திருமுருகாற்றுப்படை-மூலமும் உரையும்/திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை
(நக்கீரர் அருளியது)
1 திருப்பரங்குன்றம்
இணைக்குறளாசிரியப்பா
உலக முவப்ப வலனேர்பு திரிதரு
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
5செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பின் வள்ளுறை சிதறித்
தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
10திருள்படப் பொதுளிய பராரை மராஅத்
துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்
தெளிவுரை
முருகன் பெருமை
(1-6: ஒன்று முதல் ஆறாம் அடி வரை)
உலகத்தார் மகிழும்படி வலமாக எழுந்து உலகைச் சுற்றுவதுபோல் தோன்றுகிற—பலரும் புகழ்ந்து வணங்கும் செஞ்ஞாயிற்றைக் (காலையில்) நீலக்கடலில் கண்டாற்போன்று (நீலமயிலின் மேல் தோன்றி) விடாமல் வீசுகிற நெடுந்தொலைவு எங்கும் சென்று பரவி விளங்குகிற செவ்விய ஒளிவிளக்கத்தையும் (பிரகாசத்தையும்), உற்ற அன்பரைத் தாங்கிக் காக்கும் அழகுடைய வலிய திருவடிகளையும், அழிக்க வேண்டியவர்களைத் தேய்த்து அழித்த இடி ஒத்த பெரிய வலிய கைகளையும் உடையவனும், குற்றம் அற்ற கற்பினையும் விளக்கமான நெற்றியினையும் உடைய தெய்வயானையின் கணவனும்,
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக்
கணக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்
15கோபத் தன்ன தோயாப் பூந்துகிற்
பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
20துணையோ ராய்ந்த விணையீ ரோதிச்
செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
25மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத்
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
(12-19) பெரிய மூங்கில் ஓங்கிய நெடுந்தொலைவு உயர்ந்துள்ள மலையில், சதங்கை சுற்றிய பொலிவுள்ள சிவந்த சிறிய அடியுடன் (பாதத்துடன்) கூடிய திரண்ட கால்களையும், வளைந்த இடுப்பினையும், மூங்கில் போன்ற தோளினையும், இந்திரகோபப் பூச்சி போன்ற-சாயம் - தோய்க்காமலேயே இயற்கையாகவே சிவந்துள்ள பூவேலைப்பாடுடைய உடையினையும், பல மணிகளை நிரவிக் கோத்த மேகலையணிந்த அல்குலினையும், கையால் செயற்கையாய்ப் புனைந்து உண்டாக்காத - இயற்கை யழகு வாய்த்த பொலிவினையும், நாவல் (சாம்பூந்தம்) என்னும் பெயருடைய ஒருவகைப் பொன்னால் புனைந்துசெய்த — விளங்கும் அணிகலன்களையும், நெடுந்தொலைவும் தாண்டி விளங்குகிற (பிரகாசிக்கிற) குற்றம் அற்ற திருவுடலையும் (உடையவராய்),
30பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
நுண்பூ ணுகந் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின்
35குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர்
வேங்கை நுண்டா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக்
கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
40சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச்
சூரர மகளி ராடுஞ் சோலை
மந்தியு மறியா மான்பயி லடுக்கத்துச்
சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
45பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
50பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட்
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
ஒண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
55வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா
நிணந்தின் வாய டுணங்கை தூங்க
இருபே ருருவி னொருபே ரியாக்கை
அறுவேறு வகையி னஞ்சுவர மண்டி
அவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
(45-46) பாரினும் முற்பட்டதான குளிர்ந்த கடல் கலங்கும்படி உள்ளே புகுந்து சூரர்களின் முதல்வனான சூரபன்மனைக் கொன்ற—ஒளிவீசுகிற—இலைவடிவான நீண்ட வேலை (உடையவனும்).
அரக்கரொடு பொருத போர்க்களத்தில்
பேய் மகள் ஆடிய துணங்கைக் கூத்து
(47-56) உலர்ந்த மயிரினையும், வரிசை மாறிய பற்களையும், பிளந்த வாயினையும், சுழலும் கருவிழியுள்ள பசிய கண்களையும், அஞ்சத்தக்க பார்வையினையும், பிதுங்கிய கண்ணையுடைய கோட்டானோடு கொடிய பாம்பும் பொருந்தித் தொங்குவதனாலே பெரிய முலைகளை அலைக்கழிக்கின்ற காதுகளையும், சொர சொரப்பான வயிற்றினையும், நடுங்கச் செய்யும் நடையினையும் உடைய—கண்டார் அஞ்சத்தக்க பேய்ப் பெண்ணானவள், குருதி தோய்ந்த கூரிய நகத்தையுடைய கொடிய விரலாலே கண்னைத் தோண்டித் தின்ற மிக்க முடை நாற்றம் வீசும்கரிய (அரக்கர்) தலையை ஒள்ளிய தொடி அணிந்த கையிலே ஏந்திக் கொண்டும், அரக்கர் அஞ்சும்படி எதிர் நின்று (முருகன்) பொருத வெற்றிப் போர்க்களத்தைப் புகழ்ந்து பாடிக் கொண்டும். தோளைத் தூக்கியசைத்து நிணத்தைத் தின்னும் வாயை உடையவளாய்த் ‘துணங்கை’ என்னும் கூத்தை ஆடிக்கொண்டிருக்க,
60மாமுத றடிந்த மறுவில் கொற்றத்
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்புரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
65னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப
இன்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
70றிருவீற் றிருந்த தீதுதிர் நியமத்து
மாடமலி மறுகிற் கூடற் குடவயி
னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
75கண்போன் மலர்ந்த காமர் சுனைமல
ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்
குன்றமர்ந் துறைதலு முரிய னதாஅன்று.
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
80படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக்
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
85மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
அகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
90மனனேர் பெழுதரு வாணிற முகனே
மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக
மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக
முருகனின் யானை ஊர்தி
(78-82) கூரிய தோட்டி (அங்குசம்) குத்திய வடு ஆழ்ந்த புள்ளி பொருந்திய நெற்றியில் வாடாத பொன்னரி மாலை பட்டத்தோடு தொங்கி அசைய, தாழ்ந்து தொங்கும் மணிகள் இரண்டும் மாறி மாறி இரட்டை ஒலி செய்கின்ற இரு பக்கங்களையும் விரைந்த நடையினையும் எமனை ஒத்த—வெல்லுதற்கு அரிய வலிமையினையும் உடைய—காற்று எழுந்தாற்போல் விரைந்து செல்கிற களிற்று யானையின்மேல் எழுந்தருளி,
(83- 90) ஐவகை வடிவுடன் செய்வேலைப்பாடு முதிர்ந்த முடியோடு திகழ்கிற-முரண்பட்ட ஒளி வீசும் அழகிய மணிகள் மின்னலை ஒத்த ஒளி விளக்கத்துடன் தலையில் பொலிவுதர, ஒளிவீசி அசைகிற-வேலைப்பாடு அமைந்த பொற்காதணிகள், நெடுந்தொலைவு விளங்கித் தோன்றும் இயல்புடைய ஒளிவிடும் திங்களைச் சூழ்ந்த நீங்காத விண்மீன்கள் போன்று திகழ்வனவாய் ஒளிவீச, குற்றமற்ற குறிக்கோளுடன் தம் தவத்தொழிலை முடிக்கும் தவத்தோரின் உள்ளத்தில் எதிர்ப்பட்டு எழுந்து தோன்றுகிற நல்லொளியும் செந்நிறமும் மிக்க ஆறு முகங்களுள் ,
95மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக
மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள்போலத்
திசைவிளக் கும்மே யொருமுகஞ் செறுநர்த் தேய்த்துச்
செல்சம முருக்கிக்
100கறுவுகொணெஞ்சமொடு களம்வேட்
டன்றே யொருமுகங்
குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே யாங்கம்
மூவிரு முகனு முறைநவின் றெழுகலி
னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
105செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்
விண்செலன் மரபி னையர்க் கேந்திய
தொருகை உக்கஞ் சேர்த்திய தொருகை
(103-106) அவ்வாறாக அந்த ஆறு முகங்களும் முறையுடன் பயின்று அச்செயல்களைப் புரிந்தொழுகுவதால் அவற்றிற்கேற்ப, — மாலை தாழ்ந்து .தொங்கும் அழகிய மார்பிலிருந்து தொடங்கியுள்ள சிவந்த மூன்று அழகு வரிக் கோடுகளைத் (தோள்வரையும்) பெற்றுள்ள—வலிமையுடைய—சுடர்விட்டு வளவிய புகழ் நிறைந்து வளைந்து நீட்டி இயங்குகிற நிமிர்ந்த தோள்களுடன் கூடிய பன்னிரு திருக்கைகளுள்,
(107–118)
[முதல் இரட்டைக் கைகள்]
110அங்குசங் கடாவ வொருகை யிருகை
ஐயிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மிமீசைக் கொட்ப வொருகை
115பாடின் படுமணி யிரட்ட வொருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட வாங்கப்
பன்னிரு கையும் பாற்பட வியற்றி
அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
(109-110) அழகு மிக்க ஆடையணிந்துள்ள துடையின் மேலே தொங்கவிட்டிருப்பது ஒருகை; (ஊர்ந்துசெல்லும் பானையைச்) செலுத்துவதற்காகத் தோட்டி (அங்குசம்) பிடித்திருப்பது ஒருகை.
(110-111) அடுத்த இரட்டைக் கைகளுள், அழகிய பெரிய கேடயத்தை ஏந்தி நிற்க ஒருகை; வேலை வலமாகச் சுழற்ற மற்றொரு கை.
(111-113) ஒருகை மார்போடு பொருந்தித் திகழ; மற்றொன்று மாலையுடன் விளங்க;
(113-115) ஒருகை கீழ்நோக்கித் தொங்கும் தொடி என்னும் அணியுடன் மேல் நோக்கிச் சுழல; வேறொன்று, ஓசை இனிமையுடன் ஒலிக்கின்ற மணியை மாறி மாறி இரட்டித்து ஒலியெழச் செய்ய;
(115-118) ஒரு கை நீல நிற விண்ணிலிருந்து மிகுந்த மழைத் துளியைப் பெய்விக்க; இன்னொரு கை வானத்துத் தெய்வ மகளிர்க்கு மணமாலை சூட்ட, -அப்படியாக அந்தப் பன்னிரு கைகளையும் முறையுடன் தொழிற்படுத்தி,
120வயிரெழுந் திசைப்ப வால்வனை ஞரல
உரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ
125ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே
யதாஅன்று
சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற விமைக்கு முருவினர் மானி
னுரிவை தைஇய வூன்கெடு மார்பி
130னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற்
பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
135கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
பெற்ற பண்பாகும். அத்திருச்சீரலைவாய் அல்லாமலும், -
முனிவர்கள் முன்புகுதல்
புகைமுகந் தன்ன மாசி றூவுடை
முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
140செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி
னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவல ரின்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவி
னவிர்தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
145பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப்
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற்
150பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
( 138-142) வெண்புகையை மொண்டு கொண்டாற் போன்ற அழுக்கு இல்லாத தூய உடையினையும், மொக்கு வாய் திறந்து மலர்ந்த மலர் மாலை சுற்றியணிந்த மார்பினையும், செவியாலே இசையை நேர்ந்து அமைத்த-செய்வேலைப்பாடு மிகுந்த வார்க்கட்டினையுடைய நல்ல யாழ் பயின்ற நயமான உள்ளப் பாங்கினையும் உடைய மென்மையான மொழி பேசுபவராகிய கந்தருவர் என்னும் யாழோர் இனிய யாழ் நரம்பை மீட்டி இயக்குதற்காக,
(143-147) நோய் இல்லாமல் நலமுடன் அமைந்த உடம்பினைப் பெற்றவரும், விளங்கும் மாந்தளிர் போன்ற மேனி பொருந்தியவரும். விளங்கும் போதெல்லாம் (ஜொலிக்கும் போதெல்லாம்) உரைத்த பொன்துகளின் பதிவு போல் விளங்கும் (ஜொலிக்கும்) தேமலை உடையவரும், இனிய ஒளிவீசும் மேகலை யணிந்த—கீழே சரிந்தும் மேலே உயர்ந்தும் அமைந்துள்ள அல்குலை உடையவரும் ஆகிய களங்கம் அற்ற கந்தருவ மகளிருடன் வந்து குற்றம் இன்றிச் சூழ்ந்து திகழ,—
திருமால்
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ
ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
முவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு
155நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரண் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
எருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
160நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் முவருந் தலைவ ராக
ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்
தாமரை பயந்த தாவி லூழி
165நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப்
(151-154) வெள்ளிய ஆனேற்றை (இடபத்தை) வலப் புறத்தே கொடியாக உயர்த்திய—பலரும் புகழும் திண்ணிய தோள்களை உடைய—(இடப்பாகத்தே) உமையம்மை விரும்பி அமர்ந்துள்ள--இமைக்காத மூன்று கண்களையுடைய-முப்புரங்களை எரித்து அழித்த—வலிமை மிக்க செல்வனாகிய உருத்திரனும்,
(155-159) (நூறைப் பத்தால் பெருக்கினால் வரும்) ஆயிரம் கண்களுடனும் நூற்றுக்கு மேற்பட்ட பல வேள்விகளே இயற்றி முடித்த—பகைவரை முன்னேறி அழித்த வெற்றிச் சிறப்புடனும் ( வி ள ங் கி ), நான்காக அமைந்த மருப்புகளையும் (தந்தங்களையும்) அழகிய நடையினையும் உடைய—தாழ்ந்து தொங்கும் பெரிய நீண்ட துதிக்கையைத் தூக்கி மேலே உயர்த்திய வெள்ளையானையின் பிடரியின் மேல் அமர்ந்து வரும் — திருமகளின் விளக்கம் பெற்ற செல்வனாகிய இந்திரனும்,
பகலிற் றோன்று மிகலில் காட்சி
நால்வே றியற்கைப் பதினொரு மூவரோ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
170வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத்
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
உருமிடித் தன்ன குரலினர் விழுமிய
உறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரத் கொட்பினர் வந்துடன் காணத்
175தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா
ளாவி னன்குடி யசைதலு முரிய னதா அன்று.
இருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
(166-174) பகல் ஒளிபோல் தோன்றும் மாறுபாடு அற்ற ஒளிக்காட்சியினையுடைய- (ஆதித்தர் பன்னிருவர்+உருத்திரர் பதினொருவர்+வசுக்கள் எண்மர் + அசுவினி தேவர் என்னும் மருத்துவர் இருவர் ஆகிய) நான்கு வகையான வேறுபட்ட இயல்புடைய தேவர் முப்பத்து மூவரும், (பதினொரு மூவர் =11 x 3 =33 , (ஒன்பதை இரண்டால் பெருக்கிய) பதினெட்டு வகையான உயர்நிலை பெற்ற தெய்வ இனத்த வரும். விண்மீன்கள் பொலிந்திருப்பது போன்ற தோற்றத்தினராயும், விண்மீன்களைச் சார்ந்து காற்று எழுச்சியுற்றது போன்ற விரைந்த நடையினராயும், காற்றிலிருந்து நெருப்பு எழுந்தாற் போன்ற வலிமை யுடையவராயும், நெருப்புப் பிழம்பு தோன்ற இடி இடித்தாற் போன்ற உரத்த குரல் உடையவராயும், தமக்கு உற்ற துன்பமான குறைபாடுகளினின்றும் தாம் விடுதலை பெறும் வழிமுறையினைத் தேடிக் கொள்பவராயும் அமைந்து வான் வழியே சுழன்று வந்து முருகனை) ஒருசேரக் கண்டு வணங்கி நிற்கவும்,
( 175- 176) குற்ற மற்ற கற்பு கொண்ட மடந்தையாகிய தெய்வயானையுடன் சில நாள் (பழநி எனப்படும்) திருவாவினன் குடி என்னும் திருப்பதியில் அமர்ந்திருத்தலையும் முருகன் உரிமையாக உடையவன். அத்திருவாவினன் குடி அல்லாமலும்,-
அந்தணர் வழிபடும் திரு ஏரகம்
அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
180டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட முன்றுபுரி நுண்ஞ்
புலராக் காழகம் புலர வுடீஇ
185உச்சிக் கூப்பிய தற்புகழ்ந்
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று.
190பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கினர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
195நீடமை விளைந்த தேக்கட் டேறற்
வேலன் வெறியாட்டு
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுனர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
200இணைத்த கோதை யணைத்த கூந்தன்
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கான் மராஅத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ
205மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
210தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங்
(198-205) விரலால் கிண்டியதால் மலர்ந்த தனி வேறான நறுமணம் உடைய—ஆழமான சுனைகளில் மலர்ந்த வண்டு மொய்க்கும் மலர்களால் தொடுத்த கண்ணி என்னும் ஒருவகை மாலையினையும் இணைப்பான கோதை என்னும் வகை மாலையினையும் சேர்த்து அணிந்த கூந்தலுடன், கட்டிய கஞ்சங் குல்லையொடு, மராமரத்தின் இலையொடு கூடிய நறிய மலர்களின் சிவந்த காம்புகளைக் கொண்ட வெள்ளிய பூங்கொத்துக்களை இடையிடையே இட்டு வண்டுகள் தேன் அருந்தும்படித் தொடுத்துச் செய்த பெரிய குளிர்ந்த சிறந்த தழை உடையைத் திருத்தமான மணிவடம் அணிந்த அல்குலிலே அசையும் படி உடுத்து, மயிலைக் கண்டாற்போன்று தோன்றும் மட நடையையுடைய மலைப்பகுதி மகளிருடன் (கூடி) ,
குடிகொண்டுள்ள குமரன் இயல்பு
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
215முழவுறழ் தடக்கையி னியல வேந்தி
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதே றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று.
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
220ஊரூர் கொண்ட சீர்கெழு விழலினு
மார்வல ரேத்த மேலரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
225சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி யப்பியை துரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
(218-226) சிறிய தினை அரிசியைப் பூக்களுடன் கலந்து பரப்பி ஆடு அறுத்து, கோழிக் கொடியுடன் அனைத்தையும் உரிய இடத்தில் அமைத்து ஊர்கள் தோறும் நடாத்தும் சிறப்பு மிக்க திருவிழாக்களிலும்.—அன்பர்கள் போற்ற விருப்பங்கொள்ளும் சிறப்பிடங்களிலும்,—வேலுடன் முருகன்போல் கோலம் கொண்டவன் அழகுபெற அமைத்து வெறியாடுகின்ற (சாமி யாடுகின்ற களங்களிலும், காடுகளிலும், சோலைகளிலும், அழகு மிக்க ஆற்றிடைக் குறைகளிலும் (ஆற்றிடைத் திட்டுக்களிலும்), ஆற்றங் கரைகளிலும், குளக்கரைகளிலும், இன்ன பல வேறு இடங்களிலும், நாற்கூட்டிடங்களிலும் (நாற் சந்திகளிலும் , முக் கூட்டிடங்களிலும் (முச் சந்திகளிலும்), புதிய மலர்களையுடைய கடம்ப மரங்களிலும், ஊர் நடு மன்றமாகிய மரத்தடியிலும், பொது அம்பலங்களிலும், கடவுளாகக் கருதி நட்டு நிறுத்திய கல் தறிகளிலும்,—
230முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச்
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇத் தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
235சிறுபசு மஞ்சனொடு நறுவிரை தெளித்துப்
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையுற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
240இமிழிசை யருவியோ டின்னியங் கறங்க
உருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகியம் நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக
245ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன்
கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
ஆண்டாண் டுறைதலு மறிந்த வாறே
250ஆண்டாண் டாயினு மாகக் காண்டக
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனே
ஐவரு ளொருவ னங்கை யேற்ப
255அறுவர் பயந்த வாறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைம்கள் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
260வானோர் வணங்குவிற் றானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
(245-249) வெறியாடும் (சாமியாடும்) களங்கள் எதிரொலிக்குமாறு பாடி, பலவகை ஊது கொம்புகளை வாயில் வைத்து ஊதி, வளைந்த மணிகளை ஆட்டி ஒலிக்கச் செய்து, அழியாத ஆற்றலுடைய (முருகனது) யானையை வாழ்த்தி, வேண்டுவார் வேண்டுவனவற்றை வேண்டியபடி அடைந்தவராய் வழிபாடு செய்ய, அந்த அந்த இடங்களிலும் முருகன் அமர்ந்திருப்பதும் அறிந்த செய்தியேயாம்.
அந்தணர் வெறுக்கை யறிந்தோர் சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
265வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
270நசையுநர்க் கார்த்து மிசைபே ராள
அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரிசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேள்
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
275சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி
போர்மிகு பொருந குரிசி லெனப்பல
யானறி யளவையி னேத்தி யானாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
னின்னடி யுள்ளி வந்தன னின்னொடு
280புரையுந ரில்லாப் புலமை யோயெனக்
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
அளியன் றானே முதுவா யிரவலன்
285வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென
இனியவு நல்லவு நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் ருன்வந் தெய்தி
அணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
290மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி
அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
அன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய
295பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன்
வேறுபஃ றுகிலி னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வேரற்
பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
300தண்கம ழலரிறால் சிதைய நன்பல
(287-295) தெய்வத் தன்மை நிறைந்த ஆற்றல் மிக்க உருவத்துடனும் வானம் தோய்ந்த வளவிய தோற்றத்துடனும் தான் (முருகன்) உன் முன்னர்த் தோன்றி, அஞ்சுதற்கு (பயபக்திக்கு) உரிய தனது உயர்ந்த நிலையைத் தன்னுள் மேற்கொண்டு, தனது தொன்மையான மணம் கமழும் தெய்வத் தன்மையோடு கூடிய இளைய வடிவழகைக் காணச் செய்து, ‘அன்பனே அஞ்சாதே, நம்பி நில், நினது வருகையை யான் அறிவேன்’ என்று அன்பு கனிந்த நல்லுரை நல்கி, அழிவு இல்லாதபடி, இருள் நிறமான கருங்கடல் சூழ்ந்த இவ்வுலகிலே, (முருகன் அருள் பெற்றவர்களுள்) நீயே ஒப்பற்ற ஒருவன் என்னும் பேறுடன் திகழும்படி, சிறந்த பெறுதற்கரிய (திருவடிப்பேறு ஆகிய) பரிசிலை வழங்கியருள்வான்.
[மலையருவியின் செயல்]
(295-306)—(இத்தகைய முருகப் பெருமான் இன்னும் எழுந்தருளியிருக்கும் இடம் ஒன்று வருமாது:-)
பல விதமாக வேறுபட்ட பல துணிக்கொடிகளைப் போல அசைந்து அசைந்து (அருவிகள்) ஓடிவந்து, அகில் மரத்தைப் பெயர்த்துச் சுமந்து கொண்டு, சந்தன மரத்தை முழு அடி மரத்தோடு உருட்டித் தள்ளி, மூங்கிலின் பூவோடு கூடிய அசையும் கிளைகள் தனித்துப் போக வேரைப் பிளந்து,
ஆசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத
விரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
305முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று
நன்பொன் மணிநிறங் கிளரப் பொன்கொழியா
வாழை முழுமுத றுமியத் தாழை
இளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
310மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
கோழி வயப்பெடை யிரியக் கேழலோ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
315டாமா நல்லேறு சிலைப்பச் சேணின்
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர்சோலை மலைகிழ வோனே.
(307-317) வாழையின் முழு மரமும் ஒடிந்து சாயவும் தென்னையின் பெரிய இளநீர்க் குலை உதிரவும் நீரை வீசியெறிந்து தாக்கி, மிளகுக் கொடியின் கரிய கொத்துக்கள் சாயவும், பின்புறத்தே பீலி பொருந்திய இளநடையுடைய மயில்கள் பல சேர்ந்து அஞ்சவும், வலிய பெட்டைக் கோழிகள் இரிந்தோடவும். ஆண் பன்றியுடன், உள்ளே வெளிறு உடைய (வயிரம் இல்லாத) கரிய பனை மரத்தின் புல்லிய செறும்பு போன்ற கருமயிரோடு கூடிய உடம்பினையும் வளைந்த காலடியினையும் உடைய கரடி பெரிய கல் பிளப்புக் குகையிலே சென்று அடைந்து கிடக்கவும், கரிய கொம்புகளையுடைய ஆமா இனத்தின் நல்ல காளைகள் கதறிக் கத்தவும் பல்வேறு செயல்கள் புரிந்து உயர்ந்த மலையுச்சியிலிருத்து ‘இழும்’—‘இழும்’ என்னும் ஒலியுடன் கீழ்நோக்கி இறங்கி ஓடிவரும் அருவியினை உடைய—பழம் முதிர்ந்து கனிந்த சோலை சூழ்ந்த — ‘பழமுதிர் சோலைமலை’ என்னும் மலைக்கும் உரிமை உடையவனாவான் அம்முருகன் — அவனது அருள் பெறுக!
முற்றும்.