நற்றிணை - தொகுதி 2/பாடப்பெற்ற தலைவர்கள்
பாடப்பெற்ற தலைவர்கள்
[எண்—செய்யுள் எண்]
அஞ்சி (நெடுமான்) 381
தகடூரிலிருந்து அரசியற்றிய மழவர் குடியினருள் மாவீரனாகத் திகழ்ந்தவன் இவன். ஒளவையார் பால் பேரன்பும், பெருமதிப்பும், பெருநட்பும் கொண்டு வாழ்ந்தவன். அதியமான் நெடுமான் அஞ்சி என்றும் இவன் பெயர் வழங்கும். மாவீரனாகவும், தமிழ்ப் பெருவள்ளல்களுள் ஒருவனாகவும் திகழ்ந்த இவனைச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை முடிவில் போரிட்டு அழித்தான். ‘தகடூர் யாத்திரை’ அப்போர் நிகழ்ச்சி குறித்த செய்யுட்கள் கொண்டது என்பர். இவனைப் பற்றிய செய்திகளை, புறநானூற்றுச் செய்யுட்களில் விளக்கமாகக் காணலாம். ஔவையார், இச்செய்யுளில், ‘ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்கத் தேர் வீசும்’ இவனுடைய தேர் வழங்கும் வள்ளன்மையை எடுத்துக் காட்டுவர்.
அண்டிரன் 237
இவன் ஆய் அண்டிரன் எனப் போற்றப் பெறுபவன்; பொதியில் மலைப் பகுதியிலிருந்து அரசாண்டவன்; இவனிருந்த ஊர், இந்நாளினும் ஆய்க்குடி என வழங்கும். இவனைப் பாடிப் போற்றியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ஆவர். ‘மோசி பாடிய ஆயும்’ என்று பிற சான்றோர் கூறுவர். நாகம் நல்கிய கலிங்கத்தை ஆலமர் செல்வற்கு அளித்துப் புகழ் கொண்ட வள்ளல் இவன். இவனுடைய பல்வேறு சிறப்புக்களையும், புறப் பாடல்களுட் காணலாம். ‘இரவலர் வரூஉம் அளவை, அண்டிரன் புரவுஎதிர்ந்து தொகுத்த யானை போல, உலகம் உவப்ப, அரும் வேறுபல் உருவின், ஏர் தரும் மழையே’ என, இவனது யானைக் கொடையை இச்செய்யுளில் காரிக் கண்ணனார் வியந்து போற்றுவர்.
அருமன் 367
இவன் ‘சிறுகுடி’ என்னும் இடத்திலிருந்த ஓர் குறுநிலத் தலைவன். ‘கள்ளிற் கேளிர் ஆத்திரை, உள்ளூர்ப் பாளை தந்த பஞ்சியங் குறுங்காய் ஓங்கிரும் பெண்ணை நுங்கொடு பெயரும், ஆதி அருமன் மூதூர்’ என இவன் ஊர்ச் சிறப்பைக் குறுந்தொகையுள் கள்ளில் ஆத்திரையனார் வியந்து போற்றுவர். ‘காக்கைகள், இடப்பெறும் கருனைச் செந்நெல், வெண்சோற்றுச் சூருடைப் பலியினைக் கவரும் பொருட்டாகக் கூழுடை நன்மனைக் குழுவின இருக்கும், மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி’ என்று இவனூரில் உள்ளார் காக்கைக்குப் பலிச்சோறு இட்டுப் போற்றும் சிறப்பினை நக்கீரனார் இச்செய்யுளிற் கூறுவார்.
இவன் கொல்லி மலைத் தலைவன். வில்லாற்றலிற் சிறந்தோனாக, வல்வில் ஓரி எனப் பாராட்டப் பெற்ற சிறப்பினன். வன்பரணரால் பாடிப் போற்றப் பெற்ற பெருமையன். இவனைக் காரி படையெடுத்துச் சென்று, சேரர் பொருட்டாகக் கொன்றனன் என்று வரலாறு கூறுகின்றது. ‘மாரிவண் மகிழ் ஓரி கொல்லிக் கலிமயில்’ எனப் பரணர் 265ஆம் செய்யுளிலும், ‘பழவிறல் ஓரிக்கொன்ற ஒரு பெருந்தெருவில் காரி புக்க நோரர் புலம்போல் கல்லென்றன்றால் ஊரே’ எனக் கபிலர், காரி இவனைக் கொன்ற பழிச்செயலை 320 ஆம் செய்யுளிலும் காட்டுவர்.
காரி 320
இவன் மலையமான் திருமுடிக்காரி என்பவன். பரணர் போன்ற பெரும் புலவர்களாற் பாராட்டப் பெற்றவன். இவன் ஓரியைக் கொன்று, தேடிக் கொண்ட பழி பற்றிய செய்தியைக் கபிலர் இச்செய்யுளிற் காட்டுவர். இவனைச் சோழன் கொன்று, தன் பழி தீர்த்துக் கொண்டான் என்பது பின் வரலாறு.
கிள்ளி 390
சல்லியங் குமரனாராற் போற்றப்படும் கிள்ளி ஒருவனை, அம்பர்ப் பகுதிக்கண் இருந்தவனாக நற்றிணை 141ஆம் செய்யுள் காட்டும். இவன் வெண்ணிப் பகுதியில் இருந்தவன் என்று இச்செய்யுளில் ஔவையார் கூறுவர். இவ்வூர் தஞ்சை மாவட்டத்துக் ‘கோயில் வெண்ணி’யாக இருக்கலாம் என்பார்கள். இவனூர் நீர் வளம் மிகுந்தது என்பது இச்செய்யுள் காட்டும் செய்தியாகும்.குட்டுவன் 395
இவன் குட்ட நாட்டு அரச மரபைச் சேர்ந்த சேரர் குடியினன். இவனது குடவரையை நற்.150ல் முடத்திருமாறன் பாடுவர். இவனது அகப்பாவைச் செம்பியன் (பாண்டியன்) அழித்த செய்தியை, நற்.14-ல் மாமூலனார் குறிப்பிடுவர். அம்மூவனார் ‘கடும்பகட்டு யானை நெடுந்தேர்க் குட்டுவன், வேந்தடு முயக்கத்து முரசு அதிர்ந்தன்ன’ என்று இச்செய்யுளில் இவனுடைய போர் மறத்தை வியந்து பாராட்டுவர்.
கொல்லிப் பாவை 201
சேரர்களின் காவல் தெய்வமாகக் கொல்லி மலையிலே அமைந்த தெய்வப் பாவை இது. அண்டினோரைத் தன்பால் ஈர்த்துக் கொன்றழிக்கும் சக்தி பெற்றதும், கவர்ச்சி மிக்கதும் என்று கூறப்படும். இவ்வாறு கொல்லும் பாவையாதலின், கொல்லிப் பாவை என்று பெயர் பெற்று, பின் அதுவே அம்மலைக்கும் பெயராயிற்று எனலாம். கொல்லிப்பாவையின் சிறப்பினை, இச்செய்யுளில் பரணர் விளக்கிக் கூறுகின்றார். ‘காற்று மோதி இடித்தாலும், மிகுதியான மழை பெய்தாலும் இடிகள் உருமித் தாக்கினாலும், வேறு பலவான இயற்கை உற்பாதங்கள் தோன்றினாலும், நில நடுக்கமே ஏற்பட்டாலும், கண்டாரைக் கவரும் தன் உருவப் பேரழகினின்றும் அழியாதிருக்கும் நிலைத்த தன்மை கொண்டது கொல்லிப் பாவை’ என்று இச்செய்யுள் போற்றுகின்றது. ‘பூதம் புணர்த்த புதிதியல் பாவை’ என்பது நற்றிணை 192.
பாண்டியருள் ஒருவன். ‘நல் தார்ப் பொற்றேர்ச் செழியன் கூடல்’ என 298 ஆம் செய்யுளில், விற்றூற்று வண்ணக்கண் தத்தனாரும், ‘கல்லா யானைக் கடுந்தேர்ச் செழியன்’ (340) என நக்கீரரும், ‘செருவிறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த, வேல்கெழு தானைச் செழியன்’ (387) எனப் பொதும்பில் கிழார் மகனாரும், இந்நூற் செய்யுட்களுள் கூறுவதனால், இவனைத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்றே கருதலாம்.சென்னி 265
‘ஆர மார்பின் சிறு கோற் சென்னி ஆரேற்றன்ன, நம்கண் நயவர நோக்கலின்’ என்று, சென்னியின் வள்ளன்மையைப் பரணர் இச்செய்யுளிற் கூறுகின்றனர். இவன் பரணர் காலத்திலிருந்த சோழ மன்னன் ஆகலாம்.
சோழருடைய கழாஅர் முன்துறையிலே காக்கைக்குப் பலிச் சோறிட்டுப் போற்றும் சிறப்பை 281ஆம் செய்யுளில் கழார்க்கீரன் எயிற்றியார் கூறுகின்றனர். தேர்வண் சோழரின் குடந்தைவாயில் மாரியம் கிடங்கிற் பூத்த நீலம் பற்றி 379ஆம் செய்யுளில் குடவாயிற் கீரத்தனார் கூறுவர். மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாத நிலையை ஆலங்குடி வங்கனார் 400ஆம் செய்யுளில் காட்டுவர்.
தழும்பன் 300
இவன் ஊணூரின் தலைவன். ‘இரும்பாண் ஒக்கல் தலைவன், பெரும் புண் ஏ எர் தழும்பன்’ என்று இவன் வள்ளன்மையைப் பாடியவர் பரணர் ஆவர்.
திருமாவுண்ணி 216
மதுரை மருதன் இளநாகனார் திருமாவுண்ணியின் வரலாற்றை இச்செய்யுளிற் கூறுகின்றனர். ‘எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும், குருகார் கழனியின் இதணத்து ஆங்கண், ஏதிலாளனின் கவலை கவற்ற, ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி’ என்பர் அவர்.
நன்னன் எனப் பெயருடையார் மூவர். கடம்பின் பெருவாயில் நன்னன், பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன், நன்னன் உதியன் என்போர் அவராவர். இவர்களுள், ‘வேந்தர் ஓட்டிய ஏந்துவேல் நன்னன் கூந்தல் முயற்சியின் கொடிதே’ என்று பரணர், இவன் பிண்டன் முதலியோரைக் களத்தில் வென்றதுடன், சினம் தணியாமல், அவர் தம் உரிமை மகளிரின் கூந்தல்களைக் களைந்து, கயிறு திரித்து கொண்ட பழிச் செயலைச் செய்தவன் என்னும் செய்தியைக் கூறுவர். இவன் பாரம் பாழி மலைகட்கு உரியவனான நன்னன் ஆவன். இவனையே பெண் கொலை புரிந்த நன்னன் என் மற்றொரு நிகழ்ச்சியாற் புலவர்கள் பழிப்பர். கொண்கான நாட்டு நன்னனின் ஏழிற்குன்றத்துச் சிறப்பை 391ஆம் செய்யுளில் ‘பொன்படு கொண்கான நன்னன் நல்நாட்டு ஏழிற் குன்றம்’ என வியப்பர் பாலைபாடிய பெருங்கடுங்கோ. கொண்கான நாடு என்பது இந்நாளிற் கொங்கணி பேசும் மக்கள் வாழும் இடம்.
பசும்பூட் சோழர் 227
ஆர்க்காட்டு நகருக்கு உரியவர் பசும்பூட் சோழர் என்று இச்செய்யுளில் தேவனார் கூறுகின்றனர். ஆர்க்காடு அழசிக்கு உரியது என்றும் பிறர் கூறுவதனால், அழிசி சோழர்க்கு உட்பட்டு வாழ்ந்த குறுநிலத் தலைவன் என்று கருதலாம். ஆனால், ஆர்க்காடு பழந்தமிழகத்தில் தொண்டை நாட்டுப் பகுதியாக இருந்தது. எனவே, சோழர் தொண்டை மண்டிலத்தை வெற்றி கொண்டு ஆர்க்காட்டைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தியும் இருக்கலாம்.
பசும்பூண் வழுதி 358
இவன் மருங்கைப் பட்டினத்துக்கு உரியவனாகக் கூறப்படுகின்றனன். ‘பசும்பூண் வழுதி மருங்கை’ என்பர் நக்கீரர். எனவே நக்கீரர் காலத்துப் பசும்பூண் பாண்டியனே இவனாகலாம். ‘மருங்கை’ என்பது, இந்நாளிலே மருங்கூர், மலுங்கூர் என வழங்கும் நாஞ்சில் நாட்டு ஊராகலாம்.
பொறையன் 346
இவன் கொல்லிக்கு உரியவனாகக் கூறப்படுகின்றனன். எயினந்தை மகன் இளங்கீரனார் ‘பொறையன் பெருந்தண் கொல்லி’ என்கின்றார். இவன் இரும்பொறைச் சேர மரபினனாகலாம்; அல்லது ஓரியும் அந்த மரபினன் என்றும் கொள்ளலாம்.
மிஞிலி 265
இவன் பாரத்துத் தலைவன் என்று இச்செய்யுளில் பரணரால் கூறப் பெறுகின்றனன். ஆகவே, இவன் நன்னனுக்கு முன்னர் இருந்தவனாகலாம். புள்ளிற்கு ஏமமாகிய அதிகனைக் கொன்றவன், ஆஅய் எயினனை அழித்தவன் இவன் என்பர் பரணர்.
முடியன் 390
இம்முடியன், வரையின் வரைபோல் யானை வாய்மொழி முடியன் என்று ஔவையாராற் கூறப்படுகின்றனன். இதனால் கோசர் குலத்தான் என்று கருதுவர். இவனூர் நடுநாட்டு முடியனூர் என்று ஔவை கூறுவார்கள்.
முள்ளூர் மன்னன் 291
இவனே மலையமான் திருமுடிக்காரி என்பர். ‘மாயிரு முள்ளூர்’ மன்னன் ‘மாவூர்ந்து எல்லித் தரீஇய இனநிரை பல்லான் கிழவரின் அழிந்த இவள் நலனே!’ என்று இவனது வள்ளன்மை காட்டப்படுகின்றது. கவர்ந்து வந்த ஆநிரைகளை எல்லாம் இரவலர்க்கு வழங்கி விடுவானாம் அவன்.
வடுகர் 212
தமிழகத்துக்கு வடவெல்லை நாட்டினர் இவர்கள். கதநாய் வடுகர்; குல்லைக் கண்ணி வடுகர் என்று குறிக்கப்படுவர். இச்செய்யுளிலும் ‘கடுங்குரல் பம்பைக் கதநாய் வடுகர்’ என்றே குடவாயிற் கீரத்தனார் குறிக்கின்றனர். மலைப் பகுதிகளில் வேட்டையாடியும், ஆறலைத்தும் அந்நாளில் வாழ்ந்தவர் இவராகலாம்.
வாணன் 340
இவனும் ‘சிறுகுடி’ என்னும் ஊரின் தலைவனாகவே கூறப் பெறுகின்றனர். ‘பெருநீர்க் கானல் தழீஇய இருக்கை வாணன் சிறுகுடி’ என்பதனால் (அகம் 269) இவனூர் பாண்டி மண்டிலக் கடற்கரைப் பகுதியைச் சார்ந்ததான ஊர் எனலாம். இச்செய்யுளில், நக்கீரர், ‘வாணன் சிறுகுடியன்ன… எல்வளை’ என்று இவன் ஊரின் ஒளியை வியந்து உவமிப்பர்.
விராஅன் 350
இவன் இருப்பையூரின் தலைவன். அது அழகாற் சிறப்புற்று வளமுடைத்தாயிருந்தது. ஆகவே, ‘தேர்வண் விராஅன் இருப்பை’ என்று அதனை இச்செய்யுளில் பரணர் பெருமான் சிறப்பிக்கின்றனர். ‘இலுப்பக்குடி’, ‘இலுப்பைக் குளம்’, என இன்றும் பலவூர்கள் உள்ளன. இலுப்பையே இருப்பை என மருவியது எனலாம். இலுப்பை எண்ணெய் வித்துத் தரும் ஒரு சிறந்த மரம். இதன் மரப்பகுதிகளையே தேர் செய்யத் தேர்ந்தெடுப்பர் என்பர்; பலவாண்டுகள் தேர் அழியாதிருக்குமாம்.
வேளிர் 280
இவர் பதினெண் குடியினராகப் பழைய தமிழகத்தின் பல பகுதிகளில், மூவேந்தர்கட்கு உட்பட்டு வாழ்ந்த மரபினர். இவர்களுள் தொன்மையானவன் ஆய்அண்டிரன். அவன் இருந்த பகுதிக்கு இன்றும் ‘வேணாடு’ என்ற பெயரே தென்பாண்டி நாட்டு வழக்கில் உள்ளது.