திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/8.அன்புடைமை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


இல்லறவியல்[தொகு]

அதிகாரம்:8 அன்புடைமை[தொகு]

பரிமேலழகரின் அதிகார முன்னுரை

அன்புடைமை:

அஃதாவது, அவ்வாழ்க்கைத்துணையும் புதல்வரும் முதலிய தொடர்புடையார்கட் காதலுடையனாதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். இல்லறம் இனிது நடத்தலும், பிறவுயிர்கண் மேல் அருள்பிறத்தலும், அன்பின் பயனாகலின், இது வேண்டப்பட்டது. வாழ்க்கைத்துணைமேல் அன்பில்வழி இல்லற மினிது நடவாமை

"அறவோர்க் களித்தலு மந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலுந் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலு மிழந்த வென்னை" (சிலப்பதிகாரம்-கொலைக்களக் காதை, வரிகள்:71-73) என்பதனானும்,

அதனாலருள் பிறத்தல் "அருளென்னு மன்பீன் குழவி" (திருக்குறள்- பொருள்செயல்வகை, 757) என்பதனானும் அறிக.

திருக்குறள்: 71 (அன்பிற்கு)[தொகு]

'அன்பிற்கு முண்டோ வடைக்குந்தா ழார்வலர் ( )'அன்பிற்கும் உண்டுஓ அடைக்கும் தாழ் ஆர்வலர்

'புன்கணீர் பூசல் தரும். (01)'புல் கண் நீர் பூசல் தரும்.

தொடரமைப்பு: அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ? ஆர்வலர் புன்கண் நீர் பூசல் தரும்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ = அன்பிற்கும் (பிறரறியாமல்) அடைத்து வைக்குந் தாழுளதோ?
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் = (தம்மாலன்பு செய்யப்பட்டாரது துன்பங்கண்டுழி) அன்புடையார்கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே (உள் நின்ற அன்பினை எல்லாரும்) அறியத் தூற்றும் (ஆதலான்).
பரிமேலழகர் உரை விளக்கம்
உம்மை, சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு எய்தாதாயினும், அனுமானவளவையான் வெளிப்படுமென்பதாம்.
இதனான் அன்பினதுண்மை கூறப்பட்டது.

திருக்குறள்: 72 (அன்பிலா)[தொகு]

அன்பிலா ரெல்லாந் தமக்குரிய ரன்புடையா |அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
ரென்பு முரியர் பிறர்க்கு. )2) |என்பும் உரியர் பிறர்க்கு. (௨)

தொடரமைப்பு: அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர், அன்பு உடையார் என்பும் பிறர்க்கு உரியர்.

பரிமேலழகர் உரை
இதன்பொருள்) அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் = அன்பிலாதார் (பிறர்க்குப் பயன்படாமையின்) எல்லாப் பொருளானுந் தமக்கே யுரியர்;
அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர் = அன்பு உடையார், (அவற்றானேயன்றித் தம்) உடம்பானும் பிறர்க்குரியர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்

ஆன் உருபுகளும், பிரிநிலை ஏகாரமும் விகாரத்தாற் றொக்கன. ‘என்பு’ ஆகுபெயர். என்புமுரிய ராதல்,

"தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
றபுதி யஞ்சிச் சீரை புக்கோன்" (புறநானூறு, 43) முதலாயினார்கட் காண்க.

திருக்குறள்: 73 (அன்போடி)[தொகு]

அன்போ டியைந்த வழக்கென்ப வாருயிர்க் | அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
கென்போ டியைந்த தொடர்பு. (03) |என்போடு இயைந்த தொடர்பு. (௩)

தொடரமைப்பு: ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு, அன்போடு இயைந்த வழக்கு என்ப.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு = (பெறுதற்கு) அரிய மக்களுயிர்க்கு உடம்போடுண்டாகிய தொடர்ச்சியினை;
அன்போடு இயைந்த வழக்கு என்ப = அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயனென்று சொல்லுவர் அறிந்தோர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறப்பினதருமை, பிறந்தவுயி்ர் மேலேற்றப்பட்டது. 'இயைந்த' வென்பது உபசாரவழக்கு. 'வழக்கு' ஆகுபெயர். உடம்போடியைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற்பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்றென்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை யென்றாயிற்று.

திருக்குறள்: 74 (அன்பீனு)[தொகு]

அன்பீனு மார்வமுடைமை யதுவீனு |அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பென்னு நாடாச் சிறப்பு. (01) |நண்பு என்னும் நாடாச் சிறப்பு. (௪

தொடரமைப்பு: அன்பு ஆர்வம் உடைமை ஈனும், அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும்

பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) அன்பு ஆர்வமுடைமை ஈனும் = (ஒருவனுக்குத் தொடர்புடையார்மாட்டுச் செய்த) அன்பு, (அத்தன்மையாற் பிறர்மாட்டும்) விருப்பமுடைமையைத் தரும்;
அது நண்பு என்னும் நாடாச் சிறப்பு ஈனும் = அவ்விருப்பமுடைமைதான் (இவற்குப் பகையும் நொதுமலுமில்லையாய்) யாவரும் நண்பு என்று சொல்லப்படும் அளவிறந்த சிறப்பினைத் தரும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'உடைமை' உடையனாந் தன்மை. யாவரும் நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.

திருக்குறள்: 75 (அன்புற்)[தொகு]

அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத் |அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
தின்புற்றா ரெய்துஞ் சிறப்பு. (05) |இன்பு உற்றார் எய்தும் சிறப்பு (௫)

தொடரமைப்பு: அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப, வையகத்து இன்பு உற்றார் எய்தும் சிறப்பு.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப = அன்புடையராய் (இல்லறத்தோடு) பொருந்திய நெறியின் பயன் என்று சொல்லுவர் (அறிந்தோர்);
வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு = இவ்வுலகத்து (இல்வாழ்க்கைக்கணின்று) இன்பநுகர்ந்து (அதன்மேல் துறக்கத்துச் சென்று) எய்தும் பேரின்பத்தினை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘வழக்கு’ ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடுங் கூடி இன்புற்றார், தாஞ்செய்த வேள்வித் தொழிலால் தேவராய் ஆண்டும் இன்புறுவராகலின், 'இன்புற்றா ரெய்துஞ் சிறப்பு' என்றார். தவத்தாற் றுன்புற்று எய்துந் துறக்கவின்பத்தினை ஈண்டுனம் இன்புற்றெய்துதல் அன்பானன்றியி்ல்லை யென்பதாம்.

திருக்குறள்: 76 (அறத்திற்கே)[தொகு]

அறத்திற்கே யன்புசார் பென்ப வறியார் |அறத்திற்குஏ அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கு மஃதே துணை. |மறத்திற்கும் அஃதுஏ துணை. (௬)

தொடரமைப்பு: அன்பு சார்பு அறத்திற்குஏ என்ப அறியார், மறத்திற்கும் அஃதுஏ துணை.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் = அன்பு துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் (சிலர்), அறியார்;
மறத்திற்கும் அஃதே துணை = (ஏனை) மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஒருவன் செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி, அவனை நட்பாகக் கருதி அவன்மேல் அன்புசெய்ய, அது நீங்குமாகலின் மறத்தை நீக்குதற்குந் துணையாமென்பார், "மறத்திற்குமஃதே துணை" யென்றார், "துன்பத்திற் கியாரே துணையாவார்" (திருக்குறள், 1299) என்புழிப்போல.
இவையைந்து பாட்டானும் அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள்: 77 (என்பிலதனை)[தொகு]

என்பி லதனை வெயில்போலக் காயுமே | என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பி லதனை யறம். (07) | அன்பு இலதனை அறம். (௭)

தொடரமைப்பு: என்பு இலதனை வெயில் போலக் காயும்ஏ, அன்பு இலதனை அறம்.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) என்பு இலதனை வெயில்போலக் காயும் = என்பில்லாத வுடம்பை, வெயில் காய்ந்தாற்போலக் காயும்;
அன்பு இலதனை அறம் = அன்பில்லாதவுயிரை அறக்கடவுள்.
பரிமேலழகர் உரை
'என்பிலது' என்றதனான் உடம்பென்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிரென்பதூஉம் பெற்றாம். வெறுப்பின்றி எங்குமொருதன்மைத்தாகிய வெயிலின்முன், என்பில்லது தன்னியல்பாற் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடுமென்பதாம். அதனைக் 'காயு'மென வெயிலறங்களின் மேலேற்றினார், அவவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு "அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்" (நான்மணிக்கடிகை, 84) எனப் பிறருங் கூறினார்.

இக்குறள் உவமையணி.

திருக்குறள்: 78 (அன்பகத்)[தொகு]

அன்பகத் தில்லா வுயிர்வாழ்க்கை வன்பாற்கண் | அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன் பால் கண்
வற்றன் மரந்தளிர்த் தற்று. (08) | வற்றல் மரம் தளிர்த்து அற்று. (௮)

தொடரமைப்பு: அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை, வன் பால் கண் வற்றல் மரம் தளிர்த்து அற்று.

பரிமேலழகர் உரை
இதன்பொருள்) அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை = மனத்தின்கண் அன்பி்ல்லாத உயிர் (இல்லறத்தோடு கூடி) வாழ்தல்;
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று = வன்பாலின்கண் வற்றலாகிய மரந் தளிர்த்தாற்போலும்.

பரிமேலழகர் உரைவிளக்கம்

கூடாது என்பதாம். ‘வன்பால்’ வன்னிலம். ‘வற்றல்’ என்பது பால்விளங்கா அஃறிணைப்படர்க்கைப்பெயர்.

திருக்குறள்: 79 (புறத்துறுப்)[தொகு]

புறத்துறுப் பெல்லா மெவன்செய்யும் யாக்கை | புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
யகத்துறுப் பன்பி லவர்க்கு. (09)| அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு. (௯)

தொடரமைப்பு:யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு, புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்?

பரிமேலழகர் உரை
இதன்பொருள்) யாக்கையகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு = யாக்கை யகத்தின்கண் (நின்று) (இல்லறத்திற்கு) உறுப்பாகிய அன்பு உடையரல்லாதார்க்கு;
புறத்து உறுப்பு எல்லாம் எவன்செய்யும் = ஏனைப் புறத்தின்கணின்று உறுப்பாவனவெல்லாம் (அவ்வறஞ் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?
பரிமேலழகர் உரைவிளக்கம்
'புறத்துறுப்பாவன', இடனும் பொருளும் ஏவல்செய்வாரும் முதலாயின. துணையொடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின், 'எவன்செய்யும்' என்றார். உறுப்புப் போறலின் 'உறுப்பு' எனப்பட்டன. யாக்கையிற் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்னபயனைச்செய்யும்? மனத்தின்கணுறுப்பாகிய அன்பிலாதார்க்கு என்று உரைப்பாருமுளர். அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை யறிக.

திருக்குறள்: 80 (அன்பின்)[தொகு]

அன்பின் வழிய துயிர்நிலை யஃதிலார்க் | அன்பின் வழியது உயிர் நிலை அஃது இலார்க்கு
கென்புதோல் போர்த்த வுடம்பு. (10) | என்பு தோல் போர்த்த உடம்பு. (௰)

தொடரமைப்பு: அன்பின் வழியது உயிர் நிலை, அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த.

பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அன்பின் வழியது உயிர்நிலை = அன்பு முதலாக அதன்வழி நின்ற உடம்பே, உயிர்நின்ற உடம்பாவது;
அஃது இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த = அவ்வன்பில்லாதார்க்கு (உளவான) உடம்புகள் என்பினைத் தோலாற் போர்த்தனவாம்; (உயி்ர்நின்றனவாகா).
பரிமேலழகர் உரைவிளக்கம்
இல்லறம் பயவாமையின் அன்னவாயின.
இவை நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படுங் குற்றம் கூறப்பட்டது.
தெய்வப்புலமைத்திருவள்ளுவர் செய்த 'அன்புடைமை' எனும் அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.