உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/90.பெரியாரைப்பிழையாமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 90.பெரியாரைப் பிழையாமை

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, பெரியராயினாரை அவமதித்து ஒழுகாமை. இரட்டுற மொழிதல் என்பதனாற் பெரியார் என்பது, ஆற்றலாற் பெரியாராய வேந்தர் மேலும், தவத்தாற் பெரியாராய முனிவர்மேலும் நின்றது. மேற் சொல்லாது எஞ்சி நின்றதாகலின், இது வெகுளியான் வருவனவற்றது இறுதிக்கண் வைக்கப்பட்டது.

குறள் 891 (ஆற்றுவா )

[தொகு]

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார் ( ) ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்

போற்றலு ளெல்லாந் தலை. (01) போற்றலுள் எல்லாம் தலை.

தொடரமைப்பு:ஆற்றுவார் ஆற்றல் இகழாமை, போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை.

இதன்பொருள்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை= எடுத்துக்கொண்டன யாவும் முடிக்கவல்லாருடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை= தங்களுக்குத் தீங்கு வாராமற் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது.
உரைவிளக்கம்
ஆற்றல் என்பது, பெருமை, அறிவு, முயற்சி என்னும் மூன்றன்மேலும் நிற்றலின் சாதியொருமை. இகழ்ந்தவழிக் களையவல்லார் என்பது தோன்ற ஆற்றுவர் என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின், அவ்விகழாமையைத் தலை யாய காவல் என்றும் கூறினார்.
பொதுவகையால் அவ்விரு திறத்தாரையும் பிழையாமையது சிறப்புக் கூறப்பட்டது.

குறள் 892 (பெரியாரைப் )

[தொகு]

பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற் ( ) பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்

பேரா விடும்பை தரும். (02) பேரா இடும்பை தரும்.

தொடரமைப்பு:பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால் பேரா இடும்பை தரும்.

இதன்பொருள்
பெரியாரைப் பேணாது ஒழுகின்= ஆற்றல்களாற் பெரியர் ஆயினாரை வேந்தர் நன்கு மதியாது அவமதித்து ஒழுகுவாராயின்; பெரியாரால் பேரா இடும்பைதரும்= அவ்வொழுக்கம் அப்பெரியாரால் அவர்க்கு எஞ்ஞான்றும் நீங்காத துன்பங்களைக் கொடுக்கும்.
உரை விளக்கம்
அத்துன்பங்களாவன இருமையிலும் இடையறாது வரும் மூவகைத் துன்பங்களுமாம். அவையெல்லாந் தாமே செய்து கொள்கினர் என்பது தோன்ற ஒழுக்கத்தை வினை முதலாக்கியும், பெரியாரைக் கருவியாக்கியும் கூறினார். பொதுவகையால் அவரைப் பிழைத்தற்குற்றம் இதனால் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையால் கூறுப.

குறள் 893 (கெடல்வேண்டிற் )

[தொகு]

கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி ( ) கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்

னாற்று பவர்க ணிழுக்கு. (03) ஆற்றுபவர்கண் இழுக்கு.

தொடரமைப்பு: அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு, கெடல் வேண்டின் கேளாது செய்க.

இதன்பொருள்
அடல் வேண்டின் ஆற்றுபவர்கண் இழுக்கு= வேற்றுவேந்தரைக் கோறல்வேண்டியவழி, அதனை அப்பொழுதே செய்யவல்ல வேந்தர் மாட்டுப் பிழையினை; கெடல் வேண்டின் கேளாது செய்க= தான் கெடுதல் வேண்டினான்ஆயின் ஒருவன் நீதிநூலைக் கடந்து செய்க.
உரை விளக்கம்
அப்பெரியாரைக் "காலனும் காலம் பார்க்கும் பாராது/ வேலீண்டு தானை விழுமியோர் தொலைய/ வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தர்" (புறநானூறு, 41.) என்றார் பிறரும். நீதிநூல் செயலாகாது என்று கூறலின், 'கேளாது' என்றார்.

குறள் 894 (கூற்றத்தைக் )

[தொகு]

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க் ( ) கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு

காற்றாதா ரின்னா செயல். (04) ஆற்றாதார் இன்னா செயல்.

தொடரமைப்பு: ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல், கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்.

இதன்பொருள்
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல்= மூவகை ஆற்றலும் உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்= தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால்ஒக்கும்.
உரை விளக்கம்
கையால் விளி்த்தல் இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலிய கோடற்குரியாரை அதற்கு முன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும், அண்மையும் கூறியவாறு.
இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.

குறள் 895 (யாண்டுச்சென் )

[தொகு]

யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின் () யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்

வேந்து செறப்பட்ட வர். (05) வேந்து செறப்பட்டவர்.

தொடரமைப்பு:வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர், யாண்டுச் சென்றும் யாண்டும் உளராகார்.

இதன்பொருள்
வெந்துப்பின் வேந்து செறப்பட்டவர்= பகைவர்க்கு வெய்தாய வலியினையுடைய வேந்தனாற் செறப்பட்ட அரசர்; யாண்டுச் சென்றும் யாண்டும் உளராகார்= அவனைத்தப்பி எங்கேபோய் உளராவர், ஓரிடத்தும் உளராகார்.
உரை விளக்கம்
இடைவந்த சொற்கள் அவாய்நிலையான் வந்தன. 'வெந்துப்பின் வேந்து' ஆகலால், தன்னிலம் விட்டுப்போயவர்க்கு இடம் கொடுப்பாரில்லை; உளராயின் அவர் இனியராகார் என்பது நோக்கி, அவனோடு நட்புக்கோடற் பொருட்டும் தானே வந்தெய்திய அவருடைமை வௌவுதற் பொருட்டும் கொல்வர், அன்றெனின் உடனே அழிவர் என்பன நோக்கி, 'யாண்டுச் சென்றி யாண்டுமுளராகார்' என்றார்.

குறள் 896 (எரியாற் )

[தொகு]

எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார் ( ) எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்

பெரியார்ப் பிழைத்தொழுகு வார் (06) பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார்.

தொடரமைப்பு: எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம், பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்.

இதன்பொருள்
எரியால் சுடப்படினும் உய்வு உண்டாம்= காட்டிடைச் சென்றான் ஒருவன் ஆண்டைத் தீயாற்சுடப்பட்டான்ஆயினும் ஒருவாற்றான் உயிர் உய்தல்கூடும்; பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார் உய்யார்= தவத்தாற் பெரியாரைப் பிழைத்து ஒழுகுவார் எவ்வாற்றானும் உயிருய்யார்.
உரை விளக்கம்
தீ முன் உடம்பினைக் கதுவி அதுவழியாக உயி்ர்மேற் சேறலின் இடையே உய்யவும் கூடும், அருந்தவர் வெகுளி அன்னதன்றித் தானிற்பது கணமாய் அதற்குள்ளே யாவர்க்கும் காத்தல் அரிதாகலின், அது கூடாது ஆகலான், அதற்கு ஏதுவாய பிழைசெய்யற்க என்பதாம்.

குறள் 897 (வகைமாண்ட )

[தொகு]

வகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந் ( ) வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்

தகைமாண்ட தக்கார் செறின். (07) தகை மாண்ட தக்கார் செறின்.

தொடரமைப்பு: தகை மாண்ட தக்கார் செறின், வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்

இதன்பொருள்
தகை மாண்ட தக்கார் செறின்= சாப அருள்கட்கு ஏதுவாய பெருமை மாட்சிமைப்பட்ட அருந்தவர் அரசனை வெகுள்வாராயின்; வகைமாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என்னாம்= உறுப்பழகு பெற்ற அவன் அரசாட்சியும், ஈட்டிவைத்த பெரும்பொருளும் என்பட்டுவிடும்.
உரை விளக்கம்
உறுப்பு- அமைச்சு, நாடு, அரண், படையென இவை. 'செறின்' என்பது, அவர் செறாமை தோன்ற நின்றது. இவ்வெச்சத்தான், முன் வருவனவற்றிற்கும் இஃதொக்கும். அரசர் தம் செல்வக்களிப்பான், அருந்தவர்மாட்டுப் பிழை செய்வாராயின், அச்செல்வம் அவ்வெகுளித்தீயான் ஒருகணத்துள்ளே வெந்துவிடும் என்பதாம்.

குறள் 898 (குன்றன்னார் )

[தொகு]

குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு ( ) குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு

நின்றன்னார் மாய்வர் நிலத்து. (08) நின்றன்னார் மாய்வர் நிலத்து.

தொடரமைப்பு: குன்று அன்னார் குன்ற மதிப்பின், நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்.

இதன்பொருள்
குன்றன்னார் குன்ற மதிப்பின்= குன்றத்தை ஒக்கும் அருந்தவர் கெட நினைப்பாராயின்; நிலத்து நின்றன்னார் குடியொடு மாய்வர்= அப்பொழுதே இந்நிலத்து நிலைபெற்றாற் போலும் செல்வர் தம் குடியொடும் மாய்வர்.
உரை விளக்கம்
வெயில், மழை முதலிய பொறுத்தலும், சலியாமையும் உள்ளிட்ட குணங்கள் உடைமையின், குன்றன்னார் என்றார். "மல்லன் மலையனைய மாதவர்" என்றார் பிறரும் (சீவக சிந்தாமணி, முத்தியிலம்பகம்- 191).நிலைபெற்றாற்போறலாவது, இறப்பப்பெரியார் ஆகலின், இவர்க்கு எஞ்ஞான்றும் அழிவில்லையென்று கண்டாராற் கருதப்படுதல்.

குறள் 899 (ஏந்திய )

[தொகு]

ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து ( ) ஏந்திய கொள்கையார் சீறின் இடை முரிந்து

வேந்தனும் வேந்து கெடும். (09) வேந்தனும் வேந்து கெடும்.

தொடரமைப்பு: ஏந்திய கொள்கையார் சீறின், வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும்.

இதன்பொருள்
ஏந்திய கொள்கையார் சீறின்= காத்தற்கு அருமையான் உயர்ந்த விரதங்களை உடையார் வெகுள்வாராயின்; வேந்தனும் இடை வேந்து முரிந்து கெடும்= அவர் ஆற்றலான் இந்திரனும் இடையே தன்பதம் இழந்து கெடும்.
உரை விளக்கம்
"வேந்தன் மேய தீம்புன லுலகமும்" என்றார் பிறரும், (தொல்காப்பியம்- பொருளதிகாரம், அகத்திணையியல்: 5). நகுடன் என்பான் இந்திரன் பதம்பெற்றுச்செல்கின்ற காலத்துப் பெற்ற களிப்பு மிகுதியான் அகத்தியன் வெகுள்வதோர் பிழை செய, அதனாற் சாபம் எய்தி அப்பதம் இடையே இழந்தான் என்பதை உட்கொண்டு இவ்வாறு கூறினார்.
இவை நான்கு பாட்டானும், முனிவரைப்பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.

குறள் 900 (இறந்தமைந்த )

[தொகு]

இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார் () இறந்து அமைந்த சார்பு உடையர் ஆயினும் உய்யார்

சிறந்தமைந்த சீரார் செறின். (10) சிறந்து அமைந்த சீரார் செறின்.

தொடரமைப்பு: சிறந்து அமைந்த சீரார் செறின், இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்.

இதன்பொருள்
சிறந்து அமைந்த சீரார் செறின்= கழிய மிக்க தவத்தினையுடையார் வெகுள்வராயின்; இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்= அவரான் வெகுளப்பட்டார் கழியப் பெரிய சார்பு உடையராயினும், அதுபற்றி உய்யமாட்டார்.
உரை விளக்கம்
'சார்பு'- அரண், படை, பொருள், நட்பென இவை. அவையெல்லாம் வெகுண்டவரது ஆற்றலால் திரிபுரம் போல அழிந்துவிடும் ஆகலின், 'உய்யார்' என்றார். சீருடையது 'சீர்' எனப்பட்டது.
இதனால் அக்குற்றமுடையார் சார்பு பற்றியும், உய்யார் என்பது கூறப்பட்டது.