உள்ளடக்கத்துக்குச் செல்

திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/16.பொறையுடைமை

விக்கிமூலம் இலிருந்து

உரைப்பாயிரம்
அறத்துப்பால்

1. பாயிரவியல்
1.கடவுள்வாழ்த்து 2.வான்சிறப்பு 3.நீத்தார்பெருமை 4.அறன்வலியுறுத்தல்
2. இல்லறவியல்
5.இல்வாழ்க்கை 6.வாழ்க்கைத்துணைநலம் 7.மக்கட்பேறு 8.அன்புடைமை 9.விருந்தோம்பல் 10.இனியவைகூறல் 11.செய்ந்நன்றியறிதல் 12.நடுவுநிலைமை 13.அடக்கமுடைமை 14.ஒழுக்கமுடைமை 15.பிறனில்விழையாமை 16.பொறையுடைமை 17.அழுக்காறாமை 18.வெஃகாமை 19.புறங்கூறாமை 20.பயனிலசொல்லாமை 21.தீவினையச்சம் 22.ஒப்புரவறிதல் 23.ஈகை 24.புகழ்
3.துறவறவியல்
25.அருளுடைமை 26.புலான்மறுத்தல் 27.தவம் 28.கூடாவொழுக்கம் 29.கள்ளாமை 30.வாய்மை 31.வெகுளாமை 32.இன்னாசெய்யாமை 33.கொல்லாமை 34.நிலையாமை 35.துறவு 36.மெய்யுணர்தல் 37.அவாவறுத்தல்
4.ஊழியல்
38.ஊழ்

பொருட்பால்
1.அரசியல்
39.இறைமாட்சி 40.கல்வி 41.கல்லாமை 42.கேள்வி 43.அறிவுடைமை 44.குற்றங்கடிதல் 45.பெரியாரைத்துணைக்கோடல் 46.சிற்றினஞ்சேராமை 47.தெரிந்துசெயல்வகை 48.வலியறிதல் 49.காலமறிதல் 50.இடனறிதல் 51.தெரிந்துதெளிதல் 52.தெரிந்துவினையாடல் 53.சுற்றந்தழால் 54.பொச்சாவாமை 55.செங்கோன்மை 56.கொடுங்கோன்மை 57.வெருவந்தசெய்யாமை 58.கண்ணோட்டம் 59.ஒற்றாடல் 60.ஊக்கமுடைமை 61.மடியின்மை 62.ஆள்வினையுடைமை 63.இடுக்கணழியாமை
2.அங்கவியல்
64.அமைச்சு 65.சொல்வன்மை 66.வினைத்தூய்மை 67.வினைத்திட்பம் 68.வினைசெயல்வகை 69.தூது 70.மன்னரைச்சேர்ந்தொழுகல் 71.குறிப்பறிதல் 72.அவையறிதல் 73.அவையஞ்சாமை 74.நாடு 75.அரண் 76.பொருள்செயல்வகை 77.படைமாட்சி 78.படைச்செருக்கு 79.நட்பு 80.நட்பாராய்தல் 81.பழைமை 82.தீநட்பு 83.கூடாநட்பு 84.பேதைமை 85.புல்லறிவாண்மை 86.இகல் 87.பகைமாட்சி 88.பகைத்திறந்தெரிதல் 89.உட்பகை. 90.பெரியாரைப்பிழையாமை 91.பெண்வழிச்சேறல் 92.வரைவின்மகளிர் 93.கள்ளுண்ணாமை 94.சூது 95.மருந்து
3.ஒழிபியல்
96.குடிமை 97.மானம் 98.பெருமை 99.சான்றாண்மை 100.பண்புடைமை 101.நன்றியில்செல்வம் 102.நாணுடைமை 103.குடிசெயல்வகை 104.உழவு 105.நல்குரவு 106.இரவு 107.இரவச்சம் 108.கயமை

காமத்துப்பால்

1.களவியல்
109.தகையணங்குறுத்தல் 110.குறிப்பறிதல் 111.புணர்ச்சிமகிழ்தல் 112.நலம்புனைந்துரைத்தல் 113.காதற்சிறப்புரைத்தல் 114.நாணுத்துறவுரைத்தல் 115.அலரறிவுறுத்தல்
2.கற்பியல்
116.பிரிவாற்றாமை 117.படர்மெலிந்திரங்கல் 118.கண்விதுப்பழிதல் 119.பசப்புறுபருவரல் 120.தனிப்படர்மிகுதி 121.நினைந்தவர்புலம்பல் 122.கனவுநிலையுரைத்தல் 123.பொழுதுகண்டிரங்கல் 124.உறுப்புநலனழிதல் 125.நெஞ்சொடுகிளத்தல் 126.நிறையழிதல் 127.அவர்வயின்விதும்பல் 128.குறிப்பறிவுறுத்தல் 129.புணர்ச்சிவிதும்பல் 130.நெஞ்சொடுபுலத்தல் 131.புலவி 132.புலவிநுணுக்கம் 133.ஊடலுவகை


அதிகாரம் 16. பொறையுடைமை[தொகு]

பரிமேலழகர் உரை[தொகு]

அதிகார முன்னுரை[தொகு]

அஃதாவது, காரணம்பற்றியாதல் மடமையானாதல் ஒருவன் தனக்கு மிகைசெய்தவழித் தாமும் அதனை அவன்கட் செய்யாது பொறுத்தலை உடையராதல். நெறியின் நீங்கிய செய்தாரையும், பொறுக்கவேண்டும் என்றற்கு, இது பிறனில் விழையாமை யின்பின் வைக்கப்பட்டது.

திருக்குறள் 151 (அகழ்வாரைத்)[தொகு]

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
யிகழ்வார்ப் பொறுத்த றலை
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை (01)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
அகழ்வார்த் தாங்கும் நிலம்போல= தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல;
தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை= தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
பரிமேலழகர் உரைவிளக்கம்: இகழ்தல் மிகையாயின செய்தலும், சொல்லுதலும்.

திருக்குறள் 152 (பொறுத்தல்)[தொகு]

பொறுத்த லிறப்பினை யென்று மதனை
மறத்த லதனினு நன்று
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று (02)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
என்றும் இறப்பினைப் பொறுத்தல்- பொறை நன்று ஆதலால், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க;
அதனை மறத்தல் அதனினும் நன்று= அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
பரிமேலழகர் உரைவிளக்கம்
மிகை யென்றது, மேற்சொல்லிய இரண்டனையும். பொறுக்குங்காலம் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினு நன்று' என்றார்.

திருக்குறள் 153 (இன்மையுள்)[தொகு]

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை (03)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்= ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது, விருந்தினரை யேற்றுக்கொள்ளாது நீக்குதல்;
வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை= அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது, அறிவின்மையான் மிகைசெய்தாரைப் பொறுத்தல்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
இஃது எடுத்துக்காட்டுவமை. அறன்அல்லாத விருந்தொரால் பொருளுடைமை ஆகாதவாறு போல, 'மடவார்ப்பொறை'யும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.

(வன்மை = வலிமை; மெய்)

திருக்குறள் 154 (நிறையுடைமை)[தொகு]

நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும் (04)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
நிறையுடைமை நீங்காமை வேண்டின்= ஒருவன் நிறையுடைமையை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவனாயின்;
பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்= அவனாற் பொறையுடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
பரிமேலழகர் உரை விளக்கம்
பொறையுடைமையாற் கல்லது சால்பு இல்லை என்பது ஆயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறையுடைமையது சிறப்புக் கூறப்பட்டது.

திருக்குறள் 155 (ஒறுத்தாரை)[தொகு]

ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து (05)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
ஒறுத்தாரை ஒன்றாக வையார்= பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒருபொருளாக மனத்துக் கொள்ளார்;
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்= அதனைப் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து கொள்வர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
ஒறுத்தவர்தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். பொதிந்து வைத்தல், சால்புடைமைபற்றி இடைவிடாது நினைத்தல்.

திருக்குறள் 156 (ஒறுத்தார்க்கு)[தொகு]

ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ் (06)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்= தமக்குத் தீங்கு செய்தவனை யொறுத்தார்க்கு உண்டாவது, அவ்வொரு நாளை இன்பமே;
பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்= அதனைப் பொறுத்தார்க்கு 'உலகம்' அழியும் அளவும் புகழ் உண்டாம்.
பரிமேலழகர் உரை விளக்கம்
'ஒருநாளை யின்பம்' அந்நாளொன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆதலின்,ஏற்புடை 'உலகு' என்னும் சொல் வருவிக்கப்பட்டது.

திருக்குறள் 157 (திறனல்ல)[தொகு]

திறனல்ல தற்பிறர் செய்யினு நோநொந்
தறனல்ல செய்யாமை நன்று
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று (07)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும்= செய்யத் தகாத கொடியவற்றைத் தன்கட் பிறர் செய்தாராயினும்;
நோ நொந்து அறன் அல்ல செய்யாமை நன்று= அவர்க்கு அதனால் வருந்துன்பத்திற்கு நொந்து தான் அறன் அல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனு்க்கு நன்று.
பரிமேலழகர் உரை விளக்கம்
உம்மை சிறப்பும்மை. துன்பத்திற்கு நோதலாவது, "உம்மை யெரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடியார்-58) என்று பரிதல்.

திருக்குறள் 158 (மிகுதியான்)[தொகு]

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்று விடல் (08)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
மிகுதியான் மிக்கவை செய்தாரை= மனச் செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை;
தாம் தம் தகுதியான் வென்று விடல்= தாம் தம்தகுதியான் வென்று விடல்= தாம் தம்முடைய பொறையான் வென்று விடுக.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.

திருக்குறள் 159 (துறந்தாரிற்)[தொகு]

துறந்தாரிற் றூய்மை யுடைய ரிறந்தார்வா
யின்னாச் சொனோற்கிற் பவர்
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர் (09)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
தூறந்தாரின் தூய்மை உடையர்= இல்வாழ்க்கைக்கண் நின்றேயும், துறந்தார்போலத் தூய்மை உடையார்;
இறந்தார் வாய் இன்னாச்சொல் நோற்கிற்பவர்= நெறியைக் கடந்தார் வாய் இன்னாத சொல்லைப் பொறுப்பவர்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
தூய்மை மனமாசின்மை. 'வாய்' என வேண்டாது கூறினார், தீய சொற்கள் பயின்றதெனத் தாம் வேண்டியதன் இழிபு முடித்தற்கு.

திருக்குறள் 160 (உண்ணாது)[தொகு]

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லு
மின்னாச்சொ னோற்பாரிற் பின்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச் சொல் நோற்பாரின் பின் (10)
பரிமேலழகர் உரை (இதன் பொருள்)
உண்ணாது நோற்பார் பெரியர்= விரதங்களான் ஊணைத் தவிர்ந்து உற்ற நோயைப் பொறுப்பார் எல்லாரினும் பெரியர்;
பிறர் சொல்லும் இன்னாச் சொல் நோற்பாரின் பின்= அவர் பெரியராவது, தம்மைப் பிறர்சொல்லும் இன்னாத சொல்லைப் பொறுப்பாரின் பின்.
பரிமேலழகர் உரைவிளக்கம்
பிறர் அறிவிலாதார். நோலாமைக்கு ஏதுவாகிய இருவகைப் பற்றோடு நின்றே நோற்றலின் 'இன்னாச் சொல் நோற்பாரிற் பின்' என்றார். இவை இரண்டு பாட்டானும் பிறர் மிகைக்கச் சொல்லியன பொறுத்தல் கூறப்பட்டது.