திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/40.கல்வி

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால்[தொகு]

1.அரசியல்[தொகு]

அதிகாரம் 40. கல்வி[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, அவ்வரசன் தான் கற்றற்குரிய நூல்களைக் கற்றல். அவையாவன அறநூலும், நீதிநூலும், யானை குதிரை தேர் படைக்கலம் என்று இவற்றின் நூல்களும் முதலாயின. அரசன் அறிவுடையனாயக்கால் தன்னுயிர்க்கே யன்றி மன்னுயிர்க்கும் பயன்படுதல் நோக்கி, இஃது அரசியலுள் வைக்கப்பட்டதாயினும், யாவர்க்கும் உறுதிபயத்தல் சிறப்புடைமையின் பொதுப்படக் கூறுகின்றார். மேல் 'தூங்காமை கல்வி' 1 எனத்தோற்றுவாய் செய்த மாட்சியை விரித்துக் கூறுகின்றமையின், இஃது இறைமாட்சியின் பின் வைக்கப்பட்டது.
1.குறள்- 383.

குறள் 391 (கற்க)[தொகு]

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக (01)
கற்க கசடு அறக் கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக.
இதன்பொருள்
கற்பவை கசடறக் கற்க= ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக நிற்க= அங்ஙனங் கற்றால்அக்கல்விக்குத்தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.
விளக்கம்
'கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப் பிறபொருள் உணர்த்துவன சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினோர்க்கு ஆகா என்பது பெற்றாம். 'கசடறக்கற்ற'லாவது, விபரீத ஐயங்களை நீக்கி, மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும் பயிறல். 'நிற்ற'லாவது இல்வாழ்வுழிக்
"கருமமும் உள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்தலினும்"1 , துறந்துழித் தவத்தான் மெய்யுணர்ந்து அவாவறுத்தலினும் வழுவாமை.
சிறப்புடை மகற்காயிற் கற்றல்வேண்டும் என்பதூஉம், அவனாற் கற்கப்படு நூல்களும், அவற்றைக் கற்கும் ஆறும், கற்றதனாற் பயனும் இதனாற் கூறப்பட்டன.
1.நாலடியார்-250.

குறள் 392 (எண்ணென்ப)[தொகு]

எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு (02)
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு.
இதன்பொருள்
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும்= அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனுமாகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப= அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்
விளக்கம்
'எண்'ணென்பது கணிதம். அது கருவியுஞ் செய்கையும் என இருவகைப்படும். அவை ஏரம்ப முதலிய நூல்களுட் காண்க. 'எழுத்'தெனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற் பொருளைக் காண்டற்குக் கருவியாகலின் 'கண்'ணெனப்பட்டன. அவை கருவியாதல்,

"ஆதி முதலொழிய வல்லா தனவெண்ணி

நீதி வழுவா நிலைமையவான்- மாதே

அறமார் பொருளின்பம் வீடென் றிவற்றின்

திறமாமோ எண்ணிறந்தாற் செப்பு";

"எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்

மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்- மொழித்திறத்தின்

முட்டறுத்த நல்லோன் முதனூற் பொருளுணர்ந்து

கட்டறுத்து வீடு பெறும்"

இவற்றான் அறிக.

'என்ப' வென்பவற்றுள், முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மைவினை. 'அறியாதார்', 'அறிந்தார்' என்பன வருவிக்கப்பட்டன. 'சிறப்புடையுயிர்' என்றது, மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை.

இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.

குறள் 393 (கண்ணுடையர்)[தொகு]

கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர் (03)
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர்.
இதன்பொருள்
கண் உடையர் என்பவர் கற்றோர்= கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர்= மற்றைக் கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
விளக்கம்
தேயம் இடையிட்டவற்றையும் காலம் இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண் உடைமையிற் கற்றாரைக் 'கண்ணுடையர்' என்றும், அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணே உடைமையின் கல்லாதவரைப் 'புண்ணுடையர்' என்றும் கூறினார். மேற் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை கூறியவாற்றான், பொருள்நூல்களையும் கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும் கல்லாரது இழிவும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.

குறள் 394 (உவப்பத்)[தொகு]

உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரித
லனைத்தே புலவர் தொழில் (04)
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
இதன்பொருள்
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே= யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி அவரை யாம் எங்ஙனங் கூடுதும் என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து; புலவர் தொழில்= கற்றறிந்தாரது தொழில்.
விளக்கம்
தாம் நல்வழி ஒழுகல், பிறர்க்கு உறுதிகூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். 'அத்தன்மை', அப்பயனைத் தருந்தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகர்வுஎதிர்வுகளின் இன்பம் பயத்தாலானும், கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம்.

இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.

குறள் 395 (உடையார்முன்)[தொகு]

உடையார்முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர் (05)
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்.
இதன்பொருள்
உடையார் முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்= "பிற்றைநிலைமுனியாது கற்றல் நன்று"2 ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார்; கல்லாதவர் கடையரே= அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர்.
விளக்கம்
'உடையார்', 'இல்லார்' என்பன, உலகவழக்கு. 'ஏக்கறுதல்' ஆசையால் தாழ்தல். 'கடையர்' என்றதனான், அதன் மறுதலைப்பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்கி மெய்யாய கல்வியிழந்தார், பின் ஒருஞான்றும் அறிவுடையர் ஆகாமையின், 'கடையரே' என்றார்.

இதனான் கற்றாரது உயர்வும், கல்லாரது இழிவும் கூறப்பட்டன.

2.புறநானூறு-183.

குறள் 396 (தொட்டனைத்)[தொகு]

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு (06)

தொட்ட அனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்
கற்ற அனைத்து ஊறும் அறிவு

இதன் பொருள்

தொட்ட அனைத்து ஊறும் = தோண்டிய அவ்வளவிற்கு சுரக்கும் (நீர்), மணற்கேணி மாந்தர்க்கு = மணல் கிணறு மக்களுக்கு,
கற்ற அனைத்து ஊறும் அறிவு = (அதுபோன்றே) கல்வி கற்ற அவ்வளவிற்கு சுரக்கும் அறிவு
அதாவது, "மணற்கேணி எவ்வளவுக்கெவ்வளவு தோண்டுகிறோமோ அவ்வளவிற்கு நீர் சுரப்பதுபோல, மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு கல்வி கற்க முயற்சி எடுக்கின்றனறோ அம்முயற்சிக்கேற்ப கல்வி அறிவும் சுரக்கும்" என்பதாக பெறப்படும்.

விளக்கம் (பரிமேலழகர் உரைப்படி)

மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)
(பரிமேலழகர் உரைக்கு நன்றி: குறள் திறன் வலைத்தளம்)

கல்லுதல் என்றால் தோண்டுதல் என்றும் கல்வி கற்றல் என்றும் பொருள்படும் தமிழினிமை இக்குறளில் பொதிந்தமையை காலிங்கர் எடுத்துரைக்கிறார்.

மேன்மேலும் கல்வி கற்பதன் வாயிலாகவே அறிவு மாட்சிமை பெற இயலும் என்பதை உணர்த்துவது இக்குறளாகும்.

மேலும்

இங்கு குறிப்பாக "மணற்கேணி"யுடன் ஒப்பிட்டமைக்கு காரணம், மண் கேணியை போல் அல்லாமல் மணல் கேணி மணல் சரிந்தே தூர்ந்து போகும் தன்மை கொண்டது. அந்த தூரை மண்ட மண்ட வாரி நீக்கினால் மட்டுமே ஊறிய நீர் அந்த கேணியில் மிஞ்சும். அதுபோல அறிவு அழியாமல் நிலைத்து வளர கற்பது தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும்.

குறள் 397 (யாதானு)[தொகு]

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு (07)
யாதானும் நாடு ஆமால் ஊர்ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாத ஆறு.
இதன்பொருள்
யாதானும் நாடாம் ஊராம்= கற்றவனுக்குத் தன்நாடும் தன் ஊருமேஅன்றி, யாதானும் ஒருநாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊராம்; ஒருவன் சாம்துணையும் கல்லாதவாறு என்= இங்ஙனமாயின் ஒருவன் தான் இறக்கும் அளவும், கல்லாது கழிகின்றது என்கருதி?
விளக்கம்
உயிரோடு சேறலின் 'சாந்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தமபோல உற்றுப் பொருட்கொடையும், பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்விபோலச் சிறந்தது பிறிதுஇல்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.

குறள் 398 (ஒருமைக்கட்)[தொகு]

ஒருமைக்கட் டான்கற்ற கல்வி யொருவற்
கெழுமையு மேமாப் புடைத்து (08)
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
இதன்பொருள்
ஒருவற்கு= ஒருவனுக்கு; தான் ஒருமைக்கண் கற்ற கல்வி= தான் ஒருபிறப்பின்கண் கற்ற கல்வி; எழுமையும் ஏமாப்பு உடைத்து= எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து.
விளக்கம்
வினைகள் போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகுமாகலின், எழுமையும் ஏமாப்புடைத்து என்றார். எழுமை மேலே கூறப்பட்டது.3 உதவுதல் நன்னெறிக்கண் உய்த்தல்.
3. 62ஆம் குறளுரை.

குறள் 399 (தாமின்புறவது)[தொகு]

தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார் (09)
தாம் இன்பு உறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்.
இதன்பொருள்
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு= தாம் இன்புறுவதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம் இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார் காமுறுவர்= கற்றறிந்தார் பின்னும் அதனையே விரும்புவர்.
விளக்கம்
'தாம்இன்புறுத'லாவது, நிகழ்வின்கட் சொற்பொருள்களின் சுவைநுகர்வானும், புகழ் பொருள் பூசைபெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம் எய்துதல். 'உலகுஇன்புறுத'லாவது, இம்மிக்காரோடு தலைப்பெய்து அறியாதன வெல்லாம் அறியப்பெற்றோம் என்றும், "யாண்டு பலவாக நரையில"4மாயினேம் என்று உவத்தல். செல்வமாயின், ஈட்டல் காத்தல் இழத்தல் என்று இவற்றால் துன்புறுதலு்ம், பலரையும் பகையாக்கலும் உடைத்தென அறிந்து, அதனைக் காமுறாமையிற் 'கற்றறிந்தார்' என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம் இன்புறுவதற்கு, உலகுஇன்புறுதல் பிறவாற்றான் இன்மையின் அதனையே 'காமுறுவர்' என்றும் கூறினார்.
4.புறநானூறு-191.

குறள் 400 (கேடில்விழுச்செல்வம்)[தொகு]

கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை (10)
கேடு இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை.
இதன்பொருள்
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி= ஒருவனுக்கு அழிவில்லாத சீரிய செல்வமாவது கல்வி; மற்றையவை மாடு அல்ல= அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வம் அல்ல.
விளக்கம்
அழிவின்மையாவது4 தாயத்தார் கள்வர் வலியர் அரசர் என்று இவராற் கொள்ளப்படாமையும், வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையுமாம். சீர்மை தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை மாடல்ல என்றார்.

இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.

நாலடியார்-134.