உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/36.மெய்யுணர்தல்

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


துறவறவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 36 மெய்யுணர்தல்

[தொகு]
அதிகார முன்னுரை
அஃதாவது, பிறப்பு வீடுகளையும், அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களான்அன்றி உண்மையான் உணர்தல். இதனை வடநூலார் தத்துவஞானம் என்ப. இதுவும் 'பற்றற்றான் பற்றினைப்' பற்றியவழி உளதாவதாகலின், அக்காரண ஒற்றுமை பற்றித் துறவின்பின் வைக்கப்பட்டது.

குறள்: 351 (பொருளல்லவற்றைப்)

[தொகு]
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு (01)

பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்

மருளான் ஆம் மாணாப் பிறப்பு
இதன்பொருள்
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம்= மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம்; மாணாப் பிறப்பு= இன்பம் இல்லாத பிறப்பு.
விளக்கம்
அவ்விபரீத உணர்வாவது மறுபிறப்பும், இருவினைப்பயனும், கடவுளும் இல்லையெனவும், மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குக்களை மெய்ந்நூல் வழக்கெனத் துணிதல். குற்றியை மகன் என்றும், இப்பியை வெள்ளியென்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. மருள், மயக்கம், விபரீதவுணர்வு, அவிச்சை என்பன ஒருபொருட்கிளவி. நரகர், விலங்கு, மக்கள் தேவர் என்னும் நால்வகைப் பிறப்பினும் உள்ளது துன்பமேயாகலின் 'மாணாப்பிறப்பு' என்றார். இதனாற் 'பிறப்புத்' துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.

குறள்: 352 (இருணீங்கி)

[தொகு]
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு (02)
இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசு அறு காட்சியவர்க்கு.
இதன்பொருள்
மருள் நீங்கி மாசு அறு காட்சியவர்க்கு= அவிச்சையின் நீங்கி மெய்யுணர்வு உடையராயினார்க்கு; இரு்ள் நீங்கி இன்பம் பயக்கும்= அம்மெய்யுணர்வு பிறப்பினை நீக்கி வீட்டினைக் கொடுக்கும்.
விளக்கம்
'இருள்' நரகம்; அஃது ஆகுபெயராய்க் [1]இருளுக்கு காரணமா இருக்கும் பிறவி . 'நீங்கி' எனத் தொடைநோக்கி மெலிந்து நின்றது; நீங்க வென்பதன் திரிபு எனினும் அமையும். 'மருணீங்கி' என்னும் வினையெச்சம் 'காட்சியவர்' என்னும் குறிப்புவினைப்பெயர் கொண்டது. 'மாசறு காட்சி' என்றது, கேவல உணர்வினை. இதனால் வீடாவது நிரதிசயவின்பம் என்பதூஉம், அதற்கு நிமித்த காரணம் கேவலப்பொருள் என்பதூஉம் கூறப்பட்டன.

குறள்: 353 (ஐயத்தின்)

[தொகு]
ஐயத்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து (03)
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து.
இதன்பொருள்
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு= ஐயத்தினின்று நீங்கி மெய்யுணர்ந்தார்க்கு; வையத்தின் வானம் நணியது உடைத்து= எய்திநின்ற நிலவுலகத்தினும் எய்தக்கடவதாகிய வீட்டுலகம் நணித்தாதல் உடைத்து.
விளக்கம்
'ஐய'மாவது பலதலையாய உணர்வு. அஃதாவது, மறுபிறப்பும், இருவினைப்பயனும், கடவுளும் உளவோ இலவோ என ஒன்றில் துணிவு பிறவாது நிற்றல்; பேய்த்தேரோ புனலோ, கயிறோ அரவோ எனத் துணியாது நிற்பதும் அது. ஒருவாற்றாற் பிறர்மதம் களைந்து தம்மதம் நிறுத்தல் எல்லாச் சமயநூல்கட்கும் இயல்பாகலின், அவை கூறுகின்ற பொருள்களுள் யாது மெய்யென நிகழும் ஐயத்தினை யோக முதிர்ச்சி யுடையார் தம் அனுபவத்தான் நீக்கி மெய்யுணர்வர் ஆகலின், அவரை 'ஐயத்தின்நீங்கித் தெளிந்தார்' என்றும், அவர்க்கு அவ்வனுபவ உணர்வு அடிப்பட்டு வரவரப் பண்டை உலகியலுணர்வு தூர்ந்து வருமாகலின், அதனைப் பயன்மேலிட்டு 'வையத்தின் வான நணியதுடைத்து' என்றும் கூறினார்; கூறவே ஐயவுணர்வும் பிறப்பிற்குக் காரணமாதல் கூறப்பட்டது.

குறள்: 354 (ஐயுணர்வெய்தியக்)

[தொகு]
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு (04)

ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு.

இதன்பொருள்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே= செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்தாய வழியும், அதனாற் பயன் இல்லையேயாம்; மெய்யுணர்வு இல்லாதவர்க்கு= மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு.
விளக்கம்
'ஐந்தாகிய உணர்வு' மனம். அஃது எய்துதலாவது மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்றவழியும் வீடு பயவாமையின் 'பயம்இன்று' என்றார். சிறப்பும்மை எய்துதற்கு அருமை விளக்கிநின்றது.
இவையிரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடுளது என மெய்யுணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.

குறள்: 355 (எப்பொருளெத்தன்மைத்தாயினும்)

[தொகு]
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு (05)
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
இதன்பொருள்
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும்= யாதொரு பொருள் யாதோர் இயல்பிற்றாய்த் தோன்றினும்; அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு= அத்தோன்றியவாற்றைக் கண்டொழியாது, அப்பொருளின்கண்நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது.
விளக்கம்
பொருள்தோறும் உலகத்தார் கற்பித்துக்கொண்டு வழங்குகின்ற கற்பனைகளைக் கழித்து, நின்ற உண்மையைக் காண்பது என்றவாறாயிற்று. அஃதாவது, கோச்சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரலிரும்பொறை என்றவழி அரசன் என்பதோர் சாதியும், சேரமான் என்பதோர் குடியும், வேழ நோக்கினையுடையான் என்பதோர் வடிவும், சேயென்பதோர் இயற்பெயரும், மாந்தரஞ்சேரலிரும்பொறை என்பதோர் சிறப்புப் பெயரும், ஒருபொருளின்கண் கற்பனையாகலின், அவ்வாறுஉணராது நிலமுதல் உயிர் ஈறாய தத்துவங்களின் தொகுதி என உணர்ந்து, அவற்றை நிலம்முதலாகத் தத்தம் காரணங்களுள் ஒடுக்கிக்கொண்டு சென்றால், காரண காரியங்கள் இரண்டுமன்றி முடிவாய் நிற்பதனை உணர்தலாம். 'எப்பொரு'ளென்ற பொதுமையான், இயங்குதிணையும் நிலைத்திணையுமாகிய பொருள்களெல்லாம் இவ்வாறே உணரப்படும்.
இதனான் மெய்யுணர்வினது இலக்கணம் கூறப்பட்டது.

குறள்: 356 (கற்றீண்டு)

[தொகு]
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (06)
கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி.
இதன்பொருள்
ஈண்டுக் கற்று மெய்ப்பொருள் கண்டார்= இம் மக்கட் பிறப்பின்கண்ணே உபதேசமொழிகளை அனுபவமுடைய தேசிகர்பாற் கேட்டு அதனான் மெய்ப்பொருளை உணர்ந்தவர்; மற்று ஈண்டு வாரா நெறி தலைப்படுவர்= மீண்டு இப்பிறப்பின்கண் வாராத நெறியை எய்துவர்.
விளக்கம்
'கற்று' என்றதனால் பலர்பக்கலினும் பலகாலும் பயிறலும், 'ஈண்டு' என்றதனால் வீடுபேற்றிற்குரிய மக்கட்பிறப்பினது பெறுதற்கருமையும் பெற்றாம். 'ஈண்டு வாரா நெறி' வீட்டுநெறி. விட்டிற்கு நிமித்தகாரணமாய முதற்பொருளை உணர்தற்கு உபாயம் மூன்று. அவை கேள்வி, விமரிசம், பாவனை என்பன. அவற்றுட் கேள்வி இதனாற் கூறப்பட்டது.

குறள்: 357 (ஓர்த்துள்ள)

[தொகு]
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு (07)
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு.
இதன்பொருள்
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின்= அங்ஙனங் கேட்ட உபதேசமொழிப்பொருளை ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து, அதனான் முதற்பொருளை உணருமாயின்; பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா= அவனுக்கு மாறிப் பிறப்புள்ளதாக நினைக்கவேண்டா.
விளக்கம்
ஒருதலையா வோர்த்து என இயையும். அளவைகளும் பொருந்துமாறும் மேலே உரைத்தாம் (242 ஆம் குறளுரை). இதனால் விமரிசம் கூறப்பட்டது.

குறள்: 358 (பிறப்பென்னும்)

[தொகு]
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு (358)
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு.
இதன்பொருள்
பிறப்பு என்னும் பேதைமை நீங்க= பிறப்பிற்கு முதற்காரணமாய அவிச்சைகெட; சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு= வீட்டிற்கு நிமித்தகாரணமாய செவ்விய பொருளைக் காண்பதே ஒருவர்க்கு மெய்யுணர்வாவது.
விளக்கம்
'பிறப்பென்னும் பேதைமை' எனவும், 'சிறப்பு என்னும் செம்பொருள்' எனவும், காரியத்தைக் காரணமாக உபசரித்தார். ஐவகைக் குற்றங்களுள் அவிச்சை ஏனைய நான்கிற்கும் காரணமாதலுடைமையின், அச்சிறப்புப்பற்றி அதனையே பிறப்பிற்குக் காரணமாக்கிக் கூறினார். எல்லாப்பொருளினும் சிறந்ததாகலால் வீடு 'சிறப்பு' எனப்பட்டது. தோற்றக் கேடுகள் இன்மையின் நித்தமாய், நோன்மையாற் தன்னையொன்றுங் கலத்தலின்மையிற் தூய்தாய்த், தான் எல்லாவற்றையும் கலந்து நிற்கின்ற முதற்பொருள் விகாரமின்றி எஞ்ஞான்றும் ஒருதன்மைத்தாதல் பற்றி, அதனைச் செம்பொருள் என்றார். மேல் 'மெய்ப்பொருள்'(குறள், 355) எனவும், 'உள்ளது'(குறள், 357) எனவும் கூறியதூஉம் இதுபற்றி என உணர்க. அதனைக் காண்கையாவது, உயிர் தன் அவிச்சை கெட்டு அதனோடு ஒற்றுமையுற இடைவிடாது பாவித்தல்; இதனைச் சமாதியெனவும், சுக்கிலத்தியானம் (சீவகசிந்தாமணி, முத்தியிலம்பகம்-483) எனவும் கூறுப. உயிர் உடம்பின் நீங்குங்காலத்து அதனால் யாதொன்று பாவிக்கப்பட்டது, அஃது அதுவாய்த் தோன்றுமென்பது எல்லா ஆகமங்கட்கும் துணிபாகலின், வீடு எய்துவார்க்கு அக்காலத்துப் பிறப்பிற்கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டுக் கேவலப்பொருளையே பாவித்தல் வேண்டுதலான் அதனை முன்னே பயிறலாய இதனின் மிக்க உபாயம் இல்லையென்பது அறிக.
இதனாற் பாவனை கூறப்பட்டது.

குறள்: 359 (சார்புணர்ந்து)

[தொகு]
சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய் (09)
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்துச்
சார் தரா சார்தரு நோய்.
இதன்பொருள்
சார்பு உணர்ந்து சார்புகெட ஒழுகின்= ஒருவன் எல்லாப்பொருட்கும் சார்பாய அச்செம்பொருளை உணர்ந்து இருவகைப் பற்றும் அற ஒழுகவல்லனாயின்; சார்தரும் நோய் அழித்து மற்றுச் சார்தரா= அவனை முன் சாரக்கடவனவாய் நின்ற துன்பங்கள் அவ்வுணர்வொழுக்கங்களை அழித்துப் பின்சாரமாட்டா.
விளக்கம்
ஆகுபெயராற் சாரும் இடத்தையும், சார்வனவற்றையும் 'சார்பு' என்றார். ஈண்டு 'ஒழுக்கம்' என்றது யோகநெறி ஒழுகுதலை. அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர்நிலை, மனவொருக்கம், தாரணை, தியானம், சமாதியென எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டு உரைப்பின் பெருகும்; யோகநூல்களுட் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள் இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும், பிறந்தஉடம்பான் முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக் கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின்முன் இருள்போல் ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச் சார்தரா' என்றார். இதனை ஆருகதர் உவர்ப்பென்ப. பிறப்பிற்குக் காரணமாகலான், நல்வினைபபயனும் 'நோய்' எனப்பட்டது. மேன் மூன்று உபாயத்தானும் பரம்பொருளை உணரப் பிறப்பு அறும் என்றார். அஃதறும்வழிக் கிடந்த துன்பங்கள் எல்லாம் என்செய்யும் என்னும் கடாவை ஆசங்கித்து அவை ஞான யோகங்களின் முதிர்ச்சியுடைய உயிரைச் சாரமாட்டாமையானும் வேறுசார்பின்மையானும் கெட்டுவிடும் என்பது இதனாற் கூறப்பட்டது.

குறள்: 360 (காமம்வெகுளி)

[தொகு]
காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய் (10)
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்.
இதன்பொருள்
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட= ஞானயோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான்; நோய்கெடும்= அவற்றின் காரியமாய வினைபபயன்கள் உளவாகா.
விளக்கம்
அநாதியாய அவிச்சையும், அதுபற்றி யான் என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கிதுவேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும் என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும் அடங்குதலான், மூன்று என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலுமாகலின், அம்மிகுதி தோன்ற 'இவை மூன்றன் நாமம் கெட' என்றார். இழிவுச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத்திரிவு. 'நோய்' என்பது சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக் கெடுத்தார் காரியமாகிய இருவினைகளைச் செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களுமில்லை என்பது இதனாற் கூறப்பட்டது. முன்கிடந்த துன்பங்களும், மேல்வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்யுணர்வின் பயனாகலின், இவை இரண்டு பாட்டும் இவ்வதிகாரத்தவாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்தஉடம்பும் அதுகொண்ட வினைப்பயனுமே என்பது பெற்றாம்.
  1. காரணத்தின்மேனின்றது