உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/46.சிற்றினஞ்சேராமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


பொருட்பால்- அரசியல்- அதிகாரம் 46. சிற்றினம் சேராமை

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகார முன்னுரை

[தொகு]
அஃதாவது சிறிய இனத்தைப் பொருந்தாமை. சிறிய இனமாவது, "நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போ"1ரும், விடரும் தூர்த்தரும் நடரும் உள்ளிட்ட குழு. அறிவைத் திரித்து இருமையும் கெடுக்கும் இயல்பிற்றாய அதனைப் பொருந்திற் பெரியாரைத் துணைக்கோடல் பயனின்று என்பது உணர்த்தற்கு இஃது அதன்பின் வைக்கப்பட்டது.

குறள் 451 (சிற்றினமஞ்சும்)

[தொகு]


சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்     சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் (01).                          சுற்றமாச் சூழ்ந்து விடும்.
இதன்பொருள்
பெருமை சிற்றினம் அஞ்சும்= பெரியோர் இயல்பு சிறிய இனத்தை அஞ்சாநிற்கும்;
சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்= ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்தபொழுது அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
விளக்கம்
தத்தம் அறிவு திரியுமாறும் அதனால் தக்கு வரும் துன்பமும் நோக்கலின் அறிவுடையார் அஞ்சுவர் என்றும் அறிவொற்றுமையால் பிறிது நோக்காமையின் அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன.
இதனால், சிறியவினம் பெரியோர்க்கு ஆகாது என்பது கூறப்பட்டது.

குறள் 452 (நிலத்தியல்பா)

[தொகு]


நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்     நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
கினத்தியல்ப தாகு மறிவு (02).                            இனத்து இயல்பதாகும் அறிவு.
இதன்பொருள்
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும்= தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்;
மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு அதாகும்= அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தினது இயல்பானே அறிவும் தன் தன்மைதிரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.
விளக்கம்
எடுத்துக்காட்டுவமை. விசும்பின்கண் தன்தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்தவழி நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போலத் தனிநிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு பிற இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும்என இதனால் அதனது காரணம் கூறப்பட்டது.

குறள் 453 (மனத்தானாம்)

[தொகு]


மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா       மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
மின்னா னெனப்படுஞ்சொல் (03)                               இன்னான் எனப்படும் சொல்.
இதன்பொருள்
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம்= மாந்தர்க்குப் பொதுஉணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்;
இன்னான் எனப்படும் சொல் இனத்தான் ஆம்= இவன் இத்தன்மையன் என்று உலகத்தாரால் சொல்லப்படும் சொல், இனம் காரணமாக உண்டாம்.
விளக்கம்
இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம் வேண்டாமையின், அதனை 'மனத்தானாம்' என்றும், செயற்கையாய விசேடவுணர்வு பற்றி நல்லன் என்றாகத் தீயன் என்றாக நிகழும் சொற்கு, இனம் வேண்டுதலின் அதனை 'இனத்தானாம்' என்றும் கூறினார். உவமை அளவை கொள்ளாது அத்திரிபும் மனத்தானாம் என்பாரை நோக்கி இதனான் அது மறுத்துக்கூறப்பட்டது.

குறள் 454 (மனத்துளது)

[தொகு]


மனத்துளது போலக் காட்டி யொருவற்       மனத்து உளது போல் காட்டி ஒருவற்கு
கினத்துள தாகு மறிவு (04)                              இனத்து உளது ஆகும் அறிவு.
இதன்பொருள்
அறிவு= அவ்விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து உளது போலக்காட்டி= ஒருவற்கு மனத்தி்ன்கண்ணே உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து உளதாகும்= அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே உளதாம்.
விளக்கம்
மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று காட்டியும்,பின் நோக்கியவழிப் பயின்ற இனத்து உளதாயும் இருத்தலின், காட்டி என இறந்தகாலத்தால் கூறினார். விசேட உணர்வுதானும் மனத்தின்கண்ணே அன்றே உளதாவது என்பார் நோக்கி, ஆண்டுப்புலப்படும் துணையே உள்ளது, அதற்கு மூலம் இன்னதென்பது இதனால் கூறப்பட்டது.

குறள் 455 (மனந்தூய்மை)

[தொகு]
மனந்தூய்மை செய்வினை தூய்மை யிரண்டு       மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
மினந்தூய்மை தூவா வரும் (05).                                இனம் தூய்மை தூவா வரும்.
இதன்பொருள்
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்= அவ்விசேட உணர்வு புலப்படுதற்கு இடனாய மனம் தூயனாதல்தன்மையும் செய்யும் வினை தூயனாதல் தன்மையுமாகிய இரண்டும்;
இனம் தூய்மை தூவா வரும்= ஒருவற்கு இனம் தூயனாதல்தன்மை பற்றுக்கோடாக உளவாம்.
விளக்கம்
மனம் தூயனாதலாவது, விசேடஉணர்வு புலப்படுமாறு இயற்கையாய் அறியாமையி்ன் நீங்குதல். செய் வினை தூயனாதலாவது, மொழி மெய்களால் செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது அப்பொருட்டாதல், "தூவறத் துறந்தாரை" - கலித்தொகை 118 ம் பாடல் 9ம் அடி. என்பதனானும் அறிக. ஒருவன் இனம் தூயனாகவே அதனோடு பயிற்சிவயத்தான் மனம் தூயனாய் அதன்கண் விசேடஉணர்வு புலப்பட்டு அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என இதனால் இனத்துள்ளவாமாறு கூறப்ப்டது.

குறள் 456 (மனந்தூயார்க்கு)

[தொகு]



மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு       மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
கில்லைநன் றாகா வினை (06)                                      இல்லை நன்று ஆகா வினை.
இதன்பொருள்: மனம் தூயார்க்கு எச்சம் நன்றாகும்= மனம் தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்றாகும்;
இனம் தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை= இனம் தூயர் ஆயினார்க்கு நன்றாகாத வினை யாதொன்றும் இல்லை.
விளக்கம்
காரியம் காரணத்தின் வேறுபடாமையின் எச்ச நன்றாகும் என்றும், நல்லினத்தோடு எண்ணிச் செயல்படுதலின் எல்லாவினையும் நல்லவாம் என்றும் கூறினார்.

குறள் 457 (மனநலமன்னு)

[தொகு]



மனநல மன்னுயிர்க் காக்க மினநல       மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இனநலம்
மெல்லாப் புகழுந் தரும் (07).                    எல்லாப் புகழும் தரும்.
இதன்பொருள்
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் தரும்= நிலைபெற்ற உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக் கொடுக்கும்;
இனநலம் எல்லாப் புகழும் தரும்= இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும் கொடுக்கும்.
விளக்கம்
'மன்னுயிர்' என்றது, ஈண்டு உயர்திணைமேல் நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச் சொல் முன்னும் கூட்டப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. மனம் நன்றாதல்தானே அறமாகலின், அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ்கொடுத்தற்குரிய நல்லோர் தாமே இனமாகலின் 'இனநலம் எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார், மேல் மனநன்மை, இனநன்மை பற்றி வரும் என்பதனை உட்கொண்டு.
அஃது இயல்பாகவே உடையார்க்கு அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி, அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும் என அவர்க்கும் அதுவேண்டும் என்பது இவ்விரண்டுபாட்டானும் கூறப்பட்டது.

குறள் 458 (மனநலநன்கு)

[தொகு]



மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்       மன நலம் நன்கு உடையர் ஆயினும் சான்றோர்க்கு
கினநல மேமாப் புடைத்து (08)                                இன நலம் ஏமாப்பு உடைத்து.
இதன்பொருள்
மன நலம் நன்கு உடையராயினும்= மனநன்மையை முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
சான்றோர்க்கு இன நலம் ஏமாப்பு உடைத்து= அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு வலிமையாதலை உடைத்து.
விளக்கம்
'நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால் தொக்கது. அந்நல்வினை உள்வழியும், மனநலத்தை வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்புடைத்து ஆயிற்று.

குறள் 459 (மனநலத்தின்)

[தொகு]



மனநலத்தி னாகு மறுமைமற் றஃது      மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃது
மினநலத்தி னேமாப் புடைத்து (09).        இன நலத்தின் ஏமாப்பு உடைத்து.
இதன்பொருள்
மன நலத்தின் மறுமை ஆகும்= ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்;
மற்று அஃதும் இன நலத்தின் ஏமாப்பு உடைத்து= அதற்கு அச் சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து.
விளக்கம்
'மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, மறுமை பயப்பது மனநன்மைதானே பிறிதொன்றன்று என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. 'மற்று' வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும், நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச்செய்யும் ஆறு கூறப்பட்டது.
இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.

குறள் 460 (நல்லினத்தி)

[தொகு]



நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி      நல் இனத்தின் ஊங்குத் துணை இல்லை தீ இனத்தின்
னல்லற் படுப்பதூஉ மில் (10).                                           அல்லல் படுப்பதூஉம் இல்.
இதன்பொருள்
நல்இனத்தின் ஊங்குத் துணையும் இல்லை= ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;
தீயினத்தின் ஊங்கு அல்லல் படுப்பதூஉம் இல்= தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
விளக்கம்
ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயருறாமல் காத்தலின் அதனைத் துணை என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் பகையென்றும் கூறினார். அல்லற்படுப்பது என்பது ஏதுப்பெயர்.
இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.