குர்ஆன்/சுருட்டுதல்
Appearance
< குர்ஆன்
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்
- சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது
- நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-
- மலைகள் பெயர்க்கப்படும் போது-
- சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-
- காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-
- கடல்கள் தீ மூட்டப்படும்போது-
- உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-
- உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-
- "எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?" என்று-
- பட்டோலைகள் விரிக்கப்படும் போது-
- வானம் அகற்றப்படும் போது-
- நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-
- சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-
- ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.
- எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-
- முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),
- பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,
- மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.
- நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரயீல் மூலம் வந்த) சொல்லாகும்.
- (அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.
- (வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
- மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.
- அவர் திட்டமாக அவரை (ஜிப்ரயீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.
- மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.
- அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.
- எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?
- இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.
- உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).
- ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.