரிலுள்ள சிங்கபூமி ஜில்லாவிலும், ஒரிஸ்ஸாவிலுள்ள கியோன்ஜாரிலும், கிருஷ்ணா, சேலம், மாவட்டங்களிலும், பம்பாயிலுள்ள இரத்தினகிரியிலும், மைசூரிலும் காணப்படுகிறது. ஆண்டுதோறும் உற்பத்தி சுமார் 3000 டன்.

வனேடியம்: சிங்கபூமி, மயூரபஞ்சுப் பிரதேசங்களிலுள்ள மாக்னடைட்டுத் தாதுக்களில் ஏழு அல்லது எட்டுச் சதவீதம் வனேடியம் காணப்படுகிறது. இது இலட்சக்கணக்கான டன் கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.

மற்ற உலோகங்கள் : மற்ற உலோகங்கள் மிகச் சிறிய அளவே காணப்படுகின்றன. நிக்கல் ராஜஸ்தானிலும், கோபால்ட்டு நேபாளத்திலும், மாலிப்டினம் தென்னிந்தியாவிலும், டங்ஸ்டன் சிங்கபூமியிலும், வெள்ளீயம் ஹாசிரிபாகிலும், யுரேனியம் பீகாரிலும் ராஜஸ்தானிலும், தோரியம் திருவிதாங்கூர்க் கடல் மணலிலும் காணப்படுகின்றன.

உலோகமல்லாத தாதுக்கள் : கல்நார்: இது கடப்பை, பீகார், ராஜஸ்தான், மைசூர்ப் பகுதிகளில் கிடைக்கிறது. ஆண்டுக்குச் சுமார் 200 முதல் 400 டன் வரை எடுக்கப்படுகிறது.

கட்டடக் கற்கள் : கருங்கல் பாறை, நீலக் கருங்கல், சலவைக்கல், பலகைக்கல் முதலிய பலவகை உயர்ந்த ரகக் கட்டடக் கற்கள் நாட்டின் பல இடங்களில் காணப்படுகின்றன. பண்டைக்காலமுதல் அவை பயன்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் பெறக்கூடிய கற்கள் தயாராகின்றன.

களிமண் வகைகள் : ஏராளமாகக் காணப்பட்ட போதிலும் சரிவர ஆராயப்படவில்லை. சீனக்களிமண் திருவிதாங்கூர், தென்னார்க்காடு, மலையாளம், பீகார்ப் பகுதிகளிலும், வெண்களிமண் கடப்பை, கர்நூல், பம்பாய், பீகார் ஆகிய இடங்களிலும், விசேஷ ரகக் களி மண்கள் ராஜஸ்தானிலும் காச்மீரத்திலும் காணப்படுகின்றன.

குருந்தக்கல் : பொருள்களைத் தேய்த்துப் பளபளப்பாக்கப் பயனாவதும், பளிங்குபோன்றிருக்கும்போது நவரத்தினங்களில் ஒன்றாயிருப்பதுமான குருந்தக்கல் சென்னை, மைசூர், அஸ்ஸாம் முதலியவிடங்களில் காணப்படுகின்றது. இதன் ஆண்டு உற்பத்தி சுமார் 200 முதல் 300 டன் வரை.

வைரம் முன்னாளில் கிருஷ்ணா, துங்கபத்திரா பிரதேசங்களில் அதிகமாக எடுக்கப்பட்டு வந்தது. இப்பொழுது பந்தல்கண்டிலுள்ள பன்னா என்ற இடத்தில் மட்டுமே இந்தத் தொழில் நடைபெறுகிறது.

பென்சில் கரி திருவிதாங்கூர், கிழக்குத் தொடர்ச்சி மலை, ஒரிஸ்ஸா, ராஜபுதனம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. ஆண்டு உற்பத்தி 1,000 டன்.

சிலாசத்து கட்சு, ராஜஸ்தானம், சென்னை, இமய மலை அடிவாரம் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. கந்த காமிலத் தயாரிப்பிலும், சிமென்டு செய்யவும் இது பயன்படுகிறது.

சுண்ணாம்புக்கல்லும் டாலமைட்டும் இந்தியாவின் தேவைகளுக்குப் போதிய அளவு காணப்படுகின்றன. ஆண்டு உற்பத்தி அரைக் கோடி டன். உலோக வேலையில் இளக்கியாகவும், கட்டட வேலைக்கும், சிமென்டு செய்யவும், வெளுக்கும் தூள் போன்ற ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிலும் இவை பயன்படுகின்றன.

கயனைட்டு, சிலிமனைட்டு மத்தியப் பிரதேசம், மத்திய பாரதம், பீகார் பிரதேசங்களில் கிடைக்கின்றன. அஸ்ஸாமிலுள்ள காசி மலைகளில் சிலிமனைட்டு ஏராளமென்று தெரிகிறது. ஆண்டுதோறும் பீகார் 20,000 டன் ஏற்றுமதி செய்கிறது. உயர்ந்தரகப் பீங்கான் செய்யவும், கண்ணாடித் தொழிலிலும் இவை பயன்படுகின்றன.

அப்பிரகம் : உலகத்திலேயே இந்தியாவில்தான் தகட்டு அப்பிரகம் அதிகமாக உற்பத்தியாகி வருகிறது. பீகார், சென்னை, ராஜபுதனம் ஆகியவை முக்கியமான உற்பத்தித்தலங்கள். ஆண்டு உற்பத்தி 5,000 டன்.

பாஸ்பேட்டு : சிங்கபூமியில் செம்பு கிடைக்கும் பகுதிகளில் ஆப்படைட்டு என்னும் தாதுவாகவும், திருச்சி மாவட்டங்களில் சிறுமுடிச்சுக்களாகவும் கிடைக்கிறது.

உப்பு : ராஜஸ்தான் ஏரிகளிலிருந்தும் கடல்நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. இதன் ஆண்டு உற்பத்தி 12,50.000 டன்.

மாக்கல் ஜயப்பூர், ஜபல்பூர், கர்நூல் ஆகியவிடங்களில் கிடைக்கிறது. மட்டரகம் பல பகுதிகளில் உள்ளது. பலப்பம் செய்யவும், பாத்திரங்கள் செய்யவும், செதுக்கு வேலைக்கும் மாக்கல் பயன்படுகிறது. தூய நிலையிலுள்ள மாக்கல்லின் தூள் அலங்காரப் பொருள்களில் பயன்படுகிறது.

கந்தகம் : தனிக் கந்தகமாக மசூலிப்பட்டினத்தருகில் கடற்கரையில் படிந்துள்ள கந்தகப்புலம் ஒன்றில் காணப்படுகிறது. கந்தகக்கல் என்ற கந்தகத்தாது சிம்லா மலையிலும் பீகாரிலும் காணப்படுகிறது. மொத்த அளவு மிகமிகக் குறைவு.

தென்னிந்தியத் தாதுக்கள் : தென்னிந்தியாவின் பெரும்பகுதி கேம்பிரியன் காலத்திற்கு முந்தைய யுகத்தைச் சேர்ந்த பழையபாறைகளால் ஆனது. மைசூர், தென்மேற்கு ஐதராபாத் போன்ற சில பகுதிகளில் அக்கினிப் பாறைகள் சில தாதுக்களைக் கொண்ட வண்டல் படிவுகளைப் பட்டைகளாக உட்செலுத்தியுள்ளன. கடப்பைப் பகுதியில் உருமாறாத வண்டற் படிவுகள் காணப்படுகின்றன. கடற்கரையோரங்களில் கிரிடேஷஸ் காலத்தின் படிவுகளும், மூன்றாம் புவியுகத்தின் படிவுகளும் உள்ளன.

தென்னிந்தியாவில் நிலக்கரி மிகக் குறைவாகவே கிடைக்கிறது. கோதாவரிப் பள்ளத்தாக்கில் கிடைக்கத்தக்க நிலக்கரியின் அளவை இன்னும் சரிவர அறியவில்லை. சிங்கரேணியிலும், கொத்தகூடத்திலும் உள்ள புலங்களில் தற்போது நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. கோதாவரியின் இரு கரைகளிலும் உள்ள பத்திராசலம், போளாவரம் பிரிவுகளில் நிலக்கரி கிடைக்கக்கூடும். இப் பகுதிகளில் 2,000 அடியிலிருந்து 3,000 அடி ஆழத்திற்குள் உயர்தர நிலக்கரி கிடைக்கிறதா என ஆராயவேண்டும்.

தென்னார்க்காடு மாவட்டத்தில் லிக்னைட்டு கிடைப்பது மேலே கூறப்பட்டது. நீரையுடைய மூன்றாம் புவி யுகத்துமணற்பாறைகளில் இது காணப்படுகிறது. புதுச்சேரியினருகே 27லிருந்து 50 அடி ஆழமும், சுமார் 3 சதுர மைல் பரப்புமுள்ள லிக்னைட்டுப் புலமொன்றை ஒரு பிரெஞ்சுக்காரர் பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தார். விருத்தாசலத்திற்கருகே உள்ள நெய்வேலியில் சராசரி 25 அடி ஆழமும் 20 சதுரமைல் பரப்புமுள்ள இன்னொரு புலமும் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டது.

லிக்னைட்டிலுள்ள ஈரத்தையும், ஆவியாகும் பொருள்களையும் அகற்றி, அதைக் கட்டியாக்கி நிலக்கரியைப் போலவே பயன்படுத்தலாம்.

கிழக்குக் கோதாவரியிலுள்ள ராசோல் என்னும் இடத்திற்கருகிலும், தஞ்சை மாவட்டத்திலுள்ள சீகாழியிலும் புவியில் தோண்டப்பட்ட கிணற்றுக்குழிகளிலிருந்து நிலவாயு வெளி வந்தது. மசூலிப்பட்டினத்தின் அருகிலும் இவ் வாயு வெளி வந்தது கண்டார்கள். இவ் வாயுவில் மெதேன் என்ற வாயு அதிகமாக இருப்பதால் இதை அடுப்பெரிக்கவும் விளக்கெரிக்கவும் பயன்படுத்தலாம். தொழில்களில் பயனாகும் அளவிற்கு இது கிடைப்பதில்லை. அண்மையில் படிந்த அடுக்குக்களில் புதைந்துபோன தாவரங்கள் சிதைவதால் இவ் வாயு தோன்றுகிறது. பெட்ரோலியம் இருப்பதை இவை காட்டுவதாக எண்ணுவது தவறு.

கோலாரில் நடைபெறும் தங்கச் சுரங்க வேலையைப் பற்றி மேலே கூறப்பட்டது. தங்கத்தைக் கொண்ட பாறைகள்கோலாரிலிருந்து சித்தூர் மாவட்டத்திலுள்ள குப்பம்வரை உள்ளன இப்பகுதியிலுள்ள பாறைகளில் தங்கம் குறைவாக உள்ளது. ஆனால் மேலும் ஆராய்ந்தால் இலாபகரமாக வெட்டி எடுக்கத்தக்க பாறைகள் கிடைக்கலாம். ஐதராபாத்திலுள்ள ஹட்டி என்ற ஊரிலும் தங்கச்சுரங்க வேலை நடைபெறுகிறது. மலையாளத்தில் வயநாட்டுப் பகுதியில் முன்னர்ச் சுரங்க வேலை நடைபெற்ற இடங்களில் ஓடைகளின் வண்டலலிருந்தும், பரலிலிருந்தும் கிராமவாசிகள் தங்கத்தைக் கழுவி எடுக்கிறார்கள். இப்பகுதிகளை விரிவாக ஆராய்ந்தால் சுரங்க வேலையை மீண்டும் தொடங்க வழியேறபடலாம். மைசூரில் கிடைக்கும் தங்கத்துடன் 100க்கு 3 பாகம் வெள்ளியும் கலந்திருக்கிறது. இதைத் தவிர இந்தியாவில் வெள்ளி உற்பத்தியே இல்லை.

செம்பு : நெல்லூர் மாவட்டத்திலுள்ள கரிமன பேட்டை என்னுமிடத்திலும், குண்டூர் மாவட்டத்திலுள்ள வினுகொண்டாவின் அருகிலும், கோவை, கர்நூல் மாவட்டங்களிலுள்ள சில இடங்களிலும் செம்பு காணப்படுகிறது. இவ்விடங்களில் எல்லாம் பழங்காலத்தில் உலோகத்தை வெட்டி எடுக்கும் வேலை நடந்து வந்தது. அண்மையில் நடைபெற்ற ஆராய்ச்சிகளின் விளைவாய்க் கரிமனபேட்டையிலும் வினுகொண்டாவிலும் சுரங்க வேலையை மீண்டும் தொடங்கக்கூடும் எனத் தெளிவாகியுள்ளது. இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படும் தாதுக்கள் ஆழத்திலும் இருக்கும் என்று கூறமுடியாது. இதை அறிய மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இந்தியாவில் செப்புத் தாதுக்கள் குறைவு. ஆகையால் இந்த ஆராய்ச்சி மிக முக்கியமானது.

ராயலசீமையிலுள்ள ஜங்கம் ராஜபல்லி, பசவாபுரம், கோயில், குண்ட்லா, சித்யாலா, கானி (Gani)போன்ற இடங்களில் காரீயத்தையும் நாகத்தையும் வெட்டி எடுக்கும் வேலை நடைபெற்றதற்கு அறிகுறிகள் உள்ளன. குறைவான அளவு உலோகமுள்ள தாதுக்கள் இவ்விடங்களில் மேற்பரப்பில் காணப்படுகின்றன. இவ்விடங்களை மேலும் ஆராய்ந்தால் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க தாதுக்கள் ஆழத்தில் உள்ளனவா என அறியலாம். இவ்விரு உலோகங்களும் இந்தியாவில் மிகக் குறைவாகவே கிடைப்பதால் இப்பகுதிகளை ஆராய்வது அவசியம்.

அலுமினியத்தின் முக்கியத் தாதுவான பாக்சைட்டு சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வராயன் மலைக்குன்றுகளில் கிடைக்கிறது. இப்பகுதிகளில் 60லிருந்து 70 இலட்சம் டன் வரையுள்ள தாதுக்கள் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பகுதி உயர்ந்த ரகமானது. கோதாவரி, விசாகப்பட்டினம் மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் நடைமுறையில் பயன்படுத்தத்தக்க பாக்சைட்டுக் கிடைக்கலாம்.

பாக்சைட்டிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதோடு, வெப்பந்தாங்கும் பொருள்களையும், மெருகூட்டிகளையும் தயாரிக்கலாம். சேலத்தில் கிடைக்கும் தாது ‘அலிராக்ஸ்’ (Alirox) என்ற செயற்கை மெருகூட்டியைத் தயாரிக்கப் பயன்படுகிறது.

மக்னீசியத் தாதுவான மாக்னசைட்டு சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென் மைசூரிலும் காணப்படுகிறது. சேலம் ரெயில்வே சந்திப்புக்கருகிலுள்ள புலம் மிகப் பெரிது. இதில் 100 அடி ஆழத்திற்குள் சுமார் 8 கோடி டன் தாது உள்ளது.

மாக்னசைட்டிலிருந்து மக்னீசிய உலோகத்தைப் பிரித்தெடுப்பதைத் தவிர இதை எஃகு தயாரிப்பில் வெப்பந் தாங்கும் பொருளாகவும் சிமென்டுத் தயாரிப்பிலும் பயன்படுத்துகிறார்கள். இப்பகுதிகளில் கிடைக்கும் மாக்னசைட்டு எஃகு தயாரிப்பில் மட்டுமே தற்போது பயன்படுகிறது. உயர்ந்த ரகமான இத்தாதுவிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கும் தொழிலை இனியேனும் தொடங்கவேண்டும்.

திருச்சி, சேலம், மைசூர்ப் பகுதிகளில் இரும்புத் தாதுக்கள் உள்ளன. சுமார் 100 அடி ஆழத்திற்குத் திருச்சி, சேலம் மாவட்டங்களில் 30 கோடி டன்களும், மைசூரில் 20 கோடி டன்களும் உள்ளன. கர்நூல் மாவட்டத்திலுள்ள ராமலகோடாவில் 40 இலட்சம் டன் நிறையுள்ள உயர்ந்த ரக இரும்புத் தாது உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாதுவைப் பொடித்து, அதனுடன் கலந்திருக்கும் படிகக் கல்லைப் பிரித்து, அதைச் செறிவாக்கிய பின்னரே அதிலிருந்து உலோகத்தைப் பிரித்தெடுக்கலாம். உலோகத்தைப் பிரித்தெடுக்கத் தேவையான நிலக்கரியையோ, கல் கரியையோ பீகாரிலிருந்தும் வங்காளத்திலிருந்தும் வரவழைக்க வேண்டியிருக்கிறது. மின்சாரம் மலிவாகக் கிடைத்தால் இரும்பைப் பிரித்தெடுக்கும் தொழில் இங்கே வளர வழியுண்டு.

விசாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கரிவிதியிலும் பெல்லாரியிலுள்ள சாண்டூரிலும், மைசூரின் சில பகுதிகளிலும் மாங்கனீஸ் தாதுக்கள் கிடைக்கின்றன. சாண்டூர்ப் பதியில் மட்டும் 3 கோடி டன் தாது உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத் தாதுக்கள் 45%க் கும் குறைவான உலோகத்தைக் கொண்ட இரண்டாம், மூன்றாம் ரகத் தாதுக்கள். இவற்றில் இரும்பும் பாஸ்வரமும் அதிகமாக உள்ளன. சாண்டூரில் கிடைக்கும் தாதுக்களில் சிலிக்கா குறைவாக இருப்பதால் பெல்ஜியத்திலும் ஜெர்மனியிலும் எஃகு உற்பத்திக்காக இதற்கு நல்ல கிராக்கி உள்ளது.

இரும்பு, டைட்டேனியம் ஆகிய இரு உலோகங்களின் கூட்டான இல்மனைட்டு என்னும் தாது படிகப் பாறைகளில் மணிகளாகக் கிடைக்கிறது. திருவிதாங்கூர்க் கடற்கரையோரங்களிலுள்ள மணவாளக்குறிச்சி, கொல்லம், குமரி முனை முதலிய இடங்களிலும், தஞ்சை, விசாகப்பட்டினம் மாவட்டங்களிலும் கடற்கரை மணலில் இது உள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இது காணப்படுகிறது. திருவிதாங்கூர் மணலில் தாதுவின் செறிவு அதிகமாக இருக்கிறது. இத்தாது டைட்டேனிய வெள்ளை என்னும் வர்ணத்தைத் தயாரிக்கவும், டைட்டேனிய எஃகு கலவையைத் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதிலிருந்து பிரித்தெடுக்கப்படும் உலோகம் இலேசாகவும், உறுதியாகவும், ரசாயனப் பொருள்களினால் அரிபடாத வன்மையும் பெற்றிருப்பதால் வருங்காலத்தில் இதன் பயன் அதிகமாகலாம்.

உலோகமல்லாத தாதுக்களில் அப்பிரகம் முக்கிய மானது. அப்பிரகத்தில் முக்கியமான இரு மஸ்கோவைட்டு என்ற சிவப்பு அப்பிரகமும் வகைக ளான பிளாகோபைட்டு (Phlogopite) என்ற மஞ்சள் அப்பிரகமும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றிலும் மஸ்கோவைட்டு அதிகமாகக் கிடைக்கிறது. கூடூர்ராபூர் தாலுகாக்களில் சுமார் 60 மைல் நீளமும், 12 லிருந்து 15 மைல் அகலமும் உள்ள பரப்பில் பல அப்பிரகப் புலங்கள் உள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு அப்பிரகம் பிழைப்பைத் தருகிறது. மேற்குக் கோதாவரி, மாவட்டத்திலுள்ள போச்சாவரத்திலும், சேலம் மாவட்டத்திலுள்ள இடப்பாடியிலும், மலையாளத்திலுள்ள வயநாட்டிலும், திருவிதாங்கூரிலுள்ள புனலூர், நெய்யூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் சில அப்பிரகப் புலங்கள் உள்ளன. கருங்கல் திண்மமாக இறுகியபோது இது சிரைகளாகவும் கட்டிகளாகவும் தோன்றியிருக்க வேண்டும். சில சமயங்களில் இது ஆறு அல்லது ஏழடி அகலமும், ஓரடித் தடிப்புமுள்ள பெரிய கட்டிகளாகக் கிடைக்கிறது. இது தெளிவாகவும் கிடைப்பதுண்டு. பல கறைகளுடனும் கிடைப்பதுண்டு. உயர்ந்த ரக அப்பிரகம் சமதளமாகவும், கறைகளாவது வேறு குறைகளாவது இல்லாமலும் இருக்கும். அப்பிரகம் மின்சாரத் தொழிலிற்கு இன்றியமையாத பொருளாகும். எல்லாவகையான மின்சாரக் கருவிகளிலும் எந்திரங்களிலும் இது பயன்படுகிறது. காகிதம், சாந்து முதலியவற்றிற்குப் பளபளப்பைத் தரவும், ரப்பர், மெருகுத் துணி, வர்ணங்கள் முதலியவற்றிற்கு நிரவைப் பொருளாகவும் அப்பிரகத்தூள் பயன்படுகிறது. சிறு தகடுகளாகக் கிடைக்கும் அப்பிரகத்தின்மேல் அரக்கையோ, ஒரு செயற்கைப் பிசினையோ தடவி பல அடுக்குக்களை ஒன்று சேர்த்து, உயர்ந்த வெப்பத்தில் அழுத்தித் தேவையான தடிப்புள்ள கட்டியாக அதைப் பெறலாம். இதைத் தகடாகவோ, குழலாகவோ வேறு வடிவங்களாகவோ வெட்டலாம்.

எமரி, குருந்தம், படிகக்கல், சக்கிமுக்கிக்கல், கார்னெட்டுப் போன்ற பொருள்கள் மற்றப் பொருள்களைத் தேய்க்கவும், தொளைக்கவும், அவற்றிற்கு மெருகேற்றவும் பயனாவதால் மெருகூட்டிகள் எனப்படும். இவற்றைத் தூளாகவும், தூளிலோ துணியிலோ ஒட்டியும் பயன்படுத்துகிறார்கள். சாணை பிடிக்கும் சக்கரங்களாகவும் இவற்றை அமைப்பதுண்டு. இப்பொருள்களை நுண்ணிய தூளாக்கி, எஃகு முனையைக்கொண்டு உலோகங்களையும் மணிகளையும் தொளையிடலாம். தென்னிந்தியாவில் பல மெருகூட்டிப் பொருள்கள் கிடைக்கின்றன. நெல்லூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கார்னெட்டுக் கிடைக்கிறது. உண்மையான சக்கிமுக்கிக் கல் கிடைக்காவிட்டாலும், பலவகையான படிகக் கற்கள் கிடைக்கின்றன. சேலம், கோவை மாவட்டங்களில் முன்னர்க் குருந்தம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. இந்நாளிலும் கடினமான பாறை களிலிருந்து ஆண்டிற்குச் சுமார் 50 டன் நிறையுள்ள குருந்தம் எடுக்கப்படுகிறது.

வெப்பத்தைத் தாங்கும் பொருள்களான களிமண் வகைகளும், சிலிக்காவைக்கொண்ட பாறைகளும், மாக்னசைட்டு, குரோமைட்டு, பட்டுக்கல், பென்சில் கரி முதலிய பொருள்களும் உலோகங்களை உருக்கும் மூசைகள் செய்யவும், உலைகளின் உட்புறத்தில் வேய நீராவிக் குழாய்கள் முதலியவற்றில் வெப்பம் வீணாகாது தடுக்கவும் பயன்படுகின்றன. குரோமைட்டும் மாக்னசைட்டும் மைசூரிலும் சேலத்திலும் கிடைக்கின்றன. பல மாவட்டங்களில் களிமண் வகைகள் உள்ளன. குறிப்பாக மலையாளத்திலும், தென் கன்னடத்திலும், திருவிதாங்கூரிலும், இராமநாதபுரத்திலும், தென்னார்க்காட்டிலும், செங்கற்பட்டிலும், கிழக்குக் கோதாவரியிலும், மேற்குக் கோதாவரியிலும் இவை அதிகம். வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் இந்தியாவில் அதிகமாக இல்லை.

பலவகைகளிற் பயனாகும் களிமண்கள் தென்னிந்தியாவில் உள்ளன. கருங்கல்லைப்போன்ற படிகப் பாறைகளிலுள்ள தாதுக்களில் ஏற்படும் மாறுதல்களால் சீனக் களிமண் தோன்றுகிறது. இது உயர்ந்த ரகப் பீங்கான் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கக் களிமண் பயனாவது மேலே கூறப்பட்டது. சாதாரணச் செங்கற்களையும், சாக்கடைக் குழல்களையும் செய்யப் பயனாகும் களிமண்வகைகளும் உண்டு. மேற்குக் கரையோரத்தில் திருவிதாங்கூர், மலையாளம், தென் கன்னடம் ஆகிய பகுதிகளில் சீனக் களிமண் உள்ளது. தென்னார்க்காட்டிலுள்ள திண்டிவனத்தின் அருகிலும் இது சிறிதளவு உள்ளது. இது திருவள்ளூரிலுள்ள பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது. திருவிதாங்கூர், மலையாளம், தென்கன்னடம், தென்னார்க்காடு, சென்னை, செங்கற்பட்டு, நெல்லூர், மேற்குக் கோதாவரி மாவட்டங்களில் அங்கங்கே கிடைக்கும் களிமண் வகைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பல உள்ளன.

அயச்செந்தூரம், காவிக்கல், மஞ்சட்சிலை, மாங்கனச ஆக்சைடு, பெரைட்டிஸ் (Barytes), மாக்கல், நிறமுள்ள களிமண் வகைகள் போன்ற பலபொருள்கள் வர்ணங்கள் செய்யப் பயனாகின்றன. குரோமியம், நாகம் போன்ற உலோகங்களின் கூட்டுக்களும் வர்ணங்கள் செய்யப் பயன்படுகின்றன. ராயலசீமை, தஞ்சை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், குண்டூர்ப் பகுதிகளில் உயர்ந்த ரகக் காவிக் கல்லும் மஞ்சட் சிலையும் கிடைக்கின்றன. அயச் செந்தூரம் சாண்டூரில் கிடைக்கிறது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் பெரைட்டிஸ் கிடைக்கிறது. பம்பாய், கல்கத்தா நகரங்களில் உள்ளதுபோல் சென்னையில் வர்ணத் தொழில் இல்லை. பெரிய அளவில் வர்ணத் தொழிலை நடத்த இங்குப் போதிய மூலப் பொருள்கள் உள்ளன.

சீரான மணிவடிவான டாலமைட்டும் சுண்ணாம்புக் கல்லும் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் செய்யப்பயன்படுகின்றன. கலப்பு நிறங்களையும், சீரற்ற அளவுள்ள மணிகளையும் கொண்ட வகைகள் கட்டட வேலையில் பயனாகின்றன. விசாகப்பட்டினத்திலுள்ள அனந்த கிரியிலும், குண்டூரிலுள்ள மாச்செர்லாவிலும், சேலம், கோவைப் பகுதிகளிலும் உயர்ந்த ரகச் சலவைக் கல் உள்ளது. சாந்தும் சிமென்டும் தயாரிக்க ஏற்ற உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் கர்நூல், குண்டூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கிடைக்கிறது. கல்லச்சு முறைக்கேற்ற நேர்த்தியான சுண்ணாம்புக்கல் வகை கர்நூல் மாவட்டத்தில் கிடைக்கிறது. உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் தாதுக்களின் சில பகுதிகள் வெளுக்கும் தூள், கால்சியம் கார்பைடு, கால்சியம் சயனமைடு போன்ற ரசாயனப் பொருள்களைத் தயாரிக்க ஏற்றவை. எம். எஸ். கி.

நீர் மின்திறன்

திறன் கிடைக்கக் கூடிய இடங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. குன்றும் திறன்: விளையுந் தாவரங்களிலிருந்து எரிபொருள்கள் உற்பத்தி செய்யலாம். உதாரணமாக, பாணி (Molasses), இலுப்பைப் பூக்கள் முதலியவைகளிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கலாம் 2. குன்றாத்திறன்: நீர்வீழ்ச்சிகள், காற்று, அலைகள் முதலியவைகளிடமிருந்து பெறலாம். இந்தியாவில் கிடைக்கக்கூடிய நிலக்கரியின் அளவு 2,000 கோடி டன்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தபோதிலும், 500 கோடி டன்களே உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவையும் இரும்பு, எஃகு காய்ச்சுவதற்கு இன்றியமையாதவையாதலின் அவற்றுக்கென்றே ஒதுக்கி வைக்கவேண்டியிருக்கிறது. இந்தியாவிலுள்ள நிலக்கரிச் சுரங்கங்களிலிருந்தும், தென் ஆர்க்காடு, கட்சு ஆகிய இடங்களிலுள்ள லிக்னைட்டுப் படிவங்களிலிருந்தும் ஏராளமாகக் கிடைக்கும் மட்டரக நிலக்கரியை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெரும்பான்மை பீகாரிலும், மேற்கு வங்காளத்திலும், சிறுபான்மை அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், ஐதராபாத் ஆகிய இடங்களிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. நிலக்கரிச் சுரங்கங்கள் அருகில் இருந்தாலன்றி அதினின்று மின்சார உற்பத்திச் செலவு மிகுதியாகும். பெட்ரோலியமும் அதிகமாகக் கிடைக்கவில்லை. இந்தியாவில் செலவாகும் அளவில் 5 சதவீதமே அஸ்ஸாமில் கிடைக்கிறது.

இந்தியாவில் நீர்த்திற வசதிகளுக்குக் குறைவில்லை. நீர் மின்திறன் சக்தி 4 கோடி கிலோவாட்டுக்கள் என்று ஐந்தாண்டுத் திட்டம் மதிப்பிட்டிருக்கிறது. இவைகள் நிலக்கரி கிடைக்குமிடங்களுக்கு வெகுதூரத்தில் அமைந்திருப்பது ஓர் அனுகூலமாகும். எப்பொழுதும் பனியோடியங்கும் இமயமலைத்தொடர்கள் நீர்ப்பெருக்கை ஒழுங்காக அளிக்கும் இயற்கைச் சாதனமாக இருப்பதோடு, எந்த எந்திர நிபுணனாலும் கட்டமுடியாத மிகப் பெரிய நீர்த்தேக்கமாகவும் அமைந்திருப்பதால், அளவுக்கு மேற்பட்ட மின்திறன் உற்பத்தி செய்யத்தக்க இடங்கள் பல அங்கு உள்ளன.

இவ்விடங்களிற் பல பெரிய ஆற்றங்கரைகளில் மக்கள் நிறைந்த சமவெளிகளுக்கு வெகு தொலைவிலே அமைந்துள்ளன. ஆகவே மத்திய அரசாங்கத்தார் பக்ரா நங்கல் போன்ற திட்டங்களுக்குப் பணம் உதவி செய்யும்வரை அவை அபிவிருத்தி அடையவில்லை. அடுத்த படி மிகுதியாக உள்ளது மேற்கு மலைத்தொடர்களில், பம்பாய்க்கருகிலிருந்து ஆனைமலைகள், நீலகிரி மலைகள் உட்பட, தென் திருவிதாங்கூர் வரை வியாபித்துள்ள பகுதியாம். இங்கு மலைச்சரிவுகள் செங்குத்தாய் உள்ளன. தொடர்களும் மிகவும் உயரமானவை. ஆகையால் பல நீர்வீழ்ச்சிகளுக்குக் காரணமாகின்றன. காற்று வரவுப் பக்கமாயுள்ள சரிவுகளிலும், மலைத் தொடர்களின் உச்சியிலும் கனத்த மழை பெய்வதால் நீர் எப்போதும் மிகுந்த சக்தியோடு ஓடுகின்றது. தீபகற்பத்தின் தெற்குக் கோடியில் இரண்டு பருவக்காற்று மழைகளும் ஆண்டுதோறும் பல மாதங்கள் பெய்வதால் நீருக்குக் குறைவில்லை. வடகிழக்குப் பகுதியில் மலைப்பிரதேசமாயிருத்தலால் தென்மேற்குப் பருவக்காற்று மழைபெய்து நீர் மின்திறன் வளர்ச்சிக்குப் பெரிதும் வாய்ப்பு ஏற்படுகிறது. மற்ற இடங்களிலும் ஆறுகளுக்கு அணைகட்டிப்பெரியதேக்கங்களில் நீர் நிறைத்து, அவைகளின் அருகிலேயே, மேட்டூர், கங்கைக் கால்வாய்கள் போன்ற பல இடங்களில் மின் உற்பத்தி செய்ய எளிதிற்கூடும். நீர்வீழ்ச்சிகள் 3 அடிக்கும் குறைவாக உள்ள இடங்களிலும் நீர் மின்திறனை உற்பத்தி செய்துகொள்ள இதனால் முடிகின்றது. நாளடை வில் இத்தகைய தாழ்ந்த தலைப்பு உள்ள நீர் மின்திறனிடங்கள் பல நாட்டில் உண்டாவதற்கு வசதிகள் உள்ளன.

மின்சார நிலையங்களிற் பல முக்கிய நகரங்களிலுள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காகவே முதன் முதல் நிறுவப்பட்டன. பணமுடக்கத்தால் நாடெங்கும் நிலையங்களை ஏற்படுத்தக்கூடவில்லை. எனினும் நகரமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யப் பல தனிப்பட்ட கம்பெனிகள் முன்வந்தன. மின்சாரம் முதன்முதல் கல்கத்தாவுக்குத்தான் வழங்கப்பட்டது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி இரண்டு தலைமுறைகளாகத்தான் மற்றும் பல பெரிய நகரங்களில் மின்திற நிலையங்கள் தோன்ற லாயின. 1902-ல் மைசூரிலுள்ள சிவசமுத்திரம் என்னுமிடத்தில் தான் முதல் நீர் மின் நிலையம் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள நீர் மின் நிலையங்கள் பலவற்றிலும் பம்பாயில் டாட்டா கம்பெனியாரின் நிலையமே மிகப் பெரியது. 1920 வரை மின்திறன் மக்களின் தேவையின் அளவுக்குக் கிடைக்கவில்லை; இப்போதோ விரைவாக நாடெங்கும் கிடைக்கக் கூடியதாயுள்ளது. 1950-ல் மின்திறனின் மொத்த அளவு 23 இலட்சம் கிலோவாட்டுக்கள் என்று கணக்கெடுத்திருக்கின்றனர். நிலக்கரியிலிருந்து 60 சதவீதமும், நீர்த்திறனிலிருந்து 32 சதவீதமும், எண்ணெய் எரி கருவிகளிலிருந்து எஞ்சிய பகுதியும் கிடைத்தன.

இந்தியாவின் மற்ற பாகங்களைவிடப் பம்பாய், மைசூர், மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் மின் திறனுற்பத்தி மிகுதியாக இருக்கின்றது. ஒரிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களில் மிகக்குறைவு. வங்காளத்திலும் பீகாரிலும் மின்திறன் பெரும்பகுதி நிலக்கரியிலிருந்து கிடைக்கிறது. பம்பாய்க்கும் தென்னிந்தியாவிற்கும் தொலைதூரத்திலிருந்தே நிலக்கரி வரவேண்டியிருப்பதால் நீர் மின்திறன் உற்பத்தியே பெரும்பாலும் அபிவிருத்தி அடைந்துவருகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 40 சதவீதம் பம்பாய், கல்கத்தா ஆகிய இரண்டு நகரங்களிலேயே செலவாகிவிடுகிறது. 50,000 மக்களடங்கிய எல்லா நகரங்களுக்கும், 20,000 மக்களுள்ள நகரங்களிற் பெரும்பாலனவற்றுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் மின்சார வசதி சிறிதுதான் பரவியுள்ளது. இந்தியாவிலுள்ள 5,60,000 கிராமங்களில் 31,000 கிராமங்களில்தான் மின்சார வசதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் ஏறக்குறைய 2,500. கிராமங்கள் சென்னையிலும் மைசூரிலுமே உள்ளன. 1956க்குள்ளே இன்னும் பத்து இலட்சம் கிலோவாட்டுக்கள் அதிகமாக வேண்டுமென்றும், திட்டத்தின் மற்றெல்லா அமிசங்களும் நிறைவேறுங் காலத்தில் மொத்தம் 14 இலட்சம் கிலோவாட்டுக்கள் ஆகியிருக்க வேண்டுமென்றும் ஐந்தாண்டுத் திட்டம் வகுத்திருக்கிறது. இந்த மின்சக்தியில் பெரும்பகுதி கைத்தொழில்களுக்கும், கிராமங்களின் மின்சார வசதிக்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும். பீ. எம். தி.

கைத்தொழில்கள்

புராதன முறையில் நடைபெறும் கைத்தொழில்கள் பலவும், நவீன முறைகளைப் பின்பற்றும் பெரிய எந்திர சாலைகளும், இந்தியாவில் அடுத்தடுத்திருப்பதைக் காணலாம். ஒவ்வொரு கிராமத்திலும் குயவர், தச்சர், கருமார், மேதரவர் முதலியோர் அக்கிராம மக்களுக்குத் தினசரி உபயோகத்துக்கு வேண்டிய பாத்திர பண்டங்கள், தட்டுமுட்டுச் சாமான்கள் முதலியவற்றைச் செய்து வருகின்றனர். அவ்வக்கிராமத்தாரின் தேவையின் அளவுக்கே தொழில்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கு அருகிற் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே தொழிலை நடத்த வேண்டியிருப்பதாலும் குலமுறையாகப் பெற்ற தொழில் திறமை குன்றி வருபக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/776 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/777 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/778 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/779 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/780 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/781 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/782 பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/783 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/784 மீடியாவிக்கி:Proofreadpage pagenum templateபக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/785 மீடியாவிக்கி:Proofreadpage pagenum template#lst:பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/786

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இந்தியா&oldid=1463676" இலிருந்து மீள்விக்கப்பட்டது