திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/35.துறவு

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


துறவறவியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகாரம் 35.துறவு[தொகு]

அதிகாரமுன்னுரை
அஃதாவது, புறமாகிய செல்வத்தின் கணணும் அகமாகிய யாக்கையின்கணணும் உளதாம் பற்றினை அவற்றது நிலையாமை நோக்கி விடுதல். அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும்.

குறள்: 341 (யாதனின்)[தொகு]

யாதனின் யாதனி னீங்கியா னோத
லதனி னதனி னிலன் (01)
பதப்பிரிப்பு: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
இதன்பொருள்
யாதனின் யாதனின் நீங்கியான்= ஒருவன் யாதொருபொருளின் யாதொருபொருளின் நீங்கினான்; அதனின் அதனின் நோதல் இலன்= அவன் அப்பொருளால் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன்.
உரைவிளக்கம்
அடுக்குக்கள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல்= துறத்தல். ஈண்டுத் 'துன்பம்' என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கட் பாவத்தான் வருவனவுமாகிய இருவகைத் துன்பங்களையுமாம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை. அஃதன்றி ஒரோவொன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.

குறள்:342 (வேண்டின் உண்டாக)[தொகு]

வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல (02)
பதப்பிரிப்பு
வேண்டின் உண்டாகத் துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல.
இதன்பொருள்
துறந்தபின் ஈண்டு இயற்பால பல= எல்லாப் பொருள்களையும் துறந்தால் ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல; வேண்டின் உண்டாகத் துறக்க= அவ்வின்பங்களைவேண்டின் அவற்றைக் காலம் பெறத் துறக்க.
உரைவிளக்கம்
அவ்வின்பங்களாவன, அப்பொருள்கள் காரணமாக மனமொழிமெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறி்க்கட் சேறலானும் வருவன. இளமைக்கண் துறந்தான் அவற்றை நெடுங்காலம் எய்துமாகலின், 'உண்டாகத் துறக்க' என்றார். 'இன்பங்கள்' என்பதும் 'காலம் என்பதும்' வருவிக்கப்பட்டன. இம்மைக்கண் துன்பங்கள் இலவாதலேயன்றி இன்பங்கள் உளவாதலும் உண்டு என்பதாம்.

குறள்: 343 (அடல்வேண்டும்)[தொகு]

அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லா மொருங்கு (03)
பதப்பிரிப்பு
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.
இதன்பொருள்
ஐந்தன் புலத்தை அடல் வேண்டும்= வீடு எய்துவார்க்குச் செவி முதலிய ஐம்பொறிகட்கு உரியவாய ஓசை முதலிய ஐம்புலன்களையும் கெடுத்தல் வேண்டும்; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும்= கெடுக்குங்கால் அவற்றை நுகர்தற் பொருட்டுத் தாம் படைத்த பொருள் முழுதையும் ஒருங்கே விடுதல் வேண்டும்.
உரைவிளக்கம்
'புலம்' என்றது அவற்றை நுகர்தலை. அது மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானுமன்றி வாராத பொருள்கள் மேலல்லது வீட்டுநெறியாகிய யோகஞானங்களிற் செலுத்தாமையின், அதனை 'அடல்வேண்டும்' என்றும், அஃது அப்பொருள்கள்மேல் செல்லின் அந்நுகர்ச்சி விறகுபெற்ற தழல்போல் முறுகுவதல்லது அடப்படாமையின், 'வேண்டியவெல்லாம் ஒருங்கு விடல்வேண்டும்' என்றும் கூறினார்.

குறள்: 344 (இயல்பாகும்)[தொகு]

இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை
மயலாகு மற்றும் பெயர்த்து (04)
பதப்பிரிப்பு
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து.
இதன்பொருள்
ஒன்று இன்மை நோன்பிற்கு இயல்பாகும்= பற்றப் படுவது ஒருபொருளும் இல்லாமை தவம் செய்வார்க்கு இயல்பாம்; உடைமை பெயர்த்து மற்றும் மயலாகும்= அஃதன்றி, ஒன்றாயினும் உடைமை அத்தவத்தைப் போக்குதலான், மீண்டும் மயங்குதற்கு ஏதுவாம்.
உரைவிளக்கம்
இழிவு சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'நோன்பு' என்பதூஉம் 'மயல்' என்பதூஉம் ஆகுபெயர். 'பெயர்த்தலான்' என்பது திரிந்து நின்றது. நோன்பைப் பெயர்த்தலான் என வேற்றுமைப் படுத்துக் கூட்டுக. எல்லாப் பொருள்களையும் விட்டு ஒரு பொருளை விடாத வழியும், அது சார்பாக விட்டனவெல்லாம் மீண்டு வந்து தவத்திற்கு இடையீடாய் மனக்கலக்கம் செய்யும் என்பது கருத்து.
இவை நான்குபாட்டானும், எனது என்னும் புறப்பற்று விடுதல் கூறப்பட்டது.

குறள்: 345 (மற்றுந்தொடர்ப்பாடு)[தொகு]

மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க
லுற்றார்க் குடம்பு மிகை (05)
பதப்பிரிப்பு
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை.
இதன்பொருள்
பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை= பிறப்பு அறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவியாகிய உடம்பும் மிகையாம்; மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்= ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்!
உரைவிளக்கம்
'உடம்பு' என்ற பொதுமையான், உருவுடம்பும் அருவுடம்பும் கொள்ளப்படும். அவற்றுள் அருவுடம்பாவது பத்துவகை இந்திரிய உணர்வோடும், ஐவகை வாயுக்களோடும், காமவினை விளைவுகளோடும் கூடிய மனம்; இது நுண்ணுடம்பு எனவும்படும். இதன்கண் பற்று நிலையாமை உணர்ந்ததுணையான் விடாமையின், விடுதற்கு உபாயம் முன்னர்க் கூறுப[1]. இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது வருதலை உணர்ந்து இவற்றானாய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண்ணே விரைதலின், 'உடம்புமிகை' என்றார். இன்பத்துன்பங்களான் உயிரோடு ஒற்றுமை எய்துதலின், இவ்வுடம்புகளும் 'யான்' எனப்படும்.
இதனான் அகப்பற்று விடுதல் கூறப்பட்டது.

[1]. குறள், 350.

குறள்: 346 (யானெனதென்னும்)[தொகு]

யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த வுலகம் புகும் (06)
பதப்பிரிப்பு
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.
இதன்பொருள்
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்= தான் அல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபில்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான்; வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்= வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும்.
உரைவிளக்கம்
மயக்கம்- அறியாமை. அதனைக் கெடுத்தலாவது தேசிகர்பாற் பெற்ற உறுதிமொழிகளானும், யோகப்பயிற்சியானும் அவை யான் எனது அன்மை தெளிந்து, அவற்றின்கண் பற்றை விடுதல். சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது.
இதனான் இவ்விருவகைப் பற்றினையும் விட்டார்க்கே வீடுளது என்பது கூறப்பட்டது.

குறள்: 347 (பற்றிவிடாஅ)[தொகு]

பற்றி விடாஅ விடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு (07)
பதப்பிரிப்பு
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅதவர்க்கு.
இதன்பொருள்
பற்றினைப் பற்றி விடாஅதவர்க்கு= இருவகைப் பற்றினையும் இறுகப்பற்றி விடாதாரை; இடும்பைகள் பற்றி விடாஅ= பிறவித்துன்பங்கள் இறுகப்பற்றி விடா.
உரைவிளக்கம்
இறுகப்பற்றுதல்= காதல்கூர்தல். விடாதவர்க்கு என்பது வேற்றுமைமயக்கம்.
இதனால் இவை விடாதவர்க்கு வீடில்லை என்பது கூறப்பட்டது.

குறள்: 348 (தலைப்பட்டார்)[தொகு]

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர் (08)
பதப்பிரிப்பு
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர்.
இதன்பொருள்
தீரத்துறந்தார் தலைப்பட்டார்= முற்றத்துறந்தார் வீட்டினைத் தலைப்பட்டார்; மற்றையவர் மயங்கி வலைப்பட்டார்= அங்ஙனம் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டார்.
உரைவிளக்கம்
'முற்றத்துறத்த'லாவது, பொருள்களையும் இருவகை உடம்பினையும் உவர்த்துப் பற்றற விடுதல். அங்ஙனம் துறவாமையாவது, அவற்றுள் யாதானும் ஒன்றின்கண் சிறிதாயினும் பற்றுச்செய்தல். துணிவுபற்றித் 'தலைப்பட்டார்' என்றும், பொய்ந்நெறி கண்டே பிறப்பு வலையுள் அகப்படுதலின் 'மயங்கி' என்றும் கூறினார்.9

குறள்: 349 (பற்றற்ற)[தொகு]

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும் (09)
பதப்பிரிப்பு
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும் மற்று
நிலையாமை காணப்படும்.
இதன்பொருள்
பற்று அற்ற கண்ணே பிறப்பு அறுக்கும்= ஒருவன் இருவகைப்பற்றும் அற்றபொழுதே, அப்பற்றுஅறுதி அவன் பிறப்பை அறுக்கும்; மற்று நிலையாமை காணப்படும்= அவை அறாதபொழுது அவற்றால் பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.
உரைவிளக்கம்
காரணமற்ற பொழுதே காரியமும் அற்றதாம் முறைமைபற்றி, 'பற்றற்ற கண்ணே' என்றார்; "அற்றது பற்றெனில்- உற்றது வீடு[2]" என்பதூஉம் அதுபற்றி வந்தது.
இவையிரண்டுபாட்டானும் அவ்விருமையும் ஒருங்கு கூறப்பட்டன.
[2]. திருவாய்மொழி, 2-ஆம் திருப்பதிகம், 5.

குறள்: 350 (பற்றுக)[தொகு]

பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு (10)
பதப்பிரிப்பு
பற்றுக பற்று அற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
இதன்பொருள்
பற்று அற்றான் பற்றினைப் பற்றுக= எல்லாப் பொருளையும் பற்றிநின்றே பற்றற்ற இறைவன் ஓதிய வீட்டு நெறியை இதுவே நன்னெறியென்று மனத்துட் கொள்க; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு= கொண்டு, அதன்கண் உபாயத்தை அம்மனத்தாற் செய்க, விடாது வந்த பற்று விடுதற்கு.
உரைவிளக்கம்
கடவுள் வாழ்த்திற்கு ஏற்ப ஈண்டும் பொதுவகையான் 'பற்றற்றான்' என்றார். 'பற்றற்றான் பற்று' என்புழி, ஆறாவது செய்யுட்கிழமைக்கண்[1] வந்தது. ஆண்டுப் பற்று' என்றது பற்றப்படுவதனை. 'அதன்கண் உபாயம்' என்றது தியானசமாதிகளை. 'விடாது வந்த பற்று' என்றது, அநாதியாய் வரும் உடம்பிற் பற்றினை. அப்பற்று விடுதற்கு உபாயம் இதனால் கூறப்பட்டது.
  1. "ஆறாவது செய்யுட்கிழமைக்கண்" - திருக்குறள்:06 (பொறிவாயில்) பார்க்க