திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/101.நன்றியில்செல்வம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- ஒழிபியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 101.நன்றி இல் செல்வம்.[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, ஈட்டியாற்கும் பிறர்க்கும் பயன்படுதல் இல்லாத செல்வத்தினது இயல்பு. உடையானது குற்றம் செல்வத்தின்மேல் ஏற்றப்பட்டது. அதிகாரமுறைமை மேல் தோற்றுவாய் செய்தவதனால் பெற்றாம்.

குறள் 1001 (வைத்தான் )[தொகு]

வைத்தான் வாய்சான்ற பெரும்பொரு ளஃதுண்ணான் () வைத்தான் வாய் சான்ற பெரும்பொருள் அஃது உண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில். (01) செத்தான் செயக்கிடந்தது இல்.

தொடரமைப்பு: வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான், செத்தான் செயக் கிடந்தது இல்.

இதன்பொருள்
வாய் சான்ற பெரும்பொருள் வைத்தான் அஃது உண்ணான்= தன் மனை அகலம் எல்லாம் நிறைதற்கு ஏதுவாய பெரும்பொருளை ஈட்டிவைத்து உலோபத்தால் அதனை உண்ணாதவன்; செத்தான் செயக்கிடந்தது இல்= உளனாயினும் செத்தானாம், அதன்கண் அவனால் செயக் கிடந்ததோர் உரிமை இன்மையான்.
உரை விளக்கம்
'வைத்தான்' என்பது முற்றெச்சம். உண்ணுதல்: அதனால் ஐம்புலன்களையும் நுகர்தல். "வாய் சான்ற பெரும்பொருளை" வைத்தான் ஒருவன், அதனை உண்ணாது செத்தவழி அதன்கண் அவனால் செய்யக் கிடந்ததோர் உரிமை இல்லையாகலான், வையாது பெற்ற பொழுதே நுகர்க என்று உரைப்பினும் அமையும். இதற்குச் 'செத்தான்' என்பது எச்சம். இதனால் ஈட்டியானுக்குப் பயன்படல் இன்மை கூறப்பட்டது.

குறள் 1002(பொருளானாம் )[தொகு]

பொருளானா மெல்லாமென் றீயா திவறு () பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்

மருளானா மாணாப் பிறப்பு. (02) மருளான் ஆம் மாணாப் பிறப்பு.

<தொடரமைப்பு:பொருளான் எல்லாம் ஆம் என்று, ஈயாது இவறும் மருளான், மாணாப் பிறப்பு ஆம்.

இதன்பொருள்
பொருளான் எல்லாம்ஆம் என்று= பொருள் ஒன்றும் உண்டாக அதனால் எல்லாம் உண்டாம் என்று அறிந்து அதனை ஈட்டி; ஈயாது இவறும் மருளான்= பின் பிறர்க்கு ஈயாது பற்றுள்ளம் செய்யும் மயக்கத்தாலே; மாணாப் பிறப்பு ஆம்= ஒருவனுக்கு நிறைதல் இல்லாத பேய்ப்பிறப்பு உண்டாம்.
உரை விளக்கம்
இருமையினும் எய்தும் இன்பங்கள் பலவும் அடங்க 'எல்லாம்' என்றும், ஈட்டுதற்கு முன்னுண்டாய அறிவு பின் மயங்குதலின் 'மருள்' என்றும், பொருள் உண்டாயிருக்கப் பிறர்பசி கண்டிருந்த தீவினை பற்றி உணவுகள் உளவாயிருக்கப் பசித்துவருந்தும் 'பிறப்பு' உளதாம் என்றும் கூறினார்.

குறள் 1003 (ஈட்டம் )[தொகு]

ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் () ஈட்டம் இவறி யிசைவேண்டா ஆடவர்

தோற்ற நிலக்குப் பொறை. (03) தோற்றம் நிலக்குப் பொறை.

தொடரமைப்பு: ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம், நிலக்குப் பொறை.

இதன்பொருள்
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர் தோற்றம்= யாம் பிறரின் மிக ஈட்டுதும் என்று, பொருளினது ஈட்டல் மாத்திரத்தையே விரும்பி, அதன் பயனாய புகழை விரும்பாத மக்களது பிறப்பு; நிலக்குப் பொறை= நிலத்திற்குப் பாரமாம் அத்துணையே.
உரை விளக்கம்
'இசை' இருமைக்கும் உறுதியாய அறம் ஆகலின், ஈகையான் அதனையே வேண்டல் செய்யாது, ஈட்டல் துன்பத்தையும் காத்தல் துன்பத்தையும் வேண்டிய அறிவின்மை பற்றி, 'நிலக்குப் பொறை' என்றார். 'பிறப்பு' என்றது, அதற்குரிய உடம்பினை.

குறள் 1004 (எச்சமென் )[தொகு]

எச்சமென் றென்னெண்ணுங் கொல்லோ வொருவரா () எச்சம் என்று என் எண்ணும் கொல்லோ ஒருவரால்

னச்சப் படாஅ தவன். (04) நச்சப்படாஅதவன்.

தொடரமைப்பு: ஒருவரால் நச்சப்படாஅதவன், எச்சம் என்று என் எண்ணுங்கொல்லோ.

இதன்பொருள்
ஒருவரால் நச்சப்படாஅதவன்= ஒரு பொருளும் ஈந்தறியாமையின் ஒருவராலும் நச்சப்படுதல் இல்லாதவன்; எச்சம் என்று என் எண்ணுங்கொல்= தான் இறந்தவழி ஈண்டு ஒழிந்து நிற்பதாக யாதனைக் கருதுமோ?
உரை விளக்கம்
ஈண்டு ஒழிந்து நிற்கும் புகழ், ஈவான் மேலன்றி நில்லாமையின், அவனுக்கு அதனோடு யாதும் இயைபு இல்லை என்பார், 'என்னெண்ணுங் கொல்லோ' என்றார். 'ஓ'காரம் அசை.
இவை மூன்று பாட்டானும் பிறர்க்குப் பயன்படல் இன்மை கூறப்பட்டது.

குறள் 1005 ( கொடுப்பதூஉ)[தொகு]

கொடுப்பதூஉந் துய்ப்பதூஉ மில்லார்க் கடுக்கிய () கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

கோடியுண் டாயினு மில். (05) கோடி உண்டாயினும் இல்.

தொடரமைப்பு: கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு, அடுக்கிய கோடி உண்டாயினும் இல்.

இதன்பொருள்
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு= பிறர்க்கு ஈவதும் தாம் நுகர்வதுமாய இரண்டு செய்கையும் உடையர் அல்லாதார்க்கு; அடுக்கிய கோடி உண்டாயினும் இல்= பலவாகிய அடுக்கிய கோடி பொருள் உண்டாயினும் ஒன்றுமில்லை.
உரை விளக்கம்
இன்பத்தினும் அறம் சிறந்தமையின் கொடுத்தல் தொழில் முன்கூறப்பட்டது. 'அடுக்கிய கோடி' என்பது ஈண்டு எண்ணப்படும் பொருள்மேல் நின்றது. ஒன்றும் இல்லார்போலப் பயன் இரண்டும் இழத்தலின், 'இல்' என்றார்.

குறள் 1006(ஏதம்பெருஞ் )[தொகு]

ஏதம் பெருஞ்செல்வந் தான்றுவ்வான் றக்கார்க்கொன் () ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று

றீத லியல்பிலா தான். (06) ஈதல் இயல்பு இலாதான்.

தொடரமைப்பு: தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பு இலாதான், பெரும் செல்வம் ஏதம்.

இதன்பொருள்
தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று ஈதல் இயல்பிலாதான்= தான் நுகரானாய் அதன்மேலும் தகுதியுடையார்க்கு அவர் வேண்டியது ஒன்றனை ஈதல் இயற்கை இலன் ஆயினான்; பெருஞ் செல்வம் ஏதம்= இண்டும் செய்தற்கு இடனுடைத்தாய செல்வத்திற்கு ஒரு நோய்.
உரை விளக்கம்
தகுதி: தானம் கோடற்கு ஏற்புடைமை. 'ஏதம்' ஆகுபெயர். நுகரப்படுதலும், ஈயப்படுதலும் ஆகிய தொழிற்கு உரியதனை அன்று ஆக்கினமையின், 'நோய்' என்றார். ஈதலியல்பு இலாதானது பெரும் செல்வம் அவனுக்கு ஈட்டல், காத்தல் முதலியவற்றால் துன்பமேயாம் எனறு உரைப்பரும் உளர்
இவை இரண்டு பாட்டானும் அவ்விருமையும் உடன்கூறப்பட்டன.

குறள் 1007 (அற்றார்க்கொன் )[தொகு]

அற்றார்க்கொன் றாற்றாதான் செல்வ மிகநலம் () அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிக நலம்

பெற்றா டமியண்மூத் தற்று. (07) பெற்றாள் தமியள் மூத்து அற்று.

தொடரமைப்பு: அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம், மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று.

இதன்பொருள்
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம்= ஒருபொருளும் இலர் ஆயினார்க்கு அவர் வேண்டியது ஒன்றனைக் கொடாதானது செல்வம் கொன்னே கழிதல்; மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று= பெண்டிரின் மிக்க நலத்தினைப் பெற்றாள் ஒருத்தி, கொடுப்பார் இன்மையின் கொழுநன் இன்றித் தமியளாய் மூத்த தன்மைத்து.
உரை விளக்கம்
'நலம்' வடிவின் நன்மையும், குணத்தின் நன்மையும். இரண்டும் ஒருங்கு பெறுதல் அரிதாகலின், 'பெற்றாள்' என்றார். கொடுப்பாரும், கொழுநனுமேயன்றித் தானும் பயன் இழந்து கழிந்த குமரியோடு உவமை கூறினமையின், தானும் ஏற்பானுமே அன்றிச் செல்வமும் பயனிழந்து கழியும் என்பதாயிற்று.

குறள் 1008 (நச்சப்படா )[தொகு]

நச்சப் படாஅதவன் செல்வ நடுவூரு () நச்சப்படாஅதவன் செல்வம் நடு ஊருள்

ணச்சு மரம்பழுத் தற்று. (08) நச்சு மரம் பழுத்து அற்று.


தொடரமைப்பு: நச்சப்படாஅதவன் செல்வம், ஊர் நடுவுள் நச்சு மரம் பழுத்தற்று.

இதன்பொருள்
நச்சப் படாதவன் செல்வம்= வறியார்க்கு அணியனாய் இருந்தும் ஒன்றும் கொடாமையின் அவரான் நச்சப்படாதவன் செல்வம் எய்துதல்; ஊர் நடுவுள் நச்சுமரம் பழுத்தற்று= ஊரிடை நிற்பதோர் நச்சுமரம் பழுத்தாற்போலும்.
உரை விளக்கம்
'நடுவூர்' என்பது பின்முன்னாகத் தொக்க ஆறாம் வேற்றுமைத் தொகை. அண்மை உடைமைகளான் பயனில்லை என்பதாம்.

குறள் 1009(அன்பொரீஇத் )[தொகு]

அன்பொரீஇத் தற்செற் றறநோக்கா தீட்டிய () அன்பு ஒரீஇத் தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய

வொண்பொருள் கொள்வார் பிறர். (09) ஒண் பொருள் கொள்வார் பிறர்.

தொடரமைப்பு: அன்பு ஒரீஇத், தற்செற்று, அறம் நோக்காது, ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்.

இதன்பொருள்
அன்பு ஒரீஇ= ஒருவன் கொடாமைப்பொருட்டுச் சுற்றத்தார் நட்டார்கண் அன்பு செய்தலை ஒழித்து; தற் செற்று= வேண்டுவன நுகராது தன்னைச் செறுத்து; அறம் நோக்காது= வறியார்க்கு ஈதல் முதலிய அறத்தை நினைப்பதும் செய்யாது; ஈட்டிய ஒண்பொருள் கொள்வார் பிறர்= ஈட்டிய ஒள்ளிய பொருளைக் கொண்டுபோய்ப் பயன்பெறுவார் பிறர்.
உரை விளக்கம்
பயனாய அறனும், இன்பமும் செய்து கொள்ளாதானுக்குப் பொருளால் உள்ளது ஈட்டல் துன்பமே என்பது தோன்ற 'ஈட்டிய' என்றும், அவன் வழியில் உள்ளார்க்கும் உதவாது என்பது தோன்றப் 'பிறர்' என்றும் கூறினார்.

குறள் 1010 (சீருடைச் )[தொகு]

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி () சீர் உடைச் செல்வர் சிறு துனி மாரி

வறங்கூர்ந் தனைய துடைத்து. (10) வறம் கூர்ந்து அனையது உடைத்து.

தொடரமைப்பு: சீருடைச் செல்வர் சிறு துனி, மாரி வறங்கூர்ந்து அனையது உடைத்து.

இதன்பொருள்
சீருடைச் செல்வர் சிறு துனி= புகழுடைத்தாய செல்வத்தினை உடையவரது, நிற்கும் காலம் சிறிதாய வறுமை; மாரி வறம் கூர்ந்து அனையது உடைத்து= உலகத்தை எல்லாம் நிலைநிறுத்தும் மேகம் வறுமை மிக்காற்போல்வதோர் இயல்பினை உடைத்து.
உரை விளக்கம்
'துனி'- வெறுப்பு;அதனைச் செய்தலான் துனி எனப்பட்டது. யாவர்க்கும் பயன்பட்டார் அதனான் வறியராயவழியும், அவ்வறுமை கடிதின் நீங்குதலின் பின்பும் செல்வராய்ப் பயன்படுவர் என்பது உவமையான் பெறப்பட்டது; படவே, நன்றியில்லாத செல்வம் எஞ்ஞான்றும் பயன்படாது என்பதாயிற்று. இதற்குச் சீருடைச் செல்வர் இரவலரொடு வெறுக்கும் நிலையில், வெறுப்பு மாரி வறங்கூர்ந்தனைய தன்மையை உடைத்து என அதிகாரத்தோடு பொருந்தாமை மேலும், ஓர் பொருள் தொடர்புபடாமல் உரைப்பாரும் உளர்.
இவை நான்கு பாட்டானும் அச்செல்வத்தது குற்றம் கூறப்பட்டது.