திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/22.ஒப்புரவறிதல்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
அதிகாரம் 22 ஒப்புரவறிதல்
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]- அதிகார முன்னுரை
- அஃதாவது, உலகநடையினை அறிந்து செய்தல். உலகநடை வேதநடை போல அறநூல்களுட் கூறப்படுவதன்றித் தாமே அறிந்து செய்யுந்தன்மைத்து ஆகலின், ஒப்புரவு அறிதல் என்றார். மேல் மனமொழிமெய்களால் தவிரத்தகுவன கூறினார். இனிச் செய்யத்தகுவனவற்றுள் எஞ்சிநின்றன கூறுகின்றார் ஆகலின், இது தீவினையச்சத்தின்பின் வைக்கப்பட்டது.
திருக்குறள் 211 (கைம்மாறு)
[தொகு]- கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
- டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
- கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி மாட்டு
- என் ஆற்றும் கொல்லோ உலகு.
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- மாரிமாட்டு உலகு என் ஆற்றும்= தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யாநின்றன?
- கடப்பாடு கைம்மாறு வேண்டா= ஆகலான், அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவனவல்ல.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- என்னாற்றும் என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின், அது வருவித்துரைக்கப்படும். தவிருந் தன்மைய அல்ல என்பது கடப்பாடு என்னும் பெயரானே பெறப்பட்டது. செய்வாரது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல் ஏற்றினார்.
திருக்குறள் 212 (தாளாற்றித்)
[தொகு]- தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
- வேளாண்மை செய்தற் பொருட்டு
- தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
- வேளாண்மை செய்தல் பொருட்டு.
- பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
- தக்கார்க்கு= தகுதியுடையார்க்கு ஆயின்;
- தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம்= முயறலைச் செய்து ஈட்டிய பொருள் முழுதும்;
- வேளாண்மை செய்தல் பொருட்டு= ஒப்புரவு செய்தற் பயத்தவாம்.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- பிறர்க்கு உதவாதார் பொருள் போலத் தாமே உண்டற் பொருட்டும், வைத்து இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.
திருக்குறள் 213 (புத்தேளுலகத்து)
[தொகு]- புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
- யொப்புரவி னல்ல பிற.
- புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
- ஒப்புரவின் நல்ல பிற.
- பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
- புத்தேள் உலகத்தும் ஈண்டும்= தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும்;
- ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது= ஒப்புரவு போல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லாரும் ஒருதன்மையர் ஆதலான் புத்தேள் உலகத்து அரிது ஆயிற்று; யாவர்க்கும் ஒப்பது இதுபோல் பிறிதுஒன்று இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று. பெறற்கரிது என்று பாடம்ஓதிப் பெறுதற்குக் காரணம்அரிது என்று உரைப்பாரும் உளர்.
- இவை மூன்று பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.
திருக்குறள் 214 (ஒத்ததறிவான்)
[தொகு]- ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
- செத்தாருள் வைக்கப் படும்
- ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
- செத்தாருள் வைக்கப் படும்
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- உயிர்வாழ்வான் ஒத்தது அறிவான்= உயிரோடுகூடி வாழ்வானாவான் உலகநடையினை அறிந்து செய்வான்;
- மற்றையான் செத்தாருள் வைக்கப்படும்= அஃதறிந்து செய்யாதவன், உயிருடையனேயாயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும் என்றவாறு.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- உயிரின் அறிவும் செயலும் காணாமையின், செத்தாருள் வைக்கப்படும் என்றார்.
- இதனால் உலகநடைவழு, வேதநடைவழுப்போலத் தீர்திறன் உடைத்தன்று என்பது கூறப்பட்டது.
திருக்குறள் 215 (ஊருணிநீர்)
[தொகு]- ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
- பேரறி வாளன் திரு
- ஊர் உணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
- பேர் அறிவாளன் திரு
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- உலகு அவாம் பேரறிவாளன் திரு= உலகநடையை விரும்பிச் செய்யும் பேரறிவினையுடையவனது செல்வம்;
- ஊருணி நீர் நிறைந்தற்று= ஊரின் வாழ்வார் தண்ணீர் உண்ணுங்குளம் நீர் நிறைந்தாற் போலும் என்றவாறு.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் ஏற்றப்பட்டது. பாழ்போகாது நெடிது நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும் என்பதாம்.
திருக்குறள் 216 (பயன்மரம்)
[தொகு]- பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
- நயனுடை யான்கட் படின்
- பயன் மரம் உள் ஊர்ப் பழுத்தற்றால் செல்வம்
- நயன் உடையான்கண் படின்
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- செல்வம் நயன்உடையான்கண் படின்= செல்வம் ஒப்புரவு செய்வான்கண்ணே படுமாயின்;
- பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்= அது பயன்படு மரம் ஊர்நடுவே பழுத்தாற் போலும், என்றவாறு.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- உலகநீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின், அதனையே நயன் என்றார். எல்லார்க்கும் எளிதில் பயன் கொடு்க்கும் என்பதாம்.
திருக்குறள் 217 (மருந்தாகித்)
[தொகு]- மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
- பெருந்தகை யான்கட் படின்
- மருந்து ஆகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
- பெரும் தகையான் கண் படின்
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- செல்வம் பெருந்தகையான் கண் படின்= செல்வம் ஒப்புரவு செய்யும் பெரிய தலைமை உடையான்கண்ணே படுமாயின்;
- மருந்து ஆகித் தப்பா மரத்து அற்று= அஃது எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும், என்றவாறு.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- தப்புதலாவது= கோடற்கரிய இடங்களின் நின்றாதல், மறைந்து நின்றாதல், காலத்தான் வேறுபட்டாதல் பயன்படாமை. தன்குறை நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.
- இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.
திருக்குறள் 218 (இடனில் பருவத்தும்)
[தொகு]- இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
- கடனறி காட்சி யவர்
- இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
- கடன் அறி காட்சியவர்
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்= செல்வம் சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்;
- கடன் அறி காட்சியவர்= தாம் செய்யத் தகுவனவற்றை அறிந்து இயற்கை அறிவுடையார், என்றவாறு.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- பிறவெல்லாம் ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.
திருக்குறள் 219 (நயனுடையான்)
[தொகு]- நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
- செய்யா தமைகலா வாறு
- நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
- செய்யாது அமைகலா ஆறு
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல்= ஒப்புரவு செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது;
- செயும் நீர செய்யாது அமைகலா ஆறு= தவிராது செய்யும் நீர்மையை உடைய அவ் ஒப்புரவுகளைச் செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம், என்றவாறு.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- தான் நுகர்வன நுகரப்பெறாமை அன்று என்பதாம்.
- இவை இரண்டுபாட்டானும் வறுமையான் ஒப்புரவு ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.
திருக்குறள் 220 (ஒப்புரவினால்)
[தொகு]- ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
- விற்றுக்கோட் டக்க துடைத்து
- ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
- விற்றுக்கோள் தக்கது உடைத்து
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- ஒப்புரவினால் வரும் கேடு எனின்= ஒப்புரவு செய்தலான், ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார் உளராயின்;
- அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து= அக்கேடுதன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து, என்றவாறு.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- தன்னை விற்றுக் கொள்ளப்படுவதொரு பொருள் இல்லையன்றே; இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ் பயத்தல் நோக்கி.
- இதனால் ஒப்புரவினால் கெடுவது கேடுஅன்று என்பது கூறப்பட்டது.
திருவள்ளுவர் இயற்றிய முப்பால் நூலின் ஒப்புரவறிதல் அதிகாரத்திற்குப் பரிமேலழகர் வரைந்த உரை முற்றுப்பெற்றது