உள்ளடக்கத்துக்குச் செல்

திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/067.அருள் நூற்றந்தாதி

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



67. நூற்றந்தாதி

[தொகு]

இலக்கணம்:-

நூறு பாடல்களால் அந்தாதித் தொடை அமையப் பாடப்பெறும் இலக்கிய வகை நூற்றந்தாதி எனப் பெறும்

நூறு வெண்பா நூறு கலித்துறை 
கூறுதல் நூற்றந்தாதிக் கோளே.
- இலக்கண விளக்கம் 842
“வெண்பா நூற்றினா லேனுங் கலித்துறை
நூற்றினா லேனு மந்தாதித் துரைப்பது
நூற்றந் தாதியா நுவலுங் காலே.”
- முத்து வீரியம் 1084
“நூற்றந்தாதியே நூல்வல்லவர்கள்
வெண்பா கலித்துறை விதித்தல் நூறியம்பலே.”
- பிரபந்த தீபம் 55

இஃது எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்கள் திருப்புகழைக் கட்டளைக் கலித்துறை என்னும் பாவகையால் பாடப்பெற்றதாமென்க.

அருள் நூற்றந்தாதி

காப்பு

ஆதிப ராபரை ஆர்புவி வானகம் யாவினுள்ளும்
நீதிநி றைந்தொளிர் நித்திய மெய்வழிச் சாலையம்மே!
வேதமு தல்முடி வானவிண் நாயகி மெய்த்துதிக்கை
ஆதரிக் கும்நின தார்புகழ் போற்றிடக் காப்பெமக்கே!

நூல்

காப்பெமக் காய்வந்த காரிகை ஆருயிர்க் கண்மணியே!
மாப்பொரு ளீந்தெமன் மாரணம் தீர்த்தருள் வான்கனியே!
பாப்புனைந் தும்புகழ் பாடிட ஈந்தருள் சொல்லணியே
மூப்பறு மோதக மேந்திய மூஞ்சுறு வாகனியே! (1)

மூஞ்சுறு வாகன மேறிய மெய்வழி மாதவியே!
காஞ்சன மேனிக் கமழ்செண்ப கம்மலர்க் கன்னிகையே!
தீஞ்சுவை மெய்ப்பால் சுரந்தருள் உண்ணா முலையரசி
வாஞ்சை மிகப்புரி மாதாநின் பொற்றாள் வணங்கினனே! (2)

வணங்கிப் பணிந்தனன் வாயாரப் பாடி மனங்கனிந்து
இணங்கித் திருவடி எப்போதும் சிந்தித்து வெம்பிறவி
சுணங்க வரந்தரு சோதியே! மெய்வழிச் சோலையம்மா!
குணங்கொள் தயாநிதி கோதகன் றுய்யக் கடைக்கணியே! (3)

அணியெம தாருயிர்க் காயினை அம்மா! அருட்தவமார்
மணியொளிர் மெய்ம்மதி வாணிநின் வான்புகழ் பாடுவதே
பணியெனக் காகிட வேண்டினன் போற்றி மனோன்மணித்தாய்
கணிப்பினுக் கெட்டாத காலங் கடந்த கலைக்கடலே! (4)

கடலேழை விஞ்சும் கருணைப் பெருமாட்டி கற்பகத்தாய்
இடமகல் ஞாலத்து எம்மா ருயிர்பால் இரக்கமுற்று
உடலெங்கள் போலும் அவதாரம் செய்து உவந்தருளும்
திடமெய் வழிதரும் தேவீ பராபரைச் சாலையம்மா! (5)

அம்மா! கொடுங்கையி னாலே அணைத்தார் அமுதளித்து
சும்மா இருக்கவோர் தோதுசொன் னீர்மெய்ச் சுகோதயமே
எம்ம தவத்தரும் எய்தற் கரியாய்!அன் பர்க்கொளியாய்!
செம்மாண் புயர்த்த தனிகையன் னையீன்ற செந்திருவே! (6)

திருவோங்கு தெய்வமே! மெய்வழித் தாயே! தயாபரியே!
கருவோங்கு மெய்ம்மணிப் பொன்வயி ரேற்றினி தீன்றெடுத்தாய்
மருவோங்கு கற்பூர வாடை கமழ்வாய் மலர்மலர்ந்தாய்
குருவோங்கு கோமதி கோவில்கொள் ஏழை இதயத்திலே! (7)

இதயத் தனில்ஜீவ சிம்மாசனக் கொலு வீற்றிருக்கும்
உதயப்ர காசக் கதிரொளி யோங்குமெய் உத்தமியே!
மதியே!மெய் யார்திரு வோண வரைபொங்கு வானகங்கா
நதியே!என் நற்றாய்!நின் பொற்றாள் அணிந்தேன் சிரத்தினிதே! (8)

சிரமே புனைந்துநின் சேவடி போற்றினன் சீர்திருவார்
கரமே புனைந்தனை சன்னதம் பல்மிளிர்ந் தோங்கியுயர்
வரமே புனைந்திலங் கார்திரு மெய்வழி மாதவத்தாய்
புரமூன் றெரித்தாய் பரையே!நின் தாளினில் தஞ்சமம்மே! (9)

தஞ்சம் அளித்தமு தம்மருள் பாலிக்கும் தாயகமே!
வஞ்சந மன்படர் வாதனைக் கஞ்சி மயங்கினர்க்கு
அஞ்சலென் றிங்கண் அபயம் அருளுவிண் ணாட்டரசி!
பஞ்சம்இச் சேய்க்கினி யேதுகி டப்பது பாற்கடலே! (10)

பாற்கடல் பள்ளிகொள் பொன்னரங் கத்திருத் தாய்மணியே!
நாற்கரத் தாலெனை நன்கணைத் தன்புசெய் நல்லணியே!
வேற்கரத் தாலென் வினைகெட வேதிக்கும் வேதமுத்தே!
மேற்கொளு வெம்பிற விப்பிணி தீர்த்தருள் வித்தகியே! (11)

வித்தது வே!வித் தின்விளை வே!பய னே!சுகமே!
நித்திய மே!உயி ருக்குயி ரே!அருள் நேமியம்மே!
உத்தமிக் குத்திரு சித்தினி லைப்பிடக் கானகமே!
நத்திய பத்தியர் முத்திபெ றத்தரு நற்றவமே! (12)

நற்கதி நல்க நடந்தனை நானில மீமிசையே
பொற்பத மெய்ந்நட மேபுரி பொன்னரங் காயிழையே!
அற்புத மெய்வழி அம்பிகை ஆருயிர் ஆரணங்கே!
நிற்பதம் தஞ்சம் நிறைமதி பொங்கெழில் வானமுதே! (13)

தேனமு தக்கட லே!திரு வோங்கெழில் கற்பகமே!
வானமு தந்தர வன்பிற விப்பிணி மாறிடவே
ஆனக முய்ந்திட அங்கைகொ டெந்தனை ஆதரித்தாய்
ஞானம ணியொளிர் மெய்வழி நாயகி! நாரணியே! (14)

நாரணி நன்மலர் செண்பக மேனியை நற்புவியில்
பூரண மேதிகழ் பொற்பத மெம்முயிர் பூத்திடவே
சீர்நட மேபுரி சேமனி திக்குவை சேர்வரமே!
ஆரண மாமறை யாவுமி லங்கெழில் அன்புருவே! (15)

அன்புரு வேற்றனை அம்புவி போந்தெமை ஆதரிக்க
நின்கரு வேற்றனை நற்றவர் நெஞ்சில் நிறைந்தொளிரும்
பொன்னுரு வேஎழில் மின்னுரு வேகதி நின்பதமே!
மன்னுரு தந்திறை வானுரு நல்கு வரோதயமே! (16)
வரந்தர வந்துயிவ் வையக மீதினில் மெய்வழியாம்
புரந்தரி நின்னெழில் பொற்பத பங்கய மன்றியிங்கே
நிரந்தர மான நிறைநிதி வேறிலை நீதியம்மே
சிரந்தனில் நின்பதம் சூடினர் வாழ்வு செழித்ததுவே! (17)

செழிக்கப் பொழியருள் ஜீவனும் தேகமும் முத்திபெறு
வழிக்குப் பெருந்துணை வாய்த்தனை மெய்வழி மாதங்கமே!
கொழிக்குந் திரைகரு ணைக்கடல் கோமள மாதரசி
அழிக்கும் எமன்படர்க் கஞ்சுதென் நெஞ்சம் அணைத்தருளே! (18)

அணைத்தமு தூட்டி அறிவார் திருக்கோவில் ஆங்கெழுந்து
இணைநிகர் கூறற் கியலா நலந்தரு என்னன்னையே!
துணையுயிர்க் கானபொற் செங்கனி வாய்மொழிச் சீரணங்கே!
புணைபிற விக்கடல் நீந்திக் கடக்கப் பதாம்புயமே! (19)

அம்புயத் தாள்மலர் தானேசிரத்திற் கழகணியாம்
எம்பெரு மாட்டிநின் ஈடில் தயானிதி எவ்வுலகும்
இம்பரும் உம்பரும் இன்பமெய் வாழ்வினை எய்திடவே!
செம்பொரு ளாமருட் சீர்கொடை தந்தது செங்கரமே! (20)

செங்கரம் சன்னத மேந்திய சீருயிர்ச் சேயிழையே!
பங்கமி லாநெறி பேருயர் மெய்வழி பார்மிசையே
துங்கமி குந்தொளிர்ந் தோங்கிடத் தோன்றிய தூமணியே!
வெங்கலி வென்றனை வேதமெ லாமுரு வாயினையே! (21)

ஆயினை ஆமனு ஆரணி ஆதிமு ழுமுதலே!
தாயினு மேபரி வாயினை தூயத யாபரியே!
சேயெனை யாள்தரு மாபுரி மெய்வளர் சீரணியே!
நேயமி குந்தவர் நெஞ்சில் கனிந்திடும் வான்கனியே! (22)

கனியருள் கற்பகத் தாருநின் நீழல் படிந்தெளியேன்
இனிதுய ஈடில் வரந்தரு மீகைக் கிணையுளதோ!
முனிவரர் தேவர் இருடியர் மாதவர் ஞானியரும்
நனிபணிந் தேற்றிட வீற்றிடு மெய்ப்பதி நாயகியே! (23)


நாயகி ஜீவசிம் மாசன மேறி நடம்புரியும்
தூயமெய் நற்கம லப்பதம் தோத்தரித் தேபணிந்தேன்
சேயெனின் வெம்பிற விப்பிணி தீர்த்த சுகோதயமே!
தாயுனைத் தஞ்சம் புகுந்தனன் காக்கும் திருவுளமே! (24)

திருமொழி யே!ஒளிர் சீரெழி லே!ஜீ வர்க்கமுதம்
தருமணி யே!உத் யோவனச் சாலை தனில்விளங்கும்
குருமணி யே!யெம் குலமுழு தும்அடி மைகொளவே
அருள்மணி யே!உனை அண்டிநின் றேனென்றன் ஆதியம்மே! (25)

அம்மையே! அந்தகன் கையினின் றெந்தனை மீட்டருள்செய்
செம்மையே! சீரார் இகபரச் செல்வம் செழுநிதிகள்
இம்மையே! ஈந்தருள் ஏகப ராபரை ஈடிணையில்
உம்மையே தந்தினி தெம்மையே கொண்டருள் உத்தமியே! (26)

உத்தமி யாவும் ஒடுங்கப் பெருந்தவத் தோங்கியுயர்
சித்தமி ரங்கிச் சிறியேற் கதன்பலன் தந்தருள்செய்
வித்தகி வெவ்வினை தீர்த்தவ ராகியே! மெய்வழியாம்
அத்திபு ரத்தர சாள்அம லாம்பிகை ஆதரியே! (27)

ஆதரித் தாயெழில் அம்புயத் தாளினில் எம்சிரமாம்
பூதரித் தாயெனின் புன்செய்ப வக்குறை வேரறவே
நீயெரித் தாயுயிர் நித்திய வாழ்வுற நல்வரங்கள்
சீர்தரித் தெம்முயிர் சாயுச்ய மேபெறச் செய்தனையே! (28)

செய்தனை நின்றன் திருநாமம் பாடித் திரிதரவே
பெய்தனை பேரருள் பூதல மேவிய வானரசி!
எய்தினை பல்லிடர் எங்கள்இன் னல்தவிர்ந் தோங்கியுயிர்
உய்தர மெய்யாம் ஒளிபெறக் காட்சிதந் தாண்டனையே! (29)

ஆண்டனை அம்மே! அழியா நிதிதனை அங்கைகொடு
மாண்டொழி மாந்தர்கள் மீண்டிட மெய்வர மிக்கருள்செய்
ஈண்டெழில் பொன்னொளிர் மேனியை எம்முயிர் நின்னடியிற்
பூண்டனை பொன்னரங் காடிடு பொன்மயில் பொற்பதமே! (30)


பதமே புவிமேற் படியா இறைவி! எமக்கிரங்கி
இதமே சிறந்து அகிலத் திருவலம் ஏற்றனையே!
நிதமே புதியாய்! நலங்கனி நித்தியை நிற்பணிந்தேன்
சதமே எனக்குன் திருவருள் சீர்மெய் வழித்தெய்வமே! (31)

தெய்வத் தயாபரி! தேவீ! அகில மனுக்குலமும்
உய்வைப் பெறஒரு உத்திதந் தாண்டனை உத்தமியே!
மெய்வைத்த சிந்தையர் மேலோர் அனந்தர் குலத்துறவு
எய்வித் தெனையும் ஏன்றுகொண் டாயிதற் கேதொப்புகாண்! (32)

ஒப்புவ மையிலா ஓர்தனி மெய்வழி ஓங்கு நற்றாய்!
செப்பற் கரிதுன் திருப்புகழ் போற்றத் திறம்தருவாய்!
இப்புவி தன்னிலிக் காலம் இயல்மெய்குண் டப்பதவி
ஒப்புடன் தந்தனை ஓவாது போற்றலுன் நாமமொன்றே (33)

நாமம் உரைத்தவர் நற்பதம் பெற்றமை நாடறியும்
சேமம் புகலென்ப துன்கோவில் சார்வது தானம்மையே!
ஏமன் இடர்கடந் தின்பத்தை எய்தப் பரிசருளும்
வாமண மாதெனும் மெய்வழித் தாயேநின் தாள்தஞ்சமே! (34)

தஞ்சம் புகுந்தவர் தாம்கடந் தார்பிற விக்கடலே!
அஞ்சல் எனநின் அபயத் திருக்கரம் ஆதரிக்கும்
மிஞ்சும் மனுமுளை வித்தாய் பொதிந்தருள் வான்கருணை
கஞ்ச மலர்த்தாள் கனிந்தணிந் தேன்மெய்க் கலாநிதியே! (35)

நிதியே! நிகரிலா நித்திய வாழ்வெனும் நல்லறவான்
மதியே! மதிமணி மாதவ மோங்கும் திருவுயர்பார்
பதியே! பராபரை அன்னாய் பெரும்புணை பொற்பதமே!
கதியே! பிறவா வரம்வாழ்வு ஈயுமிக் காசினிக்கே! (36)

காசினி மேல்வரு கார்த்திகைத் தாய்நின் கழல்பணிந்தேன்
மாசறு வானவர் மாதவச் செல்வ வரம்அணிந்தார்
வாசியெ னும்பரி யேறிவ லம்வரு வான்மணியே!
தேசுயர் கற்பகத் தாருமெய்ச் சாலையின் தேவியம்மே! (37)


மேதினி யோருய மெய்வழி தந்தனை விண்ணரசி
பூதல ரோர்நிறை யோர்குல மோர்மத மென்றினிதே
சீதம லர்ப்பதம் சீருயி ருக்கிதம் கொண்டனமே!
வேதனை வெம்மற லித்துய ரற்றது மீண்டனமே! (38)

மீண்டது எம்முயிர் மெய்வழித் தாய்மலர்த் தாள்படிந்தே
வேண்டுவ பெற்று விளைந்தது மாபெரும் இன்பமிதே
பூண்டது வாழ்வு பெறற்கரும் பேறுகள் பெற்றினிதே
ஆண்டகை பொற்கழ லேகதி யாயினை என்மனமே! (39)

மனம்மொழி மெய்தனில் சிந்தித்து வாழ்த்தி வணங்குகின்றேன்
தினம்புதி யாயெங்கள் தேவாதி தேவிசி ரோன்மணியே!
இனம்புதி தாயின எம்மதம் சம்மதம் என்றுநித்யத்
தனம்தந்ந மெய்வழித் தாயே! தருமமார் சீருருவே! (40)

உருவாய் குருவாய் திருவடி வாய்வந் துளம்நிறைந்தே
திருவாய் திறந்தெங்கள் சீருயிர்க் காம்நித்ய செல்வமெலாம்
தருவாய்விண் கற்பகத் தாருவாய் ஓங்கும் தயாநிதியே!
மருவாது எம்மை மருங்கணைத் தாதரித் தாய்மணியே! (41)

மணியே! வடிவெழில் மாணிக்க மேமெய் விளங்கொளியே!
அணியே! அழகிலங் கும்பொற் கழல்கட்கு எம்முயிரே!
துணிவே!அவ் வந்தகன் தீங்கினுக் கஞ்சாத் திருவளித்தாய்
பணிவேன் கணந்தொறும் மெய்வழித் தாய்நின் பதமலரே! (42)

பதமலர் போற்றலொன் றேயெற்கு ஆகும் பணியம்மையே!
இதமுயர் பேரின்பம் எய்தும் உயிர்மெய் வழிதந்துநற்
கதியருள் காரிகை கண்ணகன் ஞாலத்திற் கோர்பதியே!
மதிவளர் விண்ணமு தம்கைக்கொண் டீங்குற்ற மாதவமே! (43)

தவமே! தவத்தின் பலனே பலன்நல மெய்விளைவே!
அவமே கிடந்துழல் ஏழையேன் உய்ய அருள்புரிந்த
சிவமே! சிவசக்தி மெய்வழித் தேவிநின் பொன்மலர்த்தாள்
நவமே நனிநல்கும் நற்றாய் நினைப்பணிந் துய்ந்தனனே! (44)


பணிந்தேன் பிறவிப் பிணியகல் பேர்வரம் தந்தருள்தாள்
அணிந்தேன் சிரமிசை அம்மா! அகில வலம்புரிந்து
அணிசீர் பரங்குன்ற மேகித் தவம்செய்து சன்னதம்கொள்
மணிக்குன்ற மே!மெய் வளந்தரு பொற்பத மேகதியே! (45)

கதியென்று நின்றனைக் காத்துக் கிடந்த கடையனெற்கு
மதிநன்று தந்து மறவா துருகும் வரமருள்வாய்
புதிதன்று சேயை அமுதளித் தேபுரத் தல்நினக்கு
நிதியென்னல் நின்றன் திருவாய் நிறைமறை மெய்ம்மொழியே! (46)

மொழியமு தீந்தெம் மும்மலம் நீக்கிய முத்தமிழ்த்தாய்
விழியெழில் நோக்கால் வினைகெட வேதித்த வேற்கையினை
அழிதுயர் தீர்க்க அவதாரம் செய்த அருண்மணியே!
எழிலுன தாதல் திருவடி போற்றிப் பரவுதலே! (47)

பரவுகின் றேன்நித்தம் பாடி வணங்கிப் பராபரைநின்
வரவுகண் டோர்க்கிலை மாரண துன்பம்முத் தாபமெலாம்
கரவிலா நெஞ்சகம் கண்டே மகிழக் களிதுளும்ப
இரவு பகலற்ற ஏகப் பெருவெளிக் கேற்றினையே! (48)

ஏற்றினை தாயே இமையாத நாட்டத் திருத்திவைத்து
காற்றினைப் பற்றும் கரந்தந்து வெல்லற் கரியதெனும்
கூற்றினை மாற்றிக் குலம்முழு தும்அடி மைகொண்டனை
போற்றிப் பணிவதொன் றேயெனக் காகும் பணியம்மையே! (49)

அம்மா கடைப்பிள்ளை பேராசை யொன்று அடங்கலிலேன்
பெம்மான் பெருந்துறை மேவியிங் குற்றமெய்ப் பேரரசி
இம்மா நிலத்தில் இணையடி போற்றும் அனந்தருளே
எம்மா ருயிர்களித் தின்புற என்றும் இறைஞ்சுவனே! (50)

இறைஞ்சுகின் றேன்நின் ஏரார் திருநாமம் போற்றியெங்கும்
பறைஞ்சிட ஆசை பணியும்நின் பக்தர்க்குத் தொண்டுசெயில்
நிறைந்திடும் நெஞ்சம் நினைவில் நினையன்றி வேறெதுவும்
உறைந்திடல் வேண்டிலன் ஓதல்நின் வேதத் துவப்புடையேன் (51)


உவந்தாய் எனையும் ஒருபொருட் டாய்நின் உதரத்திலே
பவந்தான் கெடச்சுமந் தீன்றனை தாயே! உலகியலார்
சவந்தான் எனவெறுக் காவணம் மெய்ப்பதிப் பொன்னரங்கில்
தவந்தான் புரிந்து பலன்எனக் கேதந்த செந்திருவே! (52)

செந்திரு வீடுறச் செய்தலை வீ!மென் நடைபயின்று
வந்திரு நெஞ்சினில் மற்றொரு புன்மை புகாவணமே
பந்தனை செய்திரு தாளிடு நின்னைப் பணிந்நிறைஞ்சி
வந்தனை எப்பொழு தும்செய வேண்டி வழுத்தினனே! (53)

வழுத்துதல் போற்றுதல் யாவும்நின் நாமம் மணிவிளக்கே!
எழுத்தெனும் என்தலை யோட்டின் விதியதை மாற்றிமதி
எழுத்தை அழுத்திப் பதிப்பித்த விந்தைக் கிணையுமுண்டோ!
பழுத்த கனிச்சுவை யே!பய னே!மெய் வழித்தெய்வமே! (54)

தெய்வமே உங்கள் திருவடி யைமுகம் சேர்ந்தணைந்து
எய்தற் கரியதோர் இன்பம் கொளும்இந்த ஏழைநெஞ்சம்
வையமீ திந்தமெய் வான்செல்வம் கொண்டு வருகைதந்த
துய்யத் திருமணிச் செல்வமே! பொன்னின் அரங்கம்மையே! (55)

அரங்கம் எமதுளம் தன்னில் நடம்பயில் ஆரணங்கே!
வரங்கள் திருக்கரம் கொண்டிங்கு ஆளும் கருணையெனும்
தரங்கம் கொழிக்கும் தவக்கடல் தாயே! தயைகனிந்து
இரங்கி எடுத்தணைத் தின்னல் தவிர்த்தருள் ஏந்திழையே! (56)

ஏந்தினை சக்கரம் சங்குவேல் சூலம் பராங்குசமும்
காந்தட் கரத்தில் துடியும்கிள் நாமம்தண் டாயுதமும்
பூந்தளிர் மேனியைப் பெற்றாயே பேரின்ப மெய்ப்பதமும்
ஈந்தருள் பாலிக்கும் இன்ப வடிவுடை என்னன்னையே! (57)

அன்னை அகிலாண்ட ஈஸ்வரி இங்கண் அனைத்துயிர்க்கும்
தன்னையும் ஈடில் தவச்செல்வம் தந்திற வாமைதரும்
மின்னொளி மிக்கொளிர் மாணெழில் மாதெனும் மெய்வழித்தாய்
இன்னருள் மாந்தி எளியவென் நெஞ்சம் களிக்கின்றதே! (58)


களித்தே கழல்கண்டு காமுற்று ஜீவன் செழித்திடவே!
அளித்தாய் திருவரம் அம்மா தயையோர் வடிவினளே!
தளிர்த்தே உயிர்ப்பயிர் சீராய் வளர அமுதமடை
தெளிதேன் அருவி பெருக்கெடுத் தோடச் சிறந்தனமே! (59)

தனமே கமழ்சந் தனமே திருத்தாள் அணிந்தனமே!
இனமே நினைநத் தினமே இனிதே இறைஞ்சினமே!
கனமேமெய் வாகன வான்முக டேறும காகனமே!
வனமேஉத் யோங்கிடு மாவன மேமெய்த்த போவனமே! (60)

தபோநிலை யுச்சிய தோண மதில்நிலை நின்றனையே!
தபோவன நைமிசா ரண்யம தேகிய தாய்மணியே!
தபோனிலை யேறலும் ஆற்றல் இடர்துயர் நின்னதம்மா!
தபோபலன் பெற்றுயிர் உய்தலும் இன்புறல் யாங்களம்மே! (61)

இன்புற எங்களை அப்புவி வித்தென ஆக்கவென
துன்ப மடைந்தது சொல்லி லுரைத்திட லாகுவதோ!
அன்புக னிந்தஅ ருட்டிரு மேனியை ஆமனுத்தாய்!
தென்புத ருந்திரு மெய்வழி அன்னைசி ரோன்மணியே! (62)

சிரோண்மணி நின்றன் திருவடித் தோத்திரம் செய்வதொன்றே
வரோண்மணி யானது வான்கொடை தந்தமெய் வாழ்வரசி
கரோண்மணி காத்தது பேதை இளங்கலை என்றனையே
பரோண்மணி பிள்ளை பிதற்று சிறுமொழி ஏற்றருளே! (63)

அருளே நினையின்றிச் செல்வமுண் டோஇந்த அம்புவிமேல்
பொருளாய்ச் சிறந்தமெய்ப் போதக மேஉயர் பொன்னரங்கில்
மருளே தவிர்த்துஇம் மன்னா உலகத்து மன்னுதல்செய்
அருளன்னை யிங்கண் அழும்பிள்ளைஏற்று அணைத்தருளே! (64)

அணையா மணிவிளக் கேற்றி அதன்ஒளி யாய்ச்சிறந்தாய்
இணையார் நினக்கு எனையும் மகவென ஏன்றனையே
புணையாக வந்திரு ளாழிஅ லைந்தஇப் புல்லனுய்யத்
துணையாய்ச் சிறந்தநும் சீர்திருத் தாள்தொழல் தான்தொழிலே! 65)|r}}


தொழிலென்ப துன்றனைத் தோத்தரித் தல்என தாருயிர்க்கு
எழிலென்ப துன்றன் திருநாமம் பூண்டெங் கணும்திரிதல்
விழியென்ப துன்றன் தரிசனம் பெற்றதே மற்றதுபுண்
மொழியென்ப தன்பயன் நின்னைப் புகழ்தலே மாமதியே! (66)

மாமதி நாவர சோச்சிடு மாபல மாமணியே!
கோமதி என்குறை வீய்ந்திட ஏற்றகு ணக்கடலே!
தூமதி யேஉயி ரின்துணை யேசுக வாரிதியே!
தாமதி யாதுத வப்பலன் தந்தருள் தாயகமே! (67)

தாயக மே!உயர் மெய்வழி தந்துஇத் தாரணியில்
நேயக மேவிட நீதினி றைந்தொளிர் நித்தியமே!
தூயக மோங்குஅ னந்தர்கு லந்தொழு தேத்திடவே
ஆயக லாநிதி அம்மைப தம்சிரம் சூடுவனே! (68)

சூடுவன் மெல்லடி சிந்தைக னிந்துயிர் தான்களிக்கப்
பாடுவ துன்திரு வேதமும் மான்மியம் கூடகமும்
ஆடுவ துன்புகழ் பாடிம கிழ்ந்துநெ கிழ்ந்தினிதே
கூடுவ துன்னடி யார்கள் அனந்தர் குலத்துடனே! (69)

குலங்கனிந் தோங்கக் குவலய மீதொரே தேவனெனும்
நலங்கனிந் தோங்கிட நன்மதி நல்கிய நாயகியே!
நலங்கனி மெய்ம்மறை யாவும் தெளிந்திடச் செய்திங்கணே
இலங்குநிற் கேதிணை இன்னுயிர்ப் பொன்னரங் கென்னம்மையே: 70)|r}}
மையே எனக்குவைத் தாய்மை அருள்மை மலர்நன்மையே!
மெய்யே இனிமை வளரிம்மை தன்னில் மறுமைதரம்
மையே நிகரில் புலமை தவமோங் கிடுமென்மேன்
மையே அழியாமை ஈய்திற மைமெய்ப் பெருமையிதே! (71)

பெருமை அடைவதென் றேபிதற் றித்திரி வாருலகோர்
பெருமை எமன்றனை வென்றநின் தாள்பணிந் தேத்துதலே!
பெருமை கடையனை நின்மக வென்றினி தேற்றலன்றோ!
பெருமை அதனினும் வான்யுக வித்தென ஆக்குவதே! (72)


ஆகுந்த லம்நின் அருள்வளர் மெய்வழிச் சாலையம்மா!
ஏகுந்த லம்காட்டி ஐந்தவித் தொன்பான் வழியடைத்தாய்
சாகுந்த லம்முடல் வேகுந்த லந்தவிர் சாகாத்தலம்
நாகுந்த மேகொடு நற்கதி நல்குநற் றாய் மதியே! (73)

தாய்மதி தண்ணொளி சாவிருள் தீர்த்தனை சாலையெழில்
ஓய்வில் புனற்றுறைக் கோவில்கொண் டாள்கைசெய் ஒப்பிலியே!
ஆய்மதிச் சிந்தை அனந்தரை ஈன்று அறம்வளர்த்தாய்
தூய்மதி ஜீவசிம் மாசன மேறின சீதனமே! (74)

சீதன ஞானச் செழுந்தனம் தந்து சகம்புரந்தாய்!
மாதன மெய்ம்மருந் நேகொடு வந்தனை வாசுகியே!
பூதன மேதன மென்றும யங்கிய லைந்தவரை
நூதன மெய்வழி வான்தன வானென மாற்றினையே! (75)

மாற்றாயி ரத்தெட்டு மாதங்கம் ஈடில்மெய்ச் சாலையம்மா!
கோற்றேன் சுவைவிஞ்சும் கோதறு மெய்யரு ளாரமுதம்
ஊற்றம் தரவே உயிரும் செழித்துக் களித்ததன்னாய்!
வேற்றோர் நிதியிங்கு வேண்டிலம் நின்தயை வேண்டுவனே! (76)

வேண்டி விழைந்தவும் வேண்டா வரங்கள்வ ளம்பலவும்
ஈண்டு இனிதே அளித்தருள் பாலிக்கும் இன்னருட்தாய்
பூண்டனன் நின்தாள் சிரத்தே அணியிது போதுமம்மா!
ஆண்டென துள்ளத் தருள்நடம் செய்திடும் மெய்யம்மையே! (77)

மெய்யம்மை நின்திரு மேனி தரிசனம் ஓரொருகால்
செய்யும்மெய் யன்பர்தம் தொல்வினை யாவுமே தீர்ந்தழியும்
வையகம் தன்னிலவ் வானகச் செல்வம் வழங்குறுமால்
உய்யுமா றொன்றே ஒருதனித் தாயுன்ப தாம்புயமே! (78)

அம்புய மீமிசை ஆரெழில் பொங்கிட வீற்றிருக்கும்
செம்பொரு ளானத யாநிதி சேதமில் மாதவமே!
வம்படி பண்ணியி ழுத்தெனை மாற்றியிங் கீன்றெடுத்தாய்
பைம்பொனின் மேனியை பார்பதித் தாய்நினை வாழ்த்துவனே! (79)


வாழ்த்தல் வணங்குத லேதொழி லானது என்றனக்கே!
பாழ்த்த பிறவிப் பயன்தெரி கின்றிலர் பாருலகோர்
சூழ்த்தநற் பொன்மலர் நின்கழல் வாசம் கமழ்ந்தினிதே!
ஆழ்த்திடும் ஆருயிர் இன்பம் கனியும கோன்னதமே! (80)

உன்னத மானது உன்றன்தி ருவருள் ஓர்தனித்தாய்
சன்னத மேந்திய தண்ணளி பொற்கரத் தாய்மணியே!
உன்னமு திங்குற லாலுயிர் உய்ந்தனம் ஒப்புயர்வில்
பொன்னரங் கன்னைநின் பொற்பத மேகதி பூதலத்தே! (81)

பூதல முய்ந்திடப் பொன்மலர் மெல்லடி என்இதய
மீதுல விச்சுக வானதி பொங்கி விரைந்தினிதே!
காதல மேவிக் கனிந்தது அன்னை கருணைநிதி
மாதல மாம்திரு நாதல மின்ப நலந்தருமே! (82)

இன்ப நலந்தரும் ஏந்திழை பொன்னின் அரங்கரசி!
அன்பொரு மேனிய ளாகினை ஆமனு அன்னைபதம்
தென்பரு ளும்உயிர் தேன்கடல் ஆழ்ந்து சிரோமணியாம்
தன்பொரு ளாய்க்கொள மெய்வழி அம்மை தரும்பரிசே! (83)

பரிசென்ப துன்றன் பதமலர்ப் பங்கயம் போற்றிசெய்து
தரிசனம் செய்துயிர் சாயுச்யம் பெற்றுய்தல் தானம்மையே!
துரிசகல் தூமணித் தாயே! அகிலாண்ட ஈஸ்வரியே!
அரியதாம் மெய்வழி அம்புவிக் கேதந்து ஆண்டனையே! (84)

ஆண்ட கலானிதி அம்மா அடியவர்க் காயிரங்கி
பூண்டனை கொல்லோ திருமேனி இந்தப் புவிமிசையே!
யாண்டும் எவரும் இயற்றரி தான தவம்புரிந்து
வேண்டும் வரந்தந்த மேதகைக் கொப்பெதும் கூறரிதே! (85)

கூறற் கெளிதோ குலதெய்வம் ஊணும் உறக்கமற்று
ஏறற் கரிதாம் தவஏற்றம் ஏறிய ஏந்திழையே!
பேறிற் சிறந்த பெரும்பேறு சாகா வரமளித்தாய்
மாறா திருக்க வான்பொருள் தந்தமெய் வாசுகியே! (86)

சுகமே எனச்சொலில் போதுவ தோஅருட் சோதியம்மா!
அகமே! புறமே! அறிவே! திருவே! அறங்கனிந்த
இகமே! பரமே! இன்ப வடிவங்கெண் டீங்குற்றவான்
யுகமே! யுகத்தீர்ப்பு ஆற்றிட வந்தயு கோதயமே! (87)

உதய முழுமதி ஒண்கழல் பற்றினர்க் கேயிரங்கி
இதயத் தொளிதுலங் கீடில் தயவோ டிலங்குமன்னாய்
மதியம் பிறைக்கொடி வானில் நுடங்கியே கூவியெங்கள்
விதியைக் கடத்தி மதியை விளைவித்த மெய்யம்மையே! (88)

மெய்யர் அனந்தர் வளர்கயி லாபுரி மாதவர்தாம்
துய்ய மனச்செல்வர் துந்துமி யும்குழல் பண்ணிசைய
செய்யநற் பாசுரம் அல்பகல் பாடி அனவரதம்
மெய்வணக் கம்புரிந் துய்குவர் அன்னைநின் மென்பதமே! (89)

அன்னைநின் மென்பதம் சார்ந்தவிப் பேதைக் கடைப்பிள்ளையை
நின்னடி யாரொடு கூட்டிவைத் தாயிதற் கேதுநிகர்
தென்னா டுடைய சிவபரம் சொற்சத்தி தேவியம்மே!
பொன்னரங் கத்தே பொதுநடம் செய்துயிர் உய்த்தனையே! (90)

உய்த்தனை உன்னடி நண்ணிய ஜீவரைத் தேவர்களாய்
வைத்தனை வான்பதத் தின்புற மாறாத வாழ்வருள்செய்
மெய்த்துணைத் தேவீ! விமலை விராட்சொரு பம்உடையாய்
மொய்த்துனை மண்ணவர் விண்ணவர் வாழ்த்த விளங்கினையே! (91)

விளங்கெழில் மெய்வழித் தாயுல கேழும் படைத்தனையே!
வளங்கொழித் தூட்டி வளர்த்தனை ஆருயிர் உய்ந்திடவே!
களங்கமில் தூநெறி காட்டினை காத்தனை பற்றினர்தம்
உளங்கனிந் தின்புற்று ஓங்கிடச் செய்தனை ஒண்மணியே! (92)

ஒண்மணி நின்திருச் சன்னிதி சார்ந்து உளங்கனிந்தோர்
விண்மணி யாயினர் வேதமெ லாமொரு மந்திரச்சொல்
பண்மணி யால்தெளி வுற்றனர் நற்றவப் பாடுபலன்
கண்மணித் தாய்தரு மெய்வரம் பெற்றேம் கதிநன்றதே (93)

நன்றெது தீதெது என்றே அறியாத நாயனெற்கு
பொன்றாத வாழ்வு வரந்தந்த பொன்னரங் கத்தம்மையே!
குன்றாத செல்வமும் கோதறு பாக்யமும் கோமதியே!
அன்றே தரமுடி வாக்கியின் றிங்குவந் தாண்டனையே! (94)


அனைத்துமாய் நின்றிலங் கம்மா அருளாழி ஆண்டருள்செய்
நினைத்துணை கொண்டன்றோ நித்திய வாழ்வும் வரம்பெருகும்
தனைத்துணை தந்து தருமம் நிலைபெறச் செய்தனையே
எனைத்தனக் கென்றினி தேற்ற தயவினுக் கென்கடவேன் (95)

கடமெடுத் தாய்விண் கதிர்கோடி சேர்ந்தோர் வடிவெனவே
இடமகல் ஞாலத்து எம்முயிர் உய்ய அருளமுதார்
நடமது செய்தனை நல்லமு தூட்டி நனிவளர்மெய்
தடமது காட்டும் தயாபரி தாளிணை தஞ்சமம்மா! (96)

தஞ்சம் புகுந்தவென் சென்னிநின் தாளணியாய்த் தரித்தென்
நெஞ்சம் புகுந்துறை நேரிழை நின்னருள் மாந்தியுய்ந்தேன்
அஞ்சேல் எனும்நின் அபயத் திருக்கரம் கண்டபின்னர்
பஞ்சம் எனக்கேது பார்பதித் தாய்மதி மெய்த்தெய்வமே! (97)

மெய்கொண்டு வந்தோர் வணிகம் புரிந்தனை லாபமொன்றே
கைகொண்டு தந்தனை காசினி ஜீவர் கடைத்தேறுமெய்
மைகொண்டு என்னை மயக்கிக் கடத்திஅந் நாட்டுவித்தாய்
உய்யென்று செய்தனை உத்தமி உன்தாள் அடைக்கலமே! (98)

அடைக்கலம் அன்னைநின் தாளே கதியாய் அடைந்தஎனை
படைக்கலம் கொண்டேமன் பாயாது காத்தப ராபரையே!
கடைக்குலக் கந்தையைப் பீதாம் பரமாய்க் கனிந்தணிந்தாய்
மடைக்கல வானமு தந்தந்த மெய்வழித் தாயம்மையே! (99)

தாயே எனின்பொரு ளாயே எடுத்தணைத் தாயேகனிந்
தாயே அருட்குரு வாயே அருள்கொடுத் தாயேநிறைந்
தாயே வரங்கொடுத் தாயேநி லைக்கவைத் தாயேதவத்
தாயே வழுத்தினேன் வாழிய வாழி தயாநிதியே! (100)

அருள் நூற்றந்தாதி இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!