உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/201 முதல் 210 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்

[தொகு]

201 அம்ம, வாழி - தோழி - பொன்னின்
அவிர்எழில் நுடங்கும் அணிகிளர் ஓடை
வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை,
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து, 5
தழைஅணிப் பொலிந்த கோடுஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனித்துறைப் பரவ,
பகலோன் மறைந்த அந்தி ஆர்இடை,
உருகெழு பெருங்கடல் உவவுக் கிளர்ந்தாங்கு,
அலரும் மன்று பட்டன்றே: அன்னையும் 10
பொருந்தா கண்ணள். வெய்ய உயிர்க்கும்' என்று
எவன் கையற்றனை, இகுளை? சோழர்
வெண்ணெல் வைப்பின் நல்நாடு பெறினும்,
ஆண்டு அமைந்து உறைகுநர் அல்லர்- முனா அது
வான்புகு தலைய குன்றத்து கவாஅன், 15
பெருங்கை எண்கின் பேழ்வாய் ஏற்றை
இருள்துணிந் தன்ன குவவுமயிர்க் குருளைத்
தோல்முலைப் பிணவொடு திளைக்கும்
வேனில் நீடிய சுரன் இறந்தோரே. 19

202 வயங்குவெள் அருவிய குன்றத்துக் கவாஅன்,
கயந்தலை மடப்பிடி இனன் ஏமார்ப்பப்,
புலிப்பகை வென்ற புண்கூர் யானை
கல்லகச் சிலம்பில் கைஎடுத்து உயிர்ப்பின்,
நல்இணர் வேங்கை நறுவீ கொல்லன் 5
குருகுஊது மிதிஉலைப் பிதிர்வின் பொங்கி,
சிறுபல் மின்மினி போலப், பலஉடன்
மணிநிற இரும்புதல் தாவும் நாட!
யாமே அன்றியும் உளர்கொல் - பானாள்,
உத்தி அரவின் பைத்தலை துமிய 10
உரஉரும் உட்குவரு நனந்தலைத்,
தவிர்வுஇல் உள்ளமொடு எஃகு துணையாகக்,
கனைஇருள் பரந்த கல்லதர்ச் சிறுநெறி
தேராது வரூஉம் நின்வயின்
ஆர்அஞர் அரும்படர் நீந்து வோரே? 15

203 'உவக்குநள் ஆயினும், உடலுநள் ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர்வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின்மகள்' எனப் பல்நாள்
எனக்கு வந்து உரைப்பவும், தனக்குஉரைப்பு அறியேன், 5
'நாணுவள் இவள்' என, நனிகரந்து உறையும்
யான்இவ் வறுமனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவணுறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' எனக், கழற்கால்
மின்னொளிர் நெடுவேல் இளையோன் முன்னுறப், 10
பன்மலை அருஞ்சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன்வாய் யாக,
மான்அதர் மயங்கிய மலைமுதல் சிறுநெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
புல்லென் மாமலைப் புலம்புகொள் சீறூர் 15
செல்விருந்து ஆற்றித், துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனைகெழு பெண்டுயான் ஆகுக மன்னே! 18

204 உலகுடன் நிழற்றிய தொலையா வெண்குடைக்,
கடல்போல் தானைக், கலிமா வழுதி
வென்றுஅமர் உழந்த வியன்பெரும் பாசறைச்
சென்றுவினை முடித்தனம் ஆயின், இன்றே
கார்ப்பெயற்கு எதிரிய காண்தகு புறவில், 5
கணங்கொள் வண்டின் அம்சிறைத் தொழுதி
மணங்கமழ் முல்லை மாலை ஆர்ப்ப,
உதுக்காண் வந்தன்று பொழுதே: வல்விரைந்து,
செல்க, பாக! நின் நல்வினை நெடுந்தேர்-
வெண்ணெல் அரிநர் மடிவாய்த் தண்ணுமை 10
பன்மலர்ப் பொய்கைப் படுபுள் ஓப்பும்
காய்நெல் படப்பை வாணன் சிறுகுடித்
தண்டலை கமழும் கூந்தல,
ஒண்தொடி மடந்தை தோள்இணை பெறவே. 14

205 'உயிர்கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின்
செயிர்தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத்,
தையல்! நின்வயின் பிரியலம் யாம்' எனப்
பொய்வல் உள்ளமொடு புரிவுஉணக் கூறி,
துணிவில் கொள்கையர் ஆகி, இனியே 5
நோய்மலி வருத்தமொடு நுதல்பசப் பூர
நாம்அழத் துறந்தனர் ஆயினும், தாமே
வாய்மொழி நிலைஇய சேண்விளங்கு நல்லிசை
வளங்கெழு கோசர் விளங்குபடை நூறி,
நிலங்கொள வெஃகிய பொலம்பூண் கிள்ளி, 10
பூவிரி நெடுங்கழி நாப்பண், பெரும்பெயர்க்
காவிரிப் படப்பைப் பட்டினத் தன்ன
செழுநகர் நல்விருந்து அயர்மார், ஏமுற
விழுநிதி எளிதினின் எய்துக தில்ல-
மழைகால் அற்சிரத்து மாலிருள் நீக்கி, 15
நீடுஅமை நிவந்த நிழல்படு சிலம்பில்;
கடாஅ யானைக் கவுள்மருங்கு உதிர
ஆம்ஊர்பு இழிதரு காமர் சென்னி,
புலிஉரி வரியதள் கடுப்பக், கலிசிறந்து,
நாட்பூ வேங்கை நறுமலர் உதிர, 20
மேக்குஎழு பெருஞ்சினை ஏறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறுநெறிக்
கல்பிறங்கு ஆரிடை விலங்கிய
சொல்பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே. 24

206 என்னெனப் படுங்கொல்- தோழி !- நல்மகிழ்ப்
பேடிப் பெண்கொண்டு! ஆடுகை கடுப்ப
நகுவரப் பணைத்த திரிமருப்பு எருமை
மயிர்க்கவின் கொண்ட மாத்தோல் இரும்புறம்,
சிறுதொழில் மகாஅர் ஏறிச், சேணோர்க்குத் 5
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன்,
மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன
அம்மா மேனி, ஆயிழை, மகளிர்
ஆரந் தாங்கிய அலர்முலை ஆகத்து
ஆராக் காதலொடு தாரிடை குழைய, 10
முழவுமுகம் புலரா விழவுடை வியனகர்
வதுவை மேவலன் ஆகலின், அதுபுலந்து
அடுபோர் வேளிர் வீரை முன்றுறை,
நெடுவெள் உப்பின் நிரம்பாக் குப்பை,
பெரும் பெயற்கு உருகி யா அங்குத்
திருந்திழை நெகிழ்ந்தன, தடமென் தோளே! 16

207 அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்ந்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ளோர்த்துப்
படைஅமைத்து எழுந்த பெருஞ்செய் ஆடவர்
நிரைப்பரம் பொறைய நரைப்புற கழுதைக் 5
குறைக்குளம்பு உதைத்த கற்பிறழ் இயவின்,
வெஞ்சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை,
மிஞிறுஆர் கடாஅம் கரந்துவிடு கவுள,
வெயில்தின வருந்திய, நீடுமருப்பு ஒருத்தல்
பிணரழி பெருங்கை புரண்ட கூவல் 10
தெண்கண் உவரிக் குறைக்குட முகவை,
அறனிலாளன் தோண்ட, வெய் துயிர்த்துப்,
பிறைநுதல் வியர்ப்ப, உண்டனள் கொல்லோ-
தேம்கலந்து அளைஇய தீம்பால் ஏந்திக்
கூழை உளர்ந்து மொழிமை கூறவும், 15
மறுத்த சொல்லள் ஆகி,
வெறுத்த உள்ளமொடு உண்ணா தோளே! 17

208 யாம இரவின் நெடுங்கடை நின்று,
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின், வெண்கோட்டு
அண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன், 5
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை,
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து,
ஒள்வாள் மயங்குஅமர் வீழ்ந்தெனப், 'புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று 10
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி,
நிழல்செய்து உழறல் காணேன், யான் எனப்
படுகளம் காண்டல் செல்லான், சினஞ் சிறந்து,
உருவினை நன்னன், அருளான் கரப்பப்,
பெருவிதுப் புற்ற பல்வேள் மகளிர் 15
குரூஉப்பூம் பைந்தார் அருக்கிய பூசல்,
வசைவிடக் கடக்கும் வயங்குபெருந் தானை
அகுதை கிளைதந் தாங்கு, மிகுபெயல்
உப்புச்சிறை நில்லா வெள்ளம் போல,
நாணுவரை நில்லாக் காமம் நண்ணி 20
நல்கினள், வாழியர், வந்தே- ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக்
கார்மலர் கடுப்ப நாறும்,
ஓர்நுண் ஓதி மாஅ யோளே! 24

209 'தோளும் தொல்கவின் தொலைந்தன; நாளும்
அன்னையும் அருந்துயர் உற்றனள், அலரே,
பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான்,
எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்,
நேரா எழுவர் அடிப்படக் கடந்த 5
ஆலங் கானத்து ஆர்ப்பினும் பெரிது என,
ஆழல் வாழி, தோழி !- அவரரே,
மாஅல் யானை மறப்போர்ப் புல்லி
காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்
அறைஇறந்து அகன்றனர் ஆயினும், நிறைஇறந்து 10
உள்ளார் ஆதலோ அரிதே - செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி, 15
நிலைபெறு கடவுள் ஆக்கிய,
பலர்புகழ் பாவை அன்னநின் நலனே. 17

210 குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லின் போகி, பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி, உரனழிந்து, 5
நிரைதிமில் மருங்கில் படர்தரும் துறைவன்,
பானாள் இரவில்நம், பணைத்தோள் உள்ளி,
தானிவண் வந்த காலை, நம்ஊர்க்
கானலம் பெருந்துறைக் கவின்பா ராட்டி,
ஆனாது புகழ்ந்திசி னோனே; இனித்தன், 10
சாயல் மார்பின் பாயல் மாற்றிக்,
'கைதைஅம் படுசினைக் கடுந்தேர் விலங்கச்
செலவுஅரிது என்னும்' என்பது
பலகேட் டனமால் - தோழி !- நாமே 14

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/201_முதல்_210_முடிய&oldid=480927" இலிருந்து மீள்விக்கப்பட்டது