உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/82.தீநட்பு

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


82. தீ நட்பு

[தொகு]

திருக்குறள் பொருட்பால்- அங்கவியல்

[தொகு]

பரிமேலழகர் உரை

[தொகு]

அதிகாரம் 82. தீ நட்பு

[தொகு]
அதிகார முன்னுரை
இனிப் பொறுக்கப்படாத குற்றமுடைமையின் விடற்பாலதாய நட்பு நட்பாராய்தற்கண் சுருங்கச்சொல்லிய துணையான் அடங்காமையின், அதனை இருவகைப்படுத்து இரண்டு அதிகாரத்தாற் கூறுவான் தொடங்கி முதற்கண் தீநட்புக் கூறுகின்றார். அஃதாவது, தீக்குணத்தாரோடு உளதாய நட்பு. குணத்தின் தீனை ஒற்றுமைபற்றி உடையார் மேற்றாய், அது பின் அவரோடு செய்த நட்பின் மேற்றாயிற்று. அதிகாரமுறைமை கூறாமையே விளங்கும்.

குறள் 811 ( பருகுவார்)

[தொகு]

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை () பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை

பெருகலிற் குன்ற லினிது. (01) பெருகலின் குன்றல் இனிது.

தொடரமைப்பு: பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை, பெருகலின் குன்றல் இனிது. "

இதன்பொருள்
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை= காதன்மிகுதியான் பருகுவார் போன்றார் ஆயினும் தீக்குணமுடையார் நட்பு; பெருகலின் குன்றல் இனிது= வளர்தலின் தேய்தல் நன்று.
உரைவிளக்கம்
"பருகுவன்ன அருகா நோக்கமொடு" என்றார் பிறரும். நற்குணம் இல்லார் எனவே, தீக்குணம் உடையார் என்பது அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு குன்றினால் வாராமையின் 'குன்றல் இனிது' என்றார். இதனார் தீநட்பினது ஆகாமை பொதுவகையான் கூறப்பட்டது. இனிச் சிறப்புவகையான் கூறுப.

குறள் 812 (உறினட்டறி )

[தொகு]

உறினட் டறினொரூஉ மொப்பிலார் கேண்மை () உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை

பெறினு மிழப்பினு மென். (02) பெறினும் இழப்பினும் என்.

தொடரமைப்பு: உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை, பெறினும் இழப்பினும் என்.

இதன்பொருள்
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை= தமக்குப் பயன்உள்வழி நட்புச்செய்து, அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது நட்பினை; பெறினும் இழப்பினும் என்= பெற்றால் ஆக்கம் யாது? இழந்தால் கேடுயாது?
உரைவிளக்கம்
தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தம் இலராகலின் அவரை ஒப்பிலார் என்றார். அவர்மாட்டு நொதுமல் தன்மையே அமையும் என்பதாம்.

குறள் 813 (உறுவதுசீர் )

[தொகு]

உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது () உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாருங் கள்வரு நேர். (03) கொள்வாரும் கள்வரும் நேர்.

தொடரமைப்பு: உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது கொள்வாரும், கள்வரும் நேர்.

இதன்பொருள்
உறுவது சீர்தூக்கும் நட்பும்= நட்பளவு பாராது அதனால்வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும்= கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் பொதுமகளிரும்; கள்வரும்= பிறர் கேடுநோக்காது அவர் சோர்வு நோக்கும் கள்வரும்; நேர்= தம்முள் ஒப்பர்.
உரைவிளக்கம்
'நட்பு' ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின், கணிகையர் கள்வர் என்று இவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை கூறப்பட்டது.

குறள் 814 (அமரகத் )

[தொகு]

அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார் () அமர் அகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார்

தமரிற் றனிமை தலை. (04) தமரின் தனிமை தலை.

தொடரமைப்பு: அமர் அகத்து ஆற்று ஆறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் தனிமை தலை.

இதன்பொருள்
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் = அமர் வாராத போதெல்லாம் தாங்குவது போன்று, வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போம் கல்வியிலலாத புரவிபோல்வாரது தமர்மையில்; தனிமை தலை = தனிமை சிறப்புடைத்து.
உரைவிளக்கம்
கல்லாமை- கதி ஐந்தும் சாரி பதினெட்டும் பொருமுரண் ஆறறலும் அறியாமை. துன்பம் வாராத முன்னெலலாம் துணையாவார் போன்று வந்துழி விட்டுநீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவல் தமரானால் வருமிறுதி தனியானால் வாராமையின், தனிமையைத் தலை என்றார். எனவே, அதுவும் தீதால் பெறுதும்.

குறள் 815 (செய்தேமஞ் )

[தொகு]

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை () செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை

யெய்தலி னெய்தாமை நன்று. (05) எய்தலின் எய்தாமை நன்று.

தொடரமைப்பு: செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை, எய்தலின் எய்தாமை நன்று.

இதன்பொருள்
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை = செய்து வைத்தாலும் அரண்ஆகாத கீழ்மக்களது தீநட்பு; எய்தலின் எய்தாமை நன்று = ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல் நன்று.
உரைவிளக்கம்
சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை - தொலைவின்கண் விட்டு நீங்குதல். எய்தலின் எய்தாமை நன்று என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. சாராத என்னும் பெயரெச்சம் கேண்மை என்னும் பெயர் கொண்டது. சிறியவர் என்பதனைக் கொ்ள்ளின், செய்து என்பது நின்று வற்றும்.
இவை இரண்டு பாட்டானும் தொலைவில் துணையாகாத நட்பின்தீமை கூறப்பட்டது.

குறள் 816(பேதைபெருங் )

[தொகு]

பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா () பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்

ரேதின்மை கோடி யுறும். (06) ஏதின்மை கோடி உறும்.

தொடரமைப்பு: பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவு உடையார் ஏதின்மை கோடி உறும். "

இதன்பொருள்
பேதை பெருங்கழீஇ நட்பின் = அறிவுஇலானது மிகச்செறி்ந்த நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும் = அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
உரைவிளக்கம்
கெழீஇய என்பதன் இறுதிநிலை விகாரத்தான் தொக்கது. பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒருதீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எலலாத்தீங்கும் பயத்தாலானும், கோடியுறும் என்றார். பெருங்கழி நட்பென்று பாடம் ஓதுவாரும் உளர்.


குறள் 817 (நகைவகை )

[தொகு]

நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற் () நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரால்

பத்தடுத்த கோடி யுறும். (07) பத்து அடுத்த கோடி உறும்.

தொடரமைப்பு: நகை வகையர் ஆகியநட்பின் பகைவரால் பத்து அடுத்த கோடி உறும்.

இதன்பொருள்
நகை வகையர் ஆகிய நட்பின் = தாம் அறிதல் வகையர் ஆகாது, நகுதல் வகையர் ஆதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்; பகைவரால் பத்து அடுத்த கோடி உறும் = பகைவரான் வருவன பத்துக்கோடி மடங்கு நல்ல.
உரைவிளக்கம்
நட்பு ஆகுபெயர். அந்நட்பாவது, விடமரும் தூர்த்தரும், வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன் கொண்டுஒழிவாரோடு உளதாயது. பகைவரால் என்பது அவாய்நிற்றலின், வருவன என்பது வருவிக்கப்பட்டது. பத்தடுதத கோடி பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும் இன்பங்களின், அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல என்பதாம். இதற்குப் பிறர் எல்லாம் சொல்லிலக்கணத்தோடு மாறுகொள உரைத்தார்.


குறள் 818 (ஒல்லும்கரும )

[தொகு]

ஒல்லுங் கரும முடற்று பவர்கேண்மை () ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை

சொல்லாடார் சோர விடல். (08) சொல் ஆடார் சோர விடல்.

தொடரமைப்பு: ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை, சொல்லாடார் சோர விடல்.

இதன்பொருள்
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை = தம்மான் முடியும் கருமத்தை முடியாதாக்கிச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை; சொல்லாடார் சோர விடல் = அது கண்டால், அவர் அறியச் சொல்லாதே சோரவிடுக.
உரைவிளக்கம்
முடியாதாக்குதல் - முடியாதாக நடித்தல். சோரவிடல் - விடுகின்றவாறு தோன்றாமல் ஒருகாலைக்குஒருகால் ஓயவிடுதல். அறியச்சொல்லினும், விடுகின்றவாறு தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாய் ஒழுகக் கருதுவராகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார், நகுவிபபார், இயல்வது செய்யாதார் என்ற இவர்கள் நட்பின் தீமை கூறப்பட்டது.

குறள் 819(கனவினும் )

[தொகு]

கனவினு மின்னாது மன்னோ வினைவேறு () கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு. (09) சொல் வேறு பட்டார் தொடர்பு.

தொடரமைப்பு: வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு, கனவினும் இன்னாது மன்னோ.

இதன்பொருள்
வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு = வினையும் சொல்லும் ஒவ்வாது் வேறுவேறாய் இருப்பார் நட்பு; கனவினும் இன்னாது = நனவின்கண்ணே அன்றிக் கனவின் கண்ணும் இன்னாது.
உரைவிளக்கம்
வினை சொற்களது ஒவ்வாமை முதன்மேல் ஏற்றப்பட்டது. அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராய் இருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால், கனவினும் இன்னாது என்றார். உம்மை எச்சவும்மை. இழிவுசிறப்பும்மையுமாம். மன்னும் ஓவும் அசைநிலை.

குறள் 820 (எனைத்துங் )

[தொகு]

எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ () எனைத்தும் குறுகுதல் ஒம்பல் மனைக் கெழீஇ

மன்றிற் பழிப்பார் தொடர்பு. (10) மன்றில் பழிப்பார் தொடர்பு.

தொடரமைப்பு: மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு, எனைத்தும் குறுகுதல் ஓம்பல்.

இதன்பொருள்
மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு = தனியே மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின்கண் இருந்துழிப் பழிகூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் = சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க.
உரைவிளக்கம்
மனைக்கண் கெழுமலும், மன்றின்கண் பழித்தலும் தீதாகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகாவகை குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக் கூறினார்.
இவை இரண்டுபாட்டானும் வஞ்சர்நட்பின் தீமை கூறப்பட்டது.