உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/37.அவாவறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


துறவறவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 37 அவாவறுத்தல்

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவு நின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின், வேதனைபற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேற் பழைய பயிற்சிவயத்தான் நினைவு செல்லுமன்றே, அந்நினைவும் அவிச்சையெனப் பிறவிக்கு வித்தாமாகலின், அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள்: 361 (அவாவென்ப)

[தொகு]
அவாவென்ப வெல்லா வுயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து (01)
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து.
இதன்பொருள்
எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து= எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து; அவா என்ப= அவா என்று சொல்லுவர் நூலோர்.
விளக்கம்
உடம்பு நீங்கிப்போங்காலத்து அடுத்தவினையும், அதுகாட்டும் கதிநிமித்தங்களும், அக்கதிக்கண் அவாவும், உயிரின்கண் முறையே வந்து உதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டு செல்லுமாகலான், அதனைப் 'பிறப்பீனும் வித்து' என்றும், கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மைதிரியும் உறசர்ப்பிணி அவசர்ப்பிணி என்னும் காலவேறுபாட்டினும் அது வித்தாதல் வேறுபடாமையின் 'எல்லாஉயிர்க்கும் எஞ்ஞான்றும்' என்றும், இஃது எல்லாச்சமயங்கட்கும் ஒத்தலான் 'என்ப' என்றும் கூறினார். இதனால் பிறப்பிற்கு அவா வித்தாதல் கூறப்பட்டது.

குறள்: 362 (வேண்டுங்கால்)

[தொகு]
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும் (02)
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.
இதன்பொருள்
வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்= பிறப்புத்துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும்; அது வேண்டாமை வேண்ட வரும்= அப்பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானேயுண்டாம்.
விளக்கம்
அநாதியாகத் தான் பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களால் துன்பமுற்று வருகின்றமையை உணர்ந்தவனுக்கு ஆசை இன்பத்தின் கண்ணேயாகலிற் பிறவாமையை 'வேண்டும்' என்றும், ஈண்டைச் சிற்றின்பம் கருதி ஒருபொருளை அவாவின் அது பிறப்பீனும் வித்தாய்ப் பின்னும் முடிவில்லாத துன்பமே விளைத்தலின் அது 'வேண்டாமை வேண்ட வரும்' என்றும் கூறினார். பிறவாமையின் சிறப்புக் கூறிப் பின் அது வரும்வழி கூறத்தொடங்குகின்றமையின் 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

குறள்: 363 (வேண்டாமையன்ன)

[தொகு]
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டுமஃதொப்ப தில் (03)
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை
ஆண்டும் அஃது ஒப்பது இல்.
இதன்பொருள்
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை= ஒரு பொருளையும் அவாவாமையை ஒக்கும் விழுமிய செல்வம் காணப்படுகின்ற இவ்வுலகின்கண் இல்லை; ஆண்டும் அஃது ஒப்பது இல்= இனி அவ்வளவேயன்று, கேட்கப்படுகின்ற துறக்கத்தின்கண்ணும் அதனை ஒப்பதில்லை.
விளக்கம்
மக்கள்செல்வமும் தேவர்செல்வமும் மேன்மேல்நோக்கக் கீழாதல் உடைமையின், தனக்கு மேலில்லாத வேண்டாமையை 'விழுச்செல்வம்' என்றும், அதற்கு இரண்டு உலகினும் ஒப்பது இன்மையின் 'அஃதொப்பதில்லை' என்னும் கூறினார். ஆகமஅளவை போலாது காட்சி அளவையான் எல்லாரானும் தெளியப்படுதலின், மக்கள் செல்வம் வகுத்து முற்கூறப்பட்டது.
பிறவாமைக்கு வழியாமெனவும், விழுச்செல்வமாம் எனவும் வேண்டாமையின் சிறப்பு இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

குறள்: 364 (தூஉய்மை)

[தொகு]
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும் (04)
தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும்.
இதன்பொருள்
தூஉய்மை என்பது அவாவின்மை= ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவாஇல்லாமை; அது வாய்மை வேண்ட வரும்= அவ்வவாஇல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம்.
விளக்கம்
வீடாவது உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதலாகலின், அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்துத் 'தூய்மையென்பது அவாவின்மை' என்றும், மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரான் மெய்ம்மை என்றும் கூறினார். 'மற்று' மேலையதுபோல வினைமாற்றின்கண் வந்தது. 'வேண்டுதல்', இடைவிடாது பாவித்தல். அவாவறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.

குறள்: 365 (அற்றவர்)

[தொகு]
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர் (05)
அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையர்
அற்றாக அற்றது இலர்.
இதன்பொருள்
அற்றவர் என்பார் அவா அற்றார்= பிறவி அற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள்; மற்றையார் அற்றாக அற்றது இலர்= பிற ஏதுக்கள் அற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போல் பிறவியற்றிலர்.
விளக்கம்
இதனால் அவாவறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும், எதிர்மறை முகத்தானும் கூறப்பட்டது.

குறள்: 366 (அஞ்சுவதோரும்)

[தொகு]
அஞ்சுவ தோரு மறனே யொருவனை
வஞ்சிப்ப தோரு மவா (06)
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.
இதன்பொருள்
ஒருவனை வஞ்சிப்பது அவா= மெய்யுணர்தல் ஈறாகிய காரணங்கள் எல்லாம் எய்தி அவற்றான் வீடு எய்தற்பாலனாய ஒருவனை மறவிவழியாற் புகுந்து பின்னும் பிறப்பின்கண்ணே வீழ்த்துக் கெடுக்கவல்லது அவா; அஞ்சுவதே அறன்= ஆகலான், அவ்வவாவை அஞ்சி்க் காப்பதே துறவறமாவது.
விளக்கம்
'ஓரு'மென்பன அசைநிலை. அநாதியாய்ப் போந்த அவா, ஒரோவழி வாய்மைவேண்டலை யொழிந்து பராக்காற் காவானாயின் அஃதிடமாக அவன் அறியாமற் புகுந்து பழைய இயற்கையாய் நின்று பிறப்பினை உண்டாக்குதலான், அதனை 'வஞ்சிப்பது' என்றார். காத்தலாவது, வாய்மைவேண்டலை இடைவிடாது பயின்று அது செய்யாமற் பரிகரித்தல். இதனால் அவாவின் குற்றமும், அதனைக் காப்பதே அறம் என்பதூஉம் கூறப்பட்டன.

குறள்: 367 (அவாவினை)

[தொகு]
அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும் (07)
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்.
இதன்பொருள்
அவாவினை அற்ற அறுப்பின்= ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக்கெடுக்க வல்லனாயின்; தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும்= அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை தான் விரும்புநெறியானே உண்டாம்.
விளக்கம்
கெடாமை பிறவித்துன்பங்களால் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினையென்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதியொருமை. 'தான் விரும்புநெறி' மெய்வருந்தா நெறி. அவாவினை முற்றஅறுத்தானுக்கு வேறு அறம் செய்யவேண்டா; செய்தன எல்லாம் அறமாம் என்பது கருத்து.
இதனால் அவாவறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

குறள்:368 (அவாவி்ல்லார்க்)

[தொகு]
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும் (08)
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
இதன்பொருள்
அவா இல்லார்க்குத் துன்பம் இல்லாகும்= அவா இல்லாதார்க்கு வரக்கடவதொரு துன்பமுமில்லை; அஃது உண்டேல் தவாஅது மேன்மேல் வரும்= ஒருவற்குப் பிற காரணங்கள் எல்லாம் இன்றி அஃதுஒன்றும் உண்டாயின், அதனானே எல்லாத் துன்பங்களும் முடிவின்றி இடைவிடாமல் வரும்.
விளக்கம்
உடம்பு முகந்துநின்ற துன்பம் முன்பே செய்துகொண்டதாகலின், ஈண்டுத் 'துன்பம்' என்றது இதுபொழுது அவாவாற் செய்து கொள்வனவற்றை. 'தவாஅது மேன்மேல் வரும்' என்றதனான் மூவகைத் துன்பங்களுமென்பது பெற்றாம்.
இதனான் அவாவே துன்பத்திற்குக் காரணம் என்பது கூறப்பட்டது.

குறள்: 369 (இன்பமிடை)

[தொகு]
இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின் (09)
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.
இதன்பொருள்
அவா என்னும் துன்பத்துள் துன்பங் கெடின்= அவாவென்று சொல்லப்படுகின்ற மிக்க துன்பம் ஒருவற்குக் கெடுமாயின்; ஈண்டும் இன்பம் இடையறாது= அவன் வீடுபெற்ற வழியேயன்றி உடம்போடு நின்றவழியும் இன்பம் இடையறாது.
விளக்கம்
துன்பத்துள் துன்பம் ஏனைத்துன்பங்கள் எல்லாம் இன்பமாக வருந்துன்பம். விளைவின்கண்ணேயன்றித் தோற்றத்தின்கண்ணும் துன்பம் ஆகலின், இவ்வாறு கூறப்பட்டது. காரணத்தைக் காரியமாக உபசரித்து 'அவாவென்னுந் துன்பத்துள் துன்பம்' என்றும், அது கெட்டார்க்கு மனந் தடுமாறாது நிரம்பி நிற்றலான், 'ஈண்டும் இன்பம் இடையறாது' என்றும் கூறினார். இனி, 'ஈண்டும்' என்பதற்குப் பெருகும் என்பாரும் உளர்1.
இதனான் அவாவறுத்தார் வீட்டின்பம் உடம்பொடு நின்றே எய்துவர் என்பது கூறப்பட்டது.
1.மணக்குடவர்.

குறள்: 370 (ஆராவியற்கை)

[தொகு]
ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும் (10)
ஆரா இயற்கை அவா நீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.
இதன்பொருள்
ஆரா இயற்கை அவா நீப்பின்= ஒருகாலும் நிரம்பாத இயல்பினை உடைய அவாவினை ஒருவன் நீக்குமாயின்; அந்நிலையே பேரா இயற்கை தரும்= அந்நீப்பு அவனுக்கு அப்பொழுதே எஞ்ஞான்றும் ஒரு நிலையனாம் இயல்பைக் கொடுக்கும்.
விளக்கம்
நிரம்பாமையாவது, தாமேயன்றித் தம்பயனும் நிலையாமையின் வேண்டாதனவாய பொருள்களை வேண்டி மேன்மேல் வளர்தல். அவ்வளர்ச்சிக்கு அளவின்மையின், நீத்தலே தக்கது என்பது கருத்து. களிப்புக் கவற்சிகளும், பிறப்புப் பிணிமூப்பிறப்புக்களும் முதலாயினவின்றி உயிர் நிரதிசயவின்பத்ததாய் நிற்றலின், வீட்டினைப் 'பேராவியற்கை' என்றும், அஃது அவா நீத்தவழிப் பெறுதல் ஒருதலையாகலின் 'அந்நிலையே தரும்' என்றும் கூறினார்.
"நன்றாய் ஞானங் கடந்துபோய் நல்லிந் திரிய மெல்லாமீர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும்பெரும்பாழ் உலப்பி லதனை யுணர்ந்துணர்ந்து
சென்றாங் கின்பத் துன்பங்கள் செற்றுக் களைந்து பசையற்றால்
அன்றே யப்போ தேவீடு மதுவே வீடு வீடாமே"2

என்பதும் இக்கருத்தே பற்றி வந்தது. இந்நிலைமை யுடையவனை வடநூலார் சீவன்முத்தன் என்ப.

இதனால் வீடாவது இதுவென்பதூஉம், அஃது அவாவறுத்தார்க்கு அப்பொழுதே உளதாம் என்பதூஉம் கூறப்பட்டன.
2.திருவாய்மொழி, 78ஆம் திருப்பதிகம்- 6

துறவறவியல் முற்றிற்று