திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/79.நட்பு

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


79.நட்பு[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 79.நட்பு[தொகு]

அதிகார முன்னுரை
இனி, அப்படை போல அரசனுக்கு வினையிடத்து உதவுவதாகிய நட்பினை ஐந்ததிகாரம் விதிமுகத்தானும், பன்னிரண்டு அதிகாரம் எதிர்மறை முகத்தானும் கூறுவான் தொடங்கி, விதிமுக அதிகாரம் ஐந்தனுள்ளும் முதற்கண் நட்புக் கூறுகின்றார். அஃதாவது, இன்னது என்பதூஉம், அதிகார முறைமையும் இதனுள் விளங்கும்.

குறள் 781 (செயற்கரியயா )[தொகு]

செயற்கரிய யாவுள நட்பி னதுபோல் () செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்

வினைக்கரிய யாவுள காப்பு. (01) வினைக்கு அரிய யா உள காப்பு.

தொடரமைப்பு: நட்பின் செயற்கு அரியா யா உள? அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள? "

இதன்பொருள்
நட்பின் செயற்கு அரிய யா உள= நட்புப்போலச்செய்துகோடற்கு அரிய பொருள்கள் யாவை உள; அதுபோல் வினைக்கு அரிய காப்பு யா உள= செய்துகொண்டால் அதுபோலப் பகைவர் செய்யும் வினைக்குப் புகற்கரிய காவலாவன யாவை உள?
உரைவிளக்கம்
நட்புச் செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றாற் செய்யும் உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும் முதலிய அரிய வாகலின் நட்பின் செயற்கு அரியனவில்லை யென்றும், செய்தாற் பகைவர் அஞ்சி வினை தொடங்கார் ஆகலின், அதுபோல வினை வாராமைக்கு அரிய காவலில்லை என்றும் கூறினார். நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும். அவற்றுள், இயற்கை பிறப்பு முறையான் ஆயதூஉம், தேய முறையான் ஆயதூஉம் என இருவகைப்படும். அவற்றுள் முன்னையது சுற்றமாகலின், அது சுற்றந்தழாலின் அடங்கிற்று; ஏனையது பகை இடையிட்ட தேயத்தது ஆகலின், அது துணைவலியென வலியறிதலுள் அடங்கிற்று. இனி, ஈண்டுச் சொல்லப்படுவது, முன் செய்த உதவிபற்றி வரும் செய்கையே ஆகலின், அதன் சிறப்பு இதனால் கூறப்பட்டது.

குறள் 782(நிறைநீர )[தொகு]

நிறைநீர நீரவர்கேண்மைப் பிறைமதிப் () நிறை நீர நீரவர் கேண்மைப் பிறை மதிப்

பின்னீர பேதையார் நட்பு. (02) பின் நீர பேதையார் நட்பு.

தொடரமைப்பு: நீரவர் கேண்மை பிறை நிறை நீர, பேதையார் நட்பு மதிப் பின் நீர.

இதன்பொருள்
நீரவர் கேண்மை பிறை நிரை நீர= அறிவுடையார் நட்புக்கள் பிறைநிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையும் தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர= மற்றைப் பேதைமை உடையார் நட்புக்கள், நிறைந்தமதி பின் குறையும் தன்மைபோல நாள்தோறும் குறையும் தன்மையவாம்.
உரைவிளக்கம்
'நீரவர்' என்றார், இனிமைபற்றி. 'கேண்மை', 'நட்பு' என்பன, ஒருபொருட்கிளவி. செய்தாரது பன்மையான், நட்பும் பலவாயின. அறிவுடையாரும், அறிவடையாரும் செயதன முன்சுருங்கிப் பின் பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன் பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம், தம்முள் முன் அறியாமையும், பின் அறிதலும் ஆம்.

குறள் 783 (நவில்தொறு )[தொகு]

நவிறொறு நூனயம் போலும் பயிறொறும் () நவில்தொறும் நூல் நயம் போலும் பயில் தொறும்

பண்புடை யாளர் தொடர்பு. (03) பண்பு உடையாளர் தொடர்பு.

தொடரமைப்பு: பண்புடையாளர் தொடர்பு பயில்தொறும், நூல் நவில்தொறும் நயம் போலும்.

இதன்பொருள்
பண்புடையாளர் தொடர்பு பயில்தொறும்= நற்குணமுடைய மக்கள், தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பம்செய்தல்; நூல் நவில்தொறும் நயம்போலும்= நூற்பொருள் கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பம் செய்தலை ஒக்கும்.
உரைவிளக்கம்
நயம் செய்தலான், நயம் எனப்பட்டது. இருமையினும் ஒருகாலைக்கொருகால் மிகும் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.

குறள் 784 (நகுதற் )[தொகு]

நகுதற் பொருட்டன்று நட்டன் மிகுதிக்கண் () நகுதல் பொருட்டு அன்று நட்பு மிகுதிக்கண்

மேற்சென் றிடித்தற் பொருட்டு. (04) மேல் சென்று இடித்தல் பொருட்டு.

தொடரமைப்பு: நட்டல் நகுதற் பொருட்டு அன்று, மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு.

இதன்பொருள்
நட்டல் நகுதற் பொருட்டன்று= ஒருவனோடு ஒருவன் நட்புச்செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடல் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு= அவர்க்கு வேண்டாதன செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
உரைவிளக்கம்
பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான், வேண்டப்படுவது அன்மையின், அதனை 'மிகுதி' என்றும், அது செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின் 'மேற்சென்று' என்றும். இன்சொற்கு மீளாமையின் 'இடித்தற்பொருட்டு' என்றும் கூறினார். :இதனால் நட்பின் பயன் கூறப்பட்டது.

குறள் 785 (புணர்ச்சி )[தொகு]

புணர்ச்சி பழகுதல் வேண்டா வுணர்ச்சிதா () புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்

னட்பாங் கிழமை தரும். (05) நட்பு ஆம் கிழமை தரும்.

தொடரமைப்பு: புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.

இதன்பொருள்
புணர்ச்சி பழகுதல் வேண்டா= ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப் புணர்ச்சியும், பழகுதலும் ஆகிய காரணங்கள் வேண்டுவது இல்லை; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்= இருவர்க்கும் ஒத்த உணர்ச்சிதானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.
உரைவிளக்கம்
'புணர்ச்சி', ஒரு தேயத்தராதல்; "இன்றே போல்க நும் புணர்ச்சி" என்றதும் அதனை. 'பழகுதல்', பலகாற் கண்டும் சொல்லாடியும் மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும், பிசிராந்தையார்க்கும்போல உணர்ச்சி ஒப்பின், அதுவே உடனுயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம். நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி ஒத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும் பின்னது சிறப்புடைத்து என்பது இதனால் கூறப்பட்டது.

¶.புறநானூறு, 58.

†.புறநானூறு, 217.

குறள் 786( முகநக)[தொகு]

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத் ()

தகநக நட்பது நட்பு. (06)

தொடரமைப்பு: முகம் நக நட்பது நட்பு அன்று, நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு.

இதன்பொருள்
முகம் நக நட்பது நட்பு அன்று= கண்டவழி அகம் ஒழிய, முகம் மாத்திரமே மலரும் வகை நட்கும் அது, நட்பு ஆகாது; நெஞ்சத்து அகம் நக நட்பது நட்பு= அன்பால் அகமும் மலர நட்கும் அதே நட்பாவது.
உரைவிளக்கம்
நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார். இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தான் தொக்கது. இதனால் இரண்டும் ஒருங்கே மலரவேண்டும் என்பது பெற்றாம்.

குறள் 787 (அழிவினவை )[தொகு]

அழிவி னவைநீக்கி யாறுய்த் தழிவின்க () அழிவின் அவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்கண்

ணல்ல லுழப்பதா நட்பு. (07) அல்லல் உழப்பது ஆம் நட்பு.

தொடரமைப்பு:அழிவின் அவை நீக்கி ஆறு உய்த்து, அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம்.

இதன்பொருள்
அழிவின் அவை நீக்கி ஆறு உய்த்து= கேட்டினைத்தரும் தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச் செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது நட்பாம்= தெய்வத்தான் கேடு வந்துழி, அது விலக்கப்படாமையின் அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே ஒருவனுக்கு நட்பாவது.
உரைவிளக்கம்
'ஆறு' என வருகின்றமையின், அழிவினைத் தருமவை என்று ஒழிந்தார். தெருண்ட அறிவின வர்"§ என்புழிப்போல இன் சாரியை நிற்க இரண்டனுருபு தொக்கது. இனி, நவை என்று பாடம் ஓதி, அதற்குப் போரழிவினும், செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும், 'அழிவின்கண்' என்பதற்கு யாக்கை அழிவின்கண் என்றும் உரைப்பாரும் உளர்.

§.நாலடியார், 301.

குறள் 788 (உடுக்கை )[தொகு]

உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே () உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே

யிடுக்கண் களைவதா நட்பு. (08) இடுக்கண் களைவது ஆம் நட்பு.

தொடரமைப்பு: உடுக்கை இழந்தவன் கை போல, ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்.

இதன்பொருள்
உடுக்கை இழந்தவன் கைபோல= அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கைசென்று உதவி அவ் இளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம்= நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி, அப்பொழுதே சென்று உதவி, அதனைக் களைவதே நட்பாவது.
உரைவிளக்கம்
அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ் விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்றப்பட்டது.

குறள் 789(நட்பிற்கு )[தொகு]

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனிற் கொட்பின்றி () நட்பிற்கு வீற்று இருக்கை யாது எனில் கொட்பு இன்றி

யொல்லும்வா யூன்று நிலை. (09) ஒல்லும் வாய் ஊன்றும் நிலை.

தொடரமைப்பு: நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின், கொட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை.

இதன்பொருள்
நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின்= நட்பினுக்கு அரசிருக்கை யாது எனின்; கொட்பு இன்றி ஒல்லும்வாய் ஊன்றும் நிலை= அஃது எஞ்ஞான்றும், திரிபின்றி இயலும் எல்லை எல்லாம் அறம் பொருள்களின் தளராமைத்? தாங்கும் தன்மை.
உரைவிளக்கம்
ஒரு ஞான்றும் வேறுபடாது, மறுமை இம்மைகட்கு உறுதியாய அறம் பொருள்களில் தளர்ந்துழி, அத்தளர்ச்சி நீக்கி, அவற்றின்கண் நிறுத்துதற்குமேல் ஒருசெயலும் இன்மையின், அதனை நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.

குறள் 790 (இனையரிவர் )[தொகு]

இனைய ரிவரெமக் கின்னம்யா மென்று () இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று

புனையினும் புல்லென்னு நட்பு. (10) புனையினும் புல்லென்னும் நட்பு.

தொடரமைப்பு: இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும், நட்புப் புல்லென்னும்.

இதன்பொருள்
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும்= இவர் நமக்கு இத்துணை அன்பினர், யாம் இவர்க்கு இத்தன்மையம் என்று ஒருவரை ஒருவர் புனைந்து சொல்லினும்; நட்புப் புல் என்னும்= நட்புப் புல்லிதாய்த் தோன்றும்.
உரைவிளக்கம்
இவர்க்கு என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும் வேற்றுமையின்றி வைத்துப் புனைந்து உரைப்பினும் வேற்றுமை உண்டாம் ஆகலின், நட்புப் 'புல்லென்னும்' என்றார்.
இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.