உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0) இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை
https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.
பதிப்புரிமை அற்றது
இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.
நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.
*** இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் (
https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் (
http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி,
https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication
This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode
No Copyright
The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.
You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
*** This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community
( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.
ஔவையார் தனிப்பாடல்கள்
அகர முதல எழுத்தெல்லாமாகி, சொல்லும் பொருளுமாக விரிந்து, இலக்கியங்களாகவும் இலக்கணங்களாகவும் மலர்ந்து என்றும் இளமையும் இனிமையும் செழுமையும் நிலைபேறாகப் பெற்று விளங்கும் உயர்தனிச் செம்மொழி, நம்முடைய அருமைச் செந்தமிழ் மொழியாகும்! என்று பிறந்ததென்று உணர முடியாததாய், காலத்தால் பழமையும் கருத்தின் ஆழத்தினாலே காலத்தையும் வென்று சிறந்த புதுமையும் உடையதாகத் திகழ்வதும், நம் கன்னித்தமிழ் மொழியாகும்.
மக்களிடத்தே, மக்களின் உள்ளத்து உணர்வுகளைப் புலப்படுத்தும் கருவியாகத் தோற்றம் பெற்று, மக்களின் உள்ள உணர்வும், அவர்களது சிந்தனையும், அவர்களது நாகரிகச் செவ்வியும் அவர்களது வாழ்க்கைச் செப்பமும், படிப்படியாக வளரவளரத் தானும் வளர்ந்து, 'வளமார்வண்தமிழ்’ என்னும் புகழுடன் திகழ்வதும் நம் தமிழ்மொழி ஆகும்.
உலகத்துப் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நாடோடி வாழ்வினராகவும், விலங்குகளோடு விலங்குகளாகவும், அறிவுத் தோற்றம் அற்றவராகவும் வாழ்ந்த அந்தப் பழைய நாளிலேயே, பல்லாயிரம் ஆண்டுகட்கும் முற்பட்ட அந்தத் தொன்மைக் காலத்திலேயே, இலக்கண அமைதியுடையதாகவும், இலக்கியச் செறிவு உடையதாகவும், ஏற்றம் பெற்றிருந்ததும் நம் செந்தமிழ் மொழி ஆகும்.
முடியுடைய மன்னர்கள் போற்றிப் புரந்துவர, முத்தமிழ்ப் பாவலர்கள் பாடிப் பரவிப் பண்படுத்திவர, முத்தமிழ் நாட்டினரும் முழு ஆர்வத்துடன் ஏற்று இன்புற்று, பாசத்துடன் எழில்பெருக்கிக் காத்துவரக், காலப்போக்கிலே அழிந்தும் ஒழிந்தும் சிதைந்தும் சீர்கெட்டும் போன பற்பல தொன்மைக்கால மொழிகளைப்போல் அல்லாது, அன்றும் இன்றும் ஒன்றுபோல, உயரிய செல்வமாக, என்றும் தன் எழில்நலம் குன்றாதுநிலைபெற்றிருப்பதும், இனநலம் காப்பதும் நம் தமிழ்மொழி ஆகும்.
இத்தகைய செழுந்தமிழ்த் தாயின் திருத்தொண்டிலே தம்மை ஈடுபடுத்திச் சிறந்தோர், திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும், குன்றமெறிந்த குமரவேளும், இந்திரனும், அகத்தியரும், நக்கீரரும், கபிலரும், பரணரும் மற்றும் பலருமாவர். இவர்களுள், தெய்வங்களாகத் திகழ்ந்த சிறப்பினரும், முனிவர்களாகி முற்றறிவுடையவராக உயர்ந்த நிலையினரும், குலத்தாலும் குடியாலும் தொழிலாலும் நிலையாலும் தம்முள் வேறுவேறாக இருந்தோரும் பலராவர். எனினும், 'தமிழ்’ என்ற தாயின் திருப்பணியிலே, இவர்கள் எல்லாரும் ஒன்றாகி உயர்ந்து பணி செய்து போற்றியிருக்கின்றனர்; தாம் போற்றுதலைப் பெற்று இருக்கின்றனர்.
முதலிடைகடை என்ற முச் சங்கங்களால் ஆய்ந்து தெளிந்து பேணப்பட்ட செழுந்தமிழ், அந்தச் சங்கங்களின் மறைவுக்குப் பின்னரும், அவ்வப்போது தோன்றிய சான்றோர் பலரால் பேணப்பட்டு வளர்ந்திருக்கிறது. தமிழ் வளர்ச்சியின் இந்தத் தொடர்ந்த வரலாறு, தமிழ் இலக்கியச் செல்வங்களிலே ஊடாடி உணர்ந்து இன்புற நினைக்கும் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும்.
தமிழ் வளர்த்த புலமைச் செறிவுடன் திகழ்ந்தவர்களுள், ஆண்களைப் போலவே பெண்களும் பலராவர். கடைச்சங்க நூற்களில் ஔவையார், வெள்ளிவீதியார், ஆதிமந்தியார், பூதப்பாண்டியன் தேவியார் போன்ற பலரைக் காணுகின்றோம். நாமகளைக் கல்வியின் தெய்வமாக ஏற்றிக்கூறும் பாரத நாட்டிலே, சிலர் 'பெண்களுக்கு ஞானத்தை அறிவுறுத்தல் கூடாது; அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்கள் அல்லர்; அவர்கள் பாவப் பிறவிகள்; ஆண்களை ஒட்டி வாழ்ந்து மடிய வேண்டியவர்கள்; ஆண்களின் இன்ப சுகத்துக்காகவே ஏற்பட்டவர்கள்’ என்றெல்லாம் கூறி, அவர்களைப் பெரிதும் புறக்கணித்திருக்கின்றனர். ஆனால், நம் அருமைத் தமிழகத்திலோ, அந்த நிலை என்றுமே இருந்ததில்லை. தாயான தமிழ், தாய்மார்களிடமிருந்து ஒதுங்கவுமில்லை; அவர்களால் ஒதுக்கப்படவுமில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக தமிழ் மூதாட்டியான ஔவைப் பிராட்டியாரின் அழகுதமிழ்ச் செய்யுட்கள் விளங்குகின்றன. மக்கள் மனமுவந்து போற்றவும், மன்னர்கள் மனம் விரும்பிப் பேணவுமாக, எளிமையும் அஞ்சாமையும் கொண்டு, இணையற்ற பெரும் புலவராக, மக்கள் தலைவராக ஔவையார், அந் நாளிலேயே நம் தமிழகத்தில் விளங்கியிருக்கின்றார்.
வள்ளல் பாரியும், மலையமான் திருமுடிக்காரியும், மழவர் கோமான் அதியனும், காஞ்சித் தலைவன் தொண்டைமானும், சோழனும், சேரனும், பாண்டியனும் ஔவையாரின் சொல்லுக்குக் காட்டி வந்த அளவற்ற பெருமதிப்பினை எண்ணும்பொழுது, பெண்மை அறிவொளியோடு ஒளிக்கதிர் பரப்புங்கால், அந்தப் பேரொளியின் முன்னர், ஆண்மையால் ஆற்றல் மிகுந்தோரும் எளியராகி, அதற்கு அன்பராகிவிடுகின்றனர் என்ற உண்மை புலனாகிறது. இப்படி நாடுபோற்ற வாழ்ந்த நற்றமிழ்ச் செல்வியரான ஔவையார், சங்ககால ஔவையார் என்று குறிப்பிடப் பெறுபவர் ஆவார்.
சங்ககாலத்திற்குப் பின்னால், தமிழகத்தின் அரசியலிலும் வாழ்வியலிலும் பல நூற்றாண்டுகள் பற்பல மாறுதல்களோடு கழிந்தன. அதன் பின்னர், ஏறக்குறையப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் அளவில், மீண்டும் ஓர் ஔவையாரைப்பற்றி அறிகின்றோம். கம்பநாடரும், புகழேந்தியாரும், ஒட்டக்கூத்தரும், செயங்கொண்டாரும் மற்றும் புலவர் பெருமக்களும் நிலவிய நாளிலே, அவர்கள் அனைவரும் போற்றும் அறிவுத் திட்பத்துடன் இந்த ஔவையார் விளங்கினர். இவர் பாடியவையாக நமக்குக் கிடைப்பனவெல்லாம் தனித்தனிச் செய்யுட்களேயாகும். பந்தன் அந்தாதி என்ற ஒரு நூலும், 'அசதிக்கோவை’ என்றொரு கோவையும் இவரால் இயற்றப்பட்டதாகக் கூறுகின்றார்கள். அவற்றுள் கிடைப்பன மிகச்சிலப் பாடல்களே. இந்த ஔவையார் சிறந்த சிவபக்தராகவும் விநாயகப் பெருமானைப் போற்றி வழிபட்டவராகவும் கூறப்படுகின்றார். இவர் இரண்டாவது ஔவையார் ஆவார்.
இந்த இரு ஔவையார்கள் அல்லாமலும், குழந்தைகளுக்கென்று ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை போன்ற நீதிநூல்களையும், விநாயகர் அகவல் என்ற தோத்திர நூலினையும் ஒருவர் செய்துள்ளார். இவரும் 'ஔவையார் என்ற பெயருடன் தமிழ்ப் பெருமாட்டியாகத் திகழ்ந்தவராவார். உயரிய ஒழுக்கங்களையும், சிறந்த நீதிகளையும், எளிதாகவும் இனிதாகவும் படிப்படியே பயிற்றும் ஒரு நல்ல குழந்தைக் கல்வித் திட்டத்தை, முதன்முதலில் உலகிலேயே வகுத்து உருவாக்கியவர் இவர் என்று கூறலாம். இவர் மூன்றாவது ஔவையார் ஆவார்.
மற்றும், வேதாந்தக் கருத்துக்களை உள்ளடக்கியதாக, 'ஔவைக் குறள் என்னும் பெயரால் ஒரு நூலும் நம் நாட்டில் நிலவுகிறது. இதனை அமைத்தவர் மேலே குறிப்பிட்ட எந்த ஔவையாரினும் சேர்ந்தவரல்லர் என்பதனை அந்நூலின் அமைப்பே நன்கு காட்டுகின்றது.
நம் தமிழகத்தில் அறிவுச் செழுமையுடைய சான்றோர்களை ஒட்டி வழங்கும் தெய்விகப் புனைகதைகள் ஔவையார் வரலாற்றையும் விட்டுவிடவில்லை. 'ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த குழந்தையாகவும், பிறந்த இடத்திலேயே பெற்றோரால் கைவிடப்பட்ட மகவாகவும், பாணர் குடியிலே வளர்ந்து பைந்தமிழ் பரப்பிய பெருமாட்டியாகவும் ஒரு கதை நிலவுகிறது.
பாரி மகளிரைத் திருக்கோவலூர் மலையமான் மக்கட்கு மணமுடிக்கக் கருதி சேர,சோழ, பாண்டியரை வரவழைத்து அரிய பல அற்புதச் செயல்களையெல்லாம் செய்தவராகவும், வெட்டப்பட்ட பலாமரம் தழைத்துப் பூத்துக் காய்த்து மீண்டும் நிலைபெறச் செய்தவராகவும், பேயினை வெருட்டியவராகவும், மற்றும் பலவாறாகவும் பலகதைகள் ஔவையாரின் பெயராலே நிலவுகின்றன. சில தனிப்பாடல்கள் இக் கதைகளின் எதிரொலி யாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையிலே, ஔவையாரின் தனிப்பாடல்களைத் தொகுத்து விளக்கத்துடன் தனிநூலாக வெளியிட வேண்டும் என்ற முயற்சியிலே ஈடுபட நேர்ந்தபோது, ஔவையாரின் பெயரால் விளங்கும் தனிப்பாடல்கள் பலவற்றையும் தொகுத்தபோது, அவற்றால் அறியக்கூடிய செய்திக் குறிப்புக்கள் எந்த ஔவையாரைக் குறிப்பன என்று எளிதிலே வரையறுக்க முடியாதவைகளாகவே விளங்கின. ஔவையாரின் வரலாற்றை ஒரு நெறியாக உணர முடியாமல், அங்கங்கே புலப்படும் சிற்சில செய்திகளுடன் மட்டுமே மனநிறைவு அடைய வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
ஆகவே, அந்தந்தப் பாடலுக்கு உரியதாக வழங்கப்பட்டுவரும் குறிப்புக்களை, அங்கங்கு அப்படியப்படியே தந்து செல்வதுடன், என் பணியை ஒருவாறு நிறைவேற்றி இருக்கிறேன்.
புலவராக மட்டுமன்றி, மக்களால் போற்றிப் பரவும் தெய்வங்களுள் ஒருவராகவும் ஔவையார் விளங்குவதை, தென்பாண்டி நாட்டிலே விளங்கும் ’ஔவையார் கோயில்’ களாலும், தென்பாண்டித் திருநாட்டு இல்லுறை தெய்வங்கள், 'ஔவையார் நோன்பு எனத் தமக்கே (பெண்களுக்கே) உரித்தாகக் கொண்டாடும் நோன்பினாலும் நாம் அறியலாம்.
'ஔவையார்’ என்ற பெயராற் பலகாலத்தும் பலர் நிலவியிருந்தனரோ, அன்றி அறிவிலே திருவுடைய பெண்பாலர் எல்லாரும் ஔவையார் என்னும் ஒரு பெயரால் அழைக்கப் பட்டனரோ நாம் அறியோம். ஔவை என்ற சொல் மூதாட்டி யென்ற நினைவையும் தருவதாகும். இந்த முதுமை, ஆண்டின் முதிர்ச்சியைக் குறித்ததோ, அல்லது அறிவின் முதிர்ச்சியைக் குறித்ததோ நாம் அறியோம்.
நாம் அறிந்தனவெல்லாம் தமிழ் ஆர்வமிக்க சான்றோர்கள் திரட்டிச் சேர்த்துப் பாதுகாத்து வைத்த தனிப்பாக்கள் மட்டுமே ஆகும். அவற்றைப் பொருளுடன் அறிந்து, சிந்தித்து, அவற்றால் அறியலாகும் ஔவையாரின் செவ்வியினையும், குண நலன்களையும் உளங்கொண்டு போற்றுவது மட்டுமே நம்மால் இயல்வதாகும். இந்த நூலைப் பயிலுகின்ற அன்பர்கள், இதனை மனத்திற் கொண்டே கற்க வேண்டும் என விரும்புகிறேன்.
எந்தச் செய்யுள் எந்த ஔவையாரால் பாடப்பெற்றது? அஃது எழுந்த காலம் என்ன? அந்த ஔவையாரின் வரலாறு யாது? அவரோடு தொடர்பு உடையவர் யார்? அவர் செய்த செயல்கள் எல்லாம் என்னென்ன? இப்படிப்பட்ட சிந்தனைகளையெல்லாம் ஆராய்ச்சித் துறையிலே அயராது ஈடுபட்டு இன்பம் காணுவோரான அறிவுசால் பெருமக்களுக்கு விட்டுவிட்டு, நாம் இனிய தமிழ்ச்சுவையில் மட்டுமே மனஞ்செலுத்தி மகிழ்வோமாக.
சங்கநூற்களில் பயின்றுவரும் ஔவையாரின் பாடல்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெறவில்லை. அவற்றைத் தெளிவுரை அமைப்போடு வெளிவந்துள்ள எனது சங்கநூற் பதிப்புக்களுள் கற்று இன்புறுக.
தமிழ் நலத்தைக் கனிவாக்கும் இனிதான இச்செய்யுள் தொகுப்புநூலைத் தமிழன்பர்கள் விருப்புடன் வரவேற்று இன்புறு வார்கள் என்பதில், எப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.
வாழ்க தமிழ் ஆர்வம்!
1988