உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/26.புலான்மறுத்தல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 26. புலான் மறுத்தல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, ஊன் உண்டலை ஒழித்தல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும், முன்னும் அதனால் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடைத்தாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவது அன்று ஆதலின் அதனை விலக்குதற்கு இஃது அருளுடைமையின் பின் வைக்கப்பட்டது.

குறள்: 251 (தன்னூன்)

[தொகு]
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள் (01).
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
பரிமேலழகர் உரை
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்= தன் உடம்பை வீக்குதற்பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்பவன்; எங்ஙனம் ஆளும் அருள்= எவ்வகையான் நடத்தும் அருளினை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பயன் இலாத ஊன் பெருக்கலைப் பயன் எனக் கருதி, இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம் ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறி்ப்பு.

குறள்: 252 (பொருளாட்சி)

[தொகு]
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு (02)
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு.
பரிமேலழகர் உரை
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை= பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை; ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்க்கு இல்லை= அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்க்கு இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று.

ஊன்தின்றார் ஆயினும், உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

குறள்: 253 (படைகொண்டார்

[தொகு]
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்ற
னுடற்சுவை யுண்டார் மனம் (3)
படை கொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்.
பரிமேலழகர் உரை
படை கொண்டார் நெஞ்சம் போல்= கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே நோக்குவது அல்லது, அருளை நோக்காதவாறு போல; ஒன்றன் உடல்சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது= பிறிதோர் உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே நோக்குவதுஅல்லது அருளை நோக்காது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
சுவைபட உண்டல்- காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன் தின்றார் மனம் தீங்குநினைத்தல் உவம அளவையால் சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.

குறள்: 254 (அருளல்லதி)

[தொகு]
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல் (04)
அருள் அல்லது யாது எனில் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.
பரிமேலழகர் உரை
அருள் யாது எனின் கொல்லாமை= அருள்யாது எனின், கொல்லாமை; அல்லது (யாதெனின்) கோறல்= அருள் அல்லது யாது எனின் கோறல்; அவ்வூன் தினல் பொருள் அல்லது= ஆகலான், அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை பாவம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உபசாரவழக்கால் 'கொல்லாமை', 'கோறல்' ஆகிய காரியங்களை 'அருள்', 'அல்லது' எனக் காரணங்கள்ஆக்கியும், 'ஊன்தின்கை' ஆகிய காரணத்தைப் பாவம் எனக் காரியமாக்கியும் கூறினார். அருள்அல்லது- கொடுமை. சிறப்புப் பற்றி அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் 'பொருள்அல்லது' எனப்பட்டது. 'கோறல்' என முன்நின்றமையின், 'அவ்வூன்' என்றார். இனி, இதனை இவ்வாறன்றி 'அருளல்லது' என்பதனை ஒன்றாக்கி, 'கொல்லாமை கோறல்' என்பதற்குக் கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல் என்று உரைப்பாரும் உளர்.

குறள்: 255 (உண்ணாமை

[தொகு]
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு (05)
உண்ணாமை உள்ளது உயிர் நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
பரிமேலழகர் உரை
உயிர் நிலை ஊன் உண்ணாமை உள்ளது= ஒருசார் உயிர் உடம்பின்கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின்கண்ணது; உண்ண= ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின்; அளறு அண்ணாத்தல் செய்யாது= அவனை விழுங்கிய நிரயம் பின் உமிழ்வதற்கு அங்காவாது.
பரிமேலழகர் உரைவிளக்கம்
உண்ணப்படும் விலங்குகள் அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின், உண்ணாமை உள்ளது உயிர்நிலை என்றார். உண்ணின் என்பது, உண்ண எனத்திரிந்து நின்றது.ஊன் உண்டவன் அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம்.
கொலைப்பாவம் கொன்றார்மேல் நிற்றலின் பின் ஊன் உண்பார்க்குப் பாவமில்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.

குறள்: 256 (தினற்பொருட்டால்)

[தொகு]
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில் (06).
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல்.
பரிமேலழகர் உரை
தினல்பொருட்டால் = பேதைமை காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக; உலகு கொல்லாது எனின்= உலகம் கொல்லாதாயின்; விலைப் பொருட்டால் ஊன் தருவார் யாரும் இல்= பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'உலகு' என்பது, ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின்நிகழும் 'தின்கை' முன்நிகழும் கொலைக்குக் காரணம் ஆகாமையின், தின்பார்க்குக் காரணத்தான் வரும் 'பாவம் இல்லை' என்ற வாதியை நோக்கி, அருத்தாபத்தி அளவையால் காரணமாதல் சாதித்தமையின் இதனான் மேலது வலியுறுத்தப்பட்டது.

குறள்: 257 (உண்ணாமைவேண்டும்)

[தொகு]
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின் (07)
பரிமேலழகர் உரை
புலாஅல் பிறிது ஒன்றன் புண்= புலாலாவது, பிறிதோர் உடம்பின் புண்; அது உணர்வார்ப்பெறின்= அது தூய்து அன்மை அறிவாரைப் பெறின்; உண்ணாமை வேண்டும்= அதனை உண்ணாது ஒழியல் வேண்டும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அஃது என்னல் வேண்டும்= ஆய்தம் விகாரத்தால் தொக்கது. அம்மெய்ம்மை உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம்.
பொருந்தும் ஆற்றானும், புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான் கூறப்பட்டது.

குறள்: 258 (செயிரின்)

[தொகு]
செயிரின் றலைப்பிரிந்த காட்சியா ரு்ண்ணா
ருயிரின் றலைப்பிரிந்த வூன் (08).
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
பரிமேலழகர் உரை
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்= மயக்கம் ஆகிய குற்றத்தின் நீங்கிய அறிவினை உடையார்; உயிரின் தலைப்பிரிந்த ஊன் உண்ணார்= ஓர் உயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
'தலைப்பிரிவு' எனபது ஒருசொல். பிணம் என ஊனின் மெய்ம்மை தானே உணர்தலின் 'உண்ணார்' என்றார்.

குறள்: 259 (அவிசொரிந்)

[தொகு]
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று (259).
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று.
பரிமேலழகர் உரை
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின்= தீயின்கண் நெய் முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி வேட்டலினும்; ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை நன்று= ஒருவிலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை உண்ணாமை நன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
அவ்வேள்விகளான் வரும் பயனினும் இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.

குறள்: 260 (கொல்லான்)

[தொகு]
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும் (10).
கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.
பரிமேலழகர் உரை
கொல்லான் புலாலை மறுத்தானை= ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை; எல்லா உயிரும் கை கூப்பித் தொழும்= எல்லா உயிரும் கை குவித்துத் தொழும்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கல்லது, ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை ஆதலின், கொல்லாமையும் உடன்கூறினார். இப்பேரருள் உடையான், மறுமைக்கண் தேவரின் மிக்கான்ஆம் என அப்பயனது பெருமை கூறியவாறு.
இவை மூன்று பாட்டானும், ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.