அகநானூறு/131 முதல் 140 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
அகநானூறு
[தொகு]2. மணிமிடை பவளம்
[தொகு]பாடல்: 131 ?
பாடல்: 132 (ஏனலும்)
[தொகு]- ஏனலும் இறங்குகுரல் இறுத்தன; நோய்மலிந்து,
- ஆய்கவின் தொலைந்த இவள் நுதலும்; நோக்கி
- ஏதில மொழியும் இவ்வூரும்; ஆகலின்,
- களிற்றுமுகந் திறந்த கவுளுடைப் பகழி,
- வால்நிணப் புகவின், கானவர் தங்கை 5
- அம்பணை மென்தோள் ஆயஇதழ் மழைக்கண்
- ஒல்கியற் கொடிச்சியை நல்கினை ஆயின்,
- கொண்டனை சென்மோ நுண்பூண் மார்ப!
- துளிதலைத் தலைஇய சாரல் நளிசுனைக்
- கூம்புமுகை அவிழ்த்த குறுஞ்சிறைப் பறவை 5
- வேங்கை விரியிணர் ஊதிக், காந்தள்
- தேனுடைக் குவிகுலைத் துஞ்சி, யானை
- இருங்கவுட் கடாஅம் கனவும்,
- பெருங்கல் வேலி, நும் உறைவின் ஊர்க்கே. 14
பாடல்: 133 (குன்றியன்ன)
[தொகு]- 'குன்றி அன்ன கண்ண, குருஉமயிர்ப்,
- புன்தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
- செம்பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
- நல்நாள் வேங்கைவீ நன்களம் வரிப்பக்,
- கார்தலை மணந்த பைம்புதற் புறவின், 5
- வில்எறி பஞ்சியின் வெண்மழை தவழும்
- கொல்லை இதைய குறும்பொறை மருங்கில்,
- கரிபரந் தன்ன காயாஞ் செம்மலொடு
- எரிபரந் தன்ன இலமலர் விரைஇப்,
- பூங்கலுழ் சுமந்த தீம்புனற் கான்யாற்று 10
- வான்கொள் தூவல் வளிதர உண்கும்;
- எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
- கொன்ஒன்று வினவினர் மன்னே- தோழி!-
- இதல்முள் ஒப்பின் முகைமுதிர் வெட்சி
- கொல்புனக் குருந்தொடு கல்அறை தாஅம் 15
- மிளைநாட்டு அத்தத்து ஈர்ஞ்சுவற் கலித்த
- வரிமரல் கறிக்கும் மடப்பிணைத்
- திரிமருப்பு இரலைய காடிறந் தோரே. 18
பாடல்: 134 (வானம்)
[தொகு]- வானம் வாய்ப்பக் கவினிக் கானம்
- கமஞ்சூல் மாமழை கார்பயந்து இறுத்தென;
- மணிமருள் பூவை அணிமலர் இடையிடைச்,
- செம்புற மூதாய் பரத்தலின், நன்பல
- முல்லை வீகழல் தாஅய், வல்லோன் 5
- செய்கை அன்ன செந்நிலப் புறவின்;
- வாஅப் பாணி வயங்குதொழிற் கலிமாத்
- தாஅத் தாளிணை மெல்ல ஒதுங்க,
- இடிமறந்து, ஏமதி- வலவ! குவிமுகை
- வாழை வான்பூ ஊழுறுபு உதிர்ந்த 10
- ஒழிகுலை அன்ன திரிமருப்பு ஏற்றொடு
- கணைக்கால் அம்பிணைக் காமர் புணர்நிலை
- கடுமான் தேர்ஒலி கேட்பின்,
- நடுநாட் கூட்டம் ஆகலும் உண்டே. 14
பாடல்: 135 (திதலைமாமை)
[தொகு]- திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்,
- புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்,
- பசலை பாய்ந்த நுதலேன் ஆகி,
- எழுதெழில் மழைக்கண் கலுழ, நோய் கூர்ந்து,
- ஆதி மந்தியின் அறிவுபிறி தாகிப் 5
- பேதுற் றிசினே - காதல்அம் தோழி!
- காய்கதிர் திருகலின் கனைந்துகால் கடுகி,
- ஆடுதளிர் இருப்பைக் கூடுகுவி வான்பூக்
- கோடுகடை கழங்கின், அறைமிசைத் தாஅம்
- காடிறந் தனரே, காதலர்; அடுபோர், 10
- வீயா விழுப்புகழ், விண்தோய் வியன்குடை,
- ஈர்-எழு வேளிர் இயந்துஒருங்கு எறிந்த
- கழுவுள் காமூர் போலக்
- கலங்கின்று மாது, அவர்த் தெளிந்தஎன் நெஞ்சே. 14
பாடல்: 136 (மைப்பறப்)
[தொகு]- மைப்புஅறப் புழுக்கின் நெய்க்கனி வெண்சோறு
- வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்,
- புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள்ஒளி
- அம்கண் இருவிசும்பு விளங்கத், திங்கட்
- சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக், 5
- கடிநகர் புனைந்து, கடவுட் பேணிப்,
- படுமண முழவொடு பரூஉப்பணை இமிழ,
- வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்,
- பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
- மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை, 10
- பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
- தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
- மண்ணுமணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
- தண்நறு முகையொடு வெந்நூல் சூட்டித்,
- தூஉடைப் பொலிந்து மேவரத் துவன்றி, 15
- மழைபட் டன்ன மணன்மலி பந்தர்,
- இழைஅணி சிறப்பின் பெயர்வியர்ப்பு ஆற்றித்
- தமர்நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
- 'உவர்நீங்கு கற்பின்எம் உயிர்உடம் படுவி!
- முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப், 20
- பெரும்புழுக் குற்றநின் பிறைநுதற் பொறிவியர்
- உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
- ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
- உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,
- மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென 25
- நாணினள் இறைஞ்சி யோளே- பேணிப்
- பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்
- சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
- இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே. 29
பாடல்: 137 (ஆறுசெல்)
[தொகு]- ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத்து உண்ட
- சிறும்பல் கேணிப் பிடியடி நசைஇச்,
- களிறுதொடூஉக் கடக்குங் கான்யாற்று அத்தம்
- சென்றுசேர்பு ஒல்லார் ஆயினும், நினக்கே-
- வென்றெறி முரசின் விறற்போர்ச் சோழர் 5
- இன்கடுங் கள்ளின் உறந்தை ஆங்கண்,
- வருபுனல் நெரிதரும் இகுகரைப் பேரியாற்று
- உருவ வெண்மணல் முருகுநாறு தண்பொழிற்
- பங்குனி முயக்கம் கழிந்த வழிநாள்
- வீஇலை அமன்ற மரம்பயில் இறும்பில் 10
- தீஇல் அடுப்பின் அரங்கம் போலப்,
- பெரும்பாழ் கொண்டன்று, நுதலே, தோளும்,
- தோளா முத்தின் தெண்கடற் பொருநன்
- திண்தேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅன்
- நல்லெழில் நெடுவேய் புரையும்
- தொல்கவின் தொலைந்தன: நோகோ யானே. 16
பாடல்: 138 (இகுளைகேட்டி)
[தொகு]- இகுளை! கேட்டிசின் காதலம் தோழி !
- குவளை உண்கண் தெண்பனி மல்க,
- வறிதியான் வருந்திய செல்லற்கு அன்னை
- பிறிதொன்று கடுத்தனள் ஆகி - வேம்பின்
- வெறிகொள் பாசிலை நீலமொடு சூடி, 5
- உடலுநர்க் கடந்த கடல்அம் தானைத்,
- திருந்துஇலை நெடுவேல் தென்னவன் - பொதியில்
- அருஞ்சிமை இழிதரும் ஆர்த்துவரல் அருவியின்
- ததும்புசீர் இன்னியங் கறங்கக், கைதொழுது,
- உருகெழு சிறப்பின் முருகுமனைத் தரீஇக், 10
- கடம்பும் களிறும் பாடி, நுடங்குபு
- தோடுந் தொடலையும் கைக்கொண்டு, அல்கலும்
- தேடினர் ஆதல் நன்றோ?- நீடு
- நின்னொடு தெளித்த நன்மலை நாடன்
- குறிவரல் அரைநாட் குன்றத்து உச்சி, 15
- நெறிகெட வீழ்ந்த துன்னருங் கூர்இருள்,
- திருமணி உமிழ்ந்த நாகம் காந்தட்
- கொழுமடற் புதுப்பூ ஊதுந் தும்பி
- நன்னிறம் மருளும் அருவிடர்
- இன்னா நீள்இடை நினையும்என் நெஞ்சே. 20
பாடல்: 139 (துஞ்சுவது)
[தொகு]- துஞ்சுவது போலஇருளி, விண்பக
- இமைப்பது போலமின்னி, உறைக்கொண்டு
- ஏறுவதுப் போலப் பாடுசிறந்து உரைஇ
- நிலம்நெஞ்சு உட்க ஓவாது சிலைத்தாங்கு,
- ஆர்தளி பொழிந்த வார்பெயற் கடைநாள்; 5
- ஈன்றுநாள் உலந்த வாலா வெண்மழை
- வான்தோய் உயர்வரை ஆடும் வைகறைப்
- புதல்ஒளி சிறந்த காண்பின் காலைத்,
- தண்நறும் படுநீர் மாந்திப், பதவு அருந்து
- வெண்புறக்கு உடைய திரிமருப்பு இரலை; 10
- வார்மணல் ஒருசிறைப் பிடவுஅவிழ் கொழுநிழல்,
- காமர் துணையொடு ஏமுற வதிய;
- அரக்குநிற உருவின் ஈயல் மூதாய்
- பரப்பி யவைபோற் பாஅய்ப், பலவுடன்
- நீர்வார் மருங்கின் ஈர்அணி திகழ; 15
- இன்னும் வாரார் ஆயின்- நன்னுதல்!
- யாதுகொல் மற்றுவர் நிலையே? காதலர்
- கருவிக் கார்இடி இரீஇய
- பருவம் அன்று, அவர்: 'வருதும்' என்றதுவே. 19
பாடல்: 140 (பெருங்கடல்)
[தொகு]- பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
- இருங்கழி செறுவின் உழாஅது செய்த
- வெண்கல் உப்பின் கொள்ளை சாற்றி,
- என்றூழ் விடர குன்றம் போகும்
- கதழ்கோல் உமணர் காதல் மடமகள் 5
- சில்கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
- 'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' எனச்
- சேரி விலைமாறு கூறலின், மனைய
- விளியறி ஞமலி குரைப்ப, வெரீஇய
- மதர்கயல் மலைப்பின் அன்னகண் எனக்கு, 10
- இதைமுயல் புனவன் புகைநிழல் கடுக்கும்
- மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
- எவ்வந் தீர வாங்குந் தந்தை
- கைபூண் பகட்டின் வருந்தி
- வெய்ய உயிர்க்கும் நோயா கின்றே. 15
பாடல் தரும் செய்தி
[தொகு]அம்மூவனார் பாடிய நெய்தல் திணைப் பாடல் இது. தலைவனுக்கும் தலைவிக்கும் தற்செயலாக உறவு. உடலுறவுக்குப் பின்னர் தலைவன் தன் பாங்கனிடம் இதில் உள்ள செய்திகளைக் கூறுகிறான். அவள் உப்பு விற்றாள். நாய் குரைத்தது. அதைப் பார்த்து அந்த நாயின் கண்கள் போல் என் கண்களும் சிவந்துபோயின. உமணர் வண்டி சேற்றில் மாட்டிக்கொண்டது. கதழ் கோல் வீசி மாட்டை அதட்டினர். அப்போது அந்த மாடு பட்ட பாடு போல் என் நெஞ்சும் பாடாய்ப் படுகிறது.
பொருளியலும் வாணிகமும்
[தொகு]'நெல்லின் நேரே வெண்கல் உப்பு' விலை கூறிச் சேரியில்(தெருவில்) உமணப் பெண் உப்பு விற்றாள்.
- உமணர் 'கதழ் கோல் உமணர்' என்று கூறப்படுவதால் வண்டியில் ஏற்றிச் சென்று உப்பு விற்றதும், வண்டி மாடுகளைக் கதழ் கோலால் ஓட்டியதும் தெரியவருகிறது.