உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/291 முதல் 300 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


2. மணிமிடை பவளம்

[தொகு]

291 வானம் யெல்வளம் கரப்பக், கானம்
உலறி இலைஇல வாகப், பல உடன்
ஏறுடை ஆயத்து இனம்பசி தெறுப்பக்
கயன்அற வறந்த கோடையொடு நயன் அறப்
பெருவரை நிவந்த மருங்கில், கொடுவரிப் 5
புலியொடு பொருது சினஞ்சிவந்து, வலியோடு
உரவுக்களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப்பரல்
சிறுபல் மின்மினி கடுப்ப எவ்வாயும்
நிறைவன இமைக்கும் நிரம்பா நீள்இடை,
எருவை இருஞ்சிறை இரீஇய, விரிஇணர்த் 10
தாதுஉண் தும்பி முரல்இசை கடுப்பப்,
பரியினது உயிர்க்கும் அம்பினர், வெருவர
உவலை சூடிய தலையர், கவலை
ஆர்த்து, உடன் அரும்பொருள் வவ்வலின், யாவதும்
சாத்துஇடை வழங்காச் சேண்சிமை அதரச் 15
சிறியிலை நெல்லித் தீம்சுவைத் திரள்காய்
உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வுஇன்று,
புள்ளிஅம் பிணை உணீஇய உள்ளி,
அறுமருப்பு ஒழித்த தலைய, தோல்பொதி
மறுமருப்பு இளங்கோடு அதிரக் கூஉம் 20
சுடர்தெற வருந்திய அருஞ்சுரம் இறந்து, ஆங்கு
உள்ளினை வாழிய, நெஞ்சே! போதுஎனப்
புலம்கமழ் நாற்றத்து இரும்பல் கூந்தல்,
நல்லெழில், மழைக்கண், நம் காதலி
மெல்லிறைப் பணைத்தோள் விளங்கும்மாண் கவினே. 25
292 கூறாய், செய்வது தோழி! வேறுஉணர்ந்து,
அன்னையும் பொருள்உகுத்து அலமரும்; மென்முறிச்
சிறுகுளகு அருந்து, தாய்முலை பெறாஅ,
மறிகொலைப் படுத்தல் வேண்டி, வெறிபுரி
ஏதில் வேலன் கோதை துயல்வரத் 5
தூங்கும் ஆயின், அதூஉம் நாணுவல்,
இலங்குவளை நெகிழ்ந்த செல்லல்; புலம்படர்ந்து
இரவின் மேயல் மரூஉம் யானைக்
கால்வல் இயக்கம் ஒற்றி, நடுநாள்,
வரையிடைக் கழுதின் வன்கைக் கானவன் 10
கடுவிசைக் கவணின் எறிந்த சிறுகல்
உடுஉறு கணையின் போகிச் சாரல்
வேங்கை விரிஇணர் சிதறித் தேன் சிதையூஉ,
பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு நாடன் மணவாக் காலே! 15
293 இலைஒழித்து உலறிய புன்தலை உலவை
வலைவலந் தனைய ஆகப், பலஉடன்
சிலம்பி சூழ்ந்த புலம்கெடு வைப்பின்,
துகில்ஆய் செய்கைப் பாவிரிந் தன்ன
வெயில்அவிர்பு நுடங்கும் வெவ்வெங் களரி, 5
குயிற்கண் அன்ன குரூஉக்காய் முற்றி
மணிக்காசு அன்ன மால்நிற இருங்கனி
உகாஅ மென்சினை உதிர்வன கழியும்
வேனில் வெஞ்சுரம் தமியர் தாமே
செல்ப என்ப தோழி! யாமே, 10
பண்பில் கோவலர் தாய்பிரித்து யாத்த
நெஞ்சமர் குழவிபோல, நொந்து நொந்து,
இன்னா மொழிதும் என்ப;
என்மயங் கினர்கொல், நம் காத லோரே? 14
294 மங்குல் மாமழை விண்அதிர்பு முழங்கித்,
துள்ளுப்பெயல் கழிந்த பின்றை, புகையுறப்
புள்ளிநுண் துவலைப் பூவகம் நிறையக்,
காதலர்ப் பிரிந்த கையறு மகளிர்
நீர்வார் கண்ணின் கருவிளை மலரத், 5
துய்த்தலைப் பூவின் புதலிவர் ஈங்கை
நெய்தோய்ந் தன்ன நீர்நனை அம்தளிர்
இருவகிர் ஈருளின் ஈரிய துயல்வர,
அவரைப் பைம்பூப் பயில, அகல்வயல்
கதிர்வார் காய்நெல் கட்குஇனிது இறைஞ்சக் 10
சிதர்சினை தூங்கும் அற்சிர அரைநாள்,
'காய்சின வேந்தன் பாசறை நீடி,
நம்நோய் அறியா அறனி லாளர்
இந்நிலை களைய வருகுவர், கொல்?' என
ஆனாது எறிதரும் வாடையொடு
நோனேன், தோழி! என் தனிமை யானே! 16
295 நிலம்நீர் அற்று நீள்சுனை வறப்பக்
குன்றுகோடு அகையக், கடுங்கதிர் தெறுதலின்,
என்றூழ் நீடிய வேய்படு நனந்தலை,
நிலவுநிற மருப்பின் பெருங்கை சேர்த்தி,
வேங்கை வென்ற வெருவரு பணைத்தோள் 5
ஓங்கல் யானை உயங்கி, மதம் தேம்பிப்
பல்மர ஒருசிறைப் பிடியொடு வதியும்
கல்லுடை அதர கானம் நீந்திக்
கடல்நீர் உப்பின் கணஞ்சால் உமணர்
உயங்குபகடு உயிர்ப்ப அசைஇ, முரம்பு இடித்து 10
அகல்இடம் குழித்த அகல்வாய்க் கூவல்
ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும்,
புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து,
நடைஅருங் கானம் விலங்கி, நோன்சிலைத்
தொடைஅமை பகழித் துவன்றுநிலை வடுகர், 15
பிழிஆர் மகிழ்நர், கலிசிறந்து ஆர்க்கும்
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்,
பழிதீர் மாண்நலம் தருகுவர் மாதோ;
மாரிப் பித்திகத்து ஈர்இதழ் புரையும்
அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண், 20
மணங்கமழ் ஐம்பால், மடந்தை! நின்
அணங்குநிலை பெற்ற தடமென் தோளே! 22
296 கோதை இணர, குறுங்கால், காஞ்சிப்
போதுஅவிழ் நறுந்தாது அணிந்த கூந்தல்,
அரிமதர் மழைக்கண், மாஅ யோளொடு
நெருநையும் கமழ்பொழில் துஞ்சி, இன்றும்,
பெருநீர் வையை அவளொடு ஆடிப், 5
புலரா மார்பினை வந்துநின்று, எம்வயின்
கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில்
பன்மீன் கொள்பவர் முகந்த இப்பி
நார்அரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேர்இசை கொற்கைப் பொருநன், வென்வேல் 10
கடும்பகட்டு யானை நெடுந்தேர்ச் செழியன்,
மலைபுரை நெடுநகர்க் கூடல் நீடிய
மலிதரு கம்பலை போல,
அலர்ஆ கின்று, அது பலர்வாய்ப் பட்டே. 14
297 பானாட் கங்குலும், பெரும்புன் மாலையும்,
ஆனா நோயொடு, அழிபடர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்;
இருங்கவின் இல்லாப் பெரும்புன் தாடிக், 5
கடுங்கண் மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்
பெயர்பயம் படரத் தோன்றுகுயில் எழுத்து
இயைபுடன் நோக்கல் செல்லாது, அசைவுடன்
ஆறுசெல் வம்பலர் விட்டனர் கழியும் 10
சூர்முதல் இருந்த ஓமையம் புறவின்,
நீர்முள் வேலிப் புலவுநாறு முன்றில்,
எழுதி யன்ன கொடிபடு வெருகின்
பூளை அன்ன பொங்குமயிர்ப் பிள்ளை,
மதிசூழ் மீனின், தாய்வழிப் படூஉம் 15
சிறுகுடி மறவர் சேக்கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ்சிறை பெயர்க்கும்
வெருவரு கானம், நம்மொடு,
'வருவல்' என்றோள் மகிழ்மட நோக்கே? 19
298 பயங்கெழு திருவின் பல்கதிர் ஞாயிறு
வயங்குதொழில் தரீஇயர், வலன்ஏர்பு விளங்கி,
மல்குகடல் தோன்றி யாங்கு, மல்குடை,
மணிமருள் மாலை, மலர்ந்த வேங்கை
ஒண்தளிர் அவிர்வரும் ஒலிகெழு பெருஞ்சினைத் 5
தண்துளி அசைவளி தைவரும் நாட!
கொன்றுசினம் தணியாது வென்றுமுரண் சாம்பாது,
இரும்பிடித் தொழுதியின் இனந்தலை மயங்காது,
பெரும்பெயற் கடாஅம் செருக்கி, வளமலை
இருங்களிறு இயல்வரும் பெருங்காட்டு இயவின், 10
ஆர்இருள் துமிய வெள்வேல் ஏந்தி,
தாம்பூங் கோதை ஊதுவண்டு இரீஇ,
மென்பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு, இவண்
நீவந் ததனினும், இனிதுஆ கின்றே;
தூவல் கள்ளின் துணைதேர், எந்தை 15
கடியுடை வியல்நகர் ஓம்பினள் உறையும்
யாய்அறி வுறுதல் அஞ்சிப் பானாள்,
காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன்,
யான்நின் கொடுமை கூற, நினைபுஆங்கு,
இனையல்; வாழி, தோழி! நம் துறந்தவர் 20
நீடலர் ஆகி வருவர், வல்லென;
கங்குல் உயவுத்துணை ஆகிய
துஞ்சாது உறைவி இவளுவந் ததுவே! 23
299 எல்லையும் இரவும், வினைவயின் பிரிந்த
முன்னம், முன்உறுபு அடைய உள்ளிய
பதிமறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்
அதுமறந்து உறைதல் அரிது ஆகின்றே
கடுவளி எடுத்த கால்வழி தேக்கிலை 5
நெடுவிளிப் பருந்தின் வெறிஎழுந் தாங்கு,
விசும்புகண் புதையப் பாஅய்ப், பலஉடன்
அகல்இடம் செல்லுநர் அறிவுகெடத் தாஅய்க்,
கவலை சுரக்கும் காடுஅகல் அத்தம்,
செய்பொருள் மருங்கின் செலவுதனக்கு உரைத்தென 10
வைகுநிலை மதியம் போலப், பையெனப்,
புலம்புகொள் அவலமொடு, புதுக்கவின் இழந்த
நலம்கெழு திருமுகம் இறைஞ்சி, நிலம் கிளையா,
நீரொடு பொருத ஈர்இதழ் மழைக்கண்
இகுதரு தெண்பனி ஆகத்து உறைப்பக், 15
கால்நிலை செல்லாது, கழிபடர்க் கலங்கி,
நாநடுக் குற்ற நவிலாக் கிளவியொடு,
அறல்மருள் கூந்தலின் மறையினள், 'திறல் மாண்டு
திருந்துக மாதோ, நும்செலவு' என வெய்து உயிராப்,
பருவரல் எவ்வமொடு அழிந்த
பெருவிதுப் புறுவி பேதுறு நிலையே. 21
300 நாள்வலை முகந்த கோள்வல் பரதவர்
நுணங்குமணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார்,
பறிகொள் கொள்ளையர், மறுக உக்க
மீன்ஆர் குருகின் கானலம் பெருந்துறை,
எல்லை தண்பொழில் சென்றெனச் செலீஇயர், 5
தேர்பூட்டு அயர ஏஎய், வார்கோல்
செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச்,
'செல்இனி, மடந்தை! நின் தோழியொடு, மனை' எனச்
சொல்லிய அளவை, தான்பெரிது கலுழ்ந்து
தீங்குஆ யினள்இவள் ஆயின் தாங்காது, 10
நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப்
பிறிதுஒன்று ஆகலும் அஞ்சுவல்; அதனால்,
சேணின் வருநர் போலப் பேணா,
இருங்கலி யாணர்எம் சிறுகுடித் தோன்றின்,
வல்லெதிர் கொண்டு, மெல்லிதின் வினைஇத், 15
துறையும் மான்றன்று பொழுதே; சுறவும்
ஓதம் மல்கலின், மறு ஆயினவே;
எல்லின்று; தோன்றல்! செல்லாதீம்' என,
எமர்குறை கூறத் தங்கி, ஏமுற,
இளையரும் புரவியும் இன்புற, நீயும் 20
இல்லுறை நல்விருந்து அயர்தல்
ஒல்லுதும், பெரும! நீ நல்குதல் பெறினே. 22

"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/291_முதல்_300_முடிய&oldid=480937" இலிருந்து மீள்விக்கப்பட்டது