திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/4.அறன்வலியுறுத்தல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பரிமேழகர் உரை[தொகு]

திருக்குறள் நான்காவது அதிகாரம் அறன்வலியுறுத்தல்[தொகு]

பரிமேலழகரின் அதிகார முன்னுரை:
அறன்வலியுறுத்தல்:
அஃதாவது,அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள், ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். "சிறப்புடை மரபிற் பொருளும் இன்பமும்/ அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல" (புறநானூறு- 31.) என்றார் பிறரும்.

திருக்குறள்: 31 (சிறப்பீனுஞ்)[தொகு]

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங் // // சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊங்கு
காக்க மெவனோ வுயிர்க்கு. (01) // // ஆக்கம் எவனோ உயிர்க்கு.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) சிறப்பு ஈனும் = வீடு பேற்றையும் தரும்;
செல்வமும் ஈனும் =துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்:
உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் = ஆதலான் உயிர்கட்கு அறத்தின்மிக்க ஆக்கம் யாது?

பரிமேலழகர் உரை விளக்கம்:

எல்லாப்பேற்றினும் சிறந்தமையின் வீடு 'சிறப்பு' எனப்பட்டது.
ஆக்கந் தருவதனை 'ஆக்கம்' என்றார்.
ஆக்கம் 'மேன்மேலுயர்தல்'.
ஈண்டு 'உயிர்' என்றது மக்கள்உயிரை, சிறப்பம் செல்வமும் எய்தற்குரியது அதுவேயாகலின்.
இதனால் அறத்தின்மிக்க உறுதி இல்லையென்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 32 (அறத்தினூஉங்)[தொகு]

அறத்தினூஉங் காக்க முமில்லை யதனை // // அறத்தின்ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்திலி னூங்கில்லை கேடு. (02) // // மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

பரிமேலழகர் உரை:

(இதன்பொருள்) அறத்தின் ஊங்கு ஆக்கமும் இல்லை = ஒருவனுக்கு அறம் செய்தலின் மேற்பட்ட ஆக்கமும் இல்லை;
அதனை மறத்தலின் ஊங்கு இல்லை கேடு = அதனை மயக்கத்தான் மறத்தலின் மேற்பட்ட கேடும் இல்லை.

பரிமேலழகர் உரை விளக்கம்:

"அறத்தினூஉங் காக்கமு மில்லை" என மேற்சொல்லியதனையே அனுவதித்தார், அதனாற் கேடுவருதல் கூறுதற் பயன் நோக்கி.
இதனால் அது செய்யாவழிக் கேடுவருதல் கூறப்பட்டது.

திருக்குறள்: 33 (ஒல்லும்)[தொகு]

ஒல்லும் வகையா னறவினை யோவாதே // ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்" // செல்லும் வாய் எல்லாம் செயல்
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) ஒல்லும் வகையான் = தத்தமக்கியலுந்திறத்தான்;
அறவினை ஓவாதே செல்லும் வாய் எல்லாம் செயல் = அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான்எல்லாம் செய்க.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
இயலுந்திறமாவது, இல்லறம் பொருளளவிற்கேற்பவும் துறவறம் யாக்கை நிலைக்கு ஏற்பவுஞ் செய்தல்.
ஓவாமை இடைவிடாமை.
எய்தும் இடமாவன மனம் வாக்குக் காயம் என்பன.
அவற்றாற் செய்யும் அறங்களாவன முறையே நற்சிந்தையும், நற்சொல்லும் நற்செயலும் எனவிவை.
இதனான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.

திருக்குறள்: 34 (மனத்துக்கண்)[தொகு]

மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற."
பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) மனத்துக்கண் மாசு இலன் ஆதல் = அவ்வாற்றான் அறஞ்செய்வான் தன் மனத்தின்கட் குற்றம் உடையனல்லனாக;
அனைத்து அறன் = அவ்வளவே அறமாவது;
பிற ஆகுல நீர = அஃதொழிந்த சொல்லும் வேடமும் அறமெனப்படா, ஆரவார நீர்மைய.
பரிமேலழகர் உரை விளக்கம்:
குற்றம் தீயன சிந்தித்தல்.
பிறர் அறிதல்வேண்டிச் செய்கின்றன வாகலின், ஆகுல நீர என்றார்.
மனத்து மாசுடையனாயவழி அதன்வழியவாகிய மொழி மெய்களாற் செய்வன பயனிலவென்பதூஉம் பெறப்பட்டது.

திருக்குறள்: 35 (அழுக்காறவா)[தொகு]

"அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அழுக்காறு = பிறர் ஆக்கம் பொறாமையும்;
அவா = புலன்கண்மேற் செல்கின்ற அவாவும்;
வெகுளி = அவை ஏதுவாகப் பிறர்பால் வரும் வெகுளியும்;
இன்னாச்சொல் = அதுபற்றிவரும் கடுஞ்சொல்லும் ஆகிய;
நான்கும் இழுக்கா இயன்றது அறம் = இந்நான்கினையும் கடிந்து இடையறாது நடந்தது அறமாவது.
பரிமேலழகர் உரை விளக்கம்:
இதனான் இவற்றோடு விரவியியன்றது அறமெனப்படாது என்பதூஉங் கொள்க.
இவை இரண்டுபாட்டானும் அறத்தினது இயல்பு கூறப்பட்டது.

திருக்குறள்: 36 (அன்றறிவா)[தொகு]

அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அன்று அறிவாம் என்னாது அறம் செய்க = யாம் இதுபொழுது இளையம் ஆகலின் இறக்குஞான்று செய்தும்எனக் கருதாது அறத்தினை நாடோறுஞ் செய்க;
அது பொன்றுங்கால் பொன்றாத் துணை = அவ்வாறு செய்த அறம் இவ்வுடம்பினின்றும் உயிர் போங்காலத்து அதற்கு அழிவில்லாத துணையாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
மற்று என்பது அசைநிலை.
பொன்றாத்துணை என்றார், செய்த உடம்பு அழியவும் உயிரோடு ஒன்றி ஏனையுடம்பினுஞ் சேறலின்.
இதனான் இவ்வியல்பிற்றாய அறத்தினை நிலையாத யாக்கை நிலையினபொழுதே செய்க என்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 37 (அறத்தாறிது)[தொகு]

அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.

பரிமேலழகர் உரை:

(இதன் பொருள்) அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா;
சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்:
பயனை ஆறு என்றார், பின்னதாகலின்.
என என்னும் எச்சத்தாற் சொல்லாகிய ஆகமவளவையும், பொறுத்தானோடு ஊர்ந்தானிடை என்றதனாற் காட்சியளவையும் பெற்றாம்.
உணரப்படு்ம் என்பது சொல்லெச்சம்.
இதனாற் பொன்றாத்துணையாதல் தெளிவிக்கப்பட்டது.

திருக்குறள்: 38 (வீழ்நாள்)[தொகு]

வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) வீழ் நாள் படாமை நன்று ஆற்றின் = செய்யாது கழியும் நாள் உளவாகாமல் ஒருவன் அறத்தைச் செய்யுமாயின்;
அஃது ஒருவன் வாழ் நாள் வழி அடைக்கும் கல் = அச்செயல் அவன் யாக்கையோடு கூடுநாள் வரும் வழியை வாராமலடைக்கும் கல்லாம்.

பரிமேலழகர் உரை விளக்கம்:

ஐவகைக் குற்றத்தான் வரும் இருவகை வினையும் உள்ளதுணையும், உயிர் யாக்கையோடுங்கூடி நின்று அவ்வினைகளது இருவகைப்பயனையும் நுகருமாகலான், அந்நாள் முழுவதும் வாழ்நாள் எனப்பட்டது.
குற்றங்கள் ஐந்தாவன: அவிச்சை, அகங்காரம், அவா, விழைவு, வெறுப்பு என்பன; இவற்றை வடநூ்லார் பஞ்சக்கிலேசம் என்பர்.
வினை இரணடாவன, நல்வினை தீவினை என்பன.
பயன் இரண்டாவன, இன்பந் துன்பம் என்பன.
இதனான் அறம் வீடுபயக்கும் என்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 39 (அறத்தான்)[தொகு]

"அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
"புறத்த புகழு மில.
பரிமேலழகர் உரை:
(இதன் பொருள்) அறத்தான் வருவதே இன்பம் = இல்லறத்தோடு பொருந்தி வருவதே இன்பமாவது;
மற்ற எல்லாம் புறத்த = அதனோடு பொருந்தாது வருவனவெல்லாம் இன்பமாயினுந் துன்பத்தினிடத்த;
புகழும் இல = அதுவேயுமன்றிப் புகழும் உடையனவல்ல.
பரிமேலழகர் உரை விளக்கம்:
ஆன் உருபு ஈண்டு உடனிகழ்ச்சிக்கண் வந்தது; தூங்கு கையா னோங்கு நடைய"(புறநானூறு, 22) என்புழிப்போல.
இனபம் காமநுகர்ச்சி; அஃதாமாறு காமத்துப்பாலின் முதற்கட் சொல்லுதும்.
இன்பத்திற் புறம் எனவே துன்பமாயிற்று.
பாவத்தான் வரும் பிறனில்விழைவு முதலாயின அக்கணத்துள் இன்பமாய்த் தோன்றுமாயினும் பின் துன்பமாய் விளைதலின் புறத்த என்றார்.
அறத்தோடு வாராதன புகழுமில எனவே, வருவது புகழுடைத்தென்பது பெற்றாம்.
இதனான் அறஞ்செய்வாரே இம்மையின்பமும், புகழும் எய்துவர் என்பது கூறப்பட்டது.

திருக்குறள்: 40 (செயற்பால)[தொகு]

"செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.
பரிமேலழகர் உரை:
(இதன்பொருள்) ஒருவற்குச் செயற்பாலது அறனே = ஒருவனுக்குச் செய்தற் பான்மையது நல்வினையே;
உயற்பாலது பழியே = ஒழிதற்பான்மையது தீவினையே.
பரிமேலழகர் உரை விளக்கம்:
ஒரும் என்பன இரண்டும் அசைநிலை.
தேற்றேகாரம் பின்னுங் கூட்டப்பட்டது.
பழிக்கப்படுவதனைப் பழி யென்றார். இதனாற் செய்வதும் ஒழிவதும் நியமிக்கப்பட்டன.
தெய்வப்புலமைத் திருவள்ளுவர் செய்த அறன்வலியுறுத்தல் அதிகாரமும் அதற்குப்பரிமேலழகர் செய்த உரையும் முற்றும்.

திருக்குறள் பாயிரவியல் முற்றும்