குர்ஆன்/மர்யம்
Appearance
< குர்ஆன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
- 1. காஃப், ஹா, யா, ஐன், ஸாத்
- 2. (நபியே! இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.
- 3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).
- 4. (அவர்) கூறினார்; "என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.
- 5. "இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை அளிப்பாயாக!
- 6. "அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே! அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக!"
- 7. "ஜகரிய்யாவே! யஹ்யா என்ற பெயர் கொண்ட ஒரு புதல்வனை(த் தருவது) பற்றி நிச்சயமாக நாம் உமக்கு நற்செய்தி கூறுகிறோம். இதற்கு முன்னர் இப்பெயர் கொண்டவரை நாம் ஆக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்).
- 8. (அதற்கு அவர்) "என் இறைவனே! என் மனைவியோ மலடாகவும், முதுமையின் தள்ளாத பருவத்தை நான் அடைந்தும் இருக்கும் நிலையில் எனக்கு எவ்வாறு ஒரு புதல்வன் உண்டாகுவான்?" எனக் கூறினார்.
- 9. "(அது) அவ்வாறே (நடைபெரும்) என்று கூறினான். இது எனக்கு மிகவும் சுலபமானதே! முன்னர் நீர் ஒரு பொருளாகவும் இல்லாதிருந்த காலத்து, நானே உம்மை படைத்தேன்" என்று இறைவன் கூறினான்.
- 10. (அதற்கவர்) "என் இறைவனே! நீ எனக்கு ஓர் அத்தாட்சியை (இதற்காக) ஏற்படுத்துவாயாக!" என்று வேண்டினார்; "நீர் சவுக்கியத்துடன் இருக்கும் நிலையிலேயே மூன்று இரவு(பகல்)கள் நீர் மக்களுடன் பேச முடியாமலிருப்பீர்; (அதுவே) உமக்கு அத்தாட்சியாகும்" என்று கூறினான்.
- 11. ஆகவே அவர் மிஹ்ராபை (தொழும் இடம்) விட்டு வெளியே தம் சமூகத்தாரிடம் வந்தார்; பின்னர் அவர்களிடம் (பேச முடியாத நிலையில் சயிக்கினையாக) அவர், "காலையிலும், மாலையிலும் (அல்லாஹ்வைத் துதித்து) தஸ்பீஹீ செய்யுங்கள்" என்று உணர்த்தினார்.
- 12. (அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.
- 13. அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.
- 14. மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.
- 15. ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.
- 16. (நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,
- 17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.
- 18. (அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.
- 19. "நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார்.
- 20. அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.
- 21. "அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார்.
- 22. அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.
- 23. பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார்.
- 24. (அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான்.
- 25. "இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.
- 26. "ஆகவே, (அவற்றை) உண்டு, (ஆற்று நீரைப்) பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் நீர் பார்க்க நேரிட்டால், 'மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கின்றேன்; ஆதலின் இன்றைய தினம் எந்த மனிதருடனும் பேச மாட்டேன்" என்று கூறும்.
- 27. பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!"
- 28. "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்).
- 29. (ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள்.
- 30. "நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான்.
- 31. "இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்.
- 32. "என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.
- 33. "இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது.
- 34. இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்).
- 35. அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது.
- 36. "நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்).
- 37. ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்!
- 38. அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள்.
- 39. மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள்.
- 40. நிச்சயமாக நாமே, பூமியையும் அதன் மீதுள்ளவர்களையும் வாரிசாகக் கொள்வோம்; இன்னும் நம்மிடமே (அனைவரும்) மீட்கப்படுவார்கள்.
- 41. (நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமைப்பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மிக்க உண்மையாளராகவும் - நபியாகவும் - இருந்தார்.
- 42. "என் அருமைத் தந்தையே! (யாதொன்றையும்) கேட்க இயலாத, பார்க்க இயலாத உங்களுக்கு எந்த தேவையையும் பூர்த்தி செய்ய இயலாததுமான ஒன்றை ஏன் நீங்கள் வணங்குகிறீர்கள்?" என்று அவர் தம் தந்தையிடம் கூறியதை நினைவுபடுத்தும்.
- 43. "என் அருமைத் தந்தையே! மெய்யாகவே உங்களிடம் வந்திராத கல்வி ஞானம் நிச்சயமாக எனக்கு வந்திருக்கிறது ஆகவே, நீங்கள் என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களைச் செவ்வையான நேர்வழியில் நடத்துகிறேன்.
- 44. "என் அருமைத் தந்தையே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள்; நிச்சயமாக ஷைத்தான், அர்ரஹ்மானுக்கு (அருள் மிக்க நாயனுக்கு) மாறு செய்பவன்.
- 45. "என் அருமைத் தந்தையே! நிச்சயமாக அர்ரஹ்மானிடமிருந்துள்ள வேதனைவந்து உங்களைத் தொட்டு, நீங்கள் ஷைத்தானின் கூட்டாளியாகி விடுவதைப் பற்றி நான் அஞ்சுகிறேன்" (என்றார்).
- 46. (அதற்கு அவர்) "இப்றாஹீமே! நீர் என் தெய்வங்களை புறக்கணிக்கிறீரா? நீர் (இதை விட்டும்) விலகிக் கொள்ளாவிட்டால் உம்மைக் கல்லெறிந்து கொல்வேன்; இனி நீர் என்னைவிட்டு நெடுங்காலத்திற்கு விலகிப் போய்விடும்" என்றார்.
- 47. (அதற்கு இப்ராஹீம்) "உம்மீது ஸலாம் உண்டாவதாக! மேலும் என் இறைவனிடம் உமக்காகப் பிழை பொறுக்கத் தேடுவேன்; நிச்சயமாக அவன் என் மீது கிருபையுடையவனாகவே இருக்கின்றான்" என்று கூறினார்.
- 48. நான் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றை விட்டும் விலகிக் கொள்கிறேன்; மேலும் நான் என் இறைவனை பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன்; என் இறைவனைப் பிரார்த்திப்பது கொண்டு நான் நிர்ப்பாக்கியவானாகாமல் இருக்கப் போதும்" (என்றார்).
- 49. (இவ்வாறு) அவர், அவர்களை விட்டும், அவர்கள் வணங்கிக் கொண்டிருந்த அல்லாஹ் அல்லாதவற்றை விட்டும் விலகிக் கொண்டபோது, இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அவருக்கு நாம் நன்கொடையளித்தோம்; இன்னும் (அவர்கள்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்.
- 50. மேலும் நாம் அவர்களுக்கு நம் ரஹ்மத்திலிருந்தும் நன்கொடைகளையளித்தோம்; அவர்களுக்கு உயர்ந்த நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்.
- 51. (நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் மாசில்லாத (தூயவராக) இருந்தார். அவர் ரஸூலாகவும் நபியாகவும் இருந்தார்.
- 52. இன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம்.
- 53. மேலும், நம்முடைய ரஹ்மத்தில் நின்றும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நபியாக அவருக்கு நன்கொடையளித்தோம்.
- 54. (நபியே!) இவ்வேதத்தில் இஸ்மாயீலைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் வாக்குறுதியில் உண்மையாளராக இருந்தார்; இன்னும் அவர் தூதராகவும், நபியாகவும் இருந்தார்.
- 55. அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார் தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
- 56. (நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
- 57. மேலும், நாம் அவரை ஓர் உயரிய இடத்தில் உயர்த்தினோம்.
- 58. இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடையவும், இஸ்ராயீல் (யஃகூபின்) சந்ததியிலும், இன்னும் நாம் தேர்ந்தெடுத்து நேர்வழியில் நடத்தியவர்களிலுமுள்ள நபிமார்களாவார்கள் - இவர்கள் மீது அல்லாஹ் அருளைப் பொழிந்தான்; அர்ரஹ்மானுடைய வசனங்கள் அவர்களின் மீது ஓதப்பட்டால், அவர்கள் அழுதவர்களாகவும், ஸுஜூது செய்தவர்களாகவும் விழுவார்கள்.
- 59. ஆனால், இவர்களுக்குப் பின் (வழி கெட்ட) சந்ததியினர் இவர்களுடைய இடத்திற்கு வந்தார்கள்; அவர்கள் தொழுகையை வீணாக்கினார்கள்; (இழிவான மன)இச்சைகளைப் பின்பற்றினார்கள்; (மறுமையில்) அவர்கள் (நரகத்தின்) கேட்டைச் சந்திப்பார்கள்.
- 60. தவ்பா செய்து, (பாவங்களிலிருந்து விலகி) ஈமான் கொண்டு, (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களே அவர்களைத் தவிர அத்தகைய (ஸாலிஹான)வர்கள்; (ஜன்னத்தில்) - சுவர்க்கத்தில் பிரவேசிப்பார்கள்; (அவர்கள் அடைய வேண்டிய நற்பயன்) எதிலும் அவர்களுக்குக் குறைவு செய்யப்பட மாட்டாது.
- 61. அத்னு என்னும் அந்தச் சுவனபதிகளை அர்ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு - அவற்றை அவர்கள் காண முடியாத போதே - வாக்களித்தான்; நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நிறைவேறும்.
- 62. ஸலாம் (சாந்தி) என்பதைச் (செவியுறுவார்களே) தவிர அச்சுவனபதிகளில் அவர்கள் வீணான எதையும் செவியுற மாட்டார்கள்; இன்னும் அங்கே அவர்களுக்குக் காலையிலும், மாலையிலும் அவர்களுடைய உணவு இருக்கிறது.
- 63. இத்தகைய சுவர்க்கத்திற்கு நம் அடியார்களில் தக்வா - பயபக்தி - உடையவர்களை நாம் வாரிசாக்கிவிடுவோம்.
- 64. (மலக்குகள் கூறுகிறார்கள்; நபியே!) "உமது இறைவனின் கட்டளையில்லாமல் நாம் இறங்க மாட்டோம்; எங்களுக்கு முன்னிருப்பதும், எங்களுக்கு பின்னிருப்பதும், இவ்விரண்டிற்குமிடையில் இருப்பது அவனுக்கே (சொந்தமாக) இருக்கின்றன உமது இறைவன் ஒரு பொழுதும் மறப்பவனல்லன்."
- 65. "(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?"
- 66. (எனினும்) மனிதன் கேட்கிறான்; "நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்படுவேனா? என்று.
- 67. யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
- 68. ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.
- 69. பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.
- 70. பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.
- 71. மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.
- 72. அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம். (
- 73. இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்; "நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.
- 74. இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.
- 75. "யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.
- 76. "மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்."
- 77. "நம்முடைய வசனங்களை நிராகரித்துக் கொண்டு, (மறுமையிலும்) நான் நிச்சயமாக, செல்வமும், பிள்ளையும் கொடுக்கப்படுவேன்" என்று கூறினானே அவனை (நபியே!) நீர் பார்த்தீரா?
- 78. (பின்னர் நடக்கவிருக்கும்) மறைவான விஷயத்தை அவன் எட்டிப் பார்த்துத் தெரிந்து கொண்டானா அல்லது அர்ரஹ்மானிடத்திலிருந்து உறுதிமொழி (ஏதேனும்) பெற்றிருக்கிறானா?
- 79. அப்படியல்ல! அவன் சொல்வதை நாம் எழுதி வருவோம்; இன்னும் நாம் அவனுடைய வேதனையை மேலும் மேலும் அதிகமாக்குவோம்.
- 80. இன்னும் (தன் சொத்துக்கள் என்று அவன் பெருமையடித்துப்) பேசிக் கொண்டிருப்பவற்றையும் நாம் அனந்தரங் கொள்வோம்; (இவற்றையெல்லாம் விட்டு) அவன் நம்மிடத்தில் தன்னந்தனியாகவே வருவான்.
- 81. (முஷ்ரிக்குகள்) தங்களுக்காக (அல்லாஹ்விடம் மன்றாடுவதற்கு) வல்லமையுடையவையென்று அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டுள்ளார்கள்!
- 82. அப்படியல்ல! தங்களை இவர்கள் வணங்கியதையும் நிராகரித்து இவர்களுக்கு விரோதமாக மாறிவிடுவீர்.
- 83. காஃபிர்களை (வழி கேட்டில் செல்லும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே நிச்சயமாக ஷைத்தான்களை நாம் அனுப்பியிருக்கிறோம் என்பதை நீர் பார்க்க வில்லையா?
- 84. எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
- 85. அர்ரஹ்மானாகிய நம்மிடத்தில் பயபக்தியுடையவர்களை நாம் கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில்;
- 86. குற்றவாளிகளை (அவர்கள்) தாகம் தீர்த்துக் கொள்வதற்காக நரகை நோக்கி நாம் விரட்டுவோம்.
- 87. அர்ரஹ்மானிடம் உடன்படிக்கை செய்து கொண்டோரைத் தவிர, எவரும் ஷஃபாஅத்திற்கு - மன்றாட்டத்திற்கு - அதிகாரம் பெற மாட்டார்கள்.
- 88. இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள்.
- 89. "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள்.
- 90. இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போதிலும்.
- 91. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று தாவாச்செய்வதினால்-
- 92. ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது.
- 93. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை.
- 94. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான்.
- 95. கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர்.
- 96. நிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு (ஸாலிஹான-) நல்ல செயல்களைச் செய்கின்றார்களோ அவர்களுக்கு அர்ரஹ்மான் (யாவரின்) நேசத்தை ஏற்படுத்துவான்.
- 97. (நபியே!) நாம் இ(வ் வேதத்)தை உம்முடைய மொழியில் (அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக் கொண்டு நீர் - பயபக்தியுடையவர்களுக்கு நன்மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்களுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்.
- 98. அவர்களுக்கு முன்னர், எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம்; அவர்களில் ஒருவரையேனும் நீர் பார்க்கிறீரா? அல்லது அவர்களுடைய இலேசான சப்தத்தை நீர் கேட்கிறீரா?