உள்ளடக்கத்துக்குச் செல்

அகநானூறு/321 முதல் 330 முடிய

விக்கிமூலம் இலிருந்து
அகநானூறு பக்கங்கள்


நித்திலக் கோவை

[தொகு]

பாடல்: 321 (பசித்தயானை)

[தொகு]
பசித்த யானைப் பழங்கண் அன்ன
வறுஞ்சுனை முகந்த கோடைத் தெள்விளி
விசித்துவாங்கு பறையின் விடரகத்து இயம்பக்
கதிர்க்கால் அம்பிணை உணீஇய புகல்ஏறு
குதிர்க்கால் இருப்பை வெண்பூ உண்ணாது 5
ஆண்குரல் விளிக்கும் சேண்பால் வியன்சுரைப்
படுமணி இனநிரை உணீஇய கோவலர்
விடுநிலம் உடைத்த கலுழ்கண் கூவல்
கன்றுடை மடப்பிடி களிறொடு தடவரும்
புன்றலை மன்றத்து அம்குடிச் சீறூர் 10
துணையொடு துச்சில் இருக்கும் கொல்லோ?
கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு
எல்லி முன்னுறச் செல்லும் கொல்லோ?
எவ்வினை செயுங்கொல்? நோகோ யானே!-
அரிபெய்து பொதிந்த தெரிசிலம்பு கழீஇ 15
யாயறி வுறுதல் அஞ்சி
வேய்உயர் பிறங்கல் மலையிறந் தோளே! 17

பாடல்:322 (வயங்குவெயில்)

[தொகு]
வயங்குவெயில் ஞெமியப் பாஅய் மின்னுவசிபு
மயங்குதுளி பொழிந்த பானாட் கங்குல்
ஆராக் காமம் அடூஉநின்று அலைப்ப
இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப்
பாம்புஎறி கோலிற் றமியை வைகி 5
தேம்புதி கொல்லோ?- நெஞ்சே! உருமிசைக்
களிறுகண் கூடிய வாள்மயங்கு ஞாட்பின்
ஒளிறுவேல் தானைக் கடுந்தேர்த் திதியன்
வருபுனல் இழிதரு மரம்பயில் இறும்பிற்
பிறையுறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் 10
குறைஆர் கொடுவரி குழுமுஞ் சாரல்
அறையுறு தீந்தேன் குறவர் அறுப்ப
முயலுநர் முற்றா ஏற்றுஅரு நெடுஞ்சிமைப்
புகலரும் பொதியில் போலப்
பெறலருங் குரையள்எம் அணங்கி யோளே! 15

பாடல்:323 (இம்மென்பேர்)

[தொகு]
இம்மென் பேர் அலர் இவ்வூர் நம்வயின்
செய்வோர் ஏச்சொல் வாடக் காதலர்
வருவர் என்பது வாய்வ தாக
ஐய செய்ய மதனில சிறியநின்
அடிநிலன் உறுதல் அஞ்சிப் பையத் 5
தடவரல் ஒதுக்கம் தகைகொள இயலிக்
காணிய வம்மோ?- கற்புமேம் படுவி!-
பலவுப்பல தடைஇய வேய்பயில் அடுக்கத்து
யானைச் செல்லினம் கடுப்ப வானத்து
வயங்குகதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின் 10
பைபட இடிக்கும் கடுங்குரல் ஏற்றொடு
ஆலி அழிதுளி தலைஇக்
கால்வீழ்த் தன்றுநின் கதுப்புறழ் புயலே! 13

பாடல்:324 (விருந்தும்பெறு)

[தொகு]
விருந்தும் பெறுகுநள் போலும் திருந்திழைத்
தடமென் பணைத்தோள் மடமொழி அரிவை-
தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
வளராப் பிள்ளைத் தூவி அன்ன
வார்பெயல் வளர்த்த பைம்பயிர்ப் புறவில் 5
பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்
துளிபடு மொக்குள் துள்ளுவன சாலத்
தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய
வளிசினை உதிர்த்தலின் வெறிகொள்பு தாஅய்ச்
சிரல்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த 10
வண்டுண் நறுவீ துமித்த நேமி
தண்ணில மருங்கிற் போழ்ந்த வழியுள்
நிறைசெல் பாம்பின் விரைபுநீர் முடுகச்
செல்லும் நெடுந்தகை தேரே-
முல்லை மாலை நகர்புகல் ஆய்ந்தே! 15

பாடல்:325 (அம்மவாழி)

[தொகு]
அம்ம! வாழி தோழி! காதலர்
'வெண்மணல் நிவந்த பொலங்கடை நெடுநகர்,
நளிஇருங் கங்குல் புணர்குறி வாய்த்த
களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும்
உட்கொண் டோ வாள் காக்கும் பிற்பெரிது 5
இவண்உறைபு எவனோ? அளியள்!' என்று அருவி
'ஆடுநடைப் பொலிந்த புகற்சியின், நாடுகோள்
அள்ளனைப் பணித்த அதியன் பின்றை
வள்ளுயிர் மாக்கிணை கண்ணவிந் தாங்கு
மலைகவின் அழிந்த கனைகடற்று அருஞ்சுரம் 10
வெய்ய மன்றநின் வைஎயிறு உணீஇய
தண்மழை ஒருநாள் தலைஇய ஒண்ணுதல்
ஒல்கியல் அரிவை நின்னொடு செல்கம்!
சில்நாள் ஆன்றனை யாகஎனப் பன்னாள்
உலைவில் உள்ளமொடு வினைவலி உறீஇ 15
எல்லாம் பெரும்பிறி தாக வடாஅது
நல்வேற் பாணன் நல்நாட்டு உள்ளதை
வாட்கண் வானத்து என்றூழ் நீள்இடை
ஆட்கொல் யானை அதர்பார்த்து அல்கும்
சோலை அத்தம் மாலைப் போகி 20
ஒழியச் சென்றோர் மன்ற
பழியெவன் ஆங்கொல் நோய்தரு பாலே? 22

பாடல்:326 (ஊரல்அவ்வாய்)

[தொகு]
ஊரல் அவ்வாய் உருத்த தித்திப்
பேரமர் மழைக்கண் பெருந்தோட் சிறுநுதல்
நல்லள் அம்ம குறுமகள்- செல்வர்
கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்
நெடுங்கொடி நுடங்கும் அட்ட வாயில் 5
இருங்கதிர்க் கழனிப் பெருங்கவின் அன்ன
நலம்பா ராட்டி நடையெழில் பொலிந்து
விழவிற் செலீஇயர் வேண்டும் வென்வேல்
இழையணி யானைச் சோழர் மறவன்
கழை யளந்து அறியாக் காவிரிப் படப்பைப் 10
புனன்மலி புதவிற் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல்போற்
பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே! 13

பாடல்:327 (இன்பமும்)

[தொகு]
'இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
நன்பகல் அமையமும் இரவும் போல
வேறுவேறு இயல ஆகி மாறெதிர்ந்து
உளவென உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்
இன்னா வெஞ்சுரம் நன்னசை துரப்பத் 5
துன்னலும் தகுமோ?- துணிவில் நெஞ்சே!-
நீசெல வலித்தனை ஆயின், யாவதும்
நினைதலும் செய்தியோ எம்மோ- கனைகதிர்
ஆவி அவ்வரி நீரென நசைஇ
மாதவப் பரிக்கும் மரல்திரங்கு நனந்தலைக் 10
களர்கால் யாத்த கண்ணகன் பரப்பிற்
செவ்வரை கொழிநீர் கடுப்ப அரவின்
அவ்வரி உரிவை அணவரும் மருங்கிற்
புற்றரை யாத்த புலர்சினை மரத்த
மைந்நிற உருவின் மணிக்கட் காக்கை 15
பைந்நிணங் கவரும் படுபிணக் கவலைச்
சென்றோர் செல்புறத்து இரங்கார் கொன்றோர்
கோல்கழிபு இரங்கும் அதர
பேய்பயில் அழுவம் இறந்த பின்னே. 19

பாடல்:328 (வழையமல்)

[தொகு]
வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
முழவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப்பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்தெம் இடைமுலை முயங்கித் 5
துனிகண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பவர் முனிதல்
தெற்றுஆ குதல்நற்கு அறிந்தனம் ஆயின்
இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்பயாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு 10
அடக்குவம் மன்னோ- தோழி!- மடப்பிடி
மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சும்
சாரல் நாடன் சாயல் மார்பே! 15

பாடல்:329 (பூங்கணும்)

[தொகு]
பூங்கணும் நுதலும் பசப்ப நோய்கூர்ந்து
ஈங்கியான் வருந்தவும் நீங்குதல் துணிந்து
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர்
குவிந்த குரம்பை அங்குடிச் சீறூர்ப்
படுமணி இயம்பப் பகலியைந்து உமணர் 5
கொடுநுகம் பிணித்த செங்கயிற்று ஒழுகைப்
பகடுஅயாக் கொள்ளும் வெம்முனைத் துகள்தொகுத்து
எறிவளி சுழற்றும் அத்தம் சிறிதசைந்து
ஏகுவர் கொல்லோ தாமே.. பாய்கொள்பு
உறுவெரிந் ஒடிக்கும் சிறுவரிக் குருளை 10
நெடுநல் யானை நீர்நசைக் கிட்ட
கைகறித்து உரறும் மைதூங்கு இறும்பில்
புலிபுக்கு ஈனும் வறுஞ்சுனைப்
பனிபடு சிமையப் பன்மலை இறந்தே. 14

பாடல்:330 (கழிப்பூக்)

[தொகு]
கழிப்பூக் குற்றுங் கானல் அல்கியும்
வண்டல் பாவை வரிமணல் அயர்ந்தும்
இன்புறப் புணர்ந்தும் இளிவரப் பணிந்தும்
தன்றுயர் வெளிப்பட தவறில் நம்துயர்
அறியா மையின் அயர்ந்த நெஞ்சமொடு 5
செல்லும் அன்னோ மெல்லம் புலம்பன்!
செல்வோன் பெயர்புறத்து இரங்கி முன்னின்று
தகைஇய சென்றவென் நிறையில் நெஞ்சம்
எய்தின்று கொல்லோ தானே? எய்தியும்
காமஞ் செப்ப நாணின்று கொல்லோ 10
உதுவ காணவர் ஊர்ந்த தேரே
குப்பை வெண்மணற் குவவுமிசை யானும்
எக்கர்த் தாழை மடல்வயி னானும்
ஆய்தொடிப் பாசடும்பு அரிய ஊர்பிழிபு
சிறுகுடிப் பரதவர் பெருங்கடன் மடுத்த 15
கடுஞ்செலற் கொடுந்திமில் போல
நிவந்துபடு தோற்றமொடு இகந்துமா யும்மே! 17
"https://ta.wikisource.org/w/index.php?title=அகநானூறு/321_முதல்_330_முடிய&oldid=480941" இலிருந்து மீள்விக்கப்பட்டது