திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/60.ஊக்கமுடைமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 60. ஊக்கமுடைமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை:

அஃதாவது, மனம் மெலிதலின்றி வினைசெய்தற்கண் கிளர்ச்சி உடைத்தாதல். ஒற்றரான் நிகழ்ந்தனவறிந்து அவற்றிற்கு ஏற்ற வினைசெய்வானுக்கு இஃது இன்றியமையாமையின் ஒற்றாடலின்பின் வைக்கப்பட்டது.

குறள் 591 (உடையர்)[தொகு]

உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லாஉடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்

'ருடைய துடையரோ மற்று. (01)'உடையது உடையரோ மற்று.

இதன்பொருள்
உடையர் எனப்படுவது ஊக்கம்= ஒருவரை உடையர் என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார் மற்று உடையது உடையரோ= அவ்வூக்கம் இல்லாதார் வேறுடையது தானும் உடையர் ஆவாரோ? ஆகார்.
உரைவிளக்கம்
வேறுடையது என்றது, முன் எய்திநின்ற பொருளை. உம்மை விகாரத்தான் தொக்கது. காக்கும் ஆற்றல் இலர் ஆதலின், அதுவும் இழப்பர் என்பதாம்.

குறள் 592 (உள்ளமுடைமை)[தொகு]

உள்ள முடைமை யுடைமை பொருளுடைமைஉள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை

'நில்லாது நீங்கி விடும். (02)'நில்லாது நீங்கி விடும்.

இதன்பொருள்
உள்ளம் உடைமை உடைமை= ஊக்கம் உடைமையே ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள் உடைமை நில்லாது நீங்கி விடும்= மற்றைப் பொருளுடைமை நிலைநில்லாது நீங்கிப்போம்.
உரைவிளக்கம்
'உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம், உள்ளத்துப் பண்பாகலின் அதற்கு நிலைநிற்றலும், பொருள் உடம்பினும் வேறாய் அழிதன் மாலைத்து ஆகலின், அதற்கு நிலைநில்லாமையும் கூறினார். கூறவே அஃது உடைமை அன்று என்பது பெறப்பட்டது.

குறள் 593 (ஆக்கமிழந்)[தொகு]

ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்கஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்

'மொருவந்தங் கைத்துடை யார். (03)'ஒருவந்தம் கைத்து உடையார்.

இதன்பொருள்
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்= இழந்தாராயினும் யாம் கைப்பொருளை இழந்தேம் என்று அலமரார்; ஒருவந்தம் கைத்து உடையவர்= நிலைபெற்ற ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
உரைவிளக்கம்
'ஆக்கம்' ஆகுபெயர். ஒருவந்தமாய ஊக்கம் என்க. 'கைத்து' கையகத்ததாகிய பொருள். "கைத்துண்டாம் போழ்தே கரவாது அறஞ்செய்ம்மின்"И என்றார் பிறரும். அல்லாமைக்கு ஏதுவருகின்ற பாட்டாற் கூறுப.
И. நாலடியார், 19.

குறள் 594 (ஆக்கமதர்)[தொகு]

ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலாஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா

'வூக்க முடையா னுழை. (04)'ஊக்கம் உடையான் உழை.

இதன்பொருள்
அசைவு இலா ஊக்கம் உடையானுழை= அசைவில்லாத ஊக்கத்தை உடையான் மாட்டு; ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும்= பொருள்தானே வழி வினவிக்கொண்டு செல்லும்.
உரைவிளக்கம்
'அசைவின்'மை இடுக்கண் முதலியவற்றால் தளராமை. வழிவினவிச் சென்று சார்வார்போலத் தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.
எய்திநின்ற பொருளினும், அதற்குக் காரணமாய 'ஊக்கம்' சிறந்தது என்பது இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.

குறள் 595 (வெள்ளத்தனை)[தொகு]

வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்தவெள்ளத்து அனைய மலர் நீ்ட்டம் மாந்தர் தம்

'முள்ளத் தனைய துயர்வு. (05)'உள்ளத்து அனையது உயர்வு.

இதன்பொருள்
வெள்ளத்து அனைய மலர்நீட்டம்= நின்ற நீரின் அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்; மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு= அதுபோல் மக்கள்தம் ஊக்கத்து அளவினதாம் அவர் உயர்ச்சி.
உரைவிளக்கம்
'மலர்' ஆகுபெயர். நீர்மிக்கதுணையும் மலர்த்தாள் நீளும் என்பதுபட, 'வெள்ளத்தனைய' என்றார். இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்கதுணையும் மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. 'உயர்'தல் பொருள், படைகளான் மிகுதல்.

குறள் 596 (உள்ளுவ)[தொகு]

உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றதுஉள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது

'தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. (06)'தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

இதன்பொருள்
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்= அரசராயினார் கருதுவது எல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது தள்ளினும் தள்ளாமை நீர்த்து= அவ்வுயர்ச்சி பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத் தள்ளாமை நீர்மை உடைத்து.
உரைவிளக்கம்
உம்மை தள்ளாமை பெரும்பான்மையாதல் விளக்கிற்று. தள்ளியவழியும், தாளாண்மையில் தவறின்றி நல்லோரான் பழிக்கப்படாமையின், தள்ளாவியற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்தனையதுயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.

குறள் 597 (சிதைவிடத்)[தொகு]

சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்சிதைவு இடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்

'பட்டுப்பா டூன்றுங் களிறு. (07)'பட்டுப் பாடு ஊன்றும் களிறு.

இதன்பொருள்
களிறு புதை அம்பின் பட்டுப் பாடு ஊன்றும்= களிறு புதையாகிய அம்பாற் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்= அதுபோல ஊக்கமுடையார், தாம்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர்.
உரைவிளக்கம்
'புதை' அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. பட்டால் என்பது 'பட்டு' எனத் திரிந்துநின்றது. 'ஒல்காமை' களிற்றுடனும், 'பாடூன்று'தல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் ஊக்கம்உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.

குறள் 598 (உள்ளமிலாத)[தொகு]

உள்ள மிலாதவ ரெய்தா ருலகத்துஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து

'வள்ளிய ரென்னுஞ் செருக்கு. (08)'வள்ளியர் என்னும் செருக்கு.

இதன்பொருள்
உள்ளம் இலாதவர்= ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்= இவ்வுலகத்தாருள் யாம் வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப் பெறார்.
உரைவிளக்கம்
ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை, செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின், 'செருக்கெய்தார்' என்றார். கொடை வென்றியின் ஆய இன்பம், தமக்கல்லது பிறர்க்குப் புலன்ஆகாமையின் தன்மையான் கூறப்பட்டது.

குறள் 599 (பரியது)[தொகு]

பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானைபரியது கூர்ங் கோட்டது ஆயினும் யானை

'வெரூஉம் புலிதாக் குறின். (09)'வெரூஉம் புலி தாக்குறின்.

இதன்பொருள்
பரியது கூர்ங் கோட்டது ஆயினும்= எல்லா விலங்கினும் தான் பேருடம்பினது; அதுவேயும் அன்றிக் கூரிய கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி தாக்குறின் வெரூஉம்= யானைத் தன்னைப் புலி எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
உரைவிளக்கம்
பேருடம்பான் வலிமிகுதி கூறப்பட்டது. புலியின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடைத்தாயினும், யானை ஊக்கம் இன்மையான் அஃதுஉடைய அதற்கு அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும், கருவிச்சிறப்பும் உடையராயினும், அரசர் ஊக்கம் இலராயின் அஃது உடைய அரசர்க்கு அஞ்சுவர் என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.

குறள் 600 (உரமொரு)[தொகு]

உரமொருவற் குள்ள வெறுக்கையஃ தில்லார்உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லார்

'மரமக்க ளாதலே வேறு. (10)'மரம் மக்கள் ஆதலே வேறு.

இதன்பொருள்
ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை= ஒருவற்குத் திண்ணிய அறிவாவது ஊக்கம்மிகுதி; அஃது இல்லார் மரம்= அவ்வூக்கம் மிகுதிஇல்லாதார் மக்கள் ஆகார், மரங்களாவார்; மக்களாதலே வேறு= சாதிமரங்களோடு, இம்மரங்களிடை வேற்றுமை, வடிவுமக்கள்வடிவே, பிறிதில்லை.
உரைவிளக்கம்
'உரம்' என்பது அறிவாதல், "உரன் என்னும்தோட்டியான்"Ѕ என்பதனானும் அறிக. 'மரம்' என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும், காரியமுயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும், மரத்திற்குள்ள பயன்பாடுஇன்மை பற்றி 'மக்களாதலே வேறு' என்றும் கூறினார். பயன்: பழம் முதலியவும் தேவர்கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு உறுப்பாதலும் முதலிய.
இவை மூன்று பாட்டானும் ஊக்கம்இல்லாதார் இழிபு கூறப்பட்டது.
Ѕ. குறள், 24.