திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/031.சாலைக் கலம்பகம்
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
31.கலம்பகம்
[தொகு]இலக்கணம்:-
பல்வேறு யாப்புகள், பல்வேறு பாடற் பொருண்மைகள், பல்வேறு சுவைகள் என வேறுபாடுடைய இலக்கிய உறுப்புகள் பற்பலவும் கலந்த கலவை இலக்கியமாகப் படைக்கப் பெறுவது கலம்பகம் என்னும் இவ்விலக்கியம்.
வைக்கும் புயம் தவம்வண் டம்மனை பாண்மதங்கு கைக்கிளைசித் தூசல் களிமடக்கூர் - மிக்கமறம் காலம் தழையிரங்கல் சம்பிரதங் கார்தூது கோலும் கலம்பகத்தின் கூறு. -வெண்பாப் பாட்டியல் -32
ஆர்புயம் தவம்மதங்கு அம்மானை காலம் குறம்மறம் களி மடக்கு ஊசல் வண்டு ஊர் சித்து இரங்குதல் சம்பிரதம் தழை பாண் கைக்கிளை தூதுயிவை கலம்பகக் கூற்றே - பிரபந்த மரபியல் - 4
தகும் கலிப்பா வெள்ளைக் கலித்துறை பாடிப் பின்னர் தோய்ந்த பாவினமுழுதும் பலதுறையும் வகுப்புஞ் சொற்றொடராம் கலம்பகம் - சுவாமிநாதம் 170
புயம், அம்மானை, ஊசல், மறம், சித்து, காலம், மதங்கி, மடக்கு (யமகம்), சம்பிரதம், களி, தூது, கைக்கிளை, மேகம் (கார்), தவம், வண்டு, பாண், தழை, இரங்கல், குறம், தென்றல், ஊர், அலர் என்னும் உறுப்புகள் கொண்டு பாடப் பெறுவது கலம்பகம் என்னும் இவ்விலக்கிய வகையாம். பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் திவ்வியத்திருவருட் பெரும்புகழைப் பாடுவது இந்நூலின் நோக்கம்.
சாலைக் கலம்பகம்
காப்பு
எழுசீர் விருத்தம்
சீருயர் உலகம் அனைத்தையும் படைத்த
செழுங்கரு ணைத்திரு மணியே!
பேருயிர் உய்யப் பிறங்குமெய் வழியால்
புரந்தருள் சாலைவிண் ணணியே!
நேருயர் திருத்தாள் நடம்புரிந் தெனையாள்
நிகழ்வினைப் புகழ்வதென் பணியே!
காருமென் நினைவில் கையெழுத் தேட்டில்
கனிந்திருந் தருள்பதம் துணையே!
நூல்
ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக் கலிப்பாதரவு
துணைபதமே! திருமறைகள் தருமிறையே மறைபொருளே!
இணையிலதாய் ஆதியும னாதியுமாய் இலங்கருளே!
சேதனம சேதனங்கள் அனைத்துமருள் ஒருகருவே!
நாதமணி நனிகொழிக்க நலங்கனியும் அருட்குருவே!
விதியனைத்தின் முதல்விதியே! விதிகடந்த திருமதியே!
மதியுருவே! மன்னுயிர்க்கு வாழ்வருளும் ஒருகதியே!
கற்றவரே! கலையனைத்தும் கலைவடிவாய் உற்றவரே!
நற்றவரே! நல்லுயிர்க்கு நற்றுணையாம் கொற்றவரே!
பூஜ்ஜியரே! பூஜ்ஜியர்க்கு மதிப்பருளும் முதல்எண்ணே!
ராஜ்ஜியரே! தேவாங்க ராக்கிடுமெய் யருள்விண்ணே!
உம்பர்க்கே ஒருகோனே! உவந்தருளும் பெருமானே!
நம்பர்க்கு அருட்தேனை நல்கிடுமெய்த் திருவானே!
ஒன்றுகுலம் ஒருதேவன் எனுமூலர் மொழிமெய்யாய்
நன்றுநிகழ்ந் திடவுலகில் நனிவருகை தருமெய்யே!
முழுமுதலே முடிவில்லாப் பெரும்புகழே! மாமுனியே!
எழில்பொழியும் இணையில்லாக் கற்பகநல் வான்கனியே!
அராகம்
கனிதவ மணியென துயிர்க்குயிர் பெருந்துணை
இனியவர் பவக்கடல் கடந்திடத் தரும்புணை
பணிபவர் பிணியறப் பதமலர் சிரமிசை
அணிபவர் எமபட ரடிபட அருள்திசை
தரிசனை பெறுபவர் வினைகெட இருளற
புரிபெறு தயைதினம் புதியவர் அருளுற
குணநிதி எனவரு குருமணி தனிகையர்
கனமதி களிதர கதிதரு தனிகையர்
இணையிலர் புகழினர் இருளறு மொழியினர்
அணைதிருக் கரர்தவம் அருள்திரு விழியினர்
உலகிடை ஒருகதி எனவரு உயர்பதி
அலகிலை தருநிதி அருள்பெரு கிடுநதி
புவிமகள் மகிழ்வுற நடம்புரி பதத்தினர்
கவிமகள் நெகிழ்வுற கவிபொழி இதத்தினர்
இமிழ்கடல் வரைப்பினில் எழுந்தருள் அகரமே!
தமிழ்மொழி தகைமிகு உயர்ந்திடு சிகரமே!
ஈரடித் தாழிசைகள்
சிகரமதாய் அறிவதனின் திருவுருவாய்த் திகழரசே!
இகமதனில் நிகரிலராய் அருள்பொழியும் புகழ்முரசே!
தனையடைந்தோர் முத்தாபம் தவிர்க்குமொரு தரிசனமே!
முனைமிகுகூர் தவத்தாலே எமையணைத்த கரிசனமே!
எங்களுக்கென் றேவிதித்து எழுந்துவந்த குருபரரே!
பொங்குமதி யமுதுகொழி கங்கைநதி அருள்தரரே!
சங்கநிதி பதுமநிதி தந்தவொரு பெரும்பதியே!
துங்கமணித் திருத்தாள்தந் தெமையாண்ட ஒருகதியே!
மறையனைத்தும் தெளிவுறவோர் மொழிக்கீதை தருதிருவே!
குறைகெடவெம் முயிர்களிக்கக் கொழுநிதியை அருட்குருவே!
இதயமதில் நடம்பயின்று இன்பமருள் என்கணவா!
உதயமுழு மதிகதிரே! ஓங்குயர்ந்த எண்குணவா!
உலகமிதிற் கலகமிடும் மதவெறியை அடக்கியவா!
அலகிலதாம் மெய்வழியாம் அருள்நெறியைத் தொடக்கியவா!
நீதியொரு திருமேனி தாங்கிவந்த நித்தியரே!
ஆதிதுணை யாயெமக்கு அன்புகனி சத்தியரே!
நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்
சத்திய மெய்வழி தந்த தானவர்
நித்திய நல்வரம் நல்கு கானவர்
பத்திய ஞாலவர் போற்று கோனவர்
அத்தனும் அன்னையும் அருட்குரு வானவர்
முத்தர்கள் ஞானியர் நத்திடு தேனவர்
சுத்தர்கள் போற்றிடு திருவுயர் வானவர்
சித்தர்தம் கோஎம துயிர்திரள் ஊனவர்
புத்தகர் வித்தகர் முத்தர்மூ மீனவர்
முச்சீர் ஓரடி அம்போதரங்கம்
அவநெறி கெடஜெய முற்றனை
தவநெறி முகடதி லுற்றனை
சிவபரஞ் சுடரெனப் பெற்றனை
பவம்கெட அருள்மொழி சொற்றனை
எளியனைக் களியனைப் பற்றினை
தெளிவுயர் சுரர்தமுள் எற்றினை
எமனெனு மெதிரியைச் செற்றனை
இமையவர் தலைவரா யுற்றனை
இருசீர் ஓரடி அம்போதரங்கம்
உற்றமெய்த் தெய்வமே!
பற்றியாம் உய்வமே!
சீருயர் ஐயரே!
கார்கொடைக் கையரே!
வந்ததோர் வேதமே!
சிந்தைமெய்ப் போதமே!
விந்தையார் நாதமே!
எந்தையே நீதமே!
ஒருசீர் ஓரடி அம்போதரங்கம்
நீதிநீர்!
ஆதிநீர்!
அருளுநீர்!
பொருளுநீர்!
சிவமும்நீர்!
தவமும்நீர்!
அறமும்நீர்!
திறமும்நீர்!
அன்பும்நீர்!
இன்பம்நீர்!
கதியும்நீர்!
பதியும்நீர்!
விதியும்நீர்!
மதியும்நீர்!
கதிரும்நீர்!
புதிரும்நீர்!
என ஈங்கு
தேவாதி தேவா! மூவா முதல்வா!
கோவே தனிகையர் கொடையாம் புதல்வா!
வேதவே தாந்தமே! மெய்யர்தம் பாந்தமே!
நாதநா தாந்தமே! எனைக்கவர் காந்தமே!
கற்பகக் காவே! பொற்பகர் கோவே!
விற்பன நாவே! விண்மணிப் பூவே!
கனியே! தேனே! சுவையே! பயனே!
இனியோர் துணையே! இன்னெழில் நயனே!
தென்னகம் வந்துறு சிவபரம் செந்நிரு!
பொன்னரங் கையரே என்னுயிர் மெய்யரே!
நின்புகழ் போற்றிட நெகிழ்ந்துளம் ஏற்றிட
என்னுளம் விழைந்தது இனிதுயிர் தழைந்தது.
எல்லாம் வல்ல இறைவா நின்திறம்
சொல்லவல் லேன்கொல் சிறியனேற்(கு) இல்திறம்
நாவலர் பாடிடும் தேவர்நும் சீர்தனைக்
கேவலன் பாடவோ போற்றிநின் பேர்தனை
ஆயினும் ஆவலன் ஐயனே! அம்மையே!
தாயினும் இனிய தயவுடைச் செம்மையே!
நாயினும் கடையேன் நல்லடி சார்ந்துளேன்
தூயனின் திருப்புகழ் பாடிட ஆர்ந்துளேன்
விடையே றையரே வெற்றிகொள் கையரே!
கடையனேன் போற்றுதல் கனிந்தினி தேற்றருள்
என்மொழி புன்மொழி தாயே!
நின்னுயர் வான்புகழ் போற்றுமென் வாயே!
நெஞ்சறிவுறூஉ
இன்னிசை வெண்பா
வாயேனின் மாதவரை வாழ்த்து, மனமேமெய்த்
தூயவர்தா ளில்நின்னை ஆழ்த்து, திருவோங்கு
ஆய கலைக்கதிபர் ஆர்புகழை ஓவாது
தேயமெலாம் போற்றித் திரி
மயில்விடு தூது
கட்டளைக் கலித்துறை
திரிதரு தோகை மயிலே எனக்கொரு தூதுசெல்லே
பரிந்துஉத் யோவனச் சோலையில் பேதை தனைக்கலவி
புரிந்தவர் சாலையர் வான்புகழ் பாடிப் பணிந்துநித்தம்
திரிந்திடல் செப்புவாய் ஓவாது கூடவோர் தோதுசொல்லே!
தோழியின் உரை
எண்சீர் விருத்தம்
சொல்வீர்ஓர் திருவாக்கு “அஞ்சேல்” என்று
செங்கைவளை இளங்கலையாள் உளத்தே நின்று
அல்பகலும் அனவரதம் தலைவர் நும்மோ(டு)
அணைந்திருக்கும் வேட்கையினாள் இந்நாள் அம்ம!
வெல்வீர்நும் பிரிவாற்றாள் விரைந்தே கூடி
விளைத்திடுமின் பேரின்பம் இளைத்தாள் நாடி
செல்வீர்அன் னவளோடே செல்திக் கெல்லாம்
தயவினுக்குப் பஞ்சமுண்டோ தரும வேந்தே!
பறை சாற்றல்
அறுசீர் சந்த விருத்தம்
தரும தேவர் புவிபோந்தார்
சாவா வரமாம் அருளீந்தார்
அருமை அறிந்தோர் பெற்றுய்ம்மின்
அழியாக் கல்வி கற்றுய்ம்மின்
தருமெய் வரங்கட் களவில்லை
சாலைப் பதியே அதனெல்லை
குருமெய்த் திருத்தாள் சிரமேற்றிக்
குலமுய்ந் திடவே பறைசாற்று
செவிலி
எழுசீர்ச் சந்த விருத்தம்
பறைசாற்ற வாசிப் பரியேறு சாலைப்
பரந்தாம ரின்ப வடிவம்
மறைபோற்ற ஜீவர் குறைநீற்ற இங்கண்
வருகாலை தாளில் படிவம்
அறைகூற்று என்றும் அணுகாதே ஏற்று
அறவாழி தீமை கடியும்
இறைபோற்றப் பொன்னி னுலகேற்ற அங்கண்
இறவாத இன்பம் விடியும்
அறுசீர்ச் சந்த விருத்தம்
விடியுபொன் னுலகது தெளிவுற
வினைபிற வியின்பிணி நலிவுற
முடிதிகழ் குருமணி தரிசனை
மனுவின மதுபெறு பரிசென
துடியனை துந்துபி 'இழு'மென
தொழுதிட அனைவரும் 'எழு'கென
அடியிணை மலர்பணி மகிழ்வினில்
அமரர்கள் உளமிக நெகிழ்வுறும7
வேறு
நெகிழ்வார் நெஞ்சில் இறைமேவ
நீளெக்காள மதுகூவ
புகழ்வோர் ஜீவன் களிகூர
பரவாழ் வதனின் ஒளியார
சுகவா ரிதிபொன் னரங்கையர்
திருவோங் கிடுநல் வரங்கையர்
திகழும் பெருமை பாடுமினே
திருத்தாள் சிரத்தில் சூடுமினே!
புய வகுப்பு (திருப்புஜபலம்)
எண்சீர் சந்த விருத்தம்
சூடிமுடி ஞாலமுழு தாளுமர சாளும்
சூழவரு மாமறலி மேவவல ராமோ
வாடிமெலி வார்எமனும் வந்துஉயிர் கோலும்
வையமிதி லிந்தநிலை என்றுமுள தாமே
ஆடியெம தாருயிரை ஆளுடையர் சாலை
ஆண்டவர்கள் பொன்னடியை அண்டியிது காலை
நாடியத போதனர்கள் காலனிடர் மேவ
நல்குவர மையரருள் நத்தியவர் தேவர்
தேவர்முதல் மூவர்கள்செ யற்கரிய ஆற்றல்
சன்னதமெ லாமொளிர மாதவமே நோற்றல்
சாவிலைய டக்கமெனச் சற்சனரை ஏற்றல்
தங்கமென மண்பொதியத் தம்மகவை மாற்றல்
நாவலர்கள் நாணமுறு நாற்கவியின் ஆற்றல்
நானிலமும் வானகமும் நாதர்புகழ் போற்றல்
பூவுலகில் சாதிமதம் ஒன்றுஎனச் சாற்றல்
பொன்னரங்க நாயகரின் பொற்புயத்தின் ஆற்றல்
அறுசீர் விருத்தம்
புயபலமார் தவவளமோங் கிடநாசி வெளியோடா மூச்சின் தன்மை
வியனுலகி லெவர்க்குமரி தூணுறக்கம் அயர்வலுப்பு எதுவு மின்மை
இயலிசைகூ டகமென்று எழில்கொஞ்சும் முத்தமிழ்க்கா வியம்செய் தன்மை
தயவருளும் என்சாமி எனதுதுரை திறம்பாட எனக்கில் வன்மை
தலைவி இரங்கல்
எழுசீர் விருத்தம்
வன்மை எற்கு உண்டு கொல்லோ
மன்ன ரைப்பி ரிந்துற
தன்மை யாயெனைய ணைந்து
தார்பு ணைந்த மாதவர்
இன்மை யால்நெ கிழ்ந்து நெஞ்சம்
ஏங்கி மெய்ப சப்புறல்
பொன்ன ரங்கர் வந்தெ னைப்பொ
ருந்து காலை மாறுமே
கட்டளைக் கலித்துறை
மாறாத சொல்லர் மறவாத நெஞ்சர் மனக்கினியர்
பேறாக வந்த பெருமானென் கொண்கர் மொழிக்கனியர்
ஆறோடு கண்கள் அவரேகு போழ்தனைத் தும்மறந்தேன்
வேறேதும் சொல்ல வேண்டிலன் பாலொடன் னம்துறந்தேன்
அன்னம்விடு தூது
நேரிசை ஆசிரியப்பா
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
மின்னும் செங்கால் அன்னச் சேவல்!
பருகத் தேனும் பாலும் தருவேன்
அருகில் வம்மின் தூது சென்மின்
காவிரி ஆடிக் கடந்துசெல் காலை
தேவர்கள் வாழும் சீருர் சாலை
தென்றிசை யுண்டு நன்றிசை பாடும்
மன்றமங் குண்டு மாதவர் கூடும்
செவ்வெழிற் பாகை சிரம்புனை சேகரர்
பவ்விய நடையினர் பாமண வாகரர்
துந்துபி முழங்க குழல்களும் ஊத
விந்தைமிக் கழகார் மேனியர் நாதர்
எங்கோன் தெய்வம் என்னுயிர் நாயகர்
தங்கத் தாளினர் தயவருள் தூயவர்
ஜீவசிம் மாசன மேடையில் எழுவர்
தேவர்கள் பணிந்து திருவடி தொழுவர்
எற்றே என்னவர் எழில்தனைப் புகழும்
கொற்றவர் தோற்றம் கோதறத் திகழும்
தரிசனை ஒன்றே சகலவ ரந்தரும்
பரிசென இளநகை பிறங்குபு ரந்தரர்
அழகெலாம் திரண்ட அருட்டிரு மேனியர்
குழகர்பொற் றாளில் கோதறு மாணவர்
மென்மலர் சாற்றி மிக்கவ ணங்குவர்
பன்முறை போற்றிப் பணிந்து இணங்குவர்
அருச்சனை செய்த அழகிய மலர்கள்
திருத்தவத் தாளிற் செறிந்து இலகும்
பையச் சென்று பணிந்து நின்று
தையல் என்னின் தவிப்பினை நவின்று
வெய்ய விரகம் வேதனை புகன்று
துய்ய மலர்களைச் சேகரி நன்று
சூடிய மலர்களை நாடிடு பேதை
வாடிடு முன்னம் கொணர்மின்
கோடிநற் புண்ணியம் கொண்மினன் றினிதே!
நெஞ்சொடு கிளத்தல்
கட்டளைக் கலித்துறை
இனிமை விழையும் எளியா ளுளமே அருள்ஞான
கனிகள் பொழிகற் பகமார் தருநின் பதியானார்
தனிமை இலைநின் இதயத் தின்ப நதியானார்
குனித்த புருவக் குழகர் ஆதிப் பெருமானார்
காலம்
எண்சீர் விருத்தம்
ஆதிசிவ னாரருளார் ஆடல்புரி காலம்
அண்டியவர் துன்பமொழிந் தின்பமுறு காலம்
வேதமுப னிடதமெலாம் மெய்துலங்கும் காலம்
வித்தகரென் போர்வாயைப் பொத்தியிடும் காலம்
நீதிமனு நித்தியராய் நின்றிலங்கும் காலம்
நற்றமிழ்த்தாய் பூரணமாய் நளினஎழில் காலம்
மாதவரும் மெய்ம்மருந்து கொண்டுவந்த காலம்
மணிமொழியால் உயிர்களிக்க வரங்களருள் காலம்
வரங்களருள் வேதமுதல் வடிவுகொண்ட காலம்
வஞ்சகரும் தீங்கினரும் வாலொடுங்கும் காலம்
அரங்கரெங்கள் ஆண்டவர்கள் அறம்புரியும் காலம்
“அஞ்சலஞ்சல்” என்றுயெமை ஆதரிக்கும் காலம்
ஒருங்குதிரண் டேமதங்கள் ஓகையிடும் காலம்
உட்சாதி வெறிதணிந்து ஒருங்கினையும் காலம்
கரங்குவிவார் கர்த்தர்முனே கதிபெறுநற் காலம்
காணாத காட்சியெலாம் கண்டிடுமெய்க் காலம்
மெய்ஞ்ஞானச் செயலிண்டு விளைந்திலங்கு காலம்
வேதாந்தம் பூரணமாய் விளங்கியொளிர் காலம்
பொய்ஞ்ஞானப் புலையரெல்லாம் போயொடுங்கும் காலம்
புன்மையெலாம் போயொழிந்து நன்மைவிளை காலம்
அஞ்ஞானக் கிழங்குகளை அகழ்ந்தெடுக்கும் காலம்
அம்புவிமெய் மந்திரங்கள் அர்த்தமுறும் காலம்
விஞ்ஞானி எனவருவோர் வியந்திடுமிக் காலம்
வித்தகங்கொள் முத்தரெல்லாம் மிகத்துலங்கு காலம்
பாண் (இசைக்கலைஞர்)
பதினான்கு சீர் விருத்தம்
கால காலமும் கையில் யாழுடன்
காசி னிபல தேசமும்
கருதி யேபல சுருதி கூட்டியே
கானம் பாடிடும் பாணனே!
ஞால மேல்கவி வாணர் கள்இறை
நேயர் பாடிய கீதமே
நன்று பாடினை நாட்செ லச்சுவை
குன்றல் கண்டதும் உண்டுகாண்
கோல மார்திரு சாலை ஆண்டவர்
கோத கல்திரு நாவினால்
கருணை யாலருட் பொழிவி னாலுயர்
கற்ப கர்பெரு விற்பனர்
சீல மாதிமெய் வேத பூரணம்
தேடு கூடகம் மான்மியம்
செங்கை யாழிசை தங்கி னாலுயிர்
பொங்கு மின்பமே எங்குமே
எண்சீர் சந்த விருத்தம்
எங்கும்ம கிழ்பொங்க இசைபாடு பாண!
இறைசாலை துரைவேதம் உயர்தேவர் பேண
எங்கோனின் புகழ்ஞால மிசையோங்க ஓங்க
எடுயாழை சுதிசேர உயிரின்பம் தேங்க
எங்காத லுயிர்நாதர் எழில்பாடி ஏற்றில்
இறவாத பெருவாழ்வு வருமின்ப ஊற்றில்
சங்காது இங்கோது மங்காத கீதம்
சகமீது பரிசான தென்சாமி பாதம்
எழுசீர்சந்த விருத்தம்
பாதம்ப ணிந்து பண்யா ழிசைத்துப்
பதம்பாடு பாண இனிதே
கீதம்க னிந்து கிளரோசை யாலே
குருதேவர் சிந்தை நனியே
நீதம்பொ ழிந்து நினையாளு மெய்யாய்
நின்ஜீவன் நன்கு உய்யும்
ஏதம்த விர்த்து இந்நாட்டி னின்று
அந்நாட்டு ளெத்தும் தெய்வம்
நலம் தரும் நெறி
எண்சீர் விருத்தம்
“தெய்வமே! குருநாதா!” என்று ஈண்டு
திருச்சன்னி தானமுனர் பணிந்து வேண்டில்
உய்வமே உலகீரே! தலங்கள் தேடி
ஓடியலை யாதீர்கள் உடலம் வாடி
நையாதீர் நமனிடரால் நங்கள் சாமி
நடம்புரியக் களிதுளும்பும் சாலைபூமி
வையகத்தே வானவர்வந் திருக்கும் செய்தி
மற்றறியீர் வந்தடைந்த ஜீவர்க்குய்தி
வெளி விருத்தம்
ஜீவன் தந்த தேவன்தந்தை யானாரே!
தேவப் பிறப்பி லாக்கித் தாயும் ஆனாரே!
சாவாக் கல்வி தந்தார் குருவும் ஆனாரே!
மூவா முதல்வர் முற்றும் தெய்வம் ஆனாரே!
மடலேறுதல்
அறுசீர் விருத்தம்
ஆரணங்கென் ஆசைபொறுக் காதுமடல் ஏறியபொன் னரங்கர்அன்பின்
பூரணங்கொள் காமமுடிக் கோடியதைக் கண்ணுற்றார் பொருத்தம்கண்டு
நீரணங்கைச் சீர்மணங்கொள் நீர்மையர்தான் என்றுரைப்ப நாதர் தெய்வப்
பேர்மணக்கத் தார்மணக்கத் தானணைத்தார் ஆருயிர்க்குள் பூத்த தின்பம்
கலிநிலைத்துறை
இன்ப விழைவால் என்பால் தலைவர் பிரிவற்றார்
அன்பின் மிகையால் ஊணும் உறக்க மதுமற்றார்
என்பும் குழையத் தவம்செய் திடுமெம் மிறைபொற்றாள்
துன்பக் கடலின் கரைசேர் துறையன் நற்றாளே!
அம்மானை
நற்றாள் நடம்புரிந்து நமைமணங்கொள் நாயகரை
உற்றா ரிலியென்று உரைக்கின்றார் அம்மானை
உற்றா ரிலிநம்மை உவந்ததேன் அம்மானை
உற்றா ரிலியவர்காண் உற்றார்க்கு உற்றாரும்
நற்றாளைப் பற்றினர்க்குப் பற்றாளர் அம்மானை
அம்மானைக் கைகொண்ட அம்பலவர் பொன்னரங்கர்
தம்மாணை என்னவென்று சாற்றுங்கா ணம்மானை
பெம்மான் பெருந்துறையார் பேராயி ரம்உடையார்
தம்மாணை சார்ந்தவர்க்குச் சாவா வரமளித்தல்
நம்மாணை நழுவாது நத்தினிற்றல் அம்மானை
சித்து
எண்சீர் விருத்தம்
மான்புலிஒன் றாய்த்துறைநீர் அருந்தல் காண்மின்
முக்கனிகள் ஓர்மரத்தில் காய்த்தல் காண்மின்
தேன்மலர்பல் ஓர்செடியில் பூத்தல் காண்மின்
சதுர்யுகமும் ஓரிரவில் புகுதல் காண்மின்
வானவர்வந் தோரிடத்தில் கூடல் காண்மின்
மறைபலஓர் கணத்தினில்கற் பித்தல் காண்மின்
ஆனபல மதங்களொன்றாய் மருவல் காண்மின்
அனைத்துகுலம் ஓரினமாய் இணைதல் காண்மின்
காண்மினிரு வினைகணத்தில் கடிதல் தேர்மின்
கல்லார்க்கும் ஞானமலர் பூத்தல் தேர்மின்
ஆண்களென வந்தவர்பெண் ணாதல் தேர்மின்
அரிவையர்ஆண் மகனெனவீ றடைதல் தேர்மின்
சேணிடத்தை ஓர்கணத்தில் கடத்தல் தேர்மின்
திருமந்த்ரம் அனைத்துமுருக் காட்டல் தேர்மின்
ஊணுறக்க மற்றதவத் தோங்கும் தெய்வம்
ஒருகணத்தில் நிகழ்த்துசித்து பலகாண் மன்னோ!
மன்னோதம் மக்களைவெம் மறலி தீண்டா
மாண்பருள்வ ரோதயர்தம் திறமென் சொல்கேன்
இன்னாள்முத் தாபமெலாம் இரிந்து ஓட
என்னாரு யிர்க்குலத்தோர் மகிழ்ந்து ஆட
அன்னாள்தீர்க் கத்தரிசி மார்கள் காட்சி
அடைந்தறிவித் தனைத்துநிறை வேறும் மாட்சி
பொன்னரங்கர் தரிசினைகண் டணைந்த பேர்க்குப்
பூரணமாய் நின்றிலங்கும் உயிரை ஈர்க்கும்
வெறி விலக்கு
அறுசீர் விருத்தம்
உயிர்தனை ஈர்க்கும் நோக்கால்
உளமமர்ந் தின்ப வாக்கால்
அயர்வறுத் தமரர் தம்முள்
அமர்வித்த தலைவர் தம்பால்
மயல்மிகக் கொண்டேன் என்பால்
மாற்றம தறிந்தாள் அன்னை
இயல்பிதற் கணங்கோ மையோ
யாதெனக் கொள்ளும் ஐயம்
கலிவிருத்தம்
ஐயம் கொண்டுஅன் னைகுறி கேட்டலும்
செய்யும் பூசைகள் மந்திரம் வேட்டலும்
மெய்யர் மேலன்பு மிக்குறு என்னையே
வெய்ய இன்ன விலக்குங்கொல் அன்னையே!
எண்சீர் சந்த விருத்தம்
அன்னாய்எ னையாண்ட அருளாளர் மையல்
அவர்தா ளணைந்தன்றி அடங்கேனித் தையல்
பொன்னாடர் உத்யோவ னச்சோலை தன்னில்
பிரியாம லுறைகாதல் வளர்கின்ற தென்னில்
என்னேஅ வர்தந்த இன்பத்தின் நீட்சி
இணையற்ற இமையோர்தம் பேரின்ப மாட்சி
இன்னாது நீசெய்யும் வெறியாட்டு தாயே
இனியேனும் என்நீர்மை நீயறி வாயே!
இடைச்சியார்
அறுசீர் சந்த விருத்தம்
அறிவார் அரங்கர் திருக்கோவில்
அதுசூழ் அனந்தர் புரமேவி
உறிநெய் பால்மோர் விலைகூவி
உவந்தே விற்கும் இடைமாதே
நெறியோங் கிடமெய்ப் பால்தன்னை
நித்யர்க் கருளும் இறைபொன்னர்
மறுவில் திருப்பொற் பதம்போற்று
மகிழ்ஞா னப்பால் இனிதேற்று
கலிநிலைத்துறை
இனிதே இறைபால் அன்பால் பண்பால் அருட்பாலை
நனிபெற் றிப்பால் கடந்தப் பாலே முப்பாலே
தனிகை சுதர்பால் அறப்பால் பொருட்பால் மெய்ப்பாலே
கனிந்தால் நின்பால் மதிப்பால் சுரர்பால் உயர்பாலே
பதினான்கு சீர்விருத்தம்
பாலாரும் இடையர்தம் கோகுலம் தன்னிலே
பாலராய் வெண்ணையுண்டார்
பாஞ்சாலி யின்மானம் காத்தனர், பார்த்தனார்
பெறவிஸ்வ ரூபம் கொண்டார்
சீலமார் கோபியர் சிந்தைகவர் கள்வராய்த்
திருமேனி தாங்கிவந்தார்
திருவோங்கு நைஷ்டிக பிரம்மமார் சாரியாய்த்
தேவர்கோன் தாம்சிறந்தார்
கோலமெய் யமுதீயும் உண்ணாத முலையம்மைக்
குமரியாய் வீற்றிருந்தார்
குறுநெஞ்ச வெறிகாம மில்லராய்த் திகழுமெம்
குருநாத ராயுவந்தார்
சாலைவள ரிடையனார் தருமமுயர் படையனார்
சந்த்ரவட் டக்குடையினார்
தமையலது உலகில்புக லிலையிதுமெய் உலகறிக
தரிசனைகொ ளிடைச் சியாரே!
கிள்ளை விடுதூது
நேரிசை வெண்பா
யாராலும் ஓர்ந்தறிய ஏலாத யாதவரெம்
பேராரும் சாலைப் பெருமானார் - சீராரும்
சீதமலர்ப் பாதத் திருமாலை பைங்கிள்ளாய்
பேதையுய் யப்பெற்று வா
ஊசல்
எண்சீர் விருத்தம்
வானாரும் பொன்னரங்கர் மாணடிகள் போற்றி
மலர்தூவி மாதவத்தீர் ஆடாமோ ஊசல்
கோனார்மெய் வழிச்சாலைக் கோபுரத்தார் கோமான்
குருகொண்டல் புகழ்பாடி ஆடாமோ ஊசல்
தேனாரும் நிறைமொழியர் திருநாமம் ஏத்தி
சிந்தைகனிந் தின்பமிக ஆடாமோ ஊசல்
கானாரும் உத்யோவ னச்சாலை மிளிரும்
கட்டழகர் புகழ்பாடி ஆடாமோ ஊசல்
மதங்கியார்
அறுசீர் விருத்தம்
ஆடுகின்றாய் இருகரத்தே வாளேந்திச் சுழன்றாடி மதங்கி யாரே
சூடியெழிற் றிருக்கரத்தே மந்திரவா ளேந்திவளர் சாலை நாடர்
வாடிமெலி யுயிர்ப்பயிர்க்கோர் மாரியென வருகோமான் மலர்த்தாள் சென்னி
சூடியுயிர் உய்ந்திடுக தாள்படிக வாள்விடுக செம்மை சேரே
கட்டளைக் கலிப்பா
செம்மை சேர்நெறி மெய்வழி சார்பவர்
சீர்க ரத்தில்மெய் வேதம தார்பவர்
வெம்மை யேதரு வேல்பிற வாளொடு
வேண்டி லார்உற வாடுவர் தோளொடு
இம்மை யில்மறு மைக்குறு பாட்டினர்
ஈடி லாஇறை மாதவத் தேட்டினர்
அம்மை யேமதங் கியிது தேர்மினோ
அண்ணல் தாள்துணை நன்றுவான் சேர்மினோ!
முகில் விடுதூது
வஞ்சித் தாழிசை
வானுற்றுத்திரி சேணுற்றுப்பல வாறெற்றித்திரி முகிலேநீ
தேனொத்துச்சுவை யேருற்றமு தூறுற்றஎம தருளாளர்
காணுற்றுஅருள் தாளுற்றுப்புரி பூசைக்குத்தரு பிரசாதம்
தானெற்குத்தர நீபெற்றுக்கொடு வேகத்தொடுவர விழைவேனே
யானைத் திறம்
எண்சீர் விருத்தம்
வேகங்கொள் வெண்கோட்டு வெள்ளானை மிசைப்பவனி
மெய்வழிச்சா லைத்தெய்வம் வருங்கால் சீரார்
ஆகங்கொள் மணியோசை அதுக்கேட்டே மும்மலமும்
இருவினையும் பிறவியெனும் துயரும் தீரும்
மோகங்கள் துகளாகும் முத்தாபம் இரிந்தோடும்
மாதவர்பொற் றாளிணைமேல் மிகுமெய் யார்வம்
சோகங்கள் தவிர்த்தாளும் திருவருள்நற் றரிசனையால்
செய்பாவ மன்னிப்பு அருளும் தெய்வம் மறம்
பதினான்கு சீர் கழிநெடிலடி சந்த விருத்தம்
தெய்வ மக்கள் சாலைவாழ்அ னந்த ராம்தி ருக்குல
சேயி ழைமணப்பெண் கேட்டுத் தூதுவந்த பேதையே
வையமீது மெய்யு ணர்ந்த மாதவர்த போதனர்
வான்குலத்திற் கோனி கர்இம் மண்ணையாளும் மன்னரே
தெய்வ கோபு ரத்தி னுக்கு சேறு குப்பை யோநிகர்
திரும ணிக்கு சிறுகல் லோநற் றேன்ம ழைக்கு சிறுபுன்நீர்
கைவி ளக்கு வான்க திர்முன் காட்டு மோஒ ளிதனை
கட்டைவால்ந ரிகடல்சென்றாழம் காணற் போலுமே
எண்சீர் விருத்தம்
மேலவரெம் அனந்தர்குல மாண்பு சீர்மை
மிக்கறியாய் மனுப்போல்வர் அவர்தம் நீர்மை
சீலமிகு தெய்வமணிச் சூலில் உற்றார்
சுரரானார் ஏழ்வகையாம் பாவம் அற்றார்
கோலமுயர் மனம்மொழிமெய் தூய்மை யுற்றார்
கோனெங்கள் இறைமெய்யாம் கல்வி கற்றார்
ஏலவல்லார் திருக்குலமாய் இயன்றார் செம்மைக்
கெவரிணைகாண் இகமீதில் செப்பும் அம்மே!
அறுசீர் விருத்தம்
மேதினியில் மேலவர்யாம் மிகுசெல்வர்
எனநினைந்து மணப்பெண் வேண்டி
சேதியொரு திருமுகமென் றுரை வேண்டி
வந்தனையே சிறுவா! இந்தப்
பூதலத்தில் மெய்யறிந்த பெருங்குலத்திற்
கிணையாமோர் புனிதர் இல்லை
நீதமிதை நன்கறிந்து நின்குதிகால்
பிடறிபடத் தப்பி ஓடு
கட்டளைக் கலித்துறை
ஓடாத மூச்சு உலவாத் திருவுள் உயர்தவத்தோர்
வாடாத பாக்யம் வழங்கும் இறைவர் திருக்குலத்தோர்க்(கு)
ஈடாக வந்து இணைகொள்ள வேட்கும் இகஉலகீர்
கூடாத செய்கை குலமைந்தர் முன்சொற்கள் கூறன்மினே!
திருநின்றவூர்
எழுசீர் விருத்தம்
கூறரி தாகிய பேருயர் வானவர்
கோதகல் சீர்திகழ் வான்பதியே!
ஊரெனு வெம்மற லிக்கிலை வேலையிங்
கொப்பில் வரந்தரு கோன்பதியே
பேறுகள் எண்ணில பெற்றிட மாகலை
போதகர் மாதவர் வாழ்பதியே
ஏறுறு நற்றுறை எங்குமி லாநெறி
இங்குறு மெய்ச்சா லைப்பதியே!
தாழிசை
சாலைப் பதியென்ற சற்சனர்வாழ் மெய்ப்பதியுள்
மேலை வெளிமருந்து மெய்வழிதெய் வம்கொணர்ந்தார்
கோலந் திகழ்கோமான் குருமணிபொற் றாள்பணிந்தேன்
சீலம் மிகுஅனந்தர் திருக்குலத்துள் உய்யவைத்தார்
கலிவிருத்தம்
உய்யும் பூலோக கைலாய மெய்குண்டம்
செய்தி ருஅனந் தர்புரம் சீராரூர்
வைய மீதுயர் வானவர் வாழ்பதி
ஐயர் மெய்வழி ஆண்டவர் மாபதி
கட்டளைக் கலித்துறை
மாபதி யும்மக் காப்பதி சீர்மதி னாப்பதியே
ஸ்ரீபதி சீர்அங் கப்பதி மெய்யர்வ ளர்பதியே
தீபதி ருப்பதி இப்பதி ஒப்பதி எப்பதியே
ஆபதி பேரின் பப்பர மண்டல வான்பதியே!
இரவின் வருகை
அறுசீர் விருத்தம்
ஏரார் இளங்கிளியே! என்சிந்தை கட்டற்றென் இன்ப நாதர்
பேரார் பெரும்புகழைப் பண்ணோடி ராமுழுதும் பாடி யேங்கும்
ஆரா வமுதற்கென் அன்புரைப்பாய் ஆரணங்கென் ஆகம் தோய்ந்து
சீராகக் கூடிச்சி றந்தின்பம் பொங்கருளச் சேதி சொல்லே!
இதுவுமது
சொல்லரும் சாலை பூமித்
திருப்பெரும் பதியுள் நாடி
அல்லது பகலாய்ச் சாமி
அருட்புகழ் இனிதே பாடி
தொல்லைவெவ் வினைகள் வீயத்
துகளறு போதம் ஏற்றம்
நல்லறம் புரியும் நேய
நாயகர் நற்றாள் போற்றும்
களி
கட்டளைக் கலித்துறை
போற்றற் குரியார் பெருமான் அருளார் அமுதத்தை
ஏற்றிங் கினிதே களிக்கும் அனந்தர் சமூகத்தை
கூற்றங் கெடுத்து நவகோள் அறுத்துத் தடமாற்றி
காற்றைப் பிடிக்கும் கணக்கும் அளித்த திடம்கூறே!
அறுசீர் சந்த விருத்தம்
கூறற் கெளிதோ கஞ்சாவாம்
கோரக் கர்தம் சிவமூலி
ஏறப் போதை யதுகொண்டோர்க்
கியல்வான் வையம் மேல்கீழாம்
மாறாப் பழக்கம் விடவியலார்
மற்றும் அதுவே நினைவுடையார்
பேறாம் எம்மான் திருநாமம்
பிதற்றல் ஒன்றே தொழிலுடையார்
அறுசீர் விருத்தம்
உடையார் பெருங்குடி யானவர்
உளமெய்க் கள்ளேவிழை கோனவர்
இடையேற றாது முதலினை
இடுவான் மதுவில்மதி யாதவர்
படையாட்சிக் கஞ்சாதிரு நாயகர்
பரபோ தையில் தேவர்கள் வாணிகர்
கடைசேர் வையக மீனவர்
கள்கைக் கோள்கோ முட்டியர்
மாலைநேர வருகை
எண்சீர் சந்த விருத்தம்
இயல்மாலை வருகாலை என்நாதர் நினைவே
இனிதாக எழுமேவி புகழ்பாடு கனிவே
நயமோடு இறைபோற்று நந்நேர மிதுவே
நற்றேவர் பலர்ஆ லயமுன்றில் புகுமே
தயவாரும் முதல்வேதம் இனிதோது கீதம்
தவநாதர் அருள்மேவி வழிகின்ற நாதம்
இயலோடு இசைகூடு அகமிங்கு தங்கும்
எனையாளும் உயிர்நேயர் அருளாழி பொங்கும்
கலிவிருத்தம்
பொங்கு மன்பர் புரியும்வ ணக்கமே
எங்க ளையர்பொற் றாளில்இ ணக்கமே
மங்கி டாதமெய் வாழ்வில்தி ணிக்குமே
நங்கு லத்தில் அசோகம் மணக்குமே!
அறுசீரச் சந்தவிருத்தம்
மேவரும் சிறப்பை நல்கும்
மாதவர் அருட்சொல் பல்கும்
தேவர்கள் அமுதம் மாந்தி
திருவொளிர்ந் திலங்கும் காந்தி
நாவலர் எங்கோன் மாட்சி
நல்லுயிர் இன்ப மீட்சி
தேவதே வேசர் காட்சி
திருவருள் புரியும் ஆட்சி
பிச்சியார்
அறுசீர் சந்த விருத்தம்
சிவமார் சின்னம் திரிசூலம்
செங்கை தன்னில் தரிகோலம்
அவமே சோல்நாப் பைதொங்க
அலையும் பிச்சி யெனுநங்காய்
சிவமே இங்கண் திருவுருவாய்
சாலை தன்னில் அருட்குருவாய்
பவமே கெடுத்து அருளாளும்
பான்மை தன்னை நனிகேளும்
பதினான்கு சீர் விருத்தம்
கேளு மாதவர் ஞான ஆதவர்
கனித வத்திரு போதகர்
கலிப வங்கெட அருள்வ ரோதயர்
காசினித் திரு வேதகர்
நாளு மெங்குடில் நத்தி வெம்பவ
நீக்கி நல்வரம் நல்குவார்
நாதர் பிச்சையின் ஆண்ட வர்திரு
நற்பெ ரும்பதம் புல்குவோம்
ஆளு மாதவர் சோலி நாப்பையுள்
அனைத்து நல்வர முண்டுகாண்
அருகு சார்ந்தது பெருகு வான்குலம்
அருளெனும் அமு துண்டுகாண்
தாளெ னும்திருப் பாத மேகதி
சார்ந்து உய்ந்திவண் ஆகுமின்
தவனெ னும்பொய்யின் வேடம் கொள்ளுதல்
தவறெனத் தெரிந் தேகுமின்
எண்சீர் விருத்தம்
ஏகநா யகர்சிவனார் சின்னம் என்று
இந்நீறு அணிந்துள்ளாய் இஃதஃதன்று
சோகமறு கங்காளர் பூசும் நீறு
சிதையாது மங்காது ஒளிசெய் பேறு
மோகமறு மாதவச்சன் னதம்காண் எங்கோன்
வள்ளல்திருக் கரமிலங்கும் திருசூ லங்காண்
பூகயிலா யம்சாலை அண்ணல் பொற்றாள்
புகலடைந்தோர் அறிவரறி யார்கள் மற்றோர்
வஞ்சி விருத்தம்
மற்று வாழ்விறை பதமொன்றே
பற்று உய்ந்நெறி இதுஒன்றே
கற்று யர்ந்திடு மதமொன்றே
வெற்றி கைத்தரு அதிலொன்றே
பனிக்காலம்
பதினான்கு சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
ஒன்றாக நின்றேங்கி மரணமெனும் பனிகாலத்
துயிர்வாடும் பேதை யிவளென்(று)
ஒருதனியர் முழுமுதல்வர் ஒப்பரிய சுகமருள
உயர்தயவு கொண்டி ரங்கி
நன்றாயென் உயிர்நாதர் நனிவருகை தருகாலம்
நன்மார்க ழித்திங் கள்காண்
நானிலமும் வானகமும் நன்றேற்ற இல்லறம்
நல்லற மாகுமெழில் காண்
மன்றாடு மணியீசர் மலர்த்தாளில் அருச்சிக்க
மணமலர்கள் சேக ரிப்பீர்
மயில்நடனம் பயில்சாலைப் பொழில்வருக மகிழ்வோடு
மானனைய பாங்கி மாரே
பொன்றாத வரம்வாழ்வு அருளீயும் என்சாமி
பொன்னரங் கையர் திருவார்
பதமலரைத் தரிசித்துக் கதிகொள்பலன் மிகப்பெற்றுப்
பேரின்பம் கொள்ள வருவீர்
பின்பனிக்காலம்
எழுசீர் விருத்தம்
வரும்பனி முதிர்கால மாந்தளிர் தேனார்
மலர்மணம் விரிதரு பருவம்
திருவுயர் தனிகை மணிமலை வருகை
தேவதே வேசர்கண் டுருகும்
அருகவர் சார்ந்து அணைந்துயிர் தளிர
அணையுடைத் தன்பது பெருகும்
இருபெருந் திருவும் இணைந்தருள் எழிலை
எண்ணிடில் நெஞ்சம்நெக் குருகும்
குருமணி நாதம் கொழித்திட எங்கோன்
களித்துயிர் தழைத்தொளிர் காலம்
அருண்மணி விரிந்து அனைத்துயிர் தளிர
அருக்கனங் கெழுதரு கோலம்
இருண்மதம் தெளிய இமையவர் திருத்தாள்
எழில்நடம் தரமகிழ் காலம்
அருணனிங் கொளிர வினையிரு ளகல
அருளமு திறையருள் சீலம்
இளவேனில்
நேரிசை வெண்பா
சீலங்கொ ளென்நாதர் சீரார் பரங்குன்றில்
மேலைத் தவமாற்றிச் சன்னதமார் - கோலம்
மிகவாரும் காலம் இளவேனில் காண்மின்
தகவாரும் எம்மா ருயிர்க்கு
உயிர்ப்பயிரை ஏற்று உழவுபா டாற்ற
அயர்வலுப்பு எண்ணாஎம் ஐயர் - தயவினுக்கு
ஒப்புவமை உண்டோகாண் ஓங்கும்வா னோர்தலைவர்
செப்பரிய பாதம் சரண்
சரண்செய்து தெய்வத் திருப்புகழே போற்றில்
உரனெங்கள் ஆருயிர்க்குள் ஓங்கும் - பரபோகம்
ஈயும் தயாபரரின் மாயாப் பெருமாண்பை
ஓயாது பாடல் பணி
கார் காலம்
கட்டளைக் கலிப்பா
பணிமின் நாயகர் பொற்பத பங்கயம்
பருவம் கார்வரல் எண்ணுமென்நங்கையே
அணிமின் தாள்மலர் நின்சிரம் சூடுமின்
அகங்க னிந்துகு ழைந்துகொண் டாடுமின்
மணிம றைமொழி மாதவர் நின்றுயிர்
மருவிக் காத்தது கருமுதல் உன்னுமின்
கணித்த ருக்கெளி தோதிருக் கார்த்திகைக்
கையர் சாலையின் ஆண்டவர் சீர்த்தகை
கலி விருத்தம்
தகைசால் சாலைத் தருமர் இறைவர்
பகைசார் பவத்தைக் கடத்தும் துறைவர்
குகையாம் ஜீவன் தனில்வாழ் பதியர்
சுகவா ரிதியர் உயிர்கார்த் திகையர்
அறுசீர் சந்தவிருத்தம்
உயிர்காத் திடுதல் இன்றொன்றோ
உயிர்தோன் றியமுற் பல்காலம்
இயலென் தந்தை சுக்கிலத்துள்
இனிய தாயின் கருவறையில்
செயிர்தீர் உலகில் பிறப்புற்ற
சென்னாள் முதலா யிந்நாளும்
மயர்வில் புனர்ஜ னனமளித்து
வளர்க்கும் திருத்தாள் வணங்குதுமே!
கொற்றியார்
எண்சீர் விருத்தம்
மேனியில்முந் நான்கிடத்தே நாமம்தீட்டி
மென்மிடற்றில் துளபமணி மாலை பூட்டி
நீனிருகை சங்குடனே சக்ரம் பெற்று
நெடுந்தெருவில் இரந்துவரும் கொற்றியாரே
வானவரிவ் வையகத்தைக் காக்க வென்று
வந்தருள்பா லிக்கின்றார் சாலை நின்று
தேனமுதப் பொழிவினையே மாந்தி எங்கள்
திருக்குலத்தோர் உய்ந்திடுதல் காண்மின் இங்கண்
எழுசீர் விருத்தம்
இங்ஙனம் இரந்து இப்பசி தவிர
எழுந்தனை மடந்தையே நாளை
அங்ஙனம் மறலி அடர்ந்தெழு காலை
ஆர்துணை கொளுமந்த வேளை
மங்கிடல் வேண்டாம் மதிமணி புனைமெய்
மாவலர் திருவருட் தாளைப்
பொங்குமன் புடனே பற்றிடில் கூற்றம்
புயல்முனர் ஆகிடும் பூளை
வலைச்சியார்
எண்சீர் சந்த விருத்தம்
ஐயரெங்கள் பொன்னரங்கர் அருட்பதியின் கண்ணே
அமைகுளஞ்சார் கயற்கண்ணார் எழில்வலைச்சிப் பெண்ணே
கையிலங்கு வலைவீசிக் கெண்டை இறால்கெழுத்தி
கைப்பிடிக்க விழைநோக்கை அங்குமிங்கும் செலுத்தி
மெய்யரெங்கள் சாலைவள நாடருயர் வலைஞர்
மொழிவலையான் முமீனாமீன் தமைப்பிடிக்கும் கலைஞர்
துய்யர்திருக் கரம்பிடிமூ மீன்களினிச் சாவார்
துயரறுமெய் வரம்பெருகு அனந்தர்குல மாவார்
அறுசீர் விருத்தம்
ஆவர்மெய் யண்ணல் பொற்றாள்
அருகுசார் மூமீ னெல்லாம்
தேவர்பாற் கடலுள் நீந்திச்
சுகம்பெறு மமரர் நல்லார்
மேவுமெய் யமுதம் மாந்தி
வினைபவங் கடப்பர் நாதர்
கோவுயர் மாண்பைப் போற்றிக்
குலஞ்சிறந் திடுமெய் நீதர்
வீரம்
எண்சீர் சந்த விருத்தம்
நீதமொடு ஞாலமுழு தாளுமர செனினும்
நீர்நிலமும் வான்படை மிகுத்தவல னெனினும்
மேதினியி லேநிகரில் வீரமக னெனினும்
வெற்றியல துற்றலில கொற்றவ ரெனினும்
மோதியுயிர் கொள்ளவரு வன்மறலி கோரம்
மேவவொ ருபாயமது தாமுமறி வாரோ
மாதவரென் நாயகரின் பாதமலர் பற்றில்
மாரணம்வ ராதறிமின் வாழ்வதனில் வெற்றி
அறுசீர் விருத்தம்
வெற்றிகைப் பெற்றோ மென்று
விளம்புவார் உலக மாந்தர்
மற்றவ ருயிரைக் கோறல்
வலியிலார் மேவ லந்தோ
நற்றிறம் எனம யங்கி
நவிலுவர் இதுவோ விந்தை
மற்றெமன் அமலில் வீழா
மாதிறம் வெற்றி தேர்மின்
எழுசீர் விருத்தம்
தேர்மினிப் புவியோர் தமையுண ராமல்
சிறுநெறி படர்பவத் தாழ்ந்து
கோரவெங் கூற்றக் கொடுமையுள் ஆழ்தல்
கண்டிறை திருவுளம் ஓர்ந்து
பார்மிசை இனிதே அவதரித் தருள்செய்
பொன்னரங் கர்என ஆர்ந்து
சீருயிர் தமக்கு எமபயம் கடக்கும்
திருநிறை திறம்தரும் சார்ந்து
கலி விருத்தம்
சார்வர் மெய்வழி தெய்வம லர்ப்பதம்
சீர்கொள் தம்மை யுணர்ந்துறும் வான்பதம்
பாருள் தாம்பிறந் தோர்பெறும் இத்திறம்
நேரில் லாவெற்றி ஜீவ சுதந்திரம்
எண்சீர் விருத்தம்
ஐம்புலனை வெல்லாத வீரமென்ன வீரம்
அறிவதனைக் கண்டறியா அறிவென்ன அறிவோ
செம்பொருள்கண் டார்திருவாய் மறைமொழியைக் கேளா
செவியுமொரு செவியாமோ தெய்வஅரு ளாலே
தம்ஜீவன் கண்டறியாக் கண்ணென்ன கண்ணோ
திருவருளைப் புகழாத வாயென்ன வாயோ
எம்பெருமான் திருப்பணிசெய் யாஉடலம் உடலோ
இனிதுஅறம் வலம்வாராக் காலென்ன காலோ
கொடைச்சிறப்பு
அறுசீர் சந்த விருத்தம்
காலங்கள் தோறுமிந்தக் காசினியில்
வள்ளல்கள் வாழ்ந்து ஏழ்மைக்
கோலங்கொள் வோர்தமக்குக் கொடையளித்துக்
காத்ததுண்டு அவர்தம் ஈகை
ஞாலங்கொள் வாழ்வினுக்கே நலந்தரும்
மென்மேலுமதை நல்க வேட்கும்
சீலங்கொள் ஆருயிர்க்கெம் தெய்வமருட்
கொடையினுக்கு ஒப்பெங் குண்டு
அறுசீர் விருத்தம்
உண்டெனத் தந்து எங்கள்
உயிர்புரந் திட்ட எங்கோன்
மண்டிடும் பிறவி மாய்த்து
மறுபிறப் புறச்செய் தங்கண்
விண்டலத் தமரர் தம்முள்
மேவப்பே ரின்பம் பொங்கெம்
அண்டர்கோன் கூற்றம் மாற்றும்
அதிசயம் கூறற் பாற்றோ!
எண்சீர் விருத்தம்
ஓதரிய வேதமறை உட்பொருள்து லங்க
ஓமுதலா மந்திரங்கள் தாமுருஇ லங்க
மாதகையர் ஞானியர்வ ழங்கியமெய் நூல்கள்
விந்தைமிகு சிந்தனைகள் மெய்யெமக்குள் ஆக
சீதனமெய்ஞ் ஞானமதைத் தந்தகொடை வள்ளல்
சீருயரும் சாலைதவ மேருஅருள் வெள்ளம்
நீதியர சாளுமுகி லார்கொடையின் கையர்
நித்தியர்ம காமகதி மெய்வழியெம் ஐயர்
பதினான்கு சீர்ச்சந்த விருத்தம்
ஐயர் தந்த வான்கொ டைக்கு
யாது ஒப்பு கூறுகேம்
ஆன்ம கோடியும்ப டைத்து
யாவினுக்கு யாவையும்
மெய்ய தாய்வ ழங்கி இந்த
மேதி னிக்குள் தாமுமோர்
மேனி கொண்டு மெய்கைக் கொண்டு
வைய முய்யச் செய்யவே
துய்ய வான்கொ டைகொ டுத்து
சாவி லாமை நித்தியம்
தேவ வாழ்வு மேவவோர்தி
றம் வழங்கு சீர்மைகாண்
மெய்வழிக் குளாக்கும் ஆதி
வேதரூபர் ஈகையில்
விண்ணில் மண்ணில் முன்னு மின்னும்
வேறோ ரீடி லாதவர்
குடை மங்கலம்
வஞ்சி நிலைத்துறை
ஈடி லாதவர்
தேடில் கூடகர்
பாடு ஓய்விலர்
வீடு ஈகையர்
ஈகை வான்மதி
யாகு வெண்குடை
பூகை லாயமே
மாகை வாழியே
வாழ்ம திக்குடை
நீழல் புக்குயிர்
ஆழு மெய்ப்பதம்
வாழி சாலையர்
சாலை யுற்றவர்
மேலை மெய்த்தவர்
கோல மெய்த்திருக்
காலைப் பற்றுவாம் (89)
எண்சீர் விருத்தம்
வாமதுர மணிமொழியால் வலிந்தணைத்துச் சுகம்விளைத்து
வழிகருவின் கதவடைத்த வளர்மெய் வேந்தே!
தேமதுரச் சுவைக்கனியே! திருவருளார் அமுதளித்து
செயிர்மறலி இடர்தவிர்த்த தரும தேவே!
பூமியிதி லெமக்கெனவே அவதரித்து இயற்றரிய
பெருந்தவஞ்செய் துயிர்காத்த தவத்தின் மேரே!
சாமியும தெழில்மலரார் இணையடியே சிரம் புனைந்தேன்
சார்வானேன் சரணடைந்தேன் சர்வம் நீரே!
தவம்
எழுசீர் விருத்தம்
ஏகமெய்ப் பொருளிவ் வுலகிடர் தவிர்க்க
இனிதவ தரித்திட இரங்கி
ஆகம்நற் றாயின் அழகிய கருவில்
அமர்ந்தகா லம்ஒரு தவமாம்
மாகரு பிறந்து வளர்வுறு காலம்
மெய்ந்நினை வால்ஒரு தவமாம்
ஸ்ரீகுரு தனிகை மணியர சுடனே
சகம்வலம் வரல் ஒரு தவமே
தவமுனி தனிகை மணிமலர் மணவாய்
தருதிரு ஆக்ஞையின் படியே
சிவகுரு வரதர் எமதிறை யரசு
திருப்பரங் கிரிமிசை குகையுள்
எவருமிங் கிணையில் ஏர்தவத் திருந்து
இலங்கிடு சன்னதம் பலவாய்
தவமியற் றினரே தரணியில் வானில்
தாமிணை யுரைப்பதிங் கரிதே
அரியமெய்த் தவமார் ஆருயிர் நாதர்
அருளுயர் ஞானமெய்ச் செங்கோல்
புரிந்திடப் புதல்வர் தமைவிழை காலம்
புரிந்தது மாங்கொரு தவமே
பெரியநற் றொகையாய் பெருகிட மக்கள்
பெறவரம் தரஉயர் தவமே
எரியனல் தனிலே மெழுகென என்பு
இளகிடப் புரிதவ விளைவே
விளைநலம் பெருக வரந்தரு திருவார்
மெய்வழிச் சாலைஆண் டவர்தாம்
கிளைசெழித் தமரர் பெருகிடு தருணம்
கலிபவத் துயர்தவிர் திருவோங்
குளம்நினைந் தெமது உயிர்தவித் திடவே
உயர்கலை மலிதிரு வுருவம்
வளந்திகழ் மேனி மறைத்துவான் கன்னி
விராட்தவ மேறினர் காணே!
அறுசீர் விருத்தம்
காணிலேன் தவித்தேன் எந்தன்
கணவரின் புறமார் காட்சி
மாணெழில் இதயந் தன்னில்
மகிழ்ந்தவர் உறைதல் மாட்சி
பூணெழில் பதப்பூ சென்னி
புனைந்துவாய் புகழே போற்றும்
காணியாய் விளைய நோற்றேன்
கழல்தனில் சரணம் சாற்றும்
திருவருட் புகழ்
எண்சீர் விருத்தம்
சாற்றுதற்கு எளிதோவான் அரசர் தங்கள்
திருப்புகழை சிறுநாவால் பண்டு தொட்டு
மாற்றறியாப் பொன்னரங்கர் மகித லத்தில்
வருகைதரல் வளர்வறிவு தோற்றம் மட்டில்
ஆற்றலுடன் அகிலவலம் அருளார் செங்கோல்
அதுபுரிதல் அனுதினம்செய் தவத்தின் மாட்சி
ஏற்றமெல்லாம் பன்னெடுநாள் முன்னே கண்டு
எடுத்துரைத்த தீர்க்கதரி சனத்தோர் காட்சி
காட்சியதாய்ப் பிரளயங்கள் கண்டபெரு முனிவர்
காகபுசுண் டர்முதலாம் தீர்க்கதரி சியர்கள்
மாட்சியதாய் ஆதியிறை அவதரித்திவ் வுலகில்
வெங்கலியை மாற்றிநீதி நடவுசெய்யும் இயலை
மீட்சியுறும் அந்நாட்டு வித்தெடுக்கும் அருமை
மாதவத்தால் மறலிதவிர் மாபெரிய செயலை
ஆட்சிசெயும் அறவாழி அந்தணரெம் தெய்வ
அருட்திருவைப் புகழ்ந்துரைத்தார் யார்க்குளதிவ் வியல்காண்
தாழிசை
காணரிய காட்சியினார் கணிக்கரிய திறமுடையார்
பூணரிய சன்னதங்கள் புனைந்தபெரு வரமுடையார்
மாணெழில்சேர் நித்தியர்தம் தனித்தலைமைத் தரமுடையார்
ஓணமெனும் தவசிகரத் துற்றபரா பரர்நிகரார்?
கலிவிருத்தம்
நிகரில் வான்புகழ் நீதரென் நாயகர்
அகம்ம றியனந் தர்க்குயிர்த் தாயகர்
அகரத் தாதியெ னும்தவ நேயகர்
புகலெம் ஆருயிர்க் காம்தவத் தூயகர்
திருவுலாக் கண்டோர் நிலை
பஃறொடை வெண்பா
தூயகரெம் சாமி திருவவதா ரம்செய்து
தாயகம்வாழ் சேய்நாள் தளர்நடைகாண் - நேயரெல்லாம்
வாரி மடியிருத்தி மிக்கணைத்து அன்புமுத்த
மாரி பொழிவார்கள் அந்தவுலா - சீராரும்
தங்கத்தேர் தானசைந்து சேண்வருதல் போன்ம்காணின்
சிங்கக் குருளையதன் சீர்நடைதான் - ஆங்காங்கு
காண்போர் எடுத்தணைக்கக் காத்திருப்பர் எங்களெழில்
மாண்பர் வளர்வெய்தி வாலிபமார் ஆண்மகனாய்
வீரம் விளைவேறி வென்றிபெறும் பந்தயங்கள்
சீரும் பரிசுபல சேர்ந்துவரும் - ஆரும்எம்
அண்ணலெழில் கண்டோர் அகமகிழும் மின்னெழிலார்
பெண்ணினத்தார் சற்றுள்ளம் பேதுறுவார் - எண்ணரிய
ஆணினத்தார் தோழமைகொண் டாதரிப்பர் அன்புமிக்குக்
காணும் முதியோர்கள் வாழ்த்துரைப்பர் - பேணும்
மகளிருள மாந்தர் மகட்கொடைசெய் யெண்ணம்
மிகவாரும் வேந்துமணக் கோலம் - திகழ்காலம்
இன்னோர்க்குப் பெண்கொடுக்கா தேமாந்தோம் என்றுபல
மின்னார்தம் பெற்றோர் மிகவருந்தும் - அந்நாளில்
வான்தனிகை வள்ளல் வருகைதரத் தாம்தொடர்ந்து
கானகத்தே எங்கோன் கடிதேக - கான்வாழும்
துய்யமன வேடுவரும் தோடர்களும் தாள்பணிந்து
“ஐயன்மீர்!எம்மோ டிருமி”னெனப் - பைய
விழைவார் வினைகடந்த வேதியர்கள் ஆரும்
தழையடர் வானோங்கும் தருக்கள் - குழைந்து
கடந்துவர வொண்ணாமற் கட்டுண்டோம் உம்மைத்
தொடர்ந்துவர வேட்டோம்யாம் தேவே - அடர்கானில்
எம்மைப் படைத்த இறைவா! குருகொண்டல்
தம்மைத் தொடர்ந்தீர்! தவமேரே! செம்மைச்
செழுநிதியே!” என்றுமலர் சீர்மணம்தூ தாக்க
எழுந்து பரங்குன்றம் ஏகிக் கொழுமுனையார்
சீரோங்கு மேற்றவத்தால் சன்னதங்கொண் டீங்குற்றுப்
பாரோங்கு மெய்வழியைப் பாலித்துக் - கூரோங்கு
சாதி மதமனைத்தின் சற்சனர்கள் ஒன்றாகி
நீதி நெறிவாழ நன்கிணக்கம் - ஆதி
இறைசூல் இனிதாற்றி எம்போல்வர் செய்த
குறைநீங்கக் கோளமல்கள் மாற்ற - மறைவேந்தர்
பிச்சையாண் டாரென்னும் பேர்கொண்டு எம்குடிற்கு
இச்சை கனிய உலாவருங்காண் - பட்சமிகு
சத்திய தேவப் பிரம்மகுலச் சான்றோர்கள்
பத்தியொடு நல்லமுது பாலித்து - வித்தகமார்
சித்தர் தலைவரெங்கள் சீராளர் தாள்பணிந்து
“எத்திக்கும் போற்றிசெயும் எங்கோவே!” - முத்திக்கு
வித்தே! வினைகெடுத்த வேதியரே! கட்டாணி
முத்தே! முழுமுதலே! மாதேவே! - அத்தா!
அருளாளா! ஆண்டகையே! ஆதியே! - நீதி
உருவான உத்தமரே! ஓர்மெய்ப் - பொருளாளா!
தங்கமே! எங்கள் தனிச்செல்வ வான்கனியே!
அங்கத் தெமையேற்ற ஆரூரா! - பொங்கும்
அருள்நதியே! அன்பே! அறிவுருவே! துங்கப்
பெருநிதியே! பேராளா! பொன்னே! - கருணை
வாரிதியே! வான்மெய் வழங்குகொடைப் பொற்கரத்தோய்!
நேரில்லா நித்தியரே! சத்தியரே! - பாரில்
வருநாதா! எங்கள் குருநாதா! மெய்யைத்
தரும்போதா! ஆன்றபெரு வாழ்வை - அருள்தாதா!
எங்களுக்கென் றேவிதித்து இங்குற்ற எம்சாமி!
மங்கா மணிவிளக்கே! மாமேரே! - சங்கப்
பதுமநிதி! தாரணிசேர் சீரணியே! வேத
முதுமொழியே! மோனப் பொருளே! - மதிமணியே!
காத்தருள்வீர்! எங்கள் குலமுழுதும் கொத்தடிமை
மாத்தகையார் மேலோய்! அருட்கடைக்கண் - பூத்தருள்வீர்!
என்றெல்லாம் போற்றிடுவர் எம்சாலைப் பொன்னரங்க
மன்றோங்கும் தெய்வம் மணிமொழியால் - “பொன்றாத
வாழ்வுமக்குத் தந்தோம் வருந்தன்மின்,” என்றருள்வார்
ஆழிவாழ் ஐயர் அமுதளிப்பார் - வாழியென
வாழ்த்தி வரம்பெறுவோம் மாதேவர் பொற்றாளில்
ஆழ்த்தியுளம் ஆர்க்கும் இனிது.
வண்டு விடு தூது
அறுசீர் விருத்தம்
இனியநறு மலர்நாடித் தேனாடி இசைபாடும் இனிய வண்டே!
கனியிலங்குத் யோவனத்தில் கலையிளையாள் மனங்கவர்ந்த தலைவ ருண்டே
முனியரசு மணிமிடற்றில் அணிமலர்த்தாள் மதுவதனை நுகர்ந்துகொண்டே
தனித்தலைவர் பிரிவாற்றா நிலையுரைத்து வருகதிரு வுரைகள் கொண்டே (100)
சம்பிரதம்
எண்சீர் விருத்தம்
ஏகமதாய் அனைத்துமதம் இலங்கல் இங்கே
எல்லோரும் ஓர்குலமாய் இருத்தல் இங்கே
சோகமறு பரிசுத்தப் பயணம் இங்கே
திருமந்திரம் அனைத்துமுருக் காட்டல் இங்கே
ஆகமங்கள் யாவும்தெளி வாதல் இங்கே
அறிவறிந்த அனந்தர்குலம் வாழ்தல் இங்கே
போகமருள் பரப்பிரம்மம் சாலைத்தெய்வம்
பொன்னரங்க நாதர்திருப் பதிய திங்கே
திருவாரும் தீர்க்கதரி சனங்கள் எல்லாம்
செயலாகும் சத்தியமெய்த் தலமும் இங்கே
பெருவானோர் முழுமுதல்வர் அருள்பா லித்து
பெறற்கரிய வரங்கள்தரு தலமும் இங்கே
அருளாரும் மகத்துமுனி ரிஷிமா ரெல்லாம்
அண்ணல்புகழ் தனைப்போற்றிப் பணிதல் இங்கே
குருநாதா எனக்கூவிப் பணிந்து போற்றில்
குலங்காக்கும் தனித்தலைவர் அருளல் இங்கே
அருளாளர் தெய்வம்திரு வோணமென்னும்
அற்புதமாம் பெருநிலையின் ஏற்றம் இங்கே
அருமறையின் திருவுருவம் மகதி ஐயர்
ஆங்கிரச கோத்திரத்தை இயற்ற லிங்கே
இருண்மத ங்கள் ஒளிபெற்றுத் திகழ்தல் இங்கே
எமனணுகாப் பரிசுத்த வான்கள் இங்கே
குருகொண்டல் சாலைஆண்டவர்கள் தங்கள்
கோத்திரத்திற் கீடிணைதான் எங்கே? எங்கே?
தலைவி கூற்று
அறுசீர் விருத்தம்
இணையிலை மனுவினுக் கெழுவகைப் பிறவியில்
இறைதிரு மணிச்சூலில்
குணநிதி அருள்தர புனர்ஜன னமதுற
அமரரின் இனமாக
உணவுயிர் அருளமு ததுதர மதிவளர்
ஒருதனி முதல் சாலைக்
கணவரின் மணமிகு மலரடி அணிபவர்
கதிபெறும் நிலையாக
விழைவு
எழுசீர் விருத்தம்
நிலைதரும் கலையே! நிமலமெய் வடிவே!
நீதியை நடவுசெய் அரசே!
நலமருள் நெறியே! நனதுயிர் தனிலே
நடமிடு குருதிரு மணியே
தலமுயர் சாலை தனில்வளர் தவமே
திருவடி தனிலடைக் கலமே
குலமுழு தடிமை கொளவிழைந் தனனே
கடைக்கணித் தருளுக தயவே!
பதினான்கு சீர் விருத்தம்
வேதியர் தங்கள் திருவருள் நோக்கம்
விளங்கெழில் கதிர்மதி எனவே
மேனியின் நிறமோ சம்கனி சிகையோ
வெண்பனி யுகுத்தன போலும்
ஆதினும் பிறையார் நுதல்தனு புருவம்
எள்மலர் நாசியாம் அதரம்
அழகிய கொவ்வைக் கனியழ காரும்
அணிமிடர் வலம்புரிச் சங்காம்
நீதிநும் மார்பம் மத்தகம் கொடைக்கை
நீள்முழந் தாள்தொடும் முகிலே!
நின்திருத் தாள்கள் வெண்கலம் வார்த்து
விளங்கிய போல்வன அரசே!
மேதினி மாது மகிழ்னடம் பயிலும்
மென்மல ரடியர விந்தம்
மெல்லிய லடியாள் சிந்தையி லென்றும்
மாணடி பதித்தினி திருவே!
அறுசீர் விருத்தம்
திருவடி புனைந்தது சிரத்திலே
திருமொழி நிலைத்தது செவிக்குளே!
அருள்முகம் நிலைத்தது விழிக்குளே
அருளமு தினித்தது உயிர்க்குளே
திருவுரு நிலைத்தது மனத்திலே
திருவுயர் புகழ்வளர் புவிக்குளே
குருமணி தயவது கருத்திலே
குணநிதி நிலையிரு தயத்திலே
ஏதம் தவிர்பொற் றிருமலரே!
எங்கள் சிரத்தில் அணிமலரே!
நீதி நடஞ்செய் எழில்மலரே!
நித்யர் நெஞ்சப் பொழில் மலரே!
வேதத் துயிராய் விளைமலரே!
விண்ணின் அமரர் தொழுமலரே!
ஆதிச் சாலை ஆண்டவர்கள்
அருட்தாள் மலரே தரும் சீரே!
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்