உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/89.உட்பகை.

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 89.உட்பகை

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, புறப்பகைக்கு இடனாக்கிக் கொடுத்து அது வெல்லுந் துணையும் உள்ளாய்நிற்கும் பகை. இதுவும் களையப்படுவதன் பாலதாகலின், 'பகைத்திறந்தெரிதலின் பின் வைக்கப்பட்டது.

குறள் 881 (நிழனீரு )

[தொகு]

நிழனீரு மி்ன்னாத வின்ன தமர்நீரு ( ) நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்

மி்ன்னாவா மி்ன்னா செயின். (01) இன்னாவாம் இன்னா செயின்.

தொடரமைப்பு: நிழல் நீரும் இன்னாத இன்னா, தமர் நீரும் இன்னாசெயின் இன்னாவாம்.

இதன்பொருள்
நிழல் நீரும் இன்னாத இன்னா= ஒருவனுக்கு அனுபவிக்க வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும் பின் நோய்செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னாசெயின் இன்னாவாம்= அதுபோலத் தழுவவேண்டுனவாய தமர் இயல்புகளும், முன் இனியவேனும் பின் இன்னாசெய்வன இன்னாவாம்.
உரைவிளக்கம்
நோய்: பெருங்கால் பெருவயிறு முதலாயின. தமர் என்றதனால், உட்பகையாதற்கு உரியராய ஞாதியர் என்பது அறிக. இன்னாசெயல்: முன் வெளிப்படாமை நின்று துணைபெற்றவழிக் கெடுத்தல்.

குறள் 882 (வாள்போல் )

[தொகு]

வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக ( ) வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு. (02) கேள் போல் பகைவர் தொடர்பு.

தொடரமைப்பு: வாள்போல் பகைவரை அஞ்சற்க, கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக.

இதன்பொருள்
வாள்போல் பகைவரை அஞ்சற்க= வாள் போல எறிதும் என்று வெளி்ப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை அஞ்சாது ஒழிக;

கேள்போல் பகைவர் தொடர்பு அஞ்சுக= அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும் பகைவர் நட்பினை அஞ்சுக.

உரை விளக்கம்
'பகைவர்' ஆகுபெயர். முன்னே அறிந்து காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம் அறியவும் காக்கவும் படாமையிற் கெடுதல் ஒருதலை என்பதுபற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின்செய்யும் பகையினும் கொடிதாகலானும், காக்கல் ஆகாதது ஆகலானும், அஞ்சப்படுவது முன்செய்த அவர் தொடர்பு ஆயிற்று.
இவை இரண்டு பாட்டானும் உட்பகை ஆகாது என்பது பெறப்பட்டது.

குறள் 883 (உட்பகையஞ்சித் )

[தொகு]

உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து ( ) உள்பகை அஞ்சித் தன் காக்க உலைவு இடத்து

மட்பகையின் மாணத் தெறும். (03) மண் பகையின் மாணத் தெறும்.

தொடரமைப்பு: உட்பகை அஞ்சித் தற்காக்க, உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்.

இதன்பொருள்
உட்பகை அஞ்சித் தற்காக்க= உட்பகை யாயினாரை அஞ்சித் தன்னைக் காத்துக்கொண்டு ஒழுகுக; உலைவிடத்து மட்பகையின் மாணத் தெறும்= அங்ஙனம் ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக் குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவிபோல அவர் தப்பாமற் கெடுப்பர்.
உரை விளக்கம்
'கா'த்தல்: அவர் அணையாமலும், அவர்க்கு உடம்படாமலும் பரிகரித்தல். பகுக்கும் கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல், உள்ளேயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாது என்பதாம்.

குறள் 884 ( மனமாணா)

[தொகு]

மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா ( ) மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா

வேதம் பலவுந் தரும். (04) ஏதம் பலவும் தரும்.

தொடரமைப்பு:மனம் மாணா உட்பகை தோன்றின், இனம் மாணா ஏதம் பலவும் தரும்.

இதன்பொருள்
மனம் மாணா உட்பகை தோன்றின்=புறம் திருந்தியது போன்று அகம் திருந்தாத உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும்= அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
உரை விளக்கம்
அவை சுற்றத்தாரை உள்ளாய் நின்று வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான் தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.

குறள் 885 (உறன்முறை )

[தொகு]

உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா () உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்

னேதம் பலவுந் தரும். (05) ஏதம் பலவும் தரும்.

தொடரமைப்பு: உறல் முறையான் உட்பகை தோன்றின், இறல் முறையான் ஏதம் பலவும் தரும்.

இதன்பொருள்
உறல்முறையான் உட்பகை தோன்றின்= புறத்து உறவுமுறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும் தரும்= அஃது அவனுக்கு இறத்தன் முறையோடு கூடிய குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
உரை விளக்கம்
அவை புறப்பகைத் துணையாய் நின்றே அது தோன்றாமல் கோறன் முதலிய வஞ்சனை செய்தலும், அமைச்சர் முதலிய உறுப்புக்களைத் தேய்த்தலும் முதலாயின.

குறள் 886 (ஒன்றாமை )

[தொகு]

ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும் ( ) ஒன்றாமை ஒன்றியார் கண் படின் எஞ்ஞான்றும்

பொன்றாமை யொன்ற லரிது. (06) பொன்றாமை ஒன்றல் அரிது.

தொடரமைப்பு: ஒன்றாமை ஒன்றியார்கண் படின், பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது.

இதன்பொருள்
ஒன்றாமை ஒன்றியார்கண் படின்= பகைமை தனக்குள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது= அரசனுக்கு இறவாமை கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.
உரை விளக்கம்
பொருள் படை முதலிய உறுப்புக்களாற் பெரியனாய காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார்.
இவை நான்குபாட்டானும் அதனால் தனக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.

குறள் 887 (செப்பின் )

[தொகு]

செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே ( ) செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே

யுட்பகை யுற்ற குடி. (07) உட்பகை உற்ற குடி.

தொடரமைப்பு: செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், உட்பகை உற்ற குடி கூடாது.

இதன்பொருள்
செப்பின் புணர்ச்சி போல் கூடினும்= செப்பினது புணர்ச்சிபோலப் புறத்து வேற்றுமைதெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது= உட்பகை உண்டாய குடியில் உள்ளார் அகத்துத் தம்முள் கூடார்.
உரை விளக்கம்
செப்பின் புணர்ச்சி செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையிற் புறப்பகை பெறுறுழி வீற்று வீற்றாவர் என்பதாம். குடி கூடாதென்பதனை நாடு வந்தது என்பது போலக் கொள்க. உட்பகை தானுற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.

குறள் 888 (அரம்பொருத )

[தொகு]

அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு ( ) அரம் பொருத பொன் போலத் தேயும் உரம் பொருது

துட்பகை யுற்ற குடி. (08) உட்பகை உற்ற குடி.

தொடரமைப்பு: உட்பகை உற்ற குடி, அரம் பொருத பொன் போலப் பொருது உரம் தேயும்.

இதன்பொருள்
உட்பகை யுற்ற குடி= முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி; அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும்= அரத்தாற் பொரப்பட்ட இரும்புபோல அதனாற் பொரப்பட்டு வலி தேயும்.
உரை விளக்கம்
'பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம், 'தேயும்' என்னும் வினைகொண்டது. அஃது உரத்தின் தொழில்ஆயினும் குடிமேல் ஏற்றுதலின், வினைமுதல் வினையாயிற்று. காரியஞ்செய்வது போன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம்.
இவை இரண்டுபாட்டானும் அவன்குடிக்குவரும் தீங்கு கூறப்பட்டது.

குறள் 889 (எட்பக )

[தொகு]

எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு ( ) எள் பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்

முட்பகை யுள்ளதாங் கேடு. (09) உட்பகை உள்ளதாம் கேடு.

தொடரமைப்பு: உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும், கேடு உள்ளதாம்.

இதன்பொருள்
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்= அரசனது உட்பகை அவன் பெருமையே நோக்க எள்ளின் பிளவை ஒத்த சிறுமையுடைத்தே ஆயினும்; கேடு உள்ளதாம்= பெருமையெல்லாம் அழியவரும் கேடு அதன் அகத்ததாம்.
உரை விளக்கம்
எத்துணையும் பெரிதாய கேடு தனக்கு எல்லை வருந்துணையும், எத்துணையும் சிறிதாய உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு நிற்கும் என்பதாம்.
இதனால் அது சிறிது என்று இகழப்படாது என்பது கூறப்பட்டது.

குறள் 890 (உடம்பாடிலா )

[தொகு]

உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட் () உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்

பாம்போ டுடனுறைந் தற்று. (10) பாம்போடு உடன் உறைந்து அற்று.

தொடரமைப்பு: உடம்பாடு இலாதவர் வாழ்க்கை, குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று.

இதன்பொருள்
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை= மனப்பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்போடு உடன் உறைந்தற்று= ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.
உரை விளக்கம்
'குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும், பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம். ஆகவே, அவ்வுவமையால் அவனுயிர்க்கு இறுதிவருதல் ஒருதலையென்பது பெற்றாம்.
இதனால் கண்ணோடாது அவரைக் கடிகவென்பது கூறப்பட்டது.