திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/27.தவம்

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 27. தவம்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு விரதங்களான் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயில்நிலை நிற்றலும், மாரியினும் பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு அவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துப் பிற உயிர்களை ஓம்புதல். புலால் மறுத்து உயிர்கள்மேல் அருள் முதிர்ந்துழிச் செய்யப்படுவது ஆகலின், இது புலால் மறுத்தலின் பின் வைக்கப்பட்டது.

குறள்: 261 (உற்றநோய்)[தொகு]

உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு (01)
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தவத்திற்கு உரு= தவத்தின் வடிவு: உற்றநோய் நோன்றல்= உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும்; உயிர்க்கு உறுகண் செய்யாமை= தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும்; அற்றே= ஆகிய அவ்வளவிற்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே' எனத் தேற்றேகாரம் கொடு்த்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது "யானையது கோடு கூரிது" என்பதனை, யானைக்குக் கோடு கூரிது என்றாற் போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம்.
இதனான் தவத்தது இலக்கணம் கூறப்பட்டது.

குறள்: 262 (தவமுந்)[தொகு]

தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது (02).
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தவமும் தவம் உடையார்க்கு ஆகும்= பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே; அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம்= ஆகலான் அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய், முடிவு போக்கலின் 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது இல்லாதார்க்கு அவை இன்மையின் முடிவு போகாமையின், 'அவம்' ஆம் என்றும் கூறினார்.

குறள்: 263 (துறந்தவர்க்குத்)[தொகு]

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம் (243).
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்
மற்றையவர்கள் தவம்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) மற்றையவர்கள்= இல்லறத்தையே பற்றி நிற்பார்; துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி= துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை விரும்பி; தவம் மறந்தார்கொல்= தாந்தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியான் 'மறந்தார் பொலும்'.
பரிமேலழகர் உரைவிளக்கம்
துப்புரவு அனுபவிக்கப்படுவன. வேண்டிய வேண்டியாங்கெய்தற் பயத்ததாகலின் யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத் தான் செய்யுந் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியான் 'மறந்தார் போலும்'. எனவே, தானத்தில் தவம் மிக்கதென்பது பெற்றாம்.

குறள்: 264 (ஒன்னார்த்)[தொகு]

ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும் (04).
ஒன்னாரைத் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

பரிமேலழகர் உரை: (இதன்பொருள்) ஒன்னார்த் தெறலும்= தம் மறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும்; உவந்தாரை ஆக்கலும்= அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்; எண்ணின் தவத்தான் வரும்= தவம்செய்வார் நினைப்பாராயின் அவர் தவவலியான் அவை அவர்க்கு உளவாம்.

பரிமேலழகர் உரைவிளக்கம்
முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனான், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைத்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.

குறள்: 265 (வேண்டியவேண்டி)[தொகு]

வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும் (265).
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வேண்டிய வேண்டியாஙகு எய்தலால்= முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும்= செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஈண்டு என்பதனான் மறுமைக்கண் என்பது பெற்றாம். $மேற்கதி- வீடுபேறுகள். தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.
$இந்திரன் முதலிய இறையவர் பதங்கள்.

குறள்: 266 (தவஞ்செய்வார்)[தொகு]

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு (06).
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தம்கருமம் செய்வார் தவம் செய்வார்= தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்; மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார்= அவரை ஒழிந்த பொருளின்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலையுள் பட்டுத் தமக்குக்கேடு செய்வார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அநித்தமாய், மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்றொழியாது, தவத்தினைச் செய்யப் பிறப்புப் பிணி மூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர், ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தங்கருமஞ் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதாய சிற்றின்பத்தின் பொருட்டுப் பல பிறவியும் துன்புறத்தக்க பாவம் செய்துகோடலின், அல்லாதாரை 'அவஞ்செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

குறள்:267 (சுடச்சுடரும்)[தொகு]

சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (07).
சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) சுடச்சுடரும் பொன்போல்= தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளிமிகுமாறு போல; நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச் சுட ஒளிவிடும்= தவஞ்செய்ய வல்லார்க்கு அதனான் வருந் துன்பம் வருத்த வருத்தந் தம்மொடு கலந்த பாவ நீங்கி ஞானம்மிகும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
சுடச்சுடரும் பொன்போல் என்றாராயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஓளி போலப் பொருள்களை விளக்கலின் ஒளி என்றார்.

குறள்: 268 (தன்னுயிர்)[தொகு]

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும் (08)
தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தன் உயிர் தான் அறப் பெற்றானை= தன் உயிரைத் தான் தனக்குரித்தாகப் பெற்றவனை; ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும்= அது பெறாதனவாகிய மன்னுயிர்கள் எல்லாம் தொழும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தனக்குரித்தாதல், தவமாகிய தன்கருமம் செய்தல். அதனினூங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது, ஆசையுட்பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின், 'தொழும்' என்றார்.

குறள்: 269 (கூற்றங்)[தொகு]

கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு (09).
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) கூற்றம் குதித்தலும் கைகூடும்= கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்; நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு= தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
பரிமேலழகர் உரைவிளக்கம்
சிறப்பும்மை அது கூடாமை விளக்கிற்று; 'மன்னுயிர் எல்லாம் தோழு'தலேயன்றி, இதுவுங் கைகூடும் என எச்சவும்மையாக உரைப்பினும் அமையும். 'ஆற்றல்' சாப அருள்கள். இவை நான்குபாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.

குறள்: 270 (இலர்பலராகிய)[தொகு]

இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர் (10)
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்.
பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இலர் பலராகிய காரணம்= உலகத்துச் செல்வர் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாதெனில்; நோற்பார் சிலர் நோலாதார் பலர்= அது தவம் செய்வார் சிலராக அது செய்யாதார் பலராதல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்துநின்றன. என்னை? "நுண்ணுணர்வின்மை வறுமை யஃதுடைமை- பண்ணப் பணைத்த பெருஞ்செல்வம்" என்றார் ஆகலின். நோற்பார் சிலர் எனக் காரணம் கூறினமையான் காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு இம்மை யின்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு கூறப்பட்டது.
¶நாலடியார்-251