திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/11.செய்ந்நன்றியறிதல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 11 செய்ந்நன்றி அறிதல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

பரிமேலழகரின் அதிகார முன்னுரை
அஃதாவது, தனக்குப் பிறர்செய்த நன்மையை மறவாமை. இனியவை கூறி இல்லறம் வழுவாதார்க்கு உய்தியில் குற்றம் செய்ந்நன்றி கோறலேயாகலின் அதனைப் பாதுகாத்துக் கடிதற் பொருட்டு, இஃது இனியவைகூறலின் பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 101 (செய்யாமற்)[தொகு]

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும் செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது. வானகமும் ஆற்றல் அரிது.(01)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்): செய்யாமல் செய்த உதவிக்கு= தனக்கு முன்னோர் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு;
வையகமும் வானகமும் ஆற்றல் அரிது= மண்ணுலகும் விண்ணுலகுங் கைமாறாகக் கொடுத்தாலும் ஒத்தல்அரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
கைம்மாறுகள் எல்லாம் காரணம் உடையவாகலின், காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.

'செய்யாமைச் செய்த உதவி'யென்று பாடமோதி, மறித்து உதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்த உதவி என்று உரைப்பாரும் உளர்.

திருக்குறள் 102 (காலத்தினாற்)[தொகு]

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினு
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
ஞாலத்தின் மாணப் பெரிது. (02)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்): காலத்தினால் செய்த நன்றி= ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்;
சிறிது எனினும் ஞாலத்தின் மாணப் பெரிது= தன்னை நோக்கச் சிறிதாயிருந்ததாயினும் அக்காலத்தை நோக்க நிலவுலகத்தினும் மிகப் பெரிது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அக்காலம் நோக்குதல்லது பொருள் நோக்கலாகாது என்பதாம். 'காலத்தினால்' என்பது வேற்றுமை மயக்கம்.

திருக்குறள் 103 (பயன்றூக்கார்)[தொகு]

பயன்றூக்கார் செய்த வுதவி நயன்றூக்கி
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
னன்மை கடலிற் பெரிது.
நன்மை கடலில் பெரிது. (03)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்):
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்= இவர்க்கு இதுசெய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்;
நன்மை கடலி்ற் பெரிது= அதன் நன்மை கடலினும் பெரிதாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இவை மூன்றுபாட்டானும் முறையே காரணமின்றிச் செய்ததூஉம், காலத்தினாற் செய்ததூஉம், பயன்தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.

திருக்குறள் 104 (தி்னைத்துணை)[தொகு]

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன்றெரி வார்
கொள்வர் பயன் தெரிவார். (04)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்):
தினைத்துணை நன்றி செயினும்= தமக்குத்தினை அளவிற்றாய உபகாரத்தை ஒருவன் செய்தானாயினும்;
பனைத்துணையாக் கொள்வர் பயன் தெரிவார்= அதனை அவ்வளவிற்றாகக் கருதாது பனையளவிற்றாகக் கருதுவர் அக்கருத்தின் பயன் தெரிவார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'தினை' 'பனை' என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டுவன சில அளவை. அக்கருத்தின் பயனாவது அங்ஙனங் கருதுவார்க்கு வரும் பயன்.

திருக்குறள் 105 (உதவிவரைத்)[தொகு]

உதவி வரைத்தன் றுதவி யுதவி
உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
செயப்பட்டார் சால்பின் வரைத்து (05)
பரிமேலழகர் உரை
(இதன் பொருள்):
உதவி உதவி வரைத்து அன்று= கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானுமாகிய் மூவகையானும் முன்செய்த உதவியளவிற்றன்று;
உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து= அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதி யளவிற்று.
பரிமேலழகர் உரை விளக்கம்
சால்பு எவ்வளவு பெரிதாயிற்று உதவியும் அவ்வளவு பெரிதாம் என்பார் 'சால்பின் வரைத்து' என்றார்.
இவை இரண்டு பாட்டானும் மூன்றும் அல்லாத உதவி மாத்திரமும், அறிவார்க்குச் செய்தவழிப் பெரிதாம் என்பது கூறப்பட்டது.

திருக்குறள் 106 (மறவற்க)[தொகு]

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.
துன்பத்துள் துப்பாயார் நட்பு. (06)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்):
துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க= துன்பக்காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக;
மாசு அற்றார் கேண்மை மறவற்க= அறிவு ஒழுக்கங்களிற் குற்றம் அற்றாரது கேண்மையை மறவாது ஒழிக.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'கேண்மை' கேளாந்தன்மை. இம்மைக்குறுதி கூறுவார் மறுமைக்குறுதியும் உடன் கூறினார்.

திருக்குறள் 107 (எழுமையெழு)[தொகு]

எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம் கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விழுமம் துடைத்தவர் நட்பு (07)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்)
தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு= தங்கண் எய்திய துன்பத்தை நீக்கினவருடைய நட்பினை;
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர்= எழுமையினையுடைய தம் எழுவகைப் பிறப்பினும் நினைப்பர் நல்லோர்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'எழுமை' யென்றது வினைப்பயன் தொடரும் ஏழு பிறப்பினை; அது 'வளையாபதி'யுட் கண்டது. எழுவகைப்பிறப்பும் மேலே உரைத்தாம் (திருக்குறள்: 62). விரைவு தோன்ற 'துடைத்தவர்' என்றார். நினைத்தலாவது, துன்பந் துடைத்தலான் அவர்மாட்டுளதாகிய அன்பு பிறப்புத்தோறுந் தொடர்ந்து, அன்புடையராதல்.
இவை இரண்டு பாட்டானும் நன்றி செய்தாரது நட்பு விடலாகாது என்பது கூறப்பட்டது.

திருக்குறள் 108 (நன்றிமறப்பது)[தொகு]

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்ல
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
தன்றே மறப்பது நன்று.
அன்றே மறப்பது நன்று (08)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்)
நன்றி மறப்பது நன்று அன்று= ஒருவன் முன் செய்த நன்மையை மறப்பது ஒருவற்கு அறனன்று;
நன்றல்லது அன்றே மறப்பது நன்று= அவன் செய்த தீமையைச் செய்தபொழுதே மறப்பது அறன்.
பரிமேலழகர் உரை விளக்கம்
இரண்டும் ஒருவனாற் செய்யப்பட்டவழி மறப்பதும் மறவாததும் வகுத்துக் கூறியவாறு.

திருக்குறள் 109 (கொன்றன்ன)[தொகு]

கொன்றன்ன வின்னா செயினு மவர்செய்த
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
வொன்றுநன் றுள்ளக் கெடும்.
ஒன்று நன்று உள்ள கெடும் (09)
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்):
கொன்று அன்ன இன்னா செயினும்= தமக்கு முன்னொரு நன்மை செய்தவரு பின் கொன்றால் ஒத்த இன்னாதவற்றைச் செய்தாராயினும்;
அவர்செய்த நன்று ஒன்று உள்ளக் கெடும்= அவையெல்லாம் அவர்செய்த நன்மை ஒன்றினையும் நினைக்க இல்லையாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தினைத்துணை பனைத்துணையாகக் கொள்ளப்படுதலின் அவ்வொன்றுமே அவற்றையெல்லாங் கெடுக்கும் என்பதாம்.
இதனான் நன்றல்லது அன்றே மறக்குந் திறங்கூறப்பட்டது.

திருக்குறள் 110 (எந்நன்றி)[தொகு]

எந்நன்றி கொன்றார்க்கு முய்வுண்டா முய்வில்லை
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. (10)
திருக்குறள் பரிமேலழகர் உரை
(இதன்பொருள்):
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்= பெரிய அறங்களைச் சிதைத்தார்க்கும் பாவத்தின் நீங்கும் வாயில் உண்டாம்;
செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வு இல்லை= ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்த மகனுக்கு அஃதில்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பெரிய அறங்களைச் சிதைத்தலாவது ஆன்முலை அறுத்தலும், மகளிர் கருவினைச் சிதைத்தலும், பார்ப்பார்

தபுதலும் முதலிய பாதகங்களைச் செய்தல் (புறநானூறு-34).

இதனாற் செய்ந்நன்றி கோறலின் கொடுமை கூறப்பட்டது.