அகநானூறு/381 முதல் 390 முடிய
களிற்றியானை நிரை 1-10 11-20 21-30 31-40 41-50 51-60 61-70 71-80 81-90 91-100 101-110 111-120
மணிமிடை பவளம் 121-130 131-140 141-150 151-160 161-170 171-180 181-190 191-200 201-210 211-220 221-230 231-240 241-250 251-260 261-270 271-280 281-290 291-300
நித்திலக் கோவை 301-310 311-320 321-330 331-340 341-350 351-360 361-370 371-380 381-390 391-400
அகநானூறு
[தொகு]பாடல்:381 (ஆளிநன்மான்)
[தொகு]- ஆளி நன்மான் அணங்குடை ஒருத்தல்
- மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
- ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகருந்தும்
- அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சுதப
- அழல்கான்று திரிதரும் அலங்குகதிர் மண்டிலம் 5
- நிழல்சூன்று உண்ட நிரம்பா நீளிடை
- கற்றுரிக் குடம்பைக் கதநாய் வடுகர்
- விற்சினம் தணிந்த வெருவரு கவலை
- குருதி ஆடிய புலவுநாறு இருஞ்சிறை
- எருவைச் சேவல் ஈண்டுகிளைத் தொழுதி 10
- பச்சூன் கொள்ளை சாற்றிப் பறைநிவந்து
- செக்கர் வானின் விசும்பணி கொள்ளும்
- அருஞ்சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார்
- முனைஅரண் கடந்த வினைவல் தானைத்
- தேனிமிர் நறுந்தார் வானவன் உடற்றிய 15
- ஒன்னாத் தெவ்வர் மன்னெயில் போலப்
- பெரும்பாழ் கொண்ட மேனியள் நெடிதுயிர்த்து
- வருந்தும்கொல்? அளியள் தானே!- சுரும்புண
- நெடுநீர் பயந்த நிரைஇதழ்க் குவளை
- எதிர்மலர் இணைப்போது அன்னதன்
- அரிமதர் மழைக்கண் தெண்பனி கொளவே! 21
- மதுரை இளங்கௌசிகனார் பாடிய இந்தப் பாட்டு பாலைத்திணையைச் சேர்ந்தது.
- வரலாறு; தலைவனைப் பிரிந்த தலைவியின் மேனி நீரில் பூத்திருக்கும் இணைக் குவளைப் பூவில் பனிநீர் பட்டுத் துளிப்பது போலத் தலைவியின் கண்கள் கண்ணீரை உதிர்ரத்தன.
காரணம்
தலைவன் தனியே பாலைநில வழியில்
பாழாயிற்று. வானவனோடு மாறுபட்ட பகைவரின் கோட்டை போலப் பாழாயிற்று.
பாடல்:382 (பிறருறுவிழுமம்)
[தொகு]- பிறருறு விழுமம் பிறரும் நோப
- தம்முறு விழுமம் தமக்கோ தஞ்சம்
- கடம்புகொடி யாத்துக் கண்ணி சூட்டி
- வேறுபல் குரல ஒருதூக்கு இன்னியம்
- காடுகெழு நெடுவேட் பாடுகொளைக்கு ஏற்ப 5
- அணங்கயர் வியன் களம் பொலியப் பையத்
- தூங்குதல் புரிந்தனர் நமரென ஆங்கவற்கு
- அறியக் கூறல் வேண்டும்- தோழி!-
- அருவி பாய்ந்த கருவிரல் மந்தி
- செழுங்கோட் பலவின் பழம்புணை யாகச் 10
- சாரல் பேரூர் முன்துறை இழிதரும்
- வறனுறல் அறியாச் சோலை
- விறன்மலை நாடன் சொல்நயந் தோயே! 13
பாடல்:383 (தற்புரந்து)
[தொகு]- தற்புரந்து எடுத்த எற்றுந்து உள்ளாள்
- ஊருஞ் சேரியும் ஓராங்கு அலர்எழக்
- காடுங் கானமும் அவனொடு துணிந்து
- நாடுந் தேயமும் நனிபல இறந்த
- சிறுவன் கண்ணிக்கு ஏர்தே றுவரென 5
- வாடினை- வாழியோ, வயலை!- நாள்தொறும்
- பல்கிளைக் கொடிகொம்பு அலமர மலர்ந்த
- அல்குல் தலைக்கூட்டு அம்குழை உதவிய
- வினையமை வரனீர் விழுத்தொடி தத்தக்
- கமஞ்சூற் பெருநிறை தயங்க முகந்துகொண்டு 10
- ஆய்மடக் கண்ணள் தாய்முகம் நோக்கிப்
- பெய்சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும்
- ஆரநீர் ஊட்டிப் புரப்போர்
- யார்மற்றுப் பெறுகுவை அளியை நீயே! 14
பாடல்:384 (இருந்தவேந்தன்)
[தொகு]- இருந்த வேந்தன் அருந்தொழில் முடித்தெனப்
- புரிந்த காதலொடு பெருந்தேர் யானும்
- ஏறியது அறிந்தன்று அல்லது வந்த
- ஆறுநனி அறிந்தன்றொ இலெனே! "தா அய்
- முயற்பறழ் உகளும் முல்லையம் புறவிற் 5
- கவைக்கதிர் வரகின் சீறூர் ஆங்கண்
- மெல்லியல் அரிவை இல்வயின் நிறீஇ
- இழிமின்" என்றநின் மொழிமருண் டிசினே!
- வான்வழங்கு இயற்கை வளி பூட் டினையோ?
- மானுரு ஆகநின் மனம்பூட் டினையோ 10
- உரைமதி- வாழியோ வலவ! - எனத்தன்
- வரைமருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
- மனைக்கொண்டு புக்கனன் நெடுந்தகை
- விருந்தேர் பெற்றனள் திருந்திழை யோளே! 14
பாடல்:385 (தன்னோரன்ன)
[தொகு]- தன்னோ ரன்ன ஆயமும் மயிலியல்
- என்னோ ரன்ன தாயரும் காணக்
- கைவல் யானைக் கடுந்தேர்ச் சோழர்
- காவிரிப் படப்பை உறந்தை அன்ன
- பொன்னுடை நெடுநகர் புரையோர் அயர 5
- நன்மாண் விழவில் தகரம் மண்ணி
- யாம்பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு
- நெல்லி நீடிய கல்லறைக் கவாஅன்
- அத்த ஆலத்து அலந்தலை நெடுவீழ்
- தித்திக் குறங்கில் திருந்த உரிஞ 10
- வளையுடை முன்கை அளைஇக் கிளைய
- பயிலிரும் பிணையல் பசுங்காழ்க் கோவை
- அகலமை அல்குல் பற்றிக் கூந்தல்
- ஆடுமயிற் பீலியின் பொங்க நன்றும்
- தானமர் துணைவன் ஊக்க ஊங்கி 15
- உள்ளாது கழிந்த முள்ளெயிற்றுத் துவர்வாய்ச்
- சிறுவன் கண்ணி சிலம்பு கழீஇ
- அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே! 18
பாடல்:386 (பொய்கைநீர்நாய்)
[தொகு]- பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்து
- வாளை நாளிரை தேரும் ஊர!
- நாணினென் பெரும! யானே- பாணன்
- மல்லடு மார்பின் வலியுற வருந்தி
- எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5
- நிறைத்திரண் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த
- திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
- கணையன் நாணி யாங்கு- மறையினள்
- மெல்ல வந்து நல்ல கூறி
- மைஈர் ஓதி மடவோய்! யானும்நின் 10
- சேரி யேனே அயலி லாட்டியேன்
- நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்
- தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
- நுதலும் கூந்தலும் நீவி
- பகல்வந்து பெயர்ந்த வாணநுதற் கண்டே! 15
பாடல்:387 (திருந்திழை)
[தொகு]- திருந்திழை நெகிழ்ந்து பெருந்தோள் சாஅய்
- அரிமதர் மழைக்கண் கலுழச் செல்வீர்!
- வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
- உவருணப் பறைந்த ஊன்தலைச் சிறாஅரொடு
- அவ்வரி கொன்ற கறைசேர் வள்ளுகிர்ப் 5
- பசைவிரற் புலைத்தி நெடிதுபிசைந்து ஊட்டிய
- பூந்துகில் இமைக்கும் பொலன்காழ் அல்குல்
- அவ்வரி சிதைய நோக்கி வெவ்வினைப்
- பயிலரிற் கிடந்த வேட்டுவிளி வெரீஇ
- வரிப்புற இதலின் மணிக்கட் பேடை 10
- நுண்பொறி அணிந்த எருத்தின் கூர்முட்
- செங்காற் சேவற் பயிரும் ஆங்கண்
- வில்லீண்டு அருஞ்சமம் ததைய நூறி
- நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்
- நிரைநிலை நடுகற் பொருந்தி இமையாது 15
- இரைநசைஇக் கிடந்த முதுவாய்ப் பல்லி
- சிறிய தெற்றுவ தாயிற் பெரிய
- ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்
- நின்றாங்குப் பெயரும் கானம்
- சென்றோர் மன்னென இருக்கிற் போர்க்கே. 20
பாடல்:388 (அம்மவாழி)
[தொகு]- அம்ம!- வாழி தோழி!- நம்மலை
- அமையறுத்து இயற்றிய வெவ்வாய்த் தட்டையின்
- நறுவிரை ஆரம் அறவெறிந்து உழுத
- உளைக்குரல் சிறுதினை கவர்தலின் கிளையமல்
- பெருவரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி 5
- ஓங்கிருஞ் சிலம்பின் ஒள்ளிணர் நறுவீ
- வேங்கையம் கவட்டிடை நிவந்த இதணத்துப்
- பொன்மருள் நறுந்தாது ஊதும் தும்பி
- இன்னிசை ஓரா இருந்தன மாக
- 'மையீர் ஓதி மடநல் லீரே! 10
- நொவ்வியற் பகழி பாய்ந்தெனப் புண்கூர்ந்து
- எவ்வமொடு வந்த உயர்மருப்பு ஒருத்தல்நும்
- புனத்துழிப் போகல் உறுமோ மற்று' என
- சினவுக்கொள் ஞமலி செயிர்த்துப்புடை ஆடச்
- சொல்லிக் கழிந்த வல்விற் காளை 15
- சாந்தார் அகலமும் தகையும் மிகநயந்து
- ஈங்குநாம் உழக்கும் எவ்வம் உணராள்
- நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறியென
- அன்னை தந்த முதுவாய் வேலன்
- 'எம்மிறை அணங்கலின் வந்தன்று இந்நோய் 20
- தணிமருந்து அறிவல்' என்னும் ஆயின்
- வினவின் எவனோ மற்றே- கனல்சின
- மையல் வேழம் மெய்யுளம் போக
- ஊட்டி யன்ன ஊன்புரள் அம்பொடு
- காட்டுமான் அடிவழி ஒற்றி
- வேட்டம் செல்லுமோ நும்மிறை? எனவே. 26
பாடல்:389 (அறியாய்வாழி)
[தொகு]- அறியாய்- வாழி தோழி!- நெறிகுரல்
- சாந்தார் கூந்தல் உளரிப் போதணிந்து
- தேங்கமழ் திருநுதல் திலகம் தைஇயும்
- பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட
- நல்லிள வனமுலை அல்லியொடு அப்பியும் 5
- பெருந்தோள் தொய்யில் வரித்தும் சிறுபரட்டு
- அஞ்செஞ் சீறடிப் பஞ்சி ஊட்டியும்
- எற்புறந் தந்து நிற்பா ராட்டிப்
- பல்பூஞ் சேக்கையிற் பகலும் நீங்கார்
- மனைவயின் இருப்பவர் மன்னே- துனைதந்து 10
- இரப்போர் ஏந்துகை நிறையப் புரப்போர்
- புலம்பில் உள்ளமொடு புதுவதந்து உவக்கும்
- அரும்பொருள் வேட்டம் எண்ணி கறுத்தோர்
- சிறுபுன் கிளவிச் செல்லல் பாழ்பட
- நல்லிசை தம்வயின் நிறுமார் வல்வேல் 15
- வான வரம்பன் நல்நாட்டு உம்பர்
- வேனில் நீடிய வெங்கடற்று அடைமுதல்
- ஆறுசெல் வம்பலர் வேறுபிரிந்து அலறக்
- கொலைவெம் மையின் நிலைபெயர்ந்து உறையும்
- பெருங்களிறு தொலைச்சிய இருங்கேழ் ஏற்றை 20
- செம்புல மருங்கிற் றன்கால் வாங்கி
- வலம்படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப்
- படுமழை உருமின் முழங்கும்
- நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே! 24
பாடல்:390 (உவர்விளை)
[தொகு]- உவர்விளை உப்பின் கொள்ளை சாற்றி
- அதர்படு பூழிய சேட்புலம் படரும்
- ததர்கோல் உமணர் பதிபோகு நெடுநெறிக்
- கணநிரை வாழ்க்கைதான் நன்று கொல்லோ
- வணர்சுரி முச்சி முழுதுமற் புரள 5
- ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
- பல்குழைத் தொடலை ஒல்குவயின் ஒல்கி
- நெல்லும் உப்பும் நேரே ஊரீர்!
- கொள்ளீரோ எனச் சேரிதொறும் நுவலும்
- அவ்வாங்கு உந்தி அமைத்தோ ளாய்! நின் 10
- மெய்வாழ் உப்பின் விலைஎய் யாம்எனச்
- சிறிய விலங்கின மாகப் பெரியதன்
- அரிவேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி
- யாரீ ரோஎம் விலங்கி யீஇரென
- மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற 15
- சில்நிரை வால்வளைப் பொலிந்த
- பல்மாண் பேதைக்கு ஒழிந்ததென் நெஞ்சே! 17
அம்மூவனார் என்னும் புலவர் பாடிய பாடல் இது. தலைமகன் தன் நெஞ்சோடு பேசிக்கொள்வது போலவும், தன் பாங்கனுக்குச் சொல்வது போலவும் இந்தப் பாடல் அமைந்துள்ளது.
பாடல் தரும் செய்தி
[தொகு]அவள் உப்பு விற்றாள். ஒரு படி உப்புக்கு ஒரு படி நெல் என்று விலை வைத்தாள். அவன் கேட்டான். கடலில் விளையும் உப்புக்கு அந்த விலை சரி. உன் உடம்பில் விளையும் உப்புக்கு விலை என்ன? - என்றான். அவள் நின்றாள். என்னை விலைக்குக் கேட்கும் யாரையா நீர் என்றாள். அத்துடன் என்னைக் கடைக்கண்ணால் பார்த்துப் புன்முறுவலும் பூத்தாள். அந்தப் பார்வையிலும், சிரிப்பிலும் என் நெஞ்சம் பலிபோய்விட்டது. உப்பு விற்கும் கணநிரை வாழ்க்கை எனக்குச் சரிவருமா என்றும் கணக்குப் பார்க்கிறது.
பொருளியலும் வாணிகமும்
[தொகு]உமணப் பெண் 'நெல்லும் உப்பும் நேரே, ஊரீர்! கொள்ளீரோ' என்று கூறி விற்பாள். ஒரு படி நெல்லுக்கு ஒரு படி உப்பு என்ற மதிப்பீட்டில் பண்டமாற்று வாணிகம் அக்காலத்தில் நடந்துவந்ததை இதனால் உணரமுடிகிறது.
உமணர் வாழ்க்கை
[தொகு]உவர் நிலத்தில் விளைந்த உப்பை வெளியூர்களுக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்று விற்பர். இதற்குக் 'கணநிரை வாழ்க்கை' என்று பெயர்.