திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫6. அரசன் விருத்தம்[தொகு]

இலக்கணம்:-

அரசன் விருத்தம் என்னும் இச்சிற்றிலக்கிய நூல் ஓர் அரசரைப் பாட்டுடைத்தலைவராகக் கொண்டு அவர்தம் புகழை விரித்துப் பாடுவதாக அமைவதாகிறது. அரசரின் மலை, நாடு, கடல், நகர், ஊர், வாள்மங்கலம், தோள் மங்கலம், கொடி, குடை, முரசு, பரி, கரி ஆகியவற்றைப் பத்து கலித்துறை, முப்பது விருத்தம் ஒரு கலித்தாழிசை என்ற எண் வரையறைப்படி நாற்பத்தொரு பாடல்களால் பாடப்பெறுவது என்பது தெளிவாகிறது. இஃதாவது தசாங்கம், தசாங்கத் தயல், கலம்பகம் போன்ற பல்வேறு இலக்கிய வகைகளையும் வாள் மங்கலம், தோள் மங்கலம் போன்ற புறத்திணைத் துறைகளையும் தழுவி இயற்றப்பெறும் ஒரு கலவை இலக்கியமாகத் தோன்றுகின்றது.

அரசன் விருத்தம் கலித்துறை யீரைந்து அகன்மலைமேல்
விரவிய நாடு நகர்சிறப் பாய விருத்தமுப்பான்
உரைசெய் கலித்தா ழிசையும்வாண் மங்கலம் ஓதுவது
புரவலர் ஆயவர்க் காமென் றுரைப்பர் புலவர்களே
- நவநீதப் பாட்டியல் 51
கலித்துறை பத்தும் கலித்தாழிசையும்
விருத்த முப்பதும் வெற்பு நீர்நாடு
வருணனை யொடுநில வருணனைதாமும்
வாண்மங் கலமுந் தோண்மங்கலமும்
அறைகுவ தரசன் விருத்த மாகும்
- முத்து வீரியம் 113

எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் முழுமுதற்பொருள், முனிவர்கட்கரசு, தேவாதிதேவர், கர்த்தாதிகர்த்தர், அரசர்கட்கரசர், அனந்தர் குலதெய்வம், ஆதி நாயகர், தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதித்தெய்வம். அவர்களின் திருமலை, திருஞானக்கடல், திருநாடு, திருநகர், திருவூர், திருத்தவ முரசு, திருக்கொடி, திருக்குடை, திருஞானச்செங்கோல், திருக்கரி, திருப்பரி, திருத்தோள் மங்கலம், திருவாள் மங்கலம் ஆகியவற்றைப் போற்றி இப்பனுவல் இயற்றிடப் பெற்றுள்ளது.

ஞானப் பேரரசர் திருவிருத்தம்

காப்பு

கலிவிருத்தம்

ஆமன் வித்தின் ஆதி உதயத்தார்
மாமன் னர்பெரு மாட்சி விதந்துரை
நாமன்னி நின்று நற்றுணை நல்கிட
பூமன் னுசாலை யர்பதம் போற்றுவாம்

நூல்

கட்டளைக் கலித்துறை

துன்பம் அனைத்தும் சுமந்தெம் உயிரே கடைத்தேறவே
இன்ப அமுதம் வழங்கும் இறைவர் திருத்தோள்களே
அன்பர்க் கினியவர் வம்பர்க் கரியவர் என்சாமியே
தன்பொற் றிருத்தாள் சிரமே பதியே கதிபெறுமே! (1)

கலித்தாழிசை

பரப்பிரம்மத் திருவுருவே! பழமறைகள் தெளிதுறையே!
பரசுகமே தருதுரையே! பவக்கடல்தாட் டிடுபுணையே!
வரந்தருமோர் புரந்தரரே! வளர்கருணைக் கடலவரே!
சிரம்பதிநின் பதமலரே! தவத்தரசே! அடைக்கலமே! (2)

1.திருமலை

கலிவிருத்தம்

மந்த்ர மாமலை மன்னிநின் றார்பெரும்
இந்த்ர ஜாலம் இயற்றிவான் வையகம்
தந்த்ர உத்தியி னால்படைத் தாண்டவெம்
எந்த்ர வள்ளலார் ஆர்புகழ் ஏத்துவாம் (3)

கண்ட மேரு சயிலந் தனில்நிலை
கொண்ட வானவர் காண்மணி யார்மலை
அண்டர் கோன்திரு வாரும் பரங்கிரி
விண்ட மாதவர் சாலைமெய் யாண்டவர்! (4)

கட்டளைக் கலித்துறை

கலைகட் கதிபர் கருணைக் கரர்மெய்த் தவத்தரசர்
நிலைபெற் றுயிர்கள் அலைவற் றிடவான் தவச்செல்வமே
தலைபெற் றிடஊ ற(ல்)மலைச் சாரல் தனில்சாலையே
நிலையுற் றதுமா கலையுற் றதுகாண் நீணிலத்தே! (5)

2. திருஞானக்கடல்

கலிவிருத்தம்

மான சம்ச ரோவரம் உற்பவம்
வான கங்கை பெருகி நிறைந்திடும்
ஞான வாரிதி மெய்வழி ஆண்டவர்
வான வர்திருத் தாள்சிரம் பூணுவாம் (6)

வான கத்திருப் பாற்கடல் மேவியே
ஆன சேஷணைப் பள்ளிகொண் டாரெங்கோன்
தேன கத்திரு வாய்மலர்ந் தெம்மனோர்
ஊனம் தீர உவந்தமு தூட்டுவார் (7)

கட்டளைக் கலித்துறை

அருளார் அமுதம் பெருகத் தருவார் அதுபருகி
மருளே கெடவே எமன்வா தனைதீர்ந் துயிருயவும்
கருணா கரரே! கலிவெங் கடல்தா ட்டிடுகலமே!
அருணோ தயமே! இருள்தீர் ஒளியே! ஆண்டவரே! (8)

3. திருநாடு

கலிவிருத்தம்

வான்க யிலைத்தி ருநா டுடையவர்
கோனெங் கள்ஜீவ நாடுடைக் கோவலர்
தேன மர்பொழில் கொங்கு குலப்பதி
வானா டர்வளர் பாண்டிவ ளநாடே (9)
தென்னா டுடைசிவ னார்திருக் கோலமே

இன்னாட் டில்வரு கைதரு காலமே
பொன்னா டர்உயிர் பேணுமிக் காலமே
எந்நாட் டவர்க்கும் இறைவர்மெய்ச் சீலமே (10)

கட்டளைக் கலித்துறை

திருநா டெமதா ருயிர்நற் கதியே கொண்டுயவே
திருநாட் டரசர் தவநாட் டமிர்தம் பெறுநாடே
குருநா டிதுவான் குலநா டுயுக வித்தெடுக்கும்
பெருநா டிதுமெய் பெறுநா டிதுவீ டடைநாடே! (11)

4. திருநகர்

கலி விருத்தம்

மார்க்க மாநகர்ப் பூம்பொழில் வான்மலர்
பூக்கும் மாமணம் வாமணர் சாலையர்
தீர்க்க மார்தரி சியர்கள் போற்றுநன்
மார்க்க நாதர் மலர்ப்பதம் போற்றுவாம்! (12)

மதுரை மாநகர் திருப்புத் தூரொடு
இதமார் ராஜகம் பீரனில் ஆள்கைசெய்
மதிம ணிஎழில் புதுகை அண்மையில்
கதியு யர்சாலை மெய்நகர் சார்ந்தனர் (13)

கட்டளைக் கலித்துறை

சார்ந்தனர் மெய்வழிச் சாலையின் அரசர் சர்வேசரே
ஆர்ந்தனர் இறவா வரமே அருள்செய் வான்வள்ளலே
நேர்ந்தார் நினைவில் நிலையோர் நிதியே நெடுமாலே
கூர்ந்தே கழல்பற் றியபேர் நிலைத்தே உயர்வார்களே! (14)

5. திருவூர்

கலிவிருத்தம்

அரனயன் மாலோர் உருவுற்று ஆள்கைசெய்
பரம னார்பதி மெய்வழிச் சாலையூர்
தரணி யில்ஈடில் தனிச்செ யற்பதி
வரந்த ருந்திரு வானவர் மெய்ப்பதி (15)

கொலைக ளவுகள் காமம்பொய் சூதிலார்
நிலைபெ றுந்தவ நீர்மையர் வாழுமூர்
அலைவு றும்மற லியமல் நீங்கிய
தலைமெய் நீடு தவப்பெரும் சாலையூர் (16)

கட்டளைக் கலித்துறை

வேலை எழில்சூழ் திருவேத நற்பதி மெய்வழியார்
சாலை இறைவர் தவமோங் கிடுமுத்தி யோவனமாம்
சோலை உயிரே பயிரா விளையும் திருவயலூர்
மேலை வெளியூர் மறலிகை தீண்டாப் பதியிதுவே (17)

6. திருத்தவ முரசு

கலிவிருத்தம்

தொல்ப ழமையர் நாளும் புதியவர்
வல்வி னைதவிர் வள்ளலெம் நாயகர்
நல்வ ரவுந வில்நக ராவெனும்
வெல்மு ரசுஅ திர்ந்து ஒலிக்குமே (18)

வணக்கம் நல்விழா வும்கொடி யேற்றமும்
இணக்க நீதித் திருமணம் மற்றுயிர்
மணக்கும் சீர்மை நிகழ்வுறு போதினில்
குணக்க டல்அலை போல்முர சார்க்குமே (19)

கட்டளைக் கலித்துறை

நகரா முரசு நனியார்ந் தொலிக்கவே நல்லோருளம்
நகரா நிலைக்க நமனார் இடர்தான் நகர்ந்ததுவே
நகரம் ஒலிக்க அகரம் தெளிக்க சுகஉதயம்
மகரம் நிலைக்க பகரம் நிறைக்கும் பலன்விளைவே (20)

7. திருக்குடை

கலிவிருத்தம்

மந்த்ரம் யாவுமோர் மேனிகொண் டிங்கணே
விந்தை ஞானச்செங் கோல்திரு வோலக்கம்
சந்த்ர வட்டவெண் கொற்றக்கு டையுடை
எந்த்ர வள்ளல்மெய்ச் சாலையின் ஆண்டவர் (21)

வெவ்வி னைப்பவ வெய்யில் தணிக்குமோர்
செவ்வை வான மதிக்குடை நீழலார்
முவ்வு லகில்மு டியர சோச்சுவார்
கவ்வு மார்ச்சாலம் போலெமைக் காத்தரே! (22)

கட்டளைக் கலித்துறை

படையாம் எமனின் வெயில்வா தனைதீர் நிழல்தருமோர்
குடையாம் எமதா ருயிர்நா யகரின் அருள்நோக்கம்
தடைதீர் வுறவே தயைகூர் இறைமெய் வழியருளும்
விடையே றரசு மறைமெய்ப் பொருளாம் இறையவரே! (23)

8. திருத்தவக்கொடி

கலிவிருத்தம்

வடிவு டைவண்ணர் மாதவ ராலந்தக்
கொடிய னாம்எமன் கோளமல் தீர்வெற்றிக்
கொடியெ னும்பூ ராண்கொடி மெய்வழிக்
குடியு யர்ந்திட விண்ணிலங் கேறிற்றே (24)

வான வர்அனந் தாதியர் வாழ்பதி
கோன வர்தவம் வளரும் பிறைக்கொடி
ஆன வர்அனந் தாதியர் மெய்க்குடி
வான்சி றக்க நெடுங்கம்பம் ஏறிற்றே (25)

கட்டளைக் கலித்துறை

அறமோங் கெமதா ருயிர்நா யகர்தம் தவமோங்கிப்
பெறுசன் னதங்கள் பனிரெண் டதிலுயர் கிள்நாமம்
மறுவின் றிலங்கும் அதுகாண் கொடியில் பதித்துளதாம்
துறவோங் கிடுகா வியும்வெண் மையெனும் கொடியாமே! (26)

9. திருஞானச்செங்கோல்

கலிவிருத்தம்

செங்கோல் எங்கோல் என்ப(ர்)மன்னர் ஏமனார்
தங்கோல் வந்தால்த டுமாறி மாள்குவார்
எங்கோன்ஞா னச்செங் கோல்வரு போதெமன்
தங்கோல் வீழ்ந்திடும் எங்கோன்வென் றோங்கிடும் (27)

மண்ண கவேந்தர் செங்கோல்சின் னாட்செலும்
பண்ண கர்எங்கள் மெய்வழி ஆண்டவர்
விண்ண வர்தவ ஞானச்செங் கோலது
மண்ணூ ழியூழி காலம் நிலைக்குமே (28)

கட்டளைக் கலித்துறை

தென்னா டுடையார் சிவனார் தவனார் அவதரித்தார்
எந்நாட் டவர்க்கும் இறைவர் திருவருள்ஞா னச்செங்கோல்
இந்நாட் டினிலிங் கினிதே செலுமிங் கென்றென்றுமே
பொன்னார் அடியாம் கமலம் புனைவோம் சிரமிசையே! (29)

10. திருப்பரி (குதிரை)

கலிவிருத்தம்

ஆசி ஈயும் அருட்ஜோதி தெய்வமாம்
மாசில் மெய்வழி சாலையின் ஆண்டவர்
காசி னிஉய்யக் கல்கி மகதியாய்
வாசி என்னும் பரியேறி வந்துறும் (30)

வைய கம்பெரு வானகம் ஈடிலா
ஐய ரென்குரு கொண்டலென் ஆண்டவர்
பைய வந்துயிர் பற்றியுய் வித்தனர்
துய்ய திண்டோள் திறம்புகழ்ந் தேத்துவாம் (31)

வெண்மை வாசிப் பரிமேல் வலம்வரும்
ஒண்மைச் சீரினர் உத்யோ வனத்தினர்
கண்மணி யனை சாலையின் ஆண்டவர்
திண்மை நிர்மலத் தன்மைமிக் கோங்குமால் (32)

கட்டளைக் கலித்துறை

சீருயர் தேவாதி தேவர்மெய்ச் சாலையர் பொன்னரங்கர்
நேரிலா மாட்சியர் ஓர்நொடிக் கோரண்டம் செல்தகையர்
ஆருயிர் நாயகர் ஆதி மனுமகன் வாசியெனும்
ஆர்பரி யேறுவர் ஆயிரம் பேரினர் ஆண்டவரே! (33)

11. திருக்கரி (வெள்ளானை)

கலிவிருத்தம்

உண்மை ஓர்நெறி ஓரிறை ஓர்குலம்
மண்மி சைநிறு வுமெங்கள் மாதவர்
அண்மை யாம்இத யம்மிசை ஆர்ந்துளார்
வெண்மை யாம்கரி யேறிஉ லாவரும் (34)

உள்ளம் மேவி உயிர்நிறை கள்வர்காண்
தெள்ளு மெய்ம்மண ஞானத் தெளிவினர்
அள்ளி ஈய்ந்திடும் வள்ளல் தபோதனர்
வெள்ளை வாரணம் ஏறியு லாவரும் (35)

கட்டளைக் கலித்துறை

உயிரில் எமது உணர்வாய் ஒளிரும் இறைபொருளே!
அயிரா வதமாம் கரியே றியுலாத் திருக்கோலமே!
அயன்மால் சிவமோர் உருமெய் வழிஆண் டவர்தாளே!
துயரார் பிறவிக் கடல்தாண் டிடுமோர் புணையாமே! (36)

12. திருவாள் மங்கலம்

கலிவிருத்தம்

சீர்சிறந் தொளிர் தெய்வத் திருக்கரக்
கூர் மலிந்தது கோளரி வாளிது
பார்பு கழ்ந்திடு பான்மைமிக் கோங்கிடும்
நீர்மை கொண்டது நீண்டுறை வாளிதே! (37)

சாதிச் சிக்குகள் சமயப்பி ணக்குகள்
பேதச் சிக்குகள் யாவும்அ ழிந்திட
நாதம் பொங்கும் நளினமும் தங்கிடும்
நீதி மன்னவர் நற்கர வாளிதே! (38)

கட்டளைக் கலித்துறை

நமதா ருயிர்க்கு நலமே பயக்கும் நலமுயர்வாள்
எமனா ருயிர்க்கு எமனாய் விளங்கும் எழில்கூர்வாள்
சமமே துலங்கச் சபையே விளங்கச் சதிராடும்
இமையோர் தமக்குச் சுமையே இறக்கும் திருவாளே! (39)

13. திருத்தோள் மங்கலம்

கலிவிருத்தம்

ஈண்டு வெங்கலி யாலிட ருற்றுயிர்
தீங்கு ளாழ்ந்து மயங்கிடு நாள்வந்து
தாங்கு திண்டோள் திறமுயர் மெய்வழி
ஓங்கும் ஆண்டவர் ஒண்மலர்த் தாள்கதி! (40)

வானப் பேரரசர் விருத்தம் இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!