திவ்வியப் பிரபந்த மணிமாலைகள் 108/108.இதயம் நெகிழ் மாலை

விக்கிமூலம் இலிருந்து

ஆதியே துணை

108 வகை சிற்றிலக்கியங்கள்
001.திரு அங்கமாலை
002.திரு அட்டகம்
003.திரு அட்ட மங்கலம்
✸004.ஆன்மராக மாலை
005.திரு அம்மானை
✸006.ஞானப் பேரரசர் திருவிருத்தம்
007.அண்ணல் அலங்கார பஞ்சகம்
008.திருவருட்சாலை ஆற்றுப்படை
009.திருஇணைமணிமாலை
010.அருள் இயன்மொழி வாழ்த்து
011.திரு இரட்டைமணி மாலை
012.அருள் இருபா இருபஃது
013.திரு உந்தியார்
014.திரு உலா
015.திரு உலா மடல்
✸016.மெய்ப்பயிர் உழத்திப் பாட்டு
✸017.கலியை வெல் உழிஞை மாலை
✸018.அருள் உற்பவ மாலை
019.திருப்பொன்னூஞ்சல்
020.திருவூர் இன்னிசை வெண்பா
021.திருவூர் நேரிசை வெண்பா
022.திருவூர் வெண்பா
023.அருள் எண் செய்யுள்
024.திருஎழுகூற்றிருக்கை
025.மெய்யூர் ஐந்திணைச் செய்யுள்
026.திரு ஒருபா ஒருபஃது
027.திரு ஒலியந்தாதி
✸028.நற்கடிகை வெண்பா
✸029.வான் கடைநிலை
✸030.திருக்கண்படை நிலை
031.சாலைக் கலம்பகம்
✸032.நன்காஞ்சி மாலை
033.தெய்வ காப்பியம்
034.திருக் காப்பு மாலை
035.பூவடிப் போற்றிகள்
036.விண்பாங்கரசர் தென்பாங்கு
037.ஞானக் குழமகன்
038.ஊறல்மலைக் குறமங்கை
039.எழில் மணிமுடி திருமலரடி வண்ணம்
✸040.அருட் கைக்கிளை
041.மெய் பெறு நிலை
042.திருவருட்கோவை
043.திருச்சதகம்
044.அருட் சாதகம்
045.வண்ணப்பூ
✸046.அறக்களவஞ்சி
047.செய்ந்நன்றி சாற்று
048.திருச் செவியறிவுறூஉ
049.திருத்தசாங்கம்
✸050.திருத்தசாங்கத்தயல்
051.அருள் தண்டக மாலை
052.அறம் வேண்டகம்
✸053.ஒளிர் தாரகை மாலை
✸054.அருட்சேனை மாலை
055.திருக்கண்ணெழில்
056.தெய்வத் திருவருளெம்பாவை
✸057.அறப்போர் மாலை
058.அறிதுயிலெடை நிலை
059.அன்பு விடு தூது
060.நற்றொகைச் செய்யுள்
✸061.அருள் நயனப் பத்து
062.எழில் நவமணிமாலை
063.சிவரத்தின மாலை
064.திரு நாம மாலை
065.அறம் நாற்பது
066.வான்மதியரசர் நான்மணி மாலை
067.அருள் நூற்றந்தாதி
✸068.நறு நொச்சி மாலை
069.பொன்னரங்கர் பண்ணலங்காரம்
070.தெய்வமணிப் பதிகம்
071.அருட் பதிற்றந்தாதி
✸072.அமுத பயோதரப் பத்து
073.யுக உதயப் பரணி
074.நல் சந்த மாலை
✸075.திரு பவனிக் காதல்
076.சாலையூர்ப் பள்ளு
077.நன்மதியரசர் பன்மணிமாலை
078.குரு திருவடி எழில் மணிமுடி
079.அருள்ஞானப் பிள்ளைத் தமிழ்
080.மெய்ப்புகழ்ச்சி மாலை
✸081.திருப் புறநிலை
✸082.அருள் புறநிலை வாழ்த்து
083.திருப்பெயர் இன்னிசை வெண்பா
084.திருப்பெயர் நேரிசை வெண்பா
085.தவத்ததிகாரம்
✸086.அருட்பெருமகிழ்ச்சி மாலை
✸087.திருப்பெருமங்கலம்
✸088.அறப்போர்க்கெழுவஞ்சி
089.நித்திய மங்கல வள்ளை
090.திருமடல்
091.மெய்ப்பொருள் மணிமாலை
092.மெய் முதுகாஞ்சி
093.இறைதிரு மும்மணிக் கோவை
094.அருள் மும்மணி மாலை
095.தவ மெய்க் கீர்த்தி
✸096.நல் வசந்த மாலை
✸097.திருவரலாற்று வஞ்சி
098.மறலியை வெல் வருக்கக் கோவை
099.உயர் வருக்க மாலை
✸100.கலியை வெல் வாகை மாலை
✸101.அருள் வாதோரண மஞ்சரி
102.திருவாயுறை வாழ்த்து
103.திரு விருத்தம்
✸104.ஞான விளக்கு நிலை
✸105.வீர வெட்சி மாலை
✸106.வெற்றிக் கரந்தை மஞ்சரி
107.வெற்றி மணி மாலை
✸108.இதயம் நெகிழ் மாலை

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதல் முறையாக, 96 வகை சிற்றிலக்கியங்களுள், இலக்கணம் மட்டுமே உள்ள 32 வகைகளுக்கு பாடப்பெற்ற புதிய சிற்றிலக்கியங்கள்.



✫ 108. வேனில் மாலை[தொகு]

இலக்கணம்:-

ஓர் ஆண்டின் பருவங்கள் ஆறு அவையாவன:-

கார் : ஆவணி, புரட்டாசி
கூதிர் (குளிர்) : ஐப்பசி, கார்த்திகை
முன்பனி : மார்கழி, தை
பின்பனி : மாசி, பங்குனி
இளவேனில் : சித்திரை, வைகாசி
முதுவேனில் : ஆனி, ஆடி

வேனிற் காலம் (கோடைகாலம்) வறட்சி மிக்கது. மலையும் மலையைச் சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலமும், காடும் காட்டைச் சார்ந்த நிலமும் ஆகிய முல்லை நிலமும் வேனிற் காலத்தே தம்தம் இயல்பில் திரிந்து வெயிற் கொடுமையால் பாலைவனம் போல் தோன்றும். எனவே வேனிற் காலம் பாலைத்திணைக்கு உரியதாகும். பாலைக்குரிய ஒழுக்கம் பிரிவு. தலைமக்கள் அதாவது தலைவனும் தலைவியும் (கணவனும் மனைவியும்) எவ்வாற்றானோ பிரிவுற்று துயருற்றுத் தன்னெழில் கெட்டு நிற்கும் திறத்தைக் கோடைகால இயற்கைச் சிதைவுகளோடு ஒப்புமைப்படுத்திப் பாடுவது வேனில் மாலை என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

வேனிலொடு முதிர் வேனிலும் புனைந்து
விளம்புதல் வேனில்மாலை ஆகும்
- முத்துவீரியம் 1062
அருவேனின் முதுவேனி லைச்சிறப்பித் தோத
லாகுமே வேனின் மாலை
- பிரபந்த தீபிகை 13
வேனில் மாலை இரு வேனிலைப் பாடலே
- பிரபந்த தீபம் 36
நடுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே. 
- தொல்காப்பியம்  - பொருளதிகாரம்  - 11

இப்பிரபந்த வகையான் எம்பெருமான் பிரம்மோதய மெய்வழிச் சாலை ஆண்டவர்களின் தேவியார் திருமதி சுலேகா பீவி அம்மையார் நம் தேவதேவேசரை மணந்தபோது அவர்கள் வாழ்வில் வசந்தம் வந்ததும், பின்னர் எம்சாமி துறவுபூண்டு எழுந்து பிரிந்து ஏகிய போது (வேனில் - கோடை) பிரிவுத் துன்பம் வந்து துயருழந்ததும் ஆகிய செய்தியைக் கூறுமுகத்தான் இப்பிரபந்தம் இயற்றப் பெறலாகிறது.

இதயம் நெகிழ் மாலை

காப்பு

நேரிசை வெண்பா

தேனில் குழைத்த செழுமொழியர் மெய்வழியர்
கானில் வரமருளும் கர்த்தரெம்மான் - வேனில்
திருமாலை பாட அருள்மாலை வேண்டித்
திருத்தாளைச் சூடும் சிரம்

நூல்

இன்னிசைக் கலிவெண்பா

வையகத்து மாந்தர்களே! வானகத்துத் தேவர்களே!
தையலெந்தன் வாழ்வியலைச் சற்றுரைப்பேன் கேளீரோ!
அன்பான தந்தையரே! ஆசைமிகு தாய்மாரே!
என்போலும் பெண்டிர் இளையோர் முதியோரே!
நன்காஞ்சி யாறு நலமாய் வளம்கொழிக்கும்
பொன்காஞ்சி நல்லூராம் பள்ளப்பட்டி அவ்வூரில்
செல்வச் செழிப்புடைய சீராளர் என்தந்தை
பல்லோரும் போற்றும் பண்பாளர் பொன்மனத்தார்
மக்கத்து ஹஜரத் மாண்பார் பெயருடையார்
தக்கார் குணம்சிறந்தார் தர்மர் எனையீன்றார் (10)
பத்துமா தம்சுமந்த பாங்கரசி பத்தினித்தாய்
முத்தாய் எனைவளர்த்த மாதுநல்லாள் என்அன்னை
செல்லக் கிளியாய்த் திருமகளாய் நான்பிறந்தேன்
எல்லையிலா அன்போ டெனைவளர்த்தார் பெற்றோரும்
பெற்றோர்எற் கிட்டபெயர் சுலேகா பீவிஎனும்
மற்றவரும் அப்பெயரால் மிக்க மகிழ்ந்தழைக்கும்
என்னோ டுடன்பிறந்தோர் யாருமில்லை ஆதலினால்
பொன்னாய் மணியாகப் போற்றி வளர்த்தார்கள்
கண்ணுள் மணியாகக் காத்து வளர்த்தார்கள்
பாசமெலாம் கொட்டியெனைப் பண்பாய் வளர்த்தார்கள் (20)
நேசமெலாம் காட்டிஇந்த நேரிழையைக் காத்தார்கள்
ஊரில் பெரிய உயர்ந்தமச்சு வீடெமது
பேரில் பெரியவர்காண் பெற்றுவளர் என்தந்தை
சொந்தமென நட்பென்ன சுற்றமென்ன ஓவாது
வந்தவரை எல்லாம் வரவேற் றுபசரிப்பார்
அணையா அடுப்பெமது யாவர்க்கும் அன்பாய்
இணையெவரும் கூறாத வண்ணம் விருந்திடுவார்
நாளொரு மேனியென பொழுதொரு வண்ணமுமாய்
ஆளாகி யானும் அழகாய் வளர்ந்திருந்தேன்
என்னழகை யானே எடுத்துரைத்தல் நன்றாமோ? (30)
அன்னையர் கன்னம்தொட்(டு) அன்புநெட்டி தான்முறிப்பார்
கண்பட்டுப் போகுமென்று திட்டி கழித்திடுவார்
பண்பட்ட தாய்மார்கள் பாங்காய் அருகணைப்பார்
இவ்வா றிருக்கும் இனியதொரு நாளையிலே
அவ்வூரை மார்க்கம் பட்டிஎன்று உரைத்தார்கள்
பெண்கேட்டுச் சான்றோர் பெரியோர்கள் வந்திருந்தார்
பண்பாட்டில் மிக்குப் பலகலையும் கற்றவராம்
கம்பெடுத்துச் சுற்றும் காளையராம் மாப்பிள்ளை
தெம்பும் திடமுடைய சீராளர் என்றார்கள்
முறையாய்த் தொழுகைதனை முன்னின்று செய்பவராம் (40)
மறையோதும் நல்லார் மதிப்புமிகப் பெற்றவராம்
நீதி முறைதவறா நேர்மைமிகு நல்லவராம்
வேத நெறிப்படியே வாழும் இளைஞரென்றார்
கட்டழகு மேனி கலைவல்லார் என்றார்கள்
தொட்டெவரும் பேசத் துணியாத ஆண்மையராம்
வட்ட நிலவுமுகம் வண்ண வடிவழகர்
எட்டிக்கிண றெல்லாம் எவ்வியவர் தாண்டுவராம்
வேங்கைவேட் டைநாயை வீழ்த்தியவர் என்றார்கள்
ஓங்கும் குணமுடைய உத்தமரென் றேயுரைத்தார்
மூத்தோரும் வந்து முறைகேட்டுச் செல்வாராம் (50)
பார்த்தோர்கள் பாராட்டும் பண்பாளர் என்றார்கள்
வாழும் வகைகூறும் வல்லவரென் றேபுகழ்ந்தார்
ஏழை எளியவரை இனிதாத ரிப்பாராம்
நம்பிவந்த பேர்களுக்கு நற்றுணையாய் நிற்பாராம்
'தம்பி'யென ஊரார் தனிப்பேர்கொண் டேயழைத்து
அன்புமிகக் காட்டும் ஆணழகர் என்றார்கள்
என்புருகப் பாட்டிசைக்கும் இன்குரலாம் அன்னவர்க்கு
எட்டினமட் டும்மக்கள் இவர்புகழைப் பேசுவராம்
தப்புத் தவறுகளைத் தான்திருத்தும் நல்லவராம்
இப்படியாய் அன்னவரை ஏதேதோ சொன்னார்கள் (60)
எப்படியென் சம்மதத்தை யாரிடம்போய்ச் சொல்லிடுவேன்
ஒப்பிஎன துள்மகிழ்ந்தேன் உள்ளூரப் பூரித்தேன்
செப்புமென துள்ளுணர்வைச் சிந்தைமகிழ் வெங்குரைப்பேன்
வாழ்வில் வசந்தமது வந்ததென நான்மகிழ்ந்தேன்
தாழ்வறியாச் செம்மல் தான்என் மணாளரென்று
எண்ணமெலாம் வண்ணம் எழிலாய் மலர்ந்திருந்தேன்
பண்ணழக ரைநேரில் பார்க்கத் துடிதுடித்தேன்
பெண்ணார்தம் ஆசைதனைப் பேசல் வெளியிலுண்டோ?
கண்ணாள ரைநேரில் காணவென்று காத்திருந்தேன்
அந்தநாள் வந்ததுகாண் சிந்தை களிதுளும்பச் (70)
சொந்தமவ ராகும் திருமணநாள் அந்நாளாம்
தோழியர்கள் கூடிவந்து தொட்டென்கன் னம்கிள்ளி
“வாழி நீ! கண்ணே வடிவழகர் உன்கணவர்
கொடுத்துவைத்த பெண்ணடிநீ கட்டழகர் மாப்பிள்ளை
எடுத்துவைத்த சிற்பமடி ஏறுபோல் ஆணழகர்
பஞ்சகல் யாணிப் பரியேறி வந்திடுங்கால்
நெஞ்சம் கிளுகிளுத்து நின்றதடி” என்றுரைத்தார்
மணமேடை மீதமர்ந்து மங்கலநாண் பூட்டும்
மணவாளர் பேரழகை மங்கைபார்த் தேன்நாணி
தோழியர்கள் தாமுரைத்த துண்மையென நான்தெளிந்தேன் (80)
வாழிய என்கணவர் வாழ்வெனக்கு வந்ததுகாண்
கண்குளிர என்னவரின் பேரழகைப் பார்த்துவந்தேன்
மண்குளிர வந்த மழைபோல்வர் என்பதிகாண்
கமலம் மலரக் கதிரவனாய் வந்தவரோ?
கமழும்அல் லிமலர வந்ததொரு வான்மதியோ?
மற்போரில் வல்லவராம், மற்றவரோ டென்னவர்தான்
சொற்போர் புரியுங்கால் சிந்தை கருவமுற்றேன்
எற்கமைந்த வாழ்வையெண்ணி இன்பமுற்று யானிருந்தேன்
நற்கணவர் வாய்த்தார் நன்றுநன்று என்றிருந்தேன்
பிறந்தகத்தை விட்டுப் புகுந்தமனை செல்லென்றார் (90)
மறந்தெங்கன் செல்வேன் வளர்த்தவரை விட்டுவிட்டு
கண்ணில்நீர் பொங்கக் கதறிஅழுது நின்றேன்
பெண்ணாய்ப் பிறந்தோர் கதியதுதான் என்றார்கள்
பாசம்இங் கேயிழுக்கப் பர்த்தாவந் தபுதிய
நேசம்அங் கேயிழுக்க நேரிழையான் என்செய்வேன்
தயிர்கடையும் மத்தின் கயிற்போய் வருவதுபோல்
உயிர்சற் றலைக்கழிந்தேன் உத்தமரூர் போய்ச் சேர்ந்தேன்
கணவர் மனைபுகுந்தேன் கண்ணாளரின் அன்பு
மணம்கமழ என்னை மகிழ்வாக வைத்திருந்தார்
கூரைவீ டென்றோர் குறிப்புரைத்தேன் அக்காலே (100)
கூரைதனை மாற்றி ஓட்டு வீடாக்கி விட்டார்
சற்றென் மனம்நோகத் தான்சகியார் என்கணவர்
சற்றும் பிரியாது சார்ந்திருப்பார் என்கொண்கன்
வேலைமேற் சென்றாலும் விரைவில் முடித்துவிட்டு
சோலைக் கிளிபோல் சிறகடித்து வந்தணைவார்
பொற்பதுமை என்றென்னைப் போற்றிக் களித்திருப்பார்
தற்பெருமை கொண்டேன் தனக்குள்ளே எண்ணியெண்ணி
இப்படியோர் நற்கணவர் யாருக்கும் கிட்டார்காண்
ஒப்பி எனக்கெனவே இறைவர் வழங்குகொடை
நெல்வா ணிகம்செய்ய நேரியர்தாம் நீள்தூரம் (110)
செல்வதெண்ணிச் சிந்தை சிறிதே கலங்கிநின்றேன்
அக்காலம் ஆயிழைநான் அன்பால் கருவுயிர்த்தேன்
சொக்கத்தங் கச்சிலையைச் சுகமாய் பிரசவித்தேன்
இறைவன் கொடுத்த இரண்டாம் பரிசிதுகாண்
மறைமுதல்வர் தந்த வரமிதென்று நான்மகிழ்ந்தேன்
என்னவர்தாம் எப்போதும் எங்கேசெல் லும்முன்னே
நன்னயமாய்ச் சூதானம் நன்குரைத்து நற்றுணைக்கு
அத்தக்காள் என்னும் அடுத்தவீட் டம்மாளை
மெத்தவும் தானழைத்து வைத்துச்சற் றேசென்று
ஏதேனும் யான்மறந்து விட்டேனோ என்றெண்ணும் (120)
தீதில்லா நன்னெறியே தேர்ந்தேகும் என்சாமி
சென்ற பணிமுடித்துச் சீக்கிரமாய்த் தாம்வந்து
குன்றா மணிவிளக்காம் குழந்தை தனைக்கொஞ்சும்;
தந்தையைத் தானுரித்து வைத்தாற்போன்ம் செல்லமதை
விந்தைமிகப் பார்த்து விதவிதமாய்ப் பாராட்டும்
எந்தன்பால் கொண்ட இணைபிரியா அன்பினுக்கு
எந்த விதத்தாலும் ஈடுரைக்க வொண்ணாது
இந்த விதமாக இன்பமுறு என்வாழ்வில்
வந்து வசந்தம் பொலிந்ததுகாண் தென்பொதிகைத்
தென்றல் தவழ்ந்துவந்து சீராட்டும் என்குடிலை (130)
மன்றல் மணவாழ்வில் வாய்த்தது நல்லதிர்ஷ்டம்
பூத்துக் குலுங்கிப் பொழில்மலர்ந்த பூங்காவாம்
காய்த்துக் கனிந்து கனிகுலுங்கும் நற்சோலை
இப்படியாய் நாங்கள் இணைபிரியா அன்றில்போல்
செப்பமுற இன்பம் சிறந்திருந்து வாழ்நாளில்
எங்கிருந்தோ வந்தார்காண் யாரோ ஒருபெரியார்
என்கணவர் அன்னவரை இனிதே உபசரித்தார்
வாருங்கள் என்று வரவேற்றேன் நான்பணிவாய்
நீரருந்தும் என்றும் நீரளித்து அன்னவரை
உண்ணுங்கள் கேழ்வரகு அப்பமதைத் தேன்தொட்டு (140)
வண்ணமுடன் இனிதாய் வழங்கினேன் ஆவின்பால்
என்னரச ரும்அவரும் ஏகிமண்டி யில்அமர்ந்து
என்னென்ன வோஅங் கினிதுஉரை யாடினர்காண்
ஊருலகச் செய்திகளும் உற்றரிது நேர்ந்தவையும்
பாருலகில் கண்டவெலாம் பற்பலவும் பேசினர்காண்
என்கணவர் ராஜாங்க யோகம் சிறந்ததென
என்னென்ன வோமேற்கோள் எடுத்து உரைத்தார்கள்
அப்பெரியார் அவ்வுரைக்கு ஊம்என்றொ ருகாலும்
செப்பிடுங்கால் நீட்டி ஊகூம்என் றோர்காலும்
சத்தம் கொடுத்துவிட்டு தாம்அமைதியாகிவிட்டார் (150)
எத்தாலே இப்பெரியார் ஏன்பேசா தாகிவிட்டார்
புரியவிலை யோநமது பேச்சும்யோ கம்மதுவும்
தெரியவிலை யோராஜாங் கயோகம் என்றுஎண்ணி
என்னவர்தான் அன்னவரை “என்ன பெரியவரே!
சொன்னதொரு ராஜாங்க யோகம் சரிதானே!
என்றிவரும் கேட்க அப்பெரியார் தாம்நிமிர்ந்து
“நன்று நரகேக நல்ல குறுக்குவழி
என்று இடியிடித்தாற் போலோர் மொழிபுகன்றார்
குன்றுதலை மேல்விழுந்தாற் போலானார் என்னவரும்
“ஞானக் கோவையெடுத்து நன்று புலஸ்தியர்சொல் (160)
தேனார் மொழிபடிமின் என்றார் படித்தவுடன்
என்ன உணர்ந்தாரோ என்கணவர் யானறியேன்
அன்னம் மயில்வாசி ஏறிக் கடவுளர்கள்
அன்னாடு சென்றதெல்லாம் உண்மையென்றார் அப்பெரியார்
சொன்னவுடன் அச்சொல் 'சுருக்'கென்று தைத்ததுவே
கேட்டவுடன் என்சாமி கிளர்ந்து உளம்தளிர்த்து
வேட்டகுரு இன்னவரே வானாட்டு வள்ளலென
எண்ணி மனம்கசிந்து எழுந்தார்கள் கையேந்தி
கண்ணீர் கசியக் கலங்கியொரு பாட்டிசைத்து
“என்னையேற் றாள்க எனவேண்டி நின்றார்கள் (170)
அன்னவரும் வேண்டியதை அங்கீ கரித்தார்கள்
அவ்வூரின் நத்தத்தேர் அடியோரம் தானமர்ந்து
செவ்வை உபதேசம் செய்தாராம் யானறியேன்
ஏதோ நடக்குதென்று எண்ணிக் கலக்கமுற்றேன்
தீதோ நலமோ தெரியாது நானிருந்தேன்
அடுத்தநாள் என்னவர்தாம் யாரார்க்கு எவ்வளவு
கொடுத்திடவும் வேண்டிநின்ற கூலியெலாம் தாம்கொடுத்தார்
அவ்வூரின் மக்கள் அருங்குழ வியைப்பார்த்து
செவ்வையாய் வைத்தமொய்யைத் திருப்பிக் கொடுத்தார்கள்
'திக்'கென்று நெஞ்சு திகைத்து மயங்கி நின்றேன் (180)
எக்கணத்து என்னாமோ ஏதாமோ என்றெண்ணி
அஞ்சிக் கலங்கிநின்றேன் அன்பான என்னவர்தம்
நெஞ்சுக்குள் ஏதோ நிச்சயித்துக் கொண்டார்போன்ம்
அப்பெரியார் இங்குவந்த அந்நாள் முதலாக
ஒப்பியவர் என்பால் உரையாடல் தாம்மறந்தார்
செம்பொற் சிலையைச் செழுங்குழந்தைச் செல்வத்தை
அன்ம்பால் விளைந்திட்ட ஆரமுதைக் கையேந்தி
கொஞ்சி மகிழ்ந்து குலவிச் சிரிக்கவில்லை
நெஞ்சில் அணைக்கவில்லை நன்முத்தம் ஆடவில்லை
எப்போது வீடுவந்து என்சாமி சேர்ந்தாலும் (190)
அப்படியே அஞ்சுகத்தை அழகுகரம் தொட்டெடுத்து
முத்தம் பொழிவார்கள் முகம்முகத்தில் சேர்ப்பார்கள்
சித்தம் கனிந்துநெஞ்சில் சேர்த்தணைத்துக் கொள்வார்கள்
“பால்குடித்த தாஎந்தன் பச்சைக் கிளி”யென்பார்
“கால்அசைத்த தாஎன்றன் கட்டாணி முத்”தென்பார்
“பொக்கைவாய் தான்திறந்து புன்சிரிப்புக் காட்டியதா?”
“நற்கை அசைத்து நளினமிகக் காட்டியதா?”
“தூக்கத்தி லேசிரித்துத் துக்கத்தை மாற்றியதா?”
“ஏக்கத்தி லேயழுது நின்நெஞ் சுருக்கியதா?”
என்றெல்லாம் கேட்பாரே எங்கேபோ யிற்றன்பு (200)
குன்றாச்சோ நெஞ்சம் குலவி மகிழவில்லை
ஏறிட்டு என்னை எதுவுமே கேட்கவில்லை
கூறிட்டு நெஞ்சைக் குலைத்ததுகாண் அக்குறிப்பு
கோரமாய் என்னைக் கூறாக்கும் நாளதிலே
நேரமே தாமெழுந்து நினைவிலே தோநினைத்து
'காலமே வா'என்றேன் காணோமே அன்னவனை
கோலமாய் என்கணவர் கூறியிவ் வாறேகும்
என்றும் பழையமுது ஏற்றுவெளிச் செல்வழக்கம்
இன்றவ்வா றேலாமல் ஏகினார் என்னவரும்
கண்கூச்சம் மாறவெனக் கண்மணியைத் திண்ணையிலே (210)
எண்ணெய் தடவியங்கே இட்டிருந்தேன் அங்கேகி
இடது கரமெடுத்து இளநெஞ்சின் மீதுவைத்துத்
தடவிக் கொடுத்தேதோ தாம்சொல்லிக் கொண்டார்கள்
வாயிற் கதவோரம் வஞ்சிமகள் நின்றிருந்தேன்
வாய்வார்த்தை பேசவில்லை மற்றெனையும் பார்க்கவில்லை
சேய்தன்னைத் தொட்டேதோ சொன்னவர்க்கு என்னவர்க்கு
தாய் நின்ற கோலம் தெரியவில்லை என்செய்தேன்
சென்றார் எனைப்பிரிந்து சென்றதெங்கே யானறியேன்
நின்றேன் நெடுநேரம் நிலையாய் எனைமறந்து
கட்டிஎனை யணைத்துக் கனமுத்தம் தந்தவர்க்கு (220)
எட்டிக்காய் ஆனேனோ ஏனென்னைத் தான்பிரிந்தார்?
பச்சைக் குழந்தைதனைப் பரிதவிக்க விட்டுவிட்டு
இச்சையெதன் மேல்கொண்டு ஏகினார் யானறியேன்
கட்டாணி முத்தென்று கண்மணியைக் கொஞ்சினவர்
எட்டியெங்கு போனாரோ ஏதுசெய்வேன் ஏதுசெய்வேன்
சோலை வனமாய்ச் செழித்திருந்த என்வாழ்வு
பாலை வனமாச்சே பாருலகீர்! கேளீரோ!
பிரிந்தென்னை ஏகப் பொருந்தியதே தாங்களுளம்
என்னுயிர்நீ என்றுரைத்தீர் இவ்வுயிரை இங்குவிட்டு
மன்னவரே எங்கே மனங்கூடிச் சென்றீரோ? (230)
சாமி உமைப்பிரிந்து சற்றிருக்கக் கூடவில்லை
பூமி வெடித்திந்தப் பேதையைவி ழுங்கவில்லை
கொடுத்துவத்த கோதையென்று குலவி மகிழ்ந்தீரே!
இடித்தஇடி என்தலையில் ஏனோ மடிக்கவில்லை
என்றும் உனைப்பிரியேன் என்றுரைத்த என்னவரே!
இன்று எனைப்பிரிந்தீர் ஏனுரைப்பீர் மன்னவரே
முத்தாடிக் கொஞ்சி முகம் சேர்த்த இக்குழவி
அத்தா எனக்கூவி ஆரை அழைக்குமையா
தந்தை யும்மடியில் தவழத் தலைநீவும்
விந்தைச் சுகமிந்த மென்குழந்தைக் கேதினிமேல் (240)
என்அத்தா என்அத்தா என்றுபிற சேய்சொலும்கால்
தன்அத்தா என்றிந்தத் தங்கம்யா ரைக்காட்டும்
ஓடிப்போய்க் கால்தழுவி உவந்து முகம்பார்க்க
நாடும் குழந்தைக்கு நான்யாரைக் காட்டிடுவேன்
ஆடிவரும் பல்லக்கு அசைந்துவரும் தேர்போலே
நாடி நடைபயில்கால் நான்யாரைக் கூவிடுவேன்
நாளை வளர்ந்து நடைபயிலும் காலமதில்
ஆளும் எனதத்தா ஆரெனவே கேட்கும்கால்
யாரைக் குறிப்பிடுவேன் அவ்வெண்ணம் இல்லாமல்
சீரைக் குலைத்துவிட்டு சென்றீரே மன்னவரே (250)
குஞ்சுதனைப் பருந்து கொத்தியெடுத் தேகுதல்போல்
வஞ்சகமாய் அப்பெரியார் வந்தழைத்துச் சென்றாரோ?
வந்த பெரியவர்தான் மையால் மயக்கினரோ?
எந்தவிதம் கூட்டி எங்கழைத்துச் சென்றாரோ?
அந்தோஎன் சாமிஅடி வயிற்றில் தீவைத்தீர்
நொந்ததுஎன் நெஞ்சு நொறுங்கியது என்வாழ்வு
ஒன்றும் தெரியாத ஊமைப்பெண் எந்தனுக்கு
இன்றிந்தத் துன்பம் ஏன்தந்தீர் மன்னவரே!
பிஞ்சுக் குழந்தைதனைப் பிரித்திருக்கச் சம்மதமோ?
கொஞ்சிமகி ழாதிருக்கக் கூடியதோ தங்களுளம் (260)
ஈருடல்நாம் ஓருயிரென் றின்பமிகச் சொன்னீரே
ஆருயிரை விட்டு அகன்றீர் மனம்துணிந்து
தேன்சுவையைத் தீங்கனியைச் செல்லத்தை விட்டுவிட்டு
ஏன்பிரிந்தீர் எங்குசென்றீர் என்கணவா என்னுயிரே!
கிளிபறந்த கூடாய்க் கிடக்கின்றேன் பேதைநான்
ஒளியிழந்த வீடாய் உழல்கின்றேன் இங்கே நான்
உயிர்பிரிந்த மேனி கலைபிரிந்த மானானேன்
துயர்சுமந்த மாது தோகையிழந்த மயில்
அரசிழந்த கோட்டை அன்பிழந்த சேயானேன்
சிரசிழந்த தேகம் சீரிழந்த பெண்ணானேன் (270)
பெற்றோர் பிரிவால் மயக்கெனக்கு வந்ததில்லை
உற்றோர் பிரிவால் உளம்வருந்தி நின்றதில்லை
எற்றே உமைப்பிரிந்து யானினிமேல் வாழ்ந்திருப்பேன்
உயிரைப் பிரிந்துவிட்டேன் உடலிருந்து என்னபயன்
அயர்ந்து துயருழந்தேன் ஆரெனக்கு ஆதரவு
இலையும் கிளையிழந்த இம்மரத்தால் என்னபயன்
தலைவரை யான்பிரிந்து தனித்துவிடப் பட்டேனே
பர்த்தா தனைப்பிரிந்த பத்தினிமார் எத்தனையோ
இத்தரணி தன்னில் இருப்பார்கள் என்றாலும்
சித்தம் தெளியவில்லை சிந்தை வலுவுமில்லை (280)
எத்தான் உயிர்வாழ்ந்து இருப்பேனோ இப்பேதை
முன்வைத்த காலையவர் பின்வைக்க மாட்டாரே
தன்னுள்ளம் ஏற்றதனைத் தான்தொடர்ந்து சென்றாரே
மீளஇனி வாரார்காண் மேலவரைப் பின்தொடர்ந்தார்
ஆளும் அரசில்லையே மாளவரும் நாளென்றோ?
தந்தைதாய் சுற்றம் தமர்சிலரைத் தான்தெரியும்
எந்த விதத்தால்நான் எப்படித்தான் வாழ்ந்திருப்பேன்
என்னவரே உங்கள் இனியமுகம் தானறிவேன்
தன்னந் தனியேயித் தாரணியில் என்செய்வேன்
வரவும் செலவதுவும் வாங்கல் கொடுக்கல் (290)
தரமெதுவும் இந்தத் தையல் அறிந்திலனே
குணமிகுந்த கோமானே கொற்றவரே உம்மைக்
கணமும் பிரிந்திருக்கக் கூடவில்லை என்சாமி
எப்படியோ போவென்று ஏந்திழையை விட்டுவிட்டு
இப்படிநீர் செல்லவென்று எத்தனைநாள் எண்ணிநின்றீர்
இவ்வாறு மாதரசி எண்ணியுளம் நொந்திடுங்கால்
செவ்வை நெறியில் துறவேற்று ஏகுமெங்கோன்
தன்பெருமை தானறியாத் தாட்டீகர் தண்ணனியார்
மன்னவரும் தன்னுள் வருத்தமின்றிச் செல்லவில்லை
தேனே! கனியே! செழுங்குழந்தைச் சீதனமே! (300)
மானே! மணிவிளக்கே! மாற்றறியா பொன்மகவே!
மாதே! வருத்தமுறேல் மகவே கலக்கமுறேல்
தீதாய் உமைவிட்டுச் செல்லவில்லை அன்புடைய
மாதாவும் நீயும் மனங்கசிய வேண்டாங்காண்
மேதினிக்கு நான்வந்த காரணமொன்றுண் டம்மே!
சீதனமாய் மெய்வழியைத் தாரணிக்குத் தந்திடவும்
மாதனமாய்ச் சாவா வரமருள வந்துற்றேன்
ஒருதாய் ஒருமகவுக் காகயான் இங்கிருந்தால்
விருதாவாய் யானிங் கவதரித்த காரணம் போம்
பல்லாயி ரம்மக்கள் பாருலகி லேபிறந்து (310)
எல்லாரும் காத்து இருக்கின்றார் தீராத
பொல்லாப் பிணியென்னும் மாரணத்தை மாற்றியிங்கே
நல்லார்க்கு பேரின்ப சித்திப் பெருவாழ்வு
சாவா வரங்கள் தந்திடவும் வந்துற்றேன்
ஓவாத் தவமியற்றி உன்னதமாம் சன்னதங்கள்
பெற்றுக் கலியமர்த்தி புத்தம் புதியயுகம்
உற்றுவர நற்றுணையாய் ஓங்கும் பணியுளது
எற்காக வென்றேதான் ஏரார்ந்த வான்தனிகை
பொற்கோ வருகைதந்தார் பூதலத்தே மெய்தழைய
அகில வலஞ்செய்து அண்டிவந்த மக்களெல்லாம் (320)
சகல வரம்பெறவும் தந்தருளும் வல்லபத்தை
என்றனுக்கு ஈய இனிதுதவ மாற்றிடவும்
குன்றில் குகையில் கூட்டிவைத்துச் சன்னதங்கள்
பெற்றிடவும் செய்யப் பெரும் பொறுப்பை என்சிரசில்
உற்றிடவும் வைக்க ஊழி விதிவழியே
எத்தனையோ இன்னல்கள் யானடைய வேண்டுங்காண்
முத்தனைய மாணாக்கர் வந்துறுவார் என்பாலே
ஒன்றுகுலம் ஒன்றுதெய்வம் என்ற பெருஞ்சிறப்பை
நன்றினிது செய்து நாட்டும் கொடியேற்றம்
ஒன்றிரண் டல்லபணி உற்றுவரும் ஆயிரமாய் (330)
சென்று முடித்திடவே செல்லுகிறேன் செல்லுகிறேன்
உடல்பிரிந்து போனாலும் உயிர்பிரியா தேஇருப்பேன்
திடங்கொண்டு சிந்தைத் தெளிவோடு வாழ்ந்திருங்கள்
தாயாரும் வேறுடல் கொண் டன்பாய்என் பால்வருவாய்
சேய்நீ சிலகாலம் சென்றபின் வந்தணைவாய்
எக்காலும் நீங்கள் இனிது மகிழ்ந்திருங்கள் (336)
புக்கில்யான் ஒன்றென் றறி.

இதயம் நெகிழ் மாலை இனிது நிறைவு பெற்றது.

குரு வாழ்க! குருவே துணை!

எல்லாம் ஆண்டவர்கள் தயவு!