உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/5.இல்வாழ்க்கை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் அறத்துப்பால்

[தொகு]

இல்லறவியல்

[தொகு]
அதிகாரம் 05 இல்வாழ்க்கை
பரிமேலழகரின் அதிகார முன்னுரை
இல்வாழ்க்கை- அஃதாவது, இல்லாளோடு கூடிவாழ்தலினது சிறப்பு. இன்னிலை அறஞ்செய்தற்குரிய இருவகைநிலையுள் முதலதாதலின், இஃது, அறன்வலியுறுத்தலின் பின் வைக்கப்பட்டது.


இல்+நிலை= இன்னிலை.=இல்லறத்தின் நிலைமை.

திருக்குறள்: 41 (இல்வாழ்வான்)

[தொகு]
இல்வாழ்வா னென்பா னியல்புடைய மூவர்க்கு
நல்லாற்றி னின்ற துணை.(01)

இல் வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை (௧)


தொடரமைப்பு:இல் வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கு உம் நல் ஆற்றின் நின்ற துணை.


பரிமேலழகர் உரை
(இதன் பொருள்) இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தோடு கூடி வாழ்வானென்று சொல்லப்படுவான்;
இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை = அறவியல்பினையுடைய ஏனை மூவர்க்கும்,
(அவர் செல்லும்) நல்லொழுக்க நெறிக்கண் நிலைபெற்ற துணையாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'இல்' லென்பது, ஆகுபெயர்.
'என்பா' னெனச் செயப்படுபொருள், வினைமுதல்போலக் கூறப்பட்டது.
ஏனைமூவராவார், ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லைவிட்டுத் தீயோடு வனத்தின்கட் சென்று மனையாள் வழிபடத் தவஞ்செய்யும் ஒழுக்கத்தானும்@, முற்றத்துறந்த யோகவொழுக்கத்தானு$மென இவர்; இவருள் முன்னையிருவருரையும் பிறர்மதம் மேற்கொண்டு கூறினார். இவர், இவ்வொழுக்கநெறிகளை முடியச் செல்லுமளவும் அச்செலவிற்குப் பசி நோய் குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல் உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி அவ்வவ் நெறிகளின் வழுவாமற் செலுத்துதலான், 'நல்லாற்றின் நின்ற துணை' யென்றார்.


❖பிரமசரியம்

@வானப்பிரத்தம்

$சந்நியாசம்

திருக்குறள் 42 (துறந்தார்க்குந்)

[தொகு]
துறந்தார்க்குந் துவ்வா தவர்க்கு மிறந்தார்க்கு
மில்வாழ்வா னென்பான் றுணை. (02)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல் வாழ்வான் என்பான் துணை. (௨)


தொடரமைப்பு: துறந்தார்க்கு உம், துவ்வாதவர்க்கு உம், இறந்தார்க்கு உம் இல் வாழ்வான் என்பான் துணை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) துறந்தார்க்கும் = (களைகண்1 ஆனவரால்) துறக்கப்பட்டார்க்கும்;
துவ்வாதவர்க்கும் = நல்கூர்ந்தார்க்கும்;
இறந்தார்க்கும் = (ஒருவருமின்றித் தன்பால் வந்து) இறந்தார்க்கும்;
இல்வாழ்வான் என்பான் துணை = இல்வாழ்வானென்று சொல்லப்படுவான் துணை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர் களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும், துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும், இறந்தார்க்கு நீர்க்கடன் முதலியசெய்து நல்லுலகின்கட் செலுத்தலானும் ‘துணை’ யென்றார்.
இவை யிரண்டுபாட்டானும் இன்னிலை எல்லாவுபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.


1.களைகண்- பற்றுக்கோடு.

திருக்குறள் 43 (தென்புலத்தார்)

[தொகு]
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்க றானென்றாங்
கைம்புலத்தா றோம்ப றலை.(03)

தென் புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு

ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை. (௩)


தொடரமைப்பு: தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்ற ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்ற = பிதிரர் தேவர் விருந்தினர் சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட;
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை = ஐந்திடத்துஞ் செய்யும் அறநெறியை வழுவாமற் செய்தல் (இல்வாழ்வானுக்குச்) சிறப்புடைய அறமாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பிதிரராவார், படைப்புக்காலத்து அயனாற் படைக்கப்பட்டதோர் கடவுட் சாதி; அவர்க்கிடம் தென் திசையாதலின், தென்புலத்தாரென்றார்.
‘தெய்வம்’ என்றது, சாதியொருமை.
‘விருந்து’ என்பது புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியராய் வந்தார்மேனின்றது; அவர் இருவகையர்: பண்டு அறிவு உண்மையிற் குறித்துவந்தாரும், அஃது இன்மையிற் குறியாது வந்தாரும் என.
‘ஒக்கல்’ சுற்றத்தார்.
எல்லாவறங்களும் தான் உளனாய் நின்று செய்யவேண்டுதலின், தன்னை ஓம்பலும் அறனாயிற்று.
'என்ற' வென்பது, விகாரமாயிற்று.
'ஆங்கு' அசை.
ஐவகையும் அறஞ்செய்தற்கிடனாகலின், 'ஐம்புலம்' என்றார்.
அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறுவேண்டுதலான் என்பது அறிக.

திருக்குறள்: 44 (பழியஞ்சிப்)

[தொகு]
பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்.(04)

பழி அஞ்சிப் பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை

வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல். (௪)


தொடரமைப்பு: பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்து ஆயின் வழி எஞ்ஞான்றும் எஞ்சல் இல்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) பழி அஞ்சிப் = (பொருள் செய்யுங்கால்) பாவத்தை யஞ்சி (யீட்டி),

பாத்து = (அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும்) பகுத்து,

ஊண் = (தான்) உண்டலை,

வாழ்க்கை = (ஒருவன்) இல் வாழ்க்கை,

உடைத்து ஆயின் = உடைத்தாயின்,

வழி = அவன் வழி (உலகத்து),

எஞ்ஞான்றும் = எஞ்ஞான்றும்,

எஞ்சல் இல் = (நிற்றலல்லது) இறத்தலில்லை.

பரிமேலழகர் உரைவிளக்கம்
பாவத்தான் வந்த பிறன்பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவந் தன்மேலுமாய் நின்று வழியெஞ்சுமாகலின், ‘பழியஞ்சி’ யென்றார்.
வாழ்வானது உடைமை, வாழ்க்கைமேல் ஏற்றப்பட்டது.

திருக்குறள்: 45 (அன்புமறனு)

[தொகு]
அன்பு மறனு முடைத்தாயி னில்வாழ்க்கை
பண்பும் பயனு மது.(05)

அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல் வாழ்க்கை

பண்பும் பயனும் அது. (௫)


தொடரமைப்பு: இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்து ஆயின், அது பண்பும் பயனும்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இல்வாழ்க்கை = ஒருவன் இல்வாழ்க்கை,

அன்பும் = (தன் துணைவிமேற் செய்யத்தகும்) அன்பினையும்,

அறனும் = (பிறர்க்குப் பகுத்துண்டலாகிய) அறத்தினையும்,

உடைத்து ஆயின் = உடைத்தாயின்;

அது = அவ்வுடைமை,

பண்பும் பயனும் = (அதற்குப்) பண்பும் பயனுமாம்.

பரிமேலழகர் உரைவிளக்கம்
நிரனிறை.
இல்லாட்குங் கணவற்கும் நெஞ்சொன்றாகாவழி இல்லறங் கடைபோகாமையின், அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று.
இவை மூன்று பாட்டானும் இன்னிலையில் நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.


முறை நிரல்நிரைப் பொருள்கோள், நிரல் நிறை அணியும் ஆம்.

திருக்குறள்: 46 (அறத்தாற்றி)

[தொகு]
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப்$ பெறுவ தெவன். (06)

அறத்து ஆற்றின் இல் வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்

போஓய்ப் பெறுவது எவன். (௬)

தொடரமைப்பு: இல் வாழ்க்கை அறத்து ஆற்றின் புறத்து ஆற்றில் போஓய் பெறுவது எவன்?


பரிமேலழகர் உரை
இதன்பொருள்: இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் = (ஒருவன்) இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்;
புறத்து ஆற்றில் போஒய்ப் பெறுவது எவன் = (அவன்) அதற்குப் புறமாகிய நெறியிற் போய்ப் பெறும் பயன் யாது?
பரிமேலழகர் உரைவிளக்கம்
‘அறத்தாறு’ என்பது, பழியஞ்சிப் பகுத்துண்டலும், அன்புடையும் என மேற்சொல்லிய ஆறு.
‘புறத்தாறு’ இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.
அந்நிலையின் இது பயனுடைத்தென்பார், 'போஒய்ப்பெறுவதெவன்' என்றார்.


$அளபெடை இசைநிறைக்க வந்ததனால், இசைநிறையளபெடை.

திருக்குறள்: 47 (இயல்பினா)

[தொகு]
இயல்பினா னில்வாழ்க்கை வாழ்பவ னென்பான்|இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வா ருளெல்லாந் தலை.(07)|முயல்வாருள் எல்லாம் தலை. (௭)


தொடரமைப்பு: இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் = இல்வாழ்க்கைக்கண் நின்று (அதற்குரிய) இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான்;
முயல்வாருள் எல்லாம் தலை = (புலன்களைவிட) முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
முற்றத்துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது மூன்றா நிலையில் நின்றாரை@.
அந்நிலைதான் பலவகைப்படுதலின் 'எல்லாருள்ளும்' எனவும், முயலாதுவைத்துப் பயனெய்துதலின் ‘தலை’ யெனவுங் கூறினார்.


@மூன்றாம் நிலையில் நின்றார் - வானப்பிரஸ்தர். அவ்வானப்பிரத்தநிலை பலவகைப்படும். அவை: மனைவியுடன் வனம் செல்லுதல், மனைவியின்றிச் செல்லுதல், குறித்த இடத்திற்குச் செல்லுதல், குறித்த இடம் இல்லாது செல்லுதல் எனப் பலவகையாம்.

திருக்குறள்: 48 (ஆற்றி)

[தொகு]
ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை|ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல் வாழ்க்கை
நோற்பாரி னோன்மை யுடைத்து. (08)|நோற்பாரின் நோன்மை உடைத்து. (௮)


தொடரமைப்பு: ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல் வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை = (தவஞ்செய்வாரையுந் தத்தம்) நெறிக்கண் ஒழுகப்பண்ணித் (தானுந் தன்) அறத்திற் றவறாத இல்வாழ்க்கை;
நோற்பாரின் நோன்மை உடைத்து = அத்தவஞ்செய்வார் நிலையினும் பொறை யுடைத்து.
பரிமேலழகர் உரை விளக்கம்
பசிமுதலிய விடையூறு நீக்கலின், 'ஆற்றினொழுக்கி' யென்றார்.
'நோற்பா' ரென்பது ஆகுபெயர்.
நோற்பார் நிலைக்கு அவர்தம்மை யுற்ற நோயல்லது இல்வாழ்வார் நிலைபோற் பிறரையுற்ற நோயும் பொறுத்தலின்மையின், 'நோற்பாரின் நோன்மை யுடைத்து’ என்றார்.

திருக்குறள்: 49 (அறனெனப்)

[தொகு]
அறனெனப் பட்டதே யில்வாழ்க்கை யஃதும்| அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயி னன்று.(09)| பிறன் பழிப்பது இல்லாயின் நன்று. (௯)

தொடரமைப்பு: அறன் எனப்பட்டது இல் வாழ்க்கையே அஃது உம் பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) அறன் எனப்பட்டது இல்வாழ்க்கையே = (இருவகையறத்தினும் நூல்களான்) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது, இல்வாழ்க்கையே;
அஃதும் பிறன் பழிப்பது இல்லாயின் நன்று = (ஏனைத் துறவறமோவெனின்) அதுவும், பிறனாற் பழிக்கப்படுவதில்லைஆயின், (அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக) நன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஏகாரம், பிரிநிலைக்கண் வந்தது. இதனாற் பிரிக்கப்பட்டது துறவறமாகலின், ‘அஃது’ என்னுஞ்சுட்டுப்பெயர் அதன்மேனின்றது.
‘பிறன்பழிப்பது’ என்றது, கூடாவொழுக்கத்தை.
துறவறம் மனத்தையும் பொறிகளையுயும் ஒறுத்து அடக்கவல்ல அருமையுடைத்தாயவழியே, அவற்றை ஒறுக்க வேண்டாது ஐம்புலவின்பங்கள் ஆரத்துய்க்கும் எண்மையுடைய இல்வாழ்க்கையோடு அறமென ஒருங்கி எண்ணப் படுவது என்றவாறாயி்ற்று.
இந்நான்கு பாட்டானும் இன்னிலையே பயனுடைத்தென இதன் சிறப்புக்கூறப்பட்டது.

<>

திருக்குறள்: 50 (வையத்துள்)

[தொகு]
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்| வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.(10)|தெய்வத்துள் வைக்கப் படும். (௰)


தொடரமைப்பு: வாழ்வு ஆங்கு வையத்து உள் வாழ்பவன் வான் உறையும் தெய்வத்து உள் வைக்கப் படும்.


பரிமேலழகர் உரை
(இதன்பொருள்) வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் = (இல்லறத்தோடு கூடி) வாழும் இயல்பினால், வையத்தின்கண் வாழ்பவன்;
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் = (வையத்தானே யெனினும்) வானின்கண் உறையுந் தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பின் தேவனாய் அவ்வறப்பயனுகர்தல் ஒருதலையாகலின், ‘தெய்வத்துள் வைக்கப்படும்’ என்றார்.
இதனான், இன்னிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது.
இம்மைப்பயன் புகழ்; அதனையிறுதிக்கட் (அதிகாரம்: 24 புகழ்) கூறுப.


தெய்வப்புலவர் இயற்றிய திருக்குறளின் 'இல்வாழ்க்கை' அதிகாரமும், அதற்குப் பரிமேலழகர் வரைந்த உரையும் முற்றும்.