திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/1.கடவுள்வாழ்த்து
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
திருக்குறள் பரிமேலழகர் உரை
[தொகு]பிழைநீக்கிய மெய்ப்பதிப்பு
[தொகு]அதிகாரம்: 01 கடவுள் வாழ்த்து
[தொகு]அதிகார முன்னுரை:
அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல், எடுத்துக்கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள், இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக. என்னை? சத்துவ முதலிய குணங்களான் மூன்றாகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளரோடு இயைபுண்டாகலான். அம்மூன்று பொருள்களையும் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.
திருக்குறள்: 01 (அகரமுதல)
[தொகு]அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
- அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
- பகவன் முதற்றே உலகு.
தொடரமைப்பு: எழுத்து எல்லாம் அகர முதல, உலகு ஆதிபகவன் முதற்று.
- பரிமேலழகர் உரை
இதன் பொருள்:
- எழுத்து எல்லாம் அகர முதல = எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன;
- உலகு ஆதி பகவன் முதற்று = அதுபோல உலகம் ஆதிபகவனாகிய1 முதலை உடைத்து.
பரிமேலழகர் உரை விளக்கம்:
- இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை2. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான்அன்றி நாதமாத்திரையாகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான்அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க.
- தமிழ் எழுத்துக்கேயன்றி வடவெழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்தெல்லாம்' என்றார்.
- ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு.
- ‘உலகு’ என்றது, ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தாற் காணப்படாத கடவுட்கு உண்மை கூறவேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே உலகு' என உலகின்மேல் வைத்துக்கூறினார். கூறினாரேனும்,உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க.
- ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது.
- இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.
1. ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னும் ஆறுக்கும் பகம் என்னும் பெயர் உண்மையால், பகவன் என்பதற்கு இவ்வறுகுணங்களையும் உடையோன் என்பது பொருள் ஆகும் என்பர்.
2. உவமானத்தையும் உவமேயத்தையும் தனித்தனி நிறுத்தி, இடையில் உவம உருபு கொடாமல் கூறுவது எடுத்துக்காட்டு உவமையணி.
திருக்குறள்: 02 (கற்றதனால்)
[தொகு]கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழா ரெனின்.
- கற்றதனால் ஆய பயன் என்கொல் வால் அறிவன்
- நல் தாள் தொழாஅர் எனின்.
தொடரமைப்பு: கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்:
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்.) கற்றதனால் ஆய பயன் என்கொல் = (எல்லா நூல்களையும் கற்றவர்க்கு) அக்கல்வி அறிவினாலாய பயன் யாது?
- வால் அறிவன் நற்றாள் தொழாஅர் எனின் = மெய்யுணர்வினை உடையானது நல்ல தாள்களைத் தொழாராயின்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- 'எவன்' என்னும் வினாப்பெயர் 'என்' என்றாய், ஈண்டு, இன்மை குறித்து நின்றது.
- 'கொல்' என்பது அசைநிலை.
- பிறவிப்பிணிக்கு மருந்தாதலின் 'நற்றாள்' என்றார்.
- ஆகமவறிவிற்குப் பயன் அவன் தாளைத் தொழுது பிறவியறுத்தல் என்பது, இதனாற் கூறப்பட்டது.
திருக்குறள்: 03 (மலர்மிசை)
[தொகு]மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)
மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நிலம் மிசை நீடு வாழ்வார். (௩)
தொடரமைப்பு: மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் நிலம் மிசை நீடு வாழ்வார்
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்:) மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார் = மலரின்கண்ணே சென்றவனது மாட்சிமைப்பட்ட அடிகளைச் சேர்ந்தார்;
- நிலம் மிசை நீடு வாழ்வார் = (எல்லா உலகிற்கும்) மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- அன்பான் நினைவாரது உள்ளக் கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து சேறலின், 'ஏகினான்' என இறந்த காலத்தாற் கூறினார்; என்னை?
- "வாராக் காலத்து நிகழுங்காலத்து
- மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி
- யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
- விரைந்த பொருள வென்மனார் புலவர்"1 என்பது ஓத்தாகலின்.
- இதனைப் "பூமேனடந்தான்" என்பதோர் பெயர்பற்றிப் பிறிதொரு கடவுட்கு ஏற்றுவாரும் உளர்.
- சேர்தல்- இடைவிடாது நினைத்தல்.
1.தொல்காப்பியம்- வினையியல், 44.
திருக்குறள் 04 (வேண்டுதல்)
[தொகு]வேண்டுதல்வேண் டாமை யிலானடி சேர்ந்தார்க்
கியாண்டு மிடும்பை யில (04)
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (௪)
தொடரமைப்பு: வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
- இதன்பொருள்
- வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு= (ஒரு பொருளையும்) விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு;
- யாண்டும் இடும்பை இல= எக்காலத்தும் (பிறவித்) துன்பங்கள் உளவாகா.
- விளக்கம்
- பிறவித்துன்பங்களாவன: தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப்பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான்1 வருந்துன்பங்கள். அடி சேர்ந்தார்க்கும் அவ்விரண்டும்2 இன்மையின், அவை காரணமாக வரும் மூவகைத் துன்பங்களும் இலவாயின.
1. தன்னைப்பற்றி வருவன-ஆத்யாத்மிகம் எனப்படும்; பிற உயிர்களைப்பற்றி வருவன- ஆதிபௌதிகம் எனப்படும்; தெய்வத்தைப் பற்றி வருவன - ஆதிதைவிகம் எனப்படும்.
2. வேண்டுதலும் வேண்டாமையும்.
திருக்குறள்: 05 (இருள்சேர்)
[தொகு]- இருள்சே ரிருவினையுஞ் சேரா விறைவன் இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
- பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. (05) பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு. (௫)
தொடரமைப்பு: இருள் சேர் இரு வினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்.) இருள் சேர் இருவினையும் சேரா = மயக்கத்தைப் பற்றிவரும் (நல்வினை தீவினை என்னும்) இரண்டுவினையும் உளவாகா;
- இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு = இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினார் இடத்து.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- இன்னதன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் 'அவிச்சை'யை, இருள் என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையுஞ் சேரா' என்றும் கூறினார்.
- இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே 'பொருள்சேர் புகழ்' எனப்பட்டது.
- புரிதல்- எப்பொழுதும் சொல்லுதல்.
திருக்குறள்:06 (பொறிவாயில்)
[தொகு]- பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க பொறிவாயில் ஐந்து அவித்தான் பொய்தீர் ஒழுக்கம்
- நெறிநின்றார் நீடுவாழ் வார்" (06) நெறி நின்றார் நீடு வாழ்வார். (௬)
தொடரமைப்பு: பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்கம் நெறி நின்றார் நீடு வாழ்வார்.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்.) பொறி வாயில் ஐந்து அவித்தான் = (மெய் வாய் கண் மூக்குச் செவி என்னும்) பொறிகளை வழியாக உடைய ஐந்து அவாவினையும் அறுத்தானது;
- பொய் தீர் ஒழுக்கம் நெறி நின்றார் = மெய்யான ஒழுக்க நெறியின்கண் வழுவாது நின்றார்;
- நீடு வாழ்வார் = (பிறப்பின்றி) எக்காலத்தும் (ஒருதன்மையராய்) வாழ்வார்.
- பரிமேலழகர் உரை விளக்கம்:
- புலன்கள் ஐந்தாகலான், அவற்றின்கட் செல்கின்ற அவாவும் ஐந்தாயிற்று.
- ஒழுக்கநெறி ஐந்தவித்தானாற் சொல்லப்பட்டமையின், ஆண்டை ஆறனுருபு - செய்யுட்கிழமைக்கண் வந்தது, "கபிலரது பாட்டு" என்பது போல♥.
- இவை நான்கு பாட்டானும், இறைவனை நினைத்தலும், வாழ்த்தலும், அவன்நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவர் என்பது கூறப்பட்டது.
♥ ஆறாம் வேற்றுமை உருபு ‘அது’ என்பதாம். ஆறாம் வேற்றுமை, தற்கிழமை பிறிதின் கிழமைப் பொருள்களில் வரும். கிழமை என்றால் ‘உடைமை’ என்றுபொருள். எனது புத்தகம்- இது பிறிதின் கிழமை. எனது கை- இது தற்கிழமை. இங்கு, ஐந்தவித்தானாகிய இறைவன் கூறிய ஒழுக்கநெறி என்பதாம். கபிலர் உரைத்த பாட்டு, கபிலர் பாட்டு; அதாவது, கபிலரது பாட்டு. அதுபோல, ஐந்தவித்தான் உரைத்த நெறி, ஐந்தவித்தான் நெறி; அதாவது, ஐந்தவித்தானது பொய்தீர் ஒழுக்கநெறி. எனவே இது செய்யுட்கிழமை ஆயிற்று.
திருக்குறள்: 07 (தனக்குவமை)
[தொகு]- தனக்குவமை யில்லாதான் றாள்சேர்ந்தார்க் கல்லான் தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
- மனக்கவலை மாற்ற லரிது.(07) மனம் கவலை மாற்றல் அரிது. (௭)
தொடரமைப்பு:தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் மனம் கவலை மாற்றல் அரிது.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = (ஒருவாற்றானும்) தனக்கு நிகர்இல்லாதவனது, தாளைச் சேர்ந்தார்க்கல்லது;
- மனம் கவலை மாற்றல் அரிது = மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- "உறற்பால- தீண்டா விடுத லரிது"# (நாலடியார்,109) என்றாற் போல, ஈண்டு ‘அருமை’ இன்மைமேல்
- நின்றது.
- தாள் சேராதார், பிறவிக்கு ஏதுவாய காம வெகுளி மயக்கங்களை மாற்ற மாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்.
#இதன்பொருள்: ‘ஊழ்வினையினால் வருகின்ற நன்மைதீமைகள் ஒருவனை அடையாமல் விடுவது இல்லை’. நாலடியார் ‘பழவினை’ அதிகாரச்செய்யுள்.
திருக்குறள்: 08 (அறவாழி)
[தொகு]- "அறவாழி யந்தணன் றாள்சேர்ந்தார்க் கல்லாற் அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
- பிறவாழி நீந்த லரிது" (08) பிற ஆழி நீந்தல் அரிது. (௮)
தொடரமைப்பு: அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் பிற ஆழி நீந்தல் அரிது.
- பரிமேலழகர் உரை:
- (இதன் பொருள்) அறம் ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் = அறக் கடலாகிய அந்தணனது, தாளாகிய புணையைச் சேர்ந்தார்க்கல்லது;
- பிற ஆழி நீந்தல் அரிது = (அதனிற்) பிறவாகிய கடல்களை நீந்தல் அரிது.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- அறம், பொருள், இன்பமென உடன் எண்ணப்பட்ட மூன்றனுள் அறத்தை முன்னர்ப் பிரித்தமையான், ஏனைப் பொருளும் இன்பமும் ‘பிற’வெனப்பட்டன.
- பல்வேறு வகைப்பட்ட அறங்கள் எல்லாவற்றையும் தனக்குவடிவாக உடையன் ஆகலின், 'அறவாழி அந்தணன்' என்றார். 'அறவாழி' என்பதைத் தருமசக்கரமாக்கி, அதனையுடைய அந்தணன் என்று உரைப்பாரும் உளர்.
- அப்புணையைச் சேராதார் கரைகாணாது அவற்றுள்ளே அழுந்துவர் ஆகலின், 'நீந்தலரிது' என்றார். இஃது ஏகதேச உருவகம்❖.
❖உருவகம் என்பது, உருவக அணி. அதாவது, உவமை எனும் உவமானத்தையும், உவமேயத்தையும் ஒன்றென்பது தோன்ற வைத்து உரைப்பது. ‘ஏகதேச உருவகம்’ என்பது உவமானம், உவமேயம் என்ற இரண்டில் ஒன்றை உருவகித்து, மற்றொன்றை உருவகப்படுத்தாமல் விடுவது. இங்குப் பொருள், இன்பங்களைக் கடலாக உருவகித்தவர், அதனைக் கடக்க உதவும் தாளைப் புணையாகக் கூறாமை.
திருக்குறள்: 09 (கோளில்)
[தொகு]- "கோளில் பொறியிற் குணமிலவே யெண்குணத்தான் கோள் இல் பொறியின் குணம் இலவே எண் குணத்தான்
- றாளை வணங்காத் தலை."(09) தாளை வணங்காத் தலை. (௯)
தொடரமைப்பு: கோள் இல் பொறியின் குணம் இலவே, எண் குணத்தான் தாளை வணங்காத் தலை
- பரிமேலழகர் உரை:
- கோள் இல் பொறியின் குணம் இல = (தத்தமக்கு ஏற்ற புலன்களைக்) கொள்கையில்லாத பொறிகள் போலப் பயன் படுதலை உடையவல்ல;
- எண்குணத்தான் தாளை வணங்காத் தலை = எண்வகைப்பட்ட குணங்களை உடையானது தாள்களை வணங்காத தலைகள்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- எண்குணங்களாவன: தன்வயத்தனாதல், தூயவுடம்பினன்ஆதல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும்உணர்தல், இயல்பாகவே பாசங்களின்நீங்குதல், பேரருள்உடைமை, முடிவில் ஆற்றலுடைமை, வரம்பில் இன்பமுடைமை எனஇவை. இவ்வாறு சைவ ஆகமத்துக் கூறப்பட்டது.
- 'அணிமா'†வை முதலாக உடையன எனவும், 'கடையிலா அறிவை'‡ முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
- ‘காணாத கண் முதலியனபோல, வணங்காத தலைகள் பயனில’வெனத் தலைமேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், இனம் பற்றி வாழ்த்தாத நாக்களும் அவ்வாறே பயனில என்பதூஉம் கொள்க.
- இவை மூன்று பாட்டானும், அவனை நினைத்தலும் வாழ்த்தலும் வணங்கலுஞ் செய்யாவழிப் படும் குற்றம் கூறப்பட்டது.
† அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராப்தி, பிராகாம்யம், ஈசத்வம், வசித்வம் எனும் எட்டு. இது சித்தர் மரபு.
‡ கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம், நாமமின்மை, கோத்திரமின்மை, ஆயு இன்மை, அழியா இயல்பு எனும் எட்டு. இது அருகர் -சமணர்- கோட்பாடு
திருக்குறள்: 10 (பிறவிப்)
[தொகு]- பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தா பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
- ரிறைவ னடிசேரா தார்: இறைவன் அடி சேராதார்.
- பரிமேலழகர் உரை:
- (இதன்பொருள்) இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் = இறைவன் அடி என்னும் புணையைச் (சேர்ந்தார்), பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்;
- சேராதார் நீந்தார் = (அதனைச்) சேராதார், நீந்தமாட்டாராய் (அதனுள்) அழுந்துவர்.
தொடரமைப்பு:இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவி பெரு கடல் நீந்துவர், சேராதார் நீந்தார்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்:
- காரண காரியத் தொடர்ச்சியாய்க் கரையின்றி வருதலின், 'பிறவிப்பெருங்கடல்' என்றார். 'சேர்ந்தார்' என்பது சொல்லெச்சம்¶.
- உலகியல்பை நினையாது, இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவியறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்கு அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனால் நியமிக்கப்பட்டன.
¶ பாட்டில் சொல் குறைந்து நிற்பது சொல்லெச்சம். ‘சேர்ந்தார்’ என்ற சொல் மூலத்தில் இல்லை. வருவித்து உரைக்கப்பெற்றது.
- 'தெய்வப்புலமைத் திருவள்ளுவர்' இயற்றிய திருக்குறள் அறத்துப்பால்
- முதல் அதிகாரமாகிய 'கடவுள்வாழ்த்து'ம், 'பரிமேலழகர் உரை'யும் முற்றுப்பெற்றன.