திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/57.வெருவந்தசெய்யாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- 1. அரசியல்- அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை: அஃதாவது, குடிகள் அஞ்சுவதும், பகுதி அஞ்சுவதும், தான் அஞ்சுவதுமாகிய தொழில்களைச் செய்யாமை. அவை செய்தல் கொடுங்கோன்மைப்பாற் படுதலின், இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 561 (தக்காங்கு)[தொகு]

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தாதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்

'லொத்தாங் கொறுப்பது வேந்து. (01)'ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

இதன்பொருள்
தக்காங்கு நாடி= ஒருவன் தன்னின் மெலியார் மேல் சென்றவழி அதனை நடுவாக நின்று ஆராய்ந்து; தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து= பின்னும் அது செய்யாமற் பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
உரைவிளக்கம்
'தக்காங்கு', 'ஒத்தாங்கு' என்பன ஒருசொல். தகுதி யென்பது நடுவுநிலைமையாதல். "தகுதியென ஒன்று நன்றே" 1என்பதனானும் அறிக. இதனானே தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம்பற்றி மிக ஒறுத்தலும், குடிகள்அஞ்சும் வினையாதல் பெற்றாம்.
1.குறள், 111.

குறள் 562 (கடிதோச்சி)[தொகு]

கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்ககடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்

'நீங்காமை வேண்டு பவர். (02)'நீங்காமை வேண்டுபவர்.

இதன்பொருள்
கடிது ஓச்சி= அவ்வொத்தாங்கு ஒறுத்தல் தொடங்குங்கால் அளவிறப்பச் செய்வார்போல் தொடங்கி; மெல்ல எறிக= செய்யுங்கால் அளவிறவாமல் செய்க; ஆக்கம் நெடிது நீங்காமை வேண்டுபவர்= ஆக்கம் தங்கண் நெடுங்காலம் நிற்றலை வேண்டுவார்.
உரைவிளக்கம்
'கடிதோச்'சல் குற்றஞ்செய்வார் அதனை அஞ்சுதல் பொருட்டும், 'மெல்லஎறி'தல் யாவரும் வெருவாமைப் பொருட்டுமாம். தொடங்கின அளவிற் குறைதல் பற்றி மென்மை கூறப்பட்டது. ஓச்சுதல், எறிதல் என்பன இரண்டும் உவமைபற்றி வந்தன.
இவை இரண்டுபாட்டானும் குடிகள் வெருவந்த செய்யாமையது இயல்பு கூறப்பட்டது.

குறள் 563 (வெருவந்த)[தொகு]

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயிவெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்

'னொருவந்த மொல்லைக் கெடும். (03)'ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.

இதன்பொருள்
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்= குடிகள் வெருவிய செயல்களைச் செய்துநடக்கும் வெங்கோலனாம் ஆயின்; ஒருவந்தம் ஒல்லைக் கெடும்= அரசன் ஒருதலையாகக் கடிதிற் கெடும்.
உரைவிளக்கம்
'வெங்கோலன்' என்பது ஈண்டு வாளா பெயராய் நின்றது. ஒருவந்தம், ஒருதலை, ஏகாந்தம் என்பன ஒருபொருட்கிளவி. அச்செயல்களும் கேடுகளும் முன்னர்க் கூறப்படும்.

குறள் 564 (இறைகடிய)[தொகு]

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்தஇறை கடியன் என்று உரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்

'னுறைகடுகி யொல்லைக் கெடும். (04)'உறை கடுகி ஒல்லைக் கெடும்.

இதன்பொருள்
இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல்வேந்தன்= குடிகளான் நம்மிறைவன் கடியன் என்று சொல்லப்படும் இன்னாத சொல்லையுடைய வேந்தன்; உறைகடுகி ஒல்லைக் கெடும்= ஆயுளும்குறைந்து செல்வமும் கடிதின் இழக்கும்.
உரைவிளக்கம்
நெஞ்சு நொந்து சொல்லுதலான், இன்னாமை பயப்பதாய சொல்லை 'இன்னாச் சொல்' என்றார். 'உறை' என்பது முதனிலைத் தொழிற்பெயர்; அஃது ஈண்டு ஆகுபெயராய் உறைதலைச் செய்யும் நாள்மேல் நின்றது. அது குறைதலாவது, அச்சொல் இல்லாதார்க்கு உள்ளதிற் சுருங்குதல்.

குறள் 565 (அருஞ்செவ்வி)[தொகு]

அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்

பேஎய்கண் டன்ன துடைத்து. (05)பேஎய் கண்டு அன்னது உடைத்து.

இதன்பொருள்
அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்= தன்னைக் காண வேண்டுவார்க்குக் காலம் அரியனாய்க் கண்டால் இன்னாத முகத்தினை உடையானது பெரிய செல்வம்; பேஎய் கண்டன்னது உடைத்து= பேயாற் காணப்பட்டாற் போல்வதொரு குற்றம் உடைத்து.
உரைவிளக்கம்
எனவே இவை இரண்டும் வெருவந்த செய்தல்ஆயின. இவை செய்வானைச் சார்வார் இன்மையின், அவனது செல்வம் தனக்கும் பிறர்க்கும் பயன்படா என்பது பற்றிப் "பேஎய் கண்டன்னதுடைத்து" என்றார். காணுதல்- தன்வயமாக்குதல்.

குறள் 566 (கடுஞ்சொல்லன்)[தொகு]

கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வகடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்

'நீடின்றி யாங்கே கெடும். (06)'நீடு இன்றி ஆங்கே கெடும்.

இதன்பொருள்
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் = அரசன் கடிய சொல்லையும் உடையனாய்க் கண்ணோட்டமும் இலன் ஆயின்; நெடுஞ் செல்வம் நீடு இன்றி ஆங்கே கெடும் = அவனது பெரிய செல்வம் நீடுதலின்றி அப்பொழுதே கெடும்.
உரைவிளக்கம்
"வேட்டம் கடுஞ்சொல் மிகுதண்டம் சூதுபொருள் ஈட்டங்கட் காமமோ டேழு" எனப்பட்ட விதனங்களுட் கடும் சொல்லையும், மிகுதண்டத்தையும் இவர் இவ்வெருவந்த செய்தலுள் அடக்கினார். 'கண்' ஆகுபெயர். இவை செய்தபொழுதே கெடும் சிறுமைத்துஅன்று ஆயினும் என்பார், 'நெடுஞ்செல்வம்' என்றார். நீடுதல்- நீட்டித்தல்.

குறள் 567 (கடுமொழியுங்)[தொகு]

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்தகடு மொழியும் கை இகந்த தண்டமும் வேந்தன்

'னடுமுரண் டேய்க்கு மரம். (07)'அடு முரண் தேய்க்கும் அரம்.

இதன்பொருள்
கடு மொழியும் கை இகந்த தண்டமும்= கடிய சொல்லும் குற்றத்தின் மிக்க தண்டமும்; வேந்தன் அடு முரண் தேய்க்கும் அரம்= அரசனது பகை வெல்லுதற்கு ஏற்ற மாறுபாடாகிய இரும்பினைத் தேய்க்கும் அரமாம்.
உரைவிளக்கம்
கடுமொழியால் தானையும், கையிகந்த தண்டத்தான் தேசமும் கெட்டு, முரண் சுருங்கி வருதலின் 'அரம்' ஆக்கி, திண்ணிதாயினும் தேயும் என்றற்கு 'அடுமுர'ணை இரும்பாக்கினார். ஏகதேச உருவகம். 'அரம்' என்பதனைத் தனித்தனிக் கூட்டுக. இவை ஐந்து பாட்டானும், செவ்வியின்மை, இன்னாமுகமுடைமை, கண்ணோட்டம் இன்மை, கடுஞ்சொற் சொல்லல், கையிகந்த தண்டம் என்று இவைகள் குடியஞ்சும் வினையென்பதூஉம், இவை செய்தான் ஆயுளும் அடுமுரணும் செல்வமும் இழக்கும் என்பதூஉம் கூறப்பட்டன.

குறள் 568 (இனத்தாற்றி)[தொகு]

இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச்

'சீறிற் சிறுகுந் திரு. (08)'சீறின் சிறுகும் திரு.

இதன்பொருள்
காரியத்தைப் பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன்; சினத்து ஆற்றிச் சீறின்= அப்பிழைப்பால் தன்காரியம் தப்பியவழித் தன்னைச் சினமாகிய குற்றத்தின்கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின்; திருச் சிறுகும்= அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும்.
உரைவிளக்கம்
அரசர் பாரம் பொறுத்து உய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின் பிழைப்பாதல் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர்; நீங்கவே அப்பிழைப்புத் தீருமாறும், அப்பாரம் இனிது உய்க்குமாறும் இலனாம் என்பது நோக்கித் 'திருச்சிறுகும்' என்றும் கூறினார். இதனாற் பகுதியஞ்சும் வினையும், அது செய்தானது குற்றமும் கூறப்பட்டன.

குறள் 569 (செருவந்த)[தொகு]

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்

'வெருவந்து வெய்து கெடும். (09)'வெருவந்து வெய்து கெடும்.

இதன்பொருள்
சிறை செய்யா வேந்தன்= செருவருதற்கு முன்னே தனக்குப் புகல் ஆவதோர் அரண் செய்துகொள்ளாத அரசன்; செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும்= அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதிற் கெடும்.
உரைவிளக்கம்
பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின் தமியனாய்த் தானும் வெருவி, அப்பகை வயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.

குறள் 570 (கல்லார்ப்)[தொகு]

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்லகல்லார்ப் பிணிக்கும் கடும்கோல் அதுவல்லது

'தில்லை நிலக்குப் பொறை. (10)'இல்லை நிலக்குப் பொறை.1

இதன்பொருள்
கடுங்கோல் கல்லார்ப்பிணிக்கும்= கடுங்கோலனாய அரசன் நீதிநூன் முதலிய கல்லாதாரைத் தனக்குப் பகுதியாகக் கூட்டாநிற்கும்; அதுவல்லது நிலக்குப் பொறை இல்லை= அக்கூட்டம்அல்லது நிலத்திற்கு மிகையாய பாரம் பிறிது இல்லை.
உரைவிளக்கம்
கடுங்கோல் என்பது ஈண்டு மிக்க தண்டத்தின் மேற்று அன்றி, அதனைச் செய்வான் மேற்று ஆயிற்று. அவன் அது செய்தற்கு இயைவாரை அல்லது கூட்டாமையின் 'கல்லார்ப்பிணிக்கும்' என்றும், ஏனையவற்றை எல்லாம் பொறுக்கின்றது இயல்பாகலின் நிலத்திற்குப் பொறை 'அதுவல்லது இல்லை' என்றும் கூறினார். 'நிலக்கு' என்பது செய்யுள்விகாரம். இதனால் வெருவந்த செய்தலின் குற்றம் கூறப்பட்டது.
1. பார்க்க: குறள், 189.