திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/20.பயனிலசொல்லாமை
1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து
2.வான்சிறப்பு
3.நீத்தார்பெருமை
4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை
6.வாழ்க்கைத்துணைநலம்
7.மக்கட்பேறு
8.அன்புடைமை
9.விருந்தோம்பல்
10.இனியவைகூறல்
11.செய்ந்நன்றியறிதல்
12.நடுவுநிலைமை
13.அடக்கமுடைமை
14.ஒழுக்கமுடைமை
15.பிறனில்விழையாமை
16.பொறையுடைமை
17.அழுக்காறாமை
18.வெஃகாமை
19.புறங்கூறாமை
20.பயனிலசொல்லாமை
21.தீவினையச்சம்
22.ஒப்புரவறிதல்
23.ஈகை
24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை
26.புலான்மறுத்தல்
27.தவம்
28.கூடாவொழுக்கம்
29.கள்ளாமை
30.வாய்மை
31.வெகுளாமை
32.இன்னாசெய்யாமை
33.கொல்லாமை
34.நிலையாமை
35.துறவு
36.மெய்யுணர்தல்
37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்
பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி
40.கல்வி
41.கல்லாமை
42.கேள்வி
43.அறிவுடைமை
44.குற்றங்கடிதல்
45.பெரியாரைத்துணைக்கோடல்
46.சிற்றினஞ்சேராமை
47.தெரிந்துசெயல்வகை
48.வலியறிதல்
49.காலமறிதல்
50.இடனறிதல்
51.தெரிந்துதெளிதல்
52.தெரிந்துவினையாடல்
53.சுற்றந்தழால்
54.பொச்சாவாமை
55.செங்கோன்மை
56.கொடுங்கோன்மை
57.வெருவந்தசெய்யாமை
58.கண்ணோட்டம்
59.ஒற்றாடல்
60.ஊக்கமுடைமை
61.மடியின்மை
62.ஆள்வினையுடைமை
63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு
65.சொல்வன்மை
66.வினைத்தூய்மை
67.வினைத்திட்பம்
68.வினைசெயல்வகை
69.தூது
70.மன்னரைச்சேர்ந்தொழுகல்
71.குறிப்பறிதல்
72.அவையறிதல்
73.அவையஞ்சாமை
74.நாடு
75.அரண்
76.பொருள்செயல்வகை
77.படைமாட்சி
78.படைச்செருக்கு
79.நட்பு
80.நட்பாராய்தல்
81.பழைமை
82.தீநட்பு
83.கூடாநட்பு
84.பேதைமை
85.புல்லறிவாண்மை
86.இகல்
87.பகைமாட்சி
88.பகைத்திறந்தெரிதல்
89.உட்பகை.
90.பெரியாரைப்பிழையாமை
91.பெண்வழிச்சேறல்
92.வரைவின்மகளிர்
93.கள்ளுண்ணாமை
94.சூது
95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை
97.மானம்
98.பெருமை
99.சான்றாண்மை
100.பண்புடைமை
101.நன்றியில்செல்வம்
102.நாணுடைமை
103.குடிசெயல்வகை
104.உழவு
105.நல்குரவு
106.இரவு
107.இரவச்சம்
108.கயமை
1.களவியல்
109.தகையணங்குறுத்தல்
110.குறிப்பறிதல்
111.புணர்ச்சிமகிழ்தல்
112.நலம்புனைந்துரைத்தல்
113.காதற்சிறப்புரைத்தல்
114.நாணுத்துறவுரைத்தல்
115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை
117.படர்மெலிந்திரங்கல்
118.கண்விதுப்பழிதல்
119.பசப்புறுபருவரல்
120.தனிப்படர்மிகுதி
121.நினைந்தவர்புலம்பல்
122.கனவுநிலையுரைத்தல்
123.பொழுதுகண்டிரங்கல்
124.உறுப்புநலனழிதல்
125.நெஞ்சொடுகிளத்தல்
126.நிறையழிதல்
127.அவர்வயின்விதும்பல்
128.குறிப்பறிவுறுத்தல்
129.புணர்ச்சிவிதும்பல்
130.நெஞ்சொடுபுலத்தல்
131.புலவி
132.புலவிநுணுக்கம்
133.ஊடலுவகை
அதிகாரம் 20 பயனில சொல்லாமை
[தொகு]பரிமேலழகர் உரை
[தொகு]- அதிகார முன்னுரை
- அஃதாவது, தமக்கும் பிறர்க்கும் அறம் பொருள் இன்பமாகிய பயன்களுள், ஒன்றும் பயவாத சொற்களைச் சொல்லாமை. பொய், குறளை, கடுஞ்சொல், பயனில்சொல் என வாக்கின்கண் நிகழும் பாவம் நான்கனுள், பொய் துறந்தார்க்கு அல்லது ஒருதலையாகக் கடியலாகாமையின், அஃதொழித்து இல் வாழ்வாரால் கடியப்படும் ஏனை மூன்றனுள், கடுஞ்சொல் இனியவை கூறலானும், குறளை புறங்கூறாமையானும் விலக்கி நின்ற பயனில்சொல் இதனான் விலக்குகின்றார்ஆகலின், இது புறங்கூறாமையின் பின் வைக்கப்பட்டது.
திருக்குறள் 191 (பல்லார்முனிய)
[தொகு]- பல்லார் முனியப் பயனில சொல்லுவா
- னெல்லாரு மெள்ளப் படும்
- பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்
- எல்லாரும் எள்ளப் படும் (01)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பல்லார் முனியப் பயன் இல சொல்லுவான்= அறிவுடையார் பலருங் கேட்டு வெறுப்பப் பயனிலவாகிய சொற்களைச் சொல்லுவான்;
- எல்லாரும் எள்ளப் படும்= எல்லாரானும் இகழப் படும்.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- அறிவுடையார் பலரும் வெறுப்பவே, ஒழிந்தாரானும் இகழப்படுதலின், எல்லாரும் எள்ளப்படும் என்றார். மூன்றனுருபு விகாரத்தால் தொக்கது.
திருக்குறள் 192 (பயனிலபல்லார்)
[தொகு]- பயனில பல்லார்முற் சொல்ல னயனில
- நட்டார்கட் செய்தலிற் றீது
- பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
- நட்டார்கண் செய்தலின் தீது (02)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பயன் இல பல்லார்முன் சொல்லல்= பயனிலவாகிய சொற்களை அறிவுடையார் பலர் முன்பே ஒருவன் சொல்லுதல்;
- நயன் இல நட்டார்கண் செய்தலின் தீது= விருப்பமிலவாகிய செயல்களைத் தன் நட்டார்மாட்டுச் செய்தலினும் தீது.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- 'விருப்பமில', வெறுப்பன. இச்சொல் அச்செயலினும் மிக இகழற்பாடு பயக்கும் என்பதாம்.
திருக்குறள் 193 (நயனில)
[தொகு]- நயனில னென்பது சொல்லும் பயனில
- பாரித் துரைக்கு முரை
- நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
- பாரித்து உரைக்கும் உரை (03)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பயன் இல பாரித்து உரைக்கும் உரை= பயனிலவாகிய பொருள்களை ஒருவன் விரித்துரைக்கும் உரைதானே;
- நயன் இலன் என்பது சொல்லும்= இவன் நீதி இலன் என்பதனை உரைக்கும்.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- உரையால் இவன் நயனிலன் என்பது அறியலாம் என்பார், அதனை உரைமேல் ஏற்றி உரை சொல்லும் என்றார்.
திருக்குறள் 194 (நயன்சாரா)
[தொகு]- நயன்சாரா நன்மையி னீக்கும் பயன்சாரா
- பண்பில்சொற் பல்லா ரகத்து
- நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
- பணிபில் சொல் பல்லார் அகத்து (04)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பயன் சாராப் பண்பு இல் சொல் பல்லார் அகத்து= பயனொடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின்;
- நயன் சாரா நன்மையின் நீக்கும்= அவை அவர் மாட்டு நீதியொடுபடாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும்.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- 'பண்பு' இனிமையும், மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். 'சொல்லுமாயின்' என்பதும், 'அவர்மாட்டு' என்பதும், எச்சமாக வருவிக்கப் பட்டன.
திருக்குறள் 195 (சீர்மை)
[தொகு]- சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
- நீர்மை யுடையார் சொலின்
- சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
- நீர்மை உடையார் சொலின் (05)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பயன் இல நீர்மை உடையார் சொலின்= பயனிலவாகிய சொற்களை இனியநீர்மையுடையார் சொல்லுவாராயின்;
- சீர்மை சிறப்பொடு நீங்கும்= அவரது விழுப்பமும் அதனால் வரும் நன்கு மதிக்கற்பாடும் உடனே நீங்கும்
- பரிமேலழகர் உரை விளக்கம்
- 'நீர்மை', நீரின்தன்மை. 'சொலின்' என்பது சொல்லாமையை விளக்கிற்று.
திருக்குறள் 196 (பயனில்சொற்)
[தொகு]- பயனில்சொற் பாராட்டு வானை மகனெனல்
- மக்கட் பதடி யெனல்
- பயன் இல சொல் பாராட்டுவானை மகன் எனல்
- மக்கள் பதடி எனல் (06)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பயன் இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்= பயனி்ல்லாத சொற்களைப் பலகாலும் சொல்லுவானை மகனென்று சொல்லற்க;
- மக்கட் பதடி எனல்= மக்களுள் பதர் என்று சொல்லுக.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- 'அல்' விகுதி வியங்கோள்; முன் எதிர்மறையினும், பின் உடம்பாட்டினும் வந்தது. அறிவென்னும் உள்ளீடு இன்மையின், 'மக்கள் பதடி' என்றார். இவை ஆறுபாட்டானும், பயனில்லாத சொற்களைச் சொல்லுதலின் குற்றம் கூறப்பட்டது.
திருக்குறள் 197 (நயனில)
[தொகு]- நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
- பயனில சொல்லாமை நன்று
- நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
- பயன் இல சொல்லாமை நன்று (07)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- நயன் இல சான்றோர் சொல்லினும் சொல்லுக= நீதியொடு படாத சொற்களைச் சான்றோர் சொன்னாராயினும் அஃதுஅமையும்;
- பயன் இல சொல்லாமை நன்று= அவர் பயன்இலவற்றைச் சொல்லாமை பெறின், அது நன்று.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- 'சொல்லினும்' எனவே, சொல்லாமை பெறப்பட்டது. 'நயனில'வற்றினும், 'பயனில' தீய என்பதாம்.
திருக்குறள் 198 (அரும்பயன்)
[தொகு]- அரும்பய னாயு மறிவினார் சொல்லார்
- பெரும்பய னில்லாத சொல்
- அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
- பெரும் பயன் இல்லாத சொல் (08)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- அரும் பயன் ஆயும் அறிவினார்= அறிதற்கரிய பயன்களை ஆராயவல்ல அறிவினை உடையார்;
- பெரும் பயன் இல்லாத சொல் சொல்லார்= மிக்க பயனுடைய அல்லாத சொற்களைச் சொல்லார்.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- அறிதற்கரிய பயன்களாவன: வீடுபேறும், மேற்கதிச்செலவும் முதலாயின. 'பெரும்பயன் இல்லாத' எனவே, பயன் சிறிது உடையனவும் ஒழிக்கப்பட்டன.
திருக்குறள் 199 (பொருடீர்ந்த)
[தொகு]- பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
- மாசறு காட்சி யவர்
- பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
- மாசு அறு காட்சியவர்
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்= பயனின் நீங்கிய சொற்களை மறந்தும் சொல்லார்;
- மருள் தீர்ந்த மாசறு காட்சியவர்= மயக்கத்தின் நீங்கிய தூய அறிவினை உடையார்.
- பரிமேலழகர் உரை விளக்கம்
- தூயஅறிவு= மெய்யறிவு. 'மருள்தீர்ந்த' என்னும் பெயரெச்சம், 'காட்சியவர்' என்னும் குறிப்புப்பெயர் கொண்டது. இவை மூன்று பாட்டானும், பயனில சொல்லாமையின் குணம் கூறப்பட்டது.
திருக்குறள் 200 (சொல்லுக)
[தொகு]- சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
- சொல்லிற் பயனிலாச் சொல்
- சொல்லுக சொல்லின் பயன் உடைய சொல்லற்க
- சொல்லின் பயன் இலாச் சொல் (10)
- பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
- சொல்லின் பயன் உடைய சொல்லுக= சொற்களில் பயனுடைய சொற்களைச் சொல்லுக;
- சொல்லின் பயன் இலாச் சொல் சொல்லற்க= சொற்களில் பயனில்லாத சொற்களைச் சொல்லற்க.
- பரிமேலழகர் உரைவிளக்கம்
- சொல்லின் என்பது இருவழியும் மிகையாயினும்,, சொற்பொருட் பின்வருநிலை என்னும் அணிநோக்கி வந்தது, "வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடியார், 39) என்பதுபோல. இதனால் சொல்லப் படுவனவும், படாதனவும் நியமிக்கப் பட்டன.