திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/040.அருட் கைக்கிளை
ஆதியே துணை
108 வகை சிற்றிலக்கியங்கள்
- 001.திரு அங்கமாலை
- 002.திரு அட்டகம்
- 003.திரு அட்ட மங்கலம்
- ✸004.ஆன்மராக மாலை
- 005.திரு அம்மானை
- ✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
- 007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
- 008.திருவருட்சாலை ஆற்றுப்படை
- 009.திருஇணைமணிமாலை
- 010.அருள் இயன்மொழி வாழ்த்து
- 011.திரு இரட்டைமணி மாலை
- 012.அருள் இருபா இருபஃது
- 013.திரு உந்தியார்
- 014.திரு உலா
- 015.திரு உலா மடல்
- ✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
- ✸017.கலியை வெல் உழிஞை மாலை
- ✸018.அருள் உற்பவ மாலை
- 019.திருப்பொன்னூஞ்சல்
- 020.திருவூர் இன்னிசை வெண்பா
- 021.திருவூர் நேரிசை வெண்பா
- 022.திருவூர் வெண்பா
- 023.அருள் எண் செய்யுள்
- 024.திருஎழுகூற்றிருக்கை
- 025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
- 026.திரு ஒருபா ஒருபஃது
- 027.திரு ஒலியந்தாதி
- ✸028.நற்கடிகை வெண்பா
- ✸029.வான் கடைநிலை
- ✸030.திருக்கண்படை நிலை
- 031.சாலைக் கலம்பகம்
- ✸032.நன்காஞ்சி மாலை
- 033.தெய்வ காப்பியம்
- 034.திருக் காப்பு மாலை
- 035.பூவடிப் போற்றிகள்
- 036.விண்பாங்கரசர் தென்பாங்கு
- 037.ஞானக் குழமகன்
- 038.ஊறல்மலைக் குறமங்கை
- 039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
- ✸040.அருட் கைக்கிளை
- 041.மெய் பெறு நிலை
- 042.திருவருட்கோவை
- 043.திருச்சதகம்
- 044.அருட் சாதகம்
- 045.வண்ணப்பூ
- ✸046.அறக்களவஞ்சி
- 047.செய்ந்நன்றி சாற்று
- 048.திருச் செவியறிவுறூஉ
- 049.திருத்தசாங்கம்
- ✸050.திருத்தசாங்கத்தயல்
- 051.அருள் தண்டக மாலை
- 052.அறம் வேண்டகம்
- ✸053.ஒளிர் தாரகை மாலை
- ✸054.அருட்சேனை மாலை
- 055.திருக்கண்ணெழில்
- 056.தெய்வத் திருவருளெம்பாவை
- ✸057.அறப்போர் மாலை
- 058.அறிதுயிலெடை நிலை
- 059.அன்பு விடு தூது
- 060.நற்றொகைச் செய்யுள்
- ✸061.அருள் நயனப் பத்து
- 062.எழில் நவமணிமாலை
- 063.சிவரத்தின மாலை
- 064.திரு நாம மாலை
- 065.அறம் நாற்பது
- 066.வான்மதியரசர் நான்மணி மாலை
- 067.அருள் நூற்றந்தாதி
- ✸068.நறு நொச்சி மாலை
- 069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
- 070.தெய்வமணிப் பதிகம்
- 071.அருட் பதிற்றந்தாதி
- ✸072.அமுத பயோதரப் பத்து
- 073.யுக உதயப் பரணி
- 074.நல் சந்த மாலை
- ✸075.திரு பவனிக் காதல்
- 076.சாலையூர்ப் பள்ளு
- 077.நன்மதியரசர் பன்மணிமாலை
- 078.குரு திருவடி எழில் மணிமுடி
- 079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
- 080.மெய்ப்புகழ்ச்சி மாலை
- ✸081.திருப் புறநிலை
- ✸082.அருள் புறநிலை வாழ்த்து
- 083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
- 084.திருப்பெயர் நேரிசை வெண்பா
- 085.தவத்ததிகாரம்
- ✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
- ✸087.திருப்பெருமங்கலம்
- ✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
- 089.நித்திய மங்கல வள்ளை
- 090.திருமடல்
- 091.மெய்ப்பொருள் மணிமாலை
- 092.மெய் முதுகாஞ்சி
- 093.இறைதிரு மும்மணிக் கோவை
- 094.அருள் மும்மணி மாலை
- 095.தவ மெய்க் கீர்த்தி
- ✸096.நல் வசந்த மாலை
- ✸097.திருவரலாற்று வஞ்சி
- 098.மறலியை வெல் வருக்கக் கோவை
- 099.உயர் வருக்க மாலை
- ✸100.கலியை வெல் வாகை மாலை
- ✸101.அருள் வாதோரண மஞ்சரி
- 102.திருவாயுறை வாழ்த்து
- 103.திரு விருத்தம்
- ✸104.ஞான விளக்கு நிலை
- ✸105.வீர வெட்சி மாலை
- ✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
- 107.வெற்றி மணி மாலை
- ✸108.இதயம் நெகிழ் மாலை
✸ தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.
✫40. கைக்கிளை
[தொகு]இலக்கணம்:-
ஒருதலைக் காதலைப் பாடும் பொருண்மையாக் கொண்டு படைக்கப்பெறும் இலக்கியம் 'கைக்கிளை' எனப்படும். தலைவியோ அல்லது தலைவனோ ஒருவர் மட்டும் காதல் வயப்பட்டு காமத்தீ ஊனொடு உயிரையும் கவ்வித் துன்புறுத்த அத்துன்பத்தான் வாட்டமுற்ற தலைமக்களின் இரங்கத்தக்க தன்மையைப் பாடற் பொருண்மையாக் கொண்டு படைக்கப் பெறுவது கைக்கிளை என்னும் பனுவல்.
இயங்க வருவது மயங்கிய ஒருதலை இயைந்த நெறியது கைக்கிளை மாலை - பன்னிருபாட்டியல் 184
தாயர், சேரியர், ஆயர் தீங்குழல், தென்றல், சேமணி, அன்றில், திங்கள் வேலை, வீணை, மாலை, கங்குல் காமன் ஐங்கணை கண்வளர் கனவென எஞ்சிய நன்னிற வேனில் குயிலே கொஞ்சிய கிள்ளை கொய்தளிர்ச் சேர்க்கை பயில்தரு நன்னவம் பாங்கர் இயன்ற பருவரல் என்மனார் புலவர் - பன்னிருபாட்டியல் 185 ............................................................................................ நண்பா லொருதலை காம நவின்ற விருத்தம் வந்தாற் பெண்பால் வரினவை கைக்கிளை யாமென்று - நவநீதப் பாட்டியல் 42
கைக்கிளை என்பது ஒருதலைக்காமத்தை நாலெட்டு செய்யுளில் நவிலுவர் புலவர் - பிரபந்த தீபம் - 74
ஒருதலைக் காமத்தினை ஐந்து விருத்தத்தால் கூறுவது அன்றி வெண்பா முப்பத்திரண்டு செய்யுளாற் கூறவதுமாம் - தொன்னூல் விளக்கவுரை .ப 205
அணிக்கழகு செய்யும் அறமிளிர் தேம்பொழில் அரசர் நாயகம், பொன்னரங்க நாயகர்பால் ஆராக் காதல் கொண்டேன். அவர்களை நினைத்தாலே நெஞ்சினிக்கும். பார்த்தால் பரவசம் பொங்கும். அவர்களின் செம்பவளத் திருமலர்வாய்ச் சொல்லமுதம் கேட்கும் செவி, தித்தித்து உயிர் பூரிக்கும். அவர்களின் அற்புதத் திருமேனியின் ஆரெழிலைக் காணாத கண்ணென்ன கண்ணோ? அவர்களைத் தரிசித்து எளியாள் அடைந்த இன்பம் வருணிக்கச் சொல்லில்லை. ஆணழகரை, அறிவு சொரூபரை, மதிமாமணியை, வண்ண வடிவெழில் இலங்கும் வானவர்கோனைக் கண்ட எந்தப் பெண்தான் காதல் கொள்ளாள்? அன்பு வயப்படாள்? எங்கு நோக்கினும் அவர்களின் எழில்திருப் பொன்மேனிக் காட்சி இவ்வெளியாள் இதயத்தில் பிரம்மப்பிரகாசமாக இலங்குகின்றது. அவர்களை அணுக்கணமும் பிரியாது உடனுறைந்து இன்புற்றிருக்கப் பெருங்காதல் வயப்பட்ட காரிகையாகிய இளங்கலைமாது எனும் நான்அவர்களை எண்ணி எண்ணி ஏங்கி மயங்குகின்றேன்.
அருட் கைக்கிளை
காப்பு
நேரிசை வெண்பா
மெய்க்கலைகொண் டீங்குற்ற மன்னவர்பாற் காதலுற்றேன்
கைக்கிளையாய்ப் பாடக் கனிந்தேனால் - ஐக்யம்
ஆகத் துடிக்கும் அணைக்க உளம்விழையும்
போகத்தார் பொற்றாளே காப்பு
நூல்
நேரிசை வெண்பா
பொன்னரங்க நாயகர்தாம் பூதலத்தே போந்துற்று
என்னகத் தேறி இனிதமர்ந்த - மன்னவர்காண்
ஆயிரமாம் நாமம் அதற்குரியர் ஆணழகர்
தாயின் கருணைமிக்கார் காண் (1)
கலைக்கதிபர் எங்கோமான் கர்த்தாதி கர்த்தர்
நிலைக்கதிதந் திந்த நிலத்தே - அலைவறுத்து
சாயுச்யம் தந்தருளும் சாலைஉத் யோவனத்தில்
ஓயாத் தவமியற்று வார் (2)
கண்ணாளர் தம்மீது காதலுற்றேன் இச்சிறிய
பெண்ணாள் இளங்கலையாள் பித்தானேன் - எண்ணத்தில்
நின்று நிலைத்துவிட்டார் நேரியர்காண் ஆடகப்பொன்
குன்றனையார் என்காதல் கோன் (3)
மறவா நிலையுற்றேன் மாதவரைக் கூடப்
பறவாப் பறக்கிறதே நெஞ்சும் - இறவாத
இன்பக் களிதுளும்ப ஏங்குகின்றேன் ஏந்திழையாள்
அன்புப் பெருக்கெடுக்கும் உள். (4)
என்பும் உருகுதம்மா என்னை அருகழைத்து
அன்பால் அணையாரோ ஆணழகர் - இன்பம்
பொங்கிப் பெருக்கெடுக்கப் பேதையுள் பூரிக்க
எங்கோன் அருள்வதென்று சொல். (5)
தாய்
சிவகாமி என்னாகம் சேர்காதல் மன்னர்
பவப்பிறப்பில் ஈன்றெடுத்த அன்னாய்! - தவத்தவர்காண்
என்னாசை மிக்கோங்க ஏக்கமுற்றேன் சேரவழி
சொன்னால் உயிர்தரிப்பேன் சொல் (6)
செவிலி
நற்செவிலி யாயிருந்து நன்கு வளர்த்தெடுத்து
பொற்சிலையாய் போற்றியநற் பொன்னாச்சி - இற்செறித்து
காத்திருந்தாய் ஆனாலும் கன்னியென்னுட் காதலது
பூத்ததம்மா பொன்னரங்கர் பால் (7)
சேரியினர் அலர் தூற்றல்
பூரணர்பால் பேதைகொள் காதலினைப் பேரன்பைச்
சேரியினீர் எங்ஙன் தெரிந்தீர்கள் - ஊரலரால்
பேர்கெட்டுப் போச்சென்று அன்னை புலம்புகிறாள்
ஆர்தூற்றி னும்அஞ்சேன் நான் (8)
ஆயர்தம் தீங்குழல்
ஆயர்தம் தீங்குழல்காள்! ஆகும் இசைகேட்டு
நேயம் பெருகுதென்றன் நேசர்பால் - தூய்மதியர்
சன்னிதியில் சின்னவளென் விண்ணப்பம் சாற்றிடுவீர்!
என்னிதியம் எல்லாம் அவர். (9)
பாங்கி
தூங்காத ஆண்மைத் துலங்குதவத் தாரையெண்ணி
ஏங்கும் இளங்கலையை எண்ணிலையோ - பாங்கி
சிவகாமி என்நிலையைச் செப்பிடுவாய் சீராய்த்
தவமேரு சன்னிதிக்குச் சென்று. (10)
தென்றல்
வீசாதே தென்றலே வெம்மை தகிக்கிறது
ஈசர்பால் காமம் எழுந்ததனால் - நேசமிக
என்காதல் மன்னவர்க்கு என்னிலையை நன்னயமாய்ச்
சொன்மலரால் அர்ச்சித்துச் சொல் (11)
மணியோசை
ஓங்கார நாதம் ஒலிக்கும்கண் டாமணியே
தேங்கமழ் தாரோர்க்குச் செப்பிடுவாய் - பாங்காய்
வணக்கமணி யோசை வாவென் றழைக்கிறது
இணக்கமெனக் காக்கிடுவாய் இன்னே! (12)
ஆநிரை மணி
ஆநிரைதம் கண்டத் திசைக்கும் மணியொலிகேட்
டேனெளியாள் கோகுலரை எண்ணும் - தேனமர்தார்
பூண்டார் பதத்தில் பொருந்திக் கிடக்கவே
வேண்டி விழையும்என் னுள். (13)
அன்றில் பறவை
அன்றில் கலந்தினிது ஆனந்தம் கொள்ளல்கண்
டென்றென்னை இங்ஙன் அவர்மருவும் - என்றெளிய
மாது இளங்கலையாள் மிக்கேங்கும் மெய்யர்பால்
காதல் கனிந்தோங்க லால். (14)
நிலவு
நிலவே!நின் தண்ணொளிஏன் சுட்டதெனை நீதம்
அலவேஎன் அன்பருடன் சேர்ந்து - குலவி
மகிழும்நாள் எந்நாளோ மாமணியர் வானோர்
புகழும் கயிலைகுலக் கோன். (15)
அலைஓசை
என்நெஞ்சே போலும் அலையும் கடலலையே!
நின்னெஞ்சு ஓவா தலைவதுஏன்? - பொன்னரங்கர்
பாற்காதல் கொண்டேன் பரவையே நீதான்யார்
மேற்காதல் கொண்டாய் உரை? (16)
மாலைப்பொழுது
பொன்மாலை நற்பொழுதே! நின்வரவால் என்நெஞ்சு
என்காதல் மன்னவரை எண்ணியெண்ணி - தென்னவரை
என்றும் பிரியா துடனிருக்கப் பேராசை
என்றுநிறை வேறும் அது? (17)
இரவு
இரவேஏன் வந்தாய் எனதுள் தனிமை
அரவின் விடம்போல் கடுக்கும் - தரமோங்(கு)|r}}
உயிர்நாய கர்தம்மை ஓவாது உன்னி
அயர்கின்ற தென்செய்வேன் யான்? (18)
மாரனின் மலர்க்கணை
ஐந்துமல ராலான அம்புகளை மாரன்தான்
பைந்தொடிஎன் மேல்பாய்ச்சு கின்றனனே - நைந்துருகி
சேர்தனிகை பேர்மகவை சிந்தைதனில் எண்ணியெண்ணி
பேர்துன்பம் கொண்டேன்பே தை. (19)
பாங்கி
நீங்காக் கயிலைசிவ நேசர்பால் காதலுற்றேன்
பாங்கியே சென்று பரிந்துரைப்பாய் - ஓங்கார
நாயகர்பால் நற்றவர்பால் ஞானசை தன்னியர்பால்
தோய்ந்திருக்கும் ஆவல் உரை (20)
வேனிற் காலம்
வேனிலே உன்னால் விரகம் மிகுந்ததம்மா
தேன்கமழ்தார் தேவர்சிந் தைகவர்ந்தார் - ஊணுறக்கம்
அற்றார் அவர்நிலைமை உற்ற தெனக்குமவர்
நற்றாளைப் பற்றும் உளம் (21)
குயில்
குயிலே இனிமைகனிந் தேகூவாய் காதல்
மயிலாய் இளங்கலையாள் தேவர் - மயலாள்
மோகம் தலைக்கேறி நாமம் பிதற்றுகின்றாள்
ஆகம் மெலிகின்றாள் என்று. (22)
கிள்ளை
கிள்ளைகாள் கொஞ்சுங்கள் காதல் தலைமகனாம்
வள்ளல்பால் சென்றெனக்காய் கெஞ்சுங்கள் - அள்ளக்
குறையா நிதியரசர் கோதில்லாள் நெஞ்சில்
நிறைந்துள்ளார் என்றே கனிந்து (23)
மலர்ப்படுக்கை
காம்பரிந்த மல்லிகையும் அன்னத்தின் தூவிகளும்
தாம்பொதிந்த சேக்கையே முள்ளானாய் - தேன்பொதிந்த
சொற்றவறா வள்ளல்என் சிந்தை கவர்கள்வர்
பற்றதனால் இந்த நிலை (24)
யாழ்
இன்னிசையாழ் நின்னின் இழுமென் றெழும்இசைதான்
என்னுயிர்நா டிநரம்பெல் லாமோட - மன்னவர்பால்
காதல் மிகக்கொடுமை செய்கிறதென் றேயுரைத்து
வேதனையைத் தீர்க்கவரச் சொல் (25)
அழகு
பேரழகில் நெஞ்சம் பறிகொடுத்தேன் கண்டுமகிழ்
சீரெழிலால் சிந்தை மகிழ்ந்திடுமே - காருண்யர்
நோக்கால் உயிர்தளிர்க்கும் நுண்மான் நுழைபுலமார்
வாக்கால் மறைதுலங்கும் மெய், (26)
என்னுயிரின் உட்புகுந்து இன்பக் களியருள்வான்
மன்னவர்க்கு ஈடிணையில் வையகத்தில் - தென்னா(டு)|r}}
உடையார் தமைப்பணிந்து உற்றார் துயரம்
அடையார் அறம்மேவு வார் (27)
வித்தகரென் வேதமணி மாதவரின் பொன்னடியை
முத்தியிட ஆசை முகிழ்த்ததம்மா - எத்திசையில்
பார்த்தாலும் எந்தன் பரமனார் தோற்றந்தான்
வேர்த்து மயங்குகின்றேன் யான் (28)
நிரந்தரமாய் நெஞ்சில் குடியேறி நித்ய
வரந்தருவார் மெய்யில் நிலைக்கும் - உரந்தருவார்
ஆதலினால் பேதை அகலேன் பதம்விட்டு
காதலினால் நெஞ்சம் கனன்று (29)
கனவு
எக்காளம் வீணை எழில்துந்து மிமுழங்க
சொக்கமணி ஓசையிட மத்தளமும் - எக்களிக்க
துங்க மணிமன்றில் மங்காத் தவத்தரசர்
மங்கல நாண்பூட்டி னார் (30)
அனந்தாதி தேவர்கள் ஆர்த்து மலர்தூவ
தினம்புதியர் என்னை மணங்கொண்டார் - இனமோங்க
வாழ்த்தினார் நெஞ்சம் மகிழ்ந்துபூ ரித்திடவே
ஆழ்த்தினார் இன்ப உலகு (31)
திக்கென்று நான்விழித்தேன் எல்லாம் கனவென்று
அக்கணமே கண்டு அழலுற்றேன் - இக்கனவு
என்று நனவாகும் என்று உளம்கசிந்தேன்
நன்றருள்வார் நாதர் இனிது (32)
- மெய்வழி பக்தி இலக்கியங்கள்
- மெய்வழி அடியார்களின் படைப்புகள்
- சமய இலக்கியம்
- அகரமுதலான வரிசையில் படைப்புகள்
- இறையியல்
- சிற்றிலக்கியங்கள்
- திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108
- கவிதைகள்
- திரட்டு நூல்கள்
- 2017 படைப்புகள்
- பாடல்கள்
- தற்கால புலவர்களின் படைப்புகள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் இயற்றிய 108 வகைப் பிரபந்தங்கள்
- சிற்றிலக்கிய மகாகவி மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர் படைப்புகள்