உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/116.பிரிவாற்றாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் காமத்துப்பால்- கற்பியல்[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

இனிக் கற்புப் பதினெட்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி முதற்கண் பிரிவாற்றாமை கூறுகின்றார்.

அதிகாரம் 116.பிரிவு ஆற்றாமை[தொகு]

அதிகார முன்னுரை
அஃதாவது, வரைந்து எய்தியபின் தலைமகன் அறம் பொருள் இன்பங்களின் பொருட்டுச் சேயிடையினும், ஆயிடையினும் தலைமகளைப் பிரிந்து செல்லும். செல்லுஞான்று, அப்பிரிவினை அவள் ஆற்றாந்தன்மை. அஃது ஈண்டுப் பிரிவு உணர்த்திய தலைமகற்குத் தோழி கூறலும், அவள்தனக்குத் தலைமகள் தானே அவன் குறிப்பான் உணர்ந்து கூறலும், பிரிவு உணர்த்தியவழிக் கூறலும், தலைமகன் பிரிந்துழி ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறலும் என நால்வகையாற் கூறப்படும்.

குறள் 1151 (செல்லாமை )[தொகு]

(பிரிந்து கடிதின்வருவல் என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது.)

செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின் ( ) செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்

வல்வரவு வாழ்வார்க் குரை. (01) வல் வரவு வாழ்வார்க்கு உரை.

தொடரமைப்பு:
செல்லாமை உண்டேல் எனக்கு உரை, மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை.

இதன்பொருள்
செல்லாமை உண்டேல் எனக்கு உரை= நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் அதனை எனக்குச்சொல்;
மற்று நின் வல்வரவு வாழ்வார்க்கு உரை= அஃதுஒழியப் பிரிந்துபோய் விரைந்து வருதல் சொல்வையாயின், அதனை அப்பொழுது உயிர்வாழ்வார்க்குச் சொல்.
உரைவிளக்கம்
தலைமகளை ஒழித்து எனக்கு என்றாள், தான்அவள் என்னும் வேற்றுமையின்மையின். அக்காலம்எல்லாம் ஆற்றியிருந்து அவ்வரவு காணவல்லள்அல்லள், பிரிந்தபொழுதே இறந்துபடும் என்பதாம். அழுங்குவித்தல் பயன்.
இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்.

குறள் 1152 (இன்கணுடைத் )[தொகு]

(பிரிவு தலைமகன் குறிப்பான் அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.)

இன்க ணுடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் ( ) இன்கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்

புன்க ணுடைத்தாற் புணர்வு (02) புன்கண் உடைத்தால் புணர்வு.

தொடரமைப்பு:
அவர் பார்வல் இன்கண் உடைத்து, புணர்வு பிரிவஞ்சும் புன்கண் உடைத்து.

இதன்பொருள்
அவர் பார்வல் இன்கண் உடைத்து= தழையும் கண்ணியும் கொண்டு பின்னின்ற ஞான்று அவர் நோக்குமாத்திரமும் புணர்ச்சி குறித்தமையான் நமக்கு இன்பம் உடைத்தாயிருக்கும்;
புணர்வு பிரிவு அஞ்சும் புன்கண் உடைத்து= இன்று அப்புணர்ச்சிதான் நிகழாநிற்கவும், அது பிரிவர் என்று அஞ்சும் அச்சத்தினை உடைத்தாயிற்று. அவர் அன்பின் நிலைமையிது.
உரை விளக்கம்
'பார்வல்' என்றதனாற் புணர்ச்சிபெறாத பின்னிலைக்காலம் பெறப்பட்டது. 'புன்கண்' என்னும் காரணப்பெயர் காரியத்தின் மேலதாயிற்று. அவ்வச்சத்தினை உடைத்தாதலாவது, "முள்ளுறழ் முளையெயிற் றமிழ்தூறும் தீநீரைக்/ கள்ளினும் மகிழ்செய்யும் எனவுரைத்தும் அமையார்என்/ ஒள்ளிழை திருத்தும்" (கலி. பாலைக்கலி,3) பண்டையிற் சிறப்பால் அவன் பிரிதற்குறிப்புக் காட்டி அச்சம் செய்தலுடைமை. அழுங்குவித்தல்- பயன்.

குறள் 1153 (அரிதரோ )[தொகு]

(இதுவுமது)

அரிதரோ தேற்ற மறிவுடையார் கண்ணும் ( ) அரிது அரோ தேற்றம் அறிவு உடையார் கண்ணும்

பிரிவோ ரிடத்துண்மை யான். (03) பிரிவு ஓர் இடத்து உண்மையான்.

தொடரமைப்பு:
அறிவு உடையார் கண்ணும், ஓரிடத்துப் பிரிவு உண்மையான், தேற்றம் அரிது.

இதன்பொருள்
அறிவுடையார் கண்ணும்= பிரியேன் என்ற தம்சொல்லும் நம்பிரிவாற்றாமையும் அறிதல் உடையராய கண்ணும்;
ஓரிடத்துப் பிரிவு உண்மையான்= ஒரோவழிப் பிரிவு நிகழ்தலான்;
தேற்றம் அரிது= அவர்சொல்லும் தலையளியும்பற்றி நம்மாட்டு அன்புடையர் எனத் தேறும் தேற்றம் அரிதாயிருந்தது.
உரை விளக்கம்
அரோ அசைநிலை. உம்மை உயர்வு சிறப்பின்கண் வந்தது.

குறள் 1154 (அளித்தஞ்ச )[தொகு]

(இதுவுமது)

அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற் ( ) அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்

றேறியார்க் குண்டோ தவறு. (04) தேறியார்க்கு உண்டோ தவறு.

தொடரமைப்பு:
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின், தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ

இதன்பொருள்
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின்= எதிர்ப்பட்ட ஞான்றே தலையளி செய்து, 'நின்னிற்பிரியேன் அஞ்சல்' என்றவர்தாமே பின் பிரிவாராயின்;
தெளித்த சொல் தேறியார்க்குத் தவறு உண்டோ= அவர்க்குஅன்றி அவர் தெளிவித்த சொல்லை மெய்யெனத் தெளிந்தார்க்குக் குற்றமுண்டோ?
உரை விளக்கம்
'தேறியார்' என்பது, தன்னைப் பிறர்போற் கூறல். சொல்லும் செயலும் ஒவ்வாமைக்குற்றம் அவர்க்கு எய்தும், அஃது எய்தாவகை அழுங்குவி என்பது கருத்து.

குறள் 1155 (ஓம்பின )[தொகு]

(இதுவுமது)

ஓம்பி னமைந்தார் பிரிவோம்பன் மற்றவர் () ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்

நீங்கி னரிதாற் புணர்வு. (05) நீங்கின் அரிதால் புணர்வு

தொடரமைப்பு:
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல், மற்று அவர் நீங்கின் புணர்வு அரிது.

இதன்பொருள்
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல்= என்னுயிரைச் செல்லாமற் காத்தியாயின், அதனை ஆளுதற்கு அமைந்தாருடைய செலவினை அழுங்குவிப்பாயாக;
மற்று அவர்நீங்கின் புணர்வு அரிது= அழுங்குவிப்பார் இன்றி, அவர்செல்வாராயின் அவரால் ஆளப்பட்ட உயிரும் செல்லும், சென்றால் பின் அவரைக்கூடுதல் எனக்கு அரிதாம்.
உரை விளக்கம்
ஆளுதற்கு அமைதல்- இறைவர் ஆதற்குத் தெய்வத்தால் ஏற்புடையர் ஆதல். மற்று- வினைமாற்றின்கண் வந்தது.

குறள் 1156 (பிரிவுரைக்கும் )[தொகு]

(தலைமகன் பிரிவுணர்த்தியவாறு வந்து சொல்லிய தோழிக்குச் சொல்லியது.)

பிரிவுரைக்கும் வன்கண்ண ராயி னரிதவர் ( ) பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்

நல்குவ ரென்னும் நசை. (06) நல்குவர் என்னும் நசை.

தொடரமைப்பு:
அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணராயின், நல்குவர் என்னும் நசை அரிது.

இதன்பொருள்
அவர் பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின்= நம் கவவுக்கடுமை அறிந்த தலைவர்தாமே நம்முனின்று தம்பிரிவினை உணர்த்தும் வன்கண்மை உடையராயின்;
நல்குவர் எ்னனும் நசை அரிது= அத்தன்மையார் பின்பு நம் ஆற்றாமை அறிந்து வந்து தலையளிசெய்வார் என்று இருக்கும் ஆசை விடப்படும்.
உரை விளக்கம்
அருமை- பயன்படுதல் இல்லாமை. கூடியிருந்தே அன்பின்றிப் பிரிவு எ்ணணுதலும் உணர்த்தலும் வல்லர் ஆயினார் பிரிந்துபோய் அன்புடையராய் நம்மை நினைத்துவந்து நல்குதல் யாண்டையது என்பதாம். அழுங்குவித்தல் பயன்.

குறள் 1157 (துறைவன் )[தொகு]

(இதுவுமது)

துறைவன் றுறந்தமை தூற்றாகொன் முன்கை ( ) துறைவன் துறந்தமை தூற்றா கொல் முன் கை

யிறையிறவா நின்ற வளை. (07) இறை இறவா நின்ற வளை.

தொடரமைப்பு:
துறைவன் துறந்தமை, முன்கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல்.

இதன்பொருள்
துறைவன் துறந்தமை = துறைவன் என்னைப் பிரியலுற்றமையை;
முன்கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல்= அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன்கையிறையினின்றும் கழலாநின்ற வளைகள் என்க்கு அறிவியாவோ, அவன் உணர்த்த உணர்ந்துவந்து நீ அறிவித்தல் வேண்டுமோ.
உரை விளக்கம்
முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்டதுணையான் மெலிந்து ஆ்றறாமையின் 'இறவாநின்ற' என்றும் கூறினாள். அழுங்குவித்து வந்து கூறற்பாலை அல்லையாய் நீயும் இவ்வளைகள் செய்தனவே செய்தாய் எனப் புலந்து கூறியவாறு.

குறள் 1158 (இன்னாதின )[தொகு]

(இதுவுமது)

இன்னா தினனில்லூர் வாழ்த லதனினு ( ) இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்

மின்னா தினியார்ப் பிரிவு. (08) இன்னாது இனியார்ப் பிரிவு.

தொடரமைப்பு:
இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது, இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது.

இதன்பொருள்
இனன் இல் ஊர் வாழ்தல் இன்னாது= மகளிர்க்குத் தம் குறிப்பறியும் தோழியர் இல்லாத வேற்றூரின்கண் வாழ்தல் இன்னாது; இனியார்ப்பிரிவு அதனினும் இன்னாது= அதன்மேலும் தம் காதலரைப் பிரிதல் அதனினும் இன்னாது.
உரை விளக்கம்
தலைவன் செலவினை அழுங்குவித்து வாராது, உடன்பட்டு வந்தமைபற்றிப் புலக்கின்றாள்ஆகலின், 'இனன்இல்லூர்' என்றாள். உலகியல் கூறுவாள்போன்று தனக்கு அவ்விரண்டும் உண்மை கூறியவாறு.

குறள் 1159 (தொடிற்சுடி )[தொகு]

(காமம் தீயே போன்று தான் நின்ற இடத்தைச் சுடும், ஆகலான் நீ ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.)

தொடிற் சுடினல்லது காமநோய் போல ( ) தொடின் சுடில் அல்லது காம நோய் போல

விடிற்சுட லாற்றுமோ தீ. (09) விடின் சுடல் ஆற்றுமோ தீ.

தொடரமைப்பு:
தீத் தொடின் சுடில் அல்லது, காமநோய் போல் விடின் சுடல் ஆற்றுமோ

இதன்பொருள்
தீத்தொடின் சுடல் அல்லது= தீத் தன்னைத் தொட்டாற் சுடுமாயின் சுடுதல்அல்லது;
காமநோய் போல விடின் சுடல் ஆற்றுமோ= காமமாகிய நோய்போலத் தன்னை அகன்றாற் தப்பாது சுடுதலைவற்றோ, மாட்டாது.
உரை விளக்கம்
சுடுமாயின் என்பது, மந்திர மருந்துகளான் தம்பிக்கப்படாதாயின் என்றவாறு. காமத்திற்கு அதுவும் இல்லை என்பாள் வாளா 'சுடல்' என்றாள். அகறல்- நுகராமை. சுடல் என்பது முன்னும் கூட்டப்பட்டது. தீயினும் கொடியதனை யான் ஆற்றுமாறு என்னை என்பதாம்.

குறள் 1160 (அரிதாற்றி )[தொகு]

(தலைவியர் பலரும் பிரிவாற்றியிருப்பர், அது நீ செய்கின்றிலை என்ற தோழிக்குச் சொல்லியது.)

அரிதாற்றி யல்லனோய் நீக்கிப் பிரிவாற்றிப் () அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர். (10) பின் இருந்து வாழ்வார் பலர்.

தொடரமைப்பு:
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப், பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்.

இதன்பொருள்
(நீ சொல்லுகின்றது ஒக்கும்) அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி= பிரிவு உணர்த்தியவழி அதற்கு உடம்பட்டுப் பிரியுங்கால் நிகலும் அல்லல் நோயினையும் நீக்கி;
பிரிவு ஆற்றிப் பின் இருந்து வாழ்வார் பலர்= பிரிந்தால் அப்பிரிவுதன்னையும் ஆற்றிப் பின்னும் இருந்து உயிர்வாழும் மகளிர் உலகத்துப் பலர்.
உரை விளக்கம்
பண்டை இற்சிறப்பத் தலையளிபெற்று இன்புறுகின்ற எல்லைக் கண்ணே, அஃது இழந்து துன்புறுதற்கு உடம்படுதல் அரியது ஒன்றாகலின், அரியதனைச்செய்து என்றும், செல்லும் தேயத்து அவர்க்கு யாது நிகழுமென்றும், வருந்துணையும் யாம் ஆ்றறியிருக்குமாறு என் என்றும், அவ்வரவுதான் எஞ்ஞான்று வந்து எய்தும் என்றும், இவ்வாற்றான் நிகழும் கவலை மனத்து நீங்காது ஆகலான் 'அல்லல் நோய் நீக்கி' என்றும், பிரிந்தால் வருந்துணையும் அகத்து நிகழும் காமவேதனையும், புறத்து யாழிசை மதி தென்றல் என்று இவைமுதலாக வந்து அதனை வளர்ப்பனவும் ஆற்றல் அரியவாகலின் 'பிரிவாற்றி' என்றும், தம்காதலரை இன்றியமையா மகளிருள் இவையெல்லாம் பொறுத்துப் பின்னும் இருந்து உயிர்வாழ்வார் ஒருவரும் இல்லை என்பது குறிப்பால் தோன்றப் 'பின்னிருந்து வாழ்வார் பலர்' என்றும் கூறினாள். 'அரிது' என்பது, வினைக்குறிப்புப்பெயர். பிரிவின்கண் நிகழ்வனவற்றைப் 'பிரிவு' என்றாள். 'செய்து', 'நீக்கி', 'ஆற்றி' என்பன, ஓசைவகையான் அவ்வவற்றது அருமை உணரநின்றன. சிறப்பும்மை விகாரத்தான் தொக்கது. யானும் இறந்துபடுவல் என்பது கருத்து.