திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/6.வாழ்க்கைத்துணைநலம்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் - இல்லறவியல்

அதிகாரம்: 06 வாழ்க்கைத்துணைநலம்[தொகு]

பரிமேலழகர் அதிகாரவிளக்கம்
வாழ்க்கைத்துணைநலம்: அஃதாவது, அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

திருக்குறள்: 51 (மனைத்தக்க)[தொகு]

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்||மனைத் தக்க மாண்பு உடையள் ஆகித் தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.(01)||வளம் தக்காள் வாழ்க்கைத் துணை. (௧)

தொடரமைப்பு: மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் வளம் தக்காள் வாழ்க்கை துணை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளம் தக்காள் = மனையறத்திற்குத் தக்க, நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள்;
வாழ்க்கைத் துணை = அதற்குத் துணை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
நற்குணங்களாவன: துறந்தார்ப்பேணலும்,விருந்தயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின.
நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டிற்றொழி்ல்@ வன்மையும், ஒப்புரவு செய்தலும்# முதலாயின.
வருவாய்க்குத் தக்கவாழ்க்கையாவது முதலையறிந்து அதற்கியைய அழித்தல்.
இதனால் இவ்விரண்டு நன்மையுஞ்சிறந்தன வென்பது கூறப்பட்டது.


@.அட்டில் தொழில்- சமையல் தொழில்.

#.ஒப்புரவு செய்தல்- உலகநடையை அறிந்து அதற்கு ஏற்றபடி செய்தல்.

திருக்குறள்: 52 (மனைமாட்சி)[தொகு]

மனைமாட்சி யில்லாள்க ணில்லாயின் வாழ்க்கை||மனை மாட்சி இல்லாள் கண் இல் ஆயின் வாழ்க்கை
யெனைமாட்சித் தாயினு மில்.(02)|| ||எனை மாட்சித்து ஆயினும் இல். (௨)

தொடரமைப்பு: மனை மாட்சி இல்லாள் கண் இல் ஆயின் வாழ்க்கை எனை மாட்சித்து ஆயின்உம் இல்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) மனைமாட்சி இல்லாள் கண் இல் ஆயின் = மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள், (ஒருவன்) இல்லாளிடத்து இல்லையாயின்;
வாழ்க்கை எனைமாட்சித்தாயினும் இல் = அவ்வில்வாழ்க்கை, (செல்வத்தான்) எத்துணை மாட்சிமைத்தாயினும் (அஃது) உடைத்தன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘இல்’ என்றார், பயன்படாமையின்.

திருக்குறள்: 53 (இல்லதென்)[தொகு]

இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ||இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
னில்லவண் மாணாக் கடை. (03)||இல்லவள் மாணாக் கடை. (௩)

தொடரமைப்பு: இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என்? இல்லவள் மாணாக் கடை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் = (ஒருவனுக்கு) இல்லாள், நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது?
இல்லவள் மாணாக் கடை உள்ளது என் = அவள் அன்னளல்லாக்கால் உள்ளது யாது?
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘மாண்பு’ எனக் குணத்தின்பெயர், குணிமேல் நின்றது.
இவை யிரண்டுபாட்டானும், இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே பிறவல்ல வென்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 54 (பெண்ணிற்)[தொகு]

பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்|| பெண்ணின் பெருந்தக்க யா உள கற்பு என்னும்
திண்மையுண் டாகப் பெறின். (04)||திண்மை உண்டாகப் பெறின். (௪)

தொடரமைப்பு: பெண்ணின் பெருந்தக்க யா உள, கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின்.


பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) பெண்ணின் பெருந்தக்க யா உள = (ஒருவனெய்தும் பொருள்களுள்) இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவையுள;
கற்பு என்னும் திண்மை யுண்டாகப் பெறின் = (அவள்மாட்டுக்) கற்பு என்னும் கலங்காநிலைமை யுண்டாகப்பெறின்?
பரிமேலழகர் உரைவிளக்கம்
கற்புடையாள்போல அறமுதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிறவின்மையின், ‘யாவுள’ வென்றார்.
இதனாற் கற்புநலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள்: 55 (தெய்வந்தொழா)[தொகு]

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்||தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை. (05) ||பெய் எனப் பெய்யும் மழை. (௫)

தொடரமைப்பு: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என, மழை பெய்யும்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் பெய் என = (பிற) தெய்வந் தொழாது (தன்தெய்வமாகிய) கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள் பெய்யென்று சொல்ல;
மழை பெய்யும் = மழை பெய்யும்.
பரிமேலழகர் உரை விளக்கம்

தெய்வந் தொழுதற்கு மனந் தெளிவது, துயில் எழுங் காலத்தாகலின் 'தொழுதெழுவாள்' என்றார். தொழாநின்று என்பது, 'தொழுது' எனத் திரிந்து நின்றது.தெய்வந்தான் ஏவல் செய்யும் என்பதாம்.

இதனான், கற்புடையவளது ஆற்றல் கூறப்பட்டது.

திருக்குறள்: 56 (தற்காத்து)[தொகு]

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற||தன் காத்து தன் கொண்டான் பேணித் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். (06)||சொல் காத்துச் சோர்வு இலாள் பெண். (௬)

தொடரமைப்பு: தன் காத்து தன் கொண்டான் பேணித் தகை சான்ற சொல் காத்துச் சோர்வு இலாள் பெண்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்): தற்காத்துத் தற்கொண்டான் பேணி = (கற்பினின்றும் வழுவாமல்) தன்னைக் காத்துத், தன்னைக் கொண்டவனையும் (உண்டி முதலியவற்றால்) பேணி;
தகைசான்ற சொல் காத்து = (இருவர் மாட்டும்) நன்மையமைந்த புகழ் நீங்காமற் காத்து;
சோர்வு இலாள் பெண் = (மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினுங்) கடைப்பிடியுடையாளே பெண்ணாவாள்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தன்மாட்டுப் புகழாவது, வாழுமூர் கற்பால் தன்னைப் புகழ்வது.
சோர்வு = மறவி.
இதனால் கற்புடையாளது சிறப்புக் கூறப்பட்டது.

(¶தற்புகழ்தற் சிறப்பு என்றும் பாடபேதம்).

திருக்குறள்: 57 (சிறைகாக்கும்)[தொகு]

சிறைகாக்குங் காப்பெவன் செய்யு மகளிர்||சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை. (07)|| நிறை காக்கும் காப்புஏ தலை. (௭)

தொடரமைப்பு: மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்? நிறை காக்கும் காப்புஏ தலை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) மகளிர் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் = மகளிரைத் தலைவர் சிறையாற் காக்குங் காவல் என்னபயனைச் செய்யும்?
நிறைகாக்கும் காப்பே தலை = அவர் (தமது) நிறையாற் காக்கும் காவலே தலையாய காவல்.
பரிமேலழகர் உரை விளக்கம்
சிறை - மதிலும் வாயில்காவலும் முதலாயின.
நிறை - நெஞ்சைக் கற்புநெறியினிறுத்தல்.
காவலிரண்டினும் நிறைக்காவலில்வழி ஏனைச்சிறைக்காவலாற் பயனில்லை யென்பார், 'நிறைகாக்குங் காப்பே தலை' யென்றார். ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள்: 58 (பெற்றாற்)[தொகு]

பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்||பெற்றாற் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழு முலகு. (08) ||புத்தேளிர் வாழும் உலகு. (௮)

தொடரமைப்பு: பெண்டிர் பெற்றான் பெறின், புத்தேளிர் வாழும் உலகு பெரும் சிறப்புப் பெறுவர்


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) பெண்டிர் பெற்றாற் பெறின் = பெண்டிர், (தம்மை) எய்திய கணவனை (வழிபடுதல்) பெறுவராயின்;
புத்தேளிர்வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் = புத்தேளிர் வாழுமுலகின்கண் (அவராற்) பெருஞ்சிறப்பினைப் பெறுவர்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'வழிபடுத' லென்பது சொல்லெச்சம்.
இதனால் தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிராற் பேணப்படுவரென்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 59 (புகழ்புரிந்)[தொகு]

புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை யிகழ்வார்மு||புகழ் புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார் முன்
னேறுபோற் பீடு நடை. (09)||ஏறு போல் பீடு நடை. (௯)

தொடரமைப்பு: புகழ் புரிந்த இல் இலோர்க்கு இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை இல்லை


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) புகழ் புரிந்த இல் இலோர்க்கு = புகழை விரும்பிய இல்லாளை யில்லாதார்க்கு;
இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை இல்லை = (தம்மை) இகழ்ந்துரைக்கும் பகைவர்முன் சிங்கவேறு போல நடக்கும் பெருமிதநடை இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘புரிந்த’ வென்னும் பெயரெச்சத்து அகரம் விகாரத்தாற்றொக்கது. பெருமிதமுடையானுக்குச் சிங்கவேறு நடையான் உவமமாகலின் 'ஏறுபோல்' என்றார்.
இதனான், தகைசான்ற சொற்காவாவழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.

திருக்குறள்: 60 (மங்கலமென்ப)[தொகு]

மங்கல மென்ப மனைமாட்சி மற்றத||மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
னன்கல னன்மக்கட் பேறு. (10)||நன் கலம் நன் மக்கள் பேறு. (௰)

தொடரமைப்பு: மங்கலம் என்ப மனை மாட்சி, அதன் நன் கலம் நன் மக்கள் பேறு.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) மங்கலம் என்ப மனைமாட்சி = (ஒருவற்கு) நன்மையென்று சொல்லுவர் (அறிந்தோர்), மனையாளது நற்குண நற்செய்கைகளை;
அதன் நன்கலம் (என்ப) நன்மக்கட் பேறு = அவைதமக்கு நல்ல அணிகலமென்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘அறிந்தோர்’ என்பது, எஞ்சிநின்றது. மற்று அசைநிலை.
இதனால் வாழ்க்கைத்துணைக்கு ஆவதோர் அணிநலங் கூறி வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் 'வாழ்க்கைத்துணைநலம்' எனும் அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.