திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/109.தகையணங்குறுத்தல்
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
3. காமத்துப் பால்
[தொகு]1. களவியல்
[தொகு]- இயல் முன்னுரை:
- இனி, அப்பொருளைத் துணைக்காரணமாக உடைத்தாய், இம்மையே பயப்பதாய இன்பம் கூறுவான் எடுத்துக்கொண்டார். ஈண்டு இன்பம் என்றது, ஒருகாலத்து ஒருபொருளான் ஐம்புலனும் நுகர்தற் சிறப்புடைத்தாய காம இன்பத்தினை; இச்சிறப்புப் பற்றி வடநூலுள் போசராசனும் 'சுவைபல என்று கூறுவார் கூறுக; யாம் கூறுவது இன்பச்சுவை ஒன்றனையுமே' என இதனையே மிகுத்துக் கூறினான். இது புணர்ச்சி, பிரிவு என இருவகைப்படும். ஏனை இருத்தல், இரங்கல், ஊடல் என்பனவோ எனின், இவர் பொருட் பாகுபாட்டினை அறம், பொருள், இன்பம் என வடநூல் வழக்குப்பற்றி ஓதுதலான், அவ்வாறே அவற்றைப் பிரிவின்கண் அடக்கினார் என்க. இனி, அவை தம்மையே, தமிழ் நூல்களோடும் பொருந்தப் புணர்ச்சியைக் களவு என்றும், பிரிவைக் கற்பு என்றும் பெரும்பான்மை பற்றி வகுத்து, அவற்றைச் சுவை மிகுதி பயப்ப உலகநடையோடு ஒப்பும், ஒவ்வாமையும் உடையவாக்கிக் கூறுகின்றார். அக் கைகோள் இரண்டனுள்ளும் களவாவது, பிணி மூப்பு இறப்புக்களின்றி, எஞ்ஞான்றும் ஒருதன்மையராய், உருவும் திருவும், பருவமும் குலனும், குணனும் அன்பும் முதலியவற்றால் தம்முள் ஒப்புமை உடையராய தலைமகனும், தலைமகளும் பிறர் கொடுப்பவும், அடுப்பவும் அன்றிப் பால்வகையால் தாமே எதிர்ப்பட்டுப் புணர்ந்துவருவது. அதனை ஏழு அதிகாரத்தான் கூறுவான்தொடங்கி, முதற்கண் தகையணங்குறுத்தல் கூறுகின்றார்.
109. தகையணங்குறுத்தல்
[தொகு]- அதிகார முன்னுரை
- அஃதாவது, பொழில் விளையாட்டு விருப்பான் ஆயம் நீங்க அதன்கண் தமியளாய் நின்றாளை, வேட்டம் விருப்பான் இளையார் நீங்கத், தமியனாய் வந்து கண்ணுற்ற தலைமகன், அவள் வனப்புத் தன்னை வருத்தம் உறுவித்தலைச் சொல்லுதல். இது, கண்ணுற்ற பொழுதே நிகழ்வதாகலின், முதற்கண் கூறப்பட்டது.
குறள் 1081 (அணங்குகொல் )
[தொகு]- (தலைமகள் உருவு முதலியன முன்கண்டறிவன அன்றிச் சிறந்தமையின் அவளைத் தலைமகன் ஐயுற்றது.)
அணங்குகொ லாய்மயில் கொல்லோ கனங்குழை ( )அணங்கு கொல் ஆய் மயில் கொல்லோ கனம் குழை
மாதர்கொன் மாலுமென் னெஞ்சு. (01) மாதர் கொல் மாலும் என் நெஞ்சு.
தொடரமைப்பு:
கனம் குழை, அணங்குகொல், ஆய்மயில்கொல்லோ, மாதர்கொல், என் நெஞ்சு மாலும்.
- இதன்பொருள்
- கனம் குழை= இக்கனவிய குழையை உடையாள்;
- அணங்கு கொல்= இப்பொழிற்கண் உறைவாளோர் தெய்வ மகளோ;
- ஆய்மயில் கொல்லோ= அன்றி ஒரு மயில் விசேடமோ;
- மாதர்கொல்= அன்றி ஒரு மானுட மாதரோ?
- என் நெஞ்சு மாலும்= என் நெஞ்சு மயங்காநின்றது.
- உரைவிளக்கம்
- 'ஓ' அசை. 'ஆய் மயில்' படைத்தோன் விசேடமாக ஆய்ந்து படைத்த மயில்; மயிற்சாதியுள் தெரிந்தெடுத்த மயில் என்றும் ஆம். 'கனங்குழை' ஆகுபெயர். கணங்குழை யென்று பாடமோதிப் பலவாய்த் திரண்ட குழை என்று உரைப்பாரும் உளர். எழுதலாகா உருவுந் தன் வருத்தமும் பற்றி 'அணங்குகொல்' என்றும், சாயலும் பொழில்வயின் நிற்றலும் பற்றி 'ஆய்மயி்ல்கொல்' என்றும், தன் நெஞ்சம் சென்றமையும் அவள் எதிர்நோக்கியவாறும் பற்றி 'மாதர்கொல்' என்றும் கூறினான்.
குறள் 1082 (நோக்கினாள் )
[தொகு]- (மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.)
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு ( ) நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. (02) தானைக் கொண்டு அன்னது உடைத்து.
தொடரமைப்பு:
நோக்கினாள் நோக்கு எதிர்நோக்குதல், தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து.
- இதன்பொருள்
- நோக்கினாள் நோக்கு எதிர்நோக்குதல்= இப்பெற்றித்தாய வனப்பினையுடையாள் என் நோக்கிற்கு எதிர்நோக்குதல்;
- தாக்கு அணங்கு தானைக் கொண்டன்னது உடைத்து= தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு, தாக்குதற்குத் தானையையும் கொண்டுவந்தாற் போலும் தன்மையை உடைத்து.
- உரை விளக்கம்
- மேலும், 'அணங்கு கொல் ஆய்மயில் கொல்' என்றமையான், சுட்டு வருவிக்கப்பட்டது. 'எதிர்நோக்குதல்' என்றமையின், அது குறிப்புநோக்காயிற்று. வனப்பால் வருந்துதன்மேலும், குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு, என்னான் நோக்கப்பட்டாள் என்று உரைப்பாரும் உளர்.
குறள் 1083 (பண்டறியேன் )
[தொகு]- (இதுவும் அது.)
பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன் ( ) பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண்டகையாற் பேரமர்க் கட்டு. (03) பெண் தகையால் பேர் அமர்க் கட்டு.
தொடரமைப்பு:
கூற்று என்பதனைப் பண்டு அறியேன், இனி அறிந்தேன், பெண்டகையால் பேர் அமர்க் கட்டு
- இதன்பொருள்
- கூற்று என்பதனைப் பண்டு அறியேன்= கூற்று என்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டுஅறிவதல்லது கண்டு அறியேன்;
- இனி அறிந்தேன்= இப்பொழுது கண்டறிந்தேன்;
- பெண்தகையால் பேர் அமர்க் கட்டு= அது பெண்டகையுடன் பெரியவாய் அமர்த்த கண்களை உடைத்து.
- உரை விளக்கம்
- பெண்டகை: நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் குணங்கள். அவை அவ்வக் குறிகளான் அறியப்பட்டன. அமர்த்தல்- அமர்செய்தல்; பெயரடியாகிய வினை. பெண்டகையால், இன்பம் பயத்தலும் உண்டேனும் துன்பம் பயத்தன் மிகுதி பற்றிக் கூற்றாக்கிக் கூறினான்.
குறள் 1084 (கண்டாருயிர் )
[தொகு](இதுவும் அது.)
கண்டா ருயிருண்ணுந் தோற்றத்தாற் பெண்டகைப் ( ) கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக் கமர்த்தன கண் (04) பேதைக்கு அமர்த்தன கண்.
தொடரமைப்பு:
பெண்தகை பேதைக்குக் கண், கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன.
- இதன்பொருள்
- பெண்டகைப் பேதைக்குக் கண்= பெண்டகையையுடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்;
- கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன= தம்மைக் கண்டார் உயிருண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன.
- உரை விளக்கம்
- அமர்த்தல்- மாறுபடுதல். குணங்கட்கும், பேதைமைக்கும் ஏலாது கொடியவாய் இருந்தன என்பதாம்.
குறள் 1085 (கூற்றமோ )
[தொகு](இதுவும் அது.)
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவர () கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
னோக்கமிம் மூன்று முடைத்து. (05) நோக்கம் இம் மூன்றும் உடைத்து.
தொடரமைப்பு:
கூற்றமோ, கண்ணோ, பிணையோ, மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.
- இதன்பொருள்
- கூற்றமோ= என்னை வருத்துதல் உடைமையான் கூற்றமோ;
- கண்ணோ= என்மேல் ஓடுதல் உடைமையான் கண்ணோ;
- பிணையோ= இயல்பாக வெருவுதல் உடைமையான் பிணையோ? அறிகின்றிலேன்;
- மடவரல் நோக்கம் இம்மூன்றும் உடைத்து= இம்மடவரல் கண்களின் நோக்கம் இம்மூன்றன் தன்மையையும் உடைத்தாய் இராநின்றது.
- உரை விளக்கம்
- இன்பமும் துன்பமும் ஒருங்கு செய்யாநின்றது என்பதாம். தோழில்பற்றி வந்த ஐயநிலை உவமம்.
குறள் 1086 ( கொடும்புருவம்)
[தொகு]- (இதுவும் அது.)
கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்கஞர் ( ) கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல மன்னிவள் கண். (06) செய்யலமன் இவள் கண்.
தொடரமைப்பு:
கொடும் புருவம் கோடா மறைப்பின், இவள் கண் நடுங்கு அஞர் செய்யலமன்.
- இதன்பொருள்
- கொடும் புருவம் கோடா மறைப்பின்= பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பம் உடையவாய் விலக்கினவாயின்;
- இவள் கண் நடுங்கு அஞர் செய்யல= அவற்றைக் கடந்து, இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.
- உரை விளக்கம்
- நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செய்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும், சிறிதுஇடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின், 'மறைப்பின்' என்றும், கூறினான். 'நடுங்கஞர்': நடுங்குதற்கு ஏதுவாய அஞர். தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான், அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்க மாட்டாவாயின என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.
குறள் 1087 ( கடாஅக்)
[தொகு](அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.)
கடாஅக் களிற்றின்மேற் கட்படா மாதர் ( ) கடாஅக் களிற்றின் மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில் (07) படாஅ முலை மேல் துகில்.
தொடரமைப்பு:
மாதர் படாஅ முலைமேல் துகில், கடாஅக் களிற்றின்மேல் கட்படாம்.
- இதன்பொருள்
- மாதர் படாஅ முலை மேல் துகில்= இம்மாதர் படா முலைகளின் மேல் இட்ட துகில்;
- கடாஅக் களிற்றின் மேல் கட்படாம்= அவை கொல்லாமல் காத்தலின், கொல்வதாய மதக்களிற்றின் மேல் இட்ட முகபடாத்தினை ஒக்கும்.
- உரை விளக்கம்
- கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகில் ஊடே அவற்றின் வெம்மையும், பெருமையும் கண்டு இத்துணை ஆற்றல் உடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக்கருதிப் 'படாஅமுலை' என்றான். உவமை, சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.
குறள் 1088 (ஒண்ணுதற்கோஒ )
[தொகு](நுதலினாய வருத்தம் கூறியது.)
ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினு ( ) ஒள் நுதலுக்கோஒ உடைந்ததே ஞாட்பின் உள்
ணண்ணாரு முட்குமென் பீடு. (08) நண்ணாரும் உட்கும் என் பீடு.
தொடரமைப்பு:
ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு, ஒண்ணுதற்கோஒ உடைந்தது ஏ.
- இதன்பொருள்
- ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும் என் பீடு= போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார்வாய்க் கேட்டு அஞ்சுதற்கு ஏதுவாய என் வலி;
- ஒண்ணுதற்கு உடைந்ததே= இம் மாதரது ஒள்ளிய நுதல் ஒன்றற்குமே அழிந்துவிட்டது.
- உரை விளக்கம்
- மாதர் என்பது அதிகாரத்தான் வந்தது. 'ஞாட்பினுள்' என்றதனால், பகைவராதல் பெற்றாம். 'பீடு' என்ற பொதுமையான் மனவலியும், காயவலியும் கொள்க. 'ஓ' என்னும் வியப்பின்கண் குறிப்பு அவ்வலிகளது பெருமையும், நுதலது சிறுமையும் தோன்ற நின்றது. கழிந்ததற்கு இரங்கலின் தற்புகழ்தல் அன்றாயிற்று.
குறள் 1089 (பிணையேர் )
[தொகு](அணிநலத்தானாய வருத்தம் கூறியது.)
பிணையேர் மடநோக்கு நாணு முடையாட் ( ) பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
கணியெவனோ வேதில தந்து. (09) அணி எவனோ ஏதில தந்து.
தொடரமைப்பு:
பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு, ஏதில தந்து அணி எவன்.
- இதன்பொருள்
- பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு= புறத்து மான் பிணையொத்த மடநோக்கினையும், அகத்து நாணினையும் உடையவளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்= ஒற்றுமையுடைய இவ்வணிகளே அமைந்திருக்க, வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து?
- உரை விளக்கம்
- 'மடநோக்கு': வெருவுதலுடைய நோக்கு. இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர் என்பதாம்.
குறள் 1090 (உண்டார்கண் )
[தொகு]தலைமகள் குறிப்பறிதலுற்றான் சொல்லியது.)
உண்டார்க ணல்ல தடுநறாக் காமம்போற் () உண்டார் கண் அல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்த லின்று. (10) கண்டார் மகிழ் செய்தல் இன்று.
தொடரமைப்பு:
அடுநறா, உண்டார்கண் அல்லது, காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று.
- இதன்பொருள்
- அடுநறா= அடப்படும் நறா;
- உண்டார்கண் அல்லது= தன்னை உண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது;
- காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று= காமம்போலக் கண்டார்மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்து அன்று.
- உரை விளக்கம்
- அடு நறா வெளிப்படை. காமம் என்றது, ஈண்டு அது நிகர்தற்கு இடனாகியாரை. கண்டார்கண் என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ்செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும், இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின் யானது பெற்றிலேன் எனக் குறிப்பெச்சம் வருவித்து உரைக்க. "அரிமயிர்த் திரண் முன்கைப்"1 என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.
- 1.புறநானூறு-11.