திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/13.அடக்கமுடைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


இல்லறவியல்[தொகு]

அதிகாரம் 13 அடக்கமுடைமை[தொகு]

பரிமேலழகரின் அதிகார முன்னுரை
அஃதாவது, மெய், மொழி மனங்கள் தீநெறிக்கட் செல்லாது அடங்குத லுடையனாதல்.அஃது ஏதிலார் குற்றம்போல் தன் குற்றமும் காணும் நடுவுநிலைமையுடையாற்கு ஆதலின், இது நடுவுநிலைமையின்பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 121 (அடக்கம்அமர)[தொகு]

அடக்க மமரரு ளுய்க்கு மடங்காமை
யாரிரு ளுய்த்து விடும்.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அடக்கம் அமரருள் உய்க்கும்= ஒருவனை அடக்கமாகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்;
அடங்காமை ஆர் இருள் உய்த்து விடும்= அடங்காமையாகிய பாவம் தங்குதற்கரிய இருளின்கட் செலுத்தும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இருள் என்பது ஓர் நரகவிசேடம்.
"எல்லாம், பொருளிற் பிறந்துவிடும்"(நான்மணிக்கடிகை-07) என்றாற் போல `உய்த்துவிடும் என்பது ஒருசொல்லாய் நின்றது.

திருக்குறள் 122 (காக்க)[தொகு]

காக்க பொருளா வடக்கத்தை யாக்க
மதனினூஉங் கில்லை யுயிர்க்கு
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊஉங்கு இல்லை உயிர்க்கு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை= உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வமில்லை;
அடக்கத்தைப் பொருளாக் காக்க= ஆகலான் அவ் வடக்கத்தை உறுதிப்பொருளாகக் கொண்டு அழியாமற் காக்க.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உயிர் என்பது சாதிஒருமை. அஃது ஈண்டு மக்களுயிர்மேல் நின்றது; அறிந்தடங்கிப் பயன் கொள்வது அதுவேயாகலின்.

திருக்குறள் 123 (செறிவறிந்து)[தொகு]

செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்
தாற்றி னடங்கப் பெறின்
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
அறிவு அறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்= அடங்குதலே நமக்கு அறிவாவது என்று அறிந்து நெறியானே ஒருவன் அடங்கப்பெறின்;
செறிவு அறிந்து சீர்மை பயக்கும்= அவ்வடக்கம் நல்லோரான் அறியப்பட்டு அவனுக்கு விழுப்பத்தைக் கொடுக்கும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அறிதல் இரண்டனுள், முன்னது - செயப்பாட்டு வினை. இல்வாழ்வானுக்கு அடங்கு நெறியாவது, மெய்ம்முதன் மூன்றும் தன்வயத்தனாதல்.

திருக்குறள் 124 (நிலையிற்)[தொகு]

நிலையிற் றிரியாது அடங்கியான றோற்ற
மலையினு மாணப் பெரிது
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்= இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி;
மலையினும் மாணப் பெரிது= மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'திரியாது அடங்குதல்' பொறிகளாற் புலன்களை நுகராநின்றே அடங்குதல். மலை ஆகுபெயர்.

திருக்குறள் 125 (எல்லார்க்கும்)[தொகு]

எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
பணிதல் எல்லார்க்கும் நன்றாம்= பெருமிதம் இன்றி அடங்குதல் எல்லார்க்கும் ஒப்ப நன்றே யெனினும்;
அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து= அவ்வெல்லாருள்ளுஞ் செல்வம் உடையார்க்கே வேறொரு செல்வமாஞ்சிறப்பினையுடைத்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பெருமிதத்தினைச் செய்யுங் கல்வியுங் குடிப்பிறப்பும் உடையார், அஃதின்றி அவை தம்மானே அடங்கியவழி அவ் அடக்கம் சிறந்து காட்டாதாகலின், 'செல்வர்க்கே செல்வந் தகைத்து' என்றார்.
செல்வத்தகைத்து என்பது மெலிந்து நின்றது. பொது என்பாரையும் உடம்பட்டுச் சிறப்பாதல் கூறியவாறு.
இவை ஐந்து பாட்டானும் பொதுவகையான் அடக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள் 126 (ஒருமையுள்)[தொகு]

ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றி
னெழுமையு மேமாப் புடைத்து
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஆமைபோல் ஒருமையுள் ஐந்து அடக்கல் ஆற்றின்= ஆமைபோல ஒருவன் ஒருபிறப்பின்கண் ஐம்பொறிகளையும் அடக்கவல்லனாயின்;
எழுமையும் ஏமாப்பு உடைத்து= அவ்வன்மை அவனுக்கு எழுபிற்ப்பின்கண்ணும் அரணாதலை உடைத்து.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஆமை ஐந்து உறுப்பினையும் இடர் புகுதாமல் அடக்குமாறுபோல இவனும் ஐம்பொறிகளையும் பாவம் புகுதாமல் அடக்கவேண்டும் என்பார் 'ஆமைபோல்` என்றார். ஒருமைக்கட் செய்த வினையின்பயன் எழுமையுந் தொடருமென்பது இதனான் அறிக.
இதனான் மெய்யடக்கம் கூறப்பட்டது.

திருக்குறள் 127 (யாகாவாராயினு)[தொகு]

யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு
யாகாவா ராயினும் நா காகக காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப் பட்டு.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
யாகாவாராயினும் நா காகக= தம்மாற் காக்கப்படுவன எல்லாவற்றையும் காக்கமாட்டாராயினும் நாவொன்றனையும் காக்க;
காவாக்கால் சொல் இழுக்குப்பட்டுச் சோகாப்பர்= அதனைக் காவாராயின் சொற்குற்றத்தின்கட் பட்டுத் தாமே துன்புறுவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
யாவென்பது அஃறிணைப் பன்மை வினாப்பெயர். அஃது ஈண்டு எஞ்சாமை உணரநின்றது. முற்றும்மை விகாரத்தாற் றொக்கது. சொற்குற்றம் சொல்லின்கட் டோன்றும் குற்றம். அல்லாப்பர், செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர் என்பது ஒருசொல்.

திருக்குறள் 128 (ஒன்றானுந்)[தொகு]

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும்
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாதாகி விடும்.
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
ஒன்றானும் தீ சொல் பொருட்பயன் உண்டாயின்= தீயவாகிய சொற்களின் பொருள்களாற் பிறர்க்குவருந் துன்பம் ஒன்றாயினும் ஒருவன்பக்கல் உண்டாவதாயின்;
நன்று ஆகாதாகி விடும்= அவனுக்குப் பிற அறங்களால் உண்டான நன்மை தீதாய் விடும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தீய சொல்லாவன, தீங்குபயக்கும் பொய், குறளை, கடுஞ்சொல் என்பன. 'ஒருவன் நல்லதாகச் சொல்லும் சொற்களின் கண்ணே ஒன்றாயினும் தீச்சொற்படும் பொருளினது பயன் பிறர்க்கு உண்டாவதாயின்' என்று உரைப்பாரும் உளர் #.

#(இவ்வாறு கூறுபவர் மணக்குடவர்)

திருக்குறள் 129 (தீயினாற்)[தொகு]

தீயினாற் சுட்டபுண் ணுள்ளாறு மாறாதே
நாவினாற் சுட்ட வடு
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.
பரிமேலழகர் உரை விளக்கம்
ஆறிப்போதலால், தீயினாற் சுட்டதனைப் புண் என்றும், ஆறாது கிடத்தலால் நாவினாற் சுட்டதனை வடு என்றும் கூறினார். தீயும், வெவ்வுரையும் சுடுதல் தொழிலான் ஒக்குமாயினும், ஆறாமையால் தீயினும் வெவ்வுரை கொடிது என்பது போதரலின், இது 'குறிப்பான் வந்த வேற்றுமை அலங்காரம்'.
இவை மூன்று பாட்டானும் மொழியடக்கம் கூறப்பட்டது.

திருக்குறள் 130 (கதங்காத்து)[தொகு]

கதங்காத்துக் கற்றடங்க லாற்றுவான் செவ்வி
யறம்பார்க்கு மாற்றி னுழைந்து
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
கதம் காத்துக் கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி= மனத்தின்கண் வெகுளி தோன்றாமல் காத்துக் கலவியுடையனாய் அடங்குதலை வல்லவனது செவ்வியை;
அறம் பார்க்கும் ஆற்ிறன் நுழைந்து= அறக்கடவுள் பாராநிற்கும் அவனை அடையும்நெறியின்கண் சென்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அடங்குதல் மனம் புற்த்துப் பரவாது அறத்தின்கண்ணே நிற்றல். 'செவ்வி' தன்குறை கூறுதற்கேற்ற மனமொழி முகங்கள் இனியனாம் காலம். இப்பெற்றியானை அறம் தானே சென்று அடையும் என்பதாம்.
இதனானே மனவடக்கம் கூறப்பட்டது.